படைத்தோனுக்கு பணிபவர்தான் முஸ்லிம் | Tamil Bayan - 444
படைத்தோனுக்கு பணிபவர்தான் முஸ்லிம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : படைத்தோனுக்கு பணிபவர்தான் முஸ்லிம்
வரிசை : 444
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-07-2021 | 29-11-1442
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் உபதேத்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்ற இந்த மார்க்கமான அல்இஸ்லாமை பின்பற்றக்கூடியவர்களுக்கு அல்முஸ்லிம் என்று சொல்லப்படும்.
தங்களுக்கு அரபி பெயர்களை சூட்டிக்கொண்டவர்கள் இந்த பெயர்களால் முஸ்லிம்களாக ஆகி விட முடியுமா என்றால்,ஒருகாலமும் முடியாது.
அல்லாஹுடைய மார்க்கத்தை ஏற்று,அல்லாஹுக்கும் அவனது தூதருக்கும் முழுமையாக பணிந்து கட்டுப்பட்டு, அவர்களுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து,அவர்கள் தடுத்த விஷயங்களை விட்டு விலகி வாழும்போதுதான் ஒருவர் முஸ்லிமாக இருக்கின்றார்.
வெறும் பெயரால் மட்டும்தான் இஸ்லாமென்றால் அந்தகாலத்தில் பத்ர், உஹத், அஹ்சாப், ஹுனைன் போர்கள் நடந்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
வெறும் பெயர் முட்டும்தான் இஸ்லாமென்றால் முஃமின்கள், முனாஃபிக்குகள் என்ற பிரிவு இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நல்லவர்கள், பாவிகள் என்ற பாகுபாடு இருக்க வேண்டிய அவசியமில்லை.
நாம் முஃமினாகவும் இருக்க வேண்டும், முஸ்லிமாகவும் இருக்க வேண்டும். முஸ்லிமாக இருப்பது, பெயராலோ ஏதோ சில வார்த்தைகளாலோ, ஏதோ சில அடையாளங்களாலோ மட்டும் வந்து விடாது.
மாறாக, இதற்கு ஒரு தணி தியாகம் தேவை இருக்கின்றது. இதற்காக நம்முடைய உள்ளத்தில் கொள்கையில் ஒரு உறுதி தேவைப்படுகிறது.
நம்முடைய உள்ளத்தை அடக்க வேண்டிய, கட்டுப்படுத்த வேண்டிய, பணியவைக்க வேண்டிய, நம்மீது நாம் ஆதிக்கம் செலுத்தி நமது நஃப்ஸை, நமது ஆசைகளை, நமது உணர்வுகளை, நம்முடைய விருப்பங்களை அல்லாஹுடைய விருப்பத்திற்க்கும் கட்டளைக்கும் ஏற்ப, அல்லாஹுடைய தூதருடைய கட்டளைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றி, அல்லாஹுக்கும் அல்லாஹுடைய தூதருக்கும் பணிய வைக்கவேண்டிய கீழ்படியவேண்டிய அந்த நிலைக்கு வரும்போதுதான் நாம் முஸ்லிமாக ஆகிறோம்.
அப்படியில்லையென்றால் நாம் பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கிறோம் அவ்வளவுதான். யாரிடத்தில் எந்த அளவு கீழ்படிதல் கட்டுப்படுதல் இருக்குமோ அவரிடத்தில் அந்தளவு இஸ்லாம் இருக்கிறது.
பரிபூரண முஸ்லிமாக, முழுமையான முஸ்லிமாக, உண்மையான முஸ்லிமாக எப்போது அவர் மாறுவாரென்றால், எப்பொது அல்லாஹுக்கும் அல்லாஹுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்படுவாரோ, தனக்கு பிடித்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி, தனக்கு சாதகமாக இருந்தாலும் சரி, தனக்கு பாதகமாக இருந்தாலும் சரி. அப்போதுதான் அவர் உண்மை முஸ்லிமாக ஆகுவார்.
அல்லாஹுக்கும், அல்லாஹுடைய ரசூலுக்கும் கட்டுப்படுவதில் அவர் தனக்கென்று ஒரு விருப்பத்தை வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அல்லாஹுடைய கட்டளை என்று தெரிந்து விட்டால், உடனடியாக,நான் இதை செவியுற்றேன், நான் இதற்கு கட்டுப்படுவேன் என்ற வார்த்தையும் அவரிடத்தில் வெளிப்படவேண்டும்.
கேட்டுவிட்டு அதன்படி அமல் செய்யவில்லை என்றால் அவர் கேட்காதவரைப்போல. அல்லது கேட்டு புறக்கணித்தவரைப்போல.
இந்த நிலை முனாஃபிக்குகளுடைய நிலை, அல்லாஹ் பாதுகாப்பானாக. அல்லாஹுடைய கட்டளையை செவிமடுக்கிறோம்.பிறகு,அதன்படி செயல்படவில்லையென்றால் என்ன அர்த்தம்?அது அல்லாஹுடைய கட்டளையென்பதில் சந்தேகமா?அல்லாஹ் கூறினான் என்பதில் சந்தேகமா?அல்லது வேறு என்ன அங்கே நாம் வெளிப்படுத்துகிறோம்.
அல்லாஹ்வை ‘ரப்’ என்று ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்வை படைத்தவன் என்று ஏற்றுக்கோண்டால் அந்த படைத்தவனுக்கு பணிவதுதானே படைப்புகளுக்கு அழகு.
படைப்புகளின் மீது கடமை.
படைத்தவன் அவன்.அவனுடைய கட்டளை என்று செவிமடுக்கிறோம், பிறகு அந்த கட்டளையை நிறைவேற்றாமல் விட்டால்,அது புறக்கணிப்பதாக இருந்தால், இறைநிராகரிப்பில் சேர்த்து விடும்.
அல்லது அது அலட்சியமாகவோ சோம்பேறித்தனமாகவோ இருந்தால் பெறும்பாவத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ (20) وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள். (நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். (அல்குர்ஆன் 8 : 20,21)
ஒரு அடிமைக்கு அழகு,அவன் தனது எஜமானுக்கு பணிந்து, அவனுடைய பேச்சைக் கேட்டு,அவனுடைய கட்டளையின்படி நடப்பது. அவர்தான் சிறந்த அடிமை.
நாம் நம்மை அல்லாஹுடைய அடிமை என்று சொல்கிறோம்.அல்லாஹ் நம்முடைய எஜமானன் என்று சொல்கிறோம்.பிறகு, அவனுடைய கட்டளைக்கு கீழ்படியவில்லையென்றால், இதைவிட வேறு அசிங்கம் என்ன இருக்கின்றது?
ஒரு அடிமை அவன் அழகாக திடகாத்திரமாக இருப்பதை வைத்தோ, அந்த அடிமையின் திறமையை வைத்தோ அவன் எஜமானிடத்தில் கண்ணியத்தை பெறுவதில்லை.
