HOME      Khutba      ரமழானின் இறுதிப் பகுதி | Tamil Bayan - 417   
 

ரமழானின் இறுதிப் பகுதி | Tamil Bayan - 417

           

ரமழானின் இறுதிப் பகுதி | Tamil Bayan - 417


ரமழானின் இறுதி பகுதி

ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானின் இறுதி பகுதி

வரிசை : 417

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 01-07-2016

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் அருளும் அன்பும் உங்கள் மீது நிலவட்டும் என்று உங்களுக்கு துஆ செய்தவனாக, அல்லாஹ்வுடைய பயத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்குமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

ரமலானின் இறுதி நாட்களை நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆர்வத்தோடும் ஆசையோடும் எதிர்பார்த்து காத்திருந்த ரமலான் நம்மை விட்டுப் பிரிய போகிறது.

ஒவ்வொருவரும் அவரவர் நோக்கத்திற்காக இந்த ரமலானை எதிர்பார்த்திருக்கலாம். சிலர் துன்யாவிற்காக எதிர்பார்க்கலாம். சிலர் மறுமைக்காக எதிர்பார்க்கலாம்.

யார் இந்த ரமலானை மறுமைக்காக எதிர்பார்த்தார்களோ, மறுமைக்காக இந்த ரமலானை பயன்படுத்திக் கொண்டார்களோ அல்ஹம்துலில்லாஹ்! அவர்களுக்கு இந்த ரமலான் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும், அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாவதற்கும் காரணமாக அமைந்திருக்கும்.  அல்லாஹ் அப்படி அமைத்து தருவானாக!

மறதியில் இருக்கின்ற மனிதனை அந்த மறதியின் புழுதியிலிருந்து, தூசியில் இருந்து சுத்தப் படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட மாதம், அல்லாஹ்வின் பக்கம் அடியான்  நெருங்குவதற்காக கொடுக்கப்பட்ட மாதம், வணக்க வழிபாடுகளை கொண்டு மறுமையை செழிப்பாக்குவதற்காக கொடுக்கப்பட்ட மாதம், சிரமம் எடுத்து வணங்குவதற்காக கொடுக்கப்பட்ட மாதம், குர்ஆன் ஓதுவதற்காகவும், ஏழை எளிய மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவும் வழங்கப்பட்ட மாதம் இந்தப் புனித ரமலான் மாதம்.

நின்று வணங்கி கால்களை, இந்த பாதங்களை அல்லாஹ்விற்காக வலி பெற செய்வதற்காக கொடுக்கப்பட்ட மாதம். அல்லாஹ்வின் அச்சத்தால் கண்கள் அழுது அழுது கண்கள் வலி பெறுவதற்காக கொடுக்கப்பட்ட மாதம்.

நம்முடைய பாவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பதற்காக கொடுக்கப்பட்ட மாதம். யார் அப்படி பயன்படுத்தினார்களோ அல்ஹம்துலில்லாஹ்! இந்த ரமலான் அவர்களுக்கு சுபச்செய்தியாக அமையட்டுமாக!  இந்த ரமலான் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நற்செய்தியாக அமையட்டுமாக!

யார் இந்த ரமழானை பாழாக்கினார்களோ, ரமலானின் தொழுகையை வீணாக்கினார்களோ, துஆக்களில் கவனம் செலுத்தாமல், குர்ஆன் ஓதுவதில் கேட்பதில் கவனம் செலுத்தாமல், நோன்பு நோற்றும் கூட நோன்பின் ஒழுக்கங்களை பேணாமல் இருந்தார்களோ அல்லாஹ் அவர்களை பாதுகாக்க வேண்டும்.

இன்னும் சில தினங்கள் இருக்கின்றன. அந்த தினங்களில் அவர்கள் உஷார் ஆகட்டும்.  அவர்கள் தங்களது மறதியில் இருந்து திரும்பி கொள்ளட்டும். தங்களது அலட்சியத்தை அவர்கள் போக்கிக் கொள்ளட்டும். இல்லையென்றால் அல்லாஹ்டைய தூதர்   அவர்களுடைய எச்சரிக்கைக்கு பயந்து கொள்ளட்டும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மிம்பரில் ஏறுகிறார்கள். மிம்பரில் ஏறும்போது மூன்று முறை ஆமீன் கூறுகிறார்கள். சஹாபாக்கள் விளக்கம் கேட்கிறார்கள். நபி அவர்கள் பதில் தருகிறார்கள்;

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்துஆ கேட்டார்கள்; ரமலானுடைய மாதத்தைப் பெற்றும் தன்னுடைய பாவத்திற்காக மன்னிப்பைப் பெறாதவன் நாசமாகட்டும் என்று துஆ செய்தார்கள்.(1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : சஹீஹ் இப்னு ஹிப்பான், எண் : 409, 907, 909.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இந்த துஆவை கேட்டு விட்டு எவ்வளவு பயந்திருப்பார்கள்! சாதாரணமான துஆவா? அல்லாஹ்வுடைய மலக்குமார்களில் தலைவராக இருக்கின்ற ஜிப்ரீல் அவர்களை நேசிப்பது. அல்லாஹ்வை நேசிப்பது, ஜிப்ரீலை  பகைப்பது, அல்லாஹ்வை பகைப்பது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அப்படிப்பட்ட வானவர் ஒரு துஆ கேட்கிறார். எல்லா இறைத்தூதருக்கும் அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு வந்தவர். அல்லாஹ் எந்த ஒரு கட்டளையை சொல்வதாக இருந்தாலும் ஜிப்ரீல் என்று அழைத்து அவருக்கு முதலில் கூறுவான். அல்லாஹ் அந்த வானவரை புகழ்கிறான். ஒரு இடங்களில் அல்ல, பல இடங்களில் ஜிப்ரீலை புகழ்கிறான்.

