உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 2-4 | Tamil Bayan - 447
உள்ளங்கள் இறுகுவது ஏன்?
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளங்கள் இறுகுவது ஏன்? (அமர்வு 2-4)
வரிசை : 447
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 24-02-2017 | 27-05-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் எல்லா முஃமின்களுக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய அன்பையும் அருளையும் அவனுடைய மன்னிப்பையும் வேண்டியவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை உபதேசித்தவனாக, இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
இதற்கு முந்திய ஜும்ஆவின் தொடரில் நமது உள்ளங்களை அல்லாஹ்வின் அச்சத்தைக் கொண்டு மென்மையாக்குவது, நமது உள்ளங்கள் எப்படி இறுகிவிட்டன? என்பதை பற்றிய சில முக்கிய விஷயங்களை பார்த்தோம்.
இன்றும் இன்ஷா அல்லாஹ் அது குறித்த சில முக்கிய விஷயங்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த உள்ளத்தை முன்னிறுத்தி அல்லாஹ்விடத்தில் இந்த உள்ளத்திற்காக கேட்ட துஆக்களையும் பார்ப்போம்.
ஒரு அடியானுடைய உள்ளம் அல்லாஹ்வுடன் தொடர்புடையதாக இருக்கிறதா? இல்லையா? இந்த உள்ளத்தின் தொடர்பு அல்லாஹ்வுடன் உயிருள்ளதாக இருக்கிறதா? அல்லது அல்லாஹ்வுடன் இந்த உள்ளத்தின் உறவு செத்துவிட்டதா? அல்லது பலவீனப்பட்டுவிட்டதா? என்பதை அறிந்து கொள்வதற்கு நம்முடைய அறிஞர்கள் சில சுய பரிசோதனைகளை நமக்கு சொல்கிறார்கள்.
முதலாவதாக, நம்முடைய தொழுகையில் நம்முடைய உள்ளம் இருக்கிறதா? நம்முடைய உடல் எப்படி தொழுகையில் தக்பீர் கட்டுகிறதோ, ஓதுகிறதோ குனிகிறதோ ஸுஜூத் செய்கிறதோ அதுபோன்று நம் உள்ளமும் அதற்கேற்ப மாறுகிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.
தொழுகையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அல்லாஹ்வின் நினைவு தொடர்கிறதா? அல்லது நிய்யத்திற்கு பிறகு உள்ளமும் காணாமல் போய்விடுகிறதா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.
சில அறிஞர்கள் சொல்வதை போல, நம் எண்ணம் எங்கு தீனி கிடைக்குமோ அதைத் தேடி கால்நடைகள் சென்றுவிடுவதைப் போல, அது வேறு ஒரு திசையில் மேய சென்று விடுகிறதா?
இல்லை, அல்லாஹு அக்பர் என்று கூறியதிலிருந்து அல்லாஹ்வின் நினைவுகளை குர்ஆன் வசனங்களை அந்த திக்ருகளை நாம் சொல்ல சொல்ல உள்ளமும் அதை உச்சரித்துக்கொண்டு இருக்கிறதா? பரிசோதனை செய்ய வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தொழுகையை நாம் பார்க்கிறோம்.
وَمَا مَرَّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا فَسَأَلَ، وَلَا بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا فَتَعَوَّذَ
ரஹ்மத்துடைய வசனங்களை கடந்து சென்றால், துஆ கேட்காமல் செல்ல மாட்டார்கள். அதாபுடைய வசனங்களை கடந்து சென்றால் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து பாதுகாப்புத் தேடாமல் அந்த இடத்தை விட்டு அவர்கள் செல்ல மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஹுஃதைபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 871, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய தொழுகை, நபித்தோழர்களுடைய தொழுகை இப்படி உள்ளச்சத்தோடு கலந்த தொழுகையாக இருந்ததை ஹதீஸ்களில் பார்க்கிறோம். குர்ஆனும் அவர்களை அப்படித்தான் வர்ணிக்கிறது.
நம்முடைய உள்ளம் மென்மையாக இருக்கிறதா? இறுகிவிட்டதா? அல்லாஹ்வுடைய நினைவால் பசுமையாக ஈரமாக இருக்கிறதா? அல்லது அல்லாஹ்வுடைய நினைவு இல்லாமல் உள்ளம் காய்ந்திருக்கிறதா? என்பதற்குரிய சுயபரிசோதனைகளில் மிக முக்கியமான பரிசோதனையாக இந்த தொழுகையை முன்னோர்கள் சொல்கிறார்கள்.
ஆகவேதான், அல்லாஹு தஆலா தொழுகையைப் பற்றி கூறுகிறான்:
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
அன்பானவர்களே, அல்லாஹ் சொல்கிறான், யார் தொழுகையில் உள்ளச்சமோடு இருக்கிறார்களோ , அந்த முஃமின்கள் வெற்றி அடைந்து விட்டார்கள் என்று. (அல்குர்ஆன் 23 : 1, 2)
ஒரு முஃப்தியிடத்தில் சென்று, ஒரு மார்க்க சட்ட வல்லுநரிடத்தில் சென்று, நீங்கள் உங்களது தொழுகை சரியா? இல்லையா? என்றால், அவர் இப்படி கேள்வி கேட்பார். சரியாக உளூ செய்தீர்களா? கிப்லாவை முன்னோக்கினீர்களா? ருக்னுகளை சரியாக செய்தீர்களா? என்று கேட்பார். சரியாக செய்தால் உங்கள் தொழுகை சரியாகிவிட்டது என்று சொல்வார்.
