சோதனைகளின் போது முஸ்லிம்களின் நிலை | Tamil Bayan - 451
சோதனைகளின் போது முஸ்லிம்களின் நிலை
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளின் போது முஸ்லிம்களின் நிலை
வரிசை : 682
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 02-12-2016 | 03-03-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் தக்வாவை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆவின் உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னித்து நன்மைகளை அங்கீகரித்து அவனுடைய நல்லடியார்களில் நம்மை சேர்த்து அருள் புரிவானாக!
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவனுடைய அடியார்களுக்கு இந்த உலகத்தில் சோதனையை மாற்றி மாற்றி கொடுத்து கொண்டே இருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً
நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். (அல்குர்ஆன் 21 : 35)
இந்த உலக வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய வசதி, மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள், இந்த உலக வாழ்க்கையில் அவன் விரும்பக்கூடிய அமைப்பில் அவனுக்கு உலக வாழ்க்கை அமைவது இதுவும் சோதனைதான்.
இந்த உலக வாழ்க்கையில் அவன் விரும்பாதது நடப்பது, துன்பங்கள், துயரங்கள், கஷ்டம், பிரச்சனை, பஞ்சம், நஷ்டம் இப்படி, இதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு சோதனை தான்.
இதுபோன்ற சோதனைகளின் போது, மனிதன் எப்படி நடந்து கொள்கிறான்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கு அல்லாஹு வதஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதத்தில் நமக்கு வழி காட்டுகிறான்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின் தன்னுடைய உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தன்னுடைய ஆதங்கங்களுக்கும் தன்னுடைய பழிவாங்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவனாக இருப்பான்.
அவனை வழிநடத்தக் கூடியது அவனுடைய இறைவனின் வேதமாகவும், அவனுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவாக மட்டுமே இருக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது. (அல்குர்ஆன் 17 : 9)
ஆகவே, முஃமின்கள் குர்ஆனைப் பற்றிப் பிடித்து குர்ஆனுடைய வழிகாட்டுதலின் படி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், இந்த குழப்பங்களிலிருந்து அவர்களுக்கு நஜாத் -வெற்றி, பாதுகாப்பு நிச்சயம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை, இமாம் மாலிக் தனது நூலில் பதிவு செய்கிறார்கள்.
«تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ»
எதை நீங்கள் பற்றி பிடித்தால் வழிகெடவே மாட்டீர்களோ அதை நான் உங்களுக்காக விட்டு செல்கிறேன். அல்லாஹ்வின் வேதத்தை என் சுன்னாவையும் நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்.
நூல் : முவத்தா - இமாம் மாலிக், எண் : 1874.
இந்த உலகத்தில் அரசியல்கள் மாறலாம், அந்த அரசியல் வாதிகள் உடைய சட்டங்கள் மாறலாம், ஆட்சிகள் மாறலாம், மன்னர்கள் மாறலாம், நாட்டில் குழப்பங்கள், சோதனைகள் பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆனால், அல்லாஹ்வுடைய வேதத்தில் எந்த குழப்பமும் இல்லை. அது ஒரு கலங்கரை விளக்கமாக, அதனுடைய இடத்திலிருந்து திசை தெரியாமல் இருக்கின்றவர்களுக்கு, குழப்பத்தில் சிக்கியவர்களுக்கு, எப்போதும் நேர் வழியைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.
அல்லாஹ்வின் வேதம், அவனுடைய தூதருடைய வழிமுறை.
அல்லாஹ்வுடைய தூதர்களும், அந்தத் தூதரின் குடும்பத்தார்களும், அந்த தூதர்களின் உம்மத்துகளும், இதற்கு முன்னால் சோதிக்கப்படாத சோதனைகளையா நாம் சந்தித்து விட்டோம்?
அல்லாஹ் கேட்கிறான்;
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 214)
அல்லாஹ்வுடைய நபிமார்களை பார்த்து, அந்த ஊரிலேயே பிறந்து, வளர்ந்து, அந்த ஊரில் கண்ணியத்திற்குரியவர்களாக இருந்த அந்த இறைத் தூதர்களை பார்த்து அந்த மக்கள் சொன்னார்கள்.
قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَاشُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ
(ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார். (அல்குர்ஆன் 7 : 88)
இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் அந்த சமுதாயத்திற்கு ஏற்பட்டது. அல்லாஹு தஆலா இந்த குர்ஆனில் நமக்கு தேவையான அத்தனை விளக்கங்களையும், அத்தனை தெளிவுகளையும் தருகிறான்.
قَدْ جَاءَكُمْ بَصَائِرُ مِنْ رَبِّكُمْ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக). (அல்குர்ஆன் 6 : 104)
மேலும், அல்லாஹ் சொல்கிறான்;
يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 4 : 174)
இந்த குர்ஆன் நமக்கு வழிகாட்டுகிறது. குழப்பங்களின் நேரங்களில் சோதனைகளின் நேரங்களில் ஒரு முஸ்லிம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எந்த முறையில் அவனுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்? என்பதை அல்குர்ஆன் நமக்கு சொல்லித் தருகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்குரிய வழிகாட்டுதல்களை நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.
இப்போது நாம் சந்தித்து இருக்கின்ற இந்த சோதனை, இது நாம் மட்டுமல்ல, இந்த நாட்டில் வசிக்கக் கூடிய எல்லா மக்களும், நம்மை போன்ற சாமானிய மக்கள், சாதாரண மக்கள், எல்லா மதத்தவர்களும் இந்த சோதனைகளை எதிர் கொள்கிறார்கள்.
