ரஹ்மத்தான ரமழான் அமர்வு 1-2 | Tamil Bayan - 406
ரஹ்மத்தான ரமழான்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரஹ்மத்தான ரமழான் (அமர்வு 1-2)
வரிசை : 406
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-07-2021 | 29-11-1442
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக,அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக,அல்லாஹ்வின் பயத்தின்படி வாழுமாரு அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றியவர்களாக,அல்லாஹ் தடுத்த சிறிய பெரிய பாவங்களை விட்டும் விலகியவர்களாக வாழும்படி எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வுடைய அருளால் வெகு விரைவில் சிறந்த மாதம் ஒன்றை நாம் அடைய இருக்கின்றோம். அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அதை எளிதாக்கி தந்தருள்வானாக!
அல்லாஹு சுபஹானஹு வதஆலா எதை கண்ணியபடுத்தினானோ, எதை சிறப்பித்தானோ, அதை கண்ணியபடுத்துவது, அதை சிறப்பிப்பது நம்மீது கடமையாக இருக்கிறது.
அல்லாஹ் சிறப்பிப்பதை நாமும் சிறப்பிப்பது நம்முடைய ஈமானின் அடையாளம், அல்லாஹ் நேசித்ததை நாமும் நேசிப்பது ஈமானின் அடையாளம்.
அந்த அடிப்படையில் வருகின்ற ரமலான் மாதம் முஸ்லிம்களாகிய நமக்கு மிக சிறப்பான ஒரு மாதம்.அல்லாஹ் சுபஹானஹு வதஆலா இந்த மாதத்தின் சிறப்பை பற்றி நமக்கு சொல்கிறான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.(அல்குர்ஆன் 2 : 185)
இந்த ரமலான் மாதத்தில் இறக்கப்பட்ட அல்குர்ஆனின் நன்மையை நாம் அடைய வேண்டும். இதனுடைய நேர் வழியை நாம் அடைய வேண்டும். இந்த குர்ஆன்னோடு நமக்கு தொடர்பு பசுமையாக, உறுதியாக எப்போதும் இருக்க வேண்டும்என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் அல்லாஹு தஆலா இந்த குர்ஆன் இறக்கப்பட்ட மாதத்தில் நோன்பு இருந்து, இந்த குர்ஆனை ஓதி, அந்த குர்ஆனில் இருந்து இறையச்சத்தை பெற வேண்டும்.
நோன்பின் மூலமாக உள்ளத்தை பண்படுத்தி, மனதை மென்மையாக்கி, குர்ஆனை ஓதி, ஓதி அதனுடைய நேர்வழியை புரிந்து அந்த நேர்வழியை உள்வாங்கி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ரமலான் ஒவ்வொரு ஆண்டும், முஸ்லிம்களுக்கு வரும்போதெல்லாம் கண்டிப்பாக அவர்கள் இந்த ரமலானில் நோன்பு வைக்க வேண்டும்.
தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான்:
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான்ன தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வான்ற) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! (அல்குர்ஆன் 2 : 185)
இப்படிப்பட்ட ஒரு மாதம் தான் நம்மை அடைய இருக்கின்றது, அந்த மாதத்தை முறையாக பயன்படுத்தி, அதனுடைய நன்மையை பெறக்கூடிய மக்களாக ஆக வேண்டும் என்ற ஆசையும் நமக்கு இருக்க வேண்டும், அதற்கான துஆவும் நம்மிடத்தில் இருக்க வேண்டும்,அதற்காக தயாரிப்பும் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.
அல்லாஹு சுபஹானஹு வதஆலா இவ்வளவு சிறப்பித்து முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றால், நாம் எந்த அளவிற்கு அந்த முக்கியத்துவத்தை புரியவேண்டும்என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு ரமலானும் வந்து போகிறது. ஆனால், அந்த ரமலானில் நான் அடையப்பெற்ற நன்மை என்ன? அந்த ரமளான் எனக்கு என்ன தந்தது? அந்த ரமலானில் நான் என்ன உருவாக்கி கொண்டேன்? நன்மைகளில், இறையச்சத்தில் என்னுடைய குணங்களில், என்ன மாற்றங்கள் என்னிடத்தில் ஏற்பட்டன?
