HOME      Khutba      இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 3-4 | Tamil Bayan - 431   
 

இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 3-4 | Tamil Bayan - 431

           

இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 3-4 | Tamil Bayan - 431


இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 3-4)

வரிசை : 431

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 23-09-2016 | 22-12-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை முன் வைத்து வாழுமாறு, எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பயத்தின் படி வாழுமாறுஎனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாகஇந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நம் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து, அல்லாஹ்விற்கு விருப்பமான, அல்லாஹ் பொருந்திக் கொண்ட நன்மக்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக! நம்முடைய இம்மையை சீர் செய்வானாக! மறுமையின் வாழ்க்கையை இம்மை வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கையாக ஆக்கியருள்வானாக!

தொடர்ந்து சான்றோர் பலரைப் பற்றி நாம் இந்த ஜும்ஆ குத்பாவின் மூலமாக அறிந்து வருகிறோம். அந்த தொடரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அவர்களுடைய வரலாறை நாம் கேட்டு வருகிறோம். இப்படி நபித்தோழர்களைப் பற்றி நாம் அறிவது, அல்குர்ஆனை புரிவதற்கும், அல்குர்ஆன் நம்மில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் தான் நபித்தோழர்களுடைய வரலாறுகளை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி குறிப்பாக நாம் பார்க்கும் பொழுது, அல்குர்ஆனோடு இவர்களுக்கு பெரிய தொடர்பு, ஈடுபாடு இருந்தது.

எனவேதான், அல்குர்ஆனின் அறிஞர் என்பதாகவே நபித்தோழர்களுக்கு மத்தியில் இவர்கள் போற்றப்பட்டார்கள்.

சென்ற ஜும்ஆவிலும், அதற்கு முந்திய ஜும்ஆவிலும் பார்த்த விஷயங்களில் மிக முக்கியமான ஒரு விஷயம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குர்ஆனை ஈரம் காயாமல் பசுமையாக அது இறக்கப்பட்டதை போன்றே ஓத வேண்டுமென்று ஒருவர் ஆசைப்பட்டால், அவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஓதுவதைப் போன்று அவர் ஓதட்டும் என்று இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஓதிய அந்த முறைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சான்று கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : கைஸ் இப்னு மர்வான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 175, 18457.

அதை தொடர்ந்து இன்னும் பல விஷயங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொடர்புடைய அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை நாம் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி தப்ரானியில் ஒரு அறிவிப்பை பார்க்கிறோம்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வப்போது, நபித்தோழர்களைப் பற்றி இப்படி முன்னறிவிப்பு தருவார்கள். அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம், மறுமையில் அவருடைய தரஜா என்ன? என்பதைப் பற்றி சமய சந்தர்ப்பங்களில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதுண்டு.

அந்த தொடரில், ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அராக்' மரத்தில் ஏறி மிஸ்வாக் செய்வதற்கு உண்டான ஒரு குச்சியை உடைப்பதற்காக அந்த மரத்தின் மீது நின்றிருந்த போது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கெண்டைக்கால் மிகவும் மெல்லியதாக இருந்தது.

அப்போது காற்று கொஞ்சம் வேகமாக வீசியபோது, அந்த மரத்தின் மீது நின்றிருந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சரியாக நிதானிக்க முடியாமல் அவர்கள் இங்கும் அங்குமாக தடுமாரினார்கள்.

அப்போது அங்கிருந்த நபித்தோழர்கள் சிரிக்கின்றார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள், நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள், எதைப் பார்த்து நீங்கள் சிரிக்கிறீர்கள் என்று.

அப்போது நபித்தோழர்கள் கூறினார்கள். இப்னு மஸ்ஊதுடைய கெண்டைக்காலை பாருங்கள். அவருடைய உடல் எப்படி திடகாத்திரமாக இருக்கிறது. ஆனால், அதற்கு ஏற்றார் போல அவருடைய கெண்டைக்கால் இல்லையே, மிக மெல்லியதாக இருக்கிறதே.

இதைப் பார்த்து நாங்கள் சிரிக்கிறோம் என்று கூறிய போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَسَاقَا ابْنِ مَسْعُودٍ يَوْمَ الْقِيَامَةِ أَشَدُّ وَأَعْظَمُ مِنْ أُحُدٍ»

அவருடைய இரண்டு பாதங்களும் நாளை மறுமையில் அமல்கள் நிறுக்கப்படுகின்ற அந்த தராசில் உஹது மலையை விட அதிக கனமுள்ளதாக இருக்கும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : தப்ரானி கபீர், எண் : 8453.

இப்படிப்பட்ட ஒரு பெரிய வார்த்தையை கூறினார்கள் என்றால், இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்விக்காக, குர்ஆனுக்காக, நபியின் உதவிக்காக, நபியோடு அவர்கள் செய்த தியாகம் மிகப் பெரியது.

அந்த கால்களைக் கொண்டு எத்தனை ஜிஹாதுகளுக்கு அவர்கள் சென்றிருப்பார்கள்? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டிற்கு எத்தனை முறை பணிவிடைக்காக அவர்கள் சென்றிருப்பார்கள்?

இப்படி நூற்றுக்கணக்கான காரணங்களை கூறலாம். எல்லாவற்றிர்க்கும் மேலாக அவர்களுடைய உள்ளத்திலிருந்த அல்லாஹ்வின் அன்பும், அல்லாஹ்வுடைய தூதரின் அன்பும் மிகப்பெரிய ஒரு காரணம்.

இன்று, நாம் மனிதர்களை அவர்களுடைய வெளிரங்க தோற்றங்களை வைத்து எடைப்போட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு மனிதருடைய நிறத்தை வைத்து, ஒரு மனிதருடைய வசீகரமான தோற்றத்தை வைத்து, ஒரு மனிதருடைய பணத்தை வைத்து, அவனுடைய குடும்பத்தை வைத்து இப்படி பல வெளிறங்கமான காரணங்களை வைத்து ஒரு மனிதனுக்கு அந்தஸ்தை கொடுக்கிறோம்.

இப்படிப்பட்ட அளவுகோள்களை எல்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம் இஸ்லாம் நமக்கு அடியோடு மறுத்து விடுகிறது.

மனிதர்கள் கண்ணியப்படுத்தப்படுவதற்கு இப்படி வெளிரங்கமான தோற்றங்கள் அளவுகோள் அல்ல. அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

(ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் 49:13)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபையில் அமர்ந்து மக்களிடத்தில் பேசும்பொழுது, அப்போது ஒரு மனிதர் அந்த வழியாக செல்கிறார். அவரைப் பார்த்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக்காட்டி தோழர்களே இவரைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்கிறார்கள்.

