HOME      Khutba      பெண்களைப் பயந்துகொள்ளுங்கள்! | Tamil Bayan - 433   
 

பெண்களைப் பயந்துகொள்ளுங்கள்! | Tamil Bayan - 433

           

பெண்களைப் பயந்துகொள்ளுங்கள்! | Tamil Bayan - 433


بسم الله الرحمن الرّحيم
 
பெண்களைப் பயந்து கொள்ளுங்கள்!!
 
 
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
 
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
 
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு நம்மை படைத்து வளர்த்து காக்கின்ற, நமக்கு உணவு அளிக்கின்ற, நம்மை கண்காணிக்கிற, நமக்கு நமது உயிர் நரம்பை விட நெருக்கமாக இருக்கின்ற, நாம் பேசுகின்ற ரகசியத்தையும் வெளிப்படையான பேச்சுகளையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை கடைப்பிடிக்குமாறு, எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் அவனை பயந்துகொண்டே நல்லவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.
 
 
 
அல்லாஹ் இறை அச்சத்தைக் கொண்டு நமது ஈமானை அலங்கரிப்பானாக! பாவங்களை விட்டும் அல்லாஹ்விற்கு பிடிக்காத மறைவான வெளிப்படையான எல்லா செயல்களை விட்டும், என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக!! ஆமீன்!
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! பொதுவாக அல்லாஹ் சுப்ஹான்னாஹு வத்தாஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்ததிலிருந்து இன்றைய நாள் வரை இன்னும் மறுமை நாள் வரை வருகின்ற எல்லா மக்களுக்கும் ஒரு பெரிய சோதனையை வைத்து இருக்கின்றான்.என்றால் அதுவும் அவர்களுக்குள் அந்த சோதனையை ஏற்படுத்தி இருக்கின்றான் என்றால் அது பெண்களினால் ஏற்படுகின்ற சோதனையாக தான் இருக்கும்.அல்லாஹ் தபாரக்குவத்தாஆலா,,,,
 
 
 
மூன்றாவது அத்தியாயத்தில் பதினான்காவது வசனத்தில் குறிப்பிடுவதை பாருங்கள்.
 
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ
 
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. (அல்குர்ஆன் 3 : 14)
 
 
 
வசனத்தின் கருத்து : அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா மனிதனுடைய இயல்பை, அவனுடைய பண்பை இங்கே வெளிப்படுத்தி சொல்கிறான். மக்களுக்கு அலங்காரமாக கவர்ச்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதன் மீது இச்சை நாட்டம் ஏற்படுமோ அவற்றை எல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிட்டுவிட்டு அதில் முதலாவது பெண்களை குறிப்பிடுகிறான்.
 
 
 
அதற்கு பிறகு தான் மற்றவற்றை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகிறான். செல்வங்களை கூட, தங்கம், வெள்ளியின் குவியல்களை கூட பிறகுதான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
 
 
 
எனவே இது ஒரு சாதாரணமான சோதனை அல்ல. மிகப்பெரியது. கடுமையானது.
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிற எச்சரிக்கையை கேளுங்கள்;
 
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ» (صحيح البخاري5096 -)
 
ஆண்களை குழப்பக்கூடிய, ஆண்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய, ஆண்களை சோதனையில் தள்ளக்கூடிய, ஆண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய, ஆண்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சோதனை எனக்கு பின்பு பெண்களை விட பெரிய ஒன்று இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சோதனையை உங்களுக்கு நான் விட்டு செல்கிறேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
 
 
 
அறிவிப்பாளர்: உசாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5096.
 
 
 
மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் :
 
مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ
 
ஒரு பெரிய அறிவாளி, ஒரு பெரிய புத்திசாலி, அவருடைய அறிவை கெடுக்கக்கூடிய, அவருடைய புத்திசாலித்தனத்தை போக்கக்கூடிய, அவனை குழப்பத்தில் தள்ளக்கூடிய, ஒன்று பெண்களைவிட மற்றது இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சோதனை. (1)
 
 
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 304.
 
 
 
பெண்களால் ஏற்படக்கூடிய சோதனையை அல்லாஹ் அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் மிகத்தெளிவாக நமக்கு எச்சரிக்கை செய்கிறான்; 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான். (அல்குர்ஆன் 64 : 14)
 
 
 
மனைவிகள் என்றால் பொதுவாக பெண்களின் சமுதாயத்தை குறித்து அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெண்களால் ஏற்படக்கூடிய ஃபித்னாக்கள், குழப்பங்கள் ஒரு வகை, இரண்டு வகை என்ற அல்ல. இதில்தான் அதில்தான் என்ற அல்ல. உலக வாழ்க்கையின் அத்தனை பகுதிகளிலும் அந்த துன்யா உடைய அத்தனை களங்களிலும் அவளுடைய சோதனைகள் இருக்கும்.
 