அதற்குண்டான முழு சிந்தனையோடு, முழு தயாரிப்போடு இந்த ரமலானுக்கு முன்பிருந்தே நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த ரமளான் வந்துவிட்ட பிறகு அலட்சியத்தில் இருந்தும், மறதியில் இருந்தும், கவனக்குறைவில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
இல்லையென்றால், எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம்;ரமளான் வந்தது, சென்றது, நோன்பும் வைத்தார்கள்,மக்களோடு தொழவும் செய்தார்கள், ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை, மீண்டும் அதே பாவங்களின் பக்கம், மீண்டும் அதே அலட்சியங்களின் பக்கம், மறுமையை மறந்த நிலை, மார்க்கத்தை புறக்கணித்த நிலை, அல்லாஹ்வை விட்டு தூரமான நிலை,அப்படி இருக்குமேயானால் இந்த ரமலானில் நோன்பு வைத்தால் அவர்கள் என்ன பலனை காண்பார்கள்?
பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மட்டுமே நோன்பு அல்ல.அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
யார் நோன்பு இருந்ததற்கு பிறகு பொய் பேசுவதை விடவில்லையோ, பாவங்களை விடவில்லையோ, அவர் கடைபிடித்த அந்த நோன்பினால் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை.மாறாக, அவருக்கு எஞ்சியிருப்பது பசித்திருந்ததும் தகித்திரிந்ததும் தான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1903.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு கோவமாக நமக்கு இந்த வாக்கியத்தை சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்
நோன்பு இருந்து கொண்டு இந்த நிலை ஏன்? நான் நோன்பு இருக்கிறேன் அதனால் எனக்கு கிடைக்கக்கூடிய பலன் என்ன? என்று அவர்கள் சிந்திக்காமல் ஏதோ முஸ்லிம்களில் ஒருவராக நாம் இருக்கிறோம், முஸ்லிம் சமுதாயம் நோன்பு வைக்கிறது,நானும் அதில் ஒருவனாக நோன்பு வைக்கிறேன் என்று சடங்காக அவர்கள் நோன்பு இருக்கின்ற காரணத்தினால் தான், நோன்பில் அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.
எனவே, நோன்பு முடிந்ததற்கு பிறகும் மிக அலட்சியமாக மாறிவிடுகிறார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக!
அன்பானவர்களே!அல்லாஹ்விடத்தில் சிறப்பிற்குரியதாக, மிக நெருக்கமானதாக, அல்லாஹ்விற்கு விருப்பமானதாக இருக்கின்றது என்பதற்கு அடையாளம், அது குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பல சிறப்புகளை சொல்லி இருப்பது; அதனுடைய மேன்மைகளை அல்லாஹ்வும்அல்லாஹ்வுடைய தூதரும் விவரித்திருப்பது.
அந்த அடிப்படையில் இந்த ரமழானை பற்றி அல்லாஹ் கூறியதை பார்த்தோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழான் குறித்து ஏராளமான சிறப்புகளை சொல்கிறார்கள், ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் நாம் பார்ப்போம்.
படைத்த ரப்புல் ஆலமின் இந்த மாதத்தை கண்ணியப் படுத்துகின்றான். அல்லாஹு தஆலா அவனுடைய படைப்புகளில் அவன் விரும்பியதை அவன் நாடியதை தனக்கென தேர்ந்தெடுக்கின்றான்
எப்படி இடங்களில் மக்காவை தேர்ந்தெடுத்தானோ, கஅபாவை தேர்ந்தெடுத்தானோ, அதுபோன்று காலங்களில் அல்லாஹு தஆலா ரமழானை தேர்ந்தெடுக்கின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழான் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதை வரவேற்பதற்கு ஆயத்தமாகுவார்கள்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் கண்டிப்பாக நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். நாமும் ரமழான் வரப்போகிறது என்று நினைவு கூர்வோம். பெண்களாக இருந்தால், அதற்குரிய சாமான்களை வாங்குவதற்காக, ஆடைகளை வாங்கி வைத்துக் கொள்வதற்காக, வியாபாரிகளாக இருந்தால் அந்த ரமழானில் வியாபாரம் செய்து அதிகமாக பொருள் சம்பாதிப்பது என்பதற்காக தயாராகுவார்கள்.
இப்படி ஒவ்வொருவரும் துன்யாவின் அடிப்படையில்தான் ரமழானை வரவேற்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறோம்.
