HOME      Khutba      முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 2-3 | Tamil Bayan - 398   
 

முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 2-3 | Tamil Bayan - 398

           

முஸ்லிம்களும் வியாபாரமும் - அமர்வு 2-3 | Tamil Bayan - 398


முஸ்லிம்களும் வியாபாரமும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : முஸ்லிம்களும் வியாபாரமும் (அமர்வு 2-3)

வரிசை : 398

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 08-04-2016 | 01-07-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் பயத்தைஅல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் மார்க்க சட்ட வரம்புகளை பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

முஸ்லிம்களும் வியாபாரமும் என்ற தலைப்பில் சென்ற ஜும்ஆவில் அல்லாஹ்வுடைய மார்க்கம் வியாபாரிகளுக்கு கூறக்கூடிய சிறப்புகள், ஒழுக்கங்களை பற்றி சில முக்கியமான விஷயங்களை பார்த்தோம்.

அதை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவிலும் அல்லாஹ்வுடைய ஷரீஅத்தில், அல்லாஹ்வுடைய சட்டங்களில் வியாபாரம் சம்மந்தமாக வரக்கூடிய சில ஒழுக்கங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த தலைப்பிற்குள் நாம் செல்வதற்கு முன்பாக குறிப்பாக ஒரு விஷயத்தை நமது சகோதரிகள் கவனத்தில் வைக்க வேண்டும்.

இங்கே ஜும்ஆவிற்கு வரும்பொழுது பேசப்படுகின்ற விஷயங்கள் ஆண்களை முன்னோக்கியதாக இருக்கிறதே, இதில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது, இந்த உரையின் மூலமாக நாம் என்ன பயன் பெறப் போகிறோம்? என்பதாக எண்ணிவிட வேண்டாம்.

ஏனென்றால், இந்த நல்ல விஷயங்களை நீங்கள் கேட்கும் பொழுது, அல்லாஹ்வின் சட்டங்களை நீங்கள் தெரிந்துக் கொள்ளும்பொழுது, நீங்கள் தெரிந்த சட்டங்களை, மார்க்க ஒழுக்கங்களை அல்லாஹ்வின் வேத வசனங்களின் ஞானங்களை, கருத்துகளை உங்களுடைய குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு நீங்கள் அதை போதிக்கலாம்.

அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களை தெரிந்துக் கொள்வதே மிகப்பெரிய ஒரு நன்மையான காரியம். பிறகு, உங்களுடைய குடும்பத்தில் உள்ள உங்களுடைய தந்தைக்கு, நீங்கள் திருமணமானவராக இருந்தால் உங்களுடைய கணவருக்கு, உங்களுடைய பிள்ளைகளுக்கு என்று இங்கே கேட்கக்கூடிய மார்க்க விஷயங்களை போதிப்பதற்கு ஒரு கல்வியாக நீங்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுபோன்று ஹலால், ஹராம் சம்மந்தப்பட்ட சட்டங்களை நீங்கள் தெரிந்துக் கொள்ளும் பொழுது, நம்முடைய குடும்பத்து ஆண்கள் இந்த சட்ட வரம்புகளை பேணுகிறார்களா? என்பதை கவனித்து ஹலால், ஹராமுடைய இல்மை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஹராமான காரியங்களை அவர்கள் செய்யும் பொழுது, இந்த விஷயம் மார்க்கத்தின் இந்த ஆதாரத்தின் படி ஹராம் -தடுக்கப்பட்ட செயல், அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டுமென்று அழகிய முறையில் தங்களது குடும்பத்து ஆண்களை தர்பியா செய்யக்கூடியவர்களாக நீங்கள் உருவாக வேண்டும். அதற்கு இந்த ஜும்ஆ குத்பாவின் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் பெண்மனிகளைப் பற்றி நாம் படிக்கின்றோம்.

அவர்கள் தங்களது கணவரோ அல்லது தங்களது சகோதரரோ அல்லது தங்களது தந்தையோ அல்லது யாருடைய பொறுப்பில் அவர்கள் வாழ்கிறார்களோ அந்த ஆண்களுக்கு அவர்கள் கூறக்கூடிய அறிவுரை,

நீங்கள் எங்களுக்கு ஹராமான வருவாயிலிருந்து உணவளித்து விடாதீர்கள். எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். நாங்கள் பசியை தாங்குவது எங்களுக்கு இலேசான ஒரு காரியம், நரக நெருப்பை தாங்கிக் கொள்வதை விட.

என்ன கருத்தை அந்த பெண்மனிகள் இங்கே உணர்த்துகிறார்கள்?

நீங்கள் எங்களுக்கு உணவளிக்க வேண்டுமென்பதற்காக அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணாமல், ஹராமான வருவாயைக் கொண்டு, எங்களுக்கு உணவளித்து விட்டால், உங்களது வியாபாரத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களை, பாவமான விஷயங்களை கலந்து நீங்கள் எங்களுக்கு உணவளித்து விட்டால், அதனால் சம்பாதித்த குற்றத்திற்காக நீங்கள் மட்டும் நரகம் செல்ல மாட்டீர்கள்.

அந்த ஹராமான வருவாயை உண்ட காரணத்தினால், அதை சாப்பிட்டு அணுபவித்த காரணத்தினால், நாங்களும் நரகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக! நரக நெருப்பை எங்களால் மறுமையில் தாங்க முடியாது. இந்த துன்யாவின் பசிபட்டினிகளை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம்.

அன்பானவர்களே! இப்படிப்பட்ட அழகிய படிப்பினைகளை, பாடங்களை அந்த ஸஹாபிய பெண்மனிகள் ஏன் கொடுத்தார்கள்? அவர்களிடமிருந்த கல்வி. அவர்கள் அந்த கல்வியின் அடிப்படையில் அவர்களின் தக்வாவைக் தங்களது குடும்பத்து ஆண்களையே தர்பியா செய்யக்கூடிய அளவிற்கு அவர்களை தூண்டியது.

இன்று, நமது காலத்து பெண்களை பொறுத்த வரை அவர்களுக்கு ஹலால் எது? ஹராம் எது? அல்லாஹ்விற்கு எது விருப்பம்? அல்லாஹ்விற்கு எது விருப்பம் இல்லை? என்று தெரியாத காரணத்தினால் தான் எத்தனையோ பெண்கள் அவர்கள் தன் விஷயத்தில் நல்லவர்களாக இருந்தாலும் கூட, தங்களது கணவன், தங்களது குடும்ப பொறுப்பாளர்கள் ஹராமான காரியங்கள், ஹராமான தொழில்கள், ஹராமான வருவாய்களில் இருக்கிறார்கள்.

அதை அவர்கள் சொல்ல முடியாத அளவிற்கு அவர்களது நிலை இருப்பதற்கு காரணம் ஒன்று, அது ஹராம் என்றே தெரியவில்லை. இரண்டாவது, ஹராமென்று தெரிந்தாலும் ஹராமை செய்வது எவ்வளவு பெரிய பாவம்? அதனால் என்னென்ன ஆபத்துகள் இந்த துன்யாவில் ஏற்படும்? மறுமையில் என்ன தண்டனை உண்டு? என்பதை அவர்கள் அறியாத காரணத்தினால் ஒரு மார்க்க விஷயங்களில் நமது சமுதாய பெண்களிடம் மிகப் பெரிய அலட்சியம் இருப்பதை பார்க்கிறோம்.

