HOME      Khutba      மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 1-3 | Tamil Bayan - 420   
 

மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 1-3 | Tamil Bayan - 420

           

மரணத்தருவாயில் மகான்கள் அமர்வு 1-3 | Tamil Bayan - 420


மரணத்தருவாயில் மகான்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : மரணத்தருவாயில் மகான்கள் (அமர்வு 1-3)

வரிசை : 420

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 15-07-2016 | 09-10-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்தை, கம்பீரத்தை,அல்லாஹ்வுடைய உயர்வை, மதிப்பை போற்றியவனாக, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாராக தூதராக இருக்கிறார்கள் என்று சாட்சி கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, எல்லா சூழ்நிலைகளிலும் இறையச்சத்தை கடைபிடித்து வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நல்லவர்களை அவன் தனக்கு நெருக்கமாக்கி கொள்கிறான். அவன் நல்லவர்களை தனது நண்பர்களாக ஆக்கிக் கொள்கிறான். அவர்களுடைய இம்மை வாழ்க்கையின் முடிவை அவன் சிறப்பித்து தருகிறான்.

யார்,அல்லாஹ் பொருந்திக் கொண்ட நல்ல ஸாலிஹான மனிதராக ஆகிவிடுகின்றாரோ அவர் இந்த உலகத்திலிருந்து செல்லும்பொழுது அல்லாஹ்வும் அந்த அடியானைக் கொண்டு அந்த மனிதனைக் கொண்டு திருப்தி கொண்டிருப்பார்.

அந்த அடியானும் தனது ரப்பாகிய அல்லாஹ்வை கொண்டு திருப்திக் கொண்டிருப்பான். இந்த நிலையில் தான் நல்லவர்களின் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகின்றான்.

இதுதான் வெற்றி. அல்லாஹ் கூறுகிறான்:

يَاأَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.(அல்குர்ஆன் 89 : 27,28)

இதற்கு தான் இந்த வாழ்க்கையின் போராட்டங்களெல்லாம். இது கிடைப்பதற்காகத் தான் இந்த வாழ்க்கையில் நமது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், தான தர்மங்கள் எல்லா சிரமங்களும். இது கிடைத்த நிலையில் தான் மரணிக்க வேண்டும். இல்லையென்றால், அதைவிட ஒரு பெரிய நஷ்டம் எதுவுமே இல்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்காத நிலையில் ஏற்படுகின்ற மரணத்தை தவிர ஒரு மோசமான மரணம் எதுவும் இல்லை.

சில பேர் கூறுவார்கள், ஆகிஸிடன்டில் மரணமடைந்தால் மிகவும் கோரமான மௌத் என்று. எறிந்து மரணமடைந்தால் கோரமான மௌத் என்று.

அது உலக மக்கள் பார்வையில் வேண்டுமானால் ஒரு கோரமான மரணமாக இருக்கலாம். எத்தனையோ நபிமார்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

எத்தனையோ நல்லவர்கள் இரண்டாக பிளக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட உண்மை முஃமின்கள் அவர்களுடைய தோல் தனியாக, சதை தனியாக அவர்கள் கிழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரும்பு பற்களை கொண்டு சீப்புகளை கொண்டு அவர்கள் வகுந்து எடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

மரணத்தை பார்த்து பயப்படக்கூடியவன் அல்ல ஒரு முஸ்லிம். ஒரு முஸ்லிமுடைய வேட்கை, ஒரு முஸ்லிமுடைய லட்சியம் எப்படி இருக்க வேண்டும்.

யா அல்லாஹ்! தவ்பா செய்தவனாக, உன் பக்கம் திரும்பியவனாக, நீ என்னைக் கொண்டு பொருந்தியவனாக, நான் உன்னைக் கொண்டு பொருந்திய நிலையில், பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நீ என் உயிரை கைப்பற்றுவாயாக!

அன்பானவர்களே! நல்ல முடிவுக்கென்று நல்ல அடையாளங்கள் இருக்கின்றன. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா பல நல்லவர்களின் வாழ்க்கையின் வரலாறுகளிலிருந்து நமக்கு படிப்பினைகளை, பாடங்களை தருகிறான்.

மரண நேரம், சாதாரணமான ஒரு நேரம் அல்ல. இறைத்தூதர்களெல்லாம் பயந்த ஒரு நேரம் மரண நேரம். திடுக்கங்களை கொடுக்கக்கூடிய நேரம், குழப்பங்களை உண்டாக்கக்கூடிய நேரம்.

அந்த நேரத்தில் ஈமான் தடுமாறாமல் இருக்க வேண்டும். நீங்கள் அந்த நேரத்தில் எந்த நிலையில் மரணிக்கிறீர்களோ அது தான் உங்களுடைய வெற்றி.

ஆகவே தான், உயிரை விட நமக்கு பிரியமான நம்முடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

«مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ»

யாருடைய இறுதிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் வாக இருக்குமோ அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 1299.

ஒவ்வொரு முஸ்லிமும் அந்த துஆவை கேட்க வேண்டும். யா அல்லாஹ்! என்னுடைய மரண நேரத்தில் எனக்கு இறைநம்பிக்கையை ஈமானை கொடு. தடுமாற்றத்தை விட்டு என்னை காப்பாற்று.

ஷைத்தான் குழப்பங்களை உண்டாக்கக்கூடிய நேரம் அந்த கடைசி நேரம். அந்த நேரத்தில் நான் தடுமாறாமல் இறைநம்பிக்கை உறுதியுடையவனாக, உன்னை பயந்தவனாகவும், உன்னை ஆதரவு வைத்தவனாகவும், உன்னிடத்தில் திரும்புவதில் மகிழ்ச்சி கொண்டவனாகவும் என்னை ஆக்கி வை.

