HOME      Khutba      உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 4-4 | Tamil Bayan - 447   
 

உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 4-4 | Tamil Bayan - 447

           

உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 4-4 | Tamil Bayan - 447


உள்ளங்கள் இறுகுவது ஏன்?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளத்திற்காக உத்தம நபியின் உன்னத துஆக்கள் - உள்ளங்கள் இறுகுவது ஏன்? (அமர்வு 4-4)
 
வரிசை : 447
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 17-03-2017 | 18-06-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தை உங்களுக்கு நினைவூட்டியவனாக, நம்முடைய வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை பயந்து, அல்லாஹ்விற்கு பணிந்து, அவனுடைய கட்டளைகளை பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரைய ஆரம்பம் செய்கிறேன்.
 
இதற்கு முந்திய சில அமர்வுகளில் நம்முடைய உள்ளத்தை எப்படி மென்மையாக அல்லாஹ்வுடைய அச்சத்தால் பசுமையானதாக வைத்திருப்பது? என்ற தலைப்பின் கீழ் குர்ஆனுடைய வசனங்களின் வெளிச்சத்திலும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களின் வெளிச்சத்திலும் பல முக்கியமான விஷயங்களை பார்த்தோம்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய வேதத்தின் ஒவ்வொரு வசனத்தைக் கொண்டும் அவனுடைய தூதர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு ஹதீஸைக் கொண்டும் நற்பலன் பெறக்கூடிய நன்மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
அதை தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உள்ளத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், இந்த உள்ளத்தின் தன்மைகளுக்கு அவர்கள் கொடுத்த அக்கறை, அதுபோன்றுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆக்களின் வாயிலாகவும் உள்ளம் சம்மந்தப்பட்ட சீர்திருத்தத்திற்கு அவர்கள் காட்டிய அக்கறை ஈடுபாட்டை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
 
உங்களுக்கு நன்றாக தெரியும்; நமக்கு எது அதிகம் தேவையோ அதை அல்லாஹ்விடத்தில் அதிகமாக கேட்போம். பொதுவாக இந்த உலகம் நமக்கு அதிகம் தேவை, இந்த உலகம் இல்லையென்றால் நம்மால் எதையும் செய்ய முடியாது என்று நன்றாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.
 
ஆகவே, அதிகமாக இந்த உலகத்திற்காக கேட்கிறோம். 
 
அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2 : 201)
 
இந்த துஆ அதிகமான மக்களுக்கு பிடிக்கும். காரணம், இந்த துஆவில் அல்லாஹ் தஆலா துன்யாவை முதலாவதாக கூறியிருக்கிறான். அதிகமான மக்கள் துன்யா வேண்டும் என்று கூறும்பொழுது இந்த துஆவை ஆதாரமாக காட்டுவதுண்டு. 
 
அதற்கு பிறகு தான், மறுமையின் நன்மைக்கு அல்லாஹ் கேட்க சொல்லியிருக்கிறான் என்று தாங்கள் துன்யாவிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்திற்கு இந்த துஆவை ஆதாரமாக கூறுவதுண்டு. 
 
எந்தளவு துன்யா நமக்கு முக்கியம் என்பதை புரிந்து வைத்திருக்கிறோமோ அந்த அளவு மறுமை நமக்கு முக்கியம் என்பதை புரிந்து வைத்திருக்கிறோமா?
 
துன்யா நமக்கு எந்தளவு தேவை என்பதை விளங்கி வைத்திருப்பதை போன்று, தீன் நமக்கு தேவை என்பதை விளங்கி வைத்திருக்கிறோமா? 
 
துன்யாவில் உடல் ஆரோக்கியம், செல்வம், வசதி நமக்கு எந்தளவு முக்கியம் என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோமோ அந்தளவுக்கு நமது தீனில் தக்வா, இபாதத், நம்முடைய ஈமான், நற்பண்புகள் நமக்கு அவசியம் என்று நாம் உணர்ந்திருக்கிறோமா?
 
எந்த துஆவை நாம் துன்யாவுடைய எண்ணத்தில் கேட்கிறோமோ, அதே துஆவை நம்முடைய சலஃபுகளும் கேட்டார்கள். 
 
ஆனால், அவர்கள் யா அல்லாஹ்! ஈமானையும் நல்ல அமல்களுக்குரிய தவ்ஃபீக்கையும் கொடு என்று கேட்டார்கள். மறுமையில் அழகியதை கொடு என்று கேட்டார்கள். யா அல்லாஹ்! சொர்க்கத்தை கொடு என்ற எண்ணத்தில்  கேட்டார்கள்.
 