ஆகவே, இங்கு வரக்கூடிய சகோதரிகள் சொல்லப்படக்கூடிய விஷயங்களை செவி தாழ்த்திக் கேட்டு, கவனமாக புரிந்து, அந்த விஷயங்களை கொண்டு தங்களது குடும்பத்தை தர்பியா செய்வதற்குண்டான இல்மை அடைந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அதற்கு நல்லருள் புரிவானாக!

இந்த வியாபாரத்தை குறித்து நாம் பேசும்பொழுது ஒரு முஸ்லிமுடைய வியாபாரம் அது ஒரு தனித்தன்மை உடையதாக, அவனுடைய வியாபாரம் அவனுடைய மார்க்கத்தை கெடுக்கக் கூடியதாக இருக்கக்கூடாது.

ஒரு முஸ்லிமுடைய கொடுக்கல்வாங்கல், தொழில், துறை, அலுவல்கள், வேலைகள் எதுவாக இருந்தாலும் சரி, அந்த முஸ்லிமுடைய மார்க்கத்திற்கு தடையாக இருக்க கூடாது. இதை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் வைக்க வேண்டும்.

இது ஒரு பொதுவான சட்டம். வேலை செய்பவருக்கும் சரி, தொழில் செய்பவருக்கும் சரி, சொந்தமாக வியாபாரம் செய்தாலும் சரி, அல்லது வேலை செய்தாலும் சரி, எந்த ஒன்றும் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளிலிருந்து நம்மை தடுத்து விடக்கூடாது. அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளை நிறைவேற்றுவதில் நமக்கு அலட்சியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

அல்லாஹ் நமக்கு கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதில் நம்மிடத்தில் கவனக்குறைவுகளை, நம்மிடத்தில் சோம்பேறித்தனத்தை, புறக்கணிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.

அப்படி ஏற்படுத்துமேயானால், அந்த விஷயம் ஹலாலான ஒரு வியாபாரமாக, ஹலாலான ஒரு கொடுக்கல் வாங்கலாக, ஹலாலான ஒரு தொழிலாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணவிடாமல் ஆக்கிய காரணத்தினால் அது ஹராமாகி விடும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்:

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24:37)

இது மிகப் பெரிய ஒரு தனித்தன்மை.அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து தடுக்கக்கூடிய எந்த ஒன்றும் இந்த துன்யாவில் நமக்கு அல்லாஹ்வுடைய பரக்கத்துகளை கொடுக்கக்கூடியவையாக இருக்காது என்பதை கவனத்தில் வையுங்கள்.

நாம் என்ன நினைக்கிறோம்? அதிகமாக சம்பாதித்துக் கொள்வோம், அதிகமாக செல்வங்களை சேகரித்துக் கொள்வோம். பிறகு மற்ற மற்ற விஷயங்களை பார்த்துக் கொள்வோம்.

குறிப்பாக,வெளிநாடுகளில் சென்று வேலை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள். அவர்களை பொறுத்த வரை,இது நாம் சம்பாதிக்க வந்திருக்கின்ற ஊர். பொருள் தேடுவதற்குண்டான அந்நிய நாடு என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

நமது மார்க்கத்தை நமது ஊருக்கு சென்று பின்பற்றிக் கொள்ளலாம். தொழுகை நோன்பு வணக்க வழிபாடுகள் இவற்றையெல்லாம் நமது தாய் நாட்டிற்கு செல்லும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்பதாக ஒரு மனநிலைக்கு வந்து, அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் செய்யும் பொழுதோ, வேலை செய்யும் பொழுதோ, வியாபாரம் செய்யும் பொழுதோ மார்க்கத்தை அவர்கள் இங்கிருந்து விமானம் ஏறும்போதே ஊரில் விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.

அங்கு சென்றதற்கு பிறகு,அவர்களுக்கு தொழுகை, இபாதத், இறை நினைவு, மார்க்க உபதேசங்களில் கலந்து கொள்வது, இவையெல்லாம் அவர்கள் ஊரில் அவர்கள் முடித்துவிட்ட ஒரு விஷயத்தைப் போல ஆகி விடும்.

இதைத்தான் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். முஃமின்கள் அப்படி இருக்கமாட்டார்கள்.

அவர்கள் எங்கிருந்தாலும், எந்த இடத்திலிருந்தாலும்,அவர்கள் வேலை செய்தாலும் சரி, வியாபாரம் செய்தாலும் சரி, அவர்கள் தொழில் செய்தாலும் சரி,அல்லது தொழிற் சாலைகளில் வேலை செய்தாலும் சரி,அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து அவர்களை அவர்களுடைய தொழிலோ, வியாபாரமோ திசை திருப்பாது. அல்லாஹ்வுடைய நினைவு அவர்களுக்கு முதல் விஷயமாக இருக்கும்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். இரண்டு விஷயங்களை அல்லாஹ் கூறுகிறான். ஒன்று,அல்லாஹ்வுடைய நினைவு. இரண்டாவது,தொழுகையை நிலை நிறுத்துவது.

இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? அல்லாஹ்வுடைய நினைவு என்பது பொதுவாக நமது சமுதாய மக்களின் சிந்தனையை பொறுத்த வரை, சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று திக்ரு செய்வதை மட்டுமே அவர்கள் விளங்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அல்லாஹ்வுடைய நினைவு என்பது அதுமட்டுமல்ல. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று திக்ரு செய்வது மட்டும் அல்லாஹ்வுடைய நினைவு அல்ல.

அல்லாஹ்வுடைய திக்ரு என்று குர்ஆனை கற்பது, குர்ஆனை ஓதுவது, குர்ஆனை படிப்பது, அதன் கருத்துகளை உணர்வது, மார்க்கத்தை தெரிந்துக் கொள்வது, அல்லாஹ்வுடைய சட்டங்களை தெரிந்துக் கொள்வது போன்று விஷயங்கள் சொல்லப்படுகின்றன.இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று, அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதுவதையோ, அல்லாஹ்வுடைய குர்ஆனின் சட்டங்களை தெரிந்துக் கொள்வதையோ, மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதையோ இவையெல்லாம் அல்லாஹ்வுடைய நினைவு என்பதாகவே பலருக்கு சிந்தனையில் வருவதில்லை.

அல்லாஹ்வுடைய திக்ரு என்றாலே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்தி விடுகிறார்கள். அல்லாஹ்வை அவனுடைய தூய திருநாமங்களை கொண்டு, அவனுடைய தூய திரு புகழ்களை கொண்டு நினைவு கூர்வது திக்ருகளில் ஒரு வகை. அதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதையும் நாம் பேண வேண்டும்.

