முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 3-3 | Tamil Bayan - 398
முஸ்லிம்களும் வியாபாரமும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஸ்லிம்களும் வியாபாரமும் (அமர்வு 3-3)
வரிசை : 398
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 22-04-2016 | 15-07-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிவனாக,எனக்கும் உங்களுக்கம் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியனாக, அல்லாஹ்வின் அச்சத்தின்படி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
தொடர்ந்து சில வாரங்களாக முஸ்லிம்களும் வியாபாரங்களும் என்ற தலைப்பின் கீழ் அல்லாஹ்வுடைய மார்க்கம் தீனுல் இஸ்லாம் வியாபாரம், பொருளாதாரம், கொடுக்கல் வாங்கல், வர்த்தகம் சம்மந்தமாக நமக்கு கூறியிறிக்கின்ற சட்டங்களை நாம் தெரிந்து வருகின்றோம்.
ஹலால், ஹராமுடைய வரம்புகளை பேணுவது மிக மிக முக்கியான ஒன்றாகும். உங்களுக்கு ஒரு ஹதீஸை கூறுகிறேன், அதிலிருந்து இந்த ஹலால் ஹராம் பற்றிய கொடுக்கல் வாங்களில் மிக பேணுதலாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேண வேண்டும். ஹலாலை மட்டுமே நாம் சம்பாதிக்க வேண்டும்என்பதின் முக்கியத்துவமும் ஹராமை சம்பாதிக்கக் கூடாது, ஹராமில் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது என்பதின் முக்கியத்துவமும் உங்களுக்கு அந்த ஹதீஸிலிருந்து இன்ஷா அல்லாஹ் நன்கு புரிய வரும்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதன் நீண்ட தூரம் பயணம் செல்கிறான். கலைப்படைந்து விடுகிறான் அவனுடைய ஆடைகளும் அவனுடைய தலை முடிகளும் புழுதிப்படிந்து விடுகின்றன. சோர்வடைந்து விடுகிறான்.
அந்த நேரத்தில் அவன் வானத்தை நோக்கி, தனது இரு கரங்களையும் உயர்த்துகிறான். என் இறைவா! எனக்கு உதவி செய். என் இரட்சனே! என்னை பாதுகாத்துக் கொள் என்று மன்றாடுகின்றான்.
(அன்பானவர்களே! அடியான் ஒரு முறை அழைத்தால் எழுபது முறை பதில் சொல்லக்கூடியவன் நமது ரஹ்மான். ஆகவே தான், அவனுக்கென்று வைக்கப்பட்ட பெயர்கள் 'ரஹ்மான்' -அளவற்ற அருளாளன், ரஹீம்' -நிகரற்ற அன்புடையோன், ரஊஃப் -மகா கருணையாளன்.
அந்த ரப்பிடத்தில் பயணத்தின் தனிமை, அந்நிய ஊரில் தனிமை. உதவியின் பால் அவன் மிக தேவையுள்ளவனாக நிற்கின்ற நிலை, இப்படியெல்லாம் இருந்தும் அவன் யா ரப்பு, யா ரப்பு என்று அழைத்துக் கொண்டிருந்தும் கூட, நபியவர்கள் கூறுகிறார்கள:
يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟
அவருடைய பிரார்த்தனை எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்? இதற்கு காரணம், அவன் சாப்பிட்டது ஹராமாக இருக்கிறது. அவன் குடித்த நீர் ஹராமாக இருக்கிறது. அவன் அணிந்திருக்கின்ற ஆடை ஹராமாக இருக்கிறது. அவனுக்கு எப்படி பதில் கொடுக்கப்படும்? அவனுடைய துஆ எப்படி அங்கீகரிக்கப்படும்? (1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1015.
இந்த ஹதீஸை கொஞ்சம் நன்கு கவனித்து ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். உடை ஹராம் என்றால், நாம் அணிந்திருக்கக்கூடிய ஆடை பட்டு ஆடையல்ல,அனுமதிக்கப்பட்ட ஆடை.
உணவு ஹராம் என்றால், நாம் சாப்பிடுகின்ற உணவு அல்லாஹ் அனுமதித்த உணவு வகைகளை சாப்பிடுகிறோம். அல்லாஹ்வுடைய பெயர் கூறி அறுக்கப்பட்ட மாமிசங்களை சாப்பிடுகிறோம்.
குடிப்பு ஹராம் என்றால், அல்லாஹ் அனுமதித்த தண்ணீரை தான் குடிக்கிறோம்.
எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை கூறினார்கள், எந்த அர்த்தத்தில் கூறினார்கள்?
எந்த சம்பாத்தியத்தைக் கொண்டு அவன் உடை வாங்கினானோ,அந்த உடை ஹலாலான உடையாக இருந்தாலும்,எந்த வருவாயைக் கொண்டு அவன் அந்த உணவை சேகரித்தானோ, சம்பாதித்தானோ, சாப்பிட்டானோ, குடிக்கின்ற நீர் அது ஹலாலான நீராக இருந்தாலும் அந்த வருவாய் ஹராமாக இருக்கிறது.
அவனுடைய வியாபாரம் ஹராமாக இருக்கின்ற காரணத்தால் அவன் அணிந்திருக்கின்ற ஆடை அவனுக்கு ஹராமாக இருக்கிறது. அவன் சாப்பிடுகின்ற உணவு ஹலாலாக இருந்தாலும் அந்த உணவு அவனுக்கு ஹராமாக ஆகி விடுகிறது. அவன் குடிக்கின்ற அந்த நீர் அல்லாஹ் ஏற்படுத்திய ஹலாலான நீராக இருந்தாலும் அவனுக்கு அது ஹராமாக ஆகி விடுகிறது. அவனுடைய வருமானம் ஹராமாக இருக்கின்ற காரணத்தால்.