கண்ணியத்திற்குரிய நல்லோர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் பார்க்கிறோம். ஆரம்பமாக ஸஹாபாக்கள், தாபியீன்கள் சிலருடைய வரலாறுகளை பார்த்து, பிறகு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதி கட்டத்தை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வரக்கூடிய ஜும்ஆக்களில் நாம் பார்ப்போம்.

அன்பானவர்களே! மகான்கள் என்றால், அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு தங்களது ஆன்மாக்களை பரிசுத்தமாக்கி கொண்டவர்கள்.

அவர்கள் ஆன்மாக்களை பரிசுத்தமாக்கியவர்கள்.நாமோ ஆன்மாக்களை அசிங்கப்படுத்தியவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

நாம் நமது உடலுக்கு, உடைக்கு,நாம் இருக்கின்ற இடத்திற்கு அவற்றை சுத்தமாக வைக்கக்கூடிய முக்கியத்துவம் நம்முடைய ஆன்மாக்களை சுத்தமாக வைப்பதற்கு கொடுப்பதில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.(அல்குர்ஆன் 91:9,10)

உடலை சுத்தப்படுத்தியவர் அல்ல, உடையை சுத்தப்படுத்தியவர் அல்ல, இருக்கின்ற இடத்தை சுத்தப்படுத்தியவர் அல்ல.

நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம், உடலை சுத்தப்படுத்துவது, உடையை சுத்தப்படுத்துவது முக்கியமில்லையா? என்று. முக்கியம் தான். ஆனால், சாதாரண மிருகங்கள், பறவைகள் மற்ற உயிரினங்கள் கூட தனது உடலை, தான் இருக்கின்ற இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன.

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை, நீ உன் உடலை, உடையை, உன் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதை போன்று அதை விட அதிகமாக உன் ஆன்மாவை சுத்தமாக வைத்துக் கொள்.

இன்று அந்த நஃப்ஸை பற்றி அந்த ரூஹைப் பற்றி சிந்திப்பதே இல்லை. அது எங்கோ நஜிஸுகளில் மேய்ந்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! அது எங்கோ அல்லாஹ்வை மறந்த நிலையில் பாவங்களில் உலக இன்பங்களில் மூழ்கி தானும் அழிந்து நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

அதைப் பற்றியான கவலை இல்லை. அந்த நல்லவர்கள் வாழ்நாளெல்லாம் ஆன்மா அழுக்கடைவதிலிருந்து பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

முதலில் அபூபக்ருடைய வாழ்க்கை வரலாறை தான் பார்க்கப் போகிறோம். அவர்களுக்கு ஒரு தலைவலி ஏற்பட்டால் கூறுவார்கள், இது என்னுடைய எந்த பாவத்தினால் ஏற்பட்டதோ?  அல்லாஹ் என்னுடைய பாவங்களை என்னிடத்திலிருந்து மன்னிப்பதோ அதிகமானது. இந்த தலைவலி நான் செய்த ஏதோ ஒரு பாவத்திற்காக இருக்கலாம்.

பார்க்க : சியரு அஃலாமின் நுபலா.

ஆனால், அல்லாஹ் என்னிடம் மன்னிக்கின்ற பாவங்களோ, மன்னிக்கின்ற குறைகளோ, ஏறாலம் இருக்கிறது. எனது எல்லா பாவங்களுக்கும் எல்லா குறைகளுக்கும் அல்லாஹ் என்னை தண்டிக்க நாடினால் என்னால் சமாளிக்க முடியாது.

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம்,ஒருவர் வந்து என்னால் இரவுத் தொழ முடிவதில்லையே என்று கேட்டபோது, நீ பகலில் ஏதாவது ஒரு பாவம் செய்திருப்பாய் என்று கூறினார்கள்.

அன்பானவர்களே! அவர்கள் இந்த நஃப்ஸை புரிந்தவர்கள். இந்த நஃப்ஸுடைய வெற்றி எதில் இருக்கிறது? இந்த நஃப்ஸூடைய தோல்வி எதில் இருக்கிறது?என்பதை புரிந்தவர்கள். ஆன்மாவை சுத்தப்படுத்தியவர்கள், அவர்கள் நம்மை போன்றவர்கள் அல்ல. அவர்களுடைய இலட்சியம் வேறு, அவர்களுடைய குறிக்கோள் வேறு. அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையிலிருந்த உறவுகள், தொடர்புகள் என்பது வேறு.

அல்லாஹ்வை அறிந்தவர்கள், ஸிஃபத்துகளை புரிந்தவர்கள். அல்லாஹ்வுடைய கண்ணியத்தை உணர்ந்து அந்த கண்ணியத்தைக் கொண்டு அல்லாஹ்வை பயந்தவர்கள்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மரணத்தருவாயில் அவர்கள் ஓதுகின்ற குர்ஆன் வசனத்தை பாருங்கள். இன்று நாமும் எத்தனையோ பேர் நம்முடைய கண்ணிற்கு முன்னால் மரணிப்பதை பார்க்கிறோம்.

அவர்களுடைய வாழ்க்கை குர்ஆனோடு தொடர்புடையதாக இருந்திருந்தால் தானே மரண நேரத்தில் குர்ஆனுடைய வசனம் நினைவுக்கு வரும். உள்ளம் எல்லாம் சாக்கடைகளில், உள்ளம் எல்லாம் உலக அசுத்தங்களில்இருக்கஎங்கிருந்து குர்ஆன் நியாபகம் வரும்?

எத்தனையோ பேர் முனுமுனுத்துக் கொண்டிருப்பார்கள். என்ன முனுமுனுக்கிறார்கள் என்று பார்த்தால், ஏதாவது பாடல்களை முனுமுனுத்துக் கொண்டிருப்பார்கள்.

