HOME      Khutba      கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களின் அறிவுரைகள் (ரழி) (அமர்வு 1-3) | Tamil Bayan - 442   
 

கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களின் அறிவுரைகள் (ரழி) (அமர்வு 1-3) | Tamil Bayan - 442

           

கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களின் அறிவுரைகள் (ரழி) (அமர்வு 1-3) | Tamil Bayan - 442


கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் அறிவுரைகள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் அறிவுரைகள் (அமர்வு 1-3)

வரிசை : 442

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 28-10-2016 | 27-01-1438

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் நிலவட்டும் என்று துஆ செய்தவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அன்பையும் அருளையும் நல்ல முடிவையும் மறுமையின் நிரந்தர வெற்றியையும் இறைஞ்சியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனை பயந்து வாழ்கின்ற நல்ல மக்களில் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!

இந்த நாட்டில் நடக்கின்ற ஒரு பெரிய பிரச்சனை பொது சிவில் சட்டம். இதைப் பற்றி இங்கு பேசப்படுவதில்லையே, இதைப்பற்றிய கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்குமே, என்று பலர் நினைப்பதுண்டு.

சுருக்கமாக சில விஷயங்களை நான் இந்த இடத்தில் நினைவூட்டிக் கொள்ள விரும்புகிறேன். இன்றைய நமது நிலையை பொருத்தவரை நம்மில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய சட்டங்களை வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். முஸ்ஸிம்கள் தங்களுடைய பிரச்சனைகளை தங்களுக்குள் தீர்த்து கொள்கின்ற மனப்பக்குவத்தை விட்டு விட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு அவர்களுடைய ஜமாஅத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. எந்த மஸ்ஜிதிற்கு எந்த ஜமாஅத்திற்கு சென்றால் நமக்கு நீதம் கிடைக்கும்?நமக்கு நியாயம் வழங்குவார்கள்? அங்கே நீதம் நேர்மையின் படி சட்டம் சொல்வதற்கு அறிஞர்கள் இருக்கிறார்களா?நம்பிக்கை வைக்க கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா?என்று மக்கள் நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள்.

இன்னும் பல விஷயங்களில் முஸ்லிம்களே இஸ்லாமிய சட்டத்தை எதிர்க்கின்றவர்களாகவும், மறுக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்த பொது சிவில் சட்டத்தில் தலாக்காக இருக்கட்டும், குலா முறையிலாக இருக்கட்டும். முஸ்லிம்களுக்கு தலாக் என்றால் என்னவென்று தெரியவில்லை.

திருமணம் முடிக்கின்ற கணவன், மனைவி தலாக் பற்றிய சட்டங்களை அவர்கள் தெரிந்திருக்கிறார்களா? அதற்குரிய ஒழுக்கங்கள் என்ன? எந்த நேரத்தில் தலாக் கொடுக்கலாம், எந்த நேரத்தில் குலா கேக்கலாம் என்ற விளக்கங்கள் அவர்களுக்கு ஏதாவது தெரியுமா?

அதை சொல்லித் தருவதற்காவது அவர்களிடத்தில் சரியான அறிஞர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்றால் இல்லை.

பிரச்சனை என்றால் போவார்கள். அதுவும் தான் விரும்புகின்றபடி தீர்ப்பு எங்கே கிடைக்குமோ அதுவரை தீர்ப்பின் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எங்குமே இவர்கள் விரும்பிய படி இவர்களுக்கு தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால், கடைசியாக கோர்ட்டுக்கு சென்று விடுவார்கள்.

சொத்துரிமை விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு சொத்து சரியாக பங்கு வைக்கப்படுகிறதா? சொத்து பங்கு வைக்கப்படக்கூடிய முறை என்ன? ஒழுக்கம் என்ன? எப்பொழுது ஒரு மனிதனுடைய சொத்து பங்கு வைக்கப்பட வேண்டும்? என்பதைப்பற்றிய கல்வி நம்மிடம் இல்லை.

இன்று, அம்மா உயிராக இருக்கும்போதேஅம்மா செத்துவிடமாட்டாளா? அவளுடைய சொத்தை பறித்துக் கொள்வோமா? உனக்கு இந்த வயோதிகக் காலத்தில் சொத்து எதற்கு?  நீ வாழும்பொழுதே எங்களுக்கு பிரித்துக் கொடுத்து விடு என்று தனது தாய் தந்தையை நிர்பந்திக்கக் கூடிய அளவுக்கு பிள்ளைகளுடைய மனப்பக்குவம் இருக்கிறது.

நமது பெண் பிள்ளைகளுக்கு இறையச்சத்தை ஊட்டி மார்க்க சட்டத்தின் நன்மைகளை ஊட்டி வளர்த்திருக்கிறோமா? என்றால் இல்லை. மார்க்க முறைப்படி பங்கு வைக்கும்போது, அது என்ன அவருக்கு இரண்டு மடங்கு, எனக்கு ஒரு மடங்கு என்று நமது பெண்களில் எவ்வளவு பேர் ஆட்சேபனை செய்கிறார்கள். அதை ஒத்துக் கொள்ள தயாராக இல்லை.

அது போன்று, பலதார மணத்தை எடுத்துக் கொள்வோம். அது குழி தோண்டி புதைக்கப்பட்ட ஒன்று. முஸ்லிம்களே அதற்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கிறார்கள்.