தோழர்கள் கூறினார்கள்: இவர் சிபாரிசு செய்தால் இவரின் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும். இவர் பெண் கேட்டால் மண முடித்து கொடுத்து விடுவார்கள். இவர் இப்படி இப்படி இன்னென்ன கண்ணியத்திற்குரியவர் என்பதாக மக்கள் கூறினார்கள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியானார்கள். பிறகு,இன்னொருவர் செல்கிறார். அவரை சுட்டிக்காட்டி இவரைப் பற்றி உங்களது கருத்து என்ன? என்று கேட்கிறார்கள்.

தோழர்கள் கூறினார்கள்: இவர் கேட்டால் மக்கள் கொடுக்கமாட்டார்கள். சிபாரிசு செய்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர் பெண் கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்பதாக கூறிய போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا»

இப்போது இரண்டாவதாக சென்ற இந்த ஒரு மனிதர், முந்திய மனிதரைப் போன்று இந்த உலகமே நிரம்பி இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் இந்த ஒரு மனிதர் கண்ணியத்திற்குரியவர்.(1)

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5091.

அல்லாஹ் சுப்ஹானஹ் வதஆலா உள்ளங்களை பார்க்கிறான். அல்லாஹ் கூறுகிறான்:

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்.(அல்குர்ஆன் 22:37)

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ»

அல்லாஹ் உங்களுடைய செல்வங்களை பார்ப்பதில்லை, உங்களுடைய உருவங்களை பார்ப்பதில்லை. அல்லாஹ் உங்களுடைய அமல்களை, உங்களுடைய கல்புகளை பார்க்கிறான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7827.

அமல்களை வைத்துதான் அல்லாஹ் உயர்வை தருகிறான். கல்பை பார்த்து அந்த கல்பில் யார் இருக்கிறார்கள்? என்ன இருக்கிறது? அதற்கு தான் அல்லாஹ் தஆலா கண்ணியத்தை தருகிறானே தவிர, நம்முடைய செல்வத்தை வைத்தோ, அழகை வைத்தோ, வசீகரத்தை வைத்தோஅல்லாஹ்விடத்தில் கண்ணியத்தை பெற முடியாது.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த வரலாற்றுச் சம்பவம் இதை தான் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நமக்கு உறுதிப்படுத்துகிறது.

அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தாகிய நமக்கு இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கண்ணியத்தை உணர்த்துகின்ற அதே நேரத்தில், நமக்கும் இங்கே ஒரு பாடத்தை விட்டுச் செல்கிறார்கள்.

அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தை பெறுவது உடலை வைத்து அல்ல. நம் உடலுக்குள் இருக்கின்ற ஒரு ஆன்மாவை நல்ல குணங்களை கொண்டு, நல்ல அமல்களை கொண்டு குர்ஆனைக் கொண்டு அலங்கரிப்பதின் மூலமாகத்தான் நாளை மறுமையில் அதற்குரிய மதிப்பு இருக்குமென்பதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நமக்கு உணர்த்துவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அது போன்று, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய இன்னொரு சம்பவம் இமாம் புகாரிஅபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக பதிவு செய்கிறார்கள்.

இந்த அறிவிப்பின் மூலமாக நாம் ஒரு விஷயத்தை விளங்குகிறோம். அதாவது, ஒவ்வொரு ஸஹாபிக்கும் ரஸூலுல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு விதமான நெருக்கமான தொடர்பு. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படித்தான் தங்களது தோழர்களை வைத்திருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய தூதருக்கும் அந்த தோழர்களுக்கும் இடையே உண்டான உறவை உலகத்தில் எந்த ஒரு ஆசிரியர் மாணவருக்கும் இடையில் உண்டான தொடர்பைக் கொண்டு உவமைக்கூறிவிட முடியாது.

உலகத்தில் ஒரு சிறந்த ஆசிரியர் அல்லாஹ்வுடைய தூதருக்கு முன்னும் சரி, பின்னும் சரி அல்லாஹ்வுடைய தூதரைப் போன்று வந்ததில்லை.

உலகத்திலேயே சிறந்த மாணவர்கள், சிறந்த தோழர்கள் ஸஹாபாக்களுக்கு முன்னும் ஸஹாபாக்களுக்கு பின்னும் ஸஹாபாக்களைப் போன்று ஒரு கூட்டம் உருவாகியது கிடையாது.

சிறந்த ஆசிரியர், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.சிறந்த மாணவர்கள் ஸஹாபாக்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆன்மீகமான உணர்வை, ஒரு அன்யூனியமான உணர்வை, உளப்பூர்வமான உணர்வை வைத்திருந்தார்கள்.

தூய்மையான அன்பு, உள்ளத்தின் ஆழத்திலிருந்து உதிக்கின்ற அன்பு, ஈமானின் அடிப்படையில் ஏற்படுகின்ற அன்பு, அல்லாஹ்விற்காக கொள்ளக் கூடிய அன்பு இந்த அன்பை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்களுக்கு கொடுத்தார்கள். அந்த அன்பை அந்த தோழர்கள் ரஸூலுல்லாஹ்விற்கு கொடுத்தார்கள்.

எனவே தான், ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல் பஜலி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்ற அறிவிப்பு இந்த இடத்தில் கண்டிப்பாக நினைவு கூற வேண்டியது.

புதிதாக இஸ்லாமை ஏற்ற இந்த தோழர், ரஸூலுல்லாஹ்வுடைய சபையில் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசி முடித்து வெளியே வந்த போது கூறினார். இந்த சபையில் என்னை விட நெருக்கமான ஒருவர் ரஸூலுல்லாஹ்விற்கு இல்லை என்பதாக.

அங்கே அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவரும் இருந்தார். உமரும் இருந்தார், உஸ்மானும் இருந்தார், அலியும் இருந்தார்கள். இன்னும் எத்தனையோ மூத்த தோழர்கள் இருந்தார்தள்.

ஆனால், புதிதாக இஸ்லாமை ஏற்று முதல் மஜ்லிஸில் அமர்ந்து ரஸூலுல்லாஹ்வுடைய சபையிலிருந்து வெளியே வந்த ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலி கூறுகிறார்: 

«مَا حَجَبَنِي عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ»

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, என்னை பார்த்த போதெல்லாம் என்னைப் பார்த்து சிரித்தே இருந்தார்கள்.

நான் அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் என்னை அவர்கள் பார்த்தார்கள். அந்த சபையில் என்னை எத்தனை முறை பார்த்தார்களென்றால், நான் கண்டிப்பாக உறுதியாக கூறுகிறேன். அந்த சபையில் அமர்ந்திருந்தவர்களில் நான் தான் ரஸூலுல்லாஹ்விற்கு நெருக்கமானவன் என்று.