இந்த ஹதீஸை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கெல்லாம் புரியவரும். வியாபாரத்தில், கொடுக்கல் வாங்களில் முஸ்லிம்கள் ஹலால் ஹராமை எந்தளவு பேண வேண்டுமென்று.
இன்னுமொரு ஹதீஸை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
ஹஜ்ஜிற்கு செல்லக்கூடிய, உம்ராவிற்கு செல்லக்கூடிய ஒரு புனித பயணி. அவர் முதல் முதலாக தனது இஹ்ராமை அணிந்து மீக்காதில் இருந்து தல்பியா ஓதுவார். அந்த தல்பியாவில் அவர் கூறுவார்:
ரப்பே! நான் உன்னிடத்தில் வந்துவிட்டேன். உனக்கு இணைதுணை இல்லை என்று அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு உம்ரா, ஹஜ்ஜுடைய பயணிகள் அவர்கள் தல்பியா கூறும்பொழுது அல்லாஹ்வின் புறத்திலிருந்து பதில் சொல்லப்படுகிறது.
அப்படி பதில் சொல்லப்படும்பொழுது,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள்.
யாருடைய வருமானம் ஹலாலாக இருந்து, அந்த ஹலாலான வருவாயிலிருந்து ஹஜ், உம்ராவுக்கு வருகிறாரோ அவர் தல்பியா கூறும்பொழுது சொல்லப்படும்;உனது தல்பியா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, உனது வருகை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்பதாக.
யாருடைய வருமானம் ஹராமாக இருந்து, தடுக்கப்பட்ட வழிகளில் இருந்து, அல்லாஹ் அனுமதிக்காத வழியில் சம்பாதித்த சம்பாத்தியங்களிலிருந்து அவர் ஹஜ், உம்ராவிற்கு வந்திருந்தால் அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து சொல்லப்படும்;உன்னுடைய தல்பியா நிராகரிக்கப்பட்டுவிட்டது, உனது தல்பியா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதாக.(2)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் அவ்சத், எண் : 5228.
ஆகவே, நம்முடைய வணக்க வழிபாடுகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால்,ஹலால்ஹராமுடைய பேணுதல் நமக்கு மிக முக்கியம். ஆகவே தான், இந்த தலைப்பை ஜும்ஆவில் எடுத்து நாம் பேசுகிறோம்.
அன்பானவர்களே! கடந்த ஜும்ஆவில் நாம் பேசியதுடைய சுருக்கம் என்னவென்றால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கப்பட்ட வியாபாரங்களை பற்றி, ஹராமான வியாபாரங்களை பற்றி, நமக்கு அறிவுரை கூறும்பொழுது, முதலாவதாக ஒரு வியாபாரி, கஸ்டமரிடத்தில் ஒரு பொருளை விற்கும்பொழுது, விற்பதற்குரிய அந்த பேச்சு வார்த்தை முடிந்து விடும்பொழுது, அந்த முந்திய வியாபாரத்தை கெடுக்கும் விதமாக நீங்கள் அந்த கஸ்டமரிடத்தில் வியாபாரம் செய்யாதீர்கள்.
இங்கே ஒரு அழகான வார்த்தையை நபியவர்கள் கூறுவதை கவனியுங்கள். தனது சகோதரனின் வியாபாரத்தின் மீது மேல் வியாபாரம் இவர் செய்ய வேண்டாம்.
«لَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ»
ஆகவே, ஒரு வியாபாரி ஒருவரிடத்தில் ஒரு பொருளை விற்பதற்குரிய அந்த பேச்சு வார்த்தையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது,குறுக்கே சென்று என்னிடம் நீங்கள் வியாபாரம் செய்யுங்கள்,அவரை விட குறைவாக நான் உங்களுக்கு தருகிறேன், அவரை விட சிறந்த பொருளை நான் உங்களுக்கு தருகிறேன் என்று இப்படி வியாபாரத்தில் குறிக்கீடு செய்யாதீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்த ஹதீஸை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூலில் நாம் பார்க்கிறோம்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1412.
அதுபோன்று,மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
ஒரு கஸ்டமர் ஒரு பொருளை வாங்குவதற்காக விருப்பப்பட்டு,அந்த பொருள் யாரிடத்தில் இருக்கிறதோ அவரை அணுகி,அந்த பொருளை வாங்குவதற்குண்டான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதற்கு பிறகு,அவரை முறித்து குறிக்கிட்டு நீங்கள் அந்த பொருளை வாங்குவதற்காக வியாபாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தாதீர்கள். (3)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1413.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிம் பேசிக் கொண்டிருக்கக்கூடிய வியாபாரத்தில் குறுக்கிட்டு அந்த பொருளை தான் வாங்குவதற்காக முயற்சி செய்ய வேண்டாம் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்திருக்கிறார்கள்.
இது போன்று இன்னொரு விஷயத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். பொதுவாக இந்த வஞ்சக புத்தியும், சூழ்ச்சி புத்தியும் உள்ளவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
உண்மையில் ஒரு பொருளை வாங்குவதற்கும் ஒரு பொருளை விற்பதற்கும் அவர்களுக்கு எந்த விதமான ஆசை இருக்காது.
வாங்குவதற்குரிய எண்ணம் இல்லாமலேயே பொருளுடைய விலையை உயர்த்துவது. இதை தான் மார்க்கத்தில் 'நஜ்ஷ்' என்று சொல்லப்படும்.
அதுபோன்றுதான் வாங்குவதற்குரிய எண்ணம் இல்லாமலேயே பொருளுடைய விலையை மட்டம் தட்டுவது. இந்த இரண்டும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது.
உங்களுக்கு ஒரு பொருளை வாங்க வேண்டுமென்ற தேவை இருக்கிறதா? அந்த பொருளை தேடுங்கள். அந்த பொருளை வாங்க வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டதா? அதற்குரிய விலையை பேசுங்கள்.