ஜிப்ரீல் துஆ கேட்கிறார், நபியவர்களின் உம்மத்தில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக.  மக்களெல்லாம் நன்மைகளில் முந்துகின்ற ஒரு மாதம் வந்தும், இறையச்சத்தை கொடுக்கின்ற ஒரு மாதம் வந்ததற்கு பிறகும், தக்வாவின் பக்கம் தூண்டுகின்ற ஒரு மாதம் வந்தும் கூட உள்ளத்தில் ஈரம் சுரக்காதவர், அல்லாஹ்வின் அச்சத்தால் உள்ளம் நனையாதவர், அவருடைய பாவங்கள் உள்ளத்தில் கரையாக ஆகி உள்ளத்தை இறுக்கமாக்கி, உள்ளத்தை கடினமாக்கி மறதியின் உச்சத்திற்கு அவரைக் கொண்டு சென்று, மரணத்தை மறந்து, மறுமையை மறந்து உள்ளமெல்லாம் இருளாகிவிட்ட அந்த மனிதரைப் பற்றி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.

யா அல்லாஹ்! இப்படிப்பட்டவனுக்கு நாசம் உண்டாகட்டும் என்று.

மக்கள் அனைவரும் மன்னிக்கப்பட வேண்டுமென்ற பேராசையில் இருக்கின்ற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இந்த துஆவிற்கு உடனே ஆமீன் சொல்லி இருப்பார்களா? எவ்வளவு பயந்து இருப்பார்கள்!

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

"விசுவாசிகளே!  உங்களிலிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.  உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும்.  உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர் விசுவாசிகளோடு மிக இரக்கம் உள்ளவர்,  மிகக் கிருபையுடையவர்." (அல்குர்ஆன் 9:128)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ

"முஃமீன்கள் தங்களது உயிரை விட நபியைத்தான் நெருக்கமானவராக கருதவேண்டும்". (அல்குர்ஆன் 33:6)

மேலும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் :

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

"உங்களில் ஒருவர் முஃமீனாக முடியாது. அவர், அவருவருடைய தந்தையை விட, அவர் பெற்றெடுத்த பிள்ளைகளைவிட, மக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காத வரை"

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 14, 15.

அன்பானவர்களே! அந்த நேசம் இன்று நம்மிடத்தில் எந்த அளவு இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

மன்னர் ஹாரூர் ரஷீத் ரஹிமஹுல்லாஹ்அவர்களைப் பற்றி சொல்லப்படுகிறது;  அவருடைய சபையில் யாராவது அறிஞர்கள் ஹதீஸை நினைவு கூர்ந்து 'கால ரசூலுல்லாஹ்' என்று சொல்லிவிட்டால், அவருடைய சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி விடுவார். மண்டியிட்டு அமர்ந்து விடுவார்.

அந்த தூதருக்கு என் உயிர் அர்ப்பணமாகட்டும் என்று கூறி கிப்லாவின் திசையை நோக்கி சஜ்தா செய்வார். இந்த உம்மத்தில் அல்லாஹ் என்னை ஆக்கினானே! எவ்வளவு பெரிய மன்னர் மந்திரிகளெல்லாம் அமர்ந்து இருக்கிறார்கள். அரச சபை கூடிக்கொண்டிருக்கிறது.  ரஸூலுல்லாஹ் உடைய பெயரை சொன்னவுடன் அந்த இடத்தில் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்காருவதற்கு கூட தான் தகுதியானவர் இல்லை என்று அந்த சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி சாதாரண ஒரு மாணவரை போன்று முட்டியிட்டு மண்டியிட்டு அமர்ந்து கொள்வார்.

இதுவே நேசம்! இதுவே மதிப்பு! அல்லாஹ்வுடைய தூதருடைய மதிப்பு இருக்குமாயின் அவர்களுடைய கூற்றுகளுக்கு உண்டான மரியாதை இருக்கும். அந்த கண்ணியம் இருக்கும்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் ஜிப்ரீலுடைய துஆவிற்கு அமைதி காக்கின்றார்கள். என்ன சொல்வது? இதே ஜிப்ரீல் பிரார்த்தனை செய்து இருந்தால் நமக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமீன் சொல்வதற்கு.துடிதுடித்து இருப்பார்கள். 

தயங்கிக் கொண்டிருந்த முஹம்மது நபி  அவர்களை ஜிப்ரீல் சொல்கின்றார்கள்: நபியே! ஆமீன் சொல்லுங்கள் என்று.