 
 
ஒரு ஆணைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் பெண்களை பயந்து கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ்வை மட்டும் வணங்கப்படுகிற மஸ்ஜிதுகள் ஆக இருந்தாலும் அங்கும் கூட பெண்களுடைய சோதனை இருக்கும்.
 
 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்து தர்தீபை பாருங்கள். ஈமானில் உயர்ந்த ஓர் சமுதாயம்; தக்வாவில் சிறந்த ஓர் சமுதாயம், இந்த உம்மத்தில் சென்று இருக்குமேயானால், அது அந்த கண்ணியத்திற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய தோழர்களுமாகத்தான் இருக்கும். 
 
 
 
அவர்களுக்குப் பின்னால் அப்படிப்பட்ட ஓர் சிறந்த சமுதாயம் ஈமானில் தக்வாவில் சிறந்த ஓர் சமுதாயம் உருவாக முடியாது. அவர்களின் வழித்தோன்றல்களாக, அவர்களுக்கு நெருக்கமானவர்களாக, அவர்களின் பாதையில் சென்றவர்களாக இருந்தாலும் அவர்களைப் போன்ற அந்தஸ்தை அடைய முடியாது.
 
 
 
அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த அந்த வழிகாட்டுதலைப் பாருங்கள்.
 
 
 
பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதாக இருந்தால் அலங்காரமான ஆடைகளை அணியக்கூடாது; ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும்; வாசனைப் பொருள்களை அவர்கள் பயன்படுத்தக்கூடாது; 
 
 
 
பெண்கள் மஸ்ஜிதிற்க்கு வருவதை தடுக்காதீர்கள் தோழர்களே! என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே தங்களது தோழர்களுக்கு அறிவுரை சொன்னார்களோ, அதே இடத்தில் குறிப்பாக இஷா நேரத்தில், இரவு நேரத்தில் கணவனுக்காக நறுமணம் பூசுவது முஸ்லிமான பெண்ணின் வழக்கம். அந்த நேரத்தில் ஒரு பெண் தொழுகைகளை முடிப்பதற்கு முன்பே தனது கணவனுக்காக நறுமணத்தை பூசி இருந்தால், அந்த பெண் இஷாத் தொழுகைக்கு வர வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (2)
 
 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 444.
 
 
 
இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு அந்தப்பெண் வரவேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். யோசித்துப் பார்க்க வேண்டும்.
 
 
 
காரணம் என்ன? அவ்வளவு பயங்கரமான "ஃபித்னா" பெண்களின் ஃபித்னா. அல்லாஹ் பாதுகாக்கவில்லை என்றால் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்துவிட்டால் அவர்கள் அதே இடத்தில் உட்கார்ந்து கொள்வார்கள்.
 
 
 
மக்களும் அப்படியே ஆண்களும் உட்கார்ந்து கொள்வார்கள். பெண்கள் வெளியே சென்றதற்குப் பிறகுதான் ஆண்கள் பள்ளியை விட்டு வெளியேறுவார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்களுடைய அந்த தர்தீபை பாருங்கள்.
 
 
 
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களை விட பார்வைகளை பாதுகாத்தவர்கள் இருக்க முடியுமா? அவர்களை விட உள்ளத்தில் ஏற்படுகிற அழுக்குகளை சுத்தப்படுத்தியவர்கள் யாரும் இருக்க முடியுமா? 
 
 
 
ஒரு சஹாபி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஓடோடி வருகிறார். 
 
يَا رَسُولَ اللهِ، طَهِّرْنِي
 
யாரசூலல்லாஹ்! அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்; நாசமாகி விட்டேன்; என்னை சுத்தப்படுத்துங்கள். பெரும் பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். என்ன நடந்து இருக்கிறது என்று அந்த தோழர் அப்படியே சொல்லி காட்டுகிறார்.
 