அப்படியில்லாமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காகவே விலையை ஏற்றுவது. ஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு கடையில் நின்று கொண்டிருக்கும் பொழுது,அப்போது இன்னொருவர் வருகிறார். அவருக்கு உண்மையிலேயே அந்த பொருளை வாங்க வேண்டுமென்ற எந்த தேவையும் இருக்காது.
ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருளை பேசிக் கொண்டிருந்தால், இது என்ன ஆயிரம் ரூபாய்க்கு இதை தருகிறீர்களே?இது ஆயிரத்தி ஜநூறு ரூபாய்க்கு போகுமே,இவ்வளவு அழகான அருமையான பொருளாச்சே, இது கிடைப்பதே அரிதாக இருக்கிறதே,இதை கொடுங்கள். இதை நான் ஆயிரத்தி ஜநூறு ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்.
இந்த மாதிரியாக விலையை உயர்த்துவதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள்.
நீங்கள் வியாபாரங்களில் வாங்கும் எண்ணம் இல்லாமல் போட்டிப் போட்டுக் கொண்டு விலைகளை உயர்த்தாதீர்கள்.
இது போன்று நஜ்ஷ் -விலை உயர்த்தக் கூடிய அந்த வஞ்சகக்காரர்களை பற்றி பேசும்பொழுது,யார் இப்படி விலையை உயர்த்துகிறார்களோ அவர் வட்டியை சாப்பிட்டவர், மோசடிக்காரர் என்று கூறினார்கள். (4)
அறிவிப்பாளர் : இப்னு அபீ அவ்ஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2675.
தனது செல்வத்தை வட்டிக்கு விட்டு அந்த வட்டியை சாப்பிடுவது எவ்வளவு பயங்கரமான பாவமோ அது போன்ற பாவம் தான் இது.
நஜ்ஷ் -விலையை உயர்த்திவிட்டு அதற்கு பிறகு அந்த வியாபாரியிடமிருந்து ஏதாவதொரு தொகையை தனக்கு ஸன்மானமாக பெருவதை வட்டி சாப்பிடுவதற்கு உதாரணமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
ஒரு இஸ்லாமியரை பொறுத்தவரை,அவர்கள் யாரோடு தொழில் செய்தாலும் சரி, வியாபாரம் செய்தாலும் சரி,அவர்கள் ஹலாலான முறையில் தான் செய்ய வேண்டும், மார்க்க வரம்புகளை மீறக்கூடாது. முஸ்லிமல்லாதவர்களிடத்தில் வட்டி வாங்களாமா? கூடாது. முஸ்லிமல்லாதவர்களை ஏமாற்றலாமா? ஏமாற்றக் கூடாது. முஸ்லிமல்லாதவர்களை வஞ்சிக்கலாமா? வஞ்சிக்கக்கூடாது.
சிலர்,ஹதீஸ்களில் முஸ்லிம் என்று வந்திருப்பதைக் கொண்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு தீங்கு செய்தால் அல்லாஹ் நம்மிடத்தில் கேள்வி கேட்கமாட்டான் என்பதாக தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் யூதர்களைப் போல. யூதர்கள் தான் இப்படி கூறிக் கொண்டிருந்தார்கள்.(பார்க்க அல்குர்ஆன் 3 : 75)
யூதர்கள் அல்லாத மற்ற மற்ற சமூகத்தினர் மீது நாம் என்ன அநியாயம் செய்தாலும் சரி,அல்லாஹ் நம்மிடத்தில் கேட்கமாட்டான். நாம் மேல் ஜாதியினர் அவர்கள் மட்டமானவர்கள். அவர்கள் மீது நாம் என்ன அக்கிரமம் அநியாயம் செய்தாலும் சரி,அது குறித்து நம்மிடத்தில் விசாரிக்கப்படாது என்று யூதர்கள் எண்ணி வைத்திருந்தார்கள், அந்த எண்ணம் சில முஸ்லிம்களிடத்தில் இருக்கிறது.
அல்லாஹ்வை அவர்கள் பயந்துக் கொள்ளட்டும். கண்டிப்பாக, யாருக்கு எந்தளவு அநியாயம் செய்தாலும் சரி, அதற்குரிய விசாரனை மறுமையில் கண்டிப்பாக உண்டு. அல்லாஹ்வின் நீதி மன்றத்திலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.
பாதிக்கப்பட்டவர் இறைநிராகரிப்பாளராக, இணைவைப்பவராக இருந்தாலும் கூட அல்லாஹ்வின் புறத்திலிருந்து அங்கே கண்டிப்பாக நீதி வாங்கப்படும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நீதியை செலுத்தாமல் அதற்குரிய தண்டனையையோ அல்லது அதற்குரிய கூலியையோ அல்லாஹ் கொடுக்கமாட்டான்.
அன்பானவர்களே! இதைப்பற்றி தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
«مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ»
யார் ஒருவர் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அநியாயமான முறையில் பொய் சத்தியம் செய்து எடுத்துக் கொள்வாரோ, அல்லாஹ் அவருக்கு நரகத்தை கட்டாயமாக்கி விடுவான். அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்கி விடுவான்.
அப்போது இதை செவிமடுத்துக் கொண்டிருந்த ஒரு நபித்தோழர் ரஸூலுல்லாஹ்விடத்தில் பயந்து நடுங்கி கேட்கிறார். அல்லாஹ்வுடைய தூதரே! ரொம்ப அற்பமான பொருள் அப்படி இருந்தாலுமா அவருக்கு சொர்க்கம் ஹலாலாகி விடும். அவரிடத்தில் இபாதத் இருக்கிறது, வேறு எத்தனையோ பேணுதல்கள், அமல்கள் இருக்கின்றன.
