அமல்களில் ஆர்வப்படுவோம் | Tamil Bayan - 412
அமல்களில் ஆர்வப்படுவோம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : அமல்களில் ஆர்வப்படுவோம்
வரிசை : 412
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 17-06-2016 | 12-09-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வை பயந்து வாழுமாறு உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை முதலில் நினைவூட்டுகின்றேன்.
இன்று,நாம் யார் யாரையோ பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் எதைப் பற்றி பேசுகிறோமோ அந்த விஷயம்தான் நமது உள்ளத்தில் இடம் பிடிக்கின்றது.
நாம் யாரைப் பற்றி அதிகமாக பேசுகிறோமோ அவர்தான், நமது வாழ்க்கையில் நமது முன்னோடியாக அறியப்படுகிறார்; தென்படுகிறார்.
அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன், நமக்கு நேர்வழிக்காக இறக்கப்பட்ட அந்த வேதத்தில் உலகின் அதிபதியான அல்லாஹ், அவனுடைய வல்லமையை பேசுகின்ற அதே நேரத்தில், அவனுடைய பொருத்தத்தை தேடிய நபிமார்கள் நல்லோர்களையும் சிறப்பித்து, உயர்வுப்படுத்தி, அவர்களைப் புகழ்ந்து அவர்களின் வரலாறுகளை ஆங்காங்கே நமக்கு சொல்லிக் கொண்டே வருகிறான்.
அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி பேசக்கூடிய அந்த வேதம், சொர்க்கம் நரகத்தைப் பற்றி பேசக்கூடிய அந்த வேதம் நல்லவர்களைப் பற்றியும் மிகக் கணிசமாக வசனங்களில் பேசுகிறது.
அல்லாஹ் அப்படித்தான் நமது நிலைமையை அமைத்திருக்கின்றான். ஒரு வழிகாட்டி ஒரு முன்னோடி நமக்கு இல்லாதவரை அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் நம்மால் இபாதத்துக்களை செய்ய முடியாது.
வெறும் கட்டளையாக வெறும் விளக்கங்களாக இருக்குமானால், படிப்பதற்கும் அவற்றை வாசிப்பதற்கும் எடுத்துச் சொல்வதற்கும் தான் அது பயன் தருமே தவிர வேறில்லை.
வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு அவையெல்லாம் ஒரு எதார்த்தமான கட்டளைகளாக இருக்கவேண்டும் என்றால், அதற்கு முன்னோடி தேவை; அதற்கு ஒரு வழிகாட்டி தேவை.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மலக்குகளை அல்லாஹ் முன்னோடியாக ஆக்கினான். முதல் மனிதராகிய நமது தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்னால் மனித சந்ததிகள் இந்த பூமியில் வசிக்கவில்லை.
ஏனைய படைப்புகளை, உயிரினங்களை அல்லாஹ் இந்த பூமியில் நேரடியாக படைத்ததைப் போன்று, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இந்த பூமியில் நேரடியாக படைக்கவில்லை.
அவர்கள் படைக்கப்பட்ட அந்த மூலச்சத்தாகிய மண், இந்த பூமியிலிருந்து தான் எடுக்கப்பட்டது. ஆனால், பூமியில் வைத்து அல்லாஹ் அவர்களை படைக்கவில்லை.
அல்லாஹ் அவர்களை தன்னுடைய இரு கரத்தால் படைத்தான். வானலோகத்தில் வைத்து அல்லாஹ் அவர்களை படைத்தான். அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தான் படைத்த விசேஷமான ரூஹில் இருந்து அவர்களை ஊதினான்; அவர்களுக்கு உயிர் கொடுத்தான்.
பின்பு, அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மலக்குகளிடத்தில் அனுப்பினான்.
நீங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். சலாமுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: இதுதான் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் முகமன் ஆகும் என்று. (1)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3326.
இப்படியாக மலக்குகளின் இபாதத்துகளை காண்பித்து அல்லாஹ், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சொர்க்கத்தில் வைத்திருந்தான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம், மலக்குகளை பார்த்தார்கள். அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத கூட்டம், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் திகைத்திருந்த கூட்டத்தில் ஒருவராக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் உருவானார்கள்.
ஆனால், அவர்களில் அல்லாஹ் வைத்திருந்த அந்த ஷஹ்வத் -ஆசை முந்திவிட்ட போது, ஷைத்தானின் ஊசலாட்டத்திற்கு ஆளாகி அவர்கள் அந்த மரத்தின் கனியை சாப்பிடுகிறார்கள். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள்.
அல்லாஹ், இந்த பூமிக்கு அவர்களை இறக்கினான். மலக்குகளை அவர்கள் பார்த்தார்கள். அல்லாஹ்வை எப்படி பயந்தார்கள்; அல்லாஹ்வை எப்படி அஞ்சினார்கள். பாவமே செய்யாத அந்த மக்கள், அல்லாஹ்வுடைய தண்டனையை நினைத்து பயந்துக்கொண்டிருக்கிறார்களே!