ஒரு அடிமை தன் எஜமானனுக்கு எப்படி கீழ்படிந்து நடக்கிறானோ அதை வைத்துதான் தன் எஜமானிடம் அவன் கண்ணியம் பெறுகிறான்.
ஆகவே, அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்தவர்கள் நபிமார்கள். காரணம், அவர்கள் அல்லாஹுடைய அடியார்களில் அதிகம் பணிந்து கட்டுப்பட்டு கீழ்படிந்து அல்லாஹுடைய கட்டளைகளை பின்பற்றி நடந்தவர்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:“அல்லாஹுக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து நடங்கள்”.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லிவிட்டு அல்லாஹுடைய கட்டளைகளை அலட்சியம் செய்வது ஒரு மனிதனுடைய ஈமானை பாதிக்கும்.
இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவேதான், இறை நம்பிக்கை என்பது ஒன்று அதிகரிக்கும் அல்லது குறைந்து கொண்டே போகும்.
அடியான் அல்லாஹுக்கு கீழ்படிந்து கட்டுப்பட்டு அவனுடைய கட்டளைகளை செயல்படுத்தும்போதெல்லாம் ஈமான் உயர்ந்து கொண்டே போகும். ஈமான் அதிகரித்துக்கொண்டே போகும்.
அல்லாஹுடைய கட்டளைகளை அடியான் விட்டு விலகி புறக்கனித்து அலட்சியம் செய்து கொண்டே இருந்தால் அந்த அளவுக்கு அவனுடைய ஈமான் இறங்கிக்கொண்டே போகும், குறைந்து கொண்டே போகும். கடைசியில் ஒரு நேரத்தில் இல்லாமலும் ஆகிவிடும், (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அல்லாஹுடைய கட்டளைகளை அடியான் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டு விலகி புறக்கணித்து, முற்றிலும் அல்லாஹுடைய கட்டளைகளிலிருந்து அவன் விலகி கொள்ளும்போது அவனை விட்டு ஈமான் வெளியேறி விடுகின்றது.அல்லாஹ் பாதுகாப்பனாக!
அல்லாஹ் சொல்கிறான்:
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 41 : 30)
அல்லாஹ் எங்களது இறைவன் என்று சொன்னால் மட்டும் போதாது.எங்களது இறைவன் அல்லாஹ் என்று சொன்னவர்கள் என்பதோடு,அல்லாஹ் வசனத்தை நிறுத்தாமல், இந்த கொள்கையினால் கிடைக்கப்பெற்ற அவர்களது மார்க்கத்தில் யார் உறுதியோடு நிலையாக இருந்தார்களோ என்பதையும் சேர்த்து சொல்கிறான்.
இஸ்திகாமத் என்றால், இந்த மார்க்கத்தை அப்படியே பின்பற்றுவது. எந்த விதமான கூட்டுதல் குறைத்தல் இல்லாமல், தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுதல் மறைத்தல் இல்லாமல் அல்லாஹுடைய தீனை அப்படியே பின்பற்றுகின்ற நிலைமை தான் முஸ்தகீம்.
அல்லாஹு தஆலா தனக்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறான். பிறகு அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 8 : 20,21)
இதாஅத் என்ற ஒரே கட்டளையை அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களுக்கு சொல்லும்போது அல்லாஹுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.
இதாஅத் உடைய விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைத் தனியாக ரசூலைத் தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. காரணம்,ரசூலுக்கு கட்டுப்பட்டால்தான் அல்லாஹுக்கு கட்டுப்பட்டவர்களாக ஆக முடியும்.
மேலும்,அல்லாஹ் கூறுகிறான்:
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
யார் ரசூலுக்கு கீழ்படிந்து நடப்பவரோ அவர்தான் அல்லாஹுக்கு கீழ்படிந்து நடப்பவர்.(அல்குர்ஆன் 4:80)
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ
நாம் தூதர்களை அனுப்புவதே அந்த தூதருக்கு மக்கள் கீழ்படிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். (அல்குர்ஆன் 4:64)
ஆகவே,குர்ஆனில் ஒரு சட்டம் வந்திருந்தால், அது பின்பற்றுவதில் மிக உறுதியானது, ஹதீஸில் ஒரு சட்டம் வந்திருந்தால் அதை அவ்வளவு அவசியமாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று ஒருவன் விளங்கினால், அவன் மார்க்கத்தை விளங்கவில்லை. அவன் மார்க்கத்தை புரியாத ஜாஹில் என்பது பொருள்.
அல்லாஹுடைய கட்டளை எப்படி பின்பற்றப்படுவதற்கும் மதிக்கப்படுவதற்கும் தகுதியானதோ அதுபோன்றுதான் அல்லாஹுடைய தூதரின் கட்டளையும் பின்பற்றப்படுவதற்கும் மதிக்கப்படுவதற்கும் தகுதியானது.
ஆகவே, அல்லாஹ் சொல்கிறான்: அல்லாஹுக்கும் அவனுடைய ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.நீங்கள் நபியை விட்டு விலகிவிடாதீர்கள். அவர் சொல்வதை கேட்டுக்கொண்டேயிருங்கள்.
அடுத்த அல்லாஹ் வசனத்தில் கூறுகின்றான்:நாங்கள் செவிமடுத்தோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செவிமடுக்கவில்லை. அவர்களைப் போன்று முஃமின்களே நீங்கள் ஆகிவிடாதீர்கள். (அல்குர்ஆன் கருத்து 8 : 20,21)
அவர்கள் கேட்டது உண்மையாக இருந்திருந்தால் அதைப்பின்பற்றி இருப்பார்கள். எப்போது நபியின் அந்த கூற்றை கேட்டதிற்குப் பிறகும் அதை பின்பற்றவில்லையோ, அதை அவர்கள் கேட்காததைப் போல்தான்.
ஒரு ஹதீஸை நீங்கள் செவிமடுக்கிறீர்கள், ஆனால், பிறகு அந்த ஹதீஸின்படி அமல் செய்வதில்லையென்றால், அந்த ஹதீஸை கேட்காததைப் போன்று.
ஹதீஸென்று கேட்டதற்குப்பிறகும் அதற்கு மாறு செய்வதற்க்கு ஒரு முஃமினுடைய உள்ளத்தில் எண்ணம் வரக்கூடாது. அந்த ஹதீஸை விடக்கூடிய அளவிற்க்கு ஒரு முஃமினுடைய உள்ளத்தில் துனிவு பிறக்கக்கூடாது. ஒரு முஃமினுடைய அலட்சியம் அவனை, நபியுடைய கூற்றை விடுவதற்க்கு தூண்டி விடக்கூடாது.
இந்த ஆயத்திற்க்கு இமாம் அபூஜஃபர் தபரி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் சொல்கிறார்கள்:அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் அறிவுரை சொன்னான்,
முஃமின்களே!நீங்கள் ரசூலுக்கு மாறு செய்கின்ற விஷயத்தில் முஷ்ரிக்குகள் போல் ஆகிவிடாதீர்கள். இனை வைப்பவர்களை போல, இறை நிராகரிப்பவர்களைப் போல ஆகிவிடதீர்கள்.