அதே நேரத்தில் அல்குர்ஆனை மறந்து விடக்கூடாது. அல்குர்ஆனை தினந்தோறும் ஓதுவதையும், அந்த அல்குர்ஆனுடைய கருத்துகளை படிப்பதையும், அந்த அல்குர்ஆனுடைய கருத்துகள் படித்துக் கொடுக்கப்படக் கூடிய மார்க்க சட்ட சபைகளில் கலந்து கொள்வதிலும் நாம் நம்முடைய பங்களிப்பை செய்தாக வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அல்குர்ஆனில் திக்ரு என்று எங்கெல்லாம் கூறுகிறானோ, முதலாவதாக இந்த குர்ஆனை கூறுகிறான்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நாமே இந்த திக்ரை இறக்கினோம். நாமே இந்த திக்ரை பாதுகாப்பவராக இருக்கிறோம். (அல்குர்ஆன் 15 : 9)

இப்படி குர்ஆனில் திக்ரு என்ற அந்த தூய வார்த்தை அல்லாஹ்வின் வேதத்திற்காக சொல்லப்படுகிறது.

நபியவர்கள் கூறினார்கள், திக்ருடைய சபைகளுக்கு அருகில் நீங்கள் சென்றால் நீங்கள் அங்கே விசாலமாக சந்தோஷமாக அமர்ந்து கொள்ளுங்கள். சொர்க்க பூங்காக்களுக்கு அருகில் சென்றால் நீங்கள் அங்கே மேய்ந்து கொள்ளுங்கள் என்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரே! சொர்க்க பூங்கா என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது.நபியவர்கள் பதிலளித்தார்கள், அது தான் திக்ருடைய சபைகள் என்று.

இன்று, தர்காக்களில் திக்ரு சபை என்று ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களே! அந்த திக்ருடைய சபைகள் நபி அவர்களுடைய காலத்தில் இல்லை.

கூடி அமர்ந்து கொண்டு, தலை அசைத்துக் கொண்டு, உடலை அசைத்துக் கொண்டு, அல்லது எழுந்து நின்று ஆடல் பாடல் செய்து கொண்டு, கும்மாளமாக திக்ரு செய்கிறார்களே, இப்படி ஒரு கலாச்சாரம் இப்படி ஒரு செயல் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய காலத்தில் அறவே இருந்ததே இல்லை.

நபியவர்களுடைய காலத்தில் திக்ருடைய சபைகள் என்று, மார்க்கத்தை கற்பது, மார்க்கத்தை கற்றுக் கொள்வது,குர்ஆனை போதிப்பது, குர்ஆனின் கருத்துகளை போதிப்பது தான் சபைகளாக இருந்தன. அதுதான் மஸ்ஜிதுன் நபவியில் திக்ருடைய சபைகளாக இருந்தன.

ஆகவே, நீங்கள் எவ்வளவு தான் பெரிய வியாபாரியாக இருந்தாலும், பெரிய தொழிலாளியாக இருந்தாலும், பெரிய இடத்தில் பணி செய்பவராக இருந்தாலும், உங்களுடைய உள்ளத்தை பசுமையாக்கக்கூடியது,உங்களது ரப்போடு உங்களுடைய உள்ளத்தை எப்போதும் தொடர்புடையதாக வைத்துக் கொள்ளக்கூடியது உங்களுடைய இபாதத் மட்டுமல்ல.  இதை அழுத்தம் திருத்தமாக மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

சில வியாபாரிகள், நாம் தான் சரியான நேரத்தில் தொழுது கொள்கிறோமே, அந்தந்த நேரத்தில் தொழுகையை பேணிக் கொள்கிறோமே, ஜும்ஆக்களுக்கு சென்று விடுகிறோமே, இது நமக்கு போதாதா? என்பதாக எண்ணுகிறார்கள். கண்டிப்பாக போதாது.

அல்லாஹ் கூறுகிறான்:

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24:37)

முதலாவதாக,அல்லாஹ் கூறக்கூடிய விஷயம்,அல்லாஹ்வுடைய நினைவு. நீங்கள் மார்க்க சட்டங்களை கேட்டுகேட்டு மார்க்க சட்டங்களை தெரிந்து கொண்டிருக்கின்ற காலம் வரை, தெரிந்த விஷயங்களை புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வரை, உங்களுடைய அந்த மார்க்க விஷயத்தின் தேட்டம் இருக்கின்ற வரையில் தான் இபாதத்துகளில் உங்களுக்கு கவனம் இருக்கும்.

உங்களுடைய உள்ளம் அல்லாஹ்வோடு தொடர்புடையதாக இருக்கும் பொழுது தான் உங்களது தொழுகையில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும்.

நீங்கள் தொழக்கூடிய இந்த தொழுகை எப்போதும் பேணுதலும், அந்த தொழுகையில் தக்வாவும், மன ஓர்மையும், சரியான தொழுகையாகவும் அமைய வேண்டுமென்றால் கல்வி சபையில் தொடர்ச்சியாக கலந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று.

இல்லை என்றால், எத்தனை அமல்கள் நீங்கள் சரி என்று நினைத்து செய்வீர்கள். அது தவறாக இருக்கும்.

எத்தனையோ மக்களுக்கு பல முறை கேட்ட விஷயங்களை கூட மறந்திருப்பார்கள். மீண்டும் மீண்டும் கல்வி சபைகளில் கலந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு நினைவூட்டலாக அமையும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனவே தான், குறிப்பாக முஃமின்கள் கட்டாயமாக வாரத்தில் ஒரு முறையாவது மார்க்க உபதேசத்தை கேட்டு அவர்களுடைய ஈமானை பரிசுத்தப்படுத்த வேண்டும். அவர்களுடைய தக்வாவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். மறுமையின் பயத்தை அவர்கள் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் ஜும்ஆவுடைய நாளன்று அதானுக்கு பிறகு வியாபாரம் செய்வதை ஹராமாகவே ஆக்கி விட்டான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!)  (அல்குர்ஆன் 62:9)

இந்த இடத்தில், அல்லாஹ்வுடைய திக்ரின் பக்கம் விரைந்து வாருங்கள் என்று அல்லாஹ் கூறக்கூடிய திக்ர் என்ன? இமாம் சொல்லக்கூடிய அறிவுரையை, இமாம் உங்களுக்கு குர்ஆனிலிருந்து, சுன்னாவிலிருந்து போதிக்கக்கூடிய அந்த சட்டங்களை அல்லாஹ் 'திக்ருல்லாஹ்' என்று கூறுகிறான்.

வாருங்கள் என்று அல்லாஹ் கூறவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, விரைந்து ஓடோடி வாருங்கள்.

நீங்கள் ஜும்ஆ தினத்தன்று அதானுடைய சப்தத்தை கேட்டுவிட்டால், அல்லாஹ்வுடைய திக்ரின் பக்கம் நீங்கள் விரைந்து அதற்காக முயற்சி செய்து, அதற்காக பிரயாசை எடுத்து நீங்கள் ஓடோடி வாருங்கள் என்று அல்லாஹ் அழைக்கிறான்.

இதை, அல்லாஹு தஆலா முஃமின்கள் மீது கட்டாயமாக்கிவிட்டான்.

ஆனால், ஒரு கவலையான செய்தி என்ன என்றால்,இன்றைய ஜும்ஆவில் நமது முஃமின்களுடைய நிலைபாடு, எப்போது இமாம் மிம்பரிலிருந்து இறங்கி தொழுகையை ஆரம்பிப்பார் என்ற நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு வெளியில் காத்திருப்பவர்கள், வியாபாரஸ்தலங்களில் காத்திருப்பவர்களை நாம் பார்க்கிறோம்.

