HOME      Lecture      மறுமையே இலட்சியம்!! | Tamil Bayan - 600   
 

மறுமையே இலட்சியம்!! | Tamil Bayan - 600

           

மறுமையே இலட்சியம்!! | Tamil Bayan - 600


بسم الله الرّحمن الرّحيم
 
மறுமையே இலட்சியம்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
 
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்களே! சமுதாய தலைவர்களே! இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன் பெற்றுக் கொண்டிருக்கின்ற பெரியோர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! தாய்மார்களே! அல்ஹம்துலில்லாஹ். இந்த தாருல் ஹுதாவின் வெள்ளி விழாவை முன்னிட்டு மார்க்க அறிஞர்கள் மூலமாக நடத்தப்படுகின்ற இந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் பலன் தரக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக நல்ல பலன்களை அடைந்து வருகிறீர்கள். 
 
அல்லாஹு தஆலா இதுவரை நாம் கேட்ட அனைத்து நல்ல விஷயங்களைக் கொண்டும் வாழ்வில் பலன் அடைவதற்காக நமக்கு அருள்புரிவானாக! அல்லாஹ் நமக்கு நன்மைகளை அதிகமாக செய்வதற்கு அருள்புரிந்து தீமைகளை விட்டும், பாவங்களை விட்டும், அல்லாஹ் வெறுக்கக்கூடிய ஒவ்வொரு காரியங்களை விட்டும் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.
 
மதிப்பிற்குரிய தாய்மார்களே! சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூத் செய்யக்கூடிய ஒரு முஃமினுடைய லட்சியம், அவனுடைய குறிக்கோள், எதிர்பார்ப்பு எதுவாக இருக்க வேண்டும்? அவர் எந்த செயலை செய்தாலும், ஒரு சிறிய துரும்பு அளவு நன்மை செய்தாலும் அல்லது பெரிய மலையளவு நன்மை செய்தாலும் ஒரு இறைநம்பிக்கையாளரை பொறுத்தவரை அவருடைய லட்சியம் அவருடைய நோக்கம் அல்லாஹ்வுடைய திருப்தியாக இருக்க வேண்டும். அவருடைய நோக்கம் சொர்க்கமாக இருக்கவேண்டும். அவருடைய நோக்கம் மறுமையின் வெற்றியாக இருக்க வேண்டும். 
 
யார் மறுமையை இலட்சியமாக நோக்கமாக கொள்வார்களோ அவர்களுடைய உள்ளத்தில் தான் மனத்தூய்மை இருக்கும். அவர்களுடைய அமல்களில் அல்லாஹ் பரக்கத்தை கொடுப்பான். அவர்களுடைய இல்மிலே அமலிலே அவர்களுடைய உலகம் மற்ற பொதுவான காரியங்களில் அல்லாஹ் பரக்கத்தை கொடுப்பான்.
 
சகோதரர்களே! மறுமையை முன்வைத்துதான் ஒரு முஸ்லிம் எந்த ஒரு அமலையும் செய்ய வேண்டும் என்பது தான், அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல். 
 
இந்த மறுமையின் லட்சியம் மறுமையின் நோக்கம் இல்லை என்றால் ஒரு மனிதன் முகஸ்துதிக்காரனாக, பிறருடைய எதிர்பார்பிற்காக, பிறர் தன்னை பற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளவனாக முனாஃபிக்காக  நயவஞ்சகனாக மாறிவிடுகிறான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
ஒரு சின்ன சந்தர்ப்பம்தான். ஒரு சின்ன தடுமாற்றம் தான். நல்லவர்களுடைய சிறிய தவறு கூட மிகப்பெரிய அளவிலே தண்டிக்கப்படும் என்பதற்கு இது ஒரு ஆதாரம். பெரியவர்களின் சான்றோர்களின் சிறிய தவறும் கூட அப்படித்தான் கண்டிக்கப்பட்டுள்ளது.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் அப்படிதான் தர்ப்பியத் கொடுக்கப்பட்டார்கள். ஸஹாபாக்கள் உஹது போரில் அந்த கனிமத்தை பார்த்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். அல்லாஹு தஆலா அப்போது கூறினான்;
 
مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ
 
உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். (அல்குர்ஆன் 3 : 152) 
 
