HOME      Khutba      மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 2-3 | Tamil Bayan - 420   
 

மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 2-3 | Tamil Bayan - 420

           

மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 2-3 | Tamil Bayan - 420


மரணத்தருவாயில் மகான்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : மரணத்தருவாயில் மகான்கள் (அமர்வு 2-3)

வரிசை : 420

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 22-07-2016 | 16-10-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்வாஹ்வுடைய தூதராகவும், அடிமையாகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறியவனாக இந்த ஜும்ஆவின் உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, மார்க்க சட்டங்களை பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒரு முஃமினுக்கு நன்மையை நாடுகின்றான், அவரை தனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவராக ஆக்கியிருக்கிறான் என்பதற்குரிய நல்ல அடையாளங்களில் ஒன்றுதான், அவருடைய அந்த மரண நேரம்.

அந்த மரண நேரத்தில் அவருடைய வாயிலிருந்து வருகின்ற நல்ல வார்த்தைகள் மிக முக்கியமானது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு கூற்றை நாம் இந்த இடத்தில் நினைவு கூறலாம்.

«مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ»

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:யாருடைய இறுதிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹுவாக இருக்குமோ அவர் சொர்க்கம் செல்வார் என்று.

அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 3116, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இறைத்தூதர்களையும், அவர்களுடைய கண்ணியத்திற்குரிய தோழர்களையும், அவர்களுடைய வழியில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நல்லவர்கள் சான்றோருடைய அந்த மரண நேரத்தையும் பார்க்கும் பொழுது,அல்லாஹ்வுடைய அருள் அந்த நல்லவர்கள் மீது எந்தளவு பொழிந்து கொண்டிருந்தது. அந்த நல்லவர்கள் அல்லாஹ்வுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்.

மறுமையின் பயணத்திற்காக தங்களை எப்படி தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த நினைவிலேயே அவர்கள் வாழ்ந்தார்கள், சொர்க்கத்தை விரும்பினார்கள், நரகத்தை பயந்தார்கள். விசாரனையை கண்டு திடுக்கம் அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது என்பதை அவர்களுடைய அந்த மரணத்தருவாயில் வெளிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு, வாக்கியங்களைக் கொண்டு நாம் அறிய முடிகிறது.

இன்று,பல நிலையில் இறக்கின்ற நாம், நம்முடைய மரண நேரத்தில் அல்லது யாரை மரண நேரத்தில் நாம் பார்க்கிறோமோ, அவர்களெல்லாம் துன்யாவுக்காக, இந்த உலக வாழ்க்கைக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை பார்க்கிறோம்.

தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கூறுகின்ற அறிவுரைகள், இந்த உலகத்தை அடிப்படையாக வைத்தே இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில், நம்முடைய சான்றோரின் வரலாறுகள் நினைவுகூறத்தக்கவை.

அவர்களுடைய அந்த வாழ்க்கையிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை பார்க்கிறோம்.

ஒரு சில நபித்தோழர்களுடைய சம்பவங்களை கூறி,பிறகு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த மரணத்தருவாய்க்கு வருவோம்.

மூஆது இப்னு ஜபல்,யாரைப் பார்த்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆதே! நான் உன்னை நேசிக்கின்றேன் என்று கூறினார்களோ, இந்த உம்மத்துடைய சட்டதிட்டங்களை தெரிந்தவர், ஹலால் ஹராமை தெரிந்தவர் என்று கூறினார்களோ, அவர்களுக்காக விசேஷமான துஆக்களை கற்றுக் கொடுத்தார்களோ, அவர்களை வழியனுப்பவதற்காக முஆதை வாகனத்தில் அமர்த்தி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்துச் செல்கிறார்கள்.

முஆதிற்கு அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்கள்:முஆதே! அடுத்த ஆண்டோ அல்லது அதற்குப் பிறகோ நீ இங்கு வருவாய்,ஆனால், என்னை பார்க்கமாட்டாய். எனது கப்ரைதான் நீ கடந்து செல்வாய் என்று தனது மரண அறிவிப்பை அந்த தோழருக்கு கூறினார்களோ, ரஸூலுல்லாஹ்வுடன் வாழ்ந்த ஒரு அன்ஸாரி ஸஹாபி அல்லாஹ்வுடைய தூதருக்காக தன்னை அர்ப்பணிப்பவர்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 22054.

ரஸூலுல்லாஹ்வுடைய பொறுப்பை மிக சிறப்பாக நிறைவேற்றி வாலிப வயதிலேயே ஒரு கவர்னராக, ஒரு நாட்டின் ஆளுநராக அல்லாஹ்வுடைய தூதரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தகுதியைப் பெற்ற அந்த நபித்தோழரைப் பாருங்கள். மரண நேரத்தில் அவர்கள் கூறினார்கள்.

நூல்ஹில்யதுல் அவ்லியா – அபூ நுஐம், அஹ்மது.

இங்கே ஒரு விஷயத்தை புரிய வேண்டும்.நம்முடைய முன்னோர்களுடைய வரலாறுகளைப் பார்க்கிறோம். அவர்கள் மரணத்தருவாயில் இரண்டு நிலைகளில் ஒரு நிலையில் இருந்தார்கள்.

1.             அல்லாஹ்விடம் பேச ஆரம்பித்து விடுவார்கள், துஆ கேட்க ஆரம்பித்து விடுவார்கள், மன்னிப்புத் தேட ஆரம்பித்து விடுவார்கள்.

2.             மக்களிடத்தில் அவர்கள் பேசினாலும் துன்யாவைப் பற்றி பேசவில்லை. அந்த மக்களுக்கு மறுமையை நினைவூட்டி மார்க்க அறிவுரைகளை கூறினார்கள்.

இந்த இரண்டைத் தவிர, மூன்றாவது ஒரு பேச்சை நமது முன்னோர் சான்றோருடைய அந்த மரணத்தருவாயில் நம்மால் பார்க்க முடியவில்லை.

இங்கே இன்னுமொரு விஷயத்தை கவனியுங்கள். நம்மால் முழுமையாக இந்த வார்த்தையைக் கூற முடியுமா?

