HOME      Khutba      இறைநேச செல்வர் இப்னு உமர் (ரழி) அமர்வு 1-2 | Tamil Bayan - 427   
 

இறைநேச செல்வர் இப்னு உமர் (ரழி) அமர்வு 1-2 | Tamil Bayan - 427

           

இறைநேச செல்வர் இப்னு உமர் (ரழி) அமர்வு 1-2 | Tamil Bayan - 427


இறைநேச செல்வர் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு

ஜுமுஆ குத்பா தலைப்பு : இறைநேச செல்வர் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு(அமர்வு 1-2)

வரிசை : 427

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 05-08-2016 | 02-11-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

ஆதாரங்கள் குறிப்பிடப்பட்ட இடங்களைத்தவிர மற்ற இடங்களில் வருகின்ற கருத்துக்கள் அனைத்தும் இமாம் இப்னு கசீர் எழுதிய அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலிலிருந்தும் இமாம் தஹபி எழுதிய சியரு அஃலாமின் நுபலா என்ற நூலிலிருந்தும் எடுக்கப் பட்டதாகும்.

கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் உடைய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறுஅல்லாஹ்வின் பயத்தையும்அச்சத்தையும்உங்களுக்கும்எனக்கும் நினைவூட்டியவனாக,அல்லாஹ்வை பயந்துஅவனுடைய மார்க்கசட்ட வரம்புகளைபேணி வருமாறு எனக்கும்உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அன்பானவர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா கண்ணியத்திற்குரிய அவனுடைய வேதம் அல்குர்ஆனில் ஒரு கூட்டத்தைப் பற்றி உயர்வாக, கண்ணியமாக சிறப்பித்து சொல்கிறான்என்றால், அது அவனுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களின் கூட்டம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

எப்படி அல்லாஹு தஆலா என்னுடைய தூதர் ரசூலுல்லாஹ்வின் மீது ஒரு தனி அன்பை, தனி பாசத்தை வைத்திருக்கின்றானோ, அப்படித்தான் அந்த தூதருடைய தோழர்கள் மீதும் அல்லாஹு தஆலா அன்பு கொண்டவனாக பாசம்நிறைந்தவனாக இருக்கின்றான்.

பொதுவாகவே முஃமின்களின் மீது அல்லாஹ் கருணை உடையவன், பாசம் உடையவன், அன்புடையவன்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட, அல்லாஹ்வை தனது வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக் கொண்டு, அவனை வணங்குகின்ற,இஸ்லாமிய மார்க்கத்தை தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும், ஒவ்வொரு முஃமினும்அல்லாஹ்வுடைய விசேஷமான கருணைக்குரியவர்கள்.

அந்த முஃமின்களிலேயேமுதல்தர முஸ்லிம்களாக,இந்த உம்மத்துடைய முதல் மக்களாக, முதல் தலைமுறையாக, எந்த தலைமுறையின் மூலமாக அல்லாஹ்வுடைய தீன் இந்த பூமியில் நிலைநிறுத்தப்பட்டதோ அந்தத் தலைமுறையின் மீது அல்லாஹ்வுடைய அன்பு எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்!

அந்தத் தோழர்கள் எல்லாம் நின்றிருக்கும்போது அல்லாஹ்வுடைய தூதர் அல்லாஹ்விடம் கையேந்தி சொன்னார்கள்.

யா அல்லாஹ்! இவர்களுக்கு நீ உதவி செய், இவர்களுக்கு நீ வெற்றிக் கொடு என்று சொல்லும் போது,

«اللهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ»

யா அல்லாஹ்! இந்த கூட்டத்தை எதிரிகள் மூலமாக நீ அழித்து விட்டால் இந்த பூமியில் உன்னை வணங்கக் கூடியவர்கள் இருக்கமாட்டார்கள்என்று தங்களது தோழர்களை குறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விற்கு முன்னால் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1763.

அவர்களுடைய தியாகம், அவர்களுடைய அர்ப்பணிப்புஎன்றும் நினைவு கூறத்தக்கவை, போற்றக்கூடிய தக்கவை, நாம் பின்பற்றுவதற்கு தகுதியானவை, முன் மாதிரியானவை.

அல்குர்ஆன் உடைய நூற்றுக்கணக்கான வசனங்களில் முஃமின்கள் என்று எங்கெல்லாம் அல்லாஹ் பேசுகிறானோ, நல்லவர்கள் என்று எங்கெல்லாம் அல்லாஹ் சாட்சி சொல்கிறானோ, அங்கு முதல் தகுதி உடையவர்கள்தான் அந்த ஸஹாபாக்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரத்துல் அஹ்ஸாபுடைய 23-வது வசனத்தில் அந்த சிறப்புக்குரிய நபித்தோழர்களைப் பற்றி கூறுகிறான்:

مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا (23) لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِنْ شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا

நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை.

உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 23,24)

அவர்கள் எதையெல்லாம் அல்லாஹ்விடத்தில் பேசினார்களோ, துஆக்கள் கேட்டார்களோ, அந்த துஆக்கள் எல்லாம் நுனி நாவிலிருந்து வெளி பகட்டுக்காக வெளியானவை அல்ல. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏற்பட்டவை. உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளியானவை.

எத்தனை நபித்தோழர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீத் ஆகவேண்டும் என்று துஆ கேட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதானார்கள். அதுவும் ஒவ்வொரு நபித்தோழரும் எப்படி தான் ஷஹீதாக வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ, அதே அடிப்படையில் ஷஹீத் ஆனார்.

யா அல்லாஹ்! என்னை ஒரு காஃபிர், என் மூக்கை அறுக்க வேண்டும், காதை அறுக்க வேண்டும் என்று கேட்கிறார். அப்படியே அது நடக்கிறது.

நூல் : சியரு அஃலாமின் நுபலா -3/77,78

இன்னொரு தோழர் கேட்கிறார்:யா அல்லாஹ்! எங்கிருந்தோ ஒரு அம்பு என்னை நோக்கி வந்து என்னுடைய கழுத்தில் இந்தப் பக்கமாக சென்று இந்தப் பக்கமாக வெளியேறி அதில் நான் மரணிக்க வேண்டும் என்று.அப்படியே அவர் மரணிக்கிறார்.

அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அல்ஹாத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 1953.

இப்படி நூற்றுக்கணக்கான வரலாற்று சம்பவங்களை சொல்லலாம். அவர்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக துஆ கேட்பார்கள்.  உண்மையான உள்ளத்தோடு துஆ கேட்பார்கள். அதை அவர்கள் நிறைவேற்றினார்கள்.

உஹது போருக்கு முன்பாக அன்சாரித் தோழர்கள் சொல்கிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதரே! பத்ரு மைதானத்தில்நாங்கள் வராததற்கு காரணம்,நீங்கள் வியாபாரக் கூட்டத்தை வழி மறிக்க செல்கிறீர்கள் என்பதற்காகத்தான் வரவில்லை.