அப்படியே முன்னாடியே வந்துவிட்டாலும் கூட, எங்கேயாவது சாய்ந்து கொண்டு தூங்குவதற்கு இடம் கிடைக்குமா? என்ற இடத்தை பார்த்து கொண்டு, நல்ல முறையில் செட்டிங் செய்து கொண்டு, இமாம் பயான் செய்கின்ற வரை நல்ல முறையில் தூங்கி விட்டு கடைசியில் அவர் என்று ولذكر الله اكகூறும்பொழுது கரக்டா எழுந்து விடுவார்கள். இதுவா ஜும்ஆவுடைய ஒழுக்கம்?

அன்பானவர்களே! ஒரு முஸ்லிம் வியாபாரி தன்னுடைய உள்ளத்தை அல்லாஹ்வுடைய நினைவோடு ‌அல்லாஹ்வுடைய சட்டத்தோடு தொடர்புபடுத்தி வைப்பதற்கு அவர் கல்வி சபையில், மார்க்க உபதேசங்களில் கண்டிப்பாக தன்னை கலந்து கொள்ள வைக்க வேண்டும்.

இங்கே இன்னொரு விஷயத்தை கவனியுங்கள். மார்க்க சபைகளில் தொடர்ந்து நீங்கள் கலந்து கொள்வதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கியமான பலன்களில் நூற்றுக் கணக்கான பலன்களை கூறலாம்.

முக்கியமான பலன்கள் என்னவென்றால், நம்முடைய உள்ளம் எப்போதுமே நம்முடைய நஃப்ஸிற்கு ஒரு விதமான சலுகையை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும்.

ஹராமுக்கு ஏதாவது வழி இருக்கிறதா? அதை ஹலால் ஆக்குவதற்கு பார்ப்போம். ஏதாவது சாக்கு போக்கு கிடைக்காதா? பாவத்திற்குள் நுழைந்து விட்டு வந்துவிடுவோமே, என்ற ஒரு மனப்பான்மை பொதுவாக நஃப்ஸிடத்தில் இருக்க செய்யும்.

மார்க்க சபைகளில் நாம் கலந்து கொள்ளும் பொழுது, அந்த ஒரு அலட்சியத்தை, அந்த ஒரு கெட்ட எண்ணத்தை அந்த மார்க்க சபைகள் நமக்கு போக்கிக் கொண்டே இருக்கும்.

எப்படி இரும்பில் துறு ஏற்படுவது இயற்கையோ, அதை நெருப்பில் போட்டு சுத்தம் செய்யும் பொழுது, அந்த துறுக்கள் சுத்தமாகுவதை போன்று தான், மார்க்க சபைகளில் கலந்துக் கொள்ளும் பொழுது, தக்வாவுடைய பேச்சுக்களை கேட்கும் பொழுது, நரகத்தின் தண்டனைகளை செவிமடுக்கும் பொழுது நம்முடைய உள்ளத்தில் பயம் ஏற்படும்.

ஆஹா! நான் அந்த பாவத்தின் பக்கம் நெருங்கி விட்டேனே!அந்த ஒரு கெட்ட செயலின் பக்கம் நெருங்குகின்றேனே!அந்த ஒரு ஹராமான செயலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேனே! இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்பட்டு, தான் நாடிய, தான் முன்னோக்கிய, அந்த ஹராமான, தவறான, பாவமான செயல்களிலிருந்து அவர் தன்னை தடுத்துக் கொள்வதற்கு அவருடைய ஆன்மாவிற்கு தக்வாவின் வலிமை ஏற்படும்.

இன்றைக்கு முஸ்லிம்களிடத்தில் எவ்வளவு தொழிற்சாலைகள் இருக்கின்றன. எவ்வளவு வியாபாரங்கள் இருக்கின்றன. எவ்வளவு கடைகள் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் செய்யக்கூடிய வியாபாரங்களெல்லாம் ஹலாலான வியாபாரங்கள் தான் என்று சொல்ல முடியுமா?

உதாரணத்திற்கு பாருங்கள், நாம் வாழக்கூடிய இந்த நாட்டில் காஃபிர்களுடைய பண்டிகைகள் வந்துவிட்டால், அந்த குஃப்ருடைய பண்டிகைகளுக்கு சாமான்கள் விற்கக்கூடியவர்கள் முஸ்லிம்கள் அதிகமா? அல்லது அந்த இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

எத்தனை முஸ்லிம்கள் அவர்கள் வேறு வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் கூட, அரிசி வியாபாரம் செய்தாலும் கூட, பேப்பர் நோட் புக் வியாபாரம் செய்வராக இருந்தாலும் கூட, இது சீசன் பிசினஸ், இதில் நன்றாக சம்பாதிக்கலாம் என்று அந்த காஃபிர்களின் பொருள்களை, அந்த காஃபிர்களின் மத சடங்குகளை விற்கக்கூடிய சாமான்களை பெருமளவில் வாங்கி அதை கடைக்கு வெளியில் கடை போட்டு அல்லது அரசாங்கம் கொடுக்கக்கூடிய இடங்களில் கடை போட்டு சம்பாதிக்கக்கூடிய முஸ்லிம்களில் அதிகமானவர்களை நாம் பார்க்கிறோம்.

உதாரணத்திற்கு,தீபாவளி அன்று வெடி விற்பதை சொல்லலாம். இன்னும் இது போன்று கிறிஸ்தவர்களுடைய அந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. அதற்காக தொப்பி விற்கிறார்கள், ஸ்டார்ஸ் விற்கிறார்கள் இன்னும் அதுபோன்று அன்பளிப்பு பொருள்களை விற்கிறார்கள். இதையெல்லாம் ஒரு முஸ்லிம் வாங்குவதும், விற்பனை செய்வதும், இவற்றை உற்பத்தி செய்வதும் தடுக்கப்பட்ட பாவம்.

ஆனால், ஹலால் ஹராம் தெரியாத காரணத்தால் வருவாய் எங்கிருந்து வந்தால் என்ன? எப்படி வந்தால் என்ன? சம்பாதித்துக் கொள்வோம். காற்று இருக்கும் பொழுதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு அந்த ஹராமான வியாபாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

ஹஜ்ஜிற்கு சென்று வந்தவர்களெல்லாம், உம்ராவிற்கு சென்று வந்தவர்களெல்லாம், தாடி வைத்திருப்பவர்களெல்லாம், பள்ளிவாசல்களுக்கு முதவல்லிகளாக இருப்பவர்களெல்லாம் அங்கே அந்த வியாபாரத்தில் ஈடுபடுவதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

இப்படிப்பட்ட வியாபாரிகளின் வாழ்க்கை பின்னனியை நீங்கள் எடுத்துப் பாருங்கள்.

ஒரு முஸ்லிமான வியாபாரியிடத்தில் இபாதத் இருக்கிறது. ஆனால், ஹராமான வியாபாரத்தை செய்கிறார். ஜுவல்லரிகள் வைத்திருப்பார்கள். அந்த ஜுவல்லரியில் சிலைகளை விற்பார்கள், சிலுவைகளை விற்பார்கள், மாற்றுமத கலாச்சாரத்தின் அடையாளங்களை விற்பார்கள். அவர்கள் வணங்கக் கூடிய தெய்வங்களின் உருவ பொம்மைகளை விற்பார்கள்.

