HOME      Khutba      அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 3 - 3) | Tamil Bayan - 437   
 

அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 3 - 3) | Tamil Bayan - 437

           

அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 3 - 3) | Tamil Bayan - 437


அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 3-3)

வரிசை : 437

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 20-10-2016 | 20-01-1438

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றி வாழும்படி, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணும் படி அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை பேணுதலுடன் பேணும் படி, அல்லாஹ் ஹராமாக்கிய சிறிய பெரிய அனைத்து பாவங்களை விட்டு விலகி இருக்கும் படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கின்றேன்.

சிறப்பிற்குரிய நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வரலாறையும் சிறப்பையும் நாம் பார்த்து வருகிறோம்.

கல்வியின் கடல், அல்குர்ஆனின் விரிவுரையாளர், ஞானத்தின் ஊற்று, அந்த பெரிய நபித்தோழர் ஏறக்குறைய ஏழு வயதில் தந்து கல்விப்பயணத்தை தொடங்கி, எண்பது வயதில் அவர்கள் மரணிக்கின்ற வரை தொடர்ந்து கல்விக்காகவே வாழ்ந்த, அல்லாஹுடைய தீனை படிப்பதிலும், படித்துக் கொடுப்பதிலும்,

குர்ஆன் சுன்னாவுடைய இல்மை கற்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும், அல்லாஹுடைய பாதையில் ஜிஹாது செய்வதிலும்,முஃமின்களுக்கு மத்தியில் நல்லினக்கம் ஏற்படுத்துவதிலுமே தன்னுடைய வாழ்க்கையை கழித்து வந்த அந்த மாபெரும் ஞானி அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நம்மை போன்றவர்களுக்காக நிறைய அறிவுறைகளையும் உபதேசங்களையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் நமக்காக கூறிய அறிவுரைகள் சிலவற்றை இப்போது நாம் பார்ப்போம்.

பாவத்தைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்போது, பாவத்தின் பின்விளைவுகளை அவர்கள் விவரிக்கும்போது கூறிய ஒரு அறிவுரை, பாவம் செய்யும் ஒரு மனிதரை பார்த்து பேசுவதைப் போன்று சொல்கிறார்கள்:

பாவத்தை தொடர்ந்து செய்பவனே! பாவத்தில் இன்பம் கண்டுவிட்டவனே! உனது பாவத்தின் முடிவைக் குறித்து நீ அச்சமற்று இருந்து விடாதே!

ஹில்யத்துல் அவ்லியா, பாகம் 1- பக்கம் 324

சிலர், பாவம் செய்யும்போது, ஒருமுறை இருமுறை பயத்தோடு செய்வார்கள். பிறகு, அந்த பாவத்தையே அவர்கள் வழமையாக ஆக்கிக்கொள்ளும் போது, அந்த பாவத்தைப் பற்றிய பயமும் அவர்களது உள்ளத்தை விட்டு எடுபட்டுவிடும்.

இந்த பாவத்தின் காரணமாக அல்லாஹ் தண்டிப்பான், அல்லாஹ் பிடிப்பான், உலகத்திலும் அல்லாஹ் தண்டனையை தீவிரப்படித்தி விடலாம். மறுமை தண்டனையும் நிச்சயமானது.

இப்படி அல்லாஹ்வின் மீது அச்சமற்றவர்களாக பாவத்தில் செல்பவர்கள் பலரிருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்:பாவத்தின் கெட்ட முடிவை விட்டு நீ அச்சமற்று விடாதே!

காரணம், அந்த பாவத்திற்காக தவ்பாவிற்கு நீ வாய்ப்பு கொடுக்கப்பட முடியாமல் போகலாம். ஒரு வேளை அந்த பாவத்தில் இருக்கும்போதே உனது உயிர் பிரிந்து விடலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஒரு மனிதனின் கெட்ட முடிவுக்கு அடையாளம், பாவம் செய்கின்ற நிலையில் அவனது உயிர் பிரிவது. ஆகவேதான், நல்ல முடிவை அல்லாஹ்விடத்தில் வேண்டுவதும், கெட்ட முடிவைவிட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுவதும் துஆவுடைய ஒழுக்கங்களில் ஒன்று.

யா அல்லாஹ்! எங்களது முடிவை அழகாக்குவாயாக, கெட்ட முடிவை விட்டு எங்களை பாதுகாப்பாயாக! என்று கேட்க வேண்டும்.

மேலும் கூறுகிறார்கள்: பாவத்தை தொடர்ந்து செய்பவனே!நீ செய்த பாவத்தைவிட இந்த பாவத்திற்கு பின்னால் ஏற்படக்கூடிய நிலை அதைவிட ஆபத்தானது, பயங்கரமானது.

பாவம் பயங்கரமானது என்பதை அறிகிறோம், பாவம் செய்ததற்குப் பிறகுள்ள நிலை அதைவிட பயங்கரமானது என்று சொல்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்எதைகுறித்து எச்சரிக்கை செய்கிறார்கள் என்றால், இந்த பாவத்திற்குப் பின்னால் உனக்கும் அல்லாஹுக்கும் இடையே ஏற்படக்கூடிய தூரம், இந்த பாவத்தால் உன்மீது அல்லாஹ்வின் வெறுப்பு ஏற்படுகிறதே, இந்த பாவத்தால் உன் மீது அல்லாஹ்வின் கோபம் சாபம் இறங்கப் போகிறதே, என்பதை நினைத்துப் பார்த்தாயா? அது எவ்வளவு பயங்கரமானது என்று நீ சிந்தித்துப் பார்த்தாயா?

அப்படி சிந்தித்து பார்த்திருந்தால், அந்த பாவத்தை நீ செய்திருப்பாயா?

எந்த பாவமாக இருந்தாலும் அதற்குப்பின்னால் உனக்கும் அல்லாஹுக்கும் இடையில் இருந்த நெருக்கம் அன்பு நீங்கி,அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாகப்போகிறாயே, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகப்போகிறாயே, அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகப்போகிறாயே அதை நினைத்து பார்த்தாயா?அது எவ்வளவு பயங்கரமானது!என்று.

