HOME      Khutba      முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 1-3 | Tamil Bayan - 398   
 

முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 1-3 | Tamil Bayan - 398

           

முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 1-3 | Tamil Bayan - 398


முஸ்லிம்களும் வியாபாரமும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : முஸ்லிம்களும் வியாபாரமும் (அமர்வு 1-3)

வரிசை : 398

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 09-07-2021 | 29-11-1442

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறி இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக,அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு தந்திருக்கின்ற அழகிய ஷரீஅத்தை பேணும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்மைப் படைத்தவன். நமக்கு இந்த உலக வாழ்க்கையில் வாழ்வதற்காக அமைத்துக் கொடுத்தவன். இந்த உலக வாழ்க்கையில் நமக்குண்டான இரணத்திற்கு அவன் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம்  ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 : 6)

இவ்வளவு தெள்ளத்தெளிவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அவனுடைய ரஸ்ஸாக் -உணவளிப்பவன் என்ற தன்மையை நமக்கு தெளிவு படுத்துகின்றான்.

மேலும், அல்லாஹ் கேட்கிறான் :

وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 29 : 60)

அல்லாஹ் உடைய உயர்ந்த அதிசய பண்புகளில் ஒன்று, அவன் படைத்த படைப்பினங்களுக்கு உணவளிப்பவனாக இருக்கின்றான்.

அல்லாஹ் சொல்கிறான்:

مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ (57) إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ

அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,) (நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 57,58)

மேலும், அல்லாஹ் சொல்கிறான்:

وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ

அவன்தான் உணவளிக்கிறான். அவன் யாரிடமும் உணவு கேட்பதில்லை. (அல்குர்ஆன் 6 : 14)

இப்படி, நூற்றுக்கணக்கான இறை வசனங்களை நாம் பார்க்கின்றோம்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா, இந்த பூமியில் படைத்திருக்கின்ற பல கோடி படைப்புகளுக்கு அவன் உணவளிக்கிறான்.

அல்லாஹ் ஒருவன் தான், உணவளிக்கிறான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குரிய உணவை சேர்ப்பதை அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான்.

நீங்கள் உங்களுக்குரிய உணவை தேடி செல்வதற்கு முன்பு, உங்களுக்குரிய உணவுகள் தேடிச் சென்று அங்கே எதிர்பார்த்திருக்கும்.

வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்தை சம்பாதிக்க செல்கிறார்கள். அப்படி செல்லும்போது, இவர்கள் அங்கே சென்றதற்குப்பிறகு, எத்தனை நாள் தாக்குவார்கள்? எங்கெங்கே தங்குவார்கள்? என்பதையெல்லாம் அறிந்த பிறகு, இவர்களுடைய உணவு இங்கிருந்து அங்கே வருகிறதா? அல்லது இவர்கள் செல்வதற்கு முன்பே இவர்கள் சாப்பிடுவதற்குண்டான உணவு குடிப்பதற்கு உண்டான நீர் சுவாசிப்பதற்கு உண்டான காற்று இவர்களை எதிர்பார்த்து அங்கே இருக்கின்றனவா?

நீங்கள் விமானத்தில் பறக்கிறீர்கள், நீங்கள் வருவதற்கு முன்பு உங்களது உணவு அங்கே சமைக்கப்பட்டு உங்களது குடிபானம் தயார் செய்யப்பட்டு உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் விமானத்திலிருந்து கீழே இறங்குகிறீர்கள். அங்கே தண்ணீர் தேவைப்படுகிறது. அங்கே உங்களுக்காக தண்ணீர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பசிக்கிறது, ஒரு உணவகத்திற்கு செல்கிறீர்கள். உங்களுக்காக உணவு சமைக்கப்பட்டு அங்கே இருக்கிறது.

ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்கிறீர்கள். உங்களுக்கான உணவு அங்கே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் சென்று அங்கே சம்பாதித்தால் தான் உங்களுக்கு இனிமேல் உணவு தயாரிக்கப்படும் என்று இருக்குமேயானால் யாராவது வாழ முடியுமா? யாராவது சாப்பிட முடியுமா?

இவற்றை நாம் சிந்திப்பதே கிடையாது. அதன் பக்கம் நமது கவனத்தை செலுத்துவது கிடையாது.