ஆனால், அல்லாஹ்விடத்தில் இந்தத் தொழுகை கபூல் ஆகுவதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. நமது தொழுகை ஷரீஆ, ஃபிக்ஹ் சட்டப்படி சரியானதாக இருக்கிறதா என்றால், அதற்குரிய நிபந்தனைகளை அதற்குரிய ருக்னுகளை செய்து விட்டால் தொழுகை கூடிவிடும்.
ஆனால், அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதா? அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா? என்றால், அல்லாஹு தஆலா அந்த தொழுகைக்குரிய அங்கீகாரத்தை இரண்டு விஷயங்களின் மீது அமைத்திருக்கிறான்.
ஒன்று, அல்லாஹ்வுடைய சட்டம் சொல்லியிருக்கக்கூடிய வெளிரங்க ருக்னுகள் சரியாக இருக்க வேண்டும். எதன் அடிப்படையில் ஒரு முஃப்தி தீர்ப்பளிக்கின்றாரோ அதற்கு அப்பாற்பட்டு அல்லாஹ்விடத்தில் நிபந்தனைகள் இருக்கின்றன.
அந்த நிபந்தனைகள் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டவை. அடியான் இந்தத் தொழுகையை யாருக்காக தொழுதான்? என்ற நிய்யத்தை அல்லாஹ் பார்ப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
பணிந்த நிலையில் அல்லாஹ்விற்கு முன்பு (தொழுகையில்) நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
நான் ஒரு பேரரசனுக்கு முன்னால் நிற்கிறேன் என்ற உணர்வு இல்லை என்றால் உள்ளத்தில் பணிவு எப்படி வரும்?
அல்லாஹு தஆலா தொழுகையை அங்கீகரிப்பதற்கு உள்ளத்திற்கு என்று சில அமல்களை வைத்திருக்கிறான். அந்த உள்ளத்தில் இக்லாஸ் இருக்கிறதா? நயவஞ்சகத்தை விட்டும் முகஸ்துதியை விட்டும் பிறருக்கு காண்பிப்பதை விட்டும் இந்த எண்ணங்களை விட்டும் அந்த உள்ளம் சுத்தமாக இருக்கிறதா?
அதற்கு பிறகு இந்த உள்ளத்தில் எந்த அளவு அந்த அர்ஷின் அதிபதியுடைய பயம் மிகைத்திருந்தது, அதற்கேற்ப அல்லாஹுத்தஆலா அந்த தொழுகையின் தரஜாவை உயர்த்திக் கொண்டே போகிறான்.
நம்முடைய உள்ளத்தை சீர் செய்வதற்கு மிக மிகப் பெரிய ஒரு சுய பரிசோதனை களமாக தொழுகையை அல்லாஹ் அமைத்திருக்கிறான்.
ஆகவேதான், மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா தொழுகையைப் பற்றி சொல்கிறான்:
وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
என்னுடைய நினைவுக்காக நீ தொழுகையை நிலை நிறுத்து. (அல்குர்ஆன் 20 : 14)
இந்த தொழுகை உனக்கு எனது நினைவை ஏற்படுத்த வேண்டும். எனது நினைவை உனது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். இதற்காக நீ தொழுகையை நிலை நிறுத்து.
நம்முடைய பரிதாப நிலை, தொழுகையில் தான் நாம் அதிகமாக மறந்து விடுகிறோம். ஓதுவதை மறந்துவிடுகிறோம், திக்ரு செய்வதை மறந்து விடுகிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையில் நாம் ஓதக்கூடிய சூராக்கள், இன்ன சூராக்களை ஓதவேண்டும், அதற்கு பிறகு இந்த திக்ருகளை இந்த எண்ணிக்கையில் ஓத வேண்டும் என்று மூன்றோ ஐந்தோ ஏழோ ஒன்பதோ என்று ஒற்றைப்படையில் ஓத வேண்டும் என்று ஏன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கணக்கிட்டார்கள்?
ஏனென்றால், இந்த எண்ணிகையில் கவனங்களை நாம் கொண்டு வரும்போது, நம்முடைய உள்ளம் அது ஒரு திசையில் சென்று விடாமல் நம்மை ஒருங்கிணைக்கும்.
இந்த உள்ளம் எந்தளவு அல்லாஹ்வின் பயத்தால் மென்மையாக இருக்கிறது என்பதற்கு தொழுகையை நாம் முதலாவது பரிசோதனை களமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் நம் முன்னோர்கள் தொழுகையை அமைத்தார்கள். தொழுகையை சீர் செய்ததால் அவர்களுடைய மற்ற அமல்கள் சீராக இருந்தது. எந்த சமுதாயம் தொழுகையை பாழாக்குமோ அந்த சமுதாயம் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய மற்ற சட்டங்களை பாழாக்கும்.
கலீஃபா உமருல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு இந்த விஷயத்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய அமலிலிருந்து மிகத் தெளிவாக புரிந்திருந்தார்கள்.
எனவேதான், கவர்னர்களுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் மிக முக்கியமான பொறுப்பு தொழுகை. அந்த தொழுகையை யார் பேணி பாதுகாப்பாரோ, அவர் மற்ற பொறுப்புகளையும் கடமைகளையும் பேணி பாதுகாப்பார்.
யார் அந்த பொறுப்புகளை வீணாக்குவாரோ யார் அந்த தொழுகையை வீணாக்குவாரோ, அவர் கண்டிப்பாக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்ற பொறுப்புகளையும் காரியங்களையும் வீணாக்கிவிடுவார்.
நூல் : முவத்தா மாலிக் , எண் : 9.
