HOME      Khutba      அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம் | Tamil Bayan - 402   
 

அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம் | Tamil Bayan - 402

           

அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம் | Tamil Bayan - 402


அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம்

வரிசை : 402

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 29-04-2016 | 22-07-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மீதும், அவர்களுடைய தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,எல்லா சூழ்நிலைகளிலும்அல்லாஹ்வை பயந்து, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணி வாழுமாறு, உங்களுக்கும் எனக்கும்அல்லாஹ்வின் உபதேசத்தை உபதேசித்தவனாக ஆரம்பம்செய்கிறேன்.

நம்மைப் படைத்த அந்த இறைவன், நம்மை மன்னிக்க வேண்டும், நமக்கு நன்மைகளை அதிகப்படுத்தி தரவேண்டும், மறுமையில் நம்மை சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளில் தங்கவைத்து, கண்ணியப்படுத்த வேண்டும்என்று விரும்புகிறான்.

அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா,அவனுடைய அடியார்களைவேதனை படுத்த வேண்டும் என்று அவன் நாடுவதில்லை. தண்டிக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புவதில்லை.

அல்லாஹு தஆலா மன்னிப்பை விரும்புகிறான். அருள் புரிவதை விரும்புகின்றான். அடியானுக்கு நன்மை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றான். ஆகவேதான், நாம் ஒரு நன்மை செய்தால், அதற்கு பதிலாகபத்து நன்மைகளை அவன் வழங்குகின்றான்.

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

நீங்கள் ஒரு நன்மையை செய்தால், நான் உங்களுக்கு பத்து நன்மைகளின் கூலிகளை தருகிறேன்.நீங்கள் ஒரு பாவத்தை செய்தால், அந்த பாவத்திற்குரிய தண்டனை மட்டும்தான் உங்களுக்கு கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 6:160)

அதிலும்,அடியான் திருந்திவிட்டால், அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டால், அந்த பாவத்தையும் அல்லாஹு தஆலா மன்னித்து விடுகின்றான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

«التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ»

ஒருவன் பாவத்திலிருந்து விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி விட்டான் என்றால், அவன் பாவமே செய்யாதவன் போல.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4250, தரம் : ஹசன் (அல்பானி)

அல்லாஹு தஆலா அந்த அளவுஅந்த அடியானைகழுவிவிடுகின்றான். சுத்தப்படுத்தி விடுகின்றான். தன்னளவிலேயே நெருக்கமாக்கி கொள்கின்றான்.

ஆதம் அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும்போது,ஆதம் பாவம் செய்தார். தவறிழைத்தார். மன இச்சையை பின்பற்றினார். பிறகு அந்த தவறுக்காக வருந்தினார், திருந்தினார், அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்.

ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى

பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான். (அல்குர்ஆன்20 : 121,122)

ஆகவேதான் அறிஞர்கள், இதுபோன்ற வசனங்களிலிருந்து நமக்கு மிக அழகான ஒரு ஞானத்தை சொல்கிறார்கள்:

சிலநேரங்களில் அல்லாஹு தஆலா, மனிதனைபாவத்தைக் கொண்டு சோதிக்கிறான்.வெளிரங்கத்தில் பார்க்கும்போது, இதில் ஒரு தீமை இருப்பதைப் போன்று, இதில் ஒரு கெடுதி இருப்பதை போன்று தெரியலாம். ஆனால் இதிலும் அல்லாஹு தஆலாஒரு பெரிய நன்மையை மறைத்து வைத்திருக்கிறான்.

எப்போதென்றால், பாவம் செய்துவிட்ட அந்த அடியான்தனது பாவத்தை நினைத்துவருந்தி, அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு, அவன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி விடும் போது, அல்லாஹுதஆலாஇவன் பாவம் செய்வதற்கு முன்பு இவனுக்கு இருந்தஅல்லாஹ்வின் நெருக்கத்தை விட, அல்லாஹு தஆலா இவனுடையஇந்த தவ்பாவின் பொருட்டால், அதிகமான நெருக்கத்தை தருகிறான்.

சில நேரங்களில் தவ்பாஇஸ்திக்ஃபாரின் மூலமாக, இபாதத்துகளை விட அதிகமாக அல்லாஹ்வை நெருங்க முடியும்.

ஆகவேதான், குர்ஆனுடைய வசனங்களை நீங்கள் படித்தால் வழிபாடு செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்று இல்லை.

