உள்ளங்கள் இறுகுவது ஏன் - அமர்வு 1-4 | Tamil Bayan - 447
உள்ளங்கள் இறுகுவது ஏன்?
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளங்கள் இறுகுவது ஏன்? (அமர்வு 1-4)
வரிசை : 447
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 10-02-2017 | 14-05-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தையும் அச்சத்தையும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னித்தருள்வானாக! அல்லாஹ்வுடைய நெருக்கத்தையும் அன்பையும் அருளையும் எனக்கும் உங்களுக்கும் எல்லா முஃமின்களுக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.
இன்று நாம் இந்த ஜும்ஆவுக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு, நமது உள்ளங்கள் ஏன் இறுகுகின்றன? நமது இதயங்கள் ஏன் கடினமாகுகின்றன?
நம்முடைய வணக்க வழிபாட்டில் நம்மில் பலரால் அல்லாஹ்வின் அச்சத்தை உணர முடியாமல் போகிறது. தொழும்போது உள்ளத்தில் என்ன ஒரு நடுக்கமும், அல்லாஹ்வுடைய பயமும்ஏற்பட வேண்டுமோ, அந்த பயத்தை அந்த நெருக்கத்தை உணர முடியாமல் போகிறோம்.
அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதுகிறோம். அப்படி ஓதும்போது உள்ளங்கள் இளக வேண்டும். கண்களிலிருந்து கண்ணீர் வர வேண்டும்.ஆனால், நமக்கு அப்படி வருவதில்லை.
வியாபாரங்கள், தொழில் துறைகள் செய்கிறோம். அவ்வாறு செய்யும்போது ஹராமை விட்டு கண்டிப்பாக விலகித்தான் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை.
சில நேரங்களில் சந்தேகத்திற்கு இடமான குழப்பமான விஷயங்கள் வரும்பொழுது, அது நம்மை ஹராமில் தள்ளி விடக்கூடாது என்பதற்காக அந்த குழப்பமான சந்தேகமான விஷயங்களை விட்டும் நாம் விலகி இருக்க வேண்டும்.
ஆனால், நம்மில் பலரால் அப்படி விலகி இருக்க முடிவதில்லை. அது போன்று அடியார்களுடைய ஹக்குகளை நாம் பேண வேண்டும். ஆனால், பல சூழ்நிலைகளில் அடியார்களின் ஹக்குகளில் நாம் அநீதம் செய்து விடுகிறோம்.
மனைவி விஷயத்தில், பிள்ளைகளின் விஷயத்தில், சகோதரர்களின் விஷயத்தில், சகோதரிகளின் விஷயத்தில், தாய் தந்தையர்கள் விஷயத்தில், அண்டை வீட்டார் விஷயத்தில் இப்படி அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் நம்மோடு தொடர்புடைய பலருடைய ஹக்குகளில் நாம் வரம்பு மீறி விடுகிறோம்.
அது போன்று, நமது நண்பர்கள், சகோதரர்கள் மீது நமக்கு எப்போதும் நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் அவர்கள் மீது நமக்கு தீய எண்ணங்கள், கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
நமது உறவுகளை சேர்த்து வாழ வேண்டும். ஆனால், சில நேரங்களில் உறவு முறைகளை முறித்து விடுகிறோம். இப்படியாக பல சூழ்நிலைகளை நாம் பார்க்கிறேம்.
இந்த நிலைமை ஒரு அடியானுடைய உள்ளம் இறுகி விட்டதை உணர்த்துகிறது. ஒரு அடியானுடைய உள்ளம் அல்லாஹ்வுடைய நினைவை விட்டு தூரமாகி, அல்லாஹ்வின் பயத்தை விட்டு தூரமாகி, அந்த உள்ளம் மென்மையாக, இலகியதாக இருப்பதற்கு பதிலாக உள்ளம் இறுகி விட்டது,உள்ளம் கடினமாகி விட்டது என்பதை இந்த நிலை உணர்த்துகிறது.
அல்லாஹ் தஆலா நம்மீது இரக்கத்தோடு கூறுகிறான்.
وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ
மேலும், அவர்கள் -முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.(அல்குர்ஆன் 57 : 16)
தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கில் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டு, வேதங்கள் கொடுக்கப்பட்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட ஒரு சமுதாயம்.
அவர்கள் அந்த வேதத்தை விட்டும், தூதர்களின் போதனைகளை விட்டும் தூரமாக தூரமாக அவர்களது உள்ளங்கள் இறுகி விட்டன.
குர்ஆன் 1400ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்டிருக்கலாம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 1400ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம்.
ஆனாலும்,அல்லாஹ் இறக்கிய அந்த வேதம் இன்றும் நமக்கு மத்தியில் பசுமையாக இருக்கிறது. இன்றும் நமக்கு மத்தியில் அதன் ஈரம் காயாமல் இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய போதனைகள், அவர்களின் அறிவுரைகள் நமக்கு மத்தியில் இன்றும் உயிரோட்டமாக நம்மை எச்சரித்து கொண்டிருக்கின்றன.
நாம் எப்படி இந்த வேதத்தை விட்டு அந்த தூதரின் வழிமுறையை விட்டு தூரமாக முடியும்?
அல்லாஹ் தஆலா இஸ்ரவேலர்களை கோபமாக,கடிந்து கூறும்பொழுது எத்தனை அத்தாட்சிகளை பார்த்தாலும், நீங்கள் அறிவுரை பெறுவதில்லை.
எத்தனை அத்தாட்சிகளை கண்கூடாக பார்க்கிறீர்கள். உங்களுக்கு என்னென்ன விருப்பமோ, நீங்கள் எதை கேட்கிறீர்களோ, அதையெல்லாம் அல்லாஹு தஆலா காட்டிக் கொண்டிருக்கிறான்.
