HOME      Khutba      மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 3-3 | Tamil Bayan - 420   
 

மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 3-3 | Tamil Bayan - 420

           

மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 3-3 | Tamil Bayan - 420


மரணத்தருவாயில் மகான்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : மரணத்தருவாயில் மகான்கள் (அமர்வு 3-3)

வரிசை : 420

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 29-07-2016 | 24-10-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை புகழ்ந்தவனாக, வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக, அல்லாஹ்வுடைய தூதராகவும், அவனுடைய அடியானாகவும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறியவனாக, அந்த தூதரின் மீது அல்லாஹ்வுடைய ஸலவாத்தும், ஸலாமும் உண்டாகட்டும்.

அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும், ஸலாமும் உண்டாகட்டும் என்று துஆ கேட்டவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக அல்லாஹ்வை பயந்து வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாகஇந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னித்து நல்ல முடிவை நமக்கு தருவானாக! கெட்ட முடிவிலிருந்தும், தீய காரியங்கள், தீய செயல்களிலிருந்தும், மறுமையின் நஷ்டத்திலிருந்தும் என்னையும் உங்களையும்எல்லா முஃமின்களையும் அல்லாஹு தஆலா பாதுகாத்தருள்வானாக! அமீன்.

அன்பானவர்களே! தொடர்ந்து நமது மூத்தவர்கள், கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள் போன்ற நல்லோர்களுடைய வாழ்க்கையின் முடிவு எப்படி இருந்தது? மரண தருவாயில் அவர்களுடைய எண்ணம், அவர்களுடைய தேட்டமெல்லாம் எப்படி இருந்தது? என்பதைப் பற்றி தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம்.

சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்; ஜும்ஆவுடைய உரையில் இப்படி பேசப்படுகிறதே?குர்ஆனிலும், ஹதீஸிலிருந்தும் தானே கூற வேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய அல்குர்ஆனில் எப்படி தன்னைப் பற்றி உயர்வாக, மேன்மையாக புகழ்ந்து கூறுகிறானோ, அது போன்று தான், தான் அனுப்பிய தூதர்களைப் பற்றி, அவர்களுடைய வாழ்நாள் எப்படி இருந்தது? அவர்கள் எப்படி அல்லாஹ்வை நேசித்தார்கள்?வணங்கினார்கள்? என்பதைப் பற்றி அல்குர்ஆனுடைய பெரும் பகுதியில் அவர்களுடைய வரலாறை நமக்கு கூறுவது மட்டுமல்ல,அதில் படிப்பினை இருக்கிறது என்றும் கூறுகிறான்.

لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் 12:111)

ஆகவே, நபிமார்களைப் பற்றி பேசுவதும், அந்த நபிமார்களை தொடர்ந்து, யாஸின் சூராவில் ஹபீப் நஜ்ஜாரைப் பற்றியும் அல்லாஹ் கூறுகிறான். லுக்மானைப் பற்றியும் அல்லாஹ் கூறுகிறான். 'அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்கின்ற குகைத் தோழர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல நபித்தோழர்களை அல்லாஹு தஆலா குர்ஆனில் கூறுகின்றான்.

இப்படி நல்லவர்களைப் பற்றி பேசுவது, நமக்கு இறையச்சத்தை தூண்டுகிறது. அவர்களைப் போன்று நாமும் வாழவேண்டுமென்ற ஆசையை, ஆர்வத்தை நமக்கு ஊட்டுகிறது என்ற அடிப்படையில், தக்வாவைப் பற்றி நாம் உரையாற்றும் பொழுது, கண்டிப்பாக அந்த பயத்தை பேணி அதன் அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அந்த நல்லவர்களையும் நாம் நினைவு கூர்ந்து தான் ஆக வேண்டும்.

அப்போதுதான், அவர்கள் தக்வாவை எப்படி புரிந்திருந்தார்கள்?எப்படி செயல்படுத்தினார்கள்? என்பதை எதார்த்தமாக நாம் புரிந்து, நமது வாழ்க்கையிலும் அந்த தக்வாவை கடைபிடிப்பதற்குரிய ஒரு பாடத்தைபடிப்பினையை பெறமுடியும்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷரீஅத்தை போதிப்பதற்காக, அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காக, ரப்புல் ஆலமீனின் சிறப்பை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களது தோழர்களின் சிறப்புகளை எத்தனை நூறு, ஆயிரம் ஹதீஸ்களில் கூறியிருக்கிறார்கள்.

இன்னும் நீங்கள் ஆழமாக தெரிய வேண்டுமென்றால், ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை அல்லாஹு தஆலா தவ்ராத்தில் புகழ்ந்திருக்கிறான்.

அபூபக்ருடைய வர்ணனையை அவர்களுடைய முக அடையாளங்கள் முதற்கொண்டு அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா தவ்ராத்தில் கூறியிருக்கிறான் என்றால், உமர் ஃபாரூக், உஸ்மான், அலீ இன்னும் பெரும் பெரும் ஸஹாபாக்களைப் பற்றிய வர்ணனைகளை அல்லாஹ் தஆலா தவ்ராத்தில் கூறியிருக்கிறான், இன்ஜிலில் கூறியிருக்கிறான், குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றால் அந்த நல்லவர்களைப் பற்றி பேசுவது எப்படி மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாக ஆகும்?

அவர்களைப் பற்றி நாம் பேசும்பொழுது அவர்களுடைய தன்மைகளை, குணங்களை, இபாதத்துகளைப் பற்றி பேசும்பொழுது அதன் மூலமாக நாம் அல்லாஹ்வை புகழ்கிறோம், அதன் மூலமான நாம் அல்லாஹ்வை நெருங்குவதற்குண்டான வழிகளைத் தேடுகிறோமே தவிர, தனி மனிதரை தனிப்பட்ட முறையில் புகழ்வதாக இதை சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது ஒரு தவறான சிந்தனை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அந்த தொடரில், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில்,அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மனத்தூய்மையுடன் நடந்துக் கொண்ட ஒரு ஸஹாபியைப் பற்றி அவருடைய மரண நேரத்தைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள இருக்கிறோம்.