நம்முடைய உணவு எத்தனையோ நாட்களுக்கு முன்னால் ஏற்றுமதி செய்யப்பட்டு, அது முறைப்படுத்தப்பட்டு, எந்த இடத்திற்கு நாம் செல்வோம்? என்பதெல்லாம் அல்லாஹ்வின் திட்டப்படி கணக்கிடப்பட்டு, அங்கே நமக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை நோக்கி நாம் சென்று சாப்பிடுகின்றோம்.

எத்தனை பேருடைய உழைப்பிற்கு பிறகு, எத்தனை பேருடைய ஏற்பாட்டிற்கு பிறகு, அவையெல்லாம் நாம் செல்வதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்போ அங்கு சென்று நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அல்லாஹ்வுடைய விதியின்படி, அந்தப் பருக்கையில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்குமோ, அவரை எதிர்பார்த்துக் கொண்டு, அவருக்குரிய தட்டில் காத்திருக்கும்.

எத்தனையோ நேரங்களில், உங்களுக்கு இப்படி ஒரு சம்பவங்கள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் சாப்பிட வேண்டும் என்று ஒரு உணவகத்திற்கு செல்வீர்கள். உங்களுக்கு விருப்பமான உணவை வாங்குவீர்கள்.

கையில் சுமந்து கொண்டு வருவீர்கள்.உங்களது நண்பரோ அல்லது உங்கள் உறவினரோ வழியில் உங்களை பார்ப்பார். எங்களது வீட்டிற்கு வாங்க சாப்பிட போவோம் என்று சொல்லி அவர்களை வலுக்கட்டாயம் செய்து அழைத்துச் செல்வார்.

நீங்கள் வாங்கிய உணவு உங்கள் கையில் இருக்கிறது. நாம் சாப்பிடலாம் என்று எண்ணி இருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு வேறு ஒரு உணவு அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி எண்ணற்ற சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கும்போது நாம் எண்ணிப் பார்க்கிறோமா? நான் சம்பாதித்து, என்னுடைய உழைப்பில் வாங்கப்பட்ட இந்த உணவு ஏன் எனது வயிற்றுக்குள் செல்லாமல், வேறு எங்கோ செல்கிறது? என்று நாம் யோசிக்கிறோமா?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் சொன்னதாக சொல்கிறார்கள்:

فَإِنَّ نَفْسًا لَنْ تَمُوتَ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا

எந்த உயிரினமும்மரணிக்கவே முடியாது,அதனுடைய உணவை அது சாப்பிட்டு முடிக்காத வரை.

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2144, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அழுத்தமான ஆழமான ஒரு அடிப்படையை படைத்த ரப்புல் ஆலமீன் விவரிக்கின்றான்.

ஆகவேதான்,ஒரு முஸ்லிம் உடைய நம்பிக்கை, தனது கல்வி, தன்னுடைய திறமை, தன்னுடைய தொழில், இப்படி இந்த உலக காரணங்களை சார்ந்திருப்பதை விட,அவன் அல்லாஹ்வை சார்ந்திருப்பான்.

முயற்சி செய்வான்.உழைப்பான். படிப்பான். வேலை செய்வான். விவசாயம் செய்வான். எல்லாம் செய்வான். ஆனால், அவனுடைய உள்ளம் அல்லாஹ் ஒருவனைமட்டும் சார்ந்திருக்கும்.

இதைத்தான், நம்முடைய ஒரு இமாம் மிக அழகாக சொல்கிறார்:வானம் எல்லாம் இனி மழை பொழியாது,இனி பூமியில் எந்த விளைச்சலையும் கொடுக்காது என்று ஒரு நிலைமை ஏற்பட்டால்,அந்த நிலையில் அல்லாஹ் எனக்கு எவ்வாறு உணவளிப்பான் என்று ஒருவன் யோசிக்கிறான் என்றால்,அவன் அல்லாஹ்வை நம்பவில்லை.

இனி மழையே பொழியாது,உலகத்தில் பூமி இனி விளைச்சலையே தராது,என்ற ஒரு நிலை ஏற்பட்டால்,அந்த ஒரு சூழ்நிலையில் இப்போது எனக்கு எப்படி ரிஸ்க்கு வரும் என்று ஒருவர் நினைத்தால்,அவன் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையில்பலமானவனாக இல்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அஸ்பாபுகளை -காரணங்களை படைப்பவன். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ஒரு பொருளையும் படைப்பான். அந்தப் பொருளுக்குண்டான காரணங்களையும் படைப்பான்.

