HOME      Khutba      மேலான மன உறுதி!!! (அமர்வு 1-3) | Tamil Bayan - 445   
 

மேலான மன உறுதி!!! (அமர்வு 1-3) | Tamil Bayan - 445

           

மேலான மன உறுதி!!! (அமர்வு 1-3) | Tamil Bayan - 445


மேலான மன உறுதி!

ஜுமுஆ குத்பா தலைப்பு : மேலான மன உறுதி! (அமர்வு 1-3)

வரிசை : 445

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 06-01-2017 | 08-04-1438

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் முன்னோருக்கும், பின்னோருக்கும் கூறிய உபதேசத்தை எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பையும் அவனுடைய அருளையும், இம்மை மறுமையின் நல்ல முடிவையும் வேண்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

ஒரு மனிதருடைய வாழ்க்கை அவனுடைய எண்ணத்தின் அடிப்படையில் அமைகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ»

ஒரு மனிதனுடைய செயல்கள் அவனுடைய எண்ணங்களின் அடிப்படையில் அமைகின்றன.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1.

ஒரு மனிதனுடைய எண்ணம் நல்ல எண்ணமாக இருந்தால், அதை தொடர்ந்து ஏற்படக்கூடிய செயல்களும் இன்ஷா அல்லாஹ் நல்ல செயல்களாக இருக்கும்.

ஒரு மனிதனுடைய எண்ணம் கெட்டு விட்டால், அதற்கு பிறகு வரக்கூடிய அவனுடைய செயல்களும் கெட்ட செயலாக இருக்கும்.

ஒரு மனிதனுடைய எண்ணம் உயர்ந்த எண்ணமாகசிறந்த எண்ணமாக இருந்தால் அவனுடைய செயல்களும் உயர்ந்த செயலாக, சிறந்த செயலாக இருக்கும்.

ஒரு மனிதனுடைய எண்ணம் தாழ்ந்த, மட்டமான, மோசமான, கேவலமான எண்ணமாக இருந்தால் அதை தொடர்ந்து வரக்கூடிய அவனுடைய செயல்களும் தாழ்வான செயலாக, மட்டமான செயலாக, கேவலமான, அநாகரிகமான செயலாக இருக்கும்.

எண்ணங்கள் நமது வாழ்க்கையில் முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நமது எண்ணங்களை எப்படி மேன்படுத்துவது?உயர்ந்த எண்ணமுள்ளவர்களாக, உயர்ந்த நாட்டமுள்ளவர்களாக, சிறந்ததை கொள்கையாகவும், அதையே நமது தொலைநோக்குப் பார்வையாகவும், அது நமது வாழ்க்கையின் நாம் எட்டக்கூடிய நாம் எதை நோக்கி செல்கிறோமோ அந்த ஒரு எல்லையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் கூறியதாக கூறுகிறார்கள்:

يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي

என் அடியான் என் மீது என்ன எண்ணம் வைக்கிறானோ, அந்த எண்ணத்திற்கேற்பவே நான் அவனுடன் நடந்து கொள்கிறேன். (1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7405.

என் ரப்பு என்னை உயர்வாக்குவான்,என்னை உயர்த்துவான், என்னை சிறப்பிப்பான், என்னை கைவிட மாட்டான், எனக்கு உதவுவான் என்ற உயர்ந்த எண்ணமும் அந்த எண்ணத்திற்கேற்ப துஆவும், செயலும் இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் தஆலா அவனுடைய அந்த உயர்ந்த எண்ணத்திற்கு ஏற்ப அவனுக்கு வாழ்க்கையை ஆக்கி கொடுப்பான்.

இதற்கு மாற்றமாக, ஒரு மனிதன் அல்லாஹ்வின் மீது தவறான எண்ணம் வைத்தால், என்னையெல்லாம் அல்லாஹ் கண்டு கொள்ளமாட்டான், நானெல்லாம் அல்லாஹ்விற்கு என்ன?என்று நினைத்தால் அல்லாஹ்விடம் துஆ ஏற்றுக் கொள்ளப்படுமா?

நானெல்லாம் ஒரு பாவி. நான் எப்படி அல்லாஹ்வை நெருங்குவது? அல்லாஹ் என்னை கைவிட்டுவிட்டான், அல்லாஹ் எனக்கு உதவவில்லை. இப்படியாக அல்லாஹ்வின் மீது குறைகளை கூறி நிராசையடைந்து, அல்லாஹ்வின் மீது தவறான எண்ணம் ஒருவனுக்கு இருக்குமென்றால், அவன் அந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவரை கரை சேர்ப்பதற்கு அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு வேறு யார் இருக்கிறார்? அல்லாஹ்வின் மீது தவறான எண்ணம் வைத்துவிட்டு வேறு யாரின் மீது நல்லெண்ணம் வைக்கப் போகிறான்? அல்லாஹ் கைவிட்டுவிட்டான் என்று எண்ணியதற்கு பிறகு வேறு யார் அவனுக்கு இருக்கிறார்கள் உதவுவதற்கு?

அல்லாஹ் கேட்கிறான்:

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (அல்குர்ஆன் 27:62)

ஆகவே, ஒரு முஃமினுடைய எண்ணம், அந்த கல்பின் உறுதி, நாம் எதை செய்ய வேண்டும், என்னுடைய இலட்சியம் என்ன? நோக்கம் என்ன? இதற்கு தான் அரபியில் 'அல்ஹிம்மா' உறுதுவில் 'ஹிம்மத்' என்று கூறுவார்கள்.

இந்த ஹிம்மத் –அவரின் எண்ணம்,உறுதி உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும், மிக அழகானதாகவும் இருக்க வேண்டும்.

