அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) (அமர்வு 1 - 3) | Tamil Bayan - 437
அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 1-3)
வரிசை : 437
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 07-10-2016 | 06-01-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை பேணுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாகஇந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் அவனுடைய நல்லடியார்களில் சேர்ப்பானாக, பாவங்களை மன்னிப்பானாக, முஸ்லிம்களாக வாழ்ந்து முஃமின்களாக மரணிக்கின்ற நல்ல தவ்ஃபீக்கை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள்வானாக! ஆமீன்.
அன்பானவர்களே! தொடர்ந்து சில ஜும்ஆக்களில் நம்முடைய ஈமானை அதிகரிப்பதற்காக நம்முடைய தக்வாவிற்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதற்காக நம்முடைய உயிரை விட நமக்கு மேலான நம்முடைய தூதர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட, அவர்களால் பரிசுத்தப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த சமுதாயத்தைப் பற்றி, அந்த சமுதாயத்தில் சில மேன்மக்களைப் பற்றி நாம் பேசி வருகிறோம்.
அந்த தொடரில் இன்று நாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக நெருக்கமான அவர்களுடைய உறவுகளிலும் அவர்களுக்கு மிக நெருக்கமான, அவர்களுடைய தோழர்களிலும் மிக நெருக்கமாக இருந்த ஒரு நபித் தோழரைப் பற்றி நாம் அறிய இருக்கின்றோம்.
அவர்தான், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரர் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ்.
இவர்களைப் பற்றி மார்க்க அறிஞர்கள் தங்களுடைய நூலில் எழுதும்போதே இந்த உம்மத்தின் கல்விமான், அந்த காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய சட்ட வல்லுநர், திருக்குர்ஆன் விரிவுரையின் முன்னோடி, குர்ஆனுக்கு வியாக்கியானம் கூறிய பேரறிஞர் என்று தான் நம்முடைய முன்னோர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி வர்ணித்து எழுதுகிறார்கள்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரா செய்வதற்கு முன்பு, அதாவது குரைஷிகளெல்லாம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஹாஷிம் குடும்பத்தார்களையும் கஃபத்துல்லாஹ்விற்கு பின் பக்கத்தில் உள்ள இரண்டு மலைகளுக்கு இடையில் அமைந்திருக்கின்ற அந்த பல்லத்தாக்கில்தடுத்து வைத்துவிட்டார்கள்.
நீங்கள் இங்கிருந்து வெளியேறக் கூடாது, எங்களை சந்திக்கக் கூடாது, நாங்களும் உங்களிடத்தில் சந்திக்கமாட்டோம். நம் இருவருக்கும் இடையில் எந்த விதமான பேச்சு வார்த்தையோ, உறவு முறையோ, கொடுக்கல் வாங்களோ இருக்கக் கூடாது என்று மூன்று ஆண்டு காலங்கள் தடுத்து வைத்திருந்தார்கள்.
அந்த காலக்கட்டத்தின் இறுதியில்தான், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள்.
அப்போது அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அது வரை இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. ஆனால், அவர்களுடைய மனைவி இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். அந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறக்கிறார்கள்.
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வருகிறார்கள். முஹம்மதே! உம்முல் ஃபழ்ல் பிரசவ வலியை உணர்வதாக எனக்கு தெரிகிறது.
அல்லாஹ் தஆலா ஒரு நல்ல ஆண் குழந்தையைக் கொண்டு நம்முடைய கண்களை குளிர்ச்சி படுத்துவான் என்பதாக கூறி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்புகிறார்கள்.
அதுபோன்று, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த பிரசவத்தில் பிறக்கிறார்கள்.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வந்துவிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் வாழ்கிறார்கள். வாழ்கின்ற அந்த சிறு பிராயத்திலேயே தாயிடமிருந்து ஈமானைப் பெற்று அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறார்கள்.
பிறகு, மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட போது, ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு இஸ்லாமை ஏற்று, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய தந்தையோடு ஹிஜ்ரா செய்து வருகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றிகொள்தற்காக ஜஹ்ஃபா வரை வந்த போது, அங்கே சென்று சந்திக்கின்றார்கள்.
இப்படியாக, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய முதல் தோழமை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு போரிலிருந்தே ஆரம்பமானது.
சிறு வயதாக இருந்த அந்த நிலையிலும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட அந்த சம்பவத்திலும், தாயிஃப் சம்பவத்திலும், ஹுனைன் சம்பவத்திலும் இப்னு அப்பாஸ் கலந்து கொள்கிறார்கள்.
இப்படியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கின்ற வரை முப்பது மாதங்கள் ரஸூலுல்லாஹ்வோடு தனது தோழமையை ஏற்படுத்திக் கொண்ட ஒரு துடிப்பான, கல்வியின் மீது பேராசை கொண்ட ஒரு சிறுவராக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் விளங்கினார்கள்.
அந்த முப்பது மாதங்களில் ரஸூலுல்லாஹ்விடமிருந்து எவ்வளவு கல்விகளை கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு கல்விகளை அல்லாஹ்வுடைய தூதரை சூழ்ந்து கொண்டு கற்றார்கள்.
ஒருவருக்கு கல்வியின் மீது ஆர்வம் வந்துவிட்டால், அந்த இல்மின் ஊற்றிலிருந்து அவரை பருகிக் கொண்டே இருக்கச் சொல்லும்.
கல்வியின் தேட்டம் உள்ளவர்களும், பொருளின் ஆசை உள்ளவர்களும் ஒருக்காலும் போதும் என்ற நிலைக்கு வரமாட்டார்கள்.
இரண்டில் ஒன்று உயர்வானது.ஒன்றோ தாழ்வானது. நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்னு அப்பாஸ் அவர்கள், ரஸூலுல்லாஹ்வுடைய சபையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள், நெருக்கமாக இருந்தார்கள். எந்தளவுக்கென்றால், ஒரு சமயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபையில் அமர்ந்திருந்த போது, நபியை ஒட்டி வலது பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.
அந்த இடத்தில் எந்த நபித்தோழரும் அமர மாட்டார்கள்.அபூபக்ருக்காக நியமித்த இடம். ஏனென்றால், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முதல் ஆலோசகர், முதல் மந்திரி அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அவர்கள் அமரக்கூடிய இடத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பொறுத்தவரை ஒரு சபையில் யாராவது அமர்ந்து விட்டால், அவர்களை அந்த சபையிலிருந்து எழுப்பமாட்டார்கள்.
அப்போது, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குடிப்பதற்கு ஒரு பானம் வந்து விட்டது. (பால் அல்லது தேன் கலந்த ஏதோ ஒரு பொருளோ வந்து விட்டது.)அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடித்தார்கள்.
அதற்கு பிறகு, அந்த பானத்தை தங்களுடைய தோழர்களுக்கு கொடுப்பதற்காக பார்க்கும் பொழுது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். வலது பக்கத்தில் இருப்பதுஇந்த குட்டி பையன்-இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
மற்றவர்களெல்லாம் பெரும் பெரும் தோழர்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு அப்பாஸை பார்த்து உறிமையோடு கேட்டார்கள்.
«يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَهُ الأَشْيَاخَ»، قَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِفَضْلِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ، فَأَعْطَاهُ إِيَّاهُ
(ஒரு பக்கம் சாச்சாவின் மகன்.)சிறுவரே! உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நீ விட்டுக் கொடுப்பாயா? என்று.