அவர்கள் யார்என்றால்,ஸஅது இப்னு ரபீஃ என்ற நபித்தோழர். இவர் மதீனாவாசிகளை சேர்ந்த நபித்தோழர்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் அழைப்புப் பணியில் பதிமூன்று ஆண்டு காலங்கள் சிரமப்பட்டதற்கும், நபியுடைய தோழர்கள் பலர், அல்லாஹ்வுடைய தீனிற்காகவே கொல்லப்பட்தற்கெல்லாம் முடிவு கட்டிய அன்ஸாரி தோழர்களில் ஒருவர் தான், ஸஅது இப்னு ரபீஃ.

அந்த தோழர்களின் இந்த முடிவு எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி வரலாற்றில் நாம் பார்க்கும் பொழுது, மதினாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் செய்ய வருகிறார்கள்.

பதினோறாவது ஆண்டில் மதினாவைச் சேர்ந்த ஆறு பேர் இஸ்லாமை ஏற்று திரும்பினார்கள். அந்த ஆறு பேருடைய அழைப்புப் பணியினால், என்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த என்பதிற்கும் மேற்பட்ட குடும்பத்தார்களில் ஸஅது இப்னு ரபீஃயும் ஒருவர்.

இவரும் இவரைப் போன்ற இன்னும் சிலரும் மதினாவிலிருந்து வரும்பொழுதே ஒரு பக்கம் தல்பியாவை கூறுகிறார்கள். இன்னொரு பக்கம், அவர்கள் கூறுகிறார்கள்;அல்லாஹ்வுடைய தூதரை காஃபிர்களுக்கு மத்தியில் நாம் விட்டு வைப்பது சரியா? நாமெல்லாம் நமது குடும்பத்தாரோடு மதினாவில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க துன்பப்பட்ட நிலையில், அடிக்கப்பட்ட நிலையில் ரஸூலுல்லாஹ்வை மக்காவில் நாம் எப்படி விட்டு வைப்பது?

கண்டிப்பாக நாம் மதினாவிற்கு அழைத்து வருவோம். நமக்குள்ள கண்ணியத்தை, பாதுகாப்பை அல்லாஹ்வுடைய தூதருக்கு கொடுத்தே தீர வேண்டும் என்று திரும்ப திரும்ப முழங்கிக் கொண்டே வருகிறார்கள்.

இறுதியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மினாவில், அகபாவில் சந்தித்து கண்டிப்பாக நீங்கள் வந்தே ஆக வேண்டும்; உங்களை நாங்கள் பாதுகாப்போம், எங்களது மனைவியை, பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாப்பதைப் போன்று உங்களை பாதுகாப்போம் என்று வாக்களிக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்;இதனால் நீங்கள் கொல்லப்படலாம், உங்களது மனைவிகள் கணவனை இழக்கலாம், பிள்ளைகள் தந்தையை இழக்கலாம், அரபுகளெல்லாம் உங்களை எதிர்த்து நிற்கலாம்.

அந்த தோழர்கள் மிக அமைதியாக கேட்டார்கள்;இந்த சோதனைகளெல்லாம் நாங்கள் சந்தித்ததற்கு பிறகு, அல்லாஹ்வுடைய தூதரே! எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று கூறினார்கள்.

இதை கேட்டவுடன் எண்பது தோழர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு ரஸூலுல்லாஹ்வுடைய கரத்தை பற்றிப் பிடித்துக் கொண்டு பைஅத் செய்வதற்காக அவர்கள் முன் வந்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம், பக்கம் : 133, 134, 145,146.

அவர்களில் ஒருவர் தான் ஸஅது இப்னு ரபீஃ என்பவர். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்கு வருகிறார்கள், தோழர்களும் வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது இந்த ஸஅதுடைய இன்னொரு தியாகத்தை நாம் பார்த்தாக வேண்டும். மதினாவில் ஒரு செல்வ செழிப்பு மிக்க ஒரு நல்ல வசதியான நிலையில் இருந்த இந்த நபித்தோழர், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், மக்காவில் பெரிய செல்வ செழிப்பில் இருந்த ஒரு குரைஷி பரம்பரையை சேர்ந்த முஹாஜிரை அழைத்து, உங்கள் இருவரையும் நான் சகோதரனாக ஆக்கி விட்டேன். ஸஅதே! அப்துர்ரஹ்மானை சகோதரனாக ஏற்று அழைத்துச் செல் என்று கூறுகிறார்கள். (1)

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2048.

இன்று சொந்த சகோதரர்களுக்கே கொடுக்காத ஒரு நிலை, கவனிக்காத ஒரு நிலை இருக்க இங்கே இஸ்லாமிற்காக வேண்டி,அல்லாஹ்வுடைய தீனிற்காக, அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக,அல்லாஹ்வுடைய நபியால் சகோதரனாக ஆக்கப்பட்ட ஒரு ஏழை முஹாஜிரைஒரு செல்வந்த அன்சாரிக்கு மத்தியில் சகோதரத்துவம் ஏற்படுத்தினார்கள்.

முஹாஜிர் என்பதற்கு தமிழில் பொருள் கூறுவதாக இருந்தால் 'ஊரற்ற நாடோடி'என்று கூறலாம். ஆனால், இந்த முஹாஜிர், அல்லாஹ்விற்காக தங்களது ஊரை விருப்பத்தோடு துறந்தவர்கள்.

நபியின் இந்த ஸஹாபாக்களுக்கு எல்லா வசதிகளும் இருந்து, எல்லா கண்ணியங்களும் இருந்து அல்லாஹ்வை வணங்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த கண்ணியம், அந்த மதிப்பு, அந்த தலைமைத்துவம் எல்லாவற்றையும் விட்டு விட்டு மக்காவிற்கு வந்தார்கள், ஃபக்கீர்களாக வந்தார்கள்.