மேலும் சொல்கிறார்கள்: பாவத்தை வெட்கமில்லாமல் செய்கிறாயே, மக்களின் பார்வையில் இருந்து மறைக்க நினைத்து மக்களை விட்டு மறைந்து செய்கிறாயே!ஏன். உனக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உனது அமல்களை பதிவு செய்வதற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட (ஆல்குர்ஆன் 82 : 10-12) வானவர்களை நீ வெட்கப்படவில்லையா?

அவர்கள் உனக்கு அருகில் உனது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இருந்து எழுதுகிறார்கள். அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படவில்லையா?அது ஒரு பயங்கரமில்லையா?

இது உள்ளத்தில் ஏற்பட்ட பயங்கரம். உள்ளம் இறுகிவிட்டதின் அடையாளம். உள்ளம் மென்மையாக இருக்குமேயானால் மனிதன் நினைத்துப் பார்த்திருப்பான். என்னுடைய செயல்கள் பதிவு செய்யப்படுகின்றனவே, என்னுடைய செயல்கள் கண்காணிக்கப்படுகின்றனவே என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டிருக்கும்.

மேலும் சொன்னார்கள்:

உனக்கு தெரியுமா, அல்லாஹு தஆலா நீ செய்த இந்த பாவத்தினால் உன்னோடு எப்படி நடந்து கொள்வான் என்பதை நீ அறியாமல் இருக்கிறாயே. அது ஒரு பயங்கரமில்லையா?அல்லாஹ்வின் கோபம் மிகைத்து தௌபாவிற்க்கு வாய்ப்பு அளிக்கவில்லையென்றால், பாவமன்னிப்பிற்கு உண்டான கதவை அல்லாஹ் மூடிவிட்டால், அது ஒரு பயங்கரமான நிலையல்லவா?

ஒரு பாவத்தை செய்ததற்குப் பிறகு,அந்த பாவத்திற்கு வாய்ப்பு கிட்டியதற்கு நீ விரும்பிய, நினைத்த பாவத்தை செய்து முடித்ததால், உனது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறதே, அதை நினைத்து நீ சந்தோஷப்படுகிறாயே!

எந்த வகையான பாவமாக இருந்தாலும் அந்த பாவத்தை நீ விரும்பி செய்ததற்குப் பிறகு நீ நினைத்ததை நிறைவேற்றி விட்டாய் என்ற மகிழ்ச்சி, ஆனந்தம் ஏற்படுகின்றதே!இது நீ செய்த பாவத்தைவிட பயங்கரமானது.

(ஹில்யத்துல் அவ்லியா, பாகம் 1- பக்கம் 324)

பாவம் செய்தவர்கள் வருந்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் அதற்காக கவலைப் படவேண்டும். பாவத்தில் சிக்கியவர்கள் அதற்காக மனவருத்தப்பட வேண்டும். அப்படி வருத்தப்படாமல் தான் நினைத்த பாவத்தை செய்து முடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி, அதனால் மனதிற்கு ஒரு திருப்தி ஏற்படுகிறதென்றால், அது நீ செய்த பாவத்தை விட பயங்கரமானது. இது உள்ளம் இறுகிவிட்டது என்பதற்குரிய அடையாளம்.

உள்ளத்தில் ஈமான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு போகிறது, மறுமையின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பவவீனமடைகிறது என்ற அடையாளம்.

அல்லாஹுடைய பயமும், மறுமையின் பயமும், நரகத்தின் பயமும் உள்ளத்தில் ஆழமாக இருந்திருக்குமேயானால் பாவம் செய்ததற்குப் பிறகு பதற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். பாவம் செய்ததற்குப் பிறகு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும், நடுக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால்,அந்த நிலை தவறி பாவத்தை நினைத்து சந்தோஷப்படுகிறாயே!இது,உனது அல்லாஹ்வின் அச்சம் எடுபட்டுக் கொண்டிருக்கிறது, மறுமையின் பயம் உனது உள்ளத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது,மறுமையின் மீதுன்டான உனது நம்பிக்கை பலவீனப்படுகிறது என்பதன் அடையாளம்.இது எவ்வளவு பயங்கரமானது என்று யோசித்துப் பார்.

மேலும் சொன்னார்கள், ஒரு பாவத்தை செய்ய நினைத்து அந்த பாவத்திற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் அதை நினைத்து நீ வருந்துகிறாயே!

பலரின்று பேசிக்கொள்வதை கேள்விப்படுகிறோம், சினிமாக்களுக்கு மற்றும் இது போன்ற கேளிக்கைகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்து, செல்ல முடியாதபோது அவர்களுக்கு ஏற்படுகின்ற வருத்தம்.அதை பார்த்து கண்டு ரசிக்கமுடியாமல் அவர்களுக்கு அந்த வாய்ப்பு நழுவி விட்டதனால் அவர்கள் படக்கூடிய சஞ்சலம், கைசேதம்.

தொழுகையை விட்டால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அல்லாஹுடைய கடமைகளை பாழாக்கும்போது அவர்கள் வருத்தப்படமாட்டார்கள். அல்லாஹுடைய இபாதத் செய்து முடிக்கும்போது அவர்கள் சந்தோஷமடைய மாட்டார்கள்.

ஆனால்,அந்த களியாட்டங்களுக்கு, அநியாயங்களுக்கு, ஆபாசங்களுக்கு, அக்கிரமங்கள் நடக்கக் கூடிய இடங்களுக்கு சென்று வந்து விட்டால்,அவர்களுக்கு சந்தோஷம். செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், அந்த வாய்ப்பு தவறவிட்டுவிட்டால் அதற்காக அவர்கள் கவலைபடுகிறார்கள்.

இதெல்லாம் மறுமை நம்பிக்கை பலவீனமடைகிறது, இறை நம்பிக்கை நயவஞ்சகமாக மாறுகிறது என்பதற்கான அடையாளம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இஸ்லாம் என்ற கீழ்படிதல் வெளிறங்கத்திலும் உள்றங்கத்திலும் அதற்கு மாற்றமாக மாறுகிறது. அதாவது,நயவஞ்சகர்களின் பாதையை நீ தேர்ந்தெடுக்கிறாய் என்பதற்குரிய அடையாளம்.

