இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது (ரழி) அமர்வு 1-4 | Tamil Bayan - 431
இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு
ஜுமுஆ குத்பா தலைப்பு : இறைவேத அறிஞர் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு (அமர்வு 1-4)
வரிசை : 431
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 26-08-2016 | 23-11-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்து,அவனுடைய தூதரின் மீதும், தூதரின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும்ஸலாமும் கூறிய பிறகு, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை அஞ்சி வாழுமாறு, அல்லாஹ்வின் ene
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தனது கண்ணியமிக்க வேதத்தில் நபிமார்களைப் போற்றி புகழ்ந்து, நமக்கு முன்னோடிகளாக, வழிகாட்டிகளாக அவர்களை கூறுகிறான்.
அந்த நபிமார்களின் பாதையில் பயணித்த நல்லவர்களை உயர்வாக புகழ்ந்து கூறுகிறான். அவர்களைப் போன்று முஃமின்கள், முஸ்லிம்கள் வாழ வேண்டுமென்று ஆர்வமூட்டுகிறான்.
இப்படி, நபிமார்களைப் பற்றி பேசுவதும், நபித்தோழர்களைப் பற்றி பேசுவதும் ஈமானுடைய ஒரு பகுதி என்ற அடிப்படையில், சில ஜும்ஆக்களில் நபித்தோழர்களைப் பற்றி நாம் பேசி வருகிறோம்.
அதில், இன்று இன்ஷா அல்லாஹ் மிகவும் சிறப்பிற்குரிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக நெருக்கமான தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக! அவர்களையும் அல்லாஹ்வைக் கொண்டு பொருந்திக் கொண்டவர்களாக ஆக்குவானாக!
அன்பானவர்களே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு இவர்களும், மூத்த தலைமுறையில் சென்று பார்க்கும் பொழுது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கோத்திரத்தில் முழர் என்ற கோத்திரத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது இப்னு காஃபில் இப்னு ஹபீப் இப்னு ஷஃபஹ் இப்னு ஃபார் இப்னு மஹ்ஸூம் இப்னு ஸாபிலா இப்னு காஹில் இப்னு ஹாரிஸ் இப்னு தமீம் இப்னு ஸஅத் இப்னு ஹீதைல் இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிஸார்.
இந்த அடிப்படையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உறவாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
இவர்களுடைய உடல் தன்மையைப் பற்றி இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் சியரு அஃலாமின் நுபலாவில் பதிவு செய்கிறார்கள்.
இவர்கள் மிகவும் ஒல்லியாக, உயரம் குறைவானவர்களாக, கோதுமை நிறமுடையவர்களாக இருந்தார்கள்.
இவர்களுடைய குணத்தை, இவர்களுடைய அறிவைப் பற்றி கூறும்பொழுது இவர்களுடைய மாணவர்களில் இப்ராஹிம் கூறுகிறார்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் மிகவும் நுணுக்கமானவர்களாக, ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கத்தோடு ஆராய்பவர்களாகவும், மிகவும் நுண்ணறிவுடையவராகவும் இருந்தார்கள்.
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:நபித்தோழர்களில் அறிஞர்கள் என்று ஒரு கூட்டம் இருந்தார்கள். அந்த அறிஞர்களிலேயே மிகவும் நுண்ணறிவு படைத்த மதி நுட்பமுடைய நபித்தோழர்கள் என்று குறிப்பிட்டவர்கள் இருந்தார்கள்.
அந்த மதி நுட்பமிக்க, நுண்ணறிவு படைத்த கல்விமான்களில் ஒருவராக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கருதப்பட்டார்கள்.
அன்பானவர்களே! இவருடைய சிறப்புகளில் ஒன்று, இவர்களுக்கு திருமணமாகி, குழந்தை பிறப்பதற்கு முன்பே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களை குன்யாவை கொண்டு அழைத்தார்கள், அபூ அப்துர்ரஹ்மான் என்று.
ஒருவரை செல்லமாகவும், மரியாதையாகவும் அழைப்பதாக இருந்தால் அவருடைய குழந்தையை குறிப்பிட்டு அந்த குழந்தையின் தந்தை என்று அழைக்கப்படும்.
உதாரணமாக, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அபூ காஸிம் என்று அழைக்கப்படுகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் மீது கொண்டிருந்த பிரியத்தினால், அவரை இப்னு மஸ்ஊது என்று அழைப்பதற்கு பதிலாக அல்லது அப்துல்லாஹ் என்று அழைப்பதற்கு பதிலாக யா அபா அப்துர்ரஹ்மான் என்று செல்லமாகவும், பிரியமாகவும், மரியாதையாகவும் அழைத்தார்கள்.
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சுறுக்கமாக கூறும்பொழுது 'அல் இமாம்' -மிகப் பெரிய ஒரு முன்னோடி,'அல் ஹபுர்' -கல்வி கற்ற ஒரு பெரிய அறிஞர், 'ஃபகீஹுல் உம்மத்தி' -இந்த உம்மத்தின் சட்ட வல்லுநர் என்று கூறுகிறார்கள்.
மக்காவைச் சேர்ந்த நபித்தோழர், ஹிஜ்ரத் செய்த சிறப்பை பெற்றவர், பத்ரிலும் உஹதிலும் கலந்துக் கொண்டவர்.
