ரமழானின் இறுதி பத்து தினங்கள் | Tamil Bayan - 438
ரமழானின் இறுதி பத்து தினங்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானின் இறுதி பத்து தினங்கள்
வரிசை : 438
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 24-06-2016 | 19-09-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை அஞ்சி வாழ்வது இம்மை, மறுமையின் வெற்றிக்கு காரணம் என்பதை உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக,இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மீது பெரும் உபகாரம் செய்திருக்கின்றான். அவனுடைய அருள் நம் மீது மிக மகத்தானது. அல்லாஹ் நமக்கு வழி காட்டவில்லை என்றால், அவன் நமக்கு உதவி செய்யவில்லை என்றால், நாம் நன்மைகளை செய்வதற்கு அவன் நமக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் கண்டிப்பாக எந்த ஒரு சிறிய இபாதத்தை கூட நம்மால் செய்ய முடியாது.
அதுபோன்று, அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா பாவங்களை விட்டு நம்மை பாதுகாக்கவில்லை என்றால் நம்மால் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களுடைய நூலில் ஒரு பாடத்தை அமைக்கிறார்கள்.
ஹதீஸின் பாடத் தலைப்பு; (6611)
المعصوم من عصمه الله- 'அல்லாஹ்வால் பாதுகாக்கப் பெற்றவரே மாசற்றவர் ஆவார்'.யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்தான் பாதுக்கப்பட்டவர்.
அல்லாஹ்வின் சிபத்துக்களை, அல்லாஹ்வின் செயல்களை, புரிந்து கொண்டவர் இப்படித்தான் சொல்வார்.
நபிமார்களின் கூற்றுக்களை கவனியுங்கள்.
وما توفيقي إلا بالله
"நான் எந்த ஒரு நன்மையும் செய்வதற்கு வாய்ப்பைப் பெற முடியாது அல்லாஹ்வை கொண்டே தவிர". (அல்குர்ஆன் 11:88)
அல்லாஹ்வின் உதவி அருள் இல்லாமல் நான் எந்த ஒரு நன்மையையும் செய்து கொள்ள முடியாது. அது போன்றுதான் சொர்க்கத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் அதற்கும் அல்லாஹ்வுடைய ரஹ்மத் முக்கியம்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், தன்னுடைய தோழர்களுக்கு ஒரு அறிவுரை செய்யும் போது கூறினார்கள்.
«لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ»
"உங்களில் யாரும் தங்களுடைய அமலால் சொர்க்கம் சென்று விட முடியாது, அல்லாஹ் கருணைக் காட்டினாலே தவிர".
அப்போது தோழர்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! சரி எங்களை பொறுத்தவரை எங்களுடைய அமல் சாதாரணமான அமல், நீங்கள் நபியாயிற்றே! உங்களது நிலை என்ன? என்று கேட்டபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ
நானும் அப்படித்தான், நானும் சுவர்க்கம் செல்ல முடியாது, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கொண்டு அல்லாஹ் என்னை கட்டி அணைத்துக்கொண்டாளே தவிர. அல்லாஹ் அவனது அருளைக் கொண்டு என்னை அரவணைத்து கொண்டாலே தவிர நானும் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5673.
ஒவ்வொரு முஸ்லிமும் இந்த ரமலானுடைய மாதத்தில் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அல்லாஹ்வுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நொடியிலும் எப்போதுமே முஸ்லிம் அப்படித்தான் இருக்க வேண்டும். இந்த ரமலானுடைய ஒவ்வொரு சுஜூதையும், ஒவ்வொரு ருகூவையும், ஒவ்வொரு கியாமையும் இதில் நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல காரியத்தையும், ஒரு ஏழைக்கு நீங்கள் ஒரு ரூபாயை செலவு செய்தாலும் கூட, யா அல்லாஹ்! இதன் பொருட்டால் என்னை நீ மன்னித்துவிடு;
யா அல்லாஹ்! உனது ரஹ்மத்து எனக்கு எழுது! மறுமையின் துன்பங்களிலிருந்து மறுமையின் அமல்களில் இருந்து என்னை நீ பாதுகாத்துக் கொள் என்ற ஆதரவோடு தான் இந்த மாதத்தில் ஒவ்வொரு சிறிய, பெரிய அமலையும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எந்த நேரத்தில் எந்த அமலுக்கு பிறகு நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்ளில் நாம் பதிவுசெய்யப்படுகிறோம், நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் பதிவு செய்யப் படுகிறோம் என்பது நமக்கு தெரியாது. ஒவ்வொரு அமலையும் அதன் ஆதரவு வைத்து தான் நாம் செய்ய வேண்டும்.
இந்த ரமலான் உடைய ஒரு பெரும்பகுதி முடிந்து கொண்டிருக்கின்ற இந்த தருவாயில் இன்னொரு முக்கியமான பகுதியை நாம் அடைய இருக்கிறோம்.
அதுதான் ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவு என்று வர்ணிக்கப்படுகின்ற மிகமிக சிறப்பிற்குரிய இரவுகள். மொத்த ரமலான் மாதமும் அல்லாஹ்விடத்தில் சிறப்பிற்குரிய மாதம் என்பதை நாம் பலமுறை ஹதீஸ்களில் பார்த்தோம்.
