HOME      Khutba      துல்ஹஜ் பத்து நாள்கள் - சிறப்புகள் | சட்டங்கள் | Tamil Bayan - 432   
 

துல்ஹஜ் பத்து நாள்கள் - சிறப்புகள் | சட்டங்கள் | Tamil Bayan - 432

           

துல்ஹஜ் பத்து நாள்கள் - சிறப்புகள் | சட்டங்கள் | Tamil Bayan - 432


துல்ஹஜ் பத்து நாள்கள் – சிறப்புகள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : துல்ஹஜ் பத்து நாள்கள் – சிறப்புகள்

வரிசை : 432

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 02-09-2016 | 30-11-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ் நம்மை அவன் பக்கம் நெருக்கமாக்குவதற்காக,நமக்கு அவனுடைய அன்பையும்َُமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அல்லாஹ் நல்லவர்களுக்காக தயார் செய்து வைத்திருக்கின்ற சொர்க்கத்தில் நம்மை சேர்ப்பதற்காக அமல்களையும் அந்த அமல்களை செய்வதற்குண்டான காலங்களையும் வழங்கி இருக்கின்றான்.

பொதுவாக எல்லா காலங்களிலும் அல்லாஹ்வை  வணங்கி கொண்டிருக்கின்ற அடியான், சில குறிப்பிட்ட காலங்களில் அல்லாஹ்வை அதிகமதிகம் வணங்குவதற்காக, சில காலங்களை விசேஷமான காலங்களாக,அல்லாஹ்வால் அருளப்பட்ட காலங்களாக, அல்லாஹ்வுடைய ரஹ்மத்திற்கு அதிகம் உரிய காலங்களாக அல்லாஹ் ஆக்கி இருக்கின்றான்.

மாதங்களை 12ஆக அல்லாஹ் ஏற்படுத்தி, அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாக ஆக்கி இருக்கின்றான். (அல்குர்ஆன் 9 : 36)

துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் இந்த நான்கு புனித மாதங்களில் அல்லாஹ்வை அதிகமாக வணங்கி வழிபட்டு, பாவங்களை விட்டு விலகி, அதிகம் நன்மைகளை தேடியவர்களாக இருக்க வேண்டும்.

இதுவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலாக இருந்தது.

துல்ஹஜ்ஜின் முழு மாதமும் சிறப்புக்குரியது தான். அதில் குறிப்பாக முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானதாக அல்லாஹ்விற்கு மிகவும் உகப்பான நாள் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தனது கண்ணியத்துக்குரிய வேதம் அல்குர்ஆனில் இந்த நாட்களின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ

விடியற் காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக. (அல்குர்ஆன் 89 : 1,2)

குர்ஆனுக்கு விரிவுரை கூறக்கூடிய நபித்தோழர்கள், தாபியீன்கள் அனைவரும் பத்து நாட்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லியிருப்பது,துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்கிறான் என்றால், அந்த பொருளினுடைய கண்ணியத்தை அந்த பொருளினுடைய மகத்துவத்தை நமக்கு வெளிப்படுத்துவதற்காக சத்தியம் செய்வான்.

இந்த நாட்கள் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரிய நாட்கள். மிகவும் மதிப்பிற்குரிய நாட்கள். ஆகவேதான்,இந்த நாட்களின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.

அதுபோன்றுஅல்லாஹ் கூறுகிறான்:

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள். (அல்குர்ஆன்22 : 28)

அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வுடைய பெயர்களை முஃமின்கள் அதிகம் கூற வேண்டும். அறியப்பட்ட அந்த நாட்களில் நீங்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறி இருக்கின்ற சூரத்துல் ஹஜ் உடைய 28 -வது வசனத்திற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடும்போது இந்த துல்ஹஜ் மாதத்தின் உடைய முதல் பத்து நாட்கள் என்று விளக்கம் தருகிறார்கள்.

அதற்கு பிறகு,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார்கள். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

«مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»

இந்த பத்து நாட்களில் செய்யப்படுகின்ற அமல்களுக்கு சமமாக எந்த நாட்களில் செய்யப்படும் அமல்களும் ஆகமுடியாது. இந்த நாட்களில் செய்யப்படும் அமலுடைய சிறப்புக்கு சமமாக வேறு நாட்களில் செய்யப்படும் அமல்கள் ஆக முடியாது.

அப்போது, நபித்தோழர்கள் விளக்கம் கேட்டார்கள்: அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாதுக்கு செல்வதை விடவா?என்று கேட்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறுகிறார்கள்:

ஆம், அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செல்வதும் இதற்கு சமமாக ஆகாது. இந்த 10நாட்களில் செய்யப்படுகின்ற அமல் அதைவிட எல்லாம் மிகச் சிறந்தது என்று சொல்லிவிட்டு. ஒரு நிபந்தனையை சொல்கிறார்கள்.

ஆனால், ஒருவர் அல்லாஹ்வுடைய பாதையில் மிக ஆபத்தான சூழ்நிலையில் அந்த போரில் கலந்து கொள்கிறார். பிறகு அவர் ஷஹீதாகிவிட்டார்.

அவருடைய உடலும் அவரது செல்வமும் அவருடைய வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இப்படிப்பட்ட முஜாஹிதுடைய அமலுக்கு சமமாக ஒரு அமல் இந்த உலகத்தில் இருக்க முடியாது.

இந்த முஜாஹிதை தவிர, வேறு யாருடைய அமலும், இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற அமலுக்கு சமமாகாது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 969.