ஆனால், இவரை விட மூத்தவர்கள், இன்னும் நெருக்கமானவர்கள் அங்கே இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 19173.

அன்பானவர்களே! இது ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியராகிய தன்னைப் பற்றிய உணர்வை அவர்கள் ஏற்படுத்தியது.

இந்த உணர்வை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபையில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள்.

சபையில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அப்படியே எண்ணுவார். அல்லாஹ்வுடைய தூதருக்கு நான் தான் இந்த சபையில் நெருக்கமானவர். அப்படி ஒவ்வொருவருடைய முகத்தை பார்த்து புன் சிரிப்பு சிரித்தவர்களாக அந்த பார்வையிலேயே தனது அன்பை வெளிப்படுத்தியவர்களாக, தன்னுடைய நெருக்கத்தை வெளிப்படுத்தியவர்களாக சபையோரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைத்திருந்தார்கள்.

அப்படி அந்த ஒரு நெருக்கத்தை தான் இப்னு மஸ்ஊதுடைய வாழ்க்கையில் பார்க்கிறோம். அபூ மூஸா அல் அஷ்அரி கூறுகிறார்கள்:

«قَدِمْتُ أَنَا وَأَخِي مِنَ اليَمَنِ، فَمَكَثْنَا حِينًا، مَا نُرَى ابْنَ مَسْعُودٍ وَأُمَّهُ، إِلَّا مِنْ أَهْلِ البَيْتِ، مِنْ كَثْرَةِ دُخُولِهِمْ وَلُزُومِهِمْ لَهُ»

நானும் என்னுடைய சகோதரரும் எமன் நாட்டிலிருந்து மதினாவிற்கு வந்தோம். அங்கே சில காலங்கள் தங்கியிருந்தோம். அப்போது நான் ரஸூலுல்லாஹ்வை சுற்றி கவனித்துக் கொண்டிருந்தேன்.

அவர்களிடத்தில் யார் அதிகம் செல்கிறார்கள்? அவர்களுடைய வீட்டிற்கு யார் அதிகம் செல்கிறார்கள்? யார் அதிகம் பழகுகிறார்கள்?என்று நான் பார்த்த போது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களுடைய தாயாரும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டிற்கு அதிகம் உள்ளே செல்கிறார்கள், வெளியே வருகிறார்கள்.

அவ்வளவு நெருக்கமாக இருந்ததை பார்த்து புதிதாக இஸ்லாமை ஏற்று வந்திருக்கின்ற நாங்கள் என்ன விளங்கிக் கொண்டோம் என்றால், இப்னு மஸ்ஊதும் அவர்களுடைய தாயாரும் ரஸுலுல்லாஹ்வுடைய குடும்பத்திலுள்ள நெருக்கமான உறவினர் போல, எனவே தான் அவர்கள் அதிகமாக செல்கிறார்கள் என்று.

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4384.

இன்னுமொரு அறிவிப்பை இங்கே நாம் பார்க்கிறோம். அதாவது, அபூ மூஸா அல் அஷ்அரி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை பார்த்த பொழுது என்ன விளங்கினேன் என்றால், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தாரின் இவர் ஒரு அடிமைப் போல, என்று தான் நான் அவரை கருதிக் கொண்டிருந்தேன்.

சியரு அஃலாமின் நுபலா: 3/285

இங்கே இரண்டு விஷயங்களை நாம் பார்க்கிறோம். இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுதந்திரமானவர்கள். அவருக்கென்று மனைவி இருந்தார்கள், அவருக்கென்று பிள்ளைகள் இருந்தார்கள்.

ஆனால், தன்னுடைய குடும்ப வேலைகளையெல்லாம், தன்னுடைய குடும்ப சுமைகளையெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும், நபியினுடைய மனைவிமார்களுக்கும் தன்னை ஒரு அடிமையைப் போன்று ஆக்கிக் கொண்டு பணிவிடை செய்பவர்களாக இருந்தார்கள்.

ஒரு சுதந்திரமான மனிதர், அவர் இப்படி தன்னை ஒரு அடிமையாக ஆக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோழர்களை வறுத்தவும் இல்லை. ஆனால், அந்த தோழருடைய பிரியம்,ரஸூலுல்லாஹ்விற்கு ஒரு அடிமையாக இருந்து,அவருடைய குடும்பத்திற்கு உழைப்பதை விட ஈமானுக்கும், இஸ்லாமுக்கும் பிறகு இந்த உலகத்தில் வேறு என்ன நற்பாக்கியம் இருக்க முடியும்?!

அபூ மூஸா அல் அஷ்அரி கூறுகிறார்கள்: இப்னு மஸ்ஊதை நான் பார்த்த பொழுது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடும்பத்தாரின் ஒரு அடிமையாகத் தான் நான் கருதினேன்.

இரண்டு விஷயங்கள் அங்கே உணர்த்தப்படுகின்றன. ஒன்று, ரஸூலுல்லாஹ்வுடைய குடும்பத்தாருக்கு இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு சொந்தமான தான் விலைக்கு வாங்கிய ஒரு அடிமை பணிவிடை செய்வதை போன்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்ததை பார்த்ததாக.

இன்னொன்று, அந்தளவுக்கு எப்படி ஒரு எஜமானனிடம் அடிமை நெருக்கமாக எப்போதும் உடன் இருப்பாரோ, அவருடைய வலது பக்கத்தில், இடது பக்கத்தில் என்று அந்த மாதிரி இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ்வோடு பாசமுடையவராக, ரஸூல்லாஹ்வின் பணிவிடையில் அவர்களின் குடும்பத்தின் பணிவிடையில் இருந்தார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அந்த தோழர்களை நேசிப்பானாக! அவர்கள் மீது அவனுடைய ரஹ்மத்தை பொழிவானாக!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட இந்த உலகத்தில் நாம் பணிவிடை செய்வதற்கு தகுதியான ஒருவர் இருக்கிறாரா? கூறுங்கள்.

எனவே தான், சில ஸஹாபாக்கள் ரோம் நாட்டிலிருந்து வந்தவுடன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நேரடியாக வருகிறார்கள். யா ரஸூலுல்லாஹ்! நாங்கள் எந்த நாட்டிற்கு சென்று வந்தோமோ அந்த நாட்டில் மக்கள் தங்களது மன்னர்களுக்கு ஸஜ்தா செய்கிறார்கள். (2)

ஆனால், நீங்கள் அல்லவா ஸஜ்தா செய்வதற்கு தகுதியானவர். எங்களுக்கு அனுமதி கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்கிறோம் என்று.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 19403.

