கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களின் அறிவுரைகள் (ரழி) (அமர்வு 2-3) | Tamil Bayan - 442
கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவுரைகள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவுரைகள் (அமர்வு 2-3)
வரிசை : 442
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 04-11-2016 | 04-02-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை பயந்து வாழுமாறு, எனக்கும் உங்களுக்கும் இந்த ஜும்ஆ குத்பாவின் தொடக்கத்தில் தக்வாவின் அறிவுரையை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
தொடர்ந்து நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறுகள் அவர்களின் அறிவுரைகளை நாம் கேட்டு வருகிறோம். சென்ற ஜும்ஆவிலும் அல்லாஹ்வால் ஞானம் வழங்கப்பட்ட கலீஃபா உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவுரைகளை நாம் கேட்டோம்.
இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவிலும் அவர்களுடைய சில அறிவுரைகளையும் அவர்கள் செய்த சில பிரார்த்தனைகளையும் அவற்றிற்குரிய விளக்கங்களோடு பார்ப்போம்.
நல்லவர்களை பற்றி பேசுவது, நல்லவர்களின் கூற்றுகளை, அறிவுரைகளை பேசுவது நாம் அவர்களோடு வாழ்வதற்கு சமமான நெருக்கமான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
அவர்களை நாம் பார்க்கவில்லையென்றாலும் அவர்களுடைய காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லை என்றாலும் அவர்களுடைய வரலாறுகளும், கூற்றுகளும், அறிவுரைகளும், உபதேசங்களும் இன்றும் உயிரோடு நம்மோடு இருக்கின்ற காரணத்தால் அவற்றை படிக்கும்போது கண்டிப்பாக அந்த நல்ல உணர்வுகளை,நல்ல எண்ணங்களை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்துகிறான்.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது மிகப் பொருத்தமாக இருக்கும். அப்துல்லாஹ் இப்னு அல்முபாரக் ரஹிமஹுல்லாஹ் என்ற மிகப் பெரிய ஒரு அறிஞர். இமாம் புகாரி அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு பெரிய அறிஞர்.
ஹதீஸ் கலையிலும் ஃபிக்ஹு என்ற மார்க்க சட்ட துறைகளிலும் மிகவும் பிரபலமான ஒரு அறிஞர். அவர்களிடத்தில் கல்வி படிக்காத ஒரு முஹத்திஸ் அந்த காலத்தில் இருந்திருக்கமாட்டார்.
சட்டக்கலை அதுபோன்று ஹதீஸ் கலை, ஹதீஸ் அறிவிப்பார்களுடைய கலை என்று பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பெரிய அறிஞர்.
அவர்கள் தங்களது ஆசிரியரிடத்தில் கல்வி படித்ததற்கு பிறகு தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுவார்கள், யாரிடமும் பேசமாட்டார்கள், தனியாக இருப்பார்கள்.
அப்போது, மற்ற மாணவர்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் இடத்தில் கேட்கிறார்கள், சபை முடிந்தவுடன் நீ தனியாக சென்று உனது இடத்திற்கு ஒதுங்கி கொள்கிறாயே, எங்களுடன் நீ அமர்வதில்லையே, எங்களோடு நீ பேசுவதில்லையே? என்பதாக கூறும்பொழுது, அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஸஹாபாக்களோடு அமரப்போகிறேன்.நான் தாபியீன்களோடு அமரப்போகிறேன். உங்களோடு அமர்ந்து எனக்கு என்ன பலன் இருக்கிறது?
அப்போது உடனிருந்தவர்கள் கேட்டார்கள், என்ன விசித்திரமான பேச்சை பேசுகிறாய். ஸஹாபாக்களோடு அமரப் போகிறாயா? ஸஹாபாக்கள் எங்கே இருக்கிறார்கள்?தாபியீன்களோடு அமரப்போகிறாயா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?என்று கேட்டபோது. அப்துல்லாஹ் இப்னு முபாரக் பதில் கூறினார்கள்.
நான் அந்த ஸஹாபாக்களின் கூற்றுகளை, உபதேசங்களை படிக்க எனது தனிமையை பயன்படுத்திக் கொள்கிறேன். நான் அவர்களின் உபதேசங்களை, அறிவுரைகளை படிக்கும்போது நான் அவர்களது சபையில் இருப்பதைப் போன்று உணர்கிறேன்.
எனவே, தாபியீன்களின் அறிவுரைகளைஅவர்களின் உபதேசங்களை படிப்பதற்கு தனிமையை ஒதுக்கிக் கொள்கிறேன். அந்த தாபியீன்களின் மாணவர்களாக, அந்த தாபியீன்களோடு வாழ்வதாக நான் உணர்கிறேன்.
உங்களோடு அமர்ந்தால் எனக்கு என்ன பலன்? யாரைப்பற்றியாவது நீங்கள் புறம் பேசுவீர்கள், யாருடைய குறையைப் பற்றியாவது ஏதாவது பேசுவீர்கள். இதை விட எனக்கு மிகச் சிறந்தது அந்த நபித்தோழர்களின் சபையில் அமர்வது.
அந்த நபித்தோழர்கள் இல்லையென்றாலும் அவர்களுடைய கல்வி இருக்கின்ற காரணத்தால், அவர்களுடைய உபதேசங்கள், அறிவுரைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தால், நான் அவற்றை படிக்கும்போது அந்த ஸஹாபி என்னிடத்தில் பேசுவது போன்று உணர்கிறேன்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா 7/377.
இந்த உணர்வு தான் ஒரு முஃமினுக்கு வர வேண்டும். குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் தன்னோடு பேசுவதாக, ஹதீஸை படிக்கும்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்கு அறிவுரை கூறுவதாக உணர்வு வர வேண்டும்.