பாவம் செய்துவிட்ட நான், குற்றம் செய்துவிட்ட நான் எவ்வளவு பயப்பட வேண்டும்? எவ்வளவு அழ வேண்டும்? யா அல்லாஹ்! உன்னிடத்தில் எப்படி பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன், ஆதமே! என்னிடத்தில் எப்படி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை நான் உனக்கு கற்றுத் தருகிறேன்என்று அல்லாஹ் கூறுகிறான்.
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
"ஆதம், சில வாக்கியங்களை தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்; அதனால் அவரின் பாவமீட்சியை (அல்லாஹ்) அங்கீகரித்தான்; நிச்சயமாக, அவன் தவ்பாக்களை அதிகம் ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன்." (அல்குர்ஆன் 2 : 37)
சாதாரண அழுகை இல்லை. நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றார்கள், அவ்வளவு அழுகை என்று. அல்லாஹ்வின் அச்சத்தில் தன் தவறை நினைத்து அழுது அழுது மன்றாடுகிறார்கள்.
ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى
பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான். (அல்குர்ஆன் 20 : 122)
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தன்னுடைய தவ்பா அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டபோது, அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்:
யா அல்லாஹ்! நான் வானலோகத்தில் இருந்தபோது மலக்குகளுடன் இபாதத் செய்து கொண்டிருந்தேன். அவர்களுடைய தஸ்பீஹ்களை கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களுடைய தொழுகைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
யா அல்லாஹ்! இந்த பூமியில், நான் உன்னை தொழுவதற்கு எப்படி வானவர்கள் உன்னுடைய அர்ஷை சுற்றி வருகிறார்களோ, பைத்துல் மஃமூரில் உன்னை வணங்குகிறார்களோ, எனக்கு அது போன்று உன்னுடைய ஒரு வீட்டை இந்த பூமியில் ஏற்படுத்திக் கொடு! நான் உன்னை வணங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
அப்போதுதான் அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கஅபாவை, தன்னுடைய முதல் வீடாக பூமியில் அமைத்துக் கொடுக்கிறான்.
பார்க்க : அக்பாரு மக்கா பக்கம் 36, ஆசிரியர் : ஃபாக்கிஹி.
அன்பானவர்களே! இதுதான் வரலாறு; இதுதான் உண்மை; நமக்கு ஒரு முன்னோடி இல்லாதவரை நம்மால் அமல் செய்ய முடியாது.
சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தார்கள். அவர்களுடைய மறுமை வாழ்க்கையின் தேட்டத்தை பார்த்தார்கள். இபாதத்தில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்தார்கள். அது நபித்தோழர்களின் வாழ்வில் பிரதிபலித்தது.
பிறகு,தாபியீன்கள் சஹாபாக்களின் வாழ்க்கையை பார்த்தார்கள். அந்த சஹாபாக்கள் எப்படி உலக வாழ்க்கையின் தேவைகளைச் சுருக்கி கொண்டு மறுமைக்கான வாழ்க்கையைத் தேடினார்கள்; சொர்க்க வாழ்க்கையை தேடினார்கள்; இபாதத்துகளில் எப்படி ஆர்வம் காட்டினார்கள் என்பதை அந்த தாபியீன்கள் பார்த்தார்கள்.
அது அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலித்தது. அந்த தாபியீன்களும் நபித்தோழர்களின் பாதையில் அமல்களில் முன்னேறியவர்களாக, இபாதத்துகளில் ஒருவரை ஒருவர் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தக்கூடியவர்களாக இருந்ததை சரித்திரத்தில், வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.
இன்று,நம்முடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை,நாம் பேசுவதெல்லாம் இந்த துன்யாவைப் பற்றி, நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வது எல்லாம் இந்த துன்யாவுடைய மக்களைப்பற்றியே இருக்கிறது.
நமக்கு முன்னால் இருப்பவர்கள் எல்லாம் இந்த துன்யா வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவர்களாக, இந்த துன்யா வாழ்க்கையில் தங்களுடைய செல்வத்தை முன்வைத்து, தங்களுடைய வசதிகளை முன்வைத்து, தங்களுடைய ஆடம்பரத்தை முன்வைத்து வாழக்கூடிய மக்களை தான் பார்க்கிறோம்.
அது நம்முடைய உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் அவர்களைப் பார்த்து துன்யாவில் போட்டிப்போட்டுக் கொள்ளக் கூடிய மக்களாக, துன்யாவில் ஆர்வம் கொள்ளக் கூடிய மக்களாக ஆகிக்கொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற நேரத்தில் கண்டிப்பாக நாம் நம்முடைய சிறப்பிற்குரிய நல்லவர்களான சாலிஹின்கள் பற்றி பேசியாகவேண்டும். அப்படி பேசும்போது கொஞ்சமாவது அந்த அமல்களின் மீதான ஆர்வம் நமக்கு பிறக்கும்.
இங்கு கொஞ்சம் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். சிலர் கேட்கலாம், ஏன் அந்த நல்லவர்களை பற்றி நாம் பேச வேண்டும்? என்ன தேவை இருக்கிறது? குர்ஆன் இருக்கிறது; ஹதீஸ் இருக்கிறது; போதாதா?' என்று.
