HOME      Khutba      இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு4-4 | Tamil Bayan - 431   
 

இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு4-4 | Tamil Bayan - 431

           

இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு4-4 | Tamil Bayan - 431


இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 4-4)

வரிசை : 431

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 30-09-2016 | 29-12-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றி வாழும்படி, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணும் படி அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை பேணுதலுடன் பேணும் படி, அல்லாஹ் ஹராமாக்கிய சிறிய பெரிய அனைத்து பாவங்களை விட்டு விலகி இருக்கும் படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நன்மைகளை ஏற்று அருள் புரிவானாக! நல்லோருடைய கூட்டத்தில் சேர்ப்பானாக!

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அழகிய அறிவுரைகளை நமக்கு அல்குர்ஆன் மூலமாக வழங்கி கொண்டே இருக்கின்றான். அந்த அழகிய அறிவுரைகளை பின்பற்றி வாழ்ந்த சான்றோர்களை ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றான்.

நபிமார்களை பற்றியும் அல்லாஹ் சொல்கிறான்.அந்த நபிமார்களோடு வாழ்ந்த நல்லவர்களை பற்றியும் அல்லாஹு தஆலா நமக்கு நினைவூட்டுகின்றான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாக இருப்பவர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் 9 : 119)

அல்லாஹ்வை பயந்து கொள்வதற்கு அல்லாஹ்வை பயந்து வாழுகின்ற தலைவர்களோடு சேர்ந்து வாழ்வது மிகப்பெரிய அவசியமான ஒன்றாக இருக்கிறது.

நல்லவர்களை பற்றி அதிகம் பேசும் போது அந்த நல்லவர்களுடைய வாழ்க்கையின் படி நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையை அல்லாஹு தஆலா உள்ளத்தில் கொடுக்கிறான்.

அந்த அடிப்படையில் தான் தொடர்ந்து சில நபித்தோழர்களை பற்றி நாம் பேசி வருகின்றோம். அதில் குறிப்பாக இறை வேத பேரறிஞர் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு முந்தி இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மூத்த முஹாஜிர் தோழர்களில் ஒரு முக்கியமான தோழர் இவர்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்து வருவதற்கு முன்பாக ஹபஷா விற்கும் ஹிஜ்ரா செய்தார்கள். ஆகவே,2ஹிஜ்ரத் உடைய நன்மைகளை பெற்றவர்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதராக அனுப்ப பட்ட போது ஆடு மேய்க்க கூடிய இடையராக இருந்தவர்கள்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபித்துவ அழைப்பிற்கு பிறகு, தன்னுடைய ஆடு மேய்க்க கூடிய வேலையை விட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சமூகத்தில் சதா தொடர்ந்து இருந்து கல்வியை கற்பது, மனப்பாடம் செய்வது, குர்ஆனை புரிவது, குர்ஆனை மக்களுக்கு கற்பிப்பது என்பதாகவே அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது.

அதற்கு பிறகும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது கல்வி பயணத்தை நிறுத்தி கொள்ளவில்லை. தங்களை விட மூத்தவர்கள் கலீஃபாக்கள்  இருந்தும் அவர்கள் கல்வியை தேடிக் கொண்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், கல்வியை தேடுவதற்கென்று அவர்களுக்கு ஒரு உசூல் -ஒரு அடிப்படை வைத்திருந்தார்கள்.

இந்த விஷயத்தை நாம் இங்கே நினைவு கூறும் போது நம்மை பற்றி ஒரு சுயபரிசோதனையும் நாம் செய்ய வேண்டும்.

பெரும்பாலும், நம்மை பொருத்தவரை கல்விகள் தேடப்படுவது பிறருக்கு சொல்வதற்காக, அல்லது எங்கேயாவது ஒரு சந்தர்ப்பம் என்றால் மட்டும், அந்த சந்தர்ப்பங்களில் பேசுவதற்காக கல்வியை தேடுகின்றோம்.

அதை மக்களுக்கு செல்கின்றோம். அதற்கு பின்னால், அந்த கல்வி நம்முடைய வாழ்க்கையில் பின்பற்ற படுகிறதா? என்ற சுயபரிசோதனை செய்து கொள்ள முடியாத ஒரு பலவீனத்தில், ஒரு ஏமாற்றத்தில், ஒரு அலட்சியத்தில், நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கின்றோம். அல்லாஹ் மன்னித்தருள்வானாக! சீர்திருத்தம் செய்வானாக!

ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹு தஆலா இப்படிப்பட்ட ஒரு அளப்பரிய கல்வி ஞானத்தை, குர்ஆனோடு ஒரு ஆழ்ந்த ஈடுபாட்டை கொடுத்துள்ளான் என்றால், அதற்கு பின்னால் அவர்களிடமிருந்த மனத்தூய்மை.

அவர்கள் கல்வியை கற்றுக் கொண்டதற்குரிய அளவு கோல் என்ன வைத்திருந்தார்கள் என்பதை தான் நாம் இடத்தில் பார்க்கிறோம்.

அவர்கள் சொல்கிறார்கள்:

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்ட 10குர்ஆன் உடைய வசனங்களை நாங்கள் கற்றுக் கொண்டால், அந்த 10குர்ஆன் வசனங்கள் சம்பந்தப்பட்ட விளக்கங்களை கற்றுக் கொண்டு அதன்படி அமல் செய்ததற்கு பிறகு தான், அடுத்த 10வசனங்களை கற்றுக் கொள்வோம்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/300

அவர்களுடைய கல்வியின் தேடல் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ, புகழுக்காகவோ, பட்டங்களுக்காகவோ இல்லை. அல்லாஹ்வை அறிவதற்காக அமல்களை கொண்டு அல்லாஹ்வை நெருங்குவதற்காக இருந்தது.

