ரஹ்மத்தான ரமழான் அமர்வு 2-2 | Tamil Bayan - 406
ரஹ்மத்தான ரமழான் - அமர்வு 2
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரஹ்மத்தான ரமழான் - அமர்வு 2
வரிசை : 406
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 2-4-2021 | 20-8-1442
بسم الله الرحمن الرّحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ், அடியார்களாகிய நம்மை நேசிக்கிறான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்றுதான், அவன் நம்மை மன்னிப்பதற்காகவே நமக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருகிறான்.
அல்லாஹுத்தஆலா நாடியிருந்தால் நம்மை நமது பாவங்களின் நிலையிலேயே விட்டுருந்தால், நம்முடைய குற்றங்களிலேயே விட்டிருக்கலாம். பிறகு தண்டனையை, நரக வேதனையை அல்லாஹ் முடிவாக்கிருக்கலாம்.
ஆனால் அல்லாஹ் அப்படி செய்யவில்லை. அவன் ரஹ்மான், ரஹீம்.
وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا
அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்கள் மீது விசேஷமான கருனை உடையவனாக, அவர்களை நேசிப்பவனாக, அவர்கள் மீது விசேஷமாக அருள் புரிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:43)
இதற்குரிய அடையாளங்கள்தான் அவன் நம்மை மன்னிப்பதற்கும், நம்மை அவனளவில் அவன் நெருக்கமாக்கி கொள்வதற்கும் நமக்கு வாய்ப்புகளை தந்து கொண்டே இருக்கிறான்.
ஒரு வாய்ப்பு தவறினால் அத்தோடு அல்லாஹ் முடித்துவிடுவதில்லை, அடுத்த வாய்ப்பை அடியானுக்கு தருகிறான். இப்படியாக அந்த அடியானுக்கு உலகத்தை விட்டு பிரிகின்ற வரை அல்லாஹ் சந்தர்ப்பங்களை திரும்ப திரும்ப கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.
இதற்கே நாம் அல்லாஹுவிற்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் 8:40)
அல்லாஹ் நம்மீது கருணை கொண்டு இத்தகைய சந்தர்ப்பங்களை நமக்கு தருகிறான். ஒன்று, சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளை நாம் அடையவேண்டும், இரண்டு, நரகத்தின் தண்டனையிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நமது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றவர்களாக இந்த உலகத்திலிருந்து நாம் செல்ல வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்ஆன் 66 : 8)
அப்படிப்பட்ட வாய்ப்புகளில் ஒன்றுதான் ரமழான் மாதம். ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய ரமழான் மாதத்தின் சிறப்புகளில் ஒன்று, அல்லாஹ் ஒரு முஃமினான அடியானுக்கு சென்ற ரமழானுக்கும் இந்த ரமழானுக்கும் இடையில் உள்ள பாவங்களை மன்னிக்கக்கூடிய ஒரு இபாத்தாக ரமழானின் நோன்பை ஆக்கியிருக்கிறான்.
இந்த ஹதீஸை கேட்டுவிட்டு யாரும் அல்லாஹ்வின் மன்னிப்பு இவ்வளவு தூரமாக இருக்கிறதே என்று என்னிவிட வேண்டாம். அல்லாஹுடைய தூதர் ﷺசொல்கிறார்கள்:
الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِر
ஐவேளைத் தொழுகைகள், ஒரு தொழுகை அதற்கு முந்திய தொழுகையின் பின்னர் உள்ள பாவங்களை போக்கி விடுகிறது. ஒரு ஜுமுஆ அதற்கு முந்திய ஜுமுஆவின் பின்னர் உள்ள பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கு காரணமாகி விடுகிறது.
இதே தொடரில்தான் அல்லாஹுடைய தூதர்ﷺசொன்னார்கள், ஒரு ரமழானுக்கு பின்னர் செய்த பாவங்களை அடுத்த ரமழான் மன்னிக்க காரணமாகி விடுகிறது. அவர் பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்திருந்தால்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 233, 344.
அல்லாஹ் அடியார்களின் நிலைக்கு ஏற்ப பாவமன்னிப்பின் வாசல்களை எப்படி திறந்து வைத்திருக்கிறான் பாருங்கள்.
அல்லாஹ்விடத்தில் நாம் அடையப் பெறுவது பாவமன்னிப்புதான் முதலாவதாக இருக்க வேண்டும். பாவமன்னிப்பு ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுதான் அல்லாஹுடைய ரஹ்மத், அதுதான் அல்லாஹுடைய அன்பு, அதைக் கொண்டுதான் அவர் சொர்க்கத்துக்கு செல்ல முடியும்.