இப்படி உணர்பவர்கள் தான் அல்லாஹ்வின் வேதத்தின் மூலமாகவும், நபியின் சுன்னாவின் மூலமாகவும் நற்பலனை பெறுவார்கள்.
யாருக்கோ இறக்கப்பட்டது, யாருக்கோ கூறப்பட்டது என்ற எண்ணத்தில் ஓதுவார்களேயானால், இந்த எண்ணத்தில் படிப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்கள் அதிலிருந்து பயன் பெறமாட்டார்கள்.
ஏதோ பரக்கத்திற்காக, ஏதோ கொஞ்சம் நன்மைக்காக அவர்கள் ஓதியிருக்கலாமே தவிர, நேர்வழியை பெறுவதற்காக தன்னை திருத்திக் கொள்வதற்காக அவர் ஓதியவராக ஆகமாட்டார்.
உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு,யாருடைய ஞானத்தை உலக மக்களெல்லாம் போற்றுகின்றார்களோ, முஸ்லிம்கள் மட்டுமல்ல,மாற்றார்களும் உமரின் ஞானத்தை மெச்சுகின்றார்களே, அந்த உமருடைய வாழ்க்கையே ஞானத்தால், உபதேசங்களால், அறிவுரைகளால் நிரம்பிய ஒன்று.
ஒருமுறை தன்னுடைய மகன் அப்துல்லாஹ்விற்கு உமர் அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது திரும்புவதற்கு கொஞ்சம் நாட்களாகி விட்டன. அப்போது பாசமிகு தந்தை உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு தனது மகனுக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
கடிதத்தில் சில விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். அந்த வாசகங்களை பார்க்கும் பொழுது, நாமெல்லாம் நமது பிள்ளைகளுக்கு என்ன அறிவுரைகளை கூறுகிறோம்? எந்த விஷயங்களை நினைவூட்டுகிறோம்?
உலகத்திற்காக வாழ்பவர்கள் உலகத்தை பற்றி தான் விசாரிப்பார்கள். அவர்களுக்கு மறுமையைப் பற்றி என்ன தெரியும்?
அல்லாஹ் கூறுகிறான்:
يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ
அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் – ஆனால்,அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)
இன்னும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவர்களை கடிந்து கூறுகிறான்:
وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ
ஆனால்,நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.(அல்குர்ஆன் 47:12)
அவர்கள் உண்ணுவார்கள், சுகம் அனுபவிப்பார்கள். கால் நடைகள் சாப்பிடுவதை போல, அள்ளிக் கொட்டிக் கொள்ள தெரியுமே தவிர, மறுமை அவர்களுக்கு தெரியாது. வண்ண வண்ணமாக உடுத்த தெரியுமே தவிர, படைத்த ரப்பை அறியமாட்டார்கள்.
காலை, மாலை, இரவு, பகல் என்று உலகத்தை சேகரிப்பது, அனுபவிப்பது இப்படி தான் ஒரு மிருகத்தைப் போன்ற ஒரு வாழ்க்கையை இறை மறுப்பாளர்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இன்று முஸ்லிம்களிலும் எத்தனை பேர் அதே வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ(இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.)(அல்குர்ஆன் 10:7)
நான்கு குணங்களை அல்லாஹ் கூறுகிறான். யார் நம்மை சந்திக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் இல்லையோ, இந்த உலக வாழ்க்கையில் திருப்தி காணுகிறார்களோ, காசு, பணம், செல்வம் கிடைத்தால் சந்தோஷமாக இருப்பார்கள். வறுமை வந்தால் முகமெல்லாம் சுறுங்கி விடும், உள்ளமெல்லாம் சுறுங்கி விடும்.
செல்வ செழிப்பில் அவர்களுக்கு கிடைக்கின்ற இன்பம்இபாதத்தில் உணரமாட்டார்கள். உலக இன்பங்களை சுவைக்கும் போது அவர்களுடைய உள்ளத்தில் ஏற்படுகின்ற புத்துணர்ச்சி குர்ஆன் ஓதும்போதோ, திக்ர் செய்யும்போதோ, இபாதத் செய்யும்போதோ, அவர்களுக்கு ஏற்படாது.
ஒரு செத்த பிணத்தை போன்று இபாதத்தில் இருப்பார்கள். துன்யாவில் சென்றால் அவர்களுக்கு உயிர் வந்துவிடும்.
எத்தனை பேருக்கு கடையில் மணி கணக்காக நிற்பதில் கால் வலி தெரியாது. தனது தொழிலுக்காக நீண்ட தூரம் நடந்து செல்வதில் வலியை உணரமாட்டார்கள். தன்னுடைய வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதில் அவர்களுக்கு சிரமம் தெரியாது.
ஆனால், தொழுகைக்கு முன் கூட்டி வருவதென்றால் சிரமமாக தெரியும். அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் தொழுகையில் நிற்பதென்றால், ஏதோ மலையை தலையின் மீது தூக்கி சுமந்து கொண்டு நில் என்று கூறியதை போன்று அவர்களுக்கு அவ்வளவு சோம்பலாக, வலியாக, சுமையாக தெரியும்.
வெட்டிப் பேச்சு பேசுவதில் இன்பம் காணுவார்கள். குர்ஆனை திறந்து பத்து நிமிடம் படித்தால் கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள்.