இப்படி எந்த சட்டத்திற்கு வக்காலத்து வாங்க முடியும். இதனுடைய அடிப்படை காரணங்களை பார்த்தோமென்றால் நம்மிடத்தில் ஏற்பட்ட சீர்கேடுதான். நம்மிடத்தில் ஏற்பட்ட மார்க்க புறக்கணிப்பு தான் இன்று இந்த பிரச்சனை இவ்வளவு பூதாகரமாக ஏற்பட்டிருக்கிறது.

எனவே, நம்முடைய பணி, அல்லாஹ்வின் அடியார்களுக்கு மார்க்கத்தின் மகத்துவத்தை சொல்லி, மார்க்கத்தை வெறும் பெயரளவில் எற்றால் போதாது, மனதில் ஏற்க வேண்டும், அது தான் நமக்கு தீர்ப்பு, அதில் தான் நமக்கு நன்மை இருக்கிறது என்ற உணர்வை நமது பிள்ளைகளுக்கு, அவர்களின் பிள்ளை பருவத்திலிருந்தே உருவாக்கி கொண்டு வர வேண்டும்.

அல்லாஹ்வுடைய சட்டம் மிக மகத்தான சட்டம்.

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?(அல்குர்ஆன் 5:50)

இன்று,நம் சமுதாயத்திற்கு நமது அறிஞர்கள் மீது நமது தலைவர்களின் மீது நமது மஸ்ஜிதின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்தாகவே மார்க்க சபைகள் ஷரீஅத் சபைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

ஏழைகளுக்கு ஒரு சட்டம், செல்வந்தர்களுக்கு ஒரு சட்டம். ஒரு ஊரில் நீ தலாக் கொடுப்பதாக இருந்தால், பத்து லட்சத்தை கொடுத்து விடு,பத்து லட்சத்தை கொடுத்தால்தான் நீ தலாக் கொடுக்க முடியும்.

இன்னும் எத்தனை இடங்களில், வரதட்சனை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால்,எல்லாவற்றையும் தஃப்தரில் பதிவு செய்து கொள்ளுங்கள், அதில் இத்தனை பேர்சன்டேஜிற்கு கமிசனை மஸ்ஜிதிற்கு கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார்கள்.

இவர்களெல்லாம் முஸ்லிம் ஜமாஅத்தா? இவர்களுக்கு பொது சிவில் சட்டம் இருந்தால் என்ன? மார்க்க சட்டம் இருந்தால் என்ன?

வரதட்சனை வாங்காமல் இன்று எத்தனை முஸ்லிம்கள் திருமணம் முடிக்கிறார்கள்? பெண்களின் மீது நடத்தப்படுகின்ற கொடுமைகள், அவர்கள் விருப்பம் இல்லாமலேயே அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற திருமணங்கள் எத்தனை?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ

ஒரு பெண்ணிடத்தில் அவள் திருமணம் ஆகாத கண்ணிப் பெண்ணாக இருந்தால், அவளுடைய அனுமதியில்லாமல் அவளை திருமணம் முடித்து வைக்கக் கூடாது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5136.

யாரை அவளுக்கு முடிக்கப்படுகிறது என்று மணமகனுடைய விபரங்கள் சொல்லப்பட்டு அவளிடத்தில் அனுமதி வாங்கினால் தான் அவளை திருமணம் முடித்து வைக்க வேண்டும்.

அவள் விரும்பாத ஒரு மணமகனை அவளுக்கு முடித்து வைக்கக் கூடாது என்று அல்லாஹ்வுடைய தூதர் அழுத்தமாக கூறியிருக்கிறார்களே, அதை இந்த சமுதாயம் பின்பற்றியதா?

கணவனை இழந்த பெண்களுக்கு கண்டிப்பாக மணமுடித்து வைக்க வேண்டும், அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டுமென்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் (அல்குர்ஆன் கருத்து 24 : 32) கட்டளையிடுகின்றார்களே, அதை இந்த சமுதாயம் பின்பற்றுகிறதா?

நமது தலைவர்கள் என்ன செய்தார்கள்? நமது அறிஞர்கள் என்ன செய்தார்கள்?சமுதாயத்தில் எதை நாம் ஏற்றுக் கொண்டோம்?எல்லா வகையிலும் கலாச்சார சீரழிவுகள் பரவி விட்ட நிலையில் நாம் இருக்கிறோம்.

ஆகவே, இதைப் பற்றி வாதங்கள், விவாதங்கள் செய்து நேரங்களை வீணடிப்பதை விட நமது சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமான வேலை என்ன? மக்களுடைய உள்ளங்கள் வரை எப்படி இந்த மார்க்கத்தை கொண்டு சேர்ப்பது?

நமது பிரச்சனைகளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் நமது ஜமாஅத்துக்குள்ளேயே நாங்கள் தீர்த்து திருப்தி அடைவோம் என்ற மனநிலைக்கு மக்களை கொண்டு வந்து நம்முடைய ஜமாஅத்தின் மீது, நம்முடைய அறிஞர்களின் மீது, நம்முடைய தலைவர்களின் மீது நம்பிக்கையை சமுதாயத்தின் உள்ளங்களில் ஏற்படுத்துவதற்குள்ள வழிகள் என்ன என்பதை ஆராய வேண்டுமே தவிர, இதற்கு மாற்றமாக என்ன நடவடிக்கை எடுத்தாலும் அல்லாஹ் மிக அறிந்தவன்.

அது பலனுள்ள நடவடிக்கையாக இருக்குமா?என்று சொல்ல முடியாது. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு நமது மார்க்கத்தின் மீது நம்பிக்கையை அதிகப்படுத்துவானாக!