மேலும் சொன்னார்கள், நீ திரையை தொங்கவிட்டு, திரையை இழுத்துவிட்டு மக்களின் பார்வையிலிருந்து மறைந்து பாவத்தை செய்யும் போது,காற்று உனது திரையை அகற்றிவிடும் என்று பயப்படுகிறாயே!அல்லாஹ் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான், அல்லாஹ்வின் பார்வையிலிந்து நீ தப்ப முடியாது, மக்களின் பார்வைக்கு திரை போட்டு விட்டாய் அல்லாஹ்வின் பார்வைக்கு உன்னால் திரை போட முடியுமா?

அல்லாஹுவை உன்னை பார்ப்பவனாக நீ நினைக்கவில்லையே, உன்னை சூழ்ந்திருப்பவனாக நீ நம்பிக்கை கொள்ளவில்லையே?இது எவ்வளவு பயங்கரமானது.

(அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக, பாவங்களை விட்டு அல்லாஹ் நம்மை சுத்தப்படுத்துவானாக)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த அறிவுரை நம்மில் ஒவ்வொருவருக்காகவும் பார்த்து சொல்லப்பட்டதை போன்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய மனநிலை, நாம் வாழுகின்ற இந்த சூழ்நிலை பாவங்களைத்தேடி மனிதன் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாவம் நம்மை சூழ்ந்திருக்கிறது. காற்று நம்மை சூழ்ந்திருப்பது போல இன்றைய காலத்தில் நாம் பாவங்களால் சூழப்பட்டிருக்கிறோம்.

நமது மஸ்ஜிதை விட்டு வெளியேறினால் கண்களால் பாவம் ஏற்பட்டு விடுகிறது. செவிகளால் பாவம் ஏற்பட்டு விடுகிறது. அதை தொடர்ந்து உள்ளத்தில் பாவச் சிந்தனைகள் ஏற்பட்டு விடுகின்றது.

வியாபாரம் என்று நுழைந்தால் அங்கிருக்கக்கூடிய சூழ்நிலை விரும்பியோ விரும்பாமலோ மனிதனை பாவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டிருக்கிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த அறிவுரை பாவத்தை குறித்த பயங்கரமான எச்சரிக்கையை நமக்கு செய்கிறது.

குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாவத்தை குறித்து அழுத்தமாக எச்சரிக்கை செய்கிறான்.

பாவம் செய்யாதீர்கள், பாவத்தின் பக்கம் நெருங்காதீர்கள், அல்லாஹுக்கும் அல்லாஹுடைய தூதருக்கும் மாறு செய்யாதீர்கள். அப்படி செய்தால் கடுமையான நரக தண்டனையைக் கொண்டு அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். (அல்குர்ஆன் கருத்து 17 : 33-38, 3 : 32)

நாமோ பாவத்தின் வெளிறங்கத்தை பார்க்கிறோம். ஒரு பாவம் செய்துவிட்டால் அவ்வளவுதானே என்று எண்ணுகிறோம்.

ஆனால், அந்த ஒரு பாவத்திற்குள் மறைந்திருக்கின்ற இறை நிராகரிப்புகள், மன இருக்கங்கள்அவற்றையெல்லாம் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிந்தித்துதான் இந்த அறிவுரையை அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹுவும் அல்லாஹுவின் தூதரும் பாவங்களை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்தார்கள். ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவங்களை குறித்து எவ்வளவு பயந்தார்கள்!

இந்த பாவத்தை குறித்து உங்கள் மீது நான் பயப்படுகிறேன், இதைக் குறித்து பயப்படுகிறேன், இதைப் பற்றி பயப்படுகின்றேன் என்று நூற்றுக்கணக்கான அறிவுரைகளை அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள். பாவங்களின் பட்டியலை சொல்கிறார்கள்.

ஒவ்வொரு ஹதீஸ் நூலும் ரஸூலுடைய அந்த ஹதீஸ்களை கொண்டு நிரம்பியிருக்கின்றன.

நாம் பல நேரங்களில் அவற்றை கேட்கிறோம். ஆனால், கேட்ட மாத்திரத்தில் மறந்து விடுகிறோம். பிறகு, மக்கள் தொடர்பில் நாம் செல்லும்போது, தனித்து விடும்போது அந்த பாவங்களைப் பற்றிய எச்சரிக்கைகளையெல்லாம் நாம் கேட்காததைப்போன்று அல்லது அவையெல்லாம் பாவங்கள் என்று தெரியாததைப் போல அந்த பாவத்திலேயே நாம் மீண்டு விடுகிறோம்.

நமது உள்ளம் அல்லாஹ்வின் அச்சத்திலிருந்து எவ்வளவு இறுகி இருக்கிறது, எவ்வளவு காய்ந்திருக்கிறது? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாவைக் குறித்து சொன்ன அறிவுரைகள் நமக்கு மிகவும் படிப்பினைப்பிற்குரிய விஷயங்கள்.

இப்னு அப்பாஸுடைய மாணவர் சொல்கிறார்; நான் இப்னு அப்பாஸை பல நேரங்களில் பார்த்திருக்கிறேன், அவர்கள் தனது நாவைப் பிடித்து இப்படி பேசுவார்கள்;நாவே!நல்லதை பேசு,உனக்கு நன்மை கிடைக்கும். அல்லது வாய் மூடி இரு,உனக்கு பாதுகாப்பு.

நீ கவலைப்படுவதற்கு முன்னால், நீ பேசிய பேச்சுகளை நினைத்து வருத்தப்படுவதற்கு முன்னால், வாய் மூடி சும்மா இரு. பேசிக்கொண்டு இருக்காதே. தேவையற்றதை பேசாதே, நல்லதாக இருந்தால் பேசு. இல்லையென்றால் வாய் மூடி இரு.

(கிதாபுஸ் ஸுஹ்த் - இமாம் அஹ்மது : 3401)

மேலும்,இப்னு அப்பாஸுடைய மாணவர் ஒருவர் சொல்கிறார்; நான் இப்னு அப்பாஸை பார்த்திருக்கிறேன், தனது நாவின் நடுப்பகுதியை பிடித்து இழுத்துக் கொண்டு, நாவே!உனக்கு ஏற்பட்ட கேடே, ஏன் நீ இப்படி இருக்கிறாய். நல்லதை பேசு,உனக்கு நன்மை ஏற்படும். தீயதை பேசாமல் வாய் மூடி இரு,உனக்கு பாதுகாப்பு ஏற்படும் என்று கூறுவார்கள்.