இன்று, இந்த புனித மாதங்களில் எவ்வளவு அலட்சியம் செய்கிறார்கள். இவ்வளவு சிறப்பு இருக்கின்றது என்பதை கூட அறியாமல், நமது சமூகத்தில் பலர் இருக்கிறார்கள்.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய மற்றொரு ஹதீஸை இதே கருத்தில் இமாம் தப்ரானி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். அதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:

«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ أَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ التَّسْبِيحَ، وَالتَّكْبِيرَ، وَالتَّهْلِيلَ»

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்விடத்தில் மற்ற நாட்களை விட மிக மகத்தான நாட்கள்.அந்த முதல் 10நாட்களில் செய்யப்படுகின்ற அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமானது,மற்ற நாட்களில் செய்யப்படுகின்ற அமலை விட.

ஆகவே,இந்த நாள்களில் அதிகம் லா இலாஹா இல்லல்லாஹ் சொல்லுங்கள். அதிகமாக தக்பீர் சொல்லுங்கள். அதிகமாக என்று அல்லாஹ்வை புகழுங்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : தப்ரானி கபீர், எண் : 11116.

இந்த ஹதீஸை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிக்கின்ற ஸயீது இப்னு ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் என்ற தாபியீ பற்றி அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்.

(இதுதான் ஹதீஸ் கலையினுடைய அறிஞர்களின் பண்பாடாக இருந்தது. அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தால், அந்த ஹதீஸை கொண்டு அவர்கள் அதிகம் அமல் செய்பவராக இருந்தார்கள். அந்த ஹதீஸை மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு மட்டும் அல்ல, அந்த ஹதீஸைப் பின்பற்றுவதில் அவர்கள் முதல் முன்னோடியாக இருந்தார்கள்.)

இமாம் ஸயீது இப்னு ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், இந்த முதல் பத்து நாட்கள் வந்துவிட்டால், சிரமம் எடுத்துக் கொண்டு, அதிக முயற்சி எடுத்துக்கொண்டு அமல்களில் ஆர்வம் கொள்வார்கள். அவர்களை போன்று நம்மால் அமல் செய்ய முடியாது. சாதாரணமாக முயற்சி எடுக்கின்ற மக்கள் இந்த அமல்களை செய்ய முடியாது. இதற்காக ஒரு தனி சிரமம் எடுத்து அவர்கள் அவர்கள் செய்வார்கள்.

ஆதாரம் : தாரமி.

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் தங்களது விரிவுரை ஃபத்ஹுல் பாரியில் இந்த நாட்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவ்வளவு பெரிய சிறப்புகளை கொடுத்திருப்பதுடைய விளக்கத்தை எழுதுகிறார்கள்:

பொதுவாக மற்ற நாட்களில் ஒன்று சேராத வணக்க வழிபாடு இந்த நாட்களில் சேர்கிறது. பொதுவாக ஒரு முஸ்லிமுடைய நாட்களில் தொழுகை இருக்கும். சில நாட்களில் தொழுகையும் இருக்கும், நோன்பும் இருக்கும்.

ஆனால், இஸ்லாத்தினுடைய இன்னொரு மிகப்பெரிய கடமையாகிய ஹஜ், உம்ராவும் சேர்ந்து ஒரு நாட்களில் ஒரு முஸ்லீமுக்கு இருக்கிறது என்றால், அது துல்ஹஜ் மாதத்தினுடைய இந்த முதல் பத்து நாட்களில் தான்.

ஆதாரம் : ஃபத்ஹுல் பாரி.

வணக்க வழிபாடுகளில் ஒரு பெரும் பகுதி துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நிறைவேற்றப்படுகிறது. ஆகவேதான், இந்த நாட்கள் அல்லாஹ்விடத்தில் மிக மிக சிறப்புக்குரியதாக இருக்கிறது.

இன்னும் இல்முடைய மூத்த அறிஞர்கள் சொல்கிறார்கள்: இரவுகளில் ரமலானுடைய பிந்திய பத்து இரவுகள் சிறப்பானது. பகலில் துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்கள் சிறப்பானது.

ஆகவே, இந்த நாட்களில் நம்முடைய அலட்சியத்தை விட்டு, நம்முடைய சோம்பேறித்தனத்தை விட்டு, நம்முடைய கவனக்குறைவு நீக்கி அல்லாஹ்வின் பக்கம் அதிகம் அமல்களைக் கொண்டு நெருங்குகின்ற மக்களாக நாம் இருக்க வேண்டும்.

அதில் சில அமல்களை பற்றி நாம் பார்ப்போம். குறிப்பாக ஃபர்ளான தொழுகைகள். அதற்குரிய நேரத்தில் முன்கூட்டியே தொழுகைக்கு ஆஜராகி அந்த தொழுகையை நிறைவேற்றக் கூடிய மக்களாக இருப்பது.

அதுபோன்று சுன்னத்தான, நஃபிலான தொழுகையை அதிகமாக நிறைவேற்றுவது. எந்த ஒரு இபாதத்தை எடுத்தாலும் அந்த இபாதத்தில் முதல் இபாதத்தாக தொழுகை ஒரு முஸ்லிமுக்கு இருக்கிறது.

ஆகவே, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகையை விட சிறந்த ஒரு வணக்கமில்லை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்ற ஒரு ஹதீஸை பாருங்கள்.

சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.

عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ

நீ அல்லாஹ்விற்கு அதிகமாக ஸுஜூது செய்வீராக.

பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸுஜூதுடைய நன்மையை சொல்கிறார்கள்.

அறிவிப்பாளர் : சவ்பான்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 488.

அன்பானவர்களே! இப்படிப்பட்ட நன்மைகளை உணர்ந்தவர்களாக அல்லாஹ்விற்கு முன் நாம் சிறம் பணிய வேண்டும்.