 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமைதியாக எழுந்து நின்று பிறகு லுஹர் தொழுகையை நடத்துகிறார்கள். லுஹர் தொழுகைக்குப் பின்பு ஓடிவருகிறார். யாரசூலல்லாஹ்! அல்லாஹ்வின் மார்க்கத்தில் ஒரு ஹத்தை நான் செய்துவிட்டேன். நான் ஒரு பெரும் குற்றத்தை செய்து விட்டேன். என்னை சுத்தப்படுத்துங்கள். நபியவர்கள் அந்தத் தோழருக்கு சொல்லி அனுப்புகிறார்கள். நீ என்னுடன் தொழுதாய் அல்லவா! அல்லாஹ், உனது பாவங்களை தொழுகையினால் மன்னித்து விட்டான். என்று சொன்னார்கள். 
 
 
 
நடந்த ஒரு சிறு பாவத்தை பெரும் பாவமாக நினைத்து வருந்தி யாரசூலல்லாஹ்! நீங்கள் என்னை சுத்தப்படுத்துங்கள் என்று அந்த சஹாபி ஓடி வந்தார்கள் என்றால் அவர்களுடைய ஈமானுடைய, தக்வா உடைய நிலையைப் பாருங்கள். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அப்படிப்பட்ட தோழர்கள் வாழ்ந்த காலத்தில் தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மஸ்ஜித்திற்குள்வரும் போது ஆண்கள் முன்னால் வந்து விட வேண்டும்.பெண்கள் பின்னால் வர வேண்டும். பிறகு வெளியேறும் போது பெண்கள் முன்னதாக வெளியே சென்று விட வேண்டும். அதற்குப் பிறகு ஆண்கள் செல்ல வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஒரு தர்தீப் -அமைப்பை வைத்திருக்கிறார்கள். 
 
 
 
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا» (صحيح مسلم132 -)
 
ஆண்களுடைய ஸஃப்களில் மிக சிறந்தது அவர்களின் முதல் ஸஃப் ஆகும். ஆண்களுடைய ஸஃப்களில் மிக மோசமானது, தீமைகள் நிறைந்தது அவர்களுடைய கடைசி ஸஃப் என்று சொன்னார்கள். 
 
 
 
பெண்களுடைய ஸஃப்களில் மிக சிறந்தது அவர்களின் கடைசி ஸஃப் ஆகும். பெண்களின் ஸஃப்களில் தீமை நிறைந்த ஸஃப் அவர்களுடைய முதல் ஸஃப் என்று சொன்னார்கள். 
 
 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 132.
 
 
 
ஆண்களின் இறுதி ஸஃப்புக்கு பிறகு பெண்களின் முதல் ஸஃப் ஆரம்பமாகிறது. ஆண்கள் அந்த நேரத்தில் பெண்களை பார்க்கவில்லை. அவர்களோ கிப்லாவை முன்னோக்கி அமர்ந்திருக்கிறார்கள். தங்களின் முதுகுக்குப் பின்னால் பெண்கள் அமர்ந்து இருப்பதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக மோசமான நிலையில் சொன்னார்கள். தீமைகள் நிறைந்தது என்று சொன்னார்கள்.
 
 
 
ஆண்கள் தங்களை பார்க்கவில்லை. அவர்களோ, கிப்லாவை முன்னோக்கி அமர்ந்திருக்கிறார்கள். பார்வைகளை தாழ்த்தி இருக்கிறார்கள். அதுவும் அங்கே தொழுகையில் ஓதப்படக்கூடிய வசனங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அல்லது இமாமுடைய குத்பாவை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஆண்களுக்குப் பின்னால் அவர்களுக்கு அருகில் ஸஃப்பில் அமர்ந்திருப்பதை கூட அது ஒரு ஷர்ரான ஸஃப் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். என்றால்,
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இறைவழிபாட்டிலும், இபாதத்திலும், அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் கூட அல்லாஹ்வின் தூதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள்? எவ்வளவு எச்சரிக்கைகளை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேணி இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
 
 
 
சகோதர்களே! ஆம் சகோதர்களே! மிக பெரிய ஒரு முக்கியமான காலம் அல்லாஹ்வின் தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்த ஒரு காலத்திலே நாம் இருக்கிறோம். நபியவர்கள் சொன்னார்கள். மறுமையின் அடையாளங்கள்.
 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا " (صحيح البخاري80 -)
 
மறுமையின் அடையாளங்களிலே நபியவர்கள் குறிப்பிடும் போது, زنا –ஸினா அதிகமாகிவிடும். நீங்கள் விபச்சாரத்தை ஹலாலாக கருதுவீர்கள். பட்டாடைகளை ஹலாலாக கருதுவீர்கள் மது பழக்கம் அதிகமாகிவிடும் என்று சொன்னார்கள்.
 