அவர் செய்த அந்த குறை தனது சகோதரனிடமிருந்து எடுத்துக் கொண்ட சொத்து, செல்வம் ரொம்ப அற்பமாக இருந்தாலுமா? என்று கேள்வி கேட்டபொழுது நபியவர்கள் கூறினார்கள்:
«وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ»
நீங்கள் பல் துலக்கக்கூடிய அராக்கு மரத்தினுடைய ஒரு குச்சியாக இருந்தாலும் அதை தனது சகோதரனிடமிருந்து அவருடைய விருப்பம் அல்லது வியாபாரம் இல்லாமல் அநியாயமாக எடுத்துக் கொண்டால் அதற்கும் இந்த தண்டனை தான்.
அறிவிப்பாளர் : அபூ உமாமாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 137, 218.
அல்லாஹ் பாதுகாப்பானாக! இங்கே தான் இமாம் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஒரு சம்பவத்தை நாம் குறிப்பிட்டோம்.
தனது சக மாணவரிடமிருந்து எழுதுவதற்காக வாங்கிய சாதாரணமாக தீட்டப்பட்ட ஒரு குச்சியை திரும்ப கொடுக்க மறந்து விட்டார்கள். தமாஸ்கஸ் நகரத்திலிருந்து இராக்கிற்கு வந்து விட்டார்கள்.
பிறகு அங்கே திறந்து பார்த்த பொழுது,தான் படித்த புத்தகங்களோடு அந்த குச்சி இருப்பதைப் பார்த்தார்கள்.
அது ஒரு சாதாரண மூங்கில் மரத்திலிருந்து எழுதுவதற்காக தீட்டப்பட்ட ஒரு குச்சி. அந்த காலத்தில் ஒரு திர்ஹத்திற்கு கூட அதற்கு மதிப்பிருந்திருக்காது. அந்த குச்சியை திரும்ப தருவதற்காக இராக்கிலிருந்து நடை பயணமாக தமாஸ்கஸிற்கு செல்கிறார்கள்.
அந்த தமாஸ்கஸின் ஜாமியா மஸ்ஜிதில் அந்த மாணவனை தேடி அந்த குச்சியை திரும்ப ஒப்படைத்து விட்டு, அவர்கள் இராக் வருகிறார்கள் என்றால், நமது முன்னோர்களுடைய பேணுதலைப் பாருங்கள்.
இன்று,நூறு கணக்கில் இருந்த கொள்ளைகள்எல்லாம் ஆயிரங்களை தாண்டி இலட்சங்களை தாண்டி கோடிகளை தாண்டிக் கொண்டிருக்கின்றன.
இன்னும் சிலரை பொறுத்தவரை,தனி மனிதருடைய சொத்தில்தான் நாம் அநியாயம் செய்யக்கூடாது, தனி மனிதருடைய செல்வத்தை தான் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது, பொது சொத்துகளாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் அதை நாம் கையகப்படுத்திக் கொள்ளலாம், அதை நாம் தவறான முறையில் எப்படியாவது ஒரு சூழ்ச்சி செய்து அதை அனுபவிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
அவர்களும் இந்த எச்சரிக்கைக்கு ஆளானவர்கள். பொது சொத்துக்களை நிர்வகிக்கக்கூடியவரை பொறுத்தவரை இதை விட கடுமையான எச்சரிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.
அதுபோன்றுதான், இந்த வியாபாரத்தில் அளவை, நிறுவை என்று ஒன்று இருக்கிறது. தானியங்களை விற்கும் பொழுது அல்லது துணிமனிகளை விற்கும்பொழுது இப்படி அளந்து கொடுக்கப்படக்கூடிய, நிறுத்து கொடுக்கப்படக்கூடிய இந்த பொருள்களை விற்கும் பொழுது மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும்.
தன் புறத்திலிருந்து பெருந்தன்மையாக இருக்க வேண்டும். தனது லாபத்திலிருந்து விட்டுக் கொடுக்கக்கூடிய அளவிற்கு அவருடைய அளவையும் நிறுவையும் இருக்க வேண்டும்.
ஒரு மீட்டர் என்றால் அதை விட ஒரு இன்ஜ் இரண்டு இன்ஜ் கூட கொடுத்து அதை தன்னுடைய லாபத்திலிருந்து குறைத்துக் கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்.
ஏனென்றால், சில நேரங்களில் நாம் சரியாக அளக்கின்றோம் என்று தெரியும்.உண்மையில் குறைந்து விட்டால், நம் புறத்திலிருந்து குறைவு ஏற்பட்டு விடும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை பார்க்கும் பொழுது குர்ஆனுடைய வசனங்களை பார்க்கும் பொழுது, தொழுகையை விடக்கூடியவனுக்கு அல்லது அந்த தொழுகையில் அலட்சியம் செய்பவர்களுக்கு என்ன ஒரு எச்சரிக்கை சொல்லப்பட்டுள்ளதோ அதே எச்சரிக்கையை தான் அளவையில், நிறுவையில் குறைவு செய்பவர்களுக்கும், மோசடி செய்பவர்களுக்கும் அல்லாஹ்வும் ரஸூலும் கூறுகிறார்கள்.
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4) لِيَوْمٍ عَظِيمٍ (5) يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 83 : 1-6)
இந்த ويلஎன்ற வாசகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய இடங்களைப் பாருங்கள்.
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 107:4-5)
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104 : 1)
வேதத்தில் மோசடி செய்த யூதர்கள் மக்களை குறை கூறி, புறம் பேசி திரிந்திக் கொண்டிருக்கக்கூடிய அந்த மக்களுக்கு உள்ள தண்டனையை,யார் அளவையில் நிறுவையில் குறைவு செய்கிறார்களோ அவர்களுக்கும் அவர்களுக்கும் கூறுகிறான்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ويل-என்ற இந்த வார்த்தைக்கு விளக்கம் குறிப்பிடுகிறார்கள்: ويل என்பது நரகத்தில் உள்ள ஒரு மோசமான இடம். அந்த இடத்தைப் போன்று யா அல்லாஹ்! எங்களை ஆக்கி விடாதே! என்று நரகத்தின் மற்ற பகுதிகளெல்லாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடுகின்றன.
