HOME      Khutba      அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 2 - 3) | Tamil Bayan - 437   
 

அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 2 - 3) | Tamil Bayan - 437

           

அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 2 - 3) | Tamil Bayan - 437


அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 2-3)

வரிசை : 437

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 14-10-2016 | 13-01-1438

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறுஎனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களை மன்னித்தருள்வானாக!

நன்மைகளை செய்து, நன்மைகளை ஏவி, தீமைகளை விட்டு விலகி தீமைகளை விட்டு மக்களை தடுத்து அல்லாஹ்விற்கு பொருத்தமான அவனுடைய தீனை முழுமையாக பின்பற்றி வாழக்கூடிய நன் மக்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும்ஆக்கி அருள்வானாக!

கண்ணியத்திற்குரியவர்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய தர்பியாவில் ஒழுக்கம் பெற்ற,அவர்களுடைய நல்லொழுக்க தக்வாவின்பயிற்சியில் அவர்களுடைய கல்விகூடத்தில் கல்வி பெற்ற,அவர்களுடைய ஈமானிய போதனைகளில் ஈமானையும் யகீனையும் பெற்ற நபித்தோழர்களைப் பற்றி நாம் அறிந்து வருகிறோம்.

அல்லாஹு தஆலா தனது நபியை எப்படி நபிமார்களில் தேர்ந்தெடுத்தானோ அதுபோன்று நபித்தோழர்களை அல்லாஹுத்தஆலா உம்மத்துகளில் தனது நபியின் தோழமைக்காகதனது நபியை கொண்டுஈமான் கொண்டு,அந்த நபிக்கு உதவி செய்வதற்காக,அவர்களோடு வாழ்வதற்காக,அவர்களிடமிருந்து இந்த மார்க்கத்தை கற்று,அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்காக,நம்பிக்கைக்குரிய சிறந்த சமுதாயமாக அந்த நபித்தோழர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.

அந்த நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் படிப்பதன் மூலமாக அவர்கள் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் வரும்போது அவர்கள் எப்படி இந்த மார்க்கத்தை பின்பற்றினார்களோ அதுபோன்று நாமும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும்.

அதற்காகத்தான் நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் தெரிந்து வருகிறோம். அந்த தொடரில் அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவருடைய மகனார் அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய வாழ்க்கை வரலார்றை நாம் பார்த்து வந்தோம்.

சிறு பிராயத்திலிருந்து அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதரின் மீதும், இந்த மார்க்கத்தின் மீதும்மிக ஆழமான பாசம் கொண்டிருந்த இப்னு அப்பாஸ் அவர்கள் எந்த அளவு மார்க்க கல்வி கற்பதில், மார்க்கத்தைப் பேணுவதில்ஆர்வம் உள்ளவர்களாகவும்துடிப்புள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்று அவரைப் பற்றிய மேலும் விஷயங்களை நாம் அறிய வேண்டி இருக்கிறது.

அன்பானவர்களே! சென்ற ஜும்ஆ உரையில் நாம் முடிக்கும்போது, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள்,கலிஃபா உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும், அந்தஸ்து உடையவர்களாகவும் இருந்தார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம்.

அந்த கண்ணியம் அவர்களின் வாழ்நாள் வரை நீடித்திருந்தது. இங்கே நாம் ஒரு முக்கியமான நிகழ்வை பார்க்கப் போகிறோம்

இப்னு அப்பாஸ் உடைய தந்தை அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய மகனார் கலிஃபா உமரிடத்தில் இவ்வளவு ஒரு பெரிய நெருக்கத்தில் இருப்பதை பார்க்கிறார்கள். ஒரு தந்தைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

காசால் பணத்தால் மற்ற ஏதாவது வசதி வாய்ப்புகளால் மனிதன் தேடிக் கொள்ளக் கூடிய கண்ணியம் நிரந்தரமானதல்ல. அது அழியக் கூடிய ஒன்று. அது பகட்டான ஒன்று.

கல்வியினாலும் தக்வாவினாலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய கண்ணியம் தான் அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்தது. அந்த கண்ணியம், பணம் வசதி அழகு குடும்ப கவுரவம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று.

அதைத்தான் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் பெற்றிருந்தார்கள்.

ஒரு முறை இப்னு அப்பாஸ் உடைய தந்தை அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் தனது மகன் அப்துல்லாஹ்வை அழைக்கிறார்கள்.

மேலும் சொல்கிறார்கள்: அப்துல்லாஹ்! இந்த கலிஃபா உமர் அவர்கள் உன் மீது பாசம் வைத்திருக்கிறார்கள், தங்களது சபையின் உனக்கென ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கிறார்கள், உம்மை தமக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக ஆக்கியிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ்! நான் உனக்கு மூன்று ஒழுக்கங்களை சொல்லித் தருகிறேன். நீ கலிஃபா உமரிடத்தில், நபியின் ஒரு பெரிய தோழரிடத்தில் பழகுகின்றாய்.

எனவே, நான் 3ஒழுக்கங்களை சொல்லித் தருகிறேன். அதை நீ பேணிக்காத்து நடந்துகொள்.

1. அவருடைய சபையில் அல்லது அவருடைய தனிமையில் அவர் உன்னிடத்தில் பேசக்கூடிய எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தி விடாதே! கலிஃபா உடைய எந்த ரகசியத்தையும் நீ பகிரங்கப்படுத்தி விடாதே!

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

அன்பானவர்களே! ரகசியத்தை பாதுகாப்பது முஸ்லிம்களுடைய ஒரு முக்கியமான பண்பு. குறிப்பாக மன்னர்களிடத்தில் பழகும் போது அவர்களுடைய முடிவுகளில் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ரகசியங்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அமானிதமாக அந்த ரகசியங்களை அவர்கள் நன்மையை கருதி ஆலோசனைக்காக பரிமாறிக் கொள்வது உண்டு.

இப்படிப்பட்ட ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் போது, அதில் ஒரு பயங்கரமான பின் விளைவை ஏற்படுத்தி விடும். அது ஆரோக்கியமான நட்புக்கும் அழகான நடைமுறைக்கும் உகந்ததல்ல.

எனவேதான், முதலாவதாக சொல்கிறார்கள்; அவருடைய எந்த ரகசியத்தையும் நீ பகிரங்கப்படுத்தி விடாதே!

தனது மகனுக்கு அமானிதத்தை பேணக்கூடிய நம்பிக்கைக்குரியவராக இருக்கின்ற அந்த உயர்ந்த குணத்தை அழுத்தம் திருத்தமாக போதிக்கிறார்கள்.

அடுத்து சொல்கிறார்கள்: யாரைப் பற்றியும் நீ அவரிடத்தில் புறம் பேசி விடாதே!

