HOME      Lecture      அழைப்பு பணி யாரின் கடமை? | Tamil Bayan - 017   
 

அழைப்பு பணி யாரின் கடமை? | Tamil Bayan - 017

           

அழைப்பு பணி யாரின் கடமை? | Tamil Bayan - 017


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

அழைப்புப் பணி யாரின் கடமை?

கண்ணியமிக்க இஸ்லாமிய பெரியோர்களே! சகோதரர்களே! அல்லாஹு தஆலா உங்களுக்கும், எனக்கும் இந்த சந்திப்பை நன்மைக்கு வழியாகவும், அவனுடைய பொருத்தத்திற்கு காரணமாகவும் ஆக்கியருள்வானாக! நம்முடைய மார்க்கக்கல்வியை அதிகரித்து, இதே பொருத்தத்திற்குரிய வாழ்க்கையை வாழ்வதற்கு அல்லாஹ் நமது அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக! இன்றைய நமது இந்த சந்திப்பின் பேச்சுடைய தலைப்பு இஸ்லாமிய அழைப்பு பணி யார் மீது கடமை?

அல்லாஹ் சுப்ஹானல்லாஹு வதஆலா நமக்கு செய்த மாபெரும் அருள், நமக்கு கொடுத்து இருக்கக்கூடிய அவனுடைய மாபெரும் அருட்கொடை, இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் நம்மை பிறக்க வைத்து இருப்பது; நம்மை முஸ்லிம்களாக அல்லாஹு தஆலா படைத்திருப்பது. உலகத்தில் எத்தனையோ பாக்கியங்கள், எத்தனையோ அருட்கொடைகள் இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்த அருட்கொடைகள் எல்லாம் ஒரு மனிதனுடைய வெற்றியை தீர்மானிக்கிறது என்றால் நிச்சயமாக கிடையாது. இவ்வுலகத்தினுடைய மறு உலகத்தினுடைய வெற்றி இஸ்லாமில் மட்டும்தான் இருக்கின்றது. அல்லாஹ்வுடைய இறைநம்பிக்கையில் மட்டும்தான் இருக்கின்றது. இந்த இஸ்லாம் இந்த ஈமான் ஒருவருக்கு கிடைப்பது அல்லாஹு தஆலா அவன் மீது செய்யக்கூடிய மிகப்பெரிய ஒரு கிருபை ஆகும்.

அல்லாஹு தஆலா தன் திருமறையில் சொல்கின்றான்;

فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ‏

யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட விரும்புகிறானோ, அவனுக்கு இஸ்லாமின் விளக்கத்தை தருகின்றான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட நினைக்கிறானோ அவனுடைய உள்ளத்தை அல்லாஹ் நெருக்கடியில் ஆக்கி விடுகின்றான். உண்மையை ஏற்றுக் கொள்வது அவருக்கு எந்த அளவு சிரமமாகத் தோன்றும் என்றால், வானத்திலே எதுவுமில்லாமல் ஏறு! என்று சொன்னால்,எந்த அளவு சிரமமாக இருக்குமோ அந்த அளவுக்கு உண்மையை ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும். இப்படித்தான் அசுத்தத்தை அறிவற்ற மக்களின் மீது அல்லாஹ் ஆக்கி விடுகின்றான். (அல்குர்ஆன் 6 : 125)

அதாவது ஈமானை சுத்தம் என்பதாகவும், குஃப்ரையும் ஷிர்க்கையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அசுத்தம் என்பதாக குறிப்பிடுகின்றான். யாருக்கு இறைநம்பிக்கை, இஸ்லாமுடைய வாய்ப்பு கிடைத்ததோ, அவர்களை அறிவுள்ளவர்கள் என்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புகழ்ந்து சொல்கின்றான். யாருக்கு இஸ்லாமுடைய வாய்ப்பு கிடைக்கவில்லையோ, இறைநம்பிக்கையுடைய வாய்ப்பு கிடைக்கவில்லையோ, யார் அல்லாஹ்வை தெரிந்து கொள்ளவில்லையோ, மறுமையை தெரிந்து கொள்ளவில்லையோ, சொர்க்கம் நரகத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அவர்களைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல இடங்களிலே மிக கேவலமாகவும் சொல்கின்றான்.

لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ

யாருக்கு இந்த நேர்வழியின் பாக்கியம் கிடைக்க வில்லையோ, அவர்களுக்கு உள்ளங்கள் இருந்து என்ன பலன்? அந்த உள்ளங்களை கொண்டு அவர்கள் சிந்திப்பது கிடையாது. அவர்களுக்கு கண்கள் இருந்து என்ன பலன்? அந்த கண்களைக் கொண்டு அவர்கள் பார்த்து அறிந்து கொள்ள முடியவில்லை. உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கும் செவிகளுக்கும் என்ன பலன்? அவர்கள் செவிகளை கொண்டு கேட்டு பயன் பெற முடியவில்லை. இவ்வாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து சக்திகளும் வீணானவை. அவர்கள் அதை வீணடித்து விட்டார்கள் என்று சொல்லி, இப்படி ஈமானையும், இஸ்லாமையும், மறுமையையும் தெரிந்து கொள்ளாதவர்கள் கால்நடைகளைப் போல இருப்பதாக அல்லாஹ் சொல்கின்றான். மேலும் அல்லாஹ் அவர்களுடைய அந்த தரத்தை தாழ்த்தி சொல்கின்றான், கால்நடைகளை விடவும் இவர்கள் வழிகெட்டவர்கள். கால்நடைகளை விடவும் இவர்கள் மிகவும் வழிகெட்டவர்கள்.(அல்குர்ஆன் 7 : 179)

எதனால்? கால்நடை கூட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை எந்த வழியிலே படைத்து இருக்கின்றானோ அந்த வழியில்தான் அந்த கால்நடைகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த மனிதன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுக்கு கொடுத்திருக்கக் கூடிய அறிவை வீணடித்து, அவனுக்கு கொடுத்திருக்கக் கூடிய திறமையை வீணடித்து, தன்னுடைய ஈருலக வாழ்க்கையும் நாசப்படுத்தி கொண்டதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவர்களைப் பற்றி சொல்லும் போது, இவர்கள் கால்நடைகளை விடவும் மோசமானவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அன்பிற்குரிய சகோதரர்களே! நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த இஸ்லாம் என்ற நிஃமத்துக்காக, அருட் கொடைகளுக்காக நாம் அல்லாஹ்வுக்கு மென்மேலும் அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும்.

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நான் அதிகப்படுத்தி தருவேன். நீங்கள் என்னை நிராகரித்தால், என்னுடைய நிஃமத்துக்கு நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டால் என்னுடைய வேதனை மிகவும் கடுமையானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 14 : 7)

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே, நமக்கு பொருளாதாரத்திலே உயர்வு ஏற்பட்டால், நம்முடைய வியாபாரம் பெருகினால், நம்முடைய தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தை பார்த்தால், அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய கிருபை என்பதாக நாம் எண்ணுகின்றோம். இந்த உலக செல்வங்களை நாம் ஒரு அருட்கொடை, அல்லாஹ்வுடைய நிஃமத் என்பதாக நாம் பார்க்கின்றோம். ஆனால் அதே சமயத்தில் எந்த ஒரு தூய்மையான தெளிவான மார்க்கத்தில் அல்லாஹ் நம்மை பிறக்க வைத்திருக்கிறானே, நம்மை அல்லாஹ் வாழ வைத்திருக்கிறானே, இந்த மார்க்கத்தை நம்மில் எத்தனை பேர் ஒரு நிஃமத்தாக ஒரு அருட்கொடையாக பார்க்கின்றோம்? எப்படி இந்த மார்க்கத்தை தெரியாதவர்கள், இந்த மார்க்கத்தை புரியாதவர்கள் ஏதோ ஒரு மார்க்கத்திலே நாம் பிறந்து விட்டோம். ஏதோ ஒரு ஜாதியிலே ஏதோ ஒரு கோட்பாட்டிலே நாம் பிறந்து விட்டோம்; இதிலே நாம் வாழ வேண்டியது. இதிலே நாம் மரணிக்க வேண்டியது. இதுதான் நம்முடைய வழி என்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பதைப் போன்று தான் இன்று நம்மில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய இந்த நேர் வழியை நாம் அல்லாஹ்வுடைய அருளாக, அல்லாஹ்வுடைய பாக்கியமாக, மிகப்பெரிய ஒரு வெகுமதியாக, அன்பளிப்பாக, நாம் கருதி இருந்தால் இந்த மார்க்கத்தில் நாம் மேலும் மேலும் முன்னேறி இருப்போம். இந்த மார்க்க கல்வியை நாம் அதிகரித்திருப்போம். இந்த மார்க்கத்தில் நாம் மிக உறுதியாக இருந்திருப்போம். இந்த மார்க்கத்தை நாம் நம்முடைய வாழ்க்கையிலே முழுமையாக பின்பற்றி இருப்போம். இந்த மார்க்கத்தை பிறருக்கும் நாம் எடுத்துச் சொல்லி இருப்போம்.

