HOME      Khutba      உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 3-4 | Tamil Bayan - 447   
 

உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 3-4 | Tamil Bayan - 447

           

உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 3-4 | Tamil Bayan - 447


உள்ளங்கள் இறுகுவது ஏன்?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளங்கள் இறுகுவது ஏன்? (அமர்வு 3-4)
 
வரிசை : 447
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-03-2017 | 04-06-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் வேதம் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை கொண்டு படிப்பினை பெற்று நேர்வழி பெறக்கூடிய நன்மக்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள் வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
தொடர்ந்து உள்ளம் இறுகுவது ஏன்? என்ற தலைப்பின் கீழ் இந்த உள்ளத்தை அல்லாஹ்வின் பயத்தை கொண்டு எப்படி நிரப்புவது? இந்த உள்ளத்தை அல்லாஹ்வின் நினைவால் எப்படி மென்மையாக்குவது? அல்லாஹ்வை பயப்படாமல், அல்லாஹ்வை நினைவு கூறாமல், உள்ளம் கடினமாகுதை விட்டு உள்ளங்களை எப்படி பாதுகாப்பது? என்ற விஷயங்களை குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் தொடர்ந்து இரண்டு ஜும்ஆக்களில் பார்த்து வந்தோம்.
 
அதனுடைய தொடரில் இந்த ஜும்ஆவில் இன்ஷா அல்லாஹ் உள்ளங்களை மென்மையாக்குவதற்கு, உள்ளங்களை தூய்மைப்படுத்துவதற்கு, அல்லாஹ்வின் அச்சத்தால், அல்லாஹ்வின் பயத்தால், இந்த உள்ளதை நாம் மெருகுவாக்குவதற்கு என்னென்ன அமல்களை நாம் கடைபிடிக்க வேண்டும்? என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
 
அறிவுரைகளை கொண்டு நாம் பலன் பெறவேண்டும் என்று சொன்னால் அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். 
 
நம்முடைய செவிக்கு மட்டும் விருந்தாக கேட்காமல் கேட்கின்ற விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் அமல்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 
முதலாவதாக, நம்முடைய உள்ளத்தை மென்மையாக்குவதற்கு அல்லாஹ்வுடைய நினைவாகிய திக்ரை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லாஹ்வுடைய திக்ர் நம்முடைய உள்ளத்தில் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் இருக்க வேண்டும்.
 
அல்லாஹ்வை நாம் எந்த அளவு அதிகமாக மனஓர்மையோடு நினைத்து கொண்டிருப்போமோ அந்தளவு நம்முடைய உள்ளங்கள் பசுமையாக, மென்மையாக, அல்லாஹ்வுடைய பயத்தால் உள்ளச்சம் உடையதாக இருக்கும்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகின்றான்:
 
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
 
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதி பெற முடியும். (அல்குர்ஆன் 13 : 28)
 
இந்த வசனத்தின் அடிப்படையில் தான் இமாம் ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், தன்னிடத்தில் உள்ளத்தில் ஈரத்தை நான் பார்க்கவில்லை என்று முறையிட்டு வந்த ஒரு மனிதருக்கு சொன்னார்கள்:
 
அந்த உள்ளத்தை அல்லாஹ்வுடைய நினைவோடு நெருக்கமாக்கி வை என்று கூறுகின்றார்கள்.
 
அர்ரிக்கத்து வல்புகா - இப்னு அபித் துன்யா : 48
 
எப்படி ஒரு கடினமான பொருளை வெண்மையாக்குவதற்கு ஒன்று, அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்ற வேண்டும். இல்லையென்றால் அதை ஒரு சூட்டுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். அப்போது அது மென்மையாகும். கடினமான ஒரு பொருளை மென்மை ஆக்குவதற்கு இரண்டில் ஒரு முறைகளை கையாள வேண்டும்.
 
இப்படித்தான் உள்ளம் கடினமாகும் போது அந்த உள்ளத்தை மென்மையாக்குவதற்கு அல்லாஹ்வுடைய திக்ரோடு, அல்லாஹ்வுடைய நினைவோடு அதை நாம் நெருக்கமாக்க வேண்டும். 
 
இதற்காக நாம், யா அல்லாஹ்! என் உள்ளம் கடினமாக இருக்கிறது, என் உள்ளத்தில் மென்மையை கொடு என்று துஆவோடு நாம் அல்லாஹ்வை நினைவு கூறவேண்டும். 
 
ஒவ்வொரு அமலுக்கும் ஒரு நிய்யத் இருக்கிறது. அந்த நிய்யத்தோடு அந்த அமல் செய்யப்படும் போது அந்த அமலுக்கூறிய ஃபாய்தாவை அந்த அமல் கொடுக்கும். 
 
நிய்யத் இல்லாமல் அமல் செய்யப்படும் போது அந்த அமல் தனக்குரிய ஃபாய்தாவை கொடுக்காது. நாம் ஏன் திக்ரு செய்கின்றோம்? நம்முடைய திக்ர் உடைய நோக்கம் என்ன? என்பதை புரியாமல் தான் நம்மில் பலர் அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள்.
 
திக்ர் உடைய நோக்கத்தை உணர்ந்து புரிந்து நாம் திக்ர் செய்தால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அந்த திக்ருடைய ஃபாய்தா என்னவோ அதை நமக்கு கொடுப்பான். 
 
யா அல்லாஹ்! நாவினால் உச்சரிக்கக் கூடிய இந்த நினைவு என் உள்ளத்தில் வரவேண்டும். உன்னுடைய அன்பு என் உள்ளத்தில் வரவேண்டும். உன்னுடைய பயம் என்னுடைய உள்ளத்தில் வர வேண்டும். 
 
இதன் மூலமாக என்னுடைய உள்ளம் சுத்தமானதாக, உண்மையானதாக ஆக வேண்டும். உன்னுடைய பயத்தால் தக்வாவால் நிரம்பியதாக ஆகவேண்டும் என்று நீங்கள் சிறிது நேரம் சில நிமிடங்கள் திக்ரு செய்து பாருங்கள்.
 
கண்டிப்பாக அந்த உள்ளத்தை அல்லாஹு தஆலா ஈமானின் ஒளியினால் தக்வாவின் ஒளியினால் நிரப்பியே தீருவான். 
 
நாம் திக்ரு செய்வது எப்படி? நாவு அசைந்து கொண்டே இருக்கும். எண்ணிக்கைகளை மட்டும் கணக்கில் வைத்துக்கொண்டு அல்லது நேரத்தை கணக்கில் வைத்துக்கொண்டு அதை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் அந்த திக்ருகளை சொல்லிக் கொண்டே இருப்போம். 
 
