நோய்கள் பரவும்போது என்ன செய்ய வேண்டும்! | Tamil Bayan - 623
بسم الله الرحمن الرّحيم
நோய்கள் பரவும் போது என்ன செய்ய வேண்டும்!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவனுடைய நாட்டத்தை மீறி எதுவும் நடக்காது. அல்லாஹ் நாடியது நடந்தே தீரும்.
فَعَّالٌ لِمَا يُرِيدُ
தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன். (அல்குர்ஆன் 85 : 16)
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா சிலரை தீமைகளை கொண்டு, நோய்களைக் கொண்டு, அல்லது அவனுடைய தண்டனைகளை கொண்டு சோதிக்க நாடினால், அல்லாஹ் தான் அந்த சோதனையில் இருந்து, தண்டனைகளிலிருந்து, தடுக்கமுடியும்.
அல்லாஹுத்தஆலா ரஹ்மத்தை கொடுக்க நாடினால் அந்த ரஹ்மத்தை யாரும் தடுக்க முடியாது.
مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 2)
ஆகவே,ஒரு முஸ்லிம் எந்த நேரத்திலும் அல்லாஹ்வை முன்னோக்கியவனாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
சோதனைகளிலிருந்து, நோய்களிலிருந்து, இன்னபிற ஆபத்துகளிலிருந்து, பாதுகாப்புத் தேடுவது ஒரு அமல் என்பதை மறந்து விடாதீர்கள்.
சிலர்,இந்த நேரத்தில் வீராப்பு பேசுவதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
தவக்குல் என்பதற்கு அர்த்தம் வீராப்பு பேசுவதில்லை. மமதையாக, பெருமையாகப் பேசுவது அல்ல.
அல்லாஹு தஆலா பூமியில் ஒரு சோதனையை இறக்குகிறான் என்றால், யா அல்லாஹ்! அந்த சோதனைகளிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! என்று பயந்து கையேந்த வேண்டும்.
فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا
எந்த நோயைக் கொண்டு மக்களை நாம் சோதிக்க நாடுகிறோமோ, அந்த நோய் அவர்களுக்கு வரும்போது அவர்கள் நம்மிடத்தில் பயந்து மன்றாட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 6 : 43)
எனக்கு எதுவும் ஆகாது. நான் எங்கே வேண்டுமானாலும் செல்வேன். நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். எனக்கு தவக்குல் இருக்கிறது என்றெல்லாம் யார் வீராப்பு பேசுகிறார்களோ, உண்மையில் அவர்கள் அல்லாஹ்வுடைய விதியை நம்பவில்லை.
அவர்களுக்கு தவக்குல் இருப்பதைப் போன்றும், அல்லது அவர்களுக்கு மட்டும் இருப்பதைப் போன்றும், தக்தீரின் மீது அவர்களுக்கு மட்டும் நம்பிக்கை இருப்பதை போன்றும்அவர்கள் பேசுகிறார்கள்.
இது முற்றிலும் மார்க்க அறிவு இல்லாத காரணத்தால், அல்லாஹ்வுடைய வேதத்தைப் பற்றியும், சுன்னாவைப் பற்றியும் உண்டான இல்ம் இல்லாத காரணத்தால் ஏற்படக்கூடிய ஒன்று.
அந்த காலத்தில் இந்தக் குஷ்டம் என்பது பரவக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்த குஷ்ட நோயுடைய ஒருவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து நேரடியாக பைஅத் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
இந்த செய்தி தெரிந்த உடன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«إِنَّا قَدْ بَايَعْنَاكَ فَارْجِعْ»
நீங்கள் இருக்கக்கூடிய இடத்திலேயே இருங்கள். நான் உங்களுக்கு பைஅத் செய்து கொடுத்துவிட்டேன். உங்களுடைய பைஅத்தை நான் ஏற்றுக்கொண்டேன். நீங்கள் திரும்பி சென்று விடுங்கள் என்று. (1)
அறிவிப்பாளர் : அஷ்ஷரீத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2231.
எத்தகைய ஒரு அழகிய பாதுகாப்பு, பேணுதல் வழிமுறையை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையாண்டு இருக்கிறார்கள் பாருங்கள்.