இது நமக்கு மட்டும் உள்ளதல்ல. இருந்தாலும் அல்லாஹ்வுடைய வேதமும், நபியின் சுன்னாவின் வழிகாட்டுதல்களும், கொடுக்கப்பட்டிருக்க கூடிய நாம் இந்த சோதனையை எப்படி அணுக வேண்டும்?
முதலாவதாக, நம்முடைய அமல்களை நம்முடைய நல்ல காரியங்களை நல்ல செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்.
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல்களிலிருந்து நாம் பார்க்கிறோம்.
எப்போது ஒரு முஃமினுடைய உடலிலும், பொருளிலும், அவருடைய நாட்டிலும் குழப்பங்கள் அதிகமாகிறதோ, அவன் தன்னுடைய அமல்களை முதலாவதாக அதிகப்படுத்த வேண்டும்.
முதலாவதாக ஃபர்ளுகளை, பிறகு சுன்னத்துகளை, பிறகு நஃபில்களை, இப்படியாக தன்னுடைய அமல்களை அதிகப்படுத்த வேண்டும்.
அமல்களை அதிகப்படுத்தாமல், அமல்களை சீர் செய்யாமல், எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இதைத்தான் ரசூலுல்லாஹ் உடைய வாழ்க்கையில் பார்க்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டால், அவர்களுக்கு ஏதாவது ஒரு குழப்பங்கள் ஏற்பட்டு விட்டால், திடுக்கம் ஏற்பட்டு விட்டால் உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 23299.
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»
நல்ல அமல்களை விரைந்து செய்து கொண்டே இருங்கள். குழப்பங்கள் விரைவில் வர இருக்கின்றன. இருள் சூழ்ந்த இரவுகளைப் போன்று, காலையில் முஃமினாக ஒருவன் இருப்பான், மாலையில் அவன் காஃபிராகி இருப்பான். மாலையில் ஒருவன் முஃமினாக இருந்தவன், காலை விடிவதற்குள் அவன் காஃபிராக மாறி இருப்பான். அவன் தன்னுடைய மார்க்கத்தை துன்யாவிற்காக விற்க ஆரம்பித்து விடுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 186.
யார் தன்னை அமல்களில் அதிகம் ஈடுபடுத்தி கொண்டார்களோ, வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்களோ, அவர்கள்தான் இதுபோன்ற சூழ்நிலைகளில் தடுமாற்றங்களிலிருந்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்திலிருந்து, வழி கெடுவவதிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
ஒரு முஃமினை இதுபோன்ற குழப்பங்களில் சிக்கி வழி கெடுவதிலிருந்து அவனை பாதுகாக்கக் கூடியது அவனுடைய இபாத்துதகள் மட்டும் தான். அவனுடைய அறிவோ அனுபவமோ அல்ல.
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், அதிகமாக அமல் செய்யுங்கள், அமல்களின் பக்கம் விரையுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ اقْتُلُوا أَنْفُسَكُمْ أَوِ اخْرُجُوا مِنْ دِيَارِكُمْ مَا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِنْهُمْ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا
நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும். (அல்குர்ஆன் 4 : 66)
அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய அமல்களை இபாதத்துளை சரியாக செய்து கொண்டிருந்தால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வாக்களிக்கின்றான்; அதில் அவர்களுக்கு நன்மையாக அமையும், அவர்களது பாதங்களை உறுதிப்படுத்தக் கூடிய அவர்களைத் தடுமாற விடாமல் குழப்பங்களிலிருந்து அவர்களை உறுதிப்படுத்துவதற்கு அது மிக ஏதுவாக இருக்கும் என்று.
எப்போது அல்லாஹ் நமக்கு உபதேசித்த அமல்களை விட்டோமோ, அல்லாஹ் நமக்கு கூறிய அமல்களை விட்டோமோ, அதன் காரணமாகத்தான் குழப்பங்களில் சிக்கித் தவிக்கிறோம்.
குறிப்பாக, எப்போதும் ஒரு முஃமின் இபாதத்தில் அமல்களில் இருக்க வேண்டும். இதுபோன்ற குழப்ப காலங்களில், பிரச்சனையான நேரங்களில், அதிகமாக இபாதத்தில் கவனம் செலுத்த வேண்டும்
காரணம், சாதாரண நேரங்களில் செய்கின்ற இபாதத்துக்களை விட, சாதாரண சூழ்நிலைகளில் நாம் செய்கின்ற இபாதத்துகளை விட, குழப்பங்கள், பிரச்சினைகள், நாட்டில் சோதனைகள் நிறைந்து விடும் போது நாம் செய்கின்ற இபாதத்துகளுக்கு, அல்லாஹ்விடத்தில் அதிகம் கூலி இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்றை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்,
«الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ»
குழப்பமான பிரச்சனைகள் நிறைந்த காலங்களில் இபாதத்துகள் செய்வது, நீங்கள் என் பக்கம் ஹிஜ்ரத் செய்து வருவதைப் போன்று.
அறிவிப்பாளர் : மஃகல் இப்னு யசார் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2948.
எப்படிப்பட்ட ஒரு பெரிய வார்த்தையை ரசூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்!
