HOME      Khutba      இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 2-4 | Tamil Bayan - 431   
 

இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 2-4 | Tamil Bayan - 431

           

இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 2-4 | Tamil Bayan - 431


இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 2-4)

வரிசை : 431

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 16-09-2016 | 14-12-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து வாழுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை கடைபிடித்து வாழுமாறு எனக்கும் உங்களும் தக்வாவை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நல்லோரில் நம்மை சேர்த்து அருள் புரிவானாக! அல்லாஹ்வுடைய அன்பையும் மன்னிப்பையும் அடையப்பெற்ற நன்மக்களில் என்னையும் உங்களையும் நமது குடும்பத்தாரையும்நமது சமூக மக்களையும் ஆக்கியருள்வானாக!

அன்பானவர்களே! இதற்கு முந்திய ஒரு ஜும்ஆவில், இறைவேத பேரறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை நாம் தொடங்கினோம்.

அதனுடைய தொடரில், அந்த பேரறிஞர் இந்த சமுதாயத்தின் மிகப் பெரிய கல்விமான், நபித்தோழர்களில் அல்லாஹ்வுடைய தூதரால் கல்விக்கு சான்று கொடுக்கப்பட்ட அந்த ஸஹாபி பற்றிய மேலும் சில தகவல்களை இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவில் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கேள்விப்படாத ஒரு முஸ்லிம் இருக்க முடியாது. மார்க்கத்தோடு தொடர்புடைய குர்ஆனோடு, சுன்னாவோடு தொடர்புடைய, மார்க்க சட்டத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக இந்த ஸஹாபியின் பெயரை அறிந்திருப்பார்.

எப்படி நான்கு கலீஃபாக்களை பற்றி இஸ்லாமிய வரலாற்றில் நமது மார்க்கத்தில் அதிகம் நினைவு கூறப்படு்கின்றதோ, அப்படி அதிகம் நினைவு கூறப்படுகின்ற நபித்தோழர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பல கோனங்களில் நாம் பார்க்கும்போதும், நமக்கு அவர்களுடைய வாழ்க்கை மிகப் பெரிய ஒரு படிப்பினை மிக்க ஒரு வாழ்க்கையாக தான் அமைந்திருக்கிறது.

பொதுவாக நபித்தோழர்களை எடுத்துக் கொண்டால், அல்லாஹ்வுடைய அருளால் அந்த நபித் தோழர்கள் நமக்கு எல்லா விஷயங்களிலும் ஒரு அழகிய முன்னோடியாகவே திகழ்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய அன்பா? தூதரின் அன்பா? மார்க்கத்திற்காக தியாகம் செய்வதா? அல்லாஹ்வுடைய தீனின் கல்வியை தேடுவதா? உலக பற்றற்ற தன்மையா? இப்படியே எத்தனை நல்ல விஷயங்களை நாம் பட்டியலிட்டு கொண்டாலும் அந்த எல்லா நல்ல விஷயங்களிலும் அந்த நபித்தோழர்கள் நமக்கு ஒரு அழகிய முன்மாதிரியாக, நமக்கு ஒரு அழகிய வழிகாட்டியாக திகழ்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த அடிப்படையில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும் பொழுது, எத்தனையோ பல விஷயங்களை அவர்களிடத்திலிருந்து நாம் கற்க வேண்டியதிருக்கிறது.

அதில் குறிப்பாக, இன்று நமக்கு மிக முக்கியமாக சொல்வதென்றால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களது குர்ஆனுடன் ஈடுபாடு, அல்லாஹ்வுடைய வேதத்துடன் அவர்களுடைய ஈடுபாடு.

அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதுவதில், அதை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருவாயிலிருந்து கற்று தொழுகையில் ஓதுவது, தொழுகைக்கு வெளியில் ஓதுவது, அதனுடைய சட்டங்களை கற்பது, கற்ற வேதத்தின் சட்டங்களை பிறருக்கு போதிப்பது.

இந்த விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு தனக்கென்று ஒரு முத்திரையை, தனக்கென்று ஒரு அடையாளத்தை வைத்திருந்தார்கள்.

அந்த அடையாளம், அந்த ஈடுபாடு அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் போற்றப்பட்டது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிற்கு இருந்தஅந்த இறைவேதத்தின் ஈடுபாட்டைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிற்காக துஆ செய்தார்கள். அவர்களை நமக்கெல்லாம் ஒரு சான்றாக, நமக்கெல்லாம் ஒரு ஆசிரியராக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை நமக்கு முன் வைத்தார்கள்.

குர்ஆன் இறக்கப்பட்ட காலத்திலிருந்து மக்காவில் எப்போது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ இறங்கியதோ, அதற்கு பிறகு முந்தி முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அந்த நன்மக்களில் ஒருவராக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது திகழ்ந்தார்.

அந்த நேரத்திலிருந்து ரஸூலுல்லாஹ்விடமிருந்து அவ்வப்போது எழுதக்கூடிய அந்த சிறு சிறு வசனங்களை, அத்தியாயங்களை ரஸூலுல்லாஹ்விடமிருந்து கேட்டு மனப்பாடம் செய்து, அதை தொழுகையில் ஓதுகின்ற, மனனம் செய்து அதை புரிந்து கொள்கின்ற, அதை ஆழ்ந்து சிந்திக்கின்ற ஒரு வழக்கம் உள்ளவர்களாகவே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாழ்ந்தார்கள்.

சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

சொல்லப்போனால், மக்காவுடைய வாழ்க்கை அவர்களுக்கு குர்ஆனோடு மிகப்பெரிய ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. குர்ஆனை கற்று சிந்திப்பதில், அதற்கு பிறகு அவர்கள் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செய்ய அந்த கூட்டத்தில் இருந்தார்கள்.

பிறகு, ஹபஷாவிலிருந்து மக்காவிற்கு வந்தார்கள். பிறகு மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பத்ருப் போரிலிருந்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கின்ற வரை எல்லா யுத்தங்களிலும் நபியோடு கலந்து கொண்டது மட்டுமல்லாமல், இன்னும் பல தனி போர் குழுக்களில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் போர் வீரராக அனுப்பப்பட்டார்கள்.

சியரு அஃலாமின் நுபலா – இமாம் தஹபி

இப்படி குர்ஆனோடு அவர்கள் ஒன்றி வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.அதைப் பற்றி வரலாற்றில் நாம் பார்க்கும் பொழுது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுடைய மாணவர்கள் கூறுகிறார்கள்.

ரஸூலுல்லாஹ்விற்கு அடுத்தபடியாக மக்காவில் குர்ஆனை மக்களுக்கு மத்தியில் பகிரங்கமாக ஓதிய முதல் மனிதர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுக்கு இஸ்லாமிய அழைப்புப் பணி செய்யும்பொழுது குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள்.

அப்படி குர்ஆனை ஓதிக்காட்டுகின்ற வழக்கமுடையவராக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்ததைப் போன்று, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்களும் மக்களுக்கு தஃவா செய்யும்பொழுது, மக்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி எடுத்து பேசும்பொழுது, மக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டுபவராக இருந்தார்.

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுடைய சிறப்பு என்ற பாடத்தில் இந்த ஹதீஸை பதிவு செய்கிறார்கள். அபூ மஸ்ஊது அல் அன்ஸாரி என்ற ஒரு பெரிய நபித் தோழர் கூறுகிறார்கள்:

ஒரு சமயம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு மஸ்ஜிதில் நின்று தொழுது குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து விட்டு அபூ மஸ்ஊது அல் அன்ஸாரி கூறுகிறார்கள்:

" مَا أَعْلَمُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ بَعْدَهُ أَعْلَمَ بِمَا أَنْزَلَ اللهُ مِنْ هَذَا الْقَائِمِ"

அல்லாஹ்வுடைய தூதருக்குப் பிறகு,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய வேதத்தை நன்கறிந்த ஒருவரை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றால்,அது இப்போது இதோ தொழுது கொண்டிருக்கிறாரே இவரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

அறிவிப்பாளர் : அபூ மஸ்ஊது அல்அன்ஸாரிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2461.

இன்று,குர்ஆனின் விஷயத்தில் இரு கூட்டங்களாக நமது சமுதாயம் இருக்கிறது. உதாரணமாக, குர்ஆனை மனனம் செய்தவர்கள் என்று மட்டும் ஒரு கூட்டம். அவர்களுக்கு குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?என்று தெரியாது.

இன்னொரு மக்கள்,குர்ஆன் உடைய சட்டங்களை படித்திருப்பார்கள்.அதை மனனம் செய்திருக்க மாட்டார்கள்.

இன்னும் பல கூட்டம் இருக்கிறது, குர்ஆனை திறந்து பார்க்காதவர்களெல்லாம் இருக்கிறார்கள். குர்ஆனே ஓத தெரியாதவர்களெல்லாம் இருக்கிறார்கள். குர்ஆன் என்றால் அது என்ன வேதம்?அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்பதெல்லாம் தெரியாமல் கூட கூட்டங்கள் இருக்கிறார்கள்.

அன்பானவர்களே! ஸஹாபாக்களுடைய காலத்தில் இப்படி இரண்டு கூட்டங்கள் இருந்தது கிடையாது. அதாவது, குர்ஆனை மனனம் செய்தவர்கள் தனி, குர்ஆனின் சட்டங்களை தெரிந்தவர் தனி என்று இரண்டு கூட்டங்கள் இருந்தது கிடையாது. குர்ஆனை மனனம் செய்யும்போதே அதனுடைய சட்டங்களோடு மனனம் செய்வார்கள்.

குர்ஆனை மனனம் செய்யும் பொழுதே மனனம் செய்யப்பட்ட வசனம் எங்கே இறக்கப்பட்டது?எந்த பின்னனியில் இறக்கப்பட்டது?இதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்த கல்வி என்ன? என்பதோடு தான் அவர்கள் குர்ஆனை கற்றார்கள்.

எனவேதான், பல நபித்தோழர்கள் கூறுகிறார்கள்:நாங்கள் சூரத்துல் பகராவை இரண்டு ஆண்டுகளில் மனப்பாடம் செய்தோம் என்று.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்வியின் மீது தங்களுக்குள்ள ஆர்வத்தைப் பற்றி கூறுகிறார்கள்:

எந்த இறைவனைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் இல்லையோ, அந்த ரப்பின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

ரஸூலுல்லாஹ்வின் திருவாயிலிருந்து நேரடியாக எழுபதிற்கும் மேற்பட்ட சூராக்களை நான் மனனம் செய்திருக்கிறேன்.