இபாதத்தின் அடிப்படையில் ரமழானை வரவேற்பதற்கு தயாராகிறோமா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானை வரவேற்பதற்காக ரமழானை குறித்து முன்னறிவிப்பு செய்தார்களே அது துனியாவிற்காக அல்ல, இபாததிற்காக.
இன்று, மற்ற மாதங்கள் சாப்பிடாத அளவில், மற்ற மாதங்களில் நாம் ஏற்படுத்தி கொள்ளாத அளவுக்கு, இந்த ரமழானில்தான் ருசியான சுவையான உணவுகளுக்கு பின்னால், வகை வகையான உணவுகளுக்கு பின்னால் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய நேரங்கள் எல்லாம் இந்த உணவுகளுக்கு பின்னும், ஆடைகளுக்கு பின்னும், இன்னும் எத்தனையோ வாலிபர்களை இன்னும் எத்தனையோ மக்களை நீங்கள் பார்க்கலாம்; ஆண்கள் பெண்கள் என்று ரமழானில் இரவு காலங்களில் வெட்டி கதைகளை பேசுவதில், நாடகங்கள்படங்கள் பார்பதில் சுற்றி திரிவதில் அங்கும் இங்கும் நின்றுகொண்டு, இரவை கழித்துவிட்டு, ஸஹர் நேரத்தில் சாப்பிட்டு விட்டு, பஜ்ர் கூட தொழாமல் தூங்கி கொண்டிருக்கக் கூடிய ஒரு பெரும் தொகையினரை இந்த சமுதாயத்தில் பார்க்கிறோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
ரப்புக்கு எவ்வளவு கோவம் வரும்? படைத்த ரப்புல் ஆலமீன் எவ்வளவு அதிருப்தி அடைவான்! அல்லாஹ்விடத்திலிருந்து ரஹ்மத்துகளை பெறக்கூடிய மாதத்தில் அல்லாஹ்வுடைய சாபத்தை பெறுகிறார்கள்.
ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரில் ஏறுகிறார்கள். அப்போது மூன்று முறை ஆமீன்என்று சொல்கிறார்கள். அதற்கு விளக்கம் கேட்க்கப்பட்டது;
அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னர்கள்: நான் மிம்பரில் ஏறிக்கொண்டிருந்தபோது, மலக்குகளின் தலைவர் ஜிப்ரயீல் என்னிடம் வந்தார்கள். அவர் கூறினார்:
مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ
யார் ரமழானை அடையப்பெற்று அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ, அவர் நரகத்திற்கு செல்வார். அவரை அல்லாஹ் தூரமாக்குவான். என்று ஜிப்ரீல் துஆ கேட்டார்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜிப்ரீலியின் அந்த துஆவை கேட்டுவிட்டு, அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
ரசூலே! இந்த துஆவிற்கு நீங்கள் ஆமீன் சொல்லுங்கள் என்று சொன்னதற்கு பிறகு, ஆமீன் சொன்னார்கள்.
(கொஞ்சம் யோசித்து பாருங்கள்! ஒரு மனிதன் நரகத்திற்கே சென்றாலும், அவனுடைய ஏதாவதொறு சில அமல்கள் அல்லாஹ்விற்கு பிடித்தமானதாக இருந்தாலும் கூட,அவனுடைய பாவங்களுக்கு பரிகாரத்தை கொடுத்துவிட்டு உடனடியாக அவனை நரகத்தில் இருந்து அல்லாஹு தஆலா வெளியாக்குவான்.
ஆனால், இந்த ரமழானை வீணடித்தவன், இந்த ரமழானை அலட்சியம் செய்தவனுக்கு அல்லாஹ்வுடைய சாபம் எந்த. அளவு கடுமையாகி விட்டதென்றால், நரகத்தில் தள்ளுவது மட்டுமல்ல, மேலும் அவனை நரகத்தின் ஆழத்தில் அல்லாஹ் தள்ளட்டுமாக என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸல்லாம் துஆ கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஆமீன் கூறினார்கள்.
எவ்வளவு பயத்தோடு அல்லாஹ்வுடைய தூதர் ஆமீன் சொல்லியிருப்பார்கள் பாருங்கள்!)