இதற்குரிய ஒரு பதிலைதான் நாம் ஆரம்பத்தில் கண்டோம். இன்னும் ஒரு பதில் என்னவென்றால், குர்ஆனுடைய அந்த வாசகமும் ஹதீஸ்களுடைய அந்த வாசகமும் மட்டும் நமக்குப் போதுமானதாக இருந்திருக்குமேயானால், நம்முடைய வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்?
இதே குர்ஆனைதானே அவர்களும் ஓதினார்கள். இதே ஹதீஸைதானே அவர்களும் படித்தார்கள்.
ஆனால், அவர்களது வாழ்க்கையில் இருந்த இபாதத்துக்கள், அவர்களுடைய வாழ்க்கையில் இருந்த பேணுதல், அவர்களுடைய வாழ்க்கையில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் இருந்த முஹப்பத், சொர்க்கத்தின் ஆசை, நரகத்தின் பயம் போன்றவையெல்லாம் நம்மிடத்தில் இருக்கிறதா? நாமும் படிக்கத்தானே செய்கிறோம்.
குர்ஆன், அதனுடைய புரட்சியை செய்ய வேண்டுமென்றால், குர்ஆன் அதனுடைய மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றால்,அதற்குரிய முன்னோடிகளை பற்றி, அதை பின்பற்றி வாழ்ந்தவர்களை பற்றி கண்டிப்பாக பேசித்தான் ஆகவேண்டும்.
அப்படி பேசப்படாத காரணத்தினால் தான் இன்று நம்முடைய ரமலான், உணவுக்கான ரமலானாக மாறி இருக்கிறது. நோன்பின் பெயரைச்சொல்லி உணவின் வகைகளை ருசித்துக் கொண்டிருக்கிறோம்.
காலையிலிருந்து மாலை வரை சாப்பிடுவதில்லை; எச்சிலை கூட விழுங்கவில்லை. ஆனால், இஃப்தார் ஆகிவிட்டால் எச்சில் விழுங்க கூட இடமில்லாமல் நாம் சாப்பிடுகிறோம்.
பிறகு சஹரைப் பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது. பகலெல்லாம் நோன்பு இருக்க வேண்டும்; பசியாக இருக்க வேண்டும் என்ற பெயரில், ஒட்டகம் பயணத்தில் தனது வயிற்றில் தண்ணீர் சுமந்து கொள்வது போன்று உணவின் வகைகளை சஹரில் சுமந்து கொள்கிறோம்.
அது போக, பெருநாள் பரக்கத்தான நாள் என்பதற்காக பெருநாள் உடைய பர்ச்சேஸ் என்று இன்னும் பல விஷயங்களை எல்லாம் நாம் இந்த ரமலானில் தான் செய்து கொண்டிருக்கிறோம்.
இப்படியா நம் முன்னோர்களிடத்தில் இந்த ரமழான் இருந்துள்ளது?
குர்ஆன் ஓதுவதற்காக கொடுக்கப்பட்ட ரமழான்; குர்ஆனைப் பற்றி சிந்திப்பதற்காக கொடுக்கப்பட்ட ரமழான்; அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதற்காக கொடுக்கப்பட்ட ரமழான்; பாவமன்னிப்புக் கோருவதற்காக கொடுக்கப்பட்ட ரமழான்; இரவில்நீண்ட நேரம் தொழுவதற்காக கொடுக்கப்பட்ட விசேஷமான மாதம் இந்த ரமலான்!
ஆனால், நம்முடைய இபாத்துகளுடைய பங்களிப்பு இந்த ரமலானில் எவ்வளவு இருக்கிறது?நம்முடைய உலக வாழ்க்கையின் பங்களிப்பு இந்த ரமழானில் எவ்வளவு இருக்கிறது?என்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சுயப்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
அதற்கென்று, இந்த துன்யாவில் நாம் செய்யக்கூடிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மஸ்ஜிதுகளுக்கு வந்துவிட வேண்டும் என்பது அல்ல.
உண்மையில், இந்த உலக வாழ்க்கையில், குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில், நாம் செய்கின்ற, நாம் ஈடுபடுகின்ற அனாவசியமான, தேவையற்ற அதிகப்படியான வேலைகளை விட்டுவிட்டால் போதும்.
தேவையில்லாமல் அலைகின்ற அலைச்சல், அத்தியாவசியமில்லாமல் பேசுகின்ற பேச்சுக்கள், வீணான சந்திப்புகள், போன்றவை இந்த புனிதமான ரமழான் மாதத்தில் ஒதுக்கப்பட வேண்டும்.
தேவை, அவசியம் என்று நினைத்து தேவையில்லாத மற்ற இதர விஷயங்களை இந்த ரமலானில் நாம் விட்டுவிட்டு அவற்றிலிருந்து நமது நேரத்தை நாம் பாதுகாத்துக் கொண்டால் கண்டிப்பாக, அந்த முன்னோர்களை போன்று முடியவில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் நம்மிடத்திலும், அல்லாஹ்வுக்கு இபாதத்துக்கள் செய்வதற்கு போதுமான நேரம் கண்டிப்பாக இருக்கும்.