உதாரணமாக, ஒருவருக்கு ஒரு வியாபாரம் அமைகின்றது. ஒரு தொழில் அமைகின்றது. அவர் எப்படிப்பட்ட ஒரு மோசமான தரக்குறைவான ஒரு தொழிலை செய்தாலும், அந்த தொழிலில் தான் நஷ்டம் அடைய வேண்டும் என்று எண்ணுவாரா? நிச்சயமாக எண்ண மாட்டார். அந்தத் தொழிலைக் கொண்டு முழுமையான லாபத்தை அடைய வேண்டும் என்பதுதான் அவருடைய வெறியாக இருக்கும். அவருடைய குறிக்கோள் மட்டுமல்ல, அவருடைய வெறியாக இருக்கும். அந்த தொழிலிலே நஷ்டம் ஏற்படுவதை, பாதிப்பு ஏற்படுவதை அவர் ஒருக்காலும் விரும்பவே மாட்டார். எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார்; தூக்கத்தை இழக்க தயார்; மனைவி மக்களை இழக்கத் தயார்; தன்னுடைய உடல் சுகத்தை இழக்க தயார்; தன்னுடைய உணவு நேரத்தை இழக்கத் தயார். தன்னுடைய எல்லாவிதமான சுகதுக்கங்களையும் இழக்க தயார். எதற்காக? அந்த தொழிலில் அவருக்கு முறையான லாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக. அதற்காக வேண்டி எதையும் செய்ய துணிந்து விடுகிறார்.

சற்று யோசித்து பாருங்கள். ஏன் அவர் இப்படி துணிகின்றார்? இந்த செல்வம், இந்தத் தொழில் என்பது நமக்கு வருவாயை தரக்கூடியது. இதை நாம் இழந்து விட்டால் நாம் நஷ்டத்திற்கு ஆளாகி விடுவோம். நம்முடைய வாழ்க்கையை கடத்துவது, வாழ்க்கையை நடத்துவது நமக்கு சிரமமாகிவிடும். பசி, பட்டினியில் சிக்கிக் கொள்வோம். சமுதாயத்தில் நம்மை மதிக்க மாட்டார்கள். நமக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து இருக்காது. இப்படி எல்லாம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இந்த பயமானது இவர்களுடைய எல்லா தியாகங்களுக்கும் காரணமாக ஆகிவிடுகின்றது.

இந்த நேரத்திலே நாம் எப்படி பார்க்கின்றோம்? நம்முடைய இஸ்லாம், நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த மார்க்கம், இந்த மார்க்க விஷயத்தில் நம்முடைய உணர்வு எப்படி இருக்கிறது? இந்த மார்க்க விஷயத்தில் நம்முடைய உணர்வு, நம்முடைய எண்ணம் எப்படி இருக்கிறது? நம்முடைய கடையில் நஷ்டம் ஏற்படுவதை நாம் சகித்துக் கொள்ளவில்லை. நம்முடைய தொழிலில் குறைவு ஏற்படுவதை நாம் சகித்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும், நம்முடைய கொள்கை கோட்பாடுகளில் மட்டும், தன்னளவிலும், தனது மனைவி இடத்திலும், தனது பிள்ளைகளிடத்திலும், தனது குடும்பத்தில் தனது முஸ்லிம் சமுதாயத்திலும், எந்த அளவிற்கு சீர்கேடு ஏற்பட்டாலும் சரி. அதைப் பற்றி ஒரு துளி அளவும் நம்முடைய உள்ளத்தில் கவலை பிறக்கவில்லை.

எப்படி கவலை பிறக்க வேண்டுமோ, எப்படிப்பட்ட ஒரு சிந்தனை ஏற்பட வேண்டுமோ, எப்படிப்பட்ட ஒரு தாக்கம் நம்முடைய உள்ளத்தை பாதிக்க வேண்டுமோ, அந்த தாக்கம் நம்முடைய உள்ளத்தில் ஏற்படாததற்கு காரணம் என்ன? இந்த இஸ்லாமை அல்லாஹ்வின் அருட்கொடையாக நாம் நினைக்கவில்லை. மதிக்கவில்லை. அதேபோல ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் இதிலே ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்பு, இதிலே ஏற்பட்டிருக்கக் கூடிய குறைவு, நம்முடைய வாழ்க்கையிலும், நம்முடைய மனைவி மக்களின் வாழ்க்கையிலும், நம்முடைய சமுதாயத்தினுடைய வாழ்க்கையிலும், ஏற்பட்டிருக்க கூடிய இந்த பின்னேற்றம் இதிலே அவர்கள் எந்த அளவுக்கு பின்னடைந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து நாம் மனம் வெந்திருப்போம். அழுதிருப்போம். இதற்காக வேண்டி நாம் ஒரு முயற்சி செய்திருப்போம்.

சகோதரர்களே! ஒருவனுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் என்ன ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிந்து தான் அவன் இப்படிப்பட்ட தியாகங்களை எல்லாம் இந்த உலகத்திலே செய்வதற்கு தயாராக இருக்கின்றான். யோசித்துப் பாருங்கள்! இந்த மார்க்கத்திலே, இந்த தீனிலே ஒருவனுக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டு விட்டால், ஒரு பாதிப்பு ஏற்பட்டு விட்டால், அதனுடைய கஷ்டம் என்ன? அதனுடைய கஷ்டம் எந்த அளவிற்கு அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? இந்த உலக வாழ்க்கையிலும் அவனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அல்லாஹு தஆலா சொல்கின்றான். இறை நம்பிக்கையும், நல்ல அமல்களும் இல்லாமல் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காது. என்பதாக.

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கைகொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்துகொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.(அல்குர்ஆன் 16 : 97)

நல்ல வாழ்க்கை என்று சொன்னால் அதற்கு என்னென்ன அர்த்தங்களை எல்லாம் கொடுக்கிறீர்களோ, புரிந்து கொள்கிறீர்களோ, புரிந்து கொள்ள முடியுமோ, அந்த எல்லா அர்த்தங்களையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ் சொல்கின்றான்.

இந்த நல்ல வாழ்க்கை அமைப்பதற்கு அடிப்படைத் தேவை என்ன? இறை நம்பிக்கையும், நல்ல அமல்களும். ஆனால் நல்ல வாழ்க்கை அமைவதற்கு நாம் விளங்கி வைத்திருப்பது என்ன? படிப்பு, பணம், பதவி, இந்த உலக ஆதாயங்கள். இதில் ரப்புல் ஆலமீன் நல்ல வாழ்க்கையை அமைக்கவில்லை. எத்தனையோ பேர் இருக்கிறார்கள். படித்தவர்கள் அதிகம், பணம் படைத்தவர்களும் அதிகம், பெரிய செல்வந்தர்களும் அதிகம், அவர்களுடைய வசதி வாய்ப்புகளும் அதிகம். ஆனால் அவர்களிடத்தில் சென்று கேளுங்கள். நல்ல வாழ்க்கையை நீ வாழ்கின்றாயா என்பதாக. அவனுடைய மனைவிக்கும் அவனுக்கும் இடையில், அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் இடையில், அவனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் இடையில், அவனுக்கும் அவனது உற்றார் உறவினர்களுக்கும் இடையில். நிச்சயமாக அவர்கள் நாங்கள் நல்ல வாழ்க்கை வாழவில்லை என்பதாக சொல்வார்கள். ஆடம்பரத்தில் வேண்டுமானால் வாழ்கின்றோம். வசதியில் வேண்டுமானால் வாழ்கின்றோம் என்பதாக சொல்வார்களே தவிர, நல்ல வாழ்க்கை என்பதாக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

அடுத்ததாக இந்த ஈமான், இறை நம்பிக்கை, இந்த நல்ல அமல்களுடைய தாக்கம் இருக்கின்றதே, இந்த உலகத்தில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தருகிறது அல்லாஹ்வுடைய அருளால். அதுபோன்று அடுத்து கப்ருடைய வாழ்க்கை, மரணத்திற்குப் பின்னுள்ள அடுத்தகட்ட வாழ்க்கை, அடுத்து அவன் இந்த கப்ரிலிருந்து எழுந்ததிற்கு பின்பு நாளை மறுமையிலே நிரந்தரமான ஒரு வாழ்க்கை. இந்த எல்லா கட்டங்களிலும், இந்த இறை நம்பிக்கை, இந்த இஸ்லாம், அல்லாஹ்வுடைய தீன் தான் ஒரு மனிதருக்கு நேர் வழிக்கும் அவனுடைய வெற்றிக்கும் அவனுடைய எல்லாவிதமான நன்மைகளுக்கும் காரணமாக அமைகின்றது. எனவே இந்த ஈமானை இந்த இஸ்லாமை நாம் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய அருளாக கருத வேண்டும். இதற்கு ஈடாக எதையுமே நாம் இந்த உலகத்தில் மதிக்கக் கூடாது. அப்படி மதித்தால் சகோதரர்களே! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த அருட்கொடை நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு விடும்.

