HOME      Khutba      மேலான மன உறுதி!!! (அமர்வு 3-3) | Tamil Bayan - 445   
 

மேலான மன உறுதி!!! (அமர்வு 3-3) | Tamil Bayan - 445

           

மேலான மன உறுதி!!! (அமர்வு 3-3) | Tamil Bayan - 445


மேலான மன உறுதி!

ஜுமுஆ குத்பா தலைப்பு : மேலான மன உறுதி! (அமர்வு 3-3)

வரிசை : 445

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீ ஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 20-01-2017 | 22-04-1438

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுப்ஹானஹு வதஆலாவை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் வரம்புகளை பேணி வாழும் படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னித்து நல்லவர்களில் நம்மை சேர்த்து வைப்பானாக! அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மதித்து மறுமைக்காக வாழக்கூடிய நன்மக்களில் என்னையும் உங்களையும் நமது சமுதாயத்தையும் அல்லாஹு தஆலா சேர்த்து அருள் புரிவானாக! ஆமீன்.

மேலான மன உறுதி என்ற அந்த தலைப்பில் ஒரு முஃமினுடைய நம்பிக்கை அவனுடைய கொள்கை இலட்சியம் அவனுடைய எண்ணம் அவனுடைய எதிர்பார்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து வந்திருக்கக்கூடிய குர்ஆனுடைய வசனங்களையும் ஹதீஸ்களையும் சில வரலாற்று சம்பவங்களையும் நாம் பார்த்து வந்தோம்.

நம்முடைய எண்ணம் உயர்ந்திருக்க வேண்டும். நம்முடைய மன உறுதி மிக பலமாக வலிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லும்போது, அது எந்தெந்த விஷயங்களில் இருக்க வேண்டும்?

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நமக்கு சொல்வதை கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டும்.

وَاللَّيْلِ إِذَا يَغْشَى (1) وَالنَّهَارِ إِذَا تَجَلَّى (2) وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى (3) إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى (4) فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى (5) وَصَدَّقَ بِالْحُسْنَى (6) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى (7) وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى (8) وَكَذَّبَ بِالْحُسْنَى (9) فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى

(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக! ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன. ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம். எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ, அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம். (அல்குர்ஆன் 92 : 1-4)

அன்பானவர்களே!நாசத்தின், பேரழிவின் தொடக்க இரண்டு நிலைகளை அல்லாஹ் சொல்கிறான். ஒன்று,அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் கருமித்தனம் காட்டுவது;அல்லாஹ்வை அடைவதற்கு தனது வாழ்க்கையின் நேரங்களை செலவழிக்காமல் இருப்பது;உலக இன்பங்களை தனது வாழ்க்கையில் கழிப்பது,தனது நேரங்களை கழிப்பது.

ஆனால்,அல்லாஹ்விற்காக அல்லாஹ்வைத் தேடி அல்லாஹ்வின் அருளை அவனின் பொருத்தத்தை அடைவதற்கு அவரிடத்தில் நேரமில்லை.அல்லாஹ்வின் பக்கம் அவரை அழைத்து அவருக்கு வேத வசனங்களைக் கொண்டு உபதேசம் செய்யும் போதெல்லாம் அலட்சியம் செய்து கொண்டிருக்கின்றார்.

இது மோசமான நிலை. அடுத்து, அல்லாஹ் அவருடைய மூன்றாவது நிலையை சொல்கின்றான்: இந்த தீனை அவர் பொய்ப்பித்து விடுவார்.

பிறகு, மார்க்கம் என்றால், அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம், எல்லா மதமும் சம்மதம் தான், எல்லா மதமும் ஒன்று தான், எல்லா மதமும் ஒன்றை தான் சொல்கின்றது, யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அலட்சியம்.

இன்னும் சிலர், நன்மை என்பது, பாவிகள் செய்யவேண்டிய ஒன்று, நாங்கள் என்ன பாவம் செய்தோம்? நன்மை செய்வதற்கு. நாங்கள் என்ன கெட்டது செய்தோம்? இபாதத்துக்கள் செய்வதற்கு. நாங்கள் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்யவில்லை.

எனவே,நாங்கள் இறந்து விட்டால் கண்டிப்பாக எங்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தான் கொடுப்பான்.

இன்னும் பலர் இருக்கின்றார்கள்; இந்த உலக வாழ்க்கையில் எங்களை செழிப்பாக வாழ வைத்த அந்த இறைவன், நாங்கள் இறந்துவிட்டால் எங்களை சும்மா விட்டுவிடுவானா?கண்டிப்பாக அங்கும் எங்களுக்கு நல்ல வாழ்க்கை தான் தருவான் என்று இருப்பவர்கள்.

இப்படியாக, ஏளனம் பண்ணக்கூடியவர்கள், பரிகாசம் செய்யக்கூடியவர்கள், மறுமையை மறந்து, மறுமையை மறுத்து அல்லாஹ்வுடைய தீனோடு விளையாட கூடியவர்கள்.

கடைசியாக, இவர்களுடைய முடிவு, நரகத்தை தான் நாம் இவருக்கு இலகுவாக்கி வைப்போம்.நரக பாதையை தான் இவருக்கு இலகுவாக்கி வைப்போம்.கண்டிப்பாக இவர் நரகத்தில் மிக இலகுவாக நுழைந்து விடுவார்.

இந்த வசனம் நமக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை.நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய அலட்சியம் எதை நோக்கி இருக்கின்றது?எதை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்?யாரை திருப்திபடுத்துவதற்காக நாம் வாழுகின்றோம்?

நம்முடைய உழைப்பு மறுமைக்காக இருக்கின்றதா?அல்லது அழிந்து போகக்கூடிய இந்த உலகத்திற்காக இருக்கின்றதா?

காலையில் எழுந்ததிலிருந்து மாலை வரை முழுக்க துன்யா துன்யா என்று வாழ்ந்து விட்டு,மறுமை என்று வரும் போது நஷ்டவாளிகளாக, மறுமைக்கான சம்பாத்தியம் இல்லாதவர்களாக இருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

நாம் சேர்க்க வேண்டிய செல்வங்களில், நாம் தயாரித்துக் கொள்ள வேண்டிய தயாரிப்புகளில் மிக முக்கியமான அழியாத செல்வம் மிக முக்கியமான தயாரிப்பு மறுமைக்கான தயாரிப்பு தான்.