அதில் குறிப்பாக, இந்த கடைசி பத்து என்பது அமல்களுக்காகவே உள்ள பத்து இரவுகள். இந்த கடைசி பத்து இரவுகள் அல்லாஹ்வை இபாதத் செய்வதற்காகவும், அல்லாஹ்விடத்தில் மன்றாடுவதற்கும், அழுவதற்கும், தொழுவதற்கும், ஓதுவதற்கும், தர்மம் செய்வதற்கும், அல்லாஹ்வுக்கு முன்னால் சுஜூதில் நேரத்தை கழிப்பதற்கும் உள்ள இரவுகள்.
ஆனால், அந்தோ பரிதாபம், இந்த கடைசி பத்து தான் மக்களுக்கு மிகவும் சோதனையான நாட்களாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம்,மாற்றார்களின் கலாச்சாரம், இன்னொரு காரணம் அலட்சியம், இன்னொரு காரணம் விவாதத்தை விட நம்முடைய சடங்கு சம்பிரதாயங்கள் முக்கியமாகிவிட்டது.
விபத்துக்களில் மகிழ்ச்சியை தேடுவதற்கு பதிலாக உண்பதிலும் உடுத்துவதிலும் மகிழ்ச்சியை தேடுகிறோம். எனவே, எனக்கு ரமலானுடைய கடைசி பத்து இரவுகளின் சிறப்புகளை விடுவது பற்றி கவலைப்படுவதில்லை.
எனக்கு தேவையான துணிமணிகளை, என் குடும்பத்திற்கு தேவையான துணி மணிகளை வாங்குவதற்கு நேரமில்லை.. இதை விட்டால் எனக்கு வேறு சந்தர்ப்பம் இல்லை, என்று அந்த நாட்களை கடைத்தெருக்களில், அந்த நாட்களை தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு, அந்த கடை வீதியில் அவர்கள் கழிக்கின்ற, அந்த நாட்களை, அந்த இரவுகளை போக்குகின்ற விதத்தை பாருங்கள்.
ஏதோ இது ரமலான் மாதம் அல்ல, வேறு ஏதோ ஒரு மாதம் என்று எண்ணக்கூடிய அளவிற்கு முஸ்லிம் பலருடைய நிலை மாறி இருப்பதை நாம் பார்க்கும் போது நாம் எவ்வளவு வருத்தப்பட வேண்டும்.
அந்த ரமளானுடைய இரவுகள் நம்முடைய தேவைகளை வாங்குவதற்காகவா அல்லாஹ் கொடுத்திருக்கின்றான்! நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், கண்ணியத்திற்குரிய சஹாபாக்களும், சிறப்பிற்குரிய முன்னோர்களும்அப்படியா அந்த இரவைக் கழித்தார்கள்?
இந்த கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? யாரிடமிருந்து பெறப்பட்டது? ரமழானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் துனியாவின் எல்லா தேவைகளையும் முறித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இபாதத்திற்கு ஒதுங்கினார்கள்.
குடும்ப உறவுகளைக் கூட நிறுத்தி வைத்துவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதுக்குள் பதுங்கிக் கொண்டார்கள் என்று கூட சொல்லலாம்.
குடும்ப உறவுகள், மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார்களை பார்ப்பதைக் கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைசி பத்து இரவுகளில் தவிர்த்தார்கள்என்றால், எந்த உறவுகளை பேணுவதை அல்லாஹு தஆலா வலியுறுத்துகின்றானோ, எந்த குடும்ப உறவுகளின் ஹக்குகளை கொடுப்பதை ரப்புல் ஆலமீன் கட்டாயமாக்கினானோ அந்த குடும்ப உறவுகளை கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த பத்து நாட்களுக்காக நிறுத்தி வைத்தார்கள்.
காரணம், அல்லாஹ்வுடைய இபாதத்திற்கு தன்னை முழுமையாக ஒதுக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக, ரப்பு என் நிலையை பார்த்து அவன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக.
மறுமையின் வெற்றிதான் எனக்கு முக்கியம் என்பதை அல்லாஹ்விடத்தில் மன்றாடுவதற்காக தன்னை முழுமையாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைத்துக் கொண்டார்கள், கட்டுப்படுத்திக் கொண்டார்கள், வரையறுத்துக் கொண்டார்கள்.
இன்று பொதுவாக அலட்சியத்தில் இருக்கின்ற நாம், இபாதத்துக்களில் அலட்சியம், உபரியான வணக்கங்களில் அலட்சியம்.
ரமலான் ஆரம்பித்து செய்யவேண்டிய கடமைகளில் ஒவ்வொரு கடமைகளிலும் அலட்சியம், அலட்சியமாக செய்துவிட்டு கடைசியாக இந்த பத்து இரவில்தான் நாம் நம்மை ஒதுக்கி கொள்கின்றோம்.
ஒவ்வொரு இபாதத்திற்கும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டிற்கும் என்று ஒரு ஒழுக்கத்தை ஒரு வரையறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் இந்த ரமலானுடைய கடைசி பத்து என்பது அல்லாஹ்வை தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும், தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக, மஸ்ஜிதுகளில் அதிகமான நேரங்கள் கழித்து, துஆ செய்வதற்காக, இஸ்திஃபார் செய்வதற்காக விசேஷமாக கொடுக்கப்பட்ட நாட்கள்தான் இந்த பத்து இரவுகள்.
மற்ற வணக்க வழிபாடுகளும் முக்கியம் தான். ஆனால், அதற்கென்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒதுக்கிய நேரம் இருக்கின்றது.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவு இபாதத்தைப்பற்றி படிப்போம். இரவின் முற்பகுதியில் தூங்கி, இரவின் நடுப்பகுதியில் அவர்கள் எழுந்துவிட்டால், அதற்கு பிறகு சுபுஹுக்காக பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதான் சொல்லிவிட்டு அறிவிப்பு செய்ய வருவார்கள்.