அது ஒரு போராக எங்களுக்குத் தெரிந்திருக்குமேயானால் எங்களில் ஒருவர்கூட உங்களை விட்டு பின் தங்கி இருக்க மாட்டார்.

அல்லாஹ் பாதுகாத்து கொள்வான், நாங்கள் இப்போது சொல்வது உண்மையா? இல்லையா? என்று. (1)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 13085.

இப்படிஅல்லாஹ்விற்கும்அல்லாஹ்வுடைய ரஸூலுக்கும் அர்ப்பணிப்பு செய்ய வேண்டுமென்ற ஆசையை அல்லாஹ்விடத்தில் ஒரு சவாலாக, துஆவாக கூறியவர்கள் தான், அந்த நபித்தோழர்கள். அதைத் தான் அல்லாஹ் சொல்கிறான்.

அவர்கள் தங்களது நேர்ச்சைகளை, துஆக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். என்ன எண்ணங்களை அவர்கள் வைத்தார்களோ, அந்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

அதாவது அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்வுடைய தீனுக்காக கொல்லப்படவேண்டும். என்று நினைத்தார்கள். அதை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டார்கள்.

எஞ்சியுள்ள தோழர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கின்றான்: இன்னும் இருக்கின்ற தோழர்கள், அல்லாஹ்வுடைய பாதையில் புறப்பட்டுச் சென்று தங்களுக்கும் ஷஹாதத் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருப்பவர்கள். (வசனத்தின் கருத்து 33 : 23)

இந்த உலகத்தில் மனிதருக்கு இருக்கின்ற அருட்கொடைகளில் விலை மதிக்க முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் அவனுடைய உயிர்.

அந்த உயிரையே அல்லாஹ்வுடைய பாதையில் கொடுப்பதற்காக துடித்தவர்கள் தான் அந்த நபித்தோழர்கள்.எதற்காக கொடுக்க தயாரானார்கள்? சொர்க்கம். ஒன்றுக்காக மட்டும்.

நாம் ஷஹீத் ஆகிவிட்டால், நமது குடும்பத்தை கலீஃபா கவனித்துக் கொள்வார், பைத்துல்மால் உடைய செல்வங்கள் நமது குடும்பங்களுக்கு கிடைக்கும் என்ற எண்ணங்கள் அல்ல.

அன்பானவர்களே! இப்படிப்பட்ட நபித்தோழர்களை பற்றி நாம் பேசும்போது அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அந்தக் கூட்டத்தாரோடு நம்மை சேர்த்து வைப்பான்.

அவர்களை நாம் நேசிக்கும் போது, அவர்களுக்கு கொடுத்த அந்த ஈமானின் சுவையை, அவர்களுக்கு கொடுத்த அந்த மார்க்கப்பற்றை, அவர்களுக்கு கொடுத்த அந்த தியாக உணர்வைகண்டிப்பாக அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நமக்கும் கொடுப்பான்.

அவர்கள் பேசப்படுவதற்கு தகுதியானவர்கள். அல்லாஹ்வே அவர்களை பற்றி பேசுகிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் நாமும் அவர்களைப் பற்றி பேச வேண்டும்.

அப்படி நபித்தோழர்களைப் பற்றி நாம் பார்க்கும் போது, எத்தனையோ நபித்தோழர்களுடைய வரலாறுகள் மிகத் துல்லியமாக வரலாற்று நூல்களில், ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்படுகின்றன.

அப்படிப்பட்ட நபித்தோழர்களில் ஒருவர் தான், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். அவருடைய வரலாற்றை தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

இவர்கள் கலிஃபா உமர் உடைய மகனார் ஆவர்கள். இவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்ட இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில் பிறக்கின்றார்கள்.

அதற்குப்பிறகு எப்போது தனது தந்தை இஸ்லாமை ஏற்றாரோ, அப்போதே இவரும், இவருடைய சகோதரியும் சிறுவயது பிள்ளைகளாக இருக்கும்போது அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறார்கள்.

பத்து வயதில் இவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்து விடுகிறார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கும் போது இவர்களுக்கு 20வயது.

அந்தப் பத்து வயதிலிருந்துஅல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிரியாமல்,அவர்களோடு வாழ்ந்த,அவர்களுடைய சபையிலேயே தங்களது நேரங்களை கழித்து, அவர்களிடத்திலிருந்து நேரடியாக கல்வி பெற்ற தோழர்களில் ஒருவர் தான், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவத்தை புகாரியில் நாம் பார்க்கிறோம்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சிறப்பு என்ற பாடத்தில்பதிவுசெய்த ஒரு ஹதீஸ்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்தில் திருமணம் ஆகாத வாலிபர்கள் பெரும்பாலும் மஸ்ஜிதில் இரவு கழிப்பார்கள். இரவு நேரங்களில் அதில் பல நன்மைகள் அவர்களுக்கு இருக்கின்றன.

ஒன்று, இரவு தொழுகை கிடைத்து விடுவது, சுபுஹு தொழுகை ஜமாத்தோடு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு கிடைக்கப் பெறுவது.

இரண்டாவது,மஸ்ஜிதில் தங்குவது ஃபித்னாக்களை விட்டும் பாதுகாக்கும்.

அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் தங்களைப் பற்றி சொல்கின்றார்கள்: எனக்கு திருமணமாகாத வரை நானும் மஸ்ஜிதில் தங்கிக் கொண்டிருந்தேன்.

சுபுஹு தொழுகைக்குப் பிறகு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களில் யாராவது கனவு கண்டிருக்கிறீர்களா? என்று கேட்கும்போது, மற்ற வாலிபர்களெல்லாம் தாங்கள் கண்ட கனவை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் கூறி விளக்கம் கேட்பார்கள்.

இப்படி என்னுடைய வயதில் உள்ள வாலிபர்கள் எல்லாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் தங்களது கனவுகளை சொல்லி விளக்கம் கேட்டு சந்தோஷப்படுகிறார்கள்.

இதைப் பார்த்த அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.

فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا، فَأَقُصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

யா அல்லாஹ்! என்னில் ஏதாவது ஒரு நன்மை இருக்குமானால், எனக்கும் ஒரு நல்ல கனவை காட்டு. அதை நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் சொல்லி அதற்கு நான் விளக்கம் கேட்பேன். (2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1121, 1122.

இப்படி எல்லாம் அந்த நபித்தோழர்கள் அல்லாஹ்விடத்தில் பேசினார்கள். ஆம்! அவர்கள் அல்லாஹ்விடத்தில் பேசுவதற்கு தகுதியானவர்கள், உண்மையாளர்கள்.

ஒரு பேரரசரிடத்தில் பேச வேண்டும் என்றால், அந்த அரசனுக்கு மாறு செய்யாதவர்கள், உள்ளத்தால் அந்த அரசனை நேசிப்பவர்கள், உள்ளத்தால் அந்த அரசனை பயப்பட கூடியவர்கள், அவர்கள்தானே தைரியமாக துணிவாக பேச முடியும். அந்த நபித்தோழர்கள் அப்படித்தான் ரப்பிடத்தில் பேசினார்கள்.

