HOME      Khutba      இறைநேச செல்வர் இப்னு உமர் (ரழி) அமர்வு 2-2 | Tamil Bayan - 427   
 

இறைநேச செல்வர் இப்னு உமர் (ரழி) அமர்வு 2-2 | Tamil Bayan - 427

           

இறைநேச செல்வர் இப்னு உமர் (ரழி) அமர்வு 2-2 | Tamil Bayan - 427


இறைநேச செல்வர் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : இறைநேச செல்வர் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு(அமர்வு 2-2)

வரிசை : 427

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 12-08-2016 | 09-11-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அன்பானவர்களே!அல்லாஹுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிக நெருக்கமான, மிக பிரியத்திற்குரிய தோழர்களில் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் பார்த்து வருகிறோம். அவரைப் பற்றிய பல விஷயங்களை முந்திய அமர்வில் பார்த்தோம்.

அவர்கள் குறித்து அறிந்து, அவர்களிடமிருந்து பின்பற்ற வேண்டிய பல நல்ல விஷயங்களை இந்த அமர்வில் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சிறப்புகளை பற்றி அல்லாஹ் சூரா ஃபத்ஹில் குறிப்பிடுகின்றான்:

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

"அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து ஒப்பந்தம் செய்த முஃமின்களை அல்லாஹ் திட்டவட்டமாக பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் அவ்ர்களுக்கு வெகுமதியாக கொடுத்தான்". (அல்குர்ஆன் 48 : 18)

ஹுதைபிய்யா என்ற ஒப்பந்தம் பற்றி உங்களுக்கு தெரியும்.அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு தங்களுடைய தோழர்களோடு உம்ரா செய்வதற்காக புறப்பட்டபோது ஹுதைபிய்யா என்ற இடத்தில் அவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.

உம்ரா செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று குறைஷிகள் கூறியதால், ஏறக்குறைய ஆயிரத்தி நானூறு தோழர்களோடு சென்ற அல்லாஹுடைய தூதர் மக்காவிற்குள் நுழைய முடியாமல் ஹுதைபியாவில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது உஃஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பேசி வருவதற்காக மக்காவிற்கு அனுப்பிய போது, உஃஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்பி வருவதற்கு தாமதமாகி விடுகிறது. அப்போது உஃஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று ஒரு வதந்தி பரவி விடுகிறது.

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெரிய ஆயுதங்களை தங்களோடு எடுத்து வரவில்லை. ஒரு பயணி தற்காப்புக்காக என்ன ஆயுதத்தை வைத்திருப்பாரோ, அந்த ஆயுதங்களைதான் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வைத்திருந்தார்கள்.

நாங்கள் சண்டை செய்வதற்காக வரவில்லை, நாங்கள் அல்லாஹுடைய இல்லத்திற்கு வந்தோம், எங்களை விட்டு விடுங்கள், உம்ரா செய்து விட்டு நாங்கள் திரும்பி விடுவோம் என்று குறைஷிகளிடத்தில் எவ்வளவோ பேசிப்பார்க்கிறார்கள்.

ஆனால், குறைஷிகள் அதை கேட்பதற்கோ, அல்லது ஏற்றுக் கொள்வதற்கோ தயாராக இல்லை. இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தி பரவியதற்கு பிறகு,அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நம்மிடத்தில் ஆயுதம் இல்லையென்றாலும் சரி, நம்மில் இறுதியாக ஒருவர் எஞ்சியிருக்கின்ற வரை, இவர்களிடத்தில் போரிட்டே ஆகுவோம், உஸ்மானுக்காக பழிதீர்ப்போம் என்பதாக தங்களுடைய தோழர்களிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்.

நூல் : முஸ்லிம், எண் : 1807.

உங்களில் யார் இறுதி மூச்சு வரை போரிடுவதற்கு தயார் என்று கேட்டபோது, அங்கிருந்த ஆயிரத்து நானூறு தோழர்களும் அல்லாஹுடைய தூதருடைய கரத்தை பிடித்து, அல்லாஹுடைய தூதரே! மவுத் வரை நான் போரிடுவேன், உங்களை பிரியமாட்டேன் என்று பைஅத் செய்து கொடுத்தார்கள்.

ஒரு மரத்தடியில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அல்லாஹுத்தஆலா சூரா ஃபத்ஹில் அந்த ஆயிரத்து நானூறு தோழர்களைப் பற்றி விசேஷமாக அவர்களின் சிறப்பை பற்றி புகழ்ந்து இறக்கினான். அந்த தோழர்களில் அப்துல்லாஹ் இப்னு உமரும் ஒருவர்.

நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 2/315.

எப்படி இஸ்லாமிய மார்க்கத்தில், பத்ர் யுத்ததில் கலந்து கொண்டவர்களுக்கு தனி சிறப்போ, உஹது போரில் கலந்து கொண்டவர்களுக்கென்று தனி சிறப்போ, அதற்கு அடுத்ததாக முஹாஜிர்களிலும், அன்சாரிகளிலும் யார் இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்களோஅவர்களுக்கு மிகப்பெரிய ஒரு தனி சிறப்பு இருக்கிறது.

ஆகவேதான், இந்த ஒப்பந்தத்தை 'பைஅதுர் ரிழ்வான்' என்று சொல்லப்படுகிறது. அதாவது, அல்லாஹ்வின் பொருத்தத்திற்குறிய ஒப்பந்தம் என்றழைக்கப்படும்.

நூல் : புகாரி, எண் : 3698, 4066, 4150, 4163.

அதாவது, யார் இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்களோ, திட்டமாக அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொண்டான்.

இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48 : 18)

சஹாபாக்களை பொருத்த வரை,அவர்களுடைய அமல்களைப் பற்றி மட்டும் அல்லாஹ் பேசவில்லை. எங்கே அவர்களது அமல்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறானோ, அதே இடத்தில் எந்த நிய்யத்தில் அவர்கள் அதை செய்தார்கள்?என்பதையும் அல்லாஹ் நமக்கு உணர்த்துகின்றான்.