வசனத்தின் கருத்து : உங்களில் ஒரு கூட்டம் உலகத்தை விரும்பி விட்டீர்களே! இன்னொரு கூட்டம் மறுமையே விரும்பக்கூடிய கூட்டம் இருக்கிறதே! அந்த தியாகத்திற்கு சிரமத்திற்குப் பிறகு எதிரிகள் தோற்று ஓடிய பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளையை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிறிய தவறால் மலையிலிருந்து கனிமத்தை எடுப்பதற்கு அவர்கள் இறங்கி வந்தார்கள்; அல்லாஹ்வுக்கு அது பிடிக்கவில்லை. அந்த செயல் அல்லாஹ்விற்கு கோபமாக ஆகிவிட்டது.
 
அல்லாஹ் கூறினான்; நீங்கள் எப்படி உலகத்தை விரும்பலாம்? எப்படி உலகத்தை தேடலாம்? என்று அல்லாஹ் மிகப் பெரிய பாடத்தை படிப்பினையை தோழர்களுக்கு கொடுத்தான். போரில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும்.
 
இந்த வசனம், இந்த சம்பவம் நமக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பாடம் படிப்பினை என்னவென்றால் உலக காரியங்களை ஒருபக்கம் வையுங்கள். மற்ற துன்யா உடைய வேலைகளை ஒரு பக்கம் வையுங்கள். அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய திருமுகம் நாடி செய்யக்கூடிய ஒரு அமல் அதிலே முகஸ்துதி கலந்துவிட்டால் அதிலே உலகத்தேடல் –பெயரோ, புகழோ, பணமோ ஏதோ ஒன்று கலந்து விட்டாலும் சரி, உடனடியாக அல்லாஹ் தண்டனை கொடுப்பான். படிப்பினையை தருவான். 
 
அதுபோல அல்லாஹு தஆலா இந்த உஹது போரை படிப்பினையாக காட்டுகின்றான். மறுமை அதுதான் லட்சியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்ததினால் தான் சஹாபாக்களால் இப்படிப்பட்ட தியாகங்களை செய்ய முடிந்தது.
 
وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا
 
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 17 : 19) 
 
யார் மறுமையை மட்டும் குறிக்கோளாக வைப்பாரோ அவரிடம்  ஒரு சிறிதளவு கூட உலகம் கலப்பதை அல்லாஹ் விரும்பமாட்டான். உலகத்தில் எதை விரும்பினாலும் சரி அல்லாஹ்வுக்காக செய்யப்படுகின்ற இபாதத்தில் அல்லாஹ் மட்டும் தான் நோக்கம்.
 
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى
 
இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
 
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92 : 20, 21)
 
உலகம் படைக்கப்பட்ட அந்த நாளில் இருந்து நபிமார்களுக்கு ரசூல்மார்களுக்கு அடுத்து முஃமின்களில் சிறந்தவர் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அதற்குப் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஏன்? அபூபக்ர் அவர்களுடைய அந்த இக்லாஸ் அவருடைய அந்த ஈமான் அதற்கு காரணம்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய இறுதி நாட்களில் மக்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நான் கைமாறு செய்து விட்டேன். அவர்களுக்கு நான் பிரதி உபகாரம் செய்து விட்டேன். ஆனால், அபூபக்ர் அவர்கள் செய்ததற்கு தவிர. அதற்கு என்னால் செய்ய முடியாது. அல்லாஹ் அதற்குரிய கூலியை கொடுப்பான். (1)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 467, முஸ்னது அஹ்மது, எண் : 2432.
 
அபூபக்ர் (ரழி) அவர்கள் செய்த தியாகம் அந்த அர்ப்பணிப்பு தன்னையே மாய்த்துக் கொண்டார்கள். அரபிய உலகத்தில் தன்னை எப்படி வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் தாய் தந்தையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அபூபக்ர் (ரழி) அவர்கள் எப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேசினாலும் என்னுடைய தாய் தந்தையை உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று தான் பேச தொடங்குவார்கள் அப்பேற்பட்ட அன்பு பாசம் நபியின் மீது வைத்திருந்தார்கள். அனைத்தையும் இழந்தார்கள். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்.
 