ரசூலுல்லாஹ் ஹயாத்தாக இருக்கும்போது ஒரு மனிதர் காஃபிருடைய நாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டில் குழப்பம் அதிகமாகி, இஸ்லாமை பின்பற்ற முடியாத நிலைக்கு ஆளாகி விடும்பொழுது, அந்த நாட்டை விட்டு விட்டு, அல்லாஹ்வின் தூதரைத் தேடி ஒருவர் ஹிஜ்ரத் செய்து வந்தால், எவ்வளவு பெரிய விஷயம் அது.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஈமானுக்கு அடுத்ததாக உள்ள அந்தஸ்து ஹிஜ்ரத்தான்.
எனவேதான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا
ஒரு மனிதன் முஸ்லிமாகி விட்டால், அவருடைய முந்திய பாவங்களையெல்லாம் இஸ்லாம் அழித்துவிடும்.
ஒரு மனிதர் ஹிஜ்ரத் செய்து விட்டால் அந்த ஹிஜ்ரத் அவருடைய முந்திய பாவங்களை எல்லாம் அழித்து விடும் என்பதாக.
நூல் : முஸ்லிம், எண் : 121.
எனவேதான், இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் முதல் அந்தஸ்து முஹாஜிர்களுக்கு, இரண்டாவது அந்தஸ்து அன்சாரிகளுக்கு.
யார் தன்னுடைய தீனை பாதுகாப்பதற்காக, தன்னுடைய மார்க்கத்தை பாதுகாப்பதற்காக, அல்லாஹ் உடைய இபாதத்துகளில் ஈடுபடுகிறாரோ, அவர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் ஹிஜ்ரத் செய்வதற்கு சமமானவர்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய கூற்றை நாம் படிக்கவில்லையா? அல்லாஹ் சொல்கிறான்;
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் நீங்கள் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2 : 45)
உங்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டாலும், உங்களுக்கு எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டாலும், பொறுமையாக இருந்து தொழுகையின் மூலமாக நீங்கள் உதவி தேடுங்கள்.
ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
சின்ன பிரச்சினை ஏற்பட்டால் கூட, காற்று கொஞ்சம் அதிகமாக வீசி விட்டால் போதும் உடனே தொழுகைக்கு நின்று விடுவார்கள்.
மழை அதிகமாகி விட்டால் உடனே தொழுகைக்கு நின்று விடுவார்கள். எந்த ஒரு திடுக்கம் அவர்களுக்கு ஏற்பட்டாலும், தொழுகையின் பக்கம் விரைவார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23299.
இன்று, மக்கள் டிவியின் பக்கம் விரைகிறார்கள். என்ன செய்தி அல்லது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வப்படுகிறார்கள்.
அதில் பலபேர் பொய்யான தவறான தகவல்களை எல்லாம் நம்பி பதட்ட படுகிறார்களே, தவிர அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்ற ஒரு சூழ்நிலையை இன்றைய முஃமின்களின் இடத்தில் மிகவும் குறைவாக பார்க்கிறோம்.
ஒரு கூட்டத்தை பார்த்தோம்; சுனாமி வருகிறது, சுனாமியை வேடிக்கை பார்க்க செல்கிறார்கள், கேட்டால் அல்லாஹ்வின் அத்தாட்சியை வேடிக்கை பார்க்க சென்றார்களாம். என்ன வித்தியாசமான போக்கு, அல்லாஹ்வுடைய வேதனை என்றால் அதிலிருந்து விரண்டு ஓடவேண்டும்.
அல்லாஹ்வுடைய இந்த சோதனைகள் என்பது, வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல, பயப்படுவதற்காக, அல்லாஹ்வின் பக்கம் பணிவதற்காக.
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை படியுங்கள்.
«سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الخَزَائِنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الحُجُرَاتِ؟»
ஒருநாள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திடுக்கிட்டு ஒரு பெரிய பயத்தோடு அவசரமாக எழுகிறார்கள். இன்றைய இரவில் அல்லாஹ் இறக்கிய சோதனைகள் எத்தனை எத்தனை!
பயந்து நடுங்கி விட்டு, அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், இதோ அறைகளில் தூங்குகின்றவர்களை, குறிப்பாக பெண்களை சொன்னார்கள், (தன்னுடைய மனைவிமார்கள், தன்னுடைய பிள்ளைகள், முஃமின்களுடைய மனைவிமார்கள், முஃமின்களுடைய பெண்களை குறித்து சொன்னார்கள்.)
அறைகளில் தூங்கி இருக்கக்கூடிய பெண்களை யார் எழுப்பி விடுவார்கள், அவர்கள் எழுந்து தொழட்டும்.
அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1126.
பொதுவாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகைக்கு எழுந்திருக்கும் பொழுது, யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் சப்தமில்லாமல் அமைதியாக எழுந்து தொழுவார்கள்.
ஆனால், இதுபோன்ற சில முக்கியமான நேரங்களில்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களையும் எழுப்பி விட்டிருக்கிறார்கள், தொழ சொல்லி இருக்கிறார்கள். உதாரணமாக, ரமலானுடைய கடைசி பத்துகளைப் போன்று.
இங்கே என்ன வழிகாட்டுதல்களை அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு சொல்கிறார்கள்? குழப்பங்களில் இருந்து நம்மை பாதுகாப்பது அல்லாஹ் உடைய இபாதத், அல்லாஹ் உடைய தொழுகை வணக்க வழிபாட்டின் பக்கம், நாம் திரும்புவதைத் தவிர, வேறு வழி இல்லை.