நிய்யத்தைப் பற்றி அல்லாஹ் நமக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால்,ஒருவர் என்ன எண்னத்தில் செய்கிறார்?என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான்.

அல்லாஹு தஆலா நம் உள்ளத்தில் மறைப்பதை அறிந்திருக்கிறான், வெளிப்படுத்துவதை அறிந்திருக்கிறான். அப்படிப்பட்ட ரப்புல் ஆலமீன் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும்,அல்லாஹ் சஹாபாக்களை பற்றி வருகின்ற இடங்களில் அந்த கண்ணியத்திற்குரிய சஹாபக்களின் உள்ளங்களில் என்ன இருந்தது?என்பதை அல்லாஹ் வெளிப்படுத்தி உயர்வாக சொல்கிறான் என்றால், இங்கே நமக்கு அல்லாஹ் படம் கற்பிக்க விரும்புகின்றான்.

அந்த நபித்தோழர்கள் துன்யாவை விரும்பவில்லை. அவர்கள் இந்த துன்யாவிற்கு வேண்டி எந்த ஒரு காரியத்தையும் செய்யவில்லை. அவர்கள் செய்த தியாகங்களின் பின்னனி எல்லாம் சொர்க்கத்தை தேடுதல், அல்லாஹ்வின் விருப்பத்தை தேடுதல் என்ற ஒரே லட்சியத்தை தவிர வேறு இல்லை.

இதை நமக்கு உணர்த்தி நாமும் அந்த இக்லாஸோடு பயணிக்க வேண்டும், நாமும் அல்லாஹுக்காக அல்லாஹுடைய மார்க்கத்திற்காக ஒரு காரியத்தை செய்தால், அவர்களுக்கு அல்லாஹ் எந்த கூலியை கொடுத்தானோ அதே கூலியை நமக்கும் கொடுக்கப் போதுமானவன்.

எனவேதான், சஹாபாக்களைப் பற்றியும் அவர்களுடைய தியாகங்களைப் பற்றியும் அவர்களுடைய அமல்களைப் பற்றியும் பேசுகின்ற எல்லா இடங்களிலும் அல்லாஹு தஆலா அவர்களின் நிய்யத்துகளைப் பற்றி பேசுகிறான். (அல்குர்ஆன் 48:18)

அல்லாஹு தஆலா சஹாபாக்களுடைய உள்ளங்களில் தடுமாறாத ஈமானை பார்த்தான். உலக லாபங்கள் கலக்காத இக்லாஸை அல்லாஹ் பார்த்தான். எல்லா நிலைகளிலும் அல்லாஹுவை பயப்படக்கூடிய தக்வாவை பார்த்தான்.

அல்லாஹுக்காக எதையும் இழக்க தயாராகக்கூடிய, அர்ப்பணிக்ககூடிய தியாக உள்ளத்தை அல்லாஹ் பார்த்தான். அல்லாஹ் அதற்கு கூலியாக சொல்கிறான். (அல்குர்ஆன் 48:18)

அன்பானவர்களே! 'பைஅதுர் ரிழ்வானில்' கலந்து கொண்டவர்கள்தான் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு உடைய மகனார், அபூ சலமா சொல்கின்றார்கள்:

நூல் : சியரு அஃலாமின் நுபலா : 4/308.

இப்னு உமர் மரணிக்கும்போது தனது தந்தையைப் போன்ற சிறப்பை அவர் பெற்றிருந்தார். தனது தந்தையிடம் என்ன ஈமான், என்ன தக்வா, அல்லாஹ்வின் விஷயத்தில் என்ன பிடிப்பிருந்ததோ அந்த நிலையை அவர் எட்டியிருந்தார்.

இப்னு அபீ முலைலா என்ற ஒரு பெரிய தாபியீ, அவர்களது சக தாபியீக்கள் எல்லாம் ஒன்று சேரும்போது அபுசலமா இப்னு அப்துர் ரஹ்மான் கேட்கின்றார்:

நூல் : சியரு அஃலாமின் நுபலா : 4/308.

உங்களது பார்வையில் உமர் ரழியல்லாஹு அன்ஹு சிறந்தவரா? அல்லது அவரது மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சிறந்தவரா? என்று.

அப்போது தாபியின்கள் சொல்கிறார்கள்;கண்டிப்பாக உமர்தான் சிறந்தவர்.

அப்போது அவர்கள் சொல்கிறார்கள்; உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு இருந்த காலத்தில் அவர்களைப் போன்று பலர் அங்கே இருந்தார்கள். ஆனால், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு காலத்தில் அவர்களுக்கு நிகராக வேறு யாரும் இல்லை.

ஏனென்றால், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு அறுபது ஆண்டுகள் இவர்கள் வாழ்கிறார்கள். பல சஹாபாக்கள் அப்போது உயிரோடு இல்லை.

நூல் : சியரு அஃலாமின் நுபலா : 4/308.

இன்னொரு சம்பவத்தை கவனியுங்கள்;அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பிறகு முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, பிறகு யஜீத், பிறகு மர்வான்.

பிறகு அப்துல் மலிக் இப்னு மர்வான் என்ற ஒரு மன்னருடைய காலத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்துல் மலிக் இப்னு மர்வானுடைய 'உம்முல் வலத்' -பிள்ளையின் அடிமைத்தாய், தன்னுடைய கணவனிடம் தனது பணிவிடைக்காக ஒரு அடிமையை கேட்கிறார்கள். அந்த அடிமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்குறிய நிபந்தனைகளையும் சொல்கிறார்கள். அந்த நிபந்தனைகள் மூலம் அந்த பெண்ணுடைய மார்க்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

நிபந்தனைகளாவது, ரஸூலுடைய சுன்னாவை கற்றரிந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து தெரிவது அடிமையை கேட்டது பணிவிடைக்காக அல்ல, அவரிடமிருந்து கல்வியை கற்பதற்காக.