இந்த ஈமானுக்கு, இறை நம்பிக்கைக்கு, இஸ்லாமுக்கு நிகராக யாராவது இந்த உலகத்துடைய செல்வங்களில் ஒன்றை மதிப்பாரேயானால், அவர் நிச்சயமாக வெகு விரைவிலே இஸ்லாமை ஈமானை இழந்து விடுவார். அல்லாஹ் தஆலா இதை கடுமையாக எச்சரிக்கை செய்கின்றான்.

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

நீங்கள் இந்த மார்க்கத்தை புறக்கணித்து விட்டால், நீங்கள் இந்த மார்க்கத்தை விட்டு திரும்பி விட்டால் அல்லாஹ் தஆலா வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவர்கள் உங்களை போன்று இருக்க மாட்டார்கள்.(அல்குர்ஆன் 47 : 38)

وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ

அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பயப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 5 : 54)

அல்லாஹ் சொல்லியதையும், அவனுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியதையும் அவர்கள் செய்து காட்டுவார்கள். மக்கள் பழித்தாலும் சரி, மக்கள் தங்களை புகழ்ந்தாலும் சரி, அதனால் தங்களுக்கு எதுவும் கிடைத்தாலும் சரி, அல்லது எதையும் இழந்தாலும் சரி, அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகளையும் எங்களால் இழக்க முடியாது. அதை நாங்கள் துறப்பதற்கு தயாரில்லை. எங்களுடைய உயிர் வேண்டுமானால் பறிக்கப்படலாம்; எங்களுடைய உறுப்புகள் சிதைக்கப்படலாம்; எங்களுடைய பொருள்கள் சூறையாடப்படலாம்; எங்களுடைய குடும்பங்கள் சின்னாபின்னமாக்கப்படலாம்; ஆனால் இந்த மார்க்கத்திலே எந்த குறை ஏற்படுவதற்கும் நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. எப்போது இந்த நம்பிக்கை, ஆழமான உணர்வு ஒருவனுக்கு ஏற்படும்? இதை அல்லாஹ்வுடைய நிஃமத்தாக கருதும்போது.

சகோதரர்களே! அல்லாஹு தஆலா இப்படிப்பட்ட ஒரு பாக்கியம், இப்படிப்பட்ட ஒரு அருட்கொடை அவனுடைய மார்க்கம் என்பதால்தான் இந்த மார்க்கத்தின் பக்கம் அவனுடைய அடியார்களை அல்லாஹ் அழைக்கின்றான். அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. நம்மை அழைக்க வேண்டும். நம் மீது கிருபை காட்ட வேண்டும். நமக்கு அல்லாஹு தஆலா இந்த செல்வத்தை வழங்க வேண்டும் என்று அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை.

يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

மக்களே நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள்.அல்லாஹு தஆலா அவன் நிறைவானவன். அவன் புகழுக்குரியவன். (அல்குர்ஆன் 35 : 15)

நீங்கள் வணங்கினாலும், வணங்காவிட்டாலும் அவனுடைய புகழ்ச்சி அதிலே எந்தக் குறைவும் ஏற்படாது. அவனுடைய நிறைவு அதிலும் எந்த குறைவும் ஏற்படாது. அப்படி இருந்தும் அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வை பாருங்கள். எவ்வளவு பிரியமாக சொல்லுகின்றான்.

وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

அல்லாஹ் அழைக்கின்றான்,முதல் அழைப்பாளர். இந்த அழைப்பை முதன் முதலில் தன் மீது கடமையாக்கிக் கொண்டவன் அல்லாஹு தஆலா.

ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான். (அல்குர்ஆன் 2:221)

இந்த அழைப்பு பணியை ஒரு சாரார் ஒரு பிரிவினருக்கு மட்டும், மற்றொரு பிரிவினருக்கு மட்டும், என்று சுருக்கிக் கொண்டு தங்களுடைய அந்த விளக்கத்தை அவர்கள் ஒரு திரை போட்டு கொள்ளும் போது, அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதற்கு விளக்கம் அளிக்கின்றான். இல்லை. அல்லாஹு தஆலா எல்லா மக்களையும் அழைக்கின்றான்.

யஹூதியாக இருக்கட்டும், நஸ்ரானியாக இருக்கட்டும், மஜுஸியாக இருக்கட்டும், முஷ்ரிக்காக இருக்கட்டும், அவன் இந்த உலகத்தில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருக்கட்டும், அவை அனைத்தையும் விட்டு விலகி, இவை அனைத்திலிருந்தும் தவ்பா செய்து, அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு தன்னை தூய்மையாக்கிக் கொண்டு, அல்லாஹ்வின் நேரிய வழியின் பக்கம் வந்து அல்லாஹ்வுடைய சொர்க்கத்தை அடைந்து கொள்ளுங்கள் என்பதற்கு அல்லாஹ் அழைக்கின்றான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் படைத்த படைப்பினங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் கிருபை உள்ளவன். குர்ஆனிலே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த இடங்களிலும் இப்படி சொல்லவில்லை. அல்லாஹ் தஆலா முஃமீன்களின் மீது மட்டும்தான் கிருபை உள்ளவன் என்பதாக.

إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ

அல்லாஹு தஆலா எல்லா மக்களின் மீதும் கருணை காட்ட கூடியவன். (அல்குர்ஆன் 2:143)

எல்லாம் அல்லாஹ் படைத்த உயிர்கள். எல்லாரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதற்காக படைத்தான்? அவர்களுக்காக தயார் செய்து இருக்கக்கூடிய சொர்க்கத்திற்காக அல்லாஹ் படைத்தான். அந்த சொர்க்கத்தின் பக்கம் அல்லாஹ் அழைக்கின்றான்.

சகோதரர்களே! இந்த அழைப்புப்பணி இருக்கின்றதே இந்த அழைப்புப்பணி முதன்முதலாக அல்லாஹ்வைக் கொண்டு ஆரம்பமாகிறது.

அதுமட்டுமல்லாமல் அல்லாஹ் சொல்கின்றான். பத்தாவது அத்தியாயம் சூரா யூனுஸ் இருபத்தைந்தாவது வசனம் .

وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.(அல்குர்ஆன் 10 : 25)

அல்லாஹு தஆலா அந்த சொர்க்கத்திற்கு பெயர் சொல்லி அழைக்கின்றான். தாருஸ்ஸலாம். நிம்மதி, பாதுகாப்பு, ஈடேற்றம் அந்த சொர்க்கத்திற்கு நான் உங்களை அழைக்கின்றேன். இந்த அழைப்பு இருக்கின்றதே, இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய அழைப்பு. அல்லாஹ் எல்லா மக்களையும் அழைக்கின்றான். அல்லாஹூ ஸுப்ஹானஹு வதஆலா இந்த அழைப்பை இரண்டாவதாக அவனுடைய தூதர்களின் மீது கடமையாக்கினான். மக்களிலே அல்லாஹ் தஆலா ஒரு குறிப்பிட்ட மக்களை தேர்ந்தெடுக்கிறான். எப்படி தேர்ந்தெடுக்கிறான்? அல்லாஹ்விடத்தில் என்ன நிபந்தனைகள் இருக்கின்றன? அது அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். எந்த ஒரு தன்மையை அல்லாஹ் தன்பக்கம் இணைத்து சொன்னானோ, எந்த ஒரு தன்மையை நிறைவேற்றுவதற்கு அந்த தன்மையை தன்னிடத்தில் எடுத்துக் கொள்வதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மக்களில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரை அவன் தேர்ந்தெடுக்கிறான். இதில் யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது.

மக்காவுடைய காஃபிர்கள் கேளிக்கையாக பேசினார்கள்.

لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ

மக்காவில் இருக்கக்கூடிய, தாயிஃபில் இருக்கக் கூடிய பெரிய பணக்காரர்களுக்கு இந்த இறைத்தூதர் அனுப்பப்பட்டிருக்க வேண்டுமே. எத்தீமாக, அனாதையாக பிறந்த, ஒரு ஏழை முஹம்மதுக்கு இந்த தூதுவத்தை அல்லாஹ் கொடுத்தானே. என்ன அடிப்படையில் கொடுத்தான்? எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாக பரிகாசம் செய்து மறுத்தனர். அப்போது அல்லாஹ் பதில் தருகின்றான். முட்டாள்களே, அறிவீனர்களே, அல்லாஹ்விற்கா புத்தி சொல்லிக் கொடுக்கிறீர்கள்.(அல்குர்ஆன் 43 : 21)

اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ

அல்லாஹ் மிக அறிந்தவன். அவனுடைய தூதுத்துவத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 6 : 124)

அல்லாஹு ரப்புல் ஆலமீன் இறைத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறான் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும். அந்த இறைத்தூதர்களுடைய வாழ்க்கையை நீங்கள் எடுத்து பார்த்தால் புரியும் உங்களுக்கு. அல்லாஹ் ஏன் இவர்களை தேர்ந்தெடுத்தான் என்பதாக. எத்தனை கஷ்டங்களை அவர்கள் சகித்தார்கள். எவ்வளவு பயங்கரமான துன்பங்களை எல்லாம் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடம் அல்ல, 20வருடம் அல்ல, 200வருடம் அல்ல, 950வருடங்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு மத்தியிலே கஷ்டப்படுத்தப்பட்டார்கள்; கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள்; கடுமையான முறையில் பரிகசிக்கப்பட்டார்கள்; கேவலப்படுத்த பட்டார்கள்; இந்த எல்லா நிலையிலும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய பணியை புறக்கணிக்கவில்லை. அல்லாஹ்விடத்தில் குறையிடவில்லை. அல்லாஹ்விடத்தில் மன்றாடி கேட்கிறார்கள். தங்களுடைய சமுதாயம் எவ்வளவு வேகமாக தங்களை புறக்கணித்து சென்றதோ, அந்த வேகத்திலே அவர்கள் அந்த சமுதாயத்திற்கு இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை எடுத்துச் சொன்னார்கள். தனியாக சந்திக்கும் போது, கூட்டமாக சந்திக்கும்போது, அவர்களுக்கு அவர்களுடைய தேவைக்காக வேண்டி அவர்கள் வரும் பொழுது, இரவில், பகலில் தன்னுடைய முழு வாழ்க்கையையும் அல்லாஹ்வுடைய இந்த அழைப்பை எடுத்துச் சொல்வதற்காக வேண்டி அவர்கள் தியாகம் செய்தார்கள்.

எனவேதான் அல்லாஹ் தஆலா இறைதூதர்களிலேயே முழு உறுதிமிக்கவர்கள், மிக உயர்ந்தவர்கள் என்ற வரிசைப்படி முதலில் வரக்கூடியவர்கள் நூஹ் அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் தான். அல்லாஹ் ஏன் இந்த அந்தஸ்தை கொடுத்தான்? அவர்களுடைய இந்த அழைப்பு பணியினுடைய தாக்கம் இருக்கின்றதே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதிலே பல படிப்பினைகளை வைத்திருக்கின்றான். எனவேதான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட இந்த குர்ஆனிலே அவர்களுடைய அழைப்புப் பணியைப் பற்றியும் விலாவாரியாக, விரிவாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் எடுத்து சொல்கின்றான்.

நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமல்ல. இறைத்தூதர்களுடைய அனைத்து குழுக்களை நீங்கள் பார்த்தால், ஒவ்வொரு இறைத்தூதர்களும் தங்களுடைய சமுதாயத்தினுடைய எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, அவர்களுடைய ஒரே நோக்கம் எதுவாக இருந்தது? அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை அல்லாஹ்வுடைய இந்த அழைப்பை இந்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக வேண்டி அந்த இறைத்தூதர்கள் சந்தித்தது என்ன? அல்லாஹ் சொல்கின்றான்.

كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ

இறைத்தூதர்கள் இந்த மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக, இந்த அழைப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக, இந்த ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக படுகொலை செய்யப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 61)

அல்லாஹு அக்பர். இந்த பூமியிலேயே அல்லாஹ்வுடைய படைப்பினங்களில் எல்லா உயிரையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.

وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ

அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ் சங்கைபடுத்திய உயிரை நீங்கள் உரிமை இல்லாமல் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 17 : 33)

இந்த உயிர்களிலேயே அல்லாஹ்விடத்தில் மிக சங்கைக்குறிய உயிர் நபிமார்களுடைய உயிர்கள். இந்த நபிமார்களுடைய உயிர்கள், அவர்களுடைய இரத்தம், இந்த பூமியிலே சிந்தப்பட்டன. அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்களுடைய உயிர் வாங்கப்பட்டது; அவர்கள் அறுக்கப்பட்டார்கள்; அவர்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டார்கள்; எதற்காக வேண்டி? இந்த மார்க்கத்தை, இந்த தீனை, இந்த ஏகத்துவத்தை, அல்லாஹ்வின் இந்த அழைப்பை எடுத்துச் சொல்வதற்காக வேண்டி. அல்லாஹ் அவர்களுக்கு கூறினான்.

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ

ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக்கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப்பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர்.(அல்குர்ஆன் 16 : 127)

யார் ஒருவர் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக இந்த உலகத்திலே உயிரை விடுகிறாரோ, யார் ஒருவர் அல்லாஹ்வுடைய இந்த அழைப்பை எடுத்து சொல்வதற்காக இந்த உலக வாழ்க்கையை இழக்கின்றாரோ, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாளை மறுமையில் அவர்களுக்காக மிக உயர்ந்த சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கின்றான்.

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க்கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக்கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விருநிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம்தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன் மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வை விட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி.(அல்குர்ஆன் 9 : 111)

அல்லாஹு தஆலா நம்முடைய உயிரையும், பொருளையும் அவன் விலைக்கு வாங்கிக் கொண்டான்.நம்முடைய உயிர் நமக்கு சொந்தமானது அல்ல. நம்முடைய பொருள் நமக்கு சொந்தமானது அல்ல. அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொர்க்கத்தை நமக்கு கொடுத்து, இந்த உயிரையும், பொருளையும் அவன் விலைக்கு வாங்கிக் கொண்டான். நம்முடைய பணி என்ன? இந்த உயிரையும், பொருளையும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக செலவழித்து சொர்க்கத்தை பெற்றுக்கொள்வது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இறைதூதர்களுடைய தலைவர்; நம்முடைய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அகிலங்கள் அனைத்திற்க்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியத்திற்குரியவர்கள். நபிமார்களில் மிக கண்ணியத்திற்குரியவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا

முஹம்மதே! அல்லாஹ்வின் கிருபை உங்கள் மீது மிக மகத்தானது என்று அல்லாஹ் சொல்கின்றான்.(அல்குர்ஆன் 4 : 113)

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ

நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒருதூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கைகொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்யவேண்டும்.(அல்குர்ஆன் 3 : 81)

அல்லாஹு அக்பர்; நபிமார்களில் மிக உயர்ந்தவர்களாக அனுப்பப்பட்ட முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த தீனுக்காக, இந்த ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்காக, அல்லாஹ்வின் இந்த அழைப்பை மக்களுக்கு எடுத்து வைப்பதற்காக எப்படிப்பட்ட சிரமங்களை அவர்கள் சகித்தார்கள். அவர்களுடைய சிரமங்களையும், அவர்களுடைய துன்பங்களையும், அவர்களுடைய வாழ்க்கையை நாம் படிக்கும்போது தெரிந்துகொள்ளலாம். இன்று நாம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அன்பு இருக்கின்றது என்பதாக சொல்லிக்கொண்டு, அவர்கள் எந்த ஒரு பணியை செய்தார்களோ அந்த பணியை மறந்தவர்களாக இருக்கின்றோம். அல்லாஹூ ஸுப்ஹானஹு தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உள்ளத்திலிருந்த கவலையை பாருங்கள். அவர்களுடைய உள்ளத்தில் இருந்த வேதனையைப் பார்த்து அர்ஷுக்கு மேலிருந்து அவன் அவர்களுக்கு அறிவுரை சொன்னான்.

فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَاتٍ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ

நபியே உங்களை நீங்கள் கைசேதப்பட்டு, கவலைப்பட்டு இவர்களுக்காக அழித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 35 : 8)

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை, இறை நம்பிக்கைக்கு வரவில்லை என்பதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள தயாரானார்கள். அதாவது தங்களுடைய சுகதுக்கங்கள், தங்களுடைய நன்மை தீமைகள் அனைத்தையும் மறந்து சதா சிந்தனை கொண்டவர்களாக, சதா யோசனை கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய அந்த யோசனை, அந்த கவலை, அந்த வேதனையை பார்த்து அல்லாஹ் சொன்னான். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நீங்கள் இவ்வாறு கவலைப்பட்டு உங்களுடைய உயிரை அழித்து விட வேண்டாம். உங்களுடைய உயிர் பிரிந்து விட வேண்டாம். மீண்டும் அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இப்படியும் சொல்கின்றான்.