அறிஞர்களில் ஒருவர் கூறுகிறார்: உன்னுடைய உள்ளத்தின் உறுதி, தேடல், நோக்கத்தை நீ பேணிக்கொள். உன்னுடைய உள்ளத்தின் உறுதி தான் நீ செய்யக்கூடிய செயல்களுக்கு முன்னுரை. உன்னுடைய செயல்கள் எப்படி அமையப்போகிறது என்பதை சொல்லக்கூடியது தான் உன்னுடைய எண்ணம்.

ஒருவனுடைய மன உறுதி சரியானதாக இருந்து, அவனும் அதில் உண்மையானவனாக இருந்தால், உள்ளத்தில் நல்லெண்ணமாக இருந்தால், அந்த நல்லெண்ணத்திற்கு ஏற்ப அடுத்து அவருடைய தேடல், செயல்பாடுகளும் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒருவர் கூறுகிறார்; நான் நல்ல பணக்காரனாக ஆக வேண்டும் என்று. பெரிய கல்வியாளராக ஆக வேண்டுமென்று கூறுகிறார்.

ஆனால், எப்போது பார்த்தாலும் படுக்கையை விட்டு அவர் பிரிவதே இல்லை. சோம்பேறியாகவே இருக்கிறார். சும்மா சுற்றித் திரிகிறார். இவரை பார்த்து, இவன் ஒரு சோம்பேறி, இவன் ஒரு பொய்யர் என்று சொல்வோம்.

இவனுக்கு பெரிய செல்வந்தனாக ஆக வேண்டுமென்று ஆசை இருந்தால், அவன் அதற்காக பொருளாதாரத்தை தேடி உழைத்திருப்பான். இவன் ஒரு கல்விமானாக ஆக வேண்டுமென்று ஆசைபட்டிருந்தால் அறிஞர்களை தேடிச் சென்றிருப்பான். புத்தகங்களை எடுத்து புரட்டி படித்திருப்பான். கல்விகளை தேடியிருப்பான்.

அப்படி இல்லையென்றால், அவன் ஒரு பொய்யன். ஆகவேதான், எண்ணம் சரியாக, மனதின் உறுதி சரியாக இருந்து, அதில் அவர் உண்மையாக இருந்தால், அதாவது அதற்கேற்ப அவர் தன்னுடைய வாழ்க்கையை அமைத்து கொள்ள முற்பட்டால், பின்னால் வரக்கூடிய எல்லா காரியங்களும் அவருக்கு சரியாகிக் கொண்டே போகும்.

ஆகவே, நம்முடைய உள்ளத்தை நம்முடைய கட்டுப்பாட்டில் வைக்கக்கூடிய அந்த திறமை, வலிமை, மனப்பக்குவம், மன உறுதி நமக்கு வர வேண்டும்.

அறிஞர் இப்னு குதைபா ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள்:

இந்த உயர்ந்த மன உறுதி இருக்கும்போதுதான் ஒரு மனிதன் வாழ்க்கையில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் அவன் துவண்டு விடாமல், சோர்ந்து விடாமல், நிராசையடைந்து விடாமல் முன்னேறிக் கொண்டேயிருப்பான்.

மனம் தளர்ந்துவிட மாட்டான், பலவீனப்பட்டு விடமாட்டான். எல்லாம் போய்விட்டது என்று அவன் உட்கார்ந்துவிட மாட்டான். உள்ளத்தில் உறுதி இல்லையென்றால், சின்ன சின்ன பிரச்சனைகளை பார்க்கும் போதெல்லாம் நிராசையாகி,இனி எனக்கு என்ன வாழ்க்கை?நான் என்ன செய்வது? அவ்வளவு தான்,என்பதாக தன்னை தானே நொந்து கொண்டு நிராசையாகி,வெளிச்சமான அவனுடைய வருங்காலத்தை அவனே இருளில் தள்ளிக் கொள்வான்.

ஒரு மனிதனுடைய மன உறுதி உயர்வாக இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் அவனுக்கு எத்தகைய சோதனைகள் ஏற்பட்டாலும் அவன் சோர்ந்து விடாமல், மேலும் மேலும் அவன் தன்னுடைய உள்ளத்திள் உயர்வை நோக்கி முயற்சி செய்து கொண்டே இருப்பான்.

இதற்கு அவர்கள் உதாரணம் கூறுகிறார்கள்:ஒரு தீ பந்தத்தில் நெருப்பை பற்ற வைத்து அந்த நெருப்பை நீங்கள் எவ்வளவு தான் தலைகீழாக தாழ்த்தி வைத்தாலும்,அந்த நெருப்பின் ஜுவாலையானது அது மேல் நோக்கி தான் வரும்.

இப்படித்தான், உங்களது உள்ளத்தில் இருக்கக் கூடிய மனஉறுதி சரியாக, சிறப்பாக ஆழமாக பதிந்திருந்தால், எந்த தோல்வியும் உங்களை சோர்வடையச் செய்து விடாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இங்கே நினைவு கூர்வது சிறப்பாக இருக்கும்.

பதிமூன்று ஆண்டு கால போராட்டம். ஈமானை இஸ்லாமை ஏற்றதோ சில பேர் தான். இனி இந்த மக்காவிற்குள் காலெடுத்து வைக்க முடியுமா? இந்த மக்காவிற்குள் வாழ முடியுமா? உயிருக்கே பயம் வந்து விட்டது. கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் நடு இரவில் முஹாஜிராக மதினாவை நோக்கி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ரும் புறப்படுகிறார்கள்.

பதிமூன்று ஆண்டு கால உழைப்பு எத்தனையோ பலவீனமான முஃமின்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இனி இந்த மக்காவாசிகளை நாம் எப்படி எதிர்கொள்வது, எந்த வகையிலும் நம்முடைய பிரச்சாரம் இவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தவில்லையே, நம்மை பலவீனப்படுத்தி விட்டார்களே.