உணவு வேண்டுமா? மன்னு ஸல்வா இறங்குகுறது. உங்களுக்கு நிழல் வேண்டுமா? மேகத்தை அல்லாஹ் நிழல் தரச்செய்கிறான். தண்ணீர் வேண்டுமா? பாறையிலிருந்து தண்ணீர் ஓடோடி வருகிறது. உங்களுக்கு எதிரிகளின் மீது வெற்றி வேண்டுமா? நீங்கள் ஒன்றுமே செய்யாமல் பரம எதிரியை கொடூர எதிரியை அல்லாஹ் தஆலா உங்களுடைய கண்களுக்கு முன்னால் எந்த கடலில் உங்களை அல்லாஹ் பாதுகாத்தானோ, அதே கடலில் நீங்கள் பார்த்து கொண்டிருக்க உங்களது எதிரிகளை அல்லாஹ் மூழ்கடித்தான்.
பார்க்க : அல்குர்ஆன் 2 : 57, 7 : 160.
ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய குடும்பத்தார்களுக்கும் சோதனைகளுக்கு மேல் சோதனை. வெட்டுக்கிளிகளை அல்லாஹ் அவர்கள் மீது சாட்டினான். அல்லாஹ் தஆலா பேனை அவர்கள் மீது சாட்டினான். அவர்கள் மீது இரத்தத்தை சாட்டினான். அவர்கள் மீது தவளைகளை சாட்டினான். இஸ்ரவேலர்களோ, பாதுகாப்பாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் கருத்து 7 133)
ஆனாலும், இத்தனை அத்தாட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்தும் கூட, அல்லாஹ்வுடைய பயம் வரவில்லையே உங்களுக்கு. உங்களுடைய உள்ளங்கள் இறுகி இருக்கின்றன. உங்களுடைய உள்ளங்கள் கற்களை போன்று இறுகி விட்டனவே. கற்களை விட கடினமாக உங்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன.
கற்களில் இருந்து கூட நீர் ஓடைகள் வருகின்றன, தண்ணீர் கசிகின்றன. அல்லாஹ்வின் பயத்தால் அந்த பாறைகளேஉருண்டு விடுகின்றன. இடம் பெயர்ந்து விடுகின்றன. ஆனால், உங்களுடைய உள்ளங்களில் ஏன் அல்லாஹ்வுடைய பயம் வருவதில்லை அத்தாட்சிகளை பார்க்கும்பொழுது, அறிவுறைகளை கேட்கும்பொழுது. (அல்குர்ஆன் கருத்து 2 74
ஒரு முஃமினுக்கு இந்த நிலை வந்துவிடக்கூடாது.அல்லாஹ் பாதுகாப்பானாக! மிக மோசமான நிலை, மிகவும் கொடூரமான ஒரு நிலை.அல்லாஹ் பாதுகாப்பானாக!
அறிஞர்கள் கூறுகிறார்கள்:
ஒரு உள்ளம் அல்லாஹ்வை விட்டு மிக தூரமாக இருக்கிறதென்றால் அது இறுகிய உள்ளம் தான். கடினமாகி விட்ட உள்ளம் தான்.
ஏனென்றால், உள்ளம் இறுகி விட்டால் உண்மை எது? பொய் எது? நன்மை எது? தீமை எது? என்று அவனால் பிரித்தறிய முடியாது.
எந்த உபதேசமும் அறிவுரையும் அவனுடைய உள்ளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது. ஆகவேதான், கடினமான உள்ளத்திலிருந்து அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதுகாப்பு தேடினார்கள்.
உள்ளங்கள் விஷயத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தானும் பயந்தார்கள், தங்களுடைய உம்மத்தார்களையும்பயமுறுத்தி கொண்டிருந்தார்கள்.
இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்க கூடிய ஒரு ஹதீஸ். அல்லாஹ்வுடைய தூதர் கூறுகிறார்கள்:
أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ
நம்பிக்கையாளர்களே!அறிந்து கொள்ளுங்கள். உடலில் ஒரு சதை துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றால் உடலெல்லாம் சீர் பெற்றுவிடும். அந்த சதை துண்டு கெட்டு விட்டால், உடலெல்லாம் கெட்டு விடும்.
அந்த சதை துண்டு என்னவென்றால், அது தான் கல்பு. இந்த கல்பை பேணிக்கொள்ளுங்கள், இந்த கல்பை சரி செய்து கொள்ளுங்கள். (1)
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 52
ஒரு சின்ன சதை துண்டு கெட்டு விட்டால், உடல் கெட்டுவிடுகிறது. நோயை கூறவில்லை. உடலிலிருந்து வரக்கூடிய அமல்களை நபி அவர்கள் கூறினார்கள்.
மேலும், இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸை இன்னும் ஆழமாக கவனிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
«إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ، وَلَا إِلَى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ»
உங்களது உடல் தோற்றங்களை, உங்களது முக தோற்றங்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். மாறாக,உங்களது கல்புகளை அல்லாஹ் பார்க்கிறான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564, 2722.
உங்களது உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு இருக்கிறதா, அல்லாஹ்வின் பயம் இருக்கிறதா, நபியின் முஹப்பத் இருக்கிறதா, மார்க்கத்தின் மதிப்பு இருக்கிறதா, உங்களது உள்ளத்தில் மறுமையின் தேடல் இருக்கிறதா, உங்களது அமல்கள் அல்லாஹ்விற்கு பொருத்தமானதாக இருக்கிறதா, இதை தான் அல்லாஹ் பார்க்கிறான்.
இது எந்தளவு இருக்குமோ அதற்கேற்ப அடியானின் தரஜாக்களை அல்லாஹ் உயர்த்துவான்.