கண்டிப்பாக மரணத்தருவாயில் அவர்களுக்கு அந்த பாடல் தான் நினைவுக்கு வரும். யார் குர்ஆனை முனுமுனுத்துக் கொண்டிருந்தார்களோ, அல்லாஹ்வின் உயர்ந்த திக்ருகளை முனுமுனுத்துக் கொண்டிருந்தார்களோ,கண்டிப்பாக மரண நேரத்தில் அவர்களுக்கு குர்ஆன் நியாபகத்திற்கு வரும், அவர்களுக்கு திக்ரு நியாபகத்திற்கு வரும்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிமார்களுக்கு அடுத்த தகுதியைப் பெற்ற முதல் முஃமின். அவர்கள் தன் மரண நேரத்தில் ஓதுகிறார்கள்.

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ

மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)(அல்குர்ஆன் 50:19)

அந்த வசனத்தை ஓதிஓதி அவர்கள் அழுகிறார்கள், பயப்படுகிறார்கள். இன்று நம்மில் ஒருவருக்கு மரணம் நெருங்கிவிட்டது என்றால்,நாம் என்ன கூறுவோம்? என் சொத்தையெல்லாம் விற்றாவது என்னை அமேரிக்காவிற்கு கொண்டு போய் என்னை வாழ வையுங்கள்.

என்னவோ இந்த உலகத்தில் நாம் சாதித்துக் கொண்டிருப்பதை போன்று,நாம் இல்லையென்றால் இந்த உலகமே இயங்காததைப் போன்று, இந்த உலகம் என் பக்கம் தேவையுள்ளதாக இருப்பதை போன்று கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த உலகத்தில் வாழ்வதற்கு நமக்கு ஆசை. ரஸூலுல்லாஹ்வுடைய மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அத்தனை குழப்பங்களையும் அல்லாஹு தஆலா இந்த கலீஃபாவைக் கொண்டு தான் அடக்கினான்.

இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ் நிலை நிறுத்தினான். அந்த கலீஃபாவிற்கு கூறப்படுகிறது;நாங்கள் மருத்துவர்களை கொண்டு வருகிறோம், அனுமதி தாருங்கள் என்று.

அதற்கு அவர்கள் சொன்னார்கள் : அந்த மருத்துவர்தானே என்னை நோயாளியாக ஆக்கியிருக்கிறான். எனக்கு நீங்கள் சிகிச்சை பார்க்க வேண்டாம், நான் உங்களோடு வாழ்வதில் விருப்பமுள்ளவன் இல்லை, எனது நண்பரோடு சேர விரும்புகிறேன் என்று.

அவர்கள் சொன்னால் அந்த சொல் உண்மையாக இருந்தது. உண்மையான பிரியம் இருந்தது.

நாம் சொல்ல முடியுமா? எனக்கு ரஸூலுல்லாஹ்வின் மீது பிரியம் என்று சொல்வதற்குண்டான தகுதி இந்த நாவுக்கு இருக்கிறதா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

நம்முடைய குற்றங்கள், குறைகள் அலட்சியங்களிலிருந்து நம்மை சுத்தப்படுத்த வேண்டும்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ்வுடைய தோழர். உலக முஸ்லிம்களெல்லாம் முழு மனதோடு கண்ணியப்படுத்துகின்ற தோழர். அங்கே அவர்களின் பணிவைப் பாருங்கள்.

இன்று, இந்த பெருமை தான் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆணவம், கர்வம், மமதை, பெருமை எல்லாம் இருக்கிறது. பணத்தால், பதவியால், கல்வியால், அழகால், ஆற்றலால், ஆடம்பரத்தால் தனக்கு இருக்கின்ற மதிப்பு மரியாதையால் மனிதனுக்கு பெருமை.

அல்லாஹ்விற்கு முன்னால் கூட பணியவிடாமல் ஒருவனை தடுத்துக் கொண்டிருக்கிறது என்றால், எவ்வளவு மோசமான பெருமை இந்த உள்ளங்களில் குடிக்கொண்டிருக்கிறது என்பதை பாருங்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இன்று, நமது கண்களை அழுகையிலிருந்து தடுக்கக்கூடியது எது? நமது ஸுஜூதில் நமக்கு இன்பத்தை கொடுக்காதது எது? நம்முடைய தொழுகையில் நாம் நிற்கும்பொழுது அந்த இன்பத்தை நாம் அடைய முடியாமல் தடுப்பது எது?

உள்ளத்தில் உள்ள பெருமை, அடிமை என்ற உணர்வோடு அந்த ரப்பிற்கு முன்னால் நின்று பாருங்கள், நிற்பதில் உங்களுக்கு இன்பம் வரும். அடிமை என்ற உணர்வோடு ருகூஉ செய்து பாருங்கள், முதுகை தூக்காமல் இப்படியே மௌத்தாகிவிடலாம் என்ற எண்ணம் வரும். அடிமை என்ற உணர்வோடு ஸூஜூது செய்து பாருங்கள்,யா அல்லாஹ்! இந்த ஸுஜூதை எனக்கு இறுதி ஸுஜூதாக ஆக்கிவிடு என்று துஆ கேட்க மனம் வரும்.

நாம் ஸுஜூது செய்யும் போது கூட,நான் பணக்காரன், ஆலிம், ஹாஜி என்ற ஆணவத்தோடு தலை குனியும் போது,உனது தலை தான் குனிந்திருக்கிறது,உன்னுடைய உள்ளம் பணியவில்லை என்றால், அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான், தூக்கி குப்பையில் எரிந்து விடுவான்.