அடுத்ததாக, அல்லாஹுடைய வேதத்தை மனனம் செய்து, அதை அழகிய முறையில் ஓதக்கூடிய காரியாக இருக்க வேண்டும். அரபி மொழியை தெளிவாக பேசுபவராக இருக்க வேண்டும். கற்பொழுக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அதிகம் நாணம் உள்ளவராக இருக்கவேண்டும். குறைவாக பேசுபவராக, தர்க்க விவாதங்கள் குறைவாக செய்பவராக இருக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை கூறினார்.

அதற்கு மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வான், நீ கேட்ட தன்மைகள் உடைய அடிமை இருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். என் பார்வையில் அப்துல்லாஹ் இப்னு உமரை தவிர வேறு யாரும் இல்லை.

நான் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களின் குடும்பத்தாரிடம், என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன், அப்துல்லாஹ் இப்னு உமரை எனக்கு தாருங்கள் என்றதற்க்கு அவருடைய மனைவியர் மறுத்து விட்டனர் என்று பதிலளித்தார்.

அன்பிற்குரியவர்களே!அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி அவருடைய காலத்தில் வாழ்ந்த சஹாபாக்களும் தாபியீன்களும் சொன்னதை பார்க்கிறோம். அவர்களுடைய மாணவர்களில் மிக முக்கியமானவர் சயீது இப்னு முசய்யிப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்:

"சொர்க்கவாசி என்று ஒருவருக்கு நான் சாட்சி சொல்வதாக இருந்தால், அப்படி எனக்கு ஒரு ஆற்றல் இருந்தால், நான் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இந்த சாட்சியை சொல்லிருப்பேன்.

நூல் : சியரு அஃலாமின் நுபலா : 4/308.

அன்பிற்குரியவர்களே! அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இப்படிப்பட்ட சிறப்புகளை அல்லாஹ் கொடுத்தான்.

அந்த காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள், தாபியீன்களுடைய நற்புகழ்ச்சிகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான் என்றால், அப்படி அவர்களிடத்தில் என்ன தன்மைகள் இருந்தன?

உதாரனமாக, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது நேசம். இது அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எப்போது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்து வந்தார்களோ அப்போதிலிருந்தே அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிரியாத ஒரு தோழராக இருந்தார்கள்.

மக்காவுடைய காலத்தை பொருத்தவரை, யாரும் வெளிப்படையாக சபைகளில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருகில் செல்ல முடியாது.

ஒருவர், ரஸூலுல்லாஹ்வை நம்பிக்கை கொண்டது தெரிந்தால் மக்கத்து காஃபிர்கள் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

ரஸூலுல்லாஹ்வை சந்திப்பதாக இருந்தால் தனிமையில்தான் சந்திக்க வேண்டும். அப்படிப்பட ஒரு நிலை மக்காவிலிருந்தது.

ஆனால், மதீனா வந்தவுடன் அந்த நிலை இல்லை. யார் வேண்டுமானாலும், எங்கேஎப்போது வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர்களை சந்திக்கலாம் என்ற நிலை வந்தது.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஐந்து நேரத் தொழுகைளுடைய நேரம் போக, மற்ற நேரங்களில் மஸ்ஜித் நபவியில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை கற்கக்கூடிய ஒரு சஹாபியாக திகழ்ந்தார்கள்.

பத்ர் போருடைய நேரத்தில் இவர்களுக்கு பன்னிரண்டு பதிமூன்று வயது உடையவராக இருந்தாலும், தானும் அந்த போரில் கலந்து கொள்ள வேண்டும் என்று வந்தபோது, திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

பிறகு, உஹது போர் நடக்கும்போதும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பிறகு அஹ்ஸாப் போரில்தான் இவர் பங்கு பெறுவதர்க்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அன்பானவர்களே!இப்படி ரஸூலுடைய எல்லா பயணங்களிலும், ஹஜ்ஜத்துல் விதா, ஹுதைபியா ஒப்பந்தம், பிறகு உம்ராவுடைய பயணம், ஹுனைன் யுத்தம், தபூக் யுத்தம் என எல்லா போர்களிலும் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பிரியாமல் இருந்தார்கள்.

இது போக பல சிறிய குழுக்களிலும் இவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

ரஸூலுடைய வாழ்நாளெல்லாம் அவர்களின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரஸூலுடைய பிரிவு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு தோழருக்கு ரஸுலுல்லாஹுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய நினைவுகளைப் பற்றி மாணவர்களில் ஒருவர் கூறுகிறார்:

ஒரு ஹதீஸை ஆரம்பிக்கும் போது, அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,என்ற வார்த்தையை கேட்ட உடனே அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அழ ஆரம்பித்து விடுவார்கள்.

அவர்களால் அழுகையை அடக்க முடியாத அளவுக்கு அல்லாஹ்வுடைய தூதரின் மீது பிரியம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.

நூல் : சியரு அஃலாமின் நுபலா : 4/308.

அன்பானவர்களே!இந்த பிரியம் என்பது வெறும் வார்த்தைகளில் இல்லாமல் உள்ளத்தின் ஆழத்தில் செயல் வடிவில் அவர்களின் வாழ்க்கையில் இருந்தது.

இப்னு மாஜா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரண்டு ஹதீஸ்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

«إِذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ يَعْدُهُ، وَلَمْ يُقَصِّرْ دُونَهُ»