பிலாலை அல்லாஹ் உயர்த்தினான். அபூஜஹலை அல்லாஹ் தாழ்த்தினான். பிலாலுடைய உள்ளத்தால், அமலால் அல்லாஹ் பிலாலை உயர்த்தினான். அபூஜஹலை அவனுடைய கல்பில் உள்ள குஃப்ரினால், ஷிர்க்கினால், அவனுடைய கெட்ட அமல்களினால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அபூஜஹலை தாழ்த்தினான்.
அல்லாஹ் நிறங்களை பார்ப்பதில்லை. ஆகவேதான்,இந்த உள்ளம் கடினமாகி விடாமல் பாதுகாப்பது நமக்கு மிக மிக அவசியமாக இருக்கிறது.
இந்த உள்ளம் நேர்பட்டு விட்டால், கல்பு சரியாகி விட்டால் அடியானுடைய நிலைமையும் சீர்பட்டுவிடும். அவனிடத்தில் இரக்கம், கருனை, படைப்புகளோட அன்பு, பரஸ்பரம் ஏற்படும், அவனுடைய உள்ளம் எப்போதும் மகிழ்ச்சியில் இருக்கும்.
அவனுடைய உள்ளம் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை உணர்ந்ததாக இருக்கும்.அல்லாஹ்வுடைய முஹப்பத்தை பெற்றதாக இருக்கும். அவனுடைய உள்ளம் அல்லாஹ்வுடைய இபாதத்தில் இன்பத்தை பெரும்.
துன்யாவின் ஆசாபாசங்களில் அவன் மனதை பறிகொடுத்துவிட மாட்டான். யாருடைய உள்ளம் இறுகி விட்டதோ அவருக்கு அல்லாஹ்வுடைய இபாதத்தில் இன்பம் இருக்காது. உலக ஆசாபாசங்களில் மூழ்குவார்கள். அல்லாஹ்வை விட்டு தூரமாகிக் கொண்டே போவார்கள்.
ஒரு அடியான் எந்த அளவு அல்லாஹ்விற்கு அச்சமுள்ளவனாக, பயமுள்ளவனாக இருக்கிறானோ, அவன் அந்தளவு மனமகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.
ஒரு அடியான் எந்தளவு அல்லாஹ்வுடைய பயத்தால் உள்ளம் இலகியவனாக இருப்பானோ அவனுடைய உள்ளம் அந்தளவு ராஹத்தாக இருக்கும்.
அல்லாஹ் தஆலா இரண்டு சொர்க்கங்களை வைத்திருக்கிறான். துன்யாவில் ஒரு சொர்க்கத்தை வைத்திருக்கிறான், மறுமையில் ஒரு சொர்க்கத்தை வைத்திருக்கிறான்.
துன்யாவுடைய சொர்க்கம் என்பது,அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகள், அல்லாஹ்வுடைய அச்சம், அல்லாஹ்வுடைய இபாதத்துகள், குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது.
இந்த இபாதத்களை, இந்த வணக்க வழிபாடுகளை ஒரு அடியான் அனுபவித்தால், அந்த இபாதத்துகளில் ஒரு அடியான் அல்லாஹ்வுடைய சுவையை நெருக்கத்தை அவன் அடையும்பொழுது, கண்டிப்பாக ஆகிரத்துடைய சொர்க்கத்தை அவன் அடைகிறான்.
ஒரு அடியானுடைய உள்ளம் கெட்டுவிட்டால், இருள் சூழ்ந்ததாக ஆகி விட்டால், வணக்க வழிபாடுகளில் அவனுக்கு உள்ளச்சம், மன அமைதி ஏற்படவில்லையென்றால்,கஞ்சத்தனம், கருமித்தனம், பெருமை, கெட்ட எண்ணம் ஏற்பட்டால், இப்படியாக அல்லாஹ்வை விட்டு அவன் தூரமாகி கொண்டே சென்றால், அவனுடைய உள்ளத்தை விட இறுகிய உள்ளம் இருக்காது.
அவனுடைய உள்ளத்தை விட நெருக்கடியை உணரக்கூடிய உள்ளம் வேறெதுவும் இருக்காது. இந்த உலகத்திற்கே அரசனாக, அதிபதியாக ஆகிவிட்டாலும் சரி,செல்வம், செழிப்பு எல்லாம் இருக்கும். ஆனால், உள்ளம் இருள் சூழ்ந்து இருக்கும். நெருக்கடியில் இருக்கும், காரணம், அல்லாஹ்வை விட்டு அந்த உள்ளம் தூரமாகி விட்டதால்.
ஏன் உள்ளங்கள் இறுகுகின்றன?உள்ளங்கள் ஏன் கடினமாகி விடுகின்றன? கண்டிப்பாக அவற்றின் காரணங்கள் தெரிய வேண்டும். நம்முடைய உள்ளங்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: அல்லாஹ்வுடைய குர்ஆனை விட்டு, நபியின் அறிவுரைகளை விட்டு ஒருவன் விலகி சென்றால், கண்டிப்பாக அவனுடைய உள்ளம் இறுகி விடும். அவனுடைய உள்ளம் நெருக்கடிக்கு ஆளாகி விடும்.
தொடர்ந்து குர்ஆனை ஒதுவது, குர்ஆனை சிந்திப்பது, அறிந்த வசனங்களின் படி அமல் செய்வது. பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களோடு தனக்கு ஒரு நிரந்தரமான தொடர்பை ஏற்படுத்துவது.
நபி மொழிகளை தானும் படிப்பது, செவியால் கேட்பது, இந்த நிலை ஒரு மனிதனுக்கு தொடர வேண்டும்.
யார் ஒருவர் அல்லாஹ்வுடைய அறிவுரையை புறக்கணிப்பாரோ, கண்டிப்பாக அவருடைய உள்ளம் இறுகி விடும். அவருக்கு நெருக்கடியான வாழ்க்கைதான்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான். (அல்குர்ஆன் 20:124)
ஒரு மனிதன் இவ்வளவு செல்வத்தை வசதி வாய்ப்பை பெற்றிருந்தும் கூட, அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மனமகிழ்ச்சி ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு விதமான இறுக்கத்தில், ஒரு விதமான மன இருளில் அவன் பீடித்து இருக்கிறானென்றால், அல்லாஹ்வுடைய திக்ரை விட்டு அவன் தூரமாக இருக்கிறான்.