கேட்கப்படுகின்ற துஆ ஒன்று. ஆனால், மனதில் நாம் எண்ணக்கூடிய எண்ணம் வேறாக இருக்கிறது. நாம் துன்யாவில் நல்லதை கொடு என்று கேட்கும் பொழுதே, ஒரு பெரிய மாளிகை கண்ணுக்குள் வந்துவிடும், நிறைய கட்டுக்கட்டாக பணம் கண்ணுக்குள்ளே வந்து விடும், ஹாரூனை போன்ற வசதி, ஹாமானை போன்ற, ஃபிர்அவ்னை போன்ற ஒரு பெரிய ஆட்சி அதிகாரம் சொத்து சுகம் நமக்கு கண்ணுக்கு முன்னால் வந்து விடுகிறது.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! எந்த துன்யாவை நாம் கேட்கிறோமோ, அந்த துன்யாவில் எனக்கு சோதனையை வைத்து விடாதே! செல்வத்தை கேட்பதில் தவறில்லை. யா அல்லாஹ்! அந்த செல்வத்தை என்னுடைய ஃபித்னாவிற்கு காரணமாக ஆக்கி விடாதே! நான் தடம் புரளுவதற்கு காரணமாக ஆக்கிவிடாதே! என்று கேட்க வேண்டும்.
 
காரணம், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி கேட்க சொன்னார்கள்? யா அல்லாஹ்! என்னை நான்  உனது மார்க்கத்தை மீறும்படி செய்யக் கூடிய செல்வத்திலிருந்து பாதுகாப்பாயாக! 
 
நூல் : முஸ்னது அபீ யஃலா 4352, (ஹதீஸ் கொஞ்சம் பலவீனமானது)
 
இங்கே தான் நாமும் அந்த சிறப்பிற்குரிய முன்னோர்களும் வித்தியாசப்படுகிறோம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நஃப்ஸின் சீர்திருத்தத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவர்களின் துஆக்களின் வாயிலாக நாம் புரிகிறோம். 
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள். அந்த துஆவினுடைய தொடர்ச்சியில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட மனத்தூய்மை உள்ளவர் யார் இருக்க முடியும்? ஒரு மனிதர் நபியாக தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் சுத்தமாக்கப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு தான் நபியாக தேர்ந்தெடுக்கப்படுவார். அல்லாஹு தஆலாவுடைய நியதி அப்படி தான்.
 
அவரை பக்குவப்படுத்தி, அவருடைய உள்ளத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கி, அதற்கு பிறகுதான் அல்லாஹ் தஆலா நபித்துவம் என்ற தான் பேசுகின்ற தகுதியை அவருக்கு வழங்குகிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? நபித்துவத்திற்கு முன்பே அவர்களுடைய கல்பை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ஜம் ஜம் நீரைக் கொண்டு கழுவினார்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 162.
 
கழுவி நப்ஸில் இருக்கக்கூடிய ஷைத்தானின் பங்கை எடுத்து வெளியே எரிந்தார்கள். இப்படி பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு நபி அவர்கள் கேட்கின்ற துஆவை கவனியுங்கள். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
 
وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ
 
யா அல்லாஹ்! எனது கல்பை தவறுகளை விட்டு, குற்றங்களை விட்டு,  தீய எண்ணங்களை விட்டு நீ மிக சுத்தமாக்கி வை. (1)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 6368.
 
நம்முடைய அமல்கள் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. அந்த அமல்கள் எந்த உள்ளத்திலிருந்து உருவாகிறதோ அந்த உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும்.
 
சில நேரங்களில் சில நிர்பந்தத்தினால் நாம் அமல்கள் செய்வதுண்டு. அந்த சூழ்நிலையில் நாம் வந்துவிட்டோம் என்பதால் அந்த நல்ல அமல்களில் நாம் ஈடுபடுவதுண்டு. 
 
ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய கல்பு அந்த அமல்களில் ஈடுபடாது. உதாரணத்திற்கு ஒரு மஸ்ஜிதிற்கு வந்துவிடுகிறார்கள். எல்லோரும் தொழுகிறார்கள். அவரும் எழுந்து தொழுகிறார். எல்லோரும் பயான் கேட்கிறார்கள். அவரும் பயான் கேட்கிறார். 
 
அந்த ஒரு சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவருடைய உடல் உறுப்புகள் மற்றவர்கள் செய்யக்கூடிய அமல்களை அவரும் செய்கிறார். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய உள்ளம் அந்த இபாதத்தில் ஈடுபட்டிருக்குமா? என்றால் ஈடுபட்டிருக்காது.
 
உள்ளம் எங்கேயாவது வெளியில் இருக்கும். எதை அவர் மனதால் விரும்பினாரோ, எதன் மீது நேசம் இருக்கிறதோ, எது அவர் மனதில் ஒரு மதிப்பு மிக்கதாக பதிவாகியிருக்கிறதோ  அதுதான் அவருடைய  சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும். 
 