இந்த ஒரு இக்லாஸ் அவர்களுடைய கல்வியில் இப்படிபட்ட ஒரு பரகத்அங்கே இறக்கப்படுவதற்கு காரணமாக இருந்ததை நாம் பார்க்கிறோம்.

10வசனங்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டால், அந்த 10வசனங்களில் உள்ள விளக்கங்களையும் தெரிந்து கொண்டு அதன் படி அமல் செய்ததற்கு பிறகு தான்,அடுத்த 10வசனங்களை நாம் தெரிந்து கொள்வோம்.

இன்று,நாம் எத்தனை மஜ்லிஸ்களில் அமர்ந்து,எத்தனை கல்விகளை கேட்கிறோம். ஆனால்,படித்த விஷயங்களில் எத்தனை விஷயங்களை கொண்டு நாம் அமல் செய்கிறோம்?என்று நாம் சுயபரிசோதனை செய்வதில்லை.

உண்மையில், நம்மிடத்தில் எந்த கல்வி நமது உள்ளத்தில் தங்கி இருக்கிறதென்றால் எந்த இல்மை கொண்டு நாம் அமல் செய்து கொண்டு இருக்கிறோமோ, நம்முடைய வாழ்க்கையின் தொடர்ச்சியாக அமல் இருக்கிறதோ, அந்த இல்ம் தான் நமது உள்ளத்தில் இருக்கிறது.

எந்த இல்மின் மூலமாக நம்மிடத்தில் அமல் இல்லையோ, அந்த இல்ம் நம்மிடத்தில் இல்லை. அது ஏட்டில் இருக்கிறது. ஸஹாபாக்களுடைய இல்ம் அவர்களது அமல்களில் வெளிப்பட்டது. எனவே அல்லாஹ் அவர்களுக்கு பரகத் செய்தான்.

அல்லாஹ் சொல்கிறான்:

وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ

ஆதலால், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன் சட்டங்களை) உங்களுக்கு (இப்படியெல்லாம்) கற்றுக் கொடுக்கிறான். (அல்குர்ஆன் 2 : 282)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கல்வி ஞானத்தை பற்றி ஸஹாபாக்கள், தாஃபீயீன்கள் என பலரும் புகழ்ந்து இருக்கிறார்கள்.

இமாம் ஷஅபி  ரஹிமஹுல்லாஹ் (ஹதீஸ் கலையின் மிக பெரிய அறிஞர்) சொல்கிறார்.

தன்னுடைய இல்மை கொண்டு மக்களுக்கு அதிகமாக பலன் கொடுத்தவர்.இரண்டாவது, யாரிடத்தில் படித்த மாணவர்கள்மிக பெரிய சட்ட வல்லுநர்களாக மாறினார்களோ, இந்த மார்க்கத்தின் அறிஞர்களாக மாறினார்களோ, அத்தகைய ஒரு ஸஹாபி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை விட கூஃபாவிற்கு வந்தவர்களில் யாரும் இல்லை.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/303.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வணக்க வழிபாட்டை பற்றியும், அவர்களுடைய மாணவர்கள், அவர்களுடைய தோழர்கள் நமக்கு கூறுகின்றார்கள்.

இது பெரும்பாலான நபித்தோழர்களின் பழக்கமாக இருந்தது. அவர்களை பின்பற்றி வாழ்ந்த சான்றோர், நல்லோரின் பழக்கமாக இருந்தது. அதுதான் இரவு தொழுகை.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்:

அவர்களிடத்தில் கல்வி படிக்ககூடிவர்களாக நாங்கள்,பெரும்பாலும் மஸ்ஜிதில் அவர்களுடைய மதரஸாக்கள் இருந்தன. அங்கே நாங்கள் இரவில் தூங்கி விட்டால், மக்கள் எல்லாம் அயர்ந்து தூங்க ஆரம்பித்ததற்கு பிறகு,அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வை தொழுவதற்கு எழுந்து நின்று விடுவார்கள்.

குர்ஆனை ஓதிக் கொண்டே இருப்பார்கள். தேனீக்கள் கூட்டமாக வரும் போது, அவற்றிலிருந்து ஏற்படக் கூடிய ஒரு ரிங்காரத்தை போன்று அவர்கள் அப்படியே அந்த குர்ஆனை சரளமாக ஓதிக் கொண்டே இருப்பார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/303.

ஜியாத் என்ற பேரறிஞர் சொல்கிறார்:இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அழகிய துணியில் குர்ஆன் ஓதுகின்றவர்களாக இருந்தார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/303.

இப்படி,அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வணக்க வழிபாடும்,நாம் பார்த்து பொறாமை படக்கூடிய, பின் பற்றுவதற்கு தகுந்த, பின் பற்றுவதற்கு ஆசைப்பட கூடிய ஒன்றாக இருந்ததை நாம் பார்க்கிறோம்.

நபித்தோழர்களை பாருங்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அன்பு,பாசம், மதிப்பு, மரியாதை மிகப்பெரியது.

அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் இப்னு மஸ்ஊத் உடைய மாணவர் அல்கமா வருகிறார். அபு தர்தாவிற்க்கு அருகில் வந்து அமர்கிறார். அப்போது அபு தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து, எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அவர் சொல்கிறார்: நான் கூஃபா நகரத்தில் இருந்து வருகிறேன். அப்போது ஆசை மேலிட்டு அபு தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கிறார்கள். கூஃபாவில் இருந்தா? அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் என்ற ஸஹாபி உங்களுடன் தானே இருக்கிறார்.

ரசூலுல்லாஹ்வின் இரண்டு செருப்புகளை சுமந்தவர். நபியின் தலகனியை தன்னிடத்தில் வைத்திருப்பவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உளு செய்யக் கூடிய அந்த பாத்திரத்தை தன்னிடத்தில் வைத்திருப்பவர்.