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا

(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக்கொள்வீரோ! (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)(அல்குர்ஆன் 18 : 6)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

لَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ

இவர்கள் ஈமானை ஏற்றுக்கொள்ளவில்லை. இறை நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக நபியே! நீங்கள் உங்களையே அழித்துக் கொள்வீர்கள் போலுமே. அப்படி அழித்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 26 : 3)

وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ

நபியே! நீங்கள் சிரமப்படுவற்தாக, நீங்கள் துன்பப்படுவதற்காக நாம் இந்தத் தூதுத்துவத்தை, இந்த குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை. (அல்குர்ஆன் 27 : 6)

அன்பு சகோதரர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த அழைப்பு பணிக்காக அடிக்கப்பட்டார்கள். அபூலஹப், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் சென்று பொடிக் கற்களை கொண்டு அவர்களுடைய பிடரியை நோக்கி அடித்துக் கொண்டே வருவான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெருத்தெருவாக செல்லும் போதும் ஹஜ்ஜுடைய காலங்களிலே ஹாஜிகளுடைய ஒவ்வொரு கூடாரங்களின் பக்கம் செல்லும்போதும் அபூலஹப்சொல்லிக் கொண்டே வருவான்; .(انه لمجنون)இன்னஹு லமஜ்னூன்இவர் ஒரு பைத்தியக்காரர். இன்னஹு லஸாஹிர். இவர் ஒரு சூனியக்காரர். இன்னஹு லஸாபி இவர் மதம் மாறியவர் என்பதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துன்புறுத்திக் கொண்டு கற்களால் அடித்துக் கொண்டே வருவான். இந்த அடி எந்த அளவுக்கு அதிகமாகும் என்று சொன்னால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிடரி காயமடைந்து ரத்தம் வழிய ஆரம்பிக்கும். ஆனால் ஒருமுறைகூட ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் திரும்பிப் பார்த்து அபூலஹபை ஏசியது கிடையாது.

அபூலஹபுடைய மனைவி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டின் முன்பாக முற்களை நிறுத்திவிடுவாள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சபித்துக் கொண்டே இருப்பாள். மிகப்பெரிய அரபுக்கவிஞராக இருந்தாள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இகழ்ந்து பல கவிகளைப் பாடிக் கொண்டே இருப்பாள்.

مذمما أبينا ودينه قلينا وأمره عصينا 

இவர் முஹம்மது அல்ல. இவர் முதம்மம் பழிக்கப்பட்டவர் என்பதாக சொல்லிக் கொண்டிருப்பாள். நாம் முஹம்மதுக்கு மாறு செய்யவில்லை. முதம்மம் பழிக்கப்பட்டவருக்கு மாறு செய்கின்றோம். இவருடைய மார்க்கத்தை மறுக்கிறோம் என்பதாக சொல்லிக் கொண்டிருப்பாள். (1)

அறிவிப்பாளர்: அஸ்மா ரழியல்லாஹுஅன்ஹா, நூல்: ஹாகிம் ,எண்: 3333

அல்லாஹ் அக்பர். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வளவு துன்பங்களுக்கு இடையிலும் இந்த அழைப்பு பணியை விடவில்லை. இந்த மார்க்கத்தை கைவிடவில்லை. கடுமையான முறையில் துன்ப படுத்தப்பட்டார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவருடைய குடும்பத்தாரும் அபூ ஷியப் அபூதாலிப் என்று சொல்லக்கூடிய அந்த கணவாயிலே இரண்டரை ஆண்டுகள் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அல்லாஹு அக்பர்.

கடுமையான சோதனை. மிகக் கடுமையான சோதனை. இன்று நாம் வயிறார சாப்பிடுகின்றோம். இயன்றளவு நம்முடைய உணவு இருக்கிறது என்று சொன்னால் பசி ஏற்படுவதற்கு முன்பாகவே நாம் அடுத்த வேளையுடைய உணவை சாப்பிடுகின்றோம். ஆனால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடைய தோழர்களும், அவர்களுடைய மனைவி, அவருடைய குடும்பத்தினர்களும் இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்து பசியிலும், பட்டினியிலும், பஞ்சத்திலும் கடுமையான கஷ்டத்திற்கு ஆளானார்கள். அவர்களுடைய பிள்ளைகள் அபூ பனூ ஹாஷிமுடைய பிள்ளைகள் குடிப்பதற்கு பால் இல்லாமல் அவர்கள் அழுத சப்தத்தை அந்த கணவாய்க்கு வெளியில் உள்ளவர்கள் எல்லாம் கேட்டார்கள்.இலைகளை சாப்பிடக்கூடிய அளவுக்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். கடுமையான சோதனை. இரண்டரை ஆண்டுகள் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் என்றால் என்ன ஒரு நிலைமைக்கு ஆளாகி இருப்பார்கள்? யோசித்து பாருங்கள் .

தாயிஃப் உடைய சம்பவம். பதினான்கு நாட்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தாயிஃபிலே கஷ்டப்படுகிறார்கள். எடுத்துச் சொல்கிறார்கள் இந்த மார்க்கத்தை. அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன? துரத்தப்பட்டார்கள். அதுவும் எப்படி? குண்டர்களாலும், சிறுவர்களாலும் அடிக்கப்பட்டு துரத்தப்படுகிறார்கள். அவர்களுடைய உடம்பில் இருந்து வழிந்த இரத்தங்கள் அவர்களுடைய பாதங்களில் உறைந்து அவர்களுடைய செருப்பை கழட்ட முடியாத அளவிற்கு ஆகிவிட்டது. அல்லாஹுஅக்பர். இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் ஏன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை தாங்க வைத்தான்? என்ன காரணம்?

யோசித்துப் பாருங்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எடுத்து பாருங்கள். எங்கேயாவது அவர்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்களா? மக்காவிலேயே பதிமூன்று வருடங்கள். மதினாவில் பத்து வருடங்கள். நிம்மதி பெருமூச்சு ஒரு முறையாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டிருக்கிறார்களா? ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு சொல்லுகின்றார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து,

كان رسول الله صلى الله عليه وسلم متواصل الأحزان ، طويل الفكرة ، ليس له راحة لا يتكلم في غير حاجة ، طويل السكوت

அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வின் தூதரின் மீது அன்பு இருக்கிறது என்று சொல்லக்கூடிய நமக்கெல்லாம் மிகப்பெரிய ஒரு கேள்வி?

ஜாபிர் ரழியல்லாஹு சொல்கிறார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாயிமல் ஃபிக்ரா -எப்போதும் சிந்தனை உள்ளவராக இருப்பார்கள்.

நூல்: பைஹகீ, எண்: 1413

என்ன சிந்தனை? காசு சேர்க்க வேண்டும், பணம் சேர்க்க வேண்டும், தங்களுடைய வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று கவலையா? என்ன கவலை அவர்களுடைய உள்ளத்தில் குடி கொண்டிருந்தது? முதவாஸிஅல் அஹ்ஸான் தொடர்ந்து கவலையில் இருப்பார்கள். என்ன கவலை அவர்களுக்கு? ஃபாத்திமாவிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், ஹசன் ஹுசைனுக்கு அரசாங்கம் கிடைக்க வேண்டுமென்ற அசையா? மந்திரி ஆக வேண்டும், பதவி கிடைக்க வேண்டும் என்று ஆசையா?

نحن معاشر الأنبياء لا نورث ولا نورث ما تركناه صدقة

நாங்கள் நபிமார்களுடைய கூட்டத்தினர். நாங்கள் யாருக்கும் வாரிசாக மாட்டோம். எங்களுக்கும் யாரும் வாரிசு கிடையாது. நாங்கள் எதை விடுகின்றோமோ அது முஸ்லிம்களுக்காக வேண்டிய ஸதகா, தர்மம் என்பதாக சொன்னார்கள்.(2)

தங்களுடைய குடும்பத்தினருக்காக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொத்தை சேர்க்கவில்லை. பின் காலத்திலே ஃபதக்கிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைத்த ஒரு பொருளைப் பற்றி கருத்து வேற்றுமை வரும்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முஹம்மதின் குடும்பத்தார்களே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் நபியுடைய வாரிசுகள். உங்களுக்கு நபியுடைய சொத்து ஆகுமானதல்ல. எது பைத்துல்மாலில் இருந்து உங்களுக்கு கொடுக்கப்படுகிறதோ, அதை மட்டும் தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நீங்கள் உங்களுக்காக வேண்டி எந்தவொரு சொத்தையும் நபிக்கு பின்பாக சொந்தம் கொண்டாட முடியாது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரணிக்கும்போது சஹாபாக்கள் எல்லாம் செல்வ நிலையில் இருக்கிறார்கள். போரில் அவர்களுக்கு கனீமத் கிடைத்தது. போரிலே அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்து செல்வ நிலமையில் இருக்கின்றார்கள். ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வறுமை என்ன தெரியுமா?