ஆனால், ரமலான் வந்தும் கூட, நம்முடைய அன்றாட பொழுதின் அமல்களை, நேரங்களை பணிகளை, மாற்றிக் கொள்வதற்கு மனமில்லாத மக்களாக நாம் இருக்கிறோம் என்றால் இந்த ரமலானை நாம் எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்?
அல்லாஹ் படைத்த மாதங்கள் தானே எல்லா மாதங்களும். வாழ்க்கையே, அல்லாஹ்விற்கு இபாதத் செய்வதற்கு தானே. ஆனால், ஏன் அல்லாஹ் இந்த ரமழானை விசேஷமாக ஆக்க வேண்டும்?
அல்லாஹ் விசேஷமாக்காத மாதங்களையும், விசேஷமாக்காத நாட்களையும் விசேஷமாக்கிக் கொண்டிருக்கிற இந்த சமுதாயம், அல்லாஹ் எதை விசேஷமாக்கினானோ, எந்த நாட்களை விசேஷமாக்கினானோ அதில் இந்த உம்மத் அலட்சியம் செய்கிறது என்றால் இந்த உம்மத்துடைய அறியாமைக்கு இதைவிட வேறு என்ன சாட்சி இருக்க முடியும்?
அல்லாஹ் கூறுகிறான்:
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமலான் மாதம் எத்தகையது என்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியில் இருந்து தெளிவுகளாகவும் பிரித்துக்காட்டக் கூடியதாகவும் உள்ள இந்த குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்றுவிடவும்;எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்தில் இருந்தால், மற்ற நாட்களில் எண்ணி நோற்று விடவும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான்; மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. மேலும் எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ்வை, உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவுமே! (அல்குர்ஆன் 2:185)
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இதனுடைய இரவுப் பொழுதை இபாதத்திற்காக ஒதுக்குங்கள். இதனுடைய இபாததைஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுன்னத் ஆக்கி இருக்கிறான். இம்மாதத்தின் இரவு காலங்களில் இபாதத் செய்பவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான்.
இப்படிப்பட்ட மாதம் இன்று நம்முடைய வாழ்க்கையில் எப்படி கழிந்துக்கொண்டிருக்கிறது பாருங்கள்!
நம்முடைய வியாபாரங்களை சுருக்கிக் கொள்ள முடியாமல், நம்முடைய தேவைகளை சுருக்கிக் கொள்ள முடியாமல், இரவு தொழுகைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மைவிட துர்பாக்கியம் உள்ளவர்கள் வேறு யார் இருக்க முடியும்? இந்த ரமழானை வீணடித்தவர்களை தவிர வேறு யார் இருக்க முடியும்?
நம்முடைய முன்னோர்களை பற்றி பார்க்கிறோம். ரமழான் மாதத்தில் மட்டுமல்ல முழு வாழ்க்கையை அவர்கள் இபாதத்தில் கழித்தார்கள்.
நம்மால் இந்த ரமழானுடைய சில இரவுகளை கூட இபாதத்துக்காக கழிக்க முடியாத பலவீன நிலையில் நாம் இருக்கும்போது, நம்முடைய சிறப்பிற்குரிய முன்னோர்கள் தங்களது முழு வாழ்க்கையை எப்படி கழித்தார்கள் பாருங்கள்.
இமாம் அபூ முஸ்லிம் ஹவ்லானி ரஹிமஹுல்லாஹ், அபூபக்ர் உமர் ரழியல்லாஹு அன்ஹு இடத்தில் கல்வி படித்தவர்கள். அவர்களால் சிறப்பிக்கப்பட்ட மிகப்பெரிய தாபியீன்களில் ஒருவர்.
அவர்கள் சொல்கிறார்கள்:
எனக்கு முன்னால் நரகம் கொழுந்துவிட்டு எரிக்கப்படுகிறது என்று சொன்னால்கூட,இனி என்னிடத்தில் அதிகப்படியாக அமல் செய்வதற்கு ஒன்றுமில்லை.
என்ன வார்த்தை பாருங்கள்! அந்த அளவிற்கு தனது வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் ஃபர்ளான, சுன்னத்தான, நஃபிலான வணக்க வழிபாடுகளைக் கொண்டு நிரப்பி வைத்திருந்தார்கள்.
ஆனால், இன்று நம்மால் ஃபர்ளு தொழுதால் சுன்னத் தொழ முடியவில்லை. சுன்னத் தொழுதால் நஃபில் தொழ முடியவில்லை. தொழுகையை தொழுதால் திக்ரு செய்ய முடியவில்லை. திக்ரு செய்தால் குர்ஆன் ஓத முடியவில்லை.
இபாதத்தில் கவனம் செலுத்தினால் ஸதகா செய்ய முடியவில்லை. சம்பாத்தியத்தில் கவனம் செலுத்தினால் உறவுகளை பேணி வாழ முடியவில்லை. உறவுகளை பேணுகிறோம் என்று சொன்னால் அங்கு இபாதத்துக்கள் செய்யமுடியவில்லை.
பிள்ளைகளை கவனிக்கின்ற பெயரில், மார்க்கத்தைப் பாழாக்கிவிடுகிறோம். மார்க்கத்தைப் பேணுகின்றோம் என்ற பெயரில் குடும்பத்தை வீணாக்கி விடுகிறோம்.