இமாம் பேசக்கூடிய பேச்சு அவர் சிந்தனையில் ஓடாது. இமாம் ஓதக்கூடிய குர்ஆன் வசனங்கள் அவரது சிந்தனையில் ஓடாது. அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படுகின்ற விஷயங்கள் அவருடைய சிந்தனையில் ஓடாது. 
 
இமாமை பார்ப்பதை போன்று இருக்கும், இமாமிற்கு பின்னால் தொழுவதை போன்று இருக்கும். இமாம் சொல்லக்கூடிய உபதேசங்களை அவர் கேட்பது போன்று இருக்கும். ஆனால், அவருடைய சிந்தனையின்  திரையில் எது அவருடைய மனதில் இருக்குமோ அது தான் ஓடிக் கொண்டிருக்கும். 
 
ஆகவேதான், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த துஆவின் ஆழத்தை நம்மால் புரிய முடிகிறது. 
 
எப்படி, எனது அமலை சீர்திருத்து என்று கேட்டார்களோ அதே இடத்தில் அவர்கள் யா அல்லாஹ்! என் கல்பை தவறுகளிலிருந்து சுத்தப்படுத்து என்று கேட்கிறார்கள்.
 
உள்ளம் தவறுகளிலிருந்து சுத்தப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் இபாதத்தினுடைய ருசி ஈமானுடைய ருசி தெரிய வரும். அந்த இபாதத்தில் அவருடைய உடலோடு, உள்ளத்தோடு அவர் ஈடுபடுவார். அந்த உள்ளத்தில் தான் ஈமானுடைய ஒளி இறங்கும்.
 
அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
 
وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ
 
யா அல்லாஹ்! எப்படி ஒரு வெண்மையான ஆடையை அழுக்குகளை விட்டு சுத்தப்படுத்துகிறாயோ அது போன்று என்னுடைய உள்ளத்தை வெண்மையாக ஆக்கி விடு. (1)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 6368.
 
இந்த துஆவில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த கல்பை கறைபடுத்தக்கூடிய விஷயத்திலிருந்து, கல்பை அழுக்காக்கக்கூடிய விஷயத்திலிருந்து எவ்வளவு ஒரு மனஓர்மையோடு, ஒரு ஈடுபாட்டோடு, பெரிய ஒரு அக்கறையோடு அது தனக்கு தேவை என்பதை அவர்கள் உணர்த்தும் விதமாக அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டிருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்து கேட்கிறார்கள்:
 
وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ
 
யா அல்லாஹ்! எனக்கும் என்னுடைய பாவங்களுக்கும் இடையில் நீ தூரத்தை ஏற்படுத்து, எப்படி கிழக்கிற்கும் கேற்கிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்திருக்கிறாயோ  அதுபோன்று பாவங்களிலிருந்து என்னை தூரமாக்கி வை. என்னிலிருந்து பாவங்களை தூரமாக்கி வை.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 6368.
 
இங்கே முக்கியமான இரண்டு விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்துகிறார்கள்.
 
1.  நம்முடைய எண்ணங்களை சுத்தமாக வைத்திருப்பது. தீய எண்ணங்கள், தவறான எண்ணங்கள் உள்ளத்தில் வந்துவிடாமல் அந்த உள்ளத்தை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். 
 
அப்படி ஏதாவது அறிந்தோ அறியாமலோ ஒரு தீய சிந்தனை வருகிறதென்றால், உடனே அல்லாஹ்விடத்தில் அந்த சிந்தனையிலிருந்து பாதுகாப்பு தேடி நன்மையை சிந்திப்பதற்கு நம்முடைய நஃப்ஸை ஈடுபடுத்தி விட வேண்டும். நன்மையின் பக்கம் நம்முடைய உள்ளத்தை திருப்பி விட வேண்டும். 
 
இந்த உள்ளத்தில் கெட்ட எண்ணத்திற்கு தீய சிந்தனைக்கு இடம் கொடுத்து, அசிங்கமான ஆபாசமான எந்த ஒரு செயலாக, சொல்லாக அல்லது எந்த ஒரு காரியமாக இருக்கட்டும், அதற்கு இந்த உள்ளத்தில் இடம் கொடுத்து, அதை நாம் தொடர்ந்து சிந்திக்க ஆரம்பித்தால், ஒரு பெரிய விஷம் உடலில் ஏறினால் எப்படி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக கெட்டுப் போக ஆரம்பிக்குமோ அது போன்று தான் இந்த தீய சிந்தனை உள்ளத்தில் எந்தளவு இடம் பிடிக்குமோ அந்தளவு அதற்கடுத்து அமல்கள் கெட்டுப்போக ஆரம்பிக்கும். 
 