அதற்குப்பிறகுதான் ரசூலுல்லாஹ்  அவர்கள் ஆமீன் சொல்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : சஹீஹ் இப்னு ஹிப்பான், எண் : 409, 907, 909.

எவ்வளவு மனம் கஷ்டப்பட்டு இருப்பார்கள்!எவ்வளவு மனம் துடித்து இருப்பார்கள்!

இன்று ரமலானுடைய மாதம் வந்தது. கழிந்து கொண்டிருக்கிறது. ஆடுகளை வாங்குவதிலும், உணவுகளை தயாரிப்பதிலும், சுற்றித் திரிவதிலும், ஆசைகளைத் தேடுவதிலும் தான் இன்று உம்மத்தில் ஒரு பெருங்கூட்டம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.

இன்னும் நமக்கு எத்தனை நாட்கள் இருக்கின்றனவோ! எத்தனை நேரங்கள் நமக்கு இருக்கின்றனவோ! அதில் நாம் வாழ போகிறோமா?என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

தாபியீன்களில் உள்ள ஒரு பெண்மணியைப் பற்றி வரலாற்றுக் குறிப்பில் பதிவு செய்யப்படுகிறது. அந்தப் பெண்மணியுடைய இபாதத்துக்கள் பற்றி பதிவு செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு நாள் காலையிலும், இன்று மாலைக்குள் நான் மரணித்து விடுவேன் என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக அன்றைய மாலையில் ஒருவருக்கு மரணம் என்று திட்டவட்டமாக ஆகிவிட்டால் அவர் எப்படி அமல் செய்வாரோ அதுபோன்று அந்தப் பெண்மணி விரைவாக அமல் செய்வார்.

அன்றைய மாலைப் பொழுதாகிவிட்டால், நாளை காலைக்குள் நான் மரணித்து விடலாம் என்று கூறி அன்றைய இரவெல்லாம் வணங்குவார்கள். காலையில் சுபுஹ் தொழுகைக்குப் பிறகு அவர்களை அறியாமல் அசதி ஏற்பட்டு அவர்கள் தூங்கிவிட்டால், சூரியன் வெளிச்சம் சூடாகின்ற வரை உறக்கம் கொள்வார்கள். 

பிறகு மறதியில் ஆகிவிட்டேனே என்ற கவலையில் மீண்டும் இதே வார்த்தை சொல்வார்கள். வாழ்நாளெல்லாம் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் இந்த வார்த்தையை சொல்லிக்கொண்டுஇபாதத்துக்கள் செய்துக்கொண்டு இருந்தார்கள் என்று அந்தப் பெண்ணின் வாழ்க்கை குறிப்பில் பதிவு செய்து இருப்பதை பார்க்கிறோம்.

அவர்கள் ஒவ்வொரு நாளையும் இறுதி நாள் என்று பயந்தார்கள்.

இன்று நமக்கு வயோதிகம் வந்து விட்டாலும் கூட வாழ்க்கையில் நமக்கு இறுதி இல்லை என்ற போதையில் இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ் கூறுகிறான் :

أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ

நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அல்குர் ஆன் 35 : 37)

வசனத்தின் கருத்து : அறிவு வருவதற்குரிய அவகாசத்தை நாம் உங்களுக்கு கொடுத்தோம் இல்லையா? நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்குரிய ஒரு அவகாசத்தை உங்களுக்கு கொடுத்தோமா இல்லையா?  உங்களது தலைமுடிகள்,  தாடி முடிகள் நரைக்கும் போதுகூட மரணத்தின் பயம் வரவில்லையா?"

நமக்கு வரக்கூடிய நரை மரணத்தை நமக்கு நினைவூட்டுகிறது. வாழ்க்கை முடியப் போகிறது என்பதன் துவக்கம் தான்நமக்கு ஏற்படக்கூடிய நரை மற்றும் நமக்கு ஏற்படக்கூடிய பலவீனம்.

அதற்குப் பிறகு கூட மறுமையின் பக்கம் முன்னோக்கவில்லை என்றால் ஆகிரத்து பக்கம் திரும்பவில்லை என்றால் தவ்பா கேட்கவில்லை என்றால் பாவங்களை விட்டு விலக வில்லை என்றால் பிறகு என்ன இருக்கிறது?

இன்ன வாழ்க்கையை அவர் வாழ்கிறார். அவர் முடிவு எப்படி இருக்கப் போகிறது?

அல்லாஹ் இந்த ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் நமக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். இதனுடைய இரவுகள் ஒவ்வொன்றும் சாதாரணமான இரவுகள் அல்ல.

இன்று எப்படி மார்க்கத்தின் எல்லா அமல்களையும் சுருக்கி நமது மன இச்சைகளுக்கு ஏற்ப மாற்றி இருக்கிறோமோ அப்படித்தான் இந்த ரமலானை மாற்றி இருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ரை பற்றி கூறினார்கள் :

تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

லைலத்துல் கத்ரை கடைசி பத்து  இரவுகளில் தேடுங்கள். ஒற்றை படைகளில் தேடுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி,எண் : 1878, 2020, 2021.