வணக்கவழிபாட்டில் அல்லாஹ்வை பயந்தால், தொழிலில் அல்லாஹ்வுடைய பயம் இல்லை. தொழிலில் அல்லாஹ்வுடைய பயம் இருந்தால் இபாதத்தில் அல்லாஹ்வுடைய பயம் இல்லை, அல்லது உறவுகள் விஷயத்தில் அல்லாஹ்வுடைய பயம் இல்லை.

இப்படி, அல்லாஹ்வுடைய பயத்தை ஒன்றில் வைத்து இன்னொன்றில் இழந்து விட்ட சமுதாயமாக நாம் இருக்கிறோம். அல்லாஹ் மன்னிப்பானாக! கண்ணியத்திற்குரிய தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

அல்லாஹ்வுடைய பயம் அவர்களது வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் எல்லா நேரங்களிலும் வெளிப்பட்டது. அப்படியென்றால் இந்த வார்த்தையை கூறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்களாக இருந்தார்கள்.

முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹுகூறினார்கள்:யா அல்லாஹ்! வாழ்நாளெல்லாம் நான் உன்னை பயந்துக் கொண்டிருந்தேன். இன்றைய நாள் நான் உன்னிடத்தில் ஆதரவு வைக்கின்ற நாள். உன்னை சந்திக்க வருகிறேன், உன் மீது ஆதரவு வைக்கிறேன்.

பிறகு கூறினார்கள்:யா அல்லாஹ்! நிச்சயமாக நீ அறிவாய்; நான் உலகத்தை விரும்பினேன். ஆனால், நதிகளை ஓட வைப்பதற்காக, மரங்களை நடுவதற்காக, தோட்டம் துறவுகளை உருவாக்கி அதில் சுகபோகமான வாழ்க்கையை வாழ்வதற்காக அல்ல.

மாறாக, கடுமையான வெயில் காலங்களில் நோன்பு இருப்பதற்காக, குளிர் காலங்களில் இரவுகளில் உன்னை நின்று வணங்குவதற்காக, அறிஞர்களின் சபைகளில் நெருக்கமாக அமர்ந்து அவர்களிடம் கல்வி படிப்பதற்காகத்தான் என்பதை நீ அறிவாய்.

அதற்குப் பிறகு லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார்கள், அவர்களுடைய உயிர் பிரிந்தது.

அன்பானவர்களே! இதுவல்லவா வெற்றிமிக்க மரணம். மரண நேரத்தில் அல்லாஹ்விடம் பேசியவர்களாக விடைபெறுவது. மரண நேரத்தில் அல்லாஹ்விடம் தன்னுடைய இஹ்லாஸைக் கூறி, தன்னுடைய மனதின் விருப்பத்தை கூறி,அல்லாஹ்விடத்தில் பிழை பொறுப்புத் தேடி,அல்லாஹ்வை நெருங்க வழியை தேடுவது.

அபூதர் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு என்ற இன்னொரு நபித்தோழரைப் பாருங்கள். மரண நேரம் வந்துவிட்டது, மனைவி அழுகிறார்கள்.

ஏன் அழுகிறாய்? என்று கேட்கிறார்கள்.

அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்கள் வசிக்கின்ற நகரத்தை விட்டு தூரமாக இருந்தார்கள். நபியிடத்தில் நெருக்கத்தை, கல்வியைப் பெற்ற ஒரு கல்விமானாக வாழ்ந்த ஒரு ஸஹாபி. அவர்கள் மக்களை விட்டு தூரமாகச் சென்று அவர்கள் மரணிக்கின்றார்கள்.

மனைவி கூறினார்கள்: எப்படி அழாமல் இருக்க முடியும். நீங்கள் மரணிப்பது ஒரு நகரத்தில் இல்லையே, ஒரு பாலைவன பூமியில் மரணிக்கிறீர்கள். நான் உங்களை எப்படி அடக்கம் செய்வது, உங்களை அடக்கம் செய்வதற்கு கூட கஃபன் என்னிடத்தில் இல்லையே!

ஒரு நபித்தோழர், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தோழமையை பெற்று, பல போர்களில் கலந்து கொண்டு, பல கலீஃபாக்கள் உதவி செய்வதற்கு செல்வங்களை கொட்டுவதற்கு முன் வந்தாலும் என்னை குழப்பத்தில் ஆக்கக்கூடிய செல்வம் எனக்கு தேவையில்லை.

மக்களெல்லாம் அந்த வெற்றிகளினால் செல்வ செழிப்பில் வாழ்வதை நினைத்து, அந்த செல்வம் மக்களுக்கு மத்தியில் பெருகுவதை நினைத்து, இந்த செல்வ வாழ்க்கை எனக்கு வேண்டாம்.

எந்த ஏழ்மையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தார்களோ அதன் குழப்பத்தை பயந்து விலகினார்கள்.

அவர்களுடைய மரண நேரத்தை பாருங்கள்;ஒரு ஸஹாபியுடைய மரண நேரம் அவர்களை அடக்கம் செய்வதற்கு அவர்களுடைய மனைவியிடத்தில் கஃபன் இல்லை, மனைவி அழுகிறார்கள். அப்போது கூறுகிறார்கள்:

மனைவியே! அழாதே, சந்தோஷமாக இரு.

அல்லாஹு அக்பர்!எப்படிப்பட்ட உபதேசம் பாருங்கள். ஏனென்றால், நானும் சிலரும் இருந்தபொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

இப்போது நீங்கள் இருக்கின்ற இந்த கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் யாருமில்லாத ஒரு இடத்தில் மரணிப்பார் என்று கூறினார்கள்.

ஆனால், அவர் அப்படி மரணித்தாலும் கூட,முஃமின்களுடைய ஒரு ஜமாஅத் அவருடைய ஜனாஸா தொழுகைக்காக வரும்.

மனைவியே! இப்படி கூறிய அந்த நேரத்தில் அந்த சபையிலிருந்த எல்லோரும் நகரத்திலோ மக்கள் வசிக்கின்ற ஒரு கிராமத்தில் தான் இறந்தார்கள்.

எல்லோரும் இறந்துவிட்டார்கள், என்னை தவிர. அந்த நற்செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது. எனவே சந்தோஷமாக இரு.