அல்லாஹ்விற்கு உடலின் பணிவு மட்டும் தேவை அல்ல. உள்ளத்தின் பணிவு தேவை. அதை தான் குஷூஉ என்று சொல்லப்படும்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், தனது அன்பு மகளார், அல்லாஹ்வுடைய தூதரின் அன்பு மனைவி, சொர்க்கம் வாக்களிக்கப்பட்ட பெண், நம்முடைய தாய் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து, ஆயிஷா! நான் இப்போது எந்த ஆடையில் மரணிக்கின்றேனோ, அந்த ஆடையை பாருங்கள். நான் மரணிக்கின்ற நேரத்தில் அது சுத்தமாக இருக்கிறதா? அசுத்தமாக இருக்கிறதா? என்று.

ஏனென்றால், உயிர் பிரியும்பொழுது உடல் தளர்ந்து விடும், நரம்புகளெல்லாம் தளர்ந்து விடும். அசுத்தங்கள் வெளியாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி அசுத்தங்கள் வெளியாகி இருக்குமேயானால், இந்த ஆடையை உடனடியாக கழுவி விடுங்கள்.

என்னை குளிப்பாட்டும் பொழுது அணிந்திருக்கின்ற ஆடையை கழட்டி விட்டு குளிப்பாட்டுவதற்காக ஒரு ஆடையை போர்த்தி குளிப்பாட்டுவது.இதுதான் இஸ்லாமிய வழக்கம்.

அப்படி இந்த ஆடையை கழட்டி என்னை நீங்கள் குளிப்பாட்டும் பொழுது இந்த ஆடையை பாருங்கள். இதை நீங்கள் சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ளுங்கள். நான் மரணித்துவிட்டால் இதே ஆடையில் என்னை கஃபனிடுங்கள்.

பார்க்க : அல் ஆசார் முஹம்மது இப்னுல் ஹசன், எண் : 224.

பிறகு சொன்னார்கள்:

فإن الحي أولى بالجديد من الميت

புதிய ஆடைக்கு உயிருள்ளவர்கள் தான் தகுதியானவர்கள்.மையத்தாகக்கூடிய நான் அல்ல.

நூல் : நஸ்புர் ராயா – சைலையி

அதற்கு பிறகு, மரண நேரம் நெருங்க நெருங்க தனது நண்பர், ரஸூலுல்லாஹ்வுடைய தோழர் உமரை அழைக்கிறார்கள். உமரே! நான் உனக்கு ஒரு வஸிய்யத் செய்கிறேன், அந்த வஸிய்யத்தை நீ ஏற்றுக் கொள்.

(இப்படியெல்லாம் வஸிய்யத் செய்யக்கூடிய அளவு ஒரு மரணம், இன்று நமக்கு மத்தியில் யாருக்காவது ஏற்படுகிறதா? எங்கு பார்த்தாலும் அகால மரணங்கள்.

அதாவது, திடீரென்று ஆபத்துகளிலோ அல்லது ஹார்ட் அட்டாக்குகளிலோ அல்லது வேறு விதமான விபத்துகளிலோ நடக்கக்கூடிய மரணத்தைக் கூறவில்லை.

சாதாரணமாக வீட்டிலிருந்து மரணிக்கின்ற மனிதர்களுக்கு கூட, இப்படிப்பட்ட நிலைகளெல்லாம் ஏற்படாமல் அவர்கள் மரணத்தை சந்திக்கிறார்களே அப்போது ஏதோ ஒரு பிரச்சனை நமக்குள் இருக்கிறது.

மரணத்தைப் பற்றி எதிர்பார்க்காதவர்களாகவே நாம் இருக்கிறோம். அப்படி எதிர்பார்த்திருந்தால் அந்த மரணம் வரும்பொழுது அதற்குரிய உணர்வை அல்லாஹ் முன்கூட்டியே கொடுத்திருப்பான்.

அதை எதிர்பார்க்காமல் இருக்கின்ற காரணத்தினால்தான், அந்த உணர்வே இல்லாமல் இருக்கின்ற நிலையில் மரணம் வந்து நம்மை கவ்விக் கொண்டு செல்கிறது.)

வஸாயா அல்உலமா – முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ஹி 319)

அபூ பக்ர், உமரிடத்தில் கூறுகிறார்கள்:உமரே! நான் உனக்கு நசீஹத் செய்கிறேன்.  அல்லாஹ்விற்கு நீ செய்ய வேண்டிய கடமை இரவு காலங்களில் என்று தனியாக இருக்கிறது. அந்த கடமையை நீ பகலில் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

பகலில் நீ அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதை இரவில் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

நீ ஃபர்ளை நிறைவேற்றுகின்ற வரை நஃபில்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

(இன்று, பெருநாள் தொழுதால் போதும். அடுத்த நேரம் லுஹரை பற்றியெல்லாம் கவலை இல்லை. சுப்ஹே தொழாமல் பெருநாள் தொழுகின்ற முஸ்லிம்கள் எத்தனை பேர்?இவர்களுடைய பெருநாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா?

அல்லது அப்படியே சுப்ஹையும் தொழுது பெருநாளையும் தொழுதாலும் கூட, லுஹருக்கு பள்ளிக்கு போகமாட்டேன், தொழமாட்டேன் என்ற கொள்கையில் இருக்கிறார்கள். கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அப்படி ஒரு தொழுகையை அல்லாஹ் வைக்கவே இல்லை.)

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், உமரை கலீஃபாவாக ஆக்கி விட்டு மரணிக்கிறார்கள். உமருக்கு பைஅத் வாங்கி கொடுத்துவிட்டு மரணிக்கிறார்கள். இந்த உம்மத்திற்கு அடுத்த கலீஃபாவாக ஆகுவதற்கான தகுதி உமரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

எனவே, தனக்கு அடுத்த கலீஃபாவிற்கு அவர்கள் செய்யக்கூடிய நஸீஹத்தை பாருங்கள்.  இந்த அறிவுரைதானே உமரின் இரவு தூக்கத்தையும் பகலின் தூக்கத்தையும் தொலைத்தது.