(கிதாபுஸ் ஸுஹ்த்- இமாம் அஹ்மது : 3403)

அன்பானவர்களே!வாழ்நாளெல்லாம் கல்வி கற்பதிலும், மக்களுக்கு கல்வியை போதிப்பதிலுமே கழித்த ஒரு நபித்தோழர் இப்படி கவலைப்படுகிறார்.

நாமோ, கல்வியிலும் நமக்கு பங்கில்லை, படித்துக் கொடுப்பதிலும் நமக்கு பங்கில்லை. நாம் பேசுவதும் கேட்பதும் வீணான விஷயங்கள்தான். எனவே, நாம் எவ்வளவு கவலைப்பட வேண்டும்.

அப்போது, அந்த மனிதர் இப்னு அப்பாஸிடத்தில் கேட்கிறார், இப்னு அப்பாஸே! எப்போது பார்த்தாலும் நாவின் நடுப்பகுதியை இழுத்துக் கொண்டு அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கின்றீரே. உங்களை நீங்களே வருத்திக் கொண்டிருக்கிறீரே, என்று கேட்கிறார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறுகிறார்கள்:

மனிதன் மறுமையில் தனது நாவின் மீது அவன் கவலைப்படுவது போல, தனது உறுப்புக்களில் எந்த வேறு எந்த உறுப்பின் மீதும் அவன் ஆவேசப்பட மாட்டான்.

கிதாபுஸ் ஸுஹ்த்- இமாம் அஹ்மது : 3403.

இந்த நாவுடைய விபரீதம் அவ்வளவு பயங்கரமானது. அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நாவைக் குறித்து அவ்வளவு எச்சரிக்கைகள் செய்திருக்கிறார்கள்.

அவற்றையெல்லாம் வாழ்வில் உணர்ந்து படித்து பயிற்சி பெற்று பண்பு பெற்றவர்கள் இந்த விஷயத்தை சொல்கிறார்கள்.

மனிதன் தனது உறுப்புக்களில் ஒரு உறுப்பின் மீது ஆவேசப்படுவானென்றால் அது முதலாவதாக நாவாகத்தான் இருக்கும்.

இந்த நாவால் பேசிய புறம், இந்த நாவால் சொல்லிய கோள், இந்த நாவால் செய்த பரிகாசம், பொய் பேசியது, ஏமாற்றியது என எந்த பாவங்களை எடுத்தாலும் அதில் ஒரு பங்கு கண்டிப்பாக நாவுக்கு இருக்கும்.

இறைநிராகரிப்பிலும் நாவுக்கு பங்கிருக்கிறது. இனைவைப்பிலும் நாவிற்கு பங்கிருக்கிறது, மற்ற முரண்பாடுகள், அநியாயங்கள், அக்கிரமங்கள் உட்பட எந்த பாவத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அந்த பாவங்களில் ஏனைய உடல் உறுப்புகள் சம்பந்தப்படும்போது கண்டிப்பாக நாவுக்கும் அங்கே ஒரு பங்கிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

எனவேதான், இந்த நாவைக் குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும்,இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது மாணவருக்கு கூறிய அறிவுரையை அந்த மாணவர் பதிவு செய்கிறார்.

உனக்கு தேவையில்லாததை பேசாதே, அது உனக்கு சிறப்பாகும்.

(இன்று,நம்மில் பலருடைய பழக்கமே தேவையில்லாததை பேசுவதுதான். பலருடைய பழக்கம் வீண் பேச்சுகளை பேசுவது. அவர்களது பேச்சுகளையெல்லாம் மூட்டையாக கட்டி பிறகு ஒரு சல்லடையில் போட்டு சலித்து பார்த்து நல்லதை தனியாகக்கலாம் என்று நினைத்தால் மிஞ்சுவது எதுவும் இருக்காது.)

தேவையில்லாததை பேசாதே, அது உனக்கு சிறப்பாகும். அப்படி தேவையில்லாததை பேசும்போது, அதில் பாவமான பேச்சுகளும் வந்து விடலாம். உனக்கு தேவையாக இருந்தாலும், அவசியமாக இருந்தாலும், அதிகமான நேரங்களில் தேவையானதை கூட பேசாதே,உண்மையில் அந்த இடத்தில் அந்த பேச்சை பேசித்தான் ஆகவேண்டும் என்று நீ அறிந்தாலே தவிர.

தேவையான பேச்சாக இருந்தாலும் கூட அந்த இடம் பொருத்தமான இடம்தானா என்று நீ அறிந்ததற்குப் பிறகு பேசு. அப்படிப்பட்ட பேச்சுக்களைக் கூட நீ பெரும்பாலும் நீ குறைத்துக்கொள்.

நல்லவர்தான், இறையச்சம் உள்ளவர்தான், நல்ல பேச்சைத்தான் பேசினார், ஆனால் இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசிவிட்டார். அதனால் அவர் சிரமத்திற்கு ஆளாகிவிடலாம்.

அடுத்து சொன்னார்கள்:அறிஞரிடத்திலும் தர்க்கம் செய்யாதே, முட்டாளிடத்திலும் தர்க்கம் செய்யாதே.காரணம்,அறிஞரிடத்தில் தர்க்கம் செய்தால் கண்டிப்பாக அவர் உன்னை மிகைத்துவிடலாம். முட்டாளிடத்தில் நீ தர்க்கம் செய்தால் அவன் உன்னை கேவலமாக கருதுவான், அற்பமாக கருதுவான்.

சகோதரனே, உன்னோடு அமர்ந்திருந்த உன்னுடைய நண்பன், உன்னுடைய சகோதரன்உன்னை விட்டு சென்றுவிட்டால், அவன் உன்னை பற்றி எப்படி பேசவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படியே நீயும் அவனைப்பற்றி பேசு.

(கிதாபுஸ் ஸுஹ்த் - இமாம் அபூ தாவூத் எண் : 110)

இன்று சபையிலிருக்கும்போது, சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திலிருந்து நாம் சென்றதற்க்குப் பிறகு அவர் அறிந்திருந்த நமது தவறுகளையோ, குறைகளையோ, அல்லது மற்ற இல்லாத விஷயங்களையோ பேசி காயப்படுத்துவார்கள், அசிங்கப்படுத்துவார்கள்.