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை அறிந்துவிட்டால் அதை மீறி ஒன்றையும் செய்யமாட்டார்கள். அதில் சொல்லப்பட்ட விஷயங்களில் எதையுமே குறைக்க மாட்டார், எப்படி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களோ அதை அப்படியே எந்த விதமான கூடுதல் குறைவும் இல்லாமல் உடனே அதை செயல்படுத்துவர்களாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு இருந்தார்கள் என்ற அவர்களுடைய இந்த விஷயத்தை, சுன்னாவை பின்பற்றுவது என்ற பாடத்தில் இமாம் இப்னு மாஜா பதிவு செய்திருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஜஅஃபர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 4, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இங்கு, நாம் ஒரு விஷயத்தை புரியவேண்டும். இன்று, ஒரு ஹதீஸ் சொல்லப்பட்டால் நாம் அதை உடனே அமல்படுத்துவது என்ற நமது நிலை மாறி, இந்த ஹதீஸ் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டிருக்கும்?என்னைப் போன்றவருக்கா?அல்லது எந்த நிய்யத்தில் இந்த ஹதீஸ் சொல்லப்பட்டிருக்கும்?அல்லது வேறு ஏதாவது விளக்கமிருக்கிறதா?கண்டிப்பாக இதை செயல்படுத்த வேண்டுமா?அல்லது ஆர்வமூட்ட சொல்லப்பட்டதா? என்று பல தர்க்க வாதங்களை செய்து ஒரு ஹதீஸை புறம் தள்ள நம்மில் பலர் முயற்சி செய்கிறார்களே தவிர, ஹதீஸ் என்று வந்துவிட்டால் மனமுவந்து எந்த அதிருப்தியுமில்லாமல் ஏற்று செயல்படுவதற்கு முன்வருவதில்லை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மக்களுக்கு நஸீஹத் செய்யும்போது சொன்னார்கள்:

«لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ أَنْ يُصَلِّينَ فِي الْمَسْجِدِ» فَقَالَ ابْنٌ لَهُ: إِنَّا لَنَمْنَعُهُنَّ، فَقَالَ: فَغَضِبَ غَضَبًا شَدِيدًا، وَقَالَ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وتقولُ: إِنَّا لَنَمْنَعُهُنَّ؟

மஸ்ஜிதில் முஃமினான பெண்கள் தொழுவதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற ஹதீஸை சொல்ல, அவர்களுடைய மகனாரில் ஒருவர், இல்லை நாங்கள் தடுப்போம் என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மிக கடுமையாக கோபப்பட்டார்கள். பிறகு சொன்னார்கள்: நான் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் என்று சொல்ல, நீ அவர்களை தடுப்பேன் என்று சொல்கிறாயா?என்று கோபத்துடன் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 16, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

நாம் பெற வேண்டிய படிப்பினை என்னவென்றால், நமது பிள்ளைகளிடத்தில், குடும்பத்தார்களிடத்தில் நமக்காக கோபப்படுகிறோம், நம்முடைய விருப்பு வெருப்புக்காக கோபப்படுகிறோம்.

ஆனால், நமது குடும்பத்தார்களோ அல்லாஹுடைய கட்டளையை மீறுகிறார்கள், ரஸுலுடைய சுன்னாவை மீறுகிறார்கள், மார்க்கத்தை புறம் தள்ளுகிறார்கள்.

ஆனால், நமக்கு எந்த கோபமும் வருவதில்லை, அவர்கள் மீது நமது வெறுப்பை காட்டுவதில்லை, அவர்களது செயலை கண்டிப்பதில்லை.

இங்கேதான் நாமும் சஹாபாக்களும் வித்தியாசப்படுகிறோம். அவர்கள் அல்லாஹுக்காக கோபப்பட்டார்கள், மார்க்கத்துக்காக கோபப்பட்டார்கள். நாமோ நமது நஃப்ஸுக்காக கோபப்படுகிறோம்.

நம்முடைய தாயார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்:

அல்அம்ருல் அவ்வலை மிக உறுதியாக பின்பற்றக்கூடியவர், இப்னு உமரை விட ஒருவரை நான் பார்த்ததில்லை என்று.

நூல் : சியரு அஃலாமின் நுபலா, எண் : 4/307.

அல்அம்ருல் அவ்வல்என்றால், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி மார்க்கத்தை கற்றுக் கொடுத்தார்களோ, எந்த நிலையில் மார்க்கத்தை விட்டு மரணித்தார்களோ அதற்கு சொல்லப்படும்.

ஆம், அன்பானவர்களே!உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சில காரணங்களுக்காக 'ஹஜ்ஜு தமத்துஃ' செய்வதை தடுத்தார்கள்.

ஒரே பயணத்தில் உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித்தனியாக செய்துவிட்டு பிறகு அல்லாஹுடைய இல்லத்திற்கு தொடர்ச்சியாக யாத்ரீகர்கள் உம்ரா செய்யாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக தங்களுடைய ஆட்சி காலத்தில் தடுத்தார்கள்.

ஆனால், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது தந்தை இறந்த பிறகு 'ஹஜ்ஜு தமத்து' செய்தார்கள்.

அப்போது அவரிடம் கேட்கப்படுகிறது, உங்களது தந்தை இதை தடுத்துக் கொண்டிருந்தாரே?என்று.

என் தந்தை தடுத்தாலென்ன?அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதை சொல்லி நான் கேட்டோனோ, எந்த ஹஜ்ஜை விரும்பியதை நான் செவிமடுத்தேனோ அதை ஒரு காலமும் யாருக்காவும் நான் விட தயாரில்லை என்று கூறினார்கள். (1)

அறிவிப்பாளர் : அபூநள்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1217.

இப்படிப்பட்ட ஈமானியப் பிடிப்பு, ரஸூலுடைய சுன்னாவின் பிடிப்பு அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தது.

இமாம் அபு ஜஅஃபர் ரஹிமஹுல்லாஹ் என்ற மிகப்பெரிய தாபியீ சொல்கிறார்கள்,

ரஸுல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு கேட்டால், அதில் கூட்டவும் மாட்டார், குறைக்கவும் மாட்டார். இந்த விஷயத்தில் இவரைப்போல் வேறுரொருவர் இருந்ததில்லை.

நூல் : சியரு அஃலாமின் நுபலா, எண் : 4/308.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

ரஸுலுடைய சுன்னத்துகளை, பழக்க வழக்கங்களை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு தேடித்தேடிச் செய்பவராக, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தார் என்று.

நூல் : சியரு அஃலாமின் நுபலா, எண் : 4/309.