இன்று பொதுசேவை எது செய்தாலும் ஒரு இயக்கத்தின் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பெயரில், சும்மா செய்தாலும் -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!- நம்மில் உள்ளவர்கள் முகஸ்துதி என்ற நோயால், புகழை விரும்புகின்ற அந்த பேராபத்தால் பாதிக்கப்பட்டதால் யாராவது பார்க்க மாட்டார்களா? என்னைப் பற்றி பேச மாட்டார்களா? என்று மனம் விரும்புகிறது. இதனால் மறுமையே இழந்து விடுவோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا (18) وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا
 
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.
 
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 17 : 18-19)
 
இந்த வசனத்திற்கு உலமாக்கள் சொல்லக்கூடிய விளக்கம் அல்லாஹ்விற்காக செய்யக்கூடிய அமலை கொண்டு மனிதன் உலகத்தை நாடினால் அது அவனுக்கு நஷ்டம் தான்.
 
மக்களுக்கு ஒரு சேவை செய்வது அல்லாஹ்விடத்தில் எவ்வளவு உயர்ந்த நன்மை தெரியுமா? தொழுகைக்கு அல்லாஹ் எப்படி சொர்க்கத்தை தருகிறானோ அதைப்போன்று அல்லாஹ்வின் அடியார்க்கு நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய உதவிக்கும் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைக் கொடுக்கிறான். தொழுகையில் இருக்கும்போது என்று சொல்லவில்லை. 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொன்னார்கள் ;
 
وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
 
உன்னுடைய சகோதரனுக்கு நீ உதவி செய்யும் போது உன்னுடைய உதவியில் அல்லாஹ் இருகின்றான் என்று சொன்னார்கள். (2)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2699 முஸ்னது அஹ்மது, எண் :7427.
 
حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى أَبُو الْخَطَّابِ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَقَالَ مُسْلِمًا، أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ» (سنن ابن ماجه 2199 -) حكم الألباني-صحيح
 
உன்னுடைய சகோதரனுடைய ஒரு கஷ்டத்தை உலகத்தில் நீ நீக்கினால் அல்லாஹ் மறுமையில் உன்னுடைய கஷ்டத்தை உன்னுடைய துன்பத்திலிருந்து ஒரு துன்பத்தை அல்லாஹ் நீக்குவான் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 2199 முஸ்னது அஹ்மது, எண் : 7431.
 
ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய காரணத்தினால் அல்லாஹ் பெரும் பாவம் செய்தவர்களை மன்னிக்கின்றான். (3)
 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 3467.
 
அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணை கொண்டு அவர்களின் பசியைப் போக்கக் கூடிய அவருடைய வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்யக் கூடிய நற்செயல்களை செய்ய வேண்டும். பசியை போக்குவது சாதாரணமான அமலா? ஒருவரின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது சாதாரணமான அமலா?
 
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ (11) وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (12) فَكُّ رَقَبَةٍ (13) أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14) يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15) أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
 
எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
 
(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
 
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
 
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும். (அல்குர்ஆன் 90 : 11-16)
 
வசனத்தின் கருத்து : அல்லாஹ் கேட்கின்றான்; மலையை கடக்காமல் நீங்கள் எப்படி சொர்க்கத்திற்கு செல்ல முடியும்? மலை என்றால் என்ன தெரியுமா? அது தான் ஒரு அடிமையை உரிமை விடுவது; பசி பட்டினி நாட்களில் உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு உணவளிப்பது; ஒரு மிஸ்கீனுக்கு உணவளிப்பது; என்று அல்லாஹ் கூறுகின்றான் இது ஒரு பெரிய மலையைப் போன்ற நன்மையானது. அதை செய்தால் தான் நீங்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
 
يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்; வந்து என்ன சொன்னார்கள்? ஸலாமைப் பரப்புங்கள்; சிரித்த முகத்தோடு ஸலாமைப் பரப்புங்கள்; யாரைப் பார்த்தாலும் ஸலாம் கூறுங்கள்; பிறகு நீங்கள் மக்களுக்கு உணவளியுங்கள். மக்கள் இரவில் தூங்கும் போது நீங்கள் அல்லாஹ்வை தொழுங்கள். நீங்கள் ஸலாமத்தாக சொர்க்கத்திற்கு செல்லலாம்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1334.
 