இவையெல்லாம் ஈமான் செத்து விட்டதற்குண்டான காரணங்கள் அல்லது அடையாளங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இந்த நான்கு தன்மைகளை கூறி அல்லாஹ் கூறுகிறான்; இந்த நான்கு தன்மைகள் யாரிடத்தில் இருக்கும, அவர்கள் நரகவாசிகள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அன்பானவர்களே! மறுமைக்காக வாழ வேண்டும், மறுமையை முன்னிருத்தி வாழ வேண்டும். உலகத்தை புறக்கணித்து அல்ல. உலகத்தை தேடும்போதும் மறுமையை மறக்காமல் வாழ வேண்டும்.
உலகத்திற்கு சம்பாதிக்கும்போதும் மறுமைக்குண்டான ஹக்கை மறக்காமல் இருக்க வேண்டும்.
وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا
எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! (அல்குர்ஆன் 28:77)
இந்த உலகத்திலிருந்து நீ மறுமைக்கு எடுத்து செல்ல வேண்டிய பங்கை மறந்து விடாதே! நீங்கள் கட்டிய கட்டிடம் உங்களோடு கப்ருக்கு வராது. நாம் சேர்த்து வைத்திருக்கின்ற செல்வம் நம்மோடு கப்ருக்கு வராது. அதிலிருந்து அல்லாஹ்வுடைய ஹக்கை நாம் கொடுத்தோம் அல்லவா, அது தான் நம்மோடு கப்ருக்கு வரும்.
நாம் சேகரித்த செல்வத்திலிருந்து ஜகாத்தாக கொடுத்ததும், ஸதகாவாக கொடுத்ததும், நன்மைகளுக்காக கொடுத்ததும் தான் நம்மோடு கப்ருக்கு வரும்.
இங்கே கலீஃபா உமர் அவர்கள், மகனே! நீ எப்படி இருக்கிறாய், உனக்கு என்ன தேவை இருக்கிறது. அங்கே இருக்கக் கூடிய கவர்னருக்கு உன்னைப் பற்றி நான் சொல்லட்டுமா? ஏதாவது வசதி தேவைப்படுகிறதா? அதுவெல்லாம் கேட்கவே இல்லை.
உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: மகனே! அல்லாஹ்வை பயந்தவரை அல்லாஹ் பாதுகாப்பான். நானோ, எனது ராணுவங்களோ, கவர்னர்களோ உன்னை பாதுகாக்க முடியாது.
நீ எங்கிருந்தால் எனக்கென்ன? அல்லாஹ்வை பயந்து வாழ், அல்லாஹ் உன்னை பாதுகாப்பான்.
ஷுதூருல் அமாலி,ஹதீஸ் எண் : 6
எப்படிப்பட்ட ஆழமான அறிவுரை பாருங்கள். நமது பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய முதல் அறிவுரை.அல்லாஹ்வை பயந்து வாழ்பவரை அல்லாஹ் பாதுகாப்பான்.
இன்று பிஞ்சு உள்ளங்களிலிருந்தே இந்த தக்வா என்ற விதை விதைக்கப்பட வேண்டும். நமது குழந்தைகளின் உள்ளங்களில் நாம் திரும்ப திரும்ப கூற வேண்டிய ஒரு அறிவுரை இருக்கிறதென்றால் அது தக்வா தான்.
லுக்மான் அல் ஹகீம் தனது மகனுக்கு கூறுகிறார்கள்:மகனே! நீ செய்கின்ற தீமை வானத்தில் இருந்தாலும் சரி,அல்லது மலைகளுக்கு அப்பால் இருந்தாலும் சரி,அல்லாஹ் அதை மறுமையில் கொண்டு வந்து விடுவான்.
يَابُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.(அல்குர்ஆன் 31 : 16)
எப்படிபட்ட அறிவுரைகளை எத்தகைய இறையச்சங்களை உள்ளத்தில் விதைத்தார்கள்.
இன்று,நாம் அந்த பிஞ்சு உள்ளங்களில் துன்யாவின் மோகத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். துன்யாவின் காட்சிகளை காட்டிக் கொண்டே இருக்கிறோம். செல்வ மோகத்தை அந்த பிஞ்சு உள்ளத்திலேயே விதைக்க ஆரம்பித்து விடுகிறோம்.
ஆகிரத் மீது உண்டான பயத்தையும், சொர்க்கத்தின் மீது உண்டான ஆர்வத்தையும், நரகத்தின் மீது உண்டான பயத்தையும், அல்லாஹ்வின் தண்டனையின் பயத்தையும் உள்ளத்தில் விதைப்பதற்கு பதிலாக துன்யாவை பற்றி உண்டான அத்தனை விஷயங்களையும் கச்சிதமாக உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறோம்.
உமர் அவர்கள் கூறுகிறார்கள்:மகனே! உண்மை என்ன தெரியுமா? உன்னை பார்த்து நீண்ட காலம் ஆகி விட்டது. நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய், என்ன உடுத்துகிறாய், என்ன சாப்பிடுகிறாய், உனக்கு என்ன நேர்ந்தது என்பதைப்பற்றி கேட்கவில்லை.
அவற்றை விட எனக்கு முக்கியமானது,நீ மதினாவிலிருந்து தூரமாக இருக்கின்றாயே, உனது தந்தையின் கண் பார்வையிலிருந்து தூரமாக இருக்கின்றாயே, உன்னுடைய தக்வா எப்படி இருக்கிறது?
நபியின் தோழராகிய நீ, அதே தக்வாவில் இருக்கின்றாயா? அது தான் உன்னை பாதுகாக்கிறது.
ஷுதூருல் அமாலி,ஹதீஸ் எண் : 6
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது மகளை அழைத்து கூறினார்கள்;
ஃபாத்திமாவே! அல்லாஹ்வை பயந்து கொள். என் சொத்தில், செல்வத்தில் எதை வேண்டுமானாலும் கேள். ஆனால், மறுமையில் நான் உனக்கு எப்பலனையும் கொடுக்க முடியாது. அல்லாஹ்வின் தண்டனையில் எதையும் நான் உனக்கு தடுத்துவிட முடியாது.
