கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களின் அறிவுரைகள் (ரழி) (அமர்வு 3-3) | Tamil Bayan - 442
கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவுரைகள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவுரைகள் (அமர்வு 3-3)
வரிசை : 442
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 11-11-2016 | 11-02-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார், அந்தத் தூதரின் உறவினர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
எனக்கும் உங்களுக்கும் எல்லா முஸ்லிமான சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டிவனாக இந்த ஜும்ஆ வின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்மை மன்னித்தருள்வானாக. நமது பாவங்களை மன்னிப்பானாக. நன்மைகளை கொடுத்து தீமைகளிலிருந்து, கெடுதிகளிலிருந்து, குழப்பங்களிலிருந்து என்றென்றும் என்னையும் உங்களையும் அல்லாஹ் பாதுகாத்து வருவானாக!
இம்மையிலும் வெற்றி பெற்றவர்களாக மறுமையில் நிரந்தர வெற்றி அடைந்தவர்களாக அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! இம்மையின் நஷ்டத்தில் இருந்தும் மறுமையின் பெரிய நஷ்டத்தில் இருந்தும் அல்லாஹு தஆலா பாதுகாப்பானாக! ஆமீன்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரண்டு மந்திரிகளில் இரண்டாவது மந்திரியாகிய கலிஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு பற்றி நாம் பார்த்து வருகிறோம்.
அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் அவர்கள் உம்மத்துக்காக கூறிய அறிவுரைகள் மிக முக்கியமானவை. எப்படி இந்த பூமியை நீதத்தால் நிரப்பினார்களோ, அதுபோன்று குர்ஆன் ஹதீஸ் உடைய ஞானத்தாலும் மக்களின் இதயங்களை கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிரப்பினார்கள்.
அவர்களுடைய அறிவுரையில் சில முக்கியமான அறிவுரைகளை இன்ஷா அல்லாஹ் நாம் பார்ப்போம். அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நல்லவர்களின் ஞானவான்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி செயல்படுகின்ற நன்மக்களில் என்னையும், உங்களையும் ஆக்குவானாக!
அந்த அறிவுரைக்குள் நுழைவதற்கு முன்பாக ஒரு முக்கியமான சம்பவத்தை தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்திருக்கின்ற காரணத்தால் எனக்கும் உங்களுக்கும் அதை நான் நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.
இஸ்ரவேலர்கள் பற்றி அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா குர்ஆனில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறான். அவர்களின் வரலாறு நம்மவர்களுக்கு மிகவும் படிப்பினை நிறைந்த வரலாறு என்பதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் அந்த வரலாற்றை அல்லாஹு தஆலா நமக்கு நினைவூட்டுகின்றான்.
குறிப்பாக சூரா பனீ இஸ்ராயீல் உடைய ஆரம்பத்தை நீங்கள் எல்லோரும் படித்தே ஆக வேண்டும். இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் சொல்கிறான்.
إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا
நீங்கள் நன்மை செய்தால் அந்த நன்மைக்குரிய பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் தீயவழியில் சென்றால், அந்த தீயவழியின் கேடு அது உங்களுக்குத்தான் கேடாக நஷ்டமாக வந்து முடியும். (அல்குர்ஆன் 17 : 7)
நீங்கள் எனது கட்டளையும் எனது தூதரின் கட்டளையும் மீறினால் உங்களை வேதனை செய்யக்கூடிய உங்களை தண்டிக்கக் கூடிய மன்னரை நாம் அனுப்புவோம். அவர் மூலமாக உங்களை நாம் கண்டிப்பாக தண்டிப்போம் என்று பனீ இஸ்ராயில் உடைய ஆரம்பத்தில் அல்லாஹு தஆலா இஸ்ரவேலர்களுக்கு எச்சரிக்கை செய்தான்.
அந்த வரலாற்றின் தொடரில் ஒரு முக்கியமான நிகழ்வைப் பார்க்கிறோம், ஒரு காலகட்டத்தில் இஸ்ரவேலர்கள் மீது ஒரு கொடுங்கோல் அரசன் சாட்டப்படுகிறான். மிகக் கடுமையாக இஸ்ரவேலர்கள் இம்சிக்க படுகிறார்கள். வேதனைக்கு ஆளாகிறார்கள்.
அப்போது அந்த இஸ்ரவேலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அப்போதிருந்த பெரிய அறிஞர் இடத்தில் ஒன்று கூடுகிறார்கள். அறிஞரே! இதற்கு நீங்கள் ஆலோசனை சொல்லுங்கள். இதற்கு நாங்கள் என்ன செய்வது? இந்த மன்னரை எதிர்த்து போர் செய்யலாமா? என்ன செய்யலாம் என்று நீங்கள் ஆலோசனை சொல்லுங்கள். உங்களது ஆலோசனைக்கு ஏற்ப நாங்கள் நடந்து கொள்கிறோம் என்பதாக அந்த மன்னர் இடத்தில் வருகிறார்கள்.
அந்த அறிஞர் இடத்தில் வருகிறார்கள். அப்போது அந்த அறிஞர் சொல்கிறார்: நீங்கள் உங்களது இல்லங்களுக்கு திரும்புங்கள். உங்களது மனைவிகளை விட்டு விலகி இருங்கள். பத்து நாட்கள் அல்லாஹ்விற்காக நோன்பு இருங்கள், இரவு காலங்களை நீங்கள் தொழுகை, வணக்க வழிபாடு, திக்ர், துஆக்களில் கழியுங்கள். பத்து நாட்களுக்குப் பிறகு என்னை நீங்கள் சந்தியுங்கள்.
மக்கள் திரும்ப சென்று விட்டு, பத்து நாட்கள் கழித்து வருகிறார்கள். நாங்களும் எங்களது மக்களும் நீங்கள் சொன்னது போன்று தவ்பா, இஸ்திக்பார் செய்து பாவங்களை விட்டு விலகி இருந்து பத்து நாட்கள் நோன்பு இருந்து இரவெல்லாம் வழிபாட்டில் கழித்தோம்.
இப்போது என்ன சொல்கிறீர்கள்? அந்த அறிஞர் சொன்னார்: மீண்டும் நீங்கள் செல்லுங்கள் பத்து நாட்கள் இதே நிலையில் இருந்து விட்டு என்னை சந்தியுங்கள் என்று, மக்கள் திரும்ப சென்றார்கள். வணக்க வழிபாடு, நோன்பு, தொழுகை, தவ்பா, இஸ்திக்பார் என்று அமல்களில் ஈடுபட்டு பாவங்களை விட்டு விலகி அவர்கள் அந்த பத்து நாட்களை கழித்துவிட்டு அறிஞர் இடத்தில் திரும்ப வருகிறார்கள்.