படைப்பின் அந்தப் பொருள் இல்லாமலும்,காரணம் இல்லாமலும் அந்தப் பொருளை உண்டாக்குவதற்குண்டான ஆற்றல் பெற்றவன் அவன்.

ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்றால், அதற்கு தாய்-தந்தை அவசியம் வேண்டும் என்ற காரணத்தை உருவாக்கியவன் அல்லாஹ்.

அல்லாஹ் நாடினால், தந்தை இல்லாமலும் குழந்தையை உருவாக்க முடியும். ஈசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் உருவாக்கி காட்டினான்.

மனிதனால் ஸபப் இல்லாமல் செய்ய முடியாது. ஸபபை படைத்த அல்லாஹ் ஸபப் இல்லாமல் செய்வான்.

மனிதனுடைய வாழ்வாதாரம், அவனுடைய வாழ்க்கை, ஒரு அமைப்பில் செல்ல வேண்டும் என்பதற்காக, அல்லாஹ் இந்த ஸபபுகளை படைத்தானே தவிர, அவனுக்கு இந்த ஸபபு இல்லை என்றால், செயலை செய்ய முடியாது என்பதற்காக அல்ல.

இதை மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம், ஸபபை கையாள வேண்டும். ஆனால், நம்பிக்கை, தவக்குல் அல்லாஹ்வின் மீது இருக்க வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் என்னை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன், எந்த சூழ்நிலையிலும் எனக்கு உணவளிக்க அவன் பொறுப்பேற்று இருக்கிறான் என்ற ஆழமான அழுத்தமான உயர்ந்த நம்பிக்கைதான் ஒரு முஃமினின் நேரான வழியில் சரியான பாதையில் உயர்ந்த நோக்கத்தில் அவனை அழைத்துச் செல்கிறது. அவனை உறுதிபட நிலைத்திருக்கச் செய்கிறது.

இந்த நம்பிக்கை ஒரு காஃபிருக்கு கிடையாது. ஒரு சிலை வணங்கிக்கு இருக்காது. அவன் வாயில் சொல்லுவான். உணவளிப்பவன் யார் என்று கேட்டால், ஆண்டவன் என்று சொல்லுவான். கடவுள் என்று சொல்லுவான்.

ஆனால், அவனுக்கு வாழ்வாதாரத்தின் தேவை வெறி என்று ஏற்பட்டுவிட்டால், எதை வேண்டுமானாலும் அவன் செய்ய ஆரம்பித்து விடுவான். ஆனால், ஒரு முஸ்லிமால் அப்படி நடக்க முடியாது.

அந்த அடிப்படையில், அல்லாஹு சுபஹானஹு தஆலா, இந்த வாழ்வாதாரத்திற்கு என்று அவன் அமைத்துக் கொடுத்த இந்த வாழ்க்கை பாதைகளில் வாழ்வாதாரத்திற்கு உண்டான வழிகளில் ஒன்றுதான் வியாபாரம் என்பது, தொழில்துறை என்பது. இதெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்திய வாழ்வாதாரங்களில் ஒன்று.

அந்த வாழ்வாதாரங்களில் வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ்வுடைய மார்க்கம் என்ன சொல்கிறது? அல்லாஹ்வுடைய வேதம் என்ன சொல்கிறது? வியாபாரத்தின் சிறப்பு என்ன? வியாபாரத்தின் ஒழுக்கங்கள் என்ன? வியாபாரத்தை எப்படி முஸ்லிம்கள் செய்ய வேண்டும்? எப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தை செய்யக்கூடாது? என்பதைப் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வியாபாரம் மார்க்க அடிப்படையில் இதில் ஒரு சிறப்பம்சம் ஒன்று இருக்கிறது.

மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள்: வியாபாரம் செய்யும்போது மனிதனுக்கு தவக்குல் ஏற்படுகிறது. தவக்குல் முஃமின்கள் உடைய குணங்களில் உயர்ந்த குணம்.

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

தவக்குல் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 159)

தவக்குல் என்பது, அல்லாஹ்வை சார்ந்திருப்பது, அல்லாஹ்வை நோக்கி இருப்பது, அல்லாஹ்வின் மீது உள்ளத்தின் பாரத்தை சுமத்தி, உடலால் உழைப்பது.