யோசித்துப் பாருங்கள், அந்த தோழர்கள் நபியை எந்தளவு கண்ணியப்படுத்திருப்பார்கள்!நபியின் கண்ணியம் அவர்களது உள்ளத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கும்!

கண்ணியம், மரியாதை, மதிப்பு அத்துடன் அன்பும், பாசமும், நேசமும் கலந்தால்?சுப்ஹானல்லாஹ்!அந்த தகுதியை இந்த உலகத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு மத்தியில் அல்லாஹ் வழங்கியிருந்தான்.

இதை தான், ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் நடந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. அந்த ஒப்பந்தத்தை பார்த்த இறை மறுப்பாளர்கள் குரைஷிகள் கூறினார்கள்:

நாங்கள் எங்கெங்கோ சென்றிருக்கிறோம், எத்தனையோ மன்னர்கள், எத்தனையோ மந்திரிகளுடைய சபைகளை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதை கண்ணியப்படுத்துவதை போன்று யாரும் எந்த மன்னரையும் கண்ணியப்படுத்தி நேசித்து நான் பார்த்ததில்லை.

நூல் : புகாரி, எண் : 2731.

அன்பானவர்களே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பணிவிடையில் இருந்தார்கள்.

இதை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு மஸ்ஊதுக்கென்று விசேஷமான அனுமதி கொடுத்திருந்தார்கள்.

«إِذْنُكَ عَلَيَّ أَنْ يُرْفَعَ الْحِجَابُ، وَأَنْ تَسْتَمِعَ سِوَادِي، حَتَّى أَنْهَاكَ»

இப்னு மஸ்ஊதே! உங்களுக்கான ஒரு விஷேச அனுமதி திரையை நீக்கி எனது சப்தத்தை கேட்டால், நான் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால் போதுமானது, நீங்கள் எனது வீட்டிற்குள் வந்து விடலாம். நான் உள்ளே வரட்டுமா? என்று அனுமதி கொடுக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊதுரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2169.

அந்த அளவு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நெருக்கம் இருந்தது. மற்றொரு அறிவிப்பை இமாம் அஹ்மது ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

சில நேரத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்ர் அல்லது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு சில முக்கியமான பேச்சுகளை, முக்கியமான கருத்துகளை அல்லது முக்கியமான பிரச்சனைகளை பற்றி பேசுவார்கள்.

அந்த சபையில் கூட மற்றவர்கள் தடுக்கப்பட்டாலும், நான் தடுக்கப்பட்டதில்லை. அந்தளவு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு அவர்களுடன் நெருக்கத்தை கொடுத்திருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊதுரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 4058.

அதுபோன்று, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இறை நம்பிக்கை, அவர்களுடைய தக்வாவிற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சான்று வழங்கியிருக்கிறார்கள்.

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ், இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்ற ஒரு அறிவிப்பை கவனியுங்கள்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா மதுவைப் பற்றி ஒரு வசனத்தை இறக்குகிறான். சூரா அல்மாயிதாவில் 91,92,93ஆகிய வசனங்களில் மது அருந்துவது ஹராமாக்கப்பட்ட விஷயத்தை பற்றி அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.

அந்த வசனத்தில், இதற்கு முன்பு யாராவது மது பழக்கம் உடையவராக இருந்து, இந்த மது ஹராம் என்ற சட்டத்தை தெரிந்து கொண்டதற்கு பிறகு, அதிலிருந்து விலகி தவ்பா செய்து ஈமான் உடையவராக, தக்வா உடையவராக இருந்தால் இதற்கு முன்பு அவர் செய்த பெரும் பாவத்தையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ثُمَّ اتَّقَوْا وَآمَنُوا ثُمَّ اتَّقَوْا وَأَحْسَنُوا وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.(அல்குர்ஆன் 5:93)

இந்த வசனம் இறங்கிய போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு மஸ்ஊதை அழைத்து கூறுகிறார்கள்:

«قِيلَ لِي أَنْتَ مِنْهُمْ»

ஈமான் கொண்டு தக்வாவுடன் அமல்கள் செய்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர் இப்னு மஸ்ஊதே! என்று. (4)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2459.

அன்பானவர்களே! ஸஹாபாக்கள் மது ஹராமென்று தடுக்கப்பட்டதற்கு பிறகு,மது அருந்தவில்லை. ஒரு நபித்தோழரைப் பற்றி ஒரு அறிவிப்பு வருகிறது.

அவரும் அதற்குரிய தண்டனையை பெற்று விடுகின்றார். அந்த தண்டனையை பெரும்போது கூட,இன்னொரு தோழர் அவரை ஏசுகின்றார்.

இப்படி ஒன்றுக்கு இரண்டு முறை, மூன்று முறை மது குடித்து விட்டு அந்த தண்டனைக்காக நீ அழைத்து வரப்படுகின்றாயேஎன்று அவரை இழிவாக பேசும்பொழுது,அல்லாஹ் உன்னை கேவலப்படுத்தட்டும். அல்லாஹ் உன்னை அசிங்கப்படுத்துகின்றானே என்று அவரை நிந்தித்த போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

«لاَ تَلْعَنُوهُ، فَوَاللَّهِ مَا عَلِمْتُ إِنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ»

அந்த தோழரை நிந்திக்காதீர்கள். தண்டனை கொடுப்பதற்குதான் நாம் கடமைப்பட்டிருக்கிறோமே தவிர, குற்றம் செய்தவரை அந்த குற்றத்தைக் கொண்டு பழிப்பதற்கோ, இழிவாக பேசுவதற்கோ அல்ல.

இந்த அடிப்படையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தி விட்டு கூறுகின்றார்கள்:அவர் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய ரஸூலையும் நேசிக்கின்றார். (5)

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6780.

ஏதோ, அவருடைய மனோ இச்சைக்கு அடிமையாகி, சூழ்நிலைக்கு அடிமையாகி அவர் அந்த பாவத்தை செய்து விட்டார்.

அதற்கு நாம் தண்டனைக் கொடுக்கிறோம்,அவ்வளவு தானே தவிர, அவரை அல்லாஹ் கேவலப்படுத்தட்டும்;அல்லாஹ் அவரை இப்படி செய்யட்டும் என்றெல்லாம் சாபமிடுவதற்கு நமக்கு அனுமதி இல்லை.

ஏன்? அவர் முஃமினாக இருக்கிறார், அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிப்பவராக இருக்கிறார்.