இந்த நிலை ஒரு மோசமான நிலை. உனது சகோதரன் உன்னைப் பற்றி உனக்கு பின்னால் எப்படி பேச வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அவன் இல்லாத போதும் நீயும் அப்படியே பேசு.

அன்பானவர்களே! நம்மில் ஒவ்வொருவரும் இப்படியே நடந்து கொண்டால் பிரச்சனையே இருக்காது, மனஸ்தாபமே இருக்காது.இந்த நிலையை நமது சமுதாயம் அடைந்து விட்டால், நமது நட்பு வட்டங்கள் இந்த மனநிலைக்கு வந்து விட்டால், இதைவிட சிறப்பான வாழ்க்கை இருக்காது.

நீங்கள் என்னைப் பற்றி உயர்வாகவும், நான் உங்களைப் பற்றி உயர்வாகவும் பேசுகிறேன் என்று தெரிந்தால் அதனால் மனதிற்கு கிடைக்கக்கூடிய சந்தோஷம் தங்கம் வெள்ளியைவிட உயர்வானது.

மேலும்,இப்னு அப்பாஸ் சொன்னார்கள்:

கவனித்துப்பார், நீ அமல் செய்துகொள், தனது நல்ல அமலுக்கு கூலியும், தனது குற்றத்திற்கு தண்டனையும் உண்டு என்ற உறுதியில் யார் அமல் செய்கிறாரோ அத்தகையவரைப் போல நீ அமல் செய்.

உன்னுடைய அமல்கள் கவணிக்கப்படுவதில்லை, கண்கானிக்கப்படுவதில்லை என்ற எண்ணத்தில் அமல் செய்துவிடாதே. நல்லதை செய்யும்போது அதற்குரிய கூலி உண்டு என்று உறுதிகொள். நீ தீமையை செய்தால் அந்த தீமைக்காக தண்டிக்கபடுவாய் என்பதையும் நீ நம்பிக்கை கொள். அப்படி நம்பிக்கை இருந்தால் அந்த மனிதன் நல்லதை செய்வான் தீயதை விட்டு விடுவான்.

(கிதாபுஸ் ஸுஹ்த் - இமாம் அபூ தாவூத்,எண் : 110)

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு சொன்னார்கள், அல்லாஹ் ஒரு வசனத்தில் சொல்கிறான்:

وَيَقُولُونَ يَاوَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا

வசனத்தின் கருத்து : மறுமையில் மனிதனின் செயலேடுகள் விரித்து அவனுக்கு முன்னால் வைக்கப்பட்டு நீ இதைப்படி என்று சொல்லப்படும். அதை பார்க்கின்ற மனிதன் "எனக்கு ஏற்பட்ட நாசமே, இது என்ன புத்தகம்,சிறியது பெரியது என்று நான் செய்த எதையுமே விடவில்லையே, எல்லாவற்றையும் இந்த புத்தகம் தனக்குள் பதிந்து வைத்துள்ளதே. என்று கதறுவான். (அல்குர்ஆன் 18:49)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கே விளக்கம் சொல்கிறார்கள்:

அல்லாஹ் இந்த வசனத்தில் அந்த புத்த்கம் சிறிய பாவத்தையும் விடாது என்று சொல்கிறானே. சிரியது என்றால் என்ன தெரியுமா?பிறரை பரிகாசம் செய்யும்போது சத்தம் வராமல் நகைப்பது. பெரியது என்றால் என்ன தெரியுமா?பிறரை பரிகாசம் செய்யும்போது சத்தமாக சிரிப்பது என்று சொன்னார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

(கிதாபுஸ் ஸுஹ்த் - இமாம் அபூ தாவூத் எண் : 104)

அன்பானவர்களே, அந்த சஹாபாக்கள் எதையெல்லாம் பாவமாக நினைத்தார்களோ,அவையெல்லாம்இன்று நமது வாழ்க்கையில் பாவமாகவே தெரிவது கிடையாது.

ஒரு முஸ்லிமை கேலி கிண்டல் செய்து அவரை மட்டம் தட்டுவதை, அவருடைய அந்தஸ்தை குறைப்பதற்காக, அவரை மரியாதை குறைவாக நடத்துவதற்காக பரிகாசம் செய்வது, அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பயங்கரமான குற்றம்.

சாடையாக நக்கலாக பேசி ஏற்படக்கூடிய சிரிப்பு ஒரு சிறு பாவம் என்றால், அதே அவரை மானபங்கப்படுத்தோ அல்லது அவரது அந்தஸ்தை குறைக்கும்படி அவரை கேவலமாக பேசி நாம் வெடிசிரிப்பு சிரிப்பது பெரும்பாவம். அதுவும் அந்த ஏட்டில் பதியப்பட்டிருக்கும்.

மேலும் இப்னு அப்பாஸின் மற்றொரு அறிவுரையை கவனியுங்கள்.(குறிப்பாக சீர்திருத்தப் பணியில் ஈடுபடுவர்கள், பிறருக்கு உபதேசம் செய்பவர்கள், பிறருக்கு நல்லதை ஏவுபவர்கள் ஆகியோருக்கு சொல்லுகின்ற அறிவுரை.)

சீர்திருத்தம் செய்பவரே, அறிவுரை சொல்பவரே, உனது சகோதரனின் குறையை நீ நினைவு கூறுவதற்க்கு முன்பு உனது குறைகளை நினைத்துப்பார். நீ ஒரு காரியத்தை செய்யாமல் அதை செய்ய சொல்லி பிறருக்கு நீ அறிவுறுத்துகிறாய். பிறரை ஒரு பாவத்திலிருந்து தடுக்கிறாய்.

ஆனால், அதை நீ செய்கிறாய். இது ஒரு பயங்கரமான நிலை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். தான் எந்த நன்மையை மக்களுக்கு எடுத்து சொல்கிறாரோ அவர் அந்த நன்மையை அதிகம் செய்பவனாக இருக்க வேண்டும். யார் ஒருவர் பிறரை தீமையிலிருந்து தடுக்கிறாரோ, அவர் அந்த தீமையிலிருந்து முற்றிலிலும் விலகியவராக இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் பிறருடைய குறைகளை அங்கே சுட்டிக் காட்டுகின்றான். ஆனால் தனது குறைகளை அவர் பார்ப்பதில்லை என்றால் இது ஒரு பயங்கரமான நிலை.