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلَاثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ

முப்பது மரைக்கால் கோதுமை ஒரு யஹூதியிடம் வாங்கி இருந்து, அதற்குரிய தொகையை கொடுக்க முடியாமல் தங்களிடம் இருந்த அந்த இரும்பு சட்டையை, அந்த உருக்கு சட்டையை, கவச ஆடையை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடமானமாக வைத்து இருந்தார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, எண்: 2700

யார் இந்த ரசூல்? ரஹ்மத்துல் ஆலமீன் அகிலங்களின் அருட்கொடை. ஹபீப் ரப்புல் ஆலமீன் அகிலத்தின் இறைவன் அல்லாஹ்விற்கு நேசமான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். நாளை மறுமையில் சொர்க்கத்தின் கதவை இவர்கள் தட்டாமல் வேறு யாரும் நுழைய முடியாது. நாளை மறுமையில் இவர்களுடைய சிபாரிசு இல்லாமல் கேள்விகள் ஆரம்பம் ஆகாது. நாளை மறுமையில் இவர்களுடைய சிபாரிசு இல்லாமல் யாரும் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. அப்படிப்பட்ட நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறக்கும் பொழுது, அவர்களுடைய இரும்பு ஆடை யஹூதியிடம் வாங்கிய தானியத்திற்காக அடமானமாக வைக்கப்பட்டிருக்கின்றது. எதற்காக வேண்டி?

அவர்கள் ஓய்வு என்பது எடுத்ததே கிடையாது. அன்பு சகோதரர்களே! இந்த அழைப்பு பணியினுடைய தாக்கம் இந்த பொறுப்பை அவர்கள் விளங்கி இருந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பொறுப்பை கொடுத்திருந்தான்.

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا

நபியே நீங்கள் சொல்லுங்கள். ஓ மக்களே! உலகத்தில் உள்ள மக்கள் அனைவருமே! உங்கள் அனைவருக்கும் நான் தூதராக அனுப்பபட்டிருக்கிறேன். (அல்குர்ஆன் 7 : 158)

இன்று நாம் வாயால் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்; நம்முடைய வாழ்க்கையில் கத்திக் கொண்டிருக்கிறோம்; பேசிக்கொண்டிருக்கிறோம்; அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்கள் எல்லோருக்கும் அனுப்பப்பட்ட தூதர் என்பதாக. ஆனால் எப்படிப்பட்ட மோசடி செய்து கொண்டிருக்கிறோம். இரண்டுவிதமான மோசடி. ஒன்று அந்த தூதருடைய வாழ்க்கையை முழுமையாக நாம் பின்பற்ற வில்லை. அந்த தூதருடைய மார்க்கத்தை இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்து சரியாகச் சொல்லவில்லை. இந்த நிலையிலேயே நாம் நாங்கள் முஸ்லிம்கள் என்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம்?

சகோதரர்களே! யார் தன்னை முஸ்லிம் என்பதாக எண்ணிக் கொள்கிறானோ, யார் இந்த கலிமாவை ஏற்றுக்கொண்டானோ, யார் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற சாட்சியத்தை ஏற்றுக் கொண்டாரோ, அவர் அடுத்த நிமிடமே இந்த மார்க்கத்தின் பக்கம், ஏகத்துவத்தின் பக்கம், இந்த சாட்சியின் பக்கம் மக்களை அழைப்பது இவரின் மீது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடமையாக்கி விடுகின்றான்.

அல்லாஹு தஆலா சொல்கின்றான்,

قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

(நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின்பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணைதுணைகளைவிட்டு) அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.(அல்குர்ஆன் 12 : 108)

நபியே! நீங்கள் சொல்லுங்கள்;இந்த ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதுதான் என்னுடைய வழி. இந்த هٰذِهٖஎன்றால் எது? இது எனது வழி என்று அல்லாஹ் சொல்ல சொல்கின்றான். யாருக்கு? முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு.நபியே நீங்கள் சொல்லுங்கள். இது எனது வழி. எது எனது வழி? அதற்கு அல்லாஹ் விளக்கம் சொல்லுகின்றான்.

இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்லுகின்றார்கள். இந்த இடத்தில் அல்லாஹ் ,

هٰذِهٖسَبِيْلِىْۤ

என்று சொல்லி அதற்கு விளக்கம் சொல்கின்றான்.

اَدْعُوْۤا اِلَى اللّٰهِ

அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதுதான் என்னுடைய வழி. அல்லாஹ்வின் பக்கம் யாரை அழைக்க வேண்டும்? அல்லாஹ்வை தெரியாத எல்லா சமுதாயத்தினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கவேண்டும். முஸ்லிம்களை மட்டும் அழைத்தால் போதாது. எல்லா மக்களுக்கும் இந்த அழைப்பை எடுத்துச் சொல்ல வேண்டும். எல்லா மக்களுக்கும் அல்லாஹ்வை எடுத்துச் சொல்ல வேண்டும். குர்ஆனுடைய வசனங்களை எடுத்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா எத்தனை வசனங்களை நமக்கு சொல்கின்றான்.

يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதை செவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள்என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(துமுயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப்படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒருபொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த்தெய்வங்கள் என)அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!(அல்குர்ஆன் 22 : 73)

இந்த செய்தியை அல்லாஹு தஆலா நபிக்கு சொல்கின்றான். நபியே! இந்த முஷ்ரிக்குகளுக்கு, சிலைகளை வணங்கக் கூடியவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்பதாக. எத்தனை பேர் இந்த செய்தியை நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்? எதற்காக வேண்டி? இந்த வசனத்தை அல்லாஹ் சொல்லும் போது எடுத்துச் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

யோசித்து பாருங்கள்! எத்தனை வசனங்கள் இருக்கின்றன? ஏன் இந்த மாதிரி வசனங்கள்?

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

நபியே நீங்கள் சொல்லுங்கள். இந்த சிலை வணங்குபவர்களை பார்த்து; நீங்கள் வணங்கக் கூடிய சிலைகள் எல்லாம் உங்களை போன்று அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்பினங்கள் தான்.(அல்குர் ஆன் 7 : 194)

அவையெல்லாம் இறந்து போனவை உயிரற்றவை.உங்களுக்கு பலனளிக்க முடியாது. உங்களுக்கு எந்த தீங்கையும் அளிக்க முடியாது. இந்த செய்தியை முஷ்ரிக்குகளுக்கு எடுத்துச்சொல்லுங்கள். அப்படி எடுத்துச் சொன்னதற்கு பின்பு அவர்கள் இணை வைத்துக் கொண்டு இருந்தால் அவர்கள் காஃபிர்கள். அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவார்கள்.

சகோதரர்களே! இதை எடுத்துச் சொல்லக்கூடிய பொறுப்பு யாருக்கு? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள். இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார்கள். இந்த قلஎன்ற வசனத்தினுடைய கட்டளை யாருக்கு சொல்லுங்கள்? அல்லாஹ்வின் பள்ளியிலே தொழக்கூடிய முஸ்லிம்களுக்கா? அல்லது கோயிலில் சிலை வணங்கிக் கொண்டிருக்கிற காஃபிர்களுக்கா? அல்லாஹ் சொல்லுகிறான்,

قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ

(நபியே! அவர்களைநோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தைஉடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக்கொள்ளமாட்டோம்'' (என்றுகூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால்‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன்ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.(அல்குர்ஆன் 3 : 64)

இந்த வசனத்தில் ரப்புல் ஆலமீன் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றான். நபியே! நீங்கள் சொல்லுங்கள் என்பதாக. அடுத்து நீங்கள் சொல்ல வேண்டிய கடமை யாருக்கு? எத்தனை கிறிஸ்தவர்களுக்கு நாம் சொல்லி இருக்கின்றோம்? அல்லாஹு தஆலா கடுமையாக சொல்ன்றான்.

تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا (90) أَنْ دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا

வானங்கள் பிளந்து விடலாம், பூமி பிளந்து விடலாம், மலைகள் சுக்கு நூறாக ஆகி விடலாம். அல்லாஹ்விற்கு இவர்கள் குழந்தை இருக்கிறது என்று சொல்லுகிறார்களே!(அல்குர்ஆன் 19 : 90-91)

அல்லாஹ்வுடைய கோபம் நமக்கு முன்பு இந்த பாவங்களெல்லாம் கொடூரங்களெல்லாம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய அண்டை வீட்டார், நாம் பழகக்கூடிய இடங்களில், நாம் வேலை செய்யக்கூடிய இடங்கள், நாம் கலந்து இருக்கக்கூடிய சமுதாயத்தில், ஒரு நாளாவது நமக்கு கோபம் வந்திருக்குமா? அந்த இணைவைத்தலை பார்க்கும் பொழுது, அந்த கெட்ட செயலை பார்க்கும் பொழுது. எந்த கெட்ட செயலை பார்த்து வானம் பிளந்து விட நெருங்கிவிட்டதோ, பூமி பிளந்து விட நெருங்கிவிட்டதோ, மலைகள் சுக்கு நூறாக நெருங்கி விட்டதோ, அந்த வானத்திற்கும், மலைகளுக்கும், பூமிக்கும் இருக்கக்கூடிய உணர்வு கூட இல்லாத ஒரு மிருக வாழ்க்கையாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படித்தான்.