அந்த நேரத்தில் சுன்னத்தை தொழுது முடித்து விட்டு, தனது விழாவில் சாய்ந்து சிறிது ஓய்வு எடுப்பார்கள். அதுதான் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய ஓய்வாக இருந்தது.
மற்ற நாட்களில் நபியுடைய சிரமத்தில் ஒரு பகுதியை கூட நாம் செய்யவில்லை. ஆனால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நம்முடைய பாசத்திற்குரிய நேசத்திற்குரிய தாய் அன்னை ஆயிஷா சொல்கின்றார்கள்.
நான் அந்த கடைசி பத்து இரவுகளில் நபியவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய அந்த சிரமத்தை, முயற்சியை, வேறு நாட்களில் அவர்கள் எடுத்ததாக பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இன்று நாமும் இபாதத் செய்கிறோம். நம்மை வருத்திக் கொள்கிறோமா? சிரமப்படுத்தி கொள்கிறோமா?
இந்த வார்த்தையை மேலோட்டமாக சிலர் புரிந்துகொண்டு, மார்க்க இலகுவானது, ஏன் நம்மை கஷ்டப்படுத்தி கொள்ளவேண்டும், சிரமப்படுத்தி கொள்ள வேண்டும், என்பதாக கேட்கலாம்.
ஆம். ஆனால் அதற்கு அர்த்தம் நீங்களும் நானும் விளங்குவது போன்றில்லை.
அந்த பத்து நாட்களை தான் இன்னும் சில தினங்களில் நாம் அடைய இருக்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமலைமப் பற்றி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகின்ற ஹதீஸை கவனியுங்கள்.
«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ»
இந்த ரமலானுடைய கடைசிப் பத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அமல்களை அதிகம் செய்வதற்காக சிரமம் எடுத்துக் கொள்வார்கள். கடுமையான முயற்சி செய்வார்கள், அது போன்று வேறு நாட்களில் அவர்கள் முயற்சி செய்ததில்லை.
அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம்,எண் : 1175.
பொதுவாகவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவு வணக்கங்கள் சிரமத்தோடு இருக்கும்.
இரண்டு ரக்அத்துகளை அல்லது நான்கு ரக்அத்துகளை சிறிய சிறிய சூராக்களை ஓதி முடித்து விட்டு, பிறகு விரிப்பை நாடுகின்றன்றோமே, அதுபோன்று அவர்களுடைய நிலை இருந்தது கிடையாது.
ஒருமுறை தூங்கி எழுந்து விட்டால், அடுத்து அவர்கள் படுக்கைக்கு செல்ல மாட்டார்கள்.
எந்த அளவு சிரமத்தை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் கொடுத்தார்களோ அதற்கு மேல் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தி கொள்ள கூடாது என்பது தான் மார்க்கம் இலகுவானது என்பதற்கு அர்த்தம்.
இந்த ரமலானுடைய கடைசி பத்து என்பது சிரமப் படுத்துவதற்காகவே உள்ள இரவுகள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மற்றொரு அறிவிப்பை படியுங்கள்.
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»
ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவெல்லாம் விழித்து இருப்பார்கள்.தனது குடும்பத்தார்களையும் எழுப்பி விடுவார்கள், தனது கீழ் ஆடையை அவர்கள் இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள்ز
அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 2024.
இந்த இடத்தில் மூன்று வார்த்தைகளை நமது அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா பயன்படுத்துகிறார்கள்.
இரவை ஹயாத்தாக்குவார்கள், மனைவிமார்கள், குடும்பத்தார்களைஎழுப்பி விடுவார்கள், தன்னுடைய கச்சையை இறுகக் கட்டிக் கொள்வார்கள்.
இவை ஒவ்வொன்றுக்கும் விளக்கத்தை நாம் பார்த்தாக வேண்டும்.
அவர்களை பற்றி அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்லக்கூடிய மற்றொரு அறிவிப்பு.
«لَا أَعْلَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ الْقُرْآنَ كُلَّهُ فِي لَيْلَةٍ، وَلَا قَامَ لَيْلَةً حَتَّى الصَّبَاحَ، وَلَا صَامَ شَهْرًا كَامِلًا قَطُّ غَيْرَ رَمَضَانَ»
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு இரவில் குர்ஆன் ஓதி நான் பார்த்ததில்லை, இரவெல்லாம் தொழுது நான் பார்த்ததில்லை, ஒரு மாதம் முழுக்க அவர்கள் நோன்பு வைத்து நான் பார்த்ததில்லை, ரமலான் மாதத்தை தவிர.
அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : நசாயி,எண் : 1641.
இப்படி ஒரு ஹதீஸையும் நாம் இங்கே பார்க்கிறோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ரமலான் அல்லாத மற்ற மாதங்களில் கண்டிப்பாக இரவு நேரத்தில் ஒரு சில மணி நேரமாவது, அல்லது அதில் பகுதியானதுஓய்வு எடுப்பார்கள். அந்த ஓய்விற்குப் பிறகு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வணங்கக்கூடிய பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
ஆனால், இந்த ரமலான் உடைய மாதம் வந்துவிட்டால், ரமலானுடைய அந்த முழு இரவுகளில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வணக்க வழிபாட்டில் இருப்பார்கள்.