ஒரு ஜனாதிபதி தனக்கு கீழ் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கு தொழுகையை குறித்து கடிதம் எழுதுகிறார்கள். இந்த தொழுகையை எனக்கு கீழ் இருக்கின்ற ஆளுநர்கள் சரியாக நிறைவேற்றினால், இந்த உம்மத்தை, இந்த உம்மத் சார்ந்த பொறுப்புகளை அவர்கள் சரியாக செய்வார்கள்.
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19 : 59)
வசனத்தின் கருத்து: தொழமாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. தொழுவார்கள். ஆனால், தொழுகையை வீணாக்கி தொழுவார்கள். அலட்சியமாக நிறைவேற்றுவார்கள். உணர்வில்லாமல் நிறைவேற்றுவார்கள். கவனமில்லாமல் நிறைவேற்றுவார்கள். பயம் இல்லாமல் நிறைவேற்றுவார்கள்.
இதைத்தான் அல்லாஹு தஆலா மற்றொரு வசனத்தில் இப்படி சொல்கிறான்:
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
நிச்சயமாக தொழுகை மனிதனை மானக்கேடான அசிங்கமான செயல்களில் இருந்தும் வெறுக்கத்தக்க விலக்கப்பட்ட செயல்களில் இருந்தும் தடுக்கும். (அல்குர்ஆன் 29 : 45)
எந்த தொழுகையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தொழுது காட்டினார்களோ, எந்த தொழுகையை ஸாலிஹீன்கள் தொழுதார்களோ அந்த தொழுகை குறித்து அல்லாஹ் சொல்கிறான்.
இன்று தொழுகை என்ற பெயரில் எதோ சில அசைவுகளை நாம் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பாதுகாப்பானாக. அல்லாஹ் மன்னிப்பானாக.
அல்லாஹு தஆலா ஒரு முஃமினுடைய தொழுகை இப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறான். நாம் பலவீனமான ஈமானோடு மஸ்ஜிதிற்குள் வந்து, மஸ்ஜிதிலிருந்து வெளியே செல்லும்பொழுது, ஈமானில் பலம் மிக்கவர்களாக ஈமானில் வலிமை பெற்றவர்களாக ஈமானிய புத்துணர்ச்சி பெற்றவர்களாக திரும்ப செல்ல வேண்டும்.
ஆனால், நாம் எந்த நிலையில் வருகிறோமோ அந்த நிலையிலேயே திரும்பி செல்கிறோம். இதுதான் நம்முடைய பெரும்பாலானவர்களின் நிலையாக இருக்கிறது.
ஆகவே, நம்முடைய ஸலஃபுகள் கூறிய இந்த வார்த்தையை மிக ஆழமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, தொழுகை நம்முடைய உள்ளத்தை பரிசோதனை செய்வதற்கு, உள்ளத்தை மென்மையாக்குவதற்கு மிக முக்கியமான ஒரு பரிசோதனை களம்.
அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய குர்ஆன். அந்த திருவேதத்தை ஓதும் போது நம்முடைய உள்ளம் எப்படி இருக்கிறது? குர்ஆனை ஓதும் போது, அல்லாஹ்வை அவனுடைய அழகிய திருப்பெயர்களை கொண்டு துதித்து திக்ரு செய்யும்போது, நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது அன்பு எப்படி ஏற்படுகிறது?
அல்லாஹ் வுடைய பயம் எந்தளவு உருவாகிறது? நெருக்கம் எந்தளவு உருவாகிறது? உள்ளத்தினுடைய நிலமை எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது? அதை வைத்து நம்முடைய உள்ளத்தின் நிலையை நாம் முடிவு செய்யலாம்.
இந்த உள்ளம் மென்மையாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? இந்த உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் ஈரமாக இருக்கிறதா? அல்லது இந்த உள்ளம் காய்ந்துவிட்டதா? என்று.
ஆகவேதான், அல்லாஹ்வுடைய இந்த குர்ஆனை ஓதும் போது நம்முடைய உள்ளத்தின் நிலையை ஆராய வேண்டும்.
இன்று ஒரு பெரிய பிரச்சினை, குர்ஆன் ஓதுவது என்பது தனி. அதனுடைய அர்த்தங்களை புரிவது என்பது தனி. இப்படியாக இரண்டு கூறாக பிரித்து விட்டோம்.
அரபிமொழியை நாம் படிக்காத காரணத்தால். அதனுடைய அரபி வாசகங்களைமட்டுமே ஓதுகிறோம். இன்னொரு பக்கம், அதனுடைய அர்த்தங்களை கருத்துகளை தெரிவதற்காக நேரம் ஒதுக்குகிறோமா? என்றால் இல்லை.
அல்லது அதனுடைய அர்த்தங்களை தெரிந்திருப்பவர்கள். அர்த்தங்களை மொழிபெயர்ப்பில் படித்திருப்பவர்கள் குர்ஆனுடைய வாசகங்களை ஓதுகிறார்களா என்றால் அப்படியும் சில பேர் இருப்பதில்லை. இப்படியாக இரண்டு ஒரு முரண்பட்ட சூழ்நிலையில் மக்கள் இருப்பதை பார்க்கிறோம்.
குர்ஆனின் திருவாசகங்களை அரபி மொழியில் ஓத வேண்டும். அதனுடைய அர்த்தங்களையும் பொருள்களையும் உணர்ந்தவர்களாக.
குர்ஆன் ஓதும் போது உள்ளத்தின் நினைவு, அந்த குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாம், இது அல்லாஹ் பேசிய பேச்சு என்ற உணர்வில் நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறோமா?