நம்மில் யாராவது, பாலைவனத்தின் சுடு மணலில் தூங்க முடியுமா? பஞ்சு மெத்தையில் படுத்தால் கூட தூக்கம் வராமல் தூக்க மாத்திரையை சாப்பிட்டால் தான் தூங்க முடியும் என்ற நிலையில் எத்தனை பேர்?

எல்லா வசதியும் இருந்து தூக்கமில்லாமல் தூக்கத்தை தொலைத்து நிம்மதியில்லாமல் இருக்கக்கூடியவர்கள் எத்தனை பேர்?

ஆனால், உமர் அவர்கள், எங்கே தூங்குகிறார் என்றால், மஸ்ஜிதின் ஓரத்தில், இன்றைய மஸ்ஜிதுன் நபவியல்ல. பாய்கள் விரிக்கப்பட்ட மஸ்ஜிது அல்ல, வெறும் மணலில். அதுவும் அந்த மணல் வெயிலின் வெப்பத்தை தடுக்காது, குளிர்காலத்தின் குளிரை தடுக்காது, மழைகாலத்தின் மழையை தடுக்காது. பேருக்கு ஒரு கூரை அவ்வளவு தான்.

கலீஃபா கூறினார்கள்:நீங்கள் தூங்குவதில்லையா? இரவில் தூங்கினால் அல்லாஹ்வுடைய ஹக்கை பாழாக்கி விடுவேன். பகலில் தூங்கினால் அடியார்களின் ஹக்கை பாழாக்கி விடுவேன்.

அந்த பயம் என்னை தூங்கவிடாமல் செய்கிறது. அசந்து விழுந்தால் தான் உண்டு. 24மணி நேரத்தில் கொஞ்சமாவது கண் தானாகவே அயர்ந்தே ஆகும். அப்படி ஒரு நிலையில் தூங்கினால் தான் உண்டு என்று கூறுகிறார்கள்.

இந்த நஸீஹத்தை நினைத்துப்பாருங்கள்! இது தானே உமரை அப்படி மாற்றியது.

உமரே! இரவில் ஒரு கடமை இருக்கிறது. அல்லாஹ் அதை பகலில் ஏற்றுக் கொள்ளமாட்டான். அதாவது, அல்லாஹ்விற்கு நீ செய்ய வேண்டிய கடமை.

உனக்கும் அல்லாஹ்விற்கும் இடையே உறவை பலப்படுத்தக்கூடிய கடமை அது. இரவை விட சிறந்த நேரம் இல்லை, உங்களை அல்லாஹ்வோடு நெருக்கமாக்கி கொள்வதற்கு.

அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا

நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. (அல்குர்ஆன் 73:6)

அல்லாஹ் கூறுகிறான்:நபியே! இரவின் தனிமை, அந்த தனிமையில் நீங்கள் குர்ஆன் ஓதுவது குர்ஆனை உங்களுடைய உள்ளத்தில் அது இறக்கும். ஆழமாக உங்களுடைய உள்ளத்திற்குள் அது பதிய வைக்கும்.

நாம் எப்போது குர்ஆன் ஓதுகிறோம்? பகலில் ஓத வேண்டாம் என்று அல்லாஹ் கூறவில்லை. இரவின் ஓரங்களிலும் பகலிலும் ஓதுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால், அந்த குர்ஆனோடு ஒன்றி ஓதி, அதனுடைய தாக்கங்கள் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நேரம் எது? அந்த இரவு நேரம்.

பிறகு பகலில் கடமை இருக்கிறது, இரவில் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். அது என்ன? அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமை. உனது வாசலை தடுத்துக் கொள்ளாதே!

எனவேதான், கலீஃபாக்கள் யாருக்குமே கால நிலைகள் என்பது கிடையாது.யாரைப் பார்த்து ரோமாபுரி பேரரசுகளும் பாரசீக பேரரசுகளும் பயந்து நடுங்கினவோ, ஈராக்சிரியா இறுதியில் ஜரோப்பா வரை உள்ள அத்தனை நாடுகளும் யாருடைய காலடியில் விழுந்தனவோ, அந்த பேரதிபர்களுக்கு காவலாளிகள் இல்லை.

அவர்களுக்கு கோட்டை கொத்தலங்கள் இல்லை. மாட மாளிகைகள் இல்லை. அவர்களுடைய தர்பார் அல்லாஹ்வுடைய மஸ்ஜித்தான்.

அவர்களது மாளிகை அவர்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த குடிசைகள் தான். ஆனால், அவர்கள் அல்லாஹ்வை பயந்தார்கள்.எனவே மக்கள் அவர்களை பயந்தார்கள்.

அவர்கள் நீதி செலுத்தினார்கள்.எனவே யாரையும் பயப்படாமல் ஆட்சி செய்தார்கள். மனிதர்களை பார்த்து பயப்படவில்லை. எனவே, தங்களுக்கு காவலாளிகளை வைத்துக் கொள்ளவில்லை.

உண்மையான மரணத்திற்கு துணிந்த மாவீரர்களாக இருந்தார்கள். மரணத்தை எதிர்பார்த்தவர்களாக இருந்தார்கள். மரணத்தை பயந்தால் தானே பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கூறினார்கள்:(மிகப் பெரிய ஒரு வார்த்தையை) உமரே! மறுமையில் யாருடைய நன்மையின் தட்டு கனக்குமென்றால், யார் இந்த உலகத்தில் வாழும்பொழுது சத்தியத்தை பின்பற்றி வாழ்ந்தார்களோ, உண்மையை பின்பற்றி வாழ்ந்தார்களோ அவர்களுடைய நன்மையின் தட்டுகள் தான் கனக்கும்.