அந்த திக்ரின் மூலம் என்ன ஃபாய்தாவை நாம் அடைய வேண்டுமோ அந்த ஃபாய்தாவுக்காக வேண்டி நாம் செய்வதில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
திக்ருடைய ஃபாய்தாவை நினைவு கூறுபவனாக இந்த திக்ரு என்னை அல்லாஹ்விடத்தில் நெருக்கமாக்க வேண்டும். இந்த திக்ரினால் என்னுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு பிறக்கவேண்டும். அல்லாஹ்வுடைய பயம் பிறக்கவேண்டும் என்ற அந்த மன ஓர்மையோடு அல்லாஹ்வை அமைதியாக 'சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர்' இவ்வாறாக சில நிமிடங்கள் நாம் அந்த திக்ரை தொடர்ந்து செய்யும்போது, கண்டிப்பாக அதில் ஃபாய்தா கிடைக்கும்.
 
இந்த திக்ரு அப்படிப்பட்ட ஒரு பெரிய வலிமை உடையது. திக்ருடைய வலிமை மிகப் பெரியது. திக்ர் உடைய வலிமையை யாரும் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். அவ்வளவு பெரிய மனவலிமை, பெரிய ஒரு பேராற்றல் இந்த திக்ரில் மறைந்திருக்கின்றது. அல்லாஹு தஆலா உள்ளங்களை மென்மை படுத்துவதற்கு திக்ரை ஒரு பெரிய காரணமாக வைத்துள்ளான்.
 
அதுபோன்று தான், அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ கேட்டுக் கொண்டே இருப்பது. எப்படி எல்லாம் துஆ கேட்பது? என்பது பற்றிய சில துஆக்களை இன்ஷா அல்லாஹ் இந்த உரையின் இறுதியில் பார்ப்போம். 
 
குறிப்பாக யாஅல்லாஹ்! எனது உள்ளத்திற்கு ஹிதாயத்தை கொடு. எனது உள்ளத்தை உனது நேர்வழியில் நிரந்தரமாக ஆக்கிவை என்று அதிகமாக நாம் துஆவோடு இருக்க வேண்டும். 
 
எந்த உள்ளம் ஓர்மையோடு மன ஓர்மையோடு அதிகமாக துஆ கேட்கின்றதோ கண்டிப்பாக அந்த உள்ளம் மென்மையாக இருக்கும்.
 
நபிமார்களுடைய சில முக்கிய பண்புகளை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் அவன் விவரிக்கும் போது அந்த நபிமார்கள் அதிகம் துஆ செய்பவர்களாக இருந்தார்கள். 
 
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி அல்லாஹ் சொல்கின்றான். அவர்கள் அதிகம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்பவராக இருந்தார். மிக சகிப்பாளராக இருந்தார். மிகவும் பொறுமை உள்ளவராக, அதிகம் துஆ கேட்பவராக‍, என் பக்கம் முற்றிலும் திரும்பியவராக இருந்தார்.
 
அல்லாஹ்விடத்தில் நம்முடைய உள்ளச்சத்தோடு துஆ கேட்பது. அல்லாஹ்வுடைய பயதால் துஆ கேட்பது. பேரரசருக்கு முன்னால் நான் இறைஞ்சுகின்றேன் என்ற அந்த உணர்வோடு துஆ கேட்பது. 
 
துஆவில் அதிகமாக நம்முடைய நேரங்களை செலவு செய்யும்போது கண்டிப்பாக அந்த உள்ளம் மென்மையாக இருக்கும். இதில் ஒரு ரகசியம் என்ன என்றால், யார், அதிகமாக அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு முன்னால் தன்னை ஒரு பணிந்த ஏழையாக நினைக்கின்றார்கள்.
 
யார் அல்லாஹ்விடத்தில் கையேந்தி கொண்டிருக்கின்றார்களோ, அல்லாஹ்வுடைய அருளின் பக்கம் தான் என்றுமே (முஹ்தாஜ்) தேவையுள்ளவன் என்பதை உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவி கிடைக்கும்.
 
யார் துஆ கேட்பதில் அலட்சியம் செய்கிறார்களோ அல்லது துஆவை புறக்கணிக்கிறார்களோ அல்லது துஆவை விட்டு ஒதுங்கி இருக்கின்றார்களோ அவர்கள் உள்ளங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக! அவர்கள் அல்லாஹ்வை விட்டு தேவையற்றதாக தன்னை உணர்ந்து இருக்கிறது என்று பொருள்.
 
துஆவில் அவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறது. இந்த துஆ தன்னை ஒரு பணிவான அடிமையாக அல்லாஹ்வின் ரஹ்மத்தின் பக்கம் எப்போதும் தேவையுள்ள மிஸ்கீனாக நம்மை உணரச் செய்கின்றது.
 
உள்ளத்தில் எப்போது பணிவு வருமோ, அல்லாஹ்வின் பக்கம் தான் தேவை உள்ளவன் என்ற உணர்வு வருமோ கண்டிப்பாக அந்த உள்ளம் மென்மையாகி விடும். அந்த உள்ளம் பசுமை ஆகிவிடும். 
 
எப்போது உள்ளத்தில் பெருமை, தான் அல்லாஹ்வை விட்டு தேவை இல்லாமல் இருக்கின்றோம் என்ற உணர்வு அந்த உள்ளத்தில் பிறக்குமோ கண்டிப்பாக அந்த உள்ளத்தில் பெருமை வந்துவிடும்.
 
பெருமை எந்த உள்ளத்தில் குடியேறுமோ கண்டிப்பாக அந்த உள்ளம் இறுகிவிடும். அந்த உள்ளத்தில் ஈரம் இல்லாமல் போய்விடும். 
 
ஆகவேதான், எல்லா சூழ்நிலைகளிலும் துஆ கேட்டவர்களாக நபிமார்கள் இருந்தார்கள். நம்மையும் துஆ கேட்கும் படி அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
 
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
 
என்னிடம் நீங்கள் துஆ கேட்டுக் கொண்டே இருங்கள். உங்களது துஆக்களை நான் அங்கீகரிப்பேன்.  (அல்குர்ஆன் 40 : 60)
 
ஆகவே, நம்முடைய உள்ளத்தை மென்மையாக ஆக்குவதற்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதி நேரத்தை துஆவிற்காக ஒதுக்க வேண்டும். அது, நாம் தொழுகையில் கேட்கின்ற துஆக்களாக இருக்கலாம். ருகூஉ, ஸுஜூதில் கேட்கின்ற துஆக்களாக இருக்கலாம். தொழுகைக்கு வெளியில் கேட்கின்ற துஆக்களாக இருக்கலாம். மற்றும் துஆவிற்காக வேண்டி நேரங்களை ஒதுக்கி நாம் கேட்கின்ற துஆக்களாக இருக்கலாம்.
 