என்றிருந்தும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்த மன உறுதி, அல்லாஹ்வுடைய ஊராகிய இந்த மக்காவில் அல்லாஹ்வை வணங்க முடியவில்லையென்றாலும், எல்லா பூமியும் அல்லாஹ் படைத்தது தானே!

அல்லாஹ் வசனத்தை இறக்குகிறான்.

يَاعِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونِ

ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.(அல்குர்ஆன் 29:56)

இந்த வசனத்திற்குப் பிறகு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மன உறுதி ஏற்படுகிறது. தைரியம் பிறக்கிறது.

தோழர்களை அழைத்தார்கள்; கவலைப்பட வேண்டாம், வாழ்க்கை அல்லாஹ்வை வணங்குவதற்கு தான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பரப்புவதற்கு தான். மக்காவில் முடியவில்லையென்றால் என்ன? ஹபஷா செல்லுங்கள். பிறகு மதினாவாசிகளுக்கு ரஸூலுல்லாஹ்வுடைய வருகை தெரிகிறது .

அவர்கள் நபியை அழைக்கிறார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அனுமதியை எதிர்பார்க்கிறார்கள். அல்லாஹ் மதினாவிற்கு செல்வதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி கொடுத்தவுடன், அந்த சிறிய நம்பிக்கையை வைத்துக் கொண்டு, நூற்றக்கணக்கான அரபு குலத்தவர்கள் தங்களை சுற்றி பகைவர்களாக இருக்க, மதினாவின் அவ்ஸ் கஸ்ரஜ் என்ற மிக மிக குறைவான படைப்பலத்தில் இருக்கும் அந்த மக்களின் அழைப்பை ஏற்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரத் செய்தார்கள்.

இந்த உதாரணத்தை கவனியுங்கள். அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை. எனவேதான், அல்லாஹ்வுடைய பாதையில் சென்று ஹிஜ்ரா செய்து அங்கேயே நாம் ஒரு புதிய இஸ்லாமிய உலகத்தை உருவாக்குவோம், அங்கேயே அல்லாஹ்வுடைய தீனை பரப்புவோம் என்ற உறுதியில் புறப்பட்டார்கள்.

அதற்கேற்ப அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு நடத்தி கொடுத்தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَى مَعَادٍ قُلْ رَبِّي أَعْلَمُ مَنْ جَاءَ بِالْهُدَى وَمَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ

(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.(அல்குர்ஆன் 28:85)

இதற்காக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவில் எட்டு ஆண்டுகள் பொறுமையாக இருந்தார்கள். இன்று நாம் எட்டு நிமிடம் கூட பொறுமையாக இருப்பதற்கு தயாராக இல்லை.

நம்முடைய உயர்ந்த எண்ணங்களை அடைவதற்கு, நம்முடைய உயர்ந்த கொள்கையை வென்றெடுப்பதற்கு எட்டு நிமிடங்கள், எட்டு மணி நேரம், எட்டு நாட்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை, அவசரப்படுகிறோம்.

உங்களுடைய எண்ணம் உறுதியாக இருந்தால், மேன்மையானதாக இருந்தால் அதை அடைவதற்கு உங்களிடத்தில் பொறுமை இருக்கும். யாருடைய எண்ணம் தாழ்ந்ததாக, கேவலமானதாக இருக்கிறதோ, அவர்கள் தான் அவசரப்படுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது அல்லாஹ்விடத்தில்,யா அல்லாஹ்! என்னை மக்காவிற்கு திரும்ப கொண்டு வருவேன் என்று சொன்னாயே, ஆனால் இங்கு மதினாவில் வசிப்பதே எங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறதே! என்று கலங்கினார்களா? என்றால் இல்லை.

உஹதுப் போருடைய உதாரணத்தை கவனியுங்கள். கொஞ்சம் கவனம் அங்குமிங்கும் சிதறிய போது, அடுத்து பார்த்தால் சனிக்கிழமை காலை அவர்கள் மதினாவிற்குள் நுழைந்து விடுவார்கள். அந்தளவுக்கு குரைஷிகள் சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டே இருந்தார்கள்.

பன்னிரெண்டாயிரம் பேர்களை அழைத்துக் கொண்டு மதினாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக மதினாவின் எல்லைக்கு வந்துவிட்டார்கள்.

இப்படியெல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சோதனைகளை சந்தித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வுடைய வாக்குறுதியின் மீது நம்பிக்கை இருந்தது.

அல்லாஹ் கூறினான்:

سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ

அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.(அல்குர்ஆன் 54:45)

இன்று நபியின் ஸீராவை சரியாக படிக்காததால் ஸஹாபாக்களின் வரலாறுகளை சரியாக படிக்காததால் இன்று நம்மிடத்தில் தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம், பிற்போக்குத்தனம், பலவீனம் தொற்று நோயாக பரவிக்கொண்டே இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

மக்காவில் அல்லாஹ் கூறினான். நபியே! உங்களை எதிர்க்க கூடிய இந்த கூட்டம் தோற்க்கடிக்கப்படுவார்கள் என்று.

அப்போது தான், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், முஹாஜிராக மக்காவிலிருந்து வெளியேறுகிறார்கள். அல்லாஹ்விடத்தில் எதிர் கேள்வி கேட்கவில்லை.

நாம் நம்மை பார்த்து, முஃமின்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது ஈமான் பலவீனமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் அதிகாரம் செலுத்துகிறோம், கேள்வி கேட்கிறோம்.