பிறகு கூறினார்கள்: மறுமையில் யாருடைய நன்மையின் தட்டுகள் லேசாகி விடுகின்றதென்றால், யார் இந்த உலகத்தில் வாழும்பொழுது பொய்யை பின்பற்றினார்களோ, மார்க்கத்தை விட்டு விலகி வாழ்ந்தார்களோ, அவர்களுடைய நன்மையின் தட்டுகள் தான் லேசாகி விடும். கண்டிப்பாக லேசாகி தான் ஆக வேண்டும்.

எந்த தட்டில் பாத்தில் வைக்கப்பட்டு விட்டதோ, அவ்வளவு தான் அதனுடைய முடிவு.

இப்படியாக, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நஸீஹத்து செய்கிறார்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உயிர் பிரிகிறது.

அந்த மரண நேரத்தில் கூட, தான் நியமித்த கலீஃபாவிற்கு கூற வேண்டிய அறிவுரையை, எச்சரிக்கையை, உபதேசத்தை, அல்லாஹ்வுடைய பயத்தை கொடுத்துவிட்டு ஒரு கலீஃபா -அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி மரணிக்கிறார் என்றால், அல்லாஹு தஆலா அவருக்கு கொடுத்த பெரும் பாக்கியம் அது.

அடுத்து, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த வாழ்க்கையை கேளுங்கள். அவர்கள் ஒரு மஜூஸியால் கொல்லப்பட்டார்கள், அந்த சம்பவத்தையெல்லாம் கண்ணிற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

அவர்களது வீட்டில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு வருகிறார்கள், உமரைப்பார்த்து கூறுகிறார்கள்:

أَسْلَمْتَ حِينَ كَفَرَ النَّاسُ، وَجَاهَدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَذَلَهُ النَّاسُ

அமீருல் முஃமினீன் அவர்களே! மக்களெல்லாம் அல்லாஹ்வை நிராகரித்த காலத்தில் முந்திய முஸ்லிம்களில் நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டீர்கள்.

மக்கள் ரஸூலுல்லாஹ்வை கைவிட்ட பொழுது ரஸூலுல்லாஹ்வோடு சேர்ந்து நீங்கள் ஜிஹாது செய்தீர்கள். நீங்கள் இப்போது ஒரு ஷஹீதாக கொல்லப்பட்டிருக்கிறீர்கள்.

உங்கள் மீது யாரும் கருத்து வேற்றுமை கொள்ளவில்லை. நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்று இரண்டு கருத்து இல்லை.எல்லா முஃமின்களும் உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

(இன்று,நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? நம்மை ஒருவர் நல்லவர் என்று கூறினால், இன்னொருவர் இவரை விட கெட்டவர் யாருமில்லை என்று கூறுவார். ஸஹாபாக்களை பொறுத்தவரை அப்படி அல்ல.

ஏனென்றால்,அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு இருந்ததெல்லாம் ஒரே பக்கம் தான். காரணம்,அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே திருப்திப்படுத்தினார்கள்.அல்லாஹ்வை மட்டுமே பயந்தார்கள். எனவே,அவர்களுடைய வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருந்தது.)

பிறகு கூறினார்கள்:

وَقُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْكَ رَاضٍ

அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் மரணிக்கும் பொழுது உங்களைக் கொண்டு திருப்தி கொண்ட நிலையில் மரணித்தார்கள்.

இப்படி கூறியவுடன் உமர் அவர்கள், இப்னு அப்பாஸை பக்கத்தில் அழைத்து, என்ன கூறினாய்? திரும்ப கூறு என்று கூறினார்கள்.

அப்போது உமருடைய பதிலை பாருங்கள், இப்படி தான் புகழ்ந்து நீங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்படி புகழ்ந்து என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா? நானோ என்னுடைய இந்த மரண நிலையை நினைத்து பயந்துக் கொண்டிருக்கிறேன்.

சூரியன் உதிக்கின்ற இந்த உலக சொத்துக்களெல்லாம் எனக்கு இருந்திருந்தாலும்,அதை கொடுத்தாவது இந்த மரண நேரத்தில் நான் பார்க்கின்ற அந்த காட்சிகளிலிருந்து அல்லாஹ்விடத்தில் விடுதலை பெற்றிருப்பேன். (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 4515.

மரணத்தின் திடுக்கம் என்பது சாதாரணமான திடுக்கம் அல்ல. அந்த புகழை ஏற்றுக் கொண்டு தன்னை உயர்த்தினார்களா? அபூபக்ரும் அப்படித்தான், உமரும் அப்படித்தான், உஸ்மானும் அப்படி தான், அலீயும் அப்படி தான்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அவர்கள் படித்த அந்த பணிவு.

புகழைக் கொண்டு ஏமாறக்கூடியவர்கள் அல்ல.இன்று, நம்மில் யாரையாவது ஒருவரை பார்த்து மாஷா அல்லாஹ் உங்களை மாதிரி ஆகுமா? என்று கூறினால், அவ்வளவு தான், நெஞ்சு இன்னும் பெருசாகி விடும். அவருடைய முகமெல்லாம் அப்படியே மலர்ந்து போய்விடும். குறையை கூறினால், தொட்டால் சினுங்கியைப் போன்று அப்படியே சுறுங்கி விடும்.

ஏன்? நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்; என்னில் நன்மையை தவிர வேறொன்றுமில்லை என்று.

ஆனால், நல்லவர்கள் நன்மையை தவிர வேறு எதுவும் இல்லை. இருந்தாலும் குறைகளைக் கொண்டு நிரம்பியவர்கள் என்று தங்களை எப்போதும் அவர்கள் நினைத்துக் கொண்டே இருந்தார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்.