நம்முடைய பிரச்சனைகளை அல்லாஹ்வின் சட்டத்தின் படி தூதரின் வழிகாட்டுதலின் படி நாம் தீர்த்து கொள்கின்ற மன உறுதியை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!

இந்த ஒரு சிறிய விஷயத்தை குறித்து நான் உங்களுக்கு கூறியதற்கு பிறகு, இன்றைய ஜும்ஆவில் கலீஃபா உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிப் படிப்போம்.

அல்லாஹு தஆலா இந்த தீனை உமரைக் கொண்டு பலப்படுத்தினான். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹுகூறுகிறார்கள்:

«مَا زِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ»

உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் எங்களில் யாருக்கும் கஃபாவில் சென்று தைரியமாக தொழுவதற்கு துணிவு வந்ததில்லை,உமர் இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு நாங்கள் தைரியாக சென்று கஃபாவில் தொழுதோம்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3863.

அல்லாஹு தஆலா எப்படி அவர்களுக்கு வீரத்தை கடலாக கொடுத்திருந்தானோ, அதுபோன்றுபீரிட்டு ஒடக்கூடிய நீர் வீழ்ச்சி போல, நீர் சுனையைப் போல, ஒரு ஊற்றைப் போல அல்லாஹ் தஆலா அவர்களுடைய உள்ளத்தில் ஞானத்தின் ஊற்றுகளை ஓடச் செய்தான்.

அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் குர்ஆன், சுன்னாவிலிருந்து பெறப்பட்ட ஆழ்ந்த ஞானமாக இருந்தது.

ஹதீஸ் நூல்களில் உமர் உடைய ஏராளமான ஞான அறிவுரைகள் நிரம்பி கிடக்கின்றன. அவற்றிலிருந்து அறிஞர்கள் தொகுத்த சிலவற்றை நாம் இப்போது இந்த ஜும்ஆவில் பார்ப்போம்.

நாம் இப்போது அவருடைய சபையில் இருந்தால், அவர் நம்மை பார்த்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து இந்த அறிவுரையை சொன்னால் என்ன முக்கியத்துவம் கொடுப்போமோ அதுபோன்று நாம் அவர்களின் அறிவுரைகளை கேட்க வேண்டும்.

அவர்கள் இப்போது நம்முடைய காலத்தில் இல்லையென்றாலும், நாம் அவர்களுடைய காலத்தில் இருந்திருக்கவில்லை என்றாலும், அல்லாஹ் தஆலா இந்த மார்க்கத்திற்கு வழங்கியிருக்கின்ற ஒரு மிகப்பெரிய பொக்கிஷம், அந்த அறிஞர்களின் கூற்று அறிவிப்பாளர்களின் தொடரோடு பாதுகாக்கப்பட்டிருப்பது.

முதலாவதாக, அவர்கள் சொல்லக்கூடிய ஒரு அழகிய அறிவுரையை கவனியுங்கள்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவுரை எப்படி பொருந்தும் என்பதையும் பொருத்திப்பாருங்கள்.

ஒருவர் தொன தொனவென்று நல்லதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். நல்லதைப் பற்றி வாய்க் கிழிய பேசிக் கொண்டே இருக்கிறார். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு விடாதீர்கள். நல்லவர் யார் தெரியுமா?

உமர் ரழியல்லாஹுஅன்ஹுகூறினார்கள்:

" لَا يُعْجِبَنَّكُمْ مِنَ الرَّجُلِ طَنْطَنَتُهُ، وَلَكِنَّهُ مَنْ أَدَّى الْأَمَانَةَ، وَكَفَّ عَنْ أَعْرَاضِ النَّاسِ، فَهُوَ الرَّجُلُ "

யார் அமானிதங்களை பேணினார்களோ, நம்பிக்கைக்குறியவர்களாக நடந்து கொண்டார்களோ, மக்களின் கண்ணியங்களில் விளையாடவில்லையோஅவர்கள் தான்.

நூல் : பைஹகீ, எண் : 12695.

எத்தனையோ மக்கள் நன்மை பற்றி, நீதம்நேர்மை பற்றி வாய்க் கிழிய பேசுவார்கள். ஆனால், நீதம்,நேர்மை,நம்பிக்கை, நம்பகத்தன்மை என்பது வாடைக்கு கூட அவர்களது வாழ்க்கையில் இருக்காது.

அமானிதங்களைப் பேணி, மக்களின் கண்ணியத்தில் யார் விளையாடவில்லையோ, அவன் தான் உண்மையான மனிதன். முழுமையான மனிதன்.

மேலும், கூறுகிறார்கள்:

لَا تَغُرَّنَّكُمْ صَلَاةُ امْرِئٍ وَلَا صَوْمُهُ، وَلَكِنِ انْظُرُوا مَنْ إِذَا حَدَّثَ صَدَقَ، وَإِذَا اؤْتُمِنَ أَدَّى، وَإِذَا أَشْفَى وَرِعَ

ஒருவருடைய தொழுகையை பார்த்து ஏமாந்து விடாதீகள். ஒருவரின் நோன்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

நூல் : கிதாபுஸ் சுஹ்த், அபூ தாவூத் : 64.

(அப்படி தான் நாமும் நம்மை நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறோம், நான் ஐந்து வேளை தொழுகிறேன் நான் பெரிய அவ்லியா என்று.