எந்த நபித்தோழர்களைப் பற்றி அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறானோ அவர்களில் இவரும் ஒருவர்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் -இதுவே மகத்தான வெற்றியாகும்.(அல்குர்ஆன் 9:100)
இப்படி அல்லாஹ்வால் முந்திய முஹாஜிர்கள், முன்னோர்கள், முன்னோடிகள் என்று வர்ணிக்கப்பட்ட அந்த நபித்தோழரில் ஒருவராக இருக்கிறார். இவர் ஹபஷாவிற்கும் ஹிஜ்ரா சென்றார், பிறகு மதினாவிற்கும் ஹிஜ்ரா செய்து வந்தார்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு எல்லா போர்களிலும் கலந்துக் கொண்ட ஒரு முக்கியமான நபித்தோழராக இருக்கின்றார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கல்வியைப் பற்றி கூறுவதாக இருந்தால், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நபியிடமிருந்து நேரடியாக கல்வியைப் படித்த நபித்தோழர்கள் என்று கருதப்பட்டவர்கள்.
ரஸூலுல்லாஹ்வுடைய மரணத்திற்குப் பிறகு தங்களது கல்விப் பணியை நிறுத்திக் கொண்டார்களா? என்றால் இல்லை.
அவர்களில் ஒருவர் மற்றவரிடத்தில் சென்று, உங்களிடத்தில் ரஸூலுல்லாஹ்வுடைய கல்வி என்ன இருக்கிறது? என்று கல்வியின் தேட்டமுள்ளவர்களாகவும், தேடுதலுடையவர்களாகவும்,தன்னை விட மூத்தவரை தேடிச் சென்று அல்லது தன்னை விட வயது குறைவானவராக இருந்தாலும் அவரிடத்தில் அதிகமான கல்வி இருந்தால் தேடிச்சென்று,கல்வி கற்கும் பண்புடையவர்களாக நபித்தோழர்கள் இருந்தார்கள்.
இன்று,நமது நடைமுறையை போன்று அவர்களுடைய நடைமுறை இல்லை. அங்கே தேடப்பட்ட ஒன்று இருந்தது என்றால் அது இல்மு தான்.
நம்மிடத்தில் தேடப்படக்கூடியது ஒன்று இருக்கிறதென்றால் அது பொருளாதாரம், செல்வம் தான். அங்கே வாழ்நாள் வரை இல்மை தேடிக்கொண்டிருந்தார்கள். நாம் வாழ்நாள் வரை காசு, பணத்தை, செல்வத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்.
இமாம் அபூ யூசுஃப் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி வருகிறது. மரண தருவாயில் இருக்கிறார்கள். கண் விழிக்கிறார்கள், மூடுகிறார்கள், கண் விழிக்கிறார்கள், மூடுகிறார்கள்.
அப்போது அவர்களை சந்திப்பதற்காக இராக்கில் உள்ள நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் வருகிறார்கள். அப்போது ஒரு பெரிய ஃபகீஹ் வந்தவுடன், இன்னார் வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது, உடனே கண் விழிக்கிறார்கள்.
அந்த நேரத்தில் அந்த அறிஞரிடத்தில் உடனே மார்க்க சட்டமொன்றை குறித்து அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அறிஞரே! நான் ஹஜ்ஜிற்கு செல்லும்பொழுது, ஜம்ராத்தில் கல்லெறியும் பொழுது வாகனத்தில் சென்று கல் எறிவது சிறந்ததா? நடந்து சென்று கல்லெறிவது சிறந்ததா? என்று அவரிடத்தில் மார்க்க சட்டத்தைக் கேட்கிறார்.கேட்டு முடிக்கிறார்கள், அவர்களது மரணம் சம்பவிக்கிறது.
பார்க்க : அத்தபகாத் அஸ்ஸுன்னிய்யா.
இது நமது முன்னோறுடைய பண்பாக இருந்தது. மரண நேரத்தில் கூட இல்முடைய தேட்டம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
நீங்கள் ஒரு இல்மை தெரிந்தவர்களாக இந்த துன்யாவிலிருந்து சென்றால், அல்லாஹ்வுடைய நூரிலிருந்து ஒரு நூரை நீங்கள் பெற்றீர்கள். இல்ம் என்பது, குர்ஆன், ஹதீஸ் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு கொடுக்கப்பட்ட நூர் -ஒழி.
இந்த இல்ம் எந்தளவு உங்களிடம் மறுமையில் இருக்குமோ, அந்த அளவு உங்களை சுற்றி மறுமையில் நூர் இருக்கும். எந்தளவு உள்ளத்தில் அறியாமை, மடமை, முட்டாள்த்தனம், மார்க்கத்தைப் பற்றிய கல்வியின்மை இருக்குமோ, அந்தளவு மறுமையில் அந்த மனிதரை சுற்றி இருள் சூழ்ந்திருக்கும்.
அன்பானவர்களே! இல்ம் என்பதை ஒளி என்று அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ்வுடைய தூதர் கூறுகிறார்கள்.
எனவேதான், இந்த இல்முடைய தேட்டமுள்ளவர்களாகவே ஸஹாபாக்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கினார்கள்.
இன்று நமக்கு செல்வத்தின் தேவை இருப்பதை விட,அவர்களுக்கு செல்வத்தின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால், அவர்களுக்கு செல்வத்தின் மீதுள்ள நாட்டத்தை விட இல்மின் மீதுள்ள நாட்டம்தான் அதிகம்.