எந்த நிலையில் இருந்தாலும், எனக்கு என்னுடைய கூலி கிடைத்து விடும் என்று அல்லாஹ்வை நம்பி இருக்க வேண்டும்.

ஒரு வியாபாரியை பொருத்தவரை, யா அல்லாஹ்! என்னுடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்! எனக்கு இந்த வியாபாரத்தில் பரக்கத்தை கொடு! நீ நாடினால் தான் எனக்கு இதில் லாபம் கிடைக்கும், நீ நாடவில்லை என்றால், எனக்கு நஷ்டம் ஆகிவிடும் என்று அல்லாஹ்வின் பக்கம் அவன் திரும்பியவனாகவே இருப்பான்.

கண்டிப்பாக இதுதான் முஸ்லிம் வியாபாரிகளுக்குண்டான முதல் அழகாக இருக்க வேண்டும்.

அவருடைய நம்பிக்கை முழுக்க அல்லாஹ்வின் மீது மட்டும் இருக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ، لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ، تَغْدُو خِمَاصًا، وَتَرُوحُ بِطَانًا»

நீங்கள் அல்லாஹ்வை முழுமையாக சார்ந்திருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான்.

அந்தப் பறவைகள் பசியோடு காலியான வயிற்றுடன் வெளியே செல்கின்றன, மாலையில் வரும்போது வயிறு நிரம்பி வருகின்றன.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4164, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

எந்த ஒரு பறவையாவது பட்டினியாக திரும்புகிறது என்று எங்கேயாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களா?கண்டுபிடிக்கவே முடியாது.

பறவைகள் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அதிகாலையில் புறப்படுகின்றன.தனது உணவுகளை தேடி அவை பயணிக்கின்றன.அவற்றில் எந்தவிதமான சிரமத்தையும் அவை பார்க்கவில்லை.

பிறகு,அவை மாலையில் திரும்ப வீட்டிற்கு வரும்பொழுது,அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக வயிறு நிரம்ப வருகின்றன.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகப்பெரிய ஒரு எதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறார்கள்.

தவக்குல் -அல்லாஹ்வை சார்ந்திருப்பது என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்,சோம்பேறியாக இருந்து கொண்டு,உழைக்காமல் வேலைவெட்டி இல்லாமல் இருந்து கொண்டு,அல்லாஹ் கொடுப்பான் என்று நம்பி இருப்பதல்ல தவக்குல் என்பது.

அவன் கண்டிப்பாக பொய் சொல்கிறான். தன்னை ஏமாற்றி கொள்கிறான்.

உன் மீது உழைப்பை அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் பறவைகளை உதாரணமாக சொல்கிறார்கள்.

பறவைகளுக்கு அல்லாஹ் உணவளிக்கிறான். அதற்காக அவை கூட்டில் இருப்பதில்லை. பறவைகள் உணவை தேடி காலையில் புறப்படுகின்றன. பிறகு, அவை வயிறு நிரம்ப திரும்புகிறது என்று சொன்னார்கள்.

நீங்கள் இப்படி அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து ரிஸ்க்கை தேடி பயணியுங்கள். உங்களது இல்லங்களை விட்டு வெளியேறுங்கள்.

எப்படி விவசாயி, விதையை விதைத்து விட்டு, அதிலிருந்து மகசூலை எதிர்பார்க்கிறான். எந்த ஒரு விவசாயவது பூமியில் எதையும் விதைக்காமல் அல்லாஹ் கொடுப்பான் என்பதாக தனது நிலத்திலிருந்து தானியங்கள் விளைவதை எதிர்பார்ப்பானா?

அப்படி எதிர்பார்ப்பவனை என்னவென்று நாம் சொல்லுவோம்?

அன்பானவர்களே! இப்படித்தான் இன்று சிலர், வேலைக்கு செல்ல மாட்டார்கள். தொழில் செய்ய மாட்டார்கள். வீட்டில் சோம்பேறியாக இருந்து கொண்டு, அல்லாஹ் ரிஸ்க்கை கொடுப்பான் என்று சொல்லுவார்கள். இவர்களும் அந்த விவசாயியும் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ், இந்த தவக்குலைப் பற்றி கூறுகிறான்:

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் 65 : 3)

இந்த வியாபாரத்தை பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லும்பொழுது, அவனுடைய கிருபை என்று சொல்கிறான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:

وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ

வேறு சிலர்,அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும். (அல்குர்ஆன் 73 : 20)

இந்த வசனத்தில் முஃமின்களை, மூன்று வகையான கூட்டமாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.