(நீங்கள் யாரும் நினைத்து விட வேண்டாம், எழுபது சூராக்களை நான் கூட தானேமனனம் செய்திருக்கிறேன் என்று. அம்ம ஜூஸ்உவிலிருந்து எடுத்து விடாதீர்கள். அப்படி தபாரக்கல்லதிலிருந்து அம்ம ஜூஸ்உ வரை எடுத்தால் எழுபது சூராக்கள் வந்துவிடும்.

இவர்கள் கூறுவது, சூரத்துல் பகராவிலிருந்து எழுபது சூராக்களை.அப்படியென்றால் குர்ஆனுடைய மூன்றில் இரண்டு பங்கு அதிலேயே முடிந்து விடும். எழுபது சூராக்களை ரஸூலுல்லாஹ்வுடைய வாயிலிருந்து அவர்கள் ஓதக் கேட்டு கேட்டு நான் நேரடியாக மனப்பாடம் செய்திருக்கிறேன்.

இன்று, சிலர் கூறலாம், நான் அவரிடத்தில் கல்வி படித்தேன், இவரிடத்தில் கல்வி படித்தேன் என்று பெறுமை பேசலாம்.

இந்த சிறப்பை உலகத்தில் வேறு யாராவது ஸஹாபாக்களை தவிர அடைய முடியுமா? எந்த நபியின் மீது ஜிப்ரயீல் வஹீயைக் கொண்டு வந்தாரோ, யாரை விட சிறந்த ஒரு மனிதர் குர்ஆன் ஓதுபவர் இருக்க முடியாதோ, யார் மீது குர்ஆன் இறக்கப்பட்டு குர்ஆனைக் கொண்டு பேசி குர்ஆனோடு வாழ்ந்தாரோ, அந்த ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆசிரியராக இருக்க அவர்களிடத்திலிருந்து நேரடியாக, தனித் தனியாக அவர்கள் ஓத நான் கேட்க என்று எழுபது சூராக்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் மனப்பாடம் செய்திருக்கிறேன் என்று கூறுகின்ற அந்த நபித்தோழர்.

இங்கே தான் மற்றொரு பக்கம் அவர்களுடைய பணிவை அவர்களுடைய தன்னடக்கத்தை பார்க்கிறோம்.

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது பெருமைக்காக கூறினார்களா? தன்னை மக்கள் பெரிதாக மதிப்பதற்காக கூறினார்களா? என்றால் ஒருபோதும் அப்படி கிடையாது.

நபித்தோழர்கள் பெருமையை, தான் புகழப்படுவதை அவர்கள் விரும்பியதே இல்லை. எந்த ஒன்றைக் கொண்டும் தனக்கு சிறப்பு சேர்ப்பித்து மக்கள் தன்னை உயர்வாக மதிக்க வேண்டுமென்று நபித்தோழர்கள் யாரும் கருதியதே கிடையாது.

இன்று, நமக்கு முன்னால் யாராவது நம்மை உயர்வாக பேசினால் அப்படியே நமது முகமெல்லாம் விரிந்து விடும். யாராவது நமது குறைகளை சொன்னால், முகமெல்லாம் சுறுங்கி விடும்.

«إِذَا رَأَيْتُمُ الْمَدَّاحِينَ، فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ»

ஆனால், நபித்தோழர்களுக்கு முன்னால் யாராவது அவர்களை புகழ்ந்து பேசினால் மண்ணை அள்ளி அவர்களுடைய முகத்தில் வீசுவார்கள். இப்படித்தான் எங்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் கூறியிருக்கிறார்கள் என்று.

அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23823.

எங்களுக்கு முன்னால் எங்களை யாராவது புகழ்ந்தால் மண்ணை அள்ளி அவர்களுடைய முகத்தில் வீச வேண்டுமென்று. தங்களது குறைகளை யாராவது சுட்டிக்காட்டினால் அடக்கத்தோடு, அன்போடு அதை ஏற்றுக் கொள்பவர்கள் நபித்தோழர்கள்.)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது எழுபது சூராக்களை ரஸூலுல்லாஹ்விடமிருந்து நான் நேரடியாக மனப்பாடம் செய்திருக்கிறேன் என்று கூறிவிட்டு, அடுத்து அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வுடைய தூதருக்கு பிறகு, அல்லாஹ்வின் வேதத்தை என்னை விட அதிகமாக அறிந்த ஒரு அறிஞர் இருக்கிறார், எனது ஒட்டகம் அவர் வரை செல்லும் என்றிருக்குமேயானால், கண்டிப்பாக நான் அவரிடத்தில் சென்று கல்வி படித்திருப்பேன்.

இதுதான் கல்விமான்களுடைய உண்மையான ஒழுக்கம். அது தான் அவர்களுடைய உண்மையான கல்வியின் மீதுள்ள ஆசையின் வெளிப்பாடு. கல்வி கற்றவர்கள் எப்போதும் தனது கல்வி தனக்கு போதும் என்று இருந்துவிட மாட்டார்கள்.

எப்படி செல்வத்தை சம்பாதிப்பவர்கள் என்றைக்காவது நான் சம்பாதித்த செல்வம் எனக்கு போதும் என்று இருந்திருக்கிறார்களா? காசுபணத்தை சம்பாதித்து, வீடுகளைதோட்டங்களை, நிலங்களை, கட்டிடங்களை வாங்கி குவித்தவர்கள் யாராவது நான் சேர்த்த செல்வம் எனக்கு போதும் என்று இருப்பார்களா?