 
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 80.
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் வாலிப ஆண்கள், வாலிப பெண்கள் மதுவிலும் விபச்சாரத்திலும் ஒரு பெரிய அளவு சிக்கி இருப்பதை பார்க்கிறோம். ஹலாலான திருமண உறவுக்கு அப்பால் ஹராமான தடுக்கப்பட்ட தவறான உறவுகள் திருமணத்திற்கு முன்பே அந்நிய ஆண்களோடு பழகுகின்ற, அவர்களுடன் வெளியே செல்கின்ற பழக்கங்கள், இன்றைய காலத்தில் வாலிப ஆண்கள், பெண்களுக்கு மத்தியில் இது ஒரு நவீன நாகரீக கலாச்சாரமாக மாறி வருவதை பார்க்கிறோம். 
 
 
 
நாம் வசிக்கின்ற, நமது நாட்டில் எந்த ஒரு நகரமாக இருந்தாலும், ஏன் கிராமமாக இருந்தாலும் கூட, அங்கே ஒரு முஸ்லிமான பெண் அவளுடைய தோற்றத்தைப் பார்த்து அவள் செல்கின்ற விதத்தைப் பார்த்து, அவள் யாருடன் செல்க்கின்றாளோ அவர்களைப் பார்க்கும்போது கண்டிப்பாக திருமண உறவுகளுடன் இவர்கள் செல்லவில்லை என்று புரியலாம். 
 
 
 
காரணம், திருமண உறவோடு செல்கின்ற கணவன், மனைவியின் அடக்கமும், மரியாதையும் தனியாக தான் இருக்கும். அவர்களுடைய அந்த நடை, உடை, பாவனை, அவர்கள் பயணிக்கின்ற விதத்தைப் பார்க்கும்போது கண்டிப்பாக இங்கே தவறு தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இருப்பதை பார்க்கிறோம். 
 
 
 
சகோதர்களே! அங்கே செல்லக்கூடிய பெண் கண்டிப்பாக ஒரு ஆணுக்கு மகளாகத் தான் இருப்பாள். ஒருவனுக்கு சகோதரியாக இருப்பாள். யோசித்துப்பாருங்கள்! யார் அவர்கள்? நமது பெண் பிள்ளைகளின் மீது நமது பார்வையை நம்முடைய கண்காணிப்பு எந்த அளவு இருக்கிறது. அவர்கள் எங்கே செல்கிறார்கள்? எதற்காக செல்கிறார்கள்? அவளது கையில் என்ன இருக்கிறது? அவளுடைய பையில் என்ன இருக்கிறது? அவர்கள் யாருடன் பேசுகிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? எங்கே நேரங்களை கழிக்கிறார்கள் என்று நமது முஸ்லிம் சமுதாயத்தின் உடைய ஆண்களின் நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!! 
 
 
 
ரோஷமற்றவர்களாக அந்த ஆண்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அது போன்ற தீமைகளை பற்றி பேசும்போது இன்று பெரும்பாலும் பெண்களை மட்டுமே குறை சொல்கின்ற ஒரு நிலையை பார்க்கிறோம். ஹிஜாப் சரியில்லை, அவர்களுடைய பர்தா சரியில்லை என்பதாக.
 
 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்து பெண்கள் இரவு நேரத்தில் சுபுஹு தொழுகைக்கு அதுவும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுபுஹுத் தொழுகையும் முதல் வக்திலே இருக்கும். 
 
لاَ يُعْرَفْنَ مِنَ الغَلَسِ
 
அப்போது வரும்போது கூட அவர்கள் தங்களைப் போர்வைகளால் அப்படியே போர்த்திக் கொண்டு வருகின்ற காரணத்தால் செல்பவர் யார் என்று தெரிய முடியாது. (3)
 
 
 
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, எண்: 873.
 
 
 
பெண்களுக்கே ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணை தெரியாது. யார் செல்கிறாள் என்று. அந்த அளவு தங்களை மறைத்துக் கொண்டு வருவார்கள். 
 
 
 
ஆனால் இன்று பாருங்கள்; தங்களது பெண்களின் ஹிஜாபை நம்முடைய ஆண்கள் கண்காணிக்கிறார்களா?? ஹிஜாப் உடலில் இருக்கிறது. ஆனால் அவர்களுடைய தலை திறந்த வண்ணமாக, கழுத்து திறந்த வண்ணமாக ஆபாசமான நிலையில் அவர்கள் செல்வதை தெருக்களில் பார்க்க முடிகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
 
 
இவற்றையெல்லாம் திருத்தக் கூடிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது? பெண்கள் என்பவர்கள் யார்? கண்டிப்பாக ஒரு பெண் மனைவியாக இருப்பாள். அல்லது சகோதரியாக இருப்பாள். அல்லது பிள்ளையாக இருப்பாள். ஓர் ஆணுடைய துணையில்லாமல் ஒரு பெண்ணால் இருக்க முடியாது.
 