முஃமின்களின் ஒரு கூட்டம், அவர்கள் இரவு நேரத்தில் தொழுது கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கூட்டம், அல்லாஹ்வுடைய பாதையில் ரிஸ்க்கை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளை தேடுகிறார்கள் குறிப்பிடுகின்றான்.

ஒருவர், ஹஜ்ஜுக்காக செல்கிறார். அந்த ஹஜ் உடைய பயணத்தில் அல்லது ஹஜ் முடித்ததற்கு பிறகு வியாபாரம் செய்யலாமா என்று சொன்னால், அவர் வியாபாரம் செய்வதை அல்லாஹ் அனுமதித்தது இருக்கிறான்.

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ

(ஹஜ்ஜூ பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது.(அல்குர்ஆன் 2 : 198)

மேலும், அல்லாஹ் இந்த வியாபாரத்தைப் பற்றிக் கூறுகிறான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9) فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!) (ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.(அல்குர்ஆன் 62 : 9,10)

வசனத்தின் கருத்து : இந்த ஜும்ஆ உடைய தினத்தில் ஜும்ஆ விற்காக அதான் சொல்லப்பட்டு விட்டால் நீங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு வாருங்கள்.

அல்லாஹ்வின் நினைவின் பக்கம் விரைந்து வாருங்கள் என்று கட்டளை இடுகின்ற அல்லாஹுதஆலா அதே நேரத்தில் தொழுகை முடிந்து விட்டால், அல்லாஹ்வின் அருளை –பொருளாதாரத்தை தேடுங்கள் என்று சொல்கிறான்.

ஒரு எதார்த்தமான ஒரு நடுநிலையான ஒரு நிதானமான தீனை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.

அன்பானவர்களே! இங்கே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றான். அல்லாஹ்வை நெருங்குவதற்கு வணக்க வழிபாடுகளை மட்டும் அல்லாஹ் நமக்குத் தரவில்லை.

நம்முடைய ரப் உடைய மிகப்பெரிய அருள், நீ வணங்கினால்தான் நான் உனக்கு கிடைப்பேன், எனது அன்பு உனக்கு கிடைக்கும் என்று அவன் விதியாக்கவில்லை.

வணக்க வழிபாட்டு நேரத்தில் என்னை வணங்கு, வழிபாட்டுக்கு என்று நான் உனக்கு நேரத்தை குறிப்பிட்டு உள்ளேன், அந்த நேரத்தை எனக்காக நீ ஒதுக்கி விடு, அந்த நேரத்தில் வேறு ஒரு வேலை நீ வைத்துக் கொள்ளாதே.

முஃமின்களை பற்றி அல்லாஹ் வர்ணிக்கும்போது சொல்கிறான்:

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24 : 37)

இதுதான் ஒரு முஃமினுக்குண்டான அழகு. அவருடைய உடல் உறுப்புகளால் அவன் தொழில் இருப்பான். அவளுடைய உள்ளம் அல்லாஹ்வுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லாஹ்வை மறக்காது. அவருடைய உள்ளத்தில் துன்யா ஏறாது. அவன் உடலால் துன்யாவில் இருப்பான். ஆனால், அவனுடைய உள்ளம் அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்டிருக்கும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகாக சொன்னார்கள்:

وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ

அவனுடைய உள்ளம் பள்ளியில் தொங்கவிடப்பட்டிருக்கும்.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.

அவன் மனைவியோடு இருப்பான்.பிள்ளைகளோடு இருப்பான்.குடும்பத்தில் இருப்பான் தொழில் துறையில் இருப்பான்.ஆனால்,அவருடைய கல்புமஸ்ஜிதில் இருக்கும்.தொழுகை நேரம் வந்தவுடன்,இந்த துன்யாவை மறந்து விடுவான்.