ஆனால், நமது நஃப்ஸை பார்த்து நம்முடைய கொள்கை உறுதியாக இருக்கிறதா?நம்பிக்கை உறுதியாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்பதில்லை. அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதா என்று நாம் பரிட்சை செய்கிறோம். நம்முடைய ஈமான் சரியாக இருக்கிறதா, பொய்யாக இருக்கிறதா என்று நாம் நம்மை சரிபார்ப்பதில்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் நம்முடைய ஈமான் பொய்யாய் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு சோதனைகளிலும் தடுமாறி தடுமாறி நம்முடைய பலவீனத்தை நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம்.

மதினாவிற்கு வந்தார்கள், இரண்டு ஆண்டுகள் கழித்து பத்ரு போர் நடக்கிறது. அவர்கள் எதிர்பார்த்து சென்றதோ அபூ ஸுப்யான் உடைய வியாபாரக் கூட்டத்தை, ஆனால் எதிர் கொண்டதோ அபூஜஹல் உடைய ஆயுதம் ஏந்திய போர் வீரர்களை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. முன்னூற்றி பதிமூன்று பேர் சில குதிரை வீரர்கள், பலரிடத்தில் முழுமையான ஆயுதமே இல்லை.

இந்த எதிரிகளின் கூட்டம் தோற்க்கடிக்கப்படும், புறமுதுகு காட்டுவார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ் அப்படியே நடத்தி காட்டினான்.

இதுதான் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இருக்க வேண்டிய உறுதியான கொள்கை. மேன்பட்ட சிறந்த மன உறுதி. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு ஆறுதல் கூறுகிறார்கள், ஆதரவு தருகிறார்கள்.

உங்களுடைய கொள்கை உறுதியாக இருந்தால்,  உங்களுடைய எண்ணம் சிறந்த, அழகிய,  உயர்வாக எண்ணமாக உறுதியாக இருந்தால், உங்களுடைய அமலை விட உங்களுக்கு சிறந்தது.

உங்களுடைய அமல் மூலமாக கிடைக்கின்ற நன்மைகளை போல, உங்களுடைய எண்ணத்திற்கும், மன உறுதிக்கும் அல்லாஹ் தஆலா நன்மைகளை தருகிறான்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

إِنَّ اللَّهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ

அல்லாஹ் தஆலா நன்மைகளையும் தீமைகளையும் விதித்திருக்கிறான். அது என்ன என்பதை உங்களுக்கு விவரித்திருக்கிறான்.யார் ஒருவர் ஒரு நல்ல அமலை செய்ய வேண்டுமென்று மன உறுதி கொள்வாறோ, ஆனால்,அவருக்கு அந்த அமலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடக்கவில்லைஎன்றால், அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட அந்த நல்ல உறுதியான எண்ணத்திற்காகவே அல்லாஹ் அவருக்கு முழுமையான ஒரு நன்மையை தருகிறான்.

நல்லதை செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருந்து,பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது அவர் அதை செய்தும் விட்டால் அல்லாஹ் தஆலா முதலில் பத்து நன்மைகளை எழுதுகிறான். பிறகு,அவருடைய மனத்தூய்மைக்கு ஏற்ப அந்த பத்து எழணூறு ஆக்கப்படுகிறது. பிறகு,அந்த எழுநூறு அப்படியே பன்மடங்குகளாக பெருக்கப்படுகின்றன.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6491.

எவ்வளவு சிறந்த ஒரு உதாரணத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்க கூடிய மற்றொரு ஹதீஸ். அதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

«مَنْ سَأَلَ اللهَ الشَّهَادَةَ بِصِدْقٍ، بَلَّغَهُ اللهُ مَنَازِلَ الشُّهَدَاءِ، وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ»

ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் உண்மையான உள்ளத்தோடு துஆ கேட்கிறார்.

(இந்த ஸித்க் -உண்மை ரொம்ப முக்கியமான ஓரு பண்பு. நம்முடைய எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வரக்கூடியதே அந்த ஸித்க் என்ற உண்மை தான்.

முஃமின்களுக்கும் முனாஃபிக்குகளுக்கும் இடையிலுள்ள மிகப் பெரிய முதல் வித்தியாசம் இந்த ஸித்க். முஃமின்கள் உண்மையாளர்கள், முனாஃபிக்குகள் பொய்யர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ

ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான். (அல்குர்ஆன் 63:1)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

«إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا»

ஒரு முஃமினான மனிதர் உண்மை பேசுகிறார். உண்மையே பேச வேண்டுமென்று முயற்சியும் செய்கிறார். அந்த மனிதர் அல்லாஹ்விடத்தில் உண்மையாளர் என்று எழுதப்படுவார். அந்த உண்மை அவரை நன்மைக்கு வழி காட்டி கொண்டே இருக்கும். நன்மை அவரை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும்.

பிறகு கூறினார்கள்:ஒரு மனிதர் பொய் பேசுகிறார். இப்படியாக ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார். அல்லாஹ்விடத்தில் இவன் பொய்யனாக எழுதப்பட்டு விடுவான். பொய் பாவத்திற்கு வழிகாட்டுகிறது. பாவம் நரகத்திற்கு வழிகாட்டுகிறது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094.

ஆகவே, உண்மை நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய அடையாளமாக இருக்க வேண்டும்.)

ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விடத்தில் உண்மையான தேடுதலோடு அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட வேண்டுமென்று கேட்கிறார்.

தான் ஷஹீதாக வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் ஒருவர் உண்மையான உள்ளத்தோடு கேட்டால், அல்லாஹ் தஆலா அவரை ஷஹீதுடைய அந்தஸ்தில் வைப்பான். அவர் தன்னுடைய விரிப்பில் படுத்திருந்து இறந்தாலும் சரி.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1909.