ஆனால், ரமழான் மாதத்தில் மக்காவில் உம்ரா செய்வதற்கு அமர்ந்திருப்பார்கள். வருடம் வருடம் உம்ராவிற்கு செல்வார்கள். யோசித்துப் பாருங்கள். இவர்களுடைய உம்ரா இவர்களை அந்த ஹராமான வியாபாரத்திலிருந்து தடுத்ததா?

இவர்கள் செய்து வந்த ஹஜ், இவர்கள் செய்து கொண்டிருந்த ஹராமான வியாபாரத்திலிருந்து இவர்களை திருப்பியதா? என்றால் திருப்பவில்லை.

காரணம்,இபாதத் இருக்கிறது, ஆனால் இல்ம் இல்லை. இல்ம் இல்லாததால் தக்வா இல்லை.

ஒரு வியாபாரி இல்முடைய சபைகளில் கலந்து கொண்டே இருக்கும்பொழுது, அவன் எவ்வளவு தான் பெரிய வியாபாரத்தில் இருந்தாலும் சரி,தொழிலில் இருந்தாலும் சரி, இந்த தொழிலை விட எனக்கு முக்கியமானது அல்லாஹ்வின் வேத சட்டங்களை கற்றுக் கொள்வது; நபியின் சுன்னாவின் சட்டங்களை தெரிந்து கொள்வது, நான் கோடிகளை சம்பாதிப்பதை விட எனக்கு முக்கியம்.

எனது வாரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லாஹ்வின் சட்டங்களை தெரிந்து கொள்வதற்கு, எனது மார்க்கத்தைஎனது மறுமையை எனக்கு நினைவூட்டி கொள்வதற்கு நான் ஒதுக்கியே தீருவேன் என்ற அடிப்படையில் வியாபாரம் செய்யக்கூடிய ஒரு வியாபாரியின் வியாபாரத்தை பாருங்கள்.

அவர்களுக்கு சிறிய சந்தேகம் வந்துவிட்டால் கூட,ஒரு வியாபாரத்தில் கோடிக்கணக்கான வருவாய்களை ஈட்டுத்தரக்கூடிய வாய்ப்பிருந்தாலும் கூட, இல்லை, இதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது, இது குறித்து தெறிந்த ஒரு அறிஞரிடத்தில் நான் கேட்டு முடிவெடுத்தற்கு பிறகே இதில் நான் இறங்குவேன். இல்லையென்றால் இறங்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு வியாபாரி துணிகிறார் என்றால் அவருடைய பின்னனியை பாருங்கள்.

அவருக்கு அறிவுரை சொல்லக்கூடிய அறிஞர்களுடைய தொடர்பு இருக்கும். அவர்களின் சபைகளில் கலந்து கொள்ளக்கூடியவராக இருப்பார். எனவேதான், அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

முஃமினே! நீ எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரம் செய்துக் கொள், தொழில் செய்துக் கொள். ஆனால், என்னுடைய குர்ஆனின் சபைகளை நீ புறக்கணித்து விடாதே! குர்ஆனுடைய சபைகளிலிருந்து நீ தூரமாகும்படி உன்னுடைய வியாபாரம் ஆக்கிவிடக்கூடாது, உன்னுடைய தொழில் ஆக்கிவிடக்கூடாது.

அடுத்து அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலைநிறுத்துவதிலிருந்து என்று. (அல்குர்ஆன் 24:37)

ஆம், குர்ஆனுடைய இல்ம், சுன்னாவுடைய இல்ம் இதற்கு அடுத்த முக்கியத்துவத்தை அல்லாஹ் கூறுகிறான். இந்த குர்ஆனுடைய இல்மும் சுன்னாவுடைய இல்மும் ஒரு தோட்டத்திற்கு, ஒரு பூங்காவிற்கு நீர் பாய்ச்சுவதை போல.

மரம், பூங்காவின் பூக்கள், செடி, கொடிகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செடி கொடிகள் உயிராக இருப்பதற்கு, அந்த செடி கொடிகள் மலர்ந்து கொண்டே இருப்பதற்கு, அதற்கு பாய்ச்சப்படக்கூடிய தண்ணீர்.

எனவேதான், தண்ணீர் பாய்ச்சுவதை போன்று உள்ள அந்த இல்முடைய சபையை அல்லாஹ் முதலாவதாக கூறி அடுத்து கூறுகிறான்.

தொழுகையை நிலைநிறுத்துவதிலிருந்து என்று.இது முஸ்லிம் வியாபாரிகளுடைய தனித்தன்மை. அவர்கள் கொடுக்கல் வாங்கல் எந்த நாட்டில் செய்தாலும் சரி, அவர்கள் தொழுகையை மறந்து விடமாட்டார்கள்.

இன்று, பெரும்பாலும் நாம் முன்பு சொன்னதை போன்று தான். முஸ்லிம்களுடைய முஹல்லாவில், முஸ்லிம்களுடைய சூழல்களில் வியாபாரம் செய்தால் தொழுகையை பேணக்கூடிய முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

அந்நியர்களுடைய காஃபிர்களுடைய அந்த சூழலில் வியாபாரம் செய்யும் பொழுது எத்தனையோ பல முஸ்லிம்கள் தன்னை முஸ்லிம்களென்றே அடையாளம் காட்டிக் கொள்ளாமல், தன்னை முஸ்லிமென்றே வெளிப்படுத்திக் கொள்ளாமல் வியாபாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

காரணம் கூறுவார்கள்:நாம் முஸ்லிமென்று தெரிந்துவிட்டால் எங்கே மாற்றுமத மக்கள் நம்முடைய வியாபாரத்திற்கு வரமாட்டார்களோ, நம்முடன் கொடுக்கல் வாங்கல் செய்ய மாட்டார்களோ, நம்மோடு இருக்கக்கூடிய வியாபாரத் தொடர்பை துண்டித்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

இது, கோழைத்தனமான பயம், மோசமான பயம், ஷைத்தான் சொல்லக்கூடிய பயம்.

ஆனால், நீங்கள் வியாபாரத்தில் நாணயமாக, நியாயமாக, நீதமாக நடந்துக் கொள்பவராக இருந்தால், மாற்றுமத மக்கள் தங்களுடைய மதத்தை சார்ந்தவர்களிடத்தில் வியாபாரம் செய்வதை விட, ஒரு நேர்மையான ஒரு முஸ்லிமிடத்தில் வியாபாரம் செய்வதை விரும்புவார்கள். ஒரு முஸ்லிமிடத்தில் வாங்குவதை விற்பதை விரும்புவார்கள்.

அல்லாஹு தஆலா தன்னுடைய மார்க்கத்தை பேணக்கூடிய முஸ்லிமின் மீது அப்படிப்பட்ட ஒரு அன்பை, மதிப்பை அந்த மாற்றார்களுடைய உள்ளத்திலும் ஏற்படுத்தியிருக்கிறான்.

உங்களிடத்தில் வாங்கினால் அதில் எனக்கு ஒரு திருப்தி இருக்கிறது. அந்த பொருளில் நான் ஒரு அபிவிருத்தியை பார்க்கிறேன், அதில் நன்மையை பார்க்கிறேன், உங்களிடத்தில் நியாயத்தை பார்க்கிறேன், நேர்மையை பார்க்கிறேன் என்று வாழ்த்தக்கூடிய ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான முஸ்லிமல்லாதவர்களை வாழ்க்கையில் பார்க்கிறோம்.