உலக மன்னர்களுக்கு வேண்டுமானால் உள்ளங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாமல் போகலாம். உலகத்தை படைத்த ஆட்சி செய்கின்ற பேரரசன் ஆகிய அந்த அல்லாஹ்விற்கு உள்ளத்தின் ரகசியங்கள் கண்டிப்பாக தெரியும். உள்ளம் அடுத்து என்ன எண்ணும்? என்பதையும் அவன் அறிந்தவன்.

அல்லாஹ் கூறுகிறான்:

يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ

கண்கள் செய்யும் மோசடிகளை அவன் அறிவான், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் அறிவான். (அல்குர்ஆன் 40 : 19)

இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கனவின் விஷயம் ஒரு பயங்கரமான ஒன்று, அஞ்ச வேண்டிய ஒன்று.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ، وَلَنْ يَفْعَلَ

யார் ஒருவன் தான் பார்க்காத ஒரு கனவை பார்த்ததாகச் சொல்லி விளக்கம் கேட்பாரோ, அவர் நாளை மறுமையில் நரகத்தில் போடப்பட்டு, இரண்டு கோதுமை கொடுக்கப்பட்டு அந்த இரண்டு கோதுமைகளை முடிச்சு போடு என்று அவருக்கு சொல்லப்படும். (3)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7042.

இரண்டு கோதுமையை முடிச்சு போட்டு காட்ட முடியுமா? என்றால் முடியாது.

அதுவும் ரசூலுல்லாஹ் அவர்களுக்கு முன்னால், பார்க்காத ஒன்றை தான் பார்த்தேன் என்று பெருமைக்கு சொல்ல முடியுமா? கதிகலங்கி விடும். வஹி இறங்கிவிடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

எத்தனை ஸஹாபாக்கள் சொல்கிறார்கள். கஅப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: மிகத் திறமையாக பேசி மனிதர்களை மயக்குவதில் நான் வல்லவன்.

தபூக் போருக்கு அவரால் வர முடியாமல் போய் விட்டது. அவர்கள் சொல்கின்றார்கள். ரசூலுல்லாஹ் உடைய சபையில், அல்லாஹ்வுடைய தூதரே! மறைத்து பேசி மயக்க வேண்டுமென்றால், நான் அதில் மிக திறமையானவன். ஏதாவது காரணங்களை சொல்லி உங்களை திருப்திப்படுத்தி விடுவேன்.

ஆனால், அல்லாஹ் எனது உள்ளத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றான். எனவே எதுவானாலும் சரி, நான் உண்மையைத்தான் சொல்லப்போகிறேன். அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்கு வரவில்லை. அதற்கு இதுதான் காரணம் என்று உண்மையை அழகாக சொன்னார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: நீங்கள் உண்மை கூறினீர்கள். அல்லாஹ்வுடைய தீர்ப்பு வருகின்ற வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

பொய் சொன்ன முனாஃபிக்குகளை எல்லாம், நீங்கள் செல்லுங்கள்என்று அனுப்பி விட்டார்கள். அல்லாஹு தஆலா அவர்களையெல்லாம் பொய்யர்கள், முனாஃபிக்குகள் என்று அடையாளம் காட்டி விட்டான்.

அறிவிப்பாளர் : கஅப் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4418.

இப்படி, நபிக்கு முன்னால் பேசும்போது பயந்து, பயந்து உண்மையை தவிர எதையும் பேசாத அந்த உத்தமர்கள் தான் ஸஹாபாக்கள்.

ஹதீஸின் தொடர் : யா அல்லாஹ்! எனக்கு ஒரு கனவை காட்டு. நான் அந்தக் கனவை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொல்லவேண்டும்.

அதுபோன்று ஒரு கனவை அவர்கள் பார்க்கிறார்கள். அந்த கனவை பற்றி அவர்கள் சொல்கிறார்கள்:

நான் கனவில் பார்த்தேன். இரண்டு மலக்குகள் வந்தார்கள். நரகத்தை காட்டுவதற்காகஎன்னை அழைத்துச் செல்கிறார்கள். நான் அந்த நரகத்தில் மிகப்பெரிய ஆழமான கிணற்றை போல் பார்த்தேன்.

எப்படி கிணற்றுக்கு படிப்படியாக இருக்குமோ, அதுபோன்று மடிப்புகள் உடையதாக அந்த கிணறு இருந்தது. அந்த நரகப் படுகுழி இருந்தது. அங்கே குறைஷித் தலைவர்கள் பலரை நான் பார்த்தேன். அவர்கள் யார் யார் என்று எனக்கு தெரியும். அதை பார்த்து விட்டு, அல்லாஹ்வே! நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் கனவில் துஆ செய்கிறார்கள்.

அதற்குப் பிறகு, இன்னொரு மலக்கு வருகிறார். அந்த மலக்கு சொல்கிறார். நீங்கள் பயப்பட வேண்டாம்.நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று.

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ரொம்ப அதிகமான நட்புடன் இருந்த தோழர்கள், மிக அதிகமாக மரியாதை வைத்திருந்த தோழர்கள், எப்போதுமே ரசூலுல்லாஹ்விடத்தில் நேரடியாக சென்று பேச மாட்டார்கள்.

ரஸூலுல்லாஹ்வே அவர்களைப் பார்த்து கேட்டால் மட்டுமே பேசுவார்கள். இல்லையென்றால் வேறு யாரிடத்திலாவது சொல்லி விளக்கம் கேட்பார்கள்.

அபூபக்ரை போல, உமரைப் போல, உஸ்மானைப் போல,அலியை போல ரழியல்லாஹு அன்ஹும். இன்னும் பல தோழர்களை போல.

நீங்கள் ஹதீஸ்களில் பார்க்கலாம். ரசூலுல்லாஹ்விடத்தில் அதிகமாக கேள்வி கேட்பவர்கள் யார் என்று சொன்னால், யாராவது தூரத்திலிருந்து வந்து அல்லதுஇன்னொரு மூன்றாமவது தோழர் உடைய பெயர் அங்கே இருக்கும்.

காரணம், ரஸூலுல்லாஹ் உடைய கண்ணியத்தால்அவர்கள் கேள்வி கேட்பதற்கு பயந்தார்கள், கூச்சப் பட்டார்கள்.

இதுபோன்று, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்க்கிறார்கள். நான் எப்படி ரசூலுல்லாஹ்விடத்தில் இதை சொல்வது? என்று தயங்குகிறார்கள்.

மிகப்பெரிய ஒரு வாய்ப்பு ஒன்றுஅவர்களுக்கு காத்துக்கொண்டிருந்தது. அது என்ன? அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சகோதரி ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் உடைய மனைவியாக இருந்தார்கள்.