இரவு வணக்கத்தையும் பசித்தவருக்கு உணவளிக்கும் அந்த செயலையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே தராசில் பார்த்தார்கள். நீங்கள் செல்லக்கூடிய இடங்களில், நீங்க பார்க்கக்கூடிய ஏழைகள் யாரை பார்த்தாலும் கேளுங்கள் நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். உறவினர்களுக்கும் நீங்கள் உணவு அளியுங்கள். ஒரு வேளை உணவே நாளை மறுமையில் நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாக அமையும்; சொர்க்கத்திற்கு நம்மை சேர்க்கக்கூடிய அமலாக அமையும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்; நான் எல்லாருடைய அமலுக்கும் பிரதி உபகாரம் செய்து விட்டேன். ஆனால் அபூபக்கர் அவருக்கு செய்ய முடியாது. காரணம் அபூபக்கர் ஒவ்வொரு அமலையும் அல்லாஹ்வுக்காக செய்தார். அதற்கு அல்லாஹ் சான்று கூறுகிறான். (1)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் :  புகாரி, எண் : 467. முஸ்னத் அஹமத், எண் : 2432
 
அபூபக்ருக்கு மட்டுமல்ல குர்ஆனிலே எல்லா சஹாபாக்களுக்கும் அல்லாஹ் சான்று கூறுகிறான். 
 
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ
 
முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 48 : 29)
 
ஏன் அந்த சஹாபாக்களை போற்றி புகழ்ந்து கூறுகின்றான்? குர்ஆனை திறக்கும் போதெல்லாம் அல்லாஹ் சஹாபாக்களை முஃமின்கள் என்று கூறுகிறான்; பொறுமையாளர்கள் என்று கூறுகிறான்; நல்லவர்கள் என்று கூறுகின்றான்; அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எப்படி எல்லாம் புகழனுமோ அப்படியெல்லாம் போற்றி புகழ்ந்து சந்தோஷப்படுகிறான்.
 
ஏன்! அவர்களுடைய தியாகம். அவர்கள் செய்த அந்த அர்ப்பணிப்பு. அவர்கள் செய்த அந்த அர்ப்பணிப்பை எவ்வளவு அதிலிருந்து ஒரு பகுதியை பிரித்தாளும் கடுகளவு கூட நம்மால் செய்ய முடியாது.
 
உலக முடிவு நாள் வரை இந்த உம்மத்திற்கு முந்திய மக்களில் இருந்தும் பின்பு வாழக்கூடிய மக்களாலும் செய்திருக்க முடியாது .
 
فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ
 
எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். (அல்குர்ஆன் 3 : 195)
 
சஹாபாக்கள் உடைய ஒரே லட்சியம் அல்லாஹ்வுடைய பொருத்தம். இதைத் தவிர வேறு எதையும் அவர்கள் கேட்டதில்லை.
 
அபூபக்ர் அவர்கள் மக்காவில் அடிமைகளை வாங்கி உரிமை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய தந்தை மகனே! நீ வாங்கக்கூடிய அடிமைகளை பற்றி எனக்கு சொல்லு. எப்பேற்பட்ட அடிமைகளை வாங்குகின்றாய். அவர்களுடைய பெயர் என்ன? அவர் பெயர்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தந்தை சொல்கிறார்; மகனே! இவர்களெல்லாம் பலவீனமானவர்கள். இவர்கள் எல்லாம் சாதாரண மக்கள். இவர்களை வாங்கி நீ உரிமை விடுகிறாயே! நல்ல நல்ல குடும்பத்தை சேர்ந்த பெரிய பெரிய முதலாளிகளிடம் இருக்கக்கூடிய, நல்ல வம்சாவழியில் இருக்கக்கூடிய எத்தனையோ அடிமைகள் இருக்கிறார்கள். அவர்களை வாங்கி உரிமை விட்டால் அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை உரிமை விடுகிறாயே! இவர்கள் என்ன உதவி செய்வார்கள்?
 