எப்படி அழியக்கூடிய இந்த உலகத்தின் பேராசை பிடித்தவர்களுக்கு அந்த உலக மோகம் குறையாதோ, அழியாத செல்வமாகிய மறுமையின் ஒளியாகிய கல்வியை கற்றவர்களுக்கு எப்படி அந்த மோகம் குறையும்?என்று யோசித்துப்பாருங்கள்.

அந்த ஆகிரத்துடைய தேட்டத்தை உள்ளத்தில் உண்மையாக உணர்ந்தவர்கள், அல்லாஹ்வுடைய வேதத்தின் கல்வியில் ஒருகாலும் திருப்தி அடையமாட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாக இப்னு மஸ்ஊதுடைய மாணவர் இமாம் மஸ்ரூக் கூறுகிறார்கள்:

«وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ مَا مِنْ كِتَابِ اللهِ سُورَةٌ إِلَّا أَنَا أَعْلَمُ حَيْثُ نَزَلَتْ، وَمَا مِنْ آيَةٍ إِلَّا أَنَا أَعْلَمُ فِيمَا أُنْزِلَتْ، وَلَوْ أَعْلَمُ أَحَدًا هُوَ أَعْلَمُ بِكِتَابِ اللهِ مِنِّي، تَبْلُغُهُ الْإِبِلُ، لَرَكِبْتُ إِلَيْهِ»

அல்லாஹ்வின் வேதத்தில் எந்த ஒரு வசனத்தை வேண்டுமானாலும் என்னிடத்தில் கேளுங்கள். அந்த வசனம் எங்கே இறங்கியது? மக்காவில் இறங்கியதா? மதினாவில் இறங்கியதா? நபியின் பயணத்தில் இறங்கியதா? நபி உள்ளூரில் இருக்கும்போது இறங்கியதா? எந்த பயணத்தில் இறங்கியது?எந்த போரில் எந்த வசனம் இறங்கியது?

எது விஷயமாக அந்த வசனம் இறங்கியது?என்பதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன்.

அறிவிப்பாளர் : மஸ்ரூக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2463.

எவ்வளவு விசாலமான கல்வி உடையவர்களாக இருந்தார்கள் பாருங்கள்.

ஜைது இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குர்ஆனை ஒன்று திரட்டி எழுதக்கூடிய பொறுப்பு கொடுக்கப்பட்ட போது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

ஜைது பெரிய தலை முடியோடு சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே நான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து எழுபது சூராக்களை மனப்பாடம் செய்திருக்கிறேன் என்று.

குர்ஆனில் தனக்கிருந்த முதிர்ச்சியை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நமக்கு சொல்லித் தருகின்றார்கள்.

இப்படி தன்னுடைய கல்வியை பற்றி அவர்கள் நமக்கு கூறியது, அவர்கள் பெருமைக்காக கூறவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் தன்னிடத்தில் விட்டுச் சென்ற கல்வியை இந்த மக்கள் தன்னிடமிருந்து கற்க வேண்டும், படிக்க வேண்டும், இந்த கல்வியின் அருமை அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக கூறினார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுக்கும் இடையிலிருந்த தொடர்பை எந்த கோணத்தில் பார்த்தாலும் அங்கே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிற்காக தனி ஒரு இடம் இருப்பதை பார்க்கலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு சமயம் அபூபக்ர், உமர் ரழியல்லாஹு அன்ஹு அந்த இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள்.

ரஸூலுல்லாஹ்வுடைய வீடு மஸ்ஜிதுன் நபவியோடு சேர்ந்திருந்தது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் நின்று தொழுது ஓதிக் கொண்டிருக்கிறார்கள். சூரத்துன்னிஸாவை அப்படியே நிறுத்தி நிதானமாக ஓதுகிறார்கள்.

இங்கே ஒரு விஷயத்தை கவனியுங்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தங்களது நபியின் தோழர்களைப் பற்றி அல்குர்ஆனில் அழகாக வர்ணிக்கின்றான்.

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; (அல்குர்ஆன் 48:29)

இது,நபியின் தோழர்களைப் பற்றி அல்லாஹ் கொடுக்கக் கூடிய சான்று. அவர்கள் தொழுகையோடு ஈடுபாடு உடையவர்கள். அவர்களது இரவு, பகல் என்று கிடைக்கின்ற ஓய்வுகளை தொழுகை போன்றவணக்கத்தில் கழிப்பவர்கள்.