முஸ்னது அஹ்மது – 3402.

மேலும்,இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஏழைகளுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும், பாவப்பட்டவர்களுக்கும் உதவி செய்வதைக் குறித்தும், ஒரு முஸ்லிமுக்கு உதவி தேவை என்ற இடத்தில் அந்த உதவியை அவருக்கு செய்யாமல் இருப்பது, அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவாமல் இருப்பது குறித்தும் அவர்கள் சொல்லுகின்ற அறிவுரை.

ஒரு பாதிக்கப்பட்டவனுக்கு உதவி தேவை இருக்க, நம்மிடம் வந்து உதவி கேட்கப்பட, அவருக்கு உதவி செய்யாமல் முகத்தை திருப்பிக் கொள்வது அல்லது எதற்கு நமக்கு இந்த பிரச்சினை, நாம் ஏன் அந்த பஞ்சாயத்திற்கு செல்லவேண்டுமென்று தனக்கு அதிகாரம் இருந்தும் அல்லது தன்னுடைய சொல் அந்த இடத்தில் செல்லுபடியாகும் என்று தெரிந்திருந்தும் அவருக்கு உதவி செய்யாமல் ஒருவர் முகம் திருப்பிக் கொண்டு பலவீனப்பட்டவரை புறக்கணிப்பதைக் குறித்து எச்சரிக்கிறார்கள்.

அல்லாஹு தஆலா அய்யூப் அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுத்திருந்தான், செல்வத்தை கொடுத்திருந்தான், கண்ணியத்தை கொடுத்திருந்தான்.

ஆனால், அல்லாஹ் அய்யூப் அலைஹிஸ்ஸலாம்அவர்களை கடுமையாக சோதித்தான். உடலில் உயிரில் என்று.

இப்னு அப்பாஸ் சொன்னார்கள்: அவர்கள் செய்த தவறு என்ன தெரியுமா, ஒரு பாவப்பட்ட மனிதன் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திலிருந்து தன்னை பாதுகாப்பதற்காக, அந்த அநியாத்தை தீர்த்து வைப்பதற்காகஉதவி தேடி வந்த போது, அவர்களுக்கு உதவி செய்ய சக்தி இருந்தபோதும், அந்த பாவப்பட்டவனுக்கு உதவாமல் புறக்கணித்தார்கள். இதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை சோதித்தான் என்று கூறுகிறார்கள்.

(ஹில்யத்துல் அவ்லியா பாகம் 1-  பக்கம் 324)

இன்று, நமது சமுதாயம் காபிர்களின், அநியாயக்காரர்களின் இந்த சூழ்ச்சியினாலும், அவர்களுடைய அக்கிரமங்களினாலும் இப்படி சோதிக்கபட்டிருக்கிறதே? என்று பல காரணங்களை நாம் சிந்தித்து பார்க்கும்போது, நம்முடைய சமுதாயத்தில், எத்தனை பாவப்பட்டவர்கள், எவ்வளவு மிஸ்கீன்கள், எவ்வளவு அநியாயங்களுக்கு உள்ளானவர்கள் தங்களுக்கு பரிகாரம் கிடைக்குமா?தங்களுக்கு அதரவாக யாரும் குரல் கொடுப்பார்களா? என்று தலைவர், ஜமாத் முக்கியஸ்தர்கள் என்று ஒவ்வொருவராக சென்று பார்த்தாலும் அவரது வறுமையினால், அவரது பலகீனமான நிலையினால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஜமாஅத் தலைவர்களும், மற்ற முஸ்லிம்களும் அவருக்கு உதவுவதில்லை. எங்கே சென்று தனது குமுறலை சொல்வது என்று அவர்கள் ஏங்குகிறார்களே. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமல்லவா.

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீது காபிர்களின் இப்படிப்பட்ட அநியாயம் கட்டவிழ்த்து விடப்படுகிறதே! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து சோதனையாகவும் இருக்கலாம். நம்மில் எவ்வளவு பலவீனமானவர்கள் தங்களுடைய உரிமைக்காக, பொருள் சம்மந்தப்பட்டதோ, குடும்பம் சம்மந்தப்பட்டதோ, வேறு எந்த ஹக்கிற்காகவோ, உங்களுடைய கதவை தட்டும்போது உதவி செய்வதற்கு சக்தி இருந்தும் உங்களுடைய பரிந்துரைக்கு மதிப்பிருந்தும் நாம் ஏன் இந்த வம்புக்கு செல்ல வேண்டும், நமக்கு ஏன் இந்த பிரச்சினை என்று ஒதுங்கிக்கொள்கிறோமே, அல்லாஹ் பாதுகாப்பானாக!

இது அல்லாஹுடைய கோபத்தை ஏற்படுத்திவிடுகிறது என்று சிந்தித்து பாருங்கள். ஒரு நபியிடத்தில் உதவி தேடி வந்த ஒரு மிஸ்கீனுக்கு உதவாமல் புறக்கணித்ததற்காக பதினெட்டு ஆண்டுகள் அல்லாஹ் அவர்களை சோதித்தான். அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலும் இப்னு இப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழைகளுக்கு உதவுவதிலும், பலவீனமானவர்களுக்கு ஒத்தாசை செய்வதிலும், தேவையுள்ளவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர்கள் கூறியதைப் படியுங்கள்.

தேவையுள்ள முஸ்லிம்களுடைய குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குறிய வாழ்வாதாரத்தை ஒரு மாதத்திற்கு நான் பொறுப்பேற்று அல்லது ஒரு வாரத்திற்கு அல்லது என்னால் முடிந்த அளவிற்கு தேவையுள்ளவர்களுக்கு நான் உதவுவது ஒரு ஹஜ்ஜுக்குப் பின்னால் ஒரு ஹஜ்ஜை நான் செய்வதை விட எனக்கு விருப்பமானது.

மேலும் சொன்னார்கள்:அல்லாஹுக்காக நான் நேசிக்கின்ற ஒரு முஸ்லிமான சகோதரனுக்கு நான் கொடுக்கக் கூடிய ஒரு உணவு தட்டு, அவருக்கு நான் கொடுக்கக்கூடிய ஒரு சிறிய அன்பளிப்பு அல்லது அவருக்கு நான் செய்யக்கூடிய ஒரு உதவி அல்லாஹ்வின் பாதையில் போரில் நான் செலவு செய்வதைவிட எனக்கு விருப்பமானது.