அதிகமாக உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும். நல்ல செல்வத்தை ஹலாலான வழியில் அடைய வேண்டும் என்ற ஆசை தப்பு இல்லை. ஆனால், செல்வம் தனக்கு அதிகமாக வேண்டும் என்பதற்காக, எப்படியாவது நாம் சீக்கிரம் பணக்காரனாக ஆகவிட வேண்டும் என்ற யோசனையானது அவனுடைய உள்ளத்தில் திரும்ப திரும்ப வருகிறது.
 
அவன் பார்க்கிறான், என்னுடைய வருமானம் மிகக் குறைவாக இருக்கிறது. நான் மாதம் சம்பளம் வாங்கினால் எனக்கு இவ்வளவு தான் கிடைக்கிறது. ஒரு இடத்தில் வேலை செய்யக்கூடிய மனிதன் இந்த எண்ணத்தை அவன் திரும்ப திரும்ப உள்ளத்தில் கொண்டு வருகிறான். பணம் வேண்டும், காசு வேண்டும், செல்வந்தனாக ஆக வேண்டும் என்று.
 
இதன் விளைவு அவனை தவறான வழிக்கு கொண்டு போய்விடுகிறது.  அந்த தவறான ஆசையானது அவனை தவறான செயலுக்கு தள்ளி விடுகிறது. 
 
இது போன்றுதான் ஆபாசமாக இருக்கட்டும், கெட்ட எண்ணங்களாக இருக்கட்டும், அசிங்கமான சிந்தனைகளாக இருக்கட்டும். இந்த சிந்தனைகளுக்கு அவன் இடம் கொடுக்க, இடம் கொடுக்க அதற்கு ஒரு ஹராமான வழியை அவன் தேட ஆரம்பித்து விடுவான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்தால் நம்முடைய வாழ்க்கையில் நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். 
 
உள்ளத்தில் ஏற்படக் கூடிய ஒரு தவறான எண்ணத்திற்கு நாம் இடம் கொடுத்து, அந்த எண்ணத்தை வளர்க்க வளர்க்க அந்த எண்ணமானது நம்முடைய செயலை கெடுக்க ஆரம்பித்து விடுகிறது.
 
ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலாவதாக அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடினார்கள். 
 
யா அல்லாஹ்! என் உள்ளத்தை சுத்தமாக்கி வை. சிறிய, பெரிய எல்லா விதமான குற்றங்களிலிருந்தும் என்னை சுத்தமாக்கி வை என்று. 
 
சுத்தம் எந்தளவு வேண்டும் என்பதையும் அல்லாஹ்வுடைய  தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள். இங்கேயும் நாம் நம்மை உணர வேண்டும்.
 
நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே ஒரு எல்லை வைத்திருக்கிறோம். நான் இதை செய்தால் போதும், இதுவே எனக்கு ரொம்ப பெரிய விஷயம். நாமெல்லாம் என்ன அவ்லியாவா? அந்த காலத்தில் இருந்த பெரிய ஸஹாபாக்கள் தாபியீன்களா? என்னுடைய பலவீனத்திற்கு நான் இந்த அளவு நல்லவனாக இருந்தால் போதும்.
 
இப்படியாக நமக்கு நாமே ஒரு எல்லையை வைத்துக் கொள்கிறோம். இது தான் நமக்கு பெரிய பிரச்சனையை உருவாக்கி விடுகிறது. 
 
இப்படியாக நாம் நமக்கு நாமே ஒரு தக்வாவிற்கு, அமல்களுக்கு ஒரு எல்லையை வைத்துக் கொண்டே அந்த சின்ன சின்ன தவறுகளுக்கு வழி விடுகிறோம். 
 
அந்த சின்ன சின்ன தவறுகள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பிப்போம். பயந்து பயந்து செய்ய ஆரம்பிப்போம்.
 
ஆனால், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இப்படியாக அந்த சின்ன தவறுகளில் மனிதன் ஈடுபட்டு ஈடுபட்டு நாளடைவில் அவனுடைய நேரங்களில் அது சூழ்ந்து கொள்ளும். அவனுடைய உள்ளத்தை அது ஈடுபடுத்திக் கொள்ளும். கடைசியில் அந்த சிறிய தவறுகள் பெரிய தவறுகளாக ஆகி அந்த மனிதனுடைய எண்ணங்கள், அந்த மனிதனுடைய சிந்தனைகள், செயல்களை அப்படியே ஆக்கிரமித்துக் கொள்ளும்.
 
கடைசியில் வலையில் சிக்கிக் கொண்டு தவிக்கக் கூடிய மீன்களை போல,  பறவைகளை போல சின்ன தவறுகளில் சிக்கிக் கொண்டு கடைசியில் பெரிய பாவங்களுக்கு அவன் தள்ளப்பட்டுவிடுவான். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
எனவேதான், ஒரு விஷயம் தவறு என்றால் அது சிறியதா, பெரியதா என்று நாம் பார்க்கக் கூடாது. எப்பொழுது தவறு என்று தெரிகிறதோ அதை விடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 
எனவேதான், ஸலஃபுகள் கூறுவார்கள், நீ செய்யக் கூடிய பாவம் சிறியது என்பதை பார்க்காதே! நீ யாருக்கு மாறு செய்கிறாய் என்பதை பார். 
 