இன்று,எத்தனையோ பேர் அல்லாஹ்வுக்கு முன்னால் சுஜுது செய்கிறார்கள். ஆனால் அகிலங்களின் ரட்சகன், சொர்க்கத்தின் இறைவன் ரப்புல் ஆலமீனுக்கு முன்னால்  இப்போது இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் உள்ளத்தில் எத்தனையோ கவலைகளை அல்லது எத்தனையோ எண்ணங்களை சுமந்தவராக ஸஜூதில் செல்கிறார்கள்.

சுஜூது ஏன் நாம் செய்கிறோம்? நம்முடைய ரப்பை மகிமை படுத்துவதற்காக. என்னுடைய அரசன்,எனது மகத்தான இறைவனுக்கு முன்னால் இந்த பணிவை வெளிப்படுத்தி என்னுடைய ரப்பின் மகத்துவத்தை நான் அங்கிகரிகிறேன், எனது ரப்பின் கண்ணியத்தை நான் உணர்கிறேன் என்ற அடிமை உணர்வோடு சுஜூது செய்ய வேண்டும்.

பெருமை படுத்துவதற்கு அவன் தான் தகுதியானவன். அல்முதகப்பீர், அல்முதஆல் -எல்லா பெருமைக்கும் அவன்தான் சொந்தக்காரன். எல்லா உயர்வுகளுக்கும் அவன்தான் சொந்தக்காரன். அவனை விட நாம் பணிவதற்கு, பயப்படுவதற்கு வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை. (அல்குர்ஆன் கருத்து : 59 : 23, 13 : 9)

அந்த ரப்புக்கு முன்னால் சுஜூது செய்யும் போது,அல்லாஹ்வுடைய மகத்துவத்தை அல்லாஹ்வின் கம்பீரத்தை நினைத்தவர்களாக, அந்த பேரரசனுக்கு முன்னால் சுஜுது செய்வதற்கு எனக்கு தவ்ஃபீக் கொடுத்தானே என்ற உணர்வோடு செய்யப்படுகின்ற சுஜூது அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்குகின்றது.

இந்த சுஜூத் என்பது, உங்களுடைய உடல் உறுப்புக்களை எல்லாம் நீங்கள் கீழே தாழ்த்தி, பணிந்து செய்யக்கூடிய ஒரு வணக்கம்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் :

"أُمِرَ النَّبِيُّ صلّى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الجَبْهَةِ، وَاليَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ"

நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி அவரகள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 809.

நான் ஸஜ்தா செய்யும்போது ஏழு உறுப்புகள் பூமியில் பதித்து அல்லாஹ்விற்கு பணிய வேண்டும் என்று எனக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. முகத்தை வைக்க வேண்டும், அதில் நெற்றியும் மூக்கும் பூமியில் பதிய வேண்டும்.

இரு கைகளுடைய உள்ளங்கைகளும் கிப்லாவை முன்னோக்கியவர்களாக விரல்களை விரிக்காமல் விரல்களை சேர்த்து வைத்தவர்களாக கிப்லாவை முன்னோக்கி வைத்து இருக்கவேண்டும்.

இரண்டு முட்டிகால்கள் பூமியில் ஆழமாக பதித்திருக்க வேண்டும். நம்முடைய பாதங்கள் அதனுடைய விரல்கள் எல்லாம் கிப்லாவை முன்னோக்கி எவ்வளவு விரல்களை அழுத்தி கிப்லாவை முன்னோக்க முடியுமோ அந்த அளவிற்கு நம்முடைய பாதத்தின் விரல்களை பூமியில் அழுத்தி கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதைப் போன்று நீங்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருப்பது தொழுகையில் ஸுஜூதில் தான். எனவே, அதில் அதிகம் துஆ கேளுங்கள்என்று சொன்னார்கள்.

அந்த நெருக்கத்தை நமது உள்ளத்திலிருந்து பறிப்பதற்காக நமது சிந்தனையை அந்த நேரத்திலிருந்து திருப்புவதற்காக ஷைத்தான் எத்தனையோ ஊசலாட்டங்கள், எத்தனையோ எண்ணங்களை கொண்டு வருவான்.

இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் என்ற உணர்வோடு இந்த தொழுகையை நீங்கள் நிறைவேற்றுங்கள் என்று சொன்னார்கள்.

தொழுகை என்பது உயர்ந்த ஒரு வணக்கம். அதிலும் குறிப்பாக சுஜுது அதிகம் நன்மைகளை தரக் கூடியது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً»

அதிகம் நீ ஸஜ்தா செய். நீ ஒரு ஸஜ்தா செய்து உனது தலையை உயர்த்தும் போது அல்லாஹ் மறுமையில் அவனிடத்தில் ஒரு தரஜாவை உயர்த்துகிறான்.

ஒரு ஸஜ்தா செய்து நீங்கள் தலையை உயர்த்தும் போது அல்லாஹ் உங்களுக்கு ஒரு தரஜாவை அவனிடத்தில் உயர்த்துகிறான். உங்களது பாவங்களில் ஒரு பாவத்தை மன்னிக்கிறான்.

அறிவிப்பாளர் : சவ்பான்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 488.

அதுபோன்று,இந்த 10நாட்களில் செய்யப்படுகின்ற அமல்களில் ஒரு முக்கியமான அமல்,குறிப்பாக முதல் பிறையிலிருந்து பிறை ஒன்பது அரஃபாவுடைய நாள் வரை நோன்பு இருப்பது.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்கள் ஒருவர் மூலமாக அறிவிக்கப்படுகின்றது.

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களும், ஆஷுரா தினம் -முஹர்ரம் மாதத்துடைய பத்தாவது நாள், அது போன்று ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 27376.

இமாம் நவவி இந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்கிறார்கள் :

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் நோன்பு வைப்பது மிக மிக விரும்பத்தக்க ஒரு செயலாகும்.

இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொல்கிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக இந்த பத்து நாட்களில் அதிகம் நீங்கள் லாயிலாஹ இல்லல்லாஹு, அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்ற திக்ருகளை செய்யுங்கள்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸை பதிவு செய்துவிட்டு,இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அமல்களையும் பதிவு செய்கிறார்கள்.

இந்த பத்து நாட்கள் வந்துவிட்டால், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் கடைதெருக்களுக்கு செல்வார்கள். தக்பீர் சொல்வார்கள் மக்களுக்கு தக்பீரை நினைவூட்டுவார்கள்.

அதுவும் குறிப்பாக ஹஜ்ஜுக்கு சென்றிருந்தால் மினாவில் தங்கி இருக்கும்போதும், கடை தெருவுக்கு செல்லும்போதும் அவர்கள் அந்த மக்களுக்கு தக்பீரை சத்தமாக நினைவு படுத்துவார்கள். பாதைகளில் செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறி செல்வார்கள்.

அதைக் கேட்கின்ற மக்களெல்லாம் அதிகம் சத்தத்தோடு தக்பீர் சொல்வார்கள். மினாவே தக்பீரால் நடுங்குகின்ற அளவிற்கு அங்கே தக்பீர் முழக்கம் உயரும் என்று இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

அதுபோன்று இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மினாவில் தங்கி இருக்கின்ற பொழுது, தொழுகைகளுக்கு பிறகு, தூங்கக் கூடிய நேரத்தில், கூடாரங்களில் ஏதாவது அறிவுரை சொல்லும் போது, தானும் தக்பீர் சொல்லி மக்களுக்கும் தக்பீரை நினைவூட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்.

புகாரி பாடம் : அய்யாமுத் தஷ்ரீகில் அமல் செய்வதின் சிறப்பு.

அதுபோன்று,இந்த துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற அமல்களில் ஒரு முக்கியமான அமல்,அரஃபாவுடைய நாளில் ஹாஜிகள் அரஃபாவில் தங்கியிருக்கும் போது, ஹஜ் செய்ய இயலாதவர்கள் அந்த நாளில் அவர்கள் நோன்பு இருப்பது.

இதைப்பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்கள் கூறிய ஹதீஸை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

இந்த நோன்பு இதற்கு முன்புள்ள ஒரு வருட பாவங்களையும் அதற்கு பின்பு ஒரு வருடத்தின் பாவங்களையும் மன்னிப்பதற்கு இந்த நோன்பை காரணமாக்குவான் என்று நான் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.

அரஃபாவுடைய நாள் என்பது அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னதைப் போன்று,

الْحَجُّ عَرَفَةُ

ஹஜ் என்பது அரஃபா தான்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 18774.

அல்லாஹ் அதிகமாக நரகத்திலிருந்து தனது அடியார்களை விடுதலை செய்யக் கூடிய ஒரு முக்கியமான நாள் அரஃபா தான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1348.

இன்னும் ஷைத்தான் கேவலப்படுத்த படுகின்ற ஒரு முக்கியமான நாள் அரஃபா. 

நூல் : முவத்தா இமாம் மாலிக், எண் : 1597.

அல்லாஹ், தனது மலக்குகளிடத்தில் தனது அடியார்களை பற்றி பெருமை பேசுகின்ற நாள். இந்த நாளில் இந்த அடியார்கள் இங்கு வந்திருக்கிறார்களே.

பரட்டைத் தலையோடு, முடிக் கலைந்தவர்களாக, புழுதி படிந்த மேனியோடு வந்திருக்கிறார்கள். வாணவர்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள். இவர்களை நான் மன்னித்து விட்டேன்.

நூல் : அஹ்மது , எண் : 7089,8047.

அப்படிப்பட்ட அந்த நாளில் நோற்க்கப்படுகின்றது நஃபிலான நோன்பிற்கு அல்லாஹ் கொடுக்கக் கூடிய உயர்ந்த வெகுமதியை பாருங்கள்.

முந்திய ஆண்டிலும் அதற்குப் பிறகு பிந்திய ஆண்டிலும் நிகழக் கூடிய சிறிய பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னிக்கின்றான்.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்றால், சிறு பாவங்கள் என்று நாம் விளங்க வேண்டும்.

ஏனென்றால், எந்த ஹதீஸ்களில் எல்லாம் ஒரு நல்ல அமல் பாவங்களை மன்னிக்கிறது என்று வந்திருக்கின்றதோ, அறிஞர்கள் எல்லோரும் சொல்லக்கூடிய கருத்து அது சிறு பாவங்களை குறிக்கக்கூடியது.

பெரும் பாவங்களுக்கு தவ்பா செய்வது கட்டாயம்.

அல்லாஹ் கூறுகிறான் :

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4:31)

ஆகவே,இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.பெரும் பாவங்களை செய்துவிட்டு,நான் செய்கின்ற அமலால் அந்தப் பெரும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்ற ஏமாற்றத்தில் இருந்து விடக்கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

சிறு பாவங்கள் என்றால்,நம்மை அறியாமல் நமது கண்களாலோ நமது கைகளாலோ நமது எண்ணத்தாலோ நடந்துவிடக்கூடிய சிறு சிறு விஷயங்கள். அந்த விஷயங்களை தான் அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு இங்கே சொல்லித் தருகிறார்கள்.