இப்போது நாங்கள் என்ன செய்வது? நீங்கள் சொன்னபடி பத்து பத்து இருபது நாட்கள் பூர்த்தியாகி விட்டன.
அறிஞர் கூறுகிறார், மீண்டும் செல்லுங்கள், பத்து நாட்கள் கழித்து வாருங்கள். இதே நிலையை தொடருங்கள் என்று.
மக்கள் அந்த மூன்றாவது பத்து நாட்களையும் கழித்துவிட்டு, அறிஞர் இடத்தில் வருகிறார்கள். நீங்கள் எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நடப்பது ஒன்றுமில்லை, என்ன சொல்லப் போகிறீர்கள்? எங்களுக்கு புரியவில்லையே என்று கேட்கிறார்கள்.
அறிஞர் கூறுகிறார்: பொறுமையாக இருங்கள், உங்களது உள்ளங்கள் இன்னும் சுத்தமடைய வேண்டி உள்ளது. உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டியிருக்கிறது, உங்களது நன்மைகள் இன்னும் அதிகமாக வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக திரும்புங்கள்என்று அந்த மூன்றாவது முறை கூறி திருப்பி அனுப்புகிறார்.
நான்காவது முறையாக மக்கள் பத்து நாட்களை முடித்துவிட்டு வருகிறார்கள். இப்படி 40நாட்கள் பூர்த்தி ஆகிவிட்டன. நாங்கள் இப்போது என்ன செய்வது?
அறிஞர் சொல்கிறார்: நீங்கள் அமைதியாக இருங்கள், அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு உதவி வருவதை எதிர்பார்த்து இருங்கள் என்று.
வரலாற்றின் மிக முக்கியமான மிக ஒரு திருப்புமுனை அங்கே நடைபெறுகிறது. அந்த மன்னர் எதார்த்தமாக தனது ராணுவத்திடத்தில் சொல்கிறார்: நான் இன்று ஊர்வலம் வர வேண்டும், அதற்காக சேனைகளை படைகளை நீங்கள் தயார் படுத்துங்கள் என்று.
அவருக்காக ராணுவம் தயார் படுத்தப்படுகிறது. அந்த மன்னருக்கு உள்ள குதிரையை தயார் செய்வதற்கு மட்டும் யாராலும் முடியவில்லை. அந்த குதிரை தனக்கு கடிவாளத்தை மாற்றுவதற்கோ, அல்லது தனது முதுகின் மீது சேனை போடுவதற்கோ, இருக்கையை போடுவதற்கோஎதற்கும் ஒத்து கொடுக்கவில்லை.
ராஜாவுக்காக உள்ள அந்த விசேஷமான குதிரை யார் போட வந்தாலும் அவர்களை மிரட்டுகிறது. முன்னங்காலை தூக்குகிறது, அல்லது பின்னங்காலை தூக்குகிறது, அல்லது குதிக்கிறது.
இப்படியாக நேரம் கழிந்து கொண்டே இருக்க, மன்னர் கேட்கிறார்: என்ன நடக்கிறது? என் குதிரை வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்டபோது, அப்போது பயந்து வந்த மந்திரிகள் சொல்கிறார்கள்:
மன்னரே! இதுதான் நிலை என்றுமன்னர் சொல்கிறார். நான் வருகிறேன் என்று அவர் புறப்பட்டு இஸ்த்தபலுக்கு வந்த அந்த குதிரை அப்படியே கிட்டே வரும்போது அந்த குதிரை அமைதியாக பவ்யமாக நிற்கிறது.
அவர், கடிவாளங்களை வாங்கி அதை மாட்டுகிறார். இருக்கையை அமர்த்துகிறார் எல்லாம் நடைபெறுகிறது. பிறகு, மன்னர் அந்த குதிரையின் மீது அமர்ந்து இஸ்தபலில் இருந்து கோட்டைக்கு வெளியே வருகிறார்.
தனது படைக்கு நடுவில் வந்து படை புறப்படுவதற்கு அவர் கட்டளை போடும்போது, மற்றவர்களுடைய குதிரைகள் எல்லாம் செல்கிறது, நல்ல நடுப்பகுதிக்கு வந்தவுடன் இவருடைய குதிரை முன்னங்காலை ஒருமுறை, பின்னங்காலை ஒருமுறை தூக்கி மன்னரை கீழே தள்ளி, நசுக்கி, யாரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு அந்த குதிரை அவரைப் பழி வாங்குகிறது.
இந்த செய்தி அந்த அறிஞர் இடத்தில் குழுமியிருந்த மக்களுக்கு, தலைவர்களுக்கு வருகிறது. அறிஞருக்கு வருகிறது. அப்போது அந்த அறிஞர் சொன்ன பதில்.
இன்று, மக்களே! இப்படித்தான் அல்லாஹு தஆலா உங்களுடைய அநியாயக்காரஅரசர்களோடு, அதிகாரிகளோடு நடந்து கொள்வான்.
நீங்கள் சீர்திருந்தி விட்டால், நீங்கள் நல்லவர்களாக மாறி விட்டால், உங்களது உள்ளங்கள் சுத்தமாகி விட்டால் உங்களது அநியாயக்கார அரசர் இடத்தில் அல்லாஹ் பழி வாங்குவான்.
இன்று,நாம் நம்முடைய அமல்களை எல்லாம் நாசமாக்கி கொண்டு,நம்முடைய செயல்களை எல்லாம் தப்பான வழிகளில் அமைத்துக்கொண்டு,நம்மீது அநியாயக்கார அரசர்களும், அதிகாரிகளும் சாட்டப்பட்டதற்கு பிறகு,பலவந்தமாக நம்முடைய அதிகாரத்தைக் கொண்டு, வலிமையைக் கொண்டுஅவர்களை எதிர்க்கலாம் என்று நினைக்கிறோம்.
இந்த இடத்தில் இன்னுமொரு ஹதீஸை நினைவு கூறுங்கள்.
«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ المُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلَا يُسْتَجَابُ لَكُمْ»
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையை தடுங்கள்.அப்படி இல்லை என்றால் அநியாயக்கார அரசனை அல்லாஹ் உங்கள் மீது சாட்டுவான். பிறகு, நீங்கள் துஆ கேட்பீர்கள், அங்கீகரிக்க படமாட்டாது. உங்களது பலவீனர்கள் மீது அவர்கள் இரக்கம் காட்ட மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைபா இப்னு அல்யமான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2169, தரம் : ஹசன் (அல்பானி)
ஆகவே, நம்முடைய அமல்களை சீர்திருத்தம் செய்து, உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி, அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் முழுமையாக திரும்பி, அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பது தவிர வேறு வழி இல்லை.