இந்த இறை நிராகரிப்பவர்கள் மற்றும் இனை வைப்பவர்கள் அல்லாஹுடைய வேதம் ஓதப்படுவதைக் கேட்டால், சரி சரி நாங்கள் இதைக் கேட்டு விட்டோம், இது எங்களுக்கு தெரிந்து விட்டது என்று சொல்வார்கள்.
அதாவது காதால் கேட்டோம் அவ்வளவுதான். அல்லாஹ் சொல்கின்றான் அதாவது உண்மையில் அவர்கள் கேட்கவில்லை. அதற்க்கு பொருள் இமாம் தபரி சொல்கிறார்கள், தங்களது செவிகளால் எதைக் கேட்கிறார்களோ, அதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறுவதில்லை, அதன் மூலமாக அவர்கள் நற்பலன் அடைவதில்லை.
காரணம், அவர்கள் இந்த வேதத்தை புறக்கணிக்கிண்ற காரணத்தால், இந்த குர்ஆனை உள்ளத்தில் உள்வாங்குவதை அவர்கள் விட்டதால், இந்த குர்ஆனை அவர்கள் சிந்திப்பதை விட்டதால், அவர்கள் இந்த குர்ஆனைக் கொண்டு படிப்பினை பெறுவதில்லை.
ஆகவே, இந்த குர்ஆனை காதால் கேட்டும் இதனுடைய அறிவுரைகளால் அவர்கள் படிப்பினை பலன் தராத காரணத்தால் இதைக் கேட்காதவர்களைப் போலவே அல்லாஹ் அவர்களை ஆக்கிவிட்டான்.
பார்க்க : தபரி 13/457.
மேலும், அல்லாஹு தஆலா தன்னுடைய நபியின் தோழர்களுக்கு சொல்கிறான்; நபியின் தோழர்களே, முஃமின்களே! நீங்கள் நபியின் கட்டளையை புறக்கணிக்கின்ற விஷயத்தில் நபியிடம் நீங்கள் உங்கள் பிரச்சனைகளைக்கு உண்டான தீர்வை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு விஷயமாக இருக்கட்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதைச் சொன்னார்களோ அதுதான் மார்க்கம்.
இந்த நிலைக்கு நீங்கள் வராமல் நபியை புறக்கனிக்கின்ற விஷயத்தில் நீங்கள் முஷ்ரிக்குகளைப் போன்று ஆகிவிடாதீர்கள்.
நபியின் கூற்றை நீங்கள் உங்கள் காதால் கேட்கிறீர்கள், இருந்தும் நபியைப் புறக்கனிக்கின்ற விஷயத்தில் முஷ்ரிக்குகள் போல் ஆகிவிடாதீர்கள்.
இந்த முஷ்ரிக்குகள் நபியின் குர்ஆனின் உபதேசங்களை தங்கள் செவிகளால் கேட்கிறார்கள். நாங்கள் நன்று கேட்டு விட்டோம் என்று சொல்கிறார்கள்.ஆனால் அதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறுவதில்லை.அதை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். எனவே அவர்கள் அதைக் கேட்காதவர்களைப் போன்றுதான்.
பார்க்க : தபரி 13/457.
இமாம் அவர்களுடைய இந்த விளக்கம் நமக்கு ஒரு மிகப்பேரிய அச்சத்தை கொடுக்க வேண்டும். அல்லாஹுடைய வேதமான குர்ஆனின் அறிவுரைகளை, ரசூலுல்லாஹுடைய அறிவுரைகளை, உபதேசங்களை, கட்டளைகளை, ஒழுக்கங்களை, ஹதீஸ்களை கேட்டதற்க்குப் பிறகும் அதன் படி செயல்படவில்லை என்றால், அதை அலட்சியப்படுத்தினால் அது முஷ்ரிக்குகளுடைய குணம். இணைவைப்பாளர்களுடைய குணம்.
காரணம், அவர்கள் குர்ஆன் ஓதப்படும்போது சரி சரி நாங்கள் கேட்டுவிட்டோம், எங்களுக்கு தெரியும், காதால் கேட்பார்கள். ஆனால் செயல்படமாட்டார்கள். அந்த நிலைக்கு நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
இந்த ஆயத்திற்க்கு மேலும் விளக்கமாக இமாம் இப்னு இஸ்ஹாக் கூறுவதை இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள்
இமாம் இப்னு இஸ்ஹாக் சொல்கிறார்கள்:இந்த வசனம் ஒருவகை மக்களைப் பற்றி பேசுகிறது. அவர்கள், நபிக்கு முன்னால் வந்தால், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம், கீழ்படிந்து நடப்போம், நபிக்கு நாங்கள் பணிவோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நபியை விட்டுச் சென்றால் நபிக்கு மாறு செய்கிறார்கள். இவர்கள் முனாஃபிக்குகள்.
முஃமின்களே! முனாஃபிக்குகள் போன்று நீங்கள் ஆகி விடாதீர்கள் என்று அல்லாஹ் அறிவுரை சொல்கிறான்.
(தபரி 13/457)
இன்று நம்மில் பலருடைய நிலை இந்த நிலைக்கு சற்றும் குறைந்ததா? என்பதை யோசித்துப் பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பேசப்பட்டால் எத்தனையோ பேர்களை நீங்கள் பார்க்கலாம், விரல்களில் ஓதி ஊதி கண்களில் தடுவுவதை பார்க்கின்றோம்.
கேட்டால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு என்று சொல்வார்கள். இன்னும் பல வேடிக்கைகளை சடங்குகளை எல்லாம் செய்வார்கள். மௌலிது ஓதுவார்கள், மீலாது ஓதுவார்கள், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெயரில் ஜிந்தாபாத் சொல்வார்கள், மீலாது விழா கொண்டாடுவார்கள், ஊர்வலம் செல்வார்கள், எத்தனையோ சடங்குகளை, எத்தனையோ அனாச்சாரங்களை, அசிங்கங்களை பார்ப்பவர் வெட்கித் தலைகுணிகின்ற வேலைகளையெல்லாம் செய்வார்கள்.
ஆனால் அல்லாஹுடைய தீனுக்கும், ரஸூலுடைய தீனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை கற்கவும் மாட்டார்கள், தெரிந்ததை பின்பற்றவும் மாட்டார்கள்.
ஆனால், நபியென்று சொல்லப்பட்டால் அப்படியே தங்களுடைய உணர்வுகளையெல்லாம் ஒரு விதமாக எழுப்புவார்கள்.இவைகளெல்லாம் போலியானவை, முனஃபிக்குகளுடைய உணர்வுகள்.
முனாஃபிக்குகள் அப்படிதான் செய்தார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் வந்து விட்டால், குனிந்து பணிந்து பாசாங்கு செய்வார்கள். நபியை விட்டு விலகிச் சென்றால் நபிக்கு மாறு செய்வார்கள்.