இன்னும் சில இடங்களில் பார்க்கலாம், பொதுவாக மாற்றுமத மக்களை பொறுத்தவரை, அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய மத அடையாளங்களை வெளிப்படுத்துவதில் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கவே மாட்டார்கள்.

அவர்களுடைய தெய்வங்களை, அவர்கள் வணங்கக்கூடிய அந்த சிலைகளின் போட்டோக்களை வைப்பதிலோ அல்லது அவர்களுடைய வேதங்களின் அந்த ஸ்லோகங்களை எழுதி வைப்பதிலோ அதுபோன்ற விஷயங்களை வெளிப்படுத்துவதில் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள், வெட்கப்படவும் மாட்டார்கள்.

ஆனால், முஸ்லிமென்று சொல்லிக் கொண்டு இஸ்லாமில் அப்படி படங்கள் வைப்பதில்லை. இஸ்லாமில் அப்படி எதையும் வைக்க சொல்லவில்லை.

ஆனால், தான் ஒரு முஸ்லிமென்று அடையாளப்படுத்தும் விதமாக,தன்னுடைய நிறுவனம் முஸ்லிம்களின் ஒரு நிறுவனம் என்று அடையாளப்படுத்தும் விதமாக ஒரு பிஸ்மில்லாஹ்வை அதனுடைய அர்த்தத்தோடு எழுதி வைக்கலாம், ஒரு மாஷா அல்லாஹ்வை எழுதி வைக்கலாம். அல்லாஹ்வுடைய திருக்கலிமாவை எழுதி வைக்கலாம். இப்படி எதுவமே செய்யமாட்டார்கள்.

காரணம்? முஸ்லிமென்று தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக.

இன்னும் எத்தனையோ அல்லாஹ்வின் சட்ட ஒழுக்கங்கள், அல்லாஹ்வின் வேதத்துடைய வழிகாட்டுதல்கள், ஒரு முஸ்லிம் வியாபாரி எப்படி இருக்க வேண்டும்? வியாபாரம் எப்படி இருக்க வேண்டும்? என்று சொல்லக்கூடிய எத்தனையோ குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன.

அந்த குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் தங்களுடைய வியாபார ஸ்தலங்களில் அதை அரபியில் அதனுடைய பொருளாக்கத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது வேறு மொழிகளிலோ எந்த வட்டாரத்தில் இருக்கிறார்களோ அந்த மொழியாக்கத்தை அங்கே அழகாக பதித்து வைத்தால் வரக்கூடியவர்கள் பார்ப்பார்கள். உங்களுடைய வேதத்தில் குர்ஆனில் இப்படிப்பட்ட விஷயம் இருக்கிறதா?

அதன் மூலமாக இரண்டு பெரிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். ஒன்று, நீங்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எடுத்து சொன்ன நன்மை, இரண்டாவது, அவர்கள் அதன் மூலமாக இஸ்லாமில் கவரப்பட்டு அல்லாஹ்வுடைய தீனிற்கு வந்துவிட்டால் ஒரு மனிதனுடைய ஹிதாயத்திற்கு நீங்கள் காரணமாக ஆகி விடுகிறீர்கள்.

ரஸூலுல்லாஹ்வுடைய ஹதீஸ்களின் மொழியாக்கத்தை மாட்டி வைக்கலாம்.

சில இடங்களில் வியாபாரத்திற்கு நீங்கள் சென்றால், ஒரு மனிதருடைய (இந்தியாவில் அரசியலில் மதிக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு மனிதர்) வாக்கியத்தை எல்லா வியாபாரஸ்தலங்களிலும் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்று எல்லோரும் எழுதி வைத்திருப்பார்கள்.

ஒரு மடங்கல்ல, இரண்டு மடங்கல்ல, இலட்சக்கணக்கான மடங்குகள் இதை விட அழகான வியாபார ஒழுக்கங்களை அல்லாஹ்வுடைய தூதர் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தும்பொழுது நம்முடைய வியாபாரத்தின் மேன்மை, நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தின் மேன்மை வரக்கூடியவர்களுக்கு புரிய வரும்.

ஆனால், இன்றைய முஸ்லிம்களுடைய பலவீனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது மனம் வேதனைப்படுகிறது.

சில குறிப்பிட்ட வியாபாரிகளை தவிர, அல்லது சில தொழிலாளர்களை தவிர, இப்போது புதிதாக உருவாகக்கூடிய வியாபாரிகள், புதிதாக வரக்கூடிய கல்வி படித்து வேலையில் ஈடுபடக்கூடிய மக்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதை வெட்கப்படுகிறார்கள். முஸ்லிம் என்று அடையாளப்படுத்தினால் வேலை கிடைக்காதோ! என்று பயப்படுகிறார்கள்.

இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். சிலர், வேலைக்காக செல்லும் பொழுது நீ தாடி வைத்திருக்கிறாய், தாடியை எடுத்தால் வேலை கிடைக்கும். அல்லது நீ இப்படி ஆடை அணிகிறாய், உனக்கு நான் இங்கே வேலை தர முடியாது.

இப்படியெல்லாம் எத்தனையோ விஷயங்களை சொல்லி முஸ்லிம் படித்த பட்டதாரிகளின் மனதை காயப்படுத்துகிறார்கள், புண்படுத்துகிறார்கள்.

இதெல்லாம் ஷைத்தானுடைய திட்டங்கள். அவர்கள் சொல்வதில்லை. இப்லீஸ் இந்த திட்டத்தை அவர்களுக்கு சொல்லித் தருகிறான். அவர்கள் உங்களுக்கு சொல்கிறார்கள். இதற்கு பின்னனியில்இப்லீஸ் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.

என்ன செய்ய வேண்டும்? ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு இந்த வேலை இல்லையென்றால் எனக்கு நான் ஒரு வியாபாரத்தை ஹலாலாக ஆரம்பித்தால் நேர்மையாக நடந்துக் கொண்டால் காலமெல்லாம் வேலை செய்தால் என்ன வருவாய் நமக்கு கிடைக்குமோ, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹலாலான வியாபாரத்தை ஹலாலான முறையில் செய்தால் அதில் காலமெல்லாம் சம்பாதிப்பதை ஒரு ஆண்டுகளோ, இரண்டு ஆண்டுகளோ, மூன்று ஆண்டுகளோ அல்லது குறுகிய காலத்திலேயே முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ரிஜ்க்கில் அல்லாஹ் தஆலா பரக்கத்தை வைத்திருக்கிறான்.

நான் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் அல்லது வேலை செய்வதை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று நினைக்காதீர்கள் அல்லது அது தேவையில்லை என்று கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள்.

பொதுவாக, படித்த நமது பட்டதாரிகள் வாலிபர்களுடைய பலவீனம், தன்னம்பிக்கையின்மை, அல்லாஹ்வுடைய ரிஜ்கின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

அல்லது நம்பிக்கை இருக்கிறது, அது பலவீனமாக இருக்கிறது.குறைவாக இருக்கிறது. எனக்கு என்ன வியாபாரம் செய்ய தெரியும். நான் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்ற எண்ணம், அல்லது சோம்பேறித்தனம்.