இந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஒரு கண் தெரியாத ஸஹாபிய பெண்மனியின் உயர்ந்த எண்ணத்தை நாம் நினைவு கூறியே ஆக வேண்டும்.

கண் தெரியாத ஒரு பெண், அதுவும் ஒரு மூதாட்டி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து கூறுகிறார்கள்.

யா ரஸூலல்லாஹ்! என்னை போருக்கு அழைத்து செல்லுங்கள், நான் ஷஹீதாக வேண்டும்.

(ஆண்களில் கண் தெரியாதவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். அவர்களுக்கு உடல் வலிமையாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்கி விட்டான்.  போரில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று. பெண்களுக்கு ஒட்டு மொத்தமாக மன்னிப்பு, பெண்களின் மீது ஜிஹாத் ஃபர்ளு அல்ல, வாஜிபு அல்ல. ஆனால் அந்த பெண்மனியின் உயர்ந்த அந்த எண்ணத்தை பாருங்கள்.

(ஷஹீதுகளுக்கு அல்லாஹ்வும் அவனது ரஸூலும் சொன்ன அந்த ஹதீஸ்களை, சிறப்புகளை கேட்டு கேட்டு அந்த பெண்ணுடைய உள்ளத்திலிருந்து உயர்ந்த எண்ணம், எனக்கு அந்த ஷஹீதுகளுடைய அந்தஸ்து கிடைக்க வேண்டுமே! என்று ஆசைப்பட்டார்கள்.

இங்கே தான் நாமும் அவர்களும் வித்தியாசப்படுகிறோம். நாம் துன்யா என்றால் அதில் பெஸ்ட் எனக்கு இருக்க வேண்டும். ஆகிரத் என்று வந்துவிட்டால், ஏதோ பரவாயில்லை, அல்லாஹ் தஆலா கருனை காட்டி எங்கேயாவது அனுப்பி விட்டால் போதும் என்று நினைக்கிறோம்.

ஏன்? ஆகிரத்தில் நாம் தற்காலிகமாக வாழப் போகிறோமா? துன்யாவில் நாம் நிரந்தரமாக வாழப் போகிறோமா? தற்காலிகமாக வாழக்கூடிய வாழ்க்கையில் சிறந்ததை கேட்கிறோம், அதிகமானதை தேடுகிறோம். நிரந்தரமாக வாழக்கூடிய மறுமை வாழ்க்கையில் அற்பமானது, குறைவானது கிடைத்தாலும் போதுமே என்று சொர்க்கத்தின் மீது பற்றற்றவராக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஒரு ஸஹாபி, முஃமினான பெண் என்றாலே அவர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது. இருந்தாலும் அந்த பெண்மனியின் உயர்ந்த தேடலை கவனிக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பெண்மணியே! நீங்கள் ஷஹீது தான். நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், வீட்டிலேயே நீங்கள் இருங்கள், அல்லாஹ்வை வணங்குங்கள், நீங்கள் ஷஹீதுதான் என்று கூறினார்கள்.

(உலக மக்களின் வார்த்தைகளெல்லாம் பொய்யாகலாம். அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய வார்த்தை பொய்யாகாது.)

அந்த பெண்மனி ஒரு நாள் இரவில் தூங்கி கொண்டிருக்கும்பொழுது, அவர்களுடைய அடிமையினால் கொல்லப்படுகிறார்கள். எதை அவர்கள் அல்லாஹ்விடத்தில் உண்மையான உள்ளத்தோடு தேடினார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அதை கொடுத்தான். (2)

அறிவிப்பாளர் : உம்மு வரகா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : 591, தரம் : ஹசன் (அல்பானி)

அதுபோன்று இன்னொரு சம்பவம் முஸ்னத் அஹமதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நபித் தோழர்கள் மட்டுமல்ல, அந்த ஸஹாபிய வாலிப வீரர்கள் மட்டுமல்ல.  அவர்களுடைய குடும்பத்து சிறுவர்கள், சிறுமியர்கள்,பெண்கள் கூட உயர்ந்த நோக்கம் வைத்திருந்தார்கள்.

தங்களுடைய தாய், தந்தை, கணவன், சகோதரர் அவர்களுக்கும் அந்த உயர்ந்த நோக்கத்தை அடைவதில் உறுதுனையாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸாபித் ரழியல்லாஹுஅன்ஹுஜிஹாதுக்காக தயாராகி விட்டார்கள்.

ஆனால், ஜிஹாதுக்காக எல்லா பொருட்களையும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டு புறப்படக்கூடிய நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு உடல் சுகமில்லாமல் போய்விட்டது. படுத்த படுக்கையாக அப்படியே வீட்டில் தங்குகிறார்கள்.

அவர்களுடைய மகள் வருகிறார்கள். தந்தையே! நீங்கள் இந்த போரில் சென்றால் ஷஹீதாக வேண்டுமென்று நான் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்துக் கொண்டிருந்தேன்.

உங்களுக்கு இப்படி ஒரு நோய் ஏற்பட்டு,போருக்கான சாமான்களையெல்லாம் தயார் செய்ததற்கு பிறகு,போருக்குச் செல்ல முடியாமல் நீங்கள் தங்கிவிட்டீர்களே!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த செய்தி தெரிய வந்து சொன்னார்கள்:

«إِنَّ اللَّهَ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ، وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟»

அந்த நபித்தோழரின் குடும்பத்தாருக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். கவலைப்படாதீர்கள்! அவருடைய எண்ணத்திற்கு ஏற்ப அல்லாஹ் தஆலா அவருக்கு கூலியை உறுதியாக்கி விட்டான். அல்லாஹ்வுடைய பாதையில் போக வேண்டுமென்ற எண்ணம், ஷஹீதாக வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததை போன்று தான், இப்போது அவர் மரணப்படுக்கையில் நோய்வாய்பட்டு அவர் வீட்டிலேயே தங்கிவிட்டாலும் கூட அவருடைய எண்ணத்திற்கு அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு என்று சொன்னார்கள்.(3)

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அதீக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23753.