எப்படி அவ்லியாவாக ஆக முடியும்? நீ தொழுத தொழுகையை நீயே குழி தோண்டி புதைக்கின்றாய். நீ வைத்த நோன்பை நீயே முறித்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால், உனக்கு உன்னுடைய தொழுகையின் மீது பெருமை. உனக்கு உன்னுடைய நோன்பை கொண்டு பெருமை. அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஒருவரின் நோன்பை பார்க்காதீர்கள். அவருடைய தொழுகையை பார்க்காதீர்கள். பிறகு, ஒருவரை நல்லவர் என்று முடிவு செய்வதற்கு எதை பார்க்க வேண்டும்? அளவு கோள் என்ன?

இதுதான் நபியிடத்தில் தர்பியா பெற்றவர்களுடைய பக்குவம், நம்முடைய பலவீனமான பக்குவத்திற்குமுள்ள வித்தியாசம்.

நாம் என்ன நினைக்கிறோம்? ஒரு மனிதன் பெரிய தாடி வைத்து தொழுதுவிட்டால், ஒரு பெண் புர்கா போட்டு தலையை மூடி எல்லாத்தையும் மறைத்து அப்படியே அவ்லியா மாதிரி இருந்து விட்டால் மக்கள் மயங்கி விடுகிறார்கள்.

இல்லை, நடத்தையை பார்க்க சொன்னார்கள். இபாதத்துகளை பார்த்து நல்லவர் கெட்டவர் என்றி முடிவு செய்யாதீர்கள். இபாதத் அவருக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ளது.

நீ நல்லவனாக இருந்தாலும் இபாதத் செய்துதான் ஆக வேண்டும். கெட்டவனாக இருந்தாலும் இபாதத் செய்துதான் ஆக வேண்டும். தொழுகை நோன்பு என்பது முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகள். இல்லையென்றால் காஃபிராக ஆகி விடுவார்.)

எதை வைத்து நல்லவன் என்று முடிவு செய்வது? உமர் ரழியல்லாஹுஅன்ஹுகூறினார்கள்:

அவர் பேசினால் உண்மையை பேசுகிறாரா? அமானிதங்களை நிறைவேற்றுகின்றாரா?  பாவத்தின் எண்ணம் வரும்பொழுது பாவத்தை விட்டு பேணுதலாக இருந்து கொள்கிறாரா?  அவர்தான் நல்ல மனிதர். அவரை பாருங்கள், அவரை உங்களுடைய நட்பில் ஆக்கிக் கொள்ளுங்கள்.

நூல் : கிதாபுஸ் சுஹ்த், அபூ தாவூத் : 64.

உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் ஏற்பட்டிருக்கலாம். நல்ல தொழுகையாளி என்று அவரிடத்தில் வியாபார கூட்டாளியாக மாறியிருப்பீர்கள்.

ஆனால், மோசடியில் முதல் நம்பராக அவர் மாறியிருப்பார். இவ்வளவு பெரிய நோன்பாளி ஆயிற்றே, இவ்வளவு பெரிய வணக்கசாலியாக ஆயிற்றே, இவரோடு சேர்ந்து வியாபாரம் செய்யலாம்.

நல்ல மனிதராக இருக்கின்றாரே என்று அவரிடத்தில் வியாபாரம் செய்யும்போதுதான் அதற்கு பிறகு தெரிய வரும், இப்படி தொழுதவரா என்னை ஏமாற்றி விட்டார் என்று கவலைப்படுகின்ற நிலைக்கு எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம்.

உமர் உடைய அளவுகோளை பாருங்கள். தொழுகையை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். நோன்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

பேசும்போது உண்மை பேசுகிறானா? இது மிகப் பெரிய ஒரு ஈமானுடைய நிலை. உண்மை பேசுவது ஈமானுடைய மிக உயர்ந்த நிலை.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நபித் தோழர்கள் கேட்கிறார்கள். ஒரு முஃமின் திருடிவிடுவானா? திருடலாம். ஒரு முஃமின் ஜினா செய்து விடுவானா? செய்துவிடலாம். ஒரு முஃமின் ஏதாவது ஒரு பொருளை அபகரித்துவிடுவானா? அபகரித்துவிடலாம்.

இப்படியாக பல தவறுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்த நபித் தோழர்கள், பிறகு கேட்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! ஒரு முஃமின் பொய் பேசுவானா? என்று. பேசமாட்டான் என்று கூறினார்கள்.

அஸ்ஸம்த் - இப்னு அபித்துன்யா எண் : 474

இன்னும் உமர் உடைய ஒரு முக்கியமான கூற்றை கவனியுங்கள்;

முஃமினே! உண்மையை மட்டும் பேசு. அந்த உண்மை உன்னை கொன்றுவிட்டாலும் சரியே!

தாரீக் திமஷ்க் - இப்னு அசாகிர் : 44/360

உண்மை சொல்கின்ற காரணத்தால் தனது உயிரே போனாலும் சரி பரவியில்லை, உண்மை சொல்லியே என் உயிர் போகட்டும். பொய் சொல்லி என்னுடைய உயிர் தப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மன உறுதி உண்மையின் விஷயத்தில் உங்களுக்கு இருக்க வேண்டும். உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

முஃமின்களே! துன்யாவை விட்டு உங்களுடைய பார்வைகளை நீங்கள் தாழ்த்திக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்களை அந்த துன்யாவை விட்டு திருப்பி விடுங்கள். ஏனென்றால், அந்த துன்யா உங்களுக்கு முன்னுள்ளவர்களை அழித்து நாசமாக்கியது போன்று உங்களையும் நாசமாக்கிவிடும்.