அல்லாஹு தஆலா தவ்பா கேட்பவர்களை நேசிக்கின்றேன் என்று சொல்கின்றான். (அல்குர்ஆன் 2 : 222)

இபாதத் என்பது தவ்பாவோடு இருக்கவேண்டும். வெறும் இபாதத் என்பது, மனிதனை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி விடாது, அதனுடைய ரூஹ் உயிரோட்டம் இல்லையென்றால்.

உங்களது உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல், உங்களது முகம் மட்டும் அல்லாஹ்வை முன்நோக்கியதாக இருந்தால்,உங்களது கவனங்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல், உங்களது உடல் மட்டும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி இருந்தால், அந்த இபாதத்துகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்.) (அல்குர்ஆன் 6:79)

فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ (7) وَإِلَى رَبِّكَ فَارْغَبْ

ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!(அல்குர்ஆன்94:7,8)

இறைத்தூதர்களை அல்லாஹு தஆலா வர்ணிக்கின்றான்:

وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ

(நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.(அல்குர்ஆன்21:90)

நம்முடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அல்லாஹ்வின் மீது ஆசை கொண்டு அமைத்திருக்கிறோமா?

அல்லது உடல் மஸ்ஜிதில், உள்ளம் கடைத்தெருவில், நாவு ஓதுகிறது, சிந்தனை எதையோ சிந்திக்கிறது என்ற நிலையிலா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அல்லாஹ் சொல்கிறான்:

இறைத்தூதர்கள் வணங்கினால், அவர்கள் உள்ளத்தில் அல்லாஹ்வை பயந்து வணங்குவார்கள். (அல்குர்ஆன்23:1,2)

இதுதான் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது. அல்லாஹ்வின் பக்கம் திரும்பவேண்டும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பக்கம்தான் திரும்பவேண்டும்.

தூங்குவதற்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அழகான துஆவை சொல்லித் தந்தார்கள்.

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ

யா அல்லாஹ்! என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதனை சிந்திக்க சொல்கிறார்கள். படுக்கைக்கு செல்லக்கூடிய மனிதனே! இப்படித்தான் ஒருநாள் மரணப்படுக்கையில் நீ படுக்க போகிறாய். உன்னுடைய வீட்டின் அறையில் படுக்க போகின்ற மனிதனே! ஒருநாள் கப்ரில் தனிமையில் படுக்க போகிறாய்.

இன்று உன்னோடுஉன் மனைவி இருக்கலாம், உனது பிள்ளைகள் இருக்கலாம், உனது தாய் தந்தை இருக்கலாம்.ஆனால், அந்த மரணப்படுக்கையில் படுத்துவிட்டு,மரணம் உன்னை சந்தித்துவிட்டதற்குப் பிறகு, மறுமையில் நீ நுழைந்து விட்டதற்கு பிறகு, யாரும் உன்னோடு படுக்க மாட்டார்கள். உனக்கு துணை இருக்க மாட்டார்கள். அல்லாஹ் ஒருவன் தான் உனக்கு துணை இருப்பான். அந்த அல்லாஹ்விடம் உன்னை நீ ஒப்படைத்து விட்டாயா?

தூங்குவதற்கு முன்பு அல்லாஹ்விடத்தில் நாம் சொல்ல வேண்டிய, அல்லாஹ்விடத்தில் நாம் பேச வேண்டிய, அல்லாஹ்விடத்தில் நாம் உரையாட வேண்டிய,அல்லாஹ்விடத்தில் முன்வைக்க வேண்டிய கோரிக்கை.

நான் என்னை என் மனைவியிடம் ஒப்படைக்கவில்லை. என் தாய் தந்தையிடம் ஒப்படைக்கவில்லை. என் மனதை இந்த உலகத்தில் எந்த வஸ்துக்களிளும் நான் பறிகொடுக்கவில்லை. ரப்பே! இந்த உள்ளத்தை உன்னிடம் பறிகொடுத்திருக்கிறேன்.

இப்படி சொல்வதற்குரிய தகுதி நம்மிடத்தில் இருக்கிறதா?வார்த்தைகளையே மனப்பாடம் செய்யவில்லையென்றால், கருத்துகளை சிந்திப்பதை பற்றி என்ன சொல்வது?

முஹம்மது நபி உடைய உம்மத், அவர்கள் கற்றுத்தந்த போதனையிலிருந்து எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ

என் நஃப்ஸை உனக்கு நான் ஒப்படைக்கிறேன். உனக்கு சரணடைய செய்ய வைக்கிறேன்.

وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ

என் முகத்தை உன் பக்கம் திருப்பி விட்டேன்.

நமது உள்ளத்தால், உடலால், உயிரால், முகத்தால், எண்ணத்தால் ஆசையால், முன்னோக்குவதற்கு தகுதிபெற்றவன் அவன் ஒருவன் தான்.அனைத்து தொடர்புகளையும் விட்டுவிட்டு, அவனுடைய ஒரு தொடர்புக்காக வேண்டி, அவன் ஒருவன் பக்கம் திரும்புவதற்கு தகுதி உடையவன்.

நாளை மறுமையில்எல்லா உறவுகளும், எல்லா தொடர்புகளும்அறுந்துவிடும். அல்லாஹ்வுடைய உறவும், அல்லாஹ்வுக்காக கொள்ளப்பட்ட உறவுகளையும் தவிர.

الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ

அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகி விடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர.(அல்குர்ஆன்43 : 67)

அல்லாஹு தஆலா இன்னும் அழுத்தமாக சொல்லித் தருகிறான்:

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான்,தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும். (அல்குர்ஆன்80 : 34-36)

எல்லா உறவுகளும் பலனளிக்காத அந்த நாளில், அல்லாஹ் ஒருவனை மட்டுமே முன்னோக்கியவன்தான் கறைசேர்க்கப்படுவான். அவன்தான் அல்லாஹ்விடத்தில் நெருக்கமாக்கப்படுவான்.

இதைத்தான் اَلْاِنَابَةُاِلَىالله- அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிடுதல் என்று சொல்லப்படும்.

அதைத்தான் அந்த துஆவில் நபியவர்கள் சொல்லித் தருகிறார்கள்.

وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ

என் காரியங்களை நான் உன்னிடம் ஒப்படைத்திருக்கிறேன்.

காலையிலிருந்து மாலை வரை எத்தனையோ வியாபாரங்களை செய்திருக்கலாம். எத்தனையோ ஒப்பந்தங்களை செய்திருக்கலாம்.

ஆனால்,அவர் ஒப்படைத்தவர்கள் எல்லாம் அவருடைய காரியங்களை நிறைவேற்றி விடுவார்களா? அல்லது மோசடி செய்வார்களா? அவருடைய காரியத்தில் அமானிதமாக இருப்பார்களா? அல்லது நம்பிக்கைக்கு துரோகம் செய்து விடுவார்களா? என்று சொல்ல முடியாது.

ஆனால், யார் தனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்தாரோ,அல்லாஹ்வை நம்பி அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டினாரோ, அல்லாஹ் ரப்புல் ஆலமீனைவிட, வாக்கை நிறைவேற்ற கூடியவன் யார் இருக்க முடியும்? அல்லாஹ்வை விட ஒப்பந்தத்தை நிறைவேற்ற கூடியவன் யார் இருக்க முடியும்?

அல்லாஹ் கூறுகிறான்:

وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ

நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். (அல்குர்ஆன் 2:40)

குர்ஆனின் பல இடங்களில்அல்லாஹ் தனது அழகிய பண்பை சொல்கின்றான்:

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ

“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்). (அல்குர்ஆன் 3:9)

அல்லாஹ்வுடைய அழகிய பண்புகளில் ஒன்று, அவன் வாக்களித்தால்அந்த வாக்கை நிறைவேற்றியே தீருவான்.

مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ

(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்). (அல்குர்ஆன்50 : 29)

அந்த ரப்பிடத்தில் நமது காரியங்களை ஒப்படைக்காமல்,இன்று ஷிர்க் உடைய வகைகளில் ஒன்றைத்தான் நாம் சொல்லுகின்றோம்.

உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன், நீங்கதான் எனக்கு இந்த காரியத்தை செய்து கொடுக்க வேண்டும். வேறு யார் எனக்கு இந்த காரியத்தை செய்து கொடுப்பார்? என்று, அன்றாட வாழ்க்கையில் உணராமல், புரியாமல், பேசுகிறோம். இவை இணை வைத்தலின் வார்த்தைகள் என்பதை மறந்துவிடாதீர்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக.)

தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்:

وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ

யா அல்லாஹ்! என் முகத்தை மட்டும் நான் உன் பக்கம் திருப்பவில்லை. என் முதுகையும் உன் பக்கம் தான் சாய்த்திருக்கிறேன்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை,எனது உடல், உயிர், எனது எண்ணங்கள்எல்லாம் உன்னிடத்தில் ஒப்படைத்து நான் வந்திருக்கிறேன்.