 
 
ஏன்? தகப்பனே இல்லை என்றாலும், சகோதரனே இல்லை என்றாலும், மகனே இல்லை என்றாலும், தந்தையோடு பிறந்த சகோதரர்கள் அந்தப் பெண்ணுக்கு வலியாக -பொறுப்பாளியாக இருக்கிறார்கள். 
 
 
 
இது என்னுடைய அண்ணனின் பெண். இது என் சகோதரியின் பெண். அவளை கேட்பதற்கு எனக்கு உரிமை இல்லை அல்லது அவளை நான் கேட்க முடியாது என்று சொல்வதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த ஒரு சகோதரனுக்கு அனுமதியில்லை. 
 
 
 
தனது மகளை திருத்துவதற்கு எப்படி அவர் கடமை பெற்றுருக்கிறானோ அது போன்று தான் தனது சகோதரர்களின்பெண்பிள்ளைகளை திருத்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறான். தாயோடு பிறந்த சகோதரர்கள் -தாய்மாமன்கள் அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. மார்க்கம் கொடுத்திருக்கிறது. அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
 
 
 
ஆனால், இன்று நமது காலகட்டத்தில், ஏன் அந்த வீட்டில் கூட தகப்பன் தனது வயதுக்கு வந்த பெண்ணை அவள் வயசுக்கு வந்துவிட்டாள், அவள் வாலிபத்தை அடைந்து விட்டாள், அவளுக்கு இப்போது அறிவு வந்து விட்டது. நான் இதற்கு மேல் ஒன்னும் சொல்ல முடியாது. செய்ய முடியாது என்று கை விரிக்கக்கூடிய பலவீன நிலையை, கையாலாகாத நிலையை, கேவலமான நிலையை நமது முஸ்லிமான ஆண்களிடமிருந்து கேள்விப்படுகிறோம்.
 
 
 
அப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீ உனது வீட்டில் வைத்து உணவு அளிக்கிறாயா? உறைவிடம் தருகிறாயா? நீ அல்லாஹ்விற்கு அநியாயம் செய்தவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு துரோகம் செய்தவனாக ஆகிறாய். தட்டி கேட்பதற்கு எந்தவிதமான ஒரு துணிவு இல்லாமல் பயப்படுகிறார். யாரை பயப்படுகிறார்? தான் பெற்ற பிள்ளையை. 
 
 
 
அதிலும் குறிப்பாக பெற்றெடுத்த தாயோ தந்தையோ படிக்காதவர்களாக அல்லது கொஞ்சம் குறைவாக படித்துவிட்டு பிள்ளைகள், பெண் பிள்ளைகள் பன்னிரெண்டாம் வகுப்பையும் தாண்டி கொஞ்சம் கல்லூரிகளையும் எட்டிப்பார்த்து சில பேப்பர்களையும் டிகிரிகளாக வாங்கி விட்டார்கள் என்றால், அவர்களுக்கு முன்னால் பெற்றெடுத்த தாய் தகப்பன் வாய்மூடி இருப்பதை தவிர அவர்கள் செய்கிற அத்தனை அநியாயங்களையும், அழிச்சாட்டியங்களையும், அசிங்கங்களையும், சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு நிலையில் நமது சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது. 
 
 
 
படிச்சப்பிள்ளையிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏன்?? திமிரு அங்கே, ஆணவம் அங்கே, ரொம்ப கண்டித்தால் வீட்டை விட்டு வெளியே போயிடுவேன். எனக்கு வேலை கிடைக்கும் என்று தன் பெற்றோரை மிரட்டுகிறார்கள். 
 
 
 
இன்றைய காலத்து சூழ்நிலை பெண்களை குறியாக, அவர்களை ஆண்களின் மோகப் பொருளாக பயன்படுத்தி, வியாபாரப் பொருளாக பயன்படுத்தி, நாசமாக்க வேண்டும் என்று இப்லீஸோடு சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் காஃபிர்கள், மஜூஸிகள், முஷ்ரிக்குகள், யஹுதிகள், நஸ்ரானியர்கள்.
 