இப்னு அப்பாஸ் உடைய வார்த்தையை கவனியுங்கள்: ரஸூலுல்லாஹ்வுடைய எச்சிலுக்கு நான் வேறு யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 2351, 2366, 2451, 2605.
இங்கே கிடைக்க கூடிய சிறப்பு,ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாய் வைத்து குடித்த அந்த இடத்தில் அந்த எச்சிலிலிருந்து முதலில் நான் குடிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் விட்டுக் கொடுக்கத் தயார், ரஸூலுல்லாஹ்வுடைய எச்சிலை நான் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
வாங்கினார்கள், திருப்தியாக குடித்தார்கள்.அதற்கு பிறகு தான்,அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்தார்கள்.
அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஈமானும், இறை நம்பிக்கையும், நபியின் பாசமும், நேசமும், அல்லாஹ்வுடைய அன்பும் எந்தளவு ஆழமாக வேரூண்டி இருக்குமேயானால், இப்படிப்பட்ட ஒரு பெரிய வார்த்தையை இப்னு அப்பாஸ் அங்கே கூறியிருப்பார்கள்!
இன்னொரு சம்பவத்தை பாருங்கள், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் பொழுது,சரியான அறிவிப்பின் படி இவர்களுக்கு பதிமூன்று வயது தான்.
இந்த பதிமூன்று வயதில் எத்தனை ஹதீஸ்களை அவர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றிருக்கிறார்கள்!எவ்வளவு துஆக்களை பெற்றிருக்கிறார்கள்!
ஒரு முறை,இவர்களுடைய காலா -மைமூனா ரழியல்லாஹு அன்ஹா, (இப்னு அப்பாஸுடைய தாயும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவி மைமூனாவும் சகோதரிகள்.)தனது காலாவிடத்தில் வருகிறார்கள், எனக்கு அனுமதி கொடுங்கள், இன்று இரவு நான் உங்களுடன் தங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தலையனை இல்லையே?என்று சொல்கிறார்கள். பரவாயில்லை. நீங்களும் ரஸூலுல்லாஹ்வும் படுக்கும்போது அதன் ஓரத்தில் நானும் தலை வைத்துக் கொள்கிறேன். எனக்கு தூங்க வேண்டும் என்கிற ஆசையில்லை.
ரஸூலுல்லாஹ் அவர்கள் இரவுத் தொழுகை எப்படித் தொழுவார்கள்? என்று சத்தியமாக நான் பார்க்க வேண்டும், அதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
(இது அனேகமாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பதற்கு குறைந்தது ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பதினொரு, பன்னிரண்டு வயதில் இருக்கக் கூடிய ஒரு பாலகனுடைய வார்த்தை.)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுகிறார்கள், எழுந்து சுய தேவைக்காக செல்கிறார்கள். இந்த பாலகனும் எழுகிறார். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றவுடன், உடனே ஓடி வந்து, நபி அவர்கள் சுத்தம் செய்வதற்காக தண்ணீர் வைக்கிறார்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திரும்ப வந்து பார்க்கிறார்கள், தான் சுத்தம் செய்வதற்காகவும், உளூ செய்வதற்காகவும் தண்ணீர் தர்தீபாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது.
இதை யார் செய்தது என்று கேட்டார்கள்? அந்த பாலகன் இப்னு அப்பாஸ் கூறுகின்றார், அல்லாஹ்வுடைய தூதரே! நான் செய்தேன் என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தஹஜ்ஜத் உடைய நேரத்தில், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகின்ற அந்த நேரத்தில், துஆக்கள் அங்கீகரிக்க கூடிய அந்த நேரத்தில், அவனுடைய அடியார்களில் யார் கேட்டாலும் கேளுங்கள் நான் கொடுக்கிறேன் என்று கூறுகின்ற அந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய அடியார்களிலேயே அல்லாஹ்விற்கு மிக விருப்பமான ஒரு நபி துஆ கேட்கிறார்கள்.
«اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ وَعَلِّمْهُ التَّأْوِيلَ»
யா அல்லாஹ்! இந்த பாலகனுக்கு குர்ஆனின் ஞானத்தை கொடு, மார்க்கத்தின் அறிவை கொடு என்று.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 143, 117, 138, 183, 698, 859, நூல் : ஹாகிம் : 6280.
இப்னு அப்பால் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய வாழ்க்கை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொடங்கி,அவர்களிடத்தில் கல்வி பெற்று, நபியின் மரணத்திற்கு பின்னால் அபூபக்ர் இடத்தில் கல்வி பயில்கிறார்கள்.
பிறகு உமர் இடத்தில், உஸ்மான் இடத்தில், அலி இடத்தில், முஆது இடத்தில், தனது தந்தை அப்பாஸ் இடத்தில் இன்னும் பெரும் பெரும் தோழர்களிடத்தில் மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, குர்ஆன் எப்படி ஓத வேண்டுமென்ற அந்த சட்ட ஒழுங்கு முறைகளை உபை இப்னு கஅப், ஜைது இப்னு சாபித் என்ற குர்ஆனின் அறிஞரிடத்தில் பெற்று,அந்த குர்ஆனின் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
இவர்களுடைய மாணவர்களில் நூற்றுக் கணக்கான மிகப் பெரும் இமாம்களை கூறலாம். ஆயிரக் கணக்கானவர்கள் இவர்களிடத்தில் கல்வி படித்தார்கள். அவர்களில் 200-க்கு மேற்பட்டவர்கள் இந்த உம்மத்துடைய மிகப் பெரும் இமாம்களாக இருக்கிறார்கள்.
இமாம் ஹஸன் பஸரியை போல, இமாம் முஹம்மது இப்னு ஸீரினைப் போல, இமாம் ஷாஃபியை போல. இன்னும் ஏறக்குறைய 197 -மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் இவர்களுடைய நெருக்கமான தோழராக இருக்கிறார்கள்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கல்வி படித்த இந்த ஸஹாபி, இவர்களுக்கு கிலாஃபத்துடைய வாழ்க்கை வந்த போது, இவர்கள் விரும்பியிருந்தால் ரஸூலுல்லாஹ்வுடைய குடும்பத்தார் என்ற அடிப்படையில் ஒரு வசதியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
கலீபாக்களோடு அவர்கள் அனுப்பிய எல்லா போர்களிலும் கலந்து கொள்கிறார்கள். ஒரு பெரிய முஜாஹிராக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளங்கினார்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த உடல் தோற்றத்தை பற்றியும் நாம் தெரிந்துக் கொள்ளும்போது, நம்முடைய மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர்கள் வெண்மையானவராகவும், நல்ல உடல் வலிமையுடையவராகவும், பார்ப்பதற்கு முகம் பிரகாசமுடையவராகவும் இருந்தார்கள்.நல்ல உயரமானவராகவும், ஒரு பெரிய மனிதர் என்று கூறும் அளவிற்கு அவர்கள் நல்ல நுண்ணறிவு உடையவராக, சிறந்த ஞானமுடையவராக இருந்தார்கள்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
இமாம் இப்னு ஜூனைத் அவர்கள்,இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி குறிப்பிடுகிறார்கள்.