ரமலானுடைய கடைசிப் பத்தை பொருத்தவரை லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று சொன்ன நபியவர்கள்அமல்களை எப்படி செய்தார்கள்?

ஒற்றைப்படை இரவில் மட்டும் கியாமுல் லைல் தொழுதார்களா? அல்லது கியாமுல்லைல் உடைய நேரத்தை அதிகப்படுத்தினார்களா? அல்லது ரமலானின் இறுதிப்பத்து மொத்த நாட்களிலும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விழித்து இருந்தார்களா?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ரமழானின் கடைசி பத்து நாட்கள் முழுவதும் இபாதத் செய்தார்கள்.

إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ

ரமலான் உடைய இறுதி பத்து வந்துவிட்டால்இறுதிப் பத்து நாட்களையும் நபியவர்கள் ஹயாத் ஆக்கினார்கள். மனைவி மக்களைக் கூட தூங்க விடவில்லை, எழுப்பி விட்டார்கள். 

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1884, 2024.

தன் விருப்பத்திற்குரிய மனைவி, அன்னை ஆயிஷா விடம் கூட அல்லாஹ்வின் தூதர்   அவர்கள் சேரவில்லை. வீட்டில் இருந்தால், குடும்பத்தில் இருந்தால் இபாதத் குறைந்துவிடும் என்பதற்காக மஸ்ஜிதை நோக்கி வந்து விட்டார்கள். இஃதிகாஃப்  இருந்தார்கள். 

இன்று, ரமலானுடைய கடைசிப் பத்தில், ஒற்றை இரவுகளில் ஒரு சில மணி வரை இருந்தால், ஏதோ பத்ர் போர் செய்துவிட்டது போன்று நாம் நினைக்கின்றோம்.

நம்முடைய மார்க்கம், ஆன்மாவின் மார்க்கம், இறையச்சத்தின் மார்க்கம், இபாதத்தின் மார்க்கம்!

இது சடங்குகளின் மார்க்கம் அல்ல. இபாதத் என்ற பெயரால் ஏமாற்றுகின்ற மார்க்கம் அல்ல. இபாதத் என்ற பெயரால்மனிதனுக்குள் சுய கட்டுப்பாட்டையும், தக்வாவையும் அச்சங்களையும் இறை நெருக்கத்தையும் கொடுக்கின்ற மார்க்கம் இது.

மாற்றார்கள் செய்வதைப் போன்று இபாதத்துக்கள் என்ற பெயரில் சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆடல்பாடல், கூத்து கும்மாலத்திற்குரிய மார்க்கம் இது  இல்லை.

இன்று எல்லா பெயரிலும் விழாக்கள், இஃப்தார் விருந்து விழா, பத்ரு சஹாபாக்கள் விழா என எல்லாம் கொண்டாடப்படுகிறது.

கவலைப்பட வேண்டிய நேரத்தில் இந்த உம்மத், மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.

நாளை மறுநாள் வாலிபர்கள், உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் நிலைமைகளை பாருங்கள்.  அழிச்சாட்டியம் செய்கிறவர்கள், அனாச்சாரம் செய்கிறவர்கள் போன்றவர்களை யாரோ என்று நினைக்காதீர்கள். அவர்கள், உங்கள் குடும்பங்களில் ஒருவராக இருக்கலாம்.

நமது அண்ணன் பிள்ளையாக இருக்கலாம், நமது தாய்மாமனின் பிள்ளையாக இருக்கலாம். எவ்வளவு வாலிபர்கள் கூட்டம் கூட்டமாக ரமலானின் இரவுகளில் போட்டி வைத்துக் கொண்டு, அந்தப் புனிதமான இரவுகளை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள். அல்லாஹ்  பாதுகாப்பானாக!

எவ்வளவு காலம் மிச்சம் இருக்கிறது? எவ்வளவு நாட்கள் மிச்சமிருக்கிறது? பெருநாள் வரப்போகிறது என்ற மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால், அந்த பெருநாளைக் கொண்டாடுவதற்கான தகுதி உள்ளவராக நான் இருக்கிறேனா? அந்த கவலை நமக்கு மிகைத்து இருக்கவேண்டும்.

நபியவர்கள் இந்த லைலத்துல் கத்ரில், மன்னிப்பைப் பெறுவதற்காகத்தான் விசேஷமான துஆக்களை சொல்லிக் கொடுத்தார்கள். நமது பெண்கள்,தங்கள் ஆண்களிடத்தில் பெருநாள் வரப்போகிறது, செலவுக்கு பணம் கொடுங்கள். ஆடை வாங்கவேண்டும். உடை வாங்க வேண்டும் உணவு செய்ய வேண்டும் என்பார்கள்.

அன்பானவர்களே! நபித்தோழர்களுடைய தீன்,மார்க்கம், துஆ, திக்ர் அனைத்தும் துன்யாவின் தேவையைவிட , துன்யாவின் அவசியத்தை விட மிகைந்திருந்தது.