அன்பானவர்களே! அதுபோன்று துல்ஹஜ் மாதத்தில் ஒரு மகத்தான நாள் இருக்கின்றது. மொத்த பத்து நாட்களும் மிக மகத்தான நாட்கள். அதிலும் மிக மகத்தான நாள் இருக்கின்றது. அதுதான் துல்ஹஜ் மாதத்தின் பிறை பத்தாவது தினம். அதற்கு தான் ஹஜ் உடைய பெரிய நாள் என்று சொல்லப்படுகிறது. ஹஜ்ஜுடைய மிகப்பெரிய நாள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸை இமாம் அபூதாவூது ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

«إِنَّ أَعْظَمَ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمُ النَّحْرِ، ثُمَّ يَوْمُ الْقَرِّ»

நாட்களிலேயே அல்லாஹ்விடத்தில் மிக மகத்தான நாள் துல்ஹஜ் மாதத்துடைய குர்பானி கொடுக்கக் கூடிய பத்தாவது நாள். அதற்கு பிறகு, பிறை 11-வது நாள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நாம் பார்க்கின்றோம். (3)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1765.

ஆகவே,அன்பானவர்களே! வரக்கூடிய இந்த நாட்களை அதிகமான அமல்களைக் கொண்டு, தவ்பாவைக் கொண்டு, இஸ்திஃபாரைக் கொண்டு நாம் முன்னோக்க வேண்டும். இந்த நாட்களை நாம் கண்ணியப்படுத்த வேண்டும்.

யார் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் பக்கம் முன்னேறுவார்களோ அவர்களுக்கு அல்லாஹு தஆலா அந்த அளவு வழிகாட்டுவான்.

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

மேலும்,எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (அல்குர்ஆன் 29 : 69)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)

அன்பானவர்களே! இதுபோன்ற நாட்களை விட வேறு நாட்கள் இருக்குமா? அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்குவதற்கு. தவ்பாவை தேடிக் கொள்வதற்கு,அமல்களை விரைந்து செய்வதற்கு. இந்த உலக வாழ்க்கை அமலுக்காக கொடுக்கப்பட்டது. நாளை மறுமையில் அமல்கள் கிடையாது. ஒன்று சொர்க்கம் அல்லது நரகம் தான் மிச்சமாக இருக்கும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொர்க்கவாசிகளாக நம்மை ஆக்குவானாக. நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ

நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 21 : 90)

அன்பானவர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் மிக முக்கியமான ஒரு இபாதத் இருக்கிறது. துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் அன்று செய்யப்படக்கூடிய அமல்கள்.

அந்த அமல்களில் சிலவற்றை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அமல்களில் மிக முக்கியமான ஒரு அமல்,துல்ஹஜ் மாதத்தில் பிறை 10அன்று நிறைவேற்றக்கூடிய ஈதுல் அல்ஹா உடைய தொழுகை.

இன்று பலர்,பொதுவாகவே மார்க்க விஷயங்களில் அலட்சியமாக இருக்கிறார்கள். பர்ளான தொழுகையில் அலட்சியமாக இருக்கிறார்கள்.

நம்மில் எத்தனையோ பேர் நமது குடும்பங்களில் ஜும்ஆவுடைய தொழுகையைக் கூட அலட்சியமாக செய்பவர்களாக இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا، طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»

யார்,மூன்று ஜும்ஆக்களை தொடர்ந்து விடுவாரோ அல்லாஹ் அவனுடைய உள்ளத்தின் மீது முத்திரையிட்டு விடுகிறான்.

நூல் : அபூதாவூத், எண் : 1052.

தொழுகையை விடுவது குஃப்ர். அதிலும் ஜும்ஆவுடைய தொழுகையை தொடர்ந்து ஒருவன் வேண்டும் என்று தவிர்த்து வருகிறான் என்றால், அது அவனை கண்டிப்பாக குஃப்ரில் தள்ளிவிடும்.

அன்பானவர்களே! இந்த பெருநாள் தொழுகை முக்கியமான தொழுகை. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த தொழுகையை நம் மீது கடமையாக்கி இருக்கிறான். இந்த தொழுகைக்காக நாம் விரைவாக செல்ல வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அரஃபா தினத்தின் அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை முடித்ததிலிருந்தே, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 13-உடைய அஸர் தொழுகை முடிகின்ற வரை, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் தக்பீர் சொல்கின்ற வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.

புகாரி பாடம் : அய்யாமுத் தஷ்ரீகில் அமல் செய்வதின் சிறப்பு, இப்னு அபீ ஷைபா 1/48.

இதைத் தான் அல்லாஹ் சொல்கிறான்:

وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். (அல்குர்ஆன் 2 : 203)

அந்த குறிப்பிடப்பட்ட நாள் என்பது இந்த துல்ஹஜ் மாதத்தில் அரஃபாவின் காலைப்பொழுதில் இருந்து துல்ஹஜ் மாதத்தின் பிறை 13-குர்பானி கொடுக்கின்ற நேரம் முடிகின்ற வரை.

இந்த தக்பீர் உடைய வர்ணனை பற்றி ஹதீஸ் நூல்களில் பார்க்கின்றோம்.

الله اكبر الله اكبر لا اله الا الله و الله اكبر الله اكبر ولله الحمد

இந்த தக்பீரை இமாம், முக்ததீ இருவரும் சேர்ந்து அவரவர்களுடைய குரல்களில் தனித்தனியாக ஒரு முறை சொல்ல வேண்டும்.

இமாம் ஒரு முறை சொல்வது, பிறகு முக்ததீ சொல்வது. இவ்வாறு மூன்று முறை சொல்வது பிதஅத். எல்லோரும் ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து சொல்லுவதும் பிதஅத்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த தக்பீரை தொழுகைக்கு பிறகு சொல்ல வேண்டும்.

இப்னு அபீ ஷைபா: (2:165-168)

அதுபோன்று பிறை 10அன்று உழ்ஹிய்யா -குர்பானி கொடுக்க வேண்டும். இந்த குர்பானி கொடுப்பது கட்டாயம்.