இது அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல். இத்தகைய திரும்புதலை அடியானிடமிருந்து அல்லாஹ் எதிர்பார்க்கிறான். என்னை முன்னோக்கி இரு,என் பக்கம் திரும்பி இரு, என் பக்கம் சரணடைந்து இரு, என்னை நம்பி இரு, என்மீது ஆதரவு வைத்திரு, என்னை பயந்திரு.

அல்லாஹ் சொல்ல வைக்கிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.

لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ

யா அல்லாஹ்! நான் எங்கே ஒதுக்குவேன்? நான் எங்கே ஒதுங்க முடியும்?உன் பக்கமே தவிர.(1)

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6313.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம். எனக்கு வீடு இருக்கிறது, நான் ஒதுங்க முடியும் என்று. எனக்கு குடும்பம் இருக்கிறது நான் அங்கே தங்க முடியும் என்று.

அல்லாஹ் நாடினால், நமது வீடுகளை பூமியில் சொருகி விடலாம். அல்லாஹ் நாடினால், பூகம்பங்களை கொண்டு நமது வீடுகளை எல்லாம் பூமியில் இழுத்துக்கொள்ளலாம். யார் அப்போது நமக்கு தங்க இடம் கொடுப்பார்கள்?

இன்று நாம், நமது பணத்தின் மீது, நமது செல்வத்தின் மீது, நம்முடைய ஆட்சி அதிகாரத்தின் மீது, நாம் சம்பாதித்தவை என்றுபெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இல்லாத நேரங்களை நினைத்துப் பாருங்கள், இவற்றை கொடுத்தவன் யார்? என்று நினைத்துப் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆகவேதான் தூங்கும்பொழுது இன்னொரு துஆவை சொல்லிக் கொடுத்தார்கள்.

«الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ»

யா அல்லாஹ்! புகழ் எல்லாம் உனக்கே சொந்தமானது. நீதான் எனக்கு உணவளித்தாய்.

அல்லாஹ்! நீ எனக்கு உணவளித்தாய் என்று ஒரு பிள்ளை சொல்லவேண்டும். என் தாய் தந்தை இல்லை என்றாலும், எனக்கு உணவளிப்பவன் நீயே. என் தாய் தந்தைகள் உணவளித்து இருந்தாலும், என் தாய் தந்தைகள் மூலமாக நீ எனக்கு உணவளித்தாய். நீ நாடியிருக்கவில்லையென்றால் அவர்கள் எனக்கு உணவளித்திருக்க முடியாது.

ஒரு மனைவி சொல்லியாக வேண்டும், அல்லாஹ் நீ எனக்கு உணவளித்தாய் என்று. என் கணவன் எனக்கு உணவளித்தான். அல்லாஹ்வின் கட்டளையை கொண்டு எனக்கு உணவளித்தான். அல்லாஹ் நாடவில்லை என்றால் என் கணவர் எனக்கு உணவளித்திருக்க முடியாது.

وَسَقَانَا، وَكَفَانَا

நீதான் எனக்கு நீர் புகட்டினாய். எனது தேவையெல்லாம் நீதான் எனக்கு நிறைவேற்றினாய்.

எவ்வளவு தேவைகள். எவ்வளவு சூழ்நிலைகள். கைவிடப்பட்டு, இப்போது யாரிடம் செல்வேன்? என்று திகைத்து நிற்கக் கூடிய, ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான நேரங்களை நினைத்துப் பாருங்கள்! உங்களது வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். யார் உங்களுக்கு அந்த நேரத்தில் உதவி செய்தார் என்று.

எத்தனை சூழ்நிலைகளில் திகைத்து நின்றோம். யாரை அணுகுவது? யாரை பார்ப்பது?எப்படி நிறைவேற்றுவது? என்று நாம் சங்கடப்பட்டுக்கொண்டு, யோசித்துக்கொண்டு மனம் தடுமாறிக்கொண்டிருந்தோம். அல்லாஹ் உதவியை அனுப்பினான்.

وَآوَانَا-எனக்கு ஒதுங்க இடம் கொடுத்தானே! படுக்க படுக்கையை கொடுத்தானே!

யா அல்லாஹ்! இந்த உலகத்தில் எத்தனை மக்கள்உணவளிப்பவர்கள் இல்லாமல், தங்க இடம் அளிப்பவர் இல்லாமல், சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ எனக்குக் கொடுத்தாயே!

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2715.