படைத்த ரப்புக்கு அர்ஷின் அதிபதிக்கு நீ மாறு செய்கிறாய். எவ்வளவு பெரிய விஷயம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
 
இரண்டாவது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், யா அல்லாஹ்! என்னுடைய செயல்களை நீ பாதுகாப்பாயாக! பாவத்திலிருந்து, குற்றங்களிலிருந்து என்னை நீ தூரமாகவே வைத்திருப்பாயாக! என்று கேட்டார்கள்.
 
இங்கே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நஃப்ஸிற்கு, இந்த கல்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நம்மால் புரிய முடிகிறது. 
 
காரணம், இந்க நஃப்ஸ், கல்பின் மீது தான் அல்லாஹ்வின் ஈமான் அமைந்திருக்கிறது, அமல்கள் அமைந்திருக்கின்றன. அக்லாக்குகள் அமைந்திருக்கின்றன. மார்க்க சட்டங்களெல்லாம் அந்த கல்பின் மீது தான் இறங்கும். 
 
அதுபோன்று தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இன்னும் ஒரு துஆவை இமாம் அபூதாவூது ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். 
 
اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
 
வானங்களை, பூமியை படைத்தவனே! மறைவான விஷயங்களையும் வெளிப்படையான விஷயங்களையும் அறிந்தவனே! எல்லா பொருள்களுடைய ரப்பே!  எல்லா பொருள்களுடைய பேரரசனே! உன்னை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸுடைய தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்.
 
அறிவிப்பாளர் : அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 5067, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
இன்று நாம் மற்ற எல்லோருடைய கெடுதிகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறோம். யார்மூலம் நமக்கு தீங்குகள், பிரச்சனைகள், தொந்தரவுகள் ஏற்படுமென்று பயப்படுகிறோமோ அவர்களிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறோம். 
 
ஆனால், நானே எனக்கு தீமை செய்வேன் என்பதை, என்னால் எனக்கு பிரச்சனை இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். நானே எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வேன். நானே எனக்கு ஒரு எதிரி என்பதை மறந்து விடுகிறோம். 
 
ஆகவேதான், இப்படிப்பட்ட துஆக்களை நாம் நினைப்பதே இல்லை. நம்முடைய ஸலஃபுகள் கூறுவார்கள், உன்னுடைய எதிரிகளில் மிகப் பெரிய எதிரி, எது உன் இரண்டு புஜங்களுக்கு நடுவில் இருக்கிறதோ அது தான். உன்னுடைய ஆசை, உன்னுடைய நஃப்ஸ் இது தான் மிகப் பெரிய எதிரி. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகவே தான் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸின் தீங்கிலிருந்து நான் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று.
 
நபிமார்கள் அல்லாஹ்விடத்தில் கேட்ட துஆவை நாம் கவனிக்க வேண்டும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள்.
 
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7 : 23)
 
நமது நஃப்ஸ் தூண்டி நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு குற்றமும் நமக்கு நாமே நாம் செய்துக் கொள்ளக் கூடிய அநியாயம் என்பதை மறந்து விடக் கூடாது. 
 
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் எவ்வளவு பெரிய சிறந்த நல்லடியார். அல்லாஹ்வுடைய நபிமார்களில் ஒருவர். அவர் மூலமாக ஒரு தவறு ஏற்பட்ட பொழுது அவர்கள் கூறினார்கள்:
 
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
 
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 21 : 87)
 
ஒரு தவறை செய்பவன், ஒரு குற்றத்தை செய்பவன், அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒரு கட்டளையை மீறக் கூடியவன், அல்லாஹ் தடுத்த பாவத்தில் ஒரு பாவத்தை செய்யக்கூடியவன் அவன் தனக்கு தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். அவன் தனக்கு தானே அநியாயம் செய்து கொள்கிறான்.
 
ஆகவேதான், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸின் தீங்கிலிருந்து, அதாவது என்னை எனது நஃப்ஸ் தவறான விஷயங்களின் பக்கம் தூண்டுவதிலிருந்து, தவறான விஷயங்களின் பக்கம் இழுத்து செல்வதிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! 
 
என்னுடைய நஃப்ஸ் என்னென்ன தவறுகளை விரும்புகிறது? என்னென்ன நன்மைகளில் அலட்சியம் செய்கிறது? அல்லாஹ்வுடைய கட்டளைகளிலிருந்து எதை மீறுகிறது? என்பதெல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். 
 