இங்கு எந்தவிதமான வல்லமைகளையோ, ஆற்றலையோ, அதிகாரத்தையோ, வேறுவிதமான போராட்டங்களையோ, கலகங்களையோ உண்டுபண்ணி எந்த சீர்திருத்தத்தையும் கொண்டு வர முடியாது.
இந்த விஷயத்தை நாமும் நினைவு கொள்வோமாக!நம்முடைய சகோதரர்களுக்கும் இதை நினைவுபடுத்துவோமாக!
கலிஃபா உமர் பாருக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவுரைக்கு செல்வோம்.
ஸஃப்வான் இப்னு உமையா என்ற ஒரு பெரிய குறைஷி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர், அய்யாமுல் ஜாஹிலியாவில் அம்ரு இப்னு ஆஸ் போல, அபுஸுஃப்யானை போல ஒரு பெரிய தலைவராக இருந்தவர்.
அவருக்கும் சாதாரண மனிதருக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் பிரச்சனை ஏற்படும் போது, ஸஃப்வான் தனது குல பெருமையைப் பேசுகிறார், நான் யார் தெரியுமா? எப்படிப்பட்டவர் தெரியுமா? என்று தனது குலப் பெருமையை பற்றி பேசுகிறார்.
இதைக் கேள்விப்பட்ட உமருல் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸஃப்வானை அழைத்து சொல்கிறார்கள். ஸஃப்வான்! இஸ்லாமிய மார்க்கத்தில் குலப் பெருமை பேசுவதற்கு இனி வேலை இல்லை.
உன்னிடத்தில் மார்க்கப்பற்று இருக்கிறதா?உன்னை நல்லவராக, நல்ல குடும்பத்தை சேர்ந்தவராக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
பிறகு சொன்னார்கள்: உனக்கு நல்ல அறிவு, நல்ல புத்தி இருக்குமேயானால் உனக்கு ஒரு அசல் இருக்கிறது என்று நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உன்னையும் ஒருவராக உனது யோசனை ஏற்றுக் கொள்ளப்படுபவராக உன்னை சபையில் முற்படுத்தப்படுபவராக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
இந்த அறிவு இல்லாமல் வெறும் பரம்பரையை வைத்துக்கொண்டு எனக்கு தலைமைத்துவம் வேண்டும், எனக்கு மக்கள் கண்ணியம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்,அது இஸ்லாமிய மார்க்கத்தில் நடக்காது.
மூன்றாவது சொன்னார்கள்;உன்னிடத்தில் நல்ல பண்பு இருக்கிறதா? உனக்கு மரியாதை கிடைக்கும்.
அல் இக்துல் ஃபரீது 2/210, அபூ உமர் ஷிஹாபுத்தீன் இறப்பு : 328
அன்பானவர்களே! அழகிய குணத்தை அழகிய பண்புகளை கொண்டுதான் மக்களிடத்தில் நல்ல மரியாதைகளை வாங்க முடியும்.
அதுபோன்று, இல்ம், மார்க்கப்பற்று இருக்க வேண்டும்.
ஒரு பெரிய வரலாற்று சம்பவத்தை நாம் இந்த இடத்தில் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும். அதாவது, ஆரம்ப நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம். முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் என்ற மிகப்பெரிய அறிஞர், அவர் ஹதீஸ் கலையிலும் ஃபிக்குகளிலும் மிகப்பெரிய ஒரு அறிஞர்.
மக்காவில் 25ஆண்டுகள் நீதிபதியாக இருந்தார். அவரைப் பற்றி வரலாற்றில் எழுதப்படுகிறது; அவருடைய ஆரம்ப கால கட்டம் எப்படி என்றால், அவருடைய உருவத்தை பார்த்து மக்களெல்லாம் எங்கு பார்த்தாலும் சரி, (கடைத் தெருக்களிலோ, பள்ளிவாசலிலோ, வீதிகளிலோ எங்கு பார்த்தாலும் சரி) அவரை கேலி கிண்டல் செய்வார்கள்.
ஏனென்றால்,அவருடைய இரண்டு புஜங்களும் உயரமாக இருக்கும். தலை சின்னதாக உள்ளே சென்று இருக்கும். அவரைப் பார்த்தால் சிரிப்பார்கள், கேலி செய்வார்கள்.
ஒருநாள், அவரை அவருடைய தாய்அழைக்கிறார். மகனே! உன்னுடைய இந்தப் படைப்பை பார்த்து மக்களெல்லாம் தமாஷ் செய்கிறார்கள், கேலி, கிண்டல் செய்கிறார்கள். எந்த சபைக்குள் நீ சென்றாலும் உன்னை பார்த்து சிரிக்கிறார்கள். நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்லட்டுமா?
நீ இல்மைஇந்த மார்க்கப்பற்றை எடுத்துக்கொள். அல்லாஹ் உன்னை கண்ணியப்படுத்துவான். நீ இல்மையும் தக்வாவையும் எடுத்துக்கொள், அல்லாஹ் உன்னை கண்ணியப்படுத்துவான்.
தாயின் இந்த வார்த்தை அவருடைய செவியில் மட்டும் படவில்லை, அவருடைய உள்ளத்தில் இறங்குகிறது. அன்றைய தினத்திலிருந்து மார்க்க இல்மை படிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு ஆசிரியரின் வீடாக ஏறி இறங்கினார். கல்வியில் சிறந்த அறிஞராக ஆனார்.
அக்காலத்தில் மார்க்க சட்டத்துறையில் இவரை விட சிறந்தவர் இல்லைஎன்று அறிந்து, மக்காவின் தலைமை நீதிபதியாக 25ஆண்டுகள் பணியாற்றுகிறார்.
யாரை பார்த்து மக்கள் எல்லாம் கேலி கிண்டல் செய்தார்களோ அவருக்கு இல்முடைய கண்ணியத்தை அல்லாஹ் அவர் மீது போர்த்தினான்.
வரலாற்றில் எழுதுகிறார்கள்; அவருடைய அந்த மஹ்கமா(Court)இல் மக்கள் வந்து விட்டால் அவரை பார்த்து நடுங்குவார்கள், வாதிகளும், அதிகாரிகளும் தங்களது பேச்சை சொல்வதற்கு அவருக்கு முன்னால் நடுங்குவார்கள்.