இந்த குர்ஆன் ஓதும் போது அல்லாஹ்வுடைய வசனங்கள், அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, உள்ளம் அதற்கு கீழ்படிகிறதா? அல்லாஹ்வுடைய தண்டனைப் பற்றிய எச்சரிக்கை வரும்போது உள்ளத்தில் பயம் ஏற்படுகிறதா? இப்படிப்பட்ட உணர்வுகளோடு அல்லாஹ்வுடைய குர்ஆனை நாம் ஓத வேண்டும்.
அதுபோன்று திக்ரு செய்யும்போது, அந்த திக்ருகளை சொல்ல சொல்ல அல்லாஹ்வின் மீது உண்டான அன்பு நமக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தால், அல்லாஹ்வுடைய பயத்தால் கண்கள் கலங்க ஆரம்பித்தால், உள்ளம் மென்மையாக அல்லாஹ்வுடைய நினைவால் அல்லாஹ்வுடைய அச்சத்தால் ஈரமுள்ளதாக இருக்கிறது.
அப்படி இல்லாமல், இன்று டேப்ரிகார்டரில் ஓதுவதைப் போல கேசட்டுகளில் ஓதுவதைப் போல நம்முடைய நாவுகள் ஓதுகின்றன.
உள்ளத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால், நம்முடைய உள்ளம் இறுகிவிட்டது. நம்முடைய உள்ளம் கடினமாகிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் தான் நம்முடைய உள்ளம் இருக்கிறதென்றால், கண்டிப்பாக இந்த உள்ளம் ஒரு பெரிய சிகிச்சைக்கு தேவை உள்ள உள்ளமாக இருக்கிறது.
இந்த உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு வற்றிவிட்டது. அல்லாஹ்வுடைய பயம் முற்றிலுமாக காய்ந்துவிட்டது என்பதற்கு ஒரு அர்த்தமாகும், அடையாளமாகும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அதுபோன்றுதான் நம்முடைய தொழில் துறைகளில் வியாபாரங்களில் ஈடுபடும்போது, காசு பணங்களுடைய புழக்கங்கள் நம்முடைய கைகளில் வரும்பொழுது, நம்முடைய உள்ளம் எப்படி இருக்கிறது?
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ
பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்து அவர்களைத் திருப்பிவிடாது. (அல்குர்ஆன் 24 : 37)
நம்முடைய கொடுக்கல் வாங்கலில் நாம் ஈடுபடும்பொழுது ஹலால் ஹராமுடைய பயம் வருகிறதா? ஒரு பொருளை விற்கும் பொழுது ஒரு பொருளை வாங்கும் பொழுது அது தொடர்பாக வர்த்தக பேச்சுகள் நாம் நடத்தும் போது, ஒரு வியாபாரிக்கோ அல்லது நம்மிடத்தில் வாங்கக்கூடிய நம்முடைய ஒரு கஸ்டமருக்கோ நாம் ஒரு வாக்கு கொடுக்கும் பொழுது உண்மையை சொல்கிறோமா? வியாபாரத்திலும் அல்லாஹ்வை பயந்து வியாபாரம் செய்கிறோமா?
வீட்டிற்குள், தொழுகையில் அல்லாஹ்வை பயப்படுவது மட்டும் பெரிய விஷயமல்ல. பொருளாதாரத்தில் அல்லாஹ்வை பயப்படுவது, இபாதத்தில் அல்லாஹ்வை பயப்படுவதை விட மிகப்பெரியது.
ஆகவேதான், அல்லாஹு தஆலா பொருளாதாரத்தைப் பற்றி சொல்லும் பொழுது, யார் பொய் பேசுகிறார்களோ, அல்லது கொடுத்த வாக்கை மீறி ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை மீறுகிறார்களோ அது முனாஃபிக்குகளுடைய அடையாளம்.
யாரிடத்தில் அந்த அடையாளம் பெற்றுக் கொள்ளப்படுகிறதோ அவரிடத்தில் அந்த அளவு நயவஞ்சகம் இருக்கும். இந்த மூன்று குணங்கள் அல்லது மற்றொரு ஹதீஸின் படி அந்த நான்கு குணங்களும் அவரிடத்தில் இருந்தால் அவர் முனாஃபிக்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
" أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ "
பேசினால் பொய் பேசுவான். வாக்கு கொடுத்தால் மீறுவான். அமானிதங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான். ஒப்பந்தம் செய்தால் அதை முறித்து விடுவான்.
இப்படிப்பட்டவன் ஒரு சுத்த முனாஃபிக். அவன் தொழுது நோன்பு வைத்து தன்னைத் தானே தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டாலும் சரியே.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 34, 3178.
ஒருவன் கொடுக்கல் வாங்கலில் அல்லாஹ்வை பயப்படவில்லை என்றால், அவனுடைய உள்ளமும் அல்லாஹ்வுடைய பயத்தின் விஷயத்தில் காய்ந்து விட்டது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வாக்குகளின் விஷயத்திலும், கொடுக்கல் வாங்கலிலும், மிக மிக பரிசுத்தமானவர்களாக, மிகத் தூய்மையானவர்களாக, மிக பயந்தவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹு தஆலா நபிமார்களைப் பற்றி சொல்லும் பொழுது உயர்வாக சொல்கிறான்.
إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் சொல்கின்றான. அவர்கள் வாக்கில் சுத்தமானவர்களாக இருந்தார்கள். உண்மையாளர்களாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 19 : 54)
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்று நாம், இந்த பொருளாதாரம், நம்முடைய தொழில் துறை என்று வந்துவிட்டால், நம்முடைய நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்றால் நம்முடைய தக்வா நம்முடைய இஸ்லாம் நம்முடைய ஈமான் இதுவெல்லாம் மஸ்ஜிதோடு முடிந்து விட்டது என்று வைத்திருக்கிறோம்.