குறிப்பாக, நாம் நம்முடைய கண்ணியங்ளை, நம்முடைய பொருள்களை, செல்வங்களை, மனித உயிர்களை பாதுகாக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
குழப்பமான காலத்தில் யார் அந்த குழப்பங்களுக்குள் நுழைகிறாரோ, குழப்பமான காலங்களில் பிரச்சனைகளில் தீர்வு காணுவதற்காக யார் பிரச்சினைகளையே சாதகமாக, பிரச்சினையே ஒரு வழியாக எடுத்துக் கொள்கிறார்களோ கண்டிப்பாக அவர்கள் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பார்கள்.
மனிதர்களுடைய சொத்துகளுக்கு கேடு விளைவிப்பார்கள், மனிதர்களுடைய செல்வங்களுக்கு கேடு விளைவிப்பார்கள், இதுதான் கலவரமாக மாறுவதை பார்க்கிறோம்.
இவர்கள் செய்யக்கூடிய போராட்டங்கள், இவர்கள் செய்யக்கூடிய மற்ற மற்ற காரியங்கள் கலவரங்களாக மாறி, ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின் உயிரைப் பறிப்பதாக, ஒரு மக்கள் இன்னொரு மக்களின் செல்வங்களை சூரையாடுவதாக, அல்லது அந்த செல்வங்களை நாசப்படுத்துவதாக, அவருடைய கண்ணியங்களை சேதப்படுத்துவதாக, இப்படித்தான் இவர்கள் எடுக்கக்கூடிய தீர்வு அமையும்.
எனவே, ஒரு முஸ்லிம் அதுபோன்ற ஒரு நிலைக்கு தன்னை தள்ளி விடக்கூடாது. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا»
உங்களது உயிர்கள், உங்களது செல்வங்கள், உங்களது கண்ணியங்கள் உங்களுக்கு மிக புனிதமானவை. இன்றைய தினம் உங்களுக்கு எப்படி புனிதமானதோ, இந்த உங்களது மக்கா நகரத்தில் இந்த துல்ஹஜ் மாதத்தில், எப்படி உங்களது உயிர்கள், உங்களது செல்வம், புனிதமானதோ, அதுபோன்றுதான் உங்களுடைய உயிரும், பொருளும், உங்களுடைய கண்ணியமும்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1739.
எந்த அளவு ஒரு முஸ்லிம் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் பாருங்கள்! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
«لَنْ يَزَالَ المُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا»
ஒரு முஃமின் அவனுடைய மார்க்கத்தில், எல்லா விஷயங்களிலும் அவனுக்கு விசாலம் இருக்கிறது. அவனுக்கு மன்னிப்பின் வாசல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு ஹராமான ரத்தத்தை அவன் சிந்தாதவரை, ஒரு புனிதமான ரத்தத்தை அவன் தொடாதவரை, ஒரு உயிரை கொள்ளாதவரை, ஒரு முஃமின் அவனுடைய மார்க்கத்தில் பிரச்சனை இல்லாமல் விசாலமாக இருப்பான்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6862.
ஆனால், ஒரு உயிரை கொன்று விட்டால், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அவன் அல்லாஹ்வுடைய மன்னிப்பிலிருந்து தூரமாகி விடுகிறான்.
நாளை மறுமையில் அல்லாஹு தஆலா முதலாவதாக தீர்ப்பளிப்பது உயிர்களின் விஷயத்தில்தான்.
ஆகவே, ஒரு முஸ்லிமை கொள்வதோ, அல்லது முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்து பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு திம்மியை கொல்வதோ, அல்லது முஸ்லிமுடைய நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய ஒரு காஃபிரை கொள்வதோ, அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமாக இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
«لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ»
உலகமே அழிந்து விடுவது, உலகமே இல்லாமல் போய் விடுவது, அல்லாஹ்விடத்தில் மிகவும் அற்பமான ஒன்றுதான். ஒரு முஸ்லிமை கொள்வதைவிட. ஒரு முஸ்லிமை கொள்வது உலகமே அழிந்து விடுவதை விட பயங்கரமானது.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1395.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللَّهِ مِنْكِ»
ஒரு முஃமினுடைய கண்ணியம் அல்லாஹ்விடத்தில், கஃபாவின் கண்ணியத்தை விட மிகப் புனிதமானது. அவனுடைய செல்வமும் அவனுடைய ரத்தமும் அப்படித்தான்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2032.
ஆகவே, இதுபோன்ற நேரங்களில் குழப்பங்களில் ஈடுபடாமல், கலவரங்களில் ஈடுபடாமல், மற்ற பொதுவான மக்கள் என்னென்ன செய்கிறார்களோ, அதுபோன்ற விஷயங்களில், ஈடுபட்டு, இதுபோன்ற பாவமான காரியங்களுக்குள் சிக்குவதை விட, அமைதியாக இருந்து அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும்.
இது முஃமின்களுக்கு மிக அவசியமான ஒன்று. அதுபோன்றுதான், மார்க்க அறிஞர்களை அணுகுவது. நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, தக்வாவின் அடிப்படையில் மார்க்க சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கக்கூடிய அறிஞர்களின் கூற்றின் படி நாம் செயல்படுவது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்,
فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 7 : 157)
ஆகவே, யார் குர்ஆன் சுன்னா உடைய இல்மு கொடுக்கப்பட்டு இருக்கின்றார்களோ அவர்களிடத்தில்தான் நம்முடைய குழப்பங்களுக்குண்டான தெளிவு இருக்கின்றதே தவிர, அரசியல்வாதிகளிடத்திலோ, அல்லது அந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களிடத்திலோ அதற்கான வழிகாட்டுதல்கள் இருக்காது.