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
தனது செல்லமாக வளர்த்த ஸஃபிய்யாவை அழைத்து கூறுகிறார்கள்;
அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அல்லாஹ்வை பயந்து கொள். இந்த உலக செல்வங்களில் நீ வேண்டியதை கேட்டுக் கொள். மறுமையில் நான் உனக்கு எதுவும் செய்ய முடியாது.
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
உமர் அவர்கள் கூறுகிறார்கள்;அல்லாஹ்வை பயந்தவரை அல்லாஹ் பாதுகாப்பான்.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பதற்குண்டான அடிப்படை இலக்கனத்தைதக்வாவில் வைத்திருக்கிறான். தக்வா இல்லாத முஃமின்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் குர்ஆனில் ஒரு கண்ணோட்டமிடுங்கள். எங்கெல்லாம் அல்லாஹ் போரைப் பற்றி கூறுகிறானோ, அங்கெல்லாம் தக்வாவை பற்றி கூறுகிறான்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஜிஹாதுகள் பத்ருப் போர், உஹதுப் போர், அஹ்ஸாப் போர், ஹுனைன் யுத்தம், பத்ஹே மக்கா, ஹுதைபிய்யா என்ற போர்களை அல்லாஹ் தஆலா சூரா அன்னிஸாவில், சூரா ஆல இம்ரானில், தவ்பாவில், அன்ஃபாலில், முஹம்மதில், அல் ஃபத்ஹில் இப்படி அல்லாஹ் கூறியிருக்கிறான்.
இந்த சூராக்களை எல்லாம் ஒரு முறை படித்து பாருங்கள். போரைப் பற்றி, யுத்தத்தை பற்றி அல்லாஹ் கூறியிருக்கக் கூடிய அத்தனை இடங்களின் தொடக்கத்தில் அல்லது இறுதியில் அல்லது நடுவில் கண்டிப்பாக அல்லாஹ் தக்வாவை கூறியிருப்பான்.
தக்வா இருந்தால் உங்களுக்கு உதவிக்கு நான் வானவர்களை அனுப்புவேன். உங்களிடத்தில் இறையச்சம் இருந்தால் நான் உங்களை கைவிட மாட்டேன். நீங்கள் அல்லாஹ்வை பயந்துக் கொண்டால், நீங்கள் பயப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம்.
இந்த தக்வாதான் முஃமின்களின் பாதுகாப்பு. முஃமின்களின் பாதுகாப்பு உலக பொருளாதாரத்திலோ, இந்த உலக விஷயங்களிலோகிடையாது.
அடுத்து கூறினார்கள்; யார் தனது பொறுப்பை அல்லாஹ்வின் மீது ஒப்படைத்து விட்டாரோ, அல்லாஹ்வை சார்ந்து விட்டாரோஅவருக்கு அல்லாஹ் போதுமானவன். அவருடைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான்.
ஷுதூருல் அமாலி,ஹதீஸ் எண் : 6
இன்று படித்தவர்கள் தனது படிப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அனுபவசாலிகள் தனது அனுபத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தின் மீது, கல்வியாளர்கள் தங்களின் கல்வியின் மீது இப்படி மனிதன் தன் மீது தவக்குல் வைத்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் அதனுடையே அவர்களை விட்டு விட்டான்.
நீ யாரின் மீது தவக்குல் வைத்தாயோ, யாரை சார்ந்தாயோ, அவரிடத்தில் உன் தேவையை கேட்டுக்கொள்.
துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், அல்லாஹ்விடமிருந்து நமக்கு உதவி வரவேண்டுமென்றால், அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய உதவியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3:160)
அல்லாஹ்வை மறந்து விட்டார்கள், தலைவர்களை நினைக்கிறார்கள், மாற்றார்களை எண்ணுகிறார்கள், அவர் இவரென்று எத்தனையோ பேரிடத்தில் அணுகுகிறார்கள். அல்லாஹ்வை நெருங்குவதை, அல்லாஹ்வை சார்ந்திருப்பதை விட்டு விட்டார்கள்.
அதற்காக உலகத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸபபாக ஆக்கியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை.
எப்படி உலக மக்கள் இந்த உலகத்தைக் கொண்டே உலகத்தின் வெற்றியை அடைந்து விடலாம், இந்த உலகத்தை கொண்டே உலக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற பாதையில் இருக்கிறார்களோ, அதே பாதைகளில் தான் முஸ்லிம்களும் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், குர்ஆனுடைய நூற்றுக் கணக்கான வசனங்கள் இப்படி கூறுகின்றது.
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று.m (அல்குர்ஆன் 5:23)
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
மேலும், எவர்அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோஅவருக்கு அவன் போதுமானவன். (அல்குர்ஆன் 65 : 3)
பாலைவனத்தில் தண்ணீரை கொடுப்பதற்கு அல்லாஹ்வால் முடியும்.அன்னை ஹாஜருக்கும் இஸ்மாயிலுக்கும் மட்டுமல்ல. அந்த தவக்குலில் யார் இருந்தாலும் அல்லாஹ் அவர்களுக்கும் கொடுப்பான்.
ரஸூலுல்லாஹ்வுடைய காலத்தில், நபித்தோழர்களில் ஒரு ஸஹாபிய பெண் ஹிஜ்ரா செய்து தன்னந்தனியாக வருகிறார்கள்.
எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும்! எங்கே செல்வது?எப்படி செல்வது?ஒரு பெண்ணால் எவ்வளவு தூரம் தொடர்ந்து நடக்க முடியும். கடுமையான தாகத்திற்கு ஆளான அந்த பெண், தனது ரப்பை அழைக்கிறாள்.
யா அல்லாஹ்! நீ எனக்கு தண்ணீர் கொடு என்று. வானத்திலிருந்து ஒரு வாளி எனக்கு முன்னால் வந்தது. அதனுடைய நீரை நான் குடித்தேன். அப்படிப்பட்ட நீரை இதற்கு முன்னும் நான் குடித்தது இல்லை, பிறகும் குடித்ததில்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து கூறுகிறார்கள். அதற்கு, அல்லாஹ் உனக்கு நீர் புகட்டினான் என்று கூறினார்கள்.
ஹில்யதுல் அவ்லியா 2/66.
அல்லாஹு தஆலா பத்ரில் ஸஹாபாக்களுக்கு முன்னால் உதவி செய்த அல்லாஹ் இன்றும் இருக்கிறான். பத்ரு ஸஹாபாக்கள் இறந்து விட்டார்கள், அவர்களுக்கு உதவி செய்த அல்லாஹ் இறக்கவில்லையே!
உஹது ஸஹாபாக்களுக்கு உதவி செய்த அல்லாஹ் இன்றும் உயிரோடு இருக்கிறான். உஹது ஸஹாபாக்கள் இறந்துவிட்டார்கள், அல்லாஹ் இறக்கவில்லையே!
அல்லாஹ் தஆலா நாடினால், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வைத்து பாதுகாப்பான்.
நபித் தோழர்களின் ஒரு குழு அவர்களை அழைத்துச் சென்ற காஃபிர்கள், வஞ்சகமாக அவர்களை கைது செய்து விடுகிறார்கள், சிலரை கொலை செய்து விடுகிறார்கள். அவர்களிடமிருந்து சண்டை செய்து தப்பித்த ஸஹாபாக்கள் மலை உச்சியில் ஏறிக் கொள்கிறார்கள்.
திரும்ப சண்டை நடக்கிறது, அந்த சண்டை நடக்கும்போது, அந்த நபித்தோழர் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்.
யா அல்லாஹ்! நான் இஸ்லாமை ஏற்றதிலிருந்து இந்த ஷிர்க்கை வெறுக்கிறேன். எனது உடலின் மீது ஒரு முஷ்ரிக்குடைய கரம் படக்கூடாது, நான் செத்துவிட்டாலும் சரியே.
பிறகு, அவர் கொல்லப்படுகிறார், அவருடைய உடலை எடுத்து சிதைத்து சின்னாப்பின்னமாய் ஆக்குவதற்காக காஃபிர்கள் நெருங்கும்பொழுது, தேனீக்களின் ஒரு பெரும் கூட்டத்தை அல்லாஹ் அனுப்புகிறான், நெருங்க முடியவில்லை.
சரி, மாலை வரை பொறுத்திருப்போம், இந்த தேனீக்கள் சென்று விட்டால் பிறகு அவருடைய உடலை எடுப்போம் என்பதாக காத்திருக்கிறார்கள்.
மாலை நெருங்க நெருங்க பெரும் மழையை அல்லாஹ் இறக்குகிறான். அந்த ஜனாஸா எங்கே சென்றது என்றே தெரியவில்லை.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3989.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்களை நீங்கள் ஹதீஸுடைய வரலாறுகளை எடுத்து படித்துப் பாருங்கள். அவர்கள் அல்லாஹ்வை சார்ந்திருந்தார்கள்.
குபைப் இப்னு அதி ரழியல்லாஹுஅன்ஹு அவர்களைகுரைஷிகளெல்லாம் ஒன்று சேர்ந்து கொல்வதற்கு நிற்கும்பொழுது, அவர் கூறுகிறார். இரண்டு ரக்அத் தொழுது கொள்கிறேன், பிறகு அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.
யா அல்லாஹ்! நான் இன்று ஒரு அநாதையாக, உனது நபியிடமிருந்து தூரமாக தனியாக கொல்லப்படுகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்று எனது நபிக்கு தெரியாது. எனது ஸலாமையும் சொல்லு, எனது நிலையையும் உனது நபிக்கு எடுத்து சொல்.
அதே நேரத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தன்னுடைய தூதருக்கு வஹியின் மூலமாக இந்த காட்சிகளை காட்டுகிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்: குபைப் கொல்லப்படுகிறார் என்று.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3989.
இது தவக்குல், அவர்கள் அல்லாஹ்வை சார்ந்திருந்தார்கள், அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அந்த தவக்குலுடைய பலன் என்பதை மறக்கக்கூடாது.
உமர் ஃபாரூக் கூறினார்கள், யார் அல்லாஹ்வை சார்ந்து விட்டார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ
அல்லாஹ்,அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? (அல்குர்ஆன் 39:36)
وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை.(அல்குர்ஆன் 63 : 7)
வானம் பூமியின் அத்தனை கஜானாவும் அவனிடத்தில் இருக்கிறது. கண்ணியம்,ஆட்சி,அதிகாரம்,பாதுகாப்பு அவனிடத்தில் இருக்கிறது.