அல்லாஹு தஆலா இல்மின் கண்ணியத்தை அவர்களின் மீது போர்த்தியதால் யாரும் அவருக்கு முன்னால் பொய் பேசுவதற்கோ, மாற்றி பேசுவதற்கோ, எந்த சாட்சிகளும் அவருக்கு முன்னால் தவறான சாட்சி சொல்வதற்கோ துணியமாட்டார்கள்.
அவருடைய சபையிலிருந்து வெளியேறும் வரை, அவருடைய சபையில் அமர்ந்திருப்பவர்களின் மீது அவ்வளவு பெரிய ஒரு பயம் இருக்கும்.
ஆதார நூல் : அல்வாஃபி பில்வஃபிய்யாத், ஆசிரியர் : ஸலாஹுத்தீன், இறப்பு : 764.
இதுதான் அல்லாஹ்வுடைய தீனுடைய சிறப்பு.இதுதான் இல்முடைய சிறப்பு.இதைத்தான் உமர் ஃபாரூக் அவர்கள் சொன்னார்கள்: ஸஃப்வானே! குல பெருமையை பேசி இங்கு வேலை இல்லை. உனது செல்வத்தை பேசி இங்கே வேலை இல்லை. உனது தலைமைத்துவத்தை பேசி இங்கு வேலை இல்லை.
அல்லாஹ்வுடைய தீன் வந்துவிட்டது. நேர்வழி வந்துவிட்டது. ஜாஹிலிய்யா முடிந்து விட்டது. இப்போது உனக்கு மார்க்கம் இருக்கிறதா? உன்னை நல்ல பரம்பரை உடையவனாக, நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உன்னிடத்தில் அக்கல் - நல்ல மார்க்க புத்தி இருக்கிறதா? உனக்கு ஒரு அடிப்படை இருக்கிறது. உன்னிடத்தில் நல்ல குணம் இருக்கிறதா? உனக்கு மரியாதை இருக்கிறது.
இந்த மூன்றும் இல்லையென்றால், கழுதையை விட கேவலமாகத்தான் உன்னை பார்ப்போம்.
அல் இக்துல் ஃபரீது 2/210, அபூ உமர் ஷிஹாபுத்தீன் இறப்பு : 328.
இவ்வளவு அழுத்தமான வார்த்தையை எவ்வளவு துணிவாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த மூன்றும் தான் இன்று நமக்கு தேவை. நமது பிள்ளைகளுக்கும் தேவை. இன்று நமது பிள்ளைகளுக்கு எத்தனையோ தேடி கொடுக்கிறோம். அவர்களுக்கு நற்குணத்தை பழகிக்கொடுக்கிறோமா? ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறோமா? நல்ல அறிவுக்குண்டான உபதேசங்களை அவர்களுக்கு சொல்கிறோமா?
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எல்லாம் கொடுக்கிறோம். நாவின் ருசிக்கு தேவையான உணவுகளை எல்லாம் வாங்கி கொடுக்கிறோம். ஆனால், அவர்களை அறிவாளிகளாக மாற்றக்கூடிய, நல்ல ஒழுக்கசாலிகளாக மாற்றக்கூடிய, நல்ல அறிவுரைகளை, உபதேசங்களை, வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை அவர்களுக்கு புகட்டுகிறோமா?
பள்ளிக்கூடத்தில் ஒப்படைத்து விட்டால் போதும், எனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அலட்சியம் செய்கின்ற காரணத்தால் நல்ல குடும்பத்தில் பிறக்கின்ற பிள்ளைகளும், கெட்ட பிள்ளைகளாக, ஒழுக்கமானவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளும், ஒழுக்கம் அற்றவர்களாக மாறி இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அல்லாஹ்வுடனான பற்றியும் நாம் கண்டிப்பாக அறிய வேண்டும். அதிலும் நமக்கு ஏராளமான படிப்பினைகள் பாடங்கள் இருக்கின்றன.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், உமர் ரழியல்லாஹுஅன்ஹுஉடைய விஷயத்தில் எத்தனையோ முன்னறிவிப்புகளை எத்தனையோ நற்செய்திகளை சொல்லியிருக்கின்றார்கள்.
சத்தியம் உமரின் நாவில் பேசுகிறது. உமர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதிப்புடையவராக நல்ல செய்திகளை அவருடைய உள்ளத்தில் கேட்கப்படுவதாக இருக்கிறார்,என்றெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமரை பற்றி நற்செய்திகளை சொல்லியிருக்கிறார்கள்.
முசன்னஃப் இப்னு அபீ ஷைபா : 31968, அஹ்மத் : 5145, இப்னு மாஜா : 108, அபூதாவூத் : 2962.
காரணம், அவர்களுக்கும்அல்லாஹ்விற்கும் இடையில் உண்டான தொடர்பு அவ்வளவு பரிசுத்தமாக இருந்தது. உள்ளத்தை அவ்வளவு சுத்தமாக வைத்துக் கொண்டார்கள். அல்லாஹ்விற்கும், தனக்கும் இடையில் உண்டான உறவை அவர்கள் சீர்படுத்தினார்கள்.
நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள்:
யார் ஒருவர் தனக்கும், அல்லாஹ்விற்கும் இடையில் உண்டான தொடர்பை சீர் செய்தாரோஅல்லாஹு தஆலா அவருக்கும், மக்களுக்கும் இடையில் உண்டான உறவுகளை, காரியங்களை சீர் செய்து விடுவான்.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா : 34988.
இன்று, நமக்கும்மக்களுக்கும் இடையில் உண்டான நம்முடைய தொடர்புகள் சீர்கெட்டிருப்பதற்கு என்ன காரணம்? என்று பார்க்கும்போது, நமக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய விரிசல்கள்.
அது மட்டுமல்ல, நமக்கும், அல்லாஹ்விற்கும் இடையில் உள்ள உறவை சீர்செய்து இருக்கிறோமா? அவன் தடுத்த பாவங்களில் நுழையாமல் இருக்கிறோமா? அவன் விதித்த வரம்பை மீறாமல் இருக்கிறோமா?
எத்தனை ஃபர்ழுகளை பாழாக்குகின்றோம், எத்தனை தடைகளை மீறி விடுகின்றோம். நபித்தோழர்களில் ஒரு ஸஹாபிய பெண்மணி சொல்கிறார்கள்:
எனக்கு ஒரு தலைவலி ஏற்பட்டால் கூட, உடனே நான் செய்த பாவங்களில் ஒன்றை நினைத்துப் பார்ப்பேன். என்னுடைய இந்த பாவத்தினால் எனக்கு அந்த வலி ஏற்பட்டிருக்குமோ என்று.