அப்படி என்றால், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ்விற்கு நெருக்கமான ஒரு உறவினர்.

அதாவது, ரசூலுல்லாஹ் உடைய மச்சானாக இருந்தார்கள். அப்படி இருந்தும் கூட, ரசூலுல்லாஹ்வின் மீதுள்ள மரியாதை காரணமாக, இவர்கள் நேரடியாக சென்று கேட்காமல், தனது சகோதரி இடத்தில் சென்று, சகோதரியே! நான் இப்படி ஒரு கனவைப் பார்த்தேன் என்று சொன்னவுடன், ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உடனடியாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தனது சகோதரர் இப்படி ஒரு கனவை பார்த்தார் என்று சொன்னபோது  அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

அவர் பார்த்த கனவுஒரு நல்ல கனவு.

«نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ»

அப்துல்லாஹ் ஒரு சிறந்த மனிதர் தான்.அவர் இரவுத் தொழுகையை பேணுதலாக தொழ வேண்டுமே!

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1121, 1122.

(அப்துல்லாஹ்விடத்தில் எல்லா வணக்க வழிபாடுகளும் பேணுதலும் சரியாக இருக்கிறது.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கும் போது, 20வயதுடைய வாலிபர் என்றால்,10வயதில் ஹிஜ்ரத் செய்து வருகிறார் என்றால், விளையாட்டுப் பருவம்.

ஆனால், நபித்தோழர்களில் பலர் ஈமானை புரிந்தவர்கள், இஸ்லாமை புரிந்து வந்தவர்கள். பொதுவாக வாலிபர்கள் எல்லாம் விளையாடக்கூடிய அந்த வயதில் அவர்கள் விளையாடவில்லை.

அவர்கள் நபியுடைய சமுதாயத்தில் இருந்து ஈமானை, இல்மை,அக்லாகை, குர்ஆனை கற்றார்கள். ஜிஹாதில் சென்று உயிரை கொடுத்தார்கள்.)

இந்த ஒரு வார்த்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடமிருந்து தனது சகோதரி ஹாப்ஸாவின் மூலமாக கேட்டதற்கு பிறகு, அன்றைய தினத்திலிருந்து வஃபாத் ஆகும்பொழுது இவர்களுக்கு 86வயது.

அவர்களுடைய மாணவர்கள் அவர்களிடத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் சொல்கிறார்கள்: அப்துல்லாஹ் இதற்குப் பிறகு இரவில் மிக சொற்பமாகவே தூங்குபவராக இருந்தார்கள். (2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1121, 1122.

இப்படி,அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பை ஹதீஸ் நூல்களில் பார்க்கின்றோம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ்விற்கு நெருக்கமாக இருந்தார்கள். அபூபக்ருக்கு நெருக்கமாக இருந்தார்கள். தங்களது தந்தை அமீருல் முஃமினீன் உமர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அடுத்த அமீருல் முஃமினீன் உஸ்மான் அவர்களுக்கும் நெருக்கமாக இருந்தார்கள். அடுத்து அலிக்கு நெருக்கமாக இருந்தார்கள்.

எல்லா மூத்த ஸஹாபாக்களிடமும் ரசூலுல்லாஹ் உடைய மரணத்திற்கு பிறகு, அந்த ஸஹாபாக்கள் இடத்தில் சென்று கல்வியை தேடக்கூடியவர்களாக இருந்தார்கள்.

பத்ருப் போரில் கலந்து கொள்வதற்காக 12வயதில் வருகிறார்கள். திருப்பி அனுப்பப் படுகிறார்கள். பிறகு உஹதுப் போரில் கலந்து கொள்வதற்காக13வயது இருக்கும்போது அவர்கள் முந்திக் கொண்டு வருகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரே!எனக்கும் போர் செய்யத் தெரியும். அழைத்துச் செல்லுங்கள். என்று. அப்போதும் அவர்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

கடைசியாக, 15வயது அவர்களுக்கு பூர்த்தியாகும் போது, அஹ்ஸாப் யுத்தத்தில் கலந்து கொள்வதற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த அஹ்ஸாப் யுத்தத்தில் இருந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கின்ற வரை,நடந்த அத்தனை பெரிய யுத்தங்களிலும், அதுபோக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பிய யுத்தத்திற்காகஅனுப்பிய சிறுசிறு குழுக்களிலும் பங்கு எடுக்கின்றார்கள்.

இறுதியாக, அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் ஃபித்னா ஏற்படுவதற்கு முன்பு வரை, கலீஃபாக்கள் உடைய ஆட்சிக்காலத்தில் ஈரான், ஈராக், சிரியா எந்தெந்த நாடுகளில் ஜிஹாத் நடந்ததோ, அந்த எல்லா இடங்களிலும் சென்று பங்கு பெற்றார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தோடு ஜிஹாதை நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக கலீஃபாக்கள் உடைய இறுதி காலம் வரைஅவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கையில் நாம் படிப்பினை பெற வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இப்போது நான் கூறிய விஷயத்தை போன்று இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

முதலாவதாக,அவர்களுடைய பேணுதல்.அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்:அப்துல்லாஹ் இப்னு உமரை போன்று ஒரு பேணுதல் உடையவரை நான் பார்த்ததில்லை.

பேணுதல் என்றால், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணுவதில்ஒரு அச்சம் கூடிய, பயம் கூடிய, அக்கறை கூடியஒரு தன்மைக்கு தான் பேணுதல் என்று சொல்லப்படும்.

சில நேரங்களில் பேணுதலின் அடிப்படையில் ஹலாலான விஷயங்களைக்கூட நாம் தவிர்க்க வேண்டி வரும். எப்போது என்று சொன்னால் அந்த ஹலால், நம்மை ஒரு ஹராமிற்க்கு இட்டு செல்வதாக இருந்தால், அல்லது அந்த ஹலாலை செய்யும் போது அங்கே ஒரு ஹராம் கலந்து விடும் என்ற பயம் இருக்குமேயானால், அனுமதிக்கப்பட்ட ஹலாலை கூட நாம் விட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.

இந்த அளவுக்குள்ள அச்சத்தைதான் பேணுதல் என்று சொல்லப்படும். அந்தப் பேணுதல் உடையவராக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள் என்று அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்.

அதுபோன்று, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்தை பேணுவதில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்க மிகுந்த அக்கறை உடையவர்களாக இருந்தார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களே சொல்கிறார்கள்: இந்த அப்துல்லாஹ், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆராய்ந்தார்கள். எங்கே உட்கார்ந்தார்கள்?படுத்தார்கள்?தொழுதார்கள்?எப்படி சென்றார்கள்?என்பதையெல்லாம் இவர்கள் தேடித்தேடி செய்வதை பார்த்தால் இவருக்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.