எத்தனை மனிதர்களை இந்த துன்யா நாசமாக்கியிருக்கிறது. இந்த துன்யாவை நேசித்தவர்களின் கெட்ட முடிவு எவ்வளவு இந்த உலகத்தில் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த துன்யாவில் ஆடை அணிவித்த எத்தனையோ மக்கள் இறுதியில் ஆடையில்லாமல் போயிருக்கிறார்கள். இந்த துன்யா உணவளித்த எத்தனையோ மக்கள் இறுதியில் பசி, பட்டினியில் செத்திருக்கிறார்கள். இந்த துன்யா வாழ வைத்த எத்தனையோ மக்கள் இந்த துன்யாவில் இப்போது இல்லை.

எனவே, உங்களுடைய உள்ளத்தை துன்யாவிற்கு கொடுத்துவிடாதீர்கள்.

மஜ்மஉ அம்சால் 2/451 -அபுல் ஃபழ் அஹ்மத் இறப்பு ஹிஜ்ரி 518

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மறந்து, மறுமையை மறந்து இந்த துன்யாவில் தன்னுடைய உள்ளத்தை பறிகொடுத்தவர்களின் முடிவுகளை பாருங்கள்.

இந்த துன்யா தான், இந்த ஆட்சிதான், இந்த செல்வம் தான், இந்த ஆடம்பரமான வாழ்க்கை தான் என்று இந்த துன்யாவிற்காக வாழ்ந்தவர்கள், இந்த துன்யாவினாலேயே கொல்லப்பட்டார்கள்.

அதிகாரத்திற்காக கொலை செய்தவர்கள், அதிகாரத்திற்காகவே கொல்லப்பட்டார்கள். நாட்டுக்காக என்று கொலை செய்தவர்கள், அதே நாட்டு மக்களால் கொல்லப்பட்டார்கள். அதே நாட்டு மக்களால் சிறைபிடிக்கப்பட்டார்கள். அதே நாட்டு மக்களால் தூக்கிலிடப்பட்டார்கள்.

எந்நாடு, என் மக்கள், நான் பாதுகாப்பேன், எனது ஆட்சி, எனது அதிகாரம் என்று சொன்னவர்கள், பாதுகாப்பே இல்லாமல் ஒரு புழூ பூச்சியை அடித்து சாவடிப்பதை போன்று, ஒரு கொடூரமான மிருகத்தை சாவடிப்பதை போன்று தெருக்களில் அதே மக்களால் சாவடிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம்.

மேலும்,உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கூறினார்கள்:

எந்த செயலை செய்யும்பொழுது உனக்கு மவ்த்துடைய பயம் வருமோ, மவ்த்தை நீ வெறுப்பாயோ, அப்படிப்பட்ட செயலை நீ இப்போதே விட்டு விடு. ஏனென்றால், இப்படி நீ செயல்களை விட்டுவிட்டு உன்னை சுத்தப்படுத்திக் கொண்டால், மவ்த்து எப்பொழுது வந்தால் என்ன? உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

முசன்னஃப் இப்னு அபீ ஷைபா,எண் : 35266.

பாவங்களை அள்ளி சுமந்திருந்தால் தானேமவ்த்து வந்தால் என்ன நடக்குமோ? என்ற பயம் இருக்கும்.அதற்கு பதிலாக பாவங்களை விட்டு விலகி நன்மைகளில் ஈடுபட்டவனாக இருந்தால், எப்போது மரணம் வந்தால் என்ன? அல்லாஹ்வை சந்திப்பதற்கு அவன் தயாராக இருப்பான்.

மேலும் கூறுகிறார்கள்: ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பது, (துன்யாவின் நன்மையை தரக்கூடிய பிரயோஜனமான ஒரு வேலையை செய்வது)உனக்கு கலைப்பை கொடுத்தாலும், உடல் வலியை ஏற்படுத்தினாலும், அது நல்லது. வேலை செய்யாமல் சும்மா இருப்பது உனது தீனையும் துன்யாவையும் அழித்துவிடும்.

முசன்னஃப் இப்னு அபீ ஷைபா,எண் : 35266.

எவ்வளவு அழகான எதார்த்தமான உண்மை பாருங்கள்.

இன்று,எத்தனையோ பேர் சோம்பேறிகளாக இருந்து கொண்டு,மக்கள் மீது சுமையாக இருப்பார்கள். வேலை செய்வதற்கு அலுப்பு பட்டுக் கொண்டு அவர்கள் வெட்டியாக ஊர் சுற்றுவார்கள், யாருக்காவது சுமையாக இருப்பார்கள்.

இப்படி அவர்கள் சும்மா சுற்றித் திரியும் போதுதான், ஷைத்தான் விரைவாக அவரிடத்தில் வருகிறான்.

சமூகத்தில் விளைகின்றபெரும்பாலான தீமைகள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றித்திருகின்ற வெட்டியான மனிதர்களின் மூலமாக, அந்த தீயவர்களின் மூலமாகத்தான் நிகழ்கின்றன.

மேலும், உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:

ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்ளுங்கள். உடல் உழைப்புடைய ஒரு தொழிலை கற்றுக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் தனது கைத்தொழிலுக்கு தேவையாகக்கூடிய நேரம் ஏற்படலாம்.