என்ன சோம்பேறித்தனம்? வியாபாரம் செய்தால் கணக்குவழக்கு பார்க்க வேண்டும், கஷ்டப்பட வேண்டும். காலையில் போக வேண்டும், நேரம் பார்க்க வேண்டும். பசி பட்டினியை பார்க்க முடியாது, தூக்கத்தை பார்க்க முடியாது. நிறைய சிரமங்களெல்லாம் இருக்கிறது.

வேலை செய்தால் மிகவும் சுலபம். நஷ்டமோ இலாபமோ நமக்கு சம்பளம் கிடைக்கும், வாங்கி வந்துவிடலாம். நமக்கு விடுமுறைக்கு விடுமுறை, வேலைக்கு வேலை, பணத்திற்கு பணம், ஓய்விற்கு ஓய்வு, சுற்றுவதற்கு சுற்றுதல் என்பதாக தங்களுடைய பலவீனத்தின் அடிப்படையில், வேலை செய்வதை மட்டுமே நம்முடைய படித்து வரக்கூடிய புதிய அந்த தலைமுறையினர் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. வியாபாரத்தில் இருக்கக்கூடிய ஆர்வம் அவர்களுக்கு குறைவாக இருக்கிறது.

அன்பானவர்களே! முஸ்லிமை பொறுத்தவரை அப்படி அல்ல. முஸ்லிம்களுக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா வியாபாரத்தில் பெரிய பரக்கத்தை,பெரிய ரிஜ்கை கொடுத்திருக்கிறான்.

நீங்கள் வியாபாரம் செய்து ஒரு பெரிய வியாபாரியாக மாறினால், நீங்கள் பலநூறு மக்களுக்கு தொழில் தரக்கூடிய அளவிற்கு, வேலை தரக்கூடிய அளவிற்கு அல்லாஹ் உங்களுக்கு ரிஜ்கை தருவான்.

எத்தனையோ இடங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அனுபவமாக பார்த்திருக்கிறோம். படிப்பு என்பதை மட்டும் ரிஜ்க்குடைய வாசலாக இன்றைய வாலிபர்கள் இன்றைய சமுதாய மக்கள் மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று, பன்நாட்டு கம்பெனிகளில், பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் வேலையை எதிர்பார்க்கிறார்கள். அந்த நிறுவனங்கள் அந்த கம்பெனிகளெல்லாம் முஸ்லிம்களுக்கு சொந்தமானவையா? இஸ்லாமை பாதுகாப்பவர்களுக்கு சொந்தமானவையா?

இஸ்லாமிய அடிப்படையில் இஸ்லாமிய பொருளாதாரத்தை கொண்டவையா? எல்லாம் மேலேநாட்டு ஆங்கிலேயர்களுடைய, ஐரோப்பியர்களுடைய அந்த காஃபிர்களுடைய, யூதர்களுடைய பன்நாட்டு கம்பெனிகள். அவர்களுடைய மொத்த தொழிலின் அந்த அடிப்படையே வட்டியின் மீது அமைந்தது, ஏமாற்றுவதின் மீது அமைந்தது.

அவர்கள் செய்யக்கூடிய அந்த பொருள்கள் பயன்தரக்கூடியதாக இருந்தாலும் ஆனால், அவர்களுடைய வியாபாரத்தின் அமைப்பு இஸ்லாமிய அமைப்பு கிடையாது. அங்கே ஒரு முஸ்லிமை வேலைக்கு வைத்துக் கொண்டு அவருடைய இஸ்லாமிய அடையாளத்தை எடுத்து விடுவது. அங்கே ஒரு மனிதனை வேலைக்கு எடுத்துக் கொண்டு அவனுடைய மனிதத்தன்மையையே உரிந்து விடுவார்கள்.

அவருடைய அறிவு, வாலிபம், அவருடைய திறமை அத்தனையும் உரிந்து விட்டு கடைசியாக வாழ்க்கையில் அவனை வெளியே அனுப்பும்பொழுது கரும்பு ஜுஸ் போட்டதற்கு பிறகு சக்கையாக வெளியே அனுப்புவது போன்று அவரை வெளியே அனுப்புவான். அதுதானே இன்று நடக்கிறது.

ஐடி ஃபீல்டுகளில் வேலை செய்யக்கூடிய வாலிபர்கள் சொல்லக்கூடிய அந்த கதையை நாம் கேட்கிறோம். முப்பத்தி ஜந்து, நாற்பது வயதுகளில் ஆண்மையை இழந்து விடுகிறார்கள், உடல் வலிமையை இழந்து விடுகிறார்கள், கண் பார்வையை இழந்து விடுகிறார்கள், சோர்வடைந்து விடுகிறார்கள், அவர்களுக்கு எப்போதும் மன அழுத்தம்,எப்போதும் மன சோர்வு. குடும்பத்தோடு சண்டைய சச்சரவு, எங்கும் அவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பெயருக்கு ஆடம்பரமான சம்பாத்தியம், ஆடம்பரமான வாழ்க்கை. வெளிநாடுகளுக்கு செல்கிறோம், பறக்கிறோம், அங்கே செல்கிறோம், இங்கே செல்கிறோம் என்பதாக அந்த ஒரு பகட்டு வாழ்க்கைக்கு அவர்கள் அடிமையாகி, அல்லாஹ்வுடைய அருளுக்குரிய பரக்கத்தானவியாபாரத்தை அவர்கள் இழந்துக் கொண்டிருக்கிறார்கள்.

வியாபாரத்தை எல்லாம்,தொழில் துறைகளை எல்லாம் அவர்கள் தங்களது கையில் எடுத்துக் கொண்டு நமது வாலிபர்களை எல்லாம் வேலைக்காரர்ரளாக வைத்து மார்க்கத்திலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்குண்டான, மார்க்கத்திலிருந்து அவர்களை தூரப்படுத்துவதற்குண்டான வழிகளை அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஏமாந்துவிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு முஸ்லிமுடைய வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருக்கிறான். காரணம், அவன் வியாபாரத்தை நம்பக்கூடியவன் அல்ல, அல்லாஹ்வை நம்பக்கூடியவன். அவன் தலை சாய்க்க வேண்டிய, தலை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பரக்கத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமின்களுக்கு வியாபாரத்தில் வைத்திருக்கிறான்.

அந்த வியாபாரம் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுடைய தொழுகையை மறக்கடிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. அதற்கு வியாபாரம் மிகப் பெரிய ஒரு காரணமாக இருக்கும்.

வேலைக்கு சென்றாலோ அல்லது மற்ற இடங்களுக்கு செல்லும் பொழுதோ, பல இடங்களில் பல வாலிபர்கள் முறையிட்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.

எங்களது கம்பெனிகளில் தொழுவதற்கு அனுமதியில்லை. பல முஸ்லிம்கள் வேலைக்கு வந்து நிர்பந்தம் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் தவிர, காஃபிர்களின் பல நிறுவனங்கள் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கும், முஸ்லிம்கள் தொழுவதற்கும் அனுமதி தருவதில்லை, மறுத்துவிடுகின்றன.