அன்பானவர்களே! இது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது. இந்தத் திரும்புதலைஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு கடமையாக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினால் தான், நம்முடைய ஈமான் முழுமை பெறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ

ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.(அல்குர்ஆன் 39:54)

நாம் இன்னும் எங்கெங்கோ திரும்பி கொண்டிருக்கின்றோம். இவர் உதவுவார்; அவர் உதவுவார், இவர்களை அணுகினால் உதவுவார்கள், இவர்களோடு சேர்ந்தால் நம்மை காப்பாற்றுவார்கள் என்றுமனிதர்களை நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய தீனுக்கு எதிரானவர்களை, தமது எதிரிகளை நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் பக்கம் அழைக்கிறான்.

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன்3:160)

அன்பானவர்களே! அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்ற இந்த திரும்புதல்., உடலால், உள்ளதால், எண்ணத்தால், இபாதத்துகளால், தவ்பாவால், இஸ்திக்ஃபாரால்இருக்க வேண்டும்.

இது இறைத்தூதர்கள் உடைய தன்மை. அல்லாஹ்வுக்கு நெருக்கமான, ரஹ்மானின் அடியார்களுடைய பண்பு இது. இந்தப் பண்பை கொண்டு தான்அல்லாஹ்வுடைய அன்பை அடைய முடியும்.

நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பவில்லை என்றால், நம் மீது அவன் திரும்பி, நம்மை அருள் புரிவதற்கு அல்லாஹ்வுக்கு என்ன தேவை இருக்கிறது?

يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ (15) إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.  (அல்குர்ஆன் 35:15,16)

அல்லாஹ்வின் பக்கம் திரும்பியாகவேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய வசனத்தை பாருங்கள்.

مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ

(நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். (அல்குர்ஆன்30:31)

இன்று,நம்முடைய வணக்க வழிபாடுகள், நம்முடைய துஆக்கள்அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாமல் நிறுத்தபட்டவையாக இருக்கின்றன. ஏன் காலதாமதம் ஆகின்றன? அல்லாஹ்வை முன்னோக்காமல் துஆ கேட்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

«ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَقْبَلُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ»

மறதியான உள்ளத்திலிருந்து வரக்கூடிய துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாக்கிம்,எண் : 1817.

அல்லாஹ் தஆலா, அவனுடைய நேர்வழி, அவனுடைய அருள், அவனுடைய நெருக்கம் என்பது,அவன் பக்கம் திரும்பக் கூடியவர்களுக்கு மட்டுமேஅல்லாஹ் முடிவு செய்து வைத்திருக்கின்றான்.

وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏

(அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன்42:13)

அவர்களுடைய உலக காரியங்கள், அவர்களுடைய குடும்ப காரியங்கள், அவர்களுடைய தொழில்துறை, அவர்களுடைய அரசியல், சமூகம்அனைத்திலும் அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல் வேண்டுமா? அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

காலையில் தூங்கி எழுந்தவுடன் சொல்ல வேண்டிய வார்த்தை,

«الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ»

யா அல்லாஹ்! நாளை மறுமையில் உன் பக்கம்தான் நான் எழுப்பப்படுவேன்.

அறிவிப்பாளர் : ஹுதைபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 5049.

இந்த வார்த்தையை அவன் சொல்கிறான். ஆனால், அவனுடைய செயல் அதை பொய்ப்பித்து கொண்டிருக்கிறது. நமது நாவுகள் சொல்லுகின்றன.உள்ளங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

அதுபோன்று, மாலையில் ஓத வேண்டும்:

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ

அல்லாஹ்! உன்னைக் கொண்டே எனது காலைப் பொழுதை அடைந்தேன். உன்னைக் கொண்டே மாலைப் பொழுதை அடைந்தேன்.உன்னை கொண்டு தான் எனது ஹயாத். உன்னை கொண்டு தான் எனது மவுத்.நான்திரும்ப உன்னிடம்தான்வர வேண்டியது இருக்கிறது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 3868.

இப்படி, வாழ்க்கையின் அத்தனை கோணங்களிலும், அத்தனை சூழ்நிலைகளிலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன், என் பக்கம் திரும்பு, என் பக்கம் வா, என்னை நெருங்கு, என்று நம்மை திருப்பிக் கொண்டே இருக்கிறான்.