இதுதான்,ஒரு தொழுகையை நிலை நிறுத்தக்கூடிய ஒரு முஃமின் உடைய அடையாளம்.உலகத்தின் எந்த லாபமும் உலகத்தின் எந்த நஷ்டமும் உலகத்தின் எந்த ஒரு சூழ்நிலையும் ஒரு முஸ்லிமை அவனுடைய தொழுகையிலிருந்து திருப்பி விடாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதத்துக்கு என்று நேரத்தை விதித்து விட்டான்.அந்த நேரத்தில் இபாதத்தை தவிர, வேறு எதுவும் செய்யக் கூடாது.

அதற்குப் பிறகு, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நேரத்தை உங்களுக்கென்று ஒதுக்கி விடுகின்றான்.மீதி உள்ள நேரத்தை உங்களுக்கு என்று ஓய்வுக்காக, மனைவி மக்களுக்காக, உங்களுடைய தொழில் துறைக்காக, வாழ்வாதாரத்திற்காக, அல்லாஹ் உங்களுக்கு அனுமதி மட்டும் அளித்ததில்லை, பல நேரங்களில் அதை கடமையாகவும் ஆக்கியிருக்கின்றான்.

அதற்காக நமக்கு நன்மையும் தருகிறான். எப்படி தொழுகையில் நின்று அல்லாஹ்வை வணங்கி நன்மையை தேடுகின்றோமோ, அதுபோன்று வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைத்து உழைக்கக்கூடிய உழைப்பிற்கு, அதில் நாம் படக்கூடிய சிரமங்களுக்கு நன்மைகளை அல்லாஹ் வாக்களிக்கின்றான்.

இதற்குமேல் அல்லாஹ்வுடைய அருளை எங்கிருந்து நாம் வர்ணிக்க முடியும்? யோசித்துப் பாருங்கள்.

உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அழகாக இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள்;

எனக்கு மரணம் இந்த நிலையில் ஏற்பட வேண்டும் என்று நான் விரும்பினால், அதில் முதலாவதாக, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிகாத் செய்துகொண்டிருக்கும் போது எனக்கு மரணம் வரவேண்டும் என்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்.

இரண்டாவதாக, நான் எனது குடும்பத்திற்காக, எனது பிள்ளைகளுக்காக, வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டிருக்கும்போது, ஹலாலான வியாபாரத்தை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு மரணம் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

இன்று, ஒரு கூட்டம் தவக்குல் என்ற பெயரில் சோம்பேறிகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். வியாபாரம் செய்ய வேண்டாம், தொழில் செய்ய வேண்டாம், ஊர் சுற்றினால் போதும், அல்லாஹ்வுடைய ரிஸ்க்கு தானாக வரும் என்று வாலிபர்களில் ஒரு கூட்டத்தை ஒரு கூட்டம் சோம்பேறிகளாக மாற்றி கொண்டிருக்கிறது.

தவக்குல் என்பதற்கு தப்பான அர்த்தத்தை கொடுத்து, கல்வியின் மீது ஆர்வம் இல்லாதவர்களாக, தொழில் மீது ஆர்வம் இல்லாதவர்களாக, வியாபாரத்தின் மீது நாட்டமில்லாதவர்களாக, உழைப்பின் மீது ஈடுபாடு இல்லாதவர்களாக, ஒரு கூட்டத்தை ஒரு கூட்டம் உருவாக்கி கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஒரு முஃமின், தன்னுடைய குடும்பத்திற்காக உணவளிக்க வேண்டும் என்று கவலைப் படுகின்றான். இந்த கவலைக்காக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்கிறான்.

ஒரு முஸ்லிம், வாழ்வாதாரத்தை தேடவேண்டும். சோம்பேறியாக இருக்கக் கூடாது. அதற்காக கஷ்டப்படுவது மார்க்கப் பற்றுக்கு முரணானது அல்ல.

இன்று சிலர், தக்வாவிற்கு முரணானதாக வியாபாரத்தை எண்ணி வைத்திருக்கிறார்கள். ஒரு ஆலிம் வியாபாரம் செய்தால், அதை தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இபாதத்தின் அர்த்தம் வியாபாரம் செய்யாமல் இருத்தல் அல்ல. கல்வியின் அர்த்தம் வியாபாரம் செய்யாமல் இருத்தல் அல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை விடவா, நாம் இல்மில் உயர்ந்து விட்டோம்? தவக்குலில் உயர்ந்து விட்டோம்? அவர்களை விடவா இபாதத்தில் உயர்ந்து விட்டோம்?

அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களை விட,இபாதத்தில் இல்மில் ஈமானில் தக்வாவில் தவக்குலில் ஒரு உயர்ந்த முஃமினை தேட முடியுமா?

இந்தப் பக்கம் கிலாஃபத் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் கிஃலாபத் உடைய வேலைகளைப் பார்த்துவிட்டு, தன்னிடத்தில் இருந்த சில வியாபார துணிமணிகளை எடுத்துக்கொண்டு கடைத்தெருவிற்கு செல்கிறார்கள்.

ஹலாலான ரிஸ்க்கை தேடி வியாபாரத்திற்காக. உமர் அவர்கள் பார்த்துவிட்டு கலிஃபா எங்கே போறீங்க? என்று கேட்கிறார்கள்.

என்னுடைய குடும்பத்தை நான் எவ்வாறு கவனிப்பேன்? அவர்களுக்கு நான் உணவளிக்க வேண்டாமா?

பிறகு, உமருடைய ஷூராவின் படி, கலிஃபாவிற்கு ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. கலிஃபாவிற்குண்டான மாத சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அன்பானவர்களே! தவக்குல் உடைய அர்த்தம், வியாபாரம் செய்யாமல் உழைக்காமல் இருப்பது என்று சொன்னால், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய செயலுக்கு நீங்கள் என்ன விளக்கம் சொல்வீர்கள்?

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு மிக அழகாக தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள். தவக்குல் உடைய அர்த்தம் வியாபாரத்தை விட்டுவிட்டு தொழில்துறையை விட்டுவிட்டு உழைப்பை விட்டுவிட்டு மஸ்ஜிதில் உட்கார்ந்துகொண்டு இபாதத் செய்வதோ, அல்லது மக்கள் தருவார்கள் என்று நம்பி இருப்பதோ அல்ல.

எனவேதான், அந்த வியாபாரத்தை தேடி அவர்கள் சென்றார்கள்.

இந்த வியாபாரம் அல்லாஹ்விற்கு பிரியமான ஒன்று என்பதை நாம் புரிய வேண்டும். அதனால்தான் அதற்காக சிரமப்படும் பொழுது அல்லாஹு தஆலா பாவத்தை மன்னிக்கிறான்.

அந்த வியாபாரம் செய்யக்கூடிய கூட்டத்தை, இபாதத்தில் இருக்கின்ற கூட்டத்தோடு, ஜிஹாதில் இருக்கின்ற கூட்டத்தோடு அல்லாஹ் சொல்கிறான்.

அத்தோடு குறைஷிகளை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்.

குறைஷிகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கும்போது,அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கொடுத்த நிஃமத்குறித்து சொல்லிக் காட்டுகின்றான்.

குறைஷிகள்! உங்களுடைய வர்த்தகத்திற்காக கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் நீங்கள் பயணம் செய்தீர்கள் அல்லவா? அந்தப் பயணத்தை உங்களுக்கு எளிதாக்கி கொடுத்தவன் யார்? எனவே, அந்த ரப்பை நீங்கள் வணங்க வேண்டும்.

لِإِيلَافِ قُرَيْشٍ (1) إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2) فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (3) الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ

குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக, (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான். (அல்குர்ஆன் 106 : 1-4)

அன்பானவர்களே! ரிஹ்லா என்றால் பயணம். அதுவும் நீண்ட தூர பயணம் செய்வதைத்தான் ரிஹ்லா என்று சொல்வார்கள்.

அல்லாஹு தஆலா கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் நீங்கள் தொழிலுக்காக பயணம் செய்வதை அல்லாஹ் உங்களுக்கு லேசாக்கி கொடுத்தது மட்டுமல்ல, அந்தப் பயணத்தின் மீது உங்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தினான்.

அப்படித்தான் ஒவ்வொரு நல்ல, உணர்வுள்ள சோம்பேறித்தனம் இல்லாத, உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உள்ள, ஒவ்வொரு சராசரி மனிதனுடைய உள்ளத்திலும் தொழிலுக்காக வியாபாரத்திற்காக பயணம் செய்வதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுக்கு விருப்பமாக்கி வைத்திருக்கின்றான்.