நம்முடைய தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் அல்லாஹுடைய கோபத்தை சம்பாதித்து விட்டார்கள். ஷைத்தானின் பேச்சை கேட்டு அல்லாஹ் தடுத்த மரத்தின் கணியை உண்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள்.
அல்லாஹுத்தஆலா கோபம் கொண்டு அவர்களை இந்த பூமிக்கு இறக்கினான். ஆனால் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மீது இருந்த அல்லாஹுடைய கோபம் அவர்கள் மீது அன்பாக மாறியது, ரஹ்மத்தாக மாறியது.
மீண்டும் அவர்களை தன்னளவில் நெருக்கமாக்கிக் கொள்ள வழிவகுத்தது,அவர்களுடைய தவ்பா மற்றும் இஸ்திஃக்ஃபார். அவர்களை அல்லாஹ் மன்னித்தான்.
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (அல்குர்ஆன் 7 : 23)
அல்லாஹுடைய மன்னிப்பை அடையாமல் அல்லாஹுடைய ரஹ்மத்தை அடைய முடியாது என்பது இந்த வசனத்திலிருந்து நமக்கு புரிகிறது.
இன்று சிலர், அல்லாஹுடைய ரஹ்மத்தை அடைவதற்காக எத்தனையோ அமல்களை செய்கிறார்கள். அல்லாஹுடைய தூதர்ﷺகாட்டித்தராத, சொல்லித்தராத எத்தனையோ காரியங்களை செய்கிறார்கள். பித்அத்தான, அனாச்சாரமான செயல்களை செய்கிறார்கள்.
சிலர், ஆலிம்களை அழைத்து வந்து வியாழக்கிழமை தோறும் தங்களது கடைகளில் ஃபாத்திஹா ஓதுவார்கள், வீடுகளில் ஃபாத்திஹா ஓதுவார்கள், மவ்லூது ஓதுவார்கள். மேலும் பல சடங்குளையும் செய்வார்கள்.
இதன் மூலமாக அவர்கள் எண்ணுவதெல்லாம் அல்லாஹுடைய ரஹ்மத், தமது கடை மற்றும் வீடுகளுக்கு கிடைக்கும் என்பதுதான்.
இவர்கள் செய்கின்ற இத்தகைய பிதஅத்களை அல்லாஹுவோ, அல்லாஹுடைய தூதரோநமக்கு சொல்லி தரவில்லை.
மற்றொரு பக்கம், அவர்கள் இத்தகைய வழிகளில் சிரமப்படுகிறார்கள், ஆனால் சரியான அமல்களை செய்கிறார்களா?அல்லாஹுவால் தடுக்கப்பட்ட பாவங்களை விட்டு விலகி இருக்கிறார்களா? என்று பார்த்தால் பெரும்பாலானவர்கள் அவ்வாறு நடப்பதில்லை.
அல்லாஹுவும் அல்லாஹுடைய தூதரும்தடுத்த பெரும் பாவங்களையும், அனாச்சாரங்களையும் பிதஅத்களையும் தொடர்ந்து செய்வார்கள். அதிலிருந்து விலகுவதில்லை, தவ்பா கேட்பதில்லை, அல்லாஹுவிடம் திரும்புவதில்லை, அல்லாஹுவை அஞ்சமாட்டார்கள்.
ஆனால் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், இந்த சடங்குகள் நம்மை அல்லாஹுவிடம் நெருக்கமாக்கிவிடும், அல்லாஹுவின் கருணையை பெற்று தரும், அவனுடைய ரஹ்மத்தை தேடித்தரும் என்றும் அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹுவும், அல்லாஹுடைய தூதர்அவர்களும் காட்டித்தந்த, சஹீஹான ஹதீஸ்களில் உள்ள சுன்னத்துகளை செய்யக்கூடிய ஒரு மனிதர் எப்படி இருப்பாறென்றால், கடமையான அமல்களை சரியாக செய்வார், உபரியான அமல்களை சரியாக செய்வார், பாவங்களை விட்டு விலகியிருப்பார், அல்லாஹுவிடம் மன்றாடி தவ்பா செய்வார், பாவமன்னிப்ப் தேடிக் கொண்டே இருப்பார்.
அல்லாஹுவுக்கு பயந்து அல்லாஹுடைய ரஹ்மத்தை ஆதரவு வைப்பார். சுன்னத்துகளை செய்பவர்களுக்கும், பிதஅத்களை செய்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை சற்று உற்று நோக்கி பார்க்கவேண்டும்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த அழகிய துஆவில் நாம் படிப்பினை பெறுகின்றோம்.