ஆனால், நமக்கு துன்யாவின் தேவைகள்,ஆடம்பரங்கள், அனாவசியங்கள், அழிச்சாட்டியங்கள் மார்க்கத்தின் கடமையை மிகைந்திருக்கிறது.

ஏன் பாத்திமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை பார்க்கவில்லையா? கஷ்டப்பட்டுக் கொண்டு, சிரமப்பட்டுக் கொண்டு வலி வேதனையில் அடிமைப்பெண் வீட்டுக்கு கிடைக்க மாட்டாளா? கிடைத்தால் கொஞ்சம் அல்லாஹ்வுடைய இபாதத்தில் கவனம் செலுத்தலாம்,இந்த வலியை குறைக்கலாம் என்று ஆசைப்பட்டபோது,

அதைவிட மேலான ஒன்றை உனக்கு சொல்லித் தருகிறேன் என்று நபியவர்கள் சொல்லித் தந்தார்கள்.தூங்குவதற்கு முன்பு 33முறை சுப்ஹானல்லாஹ், 33முறை அல்ஹம்து லில்லாஹ், 34முறை அல்லாஹு அக்பர் சொல்! அல்லாஹ்வுடைய திக்ரைக் கொண்டு, உன்னுடைய உடல் களைப்பை போக்கிக் கொள்!என்றார்கள்.

இந்த துன்யாவின் அவசரத்தேவை அவர்களுக்கு அவசியமாக இருந்தது.  வீட்டிற்கு ஒரு பணிப்பெண் அவசியமாக இருந்தது. ஆனால், அதைவிட இந்த தீனை பெற்றுக் கொள்!  இந்த தீன் உனக்கு  மிகைக்கட்டும் என்று பாத்திமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுடைய தந்தை  நபி அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

நமது நிலை எப்படி? நம்முடைய அவசரத் தேவைகள், ஆடம்பரங்கள் நம்முடைய தீனை மிகைத்திருக்கிறது. எத்தனைபேர் ஆடை வாங்குவதற்காக ஃபர்லான தொழுகையை விடுகின்றார்கள். அவர்கள் என்ன? ஆடை இல்லாமல் சுற்றித் திரிகிறார்களா?

உபரியான ஆடை வாங்குவதற்காக ஃபர்லான தொழுகைகளை ஆண்கள், பெண்கள்  வீணாக்குகிறார்கள் என்றால் ஒரு முஸ்லிமிற்கு இதைவிட ஒரு கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?

ஒரு உபரியான ஆடை வாங்குவதற்காக ஜமாஅத் தொழுகை பாழாக்கப்படுகிறது. அப்படி என்ன ஆடை இல்லாத பிச்சைக்காரர்களாக நாம் இருக்கிறோமா? சொல்லுங்கள்!

வீட்டில் அலமாரியில் இருக்க கூடிய ஆடைகளை வைத்து ஒரு ஆடை கடையே வைத்துவிடலாம். அவ்வளவு ஆடைகள். ஆனாலும், ஆசை விடுவதில்லை. ஆசை மார்க்கத்தை மிகைத்து விடுகிறது. அல்லாஹ்வுடைய இபாதத்திலிருந்து உண்மை புறம்தள்ளி விடுகிறது. ஒரு தொழுகை போனால் என்ன, இரண்டு தொழுகை போனால் என்ன, எவ்வளவு நேரம் சுற்றினால் என்ன?இதுதான் இன்றைய நிலைமை.

நம் ஆசைகள் நம்மை மார்க்கத்தை விட்டு பின் தள்ளிக்கொண்டிருக்கிறது, மறுமையில் இருந்து நம்மை தூரமாக்கி கொண்டிருக்கிறது. தெரிந்தாலும் கூட உள்ளத்தின் மீது காலை வைத்து, மனசாட்சியின் மீது பாதத்தை வைத்து,அந்த மனசாட்சியை சாகடித்து விட்டு துன்யாவிற்கு செல்கிறோமா? இல்லையா?

உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு ஒருநாள் அஸர் தொழுகை தவறி விட்டது, ஜமாஅத் தவறிவிட்டது. எதற்காக? நபியவர்கள்அவர்களுக்கு ஒரு தோட்டம் கொடுத்திருந்தார்கள். அந்த தோட்டத்தில் அவர்களுக்கு வேலை இருந்தது. அந்த வேலையை செய்து கொண்டிருந்ததால் அஸருடை ஜமாஅத் அவர்களுக்கு தவறிவிட்டது.

அந்தோ என் நாசமே! எனது தோட்டத்தை சரி செய்வதில், தொழுகையைத் தவற விட்டு விட்டேன். முஃமின்களே! சாட்சியாக இருங்கள். இந்தத் தோட்டத்தை ஸதக்கா செய்துவிட்டேன் என்றார்கள்.

அப்படிப்பார்த்தால் இன்றைக்கு நாம், நம்முடைய வீடு, தோட்டம் துறவு,காரு, பைக்கு என அனைத்தையும் ஸதக்கா செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் ஒருமுறை அஸருடைய ஜமாஅத் தவறியதால், அதற்குக் காரணமாக இருந்த தோட்டத்தையே ஸதக்கா செய்தார்கள். ஏன்? அவர்கள் குர்ஆனோடு வாழ்ந்தவர்கள், குர்ஆனை புரிந்தவர்கள், குர்ஆன் அவர்களது உள்ளத்தில் மாற்றத்தை கொடுத்திருந்தது.