கொஞ்சம் கண்ணியக்குறைவாக இருந்தாலும், எவ்வளவு அழகான ஞானத்தை கூறியிருக்கிறார்கள் பாருங்கள். எந்த வேலையை செய்யும் பொழுது உன்னுடைய கண்ணியக்குறைவை நீ பார்க்கிறாயோ, நான் இந்த வேலையை செய்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று பார்க்கிறாயா? பரவாயில்லை செய். அது உனக்கு மேலானது, மக்களிடத்தில் நீ கையேந்துவதை விட. மக்களிடத்தில் நீ யாஸகம் கேட்பதை விட.

முசன்னஃப் இப்னு அபீ ஷைபா,எண் : 35266.

கண்ணியமென்றால் மார்க்க அடிப்படையில் உள்ள விஷயத்தை கூறவில்லை. துன்யா அடிப்படையில்.

உதாரணமாக,இடத்தை பெருக்குதல். பொதுவாக யாரும் இதை விரும்பமாட்டார்கள். ஆனால், இதை நீ செய்வது, பிறரிடம் நீ யாஸகம் கேட்பதை விட மேல்.

இப்படி எத்தனையோ தொழில்களை செய்யலாம். ஆனால், உண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தில் நாம் பார்க்கும்பொழுது, நம்முடைய அறிஞர்கள் பலர், சாதராண தொழில் செய்திருக்கிறார்கள்.

அடிமையாக இருந்திருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன தேவை இருக்கிறது? அடிமையாக இருக்கும் பொழுது எல்லா வேலைகளையும் செய்தாக வேண்டும். எஜமானுக்கு முன்னால் கைகட்டி நிற்க வேண்டும். அவர் எந்த வேலையை சொன்னாலும் செய்ய வேண்டும்.

ஆனால், அவர் அடிமையாக இருந்தாலும் கூட, அவருக்கு ஒரு அரசரின் கண்ணியம் கொடுக்கப்பட்டது, அவருடைய இல்மினாலும், ஒழுக்கத்தினாலும்.

மேலும், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அல்லாஹ்வைப் பற்றியே எப்போதும் பேசுங்கள். அது எல்லாவற்றுக்கும் மருந்து.  அல்லாஹ்வைப் பற்றி பேச பேச அந்த ஒவ்வொரு பேச்சும் உங்களுடைய உள்ளத்திற்கு மருந்தாக இருக்கும்.

மக்களைப் பற்றி பேசாதீர்கள், மக்களைப்பற்றி விமர்சிக்காதீர்கள்.மக்களைப் பற்றி நீங்கள் பேசக் கூடிய ஒவ்வொரு பேச்சும் நோயாகும்.

தம்முல் கைபத்தி - இப்னு அபித் துன்யா எண் : 59.

நாம், அல்லாஹ்வைப் பற்றி பேசுவதே இல்லை. மக்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி,  அவர்களுடைய செயல்களைப்பற்றிவிமர்சனம் செய்வது, குறை கூறுவது, திட்டுவது, காழ்ப்புணர்ச்சிகளை ஏற்படுத்துவது, புறம் பேசுவது, பொறாமையை உண்டாக்குவது, கோள் சொல்வது.

இதனால் உள்ளங்களெல்லாம் நோய்களால் நிரம்பியிருக்கின்றன. அல்லாஹ் பாதுகாப்பானாக!

நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பேசுங்கள். அது கண்டிப்பாக நோயுற்ற உங்களுடைய உள்ளங்களுக்கு மருந்தாக இருக்கும்.

நீங்கள் கவலையானவரிடத்தில் பேசும்பொழுது, அவருடைய கவலைக்கு அல்லாஹ்வின் பேச்சு ஒரு ஆறுதலாக இருக்கும்.

ஒரு செல்வந்தரிடத்தில் நீங்கள் பேசினால், செல்வத்தால் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற அந்த பெருமையையோ, அந்த ஆனவத்தையோ, அல்லது அந்த செறுக்கையோ நீக்கி அவருக்கு பனிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

துக்கத்தில் உள்ளவரிடத்தில் பேசும்பொழுது, அவருக்கு மன சாந்தியை ஏற்படுத்தும். ஏழையிடத்தில் பேசும்பொழுது அவருக்கு பொறுமையை ஏற்படுத்தும்.

இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும் அல்லாஹ்வைப் பற்றி பேசலாம். பேசும்பொழுது கண்டிப்பாக அந்த பேச்சுகள் அவருக்கு மருந்தாக இருக்கும்.

மேலும், ஒரு அழகான விஷயத்தை உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்:

அல்லாஹ் கண்ணியத்தை நாடியிருக்கின்றஒரு சமுதாயம்தான் நாம். நாம் சாதாரணமான சமுதாயமல்ல. அல்லாஹ் நமக்கு தான் கிலாஃபத்தை நாடியிருக்கிறான். நமக்கு தான் ஆட்சி அதிகாரத்தை கண்ணியத்தை விரும்பியிருக்கின்றான்.

இந்த உலகத்தை வழி நடத்துவதற்காக, உலகத்தை வழிகாட்டுவதற்காக,  உலகத்திற்கான சட்டங்களை, நேர்மைகளை, நீதங்களை சொல்லிக் கொடுப்பதற்காக அல்லாஹ் நாடி தேர்ந்தெடுத்திருக்கின்ற ஒரு சமுதாயம் நாம்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? அழகாக கூறினார்கள்: இல்மை கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கு கல்வியை போதியுங்கள்.