இது நமது நபி, எங்கள் நபி, எங்கள் நபியின் மீது பிரியம் இருக்கிறது என்று என்னன்னமோ கூப்பாடு போடுவார்கள். ஆனால் மார்க்கம், அல்லாஹுடைய சட்டம்தான் ஷரீஆ, இதுதான் சுன்னா என்று வந்து விட்டால், இதையேல்லாம் தூக்கி ஓரம் வையுங்கள், நமது ஊருக்கென்று ஒரு ஜமாத் உள்ளது, அதெற்கென்று ஒரு சட்டம் உள்ளது, அதை முதலில் பேசுவோம் என்பார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
இதுவா அல்லாஹுடைய தூதரை மதிப்பது, இது அல்லாஹுடைய தூதரை புறக்கணிப்பது, கேவலப்படுத்தவது.
அல்லாஹுடைய தூதரை நீங்கள் மதித்திருந்தால், அவருடைய கட்டளையை மதித்திருப்பீர்கள். அல்லாஹுடைய தூதரை உண்மையிலேயே உள்ளத்தில் கண்ணியப்படுதியிருந்தால், அவருடைய கட்டளை என்று வந்துவிட்டால் பணிந்து நடுங்கி அப்படியே அதற்க்கு சிரம் தாழ்த்தி விடுவீர்கள்.
இன்று எத்தனையோ விஷயங்கள் இப்படி பேசப்படுகிறது. அறிந்தோ அறியாமலோ. அழைப்பாளர்களும்கூட இப்படி பேசுவது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
ரஸுலுடைய ஹதீஸ் என்று வந்துவிட்டால், அது உங்கள் அறிவுக்குப் புரிகிறதோ புரியவில்லையோ, உங்களது அறிவியல் ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, உங்களது அனுபவம் ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ, அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், அது உண்மை.
இந்த நிலைதான் முஃமின்களின் நிலையாக இருக்க வேண்டும். மன்னர் ஹாரூன் ரஷீத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்ஒரு பெரிய அறிஞர்.ரசூலுடைய ஹதீஸை மதிப்பதில் ஒரு முன்னுதாரணமாக போற்றப்பட்ட ஒரு பெரிய மன்னர்.
“கால ரசூலுல்லாஹ்” என்று ஒரு முஹத்திஸ் ஹதீஸை சொன்னால், அப்படியே கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிப்பார்கள், அழுவார்கள். தனது அரியாசனத்திலிருந்து எழுந்து, கீழே இறங்கி வந்து, அந்த முஹத்திஸுக்கு முன்னால் சாதாரண மாணவனைப்போல் மண்டியிட்டுவிடுவார்கள்.
ஒரு நாள் அரிஞர் ஒருவரை அழைத்து, ரஸூலுடைய ஹதீஸ்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என்பதாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சபையில். அப்போது ஹாரூன் ரஷீதுடைய சாச்சாவும் அங்கு இருக்கிறார்கள்.
அப்போது அந்த முஹத்திஸ் ஹதீஸ்களை சொல்லிக் கொண்டே வரும்போது ஒரு ஹதீஸை அங்கே சொல்கிறார்:
மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஒரு நாள் தர்க்கம் செய்தார்கள். அப்படி தர்க்கம் செய்தபோது, இருவரும் ஒன்றையொன்று சொல்ல கடைசியில், ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய வாதத்தால் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மிகைத்து விட்டார்.
என்ற அந்த ஹதீஸை அந்த முஹத்திஸ் சொல்கிறார். இதை கேட்டுக்கொண்டிருந்த மன்னர் ஹாரூனுடைய சாச்சா, அந்த முஹத்திஸைப் பார்த்து, கொஞ்சம் கிண்டலாக அல்லது ஆட்சேபனை செய்யும் விதமாக, முஹத்திஸே!மூசாவும் ஆதமும் எங்கே சந்தித்தார்கள்?
ஆதமுடைய காலமெது? மூசாவுடைய காலமெது?அவர்கள் இருவரும் எங்கே சந்தித்தார்கள்?என்று கேட்டார்.
அவ்வளவுதான், சிரம்தாழ்த்தி செவிதாழ்த்தி கேட்டுக்கொண்டிருந்த முகம் சிவந்து விட்டது. எனது வாளைக் கொண்டு வாருங்கள், சிரச்சேதம் செய்யும் தோல் விரிப்பைக் கொண்டுவாருங்கள். தனது சாச்சாவின் தலையை வெட்டாதவரை நான் உட்காரமாட்டேன்என்று நின்று விட்டார்கள்.
ஒரு முஹத்திஸ், அல்லாஹுடைய தூதர் சொன்னார்கள் என்று சொல்கிறார்கள், நீ அவர்கள் எங்கே சந்தித்தார்கள், எப்போது சந்தித்தார்கள் என்று கேட்கிறாயா?உன்னை வெட்டாமல் உட்காராமாட்டேன்என்று நின்றுவிட்டார்.
அவையில் உள்ள அனைவரும் திகைத்து விட்டார்கள். மன்னரை சாந்தப்படுத்துகிறார்கள், அமைதிப்படுத்துகிறார்கள். நீண்ட நேரமாகியும், இவனை வெட்டாமல் நான் உட்காரமாட்டேன், அல்லாஹுடைய தூதர் சொன்னதற்குப் பிறகு அது எப்படி என்று கேள்வி கேட்பானா? இந்த சந்தேகத்தை உனது உள்ளத்தில் போட்டவனை கொண்டுவா, உனக்கு இந்த சந்தேக நோயை உண்டாக்கியவன் யார்?
இப்படியாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவையில் இருந்த மக்கள் மன்னரை சாந்தப் படுத்துகிறார்கள். மிக நீண்ட நேரத்திற்க்குப் பிறகு சபையிலிருந்து இவரது சாச்சா வெளியேற்றப் பட்டதற்க்குப் பிறகுதான் மன்னர் ஹாரூன் சாந்தமடைகிறார்.
(அல்பிதாயா வன்னிஹாயா : 10/233)
ஒரு முஸ்லிம் என்பவன் அவன்தான். அல்லாஹுடைய தூதர் ஒன்றை சொன்னதற்க்குப் பிறகு, அது எப்படி?ஏன்?சாத்தியமா?என்று பேசுபவன் முஸ்லிமல்ல, அவன் முஸ்லிமென்ற போர்வையில் இருக்கக் கூடிய முனாஃபிக்.
அவனுடைய நாவன்மையினால், அவனுடைய தர்க்க வாதத்தால், அவனுடைய பேச்சிலிருக்கக்கூடிய கவர்ச்சி, நம்முடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய ஈமானை விலை பேசி விடக்கூடாது.