இன்று, நம்முடைய ஓய்வு, நம்முடைய வேலை இல்லாத மற்ற நேரங்கள் எங்கே கழிகின்றன? என்று நாம் ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அவர்களுடைய ஓய்வு அவர்களை தொழுகையில் ஈடுபடுத்தியது. அவர்களுக்கு உலக வேலைகள் முடிந்து விட்டால், பொருளாதாரத்தில் உள்ள தேடல் முடிந்து விட்டால் உடனே இபாதத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். இபாதத்தில் அதிகம் நேரம் கழிப்பவர்களாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சூரத்துன்னிஸாவை ஆரம்பித்து அதை நிறுத்தி நிதானமாக ஓதிக் கொண்டே இருக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்ர், உமர் ரழியல்லாஹு அன்ஹு இருவரோடு அந்த பள்ளியை அப்படியே கடந்து செல்கிறார்கள். அங்கே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது நின்று ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பார்த்த ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

«مَنْ أَحَبَّ أَنْ [ص:288] يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ، فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ»

ஈரம் காயாமல் பசுமையாக இறக்கப்பட்ட குர்ஆனை அப்படியே யார் ஓத வேண்டுமென்று விரும்புகிறாரோ, குர்ஆன் ஜிப்ரயீல் நாவிலிருந்து எனக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டு எனது நாவிலிருந்து உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதைப் போன்று, அந்த ஈரம் காயாமல் அதே பசுமையோடு யாராவது குர்ஆனை ஓத விரும்பினால் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ஓதுவதைப் போன்று அவர் குர்ஆன் ஓதட்டும்.(1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 4255.

எவ்வளவு பெரிய சான்று பாருங்கள். இது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தெரியாது. அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஒரு ஓரமாக நின்று ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.

அபூபக்ர், உமரிடத்தில் இந்த விஷயத்தை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பரிமாரிக் கொண்டிருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு தொழுது முடித்து விட்டு துஆ செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் துஆ கேட்பதை பார்த்து விட்டு அவர்கள் அபூபக்ர், உமருக்கு கேட்கும் வண்ணமாக கூறுகிறார்கள்.

இப்னு மஸ்ஊதே! இப்போது நீ அல்லாஹ்விடத்தில் கேள். உனக்கு நீ கேட்பதெல்லாம் கொடுக்கப்படும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ன துஆ கேட்டார்கள்?

இப்படி நம்மில் யாருக்காவது சொல்லப்பட்டிருந்தால், நாம் என்ன கேட்டிருப்போம்? யாருக்கு எதன் மீது மோகம் இருக்குமோ அதை அவர்கள் கேட்பார்கள். அழிகின்ற சொத்தை கேட்பவர்கள் இருக்கலாம், அழியாத மறுமையை கேட்பவர்களும் இருக்கலாம்.

இங்கே இப்னு மஸ்ஊதுடைய துஆவை பாருங்கள். இது தான் அல்லாஹ்வுடைய தூதரின் தோழர்களை அல்லாஹ்வோடு நெருக்கமாக்கியது எது? அவர்களுடைய உள்ளங்கள்.அந்த கல்புகளில் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதிருந்த தேட்டம்.

இப்னு மஸ்ஊதுடைய துஆவை பாருங்கள். மூன்று விஷயங்களை கேட்கிறார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ، وَنَعِيمًا لَا يَنْفَدُ، وَمُرَافَقَةَ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ

யா அல்லாஹ்! தடுமாறாத ஈமானை உன்னிடத்துல் கேட்கிறேன். பலவீனமடையாத, குழப்பமடையாத, தடுமாற்றம் இல்லாத ஈமானை கேட்கிறேன். தீர்ந்து விடாத நிஃமத்தை உன்னிடத்தில் கேட்கிறேன். உன்னிடத்தில் உள்ள சொர்க்க வாழ்க்கையில் உன்னுடைய முஹம்மது நபியோடு நான் இருக்க வேண்டுமென்று கேட்கிறேன்.

இந்த துஆவை இப்னு மஸ்ஊது கேட்கிறார்கள். இது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தெரியாது.

காலையில் உமர் அவர்கள் இந்த சம்பவத்தையும், அவர் கேட்ட துஆவிற்கு முன்னால் அல்லாஹ்வுடைய தூதர் அவருக்கு கூறிய நற்செய்தி, நீங்கள் கேளுங்கள் கொடுக்கப்படுவீர்கள். இந்த மூன்றை கேட்டார்கள், அந்த மூன்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நற்செய்தியை கூறுவதற்காக உமர் அவர்கள் ஓடோடி வந்தார்கள்.

அதற்கு முன்பே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த குகையின் தோழர் இப்னு மஸ்ஊதிற்கு அருகில் அமர்ந்து, இப்னு மஸ்ஊதிற்கு நடந்த சம்பவத்தையும் ரஸூலுல்லாஹ்வின் இந்த நற்செய்தியையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்து உமர் கூறுகிறார்: அபூபக்கரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் நன்மையில் மிக அதிகம் முந்தக்கூடியவர்கள், உங்களை யாரும் முந்த முடியாது.(1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 4255.

எப்படிப்பட்ட பணிவு பாருங்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிற்கும் அபூபக்ருக்கும் இடையில் உள்ள தரஜா, யார் எவ்வளவு தரஜாக்களை அடைந்தாலும் ஒட்டு மொத்த ஸஹாபாக்களும் அபூபக்ரின் தரஜாவை அடைய முடியாது.

ஒவ்வொரு ஸஹாபிக்கும் தனித் தனி சிறப்புகள் இருந்தாலும், ஆயிரம் உமர் சேர்ந்தாலும் ஒரு அபூபக்ருடைய தரஜாவை அடைய முடியாது.

இங்கே தான், அந்த நபித்தோழர்கள் தங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இருந்த அன்பு, பாசம், பணிவு அவர்களுக்கு மத்தியிலிருந்த பரஸ்பர அன்பை பார்க்கிறோம்.