யாரிடத்தில் நபி அவர்கள் ரகசியமாக பேசுவார்களோ, அத்தகைய தோழர் அல்லவா? அவர். தன்னுடைய நபியின் துஆவினால்ஷைத்தானை விட்டு அல்லாஹ் யாரை பாதுகாத்தானோ, அத்தகைய தோழர் உங்களிடத்தில் இல்லை.

அவ்வளவு பெரிய தோழரை அங்கே விட்டு விட்டு, என்னை தேடி இங்கே வந்திருக்கிறீர்களே?என்று கேட்கிறார்கள். (1)

அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3742.

ஒரு பக்கம் பணிவு, இன்னொரு பக்கம் தங்களில் ஒருவரை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய அந்த புகழுரைகளை எப்படி அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்?

ஆம், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி நாம் முன்பு பார்த்ததை போன்று, நபி அவர்களுடைய மிஸ்வாக் குச்சி -பல் துலக்கக் கூடிய குச்சி அவர்களது கையில் இருக்கும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளூ செய்ய கூடிய பாத்திரம் அவர்களது கையில் இருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாய்ந்து உட்காருவதற்கு பயன்படுத்துகின்ற தலையணை அவர்களிடத்தில் இருக்கும்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய செருப்பை பாதுகாப்பவர்களாக தன்னிடத்தில் வைத்து கொள்பவர்களாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3742.

இதிலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இருந்த மிக நெருக்கமான ஒரு உறவை நாம் புரிய வருகிறோம்.

ஆம், அல்லாஹ்வுடைய தூதரை விட இத்தகைய பணிவிடைகளுக்கு இந்த உலகத்தில் வேறு யார் தகுதியானவராக இருக்க முடியும்? இத்தகைய பணிவிடைகளுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட, இந்த உலகத்தில் தகுதியான இரண்டாமவர் கண்டிப்பாக இருக்கவே முடியாது.

நபித்தோழர்கள் அப்படித்தான் நேசித்தார்கள் அதுபோன்று தாஃபீயீன்கள் அல்லாஹ்வுடைய தூதரை அப்படி தான் நேசித்தார்கள்.

தாஃபீயீன்களுக்கு மிக பெரிய போட்டி இருந்தது. மிக பெரிய ஒரு ஆசை இந்த உலகத்தில் இருந்தது. என்ன ஆசை என்று கேட்டால்,ரசூலுல்லாஹ்வின் காலத்தில் நாமும் இருந்திருக்க வேண்டுமே!என்று.

ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒருமுறை ஈராக்கில் ஒரு வாலிபரை சந்தித்து,அந்த வாலிபரோடு பேசிக் கொண்டிருக்கும் போது, (அந்த வாலிபர் அப்போது தான் இஸ்லாமை ஏற்று இருக்கிறார்.) அந்த ஸஹாபியோடு பேசிக் கொண்டு, கல்வி கற்றுக் கொண்டு, அவரோடு அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறார்.

அவருக்கு திடீரென்று ஒரு ஆசை ஏற்படுகிறது, ஹுதைஃபாவை பார்த்து கேட்கிறார்கள். நபியின் தோழர் அல்லவா நீங்கள். ஆம், ரசூலுல்லாஹ்வோடு சென்று இருக்கிரீற்களா? அவர்களோடு அமர்ந்து இருக்கிரீற்களா?

ஆம், நபி அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள், அவர்களோடு பழகியவர்கள்.

நீங்கள் எப்படி ரசூலுல்லாஹ்வுடன் நடந்து கொண்டீர்கள்? உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது?

ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:நாங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கஷ்டத்தை தான் அனுபவித்து கொண்டிருந்தோம். எங்களுடைய வாழ்க்கையே போராட்டத்தில் தான் நீடித்து கொண்டிருந்தது.

இவையெல்லாம் கேட்டு கண்கலங்கிய அந்த வாலிபர் சொல்கிறார்: நான் மட்டும் ரசூலுல்லாஹ் காலத்தில் இருந்திருந்தால், அல்லாஹ்வுடைய தூதரை நான் பார்த்து இருந்தால், அவருடைய காலத்தில் வாழ்ந்திருந்தால்,நான் எப்போதும் அவரை என்னுடைய கழுத்தில் சுமந்து கொண்டிருப்பேன். கீழே இறக்கிவிட்டிருக்க மாட்டேன்.

ஆசையின் உச்சத்தை பாருங்கள்.அன்பின் வெளிப்பாட்டை பாருங்கள்.

எனது கழுத்தின் மீது அவர்களை உட்கார வைத்திருப்பேன். எங்கு சென்றாலும் அல்லாஹ்வுடைய தூதரே! நான் வாகனமாக உங்களை அழைத்து செல்கிறேன் என்று சொல்லி இருப்பேன்.

நூல் : தஃப்சீர் தபரி, வசனம் - 33 : 9, பாகம் : 20, பக்கம் : 215.

இதுதான், அல்லாஹ்வுடைய தூதரின் மீது அந்த மூத்த சமுதாயம் வைத்திருந்த அன்பு.

இவ்வளவு உயர்வுகளுக்கும், சிறப்புகளுக்கும் அல்லாஹ்வாலும் அல்லாஹ்வுடைய தூதராலும் சான்று கொடுக்கப்பட்ட இந்த இப்னு மஸ்ஊத் உடைய வாழ்க்கையின் மறுப்பக்கத்தை பாருங்கள். அவர்களுடைய சுயபரிசோதனையை பாருங்கள்.

இன்று எந்த தகுதியும் இல்லாத, எதற்கும் அருகதை இல்லாத,கல்வியிலும் சரி, அமலிலும்  சரி, குணத்திலும் சரி, பண்பாட்டிலும் சரி, ஒழுக்கத்திலும் சரி, இன்னும் உள்ளத்தில் உள்ள ஈமானை பற்றி என்ன சொல்வதோ?

எதுவுமே இல்லாத நம்முடைய நிலை, எவ்வளவு பெருமையில் இருக்கிறோம். எவ்வளவு மமதையில் இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானக!