அவர்கள் மாற்றார்களை பின்பற்றி, மற்ற இயக்கங்களை கட்சிகளை பின்பற்றி, சமுதாயங்களை வழிநடத்துவார்களே தவிர, அல்லாஹ்வின் மார்க்கத்தின் படி அவர்களால் வழிகாட்ட முடியாது. எனவே அறிஞர்களை அணுகவேண்டும்.
யார் குழப்பமான காலங்களில் அறிஞர்களை பின்பற்றினார்களோ முந்தைய காலங்களிலும் சரி, பிந்தைய காலங்களிலும் சரி, அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான்.
ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குழப்பங்களை குறித்து கூறியதை படியுங்கள்.
«فَإِنَّهَا لَا تَضُرُّكَ الْفِتْنَةُ مَا عَرَفْتَ دِينَكَ , إِنَّمَا الْفِتْنَةُ إِذَا اشْتَبَهَ عَلَيْكَ الْحَقُّ وَالْبَاطِلُ فَلَمْ تَدْرِ أَيَّهُمَا تَتَّبِعُ , فَتِلْكَ الْفِتْنَةُ»
எப்படிப்பட்ட குழப்பம் வந்தாலும் சரி, அதனால் உனக்கு பிரச்சனை இருக்காது. உன்னுடைய மார்க்கத்தை நீ சரியாக அறிந்திருந்தால்.
என்ன அழகான வார்த்தை, உன்னுடைய தீனை நீ சரியாக அறிந்திருந்தால், உனக்கு எந்த குழப்பத்தாலும் பிரச்சனைகள் இருக்காது.
குழப்பத்தில் நீ எப்போது சிக்குவாய், உண்மையும் பொய்யும் உன்னிடத்தில் கலந்து விட, எது நேர்வழி, எது வழிகேடு, எது சரி, எது தவறு, என்பதை நீ புரியாமல் போகும் போதுதான்.
எப்படி நீ அல்லாஹ்வின் வேதத்திற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும், என்பதை நீ அறியாமல் போகும் போதுதான். அது உனக்கு குழப்பமாக அமையும்.
அந்த ஒரு தீனின் அறிவை பெற்றுக் கொள்ளும் போது, அந்தக் குழப்பம் அந்த தீனின் அறிவை பெற்றவர்களுக்கு, எந்தவிதமான இடையூரையும் கொடுக்க முடியாது.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 37292.
இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் உடைய கூற்றை பாருங்கள்,
ஆலிம்களுக்கும் இல்மை கற்காத மக்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை சொல்கிறார்கள்: குழப்பங்கள் வரும் போதே அறிஞர்கள் அந்த குழப்பங்களை அறிந்துகொள்வார்கள். ஜாஹில்கள் -மார்க்கத்தை அறியாதவர்கள, குழப்பங்கள் முடியும் போதுதான் அந்த குழப்பங்களை பற்றி அறிவார்கள்.
நூல் : தபகாத் குப்ரா - இப்னு ஸஃது : 8796.
ஆகவே, எந்த ஒரு முடிவாக இருந்தாலும் சரி, அறிஞர்களின் ஆலோசனையின்படி நம்முடைய உம்மத் செயல்படவேண்டும்.
அதுபோன்று, பொறுமையாக இருப்பது, சகிப்புத்தன்மையோடு இருப்பது, நிதானமாக இருப்பது, மிக அவசியமான ஒன்று.
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்,
பொய் குழப்பங்கள் வரும்பொழுது, ஆரம்பத்தில் ஒரு திடுக்கம் இருக்கும். உள்ளம் உறுதியாக இருந்தால் அந்த குழப்பங்கள் பொய்கள் எல்லாம், பின்பக்கமாக அது வந்த வழியாகவே சென்று விடும். யாரிடத்தில் கல்வியும், நிதானமும் இருக்கிறதோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.
எனவே, ஒரு முஸ்லிம் அவசரப்பட்டு விடக்கூடாது. தனக்கு வந்திருக்கக்கூடிய குழப்பம், பிரச்சனை எது? என்ன? என்பதை சரியாக விளங்கி, அந்த குழப்பங்கள் உடைய சரியான தெளிவான விளக்கங்களை அறிவதற்கு முன்பாக எந்த ஒரு முடிவையும் எடுத்து விடக்கூடாது.
அவசரமாக முடிவு எடுப்பதும் குழப்பங்களில் சிதறிவிடுவதும், குழப்பங்களில் மனதை பறிகொடுத்து விடுவதும் ஷைத்தானுடைய செயல் ஆகும் என்று இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்து அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு துஆவை இங்கே பதிவு செய்கிறார்கள்.
நூல் : மிஃப்தாஹ் தாரிஸ் ஸஆதா-இப்னுல் கய்யிம்.
ரசூலுல்லாஹ் உடைய ஒரு துஆவை படியுங்கள்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ
யா அல்லாஹ்! நான் உன்னிடத்தில் இந்த தீனில் உறுதியாக இருப்பதை கேட்கிறேன். நேர்வழியில் உள்ளம் தடுமாறாமல், உள்ளம் பிசகாமல் இருப்பதை உன்னிடம் கேட்கிறேன்.
அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 17114.
எப்படிப்பட்ட அழகிய துஆ பாருங்கள்!