நாங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இப்னு அப்பாஸை பற்றிய பேச்சு வந்தது. அப்போது, அதா அவர்கள் கூறுகிறார். நான் பௌர்ணமி அன்று எப்போது சந்திரனைப் பார்த்தாலும் இப்னு அப்பாஸ் உடைய ஞாபகம் எனக்கு வந்துவிடும். அந்தளவிற்கு முகம் பிரகாசமுடையவராக இருந்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இவர்களுக்கு ஆழ்ந்த நெருக்கம் இருந்தது. இமாம் புகாரி (ரஹி) பதிவு செய்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னை அழைத்து, என் தலையை தடவிக் கொடுத்து, எனது கல்வி ஞானத்திற்காக துஆ செய்தார்கள் என்று.
நூல் : புகாரி, எண் : 75.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொழுகைக்காக பின்னால் நிற்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு அப்பாஸை இழுத்து தனக்கு அருகில் வைக்கிறார்கள். பிறகு, கேட்கிறார்கள், நான் தொழும்போது நீ எனக்கு அருகில் அல்லவா நிற்க வேண்டும், எனக்கு பின்னால் நிற்கின்றாயே என்று?
அல்லாஹ்வுடைய தூதரே! உங்களுக்கு பக்கத்தில் நின்று கொண்டு தொழுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஆயிற்றே, உங்களுக்கு பக்கத்தில் நின்று தொழுவதற்கு யாருக்கும் தகுதி இருக்கின்றதா? நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஆயிற்றே!
இந்த வார்த்தையை கேட்ட போது,மீண்டும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு அப்பாஸிற்கு துஆ செய்கிறார்கள்.
யா அல்லாஹ்! இந்த குழந்தைக்கு நல்ல விளக்கத்தை கொடுப்பாயாக! நல்ல இல்மை கொடுப்பாயாக!
நூல் : ஹில்யதுல் அவ்லியா, எண் : 1144.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜிற்கு வந்தபோது, அந்த ஹஜ்ஜிலும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இரண்டு சம்பவங்களை அங்கே இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக ஹதீஸ் நூல்களில் நாம்பார்க்கிறோம்.மார்க்கத்தின் பெரிய சட்டங்களை அங்கே விளங்குகிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை நோக்கி வருகிறார்கள். ஜம்ரத்துல் அகபாவில்மக்காவிற்கு நெருக்கமாக உள்ள அந்த பெரிய ஜம்ராவில் கல்லெறிய வேண்டும்.
ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்த அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு அப்பாஸை பார்த்து கூறுகிறார்கள். எனக்காக பொடி கற்களை எடுப்பாயாக என்று.
அப்போது அந்த நேரத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் ரஸூலுல்லாஹ்விற்கு கற்களை எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்த கற்களை காட்டி மக்களுக்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
இது போன்ற சிறிய அளவுள்ள பொடி கற்களைக் கொண்டு தான் நீங்கள் ஜம்ராவில் எறிய வேண்டும். உங்களுக்கு முன் உள்ளஇஸ்ரவேலர்கள் வழிக்கெட்டார்கள், இந்த மார்க்கத்தில் அவர்கள் வரம்பு மீறிய போது.
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நிர்ணயித்த அளவை மீறும்போது, அவர்கள் அழிந்து நாசமானார்கள்.
நூல் : நசாயி சுகுரா, எண்: 3023.
இன்று கூட நீங்கள் பார்க்கலாம், ஹஜ்ஜிற்கு செல்லும்போது அந்த இடத்தில் சில ஹாஜிகள் ஒரு விதமான ஆவேசத்திற்கு ஆளாகி, பொடிக்கற்களை விட்டுவிட்டு பெரும்பெரும் கற்களை கொண்டு, செறுப்புகளை கொண்டு, மட்டைகளை கொண்டு, கட்டைகளை கொண்டு எறிவதை பார்க்கிறோம்.
இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாகத் தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இல்மையும், ஈமானையும், வணக்க வழிபாட்டையும், குர்ஆனின் ஞானத்தையும் அதற்குப் பிறகு, இந்த உம்மத்திலேயே உயர்ந்த நபித்தோழர்களாக அல்லாஹ்வுடைய தூதர் விட்டுச் சென்ற,நான்கு கலீஃபாக்களிடத்தில் கல்வி படித்த இப்னு அப்பாஸ் உடைய குர்ஆனுடைய ஞானம், இபாதத்தின் ஈடுபாடு, மிக அதிகமாக இருந்தது.
அவர்களுடைய மாணவர்களில் மிகப் பெரிய ஒரு மாணவ அறிஞர், இப்னு அபீ முலைக்கா கூறுகிறார்கள்:நான் மக்காவிலிருந்து மதினா வரை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு பயணித்தேன். அப்போது, அவர்கள் முதல் இரவில் தங்கி விடுவார்கள். பிறகு இரவின் இறுதிப் பகுதியில் எழுவார்கள். தொழுகையில் குர்ஆன் ஓத ஆரம்பித்து விடுவார்கள்.
அப்போது இப்னு அபீ முலைக்காவுடைய மாணவர் கேட்கிறார்கள்; இப்னு அப்பாஸ் உடைய குர்ஆன் ஓதுகின்ற முறையைப் பற்றி நீங்கள் எங்களுக்கு கூறுங்கள் என்று.
ஒரு சமயம் இப்னு அப்பாஸ் அவர்கள் தொழுகையில் சூரா கஹ்ஃப் ஓதுகிறார்கள்.
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 50:19)
என்ற வசனத்தை ஓதிக் கொண்டு அழுது கொண்டே இருந்தார்கள் என்று இமாம் இப்னு அபீ முலைக்கா கூறுகிறார்கள்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
இப்படி இரவு நேரங்களையும் அல்லாஹ்வுடைய இபாதத்திலும், குர்ஆன் ஓதுவதிலும் கழித்து வாழ்ந்த நபித் தோழர் தான் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இன்னொரு பக்கம், அவர்கள்ஜிஹாதிலும் ஒரு மிகப் பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
அது போன்று வீரம், யாராக இருந்தாலும் சரி,அவர்களுக்கு முன்பு சத்தியத்தை எடுத்து சொல்வதில், தன்னை விட வயது மூத்தவர்களாக இருந்தாலும் கூட, அந்தஸ்தில் மிகப் பெரியவர்களாக இருந்தாலும் கூட,தனக்கு சத்தியம் என்று படுவதை மிகத் தெள்ளத் தெளிவாக அழுத்தமாக எடுத்துக் கூறுகின்ற ஒரு வீரம், தைரியம் இப்னு அப்பஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் மிகுந்து காணப்பட்டது.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு, முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாக ஆகி விட்டார்கள். அப்போது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு இப்னு அப்பாஸ் அவர்கள் மிக நெருக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
முஆவியா,அலி ரழியல்லாஹு அன்ஹு இருவருக்கும் இடையில் நடந்த போரில், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஆதரவாளராக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள்.
போர் முடிகிறது, அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படுகிறார்கள், பிறகு ஹஸன் கலீஃபாவாகிறார்கள். ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா அவர்களுக்கு கிலாஃபத்தை விட்டுக்கொடுக்கிறார்கள்.
முஆவியா முஃமின்களுடைய கலீஃபாவாக மாறுகிறார்கள். அப்போது ஒரு முறை முஆவியாவின் சபையில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சந்திக்கிறார்கள். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு அப்பாஸை பார்த்து கேட்கிறார்கள்.