இது தான் நம்முடைய ஸஹாபாக்களின் வாழ்க்கையின் இலட்சியம். அவர்கள் எல்லாவற்றிலுமே உயர்ந்த எண்ணமுடையவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அழகிய ஒழுக்கத்தை கற்றுத் தருகிறார்கள்.

«مَا مِنَ امْرِئٍ تَكُونُ لَهُ صَلَاةٌ بِلَيْلٍ، يَغْلِبُهُ عَلَيْهَا نَوْمٌ، إِلَّا كُتِبَ لَهُ أَجْرُ صَلَاتِهِ، وَكَانَ نَوْمُهُ عَلَيْهِ صَدَقَةً»

ஒரு மனிதர் தொடர்ந்து இரவு தொழுகையை பேணுதலாக தொழுது வருகிறார். அதில் அவர் உறுதி உடையவராக இருக்கிறார். ஒரு நாள் அவர் இரவில் தூக்கம் மிகைத்து அவரால் தொழ முடியாமல் போய்விட்டால், அல்லாஹ் தஆலா அவருக்கு தொழுததின் நன்மையை கொடுக்கிறான். தூக்கத்தை அவருக்கு ஸதகாவாக ஆக்கி விட்டான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : 1314, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

நம்முடைய எண்ணம் உறுதியானதாகவும், சிறந்ததாகவும், அதை நோக்கி நம்முடைய முயற்சி, ஆசை, துஆ இருக்கும் என்றால் சில நேரங்களில் அது நமக்கு கிடைக்காமல் போனாலும் கூட, அல்லாஹ் தஆலா அதற்குரிய நன்மையை கொடுத்துவிடுவான். நம்முடைய எண்ணங்களை, முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கமாட்டான்.

இந்த உயர்ந்த எண்ணத்திற்கேற்ப அவருடைய முயற்சி அமையும் போது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அத்தகைய மனிதர்களுக்கு சொல்லக்கூடிய நற்செய்திகளை நாம் பார்க்க வேண்டும்.

இமாம் அஹமது ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

«سَبَقَ دِرْهَمٌ دِرْهَمَيْنِ» ، قَالُوا: وَكَيْفَ ذَاكَ؟ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «كَانَ لِرَجُلٍ دِرْهَمَانِ، فَتَصَدَّقَ أَجوَدَهُمَا، فَانْطَلَقَ رَجُلٌ إِلَى عُرْضِ مَالِهِ، فَأَخَذَ مِنْهُ مِائَةَ أَلْفِ دِرْهَمٍ، فَتَصَدَّقَ بِهَا»

ஒரு திர்ஹம் இரண்டு திர்ஹத்தை முந்திவிட்டது. ஸஹாபாக்களுக்கு புரியவில்லை. யா ரஸூலுல்லாஹ்! ஒரு திர்ஹம் இன்னொரு திர்ஹத்தை முந்திவிட்டது என்றால் என்ன?

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதரிடத்தில் இரண்டே இரண்டு திர்ஹங்கள் தான் இருந்தன. அவர் அந்த இரண்டு வெள்ளி நாணயங்களிலேயே நன்கு புதிதாக, சுத்தமாக இருக்க கூடிய வெள்ளி நாணயத்தை எடுத்து தர்மம் செய்தார்.

இன்னொரு மனிதர்,அவர் தன்னுடைய செல்வத்தில் ஒரு லட்சம் நாணயங்களை எடுத்து தர்மம் செய்கிறார். ஆனால், அப்படி தர்மம் செய்யும்போது,அவர் அப்படியே அள்ளி கொடுக்கிறார். அதில் செல்லக்கூடியது இருக்கிறதா? செல்லாதது இருக்கிறதா? நல்ல நாணயம் இருக்கிறதா? இப்படியெல்லாம் அவர் பார்க்கவில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தன்னிடத்தில் இருக்கின்ற இரண்டே இரண்டு திர்ஹங்களில் அதிலும் செல்லக்கூடிய திர்ஹத்தை எடுத்து இவர் செலவு செய்யும்பொழுது, ஒரு லட்சம் திர்ஹங்களை ஒருவர் செலவு செய்கிறார். ஆனால், அந்த திர்ஹங்கள் செல்லக்கூடியதா? நல்லதா? என்பதையெல்லாம் பார்க்காமல் கொடுக்கிறாரே அதைவிட இவருடைய ஒரு திர்ஹம் சிறந்தது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 8929.

இதை தான் கூறினார்கள்: ஒரு திர்ஹம் இரண்டு திர்ஹத்தை முந்திவிட்டது என்று. அதாவது, இரண்டு திர்ஹங்களில் எது சிறந்ததோ, அதை எடுத்து அவர் கொடுத்தார். அது கடைசியில் அல்லாஹ்விடத்தில் இன்னொரு மனிதர் கொடுக்கக் கூடிய ஒரு லட்சம் நாணயங்களை விட சிறந்தது. காரணமென்ன, இந்த மனிதருடைய உள்ளத்தில் இருக்கின்ற நல்ல எண்ணம். அல்லாஹ்விற்கு கொடுக்கும் போது சிறந்ததை கொடுப்போம் என்று உயர்ந்ததாக இருந்தது. ஏதோ கைக்கு வந்ததை கொடுப்போம் என்ற அலட்சியம் இல்லாமல் கொடுத்தார்.