இன்று பல விஷயங்களை நாம் பார்க்கிறோம். ஒரு முட்டாளை பல முட்டாள்கள் சேர்ந்து கல்விமான் என்று கூறுவார்கள், அவர் கல்விமானாக தன்னை காட்டிக்கொள்வார். ஒரு அறிவற்ற ஜாஹிலை, ஒழுங்காக படிக்காத ஒரு ஜாஹிலை அந்த ஜாஹில் பல ஜாஹில்களுக்கு மார்க்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்.

அதை பார்த்துவிட்டு ஏமாந்துப் போன ஜாஹில்களெல்லாம் அவரை பேரறிஞர் என்றும் மூத்த அறிஞர் என்றும் பெரிய கல்விமான் என்றும் சமுதாயத்தின் வழிகாட்டி என்றும் பேசிக்கொண்டிருக்கும்.

அன்பானவர்களே! ஆலிம் என்றால் அவர்களல்ல. ஜாஹில்களால் பாராட்டப்படுபவர்,பொதுமக்களால் பாராட்டப்படுபவர் அல்ல ஆலிம்.

ஆலிம் என்பவர் யார் தெரியுமா? ஆலிம் என்பவரை ஆலிம்கள் பாராட்ட வேண்டும். ஆலிம் என்பவரின் இல்முக்கு கற்றறிந்த, கல்வியில் தேர்ச்சி பெற்ற மூத்தவர்கள், கல்விமான்கள் அவருடைய கல்வியை போற்ற வேண்டும்.

அவரிடத்தில் வந்து தங்களது சந்தேகத்திற்கு உண்டான விளக்கங்களை கேட்க வேண்டும், அவரிடத்தில் கல்வி படிக்க வேண்டும், அவர்கள் சான்று கூற வேண்டும்.

இமாம் புகாரியை ஏன் ஹதீஸ்கலை அமீர் என்று ஏற்றுக் கொள்கிறோம்? இமாம் புகாரியை போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஹதீஸ்கலை அறிஞர்கள் எங்களைவிடவெல்லாம் இமாம் புகாரி ஹதீஸ்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்று அறிஞர்கள் சாட்சி கூறலாம்.

இமாம் புகாரி ஹதீஸ் நூலை எழுதியதால் மட்டுமல்ல, அவர் எழுதிய ஹதீஸ் நூல் எங்களால் தரம் பார்க்கப்பட்டு சரியான நூல் தான், அவர் சொன்ன நிபந்தனைகளெல்லாம் அதில் சரியாக பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அறிஞர்கள் கூறிய சாட்சியத்தால் இமாம் புகாரியை அந்த ஸ்தானத்தில் வைக்கிறோம்.

இன்று,ஒரு ஜாஹிலை முட்டாள்கள் சாட்சி சொல்வதால், சமுதாயத்தின் பேரறிஞராக ஏற்றுக் கொண்டு அவருடைய வழிகாட்டல்களில் சமுதாயம் செல்கின்ற காரணத்தினால்தான் ஒவ்வொரு நாளும் புதிய புதிய வழிகேடுகள், ஒவ்வொரு நாளும் புதிய புதிய சாத்தானிய சிந்தனைகள் சமுதாயத்தில் ஊடுறுவிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

இங்கே, இப்னு மல்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஸஹாபாக்களின் கல்விமான்கள் கூறிய சான்றிதழைப் பாருங்கள்.

ஸஹாபாக்களில் மூத்த கல்விமான்கள் என்றால், முதலாவதாக அபூபக்ர், அபூபக்ருடைய இல்ம் வேறு யாருக்கும் கிடையாது. இரண்டாவதாக உமர், உமருடைய இல்ம் அவருக்கு கீழ் உள்ள வேறு யாருக்கும் தெரியாது.

அடுத்ததாக உஸ்மான், அடுத்ததாக அலி ரழியல்லாஹு அன்ஹு. எப்படி கிலாஃபத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு, இந்த நான்கு பேரும் கிலாஃபத்தில் படித்தரம் உடையவராக இருக்கிறார்களோ, அதே போன்றுதான் சிறப்பிலும், கல்வியிலும், அல்லாஹ்விடமுள்ள நெருக்கத்திலும் இந்த நான்கு பேரும் அதே படித்தரத்தில் உள்ளவர்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் அவர்களுடன் நடந்த ஒரு சம்பவம். கைஸ் இப்னு மர்வான் அவர் கூஃபாவிலிருந்து வருகிறார். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில்அவர் கூறுகிறார்:

யா அமீரல் முஃமினீன்! நான் கூஃபாவில் ஒரு மனிதரைப் பார்த்தேன், முழு குர்ஆனையும் மனப்பாடமாக அவர் ஓதுகிறார்.

(ஓதுகிறார் என்றால், குர்ஆனின் வார்த்தைகளை மனப்பாடமாக ஓதுவது மட்டுமல்ல. அந்த குர்ஆனின் வசனங்களுக்கு பின்னால் உள்ள கல்விகளை கூறுவது.)

இப்படி ஒரு மனிதர் முழு குர்ஆனை மக்களுக்கு மனப்பாடமாக கற்றுக் கொடுக்கிறார், அதனுடைய சட்டங்களை கற்றுக் கொடுக்கிறார், அவரிடத்தில் எந்த ஒரு நூலும் இல்லை. இப்படி ஒரு வித்தியாசமான, ஆச்சரியமான ஒரு மனிதரை கூஃபாவில் நான் பார்த்தேன் என்று கூறியவுடன், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கோபம் வந்தால், முகமெல்லாம் அப்படியே உப்பிவிடும், நரம்புகளெல்லாம் புடைத்து விடும்.