இன்னும் ஒரு விஷயம், ஒரு முழு இரவெல்லாம் நின்று தொழுததாக நான் பார்த்ததில்லை என்று வருகிறது. அதிலிருந்து இன்னொரு கருத்தையும் அறிஞர்கள் நமக்கு சொல்கிறார்கள்.
அதாவது, வணக்க வழிபாட்டில் தொழுகயில் நேரத்தைக் கழிப்பதை போன்று, தொழுகை முடித்ததற்கு பிறகு துஆவில், இஸ்திஃபாரில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்திருக்கிறார்கள்.
இதுவும் நாம் மிக கவனமாக கவனிக்க வேண்டிய ஒன்று. ஏதோ ஒரு மஸ்ஜிதில் ஒன்றுகூடி, இமாம் தொழ வைக்கக் கூடிய அந்த தொழுகைகளை தொழுதோம், அத்தோடு நமது கடமை முடிந்து விட்டதா என்றால் அப்படி இல்லை.
பலர் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இமாமோடு செய்கின்ற அந்த இபாதத், தொழுகை, கியாமுல்லைல் முடிந்தவுடன், அதற்கு பிறகு தனியாக, உபரியாக, வணக்க வழிபாட்டில் அவர்கள் ஈடுபடாமல், திக்ரு, துஆக்களில் ஈடுபடாமல் அங்கே அவர்கள் வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.
அல்லது ஓய்வுக்கு சென்று விடுகிறார்கள், அல்லது சுற்றுவதற்கு சென்று விடுகிறார்கள், அல்லது கவனங்களை பல விஷயங்களில் திருப்பி நேரத்தை வீணடித்து விடுகின்றார்கள்.
எந்த அளவு ஜமாஅத்தோடு தொழுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்ததோ எந்த அளவு ஜமாஅத்தோடு தோழுதோமா, அல்ஹம்துலில்லாஹ்! அதற்குப் பிறகு இருக்கக்கூடிய அந்த நேரம் தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக, குர்ஆன் ஓதுவதற்காக, இஸ்திஃபார் தேடுவதற்காகஉள்ள நேரங்கள்.
நின்று வணங்கி முடித்ததோடு அந்த கடைசி பத்து இரவு முடிந்து விடுவதில்லை. அதில் ஒரு நொடிப் பொழுது கூட நாம் வீண் பேச்சுக்களில் அல்லது அலட்சியங்களில் செலவு செய்து விடக்கூடாது.
அதுபோன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய குடும்பத்தார்களை எழுப்பி விடுவார்கள், குடும்பத்தாருக்கு அக்கறை ஊட்டுவார்கள், அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நீங்களும் எழுந்து தொழுங்கள் என்று ஆர்வமூட்டுவார்கள்.
அப்படி என்றால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் அல்லாத மற்ற காலங்களில் இரவு தொழுகைக்காக தன்னுடைய மனைவிமார்களை எழுப்ப மாட்டார்களா? என்றால், அப்படி அர்த்தமல்ல.
எல்லா மாதங்களிலும், எல்லா நேரத்திலும், தன்னுடைய மனைவிமார்களுக்கும் அந்த இரவு தொழுகையில் கவனத்தை திருப்பி கொண்டு தான் இருந்தார்கள்.
இரவு தொழுகை, கியாமுல் லைல், தஹஜ்ஜதுடைய தொழுகை, அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனைவிமார்களின் பக்கமும் தங்களின். கவனத்தை திருப்பினார்கள்.
தான் இபாதத் செய்கின்ற அதே நேரத்தில் தங்களுடைய மனைவிமார்கள் அந்த இபாதத்களை செய்கிறார்களா?என்று அக்கறை உடையவர்களாக இருந்தார்கள். அதன் மீது கவனம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
இன்று,நம்முடைய எத்தனை கணவன்மார்கள் தங்களுடைய மனைவிகளின் இபாதத்களில் கவனம் செலுத்துகிறார்கள், அவர்களின் பக்கம் தங்களது அக்கறையை திருப்புகிறார்கள்?
தங்களுடைய தேவைகளுக்கு மனைவிமார்களுக்கு கட்டளை போடக் கூடியவர்கள், தங்களுடைய ஆசைகளுக்கு, மனைவிமார்களுக்கு கட்டளை போடக் கூடியவர்கள், தங்களுடைய உணவு, உடை, இருப்பிடம்என்று பல விஷயங்களுக்கு தங்களுடைய மனைவிமார்களுக்கு லிஸ்ட் போட்டு கொடுப்பவர்கள், அதை செய்யவில்லை என்றால் கோபித்துக் கொள்பவர்கள், அதை எப்படி செய்ய வேண்டும் என அக்கறையோடு பாடம் நடத்தும் நாம் தங்களுடைய மனைவிமார்கள் இபாதத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை கவனித்து பார்த்தார்களா?
ஒரு விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்துதான் ஆகவேண்டும். இன்று,ஒரு கணவன் மார்க்க விஷயங்களில் புறக்கணிக்கக் கூடிய ஒரு மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால்,அது மனைவி தான்.
எல்லோருக்கும் சொல்வார்கள், மனைவியை மறந்து விடுவார்கள், அல்லது எல்லா விஷயங்களிலும் அவர்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள், மனைவியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
மனைவியின் விஷயம் வந்துவிட்டால் ஏவவும் மாட்டார்கள், தடுக்கவும் மாட்டார்கள், நன்மைகளை ஏவுவதும் கிடையாது, தீமைகளை விட்டு தடுப்பதும் கிடையாது.