 
 
ஆனால், முஸ்லிம்களில் பலருக்கு இன்னும் புரியவில்லை. பெண் சுதந்திரம் என்று சொல்கிறார்கள். எது பெண் சுதந்திரம்? ஒரு பெண் விபச்சாரியாக மாறுவதா பெண் சுதந்திரம்? ஒரு பெண்ணை பல ஆண்கள் பார்த்து ரசிப்பதா பெண் சுதந்திரம்? ஒரு பெண்ணின் கண்ணியம் பறிக்கப்படுவதா பெண் சுதந்திரம்? ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுகிறாள், பலரால் ரசிக்கப்பட்டுகிறாள், அதுவா பெண் சுதந்திரம்? மக்களுக்கு புரியவில்லை.
 
 
 
ஹிஜாப் இல்லாமல் செல்வது தான், படித்த பெண்களில் ஒரு மேல்மட்ட நிலை என்று கருதுகின்ற அளவுக்கு மக்களுடைய நிலைமை மாறி இருக்கிறது. கவர்ச்சியான ஆடைகள், கவர்ச்சியான உடைகள், அநாகரிகமான ஆடைகள், இவற்றை எல்லாம் அணிந்து கொண்டு சென்றால் தான் நாமெல்லாம் செல்வந்தர்கள், படித்தவர்கள். அதிலும் இன்னும் அதிகப்படியாக பார்த்தோம் என்று சொன்னால் இஸ்லாம் கூறியிருக்கின்ற உரிமைகளையும், இஸ்லாம் கூறியிருக்கின்ற கடமைகளையும், எதிர்க்கக்கூடிய அளவிற்கு, விமர்சனம் செய்யக் கூடிய அளவிற்கு, அவற்றையெல்லாம் பிற்போக்குத்தனம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவற்றையெல்லாம் ஆண்களின் அதிகாரத்தினால் ஏற்பட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நமது படித்த முஸ்லிம் பெண்ணின் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது.
 
 
 
ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் கவலைப்பட்டார்கள். எதற்காக? நமது பெண்பிள்ளைகள் படிக்காமல் இருந்தால் ஒரு காஃபிர் நாட்டில் வாழும் போது அவர்களது நிலை என்னவாகுமோ என்று பயந்தார்கள். ஒரு காஃபிர் நாட்டில் வாழுகின்ற நமது பெண் சமுதாயத்தின் வருங்கால நிலை என்னவாகுமோ! அவர்களை கொஞ்சமாவது படிக்க வைக்க வேண்டும்; அவர்களுக்கு சில நன்மைகள் தெரிய வேண்டும்; அவர்கள் சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக பெண் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இன்றோ பெண் படிக்க வேண்டாம். அவர்கள் படித்தால் பிரச்சினை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது.
 
 
 
காரணம் என்ன?? பள்ளிக்கூடத்தை தாண்டி கல்லூரியில் கால் வைத்துவிட்டால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய அந்த திமிரு, அந்த ஆணவம், தலைக்கணம், கொஞ்ச நஞ்சமல்ல சகோதர்களே!! தந்தை தேர்ந்தெடுக்கக்கூடிய மணமகனை ஏற்றுக்கொள்வதற்கு இன்று படித்த பெண் தயாராக இல்லை.
 
 
 
ஏதாவது ஒரு காரணம் சொல்லி தாய், தந்தை தேர்ந்தெடுக்கக்கூடிய கணவனை நிராகரிக்கின்றாள். கல்லூரியில் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது? அவர்களுடைய கலாச்சாரம், சினிமாக்களில், சீரியல்களில், எந்த காஃபிர் பெண்களுடன் அவர்கள் பழகுகிறார்களோ, எதை படிக்கிறார்களோ, அசிங்கமான, ஆபாசமான விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
 
 
 
படிக்கக்கூடிய இடத்திலேயே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பது. வேலை செய்யக்கூடிய இடத்திலேயே ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பது. ஏன் பஸ்சில் பயணம் செய்யும் போது கூட இந்த திருமணங்கள் நிச்சயிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஆகிவிட்டது. கேவலமாக பஸ் ஸ்டாண்டுகளில் பெண் பார்க்கப்படுகிறான். தனது மனைவியாக ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். 
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சொன்ன மிகப்பெரிய ஒரு எச்சரிக்கையை பாருங்கள்!! ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சொன்னார்கள்;
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَوَّجُوا النِّسَاءَ لِحُسْنِهِنَّ، فَعَسَى حُسْنُهُنَّ أَنْ يُرْدِيَهُنَّ، وَلَا تَزَوَّجُوهُنَّ لِأَمْوَالِهِنَّ، فَعَسَى أَمْوَالُهُنَّ أَنْ تُطْغِيَهُنَّ، وَلَكِنْ تَزَوَّجُوهُنَّ عَلَى الدِّينِ، وَلَأَمَةٌ خَرْمَاءُ سَوْدَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلُ» (سنن ابن ماجه 1859 -) حكم الألباني- ضعيف جدا
 