ஒரு ஆட்டை முழுமையாக கொடுப்பதற்கோ அல்லது ஒரு மாட்டில் ஒரு பங்கை கொடுப்பதற்கோ அல்லது ஒட்டகத்தில் ஒரு பங்கை கொடுப்பதற்கு சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக குர்பானியை நிறைவேற்ற வேண்டும். அந்த குர்பானி தொழுது முடித்த பிறகு நிறைவேற்ற வேண்டும்.

ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

«مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، وَمَنْ لَمْ يَذْبَحْ، فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும். அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்துப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 985.

இந்த குர்பானி உடைய நாள், துல்ஹஜ் மாதத்தின் பிறை பத்தில் தொழுகையை முடிந்ததிலிருந்து பிறை 13-உடைய சூரியன் மறைகின்ற வரை அதனுடைய நேரம் இருக்கின்றது.

அதுபோன்று, தொழுகைக்காக நாம் செல்லும்போது, குளித்து சுத்தம் செய்து, நறுமணங்கள் பூசி, நம்மிடத்தில் இருக்கின்ற ஆடைகளில் நல்ல ஆடையை அணிந்து செல்வது.

இதற்காக தனியாக ஆடை வாங்கி புது ஆடையை தான் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று எந்த வழக்கமும் இல்லை.

அதுபோன்று, பெண்களும் பெருநாள் தொழுகைக்கு செல்வது. தொழுகை இல்லை என்றாலும் கூட, அந்த தொழக்கூடிய இடத்தில் முஸ்லிம்கள் செய்யக்கூடிய துஆவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களையும் தொழுகைக்கு அழைத்து வரச் சொன்னார்கள்.

أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ نُخْرِجَهُنَّ فِي الْفِطْرِ وَالْأَضْحَى، الْعَوَاتِقَ، وَالْحُيَّضَ، وَذَوَاتِ الْخُدُورِ، فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الصَّلَاةَ، وَيَشْهَدْنَ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ إِحْدَانَا لَا يَكُونُ لَهَا جِلْبَابٌ، قَالَ: «لِتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا»

சிறு வயது பெண்கள், நடுத்தர வயது பெண்கள், வயதான பெண்கள், தொழுகை இல்லாத பெண்கள் எல்லோரையும் அழைத்து வாருங்கள் என்று சொன்னபோது ஒரு பெண்மணி கேட்கிறாள்.

அல்லாஹ்வுடைய தூதரே! எங்களில் ஒருவருக்கு வெளியில் வருவதற்கான பர்தா இல்லை என்றால் என்ன செய்வது? அப்போது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

அந்த பெண்ணுடைய அண்டை வீட்டுப் பெண் தன்னிடத்தில் இருக்கின்ற ஒரு ஆடையை அந்தப் பெண்ணுக்கு கொடுத்து உதவட்டும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அதிய்யா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம்,எண் : 890.

அந்தளவுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெருநாள் தொழுகைக்கு வருவதை வலியுறுத்தினார்கள்.

பெண்கள் வரும்போது குறிப்பாக அவர்கள் ஹிஜாபுடன் வரவேண்டும். நறுமணம் பூசி அந்த நறுமணம் வெளியே வீசும் படியான நிலையில் வரக்கூடாது.

அது போன்று ஆடை அலங்காரங்களை செய்துகொண்டு அதை மறைக்காமல் அந்நியவர்களுக்கு முன்பாக அந்த அலங்காரங்களை வெளிப்படுத்தி வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அது போன்று, குர்பானி உடைய இறைச்சியை நாமும் சாப்பிட வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு கொடுத்து உறவுகளுக்கு அன்பளிப்பு செய்ய வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் அந்த குர்பானி இறைச்சியின் மீது அவர்கள் கொண்டிருந்த நாட்டத்தை இங்கு அறிவிப்பாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்பானி இறைச்சியிலிருந்து அன்று சாப்பிட வேண்டும் என்பதற்காக அந்த பெருநாள் தொழுகைக்கு முன்பு எதையும் உண்ண மாட்டார்கள்.

தொழுது முடித்து விட்டு, குர்பானி கொடுத்த பிறகு, அதனுடைய இறைச்சியை சமைத்து அன்றைய தினம் முதல் உணவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிடுவார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 542.

அதுபோன்று, அந்த பெருநாள் தொழுகைக்கு செல்லும் போது முடிந்த அளவு நடந்து செல்வது. வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இருந்தால் வாகனத்தில் செல்லலாம். இல்லை என்றால் நடந்து செல்வது மிகச் சிறந்தது.

அதுபோன்று பெருநாள் தொழுகையை மைதானத்தில் நிறைவேற்றுவது. மழைப்போன்ற காரணம் இருந்தால் மட்டும் மஸ்ஜிதுகளில் நிறைவேற்றுவதற்கு அனுமதி இருக்கின்றது.

நூல் : புகாரி, எண் : 304,956.

அதுபோன்று, இந்த பெருநாள் தினத்தில் பொதுவாக மக்கள் செய்யக்கூடிய சில தவறுகளையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, பெருநாள் தொழுகையுடைய மைதானத்தில் உட்கார்ந்துகொண்டு எல்லோரும் ஒரே சத்தமாக தக்பீர் சொல்வது. அல்லது இமாம் சொல்ல மற்றவர்கள் சேர்ந்து சொல்வது. இவ்வாறு சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் தக்பீர் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும்.

அதுபோன்று, நாம் செல்லக்கூடிய பாதை. அதையும் அங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பலர் இதை கவனத்தில் கொள்வதில்லை. ஒரு பாதையில் சென்று அதே பாதையில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருகிறார்கள்.

அப்படியில்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாக்களில் ஒன்று, ஒரு பாதையில் சென்று வேறொரு பாதையில் திரும்ப வேண்டும்.

அல்ஐவ்ஹருன் நகிய்யு 3/320.