எனவேதான், உஸ்மானை, அப்துர் ரஹ்மானை, அபூபக்ரை இப்படி செல்வ செழிப்பிலிருந்த பெரும் பெரும் ஸஹாபாக்களை எல்லாம் அல்லாஹு தஆலா ஃபக்கீர்கள் என்று தான் கூறுகிறான்.

அவர்கள்,தனது அத்தனை சொத்துகளையும் இழந்து விட்டு, உடுத்திய உடையுடன் வந்தார்கள். வேறு எதுவும் அவர்கள் கையில் எடுத்து வரவில்லை.

لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு). (அல்குர்ஆன் 59:8)

அப்துர்ரஹ்மானை ஸஅது இப்னு ரபீஃ அழைத்துச் செல்கிறார்கள். வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு அதிசயம் நிகழ்ந்ததில்லை, நிகழ முடியாது. அல்லாஹ்வுடைய தூதரின் தர்பியத்தில் உருவானவர்களை தவிர வேறு யாரும் இப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பை செய்ய முடியாது.

இங்கே ஸஅது அழைத்துச் செல்கிறார், அவரை வீட்டில் அமர வைத்து ஏதோ இன்று தனது ஆடிட்டர்களுக்கு, அட்வொகேட்டர்களுக்கு சொத்தைப் பற்றி விவரிப்பார்கள் அல்லவா!  அது போன்று அப்துர்ரஹ்மானிற்கு என்னிடத்தில் இன்னன்ன சொத்து இருக்கிறது, விவசாய நிலம் இருக்கிறது, பேரித்தம் பழம் தோட்டம் இருக்கிறது, தங்கம் வெள்ளி இருக்கிறது என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்துர்ரஹ்மானிற்கு புரியவில்லை, இவற்றையெல்லாம் ஏன் என்னிடத்தில் கூறுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் என்னுடைய செல்வம், இன்றையிலிருந்து இதனுடைய சமப்பாதி  உங்களுடையது என்று ஸஅது கூறுகிறார்கள்.

அதோடு நின்று விடவில்லை.சத்தம் போடுகிறார், அழைக்கிறார். வீட்டிற்குள் இருந்து இரண்டு மனைவிகள் வருகிறார்கள்.

கூறுகிறார்கள்: அப்துர்ரஹ்மான்! இதோ பார், இவர்கள் என்னுடைய மனைவிகள். இந்த இரண்டு மனைவிகளில் உன்னை யார் கவருகிறாரோ, யாருடைய முகத் தோற்றம் உனக்கு பிடிக்கிறதோ, நீ சொல் நான் அவர்களை தலாக் செய்துவிடுகிறேன், இத்தா முடிந்தவுடன் நீ அவளை திருமணம் செய்து கொள். (1)

அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2048, 2049, 2293.

எப்படிப்பட்ட தியாகம்!என்ன ஈமானிய உணர்வு பாருங்கள்.

அல்லாஹ்வுடைய நேசம் கிடைக்க வேண்டும், ரஸுலுல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்க வேண்டும்.அமல்களைக் கொண்டு மட்டும் மறுமையின் வெற்றி அல்ல. அதற்கும் மேலாக அல்லாஹ்வுடைய பொருத்தம் என்று இருக்கிறது.அது சேர வேண்டும்.

தவறான நடத்தையில் சென்ற ஒரு பெண், ஒரு நாய்க்கு தண்ணீர் கொடுத்ததால் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைத்தது.பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான்.(2)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3321.

அல்லாஹ்வின் பொருத்தம் தான் அடிப்படை. அல்லாஹ்வின் பொருத்தம் சேர்ந்து விட்டால் தான் அமல்கள் கபூலாகும்.

நீங்கள் மலை போன்ற அமல் செய்கிறீர்கள்.ஆனால், அந்த அமல்களில் அல்லாஹ்வுடைய பொருத்தம், அன்பு கிடைத்ததா? அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக, ரப்பு என்னைக் கொண்டு மகிழ வேண்டும் என்பதற்காக செய்கிறீர்களா? என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.

அந்த பொருத்தம் கிடைத்து விட்டால், எல்லாம் கை கூடி விடும். அந்த பொருத்தம் எதிர்பார்க்கப்படவில்லை என்றால் நம்முடைய அமல்களெல்லாம் குப்பைகளுக்கு கூட சமமில்லை.

நபித்தோழர்களைப் பற்றி அல்லாஹ் என்னவெல்லாம் கூறுகிறானோ, அங்கே நீங்கள் இந்த வசனத்தை பார்க்கலாம்.

يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا

அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர். (அல்குர்ஆன் 48 : 29)

நபித்தோழர்களைப் பற்றி,அவர்கள் செய்த அந்த தியாகம், அவர்களுடைய வணக்க வழிபாடு பற்றி கூறக்கூடிய அத்தனை இடங்களிலும் சான்றுதல் கொடுக்கின்றான்.  இவர்கள் இதையெல்லாம்அல்லாஹ்வுடைய பொருத்ததிற்காக செய்தார்கள்.

சம்பவத்தின் தொடர் : இதையெல்லாம் கேட்டு அப்துர்ரஹ்மான் கூறுகிறார்: அல்லாஹ் உனக்கு செல்வத்தில் பரக்கத் செய்யட்டும், உனது மனைவிமார்களிலும் அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும், எனக்கு நீ கடைத் தெருவை காட்டு.

அன்பானவர்களே! இத்தகைய ஒரு தியாக மனப்பானமைக்கும் மேலாக தன்னையும், தனது குடும்பத்தையுமே இரண்டாக பங்கு வைக்கக் கூடிய அளவிற்கு ஒரு ஈமானிய உணர்வு பெற்றவர் தான் ஸஅது இப்னு ரபீஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இவர்களுடைய மரண நேரத்தை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். ஏனென்றால், இவருடைய மரணத்தைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கவலைப்பட்டார்கள்.

உங்களுக்கு தெரியும்; உஹதுப் போரைப் பற்றிய வர்ணனை, என்ன நிகழ்ந்தது என்பதை.ஆரம்பித்தது ஒரு விதமாக முடிந்து ஒரு விதமாக.