அபுபக்ர் உடைய பதில் அல்லாஹ்வுக்கு பிடித்துவிட்டது. வசனமாக அல்லாஹ் இறக்கி விட்டான். அவருடைய பதில்; இவர்களை வாங்கி உரிமை விடுவது என்னுடைய அல்லாஹ்வுடைய பொருத்ததிற்காக என்று அபூபக்ர் பதிலளித்தார். அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்பதற்காக இல்லை. என்னுடைய ரப்புடைய திரு முகத்திற்காக என்று கூறினார். இந்த வார்த்தை அவருடைய நாவிலிருந்து அல்ல, அவருடைய உள்ளத்தில் இருந்து வந்தது.
 
நம்மில் சிலர் சொல்லலாம்; நான் அல்லாஹ்வுக்காக செய்கின்றேன்; மறுமைக்காக செய்கின்றேன் என்று. ஆனால் அது பொய். எனக்கு மறுமையே போதும் என்று சொல்வார்கள். ஆனால் அதுவும் பொய். பிறகு பார்த்தால் தெரியும் அது ஒரு உலகத்திற்காக செய்திருப்பார்கள். அபூபக்ர் உடைய பதில் அல்லாஹ்வுக்கு பிடித்துவிட்டது.
 
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى (18) وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى
 
அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
 
தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
 
இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
 
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92 : 18-21)
 
அந்த இறையச்சம் மிக்க அபூபக்ர் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா? தன்னுடைய செல்வத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்; வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்; அல்லாஹ்வுடைய பாதையில் தன்னுடைய மனதின் பரிசுத்தத்தை நாடி தன்னுடைய உள்ளம் சுத்தத்தை தேடி. 
 
புரிந்து கொள்ளுங்கள்! இந்த செல்வம் அல்லாஹ்விற்காக செலவிடப்படவில்லை என்றால் அது நரகம். செல்வத்திற்கான ஸகாத் கொடுக்கப்படவில்லை என்றால், அதற்கு சதகா கொடுக்கப்படவில்லை என்றால் அது நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
 
அபூபக்ர் அந்த செல்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தார் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏன் கொடுத்தார் என்று தெரியுமா? யாரும் அவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு அல்ல. அல்லது பிறருக்கு பிரதி உபகாரம் செய்வதற்காக இல்லை. பிறரிடம் இருந்து இவர் பெற்ற உதவிக்குக் கைமாறாக இல்லை. அல்லது பிறரிடம் இருந்து இவர் கைமாறாக பெறவேண்டும் என்பதற்காக இல்லை. மிக உயர்ந்த ரப் உடைய திரு முகத்திற்காக மட்டுமே அவர் செய்தார். (அல்குர்ஆன் 92 : 20)
 
நம் வாழ்நாளில் இரண்டு ரக்அத் தொழுகை, நாம் கொடுத்த 10 ரூபாய் சதகா ஏற்றுகொள்ளப்பட்டால் போதும் நாம் சொர்க்கம் சென்று விடுவோம். எவ்வளவு முகஸ்துதி ஒட்டிக் கொண்டிருக்கின்றது நம்முடைய அமல்களில்?!
 
ஒரு மனிதன் சேற்றிலே விழுந்துவிட்டார். அவன் எழுந்து வந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி புகழை விரும்புவதும், பெருமையை விரும்புவதும் முகஸ்துதியை விரும்புவதும் நம் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
எவ்வளவுதான் கழுவினாலும் ஒரு பக்கம் கழுவினால் இன்னொரு பக்கம். ஒரு பக்கம் எடுத்தால் இன்னொரு பக்கமாக இந்த அழுக்கு நம்மிடத்தில் இருக்கிறது. நம்மிடத்தில் இந்த அழுக்கு இருக்கின்ற வரை நம்முடைய அமல்களிலே பரக்கத் இருக்காது. நம்முடைய இபாதத்தில் பரக்கத் இருக்காது. நம்முடைய சமூகப்பணியில் இக்லாஸ் பரக்கத் இருக்காது. அல்லாஹ்வுடைய பொருத்தம், அல்லாஹ்வுடைய உதவி, மனதின் அமைதி இருக்காது.
 
إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நீ செய்யக் கூடிய நன்மை உனக்கு மகிழ்ச்சியை கொடுத்தால் நீ ஒரு முஃமின். (4)
 
அறிவிப்பாளர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 22166
 
எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்? அந்த அமல் அல்லாஹ்வுக்காக செய்யப்பட்டால். இன்று நாம் கொடுக்கக்கூடிய சதகாவிலே, நாம் தொழக்கூடிய தொழுகையிலே, நாம் ஓதக்கூடிய அந்த குர்ஆனிலே நம் உள்ளத்தில் ஒரு சந்தோஷம் கண் குளிர்ச்சி எங்கே இருக்கிறது? என்று பாருங்கள். அதற்கு காரணம் என்ன? முகஸ்துதி ஒட்டிக் கொண்டு இருக்கின்றது.
 
ஸஹாபாக்களுக்கு எப்படி என்றால் தொழுகையில் இருக்கும் போது ராஹத் ஆக இருக்கும். நமக்கு எப்படி என்றால் தொழுது முடித்தால் தான் ராஹத். அவர்கள் தொழுகையில் இருக்கும்போது ராஹத்தை உணர்ந்தார்கள்.
 
جعلت قرة عيني في الصلاة
 
என்னுடைய கண் குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டிருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12793.
 
தொழுகை தான் அவர்களுடைய கண் குளிர்ச்சி. போரிலும் தொழுதார்கள் நோன்பு வைத்தார்கள். நாம் ஒரு சிறிய வேலை வந்தாலும் தொழுகை விடுகின்றோம். சிறிய வேலை வந்தாலும் தொழுகையை மறக்கிறார்கள் இவர்களை தான் அல்லாஹ் கூறுகின்றான்.
 
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ
 
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
 
அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
 
(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள். (அல்குர்ஆன் 107 : 4-6)
 
மேலும் அவர்கள் மக்களுக்கு காண்பிப்பதற்காக நன்மைகளை செய்வார்கள்.
 
ஆனால், சஹாபாக்களுக்கு அல்லாஹ்வுடைய பொருத்தம்தான், அல்லாஹ்வுடைய அன்புதான் தேவை. வேறு எதுவும் தேவையில்லை. யாராவது ஒருவர் அல்லாஹு தஆலா தன்னுடைய நபியின் தோழர்களுக்கு இந்த சாட்சியத்தை சொன்னதற்கு பிறகு சஹாபாக்கள் துன்யாவிற்காக வாழ்ந்தார்கள் உலகத்தை தேடினார்கள் என்று ஒருவர் கூறினால் அவர் மதம் மாறியவராக, காஃபிராக தான் இருப்பார்.
 
அன்பு சகோதரர்களே! நீங்கள் அகபாவுடைய ஒப்பந்தத்தை படித்திருக்கலாம். இஸ்லாமிய வரலாற்றில் எப்படி பத்ரு போருக்கு உஹதுப் போருக்கு ஒரு சிறப்பு இருக்கிறதோ, ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட ஸஹாபாக்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறதோ அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அந்த மினாவில் இரண்டாவது அகபாவில் கலந்துகொண்ட முதலாவது அகபாவில் கலந்துகொண்ட அந்த அன்சாரி தோழர்களுக்கு ஸஹாபாக்களுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது.
 
அன்சாரி ஒருவர் முதலாவது அல்லது இரண்டாவது அகபாவில் கலந்து கொண்டவர் என்று அறிவிக்கப்படும். இவ்வளவு சிறப்பு இருந்தது. ஏன் என்று தெரியுமா?
 
மதீனாவில் இருந்து அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு வருகிறார்கள். ஏறக்குறைய 80 தோழர்கள். நபியின் மீது அவர்கள் வைத்த பாசத்தை பாருங்கள். 
 
நமக்கு என்ன பாசம் இருக்கிறது. ஸலவாத்து கூட நாம் ஓதுவது இல்லை. நபியுடைய பெயர் சொன்னால் உள்ளத்தில் ஒரு அன்பு ஒரு உணர்வு வரவேண்டும்.
 
நபியுடைய ஹதீஸ்கள் கூறப்பட்டால் காது தாழ்த்தி கேட்க வேண்டும். பெயர் கூறப்பட்டால் அன்பு கலந்த பயம் வர வேண்டும்.
 