உலக செல்வங்கள் எல்லாம் அழிந்துவிடும். ஆனால் அழியாமல் இருக்கக் கூடிய செல்வம் மறுமை தான்.

அல்லாஹ் சொல்கிறான்:

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا

(ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.(அல்குர்ஆன் 18 : 46)

وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَرَدًّا

நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.(அல்குர்ஆன்19 : 76)

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை! எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்6 : 32)

யார் இந்த உலகத்தில் எவ்வளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும்,அந்த வசதியில் அவர் நிரந்தரமாக இருக்கவே முடியாது.அந்த வசதியை விட்டு கண்டிப்பாக பிரிந்தே ஆவார்.

ஆகவே, ஒரு முஃமினுடைய இலட்சியம் மறுமைக்கான விஷயங்களில், அல்லாஹ்விடத்தில் தனக்கு சொர்க்கத்தில் நிரந்தரத்தை தேடி தரக்கூடிய விஷயங்களில் இருக்க வேண்டும்.அவற்றில் முக்கியமான இரண்டை தான் சென்ற ஜும்ஆவில் பார்த்தோம்.

அதுபோன்று, இன்னும் சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிய வேண்டும். அல்லாஹ்வுடைய இந்த தீனில் இந்த சமுதாயம் எத்தனையோ குழப்பங்களை குழப்பி வைத்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

«افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً»

இஸ்ரவேலர்கள் 72கூட்டங்களாக பிரிந்தார்கள்.என்னுடைய உம்மத் 73ஆக பிரியும். ஒரே ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்வார்கள். மற்ற எல்லோரும் நரகத்திற்கு சென்று விடுவார்கள்.

தோழர்கள் பயந்து நடுங்கி கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய அந்தக் கூட்டம் யார்? என்று.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள்: நானும் எனது தோழர்களும் எந்த நேரான வழியில் இருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள் தான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4596, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இன்று, சத்தியம் எது? அசத்தியம் எது? பொய் எது? உண்மை எது? என்று ஒருவர் தடுமாறக்கூடிய அளவுக்கு பல பிரிவினைகளில் பல குழப்பங்களில் இன்றைய சமுதாயம் இருப்பதைப் பார்க்கின்றோம்.

அதற்கு மிக முக்கியமான காரணம், அல்லாஹ் உடைய வேதத்தை அவர்கள் திறக்காமல் இருப்பது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை அவர்கள் தேடாமல் இருப்பது.

ஒவ்வொருவரும் தன்னுடைய மூதாதையர்களிடமிருந்து வாழையடி வாழையாக வழித்தோன்றல்களாக எதை கற்றார்களோ அதையே மார்க்கம் என்று கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னுடைய தந்தையை இப்படி பார்த்தேன், அவர், அவருடைய தந்தையை இப்படி பார்த்தார், எனது ஊரில் இப்படித்தான் காலம் காலமாக நடக்கிறது.

எனவே, நாங்கள் ஊருஸ் கொண்டாடுவோம். கந்தூரி கொண்டாடுவோம். மீலாது விழா கொண்டாடுவோம். மவ்லூது கொண்டாடுவோம். தர்கா கட்டுவோம். சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்வோம்.

இஸ்லாம் என்று ஒன்று இருக்கிறது, ஆனால் நாங்கள் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் எங்களது ஊரில் வாழையடி வாழையாக எப்படி நாங்கள் எங்களது மூத்தவர்களை எங்களது மூதாதையர்களை பார்த்தோமோ அதுபோன்று தான் நாங்கள் செய்வோம்.

பல ஊரில் நீங்கள் பார்த்திருக்கலாம்; திருமணத்தில் பல அனாச்சாரங்கள் நடக்கும். இன்னும் எத்தனையோ ஷிர்க்கான சடங்குகள் நடக்கின்றன.

அல்லாஹ்வுடைய நேர்ச்சையை அவ்லியாக்களுக்கு செய்யக் கூடிய கூட்டம் எத்தனை பேர்! அல்லாஹ்விடத்தில் துஆ கேட்க வேண்டிய இந்த உம்மத் நாகூரிலும், இன்னும் பல தர்காக்களிலும் கேட்கிறார்கள்.

எப்படி மாற்றார்களிடத்தில் குலதெய்வம் என்று இருக்குமோ, ஒரு ஊருக்கு அல்லது ஒரு ஜாதிக்கு ஒரு தெய்வம், அதுபோன்று முஸ்லிம்களில் ஒரு பெரிய கூட்டம் இருக்கின்றார்கள்.

இதற்கு காரணம், அவர்கள் சத்தியத்தை தேடாமல் இருப்பது. ஒரு முஸ்லிமுடைய மன உறுதி, மேலான எண்ணம் இருக்க வேண்டுமென்றால், அவர் ஹக்கை தேடவேண்டும். ஹக்கை தேடுவதில் அவருக்கு லட்சியம் இருக்க வேண்டும்.

இன்று சிலர் சொல்வார்கள்.அவர்கள் மிகப்பெரிய சோம்பேறிகள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

ஆளுக்கு ஆள் ஒன்னு சொல்றாங்க, குழப்பமா இருக்குங்க. அதனால தான் நான் எதையுமே கண்டுக்கறதே இல்ல. அப்படியே விட்டுவிட்டேன்.

இவர் கூடும் என்கிறார், அவர் இதைக் கூடாது என்கின்றார். இவர் இதை சரி என்கின்றார், அவர் இதை சரி இல்லை என்கின்றார். எதுக்கு பிரச்சனை, நான் பாட்டுக்கு எல்லாத்தையும் விட்டுட்டு பேசாம இருக்கேன்.

அதனால்தான் நான் பயான் கேட்பதில்லை. அதனால்தான் நான் வகுப்புக்கு போறது இல்ல. அதனாலதான் நீ யார் பேச்சையும் கேட்பதில்லை என்று கூறுவார்கள்.

இவர்களை இவர்களது நஃப்ஸ் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இவர்களை ஷைத்தான் இப்படிப்பட்ட ஊசலாட்டங்களை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்.

உண்மையில் இவருக்கு சத்தியத்தின் தேடல் இருந்திருக்குமேயானால், உண்மை எது? அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை, மார்க்கம் எது? அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் எது? என்பதை தேடி இருப்பார்.

நீ இப்படி சொல்கிறாயா? அதற்கு ஆதாரம் கொண்டுவா என்று ஆதாரங்களை தேடி இருப்பார். சத்தியத்தை ஆராய்ந்திருப்பார். அதில் தெளிவான ஒன்றுக்கு முடிவுக்கு வந்திருப்பார்.