அல்லாஹுடைய ரஹ்மத்தை முந்தி அல்லாஹுடைய மன்னிப்பு இருக்கிறது. அல்லாஹுடைய மன்னிப்பு யாருக்கு கிடைக்கப் பெறுகிறதோ அவர்களுக்குதான் அல்லாஹுடைய ரஹ்மத்தும் கிடைக்கும். அந்த மன்னிப்பு அதை வேண்டுபவர்களுக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு நபிமார்களும் தங்களது சமுதாயத்தை பார்த்துச் சொன்னார்கள், நீங்கள் செய்த பாவங்களுக்காக உங்கள் ரப்பிடம் நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று.
நம்முடைய இன்றைய நிலை சீரழிந்திருப்பதற்கும், அன்னியர்களால் கேளிக்கூத்தாக ஆக்கப்பட்டிருப்பதற்கும், எல்லா செல்வங்களும் இருந்தும் பரிதாபமாக மாறியிருப்பதற்கும் காரணம், பாவங்களை விட்டு விலகாமல், அல்லாஹ் நம்மீது கடமையாக்கியதை செய்யாமல், இந்த துன்யாவின் முன்னேற்றத்தைக் கொண்டே துன்யாவின் வெற்றியை தேடுகிறோம்.
முஃமின்களுக்கு அல்லாஹு தஆலா அப்படி வைக்கவில்லை. முஃமின்களுக்குரிய வெற்றியை அல்லாஹ், பாவங்களை விட்டு விலகுவதில் வைத்திருக்கிறான்.
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
முஃமின்களே நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அல்லாஹ்விடத்தில் தவ்பா கேளுங்கள், அப்போது நீங்கள் வெற்றி அடையலாம். (அல்குர்ஆன் 24:31)
இன்று பாவங்களை விட்டு விலக முஸ்லிம்கள் தயராக இல்லை, அனாச்சாரங்களை விட தயராக இல்லை, ஷிர்க்குகள், பித்அத்துகளை விட தயராக இல்லை.
அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள், தடுக்கப்பட்ட ஹராமான விஷயங்களை அவர்கள் காஃபிர்களை போன்று ஒருவரை ஒருவர் முந்தப் பார்க்கிறார்கள். ஆனால் துன்யாவை சீர்ப்படுத்தி துன்யாவின் வெற்றியை தேட நினைக்கிறார்கள்.
அன்பானவர்களே, இழிவைத் தவிர, நாசத்தைத் தவிர, நஷ்டத்தைத் தவிர வேறும் எதுவும் மிஞ்சாது. அல்லாஹ் பாதுகாப்பானாக.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த இந்த துஆ இதைதான் போதிக்கிறது. அல்லாஹுடைய இரட்சிப்பு, அல்லாஹுடைய ரஹ்மத் உங்களுக்கு வேண்டுமா?முதலாவதாக அல்லாஹுவிடத்தில் பாவமன்னிப்பு கேளுங்கள், தவ்பா கேளுங்கள்.
ஆகவேதான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹுவிடத்தில் முதலில் மன்னிப்பை கேட்டார்கள், இரண்டாவதாக ரஹ்மத்தை கேட்டார்கள்.
நாம் இன்று ரஹ்மத்தை ஆதரவு வைக்கிறோம், பாவமன்னிப்பு கேட்பதில்லை. அல்லாஹுடைய ரஹ்மத்தை ஆதரவு வைப்பவன் பாவங்களை விட்டு விலக வேண்டும், தவ்பா கேட்க வேண்டும், பாவங்களுக்காக இஸ்திக்ஃபார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ரசூல்ﷺஅவர்களைப் பற்றி அவர்களது தோழர்கள் அறிவிக்கிறார்கள்,
அல்லாஹுடைய தூதர்ﷺஅவர்களுடைய சபையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து அந்த சபை முடிப்பதற்குள் நூறு முறை இஸ்திக்ஃபார் செய்ததை நாங்கள் எண்ணியிருக்கிறோம். (1)
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1516.
'அஸ்தக்ஃபிருல்லாஹல் அழீம்', 'ரப்பிக்ஃபிர்லீ' என்று ரஸூல்ﷺஅவர்களின் சபையில் ஓதிட நாங்கள் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு சின்ன சபையிலும் பேச்சுக்கு இடையில் நூறு முறை இஸ்திக்ஃபார் செய்வார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அல்லாஹுடைய தூதர்ﷺஅவர்களே சொல்கிறார்கள்;
وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ
"ஒவ்வொரு நாளும் அல்லாஹுவிடத்தில் நான் நூறு முறை இஸ்திக்ஃபார் கேட்கிறேன்".