அல்மத்கல் இலா அஸ்ஸுனன் அல்குப்ரா எண் 629 - அல்பைஹகீ

இந்த இரண்டையும் அழகாக விட்டு விட்டோம். அப்படி செய்தாலும் எங்கேயாவது சில பேர்,  அதையும் சரியாக இல்லாமல், ஒட்டு மொத்த குழப்பங்களுக்கும் காரணம். பலவீனம் நம்மிடத்தில் ஒரு பிற்போக்குத்தன்மை. நம்முடைய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அன்பானவர்களே! கல்வியில் நாம் பின் தங்கிய காரணத்தினால் தான்.

அப்படியே படித்து விட்டாலும் கூட இன்று இன்னொரு பிரச்சனை இருக்கிறது. நம்மிடத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், கண்ணியம் வரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு தான் கலீஃபா அவர்கள் கூறினார்கள்: இல்மை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

அல்மத்கல் இலா அஸ்ஸுனன் அல்குப்ரா எண் 629 – அல்பைஹகீ.

இன்று,நமது சமுதாயத்தில் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை கூடுகின்றது. கல்வியை படிக்கின்றார்கள், தான் சம்பாதிப்பதற்காக மட்டுமே.

காசு, பணத்துக்காக தான் பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்களே தவிர, கண்ணியத்திற்காக, இந்த கல்வியை கொண்டு சமுதாயத்தை உயர்வு படுத்துவதற்காக அவர்கள் படிக்க வைக்கவில்லை.

எனவேதான், படிப்பறிவு கூடிக்கொண்டே சென்றாலும், கல்வியில்லாத நிலையில்சமுதாயம் என்ன ஒரு கேவலத்தை சந்தித்துக் கொண்டிருந்ததோ, அதே கேவலத்திலும், அதே கண்ணியக் குறைவிலும் தான் இன்று இருக்கிறது.

எத்தனையோ முஸ்லிம் பள்ளிக்கூடங்களை கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை துறைகளிலும் அதனுடைய தலைமை பதவியிலிருந்து கடைசி பதவி வரை நாங்கள் எங்களது கல்வி நிறுவனங்களை திரம்பட நடத்துவோம் எனறு சொல்லக்கூடிய முஸ்லிம் கல்வியாளர்கள் அங்கே இருக்கிறார்களா?

முஸ்லிம் கல்வி நிறுவனத்தை முஸ்லிம்களால் திரம்பட நடத்தி முடித்துவிட முடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கல்வியாளர்களை உருவாக்கி வைத்திருக்கிறோமா? எத்தனை கல்வி நிறுவனங்கள் முஸ்லிம்களால் நடத்தப்பட்டாலும் காஃபிர்களின் ஆட்சி அங்கே நடக்கிறது.

காரணம், முஸ்லிம்கள் அதை நடத்துவதற்கு தகுதியானவர்களை உருவாக்கவில்லை. அல்லது தகுதியாகி உருவானவர்கள் காசுக்காக ஒரு கல்லூரியில் வேலை பார்த்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

சம்பளத்தை அடிப்படையாக வைத்து சமுதாயத்தை பார்க்காமல் அல்லாஹ்வுடைய அமானிதங்களை புறக்கணித்துவிட்டு பணத்துக்காக வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள்.

எனவே, அந்த இடங்களை நிரப்புவதற்கு திறமையான முஸ்லிம்கள் இருந்தும் கூட, அவர்கள் பணத்திற்காக தனது நாட்டை விட்டு விட்டு, தனது சமுதாயத்தை விட்டு விட்டு தனது வாழ்க்கையை மட்டும் பார்த்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட காரணங்களால், சமுதாய நிர்வனங்கள் பல மாற்றார்களை வேலைக்கு அமர்த்தக் கூடிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றன.

இன்னொரு காரணம், கல்வி படித்த முஸ்லிம்கள் சமுதாயத்திற்கு திரும்ப தான் படித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பொதுநல மனம் இல்லாத காரணத்தால், அவர்கள் தங்களுடைய வியாபாரம் தொழில்துறையென்று சமுதாயத்தை புறக்கணித்து சென்றுவிட்டதாலும், இன்று நமது முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அதை நடத்தக்கூடிய கல்வியாளர்களின் பக்கம் தேவையுள்ளவையாக இருக்கின்றன.

ஆனால், அதை நிரப்புவதற்கு முஸ்ஸிம்கள் தயாராக இல்லை. குறைந்த பட்சம் இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள்.

நமது பெண்கள் எவ்வளவு பேர் படிக்கின்றார்கள். அவர்களுக்கு சமுதாயத்தை உருவாக்குவதற்குண்டான எவ்வளவோ கல்விகள் இருக்கின்றன. ஆனால், இந்த முஸ்லிம்களுடைய நிலை, நமது பெண்களைக் கூட விட்டுவைக்கவில்லை.

அவர்களையும் ஒரு ஏடிஎம் மிஷினாக ஆக்கப்பார்க்கிறார்கள். பிள்ளைகளுக்கு இந்த ஐடி தொழிலயோ, அல்லது அது போன்ற இன்ஜினியரிங் தொழிலையோ, படிக்கும்போது அல்லது அதை படித்து முடித்திருக்கும்பொழுது அவர்கள் வேலைக்கு சென்றால், எங்கே மார்க்கத்தை பேண முடியாதோ, எங்கே மார்க்கத்தை பாதுகாக்க முடியாதோ, எங்கே தனது பெண்மையை கூட தனது கற்பை மானத்தை கூட பாதுகாக்க முடியாதோ, அப்படிப்பட்ட இடங்களுக்கு அவர்கள் வேலைக்கு அனுப்பி தங்களுடைய மகள் சம்பாதிப்பதைக் கொண்டு பெருமையடைகிறார்களே!