பிறகு கூறினார்கள்:நான் பொய் கூறவில்லை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என்று மீண்டும் கூறுகிறேன். நான் பொய் கூறவில்லை. நீ பயப்படாதே! வழியில் சென்று எதிர்பார்த்திரு.

மனைவி கூறுகிறார்கள்:அன்பு கணவரே! ஹஜ்ஜிற்கு சென்ற கூட்டமெல்லாம் சென்று விட்டார்களே, இனி ஹாஜிகள் யாரும் இந்த வழியில் வருவதற்கு வாய்ப்பில்லையே என்று கூறியபோது, இல்லை சென்று பார் என்று கூறினார்கள். அப்போது மனைவி அவர்கள் பாதையை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

சிலர் வருகிறார்கள், தன்னுடைய ஆடையைக் கொண்டு இஷாரா செய்கிறார்கள். அந்த மக்கள் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவியை நோக்கி வருகிறார்கள்.

அடையாளம் தெரியவில்லை, யாரென்று கேட்கிறார்கள். அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உனக்கு என்ன ஆனது? என்று கேட்கிறார்கள்.

அந்த பெண்மனியின் வார்த்தையைப் பாருங்கள், முஸ்லிம்களில் ஒருவர் மரணிக்கிறார். அவருக்கு கஃபன் போடுவதற்கு நீங்கள் வர வேண்டும்.

(ஸஹாபி என்று கூறவில்லை, நபியின் பெரும் தோழர், ஹதீஸ்களை அறிவித்து பல தாபியீன்களை உருவாக்கிய பெரிய இமாம் என்றெல்லாம் கூறவில்லை.)

முஸ்லிம்களில் ஒருவர் மரணிக்கப் போகிறார். நான் அவரை கஃபனிட்டு அடக்கம் செய்வதற்குண்டான அந்த வலிமையில்லாத வசதியில்லாத ஒரு பெண்ணாக இருக்கிறேன்.நீங்கள் வந்து அவரை கஃபனிட்டு அடக்கம் செய்ய வேண்டும்.

அப்போது வந்தவர்கள் கேட்கிறார்கள்;யார் அவர்கள்?

அந்த பெண்மனி கூறுகிறார்கள்; அவர்தான் அபூதர் என்று. அவ்வளவு எளிமையாக கூறுகிறார்கள்.

மக்களுக்கு புரியவில்லை. கேட்கிறார்கள்;அல்லாஹ்வுடைய தோழராக இருந்த அபூதரா? என்று. அவர் தான் என்று கூறுகிறார்கள்.

எப்படி அடக்கம், பணிவு!அந்த தன்னடக்கத்தை நாம் படிப்பினையாக, பாடமாக பெற வேண்டும்.

மக்கள் கூறுகிறார்கள்;எங்களுடைய தாயும் தந்தையும் அவர்களுக்கு அற்பனமாகட்டும். இவ்வளவு பெரிய நபித்தோழரா? என்று ஓடோடி வருகிறார்கள்.

அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மரணத்தருவாயில் அவர்களுக்கு அருகில் அவர்கள் எல்லோரும் அமர்ந்த பொழுது, அவர்களுடைய அந்த அறிவுரையைப் பாருங்கள்.

உங்களில் யார் எனக்கு கஃபனிட வேண்டுமென்றால், ‌என் ஜனாஸாவை தொட வேண்டுமென்றால், யார் அரசாங்க வேலையில் இல்லாமல் இருந்தாரோ அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் எனக்கு கஃபன் போட வேண்டும்.

ஒரு ஹராமான வருவாய், மக்களிடமிருந்து தவறான முறையில் பெறப்பட்ட செல்வம், அவருடைய ஊதியத்தில் கலந்திருக்குமோ என்று பயந்தார்கள்.

அதுவும் அவர்கள் மரணித்ததோ அந்த ஸஹாபாக்கள் வாழ்ந்திருந்த காலத்தில் தான். அப்படிப்பட்ட பரிசுத்தமான காலத்திலேயே ஹராம், ஹலாலை நினைத்து பயந்தார்கள்.

இன்று,நம்முடைய வாழ்க்கை எப்படி கழிகிறது?மிருகங்கள் தங்களது உணவுகளை விழுங்குவது போல,ஹராமை விழுங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஹராம் உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்;அவர்களுடைய இபாதத் அந்த ஹராமை எல்லாம் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு மன்னிப்பை கொடுத்து விடும் என்று.

அவர்கள் செய்யக்கூடிய சில தான தர்மங்களைப் பற்றி அவர்களுக்கு பெருமை. இந்த ஹராமை எங்களுடைய தான தர்மங்கள் அழித்து விடும், மறைத்து விடும்.

அல்லது சிலரை பார்க்கிறோம்; செய்கின்ற ஹராமை எல்லாம் செய்து விட்டு ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் அல்லது உம்ரா செய்து விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:யார் ஒருவர் ஹஜ் செய்வாரோ அவருடைய முந்திய பாவங்களெல்லாம் மன்னிக்கப்படும். யார் ஒருவர் உம்ரா செய்வாரோ அதற்கு முந்திய உம்ராவிலிருந்து இந்த உம்ரா வரை செய்த பாவங்களெல்லாம் இந்த உம்ரா மன்னித்து விடும் என்று.

இவர்கள் இப்படி தங்களுக்குத் தாங்களே ஹதீஸை கூறி ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஆம், கண்டிப்பாக ஹஜ் முந்திய பாவங்களை மன்னிக்கும், கண்டிப்பாக உம்ரா முந்திய பாவங்களை மன்னிக்கும்.

தவ்பா செய்து,இனிமேல் அந்த பாவத்தின் பக்கம் நெருங்கமாட்டேன்,யா அல்லாஹ் என்னை பரிசுத்தப்படுத்து என்று அல்லாஹ்விடத்தில் வருந்தி பாவமன்னிப்பு தேடி, இனி அந்த பாவத்தின் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதியான வாக்குறுதி கொடுத்து விட்டு வந்திருந்தால், அது அவருடைய பாவங்களை மன்னிக்கும்.