எனவேதான், நம்மால் பயணம் செய்ய முடிகிறது. நம்முடைய குடும்பத்தை விட்டு, நம்முடைய சௌகரியங்களை விட்டுவிட்டு, வெளி ஊருக்கு வியாபாரத்திற்காக செல்வது நமக்கு ஏன் இலகுவாகியது என்று சொன்னால், அது அல்லாஹ்வால் நமக்கு இலகுவாக்கப் பட்டுள்ளது.

ஆகவே, அப்படி செல்வது நமக்கு லேசாகவும் விருப்பமானதாகவும் இருக்கிறது. இந்த வசனத்திலிருந்து நாம் உணரக்கூடிய விஷயம் என்னவென்று சொன்னால், இது அல்லாஹ்வுடைய நிஃமத் என்பதின் அடிப்படையிலேயே அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

வியாபாரத்திற்காக பயணம் செய்வது, அல்லாஹ்வுடைய அருளுக்கு முரண்பட்ட ஒன்றாக இருந்திருந்தால், குறைஷிகளுக்கு அந்த விஷயத்தை அல்லாஹ் கண்டிப்பாக சொல்லி இருக்க மாட்டான்.

அதுமட்டுமல்ல, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ»

ஒரு உண்மையான நேர்மையான வியாபாரி,நபிமார்களுடன் சித்திக்களுடன் ஷகீத்களோடு இருப்பார்.

அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1209, தரம் : ஹசன் (திர்மிதி), ளயீஃப் (அல்பானி)

வியாபாரம் செய்பவர்கள் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான குணம், உண்மையான வியாபாரம், பொய் பேசாத வியாபாரம்.

இன்று, முஸ்லிம்களே பொய் சொல்கிறார்கள். இது தான் மிகப்பெரிய வேதனை.மறுமையை நம்பாத, குர்ஆன் சுன்னாவை நம்பாத, இந்த மார்க்கத்திற்கு வெளியில் இருக்கின்ற ஒரு காஃபிர் பேசுகிறான் என்று சொன்னால், அது வேற விஷயம்.

இன்று, காபிர்களே உண்மையாக வியாபாரம் செய்ய வேண்டும், அப்போதுதான் வியாபாரத்தில் நிலைத்திருக்க முடியும் என்று முன்னேறிக் கொண்டிருக்கின்ற காலத்தில் முஸ்லிம்கள் பொய் சொல்லி வியாபாரம் செய்வதை பார்க்கும்போது மனம் வேதனைப் படுகிறது.

வியாபாரத்தில் கிடைக்கும் சம்பாத்தியம் மிகத் தூய்மையான சம்பாத்தியம். எனவே, அந்த வியாபாரி பொய் பேசாமல் இருக்க வேண்டும்; நம்பிக்கைக்கு மாற்றம் செய்யாமல் இருக்க வேண்டும்; வாக்குக்கு முரணாக நடக்காமல் இருக்க வேண்டும்.

அவர்கள் விற்கும் போது மட்டமானதை விற்க்கக்கூடாது. அதுபோன்று அவர்கள் விற்கும் போது வாங்கக் கூடியவர்களுக்கு மிக அதிகமாக விலையை உயர்த்தி வாங்க மாட்டார்கள்.

அன்பானவர்களே! இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு அழகாக சொன்னார்கள். வியாபாரிகளின் சம்பாத்தியம், சுத்தமான சம்பாத்தியம். அந்த வியாபாரிகள் போய் பேச மாட்டார்கள். நம்பிக்கைக்கு மாற்றமாக நடக்க மாட்டார்கள். வாக்கை மீற மாட்டார்கள்.

அவர்கள் பிறரை வற்புறுத்தி அவர்களுடைய பொருளை மிகக் குறைந்த விலைக்கு வாங்கவும் மாட்டார்கள்.‌ அவர்கள் விற்கும்போது அநியாயமான விலைக்கு விற்கவும் மாட்டார்கள். அவர்கள் கொடுக்க வேண்டிய ஹக்கை அழகான முறையில் கொடுத்துவிடுவார்கள்.

இன்னும் வியாபாரம் தொடர்பான நிறைய விஷயங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, நமது சொல்லிலும், செயலிலும், மேன்மை உடையவர்களாக, அல்லாஹ்வை அஞ்சி, ஹலாலான வியாபாரத்தைசெய்யக்கூடிய நல்ல முஃமின்களாக என்னையும், உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ " (صحيح البخاري- 660)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/