நீ ஏமாந்து போய் மற்ற மனிதர்களைப் பற்றி அல்லது மற்ற நபித் தோழர்களைப் பற்றி மற்ற அவையில் உள்ளவர்களை பற்றியோ அல்லது பணியாளர்களைப் பற்றியோ நீ அவரிடத்தில் புறம் பேசி விடாதே! அவர்களைப் பற்றி நீ கலீஃபாவிடத்தில் எதுவும் தவறுதலாக பேசி விடாதே!

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

இது பொதுவாக நடக்கக் கூடிய ஒன்று. ஒரு பதவியில் இருப்பவருக்கு பொறுப்பில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக ஒருவர் ஆகிவிட்டால், தன்னுடைய நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக, தன்னுடைய நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக, அந்த பதவி அதிகாரம் உடைய விடமிருந்து தனக்கு நல்ல பெயரை அதிகம் சம்பாதித்து கொள்வதற்காக, மற்றவரைப் பற்றி பேசுவது உண்மையில் அவர்களுடைய உண்மை நிலையை பற்றி ஆரம்பத்தில் சொல்ல ஆரம்பித்தாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே கூடுதலாகி, பல நேரங்களில் தன்னைப்பற்றி அதிகாரம் உடையவர்கள் நல்ல மதிப்பை வைக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத விஷயங்களை எல்லாம் பேசும்படி இருக்கின்ற விஷயங்களையும் அதிகப்படுத்தி பேசுவதற்கு தூண்டிவிடும்.

இது ஷைத்தான் உடைய மிகப்பெரிய ஊசலாட்டதிற்க்கும் வழிகேட்டிற்கும் ஒரு வாசலை திறந்து விடும். இது ஒரு ஆரோக்கியமான நல்ல குணம் உடையவர்கள் உடைய பண்பாடு கிடையாது.

ஏனென்றால், யார் உங்களிடத்தில் பிறரைப் பற்றி புறம் பேசுகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக உங்களைப் பற்றியும் பிறரிடத்தில் பேசுவார்கள்.

கலீஃபா உமரைப் பொருத்தவரை அவர்கள் மிகப்பெரிய நுண்ணறிவு உடையவர்கள். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள், உமரின் நாவால் சத்தியம் பேசுகிறது என்று சொன்னார்கள்.

உமருடைய கருத்துக்கு, சிந்தனைக்கு, அறிவுக்குஆலோசனைக்கு ஏற்ப பல இடங்களில் அல்லாஹு தஆலா குர்ஆனுடைய வசனத்தை அவருடைய கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணமாக இறக்கி இருக்கிறான்.

எனவே, உமர் அவர்கள் ஒரு விஷயத்தை அதனுடைய மேலோட்டமாக பார்ப்பதைவிட அதற்குரிய ஆழத்திலிருந்து பார்ப்பது தான் அதிகம்.

எனவே, உன்னுடைய இந்த பழக்கம் உமருக்கு அதிருப்தி கொடுத்துவிட்டால், உன்னுடைய இம்மையும் நாசமாகிவிடும். மறுமையும் நாசமாகிவிடும்.

எனவே, அவருடைய ரகசியத்தை மக்களிடத்தில் சொல்வதோ அவரிடத்தில் பிறரை பற்றி புறம் பேசுவதோ உன்னிடமிருந்து நிகழ்ந்து விட வேண்டாம்.

மூன்றாவது சொல்கிறார்கள்: இது மிக முத்தான அறிவுரை. அவரிடம் பொய் பேசி விடாதே! நீ பொய் பேசுபவன் என்று அவர் உணரும் படி நடந்து கொள்ளாதே! உனது நாவில் பொய் கலந்து விட வேண்டாம்.

இந்த மூன்று அறிவுரைகளை தன்னுடைய மகனுக்கு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

தனது தந்தை இப்படி அறிவுரை செய்தார் என்று தன்னுடைய மாணவர் இமாம் ஷஅபி இடத்தில் இப்னு அப்பாஸ் அவர்கள் சொல்கிறார்கள். அப்போது அந்த மாணவர் சொல்கிறார்:

இப்னு அப்பாஸ் அவர்களே! உங்கள் தந்தை உங்களுக்கு செய்த இந்த ஒவ்வொரு அறிவுரையும் ஆயிரம் தினாரை விட உங்களுக்கு மதிப்பு உடையது ஆயிற்றே என்று தனது ஆசிரியர் இடத்தில் மாணவர் கூற, அதற்கு ஆசிரியர் இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள்:

இல்லை, ஒவ்வொரு அறிவுரைகளும் 10ஆயிரம் தங்கக் காசுகளை விட மதிப்புடையதாக நான் கருதுகிறேன். எனக்கு என்னுடைய தந்தை 10,000தங்க காசுகளை எனக்கு கொடுப்பதைவிட இந்த மூன்று அறிவுரைகளை எனக்கு மேலானதாக நினைக்கிறேன்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

இன்று,பிள்ளைகளெல்லாம் தந்தையிடமிருந்து சொத்தையும் செல்வத்தையும் அவருடைய வசதியையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்,வசதிக்காகவே செல்வதற்காகவே தந்தைகளை நேசிக்கின்ற இந்த காலத்தில்,ஒழுக்கத்திற்காகவும் தர்பியத்திற்காகவும் நேசித்த இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுநமக்கு ஒரு படிப்பினையாக பாடமாக இருக்கிறார்கள்.

தனது தந்தையிடமிருந்து நாம் பெறுகின்ற உண்மையான சொத்து அவருடைய உலகச் செல்வங்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இந்த உலகச் செல்வங்கள் அவர் நமக்குக் கொடுக்கவில்லை என்றாலும்,நமக்கு அந்த செல்வங்களை அவர் விட்டுச் செல்லவில்லை என்றாலும்,நமக்கு செல்வம் ஒன்றை அல்லாஹ் விதி எழுதி இருந்தால் அந்த செல்வத்தை அடைந்து தான் நாம் மரணிப்போம்.

இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொன்னார்கள்:

«مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ»

ஒரு தந்தை தனது மகனுக்கு கொடுக்கக்கூடிய அன்பளிப்புகளில் சிறந்தது நல்ல ஒழுக்கம் என்று.

நூல் : திர்மிதி, எண் : 1952. (ஹதீஸ் முர்ஸல்)

இதைத்தான் இந்த சம்பவத்தில் நாம் பார்க்கிறோம். தந்தை தனது மகனிடத்தில் கல்வி இருந்தும் கூட, தன்னுடைய மகனிடத்தில் உயர்ந்த நபித்தோழர்கள் உடைய பழக்கம் இருந்தும்கூட, தன்னுடைய பங்குக்கு தன்னுடைய மகனுக்கு சொல்லக்கூடிய அறிவுரையை தேவையற்றதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கருதவில்லை.

இங்கே இன்னொரு படிப்பினையை பாருங்கள். இன்று, நம்மில் சிலருக்கு ஏற்படக்கூடிய ஒரு சறுக்குதல் என்று, அல்லது ஒரு தவறான மனப்பான்மை என்று சொல்லலாம்.