இதுபோன்ற துஆக்களில் அல்அம்ர் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டால், எந்த ஒரு காரியம் அல்லாஹ்விடத்தில் நேர்வழிக்குரியதோ, எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் விரும்புகிறார்களோ, யா அல்லாஹ்! அந்த காரியத்தில் எனக்கு உறுதியை கொடு என்று பொருள்.
நாம் எடுக்கின்ற முடிவுகளில், நாம் நமது உள்ளங்களில் வருகின்ற உணர்ச்சிகளில் கோபதாபங்களில் உறுதியாக இருக்கின்றோம். அல்லாஹ்வுடைய கட்டளைகளில் உறுதியாக இருப்பதில்லை,
அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்களில் நாம் சலுகைகளை சாக்குப்போக்குகளை அல்லது விட்டு கொடுப்பவர்களாக இருக்கிறோம்.
ஆனால், நமக்குரிய கோபதாபங்கள் என்று வரும்பொழுது அதில் பிடிவாதத்தை உறுதியை கடைபிடிக்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கேட்கிறார்கள், யா அல்லாஹ்! உன்னுடைய காரியத்தில் உனது மார்க்க காரியத்தில் எனக்கு உறுதியை கொடு, நேர்வழியில் எனக்கு உறுதியை கொடு.
ஆகவே, ஒரு முஃமின் கண்டிப்பாக பொறுமையாக இருக்க வேண்டும். பல நேரங்களில், அல்லாஹ் வதஆலா மனிதர்களை கொண்டும் நம்மை சோதிப்பான். எப்படி நம்மை கொண்டு நம்மை சோதிக்கின்றானோ, நமது செல்வத்தைக் கொண்டு நம்முடைய பொருள், உடல், உயிர், குடும்பங்களில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு சோதனை வைத்திருக்கின்றான்.
அதுபோன்று, நம்மில் சிலரால் சிலரை அல்லாஹ் சோதிப்பான். அல்லாஹ் சொல்கிறான்:
وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا
எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் உங்களை துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உமது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 25 : 20)
நமது நாட்டில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் வாழக்கூடிய மக்களுக்கு, இந்த வசனத்தை அவர்கள் படித்து பார்த்தால், அவர்களுக்காக இப்போது இறக்கப்பட்ட வசனத்தை போன்றே இந்த வசனத்தை உணரலாம்.
அதுதான் இப்போது நடக்கிறது. இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆக்கப்பட்ட ஒன்று. அதற்கு என்ன செய்யவேண்டும்? பொறுமையாக இருக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய அநியாயங்களை அல்லாஹ் பார்க்காமல் இருக்கின்றானா? அல்லாஹ் மறந்து விட்டானா? அல்லது அவனுக்கு நன்மை செய்யக்கூடிய நல்லடியார்களை அல்லாஹ் கைவிட்டுவிட்டானா? என்றால் இரண்டுமே இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
مَا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ
ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து)கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. (அல்குர்ஆன் 3 : 179)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَار
(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்! (அல்குர்ஆன் 14 : 42)
இவர்கள் சூழ்ச்சி செய்ததை விட இதற்கு முன்னுள்ளவர்கள் எல்லாம் சூழ்ச்சி செய்தார்கள். அவர்களது சூழ்ச்சி ஒரு மலையையே பெய்த்து விடும் அளவிற்கு, பெரிய சூழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களுடைய முடிவு எப்படி இருந்தது?
அல்லாஹ் கூறுகிறான்:
وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ
அநியாயம் செய்தவர்கள் அதி விரைவிலேயே அறிந்துகொள்வார்கள், எங்கே அவர்கள் திரும்ப போகிறார்கள் என்று. (அல்குர்ஆன் 26 : 227)
மிகப்பெரிய அநியாயக்கார ஒரு மன்னன் இருந்தான். கொடுங்கோல் ஆட்சிக்காரன். முந்தைய காலங்களில் கொடுங்கோல் மன்னர்களை விட, ஒரு பெரிய கொடுங்கோல் மன்னர்கள் இந்த காலத்தில் உருவாகவில்லை.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறுதியில் அவனுடைய மரணத்தை எப்படி ஆக்கினான் தெரியுமா? ஒன்றுமில்லாமல் ஆக்கினான்.
நபியே! உனது இறைவனுடைய பட்டாளங்களை அவனைத் தவிர வேறு யார் அறியமுடியும்? என்று அல்லாஹ் கேட்கிறான்.
அல்லாஹ் ஒரு ஈக்கு கட்டளையிட்டான். அவ்வளவுதான்,
அது அவரின் மூக்கின் துவாரம் வழியாக அவரின் மண்டை மூளைக்குள் சென்று விட்டது. அவ்வளவுதான், அதனால் ஏற்பட்ட வலியினால், அவன் தலையில் கொட்டுகிறான், கொட்டுகிறான், மண்டையை உடைக்கிறான். இதமாக இருக்கிறது. ஓஹோ அடித்தால் தான் இந்த வலி போகும் என்று.
எல்லோரும் அவன் மண்டையில் அடிக்கிறார்கள், செருப்பால் அடிக்கிறார்கள், அடித்து, அடித்து, அவன் அந்த அடியில் சாகிறான்.
தனக்கு ஸஜ்தா செய்யும்படி கூறியவன், தன்னை ரப்பு என்று கூறியவன், அவனுடைய நிலையைப் பார்த்தீர்களா?
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா - இப்னு கஸீர்.