இப்படி, நம்முடைய முன்னோர் அமல்களை வைத்து வாழ்க்கையில் நிகழக்கூடிய சம்பவங்களை எல்லாம் பார்த்தார்கள்.
ஆனால்,நாமோ அமல்களின் பக்கம் கவனங்களை கொண்டு செல்வதற்கே தயாரில்லை. அமல்களை திரும்பி பார்ப்பதற்கே தயாரில்லை. அமல்கள் எப்படி போனால் என்ன? எனக்கு நான் விரும்பியது நடக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் நமக்கு சூழ்நிலைகள் சாதகமாக அமைய வேண்டும் என்று நினைக்கின்றோம்.ஆனால்,இது முடியாது.
அல்லாஹ் சொல்கிறான்:
وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 35 : 45)
எத்தனையோ பாவங்களை எல்லாம் அவற்றிற்காக அல்லாஹ் உங்களை தண்டிக்காமல் விட்டு விடுகின்றான்.
இங்கே கலிஃபா உமர் உடைய இரவுத் தொழுகையின் ஒரு பிரார்த்தனையை பார்க்கிறோம். அல்லாஹ்விடத்தில் பேசுவார்கள்.
என் இறைவா! உனக்கு முன்னால் நிற்கக்கூடிய இந்த நிலையை நீ பார்க்கிறாய்.எனது தேவை என்ன என்பதை நீ அறிவாய்.யா அல்லாஹ்! நான் இந்த இடத்தை விட்டு திரும்பும்போது எனது தேவையை பெற்றவனாக, வெற்றி அடைந்தவனாக, உன்னுடைய கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக, என்னுடைய பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டவனாக என்னை திரும்ப அனுப்பு, என்னை மன்னித்து அனுப்பு, என் மீது கருணை காட்டி அனுப்பு.
என்று இரவு தொழுகையை ஆரம்பித்து விட்டு, பிறகு தொழுகை எல்லாம் முடித்ததற்கு பிறகு, அல்லாஹ்விடத்தில் அடுத்து பேசுவார்கள்.
அல்லாஹ்வே! இந்த துன்யாவில் எதுவும் நான் நிரந்தரமாக கருதவில்லை.இந்த துன்யாவில் எந்த ஒரு நிலையும் நீடித்திருக்காது.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா :21596.
அவர்கள் தெளிவாக இருந்தார்கள். நாம் மயக்கத்தில் இருக்கிறோம். அதனால் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து சோதனைகள் வரும் பொழுது தடுமாறுகிறோம். குழப்பம் அடைகிறோம்.
ஆனால், அவர்களோ ஃபித்னா உடைய நாட்களுக்காக குழப்பம் நிறைந்த நாட்களுக்காக தயாரிப்போடு இருந்தார்கள். எனவே அவர்களுக்கு அது திடுக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த துன்யாவில் மனதை பரிகொடுக்கவில்லை. இந்த துன்யாவின் செல்வத்தில் மூழ்கி மறுமையை மறக்கவில்லை.
உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் பெரிய ஆட்சியாளர். ஆனால்,அவர் மரணிக்கும் போது கடனாளியாக மவ்த்தாகிறார்.
தன் மகன் அப்துல்லாஹ்வை அழைத்து சொல்கிறார்; மகனே! என்னுடைய கடனை அடைப்பதற்கு பைத்துல்மாலில் கை வைத்து விடாதே.
புகாரி : 3700, ஃபத்ஹுல் பாரி : 7/66
இமாம் சுஃப்யான் சவ்ரி சொல்கிறார்கள்: கலிஃபா உமர் ஹஜ்ஜுக்கு வருவார்கள். எங்கேயாவது மரம் இருந்தால் அந்த மரத்தின் நிழலில் தங்குவார்கள். மதினாவிலிருந்து மக்கா புறப்பட்டு வந்து, மக்காவில் தங்கி ஹஜ்ஜை முடித்துவிட்டு திரும்ப செல்கின்ற வரை ஒரே ஆடையிலேயே ஹஜ் செய்திருக்கிறார்கள். வெறும் 16தினார்களை மட்டும் செலவழித்திருக்கிறார்கள்.
ஹில்யத்துல் அவ்லியா.
இப்படிப்பட்ட கலிஃபாவிற்கு ஏன் கடன் வந்தது? உலக விஷயங்களுக்காக ஏதும் இல்லை.
ஸதக்கா கொடுத்தார்கள், ஏழைகளுக்கு கொடுத்தார்கள், இல்லாதவர்கள் கேட்டு வரும்போது கொடுத்தார்கள். அதனால் கடன் பட்டார்கள்.
தன் மகனுக்கு சொன்னார்கள்: பைத்துல்மாலில் கை வைத்து விடாதே,என்னுடைய பனூ அதி குடும்பத்தார்களிடத்தில் அதற்கு ஹக்கை வாங்கி என்னுடைய கடனை அடைத்து வைப்பாயாக! அப்படியே அது நிறைவேற்றப்படுகிறது.
புகாரி : 3700, ஃபத்ஹுல் பாரி : 7/66
சொன்னார்கள். இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமானதல்ல மேலும் இந்த உலகத்தில் எந்த ஒரு நிலையும் நீடித்திருப்பதாக நான் பார்க்கவில்லை. பாருங்கள்!
நேற்று வரை ஒரு பெரிய மதிப்புமிக்க செல்வமாக இருந்தது. இன்று ஒரு குப்பைக்கு சமமாகி விட்டது. ஒரு மதிப்பற்ற ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு நொடியில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்படி நிலைகளை மாற்றுகிறான்.
இதைத்தான் உமர் சொன்னார்கள்: அல்லாஹ்! இந்த உலகத்தில் எதையும் நான் நிரந்தரமாக பார்க்கவில்லை. எந்த ஒரு நிலையும் உலகத்தில் நீடித்திருக்காது.
மேலும் கேட்டார்கள்: யா அல்லாஹ்! இந்த துன்யாவில் எனக்கு இல்மை கொடு.
ஏறக்குறைய 18ஆண்டுகள் ரசூலுல்லாஹ்விடத்தில் கல்வி படித்தது மட்டுமல்லாமல் பிறகு அபூபக்ர் உடைய தோழமையும் இருந்தது. இப்படி எல்லாம் இல்மில் காலங்களைக் கழித்த ஸஹாபி, எனக்கு இல்மை கொடு என்று துஆ கேட்கிறார்கள்.