வெறும் கஅபாவை சுற்றி விடுவதால், ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையில் ஸயீ செய்து விடுவதால், மினாவில் முஸ்தலிஃபாவில் அரஃபாவில் தங்கி விடுவதால் மட்டும் அவருடைய முந்திய பாவங்களோ அல்லது இனி செய்யப் போகின்ற பாவங்களோ மன்னிக்கப்படுவது கிடையாது.

இனி பாவமே செய்யமாட்டேன் என்ற உறுதியில் அவர் வர வேண்டும்.தெரியாமல் நடந்து விட்டால் அதற்கவர் முந்தி செய்த ஹஜ்ஜோ உம்ராவோ அவருடைய பெரும் பாவங்களை மன்னித்து விடாது. அதற்காக அவர் தவ்பா கேட்டு அதிலிருந்து திருந்தினால்தான்.

நம்முடைய மார்க்கம் கிறிஸ்துவர்களின் மார்க்கமல்ல, எவ்வளவு வேண்டுமானாலும் பாவங்களை செய்து விட்டு வாரத்திற்கு ஒரு நாள் சென்று நீ ஏதாவது சடங்குகளை செய்துவிட்டால் உன்னுடைய குற்றங்களையெல்லாம் கடவுள் மன்னித்து விடுவார் என்று நம்புவதற்கு இது கிறிஸ்தவர்களுடைய மார்க்கமல்ல.

இது, அல்லாஹ்வுடைய தீன். தவ்பா செய்ய வேண்டும், விலக வேண்டும், திருந்த வேண்டும், வருந்த வேண்டும், இனி செய்யமாட்டேன் என்ற உறுதி வேண்டும்.

சம்பவத்தின் தொடர் : அந்த நல்லவர்களுடைய கொள்கையைப் பாருங்கள். அப்போது அங்கே அரசாங்க வேலை செய்யாத ஒரே ஒரு வாலிபர் இருந்தார். அவர் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை குளிப்பாட்டுகிறார்கள், கஃபனிடுகிறார்கள்.

பிறகு நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதருக்கு தொழுகை நடத்துகிறார்கள். பிறகு,அவர்களை அடக்கம் செய்யப்படுகிறது.

பார்க்க : ஸாதுல் மஆது – இப்னுல் கய்யிம்.

இப்படி, நபித்தோழர்களின் பலருடைய வாழ்க்கையை பார்க்கிறோம்.

இந்த தொடரில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மரண நேரத்தைப் பற்றியும் நாம் நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நபியின் தோழர்,நான்கு கலிஃபாக்களில் நான்காவது கலிஃபா,இஸ்லாமை ஏற்றுக்கொண்ட முதல் சிறுவர்,ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பதிமூன்று ஆண்டுகாலங்கள் மக்காவில் அழைப்புப் பணி செய்து சிரமங்களை சகித்து,பிறகு ஹிஜ்ரத்தை மேற்கொண்டு மதினாவில் வாழ்க்கையின் பத்து ஆண்டுகள் ரஸூலுல்லாஹ்வை விட்டு பிரியாமல் எல்லா போர்களிலும் மற்ற சிறு போர்களிலும் கலந்து கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீயை பொருந்திக் கொண்ட நிலையில் இறந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தோழர்.அவர்களுடைய மரண சம்பவம் நமது மனதை மிகப்பெரிய அளவில் கவலைக்குள்ளாக்கக் கூடிய ஒரு சம்பவமாக இருந்தது.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கொலை, அதற்கு முன்னால் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கொலை.

இஸ்லாமிய மார்க்கத்தில் வரம்பு மீறியவர்கள், கலீஃபாக்களுக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக கழகம் செய்தவர்கள்.

நன்மை என்ற பெயரில் தீமை செய்தவர்கள், சீர்திருத்தம் என்ற பெயரில் குழப்பம் செய்தவர்கள். இப்படிப்பட்ட ஒருவனால் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

«إِنَّ أَشْقَى الْأَوَّلِينَ عَاقِرُ النَاقَةِ، وَإِنَّ أَشْقَى الْآخِرِينَ لَمَنْ يَضْرِبُكَ ضَرْبَةً عَلَى هَذِهِ»

முந்திய உம்மத்தில் மிகக் கேடுகெட்ட கொலைகாரன் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஒட்டகத்தை கொன்றவன். என்னுடைய உம்மத்தில் கேடுகெட்ட துர்பாக்கியவான் அலீயே! உன்னை கொல்லக்கூடியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னதுல் பஸ்ஸார்,எண் : 1424.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொல்வதற்காக அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் தயாராகிறான்.

இவர்கள் யார்? ஸஹாபாக்களை எல்லாம் வழிகெட்டவர்கள், காஃபிர்கள்,நாங்கள் தான் சீர்திருத்தவாதிகள், அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநிறுத்தக்கூடியவர்கள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவன்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலை நேரத்தில் சுப்ஹு தொழுகைக்கு செல்லும்பொழுது,மக்களையெல்லாம் தொழுகைக்கு எழுப்பி விட்டு செல்வார்கள். அந்த நேரத்தில் தான்,அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்றவன் கூறுகிறான். நான் அலீயை வெட்டிய அந்த வாலைக் கொண்டு ஆயிரம் பேரை வெட்டியிருந்தால் வெட்டிய அதே நேரத்தில் இறந்திருப்பார்கள்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்திருந்த அந்த வீரம், அந்த உடல் வலிமை.அவர்கள் உடனே மரணிக்கவில்லை.

இந்த வாளுக்கு ஒரு மாதகாலமாக அதற்கு விஷம் ஏற்றுகிறான். ஆயிரம் தீனார்களைக் கொண்டு அந்த வாளை விலைக்கு வாங்குகிறான். எவ்வளவு உயர்ந்த ஒரு வாள், இதைக் கொண்டு ஆயிரம் பேரை வெட்டியிருந்தாலும் இதனுடைய கூர்மை மங்கியிருக்காது.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரண நேரத்தில் இருக்கிறார்கள். அப்போது தங்களது பிள்ளைகளை, தோழர்களை அழைக்கிறார்கள். லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு,

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99 : 7,8)

இந்த வசனத்தை ஓதிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிறகு மக்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.தங்களது பிள்ளைகள் ஹஸன் ஹுஸைனை அழைத்து கூறக்கூடிய அறிவுரையைப் பாருங்கள்.