இப்படி அல்லாஹ்வுடைய கட்டளைகளில் ஒரு கட்டளையை நாம் எடுத்தால், இன்னொரு கட்டளையை பாழாக்குகின்றோம். அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் சட்ட வரம்புகளில் ஒரு வரம்பை பேணுகின்ற ஒரு நேரத்தில், இன்னொரு வரம்பில் எல்லை மீறிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அந்த நல்லவர்கள்,இபாதத்துக்கள்தராசின் இரண்டு தட்டுகளைப்போன்று சமமாக அவர்களின் வாழ்க்கையில் பேணப்பட்டது.
நரகம் கண்ணுக்கு முன்னால் எறிக்கப்படுகின்றது என்றால்கூட, இனி ஒரு புதிய அமலை, என்னுடைய வாழ்க்கையில் கொண்டு வருவதற்கு அங்கே வழியில்லை என்கிறார்கள். அந்த அளவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்தைப் பேணக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ஸஃப்வான் பின் சுலைம் அவர்களைப் பற்றி அவர்களுடைய மாணவர்கள் சொல்கிறார்கள்:
எங்கள் ஆசிரியர் நாளை மறுமை நிகழப்போகிறது என்று அவர்களிடத்தில் சொன்னால்,ஓர் அமலை புதிதாக வாழ்க்கையில் கொண்டு வருவதற்கு அங்கு அவருக்கு தேவைப்படாது.
அந்த அளவிற்கு காலையிலிருந்து மாலை வரை, மாலையிலிருந்து காலைவரை உண்டான இபாதத்துக்களை பேணக்கூடியவர்களாக நாங்கள் அவரைப் பார்த்தோம்என்கிறார்கள்.
இன்று, சுபுஹ் தொழுகை ஜமாத்தோடு தொழுதால், லுஹர் தொழுகையில் காணவில்லை. இப்படி நம்முடைய வாழ்க்கையில் இபாதத்கள் தவறிக்கொண்டே போகின்றன. வணக்க வழிபாட்டில் அலட்சியம் காணப்படுகிறது.
இந்த துன்யா சரியாக இருந்தால் தானே மறுமையை தேட முடியும் என்று கூறி துன்யாவைப் பேணுவதற்கு, துன்யாவை சரிசெய்வதற்கு, துன்யாவை கட்டிக் காப்பதற்கு ஆயிரம் காரணங்களை சொல்லிக் கொண்டிருப்போம்.
ஆனால், எவ்வளவுதான் நாம் துன்யாவை சரி செய்து வைத்தாலும் கூட, நமது முன்னோர்களிடத்தில் சரியாக இருந்த ஒரு சதவீதம் கூட நம்மிடத்தில் சரியாக இல்லையே!
இந்த துன்யாவை மறுமைக்காக சரி செய்கிறோம்; மறுமைக்கு துன்யா தேவைதானே; தீனிற்கு துன்யா தேவை தானே; ஸதக்கா கொடுப்பதற்கு துன்யா தேவைதானே; ஜகாத் கொடுப்பதற்கு துன்யா தேவைதானே;உறவுகளைச் சேர்ப்பதற்கு துன்யா தேவை தானே! என்று அல்லாஹ் சொன்ன ஹலாலான ஆயிரம் காரணங்களை கூறி துன்யாவை சேர்த்துக்கொண்டு, அதே நேரத்தில் அதே துன்யாவை காரணமாக சொல்லி, அல்லாஹ்வுடைய தீனை, அல்லாஹ்வுடைய கட்டளையை, அல்லாஹ்வுடைய இபாதத்தை நாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய மனசாட்சியை கேட்டுப் பார்ப்போம். நாம், நமது கல்புகளின் பக்கம் திரும்பிப் பார்ப்போம். எந்த துன்யாவை ஆஹிரத்துக்கு என்று சொல்லி சம்பாதிக்கிறோமோ, அந்த துன்யாவை ஆஹிரத்துக்கக்காக பயன்படுத்துகிறோமா? என்று யோசித்துப் பாருங்கள்.
நன்றாக சாப்பிடுகிறோம்,ஏன் என்று கேட்டால்,நல்லா சாப்பிட்டால்தானே தெம்பாக இபாதத் செய்ய முடியும் என்கிறோம்.
பள்ளிவாசலுக்கு வந்தால், இமாமிடம், இன்று நல்லா சாப்பிட்டேன், தொழுக முடியவில்லை. இரண்டு ரக்அத்துகள் தொழாமல் உட்கார்ந்திருக்கிறேன் என்கிறோம்.
ஆனால், சொன்னது என்ன? நன்றாக சாப்பிட்டால் நன்றாக இபாதத் செய்யலாம் என்று. பள்ளிவாசலுக்கு வந்தால்,ஏன் இமாம் இவ்வளவு ஓதுகிறார், எல்லாரும் நோன்பு வைத்து களைப்பாக இருப்பார்கள்,யோசனை வேண்டாமா, இவருக்கு. சிறியதாக ஓதி தொழ வைத்தால் போதாதா? இப்படி சிரமம் எடுத்து தொழுக அல்லாஹ் சொல்லி இருக்கானா? என்கிறார்கள்.