தங்களுக்கு கொஞ்சம் கல்வி அனுபவம் வந்துவிட்டால், தந்தையின் அருகில் இருந்தும், தந்தையின் அனுபவத்திலிருந்தும், தந்தையின் போதனை இருந்தும், தங்களை தேவையற்றவர்களாக கருதுவது.

உங்களுக்கு தெரிவதை விட எங்களுக்கு தெரியும் .உங்களுக்கு என்ன தெரியப்போகிறது. நீங்கள் சும்மா இருங்கள். இப்படி எல்லாம் தனது தந்தையை மதிக்காமல் பேசுகின்ற மக்களுக்கு மத்தியில் பிள்ளைகளுக்கு மத்தியில் இங்கே இப்னு அப்பாஸ் அவர்கள் தனித்து நிற்கிறார்கள்.

ரசூலுல்லாஹ்விடத்தில் கல்வியை படித்து, பெரிய நபித்தோழர்களிடத்தில் கல்வியை படித்திருந்தும் கூட, கல்வி தன்னிடத்தில் அதிகமாக இருந்தும்கூட, அந்தக் கல்வியின் ஆதிக்கத்தை அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை.

தன்னுடைய அறிவு திறமையை தந்தைக்கு முன்னால் அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஒன்றுமே அறியாத மாணவர் புதிதாக ஒரு விஷயத்தை தனது ஆசிரியரிடமிருந்து கேட்கும்போது, எவ்வளவு பணிவாக அடக்கத்தோடு அந்த உபதேசம் தனக்கு தேவை என்பதாக கேட்பாரோ, அதுபோன்று அதே அமைப்பில் இப்னு அப்பாஸ் அவர்கள் தனது தந்தை சொல்லக்கூடிய அந்த அறிவுரையை கேட்டுக் கொள்கிறார்கள்.

வெறும் செவி அளவில் கேட்பது மட்டுமல்லாமல், அதை உள்ளத்தில் வாங்கிக் கொள்கிறார்கள்.

பிறகு சொல்கிறார்கள்: எனது தந்தை எனக்கு செய்த இந்த ஒவ்வொரு அறிவுரையும் 10,000தங்க காசுகளை விட எனக்கு மதிப்புடையது என்று.

இப்படிப்பட்டவர்கள் தான் சமுதாயத்தில் தலைவர்களாக மாறுகிறார்கள். சமுதாயத்தின் வழிகாட்டிகளாக அல்லாஹ் இவர்களை மாற்றுகிறான். இவர்களுக்கென்று ஒரு சுபீட்சமான வெளிச்சமான பிரகாசமான எதிர்காலத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எழுதுகின்றான்.

இப்படி, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்தக் கல்வியின் திறமை ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து, அறிவோடும் ஹதீஸின் ஆழத்தோடும் ஒப்பிட்டுப் பார்த்து எடுக்கக்கூடிய முடிவு வரலாற்றில் பல சம்பவங்களில் நாம் பார்க்கின்றோம்

உதாரணமாக, அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஷியாக்கள் என்பவர்கள் அலியுடைய காலத்தில் உருவாகி, அலி அவர்களையே அல்லாஹ் என்று சொல்கின்ற அளவுக்கு அவர்கள் துணிச்சல் கொண்டார்கள்.

இப்படிப்பட்டவர்களை கைதிகளாக கொண்டு வரச்செய்து, அவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு தவ்ஹீதை ஈமானை சொல்கிறார்கள்.

ஆனால், அந்த ஷியாக்களோ அவர்களுடைய கொள்கையிலிருந்து விலக தயார் இல்லை. இறுதியாக கோபம் கொண்ட அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பெரிய குழியை தோண்டி, அதில் நெருப்பை மூட்டி, அந்த ஷியாக்களை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நெருப்பு குழியில் தள்ளுகிறார்கள்.

தள்ளுகின்ற அந்த நேரத்தில் ஒவ்வொரு ஷியாவும் சொல்லி சாகின்றான்:அலிதான் அல்லாஹ் என்பதை நான் இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன் என்று எரிந்து கொண்ட நிலையில் சொல்லி சாகிறார்கள்.

அலி அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய மனக்கவலை ஏற்பட்டது. அப்போது தான் அந்த செய்தி அங்கே இல்லாத இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தெரிய வரும்போது அவர்கள் சொன்னார்கள்:

அலி அவர்களே! நான் இந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படி நெருப்பால் வேதனை செய்வதற்கு அனுமதித்திருக்க மாட்டேன்.

ஏனென்றால், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

«لَا تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ»

அல்லாஹ்வுடைய தண்டனையாக நெருப்பைக் கொண்டு நீங்கள் தண்டிக்காதீர்கள் என்று.

இப்படி ரசூலுல்லாஹ் சொல்லி இருக்கின்ற காரணத்தால், நான் இருந்திருந்தால் அவர்களை கொன்றிருப்பேன்.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:

«مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ»

யார் தன்னுடைய மார்க்கத்தை மாற்றிக் கொண்டாலும் அவனை நீங்கள் சொல்லுங்கள் என்று.

இந்த ஹதீஸின் அடிப்படையில் நான் அவர்களைக் கொன்றிருப்பேனே தவிர, நெருப்பிலிட்டு பொசுக்கி இருக்கமாட்டேன். (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1458.

இப்படி,இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவருடைய அறிவு,அவர்களுடைய குர்ஆன் ஹதீஸிலிருந்து அவருடைய புரிதல் மிக ஆழமாக இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம்.

முஹம்மது இப்னு உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு அவருடைய மகனார் சொல்கின்றார்கள்: எனது தந்தை இடத்தில் இப்னு அப்பாஸ் அமர்ந்து,சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்து சென்ற பிறகு எனது தந்தை சொன்னார்கள்:

இவர் இந்த உம்மத் உடைய பேரறிஞராக இருப்பார். இவருக்கு அல்லாஹு தஆலா நுண்ணறிவையும் சிறந்த புத்திக்கூர்மையும் ஒரு காரியத்தை எப்படி புரிய வேண்டுமோ அந்த புரியக் கூடிய ஆற்றலையும் கொடுத்து இருக்கின்றான். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) இவருக்காக துஆ செய்திருக்கிறார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்,இப்னு அப்பாஸ் உடைய மாணவர் மற்றும் அடிமையாக இருந்த இக்ரிமா இடத்தில் சொல்கிறார்கள்:

(இத்தனைக்கும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இப்னு அப்பாஸுக்கும் இடையில் சில கருத்து வேற்றுமைகள் இருந்தன. இருந்தாலும் அந்த நபித்தோழர்கள் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருந்த மரியாதையை நாம் புரிய வருகிறோம்.)