இங்கே இப்னு மஸ்ஊத் அவர்களுடைய பரிசோதனையை பாருங்கள். ரசூலுல்லாஹ் ஒரு பக்கம் துஆ செய்ய ஸஹாபாக்கள் எல்லாம் இவரை ஆசிரியராக மதிக்க,மாணவர்களைப் பற்றி என்ன சொல்வது?

ஆனால்,இவ்வளவும் இருந்தும் கூட,தங்களது மாணவர்களை பார்த்து அவர்கள் சொல்கிறார்கள்: மாணவர்களே! எனக்கு பின்னால் இப்படி நீங்கள் அலைகின்றீர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கின்றேன்.

என்னுடைய பாவங்களை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால், உங்களில் இருவர் கூட எனக்கு பின்னால் வர மாட்டீர்கள்.

இரவெல்லாம் தொழுகை, பகல் எல்லாம் மக்களுக்கு கல்வி போதிப்பது, மிச்சம் மீதி நாட்களில் கலீஃபாக்களின் கட்டளை படி ஜிஹாதில் செல்வது.

இந்த நபித்தோழர்களுக்கென்று ஒரு தனி ரகசிய வாழ்க்கை இருந்ததில்லை. இன்று நம்மில் பலருக்கு இருப்பது போன்று.

எப்போதும் சமூகத்தோடும், மாணவர்களோடு, குடும்பத்தோடு, சமூதாயத்தோடு வாழ்ந்தவர்கள்.அவர்களுக்கு தனி ஒரு வாழ்க்கை இருந்தது என்றால், அது அவரது குடும்பத்தாரோடு தனித்து இருந்த போது அல்லது சுய தேவைக்காக தனித்து இருந்த போது மட்டும் தான்.

மற்ற வாழ்க்கை எல்லாம் சமூகத்தோடு கலந்த வாழ்க்கை, சமூதாயத்தோடு பிண்ணி பிணைந்த வாழ்க்கை.

அவர்கள் சொல்கிறார்கள் : நீங்கள் என்னை இப்படி மதிக்கிறீர்கள். ஆனால், என்னுடைய பாவங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் எனக்கு பின்னால் இருவர் கூட வரமாட்டீர்கள்.

மேலும் சொல்கிறார்கள்: எந்த அல்லாஹ்வை தவிர வணக்கத்துக்குரிய இறைவன் வேறு யாரும் இல்லையோ அவன் மீது சத்தியமாக சொல்கின்றேன்.

என்னை பற்றி நான் அறிந்ததை நீங்கள் அறிந்து கொண்டால், என் தலையின் மீது மண்ணை வீசிவிட்டு, என்னை விட்டு நீங்கள் சென்றிருப்பீர்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/304.

அன்பானவர்களே! தன்னை பற்றி எப்போதும் ஒரு பெரிய அறிஞராகவோ, அல்லது ஒரு பெரிய வணக்கசாலியாகவோ, அல்லது ஒரு பெரிய மேதையாகவோ, அல்லது ஒரு பெரிய ஞானியாகவோ தன்னை ஒரு காலும் கணித்துக் கொண்டதே கிடையாது.

மேலும் சொல்கிறார்கள்: இப்படிப்பட்ட அந்தஸ்துகள் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதெல்லாம் எனது ஆசை அல்ல.

எனது ஆசை, என் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டால்,அது போதுமானது. இதற்கு மேல் நான் எதையும் ஆசை படவில்லை.என் பாவங்களில் ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னித்தாலே எனக்கு போதுமானது.

என்னை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் என்று சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் என்றால்மஸ்ஊதின் மகன் அப்துல்லாஹ்.)

என்னை ஒரு புழுக்கையின் மகன் என்று சொல்லுங்கள். ஆடு, மாடு போடக்கூடிய அந்த புழுக்கை இருக்கிறதல்லவா? அதனுடைய மகன் என்று என்னை அழையுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. அல்லாஹ் என்னை மன்னித்தால் போதுமானது.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/304, ஹாகிம் எண் : 5382.

இன்று பாருங்கள்! மக்களிடத்தில் பெயர், புகழை சம்பாதிப்பதற்காக எவ்வளவு விதமான நாடகங்களை, எவ்வளவு விதமான தோரணைகளைமக்கள் செய்து கொள்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்து என்ன? என்பதை பற்றி சிந்திப்பதில்லை.

இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ரஹீமஹுல்லாஹ் இது போன்ற ஸஹாபாக்களின், அறிஞர்களின், சான்றோர்களின் வாழ்க்கையிலிருந்து ஒரு அறிவுரையை நமக்கு சொல்கிறார்கள்.

ஒன்று, நீ அல்லாஹ்விடத்தில் ஆலிமாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறாயா? அல்லாஹ் உன்னை அறிஞர்களின் கூட்டத்தில் ஒரு அறிஞனாகஉன்னை அறிந்து கொண்டான் என்பது உனக்கு விருப்பமா? அல்லது மக்கள் உன்னை அறிஞராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது விருப்பமா?

அல்லாஹ்விடத்தில் நீ அறிஞராக இருக்க வேண்டும் என்றால், நீ இல்மு படித்து அமல் செய்தால் அல்லாஹ் உன்னை அறிஞராக ஏற்றுக் கொண்டான். அதற்கு மேல் நீ எதையும் தேட வேண்டுமென்று அவசியம் இல்லை.

ஆனால் யாருக்கு மக்கள் தன்னை அறிஞராக மதிக்க வேண்டும், தன்னை அறிஞராக போற்ற வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்கள் தான் மக்களுக்கு ஏற்ப சிரமங்களை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தான் மக்களிடத்தில் சந்தோஷத்திற்கு, மகிழ்ச்சிக்கும் ஏற்ப அவர்கள் வேலையை செய்ய வேண்டும்.