நீ அலியின் கொள்கையை பின்பற்றுகிறாய் அல்லவா? என்று. வார்த்தையை கூறிய அடுத்த நொடியில், இப்னு அப்பாஸ் கூறினார்கள்:
நான் அலியுடைய கொள்கையிலும் இல்லை, உஸ்மானுடைய கொள்கையிலும் இல்லை.நான் ரஸூலுல்லாஹ்வுடைய கொள்கையில் இருக்கிறேன்.
சத்தியத்தை சொல்வதில் எந்த பயமும் இல்லை. இதுதான் ஸஹாபாக்களுடைய அந்த நடைமுறை.
இப்னு அப்பாஸ் உடைய மாணவர் தாவூஸ் (ரஹி) கூறுகிறார்கள்:
அல்லாஹ்வுடைய புனித சின்னங்களை, அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட புனித அடையாளங்களை மிக அதிகமாக கண்ணியப்படுத்துகின்ற ஒருவரை இப்னு அப்பாஸை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் சில நபித்தோழர்களுக்கும் இடையில் சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் அந்த மாணவர்களை பார்த்து அல்லது தங்களோடு கருத்து வேற்றுமை செய்யக்கூடிய மக்களை பார்த்து கூறிய வார்த்தைகளை நாம் ஹதீஸ் நூல்களில் பார்க்கிறோம்.
فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أُرَاهُمْ سَيَهْلِكُونَ أَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَقُولُ: نَهَى أَبُو بَكْرٍ وَعُمَرُ
நான் உங்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் கூறினார் என்று கூறுகிறேன்.நீங்கள் கூறுகிறீர்கள்;அபூபக்ர் இப்படி கூறியிருக்கிறார், உமர் இப்படி கூறியிருக்கிறார். நான் பயப்படுகிறேன்;அல்லாஹ் உங்கள் மீது கல் மழையை இறக்கி விடுவானோ என்று.
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 3121.
எது மார்க்கமோ அதை எடுத்து சொல்வதில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகத் துணிவுடையவர்களாக இருந்தார்கள். இதற்கு பின்னால் ஒரு மிகப் பெரிய ஒரு பின்னனி இருக்கிறது.
அதாவது, பொதுவாக சிறு பிராயத்தில் இருப்பவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கும். வாலிபத்தை அடையும்பொழுது பொருளாதாரத்தை தேடி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற தேடல் இருக்கும்.
ஆனால், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பொறுத்த வரை, இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அவர்களுடைய பிறவியிலேயே அல்லாஹு தஆலா கல்வியின் மீது பேராசையை உள்ளத்தில் புகுத்தி விட்டான்.
இப்னு அப்பாஸ் அவர்களேதங்களது நிகழ்வைப் பற்றி குறிப்பிடுவதை கூறுகிறார்கள்:
எனது வயதுடைய அன்ஸாரி ஒருவரிடத்தில் சென்று பேசினேன். ரஸூலுல்லாஹ்வுடைய தோழர்கள் இப்போது அதிகமாக இருக்கிறார்கள், வாருங்கள் அவர்களிடத்தில் சென்று நாம் கல்வி படித்துக் கொள்ளலாம் என்று.
அந்த வாலிபர் கூறினார், இப்னு அப்பாஸே! மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே, இத்தனை நபித்தோழர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களை விட்டு விட்டு மக்கள் உங்களிடத்தில் கல்வி படிக்க வருவார்களா? நீங்கள் ஆலிம் ஆகிவிட்டால்மக்கள் உங்களிடத்தில் கல்வி படிக்க வருவார்கள் என்று எண்ணுகிறாயா?
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அவரை அப்படியே விட்டு விட்டு கல்வியை தேடி ஒவ்வொரு நபித்தோழரின் வீட்டு வாசலாக ஏறி கூறுகிறார்கள்:
ஒரு நபித்தோழரிடத்தில் ஒரு ஹதீஸ் இருக்கிறதென்று தெரிந்து விட்டால், நான் அவருடைய வீட்டிற்கு வந்து விடுவேன். மதிய நேரத்தில் அவர்களுடைய வீட்டு வாசலில் காத்திருப்பேன். வெயிலடிக்கும், காற்றடிக்கும். எனவே, போர்வையை சுற்றி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்வேன்.
அங்கே அடிக்கின்ற காற்றினால் மண்ணெல்லாம், தூசிகளெல்லாம் என் மீது படிந்து விடும். அவர் வெளியே வருவார், பார்த்தால் அவர் வீட்டு வாசலில் நான் படுத்திருப்பேன். அவரை பார்த்தவுடன் எழுந்திருப்பேன்.
அப்போது அந்த நபித்தோழர், ரஸூலுல்லாஹ்வின் சாச்சாவின் மகனே! எனது வீட்டு வாசலில் வந்து இப்படி ஒரு அடிமையை போன்று படுத்திருக்கிறீர்களே, உங்களுக்கு ஒரு தேவை என்று எனக்கு சொல்லி அனுப்பினால், நான் உங்களது வீட்டை தேடி வந்திருப்பேனே.
(சிறுவராக இருந்தாலும் ரஸூலுல்லாஹ்வுடைய உறவினர் என்ற அடிப்படையில், அந்த பெரிய ஸஹாபாக்கள் இவருக்கு கொடுத்த கண்ணியம்.)
அங்கே இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள், இல்லை ஆசிரியரே, நான்தான் உங்களிடத்தில் வர வேண்டும், உங்களை தேடி வந்து கல்வி படிக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நபித்தோழராக தேடி தேடி சென்று கல்வி படித்தார்கள்.
அதே வாலிபர் இப்னு அப்பாஸை பார்த்து இவ்வளவு பெரிய நபித்தோழர்கள் இருக்கும் பொழுது, உன்னைத் தேடி மக்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டாயா? என்று கேட்டாரோ, ஒரு நேரம் வந்தது.
என்னை சுற்றி நூற்றுக் கணக்கான மாணவர்கள் அமர்ந்து கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த மனிதர் என்னை கடந்து சென்றார். அப்போது கூறினார், இந்த வாலிபர் என்னை விட புத்திசாலியாக இருந்தார் என்று.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
அன்பானவர்களே! இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கல்வித் தேடலை பற்றி நாம் விரிவாக பேச வேண்டியதிருக்கிறது.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள், நான் பல நபித் தோழரின் வீட்டு வாசலில் அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருப்பேன். அவர்கள் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் போது, அவர்களை தட்டி எழுப்பமாட்டேன்.
நீண்ட நேரம் அவர்களுக்காக நான் காத்திருப்பேன். காரணம், நான் இவ்வளவு நேரம் அவர்களுக்காக காத்திருந்தேன் என்று அவர்களுக்கு தெரிய வரும்போது, என் மீது அவர்கள் இரக்கப்பட்டு எனக்கு இன்னும் கல்வியை அதிகமாக சொல்லித் தருவார்கள் என்று.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
இதுதான் கல்வி கற்கக் கூடிய மாணவர்களின் பணிவு. இல்மை தேடக்கூடிய மாணவர்களின் பணிவு.தங்களது ஆசிரியர்களுக்கு முன்னால் இப்படி தான் இருந்தது. கூறுகின்ற வார்த்தையை பாருங்கள், நான் அதிக நேரம் வாசலில் காத்திருப்பேன். வெளியே வரும்போது என் ஆசிரியர் நான் அதிக நேரம் எதிர்பார்த்திருப்பதை தெரிந்து கொண்டால், என் மீது இரக்கப்பட்டு அவர்களுடைய உள்ளம் இலகி எனக்கு அதிகம் சொல்லிக் கொடுப்பார் என்று.