சொல்லுகின்றார்கள்:  இக்ரிமா! உன்னுடைய எஜமானர் இப்னு அப்பாஸ் இறந்து போனவர்களிலும் அவர் பெரிய கல்விமானாக இருந்தார். இப்போது உயிராக இருப்பவர்களிலும் அவர் பெரிய கல்விமானாக இருக்கிறார்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

நபித்தோழர்கள்,இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மிகவும் போற்றி மதித்து வாழ்ந்தார்கள்.ஒருமுறை தன்னுடைய ஆசிரியர்,தான் யாரிடமிருந்து குர்ஆனை கற்றாரோ அந்த சஹாபி ஜய்த் இப்னு ஸாபித் அவர்கள் தனது வாகனத்தில் (குதிரையோ அல்லது ஒட்டகமோ)ஏறுவதற்காக அவர்கள் தயாரானபோது,அங்கே இருந்த இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு ஓடோடி வந்து,வாகனத்தின் கடிவாளத்தை வாகனம் அங்குமிங்கும் செல்லாமல் பிடித்துக் கொள்கிறார்கள்.

அப்போதுஜய்த் இப்னு ஸாபித் சொல்லுகிறார்: ரசூலுல்லாஹ் உடைய சிறிய தந்தையின் மகனே!நீங்கள் இப்படி செய்யாதீர்கள். நீங்கள் இப்படி எங்களுக்கு பணிவிடை செய்வது எங்களுக்கு சிரமம் கொடுக்கிறது என்பதாக சொல்ல அங்கே இப்னு அப்பாஸ் பணிவான பதில் தருகிறார்கள்.

எங்களது அறிஞர்களுக்கு இப்படி கண்ணியம் கொடுக்க வேண்டும் என்று எங்களது மார்க்கத்தில் எங்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் அறிஞர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தான் நாங்கள் பணிக்கப்பட்டு இருக்கின்றோம் என்று கூற, ஆசிரியர் சொல்கிறார்:

உனது இரு கரங்களையும் எனக்கு காட்டு என்பதாக. இப்னு அப்பாஸ் உடனே இருகரங்களையும் காட்டுகின்றார். எதற்கு ஆசிரியர் காட்டச் சொல்கிறார் என்று தெரியவில்லை.

உடனே சைய்த் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த இரு கரங்களையும் முத்தமிட்டார்கள். மேலும் சொன்னார்கள்: நபியின் குடும்பத்தாரோடு நாங்கள் இப்படித்தான் மரியாதையோடு நடந்து கொள்ளவேண்டும் என்று எங்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனார் உபைதுல்லாஹ் (இருவரும் பெரிய கல்விமான்)சொல்கிறார்:இப்னு அப்பாஸ் அவர்கள் மக்களைவிட பல விஷயங்களில் முந்தி இருந்தார்கள்.

ஒன்று,முன்னோர் உடைய கல்வி எல்லாம் இப்போது இவரிடத்தில் இருக்கிறது. எத்தனை மூத்தசகாபாக்கள் இறந்துவிட்டார்களோ அவர்களுடைய கல்வி இப்போது இவரிடத்தில் இருக்கிறது.

மக்களுக்கு இப்போது என்ன இல்மு தேவையோ அந்த இல்மு இவரிடத்தில் இருக்கிறது. நல்ல அறிவு இருக்கிறது. புத்தி கூர்மை, சகிப்புத்தன்மைஇருக்கிறது. நல்ல பரம்பரையும் இருக்கிறது. கொடைத்தன்மை உடையவராகவும் இருக்கிறார்.

மேலும், சொல்லுகின்றார்கள்: தங்களுக்கு முந்தி சென்றவர்களின் கல்வியின் விஷயத்திலும், ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸ், அதுபோன்று அபூபக்ர் உமர் உஸ்மான் ஆகிய மூன்று குலஃபாக்கள் உடைய தீர்ப்புகள் போன்ற விஷயங்களையும் அதிகம் அறிந்தவர் இப்போது இப்னு அப்பாஸை விட வேறு யாரும் இல்லை.

நாங்கள் அவரிடத்தில் கல்வி படிப்பதற்காக செல்வோம். ஒரு நல்ல மாலைப்பொழுது முழுக்க அசரிலிருந்து இஷா வரை எங்களுக்கு நபியின் போர்களை பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார்.

அடுத்த நாள் மாலையில் எங்களுக்கு வம்சத்தைப் பற்றி உண்டான அறிவை சொல்லிக் கொண்டிருப்பார். அடுத்த நாள் மாலை வரும்போது அரபு இலக்கண இலக்கியங்களைப் பற்றிய கவிதைகளை எங்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்.

இப்படி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சஹாபாக்கள் உடைய பிள்ளைகளும் ஒரு சிறந்த அபிப்பிராயத்தை கொண்டிருக்கிறார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

இமாம் ஹஸன் பஸரி அவர்கள் இப்னு அப்பாஸை பற்றி சொல்லும்போது, அவருடைய மார்க்கப்பற்றை பற்றி நான் என்ன சொல்வது? அவருடைய குர்ஆனுடைய அறிவைப் பற்றி நான் என்ன சொல்வது?

மிம்பரில் ஏறுவார், சூரத்துல் பகராவை அப்படியே மனனமாக ஓதி, ஒவ்வொரு ஆயத்தையும் விளக்குவார். சூரா ஆல இம்ரானின் ஒவ்வொரு வசனமாக ஓதி அதை விளக்குவார்.

இன்று, சில நிமிடங்கள் பேசுவதாக இருந்தாலும் கூ,ட ஒரு வசனத்திற்கு விளக்கம் சொல்வதாக இருந்தாலும் கூட, பல நூல்களைப் படித்து விட்டு, அவற்றிலிருந்து தமக்குத் தேவையானதை மனப்பாடம் செய்து கொள்ள முடியாமல், அதை நாம் எழுதி வைத்துக் கொண்டு வந்தால் தான் சில நிமிடங்கள் பேச முடியும்.

இங்கே பல விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும். அவருடைய கல்வி சபை எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்.

சூரத்துல் பகராவை சீக்கிரமாக சரளமாக ஓத வேண்டும் என்று சொன்னால் கூட, ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் குறைந்து தேவை. ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கமும் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு 200வசனங்களை உடைய சூரா ஆல இம்ரான் குறைந்தது, 1 1/2மணி நேரங்கள் தேவை.

இந்த இரண்டு சூராக்களை தொடர்ந்து நிற்காமல் ஓதுவது என்றாலே ஒரு நான்கு மணி நேரங்கள் தேவையாக இருக்கும்போது, இந்த சூராக்களை ஓதி அதற்குரிய விளக்கங்களையும் சொல்லிக்கொண்டே சென்றார்கள் என்றால், அவர்கள் கல்விக்கு கொடுத்த அந்த நேரத்தை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இன்று, நம்மவர்களுக்கு அரை மணி நேர கல்வி சபை சளைத்து விடுகிறது. தூக்கம் வந்துவிடுகிறது. போதும் என்ற சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.

இதே உலக விஷயமாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போமே என்று சொல்வார்கள். .

யார் எதில் ருசி கண்டார்களோ அவர்கள் அதற்காக நேரத்தை கொடுப்பார்கள்.