அல்லாஹ் தன்னை அறிஞராக ஏற்றுக் கொண்டால் போதும் என்பவர் எப்போதும் மார்க்கத்தை நேராக சொல்லிக் கொண்டே இருப்பார். யாருடைய போற்றுதலையும் கண்டு அவர் மயங்க மாட்டார். யார் தூற்றுவதைக் கொண்டும் அவர் துவண்டு விட மாட்டார். அவருடைய நேரான பாதையிலேயே அவர் சென்று கொண்டிருப்பார்.

பார்க்க : ஃபழ்லு இல்மிஸ் ஸலஃப் - இப்னு ரஜப் அல்ஹன்பலி

இப்படிப்பட்ட ஒரு பெரிய சிறப்பை உடைய அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வஃபாத்தை பற்றி கொஞ்சம் கூறி,அதற்கு பிறகு அவர்கள் கூறிய  சில அறிவுரைகளை நாம் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நோயுற்று இருக்கிறார்கள். அது, மரணத்தின் நோய் என்பதை அறிந்து கொள்கிறார்கள். அவர்களும், அவர்களுடைய தோழர்களும் அப்போது கலீஃபாவாக இருந்த உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், (அவர்கள் அப்போது கலீஃபா,அதற்கு முன்பு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் உடைய நண்பர்களில் ஒரு நண்பர்.)

தன்னுடைய தோழர் இப்னு மஸ்ஊதை சந்திப்பதற்காக கலீஃபா வருகிறார்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உங்களுக்கு ஏதாவது குறை இருக்கிறதா? என்று கேட்ட போது, அவர்கள் சொல்கிறார்கள்:

என்னுடைய பிரச்சனை எனது பாவங்கள், என்னுடைய முறையீடு என்னுடைய பாவங்களை பற்றிதான். எனக்கு வேறென்ன கவலை இருக்கிறது?

அடுத்து கேட்கிறார்கள்: உங்களுக்கு என்ன ஆசை? என்று கேட்ட போது, அல்லாஹ்வுடைய ரஹ்மத் வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த பதில்களுக்கு என்ன சொல்வதென்று அறியாமல் உஸ்மான் அவர்கள் அடுத்து கேட்கிறார்கள்: சரி விடுங்கள், நான் மருத்துவரை அழைத்து வரட்டுமா? என்று.

இப்னு மஸ்ஊத் சொல்கிறார்கள்:அந்த மருத்துவன் தானே எனக்கு இந்த நோயை கொடுத்திருக்கிறான்.

அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை. பிறகு சொன்னார்கள்:சரி உங்களது குடும்பத்தவர்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள், இரண்டு மனைவிகள், பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் என்ன தர வேண்டும்? என்று சொன்னார்கள். எதுவுமே தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/305

இப்படிபட்ட நபித்தோழர்களின் வரலாறு தான் அந்த மறுமையை முன்னோக்கிய சான்றோர்களாக நமக்கு முன்னால் கண்ணுக்கு தெரிய வருகிறது.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த வாழ்க்கையில் நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.

அவர்கள் அல்லாஹ்வுக்காக வாழ்ந்தவர்கள். எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்நாளில் மக்காவின் 13ஆண்டு காலங்கள், மதினாவுடைய 10ஆண்டு காலங்கள், எந்த போரையும் ரசூலுல்லாஹ்வோடு தவற விட்டதில்லை.

இரண்டு ஹிஜ்ரத்தில் கலந்து கொண்டவர்கள், ரசூலுல்லாஹ்விடத்தில் கல்வி படித்தவர்கள், இதற்கு பிறகு கலீஃபாக்களுடைய காலத்தில் ஜிஹாதிலும் கலந்து கொண்டவர்கள். மக்களுக்கு கல்வி போதிப்பதற்காகமஸ்ஜித்தில் தன்னுடைய வாழ்க்கையை கழித்தவர்கள்.

இப்படி குர்ஆனோடு ஒன்றிணைந்த நபியின் சுன்னாவோடு தன்னை இணைத்துக் கொண்ட நபித்தோழராகிய இப்னு மஸ்ஊத் உடைய சில கூற்றுகளை இங்கே பார்ப்போம்.

முதலாவதாக, அவருடைய துஆ நமக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் எப்போதும் துஆ செய்ய ஆரம்பித்தால் துஆவில் சொல்வார்கள்.

அல்லாஹ்விற்கு முன்னால் தனது நிலையை சொல்கிறார்கள்:யா அல்லாஹ்! உனது தண்டனையை பயந்தவனாக வந்திருக்கிறேன்.உனது தண்டனையை பயந்தவனாக வந்திருக்கிறேன். உனது தண்டனையை பயந்து நான் வேறு எங்கு செல்ல முடியும்?என்னை பாதுகாப்பதற்கு வேறு கடவுள் யார் இருக்கிறார்கள்?வேறு இடம் எங்கே இருக்கிறது?

உன்னை கொண்டே பாதுகாப்பு தேட உன்னிடம் வந்துவிட்டேன்.உன்னை பயப்படுகிறேன்.உன்னிடத்தில் பாதுகாப்பு தேடி வந்திருக்கிறேன்.நான் திருந்தி வந்திருக்கிறேன்.எனது பாவங்களுக்கு மன்னிப்பு தேடி வந்திருக்கிறேன்.உனது ரஹ்மத்தை ஆசை வைத்து வந்திருக்கிறேன்.உனது தண்டனையை பயந்து வந்திருக்கிறேன்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/304

இத்தகைய வாசகங்கள், நம்முடைய துஆவில் இடம் பெற செய்யக் கூடிய வாசகங்கள். அல்லாஹ்விடத்தில் கேட்கும் போது, அல்லாஹ்விடத்தில் பேசும் போது, முதலாவதாக தன்னுடைய நிலையை நாம் சொல்ல வேண்டும்.