அல்லாஹ் நாடியவருக்கு செல்வத்தை கொடுப்பான், நாடியவரிடமிருந்து செல்வத்தை அல்லாஹ் பிடுங்கி விடுவான். நாடியவருக்கு கண்ணியத்தை கொடுப்பான், நாடியவருக்கு இழிவை கொடுப்பான். நாடியவருக்கு ஆட்சியை கொடுப்பான், நாடியவரை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கும் அல்லாஹ் வல்லவன்.அவனுக்கு எதற்கும் நேரம் தேவையில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.(அல்குர்ஆன் 36:82)
நீ எத்தனை ஆண்டுகள் அந்த நாற்காலியை கட்டி ஆண்டாலும் உனது ஆட்சியை வீழ்த்துவதற்கு அல்லாஹ்வுக்கு நேரமாகாது. உன்னையும் பாதுகாப்பவன், உனது ஆட்சியையும் பாதுகாப்பவன், உனது ஆட்சியிலுள்ள மக்களையும் பாதுகாப்பவன் அல்லாஹ்தான்,நீ பாதுகாப்பவன் அல்ல.
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வாழ் என்று உமர் அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்கள். அல்லாஹ்விற்கு நன்றி உணர்வோடு கிடைக்கக் கூடிய நிஃமத் சிறியதாக இருக்கட்டும், பெரியதாக இருக்கட்டும். உடனே, அதற்கு தலை குனிந்து, உணர்ந்து மனப்பூர்வமாக, 'அல்ஹம்துலில்லாஹ்' அல்லாஹ் எனக்கு கொடுத்தான் என்ற நன்றி உணர்வை நீங்கள் அல்லாஹ்விற்கு வெளிப்படுத்துங்கள்.
அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையில் எப்படி பரக்கத்துகளை பொழிகிறான் என்பதை பாருங்கள்.
நூஹ் நபியை பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி (க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.(அல்குர்ஆன் 17:3)
முஃபஸ்ஸிர்கள் பதிவு செய்கிறார்கள். அப்படி என்ன அவர்கள் நன்றி செலுத்தினார்கள் என்றால், ஒரு மிடக்கு தண்ணீரை குடித்தால் கூட,உணர்ந்து அல்ஹ்துலில்லாஹ். -அல்லாஹ் இந்த தண்ணீரை நீ கொடுத்தாய் என்று அல்லாஹ்வை புகழ்பவர்களாக இருந்தார்கள்.
இன்று நமது நிலை,கட்டுக்கட்டாக பார்த்தால்,அல்ஹம்துலில்லாஹ் -அல்லாஹ் எனக்கு பரக்கத் செய்து விட்டான். கொஞ்சம் குறைந்து விட்டால் அல்லாஹ்வை ஏசிவிடுவார்கள்.
போன மாதம் மாதிரி இந்த மாதம் கொஞ்சம் சுறுசுறுப்பாக இல்லை, வியாபாரம் சரியில்லை. நானும் தொழுது துஆ தான் செய்தேன், அல்லாஹ் இந்த மாதம் நம்மை கவனிக்கவில்லை என்று புலம்புவார்கள்.
இது குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான். (அல்குர்ஆன் 89:15,16)
வசனத்தின் கருத்து : காஃபிரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருந்தால், செல்வத்தை கொட்டிக் கொண்டேயிருந்தால் அவன் கூறுவான், என் கடவுள் என்னை நன்றாக வைத்திருக்கிறார் என்று.
அவனது வாழ்வாதாரத்தை குறைத்து விட்டால் அவன் கூறுவான், என் கடவுள் என்னை கைவிட்டு விட்டான் என்று.
இந்த வார்த்தையை முஃமின்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். தொழுகையாளிகளும் பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து அல்லாஹ் உனக்கு அதிகமாக கொடுப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்:
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன். (அல்குர்ஆன் 14:7)
இந்த இடத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தை நாம் ஞாபகம் வைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முறை வீட்டிற்கு வருகிறார்கள்.
அங்கே ரொட்டித் துண்டின் ஒரு பகுதி வீட்டின் ஓரத்தில் கிடக்கின்றது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தவுடன் அந்த ரொட்டித் துண்டின் மீது அவர்களது கண் பார்வை படுகிறது.
மிகவும் பணிவாகச் சென்று அந்த உணவை எடுத்தார்கள். பிறகு அது கெட்டுவிட்டதா? அல்லது நன்றாக இருக்கிறதா? என்று தனது மூக்கிற்கு அருகில் வைத்து நுகர்ந்து பார்த்தார்கள்.
அது நன்றாகத் தான் இருக்கிறது என்று தெரிந்த உடனே, அதன் மேல் உள்ள தூசிகளை தட்டிவிட்டு பிஸ்மில்லாஹ்என்று கூறி சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு விட்டு, தனது அன்பு மனைவி ஆயிஷாவை அழைத்து கூறினார்கள்.
«يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمًا، فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ، فَعَادَتْ إِلَيْهِمْ»
ஆயிஷா!அல்லாஹ்வுடைய அருளுக்கு நன்றி செலுத்தி பழகிக் கொள். அல்லாஹ்வுடைய நிஃமத்தை மதித்து பழகிக் கொள்.
அல்லாஹ்வுடைய நிஃமத்தை நீ மதிக்கவில்லையென்றால், அது உன்னை விட்டு சென்று விடும். அது உன்னை விட்டு சென்று விட்டால் திரும்ப வராது.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 3353.
இன்று நாம் சட்டி சட்டியாக உணவுகளை வீணடிக்கின்றோமே, அண்டா அண்டாவாக உணவுகளை கொட்டுகின்றோமே, யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு ரொட்டித் துண்டை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய ரிஸ்க் என்று எப்படி மதித்தார்கள். அதற்கு அறிவுரை கூறினார்கள்.
இன்று நமக்கு குறைவு என்னவென்றால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது தான். அல்லாஹ் நமக்கு கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். ஆனால், நாம் நன்றி செலுத்துவதில்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ»
மார்க்க விஷயத்தில் உங்களுக்கு மேல் உள்ளவர்களை பாருங்கள். துன்யா விஷயத்தில் உங்களுக்கு கீழ் உள்ளவர்களை பாருங்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2963.