மிக அதிகமாக நமக்கு ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்க கூடிய துஆ, தஹஜ்ஜத் உடைய நேரத்தில் இரவின் இறுதிப் பகுதியில் கேட்கக்கூடிய துஆ. அதுவும் குறிப்பாக அந்த இறுதிப் பகுதியில் இஸ்திஃபார் பாவமன்னிப்பு உடைய துஆவை கேட்கும்போது, நம்முடைய உள்ளங்கள் மேலும் மேலும் மென்மை அடைகின்றன. 
 
ஆகவேதான், அல்லாஹு தஆலா அந்த ஸஹர் நேரங்களில் இஸ்திஃபார் உடைய துஆக்களை கேட்பவர்களை புகழ்ந்து சொல்கின்றான்.
 
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
 
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள். (அல்குர்ஆன் 51 : 18)
 
وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
 
ஸஹர் நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறவர்களாகவும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3 : 17)
 
தக்வா உள்ள முஃமின்களின் லட்சனங்களை, இலக்கணங்களை அல்லாஹ் வர்ணிக்கின்றான்.
 
அந்த ஸஹர் நேரம் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றோ விளையாட்டாகவோ செய்த பாவங்களை எல்லாம் நமக்கு நினைவூட்டும். அல்லாஹ்விற்கு முன்னால் நம்மை பணிய வைக்கின்றது. அல்லாவின் பயத்தை நமக்கு நினைவூட்டுகின்றது.
 
அல்லாஹ்விற்கு முன்னால் எந்த துஆ நமக்கு அதிகம் பணிவை ஏற்படுத்துகிறதோ, அல்லாஹ்வின் பயத்தை எந்த துஆ நமக்கு அதிகம் நினைவூட்டுகின்றதோ, அந்த துஆ கண்டிப்பாக நம்முடைய உள்ளத்தை மென்மையாக்கும். 
 
ஆகவேதான் துஆவிற்காக வேண்டி நேரத்தை ஒதுக்குவது, நாம் செய்கின்ற துஆக்களை இறையச்சத்தோடு மன ஓர்மையோடு செய்வது, அர்த்தங்களை புரிந்து செய்வது. குறிப்பாக சுப்ஹுக்கு முன்னால் தஹ்ஜத் உடைய நேரத்தை இஸ்திக்பார் -பாவமன்னிப்புடைய துஆக்களுக்காக நாம் ஒதுக்குவது.
 
அதுபோன்று, தொழுகையில் பேணுதலாக இருப்பது. தொழுகைக்காக வேண்டி ஒரு பெரிய முக்கியத்துவத்தை எடுத்து அந்த தொழுகைக்கான உளூ செய்வது, அதற்கான நேரத்தில் தொழுகையில் நிற்பது, தொழுகையுடைய முறைகளை நிறைவேற்றுவது. 
 
இவை அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு மன ஓர்மையோடு அடக்கமாக பணிந்தவர்களாக ஒவ்வொரு திக்ரு, துஆக்களை அதனுடைய பொருளை உணர்ந்தவர்களாக நாம் செய்ய வேண்டும். 
 
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இந்த ஃபாய்தாவை பற்றி சொல்கிறான்.
 
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
 
தொழுகை ஒரு மனிதனை மானக்கேடான விஷயங்களை விட்டும் வெறுக்கத்தக்க விஷயங்களை விட்டும் தடுக்கிறது. (அல்குர்ஆன் 29 : 45(
 
இதிலிருந்து, எந்த மனிதன் மானக்கேடான விஷயங்களை விட்டும், தடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க விஷயங்களை விட்டும் விலகி இருப்பானோ, கண்டிப்பாக அவருடைய உள்ளம் சுத்தமாக இருக்கும். யாருடைய உள்ளம் சுத்தமாக இருக்குமோ, கண்டிப்பாக அவருடைய உள்ளம் அல்லாஹ்வுடைய பயத்தோடு மென்மையாக பணிவாக இருக்கும் என்பதை புரிய முடிகிறது.
 
பாவங்கள் உடைய பாதிப்பு என்ன என்றால், முதலாவதாக அது உள்ளத்தை தாக்கும். எப்படி நோய்நொடிகள் நம்முடைய உடலை சேதப்படுத்துகின்றனவோ, உடலை பலவீனப் படுகின்றனவோ, அது போன்று சிறிய பெரிய பாவங்கள் அந்த பாவங்களில் தன்மைக்கேற்ப அது உள்ளங்களை தாக்கும். உள்ளங்களை கருப்பாக்கும். உள்ளங்களை கடினமாக்கும். 
 
அதிலும் குறிப்பாக வேண்டுமென்றே ஒரு மனிதன் பெரும் பாவங்களை செய்யும் போது, ஆபாசமான அசிங்கமான தடுக்கப்பட்ட பாவங்களை செய்யும்போது, அருவருக்கத்தக்க பாவங்களை செய்யும்போது கண்டிப்பாக அவனுடைய உள்ளத்தில் அந்த ஈமான் உடைய ஒளியே அணைந்து விடும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைத்தான் சொன்னார்கள்:
 
لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ
 
ஒரு மனிதன் ஜினா செய்கின்றான் என்றால், அவன் ஈமானுடைய நிலையில் ஜினா செய்ய மாட்டான். (1)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2475.
 
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு இந்த ஹதீஸுக்கு விளக்கம் சொல்கின்றார்கள். அவன் ஜினாவை நெருங்கும்போது அவனுடைய ஈமான் அவனுடைய உள்ளத்தை விட்டு வெளியேறி நின்றுவிடுகிறது. 
 
அவன் ஜினா என்ற அந்த செயலில் இருந்து விலகி அவன் வெளியேறி திரும்ப எப்போது வருவானோ, அப்போதுதான் அந்த ஈமான் அவனிடம் திரும்பி வருகிறது.
 
இது எப்போது என்றால், அந்த ஜினா என்ற பெரும் பாவத்தை செய்வதோடு அவனிடத்தில் மற்ற மார்க்க ஃபர்லான கடமைகளும் இருந்தால்.
 