ஏதோ மனைவிக்காக தன் மீது எந்தக் கடமையும் இல்லை, அவளுக்கு உணவளிப்பதை தவிர, அவளுக்கு உடை அளிப்பதைத் தவிர, அவளுக்கு உறைவிடம் தருவதைத் தவிர.
கணவனுடைய பொறுப்பு என்பது,உணவை கொடுப்பது, உடையை கொடுப்பது, உறைவிடத்தை கொடுப்பதோடு மட்டும்நின்றுவிடுவதில்லை. இது கடமையான ஒன்று. இதை செய்தே ஆக வேண்டும்.
இந்த ஒரு ஹதீஸை படித்தால் இறுதியில் இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜெய்னப் பின்த் ஜஹ்ஷ் என்ற தன்னுடைய உறவுக்காரப் பெண்ணை ஜெய்து ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு (ஏற்கனவே திருமணமாகி குடும்பத்தோடு வாழக்கூடிய ஒரு கணவனுக்கு) தன்னுடைய உறவுக்கார, ஒரு புது பெண்ணை, கன்னிப்பெண்ணைதிருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
விருப்பம் மட்டும் செய்யவில்லை, திருமணம் முடித்து கொடுங்கள் என்று கட்டளையும் இடுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் வளர்த்த, தன்னிடம் ஆரம்ப காலத்திலிருந்து வாழ்ந்து, வளர்ந்து, கல்வி படித்து, தன்னோடு தீனுக்காக, ஈமானுக்காக, அல்குர்ஆனுக்காக, சுன்னாவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, உரிமை இடப்பட்ட ஒரு அடிமையை, ஒரு வளர்ப்பு மகனை, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கணவனாக தேர்ந்தெடுக்கும் போது என்ன சொன்னார்கள்.
ஏன் நான் ஜெய்தை தேர்ந்தெடுக்கிறேன் தெரியுமா?
இந்த ஜெய்து ஜெனபுக்கு மார்க்க ஞானத்தை கொடுப்பார். இந்த ஜெய்து ஜெய்னபுக்கு தனது ரப்புடைய வேதத்தை கற்றுக் கொடுப்பார், இந்த ஜெய்து ஜெய்னபுக்கு நபியின் சுன்னாவை போதித்து கொடுப்பார், இவரை தேர்ந்தெடுங்கள்என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆசையோடு சொன்னார்கள், ஆலோசனையாக சொன்னார்கள்.
தான் குடும்ப கௌரவம் என்ற பெயரில்அதை மறுத்த போது, அல்லாஹு சுபஹானஹு வதஆலா ஸுரத்துல் அஹ்ஸாப் வசனத்தை இறக்கினான்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 33:36)
இந்த வசனம் ஜெய்னபுக்கு ஓதி காட்டப்படுகிறது, ஜெய்னபின் சகோதரருக்கு ஓதி காட்டப்படுகிறது, இருவரும் வந்தார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! இதுதான் உங்களது கட்டளையா? நாங்கள் இதை ஏற்றுக் கொண்டோம், நாங்கள் இதை பொருந்தி கொண்டோம், என்பதாக மனப்பூர்வமாக, மனமுவந்துஏற்றுக் கொள்கிறார்கள். அங்கே திருமணம் நடக்கிறது. (1)
அறிவிப்பாளர் : ஜெய்னப் ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : தாரகுத்னி,எண் : 3335.
இந்த விஷயத்தை நாம் மிக அழுத்தமாக கவனத்தில் கொள்ளவேண்டும். நம்மிடத்தில் கல்வி இல்லையா? நமது மனைவிக்கு கொடுப்பதற்கு அதற்குண்டான வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம், அதற்கு உரிய நூல்களை வாங்கி கொடுக்கலாம்,அந்த கல்வி சபைகளுக்கு நாம் அழைத்து செல்லலாம்.
எத்தனையோ கணவன்மார்கள் தனது மனைவிகளை சுற்றுவதற்கு அழைத்துச் செல்கிறார்கள், சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள், எங்கெங்கோ அழைத்துச் செல்கிறார்களே, தங்களுடைய மனம் குளிர வேண்டும் என்பதற்காக.
படைத்த ரப்புடைய மனம் குளிர்வதற்காக, அவனுடைய கட்டளையை என் மனைவி தெரிந்து கொள்ள வேண்டும், என்னுடைய பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்என்பதற்காக அவர்களை ஏன் மார்க்க சபைகளில் அழைத்து வருவதில்லை?
ரொம்ப பேரு தங்களது மனைவிமார்களை இல்முடைய சபைக்கு அழைத்து வர மாட்டார்கள். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, அவர்களுக்கு ஏதாவது தெரிந்து விட்டால் அடுத்து நம்மள கொஸ்டின் கேட்டுருவா?
நம்முடைய குறையை கண்டுபிடித்து விடுவாளே! அதற்காகவே மனைவிக்கு மார்க்க கல்வியை கொடுக்காத கணவன்மார்கள் இன்று ஏராளமாக இருக்கிறார்கள்.