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் மீன் வயிற்றில் சிக்கிய போது சொன்னார்கள்:

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 87)

மூஸா நபி எவ்வளவு பெரிய நபி. அவர்கள் இப்படி துஆ செய்தார்கள்:

قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

மேலும், ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக!'' என்று அவர் பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை செய்பவன். (அல்குர்ஆன் 28 : 16)

ஆதம் அலஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் இப்படி துஆ செய்தார்கள்:

قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (அல்குர்ஆன் 7 : 23)

ஒவ்வொரு நபியின் துஆவை பாருங்கள்!அவர்கள் தன்னுடைய பலவீனத்தை, தன்னுடைய குற்றத்தை அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொண்டு, மன்னிப்பு தேடினார்கள்.

அத்தகைய ஒரு வாசகத்தை தான் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு இங்கே பயன்படுத்துகிறார்கள்.

அல்லாஹு அக்பர்! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பணிவு, அவர்களுடைய ஈமானின் உயர்ந்த நிலையில் அப்படி சொன்னார்கள்.

அவர்களுடைய உள்ளச்சத்தின் ஒரு வெளிப்பாட்டை பாருங்கள்! அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்:ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்:

ரோட்டில் செல்லக் கூடிய ஒரு நாயை பார்த்து கூட கேவலமாக நினைப்பதற்கு நான் பயப்படுகின்றேன்.

ஒரு நாயை கிண்டல் செய்வது கூட, ஒரு நாயை பரிகாசம் செய்வதை கூட, நான் பயப்படுகிறேன். அல்லாஹ் என்னை நாயாக மாற்றிவிடுவானோ என்று.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/304.

இதுதான் அவர்களுடைய மனதின் குறைகளை, அழுக்குகளை புரிந்தவர்கள்.மனதில் உள்ள சுத்தம் எதில் இருக்கிறது என்பதை புரிந்தவர்கள்.இந்த மனதில் பெருமை., ஆணவம், அகம்பாவம் என்பது துளிக்கூட வந்து விடக்கூடாது. ஒரு நாயை பார்த்து கூட எளக்காரணமாக பார்த்து விட கூடாது.அந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய பயம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

மேலும் சொல்கிறார்கள்:ஒரு மனிதன் துன்யாவுடைய காரியங்களையும் செய்வது கிடையாது, தன்னுடைய காரியங்களையும் செய்வது கிடையாது. ஆகிரத்துக்காக சம்பாதிப்பதும் கிடையாது. துன்யாவுக்காக சம்பாதிப்பதும் கிடையாது. இப்படி பட்ட மனிதனை பார்த்து வெறுக்கிறேன்.

மனிதன் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்று ஆகிரத்துக்காக உழைக்க வேண்டும். பிறகு,தன்னுடைய துன்யாவில் ஹலாலான ரிஜ்க்குக்காக பிறரிடத்தில் கையேந்தாமல் இருக்க வேண்டிய அந்த நிலைக்காக வேண்டி அவன் உழைத்து கொண்டே இருக்க வேண்டும்.

சோம்பேறியாக இருப்பதை அல்லாஹ் விரும்பவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் விரும்பவில்லை. நபித்தோழர்கள் விரும்பியதில்லை.

சொல்கிறார்கள்: ஒரு மனிதன் ஆகிரத்துக்காகவும் அமல் செய்யவில்லை. துன்யாவிற்காகவும் அவர் தேடி கொள்வதில்லை. இப்படிப்பட்டவரை பார்த்து நான் வெறுக்கிறேன்.

மேலும் சொல்கிறார்கள், மக்கள் இரண்டு விஷயங்களை வெறுக்கிறார்கள். ஆனால் எனக்கு பிரியமாக இருக்கிறது. மரணமும்,ஏழ்மையும்.

பொதுவாக மக்களுக்கு இந்த இரண்டும் பிடிக்காது. ஆனால், இந்த இரண்டும் எனக்கு பிடித்திருக்கிறது.

சொன்னார்கள்: உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?ஒன்று செல்வம் அல்லது ஏழ்மை. எனக்கு இந்த இரண்டில் முதலாவதாக எது வந்தாலும்,அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ஏன்?ஏழ்மையாக இருந்தால் அதில் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருக்க போகிரீர்.அல்லாஹ் எனக்கு செல்வத்தை கொடுத்தால், அந்த செல்வத்தை கொண்டு ஏழை எளியவர்களுக்கு இரக்கம் காட்டப்போகிறேன். அவ்வளவுதான்.

மேலும் சொன்னார்கள்: உன்னை அல்லாஹ் ஏழையாக வைத்திருந்தாலும், அதிலும் உனக்கு கடமை இருக்கிறது. அல்லாஹ்விற்கு செய்ய கூடிய ஹக் இருக்கிறது. அல்லாஹ் உன்னை செல்வந்தனாக வைத்திருந்தாலும்,அதிலும் நீ அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

மேலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: மறுமையும், துன்யாவையும் குறித்து ஒரு அழகிய அறிவுரையை நமக்கு விட்டு செல்கிறார்கள்.

உங்களுக்கு ஆகிரத் வேண்டும் என்றால், உங்களில் யார் ஒருவருக்கு மறுமை வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தன்னுடைய துன்யாவிற்கு கொஞ்சம் நஷ்டம் விளைவித்து தான் ஆக வேண்டும்.

துன்யாவுக்கு எந்த சேதமும் வராமல் துன்யாவுக்கு எந்த விதமான பாதிப்பும் வராமல் மறுமை கிடைத்து விட வேண்டும் என்று ஆசை பட முடியாது. ஆகிரத்தில் துன்பம் இல்லாத இன்பமான வாழ்க்கை வேண்டும் என்றால்,ஆகிரத்தில் பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என்றால் அதில் துன்யாவில் சில விஷயங்களை விட்டு தான் ஆகவேண்டும்.