உதாரணமாக, ஒரு தொழுகையாளி ஜினாவினால் சோதிக்கப்பட்டு விடுகின்றான். ஒரு நல்ல நோன்பாளி ஹஜ் உம்ரா செய்யக்கூடிய ஒரு மனிதன், அதுபோன்று ஜகாத்தும் கொடுக்கக்கூடிய ஒரு மனிதன், இப்படி ஃபர்லான கடமைகளை எல்லாம் செய்பவனாக இருந்து, இந்த ஜினாவில் சோதிக்கப்பட்டால்.
 
அப்படி இல்லை என்றால், அவனை விட்டு வெளியேறிய அந்த ஈமான் திரும்ப வரவே வராது.
 
அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். ஆகவேதான், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தொழுகையில் நமக்கு சொல்கின்றான். 
 
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
 
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (அல்குர்ஆன் 29 : 45)
 
யார் அந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க, அசிங்கமான தடுக்கப்பட்ட விஷயங்களை விட்டு விலகுகின்றாரோ, அதற்கு காரணம், அல்லாஹ்வுடைய அச்சத்தால் அவர்கள் விலகுகின்றார்கள். 
 
தொழுகையில் அவர் படித்துக்கொண்ட உள்ளச்சம். தொழுகையினால் அவருக்கு ஏற்பட்ட அந்த ஈமானுடைய ஒளியானது, அவருடைய வாழ்க்கையில் வழிகாட்டுகிறது. 
 
பாவத்தின் பக்கம் நெருங்க விடாமல் அசிங்கமான, ஆபாசமான தடுக்கப்பட்ட செயல்களின் பக்கம் அவர் சென்று விடாமல் அந்த ஒளி அவருக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டே இருக்கின்றது.
 
ஆகவே தொழுகையுடைய விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த தொழுகையை உள்ளச்சத்தோடு நாம் நிறைவேற்ற வேண்டும். அந்த ஈமானுடைய உணர்வுகளோடு நாம் நிறைவேற்ற வேண்டும். 
 
அதுபோன்றுதான் நம்முடைய வியாபாரத்தில் ஹலால் ஹராமை பேணுவது, அமானித தன்மையோடு வியாபாரம் செய்வது. இந்த விஷயத்தை பற்றி நாம் முன்பு விளக்கமாக பார்த்தோம்.
 
நம்முடைய வியாபாரத்தில் ஹலால் ஹராம் உடைய பேணிக்கை வருமானால் கண்டிப்பாக நம்முடைய உள்ளம் மென்மை அடைந்து கொண்டே இருக்கும். ஹராமான விஷயங்களை விட்டும் ஹராமான உணவுகளை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொண்டு, ஹலாலை தவிர நான் எதையும் உட்கொள்ள மாட்டேன், ஹலாலை தவிர நான் எதையும் செய்ய மாட்டேன் என்ற உறுதி வேண்டும்.
 
அப்படி என்றால் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தால்தானே ஹலாலான முறையில் சாப்பிட முடியும்.
 
ஒரு மனிதன் ஹராமான முறையில் வியாபாரம் செய்கின்றான். ஏமாற்றி வியாபாரம் செய்கின்றான். பொய் பேசி வியாபாரம் செய்கின்றான். வாக்குகளை மீறி வியாபாரம் செய்கின்றான். குறைகளை மறைத்து வியாபாரம் செய்கின்றான். 
 
இப்படி வியாபாரத்தில் தடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாவங்களை செய்து அவன் வியாபாரம் செய்து சம்பாதித்ததை கொண்டு வருகின்றான்.
 
இந்த சம்பாத்தியத்தை கொண்டு பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அறுக்கப்பட்ட ஆட்டை வாங்கி சாப்பிட்டால் அந்த கறி ஹலால் ஆகிவிடுமா? 
 
சாப்பிடக்கூடிய பொருள் ஹலாலானால் இவனுக்கு அது ஹராம் ஆகிவிடுகின்றது. காரணம், இவன் ஹராமான வருவாயில் இருந்து அதை வாங்கியதால்.
 
இன்று, பலருடைய நினைப்பு என்ன என்றால், அந்த காசு மட்டும் தான் ஹராம், அந்தக் காசினால் நாம் வாழ்கின்றோமே, நாம் சாப்பிடுகின்றோமே, நாம் வீடு கட்டி இருக்கின்றோமே, நாம் சம்பாதித்து நம் மனைவி மக்களுக்கு நமக்கு உடை, ஆடை, அலங்காரங்கள் வாங்கிக்கொடுத்து இருக்கின்றோமே, இதைப்பற்றி எல்லாம் அவர்கள் ஹராம் என்பதை நினைப்பதே இல்லை.
 
இப்படி இவர்கள் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றார்கள்.
 
நாம் ஹலாலான வழியில் சம்பாதித்து ஹலாலான பொருளை வாங்கவேண்டும். ஹலாலில் சம்பாதித்து ஹராமை வாங்கி சாப்பிட்டாலும் ஹலால் ஆகாது. 
 
ஒரு மனிதன் ஹலாலாக சம்பாதிக்கிறான். பன்றி இறைச்சி வாங்கி சாப்பிடுகின்றான். மதுவை வாங்கி குடிக்கிறான். அவனுக்கு அது ஹலால் ஆகிவிடுமா? ஹலாலான செல்வத்தில் வாங்க பட்டதால் அது ஹலால் ஆகாது. 
 
ஒரு மனிதன் ஹராமான செல்வத்திலிருந்து சம்பாதித்து விட்டு அதைக் கொண்டு ஹலாலான பொருளை வாங்கி பயன்படுத்துகின்றான். இது அவனுக்கு ஹலால் ஆகிவிடுமா? ஹலால் ஆகாது.
 
இந்த ஹலால் உடைய விஷயம், ஹலாலை பேணுவது நம்முடைய உள்ளத்திற்கு மிகப்பெரிய ஒளியை ஏற்படுத்துகிறது. நம்முடைய நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள் உடைய வரலாறுகளை பார்க்கின்றோம்.
 
ஹலால் ஹராம் உடைய விஷயத்தில் அவர்களுக்கு இருந்த அந்த அந்த பேனுதலானது அவர்களுடைய இபாதத்துக்களை ஒளிமயமாக்கி வைத்திருந்தது. அவர்களுடைய ஈமானை மிகவும் தூய்மையானதாக இக்லாஸ் உடையதாக ஆக்கி வைத்திருந்தது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு பயந்து இருந்தார்கள். தங்களுடைய பேரப்பிள்ளை  மஜிதில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தை வாயில் வைக்கிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயான் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள், அல்லது ஸஹாபாக்களுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள், அதை நிறுத்திவிட்டு அந்த குழந்தையிடம் சென்று, அதைத் தூக்கி அதனுடைய வாயில் இருந்த பேரிச்சம்பழத்தை வெளியே எடுத்துவிட்டு சொன்னார்கள்.
 