ஹலால், ஹராம் தெரிந்து கொண்டால், தான் வியாபாரம் செய்ய முடியாதே! தன்னுடைய வியாபாரத்தில் கேள்வி கேட்பாள்! இதை எப்படி நீங்கள் செய்கிறீர்கள்? குடும்பத்தில் மனைவியை மறைத்து ஏதாவது பேச முடியுமா? கண்டிப்பாக வியாபார தொடர்புகளில் பல பேச்சுக்கள் நடந்து தான் ஆக வேண்டும்.
தன்னுடைய தவறான காரியங்கள் மனைவிக்கு தெரிந்து, பின்னர் அவள் தடுத்து விட்டால் என்ற பயத்தில் கூட பலர் இன்று தங்களது மனைவிமார்களை மார்க்கத்தின் பக்கம் நெருங்க விடாமல் வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் சீர்திருத்தம் செய்வானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அதிகப்படியான அக்கறையை இந்த ஹதீஸ் நமக்கு காட்டுகின்றது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்ற இரவுகளிலும் தங்களுடைய மனைவிமார்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள், இரவு வணக்க வழிபாட்டில் அவர்களுக்கு அக்கறை கொடுத்து கொண்டிருந்தார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்லக்கூடிய இன்னொரு அறிவிப்பை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள்.
«سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتَنِ، وَمَاذَا فُتِحَ مِنَ الخَزَائِنِ، أَيْقِظُوا صَوَاحِبَاتِ الحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ»
ஒருமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் திடுக்கிட்டு எழுந்தார்கள், சுபஹானல்லாஹ்! இன்றைய இரவு எவ்வளவு சோதனையான இரவு, எத்தனை ஃபித்னாக்கள் இந்த துன்யாவில் இன்று இறங்கியிருக்கிறது! எத்தனை கஜானாக்கள் இன்று இறங்கியிருக்கிறது!அறைகளில் தூங்கக் கூடிய பெண்களை எழுப்பி விடுங்கள், இந்த துன்யாவில் ஆடை அணிந்து இருக்கக்கூடிய எத்தனையோ பெண்கள் மறுமையில் ஆடை இல்லாமல் இருப்பார்கள்.
அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 115.
அவர்களுடைய ஆடை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வரையறுத்துக் கொடுத்த ஆடையாக இல்லை.
எந்த ஹிஜாப் உடைய ஆடையை பேண வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும்அவர்களுக்கு கட்டளையிட்டார்களோஅந்த ஆடையை பேணியவர்களாக அவர்கள் வெளியில் வருவதில்லை.
இதைதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களிடம் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான தவறை இதில் அவர்கள் உணர்த்துகிறார்கள்.
முக்கியமாக பெண்கள் பேண வேண்டிய ஒன்று. அவர்கள் வெளியில் வரும்பொழுது தங்களுடைய ஹிஜாப் எப்படி இருக்கிறது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை மற்றும் ஒரு ஹதீஸில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ
ஆடை அவர்கள் மீது இருக்கும்.ஆனால் அந்த ஆடை அவர்களுடைய அவ்ரத்துகளை மறைக்காது.அவர்கள் ஆடை இல்லாதவர்களை போன்று தான்
அவர்களும் சாய்வார்கள்.பிறரையும் சாய்ப்பார்கள்.ஒட்டகத்தைப் போல தங்களுடைய தலைக்குமேல் அவர்கள் கொண்டையை அமைத்துக் கொள்வார்கள்.தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தும் விதமாக, ஆண்களை கவரும் விதமாக.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2128.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு இதையும் வலியுறுத்தினார்கள்.
«إِذَا اسْتَعْطَرَتِ الْمَرْأَةُ، فَمَرَّتْ عَلَى الْقَوْمِ لِيَجِدُوا رِيحَهَا، فَهِيَ كَذَا وَكَذَا»
அதாவது, எந்த ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு ஆண்களுக்கு மத்தியில்அவர்கள் அந்த நறுமணத்தை நுகர வேண்டும் என்பதற்காகசெல்கிறாளோ அவள் இப்படி இப்படி பட்டவள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவளுடைய கெட்ட நடத்தையை பற்றி சூசகமாக சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4173, தரம் : ஹசன் (அல்பானி)
நாம் நமது குடும்பப் பெண்களின் விஷயத்தில் எவ்வளவு அச்சத்தோடு, எவ்வளவு பேணுதலோடு, கவனத்தோடுஇருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறிப்பாக இரவில் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்களை பொருத்தவரை இரவின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதியில் தொழுவார்கள் என்பதை பார்த்தோம். அல்லது பாதி இரவு தொழுவார்கள் என்பதை பார்த்தோம்.
அல்லது முடியவில்லை என்றால், இரவில் மூன்றில் ஒரு பகுதியில் தொழுவார்கள். ஆனால் அதில் இருக்கக்கூடிய பகுதியில் கொஞ்சம் மீதம் இருக்கும் பொழுது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மனைவிமார்களை எழுப்பி வித்ரு தொழுது விட்டீர்களா? வித்ரு தொழுது கொள்ளுங்கள்என்று தங்களது மனைவிமார்களை மற்ற இரவுகளிலும் எழுப்பக்கூடிய பழக்கம் உள்ளவர்களாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.
இந்த கடைசி பத்தை மிக முக்கியத்துவத்தோடு, கடைசிப் பத்தில் கவனத்தோடு இருப்பதற்கு இன்னொரு மிக முக்கிய காரணம் இருக்கிறது.
அதுதான் இந்த கடைசி பத்தில் அல்லாஹு தஆலா நமக்கு விசேஷமாக நம்மீது அருளையும், நன்மையையும் கொட்ட வேண்டும் என்பதற்காக அவன் மறைத்து வைத்திருக்க கூடிய அந்த லைலத்துல் கத்ரு என்ற இரவு.