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ»
எந்தக் கால்நடைகளுக்கு நோய் வந்து விட்டதோ, அந்த கால்நடையை ஆரோக்கியமாக உள்ள கால்நடைகளோடு சேர்த்து கட்டாதீர்கள். கலக்காதீர்கள். இரண்டையும் பிரித்து வையுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5771.
இப்படி பல நூறு ஹதீஸ்களை,ஸஹாபாக்களுடைய வழிமுறைகளை பார்க்கின்றோம்.
ஆகவே இப்போது இந்த உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கக்கூடிய இந்த நோய் என்பது இதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதை நாம் நம்ப வேண்டும்.
அதற்கு வெளிப்படையான ஸபபுகள் எதுவாக இருந்தாலும், அல்லாஹ் நாடாமல் அந்த ஸபபால் அந்த நோய் உருவாகி இருக்க முடியாது.
ஆகவே, அல்லாஹ்விடத்தில் நாம் பாதுகாப்புத் தேடவேண்டும். யா அல்லாஹ்! இந்த நோயிலிருந்து என்னை பாதுகாப்பாயாக!
ஒவ்வொரு கெட்ட நோயிலிருந்தும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத்தேடி இருக்கும் போது, பயந்து இருக்கும்போது, நாம் பாதுகாப்பு தேடவில்லை என்றால், அல்லாஹ்விடத்தில் அதற்காக நாம் பாதுகாப்புத் தேடி துஆ கேட்கவில்லை என்றால், நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு முன்னால் பணிவு இல்லை என்று பொருள். அல்லாஹ்வுடைய தண்டனையை பயப்படாமல் இருக்கிறோம் என்று பொருள்.
அல்லாஹ்வுடைய தண்டனையை நாம் பயப்படுவது உண்மை என்றால், இந்த நோயில் இருந்தும், இன்னும் இதுபோன்ற கெட்ட நோய் ஒவ்வொன்றிலிருந்தும் நாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டும்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»
யா அல்லாஹ்! வெண்குஷ்டத்திலிருந்து, குஷ்டரோகத்திலிருந்து, பைத்தியம் பிடிப்பதில் இருந்து, இன்னும் எத்தனை கொடிய நோய்கள் இருக்கின்றனவோ, அந்த எல்லா நோய்களில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1554, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلَاقِ، وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ»
யா அல்லாஹ்! கெடுதி விளைவிக்கக்கூடிய குணங்களிலிருந்தும், கெட்ட அமல்களிலிருந்தும், கெட்ட நோய்களிலிருந்தும், மோசமான பிணிகளில் இருந்தும் நான் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பாளர் : குத்பா இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 3591, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ஆகவே,இந்த ஸபப் அல்லாஹ்வை கொண்டுதான் தீங்கு அளிக்கும் என்பதை நாம் நம்பக்கூடிய அதே நேரத்தில், இந்த நோயிலிருந்து பாதுகாப்பு தேடுவது அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரசூலும் கற்றுக்கொடுத்த ஒரு அமல் த் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே எல்லா நேரங்களிலும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதோடு, பாதுகாப்பு உடைய துஆக்களையும் நாம் செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, நம்முடைய மார்க்கத்தை நீங்கள் பார்த்தால்,ஒன்று ஷரீஅத்துக்கு தீர்ப்பு சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள் இருப்பார்கள். பல தீர்ப்புகளை மருத்துவத்தோடு நம்முடைய மார்க்கம் தொடர்புபடுத்தி இருக்கிறது.
ஒருவருக்கு தண்ணீரை பயன்படுத்தினால் அவருக்கு உடல் நோய் அதிகமாகும், அல்லது பிரச்சினைகள் ஆகும், அல்லது ஆகாது என்பதை முடிவு செய்வது ஒரு மருத்துவருடைய வேலை. அதை ஒரு மார்க்க அறிஞரால் முடிவு செய்ய முடியாது.