ஒரு கலீஃபா மரணிக்கிறார், இஸ்லாமிய நாடுகளின் மிகப்பெரிய ஜனாதிபதி மரணிக்கின்றார்.

தன்னுடைய செல்வத்தை பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ, அதிகாரத்தைப் பற்றியோ, ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. தங்களது பிள்ளைகளை அழைத்து அவர்கள் கூறக்கூடிய அறிவுரையை கவனியுங்கள்.

அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறிகிறேன். தொழுகையைப் பேணுங்கள், ஜகாத்தை கொடுங்கள்,நீங்கள் கோபத்தை மென்று விழுங்குங்கள், உறவுகளை சேர்த்து வாழுங்கள்.

அறியாத மக்கள் உங்களுக்கு செய்கின்ற குறைகளையெல்லாம் சகித்துக் கொள்ளுங்கள். மார்க்க ஞானத்தை தேடிக்கொண்டே இருங்கள்.

(இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பல மணி நேரம் விளக்கம் கூறலாம்.

இன்று நாம் என்ன நினைக்கிறோம்;நாம் படித்த சில வரிகள் நம்மை மேதையாக ஆக்கிவிட்டது. எங்கேயாவது ஏதாவது ஒரு பயானை கேட்டால் போதும். சில புத்தகத்தின் சில வரிகளை வாசித்துவிட்டால் போதும் என்று மமதை கொள்கிறோம்.)

ஹஸன் ஹுஸைன் இருவரும் நபியிடத்தில் கல்வியை படித்த சிறுவர்கள், அத்தனை மூத்த ஸஹாபாக்களிடத்திலும் கல்வியைப் படித்த சிறுவர்கள். அலீ தனது தந்தை அவர்களிடத்தில் கல்வியை படித்து கல்வியிலேயே வளர்ந்து வாலிபமாகி வாழ்ந்து கொண்டிருந்த தங்களுடைய பிள்ளைகளுக்கு கூறுகிறார்கள்.

மார்க்க ஞானத்தை அடைந்துக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் சட்ட வரம்புகளில் மார்க்க காரியங்களில் உறுதியாக இருங்கள், குர்ஆனை தொடர்ந்து ஓதிக் கொண்டே இருங்கள்.

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்து கொண்டே இருங்கள்.அவர்களுடன் அழகிய முறையில் நடந்துக் கொள்ளுங்கள், நன்மையை ஏவுங்கள், தீமையை தடுங்கள், மானக்கேடான அசிங்கமான காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்.

பிறகு,ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கு கூறுகிறார்கள்:

உங்களுடைய சகோதரர் அதாவது தந்தை ஒன்று தாய் வேறு, முஹம்மது இப்னு ஹனஃபியாவோடு நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.

ஒரு தந்தை கூறக்கூடிய அறிவுரையைப் பாருங்கள். தன்னுடைய மற்ற மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறு அவர்களோடு சகோதரத்துவத்தை பேணுமாறு அறிவுரை கூறுகிறார்கள்.

பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்

இது, ஒரு தந்தை செய்ய வேண்டிய வேலை.

ஆனால், இன்று இருக்கக்கூடிய தந்தையர்,அவரே தான் பெற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் பகைமையின் விதையை விதைக்கக்கூடியவராக இருக்கிறார்கள்.

நம்முடைய காலத்தில் இருக்கக்கூடிய பல தந்தைகளின் செயல்பாடுகள் எப்படி அமைந்திருக்கின்றன?அண்ணனைப் பற்றி தம்பியிடம் தவறாக கூறுகிறார், தம்பியைப் பற்றி அண்ணனிடம் தவறாக கூறுகிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக!

தங்களது சொந்த பிள்ளைகளுக்கு மத்தியில் இணக்கத்தை ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத, அவர்களுக்கு மத்தியில் அன்பை பரஸ்பரத்தை ஏற்படுத்த முடியாத ஒரு தந்தை, அவர் தன்னுடைய கடமையை செய்தவராக இறக்க முடியுமா? அல்லாஹ் பாதுகாப்பானாக!

பிறகு பாருங்கள், அடுத்து வருகின்ற இந்த அறிவுரை மிக முக்கியமான அறிவுரை. ஏன் இந்த அறிவுரையை நாம் தேர்ந்தெடுத்தோம் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம்.

இன்று, நம்மில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வுடைய தூதரையும் அந்த தூதரின் தோழர்களையும் நமக்கு நெருக்கமானவர்களாக உணர வேண்டும். நமக்கு உண்மையில் நெருக்கமானவர்கள் யார்?

நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையை விட, நம்முடைய மூதாதையர்களைவிட, நமக்கு மிக நெருக்கமானவர்கள் அல்லாஹ்வுடைய தூதரும் அந்த தூதரின் தோழர்களும் தான்.

இந்த உணர்வோடு வாழுங்கள், குர்ஆனோடு நெருக்கம் ஏற்படும். இந்த உணர்வோடு வாழுங்கள், இஸ்லாமிய பற்று நம்முடைய உள்ளத்தில் ஆழமாக அழுத்தமாக பதியும்.

இந்த உணர்வோடு வாழ்ந்தால் நமக்கும் அல்லாஹ்வுடைய அன்பு மிகைக்கும். எப்படி அந்த தோழர்களோடு உள்ளத்தில் மிகைத்ததோ, அல்லாஹ்வுடைய தூதரையும் அந்த தூதர்களுடைய தோழர்களையும் நேசித்து அவர்கள் எனது உண்மையான உறவுகள், அவர்கள் எனது உண்மையான மூதாதையர்கள், அவர்கள் மீது நான் பாசம் வைத்திருக்கிறேன் என்ற உணர்வை பசுமையாக்கிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த தோழர்களுக்கு ஈமானின் எந்த சுவையை சுவைக்க வைத்தானோ, அல்லாஹ்வுடைய அன்பின் எந்த சுவையை சுவைக்க வைத்தானோ, அதை நமக்கும் சுவைக்க வைக்காமல் அல்லாஹ் நமக்கு மரணத்தை கொடுக்கமாட்டான்.