அல்லாஹ்வுடைய திக்ரு என்பது,சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்வதை போல, அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதுவதும், அதை சிந்திப்பதும், அது போன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களும் அல்லாஹ்வுடைய திக்ரு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
«مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ»
அல்லாஹ்வின் நினைவில் இருக்க கூடிய ஒரு முஃமினுக்கு உதாரணம் உயிருள்ளவனைப் போல.அல்லாஹ்வை நினைக்காமல் அல்லாஹ்வுடைய திக்ருகளை செய்யாமல் வாழக்கூடிய ஒரு மனிதனுக்கும் உதாரணம் மரணித்தவனைப் போல.
அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6407.
அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அல்லாஹ்வுடைய திக்ருடைய தொடர்போடு வாழக்கூடிய ஒரு முஃமின் உயிருள்ளவரை போன்று இருக்கிறார். அல்லாஹ்வுடைய திக்ரை விட்டு தூரமாக வாழக்கூடிய மனிதர் இறந்தவரை போன்று இருக்கிறார்.
அதுபோன்றுதான் உள்ளங்களை இறுக்கி விடக்கூடிய, கடினமாக்கி விடக்கூடிய காரணங்களில் ஒன்று,அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளை பாழாக்கி விடுவது.
அதில்அலட்சியம் செய்வது, கவனக் குறைவாக இருப்பது. நோன்பில் அலட்சியம் செய்பவர்கள், ஜகாத்தில் அலட்சியம் செய்பவர்கள், பர்ளான தொழுகையில் அலட்சியம் செய்பவர்கள், ஹஜ்ஜில் அலட்சியம் செய்பவர்கள், அல்லாஹ் தன்மீது கடமையாக்கிய ஹக்கில் அலட்சியம் செய்வது.இவைகள் கண்டிப்பாக உள்ளங்களை இறுக்கி விடும்.
அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:
فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்.(அல்குர்ஆன் 5:13)
வசனத்தின் கருத்து : இஸ்ரவேலர்கள் அல்லாஹ்விடத்தில் பெரிய வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அல்லாஹ் நிறைய வாக்குறுதிகளை அவர்களிடத்திலிருந்து வாங்கினான்.
தவ்ராத்தை இறக்கும் பொழுது, தவ்ராத்துடைய சட்டங்களை பின்பற்றுவீர்களா? இந்த ஒப்பந்தங்களின் படி நடப்பீர்களா? என்று அல்லாஹ் அவர்களிடத்தில் வாக்குறுதியை வாங்கி கொண்டே இருந்தான்.
ஒவ்வொறு முறையும் அவர்கள் கூறினார்கள்: நாங்கள் பின்பற்றுவோம், நாங்கள் நேராக நடப்போம், சரியான பாதையில் செய்வோம், நபிமார்களை பின்பற்றுவோம் என்று அல்லாஹ்விற்கு வாக்குறுதிகளை கொடுத்து கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
நம்மிடத்தில் அல்லாஹ் தஆலா தவ்ஹீதுடைய வாக்குறுதியை வாங்கியிருக்கிறான். இந்த லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வை சொல்லும்பொழுது, இதனுடைய கட்டளைகளை ஏற்று நடப்பேன் என்ற வாக்குறுதியை அல்லாஹ் வாங்கியிருக்கிறான். அல்லாஹ்வும் ரஸூலும் தடுத்த காரியங்களிலிருந்து விலகி இருப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நம்மிடத்தில் வாங்கியிருக்கிறான்.
இந்த வாக்குறுதி இல்லாமல் தவ்ஹீதுடைய கலிமா இல்லை. இன்று நாம் இந்த கலிமாவை சொன்னால் போதும், வாயால் ஒருமுறை மொழிந்தால் மட்டும் நாம் முஸ்லிமாகி விடலாம், சொர்க்கத்திற்கு சொந்தக்காரராகி விடலாம் என்று ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
ஒருமுறை மொழிந்துவிட்டு இதை புறக்கணித்து வாழ்வதென்றால் இது அபூஜஹலுக்கு என்ன கடினமான காரியமா? அந்த குரைஷி குஃப்பார்களுக்கு சிரமமாக இருந்திருக்குமா?
ஒரு முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று வாயால் சொல்லிவிட்டு எப்படி வேண்டுமானாலும் வாழலாம், சிலைகளை வணங்களாம், அனாச்சாரங்களை செய்யலாம், நபியை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, குர்ஆனை படிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய, அமல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று இருந்திருந்தால், இது குரைஷி காஃபிர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது கஷ்டமாக இருந்திரிக்குமா? ஒருமுறை அல்ல, பல முறை அவர்கள் சொல்லியிருப்பார்களே?
இன்று, நம்மில் பலருடைய நிலை, தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதோடு மட்டும் நிறுத்திவிட்டு குர்ஆனோடு அவர்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஹதீஸோடு என்ன தொடர்பு இருக்கிறது?
இன்னும் எத்தனையோ முஸ்லிம்கள் தொழுகையில் ஓதப்படக்கூடிய சூரத்துல் ஃபாத்திஹாவை கூட சரியாக மனனம் செய்து புரியாமல் இருப்பதை பார்க்கிறோம்.