«كِخْ كِخْ، ارْمِ بِهَا، أَمَا عَلِمْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ؟»
 
பேரனே! உமக்குத் தெரியாதா? முஹம்மதுடைய குடும்பத்தாருக்கு ஸதகா ஹலால் இல்லை என்று.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1069.
 
பொருளை எடுத்தது பசியில் இருகின்ற ஒரு குழந்தை, அறியாத பருவத்தில் உள்ள ஒரு குழந்தை. 
 
நம்முடைய மார்க்கத்தைப் பொறுத்தவரைو அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று மனிதர்களை விட்டு அல்லாஹுதஆலா குற்றங்களை எடுத்துவிட்டான் என்று சொன்னார்கள்.
 
" رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّغِيرِ حَتَّى يَكْبَرَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ، أَوْ يُفِيقَ "
 
1, குழந்தை பருவத்தை அடைகின்ற வரை.
 
2, தூங்கிக் கொண்டிருப்பவர் அவர் விழிக்கின்ற வரை.
 
3, பைத்தியம் பிடித்தவர் அவர் தெளிவு பெறுகின்ற வரை.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 2041.
 
இப்படியாக இருக்கின்ற இந்த நிலையில்கூட, அந்த குழந்தைக்கு சிறு பிராயத்தில் அந்த ஹராமான உணவு சென்று விட்டால், அது அவருடைய பிற்காலத்தில் ஈமானுடைய உணர்வுகளை பாதிக்கும் என்ற தொலைநோக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்தது. 
 
எனவே, அந்த அச்சத்தை சிறுபிள்ளையில் கொடுத்து, அந்த சிறிய பேரிச்சம்பழம் ஆக இருந்தாலும் சரி அதை வெளியே எடுத்தார்கள்.
 
இன்று, ஒவ்வொரு நாளும் ஹராமை விழுங்கி கொண்டிருப்பவர்கள், ஹராமில் சம்பாதித்து, ஹராமில் வாழ்ந்து, குடும்பத்தை நடத்தக் கூடியவர்கள் உள்ளத்தில் எப்படி மென்மையை எதிர்பார்க்க முடியும்?
 
ஹராமை விட்டு விலகாத வரை, ஹலாலான வாழ்க்கையை வாழாத வரை, உள்ளங்களில் அந்த மென்மை ஏற்படாது. 
 
உள்ளங்கள் கசடுகள் நிறைந்ததாக, துருக்கள் நிறைந்ததாக, அழுக்குகள் நிறைந்ததாக ஆகிவிடும். அந்த ஹராமான வருவாய் எந்த வழியில் இருந்தாலும் சரி. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அதுபோன்று, அதிகமான நஃபிலான வணக்க வழிபாடுகளை நாம் செய்ய வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ
 
என்னுடைய அடியான் உபரியான வணக்க வழிபாடுகளை கொண்டு என்னை நெருங்கிக் கொண்டே இருக்கின்றான், நான் அவனை நேசித்து விடுகின்றேன். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6502.
 
ஃபர்லான வணக்க வழிபாடுகள் போக உபரியான நஃபிலான வணக்க வழிபாடுகளை கொண்டு நம்முடைய ரப்பிடத்தில் நாம் நெருக்கத்தை தேடுவது.
 
எந்த அளவு நாம் அல்லாஹ்விடத்தில் நஃபிலான வணக்க வழிபாடுகளை செய்வோமோ, அல்லாஹு தஆலா நம்மை நெருக்கமாக்குகின்றான். அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கும். கண்டிப்பாக அந்த உள்ளத்தில் பயம் இருக்கும். அந்த உள்ளம் மென்மையாக இருக்கும்.
 
அதுபோன்று இன்னொரு முக்கியமான விஷயம். அதிகமாக மவ்தை நினைவு கூறுவது. கப்ருகளுக்கு சென்று ஸலாம் சொல்வது, அங்கே நின்று மறுமையை நினைவு கூறுவது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا
 
நான் கப்ருகளுக்கு செல்ல வேண்டாம் என்று முன்பு உங்களை தடுத்தேன். இப்போது நான் சொல்கின்றேன்; கப்ருகளுக்கு செல்லுங்கள், அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும். (2)
 
அறிவிப்பாளர் : புரைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1977.
 
கப்ருகளுக்கு செல்வது, அங்கே ஸலாம் சொல்வது, அங்கே நின்று மறுமையை மரணத்தை சிந்திப்பது உங்களுக்கு ஆகிரத்துடைய ஞாபகத்தை கொண்டு வரும்.
 
அதற்கு என்ன பொருள்? தர்காக்கள் என்று கட்டப்பட்டிருக்கக்கூடிய அந்த இடங்களுக்கு சென்று ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்பவற்றை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லவில்லை.
 
நம்முடைய முஹல்லாவில் நம்முடைய ஊரில் இருக்கக்கூடிய கப்ருக்கு சென்று, நமக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது அந்த வழியாக நாம் செல்லும்போது, நம்முடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கே இறந்து இருப்பவர்களுக்காக ஸலாம் சொல்வது. 
 
அங்கே நம்முடைய உறவினர்கள் இறந்திருந்தாலும் சரி அல்லது இல்லை என்றாலும் சரி. அங்கே சென்று ஸலாம் சொல்லி, மறுமையை நினைவுகூர்ந்து, அங்கே இறந்தவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்துவிட்டு வருவது. 
 
அந்த துஆவில் ஒரு முக்கியமான வார்த்தையை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
«السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُورِ، يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ، أَنْتُمْ سَلَفُنَا، وَنَحْنُ بِالأَثَرِ»
 
(அன்தும் ஸலஃபுனா) -நீங்கள் எங்களை முந்தி சென்று விட்டீர்கள். உங்களுடைய பாதையில் உங்களை தொடர்ந்து நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1053, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
இந்த வார்த்தை இதனுடைய பொருளோடு நினைவு கூறும் போது கண்டிப்பாக உள்ளத்தில் மறுமையின் அச்சம் பிறக்கும்‌. உள்ளம் மென்மையாகும். 
 
நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய பாவங்களிலிருந்து நாம் துஆ செய்வோம். எந்த அமல்களில் குறை செய்து கொண்டிருக்கின்றோமோ கண்டிப்பாக அந்த அமல்களை நாம் நிறைவாக செய்வோம். 
 
அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்:
 
யார் அதிகமாக மரணத்தை நினைப்பாரோ, அவருடைய பெருமிதங்கள் எல்லாம், அவருடைய மமதைகளெல்லாம், அவருடைய ஆனந்தங்கள் எல்லாம் குறைந்துவிடும். மேலும், அவருடைய பொறாமை குறைந்துவிடும். 
 
ஹில்யதுல் அவ்லியா : 1/220
 
இன்று, நாம் சோதிக்கப்பட்டு இருக்கின்ற நோய்களில் மிகப்பெரிய நோய், இந்த பொறாமை. நம்முடைய சகோதரனை பார்த்து, நம்முடைய நண்பனை பார்த்து, நம்முடைய அண்டை வீட்டாரை பார்த்து, நம்மோடு பழகக்கூடியவர்களை பார்த்து, அவர்களிடத்தில் இருக்கின்ற உலக செல்வங்களை பார்த்து பல விஷயங்களில் பொறாமைப் படுகின்றோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
பொறாமை என்றால் ஒருவிதமான ஏக்கம். எப்படி காரூணை பார்த்து நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாயத்தவர்கள் சொன்னார்களோ.
 
يَالَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ
 
காரூனுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை போன்று எங்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே! (அல்குர்ஆன் 28 : 79)
 
அல்லாஹ் நமக்கு இப்படி சொல்கின்றான்.
 
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
 
உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 32)
 
நாம் பிறரைப் பார்த்து இது எனக்கு வேண்டுமே! எனக்கு இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே! இப்படி பிறரைப் பார்த்து நம்முடைய தேவைகளை நிர்ணயிக்கின்றோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். எவ்வளவு பெரிய அறிவீனத்தனம்.
 
நமக்கு என்ன தேவையோ அந்த தேவையை மட்டும் அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டுமே தவிர, பிறரைப் பார்த்து அவனுக்கு இப்படி இருக்கின்றதே! எனக்கும் இது வேண்டுமே! என்று ஏங்குவது. இது ஒரு முட்டாள்தனம்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுக்கு எதை நன்மை என்று நினைத்தானோ, அதை அவனுக்கு கொடுத்திருக்கின்றான். அவனுக்கு கொடுக்கப்பட்ட செல்வம் ஒருகால் உங்களுக்கு சோதனையாகவும் இருக்கலாம். அதனால் அல்லாஹ் கொடுக்காமல் இருக்கலாம். அதில் எத்தனையோ ஹிக்மத்துகள் இருக்கின்றன.
 
ஆகவேதான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன், எங்கெல்லாம் குர்ஆனில் உங்களுடைய இறைவன் உங்களுக்கு வசதியை கொடுத்து இருக்கின்றான். அவன் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை சுருக்கி விடுகின்றான் என்று சொல்கிறானோ அதற்குப் பிறகு, அதில் உள்ள ஒரு ஹிக்மத்தின் ஞானத்தை அல்லாஹ் சொல்கின்றான்.
 
ஈமான் உள்ளவர்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. இது முஃமின்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன என்று. (அல்குர்ஆன் 30 : 37)
 
ஒரு மனிதனுக்கு வாழ்வாதாரத்தை அல்லாஹ் விசாலமாக்கி விடுவதால் அல்லாஹ்விடம் நெருங்கி விட்டான் என்று அர்த்தமில்லை. அதுபோன்று ஒரு மனிதன் ஏழ்மையில் நெருக்கடியில் இருக்கின்றான் என்பதால் அல்லாஹ் அவனை கைவிட்டு விட்டான், அல்லாஹ்விற்கு அவன் தூரமாகி விட்டான் என்று அர்த்தம் இல்லை.
 
செல்வம் அல்லாஹ்வின் நெருக்கத்திற்கு அடையாளம் அல்ல. ஏழ்மை அல்லாஹ்வின் கோபத்திற்கு அடையாளம் அல்ல. ஏழ்மையிலும் அல்லாஹ்வின் அருளும் கோபமும் இருக்கின்றது. செல்வதிலும் அல்லாஹ்வின் அருளும் கோபமும் இருக்கின்றது. நம்முடைய அமல்களை கொண்டு அல்லாஹ் தனது நெருக்கத்தையோ கோபத்தையோ நிர்ணயிக்கின்றான்.
 
அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். 
 
ஒருவன் மௌத்தை அதிகமாக நினைக்கின்றான், அதுபோன்று கப்ருகளை ஜியாரத் செய்து மறுமையை நினைக்கின்றான் என்றால், அவன் ஏன் பொறாமை கொள்ள போகின்றான்? 
 
இன்று மரணிப்பேனோ! நாளைக்கு மரணிப்பேனோ! நான் இந்தப் பாவங்களை வைத்து என்ன செய்வேன்? நான் இந்த வசதி வாய்ப்புகளை வைத்து என்ன செய்வேன்? என்று ஒரு கணம் நினைத்து விட்டால் போதும், தன்னை விட அதிகமாக வசதி வாய்ப்பு உள்ளவர்களை பார்த்து அவன் ஏங்கவே மாட்டான். 
 
காரணம், யார் நீண்ட காலம் வாழ்வேன் என்று திட்டம் தீட்டி வைத்து இருக்கின்றார்களோ, அவர்கள்தான் வசதிகளை எதிர்பார்ப்பார்கள். வசதி உள்ளவர்கள் மீது பொறாமைப்படுவார்கள். அவர்களைப் பார்த்து ஏங்குவார்கள்.
 
யாருக்கு மரணம் அவருடைய அவருடைய வீட்டு வாசலில் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாக அந்த ஈமானிய உறுதியில் இருப்பாரோ, அவருக்கு பிறர் மீது பொறாமை ஏற்படாது. 
 
இமாம் ஸயீது இப்னு ஜுபைர் என்ற மிகப்பெரிய தாபியீ சொல்கின்றார்கள்:
 
மரணத்தின் நினைவு என் உள்ளத்தை விட்டு நீங்கி விட்டால், நான் பயப்படுகிறேன்; எனது உள்ளத்தை அது கெடுத்து விடும் என்று.
 
ஹில்யதுல் அவ்லியா : 4/279.
 
நாம் வாழ்நாள் எல்லாம் மவ்ததை நினைக்காமல் இருக்கின்றோம். தொழுகையிலும் நினைவு வருவதில்லை. 
 