மேலும், இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள்: ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸ் ஒரு ஸஹாபியிடமிருந்தது. அதை கற்றுக் கொண்டார்கள்.
இதே ஹதீஸ் இன்னும் எத்தனை ஸஹாபாக்களிடம் இருக்கிறதோ, அத்தனை ஸஹாபாக்களிடமும் சென்று அதே ஹதீஸை படித்துக் கொள்வார்கள்.
ஒரே விஷயத்தை நபித்தோழர்களில் முப்பது நபித்தோழர்களிடத்தில் சென்று நான் படித்திருக்கிறேன் என்று சொல்வார்கள்.
மேலும் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹ்வுடைய பெரிய மூத்த தோழர்கள் முஹாஜிர்கள் அன்ஸாரிகளோடு நான் எப்போதும் அவர்களை விட்டு பிரியாமல் இருந்திருக்கிறேன்.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை கண்டிப்பாக நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.குர்ஆனில்சூரத்துத் தஹ்ரீமில் அல்லாஹ் இரண்டு பெண்களைப் பற்றி ஒரு சம்பவத்தை கூறுகிறான்.
அந்த இரண்டு பெண்கள் யார்? என்பதை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். நபியினுடைய மனைவிமார்களில், இரண்டு பெண்களுடைய சம்பவத்தைப் பற்றி அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா சூரத்துத் தஹ்ரீமில் கூறுகிறான்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மூத்த நபித்தோழர்களில், அப்போது உயிராக இருப்பவர்கள் உமர் ஃபாருக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உமருக்கு பணிவிடை செய்து, உமரை நான் பின் தொடர்ந்து கொண்டே இருந்தேன். இந்த ஒரு வசனத்தின் விளக்கத்தை அவரிடமிருந்து கற்பதற்காக.
உமர் அல் ஃபாரூக் அவர்களுக்கு இந்த ஒரு வசனத்தின் விளக்கத்தை நான் கேட்பதற்காகவேண்டி இரண்டரை ஆண்டுகள் அவருக்கு பணிவிடை செய்தேன்.
அவருடைய தனிமை, சபை, அவருடைய தொழுகை, பயணம் என்று அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தேன். அவர் எப்போது ஓய்வாக இருப்பார்? அவரிடம் இந்த வசனத்திற்குண்டான விளக்கத்தை நாம் கேட்டு பெறுவோம் என்று.
இப்படியாக தொடர்ந்து கொண்டிருந்த இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைசியில் உமரோடு அவர்களுக்கு ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.
மினாவில், ஹஜ்ஜிற்கு உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் தோழர்களோடு சென்றிருந்த போது, அப்போது மினாவில் ஒரு தொழுகை நேரத்தில் அங்கே யாரும் இல்லை.
உமர் அவர்கள் இஸ்தின்ஜா செய்வதற்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது அவர்களுக்காக தண்ணீரை எடுத்துக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்னு அப்பாஸிற்கு அந்த வேலை இல்லை. எத்தனை அடிமைகள் இருக்கிறார்கள், ஆனால் உமர், தன்னுடைய ஆசிரியர். அவர் தன்னுடைய தேவைக்கு சென்று விட்டு வருகிறார். அவருக்காக வேண்டி இஸ்தின்ஜாவுடைய தண்ணீரை எதிர்பார்த்துக் கொண்டு உளூவின் தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
உமர் அவர்கள் வருகிறார்கள், அப்போது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு உமர் அல் ஃபாரூக் அவர்களுக்கு உளூ செய்வதற்காக தண்ணீர் ஊற்றுகிறார்கள். அப்படி உளூ செய்து கொண்டிருந்த நேரத்தில் அமீருல் முஃமினீன் அவர்களே, அல்லாஹ் தஆலா சூரா தஹ்ரீமில் இரண்டு பெண்களைப் பற்றி கூறுகின்றானே, அந்த இரண்டு பெண்கள் யார் என்பதை நான் உங்களிடமிருந்து அறிந்து கொள்ளட்டுமா? அந்த சம்பவத்தை நீங்கள் எனக்கு கற்றுத்தருவீர்களா? என்று கேட்கிறார்கள்.
உமர் அல் ஃபாரூக் அவர்கள் சிரித்தவர்களாக, அது பற்றிய சம்பவத்தை நான் உனக்கு கூறுகிறேன் என்று தங்களுடைய உளூவை முடித்துக் கொண்டு, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அந்த ஆயத் இறக்கப்பட்ட காரணம், எந்த சூழ்நிலையில் இறக்கப்பட்டது, அந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த இரண்டு மனைவிமார்கள் யார் என்பதை கற்றுத்தருகிறார்கள்.
நூல் : புகாரி, எண் : 2468.
இரண்டரை ஆண்டுகள் ஒரு வசனத்தின் விளக்கத்தை தெரிந்து கொள்வதற்காக ஒரு ஆசிரியருக்கு பணிவிடை செய்து பொறுமையாக காத்திருந்து கல்வி படித்தார்கள்.
எனவே அந்த கல்வி அவர்களுக்குள் அதனுடைய மாற்றத்தை கொடுத்தது. அந்த கல்வியின் நல்ல மாற்றம் அவர்களிடத்தில் வந்தது. இதை தான் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் கூறுகிறார்கள்:
நான் மாணவனாக பல கேவலங்களை, பல சுமைகளை, பல இக்கட்டான நிலைகளை சந்தித்திருக்கிறேன். அல்லாஹ் இப்போது என்னை ஆசிரியராக ஆக்கி கண்ணியப்படுத்திருக்கிறான்.
நான் மாணவனாக இருந்த போது என்னை நானே இழிவுக்கு, கேவலத்திற்கு, பணிவுக்கு, பலவீனத்திற்கு, அடக்கத்திற்கு ஆளாக்கிக் கொண்டேன். இப்போது அல்லாஹ் என்னை ஆசிரியராக்கி கண்ணியப்படுத்திருக்கிறான்.
பார்க்க - அல்முஜாலசா – அத்தைநூரி : 1686.
மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களிடத்தில் நபியின் போர்களைப் பற்றி கற்றுக் கொண்டேன், குர்ஆனுடைய வசனங்களைப் பற்றி கற்றுக் கொண்டேன்.
அவர்கள் யாரிடத்தில் சென்று நான் கல்வி தேடினாலும் ரஸூலுல்லாஹ்விற்கும் எனக்கும் இருந்த உறவினால் அந்த ஒவ்வொரு தோழரும் என் மீது பாசம் கொண்டிருந்தார்கள். என்னை நேசித்தார், என் வருகையால் அவர் சந்தோஷப்படுவார்.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள்:
ரஸூலுல்லாஹ்விடத்தில் கல்வி படித்த பெரிய நபித்தோழர் உபை இப்னு கஅப் அவர்கள். கல்வியில் மிக ஆழமானவர்கள் என்று அல்லாஹ் யாரை வர்ணிக்கின்றானோ,அந்த தோழர்களில் ஒருவர் என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உபை இப்னு கஅபை பற்றி கூறுகிறார்கள்.