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே தலை உடைபட்டு, பல்கள் உடைந்து, முகங்களில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டு மயக்கப்பட்டு விழக்கூடிய நிலைக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாக்கப்பட்டார்கள் என்றால், மற்ற தோழர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?(3)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1791.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உள்ளத்தைப் பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதரால் இப்படி இலட்சக் கணக்கான தோழர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள எப்படி முடிந்தது!

ஏன்? அவர்கள் ரஸூலாக இருந்தார்கள், உயர்ந்த மனிதராக இருந்தார்கள். ஓரு தந்தையின் ஸ்தானத்தில் இந்த உம்மத்திற்கு இருந்தார்கள். ஒரு அக்கறை உள்ள நண்பனாக இருந்தார்கள், இந்த உம்மத்தை வழிகாட்டக் கூடிய ஒரு வழிகாட்டியாக இருந்தார்கள்.

அவர்களை விட இந்த உம்மத்தின் மீது அக்கறை கொண்டவர் யாரும் இருக்க முடியாது என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9 : 128)

அல்லாஹ்விற்கு முன் நிற்கின்ற ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நீண்ட நீண்ட குர்ஆன் வசனங்களை, ஆயத்துகளை, சூராக்களை ஓத வேண்டும் என்று கூறுபவர்கள், மஸ்ஜிதில் ஒரு குழந்தை அழுகின்ற சப்தத்தை கேட்டுவிட்டால், தொழுகையை சுறுக்கமாக முடித்து விட்டு கூறுவார்கள்:

அந்த குழந்தையின் அழுகை எனது தொழுகையை சுறுக்கமாக்கி விட்டது. அந்த குழந்தை அழும்பொழுது அந்த தாய் படுகின்ற வேதனையை நினைத்தேன், எனது தொழுகையை சுறுக்கிக் கொண்டேன் என்று கூறுகிறார்கள். (4)

அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 707 710 868.

ரப்போடு இருக்கின்ற ஆன்மீக தொடர்பின் நேரத்தில் கூட தன்னுடைய உம்மத்தை மறக்காத மாபெரும் நபியைத் தான் நாம் அடையப் பெற்றிருக்கிறோம்.

இன்று நம்மில் பலர்,அவர்களை நேசிக்கிறார்களோஇல்லையோ கண்டிப்பாக நாம் எல்லோரையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்தார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதுமே தங்களது தோழர்களை தேடுவார்கள். எங்கே? எங்கே என்று கேட்பார்கள்.

உஹது போர் முடிந்து விட்டது.பலர் காயத்தோடு வருகிறார்கள். பலரை அவர்களுடைய குடும்பத்தார்கள் காயப்பட்ட நிலையில் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.சிலரை ஜனாஸாவாக, ஷஹீதாக தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதருடைய கோலத்தைப் பாருங்கள். அத்தனை தோழர்கள், ஏறக்குறைய 700ஸஹாபாக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த 700ஸஹாபாக்களிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்கு நேர்ந்திருக்கின்ற அந்த இக்கட்டான நிலையில் கூட வருபவர் யார்?

யாருடைய ஜனாஸா? யார் காயப்பட்டவர்? யார் உயிரோடு வருகிறார்?என்பதையெல்லாம் அடையாளம் கண்டுக் கொண்டு, அதை யாரை தான் காணவில்லையோ, அவரைப் பற்றி கேட்கிறார்கள் என்றால் இந்த உம்மத்தைப் பற்றிய அக்கறை, இந்த உம்மத்தின் மீது ரஸூலுல்லாஹ்வின் பேராசை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

இப்படி எல்லோரையும் அழைத்துக் கொண்டு வரும்பொழுது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்: நான் ஸஅதை பார்க்க முடியவில்லையே, ஸஅது எங்கே? தேடுங்கள் எனக்காக.அவர் உயிருடன் இருக்கிறாரா?  இறந்த நிலையில் இருக்கிறாரா?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி மட்டும் கூறவில்லை. அவரை மரணத்தருவாயில் யாராவது பார்த்தால் நீங்கள் எனது ஸலாமை அவருக்கு கூறுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஒருவருடைய மரண நேரத்தில் ரஸூலுல்லாஹ்வுடைய ஸலாம் கிடைத்துவிட்டால் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாத்துகு' உன் மீது அல்லாஹ்வுடைய ஸலாம், அல்லாஹ்வுடைய ரஹ்மத், அல்லாஹ்வுடைய பரக்கத் உண்டாகட்டும் என்றால் அவர் சொர்க்கவாசி.

உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு அவரும் அன்ஸாரி தோழர்தான், அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவரை நான் தேடி வருகிறேன் என்று ஓடுகிறார்கள். உபையிடம் கூறுகிறார்கள்:

எனது ஸலாமை நீங்கள் அவருக்கு கூறுங்கள். மேலும் அல்லாஹ்வுடைய தூதர் உங்களை நலம் விசாரிக்கிறார் என்று கூறுங்கள்.

உங்களுடைய மரண நிலையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன நடக்கிறது?

நூல் : சியறு அஃலாமின் நுபலா 1/318, 319, 320,

எவ்வளவு பெரிய அக்கறை பாருங்கள், இந்த அன்ஸாரித் தோழர்களில் ஒரு கூட்டம் என்ன செய்தது என்று தெரியுமா? இங்கே சிலர் செல்வத்தை பார்த்து, செல்வத்தை சேகரிக்க ஓடி வருகிறார்கள்.

சிலரோ ரஸூலுல்லாஹ் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு அமர்ந்து விடுகிறார்கள்.

ஆனால், அன்ஸாரிகளில் ஒரு பெரும் கூட்டம் தங்களது சமூக மக்களைப் பார்த்து மிகப்பெரிய ஒரு சப்தமிட்டு கூறுகிறார்கள்.

ரஸூலுல்லாஹ் மரணித்துவிட்டார்கள் என்றால் நீங்கள் ஜிஹாதை விட்டு விடுவீர்களா? மார்க்கத்தை விட்டு விடுவீர்களா? அர்பணிப்பை விட்டுவிடுவீர்களா? எதற்காக அல்லாஹ்வுடைய தூதர் இறந்தாரோ, அதற்காக நீங்களும் சாவுங்கள்.