பெண்களை அழகுக்காக முடிக்காதீர்கள். அந்த அழகு அவர்களை அழித்து விடலாம். பெண்களை செல்வத்திற்காக முடிக்காதீர்கள். அந்த செல்வம் அவர்களை திமிர் கொண்டவர்களாக மாற்றிவிடலாம். பெண்களை தீனுக்காக முடியுங்கள். ஊமையான அல்லது ஏதாவது ஒரு குறை உள்ள கருப்பு நிறமுள்ள ஒரு அடிமைப் பெண் மிக சிறந்தவள்.  தீன் இல்லாத ஒரு சுதந்திரமான, அழகான செல்வமிக்க ஒரு பெண்ணை விட கருப்பு நிறமுள்ள ஒரு அடிமைப் பெண் உங்களுக்கு சிறந்தவள் என்று அல்லாஹ்வின் தூதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (
 
 
 
ஆனால், கண்ணியத்திற்குரியவர்களே! இன்று இஸ்லாமிய சமுதாயம் சீரழிவதை பார்க்கிறோம். மக்களின் நிலையை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!!! கல்லூரிக்கு செல்லக்கூடிய, பல இடங்களுக்கு செல்லக் கூடிய இந்த சகோதரிகளின் பொறுப்பாளி யார்?? என்று யோசித்துப் பாருங்கள்!!! 
 
 
 
ஹிஜாபுடன் செல்கிறாள். ஒரு கம்பெனிக்குள் சென்ற உடனே ஒரு அறைக்கு சென்று அத்தனையும் கழற்றி விட்டு ஒரு கவர்ச்சியான ஆடையில் அந்நியர்களுடன் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இவளா இப்போது, ஹிஜாபோடு இந்த கடைக்குள் அல்லது இந்த கம்பெனிக்குள் ஆபீஸ்க்குள் நுழைந்தாள்? என்று கேட்கக் கூடிய அவலநிலை!
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே!! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். இப்படி விட்டால் என்ன தெரியுமா நடக்கும்? இன்றைய ஒரு சாதாரண சூழ்நிலையை பாருங்கள்!! முஸ்லிமானவர்கள் யார்? புதிதாக இஸ்லாத்திற்கு வரக்கூடியவர் யார்? என்று பார்க்கும்போது “கஸன்” என்று ஒரு புத்தகம் இருக்கின்றது.
 
 
 
இந்த மாதத்தில் யார் யார் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்? என்று பார்க்கின்ற அந்த புத்தகத்தில் ஒரு பக்கம் பார்த்தால், இஸ்லாத்திற்கு வரக்கூடிய சகோதரிகளின் எண்ணிக்கையும் இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால், ஒரு இந்து உடன் ஓடிப்போய் தன்னையே இந்துவாக மாற்றிக்கொண்ட முஸ்லிம் பெண்ணின் ஒரு எண்ணிக்கையும் இருக்கிறது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!
 
 
 
கேவலமான ஒரு சூழ்நிலையில் இன்றைய முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்களை பெற்றெடுத்த தகப்பன்கள், அவர்களின் காப்பாளர்கள், பொறுப்பாளிகள் இது விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். 
 
 
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை பாதுகாப்பானாக!! இது விஷயத்தில் கவனம் தேவை. ஒரு சிறு பிள்ளைகள் கூட, பாலிக் ஆகாத ஒரு சிறுவன் கூட தனது தாயை கேட்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் உரிமை இருக்கிறது. தனது சகோதரியை தட்டி கேட்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் உரிமை இருக்கிறது. அப்படித்தான் கண்ணியத்திற்குரிய நமது நபியவர்கள் வாழ்க்கை வரலாறுகளை பார்க்கிறோம்.
 
 
 
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் சிறியவர், பெரியவர் என்று எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக தனது குடும்பத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களே, யார் அசிங்கங்களை அங்கீகரித்து கொண்டிருக்கிறானோ, தனது மனைவி ஹிஜாப் இல்லாமல் செல்கிறாள். ஒழுங்கான ஹிஜாப் இல்லை. தலைவிரி கோலமாக செல்கிறாள். ஹிஜாப் இருக்கிறது, முடியெல்லாம் வெளியே இருக்கிறது. கழுத்து தெரிகிறது. அவளுடைய ஆடை அசிங்கமாக இருக்கிறது.
 