அவர்கள் மதீனாவிலிருந்து பேசிக்கொண்டு வருகிறார்கள். நான் மதீனாவில் நிம்மதியாக இருக்க அல்லாஹ்வுடைய தூதரை அவர்கள் எப்படி ஏசுவார்கள்? துன்பப்படுத்துவார்கள்? இந்தமுறை நாம் நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரை கண்டிப்பாக மதினாவிற்கு அழைத்து வருவோம் என்று பேசிக்கொண்டே அவர்கள் மதீனாவில் இருந்து மக்கா வரை வருகிறார்கள்.
 
நபியை சந்திப்பதற்கான ஆர்வம். அவர்கள் நேரம் கேட்கிறார்கள். நபியிடம். கடைசியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்கள் மினா உடைய நாட்களின் கடைசி நாளில் இரவின் நடுப்பகுதியை குறிக்கிறார்கள். எவ்வளவு ஆர்வமாக இருந்திருப்பார்கள். 
 
அப்படியே பேச்சுவார்த்தை நடக்கிறது. என்ன செய்யவேண்டும்? எதற்காக நான் உங்களை அழைத்தேன்? நீங்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என்னை பாதுகாப்பீர்களா? அப்பாஸ் (ரழி) சொல்கிறார் நீங்கள் இவரை அழைத்து சென்றால் அரபு உலகமே உங்களை எதிர்க்கலாம். ஒட்டுமொத்த அரபு உலகமே உங்கள் மீது போர் தொடுக்கலாம். நீங்கள் மனைவிகளை இழக்கலாம். பிள்ளைகளை எல்லாம் இழக்கலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார். 
 
அப்போது அவர்கள் நாங்கள் இதை எல்லாம் செய்ய தயார் என்று கூறினார்கள். கடைசியாக இந்த மதினா வாசிகள் கேட்கக்கூடிய கேள்வி என்ன தெரியுமா? இந்த எல்லாத் தியாகங்களையும் நாங்கள் செய்ய தயார். எல்லா அர்ப்பணிப்புகளையும் செய்ய தயார். 
 
இதை செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? -நீங்கள் நினைக்காதீர்கள்; அவர்கள் ஆட்சியையும் பதவியையும் கேட்டு இருப்பார்கள் என்று! அவர்கள் கேட்ட கேள்விக்கு உடனே நபியவர்கள் ஒற்றை வார்த்தையில் பதில் கூறினார்கள். உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று சொன்னார்கள். 
 
அவ்வளவுதான் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்த எண்பது சஹாபாக்களும் அன்சாரிகளும் உடனே பாய்ந்து அல்லாஹ்வின் தூதரிடம் இரண்டு முறை ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். 
 
அல்லாஹ்வின் தூதரே! நான் கொல்லப்பட்டாலும், என் மனைவி விதவையாக்கப்பட்டாலும், என் பிள்ளைகள் கொல்லப்பட்டாலும் சரி, நான் உங்களை கைவிடமாட்டேன் என்று கூறினார்கள்.
 
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
 
ஏன் இந்த அன்சாரிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்?!
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
 
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)
 
ஏன் அல்லாஹ்வுடைய தூதர் சொல்லமாட்டார்கள்? அன்சாரி தோழர்களளை நேசிப்பது ஈமான். அன்சாரிகளை வெறுப்பது நயவஞ்சகம் என்று. 
 
அவர்கள் என்றைக்காவது புகழை விரும்பி இருப்பார்களா? எதையாவது எதிர்பார்த்து இருப்பார்களா?
 
உஹது போரிலே 9 அன்சாரி தோழர்கள் நபியை பாதுகாப்பதற்காக தன்னுடைய நெஞ்சில் ஈட்டியையும் அம்பையும் தாங்கிக் கொண்டு ஒவ்வொருவருக்கு பின் ஒவ்வொருவராக நபியுடைய காலடியில் ஷஹீதாகி விழுகிறார்கள். நபியும் அழுகிறார்கள். என்னுடைய தோழர்களுக்கு நீதம் செலுத்த வில்லையே! 9 அன்சாரிகளை இழந்து விட்டோமே! என்று.
 
நூல் : அர்ரஹீக் அல் மக்தூம்.
 