அவர்களுக்குப் பிறகு நமக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது என்று வீர உரையாற்றியது மட்டுமல்ல, அவர்களில் ஒருவர் கூறுகிறார்:

உஹது மலையிலிருந்து சொர்க்கத்தின் வாடை வீசுவதை, சொர்க்கத்தின் நறுமணம் வீசுவதை நான் உணர்கிறேன் என்று உள்ளே நுழைகிறார்.

இறுதியாக ஷஹீதாகி அவருடைய உடலை எடுத்து வரும்பொழுது 90 -க்கும் மேற்பட்ட காயங்களோடு அவரை அடையாளம் காண முடியாமல், அவருடைய சகோதரி அவருடைய ஒரு விரலை வைத்து அடையாளம் கண்டு கொண்டு, இவர் என்னுடைய சகோதரர் நழ்ர் இப்னு அனஸ் என்று கூறுகிறாள்.(5)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4048.

அன்பானவர்களே! அத்தகைய தோழர்களில் ஒருவர் தான் ஸஅது இப்னு ரபீஃ அவர்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழைப்பை ஏற்று நான் ஓடோடி செல்கிறேன். அங்கே பார்த்தால் கடுமையான காயத்திற்குட்பட்டவர்களில் அங்கே ஸஅது இப்னு ரபீஃ இருக்கிறார்.

அவருடைய இறுதி மூச்சை அங்கே விட்டுக் கொண்டிருக்கிறார். எழுபதுக்கும் மேற்பட்ட காயங்களை அவருடைய உடலில் நான் பார்க்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்கு ஸலாம் கூறினார்கள் என்று கூறினேன்.

அங்கே அந்த தோழர்களுடைய மன அமைதியை பாருங்கள். இந்த மன அமைதி, மன நிம்மதி கிடைக்கப் பெறுவார்கள்.

யார் அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்தார்களோ அவர்கள், மரண நேரத்தில் மனநிம்மதியும், திருப்தியும், ஒரு விதமான ஆன்மீக உணர்வுகளையும், இறை உணர்வுகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.

யாருடைய துன்யாவில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரையும் தவிர வேறு யாரும் இடம்பிடிக்கவில்லையோ, அப்படிப்பட்டவர்களுக்கு மரண நேரத்தில் வேறு எந்த சிந்தனையும் இருக்காது.

அல்லாஹ்வுடைய சிந்தனை, மறுமையின் சிந்தனை, சொர்க்கம், நரகம் இது தான் அவர்களுக்கு இருக்கும்.

இன்று,நாம் வாழும்பொழுதே காசுக்காக, பணத்திற்காக இப்படி உள்ளத்தில் நாம் துன்யாவை வைத்திருக்கிறோம். குப்பைகளை, கூழங்களை நாம் விட்டுச் செல்லக்கூடிய தங்கம், வெள்ளி இந்த உலக செல்வங்களை உள்ளே நுழைத்து வைத்திருக்கிறோம்.

எனவே, துன்யாவை விட்டு பிரிவதை இவர்கள் விரும்பவே மாட்டார்கள். யார் அல்லாஹ்விற்காக வாழ்ந்தார்களோ, அல்லாஹ்வுடைய தூதர்களுக்காக வாழ்ந்தார்களோ, அவர்கள் அல்லாஹ்வை சந்திப்பதற்காக ஆர்வத்தோடு தயாராகுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரை சந்திப்பதற்கு பாசத்தோடு விருப்பத்தோடு தயாராகுவார்கள். மக்களெல்லாம் அழுதால் இவர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

காரணம், நான் அல்லாஹ்வை சந்திக்கப் போகிறேன், நான் ரஸூலுல்லாஹ்வை சந்திக்கப் போகிறேன்.

அல்லாஹு தஆலா யூதர்களைப் பற்றி கூறுகிறான்:

وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ

அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.(அல்குர்ஆன் 2:96)

அந்த மாதிரி ஒரு மனநிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் நமது உள்ளங்களை சுத்தப்படுத்துவானாக!

சம்பவத்தின் தொடர் : ஸஅதிடத்தில் உபை கூறுகிறார், அல்லாஹ்வுடைய தூதர் உங்களுக்கு ஸலாம் கூறுகிறார். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அந்த வேதனையிலும் ஸஅது கூறுகிறார்கள்:பனிரண்டிற்கும் மேற்பட்ட ஈட்டியின் தாக்குதல்களை நான் என்னுடைய உடலில் அனுபவித்தேன்.

அவர் மயக்க நிலையில் விழுந்தற்குப் பிறகு அந்த எதிரிகள் தாக்கிருக்கிறார்கள். ஏனென்றால், உஹதுப் போரில் வெறும் சண்டை மட்டும் நடக்கவில்லை. சண்டையில் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்களைக் கூட அந்த முஷ்ரிக்குகள் அவர்களின் உடல்களை சிதைத்தார்கள். சிலருடைய மூக்கை அறுத்தார்கள், காதை அறுத்தார்கள், கண்ணை தோண்டினார்கள், நெஞ்சைப் பிளந்தார்கள்.

நூல் : சியறு அஃலாமின் நுபலா 1/318, 319, 320,

இது ஆச்சரியப்படுகின்ற விஷயமல்ல.இது முஷ்ரிக்குகளுடைய குணம்.அவர்களுடைய பண்பாடு.

காரணம்,அவர்களுடைய உள்ளத்தில் இப்லீஸ் இருக்கிறான்.அவன் இப்படி தான் செய்யச் சொல்வான். அவர்கள் இந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி.

இன்று என்ன நடக்கிறது.முஸ்லிம்கள் போர் செய்யவில்லையா? முஸ்லிம்களுடைய யுத்தங்களை உலக வரலாறு பார்க்கவில்லையா?