இப்படி,நபித்தோழர்கள் மது ஹராம் என்று சட்டம் இறங்கியதற்கு பிறகு, வாயிலிருந்த மதுவை வெளியே துப்பினார்கள். வயிற்றுக்குள் சென்றிருந்ததை விரலை விட்டு வாந்தி எடுத்தார்கள். வீட்டில் இருந்த மது பாட்டில்களையும், மது பானைகளையும் உடைத்தெறிந்தார்கள்.

இப்படிப்பட்ட தக்வா உடையவர்கள் என்ன கவலைப்பட்டார்கள் தெரியுமா? இது அல்லாஹ்விற்காக பிடிக்காத ஒரு செயலாக முன்பே இருந்து நாம் இதை அருந்தி கொண்டுருந்தோமோ என்று வருத்தப்பட்டார்கள்.

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.(அல்குர்ஆன் 2 : 219)

இந்த வசனம் இறக்கப்பட்ட போதே நபித்தோழர்களில் பலர் மதுவை வெறுத்துவிட்டார்கள், அதை விட்டு விலகிவிட்டார்கள்.

இன்னும் பல நபித்தோழர்கள் ஆரம்பக் காலத்திலிருந்தே மது அருந்துகின்ற பழக்கம் அவர்களிடத்தில் இருந்ததில்லை.

நாம் இந்த விஷயங்களை உணராமல், மது அருந்திக் கொண்டோமே என்று மது ஹராமாக்கப்பட்டதற்குப் பிறகு பல நபித்தோழர்கள் வருந்தினார்கள்.

ஆரம்ப காலத்தில் மது அருந்திய காரணத்தினால் நம்முடைய கண்ணியம் அல்லாஹ்விடத்தில் குறைந்து விடுமா?நாம் அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தால் தாழ்ந்து விட்டோமா? என்று கவலைப்பட்ட போது தான் அல்லாஹ் சுப்ஹானஹ் வதஆலா இந்த வசனத்தை இறக்குகிறான். (அல்குர்ஆன் 5:93)

அன்பானவர்களே! இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! ஒரு விஷயம் தடு்க்கப்படுவதற்கு முன்பு செய்ததை நினைத்து,தடுக்கப்பட்டதற்கு பிறகு தோழர்கள் வருந்தினார்கள்.

தடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்டும், பாவம் என்று தெரிந்து கொண்டும் பாவத்தை தொடர்ந்து செய்கின்ற ஒரு மனிதனின் நிலை என்ன?என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

அறியாத காலத்தில், ஹராமாக இல்லாத நேரத்தில் செய்ததை நினைத்தே அந்த தோழர்கள் வருந்தினார்கள்.

இன்று நம்மில் பலர்,ஹராமில் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். வியாபாரங்களில் ஹராமானது, பழக்கவழக்கங்களில் ஹராமானது, உறவு முறைகளில் ஹராமானது, கொடுக்கல் வாங்களில் ஹராமானது என்று ஒரு காரியம் தடுக்கப்பட்டது என்பதாக தெரிந்தும், பெரும் பாவம் என்பதை தெரிந்தும் அதை செய்து கொண்டே இருக்கிறார்களே, எந்த வருத்தமும் இல்லாமல்.

நபித்தோழர் இப்னு மஸ்ஊதுடைய இந்த வரலாற்றிலிருந்து நாம் மிகப் பெரிய படிப்பினையை இது போன்ற காலங்களில் நாம் பெற்றாக வேண்டும்.

அன்பானவர்களே! ஒரு முஃமின் அப்படித் தான் இருக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் தன்னுடைய பாவங்களை நினைத்து வருந்தக்கூடியவனாகஇருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆக்களை நீங்கள் பாருங்கள்.

யா அல்லாஹ்! நான் அறிந்து செய்த அறியாமல் செய்த, வேண்டுமென்றே செய்த, விளையாட்டாக செய்த, நினைவில் செய்த, மறதியில் செய்த சிறிய, பெரிய, சபையில் செய்த, தனிமையில் செய்த எல்லா பாவங்களையும் எனக்கு மன்னிப்பாயாக! (6)

அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6398.

அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் இப்படித் தான் இருந்தார்கள்.

இன்று நாம் நினைவில் அறிந்து கொண்டே, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே செய்கின்ற பாவங்களுக்கு கூட,அல்லாஹ்விடத்தில் திருந்தி மன்னிப்புத் தேடாதவர்களாக இருக்கிறோமென்றால், எந்தளவு இக்காலத்தவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன.

இஸ்ரவேலர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறானே, உங்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன என்று. அது போன்று தான், இன்றைய மக்களுடைய நிலை இருக்கிறது. (அல்குர்ஆன் 2 : 74)

அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவருடைய ஈமானுக்கும், அவருடைய தக்வாவிற்கும், அவர்களுடைய மார்க்கப் பற்றுக்கும் இன்னும் பல ஹதீஸ்களை நமக்கு கூறுகிறார்கள்:

«اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ»

எனக்குப் பின்னால் நீங்கள் அபூபக்ர், உமரைப் பின்பற்றுங்கள்.

(அல்லாஹ்வுடைய தூதரின் தோழர்களை பின்பற்றுவது, இது அல்லாஹ்வுடைய தூதரை பின்பற்றுவதற்கு முரனான ஒரு விஷயமல்ல.

இன்று சிலர் புரிந்திருப்பதைப் போன்று.உண்மையில் ஹதீஸ்களை ஏற்பவர்களாக இருந்தால், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றத் தகுதியான ஒரு ரஸூலாக ஏற்றுக்கொள்பவராக இருந்தால் கண்டிப்பாக அந்த நபியின் தோழர்களை பின்பற்றுவராகத்தான் இருப்பார்.

ஸஹாபாக்களுக்கு கீழ்படிவதோ, அவர்களை பின்பற்றுவதோ, எந்த வகையிலும் ஹதீஸிற்கோ, மார்க்கத்திற்கோ முரனானது அல்ல.

ஒரு ஸஹாபியுடைய தனிப்பட்ட செயல் என்று வந்து அதற்கு மாற்றமாக ஒரு ஹதீஸ் இருக்குமேயானால், அப்போது அந்த ஸஹாபியின் செயலை நாம் ஏற்பது கிடையாது.)

ஹதீஸின் தொடர் : எனக்குப் பின்னால் யாருடைய வழியில் நீங்கள் செல்ல வேண்டும் என்று சொன்ன போது, அபூபக்ர், உமருடைய வழியில் செல்லுங்கள். அம்மாருடைய ஒழுக்கத்தின் படி நீங்கள் ஒழுக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

இப்னு மஸ்ஊது அவர்களுக்கு தான் இப்னு உம் அப்து என்று கூறப்படும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுடைய கட்டளைகளை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (7)

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊதுரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3805.