இதுதான் இக்லாஸ் –மனத்தூய்மை. ஒரு அமலை செய்ய வேண்டும். அது அல்லாஹ்வுக்காக மட்டும் செய்ய வேண்டும்.
 
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا
 
(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்), (அல்குர்ஆன் 76 : 9)
 
வசனத்தின் கருத்து : யாருக்கு செய்தாலும் சரி. அறிந்தவருக்கு செய்தாலும் சரி, அறியாதவனுக்கு செய்தாலும் சரி, உறவினர்களுக்கு செய்தாலும் சரி, உறவினர் இல்லாதவருக்கு செய்தாலும் சரி, பொதுமக்களுக்கு செய்தாலும் சரி, யாருக்காக செய்தாலும் சரி, இதற்காக உங்களிடம் இருந்து எனக்கு எந்த பகரமும் தேவையில்லை. உங்களுடைய நன்றியை எதிர்பார்க்கவில்லை.
 
إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
 
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 76 : 10)
 
வசனத்தின் கருத்து : நாளை மறுமையில் கடுமையான வெப்பம் உள்ள அந்த நாளை பயந்து நான் இதை செய்கிறேன். 
 
சகோதரர்களே! இக்லாஸை யார் பாதுகாப்பார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். முந்திய காலத்தில் நம்முடைய உலமாக்கள் சொல்வார்கள்; மக்களெல்லாம் அழிந்து விடுவார்கள் ஆலிம்களை தவிர. ஆலிம்கள் எல்லாம் அழிந்து விடுவார்கள் அமல் செய்பவர்களைத் தவிர. அவர்களும் அழிந்து விடுவார்கள் இக்லாஸ் உள்ளவர்களை தவிர. அவர்களும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்; பயந்து கொண்டு இருக்கிறார்கள்; எந்த நேரத்தில் அந்த இக்லாஸ் பறிபோகும் என்று.
 
இமாமவர்கள் கூறுகிறார்கள்; நான் என்னுடைய நிலத்தில் உள்ளத்தில் இக்லாஸ் அதற்காக வேண்டி எந்த அளவுக்கு கடுமையாக உழைப்பு செய்கிறேனோ அந்த அளவுக்கு நான் வேறு எதற்கும் செய்திருக்க மாட்டேன்.
 
ஆகவே கண்ணியத்துக்கு உரியவர்களே! அல்ஹம்து லில்லாஹ் எப்பேற்பட்ட பெரிய முயற்சி! இந்த முயற்சிகளெல்லாம் இதைக் கொண்டு அல்லாஹ்வுடைய திருமுகம் நாடப்படவேண்டும்; மறுமையின் வெற்றி நாடப்படவேண்டும். எந்த ஒரு அமலை செய்தாலும் சரி, அல்லாஹ்வுடைய அந்த திருப்பொருத்தம், மறுமையில் சொர்க்கம் என்ற வீடு, அது தான் நமக்கு மறுமையில் அல்லாஹ்விடத்திலே உயர்வு தரும்.
 
وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا
 
யார் மறுமையை நாடுவார்களோ, அதற்காக முயற்சி செய்வார்களோ அவர்களுடைய முயற்சிக்கு கண்டிப்பாக கூலி கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 17 : 19)
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எங்களுக்கும் உங்களுக்கும் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய பெரிய அமல்களையும் அல்லாஹ்விற்காக என்று இக்லாஸிற்க்காக செய்யக்கூடிய அந்த பாக்கியத்தை தருவானாக! 
 
நம்முடைய அமல்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி அமைத்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி மறுமையின் அந்த வெற்றியை நாடி அந்தத் திருமுகத்தை காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை நமக்குக் கொடுப்பானாக! 
 
இந்த மாநாட்டிற்காக உழைத்த இதற்குப் பின்னால் பணி செய்த எல்லா மக்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சகோதரி சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى المِنْبَرِ [ص:101]، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَيَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلًا لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا المَسْجِدِ، غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ» (صحيح البخاري467 -)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ - وَاللَّفْظُ لِيَحْيَى، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا - أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ»، (صحيح مسلم - (2699)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ، كَادَ يَقْتُلُهُ العَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ فَغُفِرَ لَهَا بِهِ» (صحيح البخاري 3467 -)
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ» (مسند أحمد 22166 -)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/