ஸுலைமான் நபி அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹுத் ஹுத் பறவைக்கு இருந்த உணர்வு கூட அந்த ஷிர்க்கை பார்க்கும் பொழுது நமக்கு இல்லை என்று சொன்னால், அந்த பறவையை விட கேவலமானவர்கள். சுலைமான் நபியுடைய ஆட்சிக்கு பக்கத்தில் இருந்தவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். சூரியனை வணங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த ஹுத் ஹுத் பறவை துடிதுடித்து வந்து சுலைமான் நபி இடத்தில் தூது சொல்லுகின்றது.

إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ (23) وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ

மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒருபெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு அரசகட்டிலும் அவளுக்கு இருக்கிறது. அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம்பணிந்து வணங்குவதை நான்கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக்காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்துவிட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை.(அல்குர்ஆன் 27 : 23-24)

ஏன் அல்லாஹ் நமக்கு சொல்லுகின்றான்? எதற்காக வேண்டி? நாம் படித்து என்ன பலன் பெறுவதற்காக சொல்லுகின்றான் பாருங்கள்.

قل هٰذِهٖسَبِيْلِىْۤ

இதுதான் எனது மார்க்கம். இமாம் இப்னு கசீர் சொல்கிறார்கள். எனது மார்க்கம் என்றால் இந்த இஸ்லாமை பின்பற்றுவது மட்டுமல்ல,

இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைப்பது எனது மார்க்கம்.

اَدْعُوْۤا اِلَى اللّٰهِ

அல்லாஹ்வின் பக்கம் நான் அழைக்கின்றேன். நான் மட்டுமல்ல என்னை பின்பற்றுகிறேன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் இந்த அழைப்பை செய்ய வேண்டும். அல்லாஹ் அக்பர். இந்த வசனத்தில் இருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது என்று சொன்னால், யார் ஒருவர் கலிமாவை ஏற்றுக்கொண்டதற்குப் பின்பு, இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்கு பின்பு, இந்த அழைப்பு பணிக்காக தன்னை தயார்படுத்தவில்லையோ, உண்மையில் அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றியவராக ஆக மாட்டார். அவருடைய வார்த்தையிலே அவர் குறைவுள்ளவர். இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு பொய்யராக கருதப்படுவார்.

அன்பு சகோதரர்களே! இந்த அழைப்பு பணியை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு மேலாக, அல்லாஹு தஆலா நம் மீது கடமையாக வைத்திருக்கின்றான்.

இது சாதாரண ஒரு உபரியான வணக்கம் மட்டுமல்ல. யார் விரும்பினாலும் செய்யுங்கள், விரும்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்பதாக கிடையாது. இது நம் மீது சுமத்தப்பட்ட கடமை.

அழைப்புப் பணி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

இந்த கடமையை நாம் செய்வதால் எத்தனை நன்மைகளை நாம் அடைந்து கொள்ளலாம். முதலாவதாக இந்த ஈமான், இஸ்லாம், இந்த ஏகத்துவம், இந்த இறை நம்பிக்கை நமது வாழ்க்கையில் முழுமைபெறும். அல்லாஹு அக்பர். நம்முடைய வாழ்க்கையிலே இறை நம்பிக்கை அதிகமாகும். மறுமையின் மீது உண்டான நம்பிக்கை அதிகமாகும். நம்முடைய இஸ்லாமுடைய மகத்துவத்தை நாம் புரிந்துகொள்வோம்.

இன்று பாருங்கள்! நம்முடைய சமுதாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு, நம்முடைய சமுதாயத்தில் இந்த அளவிற்கு மக்கள் இஸ்லாமை விட்டு விலகி வாழ்கின்றார்கள்? மானக்கேடான செயல், அசிங்கங்கள், அனாச்சாரங்கள், ஷிர்க்குகள், குஃப்ருகள், பித்அத்கள், இவ்வளவு மலிந்து இருப்பதற்கு காரணம் என்ன? சகோதரர்களே! இந்த அழைப்பை அவர்கள் விட்டதுதான். இந்த அழைப்பை அவர்கள் செய்திருந்தால் இஸ்லாமை சரியாக புரிந்து இருப்பார்கள். அதனுடைய உணர்வு, அதனுடைய தாக்கம் அவர்களை சீர்திருத்தி இருக்கும். எனவேதான் அவர்களிடத்திலே பார்க்கின்றோம். இந்த அழைப்பை விட்டதனுடைய விளைவாக எல்லா விதமான பாவங்களுக்கும் அவர்கள் அரணாக விளங்குகின்றார்கள். என்ன அனாச்சாரங்கள் இந்த சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டும் என்பதாக அல்லாஹ் சொன்னானோ, அந்த அனாச்சாரங்கள் அனைத்தும் நம்முடைய சமுதாயத்தில் காணப்படுகின்றது.

இரண்டாவதாக யாரொருவர் அழைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, யாரொருவர் இந்த மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வேண்டி தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, இவர் அல்லாஹ்வுடைய நற்செய்திக்கு, அல்லாஹ்வுடைய சுப செய்திக்கு தகுந்தவராக ஆகிவிடுகிறார். அல்லாஹு தஆலா சொல்கின்றான்.

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (8) هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ

அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். அவனுடைய பிரகாசத்தை அல்லாஹ் முழுமைப்படுத்தியே தீருவான். இந்த காஃபிர்கள் வெறுத்தாலும் சரியே. அவனுடைய தூதரை நேர் வழியைக் கொண்டு அனுப்பி வைக்கின்றான். சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பியிருக்கிறான். எதற்காக வேண்டி? இந்த சத்திய மார்க்கத்தை எல்லா மார்க்கங்களையும் விட மிகைக்க வைப்பதற்காக.(அல்குர்ஆன் 61 :8-9)

எப்போது ஏற்படும்? இந்த அழைப்பு பணியை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்பு நாம் எல்லா சமுதாயத்தினர்களுக்கு மத்தியில் செய்யும் பொழுது தான் இந்த வாக்கு பூர்த்தியாகும். நமக்கு மத்தியில் செய்து கொண்டிருப்பதால் இது பூர்த்தியாகாது. எல்லா மார்க்கங்களையும் விட இந்த இஸ்லாமை மிகைக்க வைப்பதற்காக, ஓங்க வைப்பதற்காக, உயர வைப்பதற்காக அல்லாஹ் இந்த நபியை அனுப்பி இருக்கின்றான். எனவே இந்த நபியை நாம் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, இந்த மார்க்கத்தை பரப்புவதற்காக, இந்த மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக நாம் செயல்படவில்லை என்று சொன்னால், இந்த வசனத்தை நம்பாதவர்களாக நாம் இருக்கின்றோம் என்று பொருளாகி விடும்.

அதுமட்டுமில்லாமல் யார் இந்த அழைப்பு பணிக்காக தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் இறைத்தூதர்கள், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் கொடுத்த முதல் பணி என்ன?

يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ

எனது சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு தருகிறேன். (அல்குர்ஆன் 7 : 59)

இதுதான் இறைதூதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் கொடுத்த பணி. யார் ஒருவர் இந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் நபிமார்களுடைய பணியை தங்களுடைய கைகளிலே எடுக்கிறார்கள். நபிமார்களுடைய பட்டியலிலே தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். நபிமார்களுடைய பணிகளை செய்வதற்கு அவர்கள் துணிகிறார்கள்; அல்லாஹ்விடத்திலே பொறுப்பு எடுக்கிறார்கள். எனவே அல்லாஹ் தஆலா இவர்களுக்காக தனிப்பெரும் சிறப்பை சொல்கின்றான். சாதாரண சிறப்பல்ல. தனிப்பெரும் சிறப்பை அல்லாஹ் சொல்கின்றான் அழைப்புப் பணியைச் செய்யக் கூடியவர்களுக்காக. அது மட்டுமல்ல.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா குர்ஆனிலே சொல்லும் பொழுது,

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

உண்மை வரும். அசத்தியம் அழிந்தே தீரும் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 17 : 81)

உண்மை என்று சொன்னால் ஈமான், இறைநம்பிக்கை, நல்ல அமல்கள், நல்ல குணங்கள். பொய்யென்றால் இணைவைத்தல், இறைவனை நிராகரித்தல், பாவங்கள், அனாச்சாரங்கள், அசிங்கங்கள், இவை அனைத்தும். எப்போது இந்த உண்மை வரும்? எப்போது இந்த பாவங்கள் அழிக்கப்படும்?