இன்று நமது நிலையோ, அல்லாஹ்வை மட்டும் விட்டுவிட்டு, பிறகு உலக வஸ்துக்கள், உலகப் பொருட்கள், உலக இன்பங்கள், உலக மக்கள், இந்த உலக நட்புகள், உலக உறவுகள், இவர்களின் பக்கம் முன்னோக்கியவர்களாகவே இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

இறைத்தூதருடைய இந்தப் பன்பைப் பாருங்கள்:

اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ‏

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 11:75)

இன்று,நாம் இந்த துன்யாவின் பணத்துக்காக எதையும் நாம் சகித்துக் கொள்கிறோம். ஆனால், ரப்புக்காக சகிப்புடையவர்களாக இருக்கிறோமா?

இந்த உலக விஷயங்களுக்காக நாம் உழைக்கிறோம். கஷ்டப்படுகிறோம். பல மணி நேரங்களை செலவழிக்கிறோம். ஆனால், வணக்க வழிபாடுகளில் அலட்சியம் செய்கிறோம்.

குர்ஆனுடைய கல்வியை தேடினேன். நபியுடைய சுன்னாவின் கல்வியை தேடினேன். அதனால் எனது இரவு தூக்கம் தொலைந்தது. எனது உடல் ஆரோக்கியம் தொலைந்தது என்று நம்மால் சொல்லமுடியுமா?

உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, அலி ரலியல்லாஹு அன்ஹு, இன்னும் எத்தனையோ சஹாபாக்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே வரலாம். அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத காரணத்தால், அவர்களது கண்ணங்களில்அந்த கரை படிந்திருக்கும்.

இன்னும் சொல்லப்போனால், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கண்கள், அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத காரணத்தால்குருடாகவே ஆகிவிட்டன.

நமது நிலையை நினைத்துப் பாருங்கள்! நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? அல்லாஹ்வுக்காக சகிக்க கூடியவர்கள் எங்கே? நபிமார்கள் அல்லாஹ்வுக்காக சகித்தார்கள்.

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 11:75)

அன்பானவர்களே! கொடுத்தாலும் அல்லாஹ்தான். எடுத்துக்கொண்டாலும் அல்லாஹ் தான். இப்படி திரும்பக் கூடிய நிலைதான், உண்மையான ஒரு முஃமினாக நம்மை மாற்றும்.

இந்த ஈமானோடு சேர்ந்த தொழுகை தான், அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடத்தில் அங்கீகரிக்கப்படும். இப்படிப்பட்ட ஈமானோடு இருக்கக்கூடிய துஆக்கள் தான், அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

அத்தகைய அந்த தன்மையை அடைவதற்கு, நாம் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்விடத்தில் துஆ கேட்க வேண்டும். யா அல்லாஹ்.! என்னை உன் பக்கம் திரும்பியவனாக ஆக்கு! உன்னையே முன்னோக்கியவனாக ஆக்கு! என் உள்ளத்தில் எல்லோருடைய விருப்பத்தை விட, உனது விருப்பத்தை அதிகமாக்கு! யார் பக்கமும் என்னை திருப்பி விடாதே! உன் பக்கம் மட்டுமே தவிர.

அது போன்று,நம்முடைய சூழ்நிலைகளில் நாம், நம்மை கண்காணிக்க வேண்டும். எனது கவனம் அல்லாஹ்வின் பக்கம் இருக்கிறதா? அல்லது படைப்புகள் பக்கம் இருக்கிறதா? என்று சுயபரிசோதனையை இன்ஷா அல்லாஹ் செய்து கொண்டேயிருப்போமேயானால், இந்த தன்மையிலிருந்துகொஞ்சத்தை நாம் அடைய முடியும்.

அதன் மூலமாக, அல்லாஹ்வுடைய அன்பை, அவனுடைய நெருக்கத்தை, மறுமையின் மகத்தான வெற்றியைஅடைய முடியும்.

அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும்அந்த நல்ல தன்மையைநிறைவாக தருவானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வின் பக்கம் நெருங்கிய, அல்லாஹ்வை மட்டுமே முன்னோக்கிய, அந்த நன்மக்களுடைய கூட்டத்தில்என்னையும்உங்களையும் அல்லாஹ் சேர்த்து அருள்புரிவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، وَمُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالاَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعَ البَرَاءَ بْنَ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا، ح وَحَدَّثَنَا آدَمُ: حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الهَمْدَانِيُّ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَى رَجُلًا، فَقَالَ: " إِذَا أَرَدْتَ مَضْجَعَكَ، فَقُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَا وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ. فَإِنْ مُتَّ مُتَّ عَلَى الفِطْرَةِ " (صحيح البخاري- 6313)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/