அல்லாஹ்விடத்தில் ஹக் ஒன்று தான். அதை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக அவன் கொடுத்தே தீருவான்.

நீங்கள் சத்தியத்தை தேடி புறப்பட்டால், அல்லாஹ்விடத்தில் உள்ள உண்மையான நேர்வழியை தேடி திறந்த மனதோடு இறையச்சத்தோடு அல்லாஹ்வை பயந்து மறுமைக்காக சத்தியத்தை தேடுகின்ற அந்த பாதையில் நீங்கள் சென்றால், நீங்கள் வந்து சேரக் கூடிய இடம் ஒரே இடமாக தான் இருக்கும்.

லட்சக்கணக்கான கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் யூதர்கள் மஜூஸிகள் முஷ்ரிக்குகள் அவர்கள் சத்தியத்தை தேடும்போது, உண்மையான மார்க்கம் எது? என்று தேடும் போது, எத்தனையோ ஆயிரம் மைல்கள் தூரமாக இருந்தாலும் சரி,இறுதியில் அவர்கள் இஸ்லாமிற்கு வந்து இணைவதை நிகழ்கால வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.

பல அடையாளங்களை பல சாட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம். கிறிஸ்தவர்களில் சர்ச்களில் ஆராதனை செய்து கொண்டிருந்தவர்கள், வழிபாடு செய்து கொண்டிருந்தவர்கள், பல மக்களை கிறிஸ்துவர்களாக மாற்றிய பாதிரிகள் இஸ்லாமிற்கு வந்தார்கள்.

எத்தனையோ பூசாரிகள், கல்லுக்கும் மண்ணுக்கும் கண்டதற்கும் கேட்டதற்கும் பூஜைகள் செய்து வழிபாடு செய்து கொண்டிருந்தவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இணைந்து அல்லாஹ்வின் அடியார்களாக மாறினார்கள்.

இப்படி இஸ்லாமிய மார்க்கத்திற்கு வெளியில் இருக்கின்றவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய ஹிதாயத்தை காட்டக்கூடிய அல்லாஹ், அல்லாஹ்வுடைய தீனில் இருக்கக்கூடிய நாம், உண்மை எது? சத்தியம் எது? அல்லாஹ் இறக்கிய உண்மையான மார்க்கம் எது? தூதர் கொண்டுவந்த உண்மையான மார்க்கம் எது? என்று தேடும்போது சத்தியத்தை அல்லாஹ் நமக்கு காட்ட மாட்டானா?

ஒருவன் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டு, கண்மூடித்தனமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றான் என்றால், அவன் அல்லாஹ்வுடைய தீனை தேடவில்லை. சத்தியத்தை புரிவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.

சல்மான் ஃபாரிஸி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய வரலாறும் அபுதர் கிஃபாரி ரழியல்லாஹுஅன்ஹுஅன்ஹு அவர்களுடைய வரலாறும் சத்தியத்தை தேடி பயணிக்கக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிகப்பெரிய ஒரு கலங்கரை விளக்கமாக பாடமாக இருக்கிறது.

ஒரு மஜூஸி குடும்பத்தில் பிறந்து, நெருப்புக்கு ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்து, சத்தியத்தை தேட ஆரம்பித்தவர். ஈரானில் பிறந்தவர். சத்தியத்தை தேடி அவர் பயணித்த பயணம்.

ஒரு பாதிரியார் அதற்குப் பிறகு இன்னொருவர், ஒருவர் இறந்ததற்கு பின்னர் இன்னொருவர், இப்படியாக தேடிக்கொண்டே வந்து, இறுதியாக மதினா வந்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கரத்தால் இஸ்லாமை ஏற்கின்றார்கள்.

அறிவிப்பாளர் : சல்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3946, 3947, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23737.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த சல்மானை பார்த்துச் சொன்னார்கள்:

«سَلْمَانُ مِنَّا أَهْلَ الْبَيْتِ»

சல்மான் எங்களை சேர்ந்தவர், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்.

அறிவிப்பாளர் : சல்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 6539.

ஈரானில் ஒரு மஜூஸி குடும்பத்தில் பிறந்து, பலகாலம் நெருப்புக்கு பூஜை செய்து கொண்டு இருந்த குடும்பத்தில் வளர்ந்தவர் சத்தியத்தை தேட ஆரம்பித்தார்.

மிகப் பெரிய செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தவர். வசதியான வாழ்க்கை வாழ வேண்டிய ஒரு மனிதர். ஆனால், சத்தியத்திற்காக அவர் தியாகம் எடுத்தார்.

உண்மையான கடவுள் யார்? அவனை அடைய வேண்டும் என்பது, அவருடைய சுகபோகமான வாழ்க்கையை தூக்கி எறிய வைத்தது.

தன்னுடைய தந்தைக்கு பிறகு, தனக்கு கிடைக்கவேண்டிய தலைமைத்துவத்தை தூக்கி எரிய வைத்தது.

இப்படியாக வந்து கடைசியில், அவர் மதினாவிற்க்கு வந்த போது, அவருடைய நிலை என்ன?

சிரியா சென்றவர்களிடத்தில் சல்மான் ஃபாரிஸி கேட்கின்றார்; இதுபோன்று இப்படி இப்படி ஒரு தூதர் வந்திருப்பதாக கேள்விப்படுகிறேன். நீங்கள் அந்த ஊருக்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா? என்று சொன்னபோது, அப்பாவியான சல்மானை பார்த்தவர்கள் ஒரு தந்திரம் தீட்டுகிறார்கள்.

சரி வா,அழைத்து செல்கின்றோம் என்று,அழைத்து வந்து விட்டு கடைசியில் மதினாவில் ஒரு யூதரிடத்தில் அடிமை என்று கூறி அவரை விற்று விடுகிறார்கள்.

ஒரு சுதந்திரமான மனிதர், வசதியான வாழ்க்கையில் பிறந்த ஒரு மனிதரின் நிலைமை மாறி கடைசியில் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அடிமட்டமான விலைக்கு செல்கின்றார்.

எப்படித்தான் ஒரு சுதந்திரமான மனிதனாக இருந்தாலும் தன்னை அடிமை என்று ஒரு யூதனிடத்தில் விற்கின்றார்கள். அதையும் சகித்துக் கொள்கின்றார். தான் அந்த சத்தியத்தை தேடி அவரை தனக்கு எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் சரி, எவ்வளவு பெரிய துன்பங்களை சந்தித்தாலும் சரி, அந்த சத்தியத் தேடல் என்னை விட்டும் நீங்கி விடாது.