சொல்லிவிட்டு கேட்கிறார்கள், உபை இப்னு கஅப் அவர்களே! மதினாவில் இறங்கிய மொத்த சூராக்கள் எத்தனை? என்று.
அப்போது, உபை இப்னு கஅப் கூறுகிறார்கள், இருபத்தேழு சூராக்கள் மதினாவில் இறங்கின, மற்ற சூராக்களெல்லாம் மக்காவில் இறங்கின என்று.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
அன்பானவர்களே! இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
அவர்களுடைய கல்வியின் ஆழத்தைப் பற்றி, கல்வியின் விசாலத்தை பற்றி மார்க்க அறிஞர்கள், தாபியீன்கள் கூறுகிறார்கள்.
இமாம் அதா கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் உடைய சபையை விட ஒரு கண்ணியமான ஒரு சபையை நான் பார்க்கவில்லை. அதிக சட்ட ஞானங்கள் அவருடைய சபையில் பேசப்படும். அமர்ந்திருப்பவர்களெல்லாம் கண்ணியமாக அடக்கமாக இருப்பார்கள். அவருடைய சபையில், அவருடைய கல்வியிலிருந்து தாகம் தணிவதற்காக எத்தனையோ வகையான கல்வி அறிஞர்கள் வந்திருப்பார்கள்.
குர்ஆனுடைய மாணவர்கள் குர்ஆனைப் பற்றி விளக்கம் கேட்பார்கள். அரபி மொழியின் மாணவர்கள் அவர்களிடத்தில் அரபி மொழியைப் பற்றி கற்பார்கள். இலக்கனம், இலக்கியத்தின் கவிதைகளை கற்றுக் கொள்ளக் கூடிய மாணவர்கள் அவர்களிடத்தில் இலக்கன, இலக்கியத்தின் கவிதைகளைப் பற்றி கற்றுக் கொள்வார்கள்.
இப்படி ஒரே சபையிலேயே பல கல்விகளை மக்களிடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
இமாம் தாவுஸ் (ரஹி) அவர்கள் தங்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தை பற்றிகூறுகிறார்கள்:லைஸ் இப்னு அபீ சுனைன் என்ற ஒரு பெரிய தாபியீ, தாவுஸ் என்ற தாபியீன்களிடத்தில் கூறுகிறார்கள்.
இந்த வாலிபரை நீ விடாமல் எப்போதும் இவருக்கு பின்னால் அழைந்து கொண்டிருக்கிறாயே? இவ்வளவு பெரிய பெரிய நபித்தோழர்களெல்லாம் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் பணிவிடை செய்யாமல், அவர்களித்தில் அதிகம் நேரத்தை செலவழிக்காமல் இந்த வாலிபர் இப்னு அப்பாஸிற்கு பின்னால் சுற்றுகிறாயே? என்று.
அப்போது இமாம் தாவுஸ் கூறினார்கள், தோழரே! எழுபது நபித்தோழரிடத்தில் நானும் பார்த்திருக்கிறேன், அவர்களிடத்தில் கல்வி படித்திருக்கிறேன், அவர்களோடு நானும் தோழமை வைத்திருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் ஏதாவது கருத்து வேற்றுமை வந்துவிட்டால், இந்த விஷயத்தில் இப்னு அப்பாஸ் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து,அந்த எழுபது ஸஹாபாக்கள் இப்னு அப்பாஸ் உடைய கூற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நான் இப்னு அப்பாஸிடத்தில் கல்வி படிப்பது எழுபது ஸஹாபாக்களிடத்தில் கல்வி படித்தது போல என்று பதிலளிக்கிறார்கள்.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
மேலும்,அம்ரு இப்னு தீனார் கூறுகிறார்கள், கல்வி சபைகளிலேயே இப்னு அப்பாஸுடைய சபை மிகவும் நிரப்பமான சபையாக இருந்தது. மற்றவர்களிடத்தில் ஒரு சபையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அங்கே விவரிக்கப்பட்டால், பயிற்றுவிக்கப்பட்டால் இப்னு அப்பாஸ் உடைய மஜ்லிஸில் ஹலால், ஹராமைப் பற்றி விவரிக்கப்படும்.
குர்ஆனுடைய விரிவுரையை பற்றி விவரிக்கப்படும். அரபி மொழியின் விளக்கங்கள் அங்கே சொல்லி கொடுக்கப்படும்.
அது மட்டுமல்ல, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மற்றொரு கொடைத் தன்மையையும் அந்த மாணவர் கூறுகிறார்:
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஜிஹாதில் சென்றிருந்த கனிமத், அது போன்று ரஸூலுல்லாஹ்வுடைய குடும்பத்தார் என்ற அடிப்படையில் கலிஃபாக்கள் அவருக்கு கொடுத்து கொண்டிருந்த அந்த ஒவ்வொரு வருடத்திற்கான ஹதியாக்கள் இவற்றையெல்லாம் தங்களிடத்தில் கல்வி படிக்க வருகின்ற மாணவர்களுக்காக செலவு செய்பவர்களாக இருந்தார்கள்.
மற்ற சபைகளுக்கு நாங்கள் சென்றால், எங்களுடைய உணவுக்கு கஷ்டமாக இருக்கும். இப்னு அப்பாஸ் உடைய சபைக்கு சென்றால், எங்களுக்கு கல்வியும் கிடைத்து விடுகிறது, எங்களுக்கு பசிக்கு உணவு கிடைத்து விடுகிறது. தன்னுடைய மாணவர்களை அந்தளவுக்கு கண்ணியப்படுத்தக் கூடியவர்களாக இப்னு அப்பாஸ் இருந்தார்கள்.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
அன்பானவர்களே! இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நெருக்கமாக இருந்தார்களோ, அபூபக்ரோடு நெருக்கமாக இருந்தார்களோ, அதற்கு பிறகு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு நெருக்கமாக இருந்தார்கள்.
உமர் உடைய உள்ளத்தில் இப்னு அப்பாஸிற்கு என்று தனி இடம் ஒரு இருந்தது. அதைப்பற்றி சில சம்பவங்களை பார்ப்போம்.
ஸஅத் இப்னு ஜுபைர் கூறுகிறார்கள். முஹாஜிர்களில் சிலர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது வருத்தப்பட்டார்கள், இப்னு அப்பாஸ் இந்த வாலிபரை தங்களது சபையில் அதிகம் முன்னிலைப் படுத்துவதற்தாக.
எப்போது பார்த்தாலும் எங்களுக்கும் இவரைப் போன்று பிள்ளைகள் இருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் இப்படி சபையில் முன்னுரிமை கொடுப்பது கிடையாது.
உங்களுக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர வைப்பது கிடையாது. ஆனால், இந்த இப்னு அப்பாஸிற்கு இவ்வளவு முன்னுரிமை தருகிறீர்களே என்று?
அப்போது, நாளைக்கு வாருங்கள் இதற்குறிய விளக்கத்தை உங்களுக்கு கூறுகிறேன் என்று கூறி அனுப்பி விட்டு, உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாளைய சபையில் ஸஹாபாக்கள், மற்றவர்களெல்லாம் ஒன்று கூடிய போது, சூரா நஸ்ரை ஓதுகின்றார்கள்.