அந்த நபித் தோழர்களும் தஃபீயீன்களும் அல்லாஹ்வுடைய குர்ஆனில் அல்லாஹ்வுடைய வேதத்தில் ருசி கண்டார்கள். எனவே, அந்த வேதத்தை படிப்பதிலும் அந்த வேதத்தை கற்றுக் கொள்வதிலும் கற்றுக் கொடுப்பதிலும் அவர்களுக்கு சோர்வு வரவில்லை. அவர்களுக்கு அசதி வரவில்லை. அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை.

காரணம் அல்லாஹ்வுடைய இல்மில் தீனில் அவருக்கு இருந்த ஈடுபாடு. இதுபோன்ற ஒரு சம்பவத்தை பற்றி அவர்களுடைய மாணவர் அபூ வாயில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லுகின்றார்கள்:

ஒருமுறை அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு ஹஜ்ஜுக்கு அமீராக வந்திருந்தார்கள். அந்த பயணத்தில் இந்த தஃபியீ உடன் இருக்கிறார். அரஃபா மைதானத்தில் அங்கு வரக்கூடிய அறிஞர்களுக்கு ஹாஜிகளுக்கு அறிவுரை செய்வதுண்டு. ரசூலுல்லாஹ் (ஸல்) அரஃபா மைதானத்தில் பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ் அவர்கள், (ஏறக்குறைய 64வசனங்களை உடைய) சூரத்துல் நூரை ஆரம்பித்து, ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் சொல்கிறார்கள். அவர்களுடைய பயான் அதுதான்

இன்று, மக்கள் எல்லாம் கதைகளையும் கற்பனைகளையும் தங்களுடைய அனுபவங்களையும் பேசிக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், நபித்தோழர்களின் பயான்களைப் பாருங்கள்.

அவர்களுடைய பயான் குர்ஆனாக இருந்தது. குர்ஆனின் விளக்கமாக இருந்தது. அங்கே அரஃபா மைதானத்தில் ஹாஜிகளுக்கு அவர் அறிவுரை சொல்லுகின்றார்கள். சூரத்துல் நூரை ஆரம்பித்து, அதனுடைய இறுதி வசனம் வரை ஓதி, ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் சொல்கின்றார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

அபூ வாயில் சொல்லுகின்றார்: இப்னு அப்பாஸ் உடைய இந்தப் பேச்சை போல் வேறு யாருடைய பேச்சையும் நான் கேட்டதில்லை.

பிறகு சொல்கிறார்கள்: இப்னு அப்பாஸ் உடைய இந்த பயானை பாரசீலர்களும் ரோமர்களும் துருக்கியர்களும் கேட்டு இருப்பார்களேயானால், கண்டிப்பாக அவர்கள் எல்லாம் இஸ்லாமிற்குள் வந்துவிடுவார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

அந்த அளவுக்கு இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகப்பெரிய கல்வி ஞானம் உடையவராக இருந்தார்கள்.

இவருடைய வணக்க வழிபாட்டை பற்றியும் இவர்களுடைய இறையச்சத்தை பற்றியும் இவர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருந்த கல்வின் ஞானத்தால் இந்த சமுதாயத்திற்கு செய்த தொண்டுகளை பற்றியும் நிறைய நாம் பேச வேண்டியது இருக்கிறது

ஒரு சில உதாரணங்களை கவனியுங்கள்.இப்னு அபீ முலைக்கா -தாஃபியீன்களில் மூத்த தாஃபியீன், இறை நேசம் உடைய ஒரு பெரிய கல்விமான்.

நீங்கள், புகாரி முஸ்லிம் மற்றும் ஏனைய ஹதீஸ் நூலில் நீங்கள் பார்த்தால், இவருடைய பெயர் அங்கங்கே அடிபட்டு கொண்டே வரும், இவர் இப்படி சொல்லியிருக்கிறார் என்று. அந்த அளவுக்கு கல்விமான்களிலேயே மிக மூத்தவர்.

அவர்கள் சொல்கின்றார்காள்: நான் இப்னு அப்பாஸ் உடன் மக்காவிலிருந்து மதினா வரை பயணம் செய்து வந்தேன். இரவு நேரம் ஆகிவிட்டால், அவர் இரண்டு இரண்டு ரக்அத்தாக தொழுவார்கள்.

குர்ஆனை ஒவ்வொரு வசனமாக நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். அதுவும் அவர்கள் ஓதும் போது அழுகை கலந்த தொணியில் கவலை கலந்த அந்த தொணியோடு குரலை ராகமாக ஓதிக் கொண்டே இருப்பார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

இன்னொரு மாணவர் அபுரஜா சொல்கின்றார்கள்:இப்னு அப்பாஸ் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் அச்சத்தால் தொழுகையில் அழுது அழுது அவருடைய கன்னத்தில் அழுகையின் கோடு அடையாளமாக பதிந்து விட்டன என்று.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

அந்த அளவு இப்னு அப்பாஸ் அவர்கள் இறையச்சம் உடையவர்களாக இருந்தார்கள். அதுபோன்று கொடைத்தன்மையிலும் சிறந்து விளங்கினார்கள். தனக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அபூ அய்யூப் அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு விருந்தோம்பல் செய்த ஒரு பெரிய நபித்தோழர்.

ரசூலுல்லாஹ்விற்கு வீட்டை கொடுத்து விட்டு, தன்னுடைய செல்வத்தை எல்லாம் அல்லாஹ்வுடைய தூதருக்கு தியாகம் செய்துவிட்டு தனக்கு வறுமையை தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு பெரிய நபித்தோழர் அவர்கள்.

அவர்களுக்கு வயோகத்தில் வறுமை கஷ்டம் ஏற்பட்டது. அப்போது கலீஃபாவாக இருந்த முஆவியாவிடத்தில் வந்து தங்களுடைய கடனை பற்றி தங்களுடைய பிரச்சனையை பற்றி சொல்கின்றார்கள்.

ஆனால், மூஆவியா அவர்கள் ஏதோ காரணத்தால் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. அவருடைய தேவையை நிறைவேற்றவில்லை.

அப்போது அபு அய்யூப் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு அப்பாஸ் இடத்தில் வருகிறார்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு தங்களுடைய விருந்தினர் இல்லத்தில் விருந்தினர்களுக்காக வைத்திருந்த வீட்டை காலி செய்து கொடுக்கின்றார்கள், இந்த வீட்டில் நீங்கள் தங்குங்கள் என்று.

பிறகு, செல்லுகிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதரோடு நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்களோ அப்படி நான் உங்களுடன் நடந்து கொள்ளப் போகிறேன். நீங்கள் எப்படி எங்களுடைய ரசூலுக்கு கண்ணியம் கொடுத்தீர்களோ அதுபோன்று கண்ணியத்தை நான் உங்களுக்கு கொடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு, உங்களுக்கு இப்போது கடன் எவ்வளவு இருக்கிறது என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவர்கள் 20,000என் மீது கடனாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அப்படியா 40ஆயிரம் தினார்ரை நான் உங்களுக்கு தருகிறேன். அதுபோன்று 20அடிமைகளை தருகிறேன். இந்த வீட்டில் என்னுடைய செல்வங்கள் என்னென்ன இருக்கின்றனவோ அத்தனை செல்வங்களையும் உங்களுக்கு தருகிறேன், நீங்கள் மதினாவிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

இப்படிப்பட்ட ஒரு பெரிய கொடைத் தன்மை உடையவராக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுவிளங்கினார்கள்.