அப்படி என்றால், அந்த இடத்தில் உள்ள தண்டனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்த தண்டனை, யார் அளந்து கொடுக்கும் பொழுது, நிறுத்துக் கொடுக்கும் பொழுது குறைவு செய்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும்.
மேலும்,அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்:
وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
மேலும்,நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.(அல்குர்ஆன் 17 : 35)
இந்த இடத்தில் அல்லாஹ் தஆலா தவ்ஹீதை பற்றி கூறுகிறான். தனக்கு இணை வைக்காதே! நீ முழுமையாக என்னை மட்டுமே வணங்கு என்று சொல்லிக் கொண்டு வருகின்ற வசனங்களின் தொடரில் வியாபாரத்தை பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதை பாருங்கள். தொழில் துறைகளை பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதை பாருங்கள்.
சிலர் தந்திரங்கள் செய்வார்கள்; நிறுத்துக் கொடுக்கும் பொழுது பொருள்கள் வைக்கக்கூடிய அந்த தராசு தட்டுக்கு கீழே ஏதாவது தாரை ஒட்டி வைத்து விடுவார்கள் அல்லது காந்தத்தை வைத்து ஏதாவது இரும்பை வைத்து விடுவார்கள்.இப்படியாக மோசடி செய்வார்கள்.
ஒரு தட்டில் ஒரு கிலோ கல்லை வைத்து விட்டு இன்னொரு தட்டில் அரைக்கிலோ சர்க்கரையை போட்டால் கீழே இறங்கி விடும்.
பிறகு சொல்வார், உங்களுக்காக ஒரு கைப்பிடி கொஞ்சம் அதிகமாக போடுறேன்னு. அதற்கு பிறகு அதை கொண்டு போய் வேறு ஏதாவது சரியான தராசில் நிறுத்துப் பார்த்தால் தான் தெரிய வரும், இருப்பது ஒரு 600, 700கிலோ கூட தாண்டாது.
இப்படிப்பட்ட ஒரு மோசடிக்காரர்களுக்கெல்லாம் இது மிக பயங்கரமான எச்சரிக்கை.
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.(அல்குர்ஆன் : 55:9)
ஆகவே,ஒரு முஸ்லிம் இப்படிப்பட்ட ஈனமான ஒரு அசிங்கமான செயல்களை செய்யக்கூடாது. இந்த செயலை செய்பவர் அல்லாஹ்விடத்திலும் தரம் குறைந்தவர், மக்களிடத்திலும் தரம் குறைந்தவர்.
ஒரு மோசடி செய்யக்கூடிய ஏமாற்றக்கூடிய ஒரு வியாபாரியை பொறுத்த வரை அவரை அல்லாஹ்வும் சபிக்கின்றான்; மக்களும் சபிப்பார்கள்.
அவர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய லாபத்தை சம்பாதித்து பெரிய வீடு கட்டியதாக தெரியும், பெரிய மாளிகை கட்டியதாக தெரியும், பெரிய பெரிய சொத்துகளை வாங்கியதாக தெரியும்.
ஆனால், அவர்களுடைய இறுதி காலத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள் மீது இறக்கிய அந்த சாபம், அவர்கள் மீது சாட்டிய அந்த சோதனை நோயின் வடிவத்தில், குழப்பங்களின் வடிவத்தில் அவர்களுடைய குடும்பத்தில் தென்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
பிறகு தான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் அந்த நோயினுடைய சிகிச்சைக்காக அவர் செலவு செய்தாலும், அந்த பிரச்சனையிலிருந்து விலகுவதற்காக தான் சம்பாதித்த செல்வங்களை எல்லாம் இழந்தாலும் கூட,அந்த பிரச்சனையும் அந்த நோயும் தீர்ந்திருக்காது.
அப்படிப்பட்ட ஒரு கேவலமான ஒரு நிலைக்கு அவன் தள்ளப்படுவது அன்றாட வாழ்க்கையின் எதார்த்தமான உதாரணமாக நாம் பார்க்கிறோம்.
பலர், ஹலாலில் வரக்கூடிய வருமானத்தை தூரமாக வைத்துவிட்டு குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
அதற்கு மக்களை ஏமாற்றுவதை ஒரு பெரிய வழியாக கையாள்கிறார்கள், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்குதான் இப்படி கடுமையான எச்சரிக்கை செய்கிறான்.
யார் அளவையில், நிறுவையில் மோசடி செய்கிறார்களோ, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு ويلஎன்ற நரகத்தின் பகுதியை அவர்களுக்கு முடிவு செய்து வைத்திருக்கிறான்.
அன்பானவர்களே! அதுபோன்று தான் தடுக்கப்பட்ட ஹராமான வியாபாரங்களில் ஒன்று, பொய்யாக சத்தியம் செய்து வியாபாரம் செய்வது.
ஒரு பொருளுடைய விலை ஒரு விலையாக இருக்கும். அதை அவர் ஒரு விலைக்கு வாங்கியிருப்பார். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இன்ன விலைக்கு தான் நான் வாங்கினேன் என்பதாக கொஞ்சம் கூட நாவு கூசாமல் அவர் சத்தியம் செய்வார்.
நூறு ரூபாய்க்கு வாங்கியிருப்பார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன் என்று சத்தியம் செய்வார். வாங்கின விலையை விட எப்படி குறைத்துக் கொடுக்க முடியுமென்று?
அப்போது வாங்க கூடிய மனிதர் சரி, பரவாயில்லை ஒரு ஜம்பது ரூபாய் போட்டு ஜநூற்றி ஜம்பது ரூபாய்க்கு கொடுங்கள். சரி, பரவாயில்லை விற்றால் போதும் என்று ஏதோ பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்த மாதிரி கொடுப்பார்.