அடுத்து, உமருடைய மகனார், அப்துல்லாஹ் இப்னு உமர் அவருடைய மடியில் உமரின் தலை இருக்கிறது. இப்னு உமர் வணக்கத்திலேயே உருவான ஒரு ஸஹாபி.

ரஸூலுல்லாஹ்வை நேசிப்பதில் ஸஹாபாக்களில் தனி இடம் பிடித்த ஒரு தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர்.அவருடைய மடியில் தலை இருக்கிறது.

பார்க்க : அல்முன்தகா அன்னஃபீஸ்.

அந்த நேரத்தில் கலீஃபா கூறுகின்றார்கள்: என் தலையை கீழே வை என்று.

ஒரு பிள்ளை, தன்னுடைய தந்தையின் மரண நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டு அவர் இறக்கும்பொழுது பொதுவாக ஒரு பாசமுள்ள மகனிற்கு எவ்வளவு வேதனை இருக்கும்! அந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு உமருடைய நிலை எப்படி இருந்திருக்கும்!

தலையை மடியில் வைத்து அந்த ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கலீஃபா கூறுகிறார்கள்:தலையை கீழே வை என்று. தலை மடியில் இருந்தால் என்ன? கீழே இருந்தால் என்ன? என்று கூறுகிறார்கள்.

(எதனால், இப்படி கூறினார்கள்? நான் மரணிக்கக்கூடிய சாதாரண ஒரு மய்யத். எனது தலை இப்போது உனது மடியில் இருப்பதற்கு கூட தகுதியில்லை. எனவே, இந்த மண்ணில் வைத்து விடு.

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى

இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். (அல்குர்ஆன் 20:55)

وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ الْأَرْضِ نَبَاتًا (17) ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا

அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.(அல்குர்ஆன் 71:17,18)

நாம் மண்ணில் ஸஜ்தா செய்வதில்லையே, மண்ணில் அமர்வதில்லையே, எங்கிருந்து நமக்கு மண் நியாபத்திற்கு வரும்?மண்ணை என்னவோ நஜீஸென்று நினைப்போம்.

ஸஜ்தா செய்கின்ற இடத்தில் பாயிற்கு மேல் மண் இருந்தாலும் கூட,ஸஜ்தா செய்து அமர்ந்த உடனே அந்த மண்ணை துடைப்பார். தொழுகையில் ஸலாம் கொடுக்கும் வரை நெற்றியில் ஒட்டியிருக்கும் மண்ணை துடைத்துக் கொண்டேயிருப்பார்.அந்த அளவுக்கு உள்ளத்தில் பெருமை.)

தலையை கீழே வை என்று கூறியவுடன், நான் அழிந்து போய்விடுவேன், எனது தாயும் அழிந்து போய் விடுவாள்,இந்த நேரத்தில் அல்லாஹ் என் மீது கருனை காட்டவில்லை என்றால்.

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தருவாய் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த நேரத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்,தங்களது தோழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

தன்னை எப்படி குளிப்பாட்டி அடக்கம் செய்ய வேண்டுமென்று கூறுகிறார்கள். அப்படி கூறுகின்ற அந்த வாக்கியங்களில் ஒன்றை பாருங்கள்.

நான் இறந்து விட்டால்,உடனடியாக யாருக்கும் சொல்லி அனுப்பாதீர்கள். காரணம்,பல இடங்களில் தளபதிகள் இருக்கிறார்கள். என்னை சீக்கிரமாக குளிப்பாட்டி, கஃபனிட்டு, விரைவாக கொண்டு போய் என்னை அடக்கம் செய்து விடுங்கள்.

நான் நல்லவனாக இருந்தால், என்னை என் நன்மையின் பக்கம் விரைவாக கொண்டு போய் சேர்த்து விடுங்கள். நானோ தீயவனாக இருந்தால் நீங்கள் அந்த தீயவனை உங்களுடைய தோழிலிருந்து சீக்கிரம் இறக்கி வைப்பது தான் நல்லது.

அது மட்டுமல்ல, மேலும் கூறினார்கள்:நான் என்னுடைய தோழர்களோடு அடக்கம் செய்ய விரும்புகிறேன். அதற்கு நீங்கள் நம்முடைய தாய் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அனுமதி கேளுங்கள்.

அதுவும், அமீருல் முஃமினீன், கலீஃபா உமர் கேட்டார் என்று கூறாதீர்கள். கத்தாப் உடைய மகன் உமர் அனுமதி கேட்கிறார், நீங்கள் அனுமதி கொடுத்தால் அபூபக்ர் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள், நான் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியிருந்தேன். ஆனால், உமர் கேட்டதற்கு பிறகு என்னால் மறுக்க முடியவில்லை.

அனுமதி தருகிறார்கள், அந்த அனுமதி கலீஃபா உமரிடத்தில் வந்து சொல்லப்படுகிறது. மீண்டும் கூறுகிறார்கள்: இப்போது நம்முடைய தாய் அனுமதி தந்துவிட்டார்கள்.நான் இறந்து கண்ணை மூடியதற்கு பிறகு,குளிப்பாட்டி என்னை அடக்கம் செய்யும்பொழுது கூட,நீங்கள் எடுத்துச் சென்று மீண்டும் அனுமதி கேளுங்கள்.

அப்படி அனுமதி கொடுத்தால் அடக்கம் செய்யுங்கள்.இல்லையென்றால் முஸ்லிம்களுடைய பொது கப்ரில் என்னை அடக்கம் செய்து விடுங்கள்.