இஃப்தாரை காரணம் சொல்லி மஃரிபை வெட்டினார்கள். பிறகு, நோன்பில் களைப்பாக இருக்கிறோம் என்று கூறி இரவுத் தொழுகையை வெட்டினார்கள்.
கடைசியில், வெட்டி வெட்டி இன்று கியாமுல் லைல் எப்படி பரிகாசம் செய்யப்படுகிறது என்றால், அந்த மஸ்ஜிதுகளில் 20ரக்அத்துகளை இமாம் 40நிமிடத்தில் முடிக்கிறார். எங்க மஸ்ஜிதில் 30 நிமிடத்தில் முடிக்கிறார் என்று பெருமை பேசப்படுகிறது.
அன்பானவர்களே! சிரமப்பட்டு இபாதத் செய்வதற்காகதானே இந்த மாதம் கொடுக்கப்பட்டது. சிரமத்தை சகிப்பதற்கு தானே கொடுக்கப்பட்ட மாதம் இது.
இப்படி நம்முடைய வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால், ஆஹிரத்தை காரணம் சொல்லி துன்யாவை தேடுவோம்; துன்யாவை எடுத்துக்கொள்வோம். எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, அதில் முழுமையாக அப்படியே மூழ்கிப் போகிறோம்.
ஆனால், அதே துன்யாவை காரணம் காட்டி, ஆஹிரத்தைக் குறைத்துக்கொண்டே வருவோம்.
கடைசியில், குரங்கு இரண்டு பூனைகளுக்கு மத்தியில் ஆப்பத்தை பங்கு வைத்த கதையாக, மறுமையே இல்லாமல் நமது வாழ்க்கையை ஆக்கிவிடுகிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இமாம் மன்சூர் இப்னு முஃதமிர் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி சொல்லப்படுகிறது. சொல்பவர்களெல்லாம் அவர்களுடைய மாணவர்கள்.
மார்க்கத்தில் பொய்யுரைக்காத,நம்பகத்தன்மையுடைய, பேணுதலுடைய மக்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி அவர்களின் இபாதத்துளைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்த விஷயங்கள் இவை. மிகைப்படுத்தி சொல்லப்பட்ட விஷயங்கள் அல்ல.
ஏனென்றால், மார்க்கத்தில் ஒன்றை மிகைப்படுத்தி சொல்வதும் பொய்யில் ஒரு வகையாகும்.
மன்சூர் இப்னு முஃதமிர் பற்றி சொல்கிறார்கள்:
உங்களது உயிரை வாங்குவதற்கு உங்களது வீட்டு வாசலுக்குமலக்குல் மௌத் வந்துவிட்டார் என்று சொல்லப்பட்டாலும் அதிகமாக அமல் செய்வதற்கு அவரிடத்தில் ஒன்றும் இல்லை.
அல்லாஹ் சிலரைப் பற்றிக் கூறுகிறான், மறுமையை மறந்த ஒரு கூட்டம் இருக்கிறது; சொர்க்கத்தின் மீது ஆசை இல்லாத ஒரு கூட்டம் இருக்கிறது; நரகத்தின் மீது பயம் இல்லாத ஒரு கூட்டம் இருக்கிறது; அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கின்ற நாளைஆதரவு வைக்காத, பயப்படாத ஒரு கூட்டம் இருக்கிறது.
அவர்களுக்கு மரணம் வந்துவிட்டால் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ் சொல்கிறான்:
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)
யார் இவர்கள்? இவர்களுக்கு மறுமையின் தேட்டமில்லை. எந்த மறுமையை அல்லாஹ், நாளை நாளை என்று சொல்கிறானோ அதை மறந்தவர்கள்.
அது அல்லாஹ்வை சந்திக்க வேண்டிய நாள்,அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் ஒன்று திரட்ட கூடிய நாள்,அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடிய நாள் அது.
அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் மனிதர்கள் நிற்கும் நாள். (அல்குர்ஆன் 83:6)
நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் உறுதியாக அறிந்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:223)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَسَيُكَلِّمُهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ، لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ
உங்களில் ஒவ்வொருவரிடத்திலும் அவர்களின் ரப்பு நேரடியாக பேசுவான். இருவருக்குமிடையில் எந்த மொழிப்பெயர்ப்பாளரும் இருக்க மாட்டார். (2)
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6539.
அல்லாஹ் விசாரணை செய்யும்போது அடியானுக்கும் ரப்புக்கும் இடையில் நபிமார்கள் இருக்க முடியாது; அவன் நம்பிக்கொண்டிருந்த, சார்ந்திருந்த யாரும் இருக்க முடியாது.