ஒரு ஆதாரத்தை கொண்டு வர முடியுமா? முஸ்லிம்களின் யுத்தங்களில் உருவங்களை சிதைத்தார்கள். கொல்லப்பட்டவர்களை அவர்கள் சிதைத்தார்கள் என்று.

ஆனால், இங்கு என்ன நடக்கிறது, உலகத்துக்கெல்லாம் மனித உரிமையை கற்றுக் கொடுக்கக்கூடியவர் நாங்கள், மறுமையை பாதுகாக்கக் கூடியவர்கள் நாங்கள் என்று எங்களது ராணுவத்திற்காக நாங்கள் தனிப்பட்ட முறையில், விசேஷமான முறையில் பயிற்சி கொடுத்திருக்கிறோம் என்று கூறிக் கொண்டு கொல்லப்பட்டவர்களோடு எப்படி அநாகரிகமாக, அநியாயமாக, அசிங்கமாக மிகப் பெரிய கேவலமான முறையில் நடந்துக் கொள்கிறார்கள்.

இதைத் தான் அன்றைய காலத்தில் முஷ்ரிக்குகள் செய்தார்கள். 'ஷிர்க்' அது எந்த காலத்தில் இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, அது ஒன்றைதான் ஏவும். அநியாயத்தையும், அக்கிரமத்தையும், அசிங்கத்தையும், ஆபாசத்தையும், கேவலத்தையும் ஏவும்.

'ஈமான்' அது எங்கிருந்தாலும் சரி, எந்தக் காலத்தில் இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் அச்சத்தை கொடுக்கும், ஒழுக்கத்தை கொடுக்கும், நேர்மையை கொடுக்கும், நீதத்தை கொடுக்கும். மனித உரிமைகளை, மனிதாபிமானங்களை, மனித தன்மைகளை தூண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஈமானை தான் போதித்தார்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கும் ஸலாம் கூறுங்கள், உங்களுக்கும் ஸலாம் உண்டாவதாக என்று கூறுகிறார்கள்.

பிறகு கூறுகிறார்கள், அல்லாஹ்வுடைய தூதரிடம் கூறுங்கள். சொர்க்கத்தின் வாடையை நுகர்ந்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, வந்த அன்ஸாரித் தோழர் உபைதிடம் கூறுகிறார். எனது சமுதாய மக்களுக்கு கூறுங்கள், அல்லாஹ்வுடைய தூதரின் பக்கம் ஒரு எதிரி நெருங்கி விட்டான் என்றால், நீங்கள் மறுமையில் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது என்று எனது அன்ஸாரி சமுதாயத்திற்கு கூறுங்கள்.

இந்த நிலையில் அவரின் உயிர் போகிறது.மனைவியை பற்றி நினைத்தாரா? இரண்டு பெண் பிள்ளைகளை விட்டுச் செல்கிறார். என் பிள்ளைகளுக்கு வஸியத் செய்யுங்கள். இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள், இவர் பார்த்துக் கொள்ளட்டும், அவர் பார்த்துக் கொள்ளட்டும், என்று மனைவியை பற்றி நினைத்தார்களா?

நினைவு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இருந்தது.

அன்பானவர்களே! இதுதான் அந்த அன்ஸாரியினுடைய கவலையாக, அவருடைய ஆசையாக இருந்தது.

மேலும் கூறுகிறார்கள், உபையே! ரஸூலுல்லாஹ்விற்கு என் ஸலாமை திரும்ப சொல். மேலும், அல்லாஹ்வுடைய தூதருக்கு ஜஸாக்கல்லாஹ் கைராவை சொல்.

இன்று என்ன நடக்கும், சமுதாயத்திற்காக ஒரு தலைவனுக்கு கீழே அர்பணிப்புகளை செய்து கடைசியில் இழப்புகளை சந்திக்கும்பொழுது உனது பேச்சைக் கேட்டுதான் நடுத்தெருவில் நிற்கிறேன் என்று கூறுவார்கள்.

அன்பானவர்களே! இங்கே அந்த தோழர் தனது மனைவி, பிள்ளைகளெல்லாம் விட்டு விட்டு கொல்லப்பட்ட நிலையில், அதுவும் கோரமாக கொல்லப்பட்ட நிலையில், மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரஸூலுல்லாஹ்விற்கு துஆ செய்கிறார்.

அல்லாஹ் என் சார்பாக உங்களுக்கு கூலி கொடுப்பானாக! எத்தகைய நற்கூலி! இதற்கு முன்னால் ஒரு நபிக்கு தன்னுடைய உம்மத்தின் சார்பாக கொடுத்த கூலிகளெல்லாம் சிறந்த கூலியை உங்களுக்காக கொடுப்பானாக!

நூல் : சியறு அஃலாமின் நுபலா 1/318, 319, 320,

அன்பானவர்களே! இந்த ஒரு நபித்தோழருடைய வாழ்க்கை வரலாறு நமக்கு பெரிய படிப்பினை மிக்கதாக இருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவே வாழ்ந்து, அல்லாஹ்வுடைய தீனை பாதுகாப்பதற்காகவே வாழ்ந்து, வாலிப காலத்தில் செல்வ செழிப்பின் உயர்ந்த நிலையில் இருந்தும் தனது உயிரை கொடுத்தார்கள். இறக்கின்ற நிலையில் கூட, அவர்களது கவலை ரஸூலுல்லாஹ்வைப் பற்றி, இந்த தீனைப் பற்றி தான் இருந்தது.

இப்படிப்பட்டவர்களுக்கு தானே சொர்க்கத்தின் வாடையை அல்லாஹ் கொடுப்பான். ஸஅது மரணிக்கும் பொழுது அல்லாஹ்வுடைய தூதர் கேட்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்டுவரச் சொல்லி அல்லாஹ்வுடைய தூதர் அனுப்பியிருக்கவில்லை என்றால், அந்த வார்த்தையை கூறியிருக்கவில்லை என்றால், அல்லாஹ்விற்கும் தனக்கும் இடையில் அந்த சொர்க்கத்தின் வாடையை நுகர்ந்தார் அல்லவா, அதை ஸஅது யாரிடமும் கூறியிருக்கமாட்டார்.