ஒரு தாபியீன் மதினாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு செல்கிறார். அங்கே நபித்தோழர் ஒருவர் இருக்கிறார், அவரிடம் ஒரே ஒரு ஹதீஸ் இருக்கிறது. அந்த ஹதீஸை ரஸூலுல்லாஹ்விடமிருந்து நேரடியாக கேட்ட ஸஹாபி ஒருவர் இருக்கிறார்.
அவர் ஷாமில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் இதற்காகவே மதினாவிலிருந்து பயணம் செய்து ஷாம் தேசம் சென்று, அந்த ஜாமியா மஸ்ஜிதில் அந்த ஸஹாபிக்கு ஸலாம் கூறி, இப்படி ஒரு ஹதீஸ் உங்களின் வாயிலிருந்து நேரடியாக கற்பதற்கு வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.
அறிவிப்பாளர் : கசீர் இப்னு கைஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 223, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
இன்று, நமது நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கல்வி தேடிக் கொடுக்கப்பட்டாலும் புறக்கணிப்பவர்களாக இருக்கிறோம். அழைத்து கொடுக்கப்பட்டாலும் ஒதுக்கிவிட்டு செல்லக்கூடிவர்களாக இருக்கிறோம்.
காசு, பணம் எங்கே கிடைத்தாலும் சரி, அதற்காக எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் சரி, குளிர் பிரதேசமா? அதையும் தாங்கிக் கொள்ள தயார், உணவே கிடைக்காத இடமா? அங்கேயும் செல்ல தயார்.
எவ்வளவு சிரமங்களை அழியக்கூடிய இந்த செல்வத்திற்காக நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், எந்த இல்ம் நம்மை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குமோ, அல்லாஹ்வுடைய அன்பிற்கு இழுத்துச் செல்லுமோ அந்த இல்மின் விஷயத்தில் எவ்வளவு பற்றற்றவர்களாக, அலட்சியம் செய்பவர்களாக இருக்கிறோம்! அல்லாஹ் மன்னிப்பானாக!
நபித்தோழர்களைப் பற்றி உங்களுக்கு கூறினேன். ரஸூலுல்லாஹ்வுடைய மரணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களது கல்வியின் தேடலை நிறுத்திக் கொண்டார்களா? என்றால், இல்லை. ஒரு ஸஹாபி இன்னொரு ஸஹாபியிடம் சென்று இல்மை தேடுபவர்களாக இருந்தார்கள்.
அந்த அடிப்படையில் ரஸூலுல்லாஹ்விடம் கல்வி படித்த பலர், தங்களை விட மூத்தவராக இருந்த, ரஸூலுல்லாஹ்விற்கு நெருக்கமானவராக இருந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடத்தில் சென்று அவர்கள் ரஸூலுல்லாஹ்விடமிருந்து படித்த கல்விகளை அவர்களுக்கு மாணவராக இருந்து படித்துகொண்டார்கள்.
அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், இம்ரான் இப்னு ஹுசைன், ஜாபிர், அனஸ், அபூ உமாமா இன்னும் பல ஸஹாபாக்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை தங்களுடைய ஆசிரியர்களாக ஏற்று முறையாக அவர்களிடத்தில் கல்வி படித்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸஹாபாக்களுடைய காலத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஒரு பெரிய ஆசிரியராக, ஒரு பெரிய கல்விமானாக கருதப்பட்டதால் அவரிடத்தில் சென்று, அந்த நபித்தோழர்கள் கல்வி படித்தார்கள்.
அது போக, தாபியீன்களுடைய பட்டியலில் இவர்களிடத்தில் கல்வி படித்தவர்கள் என்று பார்த்தால், ஆயிரக்கணக்கான தாபியீன்கள் இவரிடத்தில் கல்வி படித்திருக்கிறார்கள்.
இவர்களுடைய ஹதீஸ் புகாரிமுஸ்லிம் இரண்டு நூல்களிலும் அறுபத்தி நான்கு ஹதீஸ்கள் இடம்பெருகின்றன.
அதில் இருபத்தொரு ஹதீஸ்களை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் மட்டும் பதிவு செய்கிறார்கள். முப்பத்தைந்து ஹதீஸ்களை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.
அது போக, எண்ணூற்றி நாற்பது ஹதீஸ்கள் ஏனைய ஹதீஸ் நூல்களான அபூ தாவுது, இப்னு மாஜா, நஸயி, திர்மிதி போன்ற நூல்களில் பதிவாகியிருக்கின்றன.
நபித்தோழர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களை எப்படி மதித்தார்கள்? அவர்களுடைய உயர்வை எப்படி விளங்கினார்கள்? என்பதைக் குறித்து சில ஹதீஸ்களை பார்ப்போம்.
அபூ மஸ்ஊது அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது,
குறிப்பாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் இறந்த அன்று அவர்களைக் குறித்து வந்திருக்கின்ற சிறப்பைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது இறந்து விட்டார், அவரைப் போன்று ஒருவரை நம்மிடத்தில் அவர் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்க அப்போது கூறுகிறார்கள்:
சரி, இருக்கலாம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை நாம் குறைத்து மதிப்பிடமுடியுமா?
நாமெல்லாம் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டிற்குள் செல்ல தடுக்கப்படும். ஆனால், தடையே இல்லாமல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் நுழைவார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபையை விட்டு நம்முடைய வியாபாரத்திற்காக, தொழிலுக்காக, வேறு வேலைக்காக நாம் பிரிந்து சென்றிருக்கிறோம்.
ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ்வை விட்டு பிரியாமல் எப்போதும் அவர்களுடைய சபையில் இருப்பவராக இருந்தார்.
நூல் : முஸ்லிம், எண் : 2461.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மரண நேரத்தில் அவர்கள் பதட்டத்தில்இருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்த தாபியீன்கள் மற்றும் சிலர் கூறுகிறார்கள்.
அம்ர் இப்னுல் ஆஸ் அவர்களே! நீங்கள் இவ்வளவு பயப்படுகிறீர்களே! இவ்வளவு பதட்டப்படுகிறீர்களே! கவலைப்படுகிறீர்களே!
(அன்பானவர்களே! கவலைப்படக்கூடிய நேரம் தானே அது, மரண நேரம், ஸகராத்துடைய நேரம், இந்த உலகத்தை விட்டு பிரியக்கூடிய நேரம்.
மரண நேரம் நம்முடைய ஏடுகள் மூடப்படுகின்ற நேரம். நல்லவர் என்று வானவர் மூடுகின்றாரா? அல்லாஹ் அப்படியே ஆக்க வேண்டும். அல்லது தீயவர் என்று வானவர் மூடுகின்றாரா? நல்ல வார்த்தைகளைக் கொண்டு இறுதி மூச்சு விடைபெறுகின்றதா? அல்லாஹ் அப்படியே ஆக்க வேண்டும். அல்லது கெட்ட எண்ணங்களை கொண்டு, கெட்ட வார்த்தைகளை கொண்டு தீய சிந்தனைகளை கொண்டு அந்த இறுதி நிலை முடிகிறதா? அல்லாஹ் அறிந்தவன்.
இறுதி நிலையைக் குறித்து எல்லோரும் பயப்பட வேண்டும்.நல்ல முடிவை அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.)
அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு பயந்தார்கள், அப்போது வந்தவர்கள் கூறினார்கள். அம்ரு இப்னு ஆஸ் அவர்களே! நீங்கள் இவ்வளவு பயப்படுகிறீர்களே? நீங்கள் ரஸூலுல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தீர்களே? எத்தனையோ படைகளுக்கு உங்களை பொறுப்பாக்கினார்களே? உங்களுக்கு தலைமைத்துவம் கொடுத்தார்களே? நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
அப்போது அவர்களின் பதிலை பாருங்கள். இதுதான் நபித்தோழர்களுடைய உண்மையான நிலை.நம்மைப் போன்று வெளிப்படையை பார்த்து மயங்கிவிடக்கூடியவர்களோ, அல்லது அந்த புகழைப் பார்த்து தடுமாறிவிடக் கூடியவர்களோ அல்ல.
நம்மை பொறுத்தவரை, யாராவது நம்மை கொஞ்சம் புகழ்ந்துவிட்டால் போதும், அப்படியே அந்த புகழில் மிதக்க ஆரம்பித்து விடுவோம். நம்முடைய குறைகள் நம்முடைய கண்ணை விட்டு சென்றுவிடும்.
ஆனால், நபித்தோழர்கள் அப்படி அல்ல. அம்ரு இப்னு ஆஸ் கூறுகிறார்கள்: எனக்கு தெரியாதே! அல்லாஹ்வுடைய தூதர் உண்மையிலேயே என் மீது பிரியம் கொண்டு தான் இதை எனக்கு செய்தார்களா? அல்லது புதிய பலவீனமான முஸ்லிமாக நான் இருக்கிறேன். என்னை இஸ்லாமில் நெருக்கமாக்க வேண்டும் என்பதற்காக எனக்கு இந்த தகுதியை கொடுத்தார்களா? என்று எனக்கு தெரியாதே!
ஆனால், நான் இரண்டு நபித் தோழர்களைப் பற்றி அறிவேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறக்கின்ற வரை அந்த நபித்தோழர்களின் மீது அன்புடையவர்களாக இருந்தார்கள். ஒருவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது, இன்னொறுவர் அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு .
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 17781.
அன்பானவர்களே! இங்கே தன்னைப் பற்றி புகழப்படுகிறது. ஆனால், அம்ரு இப்னு ஆஸ், நான் அதற்கு தகுதியானவன் அல்ல. அதற்கு தகுதியான இருவரை அவர்கள் நினைவு கூறுகிறார்கள்.
இங்கே நபித்தோழர்களிடத்திலிருந்து இன்னொரு நற்பண்பையும் நாம் படிக்கின்றோம். இன்று, நமக்கு மத்தியில், பிறரைப் பற்றி புகழப்பட்டால் பலருக்கு உள்ளங்களெல்லாம் இறுக்கமாகி விடும். எனக்கு முன்னால் என்னுடைய உயர்வை கூறாமல், என்னுடைய புகழைக் கூறாமல், என்னுடைய கண்ணியத்தைக் கூறாமல் பிறரைப் பற்றி என்னிடத்தில் உயர்வாக பேசுகிறீர்களே?என்றுமுகம் சுழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இங்கே அம்ரு இப்னு ஆஸ் அவர்கள் மிஸ்ருடைய அமீராக இருக்கும் நிலையில் இறக்கின்றார்கள். அவர்களைப் பற்றி உயர்வாக கூறுகிறார்கள், உள்ளத் தன்மையை கூறுகிறார்கள், இல்லாததை கூறவில்லை.