ஹராமான விஷயங்களைவிட்டு தான் ஆக வேண்டும். அந்த விஷயங்களை பல சூழ்நிலைகளில் மனம் விரும்பும். குடும்பத்தவர்கள் நிர்ப்பந்திப்பார்கள், சூழ்நிலைகள் நிர்ப்பந்திக்கும், நண்பர்கள் நிர்ப்பந்திப்பார்கள்.

இப்படியெல்லாம் இருக்கின்ற நிலையில் எங்களுக்கு இந்த துன்யா வேண்டியதில்லை. இந்த துன்யாவில் நப்சுக்கு விருப்பமானதையும், எனது குடும்பத்துக்கு, மனைவி, மக்களுக்கும் விருப்பமானதையும், என்னுடைய நண்பர்களுக்கு விருப்பமானதையும், நான் விடுவேன்.

சொன்னார்கள்:யார் மறுமையைநிறைவாக முழுமையாக அடைய வேண்டும் என்று ஆசை படுவாரோஅவர் கண்டிப்பாக துன்யாவிற்கு சேதம் விளைவிப்பார்.

பிறகு சொன்னார்கள்:மக்களே! நிரந்தரமாக இருக்க கூடிய அந்த மறுமை வாழ்க்கைக்காக அழிந்து போகக் கூடிய, இல்லாமல் போககூடியஇந்த துன்யாவின் வாழ்க்கைக்கு சேதம் விளைவித்தாலும் பரவாயில்லை மறுமைக்கு நீங்கள் சேதம் விளைவிக்காதீர்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/304.

அன்பானவர்களே! ஆகிரத்தை புரிந்தவர்களுடைய கூற்று இது. முனாஃபிக்கை பற்றி ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:

இந்த சுவற்றுக்கு பிறகு நரகம் இருக்கிறது என்று சொன்னாலும், முனாஃபிக்குக்கு நம்பிக்கை வராது, அந்த நரத்திற்குள் அவன் விழாத வரை.

அஸ்ஸுஹ்து - அஹ்மது எண் : 1496.

இன்று,நம்முடைய நிலைமையை நினைத்து பாருங்கள். அமல்களில் ஆர்வமின்மை, பாவங்களை விட்டு விலகாமை, மறுமைக்குண்டான தயாரிப்பில் மறதி, இப்படி எத்தனையோ நம்முடைய வாழ்க்கையில் உள்ள குறைகளை நாம் எண்ணிக் கொண்டே சென்றால்,அதனுடைய அடிப்படை காரணம் என்ன?

மறுமையை பற்றி உண்டான அந்த நம்பிக்கையில் நமக்கு இருக்க கூடிய பலவீனம்.அல்லாஹ் பாதுகாப்பானக!

மேலும்,இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு அறிவுரை கூற வரும் போது சொல்லுவார்கள்:

இரவு, பகல் சென்று கொண்டே இருக்கிறது.உங்களுடைய வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது. உங்களுடைய அமல்கள் அல்லாஹ்விடத்தில் பாதுகாக்க பட்டு கொண்டு இருக்கிறது.மரணம் திடீரென்று தான் வரும், யாருக்கும் சொல்லி விட்டு வராது, திடீரென்று வரும்.

யார், நன்மையை நாளை மறுமையில் அடைய வேண்டும் என்று விரும்புகிறாரோ, இந்த துன்யாவில் நல்லமல்களை அவர் விதைத்து கொள்ளட்டும்.

இந்த துன்யாவில் யார் தீமையை விதைப்பாரோ, பாவங்களை விதைப்பாரோ, நாளை மறுமையில் கைசேதத்தை துயரத்தை தான்அவர் அறுவடை செய்வார்.

யார் எப்படி விவசாயம் செய்வாரோ, விதை விதைப்பாரோ அது தான் அவருக்கு கிடைக்கும்.

மேலும் விதியை குறித்து சொல்கிறார்கள்: மிக முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

ஒருவர் கொஞ்சம் தாமதமாக தன்னுடைய பனத்திற்காக உழைப்பு செய்கிறார். அப்படி அவர் சோம்பேறியாகவோ, அல்லது சுறுசுறுப்பு இல்லாமலோ அவர் உழைப்பு செய்வதால் அதனால் அவருக்கு அல்லாஹ் விதித்த பங்கு தவறிவிடாது.

உங்களுடைய முயற்சி பலவீனமானதாக இருப்பதால், குறைவாக இருப்பதால்உங்களுக்கு அல்லாஹ் விதித்த பங்கு உங்களை விட்டு தவறிவிடாது.

ஒரு மனிதன் அதிக ஆசை பட்டு இரவுபகலாக அல்லல் பட்டு உழைப்பு செய்கிறான். அதனால் அவனுக்கு எழுதப்பட்டதை விட அதிகமாகவும் அவனுக்கு கிடைத்து விடாது.

அதற்காக, நாம் உழைப்பு செய்ய தேவையில்லை, அதனால் நாம் முன்னேற தேவை இல்லை, விதியின் மீது சாட்டி விட்டு நாம் சும்மா சோம்பேறியாக இருந்து விடலாம் என்பதில்லை.

ஒரு முஃமினுடைய ஈமான் எப்படி இருக்க வேண்டும். அடுத்த வாசகத்தில் அதை சொல்கிறார்கள்:

உங்களுக்கு ஒரு நன்மை கிடைத்தால் அல்லாஹ் தான் அந்த நன்மையை உங்களுக்கு கொடுத்தான். நீங்கள் ஒரு தீமையிலிருந்து பாதுகாக்கப்பட்டால் அல்லாஹ் தான் அந்த தீமையிலிருந்து உங்களை பாதுகாத்தான். உங்களுக்கு ஒரு நன்மை கிடைத்தால் அந்த நன்மையை கொடுத்தவன் அல்லாஹ். எது கிடைத்தாலும் அல்லாஹ்வை கொண்டே கிடைத்தது என்று நம்பிக்கைக்கு வாருங்கள்.