நான் எதைப் பேசினாலும் இல்மோடு பேசுபவனாக என்னை ஆக்கு. முட்டாள்தனமாக, அறிவு இல்லாமல் பேசக்கூடியவனாக என்னை ஆக்கி விடாதே!
நான் வாய்மூடி அமைதியாக இருந்தாலும் ஒரு இல்மை சிந்தித்தவனாக, வாய்மூடி என்னை இருக்கச் செய்.
யா அல்லாஹ்! எனக்கு அதிக செல்வத்தை கொடுக்காதே, நான் வரம்பு மீறி விடுவேன்.எனக்குத் தேவையைவிட குறைத்தும் விடாதே, நான் மறந்துவிடுவேன்.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா :21596.
இன்று நம்முடைய நிலை,பணம் மட்டும்தான் வேண்டும், செல்வநிலை மட்டும்தான் வேண்டும், அந்த நிலையில் நான் எப்படி இருப்பேன்? எனது நிலை எப்படி இருக்கும்?என்பதை பற்றி எல்லாம் சிந்திக்காமல், பணத்தை மட்டும், செல்வ நிலையை மட்டும், ஆடம்பர வாழ்க்கையை மட்டும்,அடிப்படையாக வைத்து தான் இன்று நம்முடைய வேலை, பொருளாதாரம், கல்வி, படிப்பு, தொழில் துறை எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டோம்.
ஆனால், அந்த செல்வத்தை பார்த்து பயப்பட கூடிய நிலை நம்மிடத்தில் இல்லை. இதைத்தான் உமர் அவர்கள் நமக்கு சொல்கிறார்கள்.
உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய மற்றொரு துஆவை பாருங்கள்.
யா அல்லாஹ்! உனது கயிரை கொண்டு என்னை நீ பாதுகாத்துக் கொள். (அல்லாஹ்வுடைய கயிறு என்பது அல்லாஹ்வுடைய குர்ஆன்.) அல்லாஹ் உன்னுடைய குர்ஆனை கொண்டு என்னை நீ பாதுகாத்துக் கொள்.
உன்னுடைய அருளில் இருந்து எனக்கு கொடுத்துக் கொண்டே இரு.. உன்னுடைய மார்க்கத்தை உன்னுடைய கட்டளைகளை பாதுகாப்பவனாக என்னை ஆக்கு.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா :9510.
எனவேதான், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப்பற்றி நபித்தோழர்கள் சொல்வார்கள்:அல்லாஹ்வுடைய சட்டம் என்று வந்து விட்டால் தன்னுடைய விருப்பு, வெறுப்பு அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அப்படியே நின்று விடுவார்.
நூல் : புகாரி, எண் : 4642.
அவருடைய கோபம் வரலாற்றில் மிக பிரபலமானது. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி பேசினாலும் அவர்களது கோபத்தை பேசாமல் இருக்க முடியாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, உமரைப் பற்றி ஒருமுறை நினைவு கூறும் போது, அவருடைய கோபத்தைப் பற்றி சொல்லிக் காட்டுகிறார்கள். இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். நான் சொர்க்கத்தில் சென்றிருந்தபோது, அங்கே பார்த்தேன். ஒரு பெண் ஒரு மாளிகைக்கு அருகே ஒழு செய்து கொண்டிருந்தாள், அது அழகான மாளிகையாக இருந்தது.
நான் என்னை அழைத்துச்சென்ற வானவரிடத்தில் கேட்டேன். இந்த மாளிகை யாருக்குரியது? என்று.அப்போது அவர் சொன்னார்: இது உமருக்கு உரியது என்று.
அந்த மாளிகையில் சென்று பார்க்கலாமா? என்று நான் விரும்பினேன். ஆனால் அவருடைய ரோஷம் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் நுழையாமல் வந்துவிட்டேன். இந்த வார்த்தையை சொன்னவுடன்,ரசூலுல்லாஹ்வின் சபையில் இவர் தேம்பித் தேம்பி அழுதார்.
யா ரசூலுல்லாஹ்! உங்கள் மீதா நான் ரோஷப்படுவேன்.(1)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7023.
ஒருமுறை உமர் அவர்கள் ஒரு ஆர்வத்தில் தவ்ராத்தில் சில ஏடுகளை எடுத்து வந்து படிக்கிறார். யா ரசூலுல்லாஹ்! தவ்ராத்தில் இப்படி இப்படி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதா? என்று அவர் பாட்டுக்கு அதை வாசித்துக் கொண்டே இருக்கிறார்.
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அருகில் இருந்தவர், கவனித்து விடுகிறார்கள். ரசூலுல்லாஹ் உடைய முகம் சிவந்து கொண்டே போகிறது. உமரே! நபியின் முகத்தை பார்க்கவில்லையா? என்று கேட்டவுடன், உமர் ரழியல்லாஹு அன்ஹு தலைதூக்கி பார்க்கிறார்.
ரசூலுல்லாஹ்வின் கண்களும், முகமும் கோபத்தால் சிவந்து இருக்கிறது. பார்த்தவுடன் சொன்னார்கள்: யா அல்லாஹ்! உன்னுடைய கோபத்திலிருந்து, ரசூலுல்லாஹ் உடைய கோபத்திலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
அந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்திருந்தவர்கள் உமர் அவர்கள்.(2)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸாபித் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 15864.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கோபம் என்பது, அவர்களை மார்க்க விஷயங்களில் அல்லாஹ்வுடைய தீனுடைய விஷயங்களில், ரோஷம் உடையவர்களாக, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணுவதில் அவர்களை ஆக்கி வைத்ததே தவிர, தனக்காக பழி வாங்குவதில் அல்ல.
இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்கிறார்கள். ஒரு ஸஹாபி உடைய சகோதரனின் மகனார் கிராமத்தில் இருந்து வருகிறார். அவர் ஒழுக்கம் தெரியாத ஒரு மனிதர். அவர் சொல்கிறார்.
இந்த அமீர் இடத்தில் என்னை அழைத்து செல். நான் அவர் இடத்தில் பேச வேண்டும் என்று. அந்த ஸஹாபி அந்த மனிதரை அழைத்து செல்கிறார்கள்.
சென்றவுடன் கலீஃபா உமருல் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எப்போதும் நபித் தோழர்கள் எல்லாம் ஸலாம் சொல்வதாக இருந்தால், அஸ்ஸலாமு அலைக்க யா அமீருல் முஃமினீன் என்று தான் சொல்வார்கள்.