இந்த இடத்தில் நபித்தோழர்கள் தங்களுக்கு பிறகு பித்அத்துகளை செய்வார்கள், அனாச்சாரங்களை செய்வார்கள், மார்க்கத்திற்கு முரணான வழிகளில் சென்று விடுவார்கள் என்று இருக்குமானால், )அல்லாஹ் பாதுகாப்பானாக! அப்படி ஒருகாலும் அவர்கள் செய்தது கிடையாது.(இப்படி ஒரு நற்செய்தியை, இப்படி ஒரு கட்டளையை நமக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியிருப்பார்களா?

மேலும்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«رَضِيتُ لِأُمَّتِي مَا رَضِيَ لَهَا ابْنُ أُمِّ عَبْدٍ»

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது இந்த உம்மத்துக்காக எதை பொருந்திக் கொண்டாரோ, அவர் ஆய்வு செய்து என்ன சட்டங்களை கூறுகிறாரோ, அந்த சட்டத்தை நானும் பொருந்திக் கொள்கிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 5387.

இந்த இடத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய புரிதல், குர்ஆன், சுன்னாவை அவர்கள் புரிந்ததற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாட்சி கூறுகிறார்கள். இப்னு மஸ்ஊது ஒன்றை சொன்னார் என்றால், அது எனக்கு விருப்பமான ஒன்றாகத் தான் இருக்கும்.

அதாவது, எனது சுன்னாவிலிருந்து புரிந்ததைதான், நன்கு தெரிந்ததை தான் அவர் உங்களுக்கு கூறுகிறாரே தவிர, புதிய ஒன்றை அவருடைய கருத்தாக அவர் கூறமாட்டார்.

அது போன்று, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே உண்டான இன்னும் ஒரு நெருக்கமான உறவு.

அதில் முக்கியமான ஒன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில குறிப்பிட்ட நபித்தோழர்களிடம் தான், விரல் விட்டு எண்ணப்படுகின்ற நபித்தோழர்களிடம் தான், நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்; உங்களிடமிருந்து நான் அந்த குர்ஆனை கேட்க ஆசைப்படுகிறேன் என்று கூறுயிருக்கிறார்கள்.

அத்தகைய நபித்தோழர்களில், இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

இதற்கு, மற்ற நபித்தோழர்களுக்கு குர்ஆன் ஓத தெரியாது என்றோ, அல்லது மற்றவர்களுக்கு குர்ஆனுடைய ஈடுபாடு இல்லையென்றோ அர்த்தமல்ல.

ஒவ்வொரு நபித் தோழருக்கும் அல்லாஹு தஆலா ஒரு விஷேசமான அந்தஸ்தை, ஒரு விஷேசமான ஒரு கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்.

அந்த கண்ணியம் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குர்ஆனுடைய விஷயத்தில் கிடைக்கப்பட்டது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை இப்னு மஸ்ஊதை பார்த்து கூறினார்கள்:

அப்துல்லாஹ் நீங்கள் எனக்கு முன்னால் அமர்ந்து குர்ஆனை ஓதுங்கள்.

அப்போது, இப்னு மஸ்ஊது கூறுகிறார்கள்:யா ரஸூலுல்லாஹ்! உங்களுக்கு முன்னால் நான் குர்ஆன் ஓதிக் காண்பிக்கவா? இந்த குர்ஆன் உங்கள் மீது தானேஇறக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

எவ்வளவு பயமாக இருந்திருக்கும்! ஒரு பெரிய ஆசிரியருக்கு முன்னால் அமர்ந்து அவர் இதை நீ படித்துக்காட்டு என்று சொன்னால், நமக்கு எவ்வளவு நடுக்கம் இருக்கும். நன்கு வாசிக்க தெரிந்தவருக்கு கூட, ஒரு பதட்டம் ஏற்படும்.

இப்னு மஸ்ஊது பதட்டத்தில் கூறிகிறார்:நான் உங்களுக்கு குர்ஆனை ஓதவா? இந்த குர்ஆன் உங்கள் மீது தானே இறக்கப்படுகிறது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகவும் சாந்தமாக பதில் கூறினார்கள்.

«فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي»

நான் பிறரிடமிருந்து குர்ஆனை கேட்க ஆசைப்படுகிறேன். பிறகு இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சூரத்துன்னிஸாவை ஆரம்பித்து ஓதிக் கொண்டே வருகிறார்கள்.

فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا

எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? (அல்குர்ஆன் 4 : 41)

இந்த வசனத்தை இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு மஸ்ஊதிற்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.

தன்னுடைய காலால் இப்னு மஸ்ஊதை தட்டி விடுகிறார்கள். இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு குனிந்து, பயந்து அந்த ஒரு இறையச்சத்தோடு, ஓர்மையோடு ஓதிக் கொண்டிருந்தவர்கள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய காலை தொட்டு, காலால் அசைப்பதை பார்த்து இப்னு மஸ்ஊது தலையை தூக்கி பார்க்கிறார்.

ரஸூலுல்லாஹ்வுடைய கண்களிலிருந்து கண்ணீர் அப்படியே தாரை தாரையாக ஓடிக் கொண்டிருந்தது.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊது ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4582,4583.

அன்பானவர்களே! மறுமையின் அந்த காட்சி ஓதப்பட்டபோது, மரணத்திற்கு பின்னால் ரப்புல் ஆலமீனுக்கு முன்னால் உலக மக்களெல்லாம் வருகின்ற அந்த நாளில், இப்படி ஒரு காட்சி கண்ணுக்கு முன்னால் அல்லாஹ்வுடைய குர்ஆனில் நிறுத்தப்பட்ட போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த காட்சியை நினைத்து மறுமை நிலையை நினைத்து அல்லாஹ்வுடைய பயத்தால் அழுதார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு மஸ்ஊதுடைய அந்த குர்ஆன் ஓதுதலை கேட்டார்கள், ரசித்தார்கள். அந்த ஓதுதலில் தக்வாவை உணர்ந்தார்கள், அழுதார்கள் என்றால் இந்த ஸஹாபிக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் இருந்த கண்ணியத்தையும், அல்லாஹ்விடத்திலிருந்த கண்ணியத்தையும் நாம் இங்கே புரிகின்றோம்.

அதுபோன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

" أُعْطِيَ كُلُّ نَبِيٍّ سَبْعَةَ نُجَبَاءَ، وَأُعْطِيَ نَبِيُّكُمِ أَرْبَعَةَ عَشَرَ نَجِيبًا مِنْهُمْ: أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، وَعَمَّارُ بْنُ يَاسِرٍ "

அல்லாஹு தஆலா முந்திய எந்த ஒரு நபியை அனுப்பினாலும் நபிக்கு மிகவும் நெருக்கமான, மிக நட்புடைய, அவருக்கு ஒரு மந்திரியை போல் இருக்கக் கூடிய ஏழு தோழர்களை அவர்களுக்கு கண்டிப்பாகக் கொடுப்பான். எனக்கு இரண்டு மடங்காக பதினாறு தோழர்களை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.