ஓதி விட்டு கூறுகிறார்கள், இந்த சூராவைப் பற்றிய விளக்கத்தை நீங்கள் கூறுங்கள்என்று தங்களை சுற்றியிருந்த மக்களிடத்தில் கேட்கிறார்கள்.
அப்போது அவர்கள் கூறினார்கள், இந்த சூராவுடைய விளக்கம், அல்லாஹ்வுடைய வெற்றி, அல்லாஹ்வுடைய உதவி எல்லாம் வந்த போது மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபியே! நீங்கள் அல்லாஹ்வை புகழுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அவ்வளவு தான் இந்த சூராவில் இருக்கிறது என்று கூறிய போது, அப்போது உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு அப்பாஸை அழைத்து கேட்கிறார்கள்.
இப்னு அப்பாஸ்! நீ இதற்கு என்ன விளக்கம் கூறுகிறாய்? என்று. அப்போது இப்னு அப்பாஸ் கூறினார்கள், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தன்னுடைய ரஸூலுக்கு கூறுகிறான்:
நபியே! உங்களுடைய மரணம் நெருங்கி விட்டது. எனவே, நீங்கள் அதிகம் அல்லாஹ்வை தொழுது, வணங்கி, தவ்பா இஸ்திஃபார் செய்யுங்கள் என்றுரஸூலுல்லாஹ்விற்கு இந்த சூரா அவர்களுடைய மரணத்தைப் பற்றி அல்லாஹ் செய்த முன்னறிவிப்பு என்று நான் விளங்குகிறேன் என்று கூறினார்கள்.
உமர் அவர்கள் கூறினார்கள், நீ விளங்கக்கூடிய இதே விளக்கத்தை தான் நானும் விளங்குகிறேன் என்று.
பிறகு கூறினார்கள், தோழர்களே! இப்படிப்பட்ட இந்த இல்முக்காக வேண்டிதான் இப்னு அப்பாஸை நான் எனக்கு அருகாமையில் வைத்திருக்கிறேன் என்று.
சில நேரங்களில் உமரே கூறுவார்கள்:இப்னு அப்பாஸே! நாங்கள் கற்க முடியாத கல்விகளையெல்லாம் நீ கற்றுக் கொண்டாய் என்று.(1)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 2127.
ஸஹாபாக்களில் பெரியவர்கள் அவர்களுக்கு மேலும் மேலும் பல பணிகள் இருந்த காரணத்தால் அவர்கள் ரஸூலுல்லாஹ்விடமிருந்து என்ன ஹதீஸை கற்றார்களோ, அந்த ஹதீஸ் அவர்களிடம் இருந்தது.
இது போன்று சிறிய நபித்தோழர்கள் இப்னு உமர், இப்னு அப்பாஸ், அபூ ஸஈத் அல் குத்ரி இது போன்று சிறிய நபித் தோழர்கள் ஒவ்வொரு பெரிய நபித்தோழர்களின் வீடுகளாக சென்று, அவர்களுடைய சபைகளில் சென்று கல்விகளை படித்ததால் நிறைய நபித்தோழர்களுடைய ஹதீஸ் அவர்களுக்கு தெரிய வந்தன.
உமர் அவர்கள் இப்னு அப்பாஸை பார்த்து விட்டாலே கூறுவார்கள், இவர் வயது முதிர்ந்தவர்களுக்கு இடையில் அமரக்கூடிய ஒரு பெரிய வாலிபர். மார்க்க விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நாவை அல்லாஹ் இவருக்கு கொடுத்திருக்கிறான். சிந்தித்து புரியக்கூடிய கல்பை அல்லாஹ் இவருக்கு கொடுத்திருக்கிறான் என்று.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
அன்பானவர்களே! இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் உமர் அவர்கள் ஆலோசனை கேட்பார்கள். பிறகு ஆலோசனை கேட்கும் பொழுது சில விஷயங்களை கூறிவிட்டு உமர் அவர்கள் கூறுவார்கள்.
(கடலின் ஆழத்தில் சென்று முத்துக்கல் எடுப்பவர்களுக்கு தான் ஹவ்வாஸ் என்று சொல்லப்படும்.)
ஒரு பிரச்சனையை இப்னு அப்பாஸிடம் கூறிவிட்டு இந்த வார்த்தையை கூறுவார்கள். யா ஹவ்வாஸ்! மூழ்கி முத்தை தேடுபவனே! இந்த பிரச்சனையில் உள்ளதை எது சரியானது என்பதை ஆழ்ந்து ஆராய்ந்து கூறு என்று.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
அந்தளவு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஒரு நெருக்கமுடையவராகவும், நல்ல மதிப்புடைவர்களாகவும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள்.
எந்த ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே இப்னு அப்பாஸை அழைப்பார்கள். அழைத்து விட்டு,ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது,இதற்கு என்ன விளக்கம் என்று கேட்பார்கள்.
பத்ருடைய ஸஹாபாக்களெல்லாம் சுற்றியிருப்பார்கள். ஆனால், இப்னு அப்பாஸ் ஒரு கருத்தை கூறிவிட்டால் உமர் அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களுடைய கூற்றுக்கு மாற்றம் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
கண்ணியத்திற்குரியவர்களே! இது போன்ற சம்பவங்களில் நிறைய படிப்பினைகளை நாம் பார்க்கிறோம். கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள், பெரியவர்கள், உமர் போன்றவர்கள் தங்களை விட வயது குறைவானவராக இருந்தாலும் அவரிடத்தில் இல்மு இருக்கின்ற காரணத்தால்,தான் கலீஃபாவாக இருந்தும், அமீருல் முஃமினீன் என்று சொல்லப்பட்டிருந்தும் கூட,அவரிடத்திலிருந்து நல்ல ஆலோசனையை பெறுவதில் உமர் அவர்கள் தன் மதிப்பின் குறைவை பார்க்கவில்லை.
அதில், அவர்கள் தங்களது அந்தஸ்து தாழ்ந்து விடும் என்பதை உணரவில்லை. அத்தனை நபித்தோழர்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு உன்னுடைய கருத்து என்ன? என்று கேட்கிறார்கள், பிறகு அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இது தான் இஸ்லாம், இது தான் இல்மு, இது தான் பணிவு. தன்னை விட வயது குறைந்தவரிடத்தில் இல்மு இருந்தாலும், அதையும் தேடி பெற்றுக் கொண்டு அவருக்கு கண்ணியம் கொடுப்பதை தான் நபித்தோழர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் படிக்கின்றோம்
உமர் அவர்கள் கூறினார்கள், இப்னு அப்பாஸை நான் நேசிப்பதற்காக யாரும் என்னை பழித்து விட வேண்டாம் என்று.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி.
ஒரு சம்பவம் நடக்கிறது. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சபையில் ஒரு ஊரிலிருந்து ஒரு மனிதர் வருகிறார். அப்போது, அந்த மனிதர் உமரிடத்தில் பேசும்பொழுது, உமர் அவர்கள் கேட்கிறார்கள்.
உங்களுடைய ஊரில் மக்கள் குர்ஆனை எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்று? அப்போது, வந்த தோழர் கூறுகிறார்:எங்களுடைய மக்களெல்லாம் குர்ஆனை மிகவும் ஆர்வமாக கற்றுக் கொள்கிறார்கள். இன்னென்ன வயதில் இவ்வளவு இவ்வளவு அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்னென்ன விஷயங்களெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிய போது, அங்கிருந்த இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே ஒரு வார்த்தையை கூறுகிறார்கள்.