அதுதான் ஒழுக்கம். அதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், இவரோ எடுத்த எடுப்பிலேயே உள்ளே சென்று, அமீரே! அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்கிறார். அதற்குப் பிறகு பேச ஆரம்பித்தவர் உமரை நேரடியாக தாக்குகிறார்.
உமரே! நீங்கள் நீதமாக எங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பது இல்லை. எங்களுக்கு தேவையான செல்வத்தை எங்களுக்கு கொடுப்பதில்லை என்று மக்களுக்கு மத்தியில் அவரை கடிந்து பேசுகிறார். விமர்சனம் செய்கிறார்.
உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சாட்டையை கையில் எடுத்துவிட்டார். அழைத்துச் சென்ற அந்த ஸஹாபி ஒரே ஒரு குர்ஆனுடைய வசனத்தை தான் அங்கு ஓதுகிறார்கள். சூரத்துல் அஃராபில் இருந்து.
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
உமரே! அல்லாஹ் தனது நபிக்கு சொல்கிறான். மன்னிப்பை பற்றிப் பிடிப்பீராக! நன்மையை ஏவுவிராக! அறியாதவர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள். (அல்குர்ஆன் 7 : 199)
இவர் எனது சகோதரர், கிராமத்து மனிதர், இவர் ஒரு ஜாஹில். இந்த வசனத்தை கேட்டவுடன் சாட்டையைக் கீழே போட்டு விட்டு திரும்ப தனது இருக்கையில் உட்கார்ந்து கொள்கிறார்கள்.
அந்தத் தோழர் சொல்கிறார். அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்பட்டு விட்டால் உமர் அவர்கள் அந்த இடத்தில் அப்படியே நின்று விடுவார்கள்.(3)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4642.
இப்படிப்பட்ட தருணங்களில் நமக்கு யாராவது ஏதாவது உபதேசம் செய்தால் எனக்கு இதனுடைய விளக்கம் தெரியும் என்று சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உன்னைவிட எனக்கு இந்த விளக்கம் எனக்கு ரொம்ப தெரியும் என்று பேசுபவர்கள் எத்தனை பேர்! அல்லாஹ் பாதுகாப்பானாக!
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த உம்மத்தின் தலைமைத்துவத்தை ஏற்ற போது அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறார்கள்.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா :21599.
இப்படி இந்த தோழர்கள் உடைய வரலாறுகளை படிக்கும்போதெல்லாம் துஆக்களை கொண்டே தங்களுடைய காரியங்களை சீர்செய்து வந்திருக்கிறார்கள்.
இன்று, நம்மில் பலருக்கு துஆவின் மீது நம்பிக்கையே இல்லை. துஆ செய்து என்ன ஆகப்போகிறது? என்று எண்ணுகிறார்கள்.
அல்லாஹ்வை நம்பாதவன் தான் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்க மாட்டான்.யார் அல்லாஹ்வை எந்த அளவு நம்புவார்களோ, அந்த அளவு அல்லாஹ்விடத்தில் கெஞ்சி கேட்பார்கள்.
நபிமார்கள் அல்லாஹ்வை அதிகம் நம்பிக்கை கொண்டார்கள். எனவே, அவர்கள் தான் இந்த உம்மத்திலேயே அல்லாஹ்விடத்தில்துஆவில் அதிகம் அழுதவர்கள், அதிகம் கெஞ்சியவர்கள்.
ஒரு இரவெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆவில் இருந்து இருக்கிறார்கள். பத்ரு உடைய போரை நினைத்துப் பாருங்கள்.
யா அல்லாஹ்! உனது வாக்கை நாளைய தினத்தில் உண்மை படுத்து!என்று துஆ செய்து அழுது கொண்டே இருக்கிறார்கள். அபூபக்ர் பின்னால் வந்து அல்லாஹ்வுடைய தூதரை அணைக்கிறார்கள்.
யா ரசூலல்லாஹ்! போதும், போதும் அல்லாஹ் உங்களது துஆவை ஏற்றுக் கொள்வான் என்று அமைதிப் படுத்துகிறார்கள்.
நூல் : புகாரி, எண் : 2915, 4875.
இன்று நம்முடைய ஈமான் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் தான் நம்முடைய துஆக்கள் பலவீனமாக இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய ஸஹாபாக்களின் நேரங்களை பார்த்தால், துஆவிற்காகவே இவ்வளவு நேரங்களை ஒதுக்கி இருந்தார்கள்.
ஆனால், இன்று ஸுஜுதிலும் துஆ இல்லை,ருகூவிலும் துஆ இல்லை, தக்பீரிலும் துஆ இல்லை, அத்தஹியாத்திலும் துஆ இல்லை.
துஆ என்பது நம்முடைய வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்று. அப்படியே செய்தாலும் கூட, நுனி நாவினால் கண்கலங்காமல், உள்ளம் நடுங்காமல் ஏதோ சில தேவைகளை நீ கொடுத்தால் கொடு கொடு என்று கேட்கின்ற ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
கலீஃபா உமருல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு கிலாஃபத்தை ஏற்றபோது துஆ கேட்டார்கள்.
யா அல்லாஹ்! நான் ஒரு பலவீனமானவன், என்னை நீ பலப்படுத்து. யா அல்லாஹ், நான் கடின குணம் உள்ளவனாக இருக்கிறேன், என்னை நீ மென்மையாக்கு. நான் ஒரு கஞ்சனாக இருக்கிறேன். என்னை ஒரு தயால தன்மை உடையவனாக ஆக்கு.
அல்லாஹ்விடத்தில் அவர்கள் கேட்ட இந்த துஆவின் பிரதிபலிப்பைதான் அவர்களுடைய வாழ்க்கை முழுக்க நாம் பார்க்கிறோம்.
மேலும் சொன்னார்கள், நான் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு மிக பலவீனமாக இருப்பேன். யார் அநீதி இழைத்தார்களோ, யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் நான் கடுமையாக நடந்து கொள்வேன்.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா :21599.
அன்பானவர்களே! அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படித்தான் இருந்தது. அவருடைய ஆட்சியில் எங்கே அநீதி இழைக்கப் பட்டாலும் துணிவோடு,உமர் அவர்களுடைய சபையில் வந்து,அமீருல் முஃமினீன் அவர்களே! உமர் அவர்களே! எனக்கு இன்னவரால் அநீதி இழைக்கப்பட்டது என்று சொல்வார்கள்.
கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கவர்னர்கள், அம்ர் இப்னு ஆஸ் போன்ற மிகப்பெரிய தளபதிகள் அபூ மூஸா அல்அஷ்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை போன்ற மிகப்பெரிய நபித்தோழர்கள், கவர்னர்கள் தவறு செய்திருந்தாலும், அநீதி இழைத்திருந்தாலும், அந்த அநீதியை உமரிடத்தில்வந்து முறையிடக்கூடிய அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும், பலவீனர்களுக்கும் துணிவு இருந்தது என்றால், ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், சாமானிய மக்களுக்கும், உமர் ரழியல்லாஹு அன்ஹு எவ்வளவு மென்மையானவர்களாக இருந்தார்கள்.
ஒரு சாதாரண அடிமைக்காக அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும், அவருடைய மகனாரையும் மிசிரில் இருந்து வரவழைக்கிறார்கள். ஒரு மனிதனுடைய முறையீட்டுகாக அபுமூஸா அஷ்ஆரி என்ற மிகப்பெரிய நபித்தோழரை எமனிலிருந்து வரவழைக்கிறார்கள். தனது தர்பாரில் சாதாரண ஒரு மனிதராக உட்கார வைத்து இவன் உன் மீது இப்படி குற்றம் சுமத்துகின்றான். செய்தாயா? என்று கேட்கிறார்கள். ஆம் என்று சொல்கிறார். எனது சபையில்! அதற்கு பழி வாங்கு என்று சொல்கிறார்கள்.
உமருடைய துஆவை கவனியுங்கள்: யா அல்லாஹ்! எனது பாவத்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய காரியங்களில் நேரான வழிக்காக நான் உன்னிடத்தில் நேர்வழியை, நல்வழியை தேடுகின்றேன்.
உன் பக்கம் நான் தவ்பா செய்கிறேன். என் மீது நீ பாவமன்னிப்பை வழங்குவாயாக! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! நீ தான் என்னுடைய ரப்பாக இருக்கின்றாய். யா அல்லாஹ்! எனது சீமான் தனத்தை, செல்வத்தை எனது உள்ளத்தில் ஏற்படுத்து.
என்னுடைய ஆசை எல்லாம் உன்னிடத்தில் இருக்கக் கூடியதாக ஆக்கிவிடு. என்னுடைய ஆசை, ஆர்வத்தை, ஈடுபாட்டை உன்னிடத்தில் இருக்கும் மறுமையின் அந்தஸ்துகளில் எனக்கு ஆக்கிவிடு.
எனக்கு கொடுத்ததில் நீ பரகத் செய். எனக்கு எதை ஹராமாக்கி விட்டாயோ, தடுத்து விட்டாயோ அதை விட்டு நீ என்னை தடுத்துக்கொள். அதிலிருந்து தேவையற்றவனாக என்னை ஆக்கிவிடு.
நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா :21599.
இன்னும் நிறைய அறிவுரைகள் இருக்கின்றன. அவற்றை நாம் தேடிப் பெறுவோமாக! அந்த அறிவுரைகளின் மூலமாக நல்ல படிப்பினைகளை, நல்ல பாடங்களை பெற்று நாமும் அமல் செய்து,நம்முடைய தலைமுறைகளுக்கும் அவற்றை போதிப்போமாக!
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவனுடைய அடியார்கள் மீது கருணை காட்டுவானாக! அநியாயக்காரர்களை விட்டும், நம்மையும், இந்த சமுதாயத்தையும் பாதுகாப்பானாக, யார் முஸ்லிம்களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் சூழ்ச்சி செய்கிறார்களோ, அவர்களுடைய சூழ்ச்சிகளை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்புவானாக!
யா அல்லாஹ்! எங்கள் மீது கருணை காட்டாத வரை, எங்கள் விஷயத்தில் உன்னை பயப்படாத வரை, எங்கள் மீது சாட்டி விடாதே. யா அல்லாஹ்! காபிர்களுடைய எல்லா விதமான சோதனைகளில் இருந்தும், துன்பங்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறோம். யா அல்லாஹ்! எங்களை நீ பாதுகாத்துக் கொள்வாயாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: بَيْنَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " بَيْنَا أَنَا نَائِمٌ، رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، قُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ قَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ، فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا " قَالَ أَبُو هُرَيْرَةَ: فَبَكَى عُمَرُ بْنُ الخَطَّابِ ثُمَّ قَالَ: أَعَلَيْكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أَغَارُ؟ (صحيح البخاري- 7023)
குறிப்பு 2)
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ جَابِرٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَابِتٍ، قَالَ: جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي مَرَرْتُ بِأَخٍ لِي مِنْ قُرَيْظَةَ، فَكَتَبَ لِي جَوَامِعَ مِنَ التَّوْرَاةِ أَلَا أَعْرِضُهَا عَلَيْكَ؟ قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَبْدُ اللَّهِ: فَقُلْتُ لَهُ: أَلَا تَرَى مَا بِوَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ عُمَرُ: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا، قَالَ: فَسُرِّيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَصْبَحَ فِيكُمْ مُوسَى ثُمَّ اتَّبَعْتُمُوهُ، وَتَرَكْتُمُونِي لَضَلَلْتُمْ، إِنَّكُمْ حَظِّي مِنَ الْأُمَمِ، وَأَنَا حَظُّكُمْ مِنَ النَّبِيِّينَ» (مسند أحمد مخرجا 15864)
குறிப்பு 3)
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ القُرَّاءُ أَصْحَابَ مَجَالِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ، كُهُولًا كَانُوا أَوْ شُبَّانًا»، فَقَالَ عُيَيْنَةُ لِابْنِ أَخِيهِ: يَا ابْنَ أَخِي، هَلْ لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ، فَاسْتَأْذِنْ لِي عَلَيْهِ، قَالَ: سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَاسْتَأْذَنَ الحُرُّ لِعُيَيْنَةَ فَأَذِنَ لَهُ عُمَرُ»، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ: هِيْ يَا ابْنَ الخَطَّابِ، فَوَاللَّهِ مَا تُعْطِينَا الجَزْلَ وَلاَ تَحْكُمُ بَيْنَنَا بِالعَدْلِ، فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ أَنْ يُوقِعَ بِهِ، فَقَالَ لَهُ الحُرُّ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {خُذِ العَفْوَ وَأْمُرْ بِالعُرْفِ وَأَعْرِضْ عَنِ الجَاهِلِينَ} [الأعراف: 199]، وَإِنَّ هَذَا مِنَ الجَاهِلِينَ، «وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ» (صحيح البخاري- 4642)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/