அந்த அளவு ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்துகளை பேணுவதில், அது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழமையின் அடிப்படையில் செய்த ஒன்றாக இருந்தாலும் கூட, நபி செய்தார்கள்என்பதற்காக அதை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒரு சமயம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மரத்திற்கு அருகில் சென்று தங்களது ஏதோ தேவையை நிறைவேற்றினார்கள். அன்பானவர்களே! அந்த மரத்திற்கு அருகில் சென்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தேவையை முடித்தார்கள் என்பதற்காகவே, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு அந்தச் செடி, அந்த மரம் வாடி விடாமல் அதை தன்னுடைய வாழ்நாள் எல்லாம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மரத்திற்கு அருகில் வந்தார்கள் என்று.

அந்த அளவிற்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய முஹப்பத் உடையவர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அங்கும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹ் உடைய அந்த ஹஜ்ஜத்துல் விதாவில் அரஃபாவில் இருந்து புறப்பட்டபோது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஒட்டகம் வந்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஒட்டகம் கூட்ட நெரிசலினாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ ஒரு சுற்று, சுற்றியது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், அரஃபாவில் இருந்து கிளம்பினால், எந்த இடத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒட்டகம் சுற்றியதோ, அந்த இடத்தில் ஒரு சுற்று, சுற்றி தான் புறப்படுவார்கள்.

அந்த அளவிற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றாக கவனித்து, கண்காணித்து அதை பேணக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு, 60ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த 60ஆண்டுகளிலும் கல்விப் பணியில், மக்களுக்கு தீர்ப்பு சொல்லக் கூடியவர்களாக, இல்மை கொடுக்கக் கூடியவர்களாக, தங்களுடைய வாழ்நாளை கழித்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, எல்லா நபித்தோழர்கள் உடைய வாழ்க்கையிலும்ஒரு சிறப்பம்சமாக தென்படக்கூடிய ஒன்று.

அப்துல்லாஹ் இப்னு உமர் உடைய வாழ்க்கையில் சற்று அதிகமாக, ஒரு அடையாளமாகவே, அவருக்கு மாறிவிட்டதை போன்று நாம் பார்க்கிறோம்.

அதுதான் உலகப் பற்றின்மை. செல்வங்கள் வந்தாலும், சுகபோகங்கள் குவிந்தாலும், ஆட்சி அதிகாரங்கள் தேடி வந்தாலும், அவற்றை எல்லாம் உதறிவிட்டு கிடைத்த செல்வங்களை, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கண்டு, தர்மம் செய்வதில் மனநிம்மதியை பார்த்த நபித்தோழர்களில் அப்துல்லாஹ் இப்னு உமரும் மிகப்பெரிய ஒரு இடத்தை தனக்கென்று வைத்திருக்கிறார்கள்.

அதைப்பற்றியான சில சம்பவங்களைப் பார்ப்போம். அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்: அப்துல்லாஹ் இப்னு உமருக்கு ஏதாவது ஒன்று கொஞ்சம் அதிகம் பிடித்துவிட்டால் போதும், இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கு என்ற ஒரு நிலைக்கு ஒரு பொருள் வந்துவிட்டால், உடனே அதை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுவார்கள்.

இன்று நமது நிலை,எது பிடிக்காதோ அதை தர்மம் செய்வோம். எது பிடிக்குமோ அதை நமக்கென ஒதுக்கி கொள்வோம்.

ஆனால், அந்த தோழர்களின் நிலை, எது பிடித்ததோ அதை உடனே அல்லாஹ்வுடைய பாதையில் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ரசூலுல்லாஹ் உடைய காலத்திலும்ஜிஹாத் செய்தவர்கள். நான்கு கலீஃபாக்கள் உடைய காலத்திலும் ஜிஹாத் செய்தவர்கள்.

ஜிஹாதில் கிடைக்கக்கூடிய கைதிகளை கனீமத்தாக பங்கு வைத்து கொடுக்கப்படும். இப்படி நிறைய அடிமைகள் அவருக்கு போரில் கிடைத்துக் கொண்டிருந்தன.

ஆனால், அந்த அடிமைகளை வைத்து வேலை வாங்கி சம்பாதிக்கின்ற பழக்கம் உடையவர்களாக இல்லை. அந்த அடிமைகளுக்கு இல்மை கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை அறிஞர்களாக உருவாக்கினார்கள். அவர்களை அல்லாஹ்வுடைய பாதையில் உரிமை இட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், உரிமை இடுவதற்கு என்று சில விசேஷமான தன்மைகள் இருந்தன. சில விசேஷமான திருப்புமுனைகள் இருந்தன.

ஒன்று, அந்தப் பொருள் தனக்கு விரும்பி விட்டால் உடனே அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்து விடுவார்கள்.

இரண்டாவது, இந்த அடிமைகள் விஷயத்தில் குறிப்பாக பார்ப்பார்கள். அந்த அடிமைகளிடத்தில் ஒரு நல்ல தன்மை, தக்வா, தொழுகையின் பேணுதல், ஒரு இறையச்சம், ஒரு நல்ல வெளிப்பாடு அதை பார்த்துவிட்டால் போதும், உடனடியாக அந்த அடிமையை அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் உரிமை விட்டுவிடுவார்கள்.

அப்துல்லாஹ்வுடைய இந்த குணத்தை அவர்களுடைய அடிமைகள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். யாராவது உரிமையாக வேண்டும், தான் விடுதலையாக வேண்டுமென்று, விரும்பினால் உடனே மஸ்ஜிதில் போய் உட்கார்ந்து தொழுக ஆரம்பித்து விடுவார் அந்த அடிமை.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மஸ்ஜித்திற்கு வரும்போது தன்னை தொழுகின்ற நிலையில் பார்க்க வேண்டும் என்பதற்காக.

சுப்ஹானல்லாஹ்!உடனே கூப்பிட்டு உன்னை அல்லாஹ்வுடைய பாதையில் நான் உரிமை இட்டு விட்டேன். நீ விடுதலை ஆனவன் என்று சொல்லிவிடுவார்கள். இப்படியாக அடிமைகளை உரிமையிட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இதை அறிந்து கொண்டு அவர்களுடைய மாணவர்களில் சிலர் சொன்னார்கள்: ஆசிரியர் அவர்களே! இவர்கள் உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். இவர்கள் உங்களை மயக்க பார்க்கிறார்கள்.

ஏமாற்றுவது என்றால், இபாதத் இருக்கிறது, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதை அதிகப்படுத்தி வெளிப்படுத்தி காட்டி, உங்களிடம் நற்பெயர் வாங்கி, உரிமையாக வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். உங்களை மயக்க பார்க்கிறார்கள். என்று சொன்னபோது அப்துல்லாஹ் இப்னு உமர் சொல்கிறார்கள்:

எனக்கு தெரியாது என்று எண்ணாதீர்கள். யார் அல்லாஹ்வுடைய இபாதத்தை செய்து அல்லாஹ்விற்காக நம்மை மயக்க நாடுகின்றார்களோ, நாம் கண்டிப்பாக மயங்கிதான் ஆகவேண்டும்.