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற இந்த திருக்கலிமாவை கூட உச்சரிப்பதற்கு முடியாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
அல்லாஹ் கூறுகிறான். இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வுடைய வாக்குறுதியை முறித்ததால் அவர்களை நாம் சபித்து விட்டோம். (அல்குர்ஆன் 5 : 13)
இஸ்ரவேலர்களுக்கு நடந்ததை அல்லாஹ் நமக்கு கூறுவதற்கு காரணம், வெறும் வரலாற்றை எடுத்து சொல்லிவிட்டு அல்லாஹ் போகின்றானா? இதில் நமக்கு எச்சரிக்கை இல்லையென்றால், இந்த வசனம் நம்மை பயமுறுத்தவில்லையென்றால் இந்த வசனத்தை கொண்டு என்ன பிரயோஜனம்?
அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! உங்களுக்கும் அப்படி தான். மூஸாவின் உம்மத்தாகிய பனீ இஸ்ராயீள்களுக்கு ஏற்பட்டதை போன்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மத்தை சேர்ந்த உங்களுக்கும் ஏற்படும்.
அவர்களை போன்ற செயல்களை நீங்கள் செய்தால், நமது வாக்குறுதிகளை, ஒப்பந்தங்களை நீங்கள் மீறினால் அவர்களை சபித்தது போன்று உங்களையும் சபிப்போம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய சாபம் என்றால், அல்லாஹ்வுடைய உதவியை எதிர்பாக்க முடியாது, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை எதிர்பார்க்க முடியாது. அல்லாஹ் தஆலாவிடத்தில் துஆ கேட்போம், ஆனால், அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான். எதிரிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள், அல்லாஹ்வுடைய உதவி இருக்காது.
தொழுகைகள் இருக்கலாம், மற்ற சில அமல்கள் இருக்கலாம், ஆனால், அதன் மூலமாக என்ன நன்மைகளை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் கொடுப்பதாக வாக்களித்தானோ, அந்த நன்மைகளை அல்லாஹ்விடத்திலிருந்து பெற முடியாது. காரணம், அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தங்களை முறித்து வாழ்வதால்.
அல்லாஹ் கூறுகிறான்: இப்படியே நீங்கள் ஒப்பந்தங்களை முடித்து கொண்டே சென்றால், எப்படி இஸ்ரவேலர்களுடைய உள்ளங்களை இறுகியதாக கடினமானதாக ஆக்கிவிட்டோமோ, அது போன்று உங்களுடைய உள்ளங்களையும் ஆக்கிவிடுவோம். (அல்குர்ஆன் 5 : 13)
எத்தனை முஸ்லிம்களுடைய நிலைகளை பாருங்கள். அல்லாஹ்வை கொண்டு மறுமை நாளை கொண்டு அச்சுறுத்தப்பட்டால், அய்யாமுல் ஜாஹிலியாவில் எப்படி காஃபிர்கள் கூறினார்களோ, (மறுமை என்று ஒன்று இருந்தால் பார்த்து கொள்ளலாம், அங்கும் எங்களுக்கு ஒரு பெரிய நல்ல வாழ்க்கை தான் கிடைக்கும், இந்த உலகத்தில் எங்களுக்கு செல்வத்தை கொடுத்த அல்லாஹ் மறுமையில் விட்டு விடுவானா? அங்கும் இப்படி தான் செல்வந்தர்களாக இருப்போமென்று) காஃபிர்கள் கூறினார்கள்.
இப்படி திமிராக கூற காரணம், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன.
இந்த உள்ளம் இறுகிய நிலையை பற்றி பார்க்கும் பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ் நினைவுகூறத்தக்கது.
எப்போது அடியான் அல்லாஹ்வின் ஹக்குகளை பாழாக்கி கொண்டே செல்கிறானோ, ஹராம் ஹலாலுடைய பேணுதல் இல்லையோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟
ஒரு மனிதன் நீண்ட தூரப் பயணத்தில் செல்கிறான். அந்த பயணத்தினால் அவனுடைய ஆடைகளெல்லாம் புழுதியாகி விடுகின்றன. அவனுடைய தலை முடிகளெல்லாம் புழுதி அடைந்து விடுகிறது. தனது இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்விடத்தில்,என் இறைவா! என் இறைவா! என்று பிரார்த்திக்கிறான்.
ஆனால்,அவனுடைய உணவு ஹராமாக இருக்கிறது. அவனுடைய உடை ஹராமாக இருக்கிறது. அவன் சாப்பிட்டதெல்லாம், வாழ்ந்தது எல்லாம் ஹராமாக இருக்கிறது. அவனுக்கு எப்படி பதில் கொடுக்கப்படும்? (2)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1015.
இதுதான் அல்லாஹ்வுடைய சாபம். அல்லாஹ்வுடைய சாபம் அவன் மீது ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவனுடைய நிலையை கண்டு கொள்வதில்லை. அவன் எப்படி சீரழிந்தால் என்ன? அவன் எதிரிகளால் சீரழிந்தால் என்ன? அவனுடைய நிலைமை எந்தளவு மோசமடைந்தால் என்ன?
அல்லாஹ் அவன் மீது ரஹ்மத்துடைய பார்வையை கொண்டு பார்ப்பதில்லை. காரணம், அல்லாஹ்வுடைய சட்டங்களை அவன் மீறிய காரணத்தால்.
அதுபோன்று தான் உள்ளங்களை இறுக்கமாக்கி விடக்கூடிய காரணங்களில் ஒன்று, பாவங்களில் ஈடுபடுவது, பாவங்களை அதிகரிப்பது.
அல்லாஹ் தஆலா கூறுகிறான்:
كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (அல்குர்ஆன் 83 : 14)
இன்று நம்மில் பலர்,பாவம் தானே, சிறிய பாவம் தானே, பெரிய பாவம் தானே என்று பாவங்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே போகிறார்கள்.
தன்னுடைய நன்மைகளை பார்க்கிறார்கள். நம்மிடத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது. நாம் அதை செய்கிறோமே, இதை செய்கிறோமே, இப்படி நன்மைகள் செய்யும்போது, இந்த பாவங்கள் நமக்கு என்ன ஆபத்துகளை, பிரச்சனைகளை, நாசத்தை ஏற்படுத்தி விடுமென்று பாவங்களில் அலட்சியம் செய்கிறார்கள்.