காரணம்,அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்:அன்ஸாரிகளை நேசிப்பது ஈமானை சேர்ந்தது. அந்த அன்ஸாரிகளை வெறுப்பது இறைநிராகரிப்பு என்று கூறினார்கள்.

ஹதீஸ் கலையின் அறிஞர்கள் எழுதுகிறார்கள்;ஸஹாபாக்களில் இரண்டாவது தராஜாக்களைப் பெற்ற அன்ஸாரிகளை நேசிப்பதை ஈமான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருந்தால், முதல் தரஜாவில் உள்ள முஹாஜிர்களை நேசிப்பது அவர்களிலும் முதல் தரஜாவில் உள்ள அபூபக்ரையும், உமரையும், உஸ்மானையும், அலீயையும் நேசிப்பது, எந்தளவு ஈமானின் அம்சமாக இருக்கும் என்பதை கவனியுங்கள்.

சென்ற வாரம் கூட, உமரை நேசிக்காமல் சொர்க்கம் செல்ல முடியாது என்று கூறிய போது சில முகங்கள் சுறுங்கியதை பார்த்தோம். உமரை நேசிக்காதவர் சொர்க்கம் செல்லமுடியாது, உமரை நேசிக்காதவர் அல்லாஹ்வின் அன்பை பெற முடியாது என்று கூறியபோது சிலர் திடுக்கிட்டார்கள்.

ஆம், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்ஸாரிகளை நேசிக்கவில்லை என்றாலே ஈமான் கிடையாது என்று கூறியபோது, ஸஹாபாக்களின் முதல் தரஜாவில் உள்ளவர்களைப்பற்றி என்ன சொல்வது?(பார்க்க - அல்குர்ஆன் : 9:100)

நீங்கள் வேறு வழியில் சென்று வேறு கூட்டத்தை நேசித்து, வேறு மக்களை நேசித்தால், இவர்களுக்காக அல்லாஹ் வாக்களித்திருக்கின்ற சொர்க்கத்தில் செல்ல முடியாது. நீங்கள் எந்த சொர்க்கத்தில் சென்றாலும் சரி, நபியின் ஒரு தோழர் கண்டிப்பாக அங்கு இருப்பார். நபியின் தோழரை நீங்கள் வெறுத்து விட்டால் வேறு எந்த சொர்க்கத்திற்கு செல்வீர்கள்?

அவர்களை விட்டு காலியான ஒரு இடம் ஒன்று இருக்குமேயானால் அது நரகமாகத் தான் இருக்கும். அபூஜஹல், அபூலஹப், உமைய்யாவின் வீடுகளாகிய நரகமாகத்தான் இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

சம்பவத்தின் தொடர் : ஒரு கலீஃபா-முஸ்லிம்களின் ஜனாதிபதி, நபியின் தோழர்களில் ஒரு மிகப் பெரிய தோழர் ஒருவர் மரணிக்கிறார். அவர் கூறக்கூடிய வார்த்தையைப் பாருங்கள், அபூதாலிபுடைய மகன் அலீ கூறுகின்ற மரண அறிவுரை.

பிறகு கூறினார்கள்: தன்னைப் பற்றி படர்க்கையில் வைத்து அபூதாலிபின் மகனாகிய அலி சாட்சி கூறுகிறார்;

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு.

அந்த தூதரை அல்லாஹ் நேர்வழியைக் கொண்டு அனுப்பினான், சத்திய மார்க்கத்தை கொண்டு அனுப்பினான். எல்லா மார்க்கங்களையும் மிகைக்க வைப்பதற்காக. கண்டிப்பாக அல்லாஹ் அப்படியே செய்வான், முஷ்ரிக்குகள் வெறுத்தாலும் சரி.

பிறகு கூறினார்கள்:எனது தொழுகை, என்னுடைய ஹஜ், வணக்கவழிபாடுகள், என்னுடைய மரணம் அகிலங்களைப் படைத்து வளர்க்கக்கூடிய அல்லாஹ் ஒருவனுக்கே.

அவனுக்கு இணையில்லை. இப்படித்தான் நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன். முஸ்லிம்களில் முதல் முஸ்லிமாக நான் ஆக விரும்புகிறேன் என்ற வசனத்தை ஓதுகிறார்கள். (அல்குர்ஆன் 6 : 163)

பிறகு கூறினார்கள்:ஹஸனே! உனக்கு நான் அறிவுரை கூறுகிறேன். என்னுடைய எல்லா பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும் நான் அறிவுரை கூறுகிறேன்.

என்னுடைய இந்த மரண சாசனம் யாருக்கெல்லாம் சென்று சேருமோ, அவர்களுக்கும் நான் அறிவுரை கூறுகிறேன்.

அப்படியென்றால், என்ன அர்த்தம்?

இன்று இந்த அறிவுரையைக் கேட்கக்கூடிய அலீயின் மரணத்தை நினைவு கூர்ந்து அவர்களின் அந்த மரணத்தைப் பற்றிய அந்த வரலாறை படிக்கக்கூடிய நமக்கும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கே அறிவுரை கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணித்து விட வேண்டாம். அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) ஒற்றுமையாகப் பற்றிப் பிடியுங்கள்.நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.

அபுல் காஸிம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்:நீங்கள் உங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருப்பது, நீங்கள் தொழக்கூடிய தொழுகைகளை விட, நீங்கள் நோற்கக் கூடிய நிறைய நோன்புகளை விட, அல்லாஹ்விடத்தில் மிக சிறப்பானது.

மேலும் கூறினார்கள்:உங்களுடைய இரத்த உறவுகளை கவனித்துக் கொள்ளுங்கள்.அந்த இரத்த உறவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளை சேர்ப்பது மறுமையில் உங்களுடைய விசாரனையை அல்லாஹ்விடத்தில் லேசாக்கி விடும்.

அநாதைகளின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!அவர்களது வாய்களை காய வைத்து விடாதீர்கள், அவர்களை பட்டினிப் போட்டு விடாதீர்கள்.நீங்கள் வாழுகின்ற அந்த சமுதாயத்தில் அந்த அநாதைகள் வீணாகின்ற ஒரு நிலையை உறுவாக்கி விடாதீர்கள்.