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2702, 4871.
இந்த பாவமன்னிப்புற்குரிய ஒரு சிறந்த மாதம்தான் ரமழான்மாதம். பாவமன்னிப்பு நாம் கேட்டாக வேண்டும், பாவமன்னிப்பு நாம் பெறவேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹுவிடத்தில் மன்னிப்பை எதிர்பார்த்து அந்த தொழுகையை நிறைவேற்றக்கூடிய நாம், ஒவ்வொரு ஜுமுஆவையும் இந்த மன்னிப்பை எதிர்பார்த்து நிறைவேற்றக்கூடிய நாம், மேலும் ஆர்வத்தோடு, மேலும் ஒரு மணமகிழ்ச்சியோடு, எதிர்ப்பார்ப்போடு இருக்கவேண்டும்.
ரமழான் வரப்போகிறது, 'யா அல்லாஹ் உன்னை வணங்கி, உன்னை திருப்திப்படுத்தி, உன்னுடைய முழு மன்னிப்பை பெறுவதற்கு எனக்கு அருள் கொடு' என்று ரமழானை சந்தோஷத்தோடு எதிர்பார்க்க வேண்டும்.
இந்த மாதத்தை எதிர்பார்ப்பது ரமழானுடைய வகை வகையான உணவுகளுக்காக அல்ல, நமக்கு கிடைக்கக் கூடிய செல்வங்களுக்காக அல்ல, நாம் வாங்கக்கூடிய புதிய ஆடைகளுக்காக அல்ல, ரமழானில் கிடைக்கக்கூடிய துன்யாவின் சலுகைக்களுக்காக அல்ல.
ரமழானை அல்லாஹுடைய மன்னிப்பை பெறுவதற்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்,'யா அல்லாஹ் என்னிடத்தில் நிறைய பாவங்கள், குற்றங்கள் இருக்கின்றன. அவற்றை சுமந்து சுமந்து முதுகு கூனியவனாக நான் ஆகிவிட்டேன். என்னை மன்னிப்பதற்கு இந்த ரமழானை ஒரு வாய்ப்பாக ஏற்படுத்திக் கொடு' என்று பிரார்திக்க வேன்டும்.
இதைத்தான் அல்லாஹுடைய தூதர்ﷺசொன்னார்கள், ஒரு அடியான் குற்றவாளியாக இருக்கும்போது, உதாரணமாக, ஒரு அரசர் தடுத்த ஒரு குற்றத்தை ஒரு பிரஜை செய்து குற்றவாளியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் ஒரு வசதியான வாழ்வில் இருந்தாலும் அவர் நிம்மதியாக இருக்க முடியாது. என்றைக்காவது ஒரு நாள் தாம் பிடிபட்டு விடுவோம் என்ற நினைவு அவரது உள்ளத்தில் இருக்கின்ற போதெல்லாம் அவரால் மகிழ்ச்சியான, வாழ்வை வாழமுடியாது. குற்றவாளிகள் ஒரு காலமும் நிம்மதியாக வாழமுடியாது.
இந்த துன்யா வாழ்க்கையில் ஒரு சாதாரண மன்னன், இந்த குற்றவாளிக்கு முன்னர் அவர் இறந்து விடலாம், இவன் பிடிபடுவதற்கு எந்த உறுதியும் இல்லை, கடைசி வரையிலும் சிக்காமலும் போகலாம்.
ஆனால் அரசர்களுக்கெல்லாம் அரசனாகிய பேரரசன், அல்லாஹுடைய பார்வையிலிருந்து ஒருவன் தப்ப முடியுமா?மலக்குல் மவுத்துடைய பிடியிலிருந்து தப்பமுடியுமா?
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
(நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 62 : 8)
அல்லாஹ்வின் பாவமன்னிப்பை நம்முடைய மரணத்திற்கு முன்னால் நாம் பெற்றே ஆகவெண்டும். குற்றவாளியாக அல்லாஹுவுக்கு முன்னால் நாளை நிற்பதற்கு நமக்கு என்ன துனிவு இருக்கிறது?
உலகத்தில் ஒரு சாதாரண அதிகாரிக்கு முன்னால், அவனுக்கு நம்முடைய குற்றத்தில் ஒன்று தெரிந்தால் நூறு தெரியாமல் இருக்கலாம். இருந்தும் இந்த துன்யாவில் அவனுக்கு முன்னால் நாம் பயப்படுகிறோம் என்றால், முடிந்து விடக்கூடிய இந்த உலகத்தின் தண்டனையை நாம் பயப்படுகிறோம் என்றால், எந்த அரசனுக்கு முன்னால், நீதிபதிகளுக்கு எல்லாம் நீதிபதியாகிய நம்முடைய 'ரப்புக்கு' முன்னால் நிற்கும்போது எந்த குற்றத்தையும் அவனிடம் மறைக்க முடியாது.