ஹம்ஸா, அபூபக்ர், உமர், அலி, ஜாஃபர், ஹஸன், ஹுசைன், இப்னு மஸ்ஊது, அபூதர், மிக்தார், ஹுதைஃபா, அம்மார், ஸல்மான் இப்படி பதினாறு தோழர்களை அல்லாஹ் தஆலா எனக்கு உற்ற நண்பர்களாக, நெருக்கமானவர்களாக, மந்திரிகளாக கொடுத்திருக்கிறான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அலிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1274.

அந்த பதினான்கு தோழர்களில் இப்னு மஸ்ஊது அவர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்று அறியும் போது, அல்லாஹ்வுடைய தூதர் இப்னு மஸ்ஊதிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் கொடுத்த கண்ணியத்தை புரிகின்றோம்.

அது போன்று ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு சம்பவத்தை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மாணவர்களிடம், மாணவர்களே! உங்களில் நபியை பார்த்த ஒருவராவது மிச்சமிருக்கிறாரா? என்று.

அப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டால்,இனி நாங்கள் உங்களிடத்தில் சண்டை செய்து வெற்றிக் கொள்ள முடியாதென்று போரை நிறுத்திக் கொள்வார்கள், ஒப்பந்தத்திற்கு வந்து விடுவார்கள்.

அடுத்ததாக, அல்லாஹ்வுடைய தூதரை பார்த்தவரை யாரும் உங்களில் இருக்கிறாரா? என்று கேட்பார்கள். இருக்கிறார் என்று சொன்னால் இப்போதும் நாங்கள் வெற்றிக் கொள்ள முடியாது என்று ஒதுங்கி விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரை பார்த்தவரை பார்த்தவர் யாராவது இருக்கிறாரா? என்று கேட்பார்கள். அப்படி இருக்கிறார் என்றால் ‌இப்போதும் உங்களை வெற்றிக் கொள்ள முடியாது என்று ஒதுங்கி விடுவார்கள்.

அன்பானவர்களே! எப்படி ஸஹாபாக்களுக்கு ஒரு நபியை பார்ப்பது உலகத்தில் உள்ள அத்தனை நிஃமத்துகளை விட பெரியதாக இருந்ததோ, அது போன்று தான் அந்த தாபியீன்களுக்கு ஒரு ஸஹாபியை பார்த்து அவரிடம் அமர்வது.

ஹுதைஃபா அதுவும் எப்படிப்பட்ட ஒரு நெருக்கமான தோழர். அவரைப் பார்த்து அவரிடத்தில் கல்வி படித்து கொண்டிந்த மாணவர்கள் ஹுதைஃபாவிடத்தில் கேட்கிறார்கள்:

ஹுதைஃபா! நீங்கள் ரஸூலுல்லாஹ்விற்கு உடையால், ஒழுக்கத்தால், பண்பால், பேச்சால் எல்லா வகையிலும் ரஸூலுல்லாஹ்வை போன்று உள்ள தோழரை எங்களுக்கு கூறுங்கள், நாங்கள் அப்படியே போய் அவரை அணைத்துக் கொள்கிறோம்.

அவருடைய பணிவிடையிலேயே நாங்கள் இருக்கிறோம். அப்படி ஓரு தோழரை கூறுங்கள் என்று சொன்ன போது, ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

«مَا أَعْرِفُ أَحَدًا أَقْرَبَ سَمْتًا وَهَدْيًا وَدَلًّا بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ابْنِ أُمِّ عَبْدٍ»

ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறி திரும்ப வீட்டிற்குள் செல்கின்ற வரை ரஸூலுல்லாஹ்வை போன்று ஒழுக்கமுடையவராக, பாவனையுடையவராக, நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் ஒருவர் இருக்கிறாரென்றால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை விட வேறு ஒருவரை நாங்கள் பார்க்கவில்லை.

எங்களில் உள்ள கல்விமான்கள் என்ன விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றால், தங்களிலேயே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கமானவர் என்று விளங்கி வைத்திருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3762.

இப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குமிடையே உண்டான உறவு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களை எந்தளவு மாற்றியிருந்தது என்றால், ரஸூலுல்லாஹ்வை போன்று அப்படியே பேசக்கூடியவராக, நடையில் அவருடைய பாவனையில், அமைதியில், ஒழுக்கத்தில் இப்படி எல்லாவற்றிலும் ரஸூலுல்லாஹ்வை அந்தளவு நேசித்ததால், அப்படியே ரஸூலுல்லாஹ்விடத்தில் ஒரு அச்சுவார்க்கப்பட்டதைப் போன்று இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மாறியிருந்தார்கள்.

அன்பானவர்களே! அல்குர்ஆனோடு இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இருந்த ஒரு தொடர்பை கூறி இந்த குத்பாவை நிறைவு செய்வோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழராகிய இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ்வுடைய கூற்றை அறிவிப்பு செய்கிறார்கள்.

நான் இப்னு மஸ்ஊதை கண்டிப்பாக நேசித்துக் கொண்டே இருப்பேன். எப்படி என்னால் நேசிக்காமல் இருக்க முடியும்.

ரஸூலுல்லாஹ் கூற நான் என் காதால் கேட்டேன். நான்கு நபரிடத்தில் நீங்கள் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்.

உலகத்தில் எவ்வளவு தரமாய் இருந்த கல்லூரிகளாக இருந்தாலும் சரி,அவற்றின் சான்றிதல்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படலாம். ஆனால்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுக்கு கொடுத்த சான்றிதலை ஒருவன் சந்தேகித்தால் அவன் நிராகரிப்பாளனாக ஆகி விடுவான், அவன் முனாஃபிக்காக ஆகி விடுவான்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

அந்த நபி அல்லாஹ்வின் வஹியைக் கொண்டு பேசக்கூடியவர்.அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.(அல்குர்ஆன் 53 : 3,4)

இறைவனால் சான்று கொடுக்கப்பட்ட நபி தங்களுடைய தோழர்களிடத்தில் சான்று தருகிறார்கள்.

«اسْتَقْرِئُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ، مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ»

நான்கு நபரிடத்தில் நீங்கள் குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள்.அதில் முதலாவதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுடைய பெயரை கூறினார்கள்.

இரண்டாவது, உபை இப்னு கஅப். பிறகு, முஆது இப்னு ஜபல், பிறகு, அபூ ஹுதைஃபாவுடைய அடிமை ஸாலிஹ் ரழியல்லாஹு அன்ஹு‍.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3758.