அதுபோன்று இந்த பெருநாள் தொழுகையில் வாழ்த்து சொல்வதற்கு என்று நமக்கு நல்ல வார்த்தைகளை நம்முடைய நபித்தோழர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ

அல்லாஹ் உங்களுடைய அமல்களையும் நம்முடைய அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக!

இது போன்ற நல்ல வார்த்தைகளை பரிமாறிக்கொள்ள வேண்டுமே தவிர,வெறும் பெருநாள் வாழ்த்துகள் என்று ஒரு அர்த்தமற்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாமல்,நம்முடைய நபித்தோழர்கள் சொல்லி இருக்கின்ற நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது.

அதுபோன்று,இந்த பெருநாள் தினத்தில் கிடைத்த ஓய்வை பயன்படுத்தி,நம்மில் பலர் சினிமாக்களுக்கு செல்கிறார்கள்.

அல்லது எங்கே சென்றால் தொழுகை தவறி விடுமோ அது போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள். ஆண்கள் பெண்கள் கலந்து இருக்கின்ற ஹிஜாப் இல்லாத இடங்களுக்கு சென்று பொழுதுபோக்கு என்ற அடிப்படையில் பெருநாள் தினத்தை அவர்கள் கழிகின்றார்கள். இதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை போன்று இன்னொரு முக்கியமான சட்டம். யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என்ற நிய்யத்துக்கு வந்து விட்டாரோ, அவர் அந்த துல்ஹஜ் மாதத்தின் பிறை ஆரம்பத்தில் இருந்து தனது குர்பானி நிறைவேற்றப்படுகின்ற வரை அவர் தன்னுடைய உடலின் முடிகள் எதையும் கலையக்கூடாது. தன்னுடைய நகத்தையும் வெட்டக்கூடாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதுகுறித்து சொன்ன தெளிவான ஹதீஸை இமாம் முஸ்லிம் இமாம் அஹ்மத் பதிவு செய்கின்றார்கள்.

«إِذَا دَخَلَتِ الْعَشْرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا»

பத்து நாட்கள் துல் ஹஜ் உடைய நாட்கள் வந்துவிட்டால்,உங்களில் யார் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நாடி இருக்கிறாரோ அவர் தன்னுடைய முடியைக் கலைய வேண்டாம். தன்னுடைய நகங்களை வெட்டி விட வேண்டாம்.

அறிவிப்பாளர் : உம்மு சல்மா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம்,எண் : 1977.

இன்னொரு அறிவிப்பில், மிகவும் அழுத்தமாக சொன்னார்கள்: தனது முடி அல்லது தனது நகத்தில் எதையும் தொட்டே விட வேண்டாம், அவர் குர்பானி கொடுக்கும் வரை இது.

இந்த சட்டம் யார் வீட்டில் குர்பானி கொடுக்கிறாரோ அவருக்கு மட்டும்தான். குடும்பத்திலுள்ள மற்றவர்கள் செய்வது தவறு கிடையாது. குடும்பத்தில் யார் குர்பானி அறுக்கின்றாரோ, அல்லது யார் குர்பானி கொடுப்பதற்காக நிய்யத் வைத்தார்களோ அவர்கள் மட்டும்தான்.

இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருத்தருக்கும் குர்பானி அல்ல. வீட்டில் ஒருவருக்கு ஒரு குர்பானி அறுத்தாலே அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சார்பாகவும் அந்த குர்பானி நிறைவேறிவிடும்.

அபூ அய்யூப் அன்சாரி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொன்னார்கள்: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரு வீட்டுக்கு ஒரு ஆடு என்று அறுப்போம். அந்த ஆட்டை அறுப்பவர் சார்பாகவும் குடும்பத்தார் சார்பாகவும் அவர் நிறைவேற்றுவார்.(4)

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 1497.

அன்பானவர்களே! இந்த குர்பானி உடைய பிராணியின் சட்டங்களை குறிப்பாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஏதோ நமக்கு சவுகரியமாக கிடைக்கிறது, சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக எந்த ஆடுகளை வேண்டுமானாலும் அல்லது எந்த மாடுகளை வேண்டுமானாலும் வாங்கி அறுத்து விட முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்காக தெளிவான வழிகாட்டுதலை நமக்கு சொல்லி இருக்கின்றார்கள்.

அதாவது, அந்த ஆடு கண் குருடான, மிகவும் மெலிந்த ஆடாக, நொண்டி ஆடாக இருக்கக்கூடாது. உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பலவீனமான ஆடாக இருக்கக்கூடாது. இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 1497.

அதுபோன்று,அதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனுடைய வயதை குறித்து நமக்கு வரம்பை சொல்லி இருக்கின்றார்கள்.

ஒட்டகமாக இருந்தால் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மாடாக இருந்தால் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். சாதாரண ஆடுகளாக இருந்தால் ஒரு ஆண்டு கண்டிப்பாக பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது செம்மறி ஆடாக இருந்தால் ஆறு மாதங்கள் முழுமையாக இருக்கவேண்டும்.

அறிவிப்பாளர் : அபூ புர்தா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5556.

இப்படிப்பட்ட குர்பானி பிராணிகளைதான் அறுப்பதற்கு நமக்கு அனுமதி இருக்கின்றது. இந்த குர்பானிப் பிராணிகளின் இறைச்சிகளை நாமும் சாப்பிடலாம். நம்முடைய உறவுகளுக்கு கொடுக்கலாம். ஏழைகளுக்குக் கொடுக்கலாம்.

ஆனால், அறுத்து சுத்தம் செய்து தருபவர்களுக்கு தனியாக கூலி கொடுக்கப்பட வேண்டுமே தவிர, குர்பானியின் பிராணியில் இருந்து எதையும் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது.தோலையோ அல்லது உள் இருக்கக்கூடிய பொருட்களையோ அதனுடைய ஏனைய உறுப்புக்களையும் அவர்களுக்கு கூலியாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். (5)

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1716.