மேலும்,இப்னு அப்பாஸ் உடைய ஆழ்ந்த அனுபவம்,மார்க்க கல்வியில் குர்ஆன் சுன்னாவின் ஞானத்தில் அவர்களுக்கு இருந்த ஒரு மதி நுட்பத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால்,இந்த உம்மத்தில் பலவிதமான குழப்பங்கள் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ் தனக்கு கொடுத்த அந்த இல்மை கொண்டு அந்த குழப்பத்தின் நெருப்பை அணைக்க கூடியவர்களாக இருந்தார்கள்.

உதாரணத்திற்கு,அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் அலி அவர்களை எதிர்த்து காரிஜியாக்கள் என்று சொல்லுகின்ற ஒரு கூட்டம் உறுவானார்கள்.

அதாவது, சஹாபாக்களை ஏசி, அவர்களுக்கு மார்க்கம் விளங்காது, அவர்கள் மார்க்கத்தில் தவறு செய்துவிட்டார்கள் என்று கூறி, நபித்தோழர்களை விட்டு விலகி, தனியாக ஒரு கூட்டத்தை உண்டாக்கினார்கள். அவர்களை தான் ஹரூரிய்யா, காரிஜிய்யாஎன்று சொல்லப்படும்.

வணக்கங்கள் அவர்களிடத்தில் பஞ்சமில்லாமல் இருக்கும். ஆனால் நபித் தோழர்களுக்கு கலிஃபாவிற்கு கட்டுப்படுவது என்பது அவர்களிடத்தில் இருக்கவே இருக்காது.

ஏறக் குறைய ஒரு 24ஆயிரத்திற்கும் மேற்பட்ட காரிஜியாக்கள் எல்லாம் (போர் வீரர்கள்) ஓரிடத்தில் ஒன்றுகூடி விட்டு அலி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களை எதிர்த்துப் போர் செய்வதற்காக வேண்டி தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முடிந்த அளவு போரை தவிர்ப்போம் என்பதாக அவர்கள் ஆலோசனை செய்து இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களை அனுப்புகிறார்கள்.

நீங்கள் காரிஜியாக்களிடம் சென்று பேசுங்கள். அவர்களுக்கு எந்த விஷயத்தில் சந்தேகம் இருக்கிறதோ அதற்கு நீங்கள் விளக்கம் சொல்லுங்கள். முஸ்லிம்களுடைய உயிரை நாம் பாதுகாப்போம்.

ஏனென்றால், இந்த காரிஜியாக்கள் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு நாம் இருந்துவிட முடியாது. காரணம், யாரெல்லாம் தங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்கள் எல்லாம் கொல்வதை மார்க்கமாக கொண்டு விட்டார்கள்.

சமுதாயத்தை விட்டு பிரிந்து கிலாபத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுங்கி விட்டால் அது ஒரு பிரச்சினை. ஆனால், அதை விட பெரிய பிரச்சனை, தங்களோடு சேராதவர்களையும் தங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் கொல்வதை மார்க்கமாகவும் அல்லாஹ்வுடைய கட்டளையாகவும் அவர்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.

அந்த அடிப்படையில் நபித்தோழர்களை கொல்வது,பக்கத்து கிராமங்களில் உள்ள மக்களை கொல்வது,தங்களை கடந்து செல்லக்கூடிய வழிப்போக்கர்களை கொல்வது என்று கொலை செய்வதையே மார்க்கமாக அந்த காரிஜியாக்கள் ஆக்கிக் கொண்டார்கள்.

எனவே, கண்டிப்பாக ஒன்று இவர்கள் தவ்பா செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் இவர்களது கதையை முடிக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்ட போது,அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு அப்பாஸை அனுப்புகின்றார்கள்.

இப்னு அப்பாஸ் அவர்கள் நல்ல ஆடையை உடுத்திக் கொண்டு மக்களிடத்தில் வரும்போது,அந்த மக்கள் பார்த்து,இப்னு அப்பாஸ்! என்ன இவ்வளவு உயர்ந்த ஆடை அணிந்து கொண்டு வருகிறாயே? காரணம் என்ன?என்று கேட்கிறார்கள்.

(அவர்கள் மார்க்கம் என்றால் துறவரம் என்பதாகவும், அதாவது வறுமையிலும் எப்போதும் தன்னை ஒரு பெரிய பக்கீராக காட்டி கொள்வதுமாக விளங்கி இருந்தார்கள்.)

இப்னு அப்பாஸ் ஒரு நல்ல ஆடை அணிந்து வரும் போது இது என்ன ஒரு பகட்டு விஷயம் என்பதாக ஆட்சேபனை செய்தார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ் சொன்னார்கள்: நான் இந்த ஆடை அணிகிறேன் என்று உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால்,அல்லாஹ்வுடைய தூதர் அவர்களை நான் பார்த்திருக்கிறேன்;அவர்கள் அழகிய ஆடை அணிந்து இருக்கிறார்கள்.

அல்லாஹ் அப்போது இவர்களுக்கு என்ற வசனத்தை இறக்கினான்.

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' (அல்குர்ஆன் 7 : 32)

அந்த அலங்காரங்களை அனுபவிப்பதில் எந்த தப்பும் இல்லை, நல்ல உணவுகளை உண்பதில் எந்த தப்பும் இல்லை என்று பதிலளிக்கிறார்கள்.

அப்போது அந்த பதிலை கேட்டதற்கு பிறகு, அந்தக் காரிஜியாக்கள் இப்னு அப்பாஸிடம் கேட்கிறார்கள்:

இப்னு அப்பாஸ்! நீங்கள் ஏன் இப்போது வந்திருக்கிறீர்கள்? என்ன காரணம்? என்பதாக. அதற்கு இப்னு அப்பாஸ் சொல்கிறார்கள்:

ரசூலுல்லாஹ் உடைய சாசாவின் மகனார் அலியின் விஷயத்தில் நீங்கள் எதை குறை காண்கிறீர்கள்?எந்த குற்றத்தை அவர்களிடம் பார்க்கிறீர்கள்?என்று கேட்கிறீர்கள்.

அப்போது அந்த காரிஜியாக்கள் சொல்கிறார்கள்:அவர் செய்கின்ற மூன்று விஷயங்கள் எங்களுக்கு பிடிக்கவில்லை. அந்த மூன்று விஷயங்களை நாங்கள் குற்றமாக பார்க்கிறோம்.

அந்த மூன்று காரியங்கள் என்ன?என்று இப்னு அப்பாஸ் கேட்கிறார்கள்.