சுலைமான் நபியின் வரலாற்றை குர்ஆனில் பார்க்கிறோம். குதிரையின் அணிவகுப்பை ஜிகாதுக்காகப் பார்த்தபோது, அஸருடை தொழுகையின் நேரத்தை, தனது கவனத்தில் இருந்து திருப்பிய காரணத்தால்,அந்த குதிரைகளையெல்லாம் குர்பானி கொடுத்தார்களே, அந்த வரலாற்றை குர்ஆனிலிருந்து படித்தார்களே உமர்.

எப்படி தனது தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் ஸதக்கா செய்யாமல் இருந்திருப்பார்கள்?அத்தோட்டம், அஸர் தொழுகையில் இருந்து கவனத்தைத் திருப்பிய காரணத்தால்.

அன்பானவர்களே! நமக்கு மார்க்கத்தின் மதிப்பு எங்கே தெரிய போகிறது?!மண்னுடைய மதிப்பு தெரிகின்ற வரை, இந்த மண்னுடைய மதிப்பு உள்ளத்தில் இருக்கின்ற வரை மார்க்கத்தின் மதிப்பு எங்கே தெரியப் போகின்றது?

நாம் விரும்புவதும் மண். நாம் எவற்றையெல்லாம்  விரும்புகிறோமோ அவையெல்லாம் மண் தானே? இடமாக இருக்கட்டும், உணவாக இருக்கட்டும், உடையாக இருக்கட்டும். இவை எல்லாம் மனதில் இருக்கும் போது மார்க்கத்தின் மதிப்பு எப்படி நமக்குத் தெரியும்?

அல்லாஹ் கூறுகிறான் :

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى

மனிதர்களே! இந்த மண்ணிலிருந்து தான் உங்களைப் படைத்தோம். இதில்தான் உங்களை திரும்ப கொண்டு வரப் போகிறோம். இதிலிருந்துதான் உங்களை திரும்ப எழுப்பப் போகிறோம். (அல்குர்ஆன் 20:55)

உங்களை மண்ணிலிருந்து படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த மண்னுடைய ஆசை நபியவர்கள் சொல்லியதை போன்று,

لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًاآخَرَ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ

ஆதமுடைய மகனுக்கு ஒரு தங்க வயல் இருக்குமேயானால் அவன் 2தங்கவயல்களுக்கு ஆசைப்படுவான். 2தங்க வயல்கள் இருக்குமேயானால் மூன்றாவது ஒன்றுக்கு ஆசைப்படுவான். அவனுடைய வாயையும் வயிறையும் மண்னைத் தவிர வேறெதுவும் நிரமப்பாது.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1048, 1738.

ஆசை இருக்கலாம். ஆனால், அது மறுமையை மறக்கக் கூடிய அளவிற்கா?  அல்லாஹ்விடமிருந்து நம்மை தூரமாக்க கூடிய அளவிற்கா? நம்மை நாமே நரகத்தில் தள்ளி கொள்ளக்கூடிய அளவிற்கா?

இந்த உலகத்தில் உனக்கு நோய் வராமல் இருப்பதற்கு, எவ்வளவு கஷ்டப்படுகிறாய் மனிதனே? உன்னுடைய உடல் வலிக்கு எவ்வளவு வேதனைப்படுகிறாய்? உன்னுடைய உடலை அலங்கரிப்பதற்கு எவ்வளவோ முயற்சிக்கிறாய்? இந்த துன்யாவில் உனக்கு வரக்கூடிய ஒரு கஷ்டத்தை கூட உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே! துடிக்கிறாயே! அதிலிருந்து உன்னை பாதுகாக்க முயற்சிக்கிறாயே!

அல்லாஹ் கேட்கிறான்,

فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ

பாவிகளே! நரக நெருப்பை தாங்குவதற்கு உங்களுக்கு என்ன சக்தி இருக்கிறது?(அல்குர்ஆன் 2:175)

நரகத்தின் நெருப்பை எப்படி உங்களால் சுவைக்க முடியும்?

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 66 : 6)

அன்பானவர்களே! ரமலானுடைய இறுதி நாட்களில் இருக்கிறோம். இதற்கு என்று சில கடமைகள், ஒழுக்கங்கள் இருக்கின்றன.

பெருநாள் உடைய தொழுகைக்கு முன்னால் ஸதக்கத்துல் ஃபித்ரை கொடுத்தாக வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர்  அவர்கள் அதை கடமையாக்கினார்கள். அது நம்முடைய நோன்பை சுத்தப்படுத்தக் கூடியது. இந்த நோன்பில் நம்மிடம் ஏற்பட்ட குறைகளைப் போக்கக்கூடியது.அல்லாஹ்விடம் நம்முடைய நோன்பு ஏற்றுக் கொள்ள காரணமாக இருக்கக் கூடியது.(2)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1371.