இப்னு உமருடைய இந்த செயலை பார்ப்பவர்கள் சொன்னார்கள், இந்த தேடுதல், இந்த ஈடுபாடு அவருடைய அறிவில் ஏதாவது மாற்றத்தை உண்டு பண்ணிடுமோ, அல்லது மனப்பிரச்சினைக்கு கொண்டு போய் விடுமோ என்று பயப்படக்கூடிய அளவிற்கு இருந்தது.

இதே விஷயத்தை அவர்களுடைய மாணவர்களில் ஒருவர் சொல்கிறார், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, ரஸுலுடைய சுன்னத்துகளை தேடித்தேடி செய்வதை நீங்கள் பார்த்தீர்களென்றால், அவரைப் பார்த்து ஒரு பைத்தியம் என்றே சொல்லி விடுவீர்கள்.

உதாரணமாக, இமாம் நாஃபியீ சொல்கிறார்கள், அல்லாஹுடைய தூதரின் காலத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுடைய வாசல்களில் ஒரு வாசலை சுட்டிக்காட்டி, இந்த வாசலை பெண்களுக்கென்று வைத்து விட்டால் நன்றாக இருக்கும். அதில் பெண்கள் வந்து போவதற்கு என்று சொன்னார்கள்.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹுடைய வாழ்நாள் மட்டுமல்ல, அவர்களுக்கு பின்னரும் ஒரு முறை கூட அந்த வாசல் வழியாக பெண்கள் இல்லாத நேரத்திலும், உள்ளே வந்ததுமில்லை, வெளியே சென்றதுமில்லை.

இந்தளவுக்கு ரஸூலுல்லாஹுடைய வார்த்தைக்கு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு கட்டுப்பட்டார்கள். நாமாகயிருந்தால் பெண்கள் வந்தால்தானே இந்த வாசலை ஆண்கள் பயன்படுத்த வேண்டாம் என்றிருப்பார்கள், மற்ற நேரம் பயன்படுத்தலாம் என்று நினைத்திருப்போம்.

அன்பானவர்களே!அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உலக பற்றற்ற தண்மை, எந்த அளவு துன்யாவில் ஈடுபாடு இல்லாமல், உலக செல்வ மோகமில்லாமல், இதனுடைய ஆட்சி அதிகாரங்களில் எந்த அள்வு நாட்டமில்லாமல் இருந்தார்கள் என்பதை பற்றி குறிப்பிடும்போது, அவர்களுடைய மாணவர்களில் ஒருவர் சொல்கிறார்:

நான் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வீட்டிற்கு சென்றேன், அவர்களுடைய வீட்டிலுள்ள பொருள்களை சுற்றிப் பார்த்தேன். மொத்த பொருள்களுக்கு ஒரு பெரிய மதிப்பு கொடுப்பதாக இருந்தால், நூறு திர்ஹத்திற்கு மேலாக அவற்றின் மதிப்பு இருக்காது.

அவர் எவ்வளவு கொடை கொடுத்தார்கள், எவ்வளவு தர்மம் செய்தார்கள், ஆனால் அந்த செல்வங்களை தனக்கென்று பயன்படுத்தவில்லை, அதை வைத்து ஆடம்பர வாழ்க்கையை தேடவில்லை.

நூல் : சியரு அஃலாமின் நுபலா, எண் : 4/308.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வணக்க வழிபாடு, இறையச்சத்தை பற்றிப் பார்ப்போம்.

அவர்களை விட வயது குறைவான, கல்வியில் இளைய ஒரு சஹாபி, உபைது இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு. இவர் நன்கு பிரசங்கம் செய்யக்கூடிவர், மக்களுக்கு அறிவுரை சொல்பவராக இருந்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு இவரை விட மூத்தவராக இருந்தும், இவருடைய சபைகளில் அமர்ந்து, இவர் சொல்லக்கூடிய உபதேசங்களை கேட்டு, அழக்கூடிய பழக்கம் உள்ளவராக இருந்தார்கள்.

உபைது இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு உடைய மகனார் சொல்கிறார்:

நூல் : சியரு அஃலாமின் நுபலா, எண் : 4/308.

எனது தந்தை பயான் செய்யும்போது, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நான் பார்ப்பேன், அவர்கள் அழுது கொண்டிருப்பார்கள்.

ஒரு முறை அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உபைது இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு உடைய பயானில் அமர்ந்திருந்தார்கள்.

முன்னர், சூரா அன்னிஸா 4:41, வசனத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு ஓதிக்கொண்டிருக்க ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழுதார்கள்.

فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا

"நபியே! ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டுவந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்?" (அல்குர்ஆன் 4:41)

ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இப்னு மஸ்ஊதே, போதும் போதும்என்று சொன்னார்கள்.

இப்னு மஸ்ஊத் அவர்கள் திரும்பி பார்த்தால், ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடிக்கொண்டிருக்கிறது. (2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4582.

உபைது இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு நசீஹத் செய்யும்போது, அதே வசனத்தை ஓதுகின்றார். அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழ ஆரம்பிக்கிறார்.

அவருடைய தாடியும், சட்டையின் முன்பக்கமும் நனைந்து விட்டது. அங்கிருந்த ஒருவர், பயான் செய்து கொண்டிருந்த உபைது இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹுவை பார்த்து சொன்னார்: நமது இமாம் அழுகிறார்கள், நாம் அவரை தொந்தரவு செய்துவிட்டோமோ, போதும் நிறுத்துங்கள் என்று.

இதுபோக குர்ஆனுடைய குறிப்பிட்ட சில வசனங்களை நபித்தோழர்கள் ஓதும்போது அதிகம் அழக்கூடியவர்களாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு இருந்தார்கள்.

أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ

"நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்ளைப் போல், இவர்களும் ஆகிவிடவேண்டாம் (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு காலம், அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகி விட்டன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்". (அல்குர்ஆன் 57:16)

இந்த வசனத்தை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதினால், அழுது கொண்டே இருப்பார்கள், அழுது அழுது அவர்களுக்கு மயக்கமே வந்து விடும்.