இப்போது நாம் அந்த நஃப்ஸை அல்லாஹ்வுடைய பாதுகாப்பை கொண்டு பாதுகாக்காமல் அப்படியே விட்டு விட்டால் அந்த நஃப்ஸ், கடிவாளம் இடப்படாத ஒரு முரட்டுக் குதிரையின் மீது ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டால் என்ன நிலை ஏற்படுமோ அந்த நிலை தான் ஏற்படும். 
 
இந்த நஃப்ஸுடைய தீங்கை நாம் உணராமல், இந்த நப்ஸுடைய தீங்குகளிடமிருந்து பாதுகாப்பு தேடாமல் இந்த நஃப்ஸை அப்படியே விட்டுவிட்டால் அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்து விடும். பாவங்களில் இவை எல்லை மீறத் தூண்டி விடும். கடைசியில் (அல்லாஹ் பாதுகாப்பானாக!) நரகத்தில் முகம் குப்புற விழும் பொழுது தான் இந்த மனிதன் கவலைப்படுவான், கைசேதப்படுவான். 
 
ஆனால், அப்போது கைசேதப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவேதான், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த துஆவை கேட்டுவிட்டு நமக்கு கூறுகிறார்கள்.
 
நீங்கள் காலையிலும் இந்த துஆவை கேளுங்கள். மாலையிலும் இந்த துஆவை கேளுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன்பும் இந்த துஆவை கேளுங்கள் என்று கூறினார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 5067, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
இந்த விஷயம் எவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்திருந்தால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலையிலும் இந்த துஆவை கேளுங்கள், மாலையிலும் இந்த துஆவை கேளுங்கள் என்று கூறியிருப்பார்கள்.
 
அதுபோன்று, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கக் கூடிய மற்றொரு துஆவை கவனியுங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதும் இப்படி சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
 
«إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، كَقَلْبٍ وَاحِدٍ، يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ»
 
அடியார்களுடைய உள்ளங்கள் ரஹ்மானுடைய விரல்களின் இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கிறது. அவன் எப்படி வேண்டுமானாலும் அந்த உள்ளத்தை புரட்டுவான் என்று கூறிவிட்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ கேட்பார்கள். 
 
உள்ளங்களை புரட்டக்கூடியவனே! எங்களுடைய கல்புகளை உன்னுடைய வணக்க வழிபாட்டில் உறுதிபடுத்தி வை! 
 
அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2654.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பயத்தை பாருங்கள். காரணம், உள்ளம் தடுமாறும், உள்ளம் புரண்டு கொண்டே இருக்கும், உள்ளம் மாறிக் கொண்டே இருக்கும்.
 
இதே கருத்துடைய இன்னொரு துஆவில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
 
فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ
 
யா அல்லாஹ்! என்னை எனது நஃப்ஸின் பக்கம் நீ என்னை ஒப்படைத்து விடாதே!  (வேறு யார் பக்கமும் என்னை ஒப்படைத்து விடாதே!) என் காரியத்தை எல்லாம் நீயே பொறுப்பாளனாக இருந்து எனக்கு சீர்படுத்தி கொடுப்பாயாக! 
 
அறிவிப்பாளர் : அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 5090.
 
இன்னொரு துஆவை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களில் ஒருவர். அவர்களுடைய வீட்டில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கியிருக்கிறார்கள்.
 
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ்வுடைய அமலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீட்டில் அவரும் தங்கியிருக்கிறார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமல்களை பார்க்கிறார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் எழுந்தார்கள், தங்களுடைய தேவைகளை நிறைவேற்றினார்கள். உளூ செய்தார்கள், அதற்கு பிறகு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுந்து துஆ கேட்கிறார்கள்.
 
ஹதீஸினுடைய அந்த வார்த்தைகளை பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிற்கு வருகிறார்கள். தேவைகளை நிறைவேற்றினார்கள், உளூ செய்து விட்டு தூங்கினார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுகிறார்கள். தூக்கத்திலிருந்து எழுந்தவுடனையே அவர்கள் செய்யக்கூடிய முதலாவது அமல் துஆ தான்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆவை கொண்டு தான் தங்கள் வாழ்நாளை ஆரம்பித்திருக்கிறார்கள், தங்களுடைய விழிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். 
 
இரவின் அந்த நடுப்பகுதியில் இரவு தொழுகைக்காக வேண்டி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுந்த பொழுது அவர்கள் கேட்கின்ற துஆவை கவனியுங்கள்.
 
«اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَفَوْقِي نُورًا، وَتَحْتِي نُورًا، وَأَمَامِي نُورًا، وَخَلْفِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًا»
 
யா அல்லாஹ்! என்னுடைய உள்ளத்தில் வெளிச்சத்தை கொடு, எனது கல்பில் ஒளியை ஏற்படுத்து, என்னுடைய பார்வையில் ஒளியை ஏற்படுத்து, என்னுடைய செவியில் ஒளியை ஏற்படுத்து, எனது வலது பக்கத்தில் ஒளியை ஏற்படுத்து, எனது இடது பக்கத்தில் ஒளியை ஏற்படுத்து, எனக்கு மேல் புறத்தில் ஒளியை ஏற்படுத்து, எனக்கு கீழ் புறத்தில் ஒளியை ஏற்படுத்து.
 