அந்த நூறு ரூபாய்க்கு வாங்கிய பொருளில் இவர் நூறு ரூபாய் மேல் லாபம் வைத்திருந்தால் இவருக்கு போதுமானது அல்லது நூற்றி ஜம்பது ரூபாய் வைத்திருந்தால் போதுமானது அல்லது மற்ற செலவுகளையெல்லாம் சேர்த்து ஒன்றுக்கு இரண்டு வைத்து முன்னூறு ரூபாய்க்கு வைத்தால் இவருக்கு அல்ஹம்துலில்லாஹ் பரக்கத்தான லாபமாக இருந்திருக்கும்.
ஆனால், இவர் பொய் சத்தியம் செய்கிறார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன் என்று. இப்போது இவருக்கு இரட்டிப்பு லாபங்கள் கிடைத்ததாக இவர் பூரிப்படைந்திருக்கலாம்.
ஆனால், இவருடைய வியாபாரத்தின் பரக்கத்தை அல்லாஹ் அழித்து விடுவான். அதுமட்டுமா, நரகத்துடைய தண்டனை மறுமையின் தண்டனை மிக பயங்கரமானது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
«ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ»
மூன்று வகையான மக்கள் மறுமை நாளில் அல்லாஹ் தஆலா அவர்களிடத்தில் பேச மாட்டான். அவர்களை பார்க்கமாட்டான், அவர்களை தூய்மை படுத்தமாட்டான். அவர்களுக்கு மிக வலி தரக்கூடிய வேதனை நிச்சயம்என்பதாக கூறிவிட்டு, இப்படிப்பட்டவர்கள் துர்பாக்கியவான்கள், நஷ்டமடைந்துவிட்டார்கள், கேவலப்பட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள்.
இத்தகைய துர்பாக்கியவான்கள் யார்? அல்லாஹ்வுடைய தூதரே! என்று தோழர்கள் கேட்டார்கள்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய அந்த மூன்று நபர்களை பாருங்கள்.
«الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ»
1. தனது கீழ் ஆடையை கரண்டைக்கு கீழ் அணியக்கூடிய ஆண்கள். (அது பெருமையாக இருந்தாலும் சரி,அல்லது சாதாரணமாக இருந்தாலும் சரி. பெருமையாக அணிந்தால் இன்னும் பயங்கரமான தண்டனை இருக்கிறது.)
2. தான் செய்த உதவியை உபகாரத்தை சொல்லிக்காட்டக்கூடியவர்.
3. பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவர்.
அறிவிப்பாளர் : அபூதர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 106, 171.
இப்படி சத்தியம் செய்யக்கூடியவர்களை பொறுத்தவரை,அவர்களுடைய எண்ணம்,இந்த மாதிரி எல்லாம் சொல்லலைனா பொருளை விற்க முடியாது என்று கருதுகிறார்கள்.
இதில் இன்னொரு வகை இருக்கிறது. உதாரணமாரக, ஒரு பொருளை ஜப்பான் பொருள் என்று கூறுவார்கள். அல்லது USA பொருள் என்று கூறுவார்கள்.
எந்த நாட்டுடைய மதிப்பு மக்களுடைய உள்ளத்தில் இருக்குமோ, அந்த நாட்டுடைய பெயரை பயன்படுத்துவார்கள்.
ஆனால், அந்த பொருளோ, வேறு ஒரு மட்டமான நாடுகளிலிருந்து, எந்த நாட்டுடைய பொருளுக்கு மக்களுடைய மத்தியில் மதிப்பு இருக்காதோ, அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும்.
இது ஜப்பான் துணி என்று கூறுவார்கள். இதை ஜப்பானிலிருந்து நேரடியாக நான் இறக்குமதி செய்தேன் என்பதாக பேப்பர்களை எல்லாம் காட்டுவார்கள்.
ஆனால், அதுவோ வேறு ஏதாவது ஒரு கீழ் நாட்டிலிருந்து இறக்கப்பட்டதாக இருக்கும் அல்லது அதனுடைய பெயரில் தவறாக பதிவு செய்திருப்பார்கள். அதனுடைய அசல் தன்மையை மறைத்து விட்டு அதில் வேறொன்றை பதிவு செய்திருப்பார்கள். இப்படி ஏமாற்றுவதும் இதில் தான் அடங்கும்.
ஒரு பொருளை பொய் சத்தியம் செய்து விற்பதென்றால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் என்றுதான் அங்கே அர்த்தம் என்பதாக விளங்கிக் கொள்ளாதீர்கள். உறுதியாக நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் எல்லாமே மார்க்கத்தில் சத்தியமாக தான் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தியாவில் ஒரு வழக்கம் உண்டு. டெல்லியினுடைய பொருளுக்கு ஒரு மதிப்பு, பாம்பேவில் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது.
எலக்ட்ரானிக் சாமான்களோ, ஆடைகளோ அல்லது மற்ற சாமான்களை இவர் வாங்கி வந்தது டெல்லியிலிருந்து வாங்கி வந்திருப்பார். ஆனால், மக்களுக்கு சொல்லும் பொழுது இது டெல்லி சாமான் கிடையாது. சீக்கிரத்திலேயே உடைந்து போகக்கூடிய டெல்லி சாமான் கிடையாது. இது பாம்பேவிலிருந்து வந்த சாமான். இப்போதான் வந்தது, நான் சரக்கு லாரியை கொண்டு போய் இப்போதான் எடுத்து வந்தேன் என்று சொல்வார்.
இவ்வாறு கூறுவதும் இதில் அடங்கும். அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன இந்த வார்த்தையை பாருங்கள்.
«الحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ، مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ»
இப்படி பொய் சத்தியம் செய்யும் பொழுது உனது வியாபார பொருளை அது சீக்கிரமாக விற்க வைத்துவிடும். ஆனால், வியாபாரத்தின் மூலமாக உனக்கு எந்த பரக்கத்தை அல்லாஹ் முடிவு செய்தானோ, அந்த பரக்கத்தை அது அழித்துவிடும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2087.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று மனிதர்களை அல்லாஹு தஆலா பார்க்கமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்தமாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
ஒரு மனிதர், ஒரு பாதையில் அவருக்கென்று ஒரு வீடு இருக்கிறது அல்லது ஒரு நிலம் இருக்கிறது. அங்கே நீர் நிலை ஒன்று கிணறோ, ஆறோ அல்லது தொட்டியோ இருக்கிறது.