கண்கள் செய்த, கரங்கள் செய்த, கால்கள் செய்த, நாவு செய்த, ஏன் உள்ளத்தால் நினைத்த குற்றத்தை கூட மறைக்க முடியாது. ஆயிரக்கணக்கான குற்றங்களோடு, தண்டிப்பதில் கடுமையானவனான அல்லாஹுவுக்கு முன்னர் நிற்கும்போது நம்து நிலை என்ன?!
وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
மறுமையில் அல்லாஹுடைய தண்டனை பயங்கரமானது, நிரந்தரமானது. (அல்குர்ஆன் 20:127)
அந்த தண்டனையைப் பயப்படாமல் அல்லாஹுவுக்கு முன்னால் குற்றவாளியாக நாம் எப்படி நிற்க முடியும்.
ஆகவேதான் ஒவ்வொரு நபிமார்களும் இந்த வார்த்தையை சொல்லாமல் சென்றதில்லை,
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
"(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள் : 'என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்". (அல்குர்ஆன் 6:15)
வசனத்தின் கருத்து : சமுதாயமே, இந்த கட்டளைகள், ஏவல் விலக்கல்கள் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான். நீங்கள் எப்படி தொழ வேண்டுமோ நானும் அப்படியே தொழ வேண்டும், நீங்கள் எப்படி கட்டளை இடப்பட்டுள்ளீர்களோ நானும் அவ்வாறே கட்டளை இடப்பட்டுள்ளேன்.
நீங்கள் எப்படி பாவங்களை விட்டு விலக வேண்டுமோ, நானும் அப்படியே பாவங்களை விட்டு விலக வேண்டும். நான் தடுத்துக் கொள்ளவில்லையென்றால், என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் தண்டனையை நான் பயப்படுகிறேன்". (அல்குர்ஆன் 6:15)
இப்படி நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான், முஹம்மது ﷺசொன்னார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த பாவமன்னிப்பை நாம் அதிகம் அதிகம் கேட்கும்போது, இந்த பாவமன்னிப்பை அதரவு வைத்து நாம் நோன்பு வைக்கும்போது, இபாதத்துகள் செய்யும் போது, ஒவ்வொரு கியாமிலும், ருக்கூவிலும், ஸுஜூதிலும் இந்த இஸ்திக்ஃபாரை செய்தவர்களாக நாம் அதை நிறைவேற்றும்போது அல்லாஹுத்தஆலா முஃமினுடைய உள்ளத்திற்கு விசாலத்தை தருகிறான், முகத்தில் ஒளியை தருகிறான், அவனுடைய துன்யாவுடைய வாழ்க்கையில் அல்லாஹ் பரக்கத்தை, ரஹ்மத்தை தருகிறான்.
பாவமன்னிப்பினால் அல்லாஹ் துன்யாவின் ஹலாலான செல்வங்களை நமக்கு லேசாக்கித் தருகிறான். பாவமன்னிப்பினால் அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை தருகிறான். பாவமன்னிப்பினால் அல்லாஹ் ரஹ்மத்தான மழையை இறக்கித் தருகிறான் என்று நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூறியதாக அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான்.
இந்த ரமழானுடைய மாதம் அல்லாஹுடைய மன்னிப்பை நாம் பெறுவதற்காக அல்லாஹ் அருளிய ஒரு காலம். தொழுகை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடுகிறது, ஜுமுஆ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடுகிறது. இந்த ரமழான் மாதமாகியது, பிறை ஆரம்பத்திலிருந்து அடுத்த ஷவ்வால் வரை முழு மாதமும் அல்லாஹுவிடத்தில் மக்ஃபிரத்தை தேடுவதற்காக, நம்முடைய பாவமன்னிப்பை அடைவதற்காக அல்லாஹ் கொடுத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு.
ஒவ்வொரு நோன்பை நாம் வைக்கும் போதும், திறக்கும் போதும், ரமாழானில் இபாதத்துகள் செய்யும் போதும், திக்ர் செய்யும் போதும், குர்ஆன் ஓதும்போதும், 'யா அல்லாஹ் இந்த நன்மையின் பொருட்டால் எனது பாவங்களை மன்னிப்பாயாக' என்று பாவமன்னிப்புடைய ஆதரவோடு நாம் இதை செய்ய வேன்டும்.