முதலாவதாக சொல்கிறார்கள்: அல்லாஹ்வுடைய மார்க்கம் என்று வரும்பொழுது அல்லாஹ்வுடைய வேதத்தைதான் தீர்ப்பாக சட்டமாக ஆக்க வேண்டும். ஆனால், அலி அவர்களோ மனிதர்களை தீர்ப்பாளர்களாக ஆக்கி மனிதர்கள் சொல்லக்கூடிய தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறார்.

(அதாவது, அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் தரப்பிலிருந்து அலி அவர்கள் அபு மூஸாவையும், முஆவியா அவர்கள் தங்கள் தரப்பில் அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் நடுவராக அனுப்புகிறார்கள்.)

இப்படி மனிதரை நடுவராக ஆக்கியது தவறு. நீங்கள் குர்ஆனையும் சுன்னாவையும் தான் நடுவராக ஆக்கவேண்டும் என்பதாக நாங்கள் குற்றம் கருதுகின்றோம்.

இப்படி சொன்னவுடன், அடுத்து நீங்கள் என்ன குற்றம் காணகிறீர்கள்?என்பதாக இப்னு அப்பாஸ் கேட்கிறார்கள்.

அதற்கு காரிஜியாக்கள் சொல்கிறார்கள்: அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் போர் செய்தார்கள். ஆனால்,போர் செய்துவிட்டு நீங்கள் யாரையும் அடிமையாக்கவில்லை.கனிமத் பொருளையும் எடுக்கவில்லை.அப்படியே திரும்பி விட்டீர்களே?

நீங்கள் யாரிடத்தில் போர் செய்தீர்களோ அவர்கள் காஃபிர்களாக இருந்தால்அவர்களுடைய செல்வம் நமக்கு ஹலாலாக இருக்கிறது.எனவே ஏன் அதை எடுக்கவில்லை?அவர்கள் முஃமின்களாக இருந்தால்அவர்களிடத்தில் சண்டை செய்வதும் அவர்களை கொல்வதும் ஹராமாக இருக்கிறது.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் அதை செய்தது தவறு என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது என்ன தவறு? என்பதாக இப்னு அப்பாஸ் கேட்கிறார்கள்.

அப்போது அந்த மக்கள் சொல்கிறார்கள்:இருவருக்கும் இடையே ஒப்பந்தம் நடந்தபோது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களுடைய பெயரோடு அமீருல் முஃமினீன் என்று எழுதப்பட்டது.

அப்போது முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தரப்பினர்கள், நீங்கள் அமீருல் முஃமினீன் என்று நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த பிரச்சினைக்கு வந்திருக்க மாட்டோம்.

எனவே இப்போது நீங்கள் அமீருல் முஃமினீன் என்று எழுதாதீர்கள் என்று சொல்ல, அலி அவர்களும் அந்தப் பேச்சை ஏற்றுக்கொண்டு அமீருல் மூஃமினீன் என்று எழுதவில்லை.

அப்போது அந்த காரிஜியாக்கள் கேட்கிறார்கள்: அவர் அப்போது அமீருல் முஃமினாக இருக்கவில்லை என்றால், அமீருல் காஃபிராக இருந்தாரா?என்பதாக.

இப்படி மூன்று ஆட்சேபனையை சொல்ல து இப்னு அப்பாஸ் சொல்கின்றார்கள்: அல்லாஹ்வுடைய தெளிவான வேதத்திலிருந்தும் ரசூலுல்லாஹ் உடைய சுன்னாவில் இருந்தும் நீங்கள் சந்தேகம் பட முடியாத அளவுக்கு பதில் கூறினால் இந்தக் கொள்கையை விட்டு நீங்கள் திரும்பி வந்து விடுவீர்களா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று பதில் சொன்னார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களுக்கு விளக்கம் தருகிறார்கள்.

சூரத்துல் மாயிதா உடைய 95-ஆவது வசனத்தில் இஹ்ராமுடைய நிலையில் யாராவது ஹஜ்ஜுக்கு செல்லும் போது வேட்டை பிராணிகளில் எதையாவது கொன்று விட்டால், அந்த வேட்டை பிராணிக்கு விலை நிர்ணயித்து அந்த விலையின் அளவுக்கு தர்மம் கொடுக்க வேண்டும்.

அந்த விலையை நிர்ணயிப்பதற்கு அல்லாஹ் என்ன சொல்கின்றான்?

فَجَزَاءٌ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ

உங்களில் உள்ள நீதமான இருவர் நடுவராக இருந்து அதற்குரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று.(அல்குர்ஆன் 5 : 95)

இந்த வசனத்தை ஓதி விட்டு கேட்கிறார்கள். ஒரு முயல் உடைய உயிரை நிர்ணயிப்பதற்கு ஒரு மானுடைய உயிரை நிர்ணயிப்பதற்கு அல்லாஹ் நம்மிலிருந்து 2நடுவர்களை ஏற்படுத்த சொல்லியிருக்கின்றான்.

முஃமினுடைய உயிரை பாதுகாப்பதற்கு மக்களின் நடுவர்களை ஏற்படுத்துவது என்ன தவறு? என்று.

பிறகு சொல்கிறார்கள்: சூரத்துன் நிஸா உடைய 35-ஆவது வசனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், ஆணுடைய குடும்பத்திலிருந்து ஒரு தீர்ப்பாளர் பெண்ணுடைய குடும்பத்திலிருந்து ஒரு தீர்ப்பாளரை கொண்டு வந்து, நீங்கள் உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

ஒரு குடும்ப வாழ்க்கையை சீர் செய்வதற்கு இரண்டு தீர்ப்பாளர்களை அல்லாஹ் அங்கீகரிக்கும் போது, முஸ்லிம்களில் பிளவுபட்ட இரண்டு சமூகத்தாரை சீர் செய்வதற்கு மக்களிலிருந்து நீதவான்களை தீர்ப்பாளர் ஆக ஆக்குவதில் என்ன தவறு இருக்கிறது?

இந்த சந்தேகம் உங்களுக்கு தீர்ந்து விட்டதா? என்று கேட்டவுடன், இதற்குரிய சந்தேகம் எங்களுக்கு தீர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

அடுத்து கேட்கிறார்கள்; இரண்டாவது நீங்கள் கேட்ட கேள்வி. போர் செய்தீர்கள், ஆனால் கனிமத்தை நீங்கள் எடுக்கவில்லை என்று.

அதற்கு இப்னு அப்பாஸ் கேட்டார்கள்: அந்தப் போரில் முஆவியாவின் பக்கத்தில் ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஇருக்கிறார்கள்.