அன்பானவர்களே!ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவிற்கு வெளியே செல்கிறார்கள். அவர்களோடு அவர்களது மாணவர்களும் இருக்கிறார்கள். அங்கே ஒரு ஆடு மேய்க்கக் கூடிய இடையனைப் பார்க்கிறார்கள்.

அப்போது இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு கேட்கிறார்கள், ஆட்டினுடைய மேய்ப்பாளர் நீங்கள்தானா? என்று.

ஆம்என்று அந்த இடையன் சொல்கிறார். நீங்கள் இந்த ஆட்டை விற்கலாமல்லவா?என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த இடையன், இந்த ஆட்டின் உரிமையாளன் நான் அல்ல, மேய்ப்பாளன் மட்டும்தான்என்று கூறுகிறார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அந்த இடையனை சோதிப்பதற்காக ஒரு ஆடுதானே, அதை ஓநாய் தின்றுவிட்டது என்று நீ சொல்லலாமே? என்று சொன்னார்கள்.

அதற்கு அந்த இடையன், அல்லாஹ் எங்கே போய்விட்டான்என்று பதிலளித்தான்.

இந்த வார்த்தையை ஒரு ஆடு மேய்க்கக்கூடிய ஒரு அடிமையிடம் இருந்து கேட்டவர், இந்த இடையனுக்கு இவ்வளவு இறையச்சமா?என்றுதொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து தனது அழுகை நின்றவுடன், அந்த அடிமையை அழைத்து உன்னுடைய எஜமானர் யார்? எங்கே இருக்கிறார்?என்று விசாரிக்கிறார்கள்.

பிறகு,அந்த அடிமையின் உரிமையாளரை சந்தித்து,அந்த அடிமையை விலைக்கு வாங்குகிறார்கள். அந்த அடிமையை மட்டுமல்ல,அந்த ஆடுகளையும் விலைக்கு வாங்குகிறார்கள்.

பிறகு,அந்த அடிமையை அழைத்து,உன்னை நான் விடுதலை செய்கிறேன், இந்த ஆடுகளையும் உனக்கு அன்பளிப்பாக தருகிறேன்என்று சொன்னார்கள்.

(சியரு அஃலாமின் நுபலா : 4/310)

இங்கு இன்னொரு விஷயத்தை புரிய வேண்டும். அந்த இடையனின் இறையச்சம், அவனுடைய நாவிலிருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தை வெளிப்பட்டதை கேட்டு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட அல்லாஹுடைய பயம்.

பிறகு,அந்த அடிமையின் மீது அவர்கள் காட்டிய இரக்கம்.

இங்கே அல்லாஹுடைய வசனம் நமக்கு நினைவுக்கு வருகிறது.

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

"எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவர்களுடைய எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு தீர்வை ஏற்படுத்துவான். அவர்கள் அறியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவான்".(அல்குர்ஆன் 65 : 2-3)

பாலைவனத்தில் ஆடு மேய்க்கக்கூடிய ஒரு அடிமை, ஒரு காலத்தில் நான் விடுதலையாவேன் என்றோ, ஆட்டு மந்தைக்கு உரிமையாளன் ஆவேன் என்றோ நினைத்துப் பார்த்திருப்பாரா>

அவரோ,அல்லாஹ் தன் மீது கடமையாக்கியதை தன்னுடைய எஜமானர் இல்லாவிட்டாலும் செய்து கொண்டிருந்தார்.

இது அவருடைய தக்வா. அல்லாஹ் எப்படி ஏற்பாடு செய்கிறான் பாருங்கள். தன்னுடைய அடியானின் தக்வாவை அல்லாஹ் அங்கீகரித்து, அல்லாஹ் கொடுக்க நாடினால் எப்படி வேண்டுமானாலும் சூழ்நிலைகளை ஏற்படுத்துவான்.

இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான் "அவர்கள் அறியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவான்" என்று.

அன்பானவர்களே!அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உள்ளதிலிருந்த அச்சம் மற்றும் இரக்கத்தை பற்றி பார்க்கிறோம்.

அவர்களுடைய வணக்க வழிபாடுகளை பற்றி அவர்களுடைய மாணவரிடத்தில் கேட்கப்படுகிறது.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு வீட்டில் இருக்கும்போது என்னென்ன செய்வார்கள்? என்று.

அதற்குஅந்த மாணவர், அப்படி உங்களால் நடந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு தொழுகைக்கும் புதிதாக ஒழு செய்வார்கள்.அதற்குப் பிறகு, ஒரு தொழுகையை தொழுது, அதற்குரிய சுன்னத்துகளை தொழுதுவிட்டால், அடுத்த தொழுகை நேரம் வரை குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்கள். இதுதான் அவர்களுடைய அமலாக இருந்ததுஎன்று சொன்னார்கள்.

இமாம் நாஃபியிசொல்கிறார்கள்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எப்போதாவது இஷா தொழுகை ஜமாஅத்தோடு தொழ தவறிவிட்டால், அந்த கவலையால் அன்று இரவெல்லாம் தூங்காமல் நஃபில் வணக்கத்தில் இருப்பார்கள்.

(சியரு அஃலாமின் நுபலா : 4/309)

இவருடைய தந்தை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு முறை அஸர் தொழுகை தவறிவிட்டது. அவர்கள் மஸ்ஜிதுக்கு வரும்போது மக்கள் தொழுது முடித்து அமர்ந்திருக்கிறார்கள்.

தொழுது விட்டீர்களா? என்று கேட்டார்கள். ஆம் தொழுது விட்டோம்என்று அங்கிருந்தவர்கள் பதிலளித்தார்கள். அவர்களுக்கு மதீனாவில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே வேலை செய்துகொண்டிருந்தார்கள். அதனால் அஸருடைய ஜமாஅத் தவறிவிட்டது.

மிகவும் வருத்தப்பட்டார்கள். அங்கேயே, நீங்கள் சாட்சியாக இருங்கள், அந்த தோட்டத்தை சதகா செய்து விட்டேன்என்று அறிவிப்பு செய்தார்கள்.