இதைத்தன் அல்லாஹுடைய தூதர் ﷺசொன்னார்கள்:
مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
"யார் ரமழானில் இரவுத் தொழுகையை அல்லாஹுவை ஈமான் கொண்டவராக, அல்லாஹுவிடத்தில் பாவமன்னிப்பை ஆதரவு வைத்தவராக தொழுவாரோஅவர் முந்திய செய்த பாவங்களையெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகிறது".
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37.
இந்த ஹதீஸ்களை கேட்டதற்குப் பிறகு கூட ஒருவர் ரமழானில் இஷா தொழுகைக்கு தாமதமாக வருகிறார் என்றால் அல்லாஹுவின் மன்னிப்பின் பக்க அவர் தாமதாக வருகிறார்.
அன்பானவர்களே, துன்யாவுடைய லாபத்திற்கு நாம் எவ்வளவு விரைகிறோம். இன்று காலையில் சீக்கிரம் கடையை திறந்தால் ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்ற சாத்தியம் இருப்பது தெரிந்தால் விரைந்து சென்று முன்னரே திறக்கிறோமே.
மேலும் ஒரு சிறிது நேரம் திறந்திருந்தால் கூடுதலாக வியாபாரம் நடக்கும் என்றால் நமது பசியியை, சுய தேவைகளை அடக்கிக் கொண்டு கடையை அதிக நேரம் திறந்து வைத்திருக்கிறோமே.
யோசித்துப் பாருங்கள், அல்லாஹுதஆலா இந்த ரமழானை நம்முடைய வியாபாரத்திற்கு சீஸனாக கொடுக்கவில்லை. இந்த ரமழானை நம்முடைய இபாதத்திற்கு சீஸனாக கொடுத்திருக்கிறான்.
ஆனால் நம்முடைய கைசேதமே, நாம் ரமழானை நம்முடைய வியாபாரத்திற்கு, துன்யாவிற்கு சீஸனாக மாற்றிவிட்டோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
துன்யாவில் தொழில் செய்ய வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லவில்லை, ஆனால் ஒரு நேரத்தை வைத்திருக்கிறான். இந்த ரமழான் உங்களை மன்னிப்பதற்காக, நீங்கள் மறுமையை சேகரிப்பதற்காக.
இந்த ரமழானில், இந்த சீஸனில் இவ்வளவு செல்வங்களை சேர்ப்பதற்காக முயற்சி செய்கிறோமே, இந்த செல்வங்கள் எல்லாம் மறுமையில் நம்மோடு வருமா?நாம் கப்ருக்கு கொண்டு செல்ல முடியுமா?
ஆனால் அல்லாஹ் மறுமையின் ஒரு சீஸனாக, ஆஃகிரத்தின் ஒரு சந்தர்ப்பமாக கொடுத்திருக்ககூடிய இந்த ரமழானையும் கோட்டை விட்டு விட்டு, பாழ்ப்படுத்தி விட்டு, இந்த ரமழானிலும் எனக்கு துன்யாதான் வேண்டும் என்று அமல்களில் அலட்சியம் செய்துவிட்டு நாம் இருப்போமேயானால், நாளை மறுமையில் நாம் அமல்கள் குறைவானவர்களாக அல்லாஹுவுக்கு முன்னால் நின்றால் அந்த நேரத்தில் எவ்வளவு கவலைப்படுவோம், கைசேதப்படுவோம். ஆனால் அந்த கவலை கைசேதம் எந்த பலனையும் கொடுக்காது.
பாவமன்னிப்பு எப்படி கேட்பது?அல்லாஹுவிடத்தில் அழுது இஸ்திக்ஃபார் செய்வது. "யா அல்லாஹ் என் பாவங்களை மன்னித்துவிடு, இனி நான் பாவங்கள் செய்யமாட்டேன்" என்று இறைஞ்சுவது.
அந்த ரஹ்மான் நம்முடைய பாவங்களை மன்னிக்கவில்லை என்றால் நமக்குத்தான் நஷ்டம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அதைதான் கேட்டார்கள்.
"யா அல்லாஹ், நாங்கள் எங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டோம். எங்கள் இறைவா நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால், நீ எங்களுக்கு கருணை காட்டவில்லை என்றால், நாங்கள் நஷ்டவாளிகள் ஆகி விடுவோம்". (அல்குர்ஆன் 7:23)
இப்படி கெஞ்சினாலும் அல்லாஹுத்தஆலா நம்மை மன்னிக்க வேன்டும் என்று கட்டாயம் இருக்கிறதா? இல்லை. ஆனால் கண்டிப்பாக அல்லாஹ் மன்னிப்பான், இது அவனுடைய, அருள், அன்பு, தயவு.