பிறகு சொன்னார்கள்: தக்வா உடையவர்கள் தான் உண்மையில் தலைவர்கள். மார்க்க சட்டங்களை படித்தவர்கள் தான் வழிகாட்டிகள்.

தக்வா உள்ளவர்களோடும், மார்க்க சட்டங்களை அறிந்தவர்களோடும் நீங்கள் பழகுவது, நட்பு வைப்பது உங்களுடைய ஈமானை, இல்மை, தக்வாவை அதிகரிக்க செய்யும்.

மேலும், இப்னு மஸ்ஊத் சொல்கிறார்கள்: அல்லாஹ் உங்களுக்கு கொடுத்ததை கொண்டுஅல்லாஹ் உங்களுக்கு விதித்ததை கொண்டு நீங்கள் திருப்தி அடையுங்கள். அல்லாஹ் நம்மை எந்த நிலையில் வைத்திருக்கிறானோ அதை கொண்டு திருப்தி அடையுங்கள்.

அல்லாஹ் ஏழையாக வைத்திருக்கிறானா? அல்ஹம்துலில்லாஹ்! செல்வந்தராக வைத்திருக்கிறானா? அல்ஹம்துலில்லாஹ்! உழைக்க கூடியவராக வைத்திருக்கிறானா? அல்ஹம்துலில்லாஹ்!

நீ எதை எனக்கு பங்கிட்டுக் கொடுக்கிறாயோ, என்னுடைய ரிஜ்க்கில் எனக்கு நீ எதை கொடுக்கிறாயோ? அல்ஹம்துலில்லாஹ்!

சொன்னார்கள்: அல்லாஹ் உங்களுக்கு விதித்தத்தைக் கொண்டு திருப்தி அடைந்தால் மக்களில் அதிக செல்வந்தராக நீங்கள் தான் இருப்பீர்கள். மக்களிலேயே பெரிய செல்வந்தராக நீங்கள் தான் இருப்பீர்கள்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/305.

இன்று,அல்லாஹ் நம்மிடத்தில் கொடுத்த நிஃமத்துகளை நாம் பார்ப்பதில்லை. அதை கொண்டு திருப்தி அடையவதில்லை.

அடுத்தவரை பார்க்கிறோம். நமக்கு மேல் உள்ளவர்களை பார்க்கிறோம். அவர்களுடைய வீட்டை பார்க்கிறோம். அவர்களுடைய வாகனத்தை பார்க்கிறோம். அவர்களது படிப்பை பார்க்கிறோம். அவர்களது வாழ்க்கை, வசதிகளை பார்க்கிறோம். அவர்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை பார்க்கிறோம்.

அதை பார்த்து ஆசை படும் போது தான் உள்ளத்தில் பலவீனம் ஏற்படுகிறது. உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நிஃமத்துக்கள் குறைந்து மதிப்பிடக் கூடிய அந்த ஒரு இழிவான தன்மை ஏற்படுகிறது.

சொன்னார்கள்: அல்லாஹ் உனக்கு பங்கு வைத்தை கொண்டு திருப்தி அடை! மக்களிலேயே பெரிய செல்வந்தனாக நீ ஆகிவிடுவாய்.

அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகிக்கொள்! மக்களிலேயே மிக பேணுதல் உடையவனாக நீ ஆகி விடுவாய். உன் மீது அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை செய். மக்களில் பெரிய வணக்கசாலியாக ஆகிவிடுவாய்.

அல்லாஹ் உனக்கு விதித்ததை கொண்டு கொடுத்ததை கொண்டு திருப்தி அடை! பெரிய செல்வந்தனாக ஆகிவிடுவாய். பாவங்களை விட்டு விலகி கொள்! பேணுதல் உடையவனாக ஆகிவிடுவாய். பர்ளுகளை முழுமையாக நிறைவேற்று! பெரிய வணக்கசாலியாக ஆகிவிடுவாய்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா : 3/305.

இப்படி அவர்களது வாழ்க்கையில் நிறைய அறிவுரைகளை விட்டு சென்றிருக்கிறார்கள். அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அவர்களுடைய வாழ்க்கையைக் கொண்டும் அவர்கள் கூறிய நல்ல அறிவுரைகளைக் கொண்டும் படிப்பினை பெறக்கூடிய நன்மக்களில் என்னையும்உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ المُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَدِمْتُ الشَّأْمَ فَصَلَّيْتُ رَكْعَتَيْنِ، ثُمَّ قُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، فَأَتَيْتُ قَوْمًا فَجَلَسْتُ إِلَيْهِمْ، فَإِذَا شَيْخٌ قَدْ جَاءَ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِي، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: أَبُو الدَّرْدَاءِ، فَقُلْتُ: إِنِّي دَعَوْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا، فَيَسَّرَكَ لِي، قَالَ: مِمَّنْ أَنْتَ؟ قُلْتُ مِنْ أَهْلِ الكُوفَةِ، قَالَ: أَوَلَيْسَ عِنْدَكُمْ ابْنُ أُمِّ عَبْدٍ صَاحِبُ النَّعْلَيْنِ وَالوِسَادِ، وَالمِطْهَرَةِ، وَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ، - يَعْنِي عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوَلَيْسَ فِيكُمْ صَاحِبُ سِرِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي لاَ يَعْلَمُهُ أَحَدٌ غَيْرُهُ، ثُمَّ قَالَ: كَيْفَ يَقْرَأُ عَبْدُ اللَّهِ: وَاللَّيْلِ إِذَا يَغْشَى؟ فَقَرَأْتُ عَلَيْهِ: وَاللَّيْلِ إِذَا يَغْشَى. وَالنَّهَارِ إِذَا تَجَلَّى وَالذَّكَرِ وَالأُنْثَى قَالَ: «وَاللَّهِ لَقَدْ أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِيهِ إِلَى فِيَّ» (صحيح البخاري 3742)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/