(இஹ்யா உலூமித்தின்)

இப்படிப்பட்ட ஒருவருக்கு மகனாக பிறந்து, அவருடைய வளர்ப்பில் வளர்ந்த மகன் எப்படி இருப்பார்??

பிறகு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்,தங்கள் மாணவர்களிடத்தில் சஹருடைய நேரம் வந்துவிட்டதா? என்று கேட்பார்கள்.

நேரம் வரவில்லையென்றால் மீண்டும் தொழ ஆரம்பித்து விடுவார்கள். சிறிது நேரம் கழித்து 'சஹருடைய நேரம் வந்துவிட்டதா'? என்று கேட்பார்கள்.

நேரம் வரவில்லையென்றால் மீண்டும் தொழ ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் சஹருடைய நேரம் வந்துவிட்டால், இஸ்திக்ஃபார், துஆவில் சுபுஹுடைய நேரம் வரை இருப்பார்கள்.

இமாம் தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

'நான் தொழக்கூடிய பலரை பார்த்திருக்கிறேன், ஆனால்,அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு தொழும்போது, கிப்லாவை முற்றிலுமாக முன்னோக்கி,எந்த ஒரு அசைவு இல்லாமல்,அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு கம்பத்தைப் போல், தன்னுடைய முகம், பாதம், கரம் அனைத்திலும் கிப்லாவை முன்னோக்கக்கூடிய ஒரு தொழுகையாளி அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு ஒருவரைப் போன்று நான் பார்த்ததில்லை'.

(சியரு அஃலாமின் நுபலா : 4/321)

இமாம் நாஃபியி சொல்கிறார்கள், 'அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு ழுஹர் தொழுகை முதல் அஸர் தொழுகை வரை இபாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள்'.

பொதுவாக, மக்களெல்லாம் அதுவும் குறிப்பாக வயோதிக காலத்தில் ஒய்வு எடுக்கக்கூடிய நேரத்தில் கூட, இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இபாதத்தில் இருப்பார்கள்.

அன்பானவர்களே!அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கொடை தண்மையை பற்றி பார்ப்போம்.

யாராவது தன்னுடைய அடிமைகளில் ஒருவரை கொஞ்சம் கோபமாக பேசிவிட்டால், உடனே அவரை அழைத்து விடுதலை கொடுத்து விடுவார்கள். அந்த அளவு இரக்கம் உள்ளவர்கள்.

இன்னொரு நேரத்தில், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் நல்ல தொழில் திறமையுள்ள ஒரு அடிமை இருந்தார். அவர் சொன்னார்:என்னை நீங்கள் உரிமையிட்டு விடுங்கள். உங்களுக்கு நாற்பதாயிரம் திர்ஹம் நான் தருகிறேன்என்று.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுயும் ஒத்துக்கொண்டார்கள். அந்த நாற்பதாயிரம் திர்ஹம் கடணை அடைப்பதற்காக தொழில் நகரமான கூஃபா சென்றார். அங்கே அவர் கடினப்பட்டு உழைத்து பணம் சேர்த்து இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கான கடனை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

அங்கே அவரை ஒருவர் அடையாளம் கண்டு, நீ அப்துல்லாஹ் இப்னு உமரின் அடிமையாயிற்றே, இங்கே என்ன செய்கிறாய்?என்று கேட்கிறார்.

அதற்கு அவர் விளக்கம் சொல்கிறார். பின்னர் முதலாமவர் கேட்டார்; நீ என்ன பைத்தியமா, உன்னை இப்படி வருத்திக் கொண்டிருக்கிறாயே?

அங்கே இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு எங்கு பார்த்தாலும் வலப்பக்கம் இடப்பக்கம் என அடிமைகளை உரிமையிட்டுக் கொண்டிருக்கிறார். நீ இப்படி நாற்பதாயிரம் திர்ஹம்களை விடுதலையாவதற்கு பேசி கொண்டு கடினப்படுகிறாயே?

அங்கு சென்று, அவரிடம் என்னால் கடனை அடைக்க முடியவில்லை என்று சொல். பிறகு என்ன நடக்கிறது என்று பார்.

அவரும் அங்கே சென்று அந்த கடன் பத்திரத்தை எடுத்துக் கொண்டு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று, 'என்னால் உங்களுக்கு சொன்ன கடனை அடைக்க முடியவில்லை, எனக்கு இப்போது நிர்பந்தமாக இருக்கிறது, இதோ எழுதிய பத்திரம், இதை நீங்கள் அழித்து விடுங்கள்' என்று சொல்கிறார்.

அப்போது இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள். நான் அதை கிழிக்க மாட்டேன், வேண்டுமானால் நீ கிழித்துக்கொள்என்று சொன்னார்கள்.

அவரும் அதை கிழித்து விடுகிறார். இதைக் கண்டு தன்னுடைய அடிமையால் முடியாததை ஏற்படுத்தி அவரை சிரமப்படுத்தி விட்டோமோ என்று பயந்து இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அழுகிறார்கள்.

உன்னை விடுதலையாக்கி விட்டேன் நீ செல்லலாம்என்று அதைத் தொடர்ந்து சொன்னார்கள்.

அந்த முன்னால் அடிமை 'அல்லாஹ் உங்களை சீர்திருத்தம் செய்வானாக, உங்களிடம் அடிமைகளாக உள்ள என்னுடைய இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு என்ன செய்வது' என்று கேட்க, இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் உரிமையிட்டு விட்டேன், நீ அழைத்து செல்என்றார்கள்.

பின்னரும் அந்த மனிதர் தன்னுடைய தாயும், ஒரு மகளும் உங்களிடம் அடிமையாக இருக்கின்றனரே, என்று சொன்னார். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு 'அவர்களையும் உரிமையிட்டு விட்டேன், நீ அழைத்து செல்' என்றார்கள்.

(சியரு அஃலாமின் நுபலா : 4/310)

அன்பானவர்களே!எப்படிப்பட்ட ஒரு இரக்க சிந்தனை!இது அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களுடைய தோழமையில் வாழ்ந்தவர்களிடம் இருந்து பெற்ற இரக்க சிந்தனையாகும்.