உங்களுடைய அண்டை வீட்டாரின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு இப்படி வஸிய்யத் செய்திருக்கிறார்கள்.

அண்டை வீட்டாரின் விஷயத்தில் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.நாங்களெல்லாம் எண்ண ஆரம்பித்துவிட்டோம்;அண்டை வீட்டார்களை நம்முடைய சொத்துகளுக்கு வாரிசாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்கிவிடுவார்களோ என்று.

பிறகு கூறினார்கள்: குர்ஆன் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!நீங்கள் இந்த குர்ஆனைக் கொண்டு அமல் செய்யவில்லையென்றால் இன்னொரு கூட்டத்தை அல்லாஹ் கொண்டு வருவான். அவர்கள் இந்த குர்ஆனைக் கொண்டு அமல் செய்வார்கள். இந்த குர்ஆனை பின்பற்றுகின்ற விஷயத்தில் பிறர் உங்களை முந்தும்படி ஆகிவிடாதீர்கள்.

பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்

அன்பானவர்களே! இன்று பார்க்கிறோம்; இஸ்லாமை ஏற்று வரக்கூடிய நமது மக்கள் இந்த ஊரில் இருந்தாலும் சரி,இந்த நாட்டில் அல்லது வேறு நாடுகளில் அவர்கள் இஸ்லாமை பின்பற்றுவதும், குர்ஆனைப் படிப்பதும், குர்ஆனை கற்பதும் போதிப்பதும்,நாமெல்லாம் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுகின்ற அளவில் இருக்கிறது.

இன்று,நம்மில் வாழ்கின்ற எத்தனை பேருக்கு அவர்கள் மார்க்கத்தோடு தொடர்புடையவர்களாக இருந்தாலும் கூட குர்ஆனை, குர்ஆனின் மொழியை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், இன்று பல நாடுகளில் இஸ்லாமை ஏற்கக்கூடியவர்கள். முதலாவதாக அவர்கள் செய்கின்ற வேலை குர்ஆனை திருத்தமாக படிக்கப் பழகுவது. இரண்டாவது,அதன் மொழியைக் கற்பது.

பிறகு,அந்த மார்க்கத்தின் சட்டங்களை கற்பது. இப்படியாக இந்த விஷயத்தை தான் கூறுகிறார்கள். நீங்கள் குர்ஆனின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொண்டே இருங்கள். பிறர் இந்த குர்ஆனைக் கொண்டு அமல் செய்வதில் உங்களை முந்திவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!தொழுகைதான் உங்களுடைய மார்க்கத்தின் தூணாகும்.

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!மஸ்ஜிதுகள் உங்களை விட்டும் காலியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மஸ்ஜிது முஃமின்களால், முஸ்லிம்களால் நிரப்பமாகி இருக்க வேண்டும்.

பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்

இது தொழுகையின் நேரத்தில் மட்டுமல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒரு தொழுகைக்குப் பிறகு இன்னொரு தொழுகையை எதிர்பார்த்திருப்பது, மேலும் முதல் ஸஃப்பில் தொழுகைக்காக எதிர்பார்த்திருப்பது, ஜிஹாது என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 41, 251.

மேலும் கூறினார்கள்: எனது உம்மத்தில் துறவரம் கிடையாது. ஆனால், எனது உம்மத்தில் துறவரத்தின் ஒரு பகுதி, ஒரு முஃமின் அப்படி செய்ய வேண்டுமென்று விரும்பினால்,அவர் மஸ்ஜிதில் அதிகமான நேரம் இருக்கட்டும்.

நூல் : ஷர்ஹுஸ் ஸுன்னா எண் : 484.

இப்படி மஸ்ஜிதோடு தொடர்புடையவராக நம்மை இருக்க சொன்னார்கள். யாருடைய உள்ளம் மஸ்ஜிதோடு தொடர்புடையதாக இருக்குமோ, அவர் அர்ஷுடைய நிழலில் இருப்பார் என்றும் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அறிவுரையை அலீ அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

மஸ்ஜிதில் உங்களுடைய நேரத்தை கொடுங்கள். மஸ்ஜித் உங்களை விட்டும் காலியாகி விட வேண்டாம்.

பிறகு அலீ கூறினார்கள்:ரமழான் மாதத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். ரமழானுடைய நோன்பு நரகத்தை விட்டும் உங்களை பாதுகாக்கக்கூடிய கேடயம் ஆகும்.

ஜிஹாது விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!உங்களது செல்வத்தாலும் உயிராலும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொண்டே இருங்கள்.

ஜகாத் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!ஜகாத் அல்லாஹ்வுடைய கோபத்தை அணைக்கக்கூடிய ஒன்று.

மேலும் கூறினார்கள்:நீங்கள் யாருக்கு அடைக்களம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து உங்கள் நாட்டில் வாழ வைத்திருக்கிறீர்களோ அந்த முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழக்கூடிய திம்மிகள்விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அநீதம் இழைக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கலீஃபா கூறக்கூடிய அறிவுரையைப் பாருங்கள், முஸ்லிம் நாடுகளில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழக்கூடிய ஒரு காஃபிரை பற்றியும் அறிவுரை கூறினார்கள்.

அவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்!அவர் உங்களுக்கு மத்தியில் அநியாயம் செய்யப்பட்டுவிடக்கூடாது.

பிறகு கூறினார்கள்:உங்களது நபியின் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!

மேலும் கூறினார்கள்:ஏழைகள், பலவீனர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்ற வாழ்வாதாரத்தில் அவர்களையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு கூறினார்கள்:உங்களுடைய பணியாளர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்! இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரண நேரத்தில் இறுதியாக கூறினார்கள்.

நபியவர்களின் கூற்றை இங்கே குறிப்பிடுகிறார்கள், இரண்டு பலவீனமானவர்களை குறித்து உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன்.

1.             உங்கள் பெண்கள்.

2.             நீங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட உங்களுடைய அடிமைகள்.

அவர்கள் மீது அநியாயம் செய்யாமல், அவர்களுடைய உரிமையை மீறாமல், அவர்களுடைய ஹக்குகளை பாழாக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு நபியவர்கள் கூறினார்கள்: தொழுகை தொழுகை என்று.

அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவரின் பழிப்பை நீங்கள் பயந்துவிடாதீர்கள். மார்க்க சட்டமென்று தெரிந்தால் அதை எடுத்து செயல்படுவதில், அதை எடுத்து பின்பற்றுவதில் இவர் பார்த்தால் என்ன சொல்வார், ஊர் மக்கள் என்ன கூறுவார்கள், உலக மக்கள் என்ன சொல்வார்கள், சமுதாயம் என்ன சொல்லும், நாட்டாமை பஞ்சாயத்து என்ன சொல்லும், நம்மை மக்கள் எப்படி மதிப்பார்கள் என்றெல்லாம் பார்க்காதீர்கள்.

அல்லாஹ்வின் மார்க்க விஷயங்களில் அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கியதை செய்வதில், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கியதை விடுவதில் பழிப்பவரின் பழிப்பை பயப்படாதீர்கள்.

அப்படி நீங்கள் இருந்தால், உங்களை எதிர்ப்பதற்கும், உங்கள் மீது அநியாயம் செய்வதற்கும் யார் வருகிறார்களோ அவர்களை விட்டு அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான்.

பிறகு கூறினார்கள்:அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டது போன்று, மக்களுக்கு எப்போதும் நல்ல வார்த்தையை, அழகிய அறிவுரையை, உபதேசத்தை செய்துக் கொண்டே இருங்கள். நல்ல வார்த்தைகளை பேசிக் கொண்டே இருங்கள், நன்மையை ஏவுவதையும், தீமையை தடுப்பதையும் விட்டு விடாதீர்கள்.

யார் உங்களை பழித்துக் கொண்டாலும் சரி, நன்மையை ஏவுவதிலும், தீமையை தடுப்பதிலும் நீங்கள் குறைவு செய்து விடாதீர்கள்.

அப்படி நீங்கள் செய்து விட்டால் அல்லாஹ் தஆலா உங்களில் உள்ள தீயவர்களை உங்களுக்கு அதிகாரிகளாக ஆக்கிவிடுவான். கெட்டவர்களை அதிகாரிகளாக ஆக்கிவிடுவான். பிறகு நீங்கள் துஆ கேட்பீர்கள், ஆனால் அந்த துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

மேலும் கூறினார்கள்:உறவுகளை நட்புகளை சேர்த்து வாழுங்கள்.முடிந்தளவு கொடுத்து வாழுங்கள்.

ஒருவர் ஒருவரை பார்க்கும்பொழுது முகம் திருப்பிக் கொண்டு செல்வதை விட்டும் நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். உறவுகளை முறிப்பதை விட்டும், நட்புகளை முறிப்பதை விட்டும் பிரிந்து விடுவதை விட்டும் நான் எச்சரிக்கை செய்கிறேன்.

நன்மையான விஷயங்களில் தக்வாவுடைய விஷயங்களில் நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யுங்கள். பாவத்திலும், அநியாயத்திலும் உதவி செய்துவிடாதீர்கள்.

இன்று, நம்முடைய சமுதாயத்தில் எவ்வளவு அவலங்கள் இருக்கின்றன. ஒருவர் ஒருவருக்கு உதவி செய்ய வந்தால் அது நியாயமா? அநியாயமா? உண்மையா? சத்தியமா? என்றெல்லாம் பார்ப்பதில்லை.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!அல்லாஹ் கடினமான தண்டனையுடையவன். நபியின் குடும்ப விஷயத்தில் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக! அந்த நபியையும் அல்லாஹ் உங்களுக்கு பாதுகாப்பானாக!

உங்களை அல்லாஹ்விடம் விட்டுச் செல்கிறேன். உங்களுக்கு ஸலாம் கூறுகிறேன் என்று கூறிவிட்டு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறிக் கொண்டே அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உயிர் பிரிகிறது.

பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்

அன்பானவர்களே! இப்படி நம்முடைய மூத்த இஸ்லாமிய சமுதாயம் அல்லாஹ்வோடும் அல்லாஹ்வுடைய தூதரோடும் நேசம் கொண்டு அவர்களுக்காக வாழ்ந்தவர்கள், மார்க்கத்தை பேணியவர்கள் அவர்கள்.

தங்களது மரணதருவாயில் கூட நமக்கு விட்டுச் சென்ற அறிவுரைகள், மார்க்கத்தைப் பற்றி, மறுமையைப் பற்றி, சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட்ட அவர்களுடைய அந்த வேதனைகள் மிகப் பெரியது.

இன்று நாம் எங்கே இருக்கிறோம்? நம்முடைய கவலை நம்முடைய சிந்தனை எதில் இருக்கிறது?நாம் யாருக்காக வாழ்கிறோம்?எதற்காக வாழ்கிறோம்? நம்முடைய மறுமையின் பயணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்தோமா?

நாம் சேகரித்து வைத்திருக்கின்ற மறுமையின் கட்டுத்சாதத்தைப் பற்றி சிந்தித்து வைத்திருக்கிறோமா? நம்முடைய பாவங்களுக்கான தவ்பாவைப் பற்றி நாம் யோசித்தோமா?

மரணம் நம்மை திடீரென்று கவ்வி பிடித்துக் கொள்ளுமே அந்த நேரத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை, நபியின் சுன்னாவை பேணக்கூடிய மக்களில் ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ السَّكُونِيِّ، أَنَّ مُعَاذًا لَمَّا بَعَثَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوصِيهِ [ص:378] وَمُعَاذٌ رَاكِبٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي تَحْتَ رَاحِلَتِهِ، فَلَمَّا فَرَغَ قَالَ: «يَا مُعَاذُ، إِنَّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا، وَلَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِي وَقَبْرِي» . فَبَكَى مُعَاذُ بْنُ جَبَلٍ جَشَعًا لِفِرَاقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْكِ يَا مُعَاذُ لَلْبُكَاءُ، أَوْ إِنَّ الْبُكَاءَ، مِنَ الشَّيْطَانِ» (مسند أحمد- 22054)

குறிப்பு 2)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ - قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ - أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟» قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ: «إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، فَذَلِكُمُ الرِّبَاطُ» (صحيح مسلم 41 - (251)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/