மேலும், சொன்னார்கள்:
مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ
ஜிப்ரீல் கூறினார்: யார் தன்னுடைய தாய் தந்தையில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக்கொண்டதற்கு பிறகு, அவர்களுக்கு நன்மை செய்து, சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பை அடையப்பெராமல் இறந்துவிட்டாரோ அவரும் நரகம் செல்வார். அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவரை தூரமாக்குவான்.
இப்படிபட்டவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் சாபத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். நீங்கள் தாய் தந்தைக்கு தொந்தரவு செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது.பணிவிடை செய்ய வேண்டும்.
பணிவிடை என்றால்,உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்திலிருந்து அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும், அதிலும் முதல் செலவு அவர்களுக்குத்தான், அதற்கு பிறகு மிஞ்சினால்தான் உன்னுடைய மனைவிக்கு பிள்ளைக்கு.
அல்லாஹ் கூறுகிறான்:
يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ
(நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: (நன்மையைக் கருதி) ‘‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதைத்) தாய், தந்தைக்கு கொடுங்கள். (அல்குர்ஆன்2 : 215)
நாம் செலவழிப்பதற்கு முதலாவது தகுதி, நம்முடைய தாய் தந்தை.
எனவேதான், ஒரு கோப்பையில் பால் கொண்டு வந்த அந்த மனிதர், தனது தாய் தந்தை தூங்கிவிட்டார்கள். மனைவியும் பிள்ளையும் பசியோடு இருக்கிறார்கள். அந்த கோப்பையில் உள்ள பாலின் சில துளிகலாவது அவர்களுக்கு கொடுத்து, அவர்களுடைய பசியை ஆற்றி இருக்கலாம்.
ஆனால், தாய் தந்தை குடிக்காமல் உங்களுக்கு அதிலிருந்து ஒரு மிடரை கூட நான் கொடுக்கமாட்டேன் என்று காலை வரை எதிர்பார்த்து இருந்தார். தாய் தந்தை தூங்கி எழுந்த பிறகு அந்த இருவருக்கும் புகட்டினார். பிறகு மிஞ்சியதை மனைவி பிள்ளைகளுக்கு புகட்டினார்.
இதனால் அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஇவருடைய துஆவை ஏற்றுக் கொண்டான்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இன்று நமது நிலை என்ன? மனைவிக்கு நகை வாங்கி கொடுப்போம். பிள்ளைகளை படிக்க வைப்போம். மனைவிக்கு வீடு கட்டி கொடுப்போம். அதற்கு பிறகு,மிஞ்சினால் தகப்பனுடைய மருத்துவத்திற்கு செலவு செய்வோம். அதற்கு பிறகு மிஞ்சினால் தகப்பன் கேட்டதை வாங்கி கொடுப்போம்.
இவர்களை விட அநியாயக்காரர்கள் இந்த உலகத்தில் இருக்கமாட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக
அடுத்து, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ
யாருக்கு முன்னால் என்னைப் பற்றி பேசப்பட்டு அதற்கு அவர் ஸலவாத்து சொல்லமல் இறந்து விட்டால் அவரும் நரகம் செல்வார். அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவரை தூரமாக்குவானாக!
ஜிப்ரீல், அல்லாஹ்வுடைய தூதரே! நீங்களும் ஆமீன் சொல்லுங்கள் என்று கூற, அல்லாஹ்வுடைய தூதரும் ஆமீன் கூறினார்கள்.(1)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 907.
அன்பானவர்களே!அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலானை எதிர்பார்த்தார்கள். ரமலானை பற்றிய முன்னறிவிப்பு செய்தார்கள்:
«هَذَا رَمَضَانُ قَدْ جَاءَكُمْ تُفَتَّحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ، وَتُغَلَّقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَتُسَلْسَلُ فِيهِ الشَّيَاطِينُ»
ஹதீஸின் கருத்து : இதோ ரமலான் வந்து விட்டது. இந்த மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறந்து வைக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 2103.
சொர்க்கம் திறக்கப்படுகிறது என்பதன் கருத்து, சொர்க்கத்திற்கான அமல்களை செய்யுங்கள், சொர்க்கத்திற்கு தயாராகுங்கள்.
நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. நரகத்தின் அமல்கள் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருக்குமேயானால் அந்த பாவத்தை விட்டு விடுங்கள், அந்த பாவத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.
ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. தவறான இச்சைகளின் பக்கம் தூண்டக்கூடிய அந்த ஷைத்தானே விலங்கிடப்படும் போது நீ உனது மன இச்சையை பின்பற்றி உனது நப்ஸை பின்பற்றி பாவத்தின் பக்கம் சேர்ந்து விடாதே, ஷைத்தான் இப்போது ரமலான் மாதத்தில் உன்னை வழிகெடுக்க போவது இல்லை. அல்லாஹ் அவனுக்கு விலங்கிட்டு விடுகிறான்.
ஆனால், நீ உன்னையே ஷைத்தானாக ஆக்கிக்கொள்ளாதே! இந்த ரமலான் மாதத்திலும் ஒருவன் பாவம் செய்கிறான் என்றால், அங்கே கருத்து, அவன் ஷைத்தானை மிஞ்சி சென்றுகொண்டிருக்கிறான் என்பது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
இவ்வளவு அழகான எச்சரிக்கின்ற ஒரு ஹதீஸை நாம் ஒவ்வொரு ஆண்டும் கேள்விப்படுகின்றோம். ஆனால், சிந்தித்துப் பார்கிறோமா?
எனக்காக அல்லாஹு தஆலா சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்திருக்கிறானே! நான் அதில் செல்வதற்கு எவ்வளவு அமல்களை கொண்டு செல்ல வேண்டும், அல்லாஹ்வை திருப்தி படுத்தக் கூடிய சின்ன பெரிய விஷயங்களை விட்டு விடக்கூடாது. அது போல என்னுடைய அமல்களில் எந்த ஒன்றும் அல்லாஹ்வை அதிருப்திபடுத்தி என்னை நரகத்தில் தள்ளி விடக்கூடாது என்ற கவனம் நமக்கு வரும் வேண்டும்.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
இந்த சொர்க்கத்துடைய கதவுகள் திறக்கப்பட்டுவிட்டால் அந்த கதவில் எந்த ஒரு கதவும் ரமலானுடைய மாதத்தில் சாத்தப்படுவது கிடையாது. அதுமட்டுமல்ல மலக்குகள் சொல்லக்கூடிய அறிவிப்பை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொல்கிறார்கள்.
(அன்பானவர்களே!நமக்கு ஒரு பெரிய ஒரு உலகத்தை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கிறான். காபிர்களைப் பொருத்தவரை அவர்களுக்கு இந்த உலகம் தான். மறுமை என்பது அவர்களுக்கு இல்லை. மறுமையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே சில காபிர்களுக்கு இருக்குமேயானால் அது ஒரு கற்பனை நம்பிக்கை தான்.
ஆனால்,முஃமின்களைப் பொறுத்தவரை,இந்த குறுகிய உலக வாழ்க்கையில் இருந்து, இந்த குறுகிய துன்யாவில் இருந்து, வேறு ஒரு உலகத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அவ்வப்போது நினைவூட்டி கொண்டே இருந்தார்கள்.
ஒரு முஃமினுக்கு இந்த துன்யாவோடு அவனுடைய அமல்கள் அவனுடைய எண்ணங்கள் முடிந்து விடாது. ஒரு முஃமினுடைய பார்வை இந்த துன்யாவோடு நின்று விடாது. இதற்கு அப்பாற்பட்டு ஏழு வானங்களுக்கு மேல் வரை ஒரு முஃமீனுடைய பார்வை இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான தொலைநோக்கு. தொலைநோக்கு பார்வை என்பதும், மரணித்திற்கு பிறகுள்ள ஆகிரத்துடைய வாழ்க்கையை முன் வைத்து வாழவேண்டும். அவன்தான் தெளிவான பார்வையில் தெளிவான ஆதாரத்தில் சரியான கண்ணோட்டத்தில் இருக்கின்றான்.
ஆகவே, ஒரு முஃமினுக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஒவ்வொரு கட்டத்திலும் அவனுடைய பார்வையை மறுமையின் பக்கமே திருப்பிக்கொண்டு இருப்பார்கள்.
உனக்கு தெரியாத, உனக்கு இப்போது புரியாத, நீ இப்போது பார்க்க முடியாத ஒரு உலகம் உனக்கு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுதான் உண்மையான உலகம். அதை நம்பு.