கலீஃபா! மக்கள் இப்படி அவசரப்பட்டு, குர்ஆனுடைய கல்வியை படிக்கக் கூடாது. குர்ஆனுடைய கல்வியை படிப்பதில் நிதானம் வேண்டுமென்று கூறுகிறார்கள்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், சற்று அமைதியாக இரு! என்று அவர்களை அதட்டுகிறார்கள். அவ்வளவு தான் நடந்த சம்பவம்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகப் பெரிய கவலையோடு, நொந்து போன அந்த உள்ளத்தோடு வீட்டிற்கு வருகிறார்கள். வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.ஏதோ ஒரு பெரிய நோயில் சிக்கிக் கொண்டதை போன்று அவர்கள் வீட்டிற்கு திரும்ப வருகிறார்கள்.
மனதில் கூறுகிறார்கள்;உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் எனக்கு மிகப் பெரிய அந்தஸ்து இருந்ததே!ஆனால், இன்று அந்த அந்தஸ்து எனக்கு போய்விட்டதே, கண்ணியம் போய்விட்டதேஎன்று கவலைப்பட்டவர்களாக வீட்டில் படுத்துக் கொள்கிறார்கள்.
அவர்களுடைய வீட்டு குடும்பத்து பெண்களெல்லாம் இப்னு அப்பாஸிற்கு ஏதொ பெரிய உடல் சுகவீனம் ஏற்பட்டு விட்டது என்று நலம் விசாரிக்க வந்து போய் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியாக ஒரு சில நாட்கள் முடிந்த போது, அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பணியாளர் கூறுகிறார்: அமீருல் முஃமினீன் உங்களை அழைக்கிறார் நீங்கள் வாருங்கள் என்று.
சொல்லி விட்டு அவர் வீட்டிலிருந்து வெளியேறுவதற்குள் அங்கே பார்த்தால் அமீருல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதிலிருந்து இப்னு அப்பாஸ் உடைய வீட்டில் வந்து நிற்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்த உடனே, உமர் ஃபாரூக் அவர்கள் இப்னு அப்பாஸ் உடைய கரத்தை பிடித்துக் கொண்டு தனியாக அழைத்துச் சென்று கேட்கிறார்கள்.
என்னிடத்தில் வந்த அந்த மனிதர் கூறிய வார்த்தையில் என்ன தவறை நீங்கள் கண்டீர்கள்? என்று. அப்போது இப்னு அப்பாஸ் கூறினார்கள்:அமீருல் முஃமினீன் அவர்களே!நான் தவறு செய்திருந்தால் உங்களுக்கு முன்னால் நான் முந்தி பேசியிருந்தால் அல்லாஹ்விடத்தில் இஸ்திஃபார் செய்கிறேன். நீங்கள் என்னை எங்கு விரும்புகிறீர்களோ, அங்கு வைக்கலாம் எனக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை என்று கூறினார்கள்.
உமர் அவர்கள் கூறினார்கள், அதுவெல்லாம் பிரச்சனை இல்லை. என்ன காரணம் என்று விளக்குங்கள் என்று கேட்டார்கள்.
அப்போது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், மக்கள் இவ்வளவு அவசரப்பட்டு குர்ஆனுடைய கல்வியை கற்றுக்கொள்வார்கள் என்றால், அவர்களுக்கு மத்தியில் போட்டி வரும். அந்த போட்டி பிறகு தர்க்கமாக மாறும், தர்க்கம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை கொள்வார்கள். கருத்து வேற்றுமை வரும்போது, அவர்கள் சண்டை செய்து கொள்வார்கள்.
இந்த வார்த்தையை கூறியவுடன் உமர் ஃபாரூக் அவர்கள் கூறினார்கள்:இப்படிப்பட்ட ஒரு குழந்தையை உனது தந்தை பெற்றெடுத்தாரே, அல்லாஹு அக்பர்! இந்த விஷயம் எனக்கு தெரியும். ஆனால், மக்களுக்கு அதை மறைத்தேன் என்று.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி
கண்ணியத்திற்குரியவர்களே! குர்ஆனை எப்படி கற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த ஒழுக்கத்தோடு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். போட்டிக்காக, பெருமைக்காக, புகழுக்காக கற்றுக் கொள்ளக் கூடாது.
அப்படி கற்றுக் கொள்வது குர்ஆன் எந்த நோக்கத்திற்கு இறக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு மாற்றமாக அந்த குர்ஆனை மக்கள் பயன்படுத்தி விடுவார்கள்.
குர்ஆனின் பெயரால் ஒன்று சேர வேண்டிய மக்கள், குர்ஆனின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வார்கள் என்பதை பயந்து தான் அமீருல் முஃமினீன் நான் கூறினேன் என்ற போது, நீ சொல்வது சரி என்று உமர் அவர்கள் கூறினார்கள்.
அன்பானவர்களே! இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை காலம்.,அவர்கள் நமக்காக கூறிய நல்ல அறிவுரைகள், அவர்களைப் பற்றி நபித் தோழர்கள் கூறிய நல்ல விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
அல்லாஹ் சுப்ஹானஹ் வதஆலா அந்த நபித் தோழர்களுடைய நல்ல தொடர்பில் நாளை மறுமையில் இருக்கக் கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தருவானாக!
நம்முடைய இந்த உம்மத்தின் சார்பாக அல்லாஹ்வின் தீனுக்காக வாழ்ந்த உழைத்த அந்த நபித்தோழர்களின் கூட்டத்தார்களுக்கு அல்லாஹ் சிறந்த நற்கூலியை தருவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَأْذَنُ لِأَهْلِ بَدْرٍ، وَيَأْذَنُ لِي مَعَهُمْ، فَقَالَ بَعْضُهُمْ: يَأْذَنُ لِهَذَا الْفَتَى مَعَنَا، وَمِنْ أَبْنَائِنَا مَنْ هُوَ مِثْلُهُ؟ فَقَالَ عُمَرُ: إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ. قَالَ: فَأَذِنَ لَهُمْ ذَاتَ يَوْمٍ، وَأَذِنَ لِي مَعَهُمْ، فَسَأَلَهُمْ عَنْ هَذِهِ السُّورَةِ: إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ فَقَالُوا: أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فُتِحَ عَلَيْهِ أَنْ يَسْتَغْفِرَهُ وَيَتُوبَ إِلَيْهِ. فَقَالَ لِي: مَا تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ؟ قَالَ: قُلْتُ: لَيْسَتْ كَذَلِكَ، وَلَكِنَّهُ أَخْبَرَ نَبِيَّهُ عَلَيْهِ الصَّلاةُ [ص:232] وَالسَّلامُ بِحُضُورِ أَجَلِهِ، فَقَالَ: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} [النصر: 1] «فَتْحُ مَكَّةَ» ، {وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا} [النصر: 2] «فَذَلِكَ عَلامَةُ مَوْتِكَ» ، {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} [النصر: 3] . فَقَالَ لَهُمْ: «كَيْفَ تَلُومُونِي عَلَى مَا تَرَوْنَ» (مسند أحمد- 3127)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/