சரியான கோபத்திற்கு வந்துவிட்டார்கள். அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், உனக்கு நாசம் உண்டாகட்டும்! இப்படிப்பட்ட துணிவு யாருக்கு இருக்கிறது? குர்ஆனை பார்க்காமல் முழு குர்ஆனையும் மனப்பாடமாக ஓதிக்காட்டி, அதை மக்களுக்கு கல்வி போதிப்பதற்கான துணிவு யாரிடத்தில் இருக்கிறது? என்று கோபமாக கேட்கிறார்கள்.

அந்த மனிதர் கூறுகிறார்:அவருக்கு இப்னு மஸ்ஊது என்று சொல்லப்படுகிறது.

இந்த வார்த்தையை முன்னாடியே கூறியிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்கும ? இந்த வார்த்தையை கேட்டவுடன், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கோபம் அப்படியே குறைய ஆரம்பித்தது.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக கூறுகிறேன். அவரை விட தகுதியான ஒருவர் இப்போது உயிராக இல்லை.

குர்ஆனை முழுமையாக மனப்பாடமாக ஓதி, அதன் கல்வியை மக்களுக்கு போதிப்பதற்கு அவரை விட தகுதியானவர் இப்போது யாரும் மீதமாக இல்லை.

நான் உனக்கு ஒன்றை கூறட்டுமா? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல நேரங்களில் இரவில் அபூபக்ரோடு முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு நாள் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது நானும் அவர்களுடன் இருந்தேன்.

நானும் அபூபக்ரும், ரஸூலுல்லாஹ்வும் வெளியேறி வந்தபோது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது மஸ்ஜிதில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். ரஸூலுஸ்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய குர்ஆனை கேட்டார்கள், நாங்கள் ஓதக்கூடியவர் யார் என்று சரியாக முதலில் அறிந்துக் கொள்ள முடியவில்லை. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்துக் கொண்டார்கள்.

அதற்கு பிறகு கூறினார்கள்:யார் குர்ஆனை ஈரம் காயாமல் பசுமையாக ஓத வேண்டுமென்று விரும்பினாரோ, அவர் இப்னு மஸ்ஊது குர்ஆனை ஓதுவது போன்று ஓதட்டும் என்று கூறினார்கள்.

பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது துஆ கேட்க ஆரம்பித்தார்கள். அவர்கள் துஆ கேட்கும்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், நீ அல்லாஹ்விடத்தில் துஆ கேள், நீ எதை கேட்பாயோ அது உனக்கு கொடுக்கப்படும் என்று.

அதிகாலையில் இந்த நற்செய்தியை கூறுவதற்காக, நான் இப்னு மஸ்ஊதிடத்தில் வந்த போது, அங்கே அபூபக்ர் எனக்கு முந்தி அந்த நற்செய்தியை கூறிக்கொண்டிருந்தார். (2)

அறிவிப்பாளர் : கைஸ் இப்னு மர்வான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 175.

அன்பானவர்களே! இப்படி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித்தோழர்களில், கல்விமான்கள் அதுவும் நபித்தோழர்களில் ஃபத்வா கொடுப்பதற்கும், மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு கொடுப்பதற்கும், ஆட்சி செய்வதற்கும் தகுதியானவர்களென்று யாரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருப்தி கொண்டார்களோ, அந்த ஸஹாபாக்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை குர்ஆனை கற்றறிந்த பேரறிஞர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களிடத்தில் குர்ஆனை படித்தார்கள். எத்தனை முறை தெரியுமா? இப்னு மஸ்ஊது போன்றவர்கள், இப்னு உமர் போன்றவர்கள், இன்னும் வாலிப ஸஹாபாக்கள்.

ரஸூலுல்லாஹ் மரணிக்கும் பொழுது சிறுவயதாக இருந்த நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுடைய வாசலில் அமர்ந்து அவர்கள் குர்ஆனை படித்திருக்கிறார்கள்.

அன்பானவர்களே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இன்னும் நாம் தெரிய வேண்டியதிருக்கிறது.

இன்று நாம் தெரிந்து கொண்ட இந்த சம்பவங்களில் அவர்களுக்கு குர்ஆனோடு இருந்த தொடர்பு,இதைக் கொண்டு நாம் படிப்பினை பெற வேண்டும்.

இன்று,நமக்கு அல்லாஹ்விடத்தில் மிக உயர்வை, கண்ணியத்தை நமக்கு அல்லாஹ்வுடன் உண்டான நெருக்கத்தை அதிகப்படுத்தக்கூடியது ஒன்று இருக்கிறதென்றால், அது அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் தான்.

இதை எந்தளவு நாம் கற்றுக்கொள்வோமோ, அல்லாஹ்வுடைய தீனின் மீது நமக்கு அந்தளவு ஈடுபாடு ஏற்படும்.நமது வணக்க வழிபாடுகள் உயிரோட்டமாக ஆகும். நமது மார்க்கப்பற்று அதிகரிக்கும், நமது மறுமையின் தேட்டம் அதிகரிக்கும்.