சகோதரர்களே! யோசித்துப் பாருங்கள். நாம் நமது வீட்டில் இருந்து கொண்டு இந்த மார்க்கத்தை நாமும் பின்பற்றாமல், பிறருக்கும் எடுத்துச் சொல்லாமல் இருந்தால் இந்த மார்கத்தினுடைய உண்மை எப்போது வெளியே வரும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேலும் அல்லாஹ்வுடைய தண்டனையில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? அதற்கும் இந்த அழைப்பு பணி ஒன்று தான் வேலை. இந்த அழைப்பு பணி ஒன்று தான் வழி. இந்த அழைப்பு பணியை செய்யாமல் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது.

அல்லாஹு தஆலா கூறுகின்றான்;

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

உங்களுடைய பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய சகோதரர்கள், உங்களுடைய நெருக்கமான உறவினர்கள், நீங்கள் சேகரித்து வைத்திருக்க கூடிய பொருள், நீங்கள் விரும்பக்கூடிய வியாபாரம், நீங்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய உங்களுடைய இல்லங்கள், இவை அனைத்தும் உங்களுக்கு அல்லாஹ்வை விட, அல்லாஹ்வுடைய தூதரை விட, அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே உயிர், பொருளைச் செலவு செய்வதை விட, உங்களுக்கு விருப்பமானதாக இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை நீங்கள் எதிர் பாருங்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். (அல்குர்ஆன் 9 : 24)

இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழித்தே இருக்கின்றான். அதையும் அல்லாஹ் குர்ஆனில் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்;

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ

(நபியே) கடற்கரையிலிருந்த ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக்கேட்பீராக. (ஓய்வுநாளாகிய) சனிக்கிழமையன்று (மீன்வேட்டையாடக்கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள்வரம்புமீறி (மீன்வேட்டையாடி)க்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில்உள்ள) மீன்கள் அவர்கள் முன்வந்து (நீர்மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக்கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக்கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.(அல்குர்ஆன் 7 : 163)

சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்று அல்லாஹ் யூதர்களுக்கு கட்டளையிட்டு இருந்தான். அப்பொழுது மூன்று பிரிவினர்களாக பிரிந்தார்கள். ஒரு கூட்டம் விலகிக் கொண்டார்கள் அல்லாஹ் இட்ட கட்டளை என்பதாக. இன்னொரு கூட்டம் இந்த ஹராமை செய்வதற்கு தந்திரத்தை செய்தார்கள். சனிக்கிழமையில் மீன்கள் அவர்களுக்கு மிக அதிகமாக காணப்பட்ட போது அதை செய்வதற்காக அவர்கள் தந்திரம் செய்தார்கள். இப்பொழுது ஒரு கூட்டம் அந்த மக்களைத் தடுக்க ஆரம்பித்தார்கள். செய்யாதே என்று. ஹராமை செய்வதற்கு தந்திரங்கள் செய்யாதே என்று. அல்லாஹ் தண்டித்து விடுவான் என்பதாக. அன்பு சகோதரர்களே! இந்த மக்கள் வரம்பு மீறிய பொழுது,

அல்லாஹ் சொல்கின்றான். இவர்கள் வரம்பு மீறிய பொழுது தண்டித்தோம். வேதனை செய்தோம்.

أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ

யார் தீமையிலிருந்து தடுத்து கொண்டிருந்தார்களோ அவர்களை மட்டும் நாம் பாதுகாத்தோம். (அல்குர்ஆன் 7 : 165)

அல்லாஹ் அக்பர். இதிலே அல்லாஹ் என்ன சொல்கின்றான்? யார் தீமைகளை பார்த்து அவற்றில் இருந்து அந்த மக்களைத் தடுக்காமல் இருந்தார்களோ அவர்களும் பிடிக்கப்பட்டார்கள்; எப்படி தண்டிக்கப்பட்டார்கள்?

فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

கேவலமான குரங்குகளாக நீங்கள் மாறிவிடுங்கள் என்று நாம் அவர்களை சபித்தோம் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 2 : 165)

ஆம் சகோதரர்களே. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை மன்னிக்க வேண்டும்; தவ்ஃபீக் தரவேண்டும். நம்முடைய கையில் இருந்து இந்த வாய்ப்பு நழுவுவதற்கு முன்பாக, இந்த சமுதாயத்தை அல்லாஹ் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அல்லது மரணம் நம்மை வந்து அடைவதற்கு முன்பாக இந்த பணிக்காக நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். இன்னொரு முறை இந்த உலகத்திற்கு நாம் வரமுடியாது.

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

ஒவ்வொரு முறையும் தொழும்போது அல்லாஹ்விடத்தில் ஒப்பந்தம் செய்கின்றோம். யா அல்லாஹ் எனது இந்தத் தொழுகை, எனது வணக்க வழிபாடுகள், நாங்கள் வாழ்வதும் நாங்கள் சாவதும், அகிலங்களை படைத்து பரிபாலிக்ககூடிய உனக்குத்தான் என்பதாக.(அல்குர்ஆன் 6 : 162)

ஆனால் தொழுகையில் சொல்லிவிட்டு வெளியே வந்ததற்குப் பிறகு, நம்முடைய இந்த உடன்படிக்கைக்கு, நம்முடைய இந்த சாட்சியத்திற்கு மாறு செய்து வருகின்றோம். அல்லாஹ்விற்காக வாழ்வது என்றால் என்ன? அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கவலையை எடுக்காமல், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நம்மால் முடிந்த அளவு, உங்களால் எவ்வளவு முடியுமோ அல்லாஹ் நம்முடைய சக்திக்கு மேல் நம் மீது எதையும் கடமையாக்கவில்லை.

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا

அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.(அல்குர்ஆன் 2 : 286)

உங்களால் எவ்வளவு முடியுமோ. உங்களுடைய அண்டை வீட்டார்கள், நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்திலே, உங்களுடன் பழகக்கூடிய உங்களுடைய நண்பர்களுக்கு, சக தோழர்களுக்கு, உங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு, உங்களது ஊரிலே உள்ளவர்களுக்கு , யாருக்கு உங்களுடைய குரல் எட்டுமோ அவர்களுக்கு நாம் இந்த மார்க்கத்தை எடுத்துச் சொல்லவில்லை என்றால் அல்லாஹ்விற்காக நாம் வாழ்ந்தவர்களாக மாட்டோம்.

சகோதரர்களே! வாழ்க்கை ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக உதவி செய்வோமாக! இந்தப் பணியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பணிக்காக நாம் உயிர், பொருளைச் செலவு செய்ய வேண்டும். அல்லாஹ்வுடைய மிக மகத்தான பொருத்தத்தை அடைந்து கொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா எங்களுக்கும் உங்களுக்கும் இதற்கு தவ்ஃபீக் தருவானாக!

குறிப்புகள் :

குறிப்பு 1).

أخبرنا أبو بكر بن إسحاق الفقيه ، أنبأ بشر بن موسى حدثنا الحميدي ، ثنا سفيان ، ثنا الوليد بن كثير ، عن ابن تدرس ، عن أسماء بنت أبي بكر رضي الله عنها ، قالت : لما نزلت ( تبت يدا أبي لهب (1) ) أقبلت العوراء أم جميل بنت حرب ولها ولولة وفي يدها فهر (2) وهي تقول : مذمما (3) أبينا ودينه قلينا وأمره عصينا ، والنبي صلى الله عليه وسلم جالس في المسجد ومعه أبو بكر فلما رآها أبو بكر قال : يا رسول الله ، قد أقبلت وأنا أخاف أن تراك . فقال رسول الله صلى الله عليه وسلم : « إنها لن تراني » وقرأ قرآنا فاعتصم (4) به كما قال : وقرأ ( وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا (5) ) فوقفت على أبي بكر ولم تر رسول الله صلى الله عليه وسلم فقالت : يا أبا بكر ، إني أخبرت أن صاحبك هجاني . فقال : لا ورب هذا البيت ما هجاك . فولت وهي تقول : قد علمت قريش أني بنت سيدها « » هذا حديث صحيح الإسناد ولم يخرجاه « (المستدرك على الصحيحين للحاكم-3333)

குறிப்பு 2).

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامٌ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَام وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا أَرْضَهُ مِنْ فَدَكٍ وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ وَاللَّهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي (صحيح البخاري- 3730)

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/