நாம் அப்படியே தலைகீழாக வைத்திருக்கிறோம். ஒரு தொழுகையில்லாதவரைப் பார்த்து மஸ்பூக்காக வரக்கூடியவர் திருப்தியடைகிறார். செல்வத்திற்கு ஜகாத் கொடுக்காதவரைப் பார்த்து பராவில்லை, நான் ஜகாத்தாவது கொடுக்கிறேனேஎன்பதாக நினைக்கிறார்.
ஆனால், துன்யா என்று வந்துவிட்டால், தன்னை விட மேலுள்ளவர்களை பார்க்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் துன்யாவில் கீழுள்ளவர்களை பாருங்கள். தீனில் மேலுள்ளவர்களை பாருங்கள் என்று கூறினார்கள்.
ஸஹாபாக்களுக்கு மத்தியில் போட்டி அப்படித் தான் இருந்தது. இன்று நமக்கு மத்தியில் தீனில் நம்முடைய பார்வை இல்லாததால் துன்யாவில் போட்டியிருக்கிறது, தீனில் போட்டியிருப்பதில்லை.
அல்லாஹ்வுடைய நிஃமத்திற்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பது என்றால் என்ன? அந்த செல்வத்தை நாம் ஏழைகளுக்கு கொடுப்பது. அதை நாம் மட்டுமே அனுபவிப்பது அல்ல.
அல்லது செல்வம் கிடைக்கும் பொழுது 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறிவிட்டு ஹராமில் செலவழிப்பது அல்ல. அந்த நிஃமத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறிய இடங்களில் அல்லாஹ் கூறியவர்களுக்கு அதை செலவு செய்வது.
எனவே தான், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் கூறினார்கள்:
«مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَال»
தர்மம் செல்வத்தை குறைத்ததே கிடையாது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2588.
தர்மம் செய்வதற்கு அஞ்சிய பலர், அல்லாஹ்வுடைய பாதையில் கொடுப்பதற்கு அஞ்சிய பலர், எத்தனையோ வழிகளில் நஷ்டமடைந்து ஓன்டியானதை பார்க்கிறோம். இல்லாதவர்களாக, தேவையுள்ளவர்களாக மாறியதை நாம் பார்க்கிறோம்.
அல்லாஹ்வுக்காக சில ஹக்குகள் கேட்கப்பட்டன, அதை கொடுப்பதற்கு சிரமப்பட்டார்கள். அதை கொடுப்பது அவர்களுக்கு வலியாக இருந்தது. ஆனால், அல்லாஹ்வுடைய சோதனை வந்துவிட்டால், எதுவுமே மிஞ்சாது.
சூரத்துல் கலம் என்ற அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். தந்தை வாழ்ந்த காலமெல்லாம் தனது தோட்டத்தின் செல்வத்தை மூன்றாக பிரித்தார். ஒன்று தர்மத்திற்காக, ஒன்று குடும்பத்திற்காக, இன்னொன்று அடுத்த விவசாயத்திற்காக.
ஏழைகளுக்கு கொடுத்து விட்டுதான் அந்த செல்வங்களை, பழங்களை, விவசாயத்தின் விளைச்சல்களை வீட்டிற்கே கொண்டு செல்வார்.
தந்தை இறந்துவிட்டார்.மூன்று பிள்ளைகள் பேசிக்கொண்டார்கள். தந்தை இப்படிதான், செல்வத்தை விளைச்சலை எல்லாம் கொடுத்து கொடுத்து நமக்கு ஒன்றும் பெரியதாக சேர்த்து வைக்கவில்லை.
எனவே, இரவே போய் விளைச்சல்களையெல்லாம், பழங்களையெல்லாம் அறுவடை செய்து வந்துவிடுவோம்.
காலையில் போனால் தானே, இந்த ஏழைகளுக்கு தெரிய வரும். அவர்கள் பேசிக் கொண்டார்கள்;
أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ
எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).(அல்குர்ஆன் 68:24)
தோட்டத்திற்கு சென்று பார்த்தால், தோட்டம் நமது தோட்டம் இல்லையே, மாறி வந்துவிட்டோமே என்று எண்ணுகிறார்கள்.
அப்போது ஒருவர் கூறினார்;இல்லை வந்த பாதை சரி தான், இது தான் நமது தோட்டம், எல்லாம் எறிந்திருக்கிறது, எறிந்து நாசமாகிவிட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதன் மீது நெருப்பை சாட்டிவிட்டான், கறிந்து சாம்பலாகிவிட்டது.
தஃப்சீர் தபரி 23/543.
அடுத்து உமர் அவர்கள் ரழியல்லாஹுஅன்ஹுகூறினார்கள்:
அல்லாஹ்விற்கு நீ கடன் கொடு, அல்லாஹ் உனக்கு அந்த கடனை அழகிய முறையில் திருப்பித் தருவான்.
அல்லாஹ் கூறுகிறான்:
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ
அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.(அல்குர்ஆன் 57 : 11)
அல்லாஹ்விற்கு கொடுக்கும்பொழுது கண்டிப்பாக அல்லாஹ் இம்மையிலும் கொடுப்பான், ஆகிரத்திலும் கொடுப்பான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் சொன்னார்கள்:
" مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا "
ஒவ்வொரு நாள் காலையிலும் இரண்டு மலக்குகள் வருகிறார்கள்.ஒரு மலக்கு துஆ செய்கிறார்கள்.