அடிமையாக்கப் படுகிறார். அந்த யஹூதியினுடைய பேரிச்சம்பழம் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றார். அதற்கு தண்ணீர் இரைப்பது, தோட்டங்களை சுத்தம் பண்ணுவது.

இப்படியாக இருக்கின்ற அந்த நிலையில், தனக்கு கிடைக்கின்ற அந்த சொற்ப நேரத்தை பயன்படுத்தி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு முறை சந்திக்கின்றார்.

உண்மையான நபி என்று அறிந்து கொண்டபோது, அவர்கள் இடத்தில் தனது நிலைமையை சொல்கின்றார்.

அல்லாஹ்வுடைய தூதரே! உங்களைத் தேடித்தான் இந்த நேர்வழியை தேடித்தான் இத்தனை நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கின்றேன். சிரமத்திற்குப் பின் சிரமமாக கடைசியாக நான் அடிமையாக ஆக்கப்பட்டு இருக்கின்றேன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாருங்கள் சல்மானை விடுவிப்போம் என்பதாக கூறி, அந்த யஹூதியிடத்தில் சல்மானுக்கு விலை பேசுகிறார்கள்.

யஹூதியோ மிகப்பெரிய விலை பேசுகின்றார். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் சேர்ந்து அந்த யஹூதி  கேட்டதை அவனிடத்தில் கொடுத்து சல்மானை விடுதலை செய்கின்றார்கள்.

அறிவிப்பாளர் : சல்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23737.

ஹக்கு என்பது சாதாரணமானது அல்ல.அது மிக உயர்ந்தது.அதை அடைய வேண்டும் என்று சொன்னால்,அதற்கான தியாகங்கள் அவசியம். அதற்கு என்ன தகுதி உங்களிடத்தில் உள்ளது?அதை சோதிக்காமல் அல்லாஹ் கொடுத்து விட மாட்டான்.

இன்று, நமது நிலை, உலக விஷயம் எல்லாவற்றையும் தேடுவோம். ஆனால், மார்க்கம் என்று வந்துவிட்டால், யார் நமது காதில் எழுதினாலும் அது நமது கொள்கையாக மாறிவிடுகின்றது. யார் எதை பேசினாலும் அது நம் மார்க்கமாக மாறிவிடுகின்றது.

அந்த அளவு மார்க்கத்தை மிக மட்டமாக வைத்திருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

ஆகவே, ஒரு முஸ்லிமுடைய உயர்ந்த மேலான மன உறுதி சத்தியத்தை தேடுவதில் இருக்க வேண்டும்.

தன்னுடைய தந்தை செய்வதை பார்த்தாலும் சரி, தன்னுடைய தாய் செய்வதை பார்த்தாலும் சரி, அல்லாஹ்வுடைய தீன் ஆர்வத்தோடு இணைக்கப்பட்டது

அதாவது, அல்லாஹ்வின் வேதத்தில் எங்கே இருக்கின்றது? நபியின் சுன்னாவில் எங்கே இருக்கின்றது? இப்படி ஒரு முஸ்லிம் தேட ஆரம்பித்தால் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மார்க்கத்தை நபித்தோழர்களுக்கு மத்தியில் எப்படி விட்டு சென்றார்களோ அந்த மார்க்கத்தை அவன் அடைய முடியும்.

யாரைப் பார்த்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நானும் என்னுடைய தோழர்களும் எந்த கொள்கையில் இருக்கின்றோமோ என்று சொன்னார்களோ அந்த கொள்கைக்கு வந்து சேர முடியும்.

இன்று சொல்வது ஈசியாகி விட்டது. மக்கள் சொல்வார்கள்; எனது நோக்கம் ரசூலுல்லாஹ் உடைய காலத்தில் மஸ்ஜிதுன் நபவியில் ஸஹாபாக்கள் இடத்தில் மார்க்கம் எப்படி இருந்ததோ அந்த மார்க்கத்தை கொண்டு வருவது தான் எங்களது நோக்கம் என்று சொல்வார்கள்.

ஆனால், சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். எப்படி நாம், யா அல்லாஹ்! நேரான பாதையை எங்களுக்கு காட்டு என்று சொல்லிவிட்டு நம்மில் பலர் துஆவோடு நிறுத்திக் கொள்கின்றார்களோ அதுபோன்றுதான் அவர்களும்.

தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளை, தீன் என்பது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால்,அல்லாஹ்வுடைய கட்டளை என்ன?என்பதை தெரிந்து கொள்ளவே மாட்டார்கள். நபியின் வழிமுறை தான் தீன் என்று சொல்வார்கள்.

ஆனால், தாங்கள் அன்றாடம் 24மணி நேரமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை செய்கின்ற செயலில் எதற்கு ஆதாரம் இருக்கின்றது? என்பதை தேடவே மாட்டார்கள்.

மார்க்கம் என்பது இல்ம், ஹலால் ஹராமை அறிய வேண்டும், சட்டங்களை கேட்க வேண்டும் என்பதாக சொல்வார்கள். ஆனால், கேட்கவே மாட்டார்கள்.

இதைவிட மிகப்பெரிய துர்பாக்கியம் என்ன இருக்கின்றது. உண்மையான மன உறுதி தேடல் இருக்குமானால் கண்டிப்பாக கல்வியை தேடி சத்தியத்தை தேடி பயணித்திருப்பார்கள். சத்தியம் தெரியும் போது அதை பின்பற்றி இருப்பார்கள்.

ஆகவே, நம்முடைய கொள்கை உறுதி மேலான நம்முடைய லட்சியம் சத்தியத்தை தேடுவதில் இருக்க வேண்டும்.

அதுபோன்று, அல்லாஹ்வுடைய பாதையில் பக்கம் மக்களை அழைப்பது. அல்லாஹ்வுடைய தீனின் பக்கம் மக்களை அழைப்பது. அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வது.

இதில் மிகப்பெரிய ஒரு லட்சியவாதியாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தீனை நான் பின்பற்றுவதோடு பிறருக்கு எடுத்துச் சொல்வது தான் என்னுடைய மேலான எண்ணம்.