இன்னும் ஃபிர்அவ்னுடைய நிலையை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். இப்படி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய அல்குர்ஆனில் நமக்கு வர்ணித்து வர்ணித்து சொல்கிறான்.
இப்படிப்பட்ட அநியாயக்கார்களை எல்லாம் வரலாறு பார்த்துதான் வந்திருக்கிறது. முஃமின்கள் சந்தித்து தான் வந்திருக்கிறார்கள்.
ஆகவே, பொறுமையை அல்லாஹ் சொல்கிறான்.
உங்கள் சிலரை சிலருக்கு நாம் சோதனையாக நாம் அனுப்பினோம். நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று. (அல்குர்ஆன் 25 : 20)
இங்கே தான் நம்முடைய ஈமான் சோதிக்கப்படுகிறது நம்முடைய நிலைகளை அல்லாஹ் பார்க்கவில்லை என்று நினைக்கும்பொழுது, நம்மை அல்லாஹ் கண்டுகொள்ளவில்லை என்று எப்படி ஒரு முஸ்லிமால் என்ன முடியும்?
அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டான் என்று எப்படி ஒரு முஸ்லிமால் என்ன முடியும்? அல்லாஹ்வை தொழக் கூடியவர்கள், அல்லாஹ்விடத்தில் கையேந்தக் கூடியவர்கள் எந்த ஒரு பிரச்சனையானாலும் அல்லாஹ்விடம் மட்டும் முறையிட வேண்டும்.
لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ
நூல் : புகாரி, எண் : 247.
யா அல்லாஹ் உன்னிடமிருந்து நாங்கள் எங்கும் ஓட முடியாது, தப்பிக்க முடியாது, எந்த தீமையில் இருந்தும் நாங்கள் எங்கும் சென்று தப்பிக்க முடியாது, உன்னிடமே தவிர. நீதான் எங்களை பாதுகாக்க கூடியவன் என்று அல்லாஹ்விடத்தில் ஒதுங்கும் போது, அதற்குரிய பாதுகாப்பை அல்லாஹ் ஏற்படுத்தாமல் விடுவானா?
இன்னொரு முக்கியமான ஒன்று, முஃமின்கள் இதுபோன்ற நேரங்களில் அவர்கள் செய்யக்கூடியது துஆ.
இன்று, அதிகமான நேரங்களில் நாம் இந்த துஆவை விட்டுவிடுகிறோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குழப்பமான காலங்களில் அதிகமாக அவர்கள் செய்தது துஆக்களைதான்.
அந்த துஆ எப்படி இருக்க வேண்டும் என்றால், அல்லாஹ்வின் மீது மிக நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ
ஒரு நிர்ப்பந்தமான நிலைக்கு ஆளானவனுடைய துஆவிற்கு என்னை தவிர யாராவது பதில் அளிப்பவர்கள் இருக்கின்றீர்களா? (அல்குர்ஆன் 27 : 62)
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதுபோன்ற குழப்ப காலங்களில் நமக்கு துஆவை கற்றுத் தந்திருக்கிறார்கள்.
அபூஹுரைரா அவர்களுடைய கூற்றை இமாம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்கிறார்கள்.
«تَكُونُ فِتْنَةٌ لَا يُنْجِي مِنْهَا إِلَّا دُعَاءٌ كَدُعَاءِ الْغَرِيقِ»
குழப்பங்கள் வரும் வந்து கொண்டே இருக்கும். அந்த குழப்பங்கங்களில் இருந்து உங்களை பாதுகாப்பது துஆவை தவிர வேறு எதுவும் இருக்காது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸன்னப் இப்னு அபீ ஷைபா, எண் : 37749.
இன்று, துஆவிற்கு நாம் செலவழிக்கக்கூடிய நேரங்கள் மிகக் குறைவாகி விட்டது. வீண் பேச்சுகளுக்காகவும், பொய்யான புரட்டான செய்திகளை பரப்புவதற்காகவும், இன்னும் இந்த குழப்பங்களில், மேலும் மேலும் சிக்குவதற்காக நாம் செலவழிக்கின்ற நேரங்கள் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, அல்லாஹ்விடத்தில் திரும்பி, கைதூக்கி, தனிமையில் சில துஆக்களை கேட்பதற்காக முஸ்லிம்களிடத்தில் நேரம் இல்லாமல் இருப்பது மிக வருத்தமான ஒரு செய்தி.
அந்த துஆ எப்படி இருக்க வேண்டும்? ஒருவன் நடுகடலில் பயணம் செய்கிறான். கப்பல் உடைந்து விட்டது. எல்லோரும் பிரிந்து சென்று விட்டார்கள். அழைத்தாலும் யாரும் அழைப்புக்கு பதில் கொடுப்பதற்கு அங்கு யாரும் இல்லை.
இன்னும் சில வினாடிகளில் தானும் மூழ்கி விடுவோம் என்ற அபாயத்தில் இருக்கக்கூடிய ஒரு மனிதன், நடுக்கடலில் தத்தளித்து இருக்கக்கூடிய ஒருவன், எப்படி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பானோ, அந்த துஆவை தவிர எது உங்களை தப்பிக்க வைக்காது. அதுபோன்று துஆ செய்ய வேண்டும்.