இப்படி நான்கு தோழர்களில் முதல் தோழராக குர்ஆனை இந்த உம்மத்திற்கு கற்றுக் கொடுக்கக் கூடிய பொறுப்பையும் அதற்குரிய நற்சான்றிதலையும் வழங்கப்பட்ட முதல் தோழர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இப்படி நபித்தோழர்களைப் பற்றி நாம் அறியும்பொழுது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள்:

அன்ஸாரிகளை நேசிப்பது ஈமான் என்று.

நூல் : புகாரி, எண் : 17.

இமாம் இப்னு ரஜப் ஹம்பலி கூறுகிறார்கள்: முஹாஜிர்களை விட அந்தஸ்தில் குறைவான அன்ஸாரிகளை நேசிப்பது ஈமான் என்று கூறும்பொழுது, முந்திய முதலாவது முஹாஜிர்களாகிய அந்த மக்காவின் முஸ்லிம்களை நேசிப்பது ஈமானின் எவ்வளவு உயர்ந்த தரம் என்று புரிய வேண்டும்.

அந்த அடிப்படையில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முந்தி முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அந்த நபித்தோழர்களில் ஒருவராக இருக்கிறார்.

அவர்களை நேசிப்பதும், அவர்களுடைய அந்த வாழ்க்கையின் வழிமுறையிலிருந்து பாடங்கள், படிப்பினை பெறுவதும் நமக்கும் நம்முடைய சமுதாயத்திற்கும் இன்றியமையாத மிக முக்கியமான ஒன்றாகும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தும், அவர்களுடைய தோழர்களின் வாழ்க்கையிலிருந்தும் நல்ல படிப்பினை பெறக்கூடியவர்களாக, அவர்களுடைய வழிமுறையின் படி தங்களுடைய வாழ்க்கையை கழிக்கக்கூடியவர்களாக, நல்லொழுக்க சீலர்களாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا تَقُولُونَ فِي هَذَا؟» قَالُوا: حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ، قَالَ: ثُمَّ سَكَتَ، فَمَرَّ رَجُلٌ مِنْ فُقَرَاءِ المُسْلِمِينَ، فَقَالَ: «مَا تَقُولُونَ فِي هَذَا؟» قَالُوا: حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْتَمَعَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا» (صحيح البخاري- 5091)

குறிப்பு 2)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ القَاسِمِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: قَدِمَ مُعَاذٌ الْيَمَنَ، أَوْ قَالَ: الشَّامَ، فَرَأَى النَّصَارَى تَسْجُدُ لِبَطَارِقَتِهَا وَأَسَاقِفَتِهَا، فَرَوَّى فِي نَفْسِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ يُعَظَّمَ، فَلَمَّا قَدِمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ النَّصَارَى تَسْجُدُ لِبَطَارِقَتِهَا وَأَسَاقِفَتِهَا، فَرَوَّأْتُ فِي نَفْسِي أَنَّكَ أَحَقُّ أَنْ تُعَظَّمَ، فَقَالَ: «لَوْ كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، وَلَا تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَيْهَا كُلَّهُ، حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا عَلَيْهَا كُلَّهُ، حَتَّى لَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى ظَهْرِ قَتَبٍ لَأَعْطَتْهُ إِيَّاهُ» (مسند أحمد مخرجا- 19403)

குறிப்பு 3)

حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَيَزِيدُ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: قَالَ ابْنُ مَسْعُودٍ: كُنْتُ لَا أُحْبَسُ عَنْ ثَلَاثٍ - وَقَالَ ابْنُ عَوْنٍ: فَنَسِيَ عَمْرٌو وَاحِدَةً، وَنَسِيتُ أَنَا أُخْرَى، وَبَقِيَتْ هَذِهِ - عَنِ النَّجْوَى، عَنْ كَذَا، وَعَنْ كَذَا، قَالَ: فَأَتَيْتُهُ، وَعِنْدَهُ مَالِكُ بْنُ مُرَارَةَ الرَّهَاوِيُّ، قَالَ: فَأَدْرَكْتُ مِنْ آخِرِ حَدِيثِهِ، وَهُوَ يَقُولُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ قَدْ قُسِمَ لِي مِنَ الْجَمَالِ مَا تَرَى، فَمَا أُحِبُّ أَنَّ أَحَدًا مِنَ النَّاسِ فَضَلَنِي بِشِرَاكَيْنِ، فَمَا فَوْقَهُمَا، أَفَلَيْسَ ذَلِكَ هُوَ الْبَغْيَ؟ قَالَ: «لَيْسَ ذَلِكَ بِالْبَغْيِ، وَلَكِنَّ الْبَغْيَ مَنْ سَفِهَ الْحَقَّ، أَوْ بَطِرَ الْحَقَّ، وَغَمَطَ النَّاسَ» (مسند أحمد مخرجا- 4058)

குறிப்பு 4)

حَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، وَسَهْلُ بْنُ عُثْمَانَ، وَعَبْدُ اللهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ الْحَضْرَمِيُّ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ، - قَالَ: سَهْلٌ وَمِنْجَابٌ: أَخْبَرَنَا وقَالَ الْآخَرُونَ: حَدَّثَنَا - عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا} [المائدة: 93] إِلَى آخِرِ الْآيَةِ، قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قِيلَ لِي أَنْتَ مِنْهُمْ» (صحيح مسلم -2459)

குறிப்பு 5)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، أَنَّ رَجُلًا [ص:159] عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَلَدَهُ فِي الشَّرَابِ، فَأُتِيَ بِهِ يَوْمًا فَأَمَرَ بِهِ فَجُلِدَ، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: اللَّهُمَّ العَنْهُ، مَا أَكْثَرَ مَا يُؤْتَى بِهِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَلْعَنُوهُ، فَوَاللَّهِ مَا عَلِمْتُ إِنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ» (صحيح البخاري 6780)

குறிப்பு 6)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي [ص:85] وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، وَحَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ (صحيح البخاري- 6398)

குறிப்பு 7)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ " وَيَحْيَى بْنُ سَلَمَةَ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَأَبُو الزَّعْرَاءِ اسْمُهُ: عَبْدُ اللَّهِ بْنُ هَانِئٍ وَأَبُو الزَّعْرَاءِ الَّذِي رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ اسْمُهُ: عَمْرُو بْنُ عَمْرٍو وَهُوَ ابْنُ أَخِي أَبِي الأَحْوَصِ صَاحِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ " (سنن الترمذي- 3805) [حكم الألباني] : صحيح

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/