பாவங்களை அலட்சியமாக எடுத்துக் கொண்டு அந்த பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்: இவர்கள் நினைப்பதை போன்று அல்ல. இந்த பாவங்களால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று எண்ணுகிறார்கள். அப்படி அல்ல.
மாறாக, இந்த பாவம் என்ன செய்யும் அவனுடைய உள்ளத்தில் துறுவாக ஏறிக் கொண்டே போகும். இறுதியில் உள்ளத்தை அப்படியே மூடி விடும். அல்லாஹ்வுடைய நினைவு, திக்ரு, ஈமானை அந்த உள்ளத்திலிருந்து எடுத்து விடும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு அடியான் ஒரு பாவம் செய்தால், அவனுடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளி போடப்படும். இப்படியாக அவன் ஒவ்வொரு பாவத்தை செய்யும் பொழுதும் அவனுடைய உள்ளத்தில் கருப்பு புள்ளி போடப்பட்டு,இறுதியாக உள்ளமே கருப்பாக மாறிவிடும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!) (3)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4244, தரம் : ஹஸன் (அல்பானி)
ஆகவேதான் ஒரு அடியான் எப்போதும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவனாக இருக்க வேண்டும்.
إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.(அல்குர்ஆன் 7 : 201)
அறிந்தோஅறியாமலோ, இச்சையினாலோ, அல்லது வேறு ஏதும் காரணத்தினாலோ, அவன் பாவத்தில் சறுகி விட்டால், உடனே அல்லாஹ்வை நினைவு கூர்ந்து விடுவான். பயந்து விடுவான், அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி வந்து அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்பான்.
وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.(அல்குர்ஆன் 3 : 135)
அல்லாஹ்வின் நல்லடியார்கள் தாங்கள் செய்கின்ற பாவத்தை தொடர மாட்டார்கள். பாவமென்று அறிந்தவுடன் அந்த பாவத்திலிருந்து விலகி விடுவார்கள்.
அதுபோன்று தான் உள்ளத்தை கடினமாக்கி விடக்கூடிய காரணங்களில் ஒன்று,பாவம் செய்வது ஒரு பக்கம், மறுபக்கம் அந்த பாவத்தை துணிந்து பகிரங்கமாக செய்வது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا المُجَاهِرِينَ
எனது உம்மத்துகள் எல்லோருக்கும் அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பாதுகாப்பு, மன்னிப்பு இருக்கிறது. ஆனால், துணிந்து வெளிப்படையாக, திமிராக பாவம் செய்யக்கூடியவர்களை தவிர. (4)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6069.
ஒரு மனிதன் பாவம் செய்கிறான். தனிமையில் அவன் ஒரு அச்சத்தோடு செய்துவிட்டால் அந்த பாவத்திற்குரிய மன்னிப்பு அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு அடியான் திமிராக ஆனவத்தோடு, பெருமையாக, தனது பாவத்தை யார் தட்டிக் கேட்க முடியும்? என்று ஃபிர்அவ்னை போல,ஹாருனை போல, இப்படி அவன் திமிர் கொண்டு எல்லோருக்கும் தெரியும் விதமாக செய்யும்பொழுது அல்லாஹ்வை அவன் எதிர்க்க துணிந்து விடுகிறான்.
இப்படிபட்டவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அதுபோன்றுதான் உள்ளங்களை கடினமாக்கி விடக்கூடிய காரணங்களில் ஒன்று,அடியான் அறியாமையில் இருப்பது. மார்க்க இல்மை பெறாமல் இருப்பது.
அல்லாஹ்வுடைய இல்மை, குர்ஆனுடைய இல்மை, ஹதீஸுடைய இல்மை தேடாமல் இருப்பது. தான் இருக்கின்ற அறியாமையிலேயே அவன் திருப்தி காணுவது.
நாம் என்ன மார்க்கத்தை படித்து செய்ய போகிறோம்?மார்க்கத்தை தெரிவதால் நமக்கு என்ன லாபம்?என்று அல்லாஹ்வுடைய தீனை கற்காமல் இருப்பது. இது அவனுடைய உள்ளத்தை கடினமாக்கிவிடும்.
எந்தளவு அல்லாஹ்வுடைய தீனை குர்ஆனை நீங்கள் அழகாக தெளிவாக புரிந்து அமலுக்காக கற்றுக் கொள்கிறீர்களோ, அந்தளவு அல்லாஹ்வுடைய பயத்தை அல்லாஹ் உள்ளத்தில் போடுவான்.
அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் 35 : 28)
எந்தளவு அல்லாஹ்வுடைய மார்க்க இல்மை நாம் பெறுவோமோ, அது நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றிய மறுமை நாளை பற்றிய பயத்தை கொடுக்கும்.
உள்ளம் இறுகிவிடக்கூடிய காரணங்களில் மிகப் பெரிய காரணம், அல்லாஹ்வை பற்றி மறுமையை பற்றி அறியாமல் இருப்பது.
அதுபோன்று தான் உள்ளங்களை கடினமாக்க கூடிய காரணங்களில் மிக முக்கிய காரணம், மன இச்சையை பின்பற்றுவது, பித்அத்துகள் செய்வது, சத்தியங்களை ஏற்காமல் இருப்பது.
நமக்கு முன்னால் அல்லாஹ்வுடைய மார்க்கம் ஹக் என்று வரும்பொழுது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை உதரி தள்ளிவிட்டு, அதை புறக்கணித்து விட்டு நம்முடைய மனஇச்சையை பின்பற்றுவது உள்ளங்களை இறுக்கி விடும்.