இதை ஸஅது உணராமல் அவராக கூறியிருந்தால், அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் அவ்வாறு பேச முடியுமா? நயவஞ்சகம் ஆகி விடுமே, பொய்யாகி விடுமே, அல்லாஹ் அறிவித்து விடுவானே, இப்படிப்பட்ட ஒரு ஈமானிய உணர்வில் இருந்த அந்த தோழரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி தேடாமல் இருந்திருப்பார்கள். நான் கேட்டு வரச் சொன்னதாக சொல் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று.

ஸஅது கூறுகிறார், என்னுடைய உடல் வலியை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் இப்போது சொர்க்கத்தின் நறுமணத்தை தான் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

நூல் : சியறு அஃலாமின் நுபலா 1/318, 319, 320,

அன்பானவர்களே! இப்படிப்பட்ட ஒரு நல்ல முடிவு நல்லவர்களுக்கு உண்டு. அந்த நல்லவர்கள் யார்? யார் அல்லாஹ்விற்காக வாழ்ந்தார்களோ, யார் தக்வாவின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ, மார்க்கத்தைப் பேணி வாழ்ந்தார்களோ, மன இச்சையை விட்டும், இன்னும் தன்னுடைய பெருமை, தன்னுடைய விருப்பு, தன்னுடைய வெறுப்பு இப்படி எல்லா விதமான தனக்கு‌, எனக்கு என்றிருக்கக் கூடிய அனைத்தையும் விட்டு அல்லாஹ்விற்காக யார் வாழ்ந்தார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் இப்படிப்பட்ட ஒரு நல்ல முடிவை கொடுப்பான்.

இன்னும் ஒரு நபித்தோழருடைய ஒரு சுருக்கமான மரண நேரத்தின் ஒரு காட்சியை நாம் பார்ப்போம். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு இவர்களைப் பற்றி எவ்வளவோ கூறலாம்.

வாழ்க்கை வரலாறுகளைப் பற்றி பக்கம் பக்கமாக கூறலாம்.அப்படிப்பட்ட ஒரு நபித்தோழர் மரண நேரத்தில் தங்களுடைய பிள்ளைகளை எல்லாம் அழைத்து, அந்த பிள்ளைகளுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

பிள்ளைகளே! ஜந்து அறிவுரைகளை உங்களுக்கு கூறுகிறேன். நீங்கள் அவற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.என்னிடமிருந்து நீங்கள் அதை மனனம் செய்துக் கொள்ளுங்கள்.

எதையும் மக்களிடத்தில் எதிர்பார்க்காதீர்கள், மக்களிடமிருந்து தேவையற்றவர்களாக இருங்கள், அது தான் செல்வத்தில் சிறந்த செல்வம். மக்களிடத்தில் எந்த வகையிலும் தேவையாவதை விட்டு விடுங்கள். மக்களிடத்தில் தேவையாகுவது அதை விட ஒரு பெரிய வறுமை வேறு இல்லை.

எந்தக் காரியங்களுக்காக நீங்கள் வருந்துவீர்களோ, அப்படிப்பட்ட ஒரு காரியங்களை செய்வதற்கு முன்பே விட்டு விடுங்கள். எந்த காரியத்தை செய்தால் பின்னால் நீங்கள் வருந்துவீர்கள் என்றிருக்குமோ, அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விடுங்கள்.

பிறகு கூறினார்கள், ஒவ்வொரு நாளிலும் நேற்றைய நாளை விட இந்த நாளை உன்னால் சிறப்பாக்க முடியும், மேன்மையாக்க முடியும் என்றால் அதை நீ தவற விட்டு விடாதே!

நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள், யாருக்கு நேற்றும், இன்றும் சமமாக இருந்ததோ, அவர் வாழ்ந்தே பிரயோஜனம் இல்லை.

நாம் நினைப்போம், நேற்று சம்பாதித்ததை விட இன்றைக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். நேற்று அனுபவித்ததை விட துன்யாவை இன்று அதிதமாக அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுவோம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் அப்படி கூறவில்லை. நேற்று நீங்கள் செய்த மறுமையின் அமலை விட இன்று அதிகமாக செய்ய முடிகிறதா? விட்டு விடாதீர்.

கடைசியாக கூறுகிறார்கள், நீ ஒரு தொழுகையை தொழுதால், இதற்குப் பிறகு உனக்கு ஒரு தொழுகையை தொழுவதற்குரிய வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் உள்ளவனைப் போன்று, இந்த உலகத்திலிருந்து விடைபெறுவதைப் போன்று அந்த தொழுகையை அமைத்துக் கொள்.

நூல் : வசிய்யதுல் உலமா இன்த ஹுழூரில் மவ்த், பக்கம் 51.

அந்த எண்ணத்தில் நாம் தொழுதால், நம்முடைய தொழுகையில் எப்படிப்பட்ட உள்ளச்சம் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இப்படி மறுமையின் ஐந்து அறிவுரைகளை தங்களது பிள்ளைகளுக்கு விட்டு விட்டு செல்கிறார்கள்.

அன்பானவர்களே! நம்மில் எத்தனை பேர் ஆயிரம், லட்சம், கோடி என்று துன்யாவின் செல்வங்களை, பிள்ளைகளை தேடி வைக்கிறார்கள். இல்மை தேடிக் கொடுத்தார்களா? ஒழுக்கத்தை தேடிக் கொடுத்தார்களா? தக்வாவை தேடிக் கொடுத்தார்களா?

பிள்ளைகளுடைய செல்வங்களுக்கு கவலைப் படக்கூடிய பலர், அவர்களின் மறுமைக்கு கவலைப் படுவதில்லையே!

இப்படி அறிவுகைகளை கூறிக் கொண்டிருக்கும் பொழுது உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு நபியின் மூத்த தோழர்களில் ஒருவர் வருகிறார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதைப் பார்த்து கேட்கிறார், அப்துல்லாஹ்! உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு என்ன வேதனை ஏற்படுகிறது, என்ன வலி ஏற்படுகிறது?