ஏழைகளை, இந்தப் பெருநாள் மகிழ்ச்சியில் கூட்டாக்கிக் கொள்வதற்காக அல்லாஹ்  கடமையாக்கிய ஒரு மிகப்பெரிய கடமை அது.

அதிகபட்சமாக ஈது உடைய மூன்று நோன்பிலிருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.  நாணயமாக கொடுக்கக்கூடாது. தானியமாகத் தான் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக, நம்முடைய ஊர் கணக்குப்படி 2 1/2கிலோவிலிருந்து 3கிலோ அரிசி ஏழைகளுக்கு ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர்களுக்கு அந்த ஸதகத்துல் ஃபித்ர் கொடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாக அந்த ஸதக்கத்துல் ஃபித்ரை கண்டிப்பாக நிறைவேற்றி ஆக வேண்டும். நீங்கள் கொடுக்க முடியவில்லை என்றால்,  அதாவது, நீங்கள் சென்று கொடுக்க முடியாமல் வேறு ஒருவரை பொறுப்பாக்கினாளோ அல்லது சில நிறுவனங்களை பொறுப்பாக்கினாளோ நீங்கள் அவர்களிடத்தில் நாணயமாக கொடுத்தாலும் அவர்கள் அதற்குரிய தானியத்தை வாங்கித்தான் ஏழைகளுக்கு சேர்க்க முடியும்.

பெருநாள் உடைய தொழுகைக்கு நம்மிடத்தில் இருக்கின்ற ஆடையில் நல்ல ஆடையை குளித்து சுத்தமாகி, பேரித்தம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பெருநாள் தொழுகைக்காக செல்வது.

செல்லும்போது ஒரு வழியாக வரும் போது இன்னொரு வழியாக வருவது, அந்தப் பெருநாள் உடைய பிறை பார்த்ததிலிருந்து தொழுகை முடிகின்ற வரை தக்பீர் சொல்வது.

பெருநாள் தொழுகை முதல் ரக்அத்தில் 7தக்பீரும், இரண்டாவது ரக்அத்தில் 5தக்பீரும் நிறைவேற்றுவது, பெருநாள் திடலில் அதிகமாக தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பது.

பெருநாள் தொழுகைக்கு அதானும் இல்லை, இகாமத்தும் இல்லை, முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத்தும் இல்லை.

எவ்வளவு சீக்கிரமாக அந்தத் தொழுகை நிறைவேற்றப்படுமோ, அது சுன்னாவிற்கு நெருக்கமானது. அந்த நாட்களில் நம்முடைய குடும்பத்தாருக்கு உணவளிப்பது, அவர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது போன்றவையும் அல்லாஹ்வின் தூதர்   அவர்கள் முஸ்லிம்களாகிய நமக்கு காட்டித்தந்த வழிமுறைகள்.

அன்பானவர்களே! நம்முடைய மகிழ்ச்சி நம்முடைய இந்த குதூகலம் நம்மை மார்க்கத்திலிருந்து வரம்பு மீற செய்துவிடக்கூடாது. நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று, நமது நிலை, காஃபிர்களுக்கு எப்படி விளையாட்டாகவோ அல்லது அவர்களுக்கு எப்படி ஒரு விழாவாகவோ இருப்பது போன்று அல்லது காஃபிர்களுடைய பண்டிகைக்கு சினிமாக்களை வெளியாக்குவது போல், முஸ்லிம்களின் பண்டிகைகளான பெருநாட்களின் பெயரைச்சொல்லி சினிமாக்களை வெளியிடுகிறார்கள்.

முஸ்லிம்களும் நம்மைப்போன்று எல்லா சடங்குகளையும் பேணக்கூடியவர்கள் என்று காஃபிர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் இப்படி நினைக்கும் அளவிற்கு நமது நிலை உண்டாகிவிட்டது.

பெருநாளில் லுஹர் தொழுகைக்கு ஆட்களைப் பாருங்கள். இரண்டு ஸஃப் தான் இருக்கும்.  சில பேர் சொல்வார்கள் ஊருக்கு போய் விட்டோம் என்று. ஏன்? அவ்வூர்களில் மஸ்ஜித் இல்லையா? பள்ளி ஓரளவிற்காவது நிரம்பிருக்க வேண்டும் இல்லையா? அது எப்படி எல்லா மஸ்ஜிதுகளிலும் இதே நிலை?அதிகபட்சம் 2ஸஃப் தான் என்றால் அனைத்து முஸ்லிம்களும் எங்கே?

சில ஹராமான இடங்களுக்கு சென்று பெருநாளைக் கொண்டாடுவது என்பதும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்கள் ஹராமானவை. அந்த ஹராமான இடங்களுக்கு செல்லக்கூடிய நாள் இது அல்ல.

குடும்பத்தார்களுடன் உறவுகளை சென்று சந்தியுங்கள். உறவினர்களை வீட்டிற்கு வரவழையுங்கள். அவர்களுக்கு உணவளித்து மகிழுங்கள். இபாதத்துக்களை தவறவிடாதீர்கள். குறிப்பாகஃபர்லான தொழுகையை பேணுங்கள்.