அந்த உலகம் மலக்குகளின் உலகம். அந்த உலகம் சொர்க்க உலகம். நரக உலகம் பர்ஸக் உடைய உலகம். அங்கு இருக்கக் கூடிய அந்த காட்சிகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு வருணித்து கொண்டே இருக்கிறார்கள்.
நாம் நமது கண்களால் பார்த்தால் கூட அதில் சிலவற்றை மறந்துவிடலாம். அதில் சிலவற்றை அறிய முடியாமல் போகலாம். ஆனால், நாம் பார்த்து புரிவதை விட, அல்லாஹ்வுடைய தூதர் தெளிவாக நமக்கு சொல்லிக்கொண்டே இருந்தார்கள் நினைவூட்டிக்கொண்டே இருந்தார்கள்.)
ஹதீஸின் தொடர்:
மலக்குகள் இந்த ரமழான் மாதத்தில்இவ்வாறு சப்தமிட்டு கொண்டே இருக்கிறார்கள்:
ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு அழைப்பாளர் அழைத்துக்கொண்டே இருக்கிறார்:
وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ
நன்மையை வேண்டுபவனே முன்னேறி வா! தீமையின் பக்கம் செல்ல கூடியவனே தீமையை விட்டு உன்னைத்தடுத்துக்கொள்!இந்த ரமலானில் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹு தஆலா நரகத்திலிருந்து அவருடைய அடியார்களை விடுதலை செய்கிறான்.(2)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 682, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அதுபோன்று, இமாம் நஸயி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்யக்கூடிய மற்றொரு ஹதீசை அபூஹுரைரா அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ
உங்களிடம் ரமலான் மாதம் வந்துள்ளது. அது பரக்கத் பொருந்திய ஒரு மாதம் ஆகும்.
பரக்கத் என்பதற்கு தவறான பொருளை நாம் விளங்கி வைத்துள்ளோம். ஆனால், பரக்கத் என்பது, ஹலாலான உணவு, பரக்கத் என்றால் அல்லாஹ்வின் நினைவு கூறி சாப்பிட்ட ஒரு உணவு, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி சாப்பிடப்பட்ட ஒரு உணவு, ஏழைகளை மறக்காமல் சாப்பிடப்பட்ட உணவு, அண்டை வீட்டுக்காரருக்கு கொடுத்து சாப்பிட்ட ஒரு உணவு.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரக்கத்தாக சாப்பிட்டார்கள். யாராவது நபி சாப்பிட்டது பரக்கத் இல்லை, அவர்களுக்கு முன்னாடி வைக்கப்பட்ட உணவு பரக்கத் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
இன்று, நாம் வகைவகையாக சாப்பிடுவதை பரக்கத் என்று சொன்னால், நபி அவர்களுடைய காலத்தில் அவர்களுக்கு முன்னால் வகைவகையான உணவு இல்லை. அப்போது அவர்கள் பரக்கத்தா சாப்பிடவில்லையா?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில கவலங்களை சாப்பிட்டார்கள். வயிறு புடைக்க சாப்பிட்டதே கிடையாது.
அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுவது, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி சாப்பிடுவது, சாப்பிட்ட உணவை அல்லாஹ் கொடுத்த ரிஸ்காக நினைப்பது, அந்த ரிஸ்கில் சிலவற்றையும் அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்வது. இது பரக்கத்தான உணவு.
இது போன்று தான் இந்த துன்யா உடைய விஷயத்தில். காசு பணம் அதிகமாக இருந்தால் ரொம்ப பரக்கத்தா இருக்கு. இப்படி நாம் பரக்கத்திற்கு தவறான அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி என்றால், ஏழைகள் எல்லாம் பரக்கத்தானவர்கள் இல்லையா? பணக்காரர்கள் மட்டும் பரக்கத்தானவர்களா?
நீங்கள் ஹலாலாக சம்பாதித்து, அந்த ஹலாலான வருமானத்தைக் கொண்டு, ரேஷன் கடையில் உள்ள அரிசியை வாங்கி, அதற்கு சால்னாவை வைத்து சாப்பிடக்கூடிய வசதியில்லை, அதையும் வெறும் கஞ்சி காய்த்து சாப்பிட்டீர்கள் என்றால் நீங்கள் பரக்கத் உடையவர்கள்.