ஒரு முறை இருபதாயிரம் திர்ஹங்கள் அவர்களுக்கு மன்னரின் சபையில் அன்பளிப்பாக கொடுக்கப்படுகிறது.

அந்த சபையில் இருந்து செல்வதற்குள் மொத்த அன்பளிப்பையும் சதகா செய்து விட்டார்கள்.

மற்றொரு முறை, பத்தாயிரம் திர்ஹங்களையும் இவ்வாறே சதகா செய்துவிட்டார்கள். அன்று மாலை தனது ஒட்டகத்திற்கு தீனி ஒரு திர்ஹத்திற்கு கடன் வாங்கி சென்றார்கள்.

(சியரு அஃலாமின் நுபலா : 4/311)

எப்படிப்பட்ட தியாக மனப்பான்மை! அவருடைய மாணவர் நாஃபியீ சொல்கிறார்கள், 'ஒவ்வொரு சபையிலும் அவருக்கு அன்பளிப்பாக செல்வங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், அது முப்பதாயிரம் திர்ஹங்களாக இருந்தாலும், அந்த சபையிலேயே கொடுத்து விடுவார்கள்.

ஒரு மாத காலம் இறைச்சி சாப்பிட வசதி இல்லாமல் இருந்த போதும், அவர்கள் அவ்வாறே செல்வம் வரும்போதெல்லாம் மக்களுக்கு கொடுத்து விடுவார்கள். தனக்கென்று அதில் சிறிது எடுத்து நல்ல ஒரு உணவை உண்ணக்கூட எண்ணமாட்டார்கள்.

அன்பானவர்களே!அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு இப்படிப்பட்ட ஒரு தியாக மனப்பான்மை மற்றும் ஒரு கொடைத்தன்மை உடையவராக திகழ்ந்தார்கள். அவர்களுடைய பணிவும் மிக சிறந்தது.

'நான் வீட்டைவிட்டு வெளியே செல்கிறேன். ஆனால், எனக்கு எந்த தேவையுமில்லை, மக்களுக்கு சலாம் சொல்வதற்காகவும், அவர்களிடம் இருந்து சலாத்தின் பதிலை பெறுவதற்காவுமே செல்கிறேன்' என்று சொன்னார்கள்.

(சியரு அஃலாமின் நுபலா : 4/311)

அவர்களின் மாணவர் ஒருவர் சொல்கிறார், 'நான் அப்துல்லாஹ் இப்னு உமரோடு சென்றிருக்கின்றேன். சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, யாரை பார்த்தாலும் அவர்கள் முந்திக்கொண்டு சலாம் சொல்பவர்களாக இருந்தார்கள்'.

இந்தளவுக்கு பணிவுடையவர்களாக இருந்தார்கள்.

இந்த சஹாபி தன்னுடைய மரண நேரத்தில், அல்லாஹ்விடத்தில் அழுகிறார்கள், 'யா அல்லாஹ்! இந்த துன்யாவில் எதற்காகவும் நான் கவலைப்பட்டதில்லை, ஆனால், மூன்று விஷயங்களைத் தவிர.

இந்த துன்யாவை விட்டு நான் செல்லும்போது, கடுமையான வெயில் காலத்தில் நோன்பு வைக்க முடியாத ஒரு நிலைமைக்கு ஆளாகி விடப்போகிறேனே!கடுமையான குளிர் காலத்தில் நின்று வணங்க முடியாமல் நான் ஆளாகி விடப்போகிறேனே! ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் உடைய படை மதினாவை தாக்க வந்தபோது அவர்களை எதிர்த்து போர் செய்ய முடியாமலாகிவிட்டதே! என்று சொன்னார்கள்.

(சியரு அஃலாமின் நுபலா : 4/311)

அன்பானவர்களே!அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நமக்கெல்லாம் இப்படி ஒரு சிறந்த முன்மாதிரியாக, அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நேசம் கொண்டு, அவர்களின் சுன்னாவை பின்பற்றி, மக்களின் மீது கொடைத்தன்மையோடும், இரக்கத்தன்மையோடும், மக்களுக்கு நன்மையை நாடியும், மார்க்கத்தை போதித்தும், எப்படி ஒரு அழகிய முன்னுதாரனமாக இருந்தார்கள் என்று பார்த்தோம்.

அத்தகைய நல்லோர்களின் தரஜாவை அல்லாஹ் உயர்த்துவானாக, அத்தகைய நல்வழியில் நம்மையும் செலுத்தி நல்லோர்களின் கூட்டத்தில் நம்மையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!ஆமீன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَأْمُرُ بِالْمُتْعَةِ، وَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَنْهَى عَنْهَا، قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِجَابِرِ بْنِ عَبْدِ اللهِ، فَقَالَ: عَلَى يَدَيَّ دَارَ الْحَدِيثُ، «تَمَتَّعْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَلَمَّا قَامَ عُمَرُ قَالَ: إِنَّ اللهَ كَانَ يُحِلُّ لِرَسُولِهِ مَا شَاءَ بِمَا شَاءَ، وَإِنَّ الْقُرْآنَ قَدْ نَزَلَ مَنَازِلَهُ، فَ {أَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ} [البقرة: 196]، كَمَا أَمَرَكُمُ اللهُ، وَأَبِتُّوا نِكَاحَ هَذِهِ النِّسَاءِ، فَلَنْ أُوتَى بِرَجُلٍ نَكَحَ امْرَأَةً إِلَى أَجَلٍ، إِلَّا رَجَمْتُهُ بِالْحِجَارَةِ (صحيح مسلم- 1217)

குறிப்பு 2)

حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، - قَالَ يَحْيَى: بَعْضُ الحَدِيثِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ - قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ عَلَيَّ» قُلْتُ: آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ؟ قَالَ: «فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي» فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ، حَتَّى بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} [النساء: 41] قَالَ: «أَمْسِكْ» فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ (صحيح البخاري -4583)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/