இந்த ஒரு இரவை அடைவதற்காகவே நாம் இந்த பத்து நாட்களில் ஒரு நிமிடம் கூட தூங்காமல் இருந்தாலும் கூட, அது இதற்கு கொடுத்த விலையாக ஆகாது.
அப்படி ஒரு இரவு தான்இந்த ரமலான் உடைய கடைசி பத்தில் இருக்கக்கூடியலைலத்துல் கத்ருடைய இரவு.
அல்லாஹு தஆலா இதை பற்றி எப்படி எல்லாம் சொல்கிறான் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
حم (1) وَالْكِتَابِ الْمُبِينِ (2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (4) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (5) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம். (அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்.(அல்குர்ஆன் 44 : 1-6)
தாபியீன்கள் ஸஹாபாக்களில் பலர்,பரக்கத்தான இரவு என்பது ரமலான் உடைய லைலத்துல் கத்ரு இரவு தான் என்று மிக அழுத்தமாக வரையறுத்து சொல்லியிருக்கின்றார்கள்.
இந்த லைலத்துல் கத்ரை பற்றி அல்லாஹு சுப்ஹானஹுவதஆலா தனி ஒரு சூராவையே இறக்கி வைத்திருக்கின்றான். இந்த லைலத்துல் கத்ர் உடைய முக்கியமான சிறப்புகளில் ஒன்று, அல்லாஹ் சொல்கின்றான்.
بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ (21) فِي لَوْحٍ مَحْفُوظٍ
(இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன், (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?) (அல்குர்ஆன் 85 : 21,22)
கண்ணியத்திற்குரிய இந்த குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூளில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது, லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து முதல் வானத்தில் உள்ள பைத்துல் இஸ்ஸாவிற்கு லைலத்துல் கத்ருடைய இரவில் தான் அல்லாஹ் இறக்கினான்.
அதற்குப் பிறகு, அங்கிருந்து 23ஆண்டு காலங்களில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப, சம்பவங்களுக்கு ஏற்பஅல்லாஹ் இறக்கி கொடுக்கின்றான்.
அதுமட்டுமல்ல, இந்த லைலத்துல் கத்ருடைய இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த ஒட்டுமொத்த இரவையும் பரக்கத்துடைய இரவு என்றுஅல்லாஹ் சொல்கின்றான். அதுபோன்று லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் வானவர்கள் இறங்கி வருகிறார்கள். வானவர்கள் ஜிப்ரீல் இந்த இரவில் இறங்கி வருகிறார். (அல்குர்ஆன் 97:4)
பூமியில் அந்த ஒரு இரவை தவிர, மற்ற நாட்கள்மற்ற இரவுகளில்அந்த அளவுக்கு வானவர்கள் இறங்குவதில்லை.
அறிஞர்கள், லைலத்துல் கத்ரு என்ற அந்த இரவுக்கு நெருக்கடியான இரவு என்று அர்த்தம் செய்கிறார்கள்.
அதாவது, பூமியில் அந்த அளவு இதற்கு முன் நெருக்கடி ஏற்படாது, அந்த அளவிற்கு இந்த பூமியில் நெருக்கடி ஏற்பட்டுவிடும். வானவர்களின் நெருக்கடி, அவ்வளவு வானவர்கள்இந்த பூமிக்கு இறங்குகிறார்கள்.
மேலும் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த இரவை சலாம் என்று சொல்கின்றான். இந்த இரவு அல்லாஹ்விடமிருந்து விசேஷமான பாதுகாப்பு பெற்ற இரவு.
அதுபோன்று, இந்த இரவில் இன்னொரு சிறப்பு உள்ளது. அதாவது, அல்லாஹு தஆலா நமக்கு விதியில் முடிவு செய்த அந்த விஷயங்களை வானவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
ஒவ்வொரு லைலத்துல் கத்ருடைய இரவில், ஒவ்வொரு ஆண்டிலும், அடுத்த ஆண்டு வரை உள்ள விதியின் விளக்கங்கள் வானவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்னொரு முக்கியமான சிறப்பை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
யார் ரமலானுடைய மாதத்தில் ஈமானோடு நன்மையை ஆதரவு வைத்தவராகநோன்பு வைத்தார்களோ அவர்களுடைய முந்திய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடும். அதுபோன்று,லைலத்துல் கத்ர் உடைய இரவில் யார் ஈமானோடு நன்மையை ஆதரவு வைத்தவராக நின்று வணங்குகினாரோ அவருக்கும் முந்திய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகின்றது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2014.
இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவை தேடித்தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களுடைய எல்லா உறவுகளையும் ஒதுக்கிக் கொண்டு இந்த கடைசி பதில் இந்த லைலத்துல் கத்ரை அடைவதற்காகவே மஸ்ஜிதில் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டார்கள்.
அபூ ஸயீத் குத்ரிரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸை பாருங்கள் இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.
ரமலானுடைய முதல் பத்தில் நபியவர்கள் இஃதிகாப் இருந்தார்கள். பிறகு,ரமலானுடைய நடு பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் இஃதிகாஃப் இருந்த அந்த கூடாரத்திலிருந்து தங்களது தலையை வெளியே நீட்டி மக்களை அழைத்து சொன்னார்கள்.