அல்லாஹ் கூறுகிறான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ

நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:267)

ஒரு முஃமினுடைய கொள்கை உறுதி அவரை அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கமாக்குகிறது. அவருடைய அமல்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருடைய எண்ணத்திற்கு ஏற்ப அமைத்துத் தருகிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் தஆலா சொல்லக்கூடிய உபதேசத்தை கவனியுங்கள்.

فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! -நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் 3:159)

இன்று நம்மில் பலருடைய நிலை, நல்ல எண்ணங்கள் வருகின்றன, உயர்ந்த நோக்கங்கள் இருக்கின்றன, சிறந்த மன உறுதி இருக்கிறது.ஆனால், இது எல்லாம் என்னால் முடியுமா? என்று தயங்குகிறார்கள்.

கண்டிப்பாக, நம்மால் எதுவும் முடியாது என்று தான் நம்ப வேண்டும், அல்லாஹ் நாடினாலே தவிர. அல்லாஹ் நாடிவிட்டால் இந்த நல்ல எண்ணத்தை என்னால் சாதிக்க முடியும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«مَنْ خَافَ أَدْلَجَ، وَمَنْ أَدْلَجَ بَلَغَ المَنْزِلَ، أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ، أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ الجَنَّةُ»

யாருக்கு தன்னுடைய வழியில் பயம் இருக்குமோ பயணம் செய்யும்பொழுது அவர் விரைவாகச் செல்லுவார். அதிகாலையிலேயே புறப்பட்டுவிடுவார். பயணத்தின் பாதையில் அலட்சியமாக இருக்கமாட்டார். இப்படி கவனமாக இருப்பவர் கண்டிப்பாக தன்னுடைய இடத்தை போய் அடைவார்.

முஃமின்களே! உங்களுடைய உலக வாழ்க்கையே ஒரு பாதை. நீங்கள் சென்று சேர வேண்டிய இடம் சொர்க்கம்.

அந்த சொர்க்கத்தை நீங்கள் சாதாரணமாக எண்ணாதீர்கள். உலதகத்தில் எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. நீங்கள் அடைய விரும்புகின்ற பொருட்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய பொருள் சொர்க்கம்.அது மிக உயர்ந்தது. அதை நீங்கள் அடையவேண்டுமென்றால்பலவீனமான முயற்சியால் முடியாது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2450, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

நம்மில் பல பேருடைய நிலை என்னவென்றால், நல்ல எண்ணம் வைப்போம், உறுதி வைப்போம், ஒரு சில முயற்சிகளை செய்வோம். ஆனால், அதன் பிறகு நாம் அப்படியே விட்டு விடுவோம்.

சிலர் மார்க்க கல்வி படிக்க வேண்டுமென்று வருவார்கள். ஒரு நாள், இரண்டு நாள், முன்று நாள் வருவார்கள். அதற்கு பிறகு பாடங்கள் கொஞ்சம் அதிகமானவுடன் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று அத்துடன் மறந்து விடுவார்.

சிலர் மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும், மார்க்கத்தில் ஈடுபாடு வேண்டும் என்பதற்காக பயானிற்கு வருவார்கள். அதற்கு பிறகு பார்த்தால் கொஞ்சம் இடுப்பு வலிக்கிற மாதிரி தெரியுதே என்று கூறுவான். அத்துடன் முடிந்து விட்டது.

இப்படிதான் வாழ்க்கையில் எத்தனையோ நல்லெண்ணங்களை கொண்டு வருகிறோம். அதற்காக முயற்சிகள் செய்கிறோம், அதற்கான முயற்சிகள் பலவீனமான முயற்சிகளாக இருக்கின்றன.

நம்முடைய சத்தியத்தை பல நேரங்களில் நாமே முறித்து விடுகிறோம். இப்படித் தான் இருக்க வேண்டும், இதை கற்க வேண்டும், இதை படிக்க வேண்டும், இப்படி தான் என்னுடைய தொழுகை இருக்க வேண்டும் என்றெல்லாம் உறுதி செய்கிறோம். ஆனால் நம்முடைய சத்தியத்தை நாமே முறித்து விடுகிறோம்.

ஜாஃபர் பக்தாதி என்ற ஒரு அறிஞர் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்விற்காக ஒரு உறுதியை என் மீது எடுத்துக் கொண்டால், ஒருகாலமும் என் வாழ்க்கையில் நான் முறித்ததே கிடையாது.

தாரிக் பக்தாது 8/145.

நாம் ஓரு நாளைக்கு நூறு தடவை முறித்து விடுகிறோம். நல்ல அமலை செய்ய வேண்டுமென்று எண்ணுவோம்.ஆனால்,செய்ய மாட்டோம். இந்த தவறை செய்யக் கூடாது என்று உறுதி கொள்வோம்,அடுத்த நிமிடமே செய்துவிடுவோம்.

இது மிக பலவீனமான நிலை. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வை நினைக்காமல் இந்த உலகத்தில் கழிந்த நேரங்களை நினைத்து அவர்கள் கவலைப்படுவார்கள்.

நூல் : பைஹகீ, எண் : 509.

இந்த உலக வாழ்க்கையை பயன்படுத்தும்போது தான், இதை நாளை மறுமைக்குன்டான விலைநிலமாகக் கொண்டு அந்த உயர்ந்த எண்ணத்தை நோக்கி நம்முடைய செயல்களை அமைக்கும் போது தான் அல்லாஹ் தஆலா இம்மையிலும் வெற்றியை தருகிறான்.

மேலும்,அல்லாஹ் தஆலா நம்முடைய வாழ்க்கையிலும் கண்ணியத்தை கொடுக்கிறான். மறுமையின் வாழ்க்கையை மிக சிறப்பாக ஆக்கித் தருகிறான்.