துன்யாவின் ஆசை அந்த அடியானை இழுக்கும் போதெல்லாம், உலக மக்களெல்லாம் செல்வத்தை தேடக்கூடிய இந்த நேரத்தில், உலக மக்களெல்லாம் உணவு உண்டு இன்பமாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில், ஒரு நோன்பாளி, குளிர்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் அல்லாஹுக்காக நோன்பு நோற்பார்.
அல்லாஹ் சொல்கிறான்,
الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ
"எல்லா அமல்களுக்கும் கூலி சொர்க்கம். நோன்பைத் தவிர. ஆதமுடைய அலைஹிஸ்ஸலாம் மகன் செய்யக்கூடிய அமல்களெல்லாம் அவனுக்காக, நோன்பைத் தவிர. இந்த நோன்பு எனக்காக நோற்கப்படக்கூடிய ஒன்று, என் முகத்திற்காக செய்யக்கூடிய ஒன்று. இந்த நோன்பிற்க்குரிய கூலியை நான் விசேஷமாக தருவேன்". (2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1904, 6938.
எல்லா நன்மைக்களுக்கும் உரிய கூலியை அல்லாஹுதான் தருவான், அவனைத் தவிர யாரும் தர முடியாது, அல்லாஹ் சொர்கத்தைத் தருவான். ஆனால் சொர்கத்தில் நோன்பாளிகளுக்கென்று சில கூலிகளை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கிறான். அதை அங்கே அல்லாஹ் விசேஷமாக கொடுப்பான்.
இந்த ஹதீஸின் தார்பரியத்தை புரிந்தாக வேண்டும். இந்த ஹதீஸின் உண்மையை புரியாத காரணத்தால்தான் இரவுத் தொழுகையை சடங்காக மாற்றி வைத்திருக்கிறோம்.
நம்முடைய தராவீஹ் தொழுகையை ஒவ்வொருவரும் கவனித்துக் கொள்ள வேண்டும். தராவீஹ் தொழுகைக்கு வரும்போது என்ன ஆர்வத்தில் வருகிறோம்?
நமக்கு துன்யாவில் லாபம் அதிகம் கிடைக்கும் என்றால் கடையை முன்னராகவே திறக்கிறோம். வியாபாரம் அதிகம் நடக்கும் என்றால் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருக்கிறோம்.
ஆனால் இந்த 'கியாமுல் லைலில்' அல்லாஹுவிடத்தில் மன்னிப்பை கேட்டு மன்னிப்பை பெற வேண்டிய நாம், இந்த இரவுத் தொழுகையை தொழுதால் உனக்கு மன்னிப்பை வழங்கி விடுகிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான், நாம் எவ்வளவு அலட்சியத்தோடு வருகிறோம், தாமதாக வருகிறோம். எவ்வளவு தாமதமாக செல்ல முடியுமோ அவ்வளவு தாமதமாக வருபவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இந்த ரமழானுடைய இஷா தொழுகையின் ஜமாஅத்தை தவற விடுகிறார்கள்.
"இஷா தொழுகையை யார் ஜமாஅத்தோடு தொழுவார்களோ, அவர்களுக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்".
நூல் : திர்மிதி, எண் : 806.
அது போன்று இமாம் தொழ வைக்கும் போது சிலரை பார்த்திருக்கலாம், இரண்டு ரக்கஅத்துகள் பரக்கத்துகாக தொழுவார்கள், பிறகு வேளை இருக்கிறது என்று சென்று விடுவார்கள்.
சிலர் கடைசி இரண்டு ரக்அத்துகளில் சேர்ந்து தொழுவார்கள். இப்படியாக பலருடைய அலட்சியத்தை பார்க்கிறோம்.
அல்லாஹுடைய தூதர்ﷺசொன்னார்கள், "யார் இமாமோடு அந்த தொழுகை முடிகின்ற வரை தொழுகிறார்களோ, அவருக்கு அல்லாஹுத்தாலா அந்த இரவு முழுமையாக நின்று தொழுத நன்மையை தருகிறான்".
சிலர் வித்ரு தொழுகையை தொழாமல் பின்னர் தொழலாம் என்று சென்று விடுவார்கள். இமாம் வித்ரு தொழ வைத்தால் அவரோடு வித்ரு தொழுவதுதான் சுன்னா.
பகலில் உண்ணாமல், களைப்பாக இருந்தும், ரமழானுடைய இரவில் நாம் நின்று வணங்கக்கூடிய 'கியாமுல்லைல்' தொழுகையை ஒரு சடங்காக, சம்பிரதாயமாக செய்கிறோமே, அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்.