எனக்கு முன்னால் ஒளியை ஏற்படுத்து, எனக்கு பின்னால் ஒளியை ஏற்படுத்து, என்னை சுற்றி எப்பொழுதும் ஒளியை ஏற்படுத்தி வை. 
 
அறிவிப்பாளர் : மைமூனா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 6316.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தக்வா என்ற ஒளியை கூறினார்கள். அல்லாஹ்வுடைய திக்ரு என்ற நினைவின் ஒளியை கூறினார்கள். அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்ற நினைவை கேட்கிறார்கள்.
 
அதனுடைய முதல் வார்த்தை, என்னுடைய கல்பில் எனக்கு ஒளியை ஏற்படுத்து. எத்தனையோ பேர்களுடைய முகங்கள் வெள்ளையாக இருக்கும். ஆனால், அவர்களுடைய கல்பு கருப்பாக இருக்கும். காரணம், அந்த கல்பில் அல்லாஹ்வுடைய பயமும் அல்லாஹ்வுடைய அச்சமும் இல்லையென்றால் அந்த கல்பானது இருளடைந்து விடுகிறது.
 
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
 
«إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ، فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»
 
எனது உள்ளத்திலும் அழுக்கு ஏற்படுகிறது. நான் அல்லாஹ்விடத்தில் ஒவ்வொரு நாளும் நூறு முறை இஸ்திஃபார் செய்கிறேன். 
 
அறிவிப்பாளர் : அல்அஃகர் அல்முஸன்னி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2702.
 
அல்லாஹ்வுடைய நினைவு நம்முடைய உள்ளத்தில் உள்ள அழுக்கை போக்குகிறது. நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மறதியினால் ஏற்பட்ட, அல்லாஹ்வுடைய இபாதத்துகளை விட்டு தூரமாக இருக்கும் பொழுது, உள்ளத்தில் ஏற்பட்ட சிந்தனைகள், இதனால் ஏற்பட்ட அழுக்குகளை நம்முடைய இஸ்திஃபார் சுத்தப்படுத்துகிறது. 
 
அதுபோன்றுதான் இன்னும் ஒரு துஆவை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள்.
 
رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرْ هُدَايَ إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ
 
யா அல்லாஹ்! எனக்கு சாதகமாக உதவி செய். எனக்கு பாதகமாக உதவி செய்யாதே.  நன்மைகளை செய்வதற்கு எனக்கு உதவி செய். எனக்கு பாதகமாக நீ உதவி செய்து விடாதே. எனக்கு சாதகமாக சூழ்ச்சி செய். எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்து விடாதே.
 
எனக்கு நேர்வழிகாட்டு, எனது நேர்வழியை எனக்கு இளகுவாக்கி கொடு. எனக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எனக்கு நீ உதவி செய்வாயாக! 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1510.
 
ஹதீஸினுடைய கருத்து, யா அல்லாஹ்! உன்னை வணங்குவதற்கு, உன்னுடைய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு, நன்மைகளை செய்வதற்கு எனக்கு உதவி செய். உன்னுடைய நல்லடியாராக இருப்பதற்கு எனக்கு உதவி செய். உனக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருப்பதற்கு எனக்கு நீ உதவி செய். எனக்கு பாதகமாக உதவி செய்து விடாதே. 
 
ஹதீஸின் பொருள்; யா அல்லாஹ்! பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது. நன்மை செய்வதற்கு ஆற்றலும் இல்லை உன்னை கொண்டே தவிர. பாவத்திலிருந்து அல்லாஹ் பாதுகாத்தால் தான் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நன்மை செய்வதற்கு அல்லாஹ் உதவினால் தான் நாம் நன்மை செய்ய முடியும். 
 
ஆகவேதான், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள், யா அல்லாஹ்! எனக்கு சாதகமாக உதவி செய் என்று.
 
அதற்கு அடுத்து கேட்கிறார்கள்: 
 
اجْعَلْنِي لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ رَاهِبًا، لَكَ مِطْوَاعًا إِلَيْكَ، مُخْبِتًا، أَوْ مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي
 
யா அல்லாஹ்! உனக்கு நன்றி உள்ளவனாக என்னை ஆக்கு. உன்னை நினைக்கக் கூடியவனாக என்னை ஆக்கு. உன்னை பயந்தவனாக என்னை ஆக்கு. உனக்கு முற்றிலும் பணிந்தவனாக என்னை ஆக்கு. உன் பக்கமே முற்றிலும் திரும்பியவனாக என்னை ஆக்கு.
 