நபித்தோழர்களுடைய நிலை அப்படித்தான் இருந்தது. அல்லாஹுடைய தூதரின் கட்டளையென்று வந்துவிட்டால் அப்படியே உட்கார்ந்து விடுவார்கள். அப்படியே அதற்க்கு செவி தாழ்த்தி விடுவார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்கள், ஜுமுஆவில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை பயான் செய்து கொண்டிருக்கிறார்கள். வந்திருக்கிற மக்கள் இட நெருக்கடியாலோ அல்லது வேறு காரணத்தினாலோ, உட்காராமல் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்படி நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், உட்காருங்கள் என்று சொன்னார்கள்.
இந்த வார்த்தையை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் செவிமடுக்கிறார்கள். அவர்கள் அப்போதுதான் மஸ்ஜிதுக்குள் வருகிறார்கள்.மஸ்ஜிதின் வாசலில் நிற்கிறார்கள்.
உட்காருங்கள் என்ற ரஸூலுடைய வார்த்தையைக் கேட்ட உடன் அங்கேயே உட்கார்ந்து விடுகிறார்கள். இதைக் கண்டு விட்ட ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை பெயர் சொல்லி அழைத்து நீங்கள் உள்ளே வந்து அமருங்கள் என்று சொன்னார்கள்.(1)
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1091.
இது சாதாரணமாக புரியக்கூடிய ஒன்றுதான். உட்காருங்கள் என்று சொன்னால், அருகில் உட்காரவேண்டிய இடத்தில் யார் உட்காராமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தையென்பது புரியக்கூடிய விஷயமாக இருந்தாலும் சரி, நபித்தோழர்களின் நிலை அந்த நபியின் கட்டளை, வார்த்தை அதை செவிமடுத்தவுடன் அதற்க்குப் பணிந்து விட வேண்டும்.
எனவேதான், உட்காருங்கள் என்ற வார்த்தையை செவிமடுத்தபோது அது எனக்கும் சேர்த்துதான் என்று இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் உடனே உட்கார்ந்து விட்டார்கள்.
இது போன்று நிறைய உதாரணங்களை நாம் பார்க்கிறோம். இதுதான் முஸ்லிம்களிடத்தில் இருக்க வேண்டும். இன்று கொஞ்சம் கொஞ்சமாக ஹதீஸ்களை, சுன்னாக்களை, மார்க்க ஒழுக்கங்களை விட்டுவிட்டு, இன்று மார்க்கம் எவ்வளவுதான் உபதேசிக்கப்பட்டாலும் கூட, பார்க்கலாம், பிறகு பார்க்கலாம் என்று ஒவ்வொருவரும் அல்லாஹுடைய தீனில் ஒரு அளவை வைத்திருக்கிறார்கள்.
சிலர், தொழுகை மட்டும் போதும் என்றும், இன்னும் கொஞ்சம் சிலர் ஜகாத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தொழுகையுமில்லை ஜகாத்துமில்லை, ஏதோ சில ஸதகா, சில நல்ல மற்றும் பொது காரியங்களை செய்துவிட்டால் போதும் என்றும் சிலர், நாம் நல்லவர்களாக இருந்தால் போதும் என்றும், சிலர் ஹஜ்ஜுக்கு சென்றால் போதும் என்றும், சிலர் ரமழான் நாம் சரியாக நோன்பு நோற்றால் போதும் என்றும் உள்ளனர்.
இப்படி நம்மில் ஒவ்வருவரும் தனக்கென்று மார்க்கத்தில் ஒரு அளவை வைத்துக் கொண்டு, ஒரு எல்லையை வைத்துக்கொண்டு, இது எனக்கு போதும் என்று இருந்து கொண்டு, நமக்கு நாமே நம்மை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இங்கு நாம் சிந்தித்துப் பார்த்தோமா? நான் பின்பற்றுகின்ற மார்க்கம், என்னிடத்தில் இருக்கக்கூடிய மார்க்கப்பற்று, என்னிடத்தில் இருக்கக்கூடிய அமல், அல்லாஹுவை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறதா? அல்லாஹுடைய ரஸூலை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறதா?
நான் எனது நஃப்ஸை திருப்தி படுத்துவதைக் கொண்டு அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை கொடுக்க மாட்டான். அல்லாஹுவை திருப்திப்படுத்துவதைக் கொண்டுதான் அல்லாஹ் சொர்க்கத்தைக் கொடுப்பான்.
நாம் எப்படி இருக்கிறோமென்றால், பாவிகைளைப் பார்த்து, மார்க்கத்தை புறக்கணித்து வாழக்கூடிய அநியாயக்கார மக்களைப் பார்த்து, அவரை விட நான் பரவாயில்லை, அவரை விட நான் கொஞ்சம் சரியாகத்தான் இருக்கின்றேன் என்பதாக நம்மை நாமே திருப்திபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இது மிகப்பெரிய அறியாமை. எனது தொழுகை அல்லாஹுவை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறதா?எனது நோன்பு அல்லாஹுவை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறதா?என்னிடத்தில் இருக்கக்கூடிய தக்வா அல்லாஹுவை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறதா?என்னிடத்தில் இருக்கக்கூடிய ஈமான் அல்லாஹுவை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறதா?
இதுதான் ஒரு முஸ்லிமுடைய பார்வையாக, ஒரு முஸ்லிமுடைய தேடலாக இருக்க வேண்டும். அதுதான் சஹாபாக்களிடமிருந்தது. எங்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டானா, அல்லாஹுடைய தூதரின் கட்டளைகளில் எதையும் பிரித்துப் பார்க்காதவர்களாக, எதையும் இது நாளைக்கு பார்க்கலாம், பிறகு பார்க்கலாம், இதை அந்த வயதில் பார்க்கலாம் என்று இப்படியாக அல்லாஹ்வின் கட்டளைகளில் அவர்கள் கூறு போடுவர்களாக இருக்கவில்லை.
ரஸூலுடைய செயலை பார்த்த மாத்திரத்தில் பின்பற்றக் கூடியர்களாக இருந்தார்கள். ரஸுலுல்லாஹுடைய ஒரு சம்பவத்தை இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்க மோதிரம் ஒன்றை செய்து, தங்களது விரலில் அணிந்தார்கள். மக்களும் அப்படியே தங்க மோதிரங்களை செய்து கொண்டார்கள்.
ஒருமுறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரில் குத்பா கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த மோதிரத்தை கழட்டினார்கள். பிறகு சொன்னார்கள்:
«إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الخَاتِمَ، وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ» فَرَمَى بِهِ ثُمَّ قَالَ: «وَاللَّهِ لاَ أَلْبَسُهُ أَبَدًا»
நான் இந்த மோதிரத்தை அனிந்து கொண்டிருந்தேன். இதனுடைய கல் உள்ள பகுதியை உட்பக்கமாக வைத்திருந்திருந்தேன் என்று கூறிவிட்டு அந்த மோதிரத்தை கழட்டிவிட்டு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!இனி நான் இதை அணியமாட்டேன் என்று கூறி,அதை தூர எறிந்த உடன், அதைப்பார்த்த நபித்தோழர்களும் தங்களது மோதிரங்களை கழட்டி எறிந்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6651.
அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதை செய்தார்களோ, உடனடியாக அதை செய்கின்ற வழக்கம் உள்ளவர்களாகத்தான் நபித்தோழர்கள் இருந்தார்கள்.
அதற்க்கு விளக்கம் தேடுபவர்களாக, வியாக்கியானம் சொல்பவர்களாக, புறக்கணிப்பவர்களாக இல்லை.
இன்று ஹதீஸுக்கு விளக்கம் சொல்கிறொம் என்ற பெயரில், ஹதீஸுக்கு வியாக்கியானம் சொல்கிறோம் என்ற பெயரில், ஹதீஸை நிராகரிக்க கூடிய கூட்டங்கள், ஹதீஸை புறக்கணிக்ககூடிய கூட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை ஒரு சகோதருடைய கரத்தில் தங்க மோதிரம் ஒன்றைப் பார்த்தார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள்:
«يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ»
உங்களில் ஒருவர் நெருப்பு கங்கை தனது கையில் வைத்துக் கொள்வதற்கு விரும்புவாரா?என்று.இந்த வார்த்தையைத்தான் சொன்னார்கள்.உடனே அவர் அந்த மோதிரத்தை கழட்டி எறிந்து விட்டார்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சென்றதற்க்குப் பிறகு அவருக்கு சொல்லப்பட்டது; இந்த மோதிரத்தை எடுத்து விற்று நீ பயன்பெற்றுக் கொள்ளலாமே என்று.
அதற்கு அவர் சொன்னார்;
لَا وَاللهِ، لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எதை அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எறியச்சொன்னார்களோ அல்லது ஏறிந்து விட்டார்களோ அதை நான் எனது கரத்தால் மீண்டும் எடுக்க மாட்டேன்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2090.
இதுதான் சஹாபாக்களின் பழக்கமாக இருந்தது. ரஸூலுடைய சொல் மட்டுமல்ல,அவர்களுடைய செயல்களையும் அப்படியே பார்த்த மார்த்திரத்தில் பின்பற்றி நடப்பவர்களாக இருந்தார்கள்.
ஒருசமயம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, தங்களது செருப்பை கழட்டி இடது பக்கமாக வைக்கிறார்கள். தொழுது கொண்டிருந்த சஹாபக்களும் உடனடியாக தங்களது செருப்புகளை கழட்டி விடுகிறார்கள்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுது முடித்ததற்க்குப் பிறகு சஹாபாக்களிடத்தில் கேட்கிறார்கள்,நீங்கள் உங்கள் செருப்புகளை கழட்டத் தூண்டியது எது? என்று.
அப்போது தோழர்கள் சொன்னார்கள்; அல்லாஹுடைய தூதரே! நீங்கள் செருப்பை கழட்டித் தூர வைத்து விட்டீர்கள், எனவே, நாங்களும் கழட்டி விட்டோம்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
" إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا "
இப்போது என்னிடத்தில் ஜிப்ரீல் வந்து என்னுடைய செருப்பில் அசுத்தம் இருக்கிறது என்று சொன்னார். எனவே நான் கழட்டினேன் என்று அதற்க்கு விளக்கம் சொல்லி விட்டு சொன்னார்கள்;
உங்களில் ஒருவர் மஸ்ஜிதிற்க்கு வரும்போது, அசுத்தம் இருக்குமானால் அதை அவர் துடைத்துக் கொள்ளட்டும். பிறகு, அதில் அவர் தொழுது கொள்ளட்டும் என்று. (2)
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 650.
இப்படித்தான் சஹாபாக்களுடைய அணுகுமுறை மார்க்கத்தில் இருந்தது. தங்களுக்கு பிடித்ததா, பிடிக்காததா, தங்களது உணர்வு இப்படியிருக்கிறது, ஏன் என்ற விளக்கக்கங்களையெல்லாம் அவர்கள் தேடுபவர்களாகவும் இல்லை, அதை சொல்பவர்களாகவும் இல்லை.
அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூரத்தில் ஒரு காட்சியை பார்க்கிறார்கள். அபூமஸ்ஊத் அல்-அன்சாரி ரழியல்லாஹுஅன்ஹு என்றசஹாபி, தன்னுடைய ஒரு அடிமையை சாட்டையால் அடித்தார்கள்.
இதை தூரத்திலிருந்து பார்த்துவிட்ட ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சத்தம் கொடுக்கிறார்கள்.
முதலில் யாருடைய சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அபூமஸ்ஊதுக்கு தெரியவில்லை. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரைந்து வந்து, அபூமஸ்ஊத்! அறிந்து கொள் என்று இருமுறை கூறியவுடன் அந்த சஹாபி என்ன தவறு நடந்தது என்று அறிந்து கொள்கிறார்.
தனது கையிலிருந்த சாட்டையை கீழே போடுகிறார்கள். அதற்க்குப் பிறகு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
«اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، أَنَّ اللهَ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَى هَذَا الْغُلَامِ»
அபூமஸ்ஊத்! நீ இந்த அடிமையை அடிப்பதற்க்கு உனக்கு இருக்கின்ற சக்தியைவிட,உன் மீது அல்லாஹ்விற்க்கு சக்தி இருக்கிறது.
அபூமஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹுசொன்னார்கள்;அல்லாஹ்வின் மீது சத்தியமாக!இதற்க்குப்பிறகு நான் எந்த ஒரு அடிமையையும் அடித்ததே கிடையாது.
அதாவது எந்த காரணத்திற்க்கும் சரி,அடிப்பதற்க்கு ஆகுமான காரியமாக இருந்தாலு கூட,எந்த அடிமையையும் அடித்தது கிடையாது. (3)
அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1659.
ரஸுலுல்லாஹுடைய கட்டளைக்கு அவர்கள் பணிந்த பணிவைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம்.
ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் இப்படித்தான் மார்க்கத்தை பினபற்றி வாழ்ந்தார்கள். எல்லா நிலைமைகளிலும் ரஸுலுடைய சொல் செயலை பின்பற்றி வாழ்ந்ததால், அல்லாஹுடைய விருப்பத்திற்க்கும் நபியினுடைய பொருத்தத்திற்க்கும் மிகவும் தகுதி உள்ளவர்களாக இருந்தார்கள்.
இந்த ஒன்றுதான் நம்மை வேறுபடுத்துகிறது. அல்லாஹுடைய கட்டளை, நபியுடைய கட்டளை என்று வரும்போது நம்மில் பலர் அதை விடத்தான் யோசிக்கிறார்கள், அதை புறக்கணிக்க யோசிக்கிறார்கள், அதை அலட்சியம் செய்ய யோசிக்கிறார்கள்.