உங்களுடைய தாயாகிய ஆயிஷாவையா நீங்கள் அடிமைகளாக்கி கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

அல்லாஹ் குர்ஆனில் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ

நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிரை விட நெருக்கமானவர்கள். நபியின் மனைவிமார்கள் மூமின்களுக்கு தாய்மார்கள். (அல்குர்ஆன் 33 : 6)

யாரை நீங்கள் கனிமத்துகளாக எடுக்கச் சொல்கிறீர்கள்?யாரை நீங்கள் அடிமைப்படுத்த சொல்கிறீர்கள்?உங்களுடைய தாயையா?இரண்டு வழிகேட்டில் ஒரு வழிகேட்டில் நீங்கள் செல்ல போகிறீர்கள்.எந்த வழிகேட்டில் செல்லப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்குரிய பதிலை நீங்கள் அடைந்து கொண்டீர்களா? என்று கேட்டவுடன், அடைந்து கொண்டோம் என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது, அமீருல் முஃமினீன் என்பதை அழித்தது பற்றி கேட்கிறார்கள்.

அதற்கு இப்னு அப்பாஸ் பதில் தருகிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) ஹுதைபியா ஒப்பந்தத்தில் காஃபிர்களோடு ஒப்பந்தம் செய்தபோது ரசூலுல்லாஹ் –அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று எழுதினார்கள்.

அப்போது அந்த காஃபிர்கள் ஒத்துக் கொள்ளாத போது ரசூலுல்லாஹ் என்பதை அழித்துவிட்டு, அல்லாஹ்வுடைய மகன் முஹம்மது எழுதுவது என்று எழுதினார்களே? அப்படி என்றால் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அவர்கள் அல்லாஹ்வுடைய ரசூலாக இல்லையா?

அதே அடிப்படையில்தானே அலி செய்தார்கள் என்று சொன்னவுடன், இந்த மூன்றாவதற்குரிய சந்தேகமும் உங்களுக்கு தீர்ந்து விட்டதா? என்று சொன்னவுடன் தீர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

அங்கே 24ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.20,000பேர் தவ்பா செய்துவிட்டு அலியோடு வந்துவிடுகிறார்கள்.

பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்4/200

அன்பானவர்களே!அல்லாஹுதஆலா இவர்களுக்கு கொடுத்திருந்த கல்வி ஞானம். எனவே, இவர்கள் குர்ஆனை ஆழ்ந்து புரிந்து இருந்தார்கள். மார்க்கத்தை விளங்கி இருந்தார்கள்.

இதுதான் ரசூலுல்லாஹ் உடைய அந்த துஆவின் வெளிப்பாடு. யா அல்லாஹ்! இவருக்கு ஞானத்தைக் கொடு, தீனின் விளக்கத்தை கொடு.

அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் பதில் கொடுத்தார்கள்.

அவர்களுடைய ஒரு உபதேசத்தை கூறி இந்த குத்பாவை நிறைவு செய்வோம். இப்னு அப்பாஸ் அவர்கள் சொல்கிறார்கள்:

பாவம் செய்பவனே! உனது பாவத்தின் முடிவின் விஷயத்தில் அச்சமற்று இருந்துவிடாதே! பாவத்திற்கு பின்னால் ஏற்படக்கூடிய விளைவு பாவத்தை விட பயங்கரமாக இருக்கும்.

பாவம் செய்பவனே! நீ பாவம் செய்யும்போது உனது வலது பக்கத்திலும் இடப் பக்கத்திலும் இருக்கின்ற அந்த வானவர்களைப் பார்த்து வெட்கப்படாமல் நீ இருக்கிறாயே! அதுவும் பாவத்தை விட குறைந்தது இல்லையே.

பாவம் செய்துவிட்டு பாவத்தைப் பற்றி நீ சிரிக்கின்றாயே! அல்லாஹ் உன்னுடன் எப்படி நடந்து கொள்வான்? என்று புரியாமல் இருக்கின்றாயே! அது நீ செய்த பாவத்தை விட பயங்கரமானது.

நீ ஒரு பாவத்தை செய்து விட்டு அந்தப் பாவத்தை செய்தோம் என்று பெருமை கொள்கிறாயே! அது நீ செய்த பாவத்தை விட பயங்கரமானது.

ஒரு தவறான காரியத்தை நீ செய்ய வேண்டும் என்று நினைத்து அந்தப் பாவமான காரியத்தை செய்ய முடியவில்லை என்றால் அதற்காக நீ கவலைப்படுகிறாய். அது அந்த பாவத்தை விட பயங்கரமானது.

திரையை போட்டுவிட்டு அந்த திரைக்குள் நீ இருந்துகொண்டு பாவம் செய்யும்போது, அந்த திரை அகன்று விட்டால், நான் செய்கின்ற பாவத்தை மக்கள் பார்த்து விடுவார்கள் என்று பயப்படுகிறாய். அல்லாஹ்வுடைய பார்வையிலிருந்து நீ தப்ப முடியாது. அல்லாஹ்வை பயப்படாமல் அந்த திரையை நீ பயப்படுகிறாய். இது நீ செய்கின்ற பாவத்தை விட பயங்கரமானது.

பாவம் செய்பவனே! உனது பாவத்திற்காக மன்னிப்பு தேடிக் கொள். பாவத்திற்கு பின்னால் ஏற்படக் கூடிய காரியம் பாவத்தை விட பயங்கரமாக இருக்கும்.

பார்க்க : மவாரிதுள் ளம்ஆன் லி துரூஸிஸ்ஸமான்

இப்படி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய அறிவுரை ஏராளம் இருக்கிறது.இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நாம் பார்ப்போம்.

இப்படிப்பட்ட நபித்தோழர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் படிக்கும் போது, அவர்களுக்காக நாம் துஆ செய்வதோடு, அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கல்வியை கற்றுஅந்த நபித்தோழர் உடைய பாதையில் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய குடும்பத்தையும் அவர்கள் கூறிய அந்த நல்ல அறிவுரைகளை கொண்டு நல்லொழுக்க பயிற்சிகளை கொடுத்து, நம்முடைய நண்பர்களுக்கும், அறிமுகமான சகோதர சகோதரிகளுக்கும் இந்த நல்ல விஷயங்களை பரப்பி, அது போன்ற ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ عَلِيًّا حَرَّقَ قَوْمًا ارْتَدُّوا عَنِ الإِسْلَامِ، فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ، فَقَالَ: لَوْ كُنْتُ أَنَا لَقَتَلْتُهُمْ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ». وَلَمْ أَكُنْ لِأُحَرِّقَهُمْ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ»، فَبَلَغَ ذَلِكَ عَلِيًّا، فَقَالَ: صَدَقَ ابْنُ عَبَّاسٍ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ فِي المُرْتَدِّ، وَاخْتَلَفُوا فِي المَرْأَةِ إِذَا ارْتَدَّتْ عَنِ الإِسْلَامِ، فَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ العِلْمِ: تُقْتَلُ، وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ، وَأَحْمَدَ، وَإِسْحَاقَ. وَقَالَتْ طَائِفَةٌ مِنْهُمْ: تُحْبَسُ وَلَا تُقْتَلُ، وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ، وَغَيْرِهِ مِنْ أَهْلِ الكُوفَةِ (سنن الترمذي- 1458) [حكم الألباني] : صحيح

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/