இருந்தாலும் தன்னை எப்படி அவர்கள் பணிவுக்கு ஆளாக்குகிறார்கள். என்னை விட உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி கூறுங்கள், எனது நிலை என்னவென்று எனக்கு தெரியாது என்று கூறுகிறார்கள்.
இந்த இடத்தில், இமாம் அஹ்மதுடைய ரிவாயத்திலிருந்து நாம் தெறிந்துக் கொள்கிறோம். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரண நேரம் வரை, அவர்கள் இறக்கின்ற வரை, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ்விற்கு மிக விருப்பமான ஒரு ஸஹாபியாக இருந்தார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பை இமாம் இப்னு ஸஅத் ரஹிமஹுல்லாஹ்மற்றும் இமாம் அபூ நுஐம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
ஜைது இப்னு வஹப் அவர்கள் கூறுகிறார்கள் உமர் அல்ஃபாரூக் கலீஃபாக இருந்த பொழுது, அவர்களுடைய சபையில் அமர்ந்திருந்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு வந்தார்கள். வந்தவர்கள் சபையின் ஒழுக்கத்தின் படி இறுதியில் அமர்ந்து கொண்டார்கள்.
(இது சபையின் ஒரு ஒழுக்கம். நாம் எவ்வளவு தான் சிறப்பிற்குரியவர்களாக, கண்ணியத்திற்குரியவர்களாக, பதவியுடைவர்களாக இருந்தாலும் நாம் வரும்பொழுது சபை எங்கே முடிந்திருக்கிறதோ, அங்கே தான் அமர வேண்டுமே தவிர, நம்முடைய பதவியை காட்டுவதற்காக, நம்முடைய முன்னுரிமையை காட்டுவதற்காக, மக்களிடத்தில் நமக்கு இருக்கின்ற அந்தஸ்தை காட்டுவதற்காக மக்களை பிளந்து கொண்டு சென்று முன்னால் அமர்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல் அல்ல.மாறாக, சுன்னாவிற்கு மாற்றமான ஒரு செயல்.)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அந்த சுன்னாவின் அடிப்படையில், அங்கே அவர்கள் அமர்ந்துக் கொண்டார்கள். ஆனால், இவர்கள் உயரம் குறைவானவர்கள். முன்னால் உள்ள நபித்தோழர்கள் உயரமானவர்களாக அமர்ந்திருக்க, இவர்களை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்க்க முடியாமல் ஆகி விட்டது.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இதை பார்த்து சிரிக்கிறார்கள். சிரித்து விட்டு, அவரை தனக்கு அருகில் அழைத்து பேசுகிறார்கள். அவர்களிடத்தில் சிரித்துக் கொண்டு பேசுகிறார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சபையில் எழுந்து விட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது தன்னை பார்க்க முடியாமல் முன்னால் உயரமானவர்கள் இருக்கிறார்கள் என்று சிரமப்பட்டபோது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிற்காகவே இதற்கு முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த உமர் அவர்கள் நின்று பேசினார்கள். அதற்கு பிறகு சபை முடிகிறது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்ப செல்கிறார்கள்.
அவர்கள் திரும்ப செல்கின்ற வரை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு பிறகு தங்களது தோழர்களிடத்தில் கூறுகிறார்கள், இதோ செல்கிறாரே இவர் யார் தெரியுமா ?
கல்வியால் நிரப்பப்பட்ட பாத்திரம் என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நாவால் கூறப்படுகிறார்கள்.
பார்க்க : தாரீக் இப்னு ஸஅத் 3-156
இன்னொரு சம்பவத்தை பாருங்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதரை பார்க்கிறார்கள். அவர் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிந்திருக்கிறார். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய ஆடையை நீங்கள் கொஞ்சம் உயர்த்திக் கட்டுங்கள் என்று.
அப்போது அவர் கூறினார்:நீங்களும் உங்களுடைய ஆடையை உயர்த்துங்கள். பொதுவாக நபித்தோழர்கள் கெண்டைக்காலில் பாதி வரை ஆடை அணிந்திருப்பார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த கரண்டைக்கால் வரை ஆடை அணிந்திருப்பார்கள், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்களுடைய அந்த கெண்டைக்கால் மிகவும் ஒல்லியாக ஒரு குச்சியைப் போன்று இருக்கும்.
உடல் பருமனாக இருப்பார்கள், கால் ஒரு சின்ன குச்சியைப் போன்று இருக்கும். தொழவைக்கும் பொழுதும், பிறர் பார்க்கும் பொழுதும் அவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக தனது கீழ் ஆடையை கொஞ்சம் கீழே இறக்கி கட்டுவார்கள். ஆனால், கரண்டைக்கு மேல் தான் இருக்கும். அவர் அதை பார்த்து விட்டு நீங்களும் உங்கள் ஆடையை உயர்த்துங்கள் என்பதாக கூறுகிறார்.
இப்படி ஒரு மனிதர் இப்னு மஸ்ஊதுடன் நடந்து கொண்டார் என்று தெரிந்தவுடன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மனிதரை அழைத்து அடி கொடுத்து, இப்னு மஸ்ஊதுடைய கண்ணியம் தெரியாமல் அவரிடம் இப்படி நடந்துக் கொள்கிறாயா? என்று அவருக்கு ஒழுக்கம் கற்பித்து அனுப்புகிறார்கள்.