மக்களே! அருகில் வாருங்கள் என்று. இந்த இரவைஅதாவது லைலத்துல் கத்ரை தேடி முதல் பத்தில் இஃதிகாஃப் இருந்தேன். இரண்டாவது பத்தில் இஃதிகாஃப் இருந்தேன், பிறகு இந்த கடைசி பத்தில் தான் லைலத்துல் கத்ரு இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆகவே, இந்த கடைசி பத்தில் லைலத்துல் கத்ரு இருக்கின்றன காரணத்தால் அதை அடைவதற்காக இஃதிகாஃப் இருக்க விரும்பக்கூடியவர், இந்த கடைசி பத்தில் அவர்கள் இஃதிகாஃப் இருக்கட்டும்.
மக்களெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இஃதிகாஃப் இருந்தார்கள். (2)
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 813.
ரமலானுடைய கடைசி பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையும் சொன்னார்கள்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள்.
«تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»
ரமலான் கடைசி பத்தில் இந்த லைலத்துல் கத்ரை தேடுங்கள். அதிலும் குறிப்பிட்டு ஒற்றைப் படையான இரவுகளில் தேடுங்கள் என்றுசொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 2017.
ரமலானுடைய எல்லாக் கால்களையும், எல்லா நேரங்களையும்,வணக்க வழிபாட்டிலும், நம்முடைய பாவங்களுக்காக பாவமன்னிப்பு தேடுவதில்ஈடுபடுத்தி கொண்டிருக்கக்கூடிய நாம், இந்த ரமலானுடையகடைசி பத்தை வீணடித்து விடாமல்,
யாஅல்லாஹ்! எஞ்சி இருக்கக்கூடிய அந்த கடைசி பத்தில் எங்களுக்கு தவ்ஃபீக்கை தா! எங்களை நன்மைகளில் பக்கம் நெருக்கமாக்கி வை! பாவங்களிலிருந்து தூரமாக்கி வை! என்று துஆ செய்பவர்களாக, இந்த லைலத்துல் கத்ரை தேட வேண்டும்.
மேலும், ரமலானுடைய கடைசி பத்தில் மக்ஃபிரதையும்ரஹ்மத்தையும் தேடக்கூடியவர்களாகஇஃதிகாஃப் இருக்க முயற்சி செய்வோமாக!
குறிப்பாக இஃதிகாஃப் இருக்க முடியவில்லை என்றாலும்கூட, மற்ற நேரங்களில் எல்லாம் முடிந்த அளவு மஸ்ஜிதுகளில் அதிகமாக செலவழித்து, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் நம்முடைய கவனங்களை செலுத்துவோமாக!
வீணான காரியங்களில், வீணான ஒவ்வொரு செயல்களைவிட்டு நாம் நம்மையும்நமது குடும்பத்தாரையும்பாதுகாத்து, அவர்களையும் வணக்க வழிபாட்டின் பக்கம் அவர்களது கவனத்தை திருப்புவோமாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
نا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ الْمُهْتَدِي بِاللَّهِ , نا الْوَلِيدُ بْنُ حَمَّادِ بْنِ جَابِرٍ الرَّمْلِيُّ , نا حُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ , نا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ , نا حَفْصُ بْنُ سُلَيْمَانَ الْأَسَدِيُّ , عَنِ الْكُمَيْتِ بْنِ زَيْدٍ , حَدَّثَنِي مَذْكُورٌ مَوْلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ , عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ , قَالَتْ: خَطَبَنِي عِدَّةٌ مِنْ قُرَيْشٍ فَأَرْسَلَتْ أُخْتِي حَمْنَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَشِيرُهُ , فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ هِيَ مِمَّنْ يُعَلِّمُهَا كِتَابَ رَبِّهَا وَسُنَّةَ نَبِيِّهَا؟» , قَالَتْ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ , قَالَ: «زَيْدُ بْنُ حَارِثَةَ» , فَغَضِبَتْ حَمْنَةُ غَضَبًا [ص:462] شَدِيدًا , وَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَتُزَوِّجُ ابْنَةَ عَمِّكَ مَوْلَاكَ؟ , قَالَتْ: وَجَاءَتْنِي فَأَخْبَرَتْنِي فَغَضِبْتُ أَشَدَّ مِنْ غَضَبِهَا وَقُلْتُ أَشَدَّ مِنْ قَوْلِهَا , فَأَنْزَلَ اللَّهُ {وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ} [الأحزاب: 36] فَأَرْسَلْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوِّجْنِي مِمَّنْ شِئْتَ , فَزَوَّجَنِي زَيْدَ بْنَ حَارِثَةَ فَأَخَذْتُهُ بِلِسَانِي , فَشَكَانِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: «أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ» وَذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ (سنن الدارقطني- 3796)
குறிப்பு 2)
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ فَقُلْتُ: أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثُ، فَخَرَجَ، فَقَالَ: قُلْتُ: حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ القَدْرِ، قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ جِبْرِيلُ، فَقَالَ: إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ، فَاعْتَكَفَ العَشْرَ الأَوْسَطَ، فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:163] خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ، فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، وَإِنِّي نُسِّيتُهَا، وَإِنَّهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، فِي وِتْرٍ، وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ» وَكَانَ سَقْفُ المَسْجِدِ جَرِيدَ النَّخْلِ، وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا، فَجَاءَتْ قَزَعَةٌ، فَأُمْطِرْنَا، فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ (صحيح البخاري- 813)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/