அல்லாஹ்வின் பாதையில் கொடுக்கின்ற தர்மத்தைவிட ஒரு தனிப்பட்ட முஸ்லிமுக்கு அவருடைய தேவைக்காக நான் கொடுக்கின்ற ஒரு உணவோ ஒரு உதவியோ எனக்கு மிக விருப்பமானது.

(ஹில்யத்துல் அவ்லியா பாகம் 1-  பக்கம் 328)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், பிறருக்கு உதவுவதில் அவ்வளவு அழகாக நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.

இது, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய மார்க்கத்தின், நீதமான, நேர்மையான, நடுநிலையான போக்கு.ஒரு இபாதத்தை நீங்கள் செய்து விடுகிறீர்கள், கடமை நீங்கி விடுகிறது. அடுத்து நீங்கள் அந்த இபாதத்தை செய்யும்போது அது உபரியான வணக்கம்.

அதே நேரத்தில் உங்களுக்கு அருகில் அந்த உதவிக்கும் ஒத்தாசைக்கும் தேவையான ஒரு மனிதர் இருக்க, அந்த செல்வத்தை அல்லாஹுடைய இபாதத்தில் செலவழிப்பதைவிட அந்த முஃமினுக்காக நீங்கள் செலவழித்து, அந்த முஃமினுடைய தேவையை நிறைவேற்றுவது அல்லாஹுக்கு மிக விருப்பமானது.

சிலர் தர்மம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கக்கூடிய தர்மம் இஸ்லாமிய ஒழுக்கங்களுக்கு உட்பட்டதா?

இது குறித்து இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லக்கூடிய ஒரு அழகிய அறிவுரையை கவனியுங்கள்.

நீ செய்கின்ற நல்ல காரியத்தின் பரிபூரணத்துவம் என்பது,நீ செய்கின்ற அந்த நன்மையை விரைந்து செய், அதை குறைத்து மதிப்பிடு, அதை மறைத்துச் செய்.

(அல்பிதாயா - இப்னு கசீர் 12/107)

எவ்வளவு அழகிய அறிவுரை! நீ நினைத்த நன்மையை தள்ளிப் போடாதே. நஃப்ஸில் ஊசலாட்டங்கள் ஏற்பட்டு விடலாம். நீ ஒரு பத்து ரூபாய் தர்மம் செய்ய நினைத்திருப்பாய், கொஞ்சம் தள்ளிப் போட்டால் அது ஐந்து ரூபாயாக ஆகிவிடும். பிறகு பாதியாகி விடும், பிறகு இல்லாமலேயே போகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

யாருக்கு கொடுக்க நினைக்கிறாயோ, கொடுக்க நினைப்பதை உடனடியாக கொடுத்துவிடு.

சிலர் நினைப்பார்கள், தனது சகோதரனுக்கு, சகோதரிக்கு, அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு கொடுக்கலாம் என்று நினைப்பார்கள். நினைத்த உடன் அதை எடுத்து ஒதுக்கி உடனே அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு இவ்வளவு எடுத்து வைத்திருக்கின்றேன் என்று அவர்களுக்கு வாக்கை கொடுத்து விடவேண்டும்.

இதை உடனே உங்களால் செய்ய முடியவில்லையன்றாலும் யாரிடத்திலாவது கொடுத்து உடனே அனுப்பிவிட வேண்டும். இல்லை என்றால் ஷைத்தான் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.

பிறகு நீங்கள் கொடுக்க நினைத்தது பாதியாகிவிடும். நமக்கு தேவையிருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாமே என்று தள்ளிப் போட்டு விடுவோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.

இப்னு அப்பாஸ் சொன்னார்கள்: கொடுக்கப்படக்கூடிய அன்பளிப்பு, கொடை, உதவி, என்பது கொடுப்பவரின் பார்வையில் குறைவாகவே இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு ஆயிரத்தை அல்ல, ஒரு லட்சத்தை அல்ல, ஒரு கோடியை அல்ல, எத்தனை கோடிகளை கொடுத்தாலும், நான் அல்லாஹுடைய பாதையில் கொடுப்பது குறைவு. நான் எவ்வளவோ செய்ய வேண்டும், ஆனால் இவ்வளவுதான் செய்கின்றேன் என்று நீ கொடுத்ததை குறைவாக மதிப்பிடு.

ஆனால் நாமோ குறைவாக கொடுத்து நிறைவாக நினைக்கின்றோம். நபித்தோழர்களோ அள்ளி அள்ளி கொடுத்தார்கள். காலையில் மூட்டை மூட்டையாக வந்த தங்கம் வெள்ளிகளையெல்லாம் இஃப்தார் நேரத்திற்குள் கொடுத்து விடுவார்கள்.

பிறகும் நாம் அல்லாஹுடைய பாதையில் தேவையான அளவு தர்மம் செய்யவில்லையே என்ற கவலையில், கைசேதத்தில் இருந்தார்கள்.

நாமோ நமக்கு கிடைப்பதில் சில சில்லறை காசுகளை கொடுத்துவிட்டு அதையே பெரிய கொடையாக நினைக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொன்னார்கள்: நீ கொடுப்பதை மறைத்துக்கொடு, மக்களுக்கு காட்டாதே, வெளிப்படுத்திவிடாதே. நீ அப்படி வெளிப்படுத்தி கொடுக்கும்போது, அது உனக்கு முகஸ்துதியின் வாசலை திறந்து விடலாம்.

நீ யாருக்கு கொடுக்கிறாயோ அவருடைய உள்ளத்தை அது உடைத்து விடலாம். மக்களை பார்க்கும்போது அவர் வெட்கப்படலாம். ஆகவே, நீ கொடுப்பதை நீ மறைத்துக்கொடு.

நீ கொடுக்கும் எண்ணம் உனக்கு உறுதியாக இருப்பதற்காக உடனே அதை தீவிரப்படுத்தி கொடுத்துவிடு. உனக்கு பெருமை வந்து விடக்கூடாது. எனவே, நீ கொடுப்பதை எப்போதும் குறைவாக கருது.