இனி இந்த வியாபாரத்தை இந்த கொடுக்கல் வாங்கலை, இந்த வர்த்தக ஒப்பந்தங்களை நான் எப்படி வேண்டுமானாலும், சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.
இப்படியாக, கொடுத்த வாக்குகளை தட்டிக் கழிக்கின்ற, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற, பல முஸ்லிம்களை நமது சமுதாயத்திற்குள் பார்க்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.
இவர்களுடைய நிலைப்பாடு என்ன என்றால், நம்முடைய தொழுகை நம்முடைய நோன்பைப் பற்றி தான் அல்லாஹ் விசாரிப்பான். இந்த வியாபாரங்களை பற்றி எல்லாம் அல்லாஹ் நம்மிடத்தில் கேள்வியே கேட்க மாட்டான். இதுவெல்லாம் நம்முடைய இஷ்டத்திற்கு அல்லாஹ் விட்டு விட்டான் என்று எண்ணுகிறார்கள்.
அல்லாஹு தஆலா அழகாக சொல்வதை கவனியுங்கள்.
وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا
நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்கை முழுமையாக நிறைவேற்றுங்கள். அந்த வாக்கை குறித்து உங்களிடத்தில் மறுமையில் விசாரிக்கப்படும். (அல்குர்ஆன் 17 : 34)
ஒருவருக்கு ஐந்து ரூபாய் கடன் வைத்தாலும் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ القِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ»
யார் ஒருவன் தன்னுடைய முஸ்லிமான சகோதரனின் ஒரு ஜான் இடத்தை அபகரிப்பானோ, நாளை மறுமையில் ஏழு பூமிகளில் இருந்து அது அவனுக்கு மாலையாக அணிவிக்கப்படும்.
அறிவிப்பாளர் : ஸஈத் இப்னு ஜெய்து ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3198.
இன்னுமொரு ஹதீஸை படியுங்கள். மிக பயப்பட வேண்டிய ஹதீஸ். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
இதெல்லாம் அல்லாஹு தஆலா மறுமையில் நடத்திக் காட்டுகின்ற அந்த நிகழ்வுகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொல்கிறார்கள்.
ஒரு மனிதன் அந்த ஸிராத் பாலத்தை நெருங்குகின்ற நேரத்தில் தடுத்து வைக்கப்படுவிடுவான். இவன் யார்? இவனுடைய விசாரணைகள் எல்லாம் முடிவடைந்து இவன் சொர்க்கத்திற்கு செல்லலாம்.
இவன் இப்போது செய்ய வேண்டியது என்ன? இவன் இப்போது ஸிராத் பாலத்தை கடக்க வேண்டியதுதான் என்ற ஒரு கட்டம் மட்டும் மீதி இருக்கும். அவன் மிகவும் சந்தோஷம் அடைந்தவனாக, தப்பித்தோம் என்று அந்த ஸிராத் பாலத்தை நோக்கி அவன் செல்லும் பொழுது அந்த இடத்தில் அவன் தடுக்கப்பட்டுவிடுவான்.
இன்னும் ஒரு விசாரணை உனக்கு பாக்கி இருக்கிறது. அதென்ன விசாரணை?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
தன்னுடைய சகோதரனிடமிருந்து ஒரு மிஸ்வாக் குச்சியை அவனுடைய அனுமதி இல்லாமல் எடுத்ததற்காக.
முஸ்னப் இப்னு அபி ஷைபா எண்: 22142, முவத்தா இமாம் மாலிக் எண்: 2693
யாரிடமிருந்து எடுத்தாயோ அவன் பொருந்திக் கொள்கிறானா? இல்லை, அதற்கு சமமாக உன்னிடத்தில் நன்மையை கேட்கிறானா? அந்த ஒரு கணக்கு வழக்கு மீதம் இருக்கிறது. அதை முடித்ததற்க்கு பிறகு உன்னுடைய நிலையை பார்க்கலாம் என்று தடுத்து நிறுத்தப்படுவான்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நிகழ்வை இங்கு கவனிக்க வேண்டும். (இவர்களெல்லாம் ஹதீஸுகளை படித்தார்கள். உணர்ந்தார்கள். உள்ளத்தில் உள்வாங்கினார்கள். அமல் செய்வதற்கு, அதற்குரிய தியாகங்களை செய்தார்கள்.)
இராக்கில் இருக்கின்ற இந்த இமாம், தன்னுடைய ஒரு ஆசிரியரிடத்தில் கல்வி படிப்பதற்காக, டமாஸ்கஸ் -சிரியா செல்கிறார்கள். கல்வி படித்துக் கொண்டிருக்கும் போது ஹதீஸுகளை எழுதுகின்ற தேவை ஏற்படும்.
தன்னுடைய ஒரு பேனா- எழுதுகோல் அந்தக்காலத்தில் மூங்கில் குச்சி அல்லது ஒரு குச்சியை சார்ப்பாக தீட்டி மை தொட்டு எழுதுவார்கள். அந்த குச்சி உடைந்துவிட்டது. கையில் புது குச்சி இல்லை. எழுத வேண்டும்.
பக்கத்திலிருந்த தன்னுடைய சக மாணவரிடத்தில் உங்களிடத்தில் அதிகப்படியான குச்சி இருக்கிறதா? என்று கேட்கிறார். அவர் எடுத்துக் கொடுக்கிறார். அவர் எழுதுகிறார். ஓரிரு நாட்கள் கற்க வேண்டிய ஹதீஸுகளை கற்றதற்குப் பிறகு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இமாம் அந்த குச்சியை திரும்ப கொடுக்க மறந்து விடுகிறார்கள். தன்னுடைய புத்தகங்களோடு, எழுதிய குறிப்புகளோடு மடித்துக் கொண்டு இராக் வந்துவிடுகிறார்கள்.