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ قَالُوا لَا عِلْمَ لَنَا إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், 'என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்'என்று கேட்பான். (அதற்கு அவர்கள்) 'எங்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. நிச்சயமாக, நீ தான் மறைவானவற்றை நன்கறிந்தவன்' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5 : 109)
யா அல்லாஹ், என்னைப் பாதுகாத்துக் கொள்! யா அல்லாஹ், என்னைப் பாதுகாத்துக் கொள்!' இதுவே நபிமார்களின் நிலையாக இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
رَبِّي غَضِبَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ
மறுமை நாளில், அல்லாஹ்வுடைய அந்த கோபம், அதற்கு முன்பும் அல்லாஹ் அப்படி கோபப்பட்டிருக்க மாட்டான்; இனியும் அதுபோன்று கோபப்பட மாட்டான், அத்தகைய கோபத்தில் அல்லாஹ் இருப்பான். (3)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 3340.
மனிதருடைய அமல்கள், எழுதப்பட்ட ஏடுகள் எல்லாம் பறக்கும்.நல்லவர்களாக இருந்தால் ஏடுகள் வலது கையில். அல்லாஹ் அப்படிப்பட்டவர்களில் நம்மை ஆக்குவானாக!
அனைவருக்கும் அவரவருடைய ஏடுகள் கொடுக்கப்படும். மனிதன் தட்டி விட நினைத்தாலும் முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்:
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ (25) وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ (26) يَالَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ (27) مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான். மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே! நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே! என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்). (அல்குர்ஆன் 69:25-29)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய அலட்சியத்தை மன்னிப்பானாக! நமது கவனக்குறைவை போக்குவானாக! அல்லாஹ்வுடைய அடியார்கள், மறுமைக்காக வாழ்ந்தவர்களின் நிலை எப்படி உள்ளது பாருங்கள்!
வாசலில் மலக்குல் மவ்த் வந்து விட்டால் கூட, அங்கேஅவரிடத்தில் ஒரு புதிய அமலைச் செய்வதற்கு உரிய நேரம் இல்லை. அவருடைய வாழ்க்கையில், நேரங்கள் எல்லாம் ஃபர்லான, வாஜிபான, சுன்னத்தான நஃபிலான வணக்க வழிபாடுகளை கொண்டு அப்படியே அழைக்கப்படுகிறது.
ஆனால், நாம் அமல்களை தர்தீப் செய்கிறோமோ இல்லையோ நம்முடைய வீட்டை தர்தீப் செய்கிறோம்.
அமல்களைத் தவிர மற்ற எல்லாம் அலங்கரிக்கப்படுகிறது,அழகாக்கப்படுகிறது.தனது வீட்டில் தர்தீபை கவனிக்கிற எத்தனை பேர் ஃபஜ்ர் தொழுகையில் கவனம் செலுத்துகிறார்கள்? யோசித்துப் பாருங்கள்.
தனது வீட்டை ஒழுங்கு படுத்துவதில் கவனம் செலுத்துகின்ற எத்தனைபேர், அன்றாட அமல்களில் கவனம் செலுத்துகிறார்கள்? வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆடம்பரம் வேண்டாம் என்கிறோம்.
வீட்டை அலங்கரிக்க வேண்டியதை விட்டுவிட்டு நாம் பிறந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கப்பெற்ற வீடு,எத்தனை ஆண்டுகள் இன்னும் இந்த வீட்டில் இருக்கப் போகிறோம் என்று கேரன்டி இருக்கிறதா? என யோசித்துப் பாருங்கள்.
இன்று புதிதாக கட்டப்பட்ட வீடுகள், அடுத்தடுத்த ஆண்டுகளில், பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டால் பாழடைந்த வசிக்கத் தகுதியற்ற வீடுகளாக மாறி விடுகின்றன.
ஒருவர் புதிதாக கட்டி குடியேர்வார் அல்லது அதே வீட்டை வாங்க கூடிய ஒருவர் இது வசிக்க தகுதியில்லை என்று இடித்து விடுகிறார். இப்படிப்பட்ட இல்லத்தைஉருவாக்குவதற்கும் அலங்கரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமா?
அல்லாஹ் கூறுகிறான்:
أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا
அவர்கள் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகையை அவர்கள் கூலியாகக் கொடுக்கப் படுவார்கள்; காணிக்கையாலும் சாந்தியாலும் அதில் வரவேற்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 25:75)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன், கொடுக்க இருக்கின்ற சொர்க்கத்தில் உள்ள வீடுகளை அலங்கரிப்பதற்கு நாம் என்ன செய்து வைத்திருக்கின்றோம்.
ரமழான் மாதம் வந்தால் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. சோம்பேறிகளுக்கா? நோன்பின் பெயரால் உண்டு களைத்தவர்களுக்கா? அல்லது பசியோடு இருந்து வணங்கி அல்லாஹ்வை வழிபட்டவர்களுக்கா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமென பெருமையில் இருக்கிறோம். ஆனால் சிந்திக்க வேண்டும்.
ரமலானை இபாதத்துக்காக செலவழிக்க வேண்டும். ஆனால், நாம்உணவின் தேட்டத்தில் கல்பை பறிக்கொடுக்கிறோம்.
நம்முடைய அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்:ரமழான் மாதத்தில்தான் நம்முடைய பெண்கள் அதிக நேரம் சமையல் அறையில் செலவிடுகிறார்கள் என்று.
அதிகமாக சாப்பிடுகின்ற உணவு வகையின் காரணமாக நமது பெண்களை ஒரு சமையல்காரியாக மாற்றி வைத்திருக்கிறோம்.