அந்த நீரிலிருந்து அவர் பயன்பெற்றுக் கொள்கிறார். மிச்சமாக தண்ணீர் இருக்கிறது. அந்த மிச்ச தண்ணீரை வழிப்போக்கர்கள் பருகுவதற்கோ, தங்களது பயணத்திற்கு எடுத்து செல்வதற்கோ அவர் அனுமதிக்க மறுக்கிறார். இவர் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்குகிறது.
இன்னொரு மனிதர், தன்னுடைய இமாம் மன்னரிடத்தில் பைஅத் செய்கிறார். அவரிடமிருந்து துன்யாவை அனுபவிப்பதற்காக, அந்த மன்னர் இவருக்கு துன்யாவின் செல்வங்களை கொடுத்தால் மன்னரைக் கொண்டு திருப்தியாக இருக்கிறான். துன்யாவின் செல்வங்களை மன்னர் இவருக்கு கொடுக்கவில்லை என்றால் தன்னுடைய பைஅத்தை முறித்துவிட்டு அந்த மன்னரை ஏச ஆரம்பித்து விடுகிறான்.
துன்யாவிற்காக பைஅத் செய்யக்கூடியவர்கள் இவர்களை குறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படிப்பட்ட எச்சரிக்கையை கூறினார்கள்.
மூன்றாவது வகை மனிதன், அஸர் தொழுகைக்குப் பிறகு தன்னுடைய வியாபாரத்தை ஆரம்பிக்கிறார். ஆரம்பித்துவிட்டு சொல்கிறார்; எந்த அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக கூறுகிறேன். இந்த பொருளை இன்ன இன்ன விலை கொடுத்து தான் நான் வாங்கி வந்தேன் என்பதாக.
வாங்க வந்த மனிதன் அதை நம்பி, வாங்கிக் கொண்டு சென்றுவிடுகிறார். இவரையும் அல்லாஹ் மறுமையில் பார்க்கமாட்டான். இவரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தமாட்டான். இவருக்கு மறுமையில் பயங்கரமான வலி தரக்கூடிய வேதனை இருக்கிறது என்பதை கூறிவிட்டு குர்ஆனுடைய வசனத்தை நபியவர்கள் ஓதிகாட்டினார்கள்.(5)
إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 3 : 77)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2358.
அதுபோன்று,இந்த ஹராமான -தடுக்கப்பட்ட வியாபாரங்களில் ஒன்று ஏமாற்றி விற்பது, கலப்படம் செய்து விற்பது.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முறை மதினாவின் கடைத் தெருவில் சென்று கொண்டிருக்கிறார்கள். அங்கே தானியங்களை வியாபாரிகள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது ஒரு அழகான தானிய குவியல்களை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டு அந்த குவியலுக்கு அருகில் சென்று அந்க குவியலுக்குள் தங்களுடைய கரங்களை நுழைக்கிறார்கள்.
நுழைத்து உள்ளே இருந்து தானியத்தின் ஒரு பிடியை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியே எடுக்கிறார்கள். அப்படி எடுத்து பார்த்தால் உள்ளே இருக்கக்கூடிய தானியம் ஈரமாக இருக்கிறது. மேல் இருந்த தானியம் நன்கு காய்ந்து பலபலப்பாக இருக்கிறது.
அப்போது அந்த வியாபாரியை பார்த்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். இந்த வியாபார குவியலின் உரிமையாளரே! இது என்ன செயல்? என்று கேட்கிறார்கள்.
அந்த வியாபாரி பயந்துவிடுகிறார். அவர் உண்மையை கூறுகிறார். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நான் இந்தப் பொருளை கிராமத்திலிருந்து எடுத்து வரும்பொழுது மழை பெய்தது.
அந்த மழையினால் எனது மூட்டைகளில் உள்ள தானியங்கள் நனைந்தன. நான் அந்த தானிய மூட்டையை இங்கே கடைத்தெருவில் வந்து விரித்து கொட்டிய போது,மேலே ஈரமாக இருந்த அந்த தாணியம் கீழே சென்று விட்டது. கீழே நனையாமல் இருந்த தானியம் மேலே வந்துவிட்டது. இதுதான் நடந்ததே தவிர,மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக நான் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார்.
(அதாவது, மழை பொழிய்யும் பொழுது மூட்டையின் மேல் பரப்பில் உள்ள தானியங்கள் நனைகின்றன. அந்த இடத்தை விட்டு அவர் கடந்துவிட்ட பொழுது மழை நின்று விடுகிறது. மேலே ஈரமான உள்ள தானியம் அப்படியே இருக்கிறது. இவர் நனைந்ததை தனியாக கொட்டிவிட்டு காய்ந்த தானியத்தை தனியாக கொட்டிருக்க வேண்டும்.
இவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவராக இருக்கலாம் அல்லது இந்த சட்டம் அவருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர் ஒட்டுமொத்தமாக அந்த சாக்கு மூட்டை கவிழ்த்து விட்ட பொழுது ஈரமாக இருந்த தானியங்கள் உள்ளே சென்று விட்டன. காய்ந்திருந்த தானியம் மேலே வந்துவிட்டன.
இப்போது இந்த தாணிய குவியல்களை பார்க்ககூடிய மனிதர் எல்லாமே காய்ந்த தாணியம் என்று மொத்தமாக அந்த குவியலை வாங்கிச் செல்லும்பொழுது உள்ளே ஈரமாக இருக்கும் மேலே காய்ந்திருக்கும்.