இரண்டுக்குமிடையே ஏறக்குறைய குறைந்த பட்சம் மூவாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவு இருக்கிறது. தன்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு எழுதுகோல் தன்னிடம் இருப்பதை பார்த்துவிட்டு வேதனைப்படுகிறார்கள். அழுகிறார்கள்.
அந்த குச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு இராக்கிலிருந்து திரும்ப சிரியாவிற்கு வருகிறார்கள். (கழுதை, கோவேறுக் கழுதை, குதிரை அல்லது ஒட்டகம் அல்லது கால்நடை) இப்படியாக பயணம் செய்து வந்து ஜாமிஆ மஸ்ஜிதில் அந்த ஆசிரியரின் வகுப்பில் அந்த மாணவரைத் தேடி, குச்சியை கொடுத்து, நான் காலதாமதம் செய்து விட்டேன் என்று மன்னிப்பு கோரி விட்டு அவர்கள் தன்னுடைய ஊருக்குத் திரும்புகிறார்கள்.
இன்று, நம்முடைய மக்கள் சர்வ சாதாரணமாக காஃபிர்களை போன்று சொல்கிறார்கள். சத்தியமெல்லாம் சர்க்கரைப் பொங்கலைப் போன்று என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
«مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ»
ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்குகிறான் .அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். ஒரு மனிதன் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினால் அல்லாஹ் அவனை அப்படியே கைவிட்டு விடுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2387.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ஒரு ஷஹீத் உடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் கடனைத் தவிர.
ஷஹீத் -அல்லாஹ்வுடைய பாதையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு முஃமின். அவனுடைய இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பு அவனுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், கடனைத் தவிர. (1)
அறிவிப்பாளர் : அபூகதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1885.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜனாஸா வந்தால் முதலில் இந்த ஜனாஸாவின் மீது கடன் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
தன்னிடத்தில் அதற்குரிய வசதி இருந்தால் நான் அதை பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்வார்கள். அப்போது தன்னிடத்தில் அதற்குரிய வசதி இல்லை என்றால், இவருடைய இந்த கடனை நிறைவேற்றுவற்கு யாராவது பொறுப்பேற்கிறார்களா? என்று கேட்பார்கள். யாரும் பொறுப்பேற்கவில்லை என்றால், நான் இந்த ஜனாஸாவிற்கு தொழுகை நடத்த மாட்டேன் என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள். (2)
அறிவிப்பாளர் : ஸலமா இப்னு அல்அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2289.
இன்று கடன் வாங்குவது என்பதெல்லாம் சர்வசாதாரணமாக ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது. அதுவும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவது என்பது அதுவும் ஒரு சாதாரண செயலாக ஆகிவிட்டது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இந்த கொடுக்கல் வாங்கலில் நான் சுத்தமாக இருக்கின்றோமா? பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது?
அந்த நேரம் நம்முடைய உள்ளத்தை நாம் அலசிப் பார்ப்பதற்கும், உள்ளத்தை அல்லாஹ்வின் அச்சத்தால் அந்த உள்ளம் ஈரமாக பசுமையாக இருக்கிறதா என்பதை உரசி பார்ப்பதற்கும் மிக முக்கியமான ஒரு நிலை.
அதுபோன்று தான் ஏழை எளியவர்களை பலகீனமானவர்களை சோதனைகளில் சிக்குண்டவர்களை பார்க்கும் போது அவர்கள் மீது நம்முடைய உள்ளத்தில் இரக்கம் பிறக்கிறதா?
அவர்களைப் பார்க்கும்போது, நம்முடைய உள்ளத்தில் ஒரு கருணை, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை வருகிறதா? நம்மால் முடிந்த எதையாவது அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறதா? அப்படி பிறந்தால் உள்ளம் ஈரமாக இருக்கிறது. அப்படி இல்லையா உள்ளம் கடினமாகிவிட்டது. உள்ளம் காய்ந்து விட்டது என்று பொருள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இப்படிப்பட்ட இந்த சூழ்நிலைகளில் இதுபோன்ற நிலைகளில் ஒரு மனிதனுடைய உள்ளம் அங்கே ஈரம் ஆகவில்லை என்றால், உள்ளம் துடிக்கவில்லை என்றால், அவனுடைய உள்ளம் இறந்துவிட்டது. அவன் தனக்குத்தானே இரங்கல் சொல்லிக் கொள்ளட்டும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
இதுபோன்று இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. உங்களுடைய கண் பார்வைக்கு முன்பு அல்லாஹ்வுடைய சட்டத்தை ஒருவர் மீறும்போது, அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட வரம்புகளை ஒருவர் தகர்க்கும் போது, அல்லாஹ் தடுத்த ஒரு பெரும் பாவத்தை ஒருவர் செய்யும் போது நீங்கள் அதைப் பார்த்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள்?
பார்த்தும் கண்டும் காணாமல் சென்றால், உள்ளம் செத்து விட்டது என்று பொருள்.
«مَا ضَرَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ، وَلَا امْرَأَةً، وَلَا خَادِمًا، إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللهِ، وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ، فَيَنْتَقِمَ مِنْ صَاحِبِهِ، إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ»
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்காக ஒரு நாளும் பலி வாங்கியது கிடையாது. தனக்காக ஒரு நாளும் கோபப்பட்டதே கிடையாது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கோபம் வருகிறது என்று சொன்னால், அல்லாஹ்வுடைய கட்டளையை ஒருவர் மீறும் போது மட்டும் தான்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2328.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள். தனது வேதனையை ஒரு மனைவிக்காக பெரிய அளவு சகித்தார்கள் என்றால், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்காக தான்.
வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். சரி என்று அழைத்துக் கொண்டு, தனது போர்வையால் போர்த்திக் கொண்டு, அவர்களுடைய கன்னத்தை தனது புஜத்தில் வைத்தவர்களாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நிற்கிறார்கள்.
ஆயிஷா போதுமா? என்று கேட்கிறார்கள். இல்ல போதாது என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய இரண்டு கால்களிலும் மாற்றி மாற்றி நிற்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதருடைய கால் வலி ஏற்படுகிறது. கேட்கிறார்கள் போதுமா? போதாது.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الحَبَشَةِ يَلْعَبُونَ فِي المَسْجِدِ، حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَسْأَمُ»
நான் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு நேரம் நிற்க்கவில்லை. எனக்கு ரசூலுல்லாஹ் உடைய உள்ளத்தில் எந்த அளவு இடம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இப்படி செய்தேன் என்று.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5236.
அந்தளவு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மீது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பு பாசம் வைத்திருந்தார்கள்.
இதே ஆயிஷா ஒருநாள் சொல்கிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய இன்னொரு மனைவியைப் பார்த்து, ஸஃபிய்யாவை சுட்டிக்காட்டி 'அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் போதும்.' என்பதாக சபியாவின் உயரம் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டி, குட்டையானவர் என்பதாக கையால் இஷாரா செய்து நக்கலாக சொல்லி விடுகிறார்கள்.
அவ்வளவுதான். தனது பிரியமான அன்பான மனைவி என்பதற்காக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சகித்துக் கொண்டு இருக்க வில்லை.
உடனே சொன்னார்கள்:
«لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ الْبَحْرِ لَمَزَجَتْهُ»
ஆயிஷா! நீ சொன்ன இந்த வார்த்தையை கடலில் கொட்டினால் கடல் கெட்டுப் போய்விடும்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : எண்: 4875.
நம்முடைய நிலை எப்படி இருக்கிறது? வீட்டில் மனைவி தொழுவதில்லை. மனைவி இசை கேட்கிறார். சினிமா பார்க்கிறார். ஆடம்பரமான புர்காவை அணிந்து கொண்டு வெளியே செல்கிறார். அல்லது வெளியே செல்லும் பொழுது மறைக்க வேண்டிய பகுதிகளை சரியாக மறைப்பதில்லை.
எத்தனையோ பெண்கள் கொலுசுகளை, சலங்கைகளை தட்டிக் கொண்டு, கால்களை தட்டிக் கொண்டு வெளியே செல்கிறார்கள். தங்களுடைய ஆபரணங்கள் எல்லாம் வெளியே தெரியும்படி செல்கிறார்கள்.
இதையெல்லாம் அந்த வீட்டில் உள்ள ஆண்கள் பார்க்காமல் இருக்கிறார்களா? பார்க்காமல் செல்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இருந்தும் தட்டிக் கேட்பதில்லை.
அப்படி என்றால் உள்ளம் செத்துவிட்டது. உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் எடுபட்டு விட்டது. இப்படி நிறைய உதாரணங்களை நீங்கள் எடுத்து செல்லுங்கள்.
கலிஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வார்த்தையை சொல்லி முடிப்போம்.
கலீபா உமர் சொல்கிறார்கள்: என்னுடைய நண்பர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர், ரொம்பவும் விசுவாசியானவர், என்னுடைய தவறை எனக்கு முன்னால் எடுத்து சொல்லி திருத்தக் கூடியவர்.
தபகாத் குப்ரா- இப்னு ஸஃது: 3/222 3/293
இதுவெல்லாம் ஈமானுடைய பண்பு.
முஃமின்கள் எப்படி இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்:
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
முஃமின்கள் ஒருவருக்கொருவர் நேசர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (அல்குர்ஆன் 9 : 71)
நன்மை செய்ய வேண்டிய தருணத்தில் அந்த நன்மையை நாம் ஏவவில்லை என்றால்? நீங்கள் பஜ்ருக்கு வருகிறீர்கள், உங்கள் பிள்ளைகள் தூங்குகிறார்கள், உங்கள் மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறார். எழுப்பாமல் நீங்கள் செல்கிறீர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக.
நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது; இந்த தொழுகையில் நான் அல்லாஹ்வை நெருங்கி விட்டேன் என்று. எனது மனைவி மக்களுக்கு உரிய கட்டளையை நான் ஏவாத காரணத்தால், அல்லாஹ்விற்கு பாவம் செய்தவனாக மாறு செய்தவனாக தொழுகைக்கு செல்கிறேன்.
அல்லாஹ்வுடைய கட்டளை என்ன?
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
முஃமின்களே! உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 66 : 6)
மனைவியை பிள்ளைகளை படுக்கையில் விட்டு விட்டு தூங்கியவர்களாக அவர்களை எழுப்பாமல் சென்றால், அதன் அர்த்தம், பாவம் செய்தவர்களாக தொழுகைக்கு செல்கிறோம்.
எத்தனையோ கலீஃபாக்களின் வரலாறுகளை பாருங்கள். அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருக்கும்போது கூஃபாவில் வீட்டிலிருந்து மஸ்ஜிதிற்கு செல்லுகின்ற வழியில் அத்தனை வீட்டார்களையும் தொழுகைக்கு எழுப்பிவிட்டவர்களாக செல்வார்கள்.