ஆனால், அந்த நபித்தோழர்களோ, அல்லாஹுடைய கட்டளை ரஸூலுடைய கட்டளை என்று தெரியும்போது, உடனடியாக அதை பின்பற்ற முயற்சித்தார்கள். ஹதீஸ்களை, சுன்னாக்களை அவர்கள் பின்பற்றுவதற்க்கு வழிகளை தேடினார்கள்.
அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக!நாமோ ஹதீஸுகளை விடுவதற்க்கு, அலட்சியம் செய்வதற்க்கு காரணங்களை தேடுகிறோம்.
எந்த சூழ்நிலையிலும் சரி, தன்மீதும் தனது நபியின் மீதும் ஒரு ஆபத்தான நிலை வந்தாலும் கூட, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிவிட்டார்கள் என்று நபியினுடைய கட்டளைக்குத்தான் அவர்கள் அங்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஒருமுறை, ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூதர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களை அழைத்துக் கொண்டு, மதீனாவிற்க்கு வெளியில் உஹது மலைக்கு அருகில் செல்கிறார்கள்.
அப்போது ஒரு இடம் வந்தவுடன், அபூதரை அங்கே உட்கார வைத்துவிட்டு ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இந்த இடத்திலேயே இருங்கள். நான் வருகின்ற வரை இந்த இடத்தைவிட்டு எங்கும் செல்லாதீர்கள்.
அது இரவு நேரமாக இருந்தது. இரவின் இருளில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொஞ்சம் மறைந்துவிட்டார்கள். அப்போது ஒரு பலமான சப்தத்தை அபூதர் ரழியல்லாஹுஅன்ஹுகேட்கிறார்கள்.
அபூதருக்கு பயம் வந்தது. ரஸூலுக்கு எதேனும் ஆபத்து வந்து விட்டதோ.ரஸுல்லுல்லாஹ்வை தேடி செல்வோம் என்று அவர்கள் செல்ல நினைக்கிறார்கள். ஆனால், ரஸுலுடைய கட்டளை நான் வருகின்ற வரை, இந்த இடத்தை விட்டு செல்லாதே என்று சொன்னார்களே என்ற நியாபகம் வருகிறது.
அப்படியே உட்கார்ந்து கொள்கிறார்கள். பிறகு ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறிது நேரம் கழித்து வந்ததற்க்குப் பிறகு அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.
ஒரு சப்தத்தை நான் கேட்டேன், அதனால் பயந்து விட்டேன். ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள;சப்தத்தை கேட்டீரா?ஆம் என்று சொன்னார்கள். பிறகு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
அதுதான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்த சப்தமாகும். ஜிப்ரயீல் என்னிடம் வந்து சொன்னார், உங்கள் உம்மத்தில் யார் ஷிர்க்கு செய்யாமல் மரணிப்பார்களோ, அவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்று.
அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள்கேட்டார்கள்; அல்லாஹுடைய தூதரே!அவர் ஜினா செய்திருந்தாலுமா? திருடியிருந்தாலுமா? என்று. ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், ஆம், ஜினா செய்திருந்தாலும் சரி, திருடியிருந்தாலும் சரி என்று. (4)
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6444.
இது போன்ற சில கட்டளைகளை உஹது போரில் சில நபித்தோழர்கள் அலட்சியம் செய்த காரணத்தால், ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், பெரிய பல நபித்தோழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எப்படிப்பட்ட இழப்பை கொடுத்ததாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.
முஸ்லிம்கள் கேட்கிறார்கள், எங்களில் நபியிருக்கும்போது எங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது என்று. அதற்கு அல்லாஹ் சொன்னான்: அந்த சோதனைக்கு காரணம் நீங்கள்தான் என்று. நீங்கள் எப்போது துனியாவை பார்த்தவுடன் நபியின் கட்டளையை விட்டு விட்டீர்களோ, அல்லாஹ் உங்களை சோதித்தான். (அல்குர்ஆன் கருத்து 3 : 152,153)
இன்று நமது தீன், நம்முடைய மார்க்கம், நம்முடைய துனியாவைவிட உயர்வாக இருக்கின்ற நிலையில் நாம் வைத்திருக்க வேண்டும். துன்யா நம்மை அனுகும் போது, நம்முடைய துனியா நம்முடைய கண்ணுக்கு தெரியும்போது, அல்லாஹுடைய தீனை விடுகின்ற மக்களாக, அல்லாஹுடைய தீனை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கக் கூடிய மக்களாக நாம் மாறி விடுகின்ற ஒரு மோசமான நிலையில் தான் இன்று நம்முடைய ஈமான் இருக்கின்றது.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய காலத்தில், கைபர் போரில் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்;நான் நாளைய தினம் இந்த கொடியை கொடுப்பேன். அந்த கொடியை வாங்கக்கூடியவரை அல்லாஹுவும் நேசிப்பான், அல்லாஹுடைய தூதரும் நேசிப்பார்கள் என்று.
(ஒரு போரில் கொடியை எடுத்துக்கொண்டு முதல் சப்ஃபில் முதல் ஆளாக செல்வது எவ்வளவு ஆபத்தான ஒன்று. ஆனால் அதற்க்கு அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிய நற்செய்தி, அவரை அல்லாஹுவும் நேசிப்பான் அல்லாஹுடைய தூதரும் நேசிப்பார்கள்.)
அதாவது,போரில் ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் பல தொழுகை ஜமாஅத்துகள் நடக்கும். அன்றைய பொழுதைப் பொருத்தவரை சஹாபாக்கலெல்லாம் தங்களுடைய கூடாரங்களுக்கு அருகில் நடந்து கொண்டிருந்த ஜமாஅத்துகளை விட்டுவிட்டு, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சுபுஹு தொழுகை தொழ வந்துவிட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்ததற்க்குப் பிறகு,திரும்பினால் ஒவ்வொரு சஹாபியும் தன்னுடைய தன்னுடைய தலையை உயர்த்தி காட்டுகின்றார். எப்படி இருக்கும் அந்த காட்சி!
அத்தனை சஹாபாக்களும் அந்த கொடி எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்க்காக ஒவ்வொருவரும் தலை உயர்த்தி உயர்த்திக் காட்டுகிறார்கள். உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொல்கிறார்கள்.
அல்லாஹுவின் மீது சத்தியமாக! அந்தக் கொடியை நான் வாங்கவேண்டும் என்று அல்லாஹுடைய தூதரிடம் சுற்றிச் சுற்றி வந்தேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்;
அலி ரழியல்லாஹுஅன்ஹுஎங்கே?உமர் சொல்லுகிறார்கள், அவர் கண்ணில் வலியாக உள்ளது, கூடாரத்தில் அவர் உள்ளார், இதனாலாவது தனக்கு கொடியை கொடுத்த விடவேண்டுமென்று உமர் ரழியல்லாஹுஅன்ஹுஆசைப்பட்டார்கள்.
பிறகு,ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். அலி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய கண்ணில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய உமிழ்நீரை தடவுகிறார்கள், அவருடைய கண் வலி மறைந்தது.