இந்த குர்ஆனுடைய இல்ம் நம்முடைய கல்புக்குள் இறங்க இறங்க நம்முடைய கல்பில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிரகாசத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்வுடைய தீனை புரிய முடியும், அல்லாஹ்வுடைய தீன் நமக்கு இலகுவாகும்.

சொர்க்கத்தின் மீதுண்டான ஆசைகள் அதிகரிக்கும், நரகத்தின் பயம் நமக்கு அதிகரிக்கும். நபித்தோழர்களுடைய வாழ்க்கையில் அதைதானே நாம் பார்க்கிறோம்.

அன்பானவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவிடத்தில் துஆ செய்வோம், அதற்காக முயற்சி செய்வோம்.

நம்முடைய வாழ்க்கையை குர்ஆனோடு தொடர்புபடுத்தி, நமது பிள்ளைகள் நமது குடும்பத்தார்களை குர்ஆனோடு தொடர்புடையவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்வோமாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! குர்ஆனை அனுதினமும் ஓதக்கூடிய, குர்ஆனோடு தொடர்புடைய, குர்ஆனை கற்று மக்களுக்கு கற்கக்கூடிய நன்மக்களில் அல்லாஹ் தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!

குர்ஆனை மறந்த, குர்ஆனை புறக்கணித்த, குர்ஆனிலிருந்து விலகிய மக்களாக ஆகுவதிலிருந்து அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்தருள்வானாக! குர்ஆன் யாருக்கு சாதகமாக சாட்சி கூறுமோ, அந்த சான்றோரில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ أَبِي النَّجُودِ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ بَيْنَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعَبْدُ اللَّهِ يُصَلِّي، فَافْتَتَحَ النِّسَاءَ فَسَحَلَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ [ص:288] يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ، فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ» ، ثُمَّ تَقَدَّمَ سْأَلُ، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَلْ تُعْطَهْ، سَلْ تُعْطَهْ، سَلْ تُعْطَهْ» ، فَقَالَ: فِيمَا سَأَلَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ، وَنَعِيمًا لَا يَنْفَدُ، وَمُرَافَقَةَ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ. قَالَ: فَأَتَى عُمَرُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ عَبْدَ اللَّهِ لِيُبَشِّرَهُ، فَوَجَدَ أَبَا بَكْرٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ قَدْ سَبَقَهُ، فَقَالَ: إِنْ فَعَلْتَ، لَقَدْ كُنْتَ سَبَّاقًا بِالْخَيْرِ (مسند أحمد مخرجا- 4255)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ وَهُوَ بِعَرَفَةَ - قَالَ أَبُو مُعَاوِيَةَ: وَحَدَّثَنَا الْأَعْمَشُ [ص:309]، عَنْ خَيْثَمَةَ، عَنْ قَيْسِ بْنِ مَرْوَانَ، أَنَّهُ أَتَى عُمَرَ فَقَالَ: جِئْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مِنَ الْكُوفَةِ وَتَرَكْتُ بِهَا رَجُلًا يُمْلِي الْمَصَاحِفَ عَنْ ظَهْرِ قَلْبِهِ، فَغَضِبَ وَانْتَفَخَ حَتَّى كَادَ يَمْلَأُ مَا بَيْنَ شُعْبَتَيِ الرَّحْلِ، فَقَالَ: وَمَنْ هُوَ وَيْحَكَ، قَالَ: عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، فَمَا زَالَ يُطْفَأُ وَيُسَرَّى عَنْهُ الْغَضَبُ حَتَّى عَادَ إِلَى حَالِهِ الَّتِي كَانَ عَلَيْهَا، ثُمَّ قَالَ: وَيْحَكَ وَاللَّهِ مَا أَعْلَمُهُ بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ هُوَ أَحَقُّ بِذَلِكَ مِنْهُ، وَسَأُحَدِّثُكَ عَنْ ذَلِكَ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ يَسْمُرُ عِنْدَ أَبِي بَكْرٍ اللَّيْلَةَ كَذَاكَ فِي الْأَمْرِ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ، وَإِنَّهُ سَمَرَ عِنْدَهُ ذَاتَ لَيْلَةٍ، وَأَنَا مَعَهُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَرَجْنَا مَعَهُ، فَإِذَا رَجُلٌ قَائِمٌ يُصَلِّي فِي الْمَسْجِدِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَمِعُ قِرَاءَتَهُ، فَلَمَّا كِدْنَا أَنْ نَعْرِفَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ رَطْبًا كَمَا أُنْزِلَ، فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ» قَالَ: ثُمَّ جَلَسَ الرَّجُلُ يَدْعُو، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَهُ: «سَلْ تُعْطَهْ، سَلْ تُعْطَهْ» ، قَالَ عُمَرُ قُلْتُ: وَاللَّهِ لَأَغْدُوَنَّ إِلَيْهِ فَلَأُبَشِّرَنَّهُ، قَالَ: فَغَدَوْتُ إِلَيْهِ لِأُبَشِّرَهُ، فَوَجَدْتُ أَبَا بَكْرٍ قَدْ سَبَقَنِي إِلَيْهِ فَبَشَّرَهُ، وَلا وَاللَّهِ مَا سَبَقْتُهُ إِلَى خَيْرٍ قَطُّ إِلَّا سَبَقَنِي إِلَيْهِ (مسند أحمد مخرجا- 175)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/