அதை விட்டுவிட்டு காஃபிர்களைப் போன்று கலாச்சார சீரழிவுகளில் ஈடுபட்டு ஊர் சுற்றுகிறோம் என்ற பெயரில் தொழுகைகளை வீணாக்கி, ஹிஜாபை பேணாமல் தீய செயல்களில் ஈடுபடாதீர்கள்.

சில பெண்களைப் பாருங்கள். பெருநாள் ஆடைகளை அணிந்து விட்டால் சில இடங்களில், குறிப்பாக பெருநாள் தொழுவதற்கு மஸ்ஜிதுகளுக்கு வரும்போது ஹிஜாபை அணிய மாட்டார்கள். அவ்வளவு அலங்காரத்தை சுமந்தவர்கள், இஸ்லாம் கற்றுத் தந்த ஹிஜாபை பேணவில்லை.

அன்பானவர்களே! நினைவில் கொள்ளவேண்டும் பெருநாள் தொழுகை திடலில் தொழுவது சுன்னத்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், பெருநாள் தொழுகைக்கு ஆண்கள் கண்டிப்பாக வரவேண்டும். பெண்களை அழைத்து வாருங்கள். உங்களது கண்ணிப்பெண்களை அழைத்து வாருங்கள். திரைக்குப் பின்னால் வெட்கப்பட்டு இருக்கும் பெண்களை அழைத்து வாருங்கள். தொழுகை இல்லாத காலத்தில் இருந்தாலும் அந்தப் பெண்களையும் அழைத்து வாருங்கள். (3)

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 903.

முஃமின்களின் துஆக்களில் அவர்கள் பங்கேற்பார்கள். ஒரு பெண்மணி நபியவர்களிடம் கேட்கிறார், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஹிஜாப் இல்லையே!  நான் என்ன செய்வது' என்று.

அல்லாஹ்வின் தூதர், அவரது அண்டை வீட்டார் சகோதரி தனது  ஹிஜாப் இல்லாத அந்த சகோதரியின் நிலையை அறிந்து தனது ஆடையை அவளுக்கு கொடுக்கட்டும். அதை வாங்கி அணிந்து கொண்டாவது அவள் பெருநாள் மைதானத்தில், திடலில் வரட்டும்.  உங்களுடைய தொழுகையில் கலந்து கொள்ளட்டும்என்றார்கள்.

எனவே, குறித்த விளக்கங்களை நூல்களின் மூலமாகவோ, தெளிவான அறிஞர்களின் மூலமாகவோ விளங்கி அறிந்து நமது வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

أخبرنا أبو يعلى ، قال : أخبرنا أبو معمر ، قال : حدثنا حفص بن غياث ، عن محمد بن عمرو ، عن أبي سلمة ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم صعد المنبر ، فقال : « آمين آمين آمين » . قيل : يا رسول الله ، إنك حين صعدت المنبر قلت : آمين آمين آمين . ، قال : « إن جبريل أتاني ، فقال : من أدرك شهر رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن أدرك أبويه أو أحدهما فلم يبرهما ، فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين»(صحيح ابن حبان 909 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمْرَقَنْدِيُّ قَالَا حَدَّثَنَا مَرْوَانُ قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْخَوْلَانِيُّ وَكَانَ شَيْخَ صِدْقٍ وَكَانَ ابْنُ وَهْبٍ يَرْوِي عَنْهُ حَدَّثَنَا سَيَّارُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ مَحْمُودٌ الصَّدَفِيُّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ (سنن أبي داود 1371 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلَاةُ ثُمَّ يَنْصَرِفُ فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ فَيَعِظُهُمْ وَيُوصِيهِمْ وَيَأْمُرُهُمْ فَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ أَوْ يَأْمُرَ بِشَيْءٍ أَمَرَ بِهِ ثُمَّ يَنْصَرِفُ قَالَ أَبُو سَعِيدٍ فَلَمْ يَزَلْ النَّاسُ عَلَى ذَلِكَ حَتَّى خَرَجْتُ مَعَ مَرْوَانَ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ فِي أَضْحًى أَوْ فِطْرٍ فَلَمَّا أَتَيْنَا الْمُصَلَّى إِذَا مِنْبَرٌ بَنَاهُ كَثِيرُ بْنُ الصَّلْتِ فَإِذَا مَرْوَانُ يُرِيدُ أَنْ يَرْتَقِيَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَجَبَذْتُ بِثَوْبِهِ فَجَبَذَنِي فَارْتَفَعَ فَخَطَبَ قَبْلَ الصَّلَاةِ فَقُلْتُ لَهُ غَيَّرْتُمْ وَاللَّهِ فَقَالَ أَبَا سَعِيدٍ قَدْ ذَهَبَ مَا تَعْلَمُ فَقُلْتُ مَا أَعْلَمُ وَاللَّهِ خَيْرٌ مِمَّا لَا أَعْلَمُ فَقَالَ إِنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَجْلِسُونَ لَنَا بَعْدَ الصَّلَاةِ فَجَعَلْتُهَا قَبْلَ الصَّلَاةِ (صحيح البخاري 903 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/