மவ்தை பற்றிய வசனங்களை ஓதும் போது கூட, நானும் மரணிப்பேன், எனக்கும் மரணம் இருக்கின்றது, ஜனாஸாவை சுமந்து செல்லும்போது, ஜனாஸா தொழுகையில், ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது கூட மௌத்தை நினைக்காதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
 
இன்னும் எத்தனையோ முஸ்லிம்கள் அந்த ஜனாஸாவை சுமந்து கொண்டு செல்லும்போது, அடக்கம் செய்யும் போது துன்யாவை பற்றி பேசுகின்றார்கள். பலர் சினிமாக்களைப் பற்றி பேசியதை கூட நாம் கேட்டிருக்கின்றோம். 
 
அப்படியென்றால், உள்ளம் எந்த அளவு கேடு கெட்டு விட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அதுபோன்றுதான், அதிகமாக இல்முடைய சபை, உபதேசத்தின் சபைகளுக்கு செல்வது. எங்கே அல்லாஹ்வைப் பற்றி நமக்கு நினைவு கூறப்படுமோ, எங்கே மறுமை பற்றி நமக்கு உபதேசிக்கபடுமோ, அந்த சபைகளில் கலந்து கொண்டு நம்முடைய உள்ளத்தை பசுமை ஆக்குவது.
 
இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கின்றார்கள்:
 
எந்த இடத்தில் அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூறப்படுமோ, அந்த சபைகள் நமக்கு இல்மை உயிர்ப்பிக்கின்றன. நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயத்தை ஏற்படுத்துகின்றன.
 
லத்தாயிஃபுல் மஆரிஃப் : 1/14.
 
அதுபோன்றுதான் நல்லவர்களோடு அதிகமாக பழகுவது. அல்லாஹ்வுடைய அச்சத்தால், பயத்தால் வாழ்ந்த அந்த சத்திய தூய மக்களுடைய வரலாறுகளை படிப்பது, நபிமார்களின் வரலாறுகளை சஹாபாக்கள், தாபியீன்கள் அதுபோன்று சான்றோர்களின் வரலாறுகளை படிப்பது. 
 
அப்படி படிக்கும் போது நம்முடைய உள்ளத்திலும் அப்படிப்பட்ட நல்ல எண்ணம் பிறக்கும், அவர்களை போன்று நாமும் ஆகலாம் என்று.
 
ஜாஃபர் இப்னு சுலைமான் என்ற ஒரு பெரிய தாபியி சொல்கின்றார்கள்.
 
நான் என்னுடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய அந்த மென்மை குறைந்து விட்டதாக, பயம் குறைந்து விட்டதாக நான் உணர்ந்தால் உடனே முஹம்மது இப்னு வாஸிஃ என்ற தாபியீடம் செல்வேன்‌.
 
அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவருடைய மஸ்ஜிதில் இருப்பேன். என்னுடைய உள்ளம் பசுமை ஆகிவிடும். நான் திரும்பி விடுவேன். 
 
முஹம்மது இப்னு வாஸிஃ என்பவர், அனஸ் இப்னு மாலிக் அவர்களுடைய மாணவர். ஹிஜ்ரி 123-ல் வஃபாத் ஆனார்கள்.
 
அல்லாஹ்வுடைய பயத்தால் அதிக உள்ளச்சமுடையவரை முஹம்மது இப்னு வாஸிஃ விட வேறு ஒருவரை நான் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் உடைய சபைக்குச் சென்று அவரை நான் பார்த்து கொண்டிருப்பேன். அதனால் என் உள்ளம் மென்மையாகும். நான் திரும்பி வருவேன்.
 
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா  : 6/670.
 
இப்படி, நல்லவர்களோடு பழகும் போது நல்ல உணர்வுகள் நல்ல சிந்தனைகள் பிறக்கும். தீயவர்களோடு பழகும் போது அந்த தீய குணம் நமக்கு வரும். 
 
ஆகவேதான், முஹம்மது இப்னு வாஸிஃ தங்களுடைய மாணவர் ஒருவருக்கு. சொன்னார்கள்: ஒரு நாள் நீ இவ்வுலகத்திலும் அரசனாக இரு, மறுமையிலும் அரசனாக இரு என்று. 
 
மாணவர் கேட்டார்: அது எப்படி என்னால் சாத்தியமாகும்? உலகத்தில் என்னால் அரசனாக இருப்பது என்றால் எவ்வளவு பெரிய தியாகங்கள் செய்ய வேண்டும்? என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும்? ஆகிரத்தில் அரசனாக இருப்பது என்றால் என்ன செய்வது? 
 
அவர்கள் அழகாக ஒரே வார்த்தையில் சொன்னார்கள்: உலகத்தில் நீ பற்றற்றவனாக இரு, உலக ஆசைகள் இல்லாதவனாக இரு. உலகத்திலும் நீ அரசனாக இருக்கலாம். மறுமையிலும் அரசனாக இருக்கலாம்.
 
இப்படி, இன்னும் நிறைய வரலாறுகள் இருக்கின்றன. நல்லவர்களுடைய அந்த நட்பால் நம்முடைய உள்ளங்கள் எப்படி எல்லாம் மென்மை ஆகின்றன என்பதற்கு. 
 
ஆகவே, நாம் யாரோடு பழகுகின்றோம்? என்பதை கவனிக்க வேண்டும்.
 
ஹதீஸில் வருகின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِطُ»
 
ஹதீஸின் கருத்து : நீ ஒருவரைப் பற்றி விசாரிப்பது என்றால் அவரைப் பற்றி விசாரிக்காதே. அவருடைய நண்பரைப் பற்றி விசாரி. 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 8028.
 
ஒரு மனிதன் தனது நண்பன் உடைய மார்க்கத்தில் தான் இருப்பான். யாரோடு பழகுகின்றானோ, அவனுடைய பழக்கம் அவனுக்கு வந்துவிடும்.
 
ஆகவே, நம்முடைய உள்ளத்தில் உள்ளச்சம் வரவேண்டும் என்றால், நம்முடைய உள்ள மென்மையான நல்ல உள்ளமாக இருக்க வேண்டும் என்றால் நாம் பணிவுள்ளவர்கள் இடத்தில், தக்வா உள்ளவர்கள் இடத்தில், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணக்கூடிய நல்ல மக்களிடத்தில் பழகவேண்டும்.
 