இப்படித்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்தோழர்களை உருவாக்கினார்கள். அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது,அல்லாஹ்வின் பக்கம் முஸ்லிம்களையும் அழைக்கவேண்டும், அல்லாஹ்வுடைய தீனை மறந்திருக்கக் கூடிய அல்லாஹ்வுடைய சட்டங்களை பின்பற்றாத முஸ்லிம்களையும் நாம் அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற அதே நேரத்தில் இஸ்லாமிற்கு வெளியில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களையும் நாம் அழைக்க வேண்டும்.

அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? நமது அழைப்பு ஏன் அவர்கள் வரை சென்று அடையவில்லை?

சிலர் சொல்கின்றார்கள்; முதலில் நாம் முஸ்லிம்களை திருத்திக் கொள்வோம். அதற்குப் பிறகு மற்றவர்களுக்கு அழைப்பு கொடுப்போம் என்பதாக.

இது என்ன முட்டாள்தனமாக இருக்கின்றது? என்ன மடத்தனமாக இருக்கின்றது? இந்த மார்க்கத்தை பரப்புவதற்காக இந்த மார்க்கத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் முனாஃபிக்குகள் இருந்தார்கள். மஸ்ஜிதே நபவியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முனாஃபிக்குகள் தொழுதார்கள்.

அல்லாஹு தஆலா, நபியே! இந்த முனாஃபிக்களையெல்லாம் நீங்கள் நல்ல முஸ்லிம்களாக மாற்றியதற்கு பிறகு தான் முஸ்லிமல்லாதவர்களுக்கு நீங்கள் தாவா கொடுக்க வேண்டும் என்றா சொன்னான்?

இந்த முனாஃபிக்குகளை அச்சுறுத்துவதற்குரிய வசனங்களையும் அல்லாஹ் இறக்குகின்றான். அதே நேரத்தில் மாற்றார்களுக்கு இஸ்லாமிற்கு வெளியே இருக்கக்கூடியவர்களுக்கு தாவா கொடுக்க வேண்டிய சட்டத்தையும் அல்லாஹ் இறக்குகின்றான்.

இன்று தாவா என்றால் தப்லீக் என்றால் மக்களுக்கு தொழுகையை பற்றி சொல்வது, மக்களை அல்லாஹ்வின் மஸ்ஜிதின் பக்கம் அழைப்பது என்பதாக நிறுத்தி வைத்து விட்டார்கள். யார் இவர்களுக்கு இப்படிபட்ட சட்டங்களை சொன்னது?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயலா இது?

தொழுகை இல்லாதவர்களை தொழுகையின் பக்கம் அழைத்தாக வேண்டும். மாற்று கருத்து கிடையாது.

ஆனால், இன்று நாம் அழைப்பது போல் அல்ல. நாம் என்னமோ அல்லாஹ்விற்காக வேண்டி அல்லாஹ் இவர்களிடத்தில் கெஞ்சுவதை போல், சொர்க்கம் இவர்களிடத்தில் கெஞ்சுவது போல நாம் தொழுகைக்காக அழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அப்படி அல்ல. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகைக்காக இப்படி அழைக்கவில்லை.

எப்படி அழைத்தார்கள்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய ஒரு எச்சரிக்கையை கவனியுங்கள்.

இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு, அல்லாஹ்வுடைய தீனை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு, நான் முஸ்லீம் என்று சாட்சி சொன்னதற்கு பிறகு, ஒருவன் தொழுகைக்கு வரவில்லை என்றால், அல்லாஹ்வுடைய தூதர் அவனை சிறப்புகளை சொல்லி அழைத்தார்களா?இன்று நாம் கெஞ்சுவதைப் போல கொஞ்சி அழைத்தார்களா?

இமாம் முஸ்லிம் பதிவு செய்கின்றார்கள்;ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள்:

«لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَانِي أَنْ يَسْتَعِدُّوا لِي بِحُزَمٍ مِنْ حَطَبٍ، ثُمَّ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ، ثُمَّ تُحَرَّقُ بُيُوتٌ عَلَى مَنْ فِيهَا»

உங்களில் யார் மஸ்ஜிதுக்கு வராமல் வீட்டில் தொழுகின்றார்களோ அவர்களை அவர்களுடைய வீட்டோடு எரித்து விட நான் முடிவு செய்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 651.

ஆனால்,அதை நான் நிறைவேற்றவில்லை.பெண்களும் சிறுவர்களும் இருக்கின்ற காரணத்தால்.

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»

நமக்கும் காஃபிர்களுக்கும் இடையில் உள்ள அந்தத் திரையே தொழுகை தான். தொழுகையை விட்டவன் காஃபிர் ஆகிவிட்டான்.

அறிவிப்பாளர் : புரைதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்-82, இப்னு மாஜா -1079, திர்மிதி -2621.

தொழுகையை விட்டாலும் நீ முஸ்லிம், உனக்கும் எங்களுடைய கப்ருஸ்தானில் இடம் இருக்கின்றது, நீயும் எங்களது மஸ்ஜிதுக்கு முத்தவல்லியாக ஆகலாம், செக்யூரிட்டி ஆகவும் ஆகலாம், நீ இறந்து விட்டால் எங்களது இமாம் உங்களுக்கு தொழுகை நடத்துவார்.

இந்த சட்டத்தை வைத்துக் கொண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி, ஒருத்தனைக் கூட தொழுகையாளியாக மாற்ற முடியாது.

பத்து ரூபாய் சந்தா தரவில்லை என்பதற்காக நிக்காஹ் தஃப்தர் தர மறுக்கக் கூடிய எத்தனை மஸ்ஜிதுகள் இருக்கின்றன.

தொப்பி போடாதவர்கள் எல்லாம் மஸ்ஜிதுக்குள் வரக்கூடாது என்ற சட்டம் போடுகின்றார்களே தொழுகை இல்லாதவர்களுக்கு இனி ஜனாஸா தொழுகை மஸ்ஜிதில் நடக்காது.

யார் ஐந்து நேர தொழுகைக்கு முஸ்லிம்களோடு ஜமாத்துக்கு வரவில்லையோ ஜனாஸா தொழுகை பள்ளியில் நடக்காது, அவர்களுக்கு நாங்கள் நிக்காஹ் தஃப்தர் கொடுக்க மாட்டோம், முஸ்லிம்களுடைய கபர்ஸ்தானில் அவர்களை நாங்கள் அடக்கம் செய்ய மாட்டோம். அவர் தொழுகையாளி என்று பெண்கள் சாட்சி சொன்னால் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடித்து வைப்போம்.

இப்படி அல்லவா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சட்டம் போட்டார்கள்.

அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய செயலை கவனியுங்கள். அபூபக்கர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய காலத்தில் ஒரு கூட்டம் நாங்கள் ஜமாஅத்தாக தொழுவோம். ஆனால், இனி இந்த ஜகாத்தை மட்டும் உங்களிடத்தில் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹுவீடு வீடாக சென்று கெஞ்சினார்களா? ஜகாத் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு ஆகிரத்தில் ரொம்ப சிறப்பு இருக்கு என்று கெஞ்சினார்களா?

அப்படி இல்லை. சொன்னார்கள்:

وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ

யார் தொழுகையையும் ஜகாத்தையும் பிரிப்பானோ அவனுடைய கழுத்தை வெட்டுவேன்.அவர்களுடைய பெண்களை எங்களது அடிமைகளாக ஆக்குவேன். அவர்களின் பிள்ளைகளை எங்களது அடிமைகளாக்குவேன் அப்படியே சொன்னது போன்று செய்தார்கள். தொழுது கொண்டிருந்தவர்களை வெட்டினார்கள்.

நூல் : புகாரி, எண் : 1400, 6925, 7284.

இஸ்லாமிய அடிப்படை ஐந்து கடமைகளில் எந்த சமரசமும் இல்லை. இன்று மிகப்பெரிய வழிகேட்டில் நமது சமுதாயத்தின் ஒரு கூட்டம் சென்றுகொண்டிருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக.

தாவா முஸ்லிம்களுக்கு செய்யவேண்டிய அதே நேரத்தில், இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியம் எது? என்ற தேடலில் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு இஸ்லாமை சேர்த்து வைப்பதற்காக இன்னொரு நபி வருவார்களா? இன்று தாவா தப்லீக் என்றால், முஸ்லிம்கள் தங்களது மஸ்ஜிதுகளில் பேசி முடித்து கொள்வதாக ஆகிவிட்டது.

இப்படி அல்லாஹ்வுடைய நபிமார்கள் செய்யவில்லையே?நபிமார்களுடைய பிரச்சாரம் தெருக்களில் இருந்தன. அவர்கள் மற்றவர்களைப் பார்த்து அழைத்து எல்லா விஷயங்களையும் சொன்னார்கள்.

மாற்றார்களிடத்தில் இருக்கக்கூடிய ஷிர்க்கை கண்டித்தார்கள். அவர்களிடத்தில் இருக்கக்கூடிய பொய்யை கண்டித்தார்கள். அளவுகளில் நிலுவையில் இருக்கக்கூடிய மோசடிகளை கண்டித்தார்கள். அவர்கள் செய்த ஜினாவை கண்டித்தார்கள். அவர்கள் செய்த ஓரினச்சேர்க்கையை கண்டித்தார்கள்.

ஆகவேதான், நபிமார்களின் தாவா வெற்றி பெற்றது. இன்றைய முஸ்லிம்களின் தாவா வெற்றி பெறாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.

இன்று அழைப்பை சீர்திருத்தத்தை நமக்குள்ளேயே முடித்துக் கொள்கின்றோம். இந்த சீர்திருத்தத்தை எதுவரை நம்மில் அடுத்து தொடர மாட்டோமோ, முஸ்லிமல்லாதவர்களில் யாரை பார்த்தாலும் சரி, அவருக்கு அந்த நேரத்தில் என்ன சொல்லவேண்டுமோ, எந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டுமோ, மார்க்கத்திலிருந்து எடுத்துச் சொல்லி அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது நமது கடமை.

இது நம்முடைய சூழ்நிலையைப் பார்த்து பயந்தோ, நம்முடைய தனிமையை பார்த்தோ அல்லது நமது எண்ணிக்கையில் குறைவான அவரை பார்த்து பயந்தோ ஒரு முஃமீன் விடுவானேயானால் அது அவனுடைய தாழ்வு மனப்பான்மை ஆகும்.

மக்காவில் உம்மு ஷரீக் என்ற ஒரு பெண், பெரும்பாலான முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து வந்து விட்ட நிலையில், அந்த பெண் மாட்டிக் கொண்டார்கள். ஆனால்,அந்த பெண்ணால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இஸ்லாமிற்கு வந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு வீடாக சென்று பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இஸ்லாமை எடுத்துச் சொல்லி, பல நூறு பெண்கள் இஸ்லாமிற்கு வருவதற்கு காரணமாக இருந்தார்கள்.

கடைசியில் இப்படி பெண்களை எல்லாம் இஸ்லாமிற்கு மாற்றிக்கொண்டிருக்கின்ற உம்மு ஷரீக்கை அபூஜஹ்ல் தெரிந்து கொண்டபோது,அவர்களை பிடித்து ஒட்டகத்தின் மீது அமர வைக்கிறான்.

(ஒட்டகத்தில் பயணம் செய்வது சாதாரணமானதல்ல. ஒட்டகத்தில் எந்த வித இருக்கையும் போடாமல், அதற்காக கஜாவா பெட்டி என்று சொல்வார்கள் அதை வைத்தால்தான் ஒட்டகத்தில் பயணம் செய்ய முடியும். அல்லது அதற்கான இருக்கை போடவேண்டும், இருக்கை வைத்தால்தான் பயணம் செய்ய முடியும்.)

அப்படி இல்லாமல் வெறும் ஒட்டகத்தில் அவரை உட்கார வைத்து, அப்படியே சாமானை பேக் செய்வது மாதிரி அவர்களை அந்த ஒட்டகத்தில் கட்டி, இறுதியாக அவருடைய மக்காவில் இருந்து தூரமாக இருக்கக்கூடிய அவர்களுடைய குடும்பத்தார் வரை அவர்களை இழுத்துச் சென்று ஒப்படைத்து விட்டு வந்தார்.

கொன்றிருக்கலாம். கொன்றிருந்தால் மிகப்பெரிய குடும்ப போர் ஏற்பட்டிருக்கும்.அதற்கு பயந்து இவர்களை அவன் அவர்களுடைய கபீலாவில் கொண்டு போய் விடுகின்றான்.

அந்தப் பெண்மணி சொல்கின்றார்கள்: பசி கொடுமை, அவர்கள் எல்லாம் பயணத்தில் இறங்கி சாப்பிட்டார்கள்.எனக்கு ஒரு கவளம் உணவு கூட கொடுக்கவில்லை,ஒரு மிடறு தண்ணீரும் எனக்கு கொடுக்கவில்லை.