ஆனால், வியாபாரம் செய்யும் பொழுது சுதந்திரமாக நாம் மார்க்கத்தை பின்பற்றலாம். அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றலாம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா முஸ்லிமுடைய வியாபாரிகளுக்கு கூறக்கூடிய ஒழுக்கங்களில் இரண்டாவது ஒழுக்கம், அவர்கள் தொழுகையை மறக்கமாட்டார்கள், தொழுகையிலிருந்து அலட்சியமாகி விடமாட்டார்கள், அவர்கள் தொழுகையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

மூன்றாவதாக அல்லாஹ் கூறுகிறான், ஜகாத்தை சரியாக கொடுத்துக் கொண்டிருப்பார்கள், ஜகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள்.

இது ஈமானிற்கு மிகப் பெரிய ஒரு சோதனை. நம்முடைய உள்ளத்தில் உள்ள ஈமானை உறுதி படுத்துவதற்கு அந்த ஈமான் உண்மையில் நம்பிக்கையாக, அர்தத்தோடு, பொருளோடு, உணர்வோடு இருக்கிறது என்பதற்கு அல்லாஹ் நமக்கு வைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு சோதனை.

எத்தனையோ வியாபாரிகள் தொழுதுவிடுகிறார்கள், ஆனால், ஜகாத் கொடுப்பதில்லை. ஜகாத் என்று வந்துவிட்டால் ரமழான் மாதத்தில் ஏழைகளுக்கு யாஸகர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த குறைவான தர்மத்தை ஜகாத் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லை, தர்மம் என்பது வேறு. உபரியாக யாஸகம் கேட்டுவருபவர்களுக்கு, உங்களை அண்டி வரக்கூடியவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அந்த தர்மம் என்பது வேறு.

அது நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஒரு கவல உணவை, ஒரு பேரீத்தம்பழத்தை அல்லது அதனுடைய பகுதியைக் கூட நீங்கள் கொடுக்கலாம். அதன் ஒவ்வொன்றிற்கும் அல்லாஹ் நன்மையை தருகிறான்.

ஆனால், ஜகாத் என்பது அப்படியல்ல, ஜகாத் என்பது உங்களுடைய செல்வத்தின் மொத்தத்தை கணக்கிட்டு அதிலிருந்து இரண்டரை சதவீதம் நாற்பதில் ஒன்றை நீங்கள் முறையாக அல்லாஹ் குறிப்பிட்ட எட்டு வகையினரில் ஒரு வகையினருக்கு நீங்கள் தேடிச் சென்று கண்ணியப்படுத்தி உங்களுடைய கடமையை உணர்ந்து நன்றியை எதிர்பார்க்காமல் நீங்கள் நிறைவேற்றக்கூடியது ஜகாத்.

வரக்கூடிய ஏழைகளுக்கு சில்லரைகளை மாற்றி வைத்துக் கொண்டு போடுவது, ஜகாத் அல்ல. அல்லது எங்கேயாவது மட்டமான துணிகளை வாங்கி வைத்துக் கொண்டு வரக்கூடிய மக்களுக்கு இந்தா உனக்கு ஒரு சேலை, இந்தா உனக்கு ஒரு பேன்ட், இந்தா உனக்கு ஒரு கைலி என்று தூக்கி எறிகிறார்களே அதுவல்ல ஜகாத், அது தர்மம்.

நீங்கள் அல்லாஹ்வுடைய விருப்பத்தை நாடி, முகத்தை நாடி எதை கொடுத்தாலும் சரி. ஆனால், மட்டமானதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உங்களுக்கு முடிந்ததை நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றால் அதற்கு கண்டிப்பாக அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு. ஆனால், அந்த தர்மத்தை நீங்கள் ஜகாத்தாக ஆக்கிவிடாதீர்கள்.

ஜகாத் என்பது வியாபாரப் பொருளாக இருந்தால் எப்படி கொடுக்க வேண்டும்? தங்கம், வெள்ளியாக இருந்தால் எப்படி கொடுக்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகமாக இருந்தால் எப்படி கொடுக்க வேண்டும்? விவசாய நிலமாக இருந்தால் அதற்கு எப்படி கொடுக்க வேண்டுமென்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சட்ட வரம்பு உள்ளது. அதன் அடிப்படையில் ஜகாத் நிறைவேற்றப்பட வேண்டும்.

அல்லாஹ் கூறிய எட்டு வகையினரில் ஒரு வகையினருக்கோ அல்லது அந்த எட்டு வகையினருக்கோ அல்லது அவர்களில் சிலருக்கோ பங்கு வைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக தன்னிடத்தில் அந்த எட்டு வகையினரில் ஒருவருடைய நிர்பந்தத்தை முழுமையாக ஓராண்டிற்கு நீக்கக்கூடிய அளவிற்கு வசதி இருக்குமேயானால் அது எவ்வளவு இலட்சமாக இருந்தாலும் சரி, அதை அப்படியே அவரிடத்தில் எடுத்துக் கொடுப்பது ஜகாத்.

ஒரு ஏழை அவர் ஓர் ஆண்டு வாழ்க்கை நடத்துவதற்கு, அவருடைய வீட்டு வாடகை, அவருடைய பிள்ளைகளின் படிப்பு, அவருடைய குடும்பத்தினுடைய உணவு தேவை, உதாரணத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஒரு மாதத்திற்கு தேவை என்றால், அந்த ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாயை அந்த ஒரு ஏழைக்கு அப்படியே கொடுப்பது. இது அல்லாஹ் தஆலா உங்களுக்காக நிர்ணயித்த உங்களது ஹக்.

இதை நீங்கள் மனமுவந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவரை தேடிச் சென்று நீங்கள் கொடுத்து வருகிறீர்கள் அல்லவா இது ஜகாத்.

ஐந்து ரூபாய், பத்து ரூபாயை மாற்றி வைத்துக் கொண்டு வரக்கூடியவர்களுக்கு போடுவது ஜகாத் அல்ல. பல முஸ்லிம் வியாபாரிகள் சட்டங்களை தெரியாத காரணத்தால், பல முஸ்லிம் செல்வந்தர்கள் ஷரீஅத்தின் அந்த ஒழுக்கங்கள் தெரியாத காரணத்தால் அறியாமையில் இருக்கிறார்கள்.

உபரியான தர்மத்தை சாதாரணமாக கொடுக்கக்கூடிய தர்மத்தை ஜகாத்தாக எண்ணி வைத்திருக்கிறார்கள். அல்லது ஜகாத்தை உபரியான தர்மத்தை போன்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நிறைவேறாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து அல்லாஹ் கூறுகிறான், முஃமினான வியாபாரங்களில் ஒழுக்கங்களில் முக்கியமான ஒன்று. அவர்கள் எப்பொழுதும் மறுமையை பயப்படுவார்கள்.

மறுமையின் ஒன்று தான் ஒரு மனிதனை அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளில் நிறுத்தி வைத்திருக்க முடியும். ஆசைகள் ஆயிரம் வந்தாலும் சரி, அல்லது வறுமையின் பயம் சுற்றி நின்றாலும் சரி, நான் ஹலாலை தான் செய்வேன் என்ற உறுதியை கொடுக்கக்கூடியது மறுமையின் பயம் ஒன்று தான்.

அந்த பயத்தை முஸ்லிம் வியாபாரி எப்போதும் தன் உள்ளத்தில் கொண்டிருப்பான். இந்த ஒழுக்கங்களை அல்லாஹ் கூறுகிறான். மேலும் இன்ஷா அல்லாஹ் பல விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/