நுனி நாவிலிருந்து வரக் கூடிய துஆ அல்ல, கல்பில் இருந்து வரக்கூடிய துஆ. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
«تَعَوَّذُوا بِاللهِ مِنَ الْفِتَنِ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ»
முஃமின்களே! அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடுங்கள்; குழப்பங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும், அது வெளிப்படையாக இருந்தாலும் சரி, மறைவாக இருந்தாலும் சரி,
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2867.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இப்படி துஆ கேட்பார்கள்;
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآَجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ
யா அல்லாஹ்! நன்மையை உன்னிடத்தில் கேட்கிறேன், வெளிப்படையானதையும், மறைவானதையும் அருகில் உள்ளதையும், தூரத்தில் உள்ளதையும்.
யா அல்லாஹ்! தீமைகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், அது வெளிப்படையாக இருந்தாலும், மறைவாக இருந்தாலும், அது சமீபத்தில் இருந்தாலும், அது தூரமாக இருந்தாலும்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹமத், எண் : 25019.
இப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழப்பங்களிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்லிய ஏராளமான துஆக்களை நாம் ஹதீஸ் நூல்களில் பார்க்கிறோம்.
இங்கே ஒரு சம்பவத்தை பதிவு செய்கிறோம். இமாம் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் தாபியீன்களில் மிகப்பெரிய ஒரு இமாமாக இருந்தவர்கள். அவர்களுடைய காலத்தில் ஒரு அமீர் -கவர்னர் இருந்தார்.
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்று நீங்களெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இஸ்லாமிய வரலாற்றில் அப்படி ஒரு கொடுங்கோல் அமீர் வந்ததே இல்லை.
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் என்ற ஐந்தாவது கலீஃபா சொல்கிறார்கள், எல்லா உம்மத்தும் தங்களுடைய உம்மத்தில் உள்ள ஒரு அநியாயக்காரர்களை கொண்டுவந்தால், நாம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்பை கொண்டு வந்தால் போதும்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நல்லவர்களை கொண்டவன். அந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுப் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள்.
நூல் : அல்பைஹகி அல்பிதாயா வன்னிஹாயா : 9/256
அப்போது இமாம் ஹஸனுல் பஸரீ அவர்கள் சொன்னார்கள், ஹஜ்ஜாஜ் அல்லாஹ்வுடைய அதாபாக இருக்கின்றான். இப்போது நமக்கும் சரி, அல்லாஹ்வுடைய அதாபு வந்துவிட்டது.
நீங்கள் உங்கள் கரத்தால் சண்டையிட்டு, அல்லாஹ்வுடைய அதாபிலிருந்து தப்பிக்க முடியுமா? ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் இவன் அல்லாஹ்வுடைய அதாப், அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம் மீது சாட்டப்பட்ட ஒரு சோதனையாக, ஒரு தண்டனையாக இருக்கின்றான்,
அப்படி என்றால் அல்லாஹ்வுடைய அதாபை, உங்களது கரங்களால் நீங்கள் தடுத்துக்கொள்ள முடியுமா?
உங்களது கரங்களால் அல்லாஹ்வுடைய அதாபை தடுக்க முயற்சிக்காதீர்கள். அல்லாஹ்விடத்தில் பணிந்து பயந்து உருகி துஆ கேளுங்கள்.
நூல் : தபகாத் இப்னு ஸஃது = 7/164
அடுத்து, குர்ஆனின் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ
நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை. (அல்குர்ஆன் 23 : 76)
வானங்களில் இருந்து வரக்கூடிய மழையோ, அல்லது வீசக்கூடிய காற்றோ, அல்லது பூமியில் ஏற்படக்கூடிய பூகம்பங்களோ, இது மட்டுமல்ல அல்லாஹ்வுடைய தண்டனை என்பது.
அநியாயக்கார அதிகாரிகளை, அநியாயக்கார அரசர்களை, இந்த மக்களின் மீது காட்டுவதும் அல்லாஹ்வுடைய தண்டனைகளில் ஒரு தண்டனை ஆகும்.
ஆகவே, இதுபோன்ற நேரங்களில் நாம் நமக்குள் கருணை உள்ளவர்களாக, அன்பு உள்ளவர்களாக, உதவி ஒத்தாசை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
நம்மில் இல்லாதவர்களுக்கு வாரி வழங்குபவர்களாக, நம்முடைய தேவைகளை சுறுக்கிக் கொண்டு, நமக்கு மத்தியில் கஷ்டப்படக் கூடிய, சிரமப்படக் கூடியவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நாம் அவர்களுக்கு இரக்கத்தோடு, கருணையோடு, பரஸ்பர அன்போடு, நம்மால் முடிந்த அளவிற்கு, நமது சமுதாய மக்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.
இதைக்கொண்டு, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டிப்பாக நமக்கு உதவி செய்வான். கண்டிப்பாக அவனுடைய கருணையை நம்மீது சாட்டுவான். நம்மீது கருணை காட்டக் கூடிய நல்லவர்களை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இதற்கு மாற்றமான ஒரு சூழ்நிலைகளில் நாம் செல்லுவோமேயானால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அது நன்மையை தராது, மேலும் மேலும் தீமைகளையும் பிரச்சனைகளையும் தான் அதிகரிக்கும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, நம்மையும் நமது சமுதாய மக்களையும், நமது நாட்டு மக்களையும், அநியாயக்கார ஒவ்வொரு அதிகாரிகளிடமிருந்தும், அரசனிடமிருந்தும், ஆட்சியாளர்களிடமிருந்தும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
நல்ல உள்ளங்களை உடைய, கருணை காட்டக் கூடிய, மக்களை வழிநடத்தக் கூடிய, நல்ல ஆட்சியாளர்களிடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நாட்டை ஒப்படைப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/