இது எவ்வளவு இழிவான ஒரு செயல். எவ்வளவு கேவலமான ஒரு காரியம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

எத்தனை முஸ்லிம் கிராமங்களில், முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடத்தில் நமது சிறு பிள்ளைகளுக்கு சாதாரண அடிப்படை கல்வியை போதிப்பதற்கு கூட, அங்கே முஸ்லிம் பெண்கள் இல்லை.

மற்ற மதத்திலுல்ல பெண்களைதான் அங்கும் வாடகைக்கு எடுத்து வந்து நமது சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய நர்பந்தத்தில் இருக்கிறது.

மாற்றார்களை கல்வி நிறுவனங்களுக்கு கொண்டு வந்து வேலை வாங்குவதில் இஸ்லாமிற்கு எந்த ஆட்சபனேயும் இல்லை, ஆலிம்களுக்கு எந்த ஆட்சேபனேயும் இல்லை. அவர்கள் படித்து கொடுப்பதோடு மட்டுமா நிறுத்துகிறார்கள்.

தங்களுடைய தீய கொள்கைகளை, தீய சிந்தனைகளை மார்க்கத்தின் மீது பற்றின்மையை முஸ்லிம்களுடைய பிள்ளைகளின் மனதில் இஸ்லாத்தின் மீது வெறுப்பை விதைக்கின்றவர்களாக அங்கே மாறி இருப்பது தான் நமக்கு மிகப் பெரிய வேதனைக்குறிய விஷயம்.

மாற்று மதத்தவர்களிடம் கல்வி படிப்பதை மார்க்கம் குறையென்று சொல்லவில்லை.  ஆனால், நம்முடைய பள்ளிக் கூடங்களில், நம்முடைய கல்லூரியில் வேலை செய்து கொண்டு, அங்கு முஸ்லிம் பெண்களை புர்கா போடக்கூடாது என்று கூறுகிறார்கள். ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறுகிறார்கள்.

பிள்ளைகளை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை. அங்கிருக்கக் கூடிய முஸ்லிம் பணியாளர்கள் தாடி வைப்பதற்கு அனுமதி இல்லை. நிர்வாகம் சொல்லவில்லை, அந்த நிர்வாகத்தின் கீழ் வேலை செய்யக்கூடிய, அந்த நிர்வாகத்திடம் சம்பளம் வாங்கி இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் இருக்கக் கூடிய தலைமை சொல்கிறது.

அந்த கல்வித் துறையில் இருக்கக் கூடிய டீன் அல்லது ப்ரின்சிபல் சட்டம் போடுகிறார். நீ தாடி வைத்துக் கொண்டு வரக்கூடாது, நீ சேவிங் செய்ய வேண்டும். நீ புர்கா போட்டுக் கொண்டு கிளாஸ் ரூமிற்கு வரக்கூடாது.

இதுதான் நமக்கு மிகப் பெரிய வேதனை கொடுக்கிறது. அதே இடத்தில் ஒரு இஸ்லாமிய ஒழுக்கமுள்ள, மார்க்கப்பற்றுள்ள ஒரு திறமையானவர் இருந்தால், அந்த கல்வி நிறுவனம் எவ்வளவு பாதுகாக்கப்பட்டிருக்கும். நல்லவர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு அடைக்களமாக இருந்திருக்கும். சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?

உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅழகாக கூறினார்கள்: அல்லாஹ் நமக்கு கண்ணியத்தை நாடியிருக்கிறான். கண்ணியம் அரசியலில் அல்ல, கண்ணியம் கட்சிகளில் அல்ல, கண்ணியம் கோஷங்களில் அல்ல, கண்ணியம் இல்மில் இருக்கிறது. இல்மை கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.

மேலும் உமர் ரழியல்லாஹுஅன்ஹுகூறினார்கள்: அடக்கமாக இருப்பதை கற்றுக் கொள்ளுங்கள். கண்ணியமாக அமைதியாக இருப்பதை கற்றுக்கொள்ளுங்கள். யாரிடத்தில் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்களோஅவர்களுக்கு முன் பணிவாக நடந்து கொள்ளுங்கள். யாருக்கு நீங்கள் கற்பிக்கின்றீர்களோஅவர்களிடத்திலும் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.

அரக்கத்தனமுடைய, முரட்டுக்குணமுடைய அறிஞர்களாக நீங்கள் இருந்துவிடாதீர்கள். உங்களது அறியாமை உங்களது கல்வியின் தரத்தை நிர்ணயித்து விட வேண்டாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அல்மத்கல் இலா அஸ்ஸுனன் அல்குப்ரா எண் 629 – அல்பைஹகீ.

இப்படி நிறைய அறிவுரைகளை ஹழ்ரத் உமர் ஃபாரூக் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய ஒவ்வொரு அறிவுரையும் சமுதாயத்தை தொலைநோக்கு பார்வையோடு பார்த்து, சமுதாயத்தின் உயர்வுக்காகசமுதாயத்தின் கண்ணியத்திற்காக கூறிய அறிவுரைகள்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இது போன்று அல்லாஹ்வுடைய தூதரின் தோழர்கள் கூறிய நல்ல அறிவுரைகளிலிருந்து பயன்பெறக்கூடிய நன்மக்களாக என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/