பார்க்க : சியரு அஃலாமின் நுபலா
இங்கே கவனியுங்கள்! எந்தளவு நபித்தோழர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை மதித்தவராகவும், அவருக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் இருந்த கண்ணியத்தைக் கொண்டு அதே அந்தஸ்தை, கண்ணியத்தை கொடுப்பவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் புரிந்து வருகிறோம்.
அன்பானவர்களே! இப்படியெல்லாம் சிறப்புகள் இருக்கிறது என்று சொன்னால், சிறப்புகளெல்லாம் கற்பனைகளைக் கொண்டு கிடைத்து விடாது.
இன்று, நாமும் சிறப்புகளை ஆசைப்படுகிறோம். உயர்வுகளை ஆசைப்படுகிறோம். வயிரார சாப்பிட்டு விட்டு, மெத்தைகளில் தூங்கிக் கொண்டு, வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டு சிறப்புகளை தேடுகிறோம்.
சிறப்புகள் அப்படி தேடப்படாது. இரவுகளில் விழித்திருப்பதைக் கொண்டும், பசித்திருப்பதை கொண்டும், அதற்கான உழைப்புகளை கொண்டும் தான் சிறப்புகள் தேடப்படும்.
இங்கே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்களை இப்படி நபித்தோழர்கள் சிறப்பித்தார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்யக்கூடிய ஒரு ஹதீஸை பாருங்கள். ரஸூலுல்லாஹ்விற்கு நெருக்கமான தோழர், யாரிடத்தில் நம்பிக்கையாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய இரகசியத்தை கூறினார்களோ, அந்த நபித்தோழர் ஹூதைஃபா ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
நபித்தோழர்களிலேயே ரஸூலுல்லாஹ்வுடைய அந்த வழிமுறைக்கு ஒப்பானவர்கள், ரஸூல்லாஹ்வின் குணத்திற்கு ஒப்பானவர்கள், ரஸூலுல்லாஹ்வுடைய தீர்ப்புக்கு, பழக்க வழக்கத்திற்கு ரஸுலுல்லாஹ்வுடைய பிரசங்கத்திற்கு ஒப்பானவர்கள்.
அதாவது, ரஸூலுல்லாஹ் எப்படி பழகுவார்களோ அப்படி பழகுபவர்கள். ரஸூலுல்லாஹ் எப்படி பேசுவார்களோ அப்படி பேசுபவர்கள். ரஸூலுல்லாஹ் எப்படி பிரசங்கம் தருவார்களோ அப்படி பிரசங்கம் செய்பவர்கள்.
இப்படிப்பட்ட ஒருவர் ரஸூலுல்லாஹ்வை நாங்கள் வெளியில் பார்க்கிறோம். வீட்டிலிருந்து அவர்கள் வெளியேறி திரும்ப வீட்டிற்கு செல்லும் வரை நாங்கள் ரஸூலுல்லாஹ்வை எப்படி பார்க்கிறோமோ, அதே அடிப்படையில் ரஸூலுல்லாஹ்வை போன்று உள்ள ஒருவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதாக தான் இருக்கும்.
அறிவிப்பாளர் : ஹூதைஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6097.
இதை நபித்தோழர்களும் அறிந்து வைத்திருந்தார்கள். அதுமட்டுமா, அல்லாஹ்விடத்தில் எப்போதும் இபாதத்தைக் கொண்டு நெருக்கம் தேடக்கூடியவர்கள் என்று யாரை அல்லாஹ் புகழ்ந்து கூறினானோ, அப்படி நெருக்கம் தேடக்கூடியவர்களில் ஒருவராக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது இருந்தார் என்று நபித்தோழர்கள் விளங்கி வைத்திருந்தார்கள்.
அன்பானவர்களே! இதிலிருந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ்வுடைய சுன்னாவை, ரஸூலுல்லாஹ்வுடைய போதனையை பின்பற்றுவதற்கு எந்தளவு சிரமம் எடுத்தார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்கிறோம்.
இன்று, நம்மைப் பொறுத்தவரை துன்யாவிற்கோ அல்லது நம்முடைய சுய தேவைகளுக்கோ, நம்முடைய பழக்க வழக்கங்களுக்கோ, நாம் எடுத்துக் கொள்கின்ற சிரமம் அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றுவதற்கு எடுத்துக் கொள்கிறோமா?
நமக்கு ஒரு தேவை என்றால் ஒரு ரூபாய் அல்ல, ஒரு ஜம்பது காசுடைய பொருள் நமக்கு தேவையென்றால் கூட அதை தேடி வாங்குகின்ற வரை எவ்வளவு சிரமம் எடுக்கிறோம்.
ஆனால், அல்லாஹ்வுடைய தீன் என்று வந்து விட்டால், எவ்வளவு அலட்சியம் செய்ய முடியுமோ, அந்தளவு அலட்சியம் செய்கிறோம்.
அன்பானவர்களே! நபித்தோழருடைய இந்த குணத்திலிருந்து நாம் என்ன அறிய வருகிறோம்? அவர்கள் ரஸூலுல்லாஹ்வுடைய சுன்னாவை அவர்களுடைய அந்த ஒழுக்கத்தை பேச்சில் கூட ஒரு பயான் செய்யும் பொழுது கூட ஒவ்வொரு விஷயத்திலும் ரஸூலுல்லாஹ்வுடைய அந்த ஒழுக்கத்தை தேடி தேடி பின்பற்றக்கூடிவர்களாக இருந்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்படி இஸ்லாமை ஏற்றார்கள்? அதுவே ஒரு அழகான சம்பவம். ரஸூலுல்லாஹ்வோடு அவர்களுக்கு ஏற்பட்ட அந்த முதல் சந்திப்பு, அவர்களுக்கு ரஸூலுல்லாஹ்வின் மீது ஏற்பட்ட அந்த முதல் பாசம். எப்படி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு மஸ்ஊதை கவர்ந்தார்கள்?இப்னு மஸ்ஊது எப்படி ரஸூலுல்லாஹ்வை கவர்ந்தார்கள்?