அல்லாஹ் தஆலா இஸ்ரவேலர்களை பற்றி கூறுகிறான்:
فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ
ஆகவே, அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான்.(அல்குர்ஆன் 61:5)
இஸ்ரவேலர்களுடைய ஆரம்ப நிலை இப்படி தான். அல்லாஹ்வுடைய சட்டங்கள் ஒவ்வொன்றாக புறக்கணித்து கொண்டே இருந்தார்கள். அல்லாஹ்வுடைய சட்டங்களிலிருந்து ஒன்றுக்கு பின் ஒன்றாக அந்த சட்டங்களிலிருந்து விலகி கொண்டே இருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: இதுவே அவர்களுடைய நிலையாக ஆகிவிட்ட போது, அவர்களுடைய குணமாக ஆகிவிட்ட போது அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை கோனலாக்கி விட்டான்.
அவர்கள் எப்போது மார்க்கத்தை விட்டுவிட்டு மனோ இச்சைகளை பின்பற்றினார்களோ, நபிமார்களுடைய இறப்புக்கு பிறகு, நபிமார்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்கு பிறகு மனஇச்சையை மார்க்கமாக ஆக்கிவிட்டார்கள்.
மார்க்கத்தை சடங்குகளாக, சம்பர்தாயமாக ஆக்கிவிட்டார்கள். வழிபாடுகளை வயிற்றுப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டு புரோகிதத்தை மார்க்கமாக ஆக்கி மக்களை வழிகெடுக்க ஆரம்பித்தார்களோ, அவர்களுடைய உள்ளங்களையும் அப்படியே கோணலாக்கி விட்டான்.
அதற்கு பிறகு, அடுத்து ஒரு நபியை அனுப்பி அல்லாஹ் அவர்களை திருத்திய போது, அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்த போதும் கூட நபியின் அத்தாட்சிகளையும், அற்புதங்களையும் பார்த்தும் கூட, அவர்களால் அந்த நபியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆகவே தான் நூற்றுக் கணக்கான நபிமார்களையே அந்த இஸ்ரவேலர்கள் கொன்றார்கள்.
நம்முடைய உம்மத்தில் எத்தனையோ மனிதர்களின் நிலையை பார்க்கிறோம். சத்தியத்தை சொல்பவர்களை எதிர்க்கின்றார்களே, அவர்களுக்கு தொந்தரவு தருகிறார்களே, அவர்களோடு வம்பு செய்கிறார்களே, இது இஸ்ரவேலர்களின் குணம் என்பதை புரிய வேண்டும். அந்த இஸ்ரவேலர்கள் தங்களுடைய அறிஞர்களில் நல்லவர்களை கொன்றார்கள்.
நபிமார்களுக்கு பிறகு மார்க்கத்தை சத்தியமாக, சத்தியப் பாதையிலிருந்து பரப்பிக் கொண்டிருந்த நல்லவர்களையும் இஸ்ரவேலர்கள் கொன்றார்கள். நபிமார்களை மட்டுமல்ல, சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர்களையும் கொன்றார்கள். (அல்குர்ஆன் கருத்து 2 : 61,3:21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
ثُمَّ انْصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ
அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 9:127)
அதுபோன்று தான் உள்ளங்களை கடினமாக்க கூடிய, உள்ளங்களின் மென்மையை போக்கி விடக் கூடிய விஷயங்களில் ஒன்று, நம்முடைய குணங்களில் ஏற்படக்கூடிய மாற்றம். நம்முடைய அஹ்லாக்கில் ஏற்படக்கூடிய மாற்றம்.
பெருமை வந்துவிடக் கூடாது. பணிவு ஏற்பட வேண்டும். அகந்தையாக இருக்கட்டும், கர்வமாக இருக்கட்டும், தற்பெருமையாக இருக்கட்டும், ஆணவமாக இருக்கட்டும், அகம்பாவமாக இருக்கட்டும் இப்படிபெருமையின் எந்த ஒரு வாடையும் தன் மீது வீசி விடக்கூடாது.
ஏனென்றால், பெருமை உள்ளத்தை கடினமாக்கி கொண்டே போகும். பணிவு உள்ளத்தை மென்மையாக்கி கொண்டே போகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ، جَوَّاظٍ مُسْتَكْبِرٍ
நரகவாசிகள் யார்?என்று உங்களுக்கு நான் கூறட்டுமா? கடினமாக பேசக்கூடிய, கெட்ட வார்த்தைகளை பேசக்கூடிய பெருமை உள்ள ஒருவரும் நரகவாசிகள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அறிவிப்பாளர் : ஹாரிசா இப்னு வஹப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4918, 6071.
இந்த பெருமை ஒரு மனிதனுடைய உள்ளத்தை கடினமாக்கி விடும். அல்லாஹ்வை விட்டு அவனுடைய உள்ளத்தை தூரமாக்கி விடுகிறது. எல்லோரையும் விட நான் தான் பெரியவன், நான் தான் சிறந்தவன். நான் தான் எல்லோரையும் விட ஆதிக்கம் செலுத்தக் கூடியவன். நான் என்ற பெருமையானது அவனுடைய உள்ளத்தை கடினமாக்கி கொண்டே போகும்.
அதுபோன்று தான் இந்த உலக வாழ்க்கையில் மனிதன் அதிகமாக மூழ்கி எப்போதும் சிரித்து கொண்டே, ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகத்திலேயே மூழ்கி விடுவது.