ரமழான் மாதத்தில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, நேரங்களை சுருக்கி இபாதத்துகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டிய நாம், நம்முடைய ஆசைகளுக்காக, உணவின் மீது உள்ள ஈர்ப்பில் அதிகப்படியான நேரங்களில் சமையலறையில் அவர்களை நிற்க வைத்து விட்டால், இரவு தொழுகைகளை அவர்கள் எப்படி தொழுவார்கள்? எப்படி அவர்களால் குர்ஆன் ஓத முடியும்? ஏன் நாம் இந்த ரமலான் மாதத்தில், இஃப்தாருக்கு சாதாரணமானநம் பசியைப் போக்கக் கூடிய ஒரு உணவை உண்ணக் கூடாதா?
இன்று இதை செய்த ஆண்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னாள் கண்டிப்பாக குற்றவாளிகளாக நிற்க வேண்டும்,அந்தப் பெண்கள் அல்லாஹ்விடத்தில் முறையிட்டால் நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், ஹம்மாத் பின் சலாமா என்ற அறிஞருடைய வாழ்க்கை வரலாற்றை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்:
நாளைக்கு நீங்கள் மரணிக்கப்போகிறீர்கள் என்று மருத்துவர் சொன்னால்,அவருடைய அமலை அவர் அதிகம் செய்வதற்கு உண்டான வாய்ப்பை அவர் வைத்திருக்கவில்லை.
இமாம் தஹபி சொல்கிறார்கள்:
அவர்களுடைய நேரங்கள் எல்லாம் இபாதத்துக்கள், திக்ருகள் ஓதுவது, குர்ஆன் ஓதுவது என்று நிறைவாக வைக்கப்பட்டு இருந்தது. எனவே, அதிகமான அமல்கள் செய்வதற்குரிய நேரம் அவர்களிடத்தில் இல்லை.
சுலைமானு தைமி ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி ஹம்மாது இப்னு சலாம் சொல்கின்றார்கள்:
நான் சுலைமானிடத்தில் எப்போது சென்றாலும் சரி, பகலிலோ அல்லது இரவிலோ எந்த நேரத்தில் சென்றாலும் சரி, அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் கட்டுப்பட்டு ஒரு அமலை செய்து கொண்டிருப்பார்.
தொழுகையின் நேரமாக இருந்தால் தொழுது கொண்டிருப்பார்.இல்லையென்றால் உளூ செய்து தயாராகிக் கொண்டு இருப்பார்.அல்லது நோயாளியை நலம் விசாரிக்கச் சென்று இருப்பார்.அல்லது ஒரு ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளத் தயாராகி கொண்டிருப்பார்.அல்லது மஸ்ஜிதில் அமர்ந்து மார்க்க கல்வியை கற்று கொண்டிருப்பார்.
அவரை பார்க்கின்ற நாங்கள் என்ன பேசிக் கொள்வோம் என்றால், இவருக்கு அல்லாஹ்வுக்கு மாறுசெய்யத் தெரியாது,பாவம் செய்ய வராதுஎன்று.
எந்த அளவிற்கு வணக்க வழிபாடுகள், அல்லாஹ்வின் கடமைகள் கொண்டு நேரத்தை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்று.
அவர்களைக் கூறுவது மட்டும், புகழ்வது மட்டும் நமக்கு நோக்கம் அல்ல. அவர்களைப் போன்று அவர்களுடைய வணக்க வழிபாட்டில் ஒரு பகுதியாவது நம்முடைய வாழ்க்கையில் வரவேண்டும். அந்த ஆசை நமக்கு வர வேண்டும்.
யா அல்லாஹ்! உன்னை வணங்குவதற்குரிய தௌஃபீக்கை எனக்கு கொடு! துன்யாவை அந்த அளவிற்கு கேட்கிறோம், ஆசையோடு ஆர்வத்தோடும்வேண்டும்என்று அந்த வேட்கையோடும் கேட்கிறோம்.
அந்த அளவு மார்க்கத்தை கேட்க வேண்டாமா? மறுமையை கேட்க வேண்டாமா? இபாதத்தை கேட்க வேண்டாமா? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதத்தைக் கேட்கச்சொல்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்:
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
என் இறைவா! உன்னை அதிகமாக திக்ரு செய்வதற்கு நினைவு கூறுவதற்கு, உனக்கு நன்றியுள்ள அடியானாக நான் இருப்பதற்கு, உனக்கு நன்றி செலுத்துவதற்கு, அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கு எனக்கு நீ உதவி செய்வாயாக!
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1522, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
இந்த துஆவை அதிகமதிகம் செய்வோமாக! அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஆர்வம் கொள்வோமாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ المَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ [ص:132]، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ " (صحيح البخاري- 3326)
குறிப்பு 2)
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنِي الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي خَيْثَمَةُ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَسَيُكَلِّمُهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ، لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، ثُمَّ يَنْظُرُ فَلاَ يَرَى شَيْئًا قُدَّامَهُ، ثُمَّ يَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَتَسْتَقْبِلُهُ النَّارُ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» (صحيح البخاري- 6539)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/