யார் அல்லாஹ்விற்காக நம்மை மயக்க நாடுகின்றாரோ,நாம் அவருக்காக மயங்கி விடுவோம்.

அன்பானவர்களே! இன்னொரு சம்பவம் பதிவு செய்யப்படுகிறது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த இறையச்சம், அந்த தர்ம சிந்தனை, தனக்கு விருப்பமானதை அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை, எளியவர்களுக்கு கொடுக்கின்ற அந்த தன்மை பற்றி.

அவர்களுக்கு ஒரு அடிமைப் பெண் இருந்தார்கள். மிக அழகான அடிமைப்பெண். அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், அந்த அடிமைப் பெண்ணின் மீது ரொம்ப முஹப்பத் வைத்திருந்தார்கள்.

எந்த அளவுக்கு என்றால், சில நேரங்களில் கடைத்தெருவிற்கு அந்த அடிமைப் பெண்ணை அழைத்துச் செல்லும்போது, அந்த அடிமைப் பெண்ணுக்கு இவர்கள் பணிவிடை செய்தை கூட,அவர்களுடைய மாணவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த அடிமைப் பெண்ணுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.

அன்பின் காரணமாக ஒரு நேரம் வந்தது.தனது மாணவர் தன்னுடைய அடிமையாகிய நாஃபியை அழைக்கிறார்கள்.

இவர்,அப்துல்லாஹ் இப்னு உமரிடத்தில் அடிமையாக இருந்தவர். இவரை உரிமை விட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமரிடத்தில் கல்விப் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவராக இருந்தார்கள்.

தான் விரும்புகின்ற தன்னுடைய அடிமைப் பெண்களில் சிறந்த அடிமைப் பெண்ணாகிய, அந்த அடிமைப் பெண்ணைஉரிமை விட்டு, ஹலாலாக்கி தன்னுடைய மாணவருக்கு கல்யாணம் முடித்து வைக்கிறார்கள்.

இதை நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா? எனது ரப்பு சொல்கின்றான்:

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ

நீங்கள் விரும்புவதை அல்லாஹ்வுடைய பாதையில் கொடுக்காதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது. (அல்குர்ஆன் 3 : 92)

எனக்கு இந்த அடிமைப்பெண் விருப்பமானவள், இவளை நான் உரிமையிட்டு உனக்கு மணமுடித்து வைக்கிறேன் என்று சொன்னார்கள்.

இப்படிப்பட்ட ஒரு தியாக மனப்பான்மை, அல்லாஹ்விற்காக தன்னை இழக்க வேண்டும் என்ற ஒரு உயர்ந்த சிந்தனை உடையவர்கள்தான் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்.

விலை உயர்ந்த ஒரு ஒட்டகத்தை வாங்குகிறார்கள். நல்ல அழகான ஜாதி ஒட்டகம். அதில் ஏறி பயணிக்கிறார்கள். அதனுடைய பயணம் ரொம்ப அழகாக இருந்தது. உடனே இறங்குகிறார்கள்.

தனது அடிமை நாஃபியை அழைத்து சொல்கிறார்கள்:இதை ஸதகாவுடைய  ஒட்டகத்தில் கொண்டு போய் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று.

நாஃபி, ஒரு அடிமையாக இருந்த போது, ஜஅஃபர் உடைய மகனார், இந்த அடிமையை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று பத்தாயிரம் திர்ஹம்களுக்கு விலை பேசுகின்றார்கள்.

ஏனென்றால், அவர் கல்விகற்ற, ஒழுக்கம், இறையச்சம் மிக்கஒரு முஃமீன். அவரை நான் வாங்கிக்கொள்கிறேன் என்பதற்காக 10ஆயிரம் திர்ஹம்களை விலை பேசுகிறார்கள்.

அப்படியா? பத்தாயிரம் திர்ஹம் கொடுத்து நீ வாங்க பார்க்கிறாயா? அல்லாஹ்வுடைய முகத்திற்காக இவரை நான் உரிமை விட்டு விடுகிறேன் என்று சொல்கிறார். எப்படிப்பட்ட ஒரு ஈமானிய அன்பு, ஈமானிய ஆசை என்று பாருங்கள்.

இன்னொரு பக்கம், 40ஆயிரம் திர்ஹங்களை கொடுத்து ஒரு நல்ல வாலிபமான, திடகாத்திரமான ஒரு அடிமையை வாங்குகிறார்கள். வாங்கி வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் அந்த அடிமையை அல்லாஹ்விற்காக உன்னை உரிமை விட்டுவிட்டேன் என்று சொல்கிறார்கள்.

(அடுத்து நடக்கின்ற சம்பவத்தைப் பாருங்கள். இதுதான் அந்த நபித் தோழர்கள் இடத்தில் அடிமைகள் கண்ட மனித உரிமை, அன்பு, பாசம், பரஸ்பரம்.

கைதிகளாக பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதோ, சித்திரவதை செய்யப்படுவதோ, இஸ்லாமிய வரலாற்றில் ஒருகாலும் நடந்ததில்லை.

ஏன்? அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: அடிமைகளுக்கு நீங்கள் உண்ணுவதை உண்ண வையுங்கள். நீங்கள் உடுத்துவதை உடுத்த வையுங்கள் என்று.

எனவேதான் நபித்தோழர்களிடம் அடிமைகள் வந்துவிட்டால், தாங்கள் பேரித்தம் பழங்களை சாப்பிட்டுவிட்டு, அடிமைகளுக்கு ரொட்டிகளையும், சால்னாக்களையும் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.)

இந்த அடிமை இப்னு உமரிடம் சொல்கிறார்: எஜமானரே! நீங்கள் என்னை உரிமை விட்டீர்கள். நான் உங்களிடத்தில் ஒன்று சொல்லலாமா? நான் உங்களிடத்திலிருந்து ஏதாவது வேலை செய்து பிழைப்பேன். இப்போது நான் வெளியில் சென்று எப்படி பிழைப்பேன்? எனக்கு காசு, பணம் இல்லை என்றால் நான் என்ன வியாபாரம் செய்வேன்?

அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து 40ஆயிரம் திர்ஹம்களை அவர்களுக்கு கொடுத்து அனுப்புகிறார்கள்.

இன்னொரு முறை அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஐந்து அடிமைகளை வாங்கி வருகிறார்கள். வாங்கி வந்து அவர்களை மஸ்ஜிதுக்கு அருகில் விட்டுவிட்டு மஸ்ஜிதில் தொழுவதற்காக செல்கிறார்கள்.

இந்த ஐந்து அடிமைகளும் அப்துல்லாஹ் இப்னு உமரை பார்த்தார்கள். இவர்களும் உளு செய்துவிட்டு அப்துல்லாஹ் இப்னு உமருக்கு பின்னால் நின்று தக்பீர் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸலாம் கொடுத்து திரும்பிப் பார்த்தார்கள். இந்த 5அடிமைகளும் பின்னால் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஸலாம் கொடுத்து விட்டு கேட்கிறார்கள்:இந்தத் தொழுகையை நீங்கள் யாருக்காக தொழுதீர்கள்? என்று.