இது கண்டிப்பாக உள்ளத்தின் ஒளியை போக்கி விடுகிறது. உள்ளத்தின் மென்மையை போக்கி விடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
وَلَا تُكْثِرِ الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ القَلْبَ
இந்த உலகத்தில் நீங்கள் அதிகமாக சிரித்து மகிழ்ந்து இந்த உலக இன்பங்களில் ஈடுபடுவது உள்ளத்தை மவ்தாக்கி விடுகிறது. முகத்தின் மொழியை போக்கி விடுகிறது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2305, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
நண்பர்களோடு சிரித்து பேசுவதற்கு, மனைவி மக்களோடு இன்பமாக சந்தோஷமாக இருப்பதற்கு ஒரு நேரமென்றால், அல்லாஹ்வோடு ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும்.அல்லாஹ்விற்கு முன்னால் அவனது அச்சத்தால் அழுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
தனிமையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பேசி தனது குறைகளை கூறி, பாவங்களை கூறி அல்லாஹ்விடத்தில் மன்னிப்பை கேட்டு அழுவதற்கு, அல்லாஹ்வுடைய அச்சத்தால் கண்களிலிருந்து கண்ணீர் சிந்துவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஆனால், ஒரு அடியான் எப்போதும் அல்லாஹ்வை விட்டு தூரமாகிக் கொண்டு மனிதர்களோடு பழகுவது, அவர்களோடு பேசுவதில் இன்பம் காணுவது, சுற்றுவது, திரிவது என்றே இருக்கிறான்.
அல்லாஹ்வுக்கும் அவனுக்குமென்று தனி தொடர்பு இல்லையென்றால், கண்டிப்பாக அவனுடைய உள்ளம் இறுகி விடும்.
ஆகவேதான், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
நாளை மறுமையில் அர்ஷூடைய நிழலில் இருப்பவர்களில் ஒரு கூட்டம் தனிமையிலிருந்து அல்லாஹ்வை நினைவு கூறுகிறான். (5)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.
அல்லாஹ் தஆலா நம்முடைய உள்ளங்கள் மென்மையாக வேண்டுமென்று விரும்புகிறான். அப்போது தான் நம்முடைய ஈமான் பசுமையாக இருக்கும்.
இந்த உள்ளத்தை இலகுவாக்குவதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமென்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆவில் பார்ப்போம்.
அல்லாஹ்விடத்தில் நாம் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளத்திற்காக துஆ செய்தார்கள்.
اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
யா அல்லாஹ்! எனது உள்ளத்திற்கு அதற்குரிய தக்வாவை வழங்கு, எனது உள்ளத்தை சுத்தப்படுத்து. நீ தான் உள்ளத்தை சுத்தப்படுத்த கூடியவர்களில் மிகச் சிறந்தவன்.
அறிவிப்பாளர் : ஜெய்து இப்னு அர்கம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2722.
மேலும், துஆ செய்தார்கள்:
يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
உள்ளங்களை புரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதிபடுத்தி வை.
உம்மு ஸலமா ரழியல்லாஹுஅன்ஹாகேட்கிறார். அல்லாஹ்வுடைய தூதரே, இந்த உள்ளத்திற்காக இப்படி துஆ கேட்கிறீர்களே?ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்:
உள்ளம் அல்லாஹ்வுடைய விரல்களில் இரண்டு விரலுக்கு இடையில் இருக்கிறது. அல்லாஹ் அதை எப்படி வேண்டுமானாலும் புரட்டி விடுவான்.
அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 3522, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அல்லாஹ் கூறுகிறான்:
أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7 : 99)
நான் யார்? நான் பெரிய ஆலிம். நான் யார்? நான் பெரிய வணக்கசாலி. நான் யார்? எனக்கு மார்க்கமெல்லாம் தெரியும். நான் அப்படிபட்டவன். நான் எந்த தவறையும் செய்யமாட்டேன். நான் மிகப்பெரிய யோக்கியவான் என்று ஒரு மனிதன் இருமாப்பு கொண்டால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டு்ம் அவனை படுபாதாளத்தில் அல்லாஹ் தள்ளிவிடுவான்.
யா அல்லாஹ்! பாவத்தை கொண்டு என்னை சோதித்து விடாதே! குஃப்ரில் என்னை சோதித்து விடாதே! ஷிர்க்கில் என்னை தள்ளி விடாதே! நயவஞ்சகத்தில் என்னை சோதித்து விடாதே! என்னுடைய நஃப்ஸை என் மீது சாட்டி விடாதே! ஷைத்தானுக்கு என் மீது ஆதிக்கத்தை கொடுத்து விடாதே!
என்று அல்லாஹ்விடத்தில் பயந்து பயந்து அவன் இந்த வாழ்க்கையை நகர்த்தினால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய பாதுகாப்பில் வைப்பான்.
ஒரு மனிதன் பெருமைக்கும், ஆணவத்திற்கும் ஆளாகி விட்டால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய பாதுகாப்பை அவனிடமிருந்து எடுத்து விடுவான். யார் மீது அல்லாஹ் தன்னுடைய பாதுகாப்பை எடுத்து விட்டானோ, அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி விடுவான். யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ, அவனை விட கெட்ட நண்பன் வேறு யாருமில்லை.அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக! அல்லாஹ் தஆலா நம்முடைய உள்ளங்களை சீர்படுத்தி, மென்மையாக்கி, அல்லாஹ்வுடைய பயத்தால் எப்போதும் உள்ளம் ஈரமானதாக இருக்கும்படி நமது உள்ளங்களை ஆக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ " (صحيح البخاري- 52)
குறிப்பு 2)
وحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ " (صحيح مسلم - 1015)
குறிப்பு 3)
هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، وَالْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِي قَلْبِهِ، فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ، صُقِلَ قَلْبُهُ، فَإِنْ زَادَ، زَادَتْ، فَذَلِكَ الرَّانُ الَّذِي ذَكَرَهُ اللَّهُ فِي كِتَابِهِ: {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ} [المطففين: 14] " (سنن ابن ماجه 4244 [حكم الألباني]حسن
குறிப்பு 4)
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا المُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ المُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ، فَيَقُولَ: يَا فُلاَنُ، عَمِلْتُ البَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ، وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ " (صحيح البخاري- 6069)
குறிப்பு 5)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ " (صحيح البخاري- 660)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/