யாரை விட, ஹலால் ஹராம் பார்க்காமல், பேணுதல் இல்லாமல், பொய் சொல்லி, அடுத்தவருடைய சொத்தை அபகரித்து, செல்வந்தர்களாகி, வகைவகையான உணவுகளை, சாப்பிடக் கூடியவர்களை விட.
அவர்கள் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கக் கூடிய உணவு அல்லாஹ்வின் சாபத்தின் உணவு.
அல்லாஹ் சொல்கிறான்:
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا
எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். (அல்குர்ஆன் 4 : 10)
அன்பானவர்களே! ஒரு ஏழை கை கால் முடியாமல் பிச்சை எடுக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு பிச்சை எடுப்பதைத் தவிர, வேறு வழி இல்லை, கலீஃபா இல்லை, பைத்துல்மால் இல்லை, அவரை ஆதரிப்பதற்கு வேறு யாருமில்லை, அவர் பிச்சை எடுத்தால்தான் அவரால் சாப்பிட முடியுமென்றால் அவருக்கு பிச்சை எடுப்பது ஹலால்.
அவர் அதை வைத்து ஒரு கஞ்சி ஒரு கூழ் குடிக்கிறான். அது அவருக்கு பரக்கத். ஒரு பெரிய பணக்காரன் ஹராமில் சம்பாதித்து சாப்பிடுவதை விட.
ஆடம்பரமான உணவுகளை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் என்று சொல்லி சாப்பிடுகிறான். அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லுகின்றான். சாப்பிட்டதற்கு பிறகு ஒரு பெரிய துஆவை ஓதிக் கொள்கிறான்.
உங்களுடைய இந்த துஆ நீங்கள் சாப்பிடக்கூடிய அந்த உணவை ஹலால் ஆக்கிவிடாது. நீங்கள் சொல்லக்கூடிய பிஸ்மில்லாஹ்வால் ஹராம் ஹலால் ஆகும் என்றால், ஒருவன் மது குடிக்கலாம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:ஹலாலாக சம்பாதித்து நீ கொடுத்த தர்மத்தை தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.
நம்முடைய மார்க்கம் அப்படிப்பட்ட மார்க்கம்.காஃபிர்கள் ஹராமை சம்பாதித்து விட்டு, அந்த பணத்தில் கோயில் குளம் கட்டுகிறார்கள். அனாதை இல்லங்களை திறக்கிறார்கள்.
இப்படி சில புண்ணியத்தை தேடிக் கொண்டால் கடவுள் குற்றம் வராது என்று அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், முஃமின்களின் நம்பிக்கை அப்படி அல்ல. ஹலாலான தர்மமாக இருக்க வேண்டும்.
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ»
உங்களிடம் ரமலான் மாதம் வந்துள்ளது. அது பரக்கத் பொருந்திய ஒரு மாதம் ஆகும். இந்த மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமை ஆக்கினான். இதில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. வரம்பு மீறக் கூடிய அந்த ஷைத்தான்கள் விலங்கிடப் படுகிறார்கள்.
இதில் ஓர் இரவு இருக்கிறது. அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. யார் அந்த இரவின் நன்மையை இழந்தாரோ அவர் நன்மைகளையே இழந்துவிட்டார். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 2106, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
இப்படி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானை குறித்து முன்னறிவிப்பு செய்தார்கள். ரமலானை வரவேற்பதற்கு இந்த ரமலானில் நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதற்குண்டான அறிவுரைகளை சொன்னார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவுரையில் இருந்து நல்ல படிப்பினைகளை பாடங்களை நமக்கு தருவானாக!
இந்த ரமலானை அழகான முறையில் வரவேற்று, இந்த ரமலானை கொண்டு முழுமையாக அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் மன்னிப்பையும் பெற்ற நல்லடியார்களில் என்னையும் உங்களையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக!
நமது பாவங்களை மன்னிப்பானாக! முஃமின்களுக்கு நன்மையாகவும், ரஹ்மத் ஆகவும், பரக்கத் ஆகவும் இந்த ரமலானை அல்லாஹு தஆலா ஆக்கியருள்வானாக
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ».[تعليق الألباني] حسن صحيح. (صحيح ابن حبان- 907)
குறிப்பு 2)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ [ص:58] مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ " وَفِي البَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ [حكم الألباني] : (صحيح -سنن الترمذي 682)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/