 
 
இப்படிப்பட்ட நிலையில் செல்லும்போது அல்லது அன்னியர்களுடன் கடையில் சாமான் வாங்கும் போது, ஒரு இடத்தில் நிற்கும் போது, அங்கு யார் இடத்திலாவது பேசும் போது, அவளுடைய அந்த பேச்சின் நயம், அவர்களுடைய அந்த நடை, உடை ஒரு தவறான முறையில், இஸ்லாம் கூறிய அந்த முறைக்கு அப்பாற்பட்டு இருக்குமேயானால் அதை கண்டிக்கவில்லை என்றால் அப்படிப்பட்ட ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்;
 
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ، وَالْعَاقُّ، وَالدَّيُّوثُ "، الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ (مسند أحمد 5372 -)
 
"அத்தையூஸ்" அவன் 'பொன்னையன்' என்று சொல்கிறார்கள். திராணியற்றவன் என்று சொல்கிறார்கள்.
 
 
 
அல்லாஹ் நாளை மறுமையில் அவனை பார்க்க மாட்டான். அவனை சுத்தப் படுத்த மாட்டான். அல்லாஹ் தனது கருணையின் பார்வையை கொண்டு அவனை பார்க்கமாட்டான். அவர்களிடத்தில் பேசமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிகிறார்கள். 
 
 
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 5372.
 
 
 
அல்லாஹ் சொல்லக்கூடிய ஒரு வசனத்தைப் பாருங்கள்; யாருக்கு சொல்கிறான். வயது முதிர்ந்து கிளவிகளாக ஆகி விட்டார்கள்.. அல்லவா! அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு அறிவுரை சொல்கிறான். சூரா நூர்-உடைய அறுபதாவது வசனம்,
 
 
 
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ اللَّاتِي لَا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
 
திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 24 : 60)
 
 
 
ஒரு கிழவியாக இருந்தாலும் கூட, தனது கணவனுக்கு அணியக்கூடிய ஒரு கலர் ஆடையை ஒரு நிற ஆடையை அணிந்து இருந்தால், அவளுக்கும் ஹிஜாப் உண்டு என்று அல்லாஹ் சொல்லிருக்கிறான். அப்படிப்பட்ட வயதான பெண்கள் கூட வீட்டில் இருக்கும் போது அந்நிய ஆண்களுக்கு முன்னால் வராமல் இருப்பது தான் அவர்களுக்கும் பேணுதல் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
 
 
 
அப்படி என்றால், கண்ணியத்திற்குரியவர்களே!! இன்று வயது பெண்கள் நிலையைக் கொஞ்சம் பாருங்கள்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!! இது விஷயத்தில் மிக கவனமாக இருப்போமாக! நமது சமுதாயத்தை சீர்த்திருத்தம் செய்வோமாக! நமது குடும்பத்தில், நமது சகோதரர்கள் மற்றும் நண்பர்௧ளுடைய குடும்பங்களில் ,நமக்குத் தெரிந்தவர்களின் குடும்பங்களில், இப்படிப்பட்ட ஒரு தீமையை பார்க்கும்போது அவர்களுக்கு அது குறித்து எச்சரிக்கை செய்வோமாக! பொதுவாக இந்த விஷயத்தைக் குறித்து நாம் கவனம் கொண்டு இருப்போமாக! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமது வாலிப சகோதர்களையும் சகோதரிகளையும் பாதுகாத்து அருள்வானாக!! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي زَيْدٌ هُوَ ابْنُ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى المُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: وَبِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ»، قُلْنَ: وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَلَيْسَ شَهَادَةُ المَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا» (صحيح البخاري 304 -)
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي فَرْوَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ» (صحيح مسلم- 444)
 
குறிப்பு 3).
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ، فَيَنْصَرِفْنَ نِسَاءُ المُؤْمِنِينَ لاَ يُعْرَفْنَ مِنَ الغَلَسِ - أَوْ لاَ يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا -» (صحيح البخاري 873 -)
 
குறிப்பு 4).
 
ஹதீஸின் தரம் : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது மிக பலகீனமான ஹதீஸ் என்று கூறுகிறார்கள்;
 
இமாம் ஷாகிர் சஹீஹ் என்று கூறுகிறார்கள்.
 
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/