(அல்பிதாயா - இப்னு கஸீர் 12/106)

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், மவுத்தை குறித்து ஒரு அழகான அறிவுரை சொல்கிறார்கள்:

அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடு என்று நான் உனக்கு அறிவுரை சொல்கிறேன்.

தன்னுடைய மாணவர் ஜுன்துப் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லக்கூடிய அறிவுரை, அல்லாஹுக்காக அமல் செய், தொழுகையை நிலைநிறுத்து, ஜகாத்தை கொடு.

நீ எந்த ஒரு நண்மை செய்தாலும், அந்த நண்மை உன்னிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும். அது அல்லாஹ்வின் பக்கம் உயர்த்தப்படும். ஜுன்துபே, நீ ஒவ்வொரு நாளும் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறாய்.

(அல்பிதாயா - இன்பு கஸீர் 12/106)

(ஒவ்வொரு நாளும் நாம் இந்த உலகத்தை விட்டு தூரமாகி மறுமைக்கு நெருங்கி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காலை விடியும் போதும் நமது மரணத்திற்குண்டான தேதிக்கு நாம் நெருக்கமாகி வருகிறோம்.

அதை நாம் நினைத்து பார்க்கிறோமா? இந்த உலகத்தில் வாழ்கிறோம் என்று சந்தோஷப்படுகிறோம்.அதே நேரத்தில் என்னுடைய வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டதுஎன்று சிந்திக்கின்றோமா?)

ஆகவே, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:

நீ தொழக்கூடிய ஒவ்வொரு தொழுகையையும் இந்த உலகத்தை விட்டு பிரிகின்ற, இந்த தொழுகைக்குப் பிறகு உனக்கு உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் இருப்பவன் எப்படி தொழுவானோ அந்த மண ஓர்மையோடு தொழுது கொள்.

இந்த உலகத்தில் நீ வாழும்போது வெளியூரில் இருக்கின்ற ஒரு அண்ணியனைப் போல் வாழ், ஒரு முஸாஃபிரைப் போன்று வாழ். கண்டிப்பாக கபுரில் நீ தங்கத்தான் போகிறாய். உனது பாவத்தை நினைத்து நீ அழு. உனது தவறுகளுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்.

உன்னிடத்தில் இருக்கக்கூடிய செல்வங்கள் தங்கம், வெள்ளி, மாடமாளிகை, மற்றும் அவ்வளவு துன்யாவும் உன்னுடைய பிய்ந்த செருப்பின் வாரைவிட உனது பார்வையில் அற்பமாக இருக்கட்டும். அதை விட்டு நீ பிரிந்து விட்டதைப் போன்று நினைத்துக் கொள். அல்லாஹ்வின் நீதத்தின் பக்கம் நீ வந்திருப்பதைப் போல் நீ நினைத்துக் கொள்.

அப்படி அல்லாஹ்வுக்கு முன்னால் நீ வந்து நிற்கும்போது எந்த செல்வங்களை உனக்கு பின்னால் விட்டுவிட்டு வந்தாயோ அந்த செல்வங்கள் உனக்கு உதவி செய்யுமா?உனக்கு நன்மை செய்யுமா? அல்லது எந்த செல்வங்களை அல்லாஹ்விடத்தில் அனுப்பி நன்மைகளை சேகரித்துவிட்டு அல்லாஹுக்கு முன்னால் வந்தாயே அந்த அமல்கள், அந்த தர்மங்கள் உனக்கு பலன் தருமா? என்று யோசித்துக்கொள்.

(அல்பிதாயா - இன்பு கஸீர் 12/106)

இன்று, நம்மை பொறுத்தவரை ஆகிரத்திற்கு நாம் அனுப்பக்கூடிய செல்வங்கள் அதிகமா?அல்லது துன்யாவில் நாம் விட்டுச் செல்லக்கூடிய செல்வங்கள் அதிகமா?என்று யோசித்துப் பாருங்கள்.

நாம் இந்த துன்யாவிற்கு எவ்வளவு சேர்க்கிறோமென்றால், ஆஃகிரத்திற்கு எவ்வளவு தர்மங்களை அனுப்புகிறோமென்றால், ஏதோ ஆஃகிரத்தில் தற்காலிகமாக தங்கப்போகிறோம், திரும்ப இந்த உலகித்திற்கு வரப்போகிறோம்,எனவே இந்த உலகத்தில் அதிகம் சேர்த்துவைத்து விட்டு அற்பமாக தர்மங்களை செய்கிறோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அன்பானவர்களே! அந்த நல்லவர்கள் எப்படி தர்மம் செய்தார்களென்றால், இந்த உலகத்தை விட்டு செல்லப் போகிறோம், இனி வரப்போவதில்லை, இந்த செல்வங்களையெல்லாம் மறுமைக்கு எடுத்து செல்வோம் என்று அவர்கள் நினைத்த காரணத்தால், இந்த செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் வாரி வாரி வழங்கினார்கள்.

ஏழைகளுக்கு வழங்கினார்கள், அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளுக்கு உதவினார்கள், அல்லாஹுடைய மார்க்க கல்வி மதராஸக்களுக்கு உதவினார்கள். ஏழை எளியவர்கள், அல்லாஹுடைய பாதையில் ஜிஹாதுக்கு, நன்மையான காரியங்கள் என்று ஒவ்வொன்றையும் தேடி செலவு செய்தார்கள். அல்லாஹுடைய பாதையில் வசிய்யத் செய்தார்கள்.

நம்முடைய பலவீனமான நிலை எப்படியிருக்கிறதென்றால், நாம் இங்கு நிறைய சேர்க்கிறோம், அந்த நிலையை பார்த்தால் ஏதோ ஆஃகிரத்தில் தற்காலிகமாக தங்கப்போகிறோம், திரும்ப இந்த உலகித்திற்கு நம்மை அல்லாஹ் அனுப்புவானோ? என்ற எண்ணத்தில்தான் இன்று பலருடைய மறுமைக்கான தர்மங்கள் இருக்கின்றன. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாப்பானாக!

நிறைய அறிவுரைகளை மார்க்க அறிஞர் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்தோம். அல்லாஹ் இந்த நல்ல அறிவுரைகளைக் கொண்டு அனைவருக்கும் நற்பலனைத் தருவானாக. அறிவுரைகளை கேட்டு நல்ல விஷயங்களை பின்பற்றக்கூடிய நன்மக்களில் அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/