ஆகவே, ஒரு முஃமினிடத்தில் உயர்ந்த கொள்கை, எண்ணங்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ப செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

தான் பலவீனமாக இருந்தாலும்,தான் நம்பக்கூடிய ரப்பு அல்லாஹ் தஆலா பலவீனமானவன் இல்லை.

என்னிடத்தில் எந்த விதமான காரணங்கள் வழிகள் இல்லையென்றாலும் சரி,நான் நம்பக்கூடிய ரப்பிடத்தில் எனது கற்பனைக்கு அப்பாற்பட்ட, என்னால் எண்ணியே பார்க்க முடியாத காரணங்கள் இருக்கின்றன, வழிகள் இருக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். (அல்குர்ஆன் 65:2)

வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சிந்தித்திருக்கமாட்டீர்கள். நீங்கள் எந்த திசையிலிருந்து நமக்கு அல்லாஹ்வுடைய உதவி வரும் என்று எதிர்பார்த்து இருந்தீர்களோ, அங்கிருந்து வந்திருக்காது.

எங்கே ஒரு இடத்திலிருந்து நிராசை அடைந்தீர்களோ அல்லது எதிர்பார்க்காமல் இருந்தீர்களோ அங்கிருந்து அல்லாஹ்வுடைய உதவி வரும்.

அல்லாஹ் தஆலா உதவி செய்ய நாடினால் ஒரு தடியின் மூலமாகவும் உதவி செய்வான். மூஸா (அலை) அவர்களுக்கு உதவினான்.அல்லாஹ் நாடினால் ஒரு பாறையிலிருந்து நமக்கு தண்ணீரை கொடுக்கலாம். மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான்.

ஒரு முஃமினுடைய எண்ணம் சரியாக இருக்க வேண்டும். மன உறுதி உயர்ந்ததாக இருக்க வேண்டும். தன்னுடைய ரப்புடைய தொடர்பு, அறுபடாத தொடர்பாக, நிராசையற்ற தொடர்பாக முழுக்க முழுக்க அல்லாஹ்வை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.

இப்படிபட்ட ஒரு நல்ல பண்பை நாம் வளர்த்துக் கொள்வதோடு, நம்முடைய பிள்ளைகளுக்கு இதை போதிக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தார்களுக்கு, வளரும் தலைமுறையினருக்கு கண்டிப்பாக இதை நாம் சொல்லி வளர்க்க வேண்டும்.

சிறு குழந்தைகளாக இருந்தாலும் கூட நல்ல எண்ணங்களை, உயர்ந்த எண்ணங்களை நீ பிற்காலத்தில் எப்படி வாழ வேண்டும், எப்படி வளர வேண்டும், என்னென்ன சாதனைகளை செய்ய வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனைகளை நாம் அவர்களுக்கு போதித்து, அவர்களை மேன்மக்களாக வளர்க்க வேண்டும்.

தாழ்ந்த, தோல்வி மனப்பான்மைகளை, கோழைத்தனமான எண்ணங்களை அவர்களுக்கு நாம் ஊட்டி விடக்கூடாது. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து உயர்ந்த கொள்கை உடையவர்களாக, சிந்தனை உடையவர்களாக, உயர்ந்த மன எண்ணமுள்ளவர்களாக ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً " (صحيح البخاري- 7405)

குறிப்பு 2)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُمَيْعٍ، قَالَ: حَدَّثَتْنِي جَدَّتِي، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ خَلَّادٍ الْأَنْصَارِيُّ، عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ الْأَنْصَارِيَّةِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا غَزَا بَدْرًا، قَالَتْ: قُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِي الْغَزْوِ مَعَكَ أُمَرِّضُ مَرْضَاكُمْ، لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَنِي شَهَادَةً، قَالَ: «قَرِّي فِي بَيْتِكِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْزُقُكِ الشَّهَادَةَ»، قَالَ: فَكَانَتْ تُسَمَّى الشَّهِيدَةُ، قَالَ: وَكَانَتْ قَدْ قَرَأَتِ الْقُرْآنَ فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَّخِذَ فِي دَارِهَا مُؤَذِّنًا، فَأَذِنَ لَهَا، قَالَ: وَكَانَتْ قَدْ دَبَّرَتْ غُلَامًا لَهَا وَجَارِيَةً فَقَامَا إِلَيْهَا بِاللَّيْلِ فَغَمَّاهَا بِقَطِيفَةٍ لَهَا حَتَّى مَاتَتْ وَذَهَبَا، فَأَصْبَحَ عُمَرُ فَقَامَ فِي النَّاسِ، فَقَالَ: مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذَيْنِ عِلْمٌ، أَوْ مَنْ رَآهُمَا فَلْيَجِئْ بِهِمَا، فَأَمَرَ بِهِمَا فَصُلِبَا فَكَانَا أَوَّلَ مَصْلُوبٍ بِالْمَدِينَةِ، (سنن أبي داود 591) [حكم الألباني] : حسن

குறிப்பு 3)

حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ عَتِيكِ بْنِ الْحَارِثِ بْنِ عَتِيكٍ، فَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَبُو أُمِّهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ أَخْبَرَهُ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ لَمَّا مَاتَ قَالَتْ ابْنَتُهُ: وَاللَّهِ إِنْ كُنْتُ لَأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا، أَمَا إِنَّكَ قَدْ كُنْتَ قَضَيْتَ جِهَازَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ، وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟» قَالُوا: قَتْلٌ فِي سَبِيلِ [ص:163] اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ الْمَطْعُونُ شَهِيدٌ، وَالْغَرِقُ شَهِيدٌ، وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَصَاحِبُ الْحَرِيقِ شَهِيدٌ، وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدَةٌ» (مسند أحمد مخرجا- 23753)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/