யா அல்லாஹ்! நான் உன் பக்கம் திரும்பி வருகிறேன், என தவ்பாவை ஏற்றுக் கொள். என் பாவத்தை கழுவி விடு, எனது துஆவை ஏற்றுக் கொள். என்னுடைய ஆதாரத்தை உறுதிபடுத்து, என்னுடைய கல்புக்கு ஹிதாயத் கொடு. 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1510.
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீண்ட துஆவை கேட்டு வருகிறார்கள். அந்த துஆவினுடைய இறுதி வார்த்தையாக கேட்பது, என்னுடைய கல்புக்கு நேர்வழியை கொடு என்று.
 
நேர்வழி கல்பிலிருந்து உருவாகிறது. எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ
 
மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 64  :11)
 
அதுபோன்று, இன்னொரு முக்கியமான துஆவை அவர்கள் கூறுகிறார்கள்:
 
وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي
 
யா அல்லாஹ்! இந்த உள்ளத்திற்கு நீ நேர்வழி கொடுத்ததற்கு பிறகு எனது உள்ளத்தை கோணலாக்கி விடாதே! 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : 5061, தரம் : ளயீஃப் (அல்பானி)
 
இப்படிப்பட்ட துஆக்களை நாம் பார்க்கும் பொழுது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய நஃப்ஸை சீர்திருத்துவதில் அவர்கள் எடுத்துக் கொண்ட கவனம், அதற்காக அல்லாஹ்விடத்தில் அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
இந்த நஃப்ஸ் சரியாக இருந்தால் அமல்கள் சரியாக இருக்கும். இந்த நஃப்ஸ் அல்லாஹ்வுடைய நெருக்கத்தோடு இருந்தால் நம்முடைய அமல்கள் நெருக்கமாக இருக்கும். இந்த நஃப்ஸ் ஷைத்தானோடு நெருங்கி விட்டால், இந்த நஃப்ஸ் தடுக்கப்பட்ட ஆசைகளோடு நெருங்கி விட்டால் நம்முடைய அமல்களை நாசமாக்கும்.
 
பிறகு நரகத்தை தவிர தங்குமிடம் வேறு எதுவும் இருக்காது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!) 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَأَمَّا مَنْ طَغَى (37) وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا (38) فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى (39) وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
 
எவன் வரம்பு மீறினானோ, (மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ, அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான். எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ, அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான். (அல்குர்ஆன் 79 : 37-40)
 
ஆகவே, நாம் எப்படி நம்முடைய இந்த உலக வாழ்க்கைக்காக, நம்முடைய இந்த அழிந்து போகக் கூடிய உடலிற்காக அல்லாஹ்விடத்தில் கேட்கிறோமோ, இந்த துன்யாவில் எத்தனையோ பல காரியங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறோமோ, அதை விட மிக முக்கியமான ஒன்றாக நம்முடைய நஃப்ஸை சீர்திருத்தம் செய்வதற்கு நாம் கேட்கக்கூடிய துஆவிற்கு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும்.
 
தனிமைகளில் நம்முடைய நஃப்ஸுகளுடைய குறைகள் ஒவ்வொன்றையும் சொல்லி, யா அல்லாஹ்! என்னிடத்தில் இந்த குறை இருக்கிறது, நீ என்னை சுத்தப்படுத்துவாயாக! யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸில் இந்த ஒரு கெட்ட எண்ணம் இருக்கிறது. நீ இதை சுத்தப்படுத்துவாயாக!
 
இப்படி அல்லாஹ்விடத்தில் நம்முடைய தவறுகளை ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி அதற்குரிய சீர்திருத்தத்தை கேட்கும் பொழுது, கண்டிப்பாக அல்லாஹ் தஆலா நல்லவர்களுக்கு கொடுத்த பரிசுத்தமான நஃப்ஸை நமக்கு கொடுப்பான்.
 
துஆவை கொண்டுதான் நாம் சீர்திருத்தம் அடைய முடியும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்.
 
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
 
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன். (அல்குர்ஆன் 40 : 60)
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் முஃமினான ஆண் பெண் அனைவருக்கும் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளக் கூடிய அல்லாஹ்வுடைய ஈமானாலும் அல்லாஹ்வுடைய தக்வாவாலும் ஒளி பெற்ற நல்ல கல்பை தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ القَبْرِ، وَعَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ» (صحيح البخاري- 6368) 
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ، سُبْحَانَكَ، اللَّهُمَّ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي، وَأَسْأَلُكَ رَحْمَتَكَ، اللَّهُمَّ زِدْنِي عِلْمًا، وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي، وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ» (سنن أبي داود -5061) [حكم الألباني] : ضعيف
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/