எனவே தான் எப்படி மார்க்க கல்வியை படிப்பது ஃபர்ளு கிஃபாயாவோ, அது போன்று மருத்துவக் கல்வியை படிப்பதும் ஃபர்ளு கிஃபாயா. அதன் அடிப்படையில்தான் ஃபத்வா கொடுக்க முடியும்.
ஆகவே, இந்த நேரத்தில் மருத்துவ அறிஞர்கள், அதுவும் குறிப்பாக உலகத்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள், அதில் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து, நாம் எத்தகைய தற்காப்புகளை, பேணுதல்களை கையாள வேண்டும் என்று கூறியிருக்கிறார்களோ,அவற்றை அறிந்து, அவற்றை நாம் பின்பற்றுவதோடு, பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்லி, நாம் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம்முடைய மார்க்க கடமை என்பதை மறந்து விடக்கூடாது.
இன்று சிலர்,இந்த நேரத்தில் பெரிய பொதுக்கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, அல்லது பெரிய போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டு வீராப்பு பேசுகிறார்கள்.
எத்தனை பேருக்கு இறப்பு வந்துவிட்டது? ஒருவர் இருவர் தானே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்!இதனால் என்ன ஆகிவிட்டது? என்று.
முதலில் இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் என்ன விரும்புகிறார்கள்? இந்தியாவில் இருக்கக்கூடிய 120கோடி மக்களில் ஒரு பத்து கோடி மக்கள் செத்ததற்கு பிறகுதான் இவர்களுக்கு புத்தி வருமா?
ஒரு உயிர் அநியாயமாக சாவதற்கு நாம் காரணமாக இருந்தால், உலக மக்களுடைய உயிர்கள் எல்லாம் சாவதற்கு நாம் காரணமாக இருந்தது போன்று தான்.
ரப்புல் ஆலமீன் அப்படித்தான் சொல்கின்றான் :
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ
எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான். (அல்குர்ஆன் 5 : 32)
ஆகவே,இதுபோன்ற நேரங்களில் நம்முடைய போராட்டங்கள்,அதுபோன்று கூடி களையக் கூடிய மற்ற நிகழ்ச்சிகளை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஜும்ஆ போன்ற மிக அவசியமான அந்த தொழுகைகளுக்கு நமக்கு அனுமதி இருக்கின்ற வரை அதை செய்வதில் தவறு கிடையாது.
மற்ற மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் நம்முடைய எல்லா மக்களுடைய நன்மைகளை நாடி, சுகாதாரத்தை நாடி, ஆரோக்கியத்தை நாடி, நாம் நிறுத்திக் கொள்வதும், அதிலிருந்து தவிர்த்துக் கொண்டு மருத்துவர்கள் இது விஷயத்தில் நமக்கு என்ன வழிகாட்டுதல்களை சொல்கிறார்களோ, அதை பின்பற்றி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருப்பது தான் உண்மையான தவக்குல்.
அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் வீராப்பு பேசி கொண்டு, பெருமை பேசிக் கொண்டு, அவற்றை புறக்கணிப்பது, மார்க்கத்தை புறக்கணிப்பது, மார்க்க வழிகாட்டுதல்களை புறக்கணிப்பது. ஹதீஸுக்கு மாற்றமாக நடப்பது என்பதை நம்முடைய சகோதரர்கள் சகோதரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மையும் உலக மக்கள் அனைவரையும் இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாப்பானாக! இதனுடைய தீமையில் இருந்து பாதுகாப்பானாக! இதனால் ஏற்படக்கூடிய மரணத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வுடைய கோபத்திலிருந்து நம்மை பாதுகாப்பானாக!
அல்லாஹ்வே!உன்னுடைய கோபத்திலிருந்தும், உன்னுடைய அதிருப்தியிலிருந்தும், உன்னுடைய தண்டனையிலிருந்தும், நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம். எங்களை பாதுகாத்து கொள்வாயாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ، وَهُشَيْمُ بْنُ بَشِيرٍ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ فِي وَفْدِ ثَقِيفٍ رَجُلٌ مَجْذُومٌ، فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّا قَدْ بَايَعْنَاكَ فَارْجِعْ» (صحيح مسلم -2231)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/