அன்பானவர்களே! நம்முடைய ஸலஃப்களில் சிலர் இந்த குர்பானி பிராணியின் இறைச்சியை மூன்றாக பிரித்து, ஒன்றை தனக்காகவும், ஒன்றை தன்னுடைய நண்பர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்காகவும், இன்னும் ஒரு பங்கை ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பதற்காகவும் பிரிப்பது மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

குர்பானி பிராணியை அறுப்பதற்கு அழகிய ஒழுக்கத்தை அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள். நபியவர்கள் அறுக்கும் போது,

«بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»

அல்லாஹ்வுடைய தூதர் குர்பானிப் பிராணியை அறுக்கின்றார்கள். பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் சொன்னார்கள். பிறகு, அல்லாஹ் இந்த குர்பானி என் சார்பாகவும் என்னுடைய உம்மத்தில் யார் குர்பானி கொடுக்க முடியாமல் இருக்கிறார்களோ அவர்கள் சார்பாகவும் இதை நிறைவேற்றுகிறேன். நீ ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1521.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த உணர்வை இந்த இடத்தில் நாம் அறிந்து கொள்கிறோம்.

அதுபோன்று, இன்னொரு முக்கியமான விஷயம். இப்போது ஒருவருக்கு குர்பானி கொடுப்பதற்கு வசதி இல்லை. அவர் துல்ஹஜ் மாதம் பிறை பிறந்தவுடன் தன்னுடைய தலை முடிகளையும் நகங்களையும் வெட்டுவதை விட்டோ நின்று கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

திடீரென்று அவருக்கு வசதி ஏற்படுகிறது. அப்போது அவருக்கு நிய்யத் வந்தால் எப்போது அவருக்கு நிய்யத் வருகிறதோ அந்த நேரத்திலிருந்து அவர் நகத்தை வெட்டுவது, தலைமுடிகளை வெட்டுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி, இந்த முதல் பத்து நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள். அல்லாஹ்விடத்தில் அமல்களைக் கொண்டும், இபாதத்துகளைக் கொண்டும், பாவமன்னிப்பு தேடுவதைக் கொண்டும் நாம் அல்லாஹ்வை நெருங்குவோமாக!

அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்குரிய அல்லாஹ்வுடைய அன்பை அல்லாஹ்வுடைய மன்னிப்பை அடைவதற்குரிய நாட்களாக ஆக்குவானாக! பாவங்கள் செய்வதிலிருந்தும், அலட்சியமாக நேரங்களை கழிப்பதிலிருந்தும்என்னையும் உங்களையும் இந்த சமுதாயத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: سَمِعْتُ الْأَوْزَاعِيَّ، قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ، حَدَّثَنِي مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ، قَالَ: لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللهُ بِهِ الْجَنَّةَ؟ أَوْ قَالَ قُلْتُ: بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللهِ، فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ: سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً» قَالَ مَعْدَانُ: ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ فَقَالَ لِي: مِثْلَ مَا قَالَ لِي: ثَوْبَانُ (صحيح مسلم- 488)

குறிப்பு 2)

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ يُوسُفَ، يَقُولُ: عَنِ ابْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ، مِنْ يَوْمِ عَرَفَةَ، وَإِنَّهُ لَيَدْنُو، ثُمَّ يُبَاهِي بِهِمِ الْمَلَائِكَةَ، فَيَقُولُ: مَا أَرَادَ هَؤُلَاءِ؟ " (صحيح مسلم - 1348)

குறிப்பு 3)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى، ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، أَخْبَرَنَا عِيسَى، وَهَذَا لَفْظُ إِبْرَاهِيمَ، عَنْ ثَوْرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ لُحَيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:149] قَالَ: «إِنَّ أَعْظَمَ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمُ النَّحْرِ، ثُمَّ يَوْمُ الْقَرِّ». قَالَ عِيسَى، قَالَ ثَوْرٌ: وَهُوَ الْيَوْمُ الثَّانِي، وَقَالَ: وَقُرِّبَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَنَاتٌ خَمْسٌ أَوْ سِتٌّ فَطَفِقْنَ يَزْدَلِفْنَ إِلَيْهِ بِأَيَّتِهِنَّ يَبْدَأُ، فَلَمَّا وَجَبَتْ جُنُوبُهَا، قَالَ: فَتَكَلَّمَ بِكَلِمَةٍ خَفِيَّةٍ لَمْ أَفْهَمْهَا، فَقُلْتُ: مَا قَالَ؟ قَالَ: «مَنْ شَاءَ اقْتَطَعَ» (سنن أبي داود- 1765) [حكم الألباني] : صحيح

குறிப்பு 4)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ [ص:86] عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: «لَا يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلَا بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلَا بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلَا بِالعَجْفَاءِ الَّتِي لَا تُنْقِي» حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ بِمَعْنَاهُ.: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ عَنِ البَرَاءِ، وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ عِنْدَ أَهْلِ العِلْمِ (سنن الترمذي 1497) [حكم الألباني] : صحيح

குறிப்பு 5)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُمْتُ عَلَى البُدْنِ، فَأَمَرَنِي فَقَسَمْتُ لُحُومَهَا، ثُمَّ أَمَرَنِي فَقَسَمْتُ جِلاَلَهَا وَجُلُودَهَا»، قَالَ سُفْيَانُ: وَحَدَّثَنِي عَبْدُ الكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ أَقُومَ عَلَى البُدْنِ، وَلاَ أُعْطِيَ عَلَيْهَا شَيْئًا فِي جِزَارَتِهَا» (صحيح البخاري- 1716)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/