அந்த அடிமைகள் சொல்கிறார்கள்: அல்லாஹ்விற்காக நாங்கள் தொழுதோம் என்று. அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர் சொல்கிறார்கள்:

எந்த ரப்புக்காக நீங்கள் தொழுதீர்களோ, அந்த ரப்புக்காக வேண்டி நான் உங்களை உரிமையிட்டு விடுகிறேன். நீங்கள் எல்லாம் விடுதலை ஆனவர்கள்.

வரலாற்றில் சொல்லப்படுகிறது: தங்களது மரணத்திற்கு முன்பாக ஆயிரம் அடிமைகளுக்கு மேலாக அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் உரிமை இட்டார்கள் என்று.

அன்பானவர்களே! இந்த அடிமைகளை உரிமை இடுவது என்பது எவ்வளவு சிறந்தது தெரியுமா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

யார் ஒருவர் ஒரு அடிமையை உரிமையிடுவாரோ அல்லாஹ் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வான்.

நூல் : முசன்னப் இப்னு அபீ ஷைபா, எண் : 12632.

கலீஃபாக்களின் மூலமாக மூத்த நபித்தோழர்களுக்கு கனீமத்திலிருந்து பைத்துல்மாலில் இருந்து ஒரு பங்குஅவர்களுக்காக வேண்டி கொடுக்கப்படும்.

இப்படி வரும் பொழுது அப்துல்லாஹ் இப்னு உமரை பற்றி சொல்லும்போது, ஒரு மஸ்ஜிதில் 30,000திர்ஹங்களை தீனார்களை ஸதகாவாக கொடுக்கின்ற பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

அவருடைய உணவுப் பழக்கத்தை பற்றி சொல்லும் போது,தன்னுடைய உணவுத் தட்டில் எத்தீம்கள் இல்லாமல் அவர்கள் சாப்பிடமாட்டார்கள்.

அதுவும் குறிப்பாக வீட்டில் கறி சமைக்கப்பட்டால், வீட்டில் விசேஷமான உணவு சமைக்கப்பட்டால், உணவு தட்டில்ஒரு அனாதையை அழைத்து வந்து சாப்பிட வைக்காமல் அவர்கள் சாப்பிடவே மாட்டார்கள்.

இன்று, நம்மில் பலருடைய நிலைமை எவ்வாறு இருக்கிறது? என்றால், வீட்டில் ஏதாவது சாதாரணமா சமைத்தால், அதை பலபேருக்கு கொடுப்பதற்கு ஆசை வரும். ஆனால் வீட்டில் ஏதாவது விசேஷமாக சமைத்து வைத்தால் அதை தானே தின்று விட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களாக தான் இன்று பலர் இருக்கிறார்கள்.

ஆனால்,அந்த நபித்தோழர்கள் மாமிச உணவு சமைக்கப்பட்டால், பொதுவாகவே எத்தீமோடும், ஏழைகளோடும் உணவு உண்ணுகின்ற பழக்கம் உள்ளவர்கள்.

குறிப்பாக ஏழைகள், மிஸ்கீன்கள்இல்லாமல் அவர்கள் இஃப்தாரை செய்யமாட்டார்கள்.

தொடர் : இப்னு உமருடைய மனைவிமார்கள் பார்த்தார்கள். இப்படி செய்கின்ற நல்ல உணவுகளை எல்லாம் பக்கீர்களுக்கு, மிஸ்கீன்களுக்கு, கொடுத்துவிட்டு தண்ணீரையும் பேரீத்தம் பழத்தையும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள் என்று கவலைப்பட்டு, ஒருநாள் எல்லா மிஸ்கீன்களும், பக்கீர்களும், எத்தீம்களை எல்லாம் அவர்களுடைய வீட்டிற்கு அன்பளிப்புகளை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

இன்றாவது ஒருநாள் அப்துல்லாஹ் அவர்களை நிம்மதியாக சாப்பிட விடுங்கள், இஃப்தார் செய்ய விடுங்கள், உங்களுக்கு வேண்டியதை நாங்கள் கொடுத்து விடுகிறோம் என்று கொடுத்து அனுப்புகிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் வழியில் வரும்பொழுது பார்க்கிறார்கள்; ஒரு மிஸ்கின், ஒரு பக்கீர் கூட தென்படவில்லை. வீட்டிற்கு வந்து பார்க்கிறார்கள். அங்கே உணவுவகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

சொன்னார்கள்: இன்று ஏதோ ஒரு சதி நடந்து இருக்கிறது. எனது கண் பார்வையிலிருந்து மிஸ்கின்கள், ஏழைகள் மறைக்கப்பட்டு இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த உணவை சாப்பிட மாட்டேன் என்று மஸ்ஜிதுக்குச் சென்று விடுகிறார்கள்.

அன்பானவர்களே!எப்படிப்பட்ட ஒரு தியாக மனப்பான்மை பாருங்கள்.

மூஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ஒரு லட்சம் தீனார்களை அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்து அனுப்புகிறார்கள். ஒரு வருஷம் முடிவதற்குள் அந்த ஒரு லட்சத்தையும் ஸதகா கொடுத்து விட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்: நான் யாரிடத்திலும் எதையும் கேட்கமாட்டேன். ஆனால், எனக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுப்பதை நான் மறுக்க மாட்டேன்.

அதாவது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவருடைய தந்தை உமருக்கு கூறிய அறிவுரை.

«خُذْهُ إِذَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ شَيْءٌ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»

ஒருமுறை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு தருகிறார்கள். உமர் சொல்கிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதரே! எனக்கு இந்த அன்பளிப்பு தேவை இல்லை. என்னை விட தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் கொடுங்கள் என்பதாக.

அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்: உமரே! நீங்கள் எதிர்பார்க்காமல் ஒரு பொருள் கொடுக்கப்பட்டால் அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவை என்றாலும் நீங்கள் அதை அனுபவிங்கள். அதை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் வங்கிக்கொண்டு பிறருக்கு நீங்கள் ஸதகாவாக அன்பளிப்பாக கொடுங்கள் என்று.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1473.

இப்படி அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைசி காலம் வரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மார்க்கத்தை பேணக் கூடியவர்களாக, அல்லாஹ்வுடைய தீனுக்காக தியாகம் செய்யக் கூடியவர்களாக, தங்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

86-வயதில் அவர்கள் மரணிக்கின்ற வரை ஹஜ் செய்பவர்களாக இருந்தார்கள். மொத்தம் 66ஹஜ் செய்திருக்கிறார்கள். இவர்களுடைய மரணமும் மக்காவில் மினாவில் இருக்கும்போது ஏற்பட்டது.