இமாம் அஹ்மது ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்டதற்கு பிறகு, அவர்கள் மக்காவில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
உக்பா இப்னு அபீ முஇத்துடைய ஆடுகளை மேய்ப்பவர்களாக இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூபக்ரும் அழைப்பு பணி செய்து கொண்டு பாலைவனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை பார்க்கிறார்கள்.
அப்போது ஒரு வாலிபர் கேட்கிறார்கள். வாலிபரே! உங்களிடத்தில் குடிப்பதற்குஏதாவது பால் இருக்கிறதா?
அவர்கள் கூறுகிறார்கள்: பால் இருக்கிறது. ஆனால், தரமாட்டேன். நான் ஒரு நம்பிக்கைக்குறியவன். எனது எஜமானனுடைய அனுமதியில்லாமல் கொடுக்கமாட்டேன்.
பயணிகள் அவர்கள் தேவைக்காக கேட்கிறார்கள். நபி என்று தெரியாது. அதாவது, ரஸூலுல்லாஹ்வை முஹம்மது என்று தெரியும். ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் என்று தெரியாது.
வாலிபர் பாலைவனத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். இங்கே பாருங்கள், நாணயத்தை பாருங்கள், ஒழுக்கத்தைப் பாருங்கள், நம்பிக்கையை பாருங்கள்.
தங்களை தன்னுடைய எஜமான் நம்பினார் என்றால், அந்த நம்பிக்கையின் ஆழத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள். இருக்கின்ற பாலை கொடுப்பதில் ஏதாவது குறைந்து விடுவார்களா? அரபுலகில் விருந்தோம்பல் என்பது சாதாரண ஒரு வழக்கம்.
இருந்தும் கூட அவர் என்ன கூறுகிறார், பால் இருக்கிறது, ஆனால் நான் நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறன், எப்படி கொடுப்பது என்று பயப்படுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்;சரி பரவாயில்லை, ஒரு பெண் ஆடு இருக்கிறதா? ஆண் ஆடோடு சேராத, கற்பமாகாத, இதுவரை குட்டி இடாத ஏதாவது ஒரு ஆடு இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் ஒரு ஆட்டை கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே குட்டிகளை ஈன்றெடுக்காத அந்த ஆடுகளோ, மாடுகளோ அதனுடைய மடி சிறியதாக இருக்கும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படி ஒரு ஆட்டை கொண்டு வந்தவுடன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஆட்டின் மடியை தடவுகிறார்கள்.
மடி கீழே தொங்குகிறது, பால் கறக்கிறார்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வயிறார குடிக்கிறார்கள். பிறகு அந்த மடியை பார்த்து, நீ ஏறிக் கொள் என்று கூறுகிறார்கள், அது ஏறிக் கொண்டது.
இதை பார்த்து விட்டு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள், இவர்கள் பெரிய ஒரு ஞானியாக இருப்பார்கள், பெரிய ஒரு இறை நேசராக இருப்பார்கள். யா ரஸூலுல்லாஹ்! எனக்கு நீங்கள் ஏதாவது கற்றுக் கொடுங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்யட்டும், நீ கல்வி கற்கப்படக்கூடிய, கல்வி கற்பதற்கு தகுதியான கல்வியுள்ள ஒரு வாலிபர் என்று வாழ்த்துகிறார்கள்.
நான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதே நேரத்தில் இஸ்லாமை ஏற்றேன், பிறகு அவர்களை சந்திக்க வந்தேன் என்று கூறுகிறார்கள்.
நூல் : அஹ்மத், எண் : 3598.
ஆரம்பத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவைப் பெற்று, இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒரு நபித்தோழர். இவர்களைப் பற்றி அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா குர்ஆனிலும் புகழ்ந்து கூறுகின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் முஷ்ரிக்குகள் வந்தார்கள். அப்போது ஆறு நபித்தோழர்கள் இருந்தார்கள், அதில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு.
இந்த ஆறு நபித்தோழர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதைப் போன்று ஆடு மேய்க்கக் கூடியவர்கள் இன்னும் சாதாரணமான ஏழைகள்.
அந்த முஷ்ரிக்குகள் வந்து கூறினார்கள், இவர்களையெல்லாம் நீங்கள் விரட்டி விடுங்கள். நாங்கள் உங்களிடத்தில் அமர்ந்து சில விஷயங்களை கேட்கப் போகிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உள்ளத்திலும் சில எண்ணம் வந்தது. சரி இப்போது இவர்களை இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி விடலாமா? என்று அவர்கள் எண்ணினார்கள்.
அந்த நேரத்தில் தான் சூரா அன்ஆமுடைய ஜம்பத்தி இரண்டாவது வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.
وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ
(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.(அல்குர்ஆன் 6 : 52)
நூல் : முஸ்லிம், எண் : 3598
இந்த சம்பவத்தை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். அதாவது, முஷ்ரிக்குகள் இந்த மாதிரி ஏழைகளோடு அமர்ந்து ரஸூலுல்லாஹ்விடத்தில் கல்வி படிப்பதை ஒரு மரியாதைக் குறைவாக கருதினார்கள்.
எனவே, இவர்களை அப்புறப்படுத்தினால் நாங்கள் அந்த சபையில் வந்து அமர்வோம் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொஞ்சம் எண்ணம் ஏற்பட்டது. எப்போதும் இவர்கள் படிக்கக் கூடியவர்கள் தானே, இந்த முஷ்ரிக்குகள் இப்போது படித்துக் கொண்டு இஸ்லாமை ஏற்றுக் கொண்டால், பிறகு அந்த மனக்கசப்புகளும், ஏழைகளை தாழ்வாக கருதுவதோ இந்த எண்ணங்களெல்லாம் சென்று விடுமென்று எண்ணினார்கள்.
ஆனால், அல்லாஹ்வுடைய திட்டமோவேறொன்றாக இருந்தது. இந்த இஸ்லாமிற்கு யார் வருகிறார்களோ, அவர்கள் பணிந்து தான் வரவேண்டும். யார் நபியுடைய சபைக்கு வருகிறார்களோ, அவர்கள் நபியையும், நபியோடு ஈமானை ஏற்றுக் கொண்டவர்களையும் ஏற்றுக் கொண்டு தான் வரவேண்டுமே தவிர, தங்களுக்கென்று ஒரு தனி இடம் வேண்டும்.
தங்களுக்கென்று ஒரு தன் அதிகாரம் வேண்டும், தங்களுக்கென்று ஒரு தனி மதிப்பு வேண்டும் என்று வந்தால் அப்படிப்பட்டவர்கள் இஸ்லாமிற்கு வர தேவையில்லை என்று அல்லாஹ் ஒதுக்கிவிட்டான்.
நீ முஸ்லிமாக மாறுகிறாய் என்றால், இஸ்லாத்திற்கு வருகிறாய் என்றால், பணிந்து வா! கட்டுப்பட்டு வா! உனக்கு முன்னால் இஸ்லாமை ஏற்றவர்களை சகோதர்களாய் ஏற்றுக் கொண்டு மதித்து வா.
உள்ளத்தில் பெருமை இல்லாமல், ஆனவம் இல்லாமல், அகம்பாவம் இல்லாமல், மமதை இல்லாமல், தற்பெருமை இல்லாமல் யார் வருவார்களோ, அவர்களை தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறான்.
அப்படி பெருமையோடு வந்தால், நீ இஸ்லாமிற்கே வர வேண்டிய அவசியமே இல்லை. நபியே! அப்படிப்பட்டவர்களுக்கு பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
அன்பானவர்களே! இந்த வசனம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சபையில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும், அவர்களைப் போன்று சில தோழர்களும் ஆறு பேர் இருந்த பொழுது இறங்கிய வசனம் என்றால், இந்த வசனத்தில் அல்லாஹ் தஆலா அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதையும், அவர்களுடன் இருந்த தோழர்களையும் புகழ்வதை பார்க்கிறோம்.
அவர்களுடைய ஈமானிற்கு அல்லாஹ் தஆலா சாட்சி கூறுவதை பார்க்கிறோம். அவர்களுடைய இஹ்லாஸிற்கு அல்லாஹ் தஆலா சாட்சி கூறுவதை பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட முஃமின்களில் ஒருவராக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாழ்ந்தார்கள். காலமெல்லாம் அந்த இல்முக்காக, ஈமானுக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்கள்.
அன்பானவர்களே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதைப் பற்றி கூறும்பொழுது கண்டிப்பாக குர்ஆனோடு அவர்களுக்கு இருந்த தொடர்பை, குர்ஆனோடு அவர்களுக்கு இருந்த அந்த உறவையும் நாம் கூறித்தான் ஆக வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது என்று எடுத்தால் குர்ஆனைக் கற்ற அறிஞர், குர்ஆனின் மேதை .
இவர் குர்ஆன் ஓதுவதைப் போன்று நீங்கள் குர்ஆன் ஓதுங்கள், குர்ஆனின் விளக்கத்தை இவரிடமிருந்து கேளுங்கள் என்று ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்த்துகளையும்தங்களது உம்மத்திற்கு அவர்கள் கூறிய கட்டளைகளையும் நாம் கேட்கிறோம். இன்ஷா அல்லாஹ், அடுத்த வாரத்தில் மேலும் பல விஷயங்களை தொடர்ந்து கேட்போம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களை எப்படி நேசித்தானோ, அல்லாஹ்வுடைய அந்த அன்பைக் கொண்டு அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களை நாமும் நேசிப்போம்.
அந்த தோழர்கள் எப்படி மார்க்கத்தை பின்பற்றினார்களோ, அதே அடிப்படையில் மார்க்கத்தை பின்பற்றக் கூடிய நன்மக்களில் ஆகுவோமாக! இதற்கு அல்லாஹ் தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ، أَتَيْتُكَ مِنَ الْمَدِينَةِ، مَدِينَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ: فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ؟ قَالَ: لَا، قَالَ: وَلَا جَاءَ بِكَ غَيْرُهُ؟ قَالَ: لَا، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ، وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ، وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا، إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ» (سنن ابن ماجه 223) [حكم الألباني] صحيح
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/