அமைதியாக கூறுகிறார்கள், எவ்வளவு பெரிய ஸஹாபி பத்ரில் கலந்தவர், உஹதில் கலந்தவர், அஹ்ஸாவில் கலந்தவர், பைஅத் ரிழ்வானில் கலந்தவர், ரஸூலுல்லாஹ்வை பிரியாதவர், அவரிடமிருந்து குர்ஆனை படியுங்கள் என்று கூறியவர், இவரை குர்ஆனை ஓத வைத்து ரஸூலுல்லாஹ் அழுதார்கள்.

அந்த ஸஹாபி கூறுகிறார், உஸ்மான்! எனது பாவங்களை நினைத்து நான் கவலைப்படுகிறேன். எனது ரப்புடைய ரஹ்மத் வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறுகிறார்கள்.அவர்களுடைய உயிர் பிரிகிறது.

அன்பானவர்களே! மரண நேரத்தில் யார் ஒருவர் எதை பயப்படுகிறாரோ, அல்லாஹ் தஆலா அவருக்கு அந்த பயத்தை போக்கி, அவருக்கு மரணத்தை கொடுப்பான்.

நரகத்தை பயந்தால், அந்த நரகத்தின் பயத்தை போக்கி அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தை கொடுப்பான். சொர்க்கத்தையும், அல்லாஹ்வையும் அவனுடைய மன்னிப்பையும் ஆதரவு வைத்தால் அதைக் கொடுத்து அல்லாஹ் அவர்களுக்கு மரணத்தை கொடுப்பான்.

இந்த நல்லவர்கள்தங்களுடைய பாவங்களை நினைத்து பயந்தார்கள். என்ன பாவங்கள் அவர்கள் செய்திருப்பார்கள்?

நம்மைப் போன்றா? காலையிலிருந்து மாலை வரை. அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் மன்னிப்பானாக!

அன்பானவர்களே! மறுமையை முன்னோக்க ஆரம்பித்து விட்டால், முற்றிலும் உலகத்தை மறந்தவர்களாக, அல்லாஹ்வை முன்னோக்கியவர்களாக இருந்தார்கள்.

இன்று உலகம் உலகம் என்ற கவலை, பிள்ளைகள் பிள்ளைகள் என்ற கவலை, சொத்து குடும்பம் என்ற கவலை நம்மை எப்படி மாற்றியிருக்கிறது என்றால், என்னவோ நாம் தான் இவர்களுக்கெல்லாம் ரப்பை போன்று. நாம் தான் இவர்களையெல்லாம் படைத்தோம், பரிபாலித்துக் கொண்டிருக்கிறோம், நாம் மரணித்துவிட்டால் இவர்களை யார் பரிபாலிப்பார்களோ, பாதுகாப்பார்களோ, அரவணைப்பார்களோ என்ற கவலை.

அல்லாஹ்விடத்தில் பொறுப்பை ஒப்படைக்கிறோமா? அல்லாஹ்வை சார்ந்திருக்கிறோமா?

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா யார் அவன் பக்கம் திரும்புகிறார்களோ, அவர்களுக்கு நேர்வழிகாட்டி, தனது நல்லடியார்களில் ஆக்கிக் கொள்கிறான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஈமானையும், தக்வாவையும், இக்லாஸையும், அல்லாஹ்வின் அன்பையும், அல்லாஹ்வுடைய தூதரின் அன்பையும் நமக்கு நிறைவாக தந்து, நல்ல முடிவை அல்லாஹ் தந்தருள்வானாக! சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளை அல்லாஹ் நமக்கு நஸீபாக்குவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمَّا قَدِمْنَا المَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ: إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالًا، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَيَّ [ص:53] زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ، تَزَوَّجْتَهَا، قَالَ: فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ؟ قَالَ: سُوقُ قَيْنُقَاعٍ، قَالَ: فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ، فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ، قَالَ: ثُمَّ تَابَعَ الغُدُوَّ، فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «وَمَنْ؟»، قَالَ: امْرَأَةً مِنَ الأَنْصَارِ، قَالَ: «كَمْ سُقْتَ؟»، قَالَ: زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ - أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ -، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ» (صحيح البخاري- 2048)

குறிப்பு 2)

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الحَسَنِ، وَابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ، مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ: كَادَ يَقْتُلُهُ العَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ المَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ " (صحيح البخاري- 3321)

குறிப்பு 3)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ، وَشُجَّ فِي رَأْسِهِ، فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ، وَيَقُولُ: «كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا نَبِيَّهُمْ، وَكَسَرُوا رَبَاعِيَتَهُ، وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللهِ؟»، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128] (صحيح مسلم -1791)

குறிப்பு 4)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ» تَابَعَهُ بِشْرُ بْنُ بَكْرٍ، وَابْنُ المُبَارَكِ، وَبَقِيَّةُ، عَنِ الأَوْزَاعِيِّ (صحيح البخاري- 707)

குறிப்பு 5)

أَخْبَرَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عَمَّهُ غَابَ عَنْ بَدْرٍ، فَقَالَ: غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَئِنْ أَشْهَدَنِي اللَّهُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أُجِدُّ، فَلَقِيَ يَوْمَ أُحُدٍ، فَهُزِمَ النَّاسُ، فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ، يَعْنِي المُسْلِمِينَ وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا جَاءَ بِهِ المُشْرِكُونَ» فَتَقَدَّمَ بِسَيْفِهِ فَلَقِيَ سَعْدَ بْنَ مُعَاذٍ، فَقَالَ: أَيْنَ يَا سَعْدُ، إِنِّي أَجِدُ رِيحَ الجَنَّةِ دُونَ أُحُدٍ، فَمَضَى فَقُتِلَ، فَمَا عُرِفَ حَتَّى عَرَفَتْهُ أُخْتُهُ بِشَامَةٍ أَوْ بِبَنَانِهِ، وَبِهِ بِضْعٌ وَثَمَانُونَ مِنْ طَعْنَةٍ وَضَرْبَةٍ وَرَمْيَةٍ بِسَهْمٍ (صحيح البخاري- 4048)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/