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவன், இந்த அப்துல்லாஹ் இப்னு உமர் இருப்பது தனக்கு இடையூறாக இருக்கின்றது என்று உணர்ந்த அந்த அநியாயக்கார அரசன், தன்னுடைய சிப்பாய்களில் ஒருவருக்கு சொல்கிறான்:

விஷம் ஏற்றப்பட்ட ஈட்டியை கொண்டு அவருடைய காலை நீ சிராய்த்து விடு என்று. அதுபோன்று விஷம் ஏற்பட்ட ஒரு ஈட்டியை கொண்டு அவருடைய காலை அவன் சிராய்த்து குத்தி விடுகிறான். அந்த விஷம் ஏறி அவர்கள் மரணிக்கிறார்கள். மக்காவிலேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

அன்பானவர்களே! அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி அவர்களை விட மூத்த ஸஹாபாக்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்பதையும் நாம் தெரிய வேண்டும்.

தனது ஆசிரியரை பற்றி மாணவர்கள் சொல்வது அல்ல, மாணவரை பற்றி ஆசிரியர்கள் சொல்வது பெரிது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: உலக ஆசைகளை விட்டு தன்னுடைய நஃப்ஸை தடுத்து கொண்ட வாலிபர்களில் மிக முக்கியமானவர் இப்னு உமர்.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: எங்களில் பலருக்கு துன்யா கிடைத்த போது, அந்த துன்யா அவரை சாய்த்து விட்டது. அவர் அந்த துன்யாவின் பக்கம் சாய்ந்துவிட்டார்.‌ ஆனால், இப்னு உமரை தவிர.

அவர்களுடைய மாணவர் சயீது இப்னு முஸய்யிப் சொல்கின்றார்: அப்துல்லாஹ் இப்னு உமர் மரணிக்கிறார்கள். அவர் மரணித்த தினத்தன்று ஒருவரைப் போன்ற அமலோடு நான் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று விரும்பினால், அது அப்துல்லாஹ் இப்னு உமர் உடைய அமல் தான். அந்த அளவிற்கு வணக்க வழிபாடுகளை அவர்கள் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இமாம் ஸுஹ்ரி சொல்கின்றார்கள்: மார்க்க பத்வாக்களில் இவருடைய தீர்ப்பு இவருடைய அறிவுக்கு சமமாக இன்னொருவரை நாம் கொண்டுவர முடியாது. ஏனென்றால்,ரசூலுல்லாஹ்விற்கு பிறகு இவர்கள் 60ஆண்டுகள் வாழ்ந்து இருக்கின்றார்கள்.

இமாம் மாலிக் சொல்கிறார்கள்: இப்னு உமர் அவர்கள் 86-ஆவது வயதில் மரணிக்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் ஏறக்குறைய 60ஆண்டுகள் பத்வா கொடுக்கக்கூடிய முஃப்தியாக இருந்தார்கள். உலகத்தின் பல பாகங்களிலிருந்து மக்கள் அவர்களிடத்தில் வந்து கல்வி படித்துக் கொண்டு சென்றார்கள்.

அன்பானவர்களே! இப்படிப்பட்ட ஒரு நபித்தோழர் உடைய வாழ்க்கையிலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும்.

அவர்களுடைய பேணுதல், அவர்களுடைய இறையச்சம், அல்லாஹ்விற்காக வேண்டி தன்னிடத்தில் இருக்கக்கூடிய செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுப்பது, தான் விரும்புவதை அல்லாஹ்வுடைய பாதையில் அர்ப்பணம் செய்வது, அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்வது.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இத்தகைய நபித்தோழர்கள் உடைய பாதையில் நமது வாழ்க்கையையும் அமைத்து அருள்வானாக! இந்த தோழர்களை நேசிப்பதன் மூலமாக அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்மையும் அந்த தோழர்களோடு எழுப்புவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ عَمَّهُ غَابَ عَنْ قِتَالِ بَدْرٍ، فَقَالَ: " غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُشْرِكِينَ، لَئِنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالًا لِلْمُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أَصْنَعُ، فَلَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، انْكَشَفَ الْمُسْلِمُونَ، فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلَاءِ - يَعْنِي أَصْحَابَهُ -، وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا جَاءَ بِهِ هَؤُلَاءِ " يَعْنِي الْمُشْرِكِينَ، ثُمَّ تَقَدَّمَ فَلَقِيَهُ سَعْدٌ لِأُخْرَاهَا دُونَ أُحُدٍ، - وَقَالَ يَزِيدُ بِبَغْدَادَ: بِأُخْرَاهَا دُونَ أُحُدٍ - فَقَالَ سَعْدٌ: أَنَا مَعَكَ، قَالَ سَعْدٌ: فَلَمْ أَسْتَطِعْ أَنْ أَصْنَعَ مَا صَنَعَ، فَوُجِدَ فِيهِ بِضْعٌ وَثَمَانُونَ مِنْ بَيْنِ ضَرْبَةٍ بِسَيْفٍ، وَطَعْنَةٍ بِرُمْحٍ، وَرَمْيَةٍ بِسَهْمٍ، قَالَ: فَكُنَّا نَقُولُ فِيهِ وَفِي أَصْحَابِهِ نَزَلَتْ: {فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ} [الأحزاب: 23] (مسند أحمد مخرجا- 13085)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنِي مَحْمُودٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا، فَأَقُصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ غُلاَمًا شَابًّا، وَكُنْتُ أَنَامُ فِي المَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي، فَذَهَبَا بِي إِلَى النَّارِ، فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيِّ البِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ وَإِذَا فِيهَا أُنَاسٌ قَدْ عَرَفْتُهُمْ، فَجَعَلْتُ أَقُولُ: أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ، قَالَ: فَلَقِيَنَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي: لَمْ تُرَعْ، (صحيح البخاري 1121)

فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ» فَكَانَ بَعْدُ لاَ يَنَامُ مِنَ اللَّيْلِ إِلَّا قَلِيلًا (صحيح البخاري- 1122)

குறிப்பு 3)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ، وَلَنْ يَفْعَلَ، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، أَوْ يَفِرُّونَ مِنْهُ، صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ القِيَامَةِ، وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبَ، وَكُلِّفَ أَنْ يَنْفُخَ [ص:43] فِيهَا، وَلَيْسَ بِنَافِخٍ» قَالَ سُفْيَانُ: وَصَلَهُ لَنا أَيُّوبُ، وَقَالَ قُتَيْبَةُ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: قَوْلَهُ: «مَنْ كَذَبَ فِي رُؤْيَاهُ» وَقَالَ شُعْبَةُ: عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ، سَمِعْتُ عِكْرِمَةَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: قَوْلَهُ: «مَنْ صَوَّرَ صُورَةً، وَمَنْ تَحَلَّمَ، وَمَنِ اسْتَمَعَ». حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «مَنِ اسْتَمَعَ، وَمَنْ تَحَلَّمَ، وَمَنْ صَوَّرَ» نَحْوَهُ. تَابَعَهُ هِشَامٌ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَوْلَهُ (صحيح البخاري- 7042)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/