அதிகமாக செல்வ செழிப்பிலும் பெருமையிலும் இருப்பவர்கள், உலகப் பெருமை பேசக் கூடியவர்கள், மறுமை நினைவு இல்லாதவர்கள், துன்யாவில் அதிகம் மூழ்கியவர்களிடத்தில் நாம் பழகும் போது அதே போதையை தான் நமக்கும் ஏற்றுவார்கள். அதே உலகமயக்கத்தை தான் நமக்கும் கொடுப்பார்கள்.
 
ஆகவே, இந்த விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதுபோன்றுதான் நம்முடைய உள்ளத்தில் மென்மை வருவதற்கு அல்லாஹ்வுடைய பயம் வருவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அதிகமாக நாம் நோயாளிகளை சென்று நலம் விசாரிப்பது. 
 
மரணப்படுக்கையில் இருப்பவர்களை நாம் சந்தித்து, நம்மால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வது. 
 
அதாவது அந்த மரணத்தருவாயில் இருக்கக் கூடியவர்களுக்கு கலிமாவை நினைவூட்டுவது. இப்படி சோதனையில் இருப்பவர்கள், அது சாதாரண நோயாக இருந்தாலும் சரி, பெரிய நோயாக இருந்தாலும் சரி.
 
அவர்களுக்கு அருகில் நாம் உட்காரும்போது நம்முடைய உள்ளங்கள் கண்டிப்பாக மென்மையடையும்.
 
அல்லாஹு தஆலா இப்படி என்னை சோதிக்காமல் பாதுகாப்பானாக! என்று துஆ செய்வதோடு நான் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் என்ற மனஉறுதியும் வரவேண்டும்.
 
அதுபோன்று, என்னுடைய மரண நேரம் எப்படி இருக்குமோ? எந்த நிலையில் இருக்குமோ? என்று ஒரு பயத்தை அந்த இடத்தில் கொண்டு வருவது.
 
இன்று மார்க்க விஷயங்களில் பெரும்பாலான விஷயங்கள் சடங்குகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் பாதுகாப்பானாக‍! 
 
நோயாளிகளிடத்தில் சென்று, மரணப்படுக்கையில் இருப்பவர்களிடத்தில் சென்று அவர்களை சந்திக்க செல்லும்போது கூட என்ன ஒரு பணிவு, அடக்கம் இருக்க வேண்டுமோ, அதை கூட மக்கள் இழந்து இருக்கின்றார்கள்.
 
இன்று, மய்யத்தை பார்த்து நாமும் கவலை கொள்கின்றோம். நம்முடைய முன்னோர்களும் கவலைப்பட்டார்கள். இரண்டு கவலைகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது.
 
ஒன்று, நாம் கவலைப்படுவது நம்முடைய உறவு நம்மோடு இருந்தார், பாசமாக இருந்தார், அன்பாக பழகினோம். அவர் சென்று விட்டாரே என்று கவலைப்படுவோம்.
 
நம்முடைய முன்னோர்களும் கவலைப்பட்டார்கள். இந்த மனிதர் சென்று விட்டாரே, நம்மை விட்டு இப்போது இவர் சொர்க்கத்தில் இருக்கின்றாரோ? நரகத்தில் இருக்கின்றாரோ? அவர்களுடைய ஏடுகள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? மூடப்பட்டதா? அல்லது துர்பாக்கியவான்களில் எழுதப்பட்டு இவர்களுடைய ஏடுகள் மூடப்பட்டதா? என்று அதை நினைத்து அவர்கள் கவலைப்பட்டார்கள்.
 
ஏனென்றால், மவுத்தானதற்குப் பிறகு இரண்டு இடங்களில் ஒரு இடம்தான். கப்ரிலும் சரி, மறுமையிலும் சரி, ஒன்று சுவன பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். அல்லது நரக படுகுழியில் ஒரு நரக படுகுழியாகும். 
 
இதை நினைத்து அவர்கள் கவலைப்பட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலைகளை விட்டு பாதுகாவல் தேடினார்கள். உலகத்திற்காக கவலைப்படுவதை விட்டு துக்கப்படுவதை விட்டு அல்லாஹ்வுடைய தூதர் பாதுகாவல் தேடினார்கள். 
 
இப்படி உள்ளங்களை மென்மையாக்குவதற்கு நிறைய அமல்களை நாம் பார்த்தோம்.
 
இந்த அமல்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல இந்த அமல்களை ஒவ்வொன்றாக செய்து நம்முடைய உள்ளங்களை சுத்தம் ஆக்குவதற்கு இலகுவாக்குவதற்கு உண்டான முயற்சியை செய்ய வேண்டும். 
 
இந்த ஒரு முயற்சியில் மரணத்திற்கு முன்பு நம்முடைய உள்ளங்கள் சுத்தமாகி விட்டால் கண்டிப்பாக இபாதத்துடைய உணர்வுகளை நாம் பெறுவோம். இபாதத்துடைய ஃபாய்தாக்களை நாம் அடைவோம்.
 
அல்லாஹு தஆலா நமக்கு அந்த நற்பாக்கியங்களைத் தருவானாக! ஒரு மனிதனுடைய உள்ளங்கள் செத்துவிட்டால், அத்தகைய மனிதர்களை அல்லாஹ் பார்ப்பதுமில்லை. 
 
அல்லாஹு தஆலா சில மனிதர்களைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எச்சரிக்கை செய்த போது, நபியே! நீங்கள் எந்த மனிதர்களுக்கு எச்சரிக்கை 
 
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
 
ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன. (அல்குர்ஆன் 22 : 46)
 
உள்ளம் இறுகி, உள்ளம் கடினமாகி விட்டால் அந்த உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சம் பிறக்காது. அந்த உள்ளம் தண்ணீர் அற்ற ஒரு கடின பாறை போன்று ஆகிவிடுகின்றது.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இது ஒரு சாதாரணமான விஷயமல்ல. மிகவும் கவனமாக எடுத்து நம்முடைய உள்ளங்களை பண்படுத்துவதற்கு உண்டான அந்த கவனத்தில் நாம் இருக்க வேண்டும். அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எனக்கும், உங்களுக்கும் பண்பட்ட உள்ளத்தை, அல்லாஹ்வின் அச்சம் உள்ள உள்ளத்தை தருவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ " (صحيح البخاري- 6502)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ أَبُو بَكْرٍ: عَنْ أَبِي سِنَانٍ، وَقَالَ ابْنُ الْمُثَنَّى: عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ، عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا ضِرَارُ بْنُ مُرَّةَ أَبُو سِنَانٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا، وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ، فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ، وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ، فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا، وَلَا تَشْرَبُوا مُسْكِرًا» (صحيح مسلم - 1977)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/