ஈரமாக இருக்கக்கூடிய தானியம் நிறுவையில் கனமாக இருக்கும், எனவே அவர் ஏமாற்றப்பட்டுவிடுவார்.)
இந்த விஷயத்தை சொன்னவுடன் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
முஸ்லிம்களாகிய எங்களை யார் ஏமாற்றுவாரோ, எங்களுடைய சமுதாயத்தை ஏமாற்றுவாரோ அவர் என்னை சார்ந்தவரே அல்ல. எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 101, 164.
அவர் லட்சம் முறை ஸலவாத்து சொன்னாலும் சரி, ஹஜ் உம்ரா செய்தாலும் சரி, பெரிய தாடி வைத்துக் கொண்டாலும் சரி, நிறைய தான தர்மங்கள் செய்தாலும் சரி, அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல.
இப்படி மக்களை ஏமாற்றக்கூடிய வியாபாரிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகக் கடினமான ஒரு வார்த்தையை கூறி எச்சரித்திருக்கிறார்கள்.
அன்பானவர்களே! இன்னும் இதுபோன்று தடுக்கப்பட்ட ஹராமான வியாபாரங்கள், ஒப்பந்தங்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவற்றை கற்று நாம் வியாபாரம் செய்யும்பொழுது நம்முடைய வியாபாரம் ஹலாலாக இருக்கும்.
ஹலாலான வியாபாரம் குறைவாக இருந்தாலும் அதில் பரக்கத் இருக்கும். அந்த ஹலாலான வியாபாரத்தை நமது மனைவிக்கு கொடுக்கும் பொழுது மனைவி நமக்கு கட்டுப்படக்கூடிய நல்ல மனைவியாக இருப்பாள்.
அந்த ஹலாலான வியாபாரத்தை அதன் மூலமாக உணவை வாழ்வாதாரத்தை நமது பிள்ளைகளுக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் நல்ல பிள்ளைகளாக உருவாகுவார்கள்.
ஹராம் உள்ளத்தை மட்டும் கெடுக்கக்கூடியதல்ல, மனிதனின் குணங்களை கெடுக்கக்கூடியது. மனிதனின் ஈமானை கெடுக்கக்கூடியது. தக்வாவை போக்கக்கூடியது. நம்முடைய துஆக்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்காமல் போகக்கூடிய முக்கிய காரணம் ஹராம். நமது வணக்க வழிபாடுகள் நன்மையில்லாமல் அழிந்து போவதற்குரிய முக்கிய காரணம் ஹராம்.
ஆகவேதான், நம்முடைய ஸலஃபுகள் கூறுவார்கள்: பேணுதல்களில் சிறந்த பேணுதல் தஹஜ்ஜத் தொழுவதல்ல, எல்லா நஃபில்களையும் தொழுவதல்ல. அதுவும் பேணுதல் தான். அதுவும் முக்கியமான ஒன்று தான்.
பேணுதலில் மிகப் பெரிய பேணுதல்,ஹராமை விட்டு விலகி இருப்பது. ஹராமான கொடுக்கல் வாங்கல், ஹராமான வர்த்தகம், ஹராமான செயல்களை விட்டு விலகி இருப்பது தான் பேணுதலில் மிகப் பெரிய பேணுதல் என்று நம்முடைய ஸலஃபுகளின் கூற்றின் ஆழத்தை இந்த ஹதீஸ்களை படிக்கும் பொழுதும், இந்த ஆயத்துகளை படிக்கும்பொழுதும் நாம் ஓரளவுக்கு புரிய முடிகிறது.
ஆகவே, கண்ணியத்திற்குறியவர்களே! அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இந்த ஹலாலான வியாபாரத்தைக் கொண்டு நமக்கு பரக்கத் செய்கிறான். மக்களுக்கு மத்தியில் நன்மதிப்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தருகிறான்.
அந்த ஒரு ஹலாலான வருமானத்தை பெற்று, ஹலாலான லாபத்தை பெற்று நன்மைகளை அடையக்கூடிய நன்மக்களாக அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
وحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ " (صحيح مسلم -1015)
குறிப்பு 2)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّقَطِيُّ قَالَ: نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ الْيَمَامِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَرَجَ الرَّجُلُ حَاجًّا بِنَفَقَةٍ طَيِّبَةٍ، وَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، فَنَادَى: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، زَادُكَ حَلَالٌ، وَرَاحِلَتُكَ حَلَالٌ، وَحَجُّكُ مَبْرُورٌ غَيْرُ مَأْزُورٍ، وَإِذَا خَرَجَ بِالنَّفَقَةِ الْخَبِيثَةِ، فَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، فَنَادَى: لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ: لَا لَبَّيْكَ وَلَا سَعْدَيْكَ، زَادُكَ حَرَامٌ وَنَفَقَتُكَ حَرَامٌ، وَحَجُّكَ غَيْرُ مَبْرُورٍ» (المعجم الأوسط -5228)
குறிப்பு 3)
وحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، أَوْ يَتَنَاجَشُوا، أَوْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، أَوْ يَبِيعَ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا، أَوْ مَا فِي صَحْفَتِهَا»، زَادَ عَمْرٌو فِي رِوَايَتِهِ: «وَلَا يَسُمِ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ» (صحيح مسلم - 1413)
குறிப்பு 4)
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا العَوَّامُ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: «أَقَامَ رَجُلٌ سِلْعَتَهُ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِهَا»، فَنَزَلَتْ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] وَقَالَ ابْنُ أَبِي أَوْفَى: «النَّاجِشُ آكِلُ رِبًا خَائِنٌ» (صحيح البخاري- 2675)
குறிப்பு 5)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ، رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ [ص:111] مِنَ ابْنِ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ، وَرَجُلٌ أَقَامَ سِلْعَتَهُ بَعْدَ العَصْرِ، فَقَالَ: وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِهَا كَذَا وَكَذَا، فَصَدَّقَهُ رَجُلٌ " ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] (صحيح البخاري- 2358)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/