அன்பானவர்களே! இப்படி நல்லோர்களுடைய வாழ்க்கை வரலாறுகளிலிருந்து நாம் படிக்க வேண்டிய நிறைய படிப்பினைகள்,மரணத்தருவாயில் அவர்கள் மக்களோடு நடந்து கொண்ட நடைமுறைகள், அல்லாஹ்வோடு நடந்து கொண்ட நடைமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் அல்லாஹ்வை பயந்த விதத்தை நாம் தெரிய வேண்டும். அந்த பயம் ஒன்றுதான், நமக்கு நமது மார்க்கத்தின் சுவையை புரிய வைக்கும். நம்முடைய மார்க்கத்தின் இனிமையை இன்பத்தை நமக்கு உணர வைக்கும்.

இன்று நமக்கு அந்த இன்பம் கிடைக்கிறதா? நமது நாக்கு இந்த உணவின் ருசியை ருசிப்பதில் காணக்கூடிய அந்த இன்பம், அமல்களில், இபாதத்துகளில், அல்லாஹ்விற்கு நெருக்கமான அமல்களை செய்வதில் நம்முடைய ஆன்மாவிற்கு அந்த இன்பம் ருசி கிடைக்கிறதா?

இல்லையே. காரணம்,அந்த தக்வாவை இழந்தவர்களாக நாம் இருக்கிறோம். அந்த தக்வாவை நம்முடைய வாழ்க்கையோடு இணைக்காதவர்களாக நாம் இருக்கிறோம்.

எனவேதான், ஒரு உணர்வில்லாத ஒரு சாதாரண மரக்கட்டையை போன்று தான் நாம் இருக்கிறோம்.அந்த மரக்கட்டை இங்கே பொறுத்தினால் இங்கே இருக்கும். அங்கே பொறுத்தினால் அங்கே இருக்கும். அது போன்று தான் நம்முடைய அமல்களில் நாம் இருந்துக் கொண்டிருக்கிறோம்.

மரக்கட்டைகளுக்கு கூட அல்லாஹ்வுடைய பயம் இல்லாமல் இல்லை. ரஸூலுல்லாஹ்வுடைய அன்பால் அழுத பேரீத்த மரத்தின் கட்டையை இமாம் புகாரியின் ஹதீஸில் நாம் பார்க்கிறோம்.

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா கொடுத்துக் கொண்டிருந்த பேரீத்த மரத்தின் அடிக்கட்டையை எடுத்து, மிம்பர் அமைக்கப்பட்டு விட்ட போது அதை பள்ளியின் ஓரத்தில் வைக்கிறார்கள்.

தனது கன்றை தொலைத்த ஒட்டகம் அழுவதை போன்று அழுகையின் சப்தத்தை கேட்கிறார்கள். அந்த பேரீத்த மரத்தின் கட்டையிலிருந்து அழுகை வருகிறது.

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரிலிருந்து இறங்கி சென்று அந்த கட்டையை அனைத்து தட்டிக் கொடுக்கிறார்கள்.(2)

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 918.

இமாம் ஹஸன் பஸரி கூறுகிறார்கள்: முஃமின்களே! ஒரு மரக்கட்டை நம்முடைய ரஸுலை நினைத்து அவருடைய பிரிவால் அழுகிறதென்றால்,அந்த நபியின் பிரிவால் அழுவதற்கு நீங்கள் தான் முதல் தகுதியுடையவர்கள்.

நூல் : சஹீஹுல் ஜாமிஃ, எண் : 2256.

அன்பானவர்களே! இந்த உணர்வு நமக்கு ஏற்பட வேண்டுமென்றால்,அதற்கு தான் மரணத்தின் பயம், அந்த தக்வாவின் உணர்வுகள், அமல்களில் இக்லாஸ்,இவை இருக்கும் பொழுது தான்,நம்முடைய இந்த வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும்.

அந்த நல்லவர்களுக்கு மரணத்தருவாய் எப்படி ஒரு மகிழ்ச்சியான தருவாயாக இருந்ததோ அப்படிப்பட்ட ஒரு நல்ல தருவாயாக நமக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்துக் கொடுப்பான். அந்த இபாதத்துகளை நோக்கி, அப்படிப்பட்ட பண்புகளை வளர்த்துக் கொள்வதை நோக்கி நம்முடைய வாழ்க்கையை நாம் எடுத்துச் செல்வோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ يَعْقُوبَ، الْعَدْلُ، ثنا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ، ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، ثنا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: دَخَلْتُ عَلَى عُمَرَ حِينَ طُعِنَ فَقُلْتُ: أَبْشِرْ بِالْجَنَّةِ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَسْلَمْتَ حِينَ كَفَرَ النَّاسُ، وَجَاهَدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَذَلَهُ النَّاسُ، وَقُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْكَ رَاضٍ، وَلَمْ يَخْتَلِفْ فِي خِلَافِتِكَ اثْنَانِ، وَقُتِلْتَ شَهِيدًا، فَقَالَ: «أَعِدْ عَلَيَّ فَأَعَدْتُ عَلَيْهِ» ، فَقَالَ: «وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ غَيْرُهُ، لَوْ أَنَّ لِي مَا عَلَى الْأَرْضِ مِنْ صَفْرَاءَ وَبَيْضَاءَ لَافْتَدَيْتُ بِهِ مِنْ هَوْلِ الْمَطْلَعِ» (المستدرك على الصحيحين للحاكم- 4515)

குறிப்பு 2)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَنَسٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ جِذْعٌ يَقُومُ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا وُضِعَ لَهُ المِنْبَرُ سَمِعْنَا لِلْجِذْعِ مِثْلَ أَصْوَاتِ العِشَارِ حَتَّى نَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ» قَالَ سُلَيْمَانُ: عَنْ يَحْيَى، أَخْبَرَنِي حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ: أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ (صحيح البخاري- 918)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/