தனது குடும்பத்தாரை மட்டுமல்ல, முஹல்லாவில், தனது வீட்டிலிருந்து மஸ்ஜிது வரை உள்ள அத்தனை பேரையும் எழுப்பி விட்டவர்களாக செல்வார்கள்.
(அல்பிதாயா வன்னிஹாயா)
முஆவியா ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருக்கும்போது மதீனாவிற்கு வருகிறார்கள். அங்கே சடைமுடி என்று சொல்வார்கள். பெண்களுக்கு முடிகுறைவாக இருந்தால் இடுமுடி கட்டுவார்கள்.
அதனுடைய ஒரு சிறிய பகுதியை ஓரிடத்தில் பார்த்துவிடுகிறார்கள். அதை அந்த தெருவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து, ஜும்ஆ மேடையில் நின்று கொண்டு, மதீனாவின் அறிஞர்களை பாரத்து கேட்கிறார்கள்.
இதோ இந்த முடியை மதீனாவின் தெருவில் நான் பார்த்தேன். உங்களில் அறிஞர்கள் இல்லையா? இதை தடுப்பவர்கள் இல்லையா? இதை அணிபவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்ததை நான் பார்த்தேன் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அறிவிப்பாளர் : முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5932.
இன்று, மனைவி தனது முகத்தை எல்லாம் அலங்கரித்துக் கொண்டு, பார்ப்பவர்களின் கண்களை கவரும்படியான புர்காவை அணிந்துக் கொண்டு, அதிலும் நறுமணங்களை பூசிக்கொண்டு செல்கிறார். ஆனால், கணவன் கண்டிப்பதில்லை.
இன்னொரு விஷயம், வெளிநாட்டில் இருக்கக்கூடிய நம்முடைய உறவுகள், தங்களுடைய மனைவிமார்களுக்கு செல்வங்களை கணக்கு வழக்கு இல்லாமல் அனுப்புகிறார்கள்.
நம்முடையடைய சமுதாய பெண்களில் பலர், அந்த செல்வங்களை வங்கிகளுக்கு எடுத்து சென்று "ஃபிக்ஸட் டெபாசிட் ஃபார் இன்ட்ரஸ்ட்" வட்டிக்காக ஃபிக்ஸட் டெபாசிட்களில் வைக்கிறார்கள்.
எந்த அளவு நமது சமுதாயம் கண்காணிக்கப் படாமல் சென்று விட்டது!
ஆனாலும், தட்டிக் கேட்கின்ற, எதிர்த்து கேட்கின்ற மனப்பக்குவம் இல்லை என்றால், அங்கே ஈமான் செத்துவிட்டது, உள்ளம் காய்ந்துவிட்டது என்று பொருள்.
இதுபோன்றுதான், கணவன் செய்யக்கூடிய தவறுகளை மனைவி சொல்லவில்லை என்றாலும், கணவன் தொழுகாதவனாக இருக்கிறான், கடமைகளை பாழாக்கக்கூடியவனாக இருக்கிறான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மனைவி தன்னுடைய இபாதத் என்று மட்டும் அவள் இருந்தால், அவளுடைய உள்ளமும் விஷயத்திலும் ஈமான் செத்து தான் இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை நினைவு கூறுங்கள். நபியவர்கள் சொன்னார்கள்:
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»
உங்களில் யார் ஒரு தீமையை பார்ப்பாரோ அவர் தனது கரத்தால் அதை மாற்றட்டும். முடியவில்லையா? தன்னுடைய நாவால் அதில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும். அதுவும் முடியவில்லையா? தன்னுடைய உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இது ஈமானிலேயே மிக பலவீனமான ஒரு நிலை.
அறிவிப்பாளர் : அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 49.
அந்த தீய செயலை தன்னுடைய கரத்தாலோ நாவாலோ தடுக்க முடியாத நிலையில், அதைவிட்டு வெறுத்து ஒதுங்குவது இது ஈமானின் பலவீனம் என்று சொன்னார்கள். இதற்கு பிறகு ஈமானில் எந்த ஒரு நிலையும் இல்லை என்றும் சொன்னார்கள்.
நாம் எந்த ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்முடைய ஈமானை உறுதி படுத்துவானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக. நம்முடைய கல்பை அல்லாஹ்வுடைய நினைவில் எப்போதும் பசுமையானதாக ஆக்குவானாக!
நம்முடைய அறிஞர்கள் சொன்ன இந்த விஷயங்களை நாம் கருத்தில் கொண்டு, நம்முடைய உள்ளங்களை சீர் செய்து, நம்முடைய உள்ளங்களை அல்லாஹ்வின் அச்த்தில் மென்மையாக்குவதற்குரிய வழிகளையும் நாம் அறிந்து கொள்வோமாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ سَمِعَهُ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَامَ فِيهِمْ فَذَكَرَ لَهُمْ أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللهِ، وَالْإِيمَانَ بِاللهِ أَفْضَلُ الْأَعْمَالِ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللهِ، تُكَفَّرُ عَنِّي خَطَايَايَ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللهِ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ»، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ قُلْتَ؟» قَالَ: أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللهِ أَتُكَفَّرُ عَنِّي خَطَايَايَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ، إِلَّا الدَّيْنَ، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ قَالَ لِي ذَلِكَ»، (صحيح مسلم - 1885)
குறிப்பு 2)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ: أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ، وَهُوَ عَلَى المِنْبَرِ، وَهُوَ يَقُولُ، وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ بِيَدِ حَرَسِيٍّ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ: «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ» (صحيح البخاري- 5932)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/