இந்த அலட்சியம் நமக்கு நாமே செய்யும் ஒரு அநியாயம். அல்லாஹுடைய பாவமன்னிப்பை பெற்றுத் தரக்கூடிய இரவுத் தொழுகையாக நாம் தொழுதால் நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும். விரைவாக வந்து விடுவோம், இன்னும் அதிகம் தொழுவோம், எவ்வளவு நேரம் தொழ முடியுமோ அவ்வளவு நேரம் தொழுவோம், இதற்கல்லவா நாம் ஆசைப்படுகிறோம்.
மக்களுடைய நிலை, மஸ்ஜிதுக்கு முதலில் தொழுகைக்கு செல்வார்கள், உள்ளே செல்லும் நேரத்தை பார்ப்பார்கள், பின்னர் இமாம் தக்பீர் கட்டக்கூடிய நேரத்தை பார்ப்பார்கள். அந்த நேரத்தில் அல்லாஹுடைய அச்சமல்லவா வரவேண்டும், மறுமை சிந்தனையல்லவா வரவேண்டும், நம்முடைய எஜமானுக்கு முன்னால் நிற்கும்போது நாம் செய்த பாவங்களின் காரணமாக வெட்கமல்லவா வர வேண்டும், பய உணர்வல்லவா வரவேண்டும்.
பிறகு எட்டு ரக்கஅத்துகள் முடிந்த உடன் நேரத்தை பார்ப்பார்கள். வெளியே செல்வார்கள், அங்கே இன்னொருவரை சந்திப்பார்கள், அவர் மற்றொரு பள்ளியில் இதை விட குறைவான நேரத்தில் தொழுகை முடிவதாக சொல்வார். இப்படியே கேட்டுத் தெரிந்து நேரம் குறைவான பள்ளிவாசலில் சென்று இவர் தொழ ஆரம்பித்து விடுவார்.
இன்று மக்களின் நிலை, எங்கே தொழுகை விரைவாக, அவசரம் அவசரமாக, கியாம், ருகூ, சஜ்தாநிலைகள் சரியாக நிறைவேற்றாமல், ஓதுவது என்ன என்று புரியாமல், விரைந்து முடிக்கப்படக்கூடிய பள்ளிவாசல்களில் சென்று தொழக்கூடியதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட இமாமின் நிலை, பின்னால் நின்று தொழக்கூடியவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
இமாம் என்ன ஓதினால் நமக்கென்ன, நமக்குத்தான் ஒன்றும் புரிவதில்லையே என்ற எண்ணம் சிலரிடமும், புரிகின்றதோ இல்லையோ அவருடைய குரல் நன்றாக இருந்தால் அங்கு நிற்பார்கள்.
கியாமுல்லைல் இதற்கல்ல, இப்படி நிறைவேற்றக்கூடிய அமலல்ல இரவுத் தொழுகை, அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.
அல்லாஹுடைய மன்னிப்பை பெறுவதற்காக உள்ள இந்த ரமழான் மாதத்தில், மிகப்பெரிய ஒரு அமலாக, எப்படி பகலில் அல்லாஹ் நமக்கு நோன்பை தந்திருக்கிறானோ, அதேபோல் இரவில் முக்கியத்துவத்தோடு, ஆசையோடு, ஆர்வத்தோடு, அதிக ஈடுபாட்டோடு நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு அமல்தான் 'கியாமுல்லைல்'.
அதைத்தான் அல்லாஹுடைய தூதர்ﷺசொன்னார்கள், "யார் ரமழானில் ஈமானோடு, நன்மையை, பாவமன்னிப்பை ஆதரவு வைத்தவராக இரவுத் தொழுகையை தொழுவாரோ, அவர் முந்தி செய்த பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகிறது".
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37.
அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நல்ல வாய்ப்பை, பாவமன்னிப்பை, ரஹ்மத்தை தந்தருள்வானாக, வரக்கூடிய ரமழான்களில் அதிகமான நன்மைகளை செய்து அல்லாஹுடைய அன்பை அடையக்கூடிய நன்மக்களில் நம்மை ஆக்கியருள்வானாக,
சென்ற ரமழானில் நம்மிடத்தில் ஏற்பட்ட அலட்சியங்கள், குறைகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக, அந்த அலட்சியங்கள், குறைகள் மீண்டும் ஏற்படாமல் நம்மை பாதுகாப்பானாக.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ إِنْ كُنَّا لَنَعُدُّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَجْلِسِ الْوَاحِدِ مِائَةَ مَرَّةٍ رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (سنن أبي داود 1295 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي وَالصَّوْمُ جُنَّةٌ وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ (صحيح البخاري 6938 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/