பிறகு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலிக்கு அந்த கொடியை கொடுத்துவிட்டு சொன்னார்கள்;
«امْشِ، وَلَا تَلْتَفِتْ، حَتَّى يَفْتَحَ اللهُ عَلَيْكَ»
அலியே, திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டேயிரு, அல்லாஹ் உனக்கு வெற்றியை கொடுக்கின்ற வரை.
அலி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சிறிது தூரம் சென்று,திரும்பாமல் உயர்ந்த சப்தத்தில், அல்லாஹ்வின் தூதரே, என்று கூவி அழைத்து, நான் எதற்காக அந்த மக்களிடம் போர் செய்ய வேண்டும்? என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;
அவர்கள லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்என்று சாட்சி சொல்கின்ற வரை அவர்களிடம் போர் செய்.(5)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2405.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்களை பார்க்கிறோம். இன்று அந்த நபித்தோழர்களுக்கு கிடைத்த உதவி நமக்கு கிடைக்கவில்லையே, நம்மை அல்லாஹ் கைவிட்டு விட்டானே என்று ஏங்கக்கூடிய முஸ்லிம்களாகிய நாம், ஏன் அந்த நபித்தோழர்கள் அல்லாஹுக்கும் அல்லாஹுடைய தூதருக்கும் கட்டுப்பட்டதைப் போன்று நாம் கட்டுப்படுவதில்லையே என்று யோசிப்பதில்லை?
அவர்களைப் போன்று நாம் கட்டுப்பட்டால், கீழ்படிந்தால் கண்டிப்பாக நம்முடைய துஆக்களும் அங்கீகரிக்கப்படும். கண்டிப்பாக நமக்கு விரைவாக அல்லாஹுத்தஆலா உதவி செய்வான், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவான்.
நம்முடைய சிரமங்களில் அல்லாஹ் உதவுவான். அநியாயக்காரர்களிடமிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.
ஆகவே,நாமும் அல்லாஹுடைய தீனுக்கு கட்டுப்படக் கூடியவர்களாக, நமது குடும்பத்தையும் அல்லாஹுடைய தீனுக்கு கட்டுப்படக்கூடிய, பணியக்கூடிய குடும்பமாக, நம்முடைய பிள்ளைகளுக்கு அதையே வசிய்யத் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் சுபுஹானஹு தஆலா நம் அனைவரையும் அல்லாஹுக்கும் அல்லாஹுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹுடைய பொருத்தத்தைப் பெறுகின்ற நன்மக்களில் ஆக்கியருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ كَعْبٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا اسْتَوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، قَالَ: «اجْلِسُوا»، فَسَمِعَ ذَلِكَ ابْنُ مَسْعُودٍ، فَجَلَسَ عَلَى بَابِ الْمَسْجِدِ، فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تَعَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ»، قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا يُعْرَفُ مُرْسَلًا، إِنَّمَا رَوَاهُ النَّاسُ عَنْ عَطَاءٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَخْلَدٌ هُوَ شَيْخٌ» )سنن أبي داود-1091)[حكم الألباني] : صحيح
குறிப்பு 2)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ نِعَالِكُمْ»، قَالُوا: رَأَيْنَاكَ أَلْقَيْتَ نَعْلَيْكَ فَأَلْقَيْنَا نِعَالَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا - أَوْ قَالَ: أَذًى - " وَقَالَ: " إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا "، (سنن أبي داود- 650) [حكم الألباني] : صحيح
குறிப்பு 3)
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ أَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ: كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي بِالسَّوْطِ، فَسَمِعْتُ صَوْتًا مِنْ خَلْفِي، «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ»، فَلَمْ أَفْهَمِ الصَّوْتَ مِنَ الْغَضَبِ، قَالَ: فَلَمَّا دَنَا مِنِّي إِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ يَقُولُ: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، اعْلَمْ، أَبَا مَسْعُودٍ»، قَالَ: فَأَلْقَيْتُ السَّوْطَ مِنْ يَدِي، فَقَالَ: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، أَنَّ اللهَ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَى هَذَا الْغُلَامِ»، قَالَ: فَقُلْتُ: لَا أَضْرِبُ مَمْلُوكًا بَعْدَهُ أَبَدًا، (صحيح مسلم 34 -1659)
குறிப்பு 4)
حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَرَّةِ المَدِينَةِ، فَاسْتَقْبَلَنَا أُحُدٌ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا يَسُرُّنِي أَنَّ عِنْدِي مِثْلَ أُحُدٍ هَذَا ذَهَبًا، تَمْضِي عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ، إِلَّا شَيْئًا أَرْصُدُهُ لِدَيْنٍ، إِلَّا أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ خَلْفِهِ، ثُمَّ مَشَى فَقَالَ: «إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا - عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَمِنْ خَلْفِهِ - [ص:95] وَقَلِيلٌ مَا هُمْ» ثُمَّ قَالَ لِي: «مَكَانَكَ لاَ تَبْرَحْ حَتَّى آتِيَكَ» ثُمَّ انْطَلَقَ فِي سَوَادِ اللَّيْلِ حَتَّى تَوَارَى، فَسَمِعْتُ صَوْتًا قَدِ ارْتَفَعَ، فَتَخَوَّفْتُ أَنْ يَكُونَ قَدْ عَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرَدْتُ أَنْ آتِيَهُ فَذَكَرْتُ قَوْلَهُ لِي: «لاَ تَبْرَحْ حَتَّى آتِيَكَ» فَلَمْ أَبْرَحْ حَتَّى أَتَانِي، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لَقَدْ سَمِعْتُ صَوْتًا تَخَوَّفْتُ، فَذَكَرْتُ لَهُ، فَقَالَ: «وَهَلْ سَمِعْتَهُ» قُلْتُ: نَعَمْ، قَالَ: " ذَاكَ جِبْرِيلُ أَتَانِي، فَقَالَ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ، قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَى، وَإِنْ سَرَقَ " (صحيح البخاري- 6444)
குறிப்பு 5)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللهَ وَرَسُولَهُ، يَفْتَحُ اللهُ عَلَى يَدَيْهِ» قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: مَا أَحْبَبْتُ الْإِمَارَةَ إِلَّا يَوْمَئِذٍ، قَالَ فَتَسَاوَرْتُ لَهَا رَجَاءَ أَنْ أُدْعَى لَهَا، قَالَ فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ: «امْشِ، وَلَا تَلْتَفِتْ، حَتَّى يَفْتَحَ اللهُ عَلَيْكَ» قَالَ فَسَارَ عَلِيٌّ شَيْئًا ثُمَّ وَقَفَ وَلَمْ يَلْتَفِتْ، فَصَرَخَ: يَا رَسُولَ اللهِ عَلَى مَاذَا أُقَاتِلُ النَّاسَ؟ قَالَ: «قَاتِلْهُمْ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ فَقَدْ مَنَعُوا مِنْكَ دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللهِ» (صحيح مسلم -2405)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/