இறுதியாக அந்தப்பெண் ஹிஜ்ரா செய்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வருகின்றார்கள். அவர்களை குறித்து அல்லாஹு தஆலா சூரா அல் முஜாதலாவில் ஒரு வசனமே இறக்குகின்றான்.

நபியே!இப்படிப்பட்ட முஹாஜிர் பெண்கள் வரும்போது அவர்களை காபிர்களிடம் திரும்பி அனுப்பாதீர்கள் என்று. (அல்குர்ஆன் 60 : 10)

உசுதுல் காபா, எண் : 2454.

இன்று நம்முடைய இந்த மன உறுதியை கவனிக்க வேண்டும். தாவா கொடுப்பதென்றால் கை கால் எல்லாம் நடுங்கி விடுகிறது. லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்வதென்றால் இவன் எங்கேயாவது பொய் சொல்லி விடுவானோ? போலீஸ் வந்து விடுமோ? அது அந்து விடுமோ? இப்படி அத்தனை வஸ்வாஸ்களையும் ஷைத்தான் போடுகின்றான்.

ஒரு முஸ்லிமிடத்தில் மணிக்கணக்காக லாயிலாஹ இல்லல்லாஹ் பற்றி பேசுவது பெரிய விஷயம் இல்லை.காரணம், அவன்தான் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றான். அதை நிராகரிக்கின்ற அல்லது அதை தெரியாமல் இருக்கின்ற, சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கின்ற, இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு வெளியில் இருக்கின்ற ஒரு மனிதனிடத்தில், நீ வணங்க வேண்டிய உண்மையான இறைவன் உன்னைப் படைத்தவன் அல்லாஹ் தான்.

அல்லாஹ்தான் உனது கடவுள், அவனை தான் நீ வணங்கவேண்டும், நீ வணங்கக்கூடிய இந்த சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்பதை அவனிடத்தில் சொல்ல வேண்டும்.

ஒரு கூட்டம் இருக்கின்றது, பேசுவார்கள்: எல்லாம் அல்லாஹ்வை கொண்டு தான் ஆகும், நன்மை தீமை எல்லாம் அல்லாஹ்வை கொண்டு தான் ஆகும் என்று. இதை முஸ்லிம்களிடத்தில் சொல்லலாம், கேட்பார்கள்.

ஆனால், இதை இப்ராஹீம் நபி எப்படி சிலை வணங்கிகள் பார்த்து சொன்னார்களோ இந்த சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று, அதுபோன்று நாம் பூசாரிகளை பார்த்து சொல்ல வேண்டும். முஷ்ரிக்குகளை பார்த்து சொல்ல வேண்டும்.

யார், அந்த சிலைகளை வைத்துக்கொண்டு இன்று சமுதாயத்தில் இந்த சிலைகள் தான் கடவுள்கள் என்று பிரச்சாரம் செய்கின்றார்களோ அவர்களிடத்தில் சொல்லவேண்டும்.

இந்த சிலை சிலை தான், இதற்கு கையிருக்கும் பிடிக்காது, கால் இருக்கும் நடக்காது என்பதை அவர்களிடத்தில் சொல்லவேண்டும்.

இந்த சிலையை நம்பி இதனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றீர்களே? இந்த சிலை உங்களுக்கு எதையும் கொடுக்காது என்பதை அவர்களிடத்தில் சொல்லவேண்டும்.

இதை நாம் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று, நம்முடைய மிகப் பெரிய பிரச்சினையாக இது இருக்கின்றது. தாவா களத்தில் அல்லாஹ்வுடைய தவ்ஹீதின் பக்கம் மக்களை அழைப்பது நம்முடைய மிகப் பெரிய அலட்சியம்தான் இன்று பலரும் இஸ்லாம் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், இஸ்லாமைப் பற்றி முஸ்லிம்களை பற்றி மாற்றார்கள் அவர்களது செவிகளில் சிந்தனைகளில் எதை ஊதுகின்றார்களோ போடுகிறார்களோ அதையே நம்பிக்கை கொண்டு நமக்கு எதிரிகளாக மாறுகின்றார்கள்.

ஒருபக்கம் இஸ்லாத்தின் மீதுள்ள அவர்களுக்குறிய சந்தேகங்களை நீக்க வேண்டிய அதே நேரத்தில், உண்மையான மார்க்கம் எது? என்பதை எடுத்துச் சொல்ல அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதுபோன்றுதான்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ்வுடைய குர்ஆனும் ஒரு முஸ்லிமுடைய பெரிய மன உறுதியை அவனுடைய ஜிஹாத் உடைய விசயத்தில் கொடுக்கிறது.

ஜிஹாத் என்பது, அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வுடைய தீனுக்காக அல்லாஹ்வுடைய கலிமா உயர்வதற்காக போராடுவது.இது ஒரு முஸ்லிமுடைய லட்சியமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றி இம்ரான் இப்னு ஹுஸைன் அவர்கள் சொல்கின்றார்கள்.

நாங்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் வாளை எடுத்து வீசுபவர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்.

அஷ்ஷிஃபா - காழி இயாழ்.

இன்று, நம்முடைய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று கோழைத்தனம் பயம். எதற்கெடுத்தாலும் பயம்,எதற்கெடுத்தாலும் கோழைத்தனம்,துணிவு என்பதே இல்லாத ஒரு சமுதாயமாக மாறி கொண்டிருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி இப்னு உமர் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரை விட வீரமான ஒருவரை, துணிவான ஒருவரை, தைரியமான ஒருவரை, முகம் பிரகாசம் உடைய ஒருவரை நான் பார்த்ததில்லை.

நூல் : சுனன் அத்தாரமி, எண் : 60

துணிவு, தைரியம், வீரம் அத்தனைக்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் மாதிரியாக இருந்தார்கள்.

இன்று நல்லவர்கள் என்று சொன்னால் கோழையாக இருப்பதை சிலர் புரிந்து கொண்டார்கள்.அப்படி இல்லை.

சத்தியத்திற்காக குரல் கொடுப்பது, சத்தியத்திற்காக உயிரை கொடுப்பது முஸ்லிம்களுடைய லட்சியமாக இருக்க வேண்டும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை கவனியுங்கள். அதுவும் குறிப்பாக ஒரு போரில் முஸ்லிம்கள் எல்லாம் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது அங்கே அபூபக்ர் இப்னு அப்துல்லாஹ் இப்னு கைஸ் என்ற நபித்தோழர் அந்த நேரத்தில் மக்களுக்கு ஒரு பிரச்சாரம் செய்கின்றார்.

போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக முஃமின்களுக்கு வீரத்தை துணிவை கொடுப்பதற்காக ஒரே ஒரு ஹதீஸை சொல்கின்றார்.

நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டிருக்கின்றேன். அவர்கள் சொன்னார்கள்:

«إِنَّ أَبْوَابَ الْجَنَّةِ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ»

சொர்க்கத்தின் வாசல்கள் வாள்களின் நிழலுக்கு கீழே இருக்கின்றன.

இந்த ஹதீஸை சொன்னவுடன் அங்கிருந்த முஜாஹித்களில் ஒருவர் (அவருடைய முடியும் பரட்டையாக இருக்கிறது,அவருடைய ஆடையும் புழுதி படிந்ததாக இருக்கின்றது.)நேராக வந்தார்.

அபூ மூஸாவே!நீங்கள் இதை நேரடியாக இதை ரசூலுல்லாஹ்விடமிருந்து கேட்டீர்களா?அவர்கள் சொல்கிறார்கள்:ஆம்,நான் நேரடியாக ரசூலுல்லாஹ்விடமிருந்து இந்த ஹதீஸை கேட்டேன்.

அவர் உடனே தனது வாளின் நுனியை உடைத்துவிட்டு எதிரிகளுக்குள் செல்கிறார். கடைசியாக ஷஹீது ஆகின்ற வரை போராடி இறுதியாக அவர் கொல்லப்பட்டார்.

அறிவிப்பாளர் : அபூபக்ர் இப்னு அப்துல்லாஹ் இப்னு கைஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 19538.

இப்படி துணிந்த வீரமிக்க சமுதாயத்தை கொண்டுதான் ஒரு தலை நிமிர்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். கோழைகளை கொண்டு கண்ணியமான சமுதாயத்தை உருவாக்க முடியாது.

காலித் இப்னு வலீத் அவர்கள், கிஸ்ராவை எதிர்ப்பதற்காக அழைத்துச்சென்ற மக்கள் எண்ணிக்கையிலும் குறைவு. ஆயுதங்களிலும் குறைவு.

ஆனால், அவர்களிடத்தில் துணிவு இருந்தது, தைரியம் இருந்தது, காலித் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடிதம் கிஸ்ரா மன்னரையும் பாரசீக மக்களையும் எப்படிப்பட்ட ஒரு பயத்தை கொடுத்தது என்றால், லட்சக்கணக்கான படைகளை பயங்கரமான ஆயுதங்களோடு தயாரிப்புகளோடு பார்த்தால் ஒரு எதிரி படைக்கு என்ன பயம் வருமோ, அந்த பயம் காலித் உடைய வெறும் இரண்டே இரண்டு வரிகளை உடைய கடிதத்தில் அல்லாஹ் போட்டான்.

அந்த கடிதத்தில் அவர்கள் சொன்னார்கள் :

ருஸ்துமே, கிஸ்ராவே! உன்னிடத்தில் இருப்பவர்கள் எப்படி மதுவை இந்த உலகத்தில் இன்னும் வாழவேண்டும் என்பதை விரும்புகிறார்களோ அதுபோன்று, என்னிடத்தில் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் மவுத்தை விரும்புகிறார்கள். சாக வேண்டுமென்று வந்திருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்தோடு நான் இங்கு வந்திருக்கின்றேன்.

தாரீக் தபரி 3/370

இதைத்தான் எழுதினார்கள். இந்த இரண்டு வரி உடைய ஒரு கடிதம் இப்படிப்பட்ட ஒரு பயத்தை கொடுத்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு கட்டி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்த பாரசீகப் பேரரசு சில மாதங்களில் வீழ்ச்சி அடைய செய்தது என்று சொன்னால், அது ஸஹாபாக்களின் அந்த வீரம்.

அந்த வீரத்தை நமக்கும் வேண்டும் நமது பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்.

«وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»

சொர்க்கம் வாள்களின் நிழலுக்கு கீழே இருக்கின்றது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2818.

யார் என்னுடைய மார்க்கத்திற்கு மாறு செய்கின்றார்களோ அவர்களுக்குத்தான் இழிவும் கேவலமும். ஆகவே,ஒரு முஸ்லிம் எப்போதும் துணி உள்ளவனாக தைரியம் உள்ளவனாக அல்லாஹ்வை மட்டும் பயந்தவனாக இருக்க வேண்டும்.

இந்த உலகத்தின் அடக்குமுறைகளுக்கு அநியாயங்களுக்கு பயந்து தனது மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்பவனாக அல்லாஹ்வுடைய இபாதத்துக்களை விட்டு விலகக் கூடியவனாக இஸ்லாமிய அடையாளங்களை புறக்கணிப்பவனாக இருந்து விடக்கூடாது.

அதற்கு காரணம், நம்முடைய உள்ளத்தில் ஏற்படக்கூடிய அந்த பலவீனம்.

இதைத்தான் நம்முடைய உயர்ந்த லட்சியத்தை கொண்டு நம்முடைய மன உறுதியை கொண்டு அல்லாஹ்வின் மீதுள்ள நமது நம்பிக்கையை கொண்டு மாற்ற வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு அவசியத்தில் இருக்கின்றோம்.

நமது பிள்ளைகளுக்கு நாம் முதலாவதாக சொல்லித்தர வேண்டிய விஷயம், அல்லாஹ்வுடைய நம்பிக்கைக்கு அடுத்ததாக அவனுடைய லட்சியத்தை சொல்ல வேண்டும். அவனுடைய குறிக்கோளை சொல்ல வேண்டும்.

நம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்ட தியாகங்களை செய்து இந்த சமுதாயத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்? நாம் எந்த சமுதாயத்தின் வழித்தோன்றலிலிருந்து வந்திருக்கின்றோம் என்று அவர்களுக்கு நினைவூட்டி அதற்குரிய வீரத்தோடு துணையோடு மன உறுதியோடு அவர்களை வளர்க்க வேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சமுதாய மக்களுக்கும் ஆண்களுக்கும்‍ பெண்களுக்கும் அல்லாஹ் அவருடைய அன்பை தருவானாக! பொறுத்தத்தை தருவானாக‍!

அல்லாஹ்வுடைய தீனை சரியாக புரிந்து அல்லாஹ்வுடைய தீனின் படி முழுமையாக அல்லாஹ்வுடைய கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றி வாழக்கூடிய நல்ல சமுதாயமாக ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/