யா அல்லாஹ்! தர்மம் செய்பவர்களுக்கு நல்ல பகரத்தை, பிரதிபலனை கொடுத்துக் கொண்டே இரு. இன்னொரு மலக்கு துஆ செய்கிறார், கொடுக்காமல் கைகளை கட்டிக் கொள்பவருக்கு நாசத்தைக் கொடு!
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1442.
அடுத்து உமர் அவர்கள் கூறினார்கள்; மீண்டும் தக்வாவிற்கு வந்தார்கள். இப்னு உமரே! தக்வாவை உனது கண் பார்வையின் வெளிச்சமாக, உனது முதுகின் தூணாக ஆக்கிக் கொள்.
உன்னுடைய பார்வை சரியாக இருக்க வேண்டுமென்றால், உன்னுடைய இலட்சியம் சரியாக இருக்க வேண்டுமென்றால்தக்வா உன்னிடத்தில் சரியாக இருக்க வேண்டும்.
இன்று, நம்முடைய தலைவர்களுக்கு தக்வா இல்லை. நம்முடைய அறிஞர்களுக்கு தக்வா இல்லை. எனவே, அவர்களுடைய விஷன் சரியாக இருப்பதில்லை. சமுதாயத்தை அவர்கள் வழி நடத்துவது சரியாக இருப்பதில்லை.
உன்னுடைய முதுகை தூணாக ஆக்கிக் கொள். நீ நிமிர்ந்து நிற்க வேண்டுமா? கண்ணியத்தோடு தலை நிமிர்ந்து செல்ல வேண்டுமா? தக்வாவின் அடிப்படையில் முடிவெடு, அல்லாஹ்வின் பயத்தின் அடிப்படையில் முடிவெடு.
ஷுதூருல் அமாலி,ஹதீஸ் எண் : 6
நம்முடைய முன்னோர்களைப் பற்றி இமாம் ஹஸன் பஸரி கூறுகிறார்கள்: நம்முடைய முன்னோர்கள், (அதாவது ஸஹாபாக்கள் தாபியீன்கள்)எத்தனையோ ஹலாலான விஷயங்களை ஹராம் வந்து விடுகிறது என்ற காரணத்தால் விட்டு விடுவார்கள்.
கிதாபுஸ் ஸுஹ்த் 1787, 1459.
ஆனால், இன்றைய நமது நிலையோ, ஹராமென்று தெரிந்து கொண்டும் அதையே நெருங்குகிறார்கள். அதற்காக எத்தனையோ ஃபர்ளுகளை வீணடித்தாலும் சரி,ஹராம் என்று தெரிந்தும் அந்த ஹராமை செய்யத் துணிகின்றார்கள். அதற்காக எத்தனை ஃபர்ளுகளை வீணடித்தாலும் சரியே! அல்லாஹ் பாதுகாப்பானாக!
மேலும் உமர் அவர்கள் ரழியல்லாஹுஅன்ஹுகூறினார்கள்:அல்லாஹ்வுக்கு என்று நிய்யத் இல்லாமல் நீ அமல் செய்வதால் எந்த பலனும் இல்லை. நீ நற்கருமங்களை, நல்ல அமல்களை சேர்க்காமல் மறுமையில் கூலி கிடைக்கும் என்று எண்ணிவிடாதே!
அன்பானவர்களே! உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த அறிவுரை, அவர்கள் தங்களுடைய மகனுக்கு கூறியிருந்தாலும், அது ஒரு உம்மத்திற்காக கூறப்பட்ட அறிவுரை.
இந்த காலத்தில் வாழக்கூடிய நமக்காகவும் கூறப்பட்ட அறிவுரை. தக்வாவுடைய அறிவுரை, தவக்குல் உடைய அறிவுரை, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டுமென்ற அறிவுரை, அல்லாஹ்விற்காக ஏழைகளுக்கு கொடுத்து வாழ வேண்டுமென்ற அறிவுரை.
இப்படி ஒவ்வொரு அறிவுரையும் நாம் படித்து, படிப்பினை பெற வேண்டும். அவற்றை நாம் உணர வேண்டும். அல்லாஹ்விடத்தில் துஆ கேட்க வேண்டும். யா அல்லாஹ்! இத்தகையை நற்பண்புகளை எங்களுக்கு தா என்று.
நம்முடைய அழகை வைத்தோ, அறிவை வைத்தோ, நம்முடைய இந்த வாழ்க்கையின் செல்வங்களை வைத்தோ, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை எடை போடுவது கிடையாது.
நம்முடைய உள்ளம் எப்படி இருக்கிறது? நம்முடைய அமல் எப்படி இருக்கிறது? அல்லாஹ்வுடைய இபாதத் எப்படி இருக்கிறது?தக்வா எப்படி இருக்கிறது?அதற்கேற்ப தான் அல்லாஹு தஆலா முடிவுகளை இறக்குகிறான்.
நம்முடைய அமல்கள் இங்கிருந்து மேல் செல்கின்றன, அந்த மேல் செல்வதற்கு ஏற்ப அல்லாஹ் முடிவுகளை எடுக்கிறான்.
ஆகவே, சோதனைகள் வரும்பொழுது கண்டிப்பாக முஸ்லிம்களாகிய நாம், நம்முடைய அமல்களை சீர்தூக்கி பார்க்கக் கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்முடைய அமல்களை சரி செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படாது.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் மன்னிப்பானாக! நம்முடைய குறைகளை சீர்திருத்தம் செய்வானாக! நல்ல வாழ்க்கையை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹு தஆலா நஸீபாக்குவானாக!
நம்முடைய குறைகளை நீக்கி, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடைய இந்த தீனை பின்பற்றக்கூடிய நன்மக்களில் நம்மை ஆக்கியருள்வானாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஸ்லிம்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் உடல், பொருள், உயிர், தீனை பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/