HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 8-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 8-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 8-8) | Tamil Bayan - 387


காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 8-8)

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 25-03-2016 | 16-06-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் பயத்தை, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்தின்படி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக, அல்லாஹ் தடுத்த சிறிய பெரிய பாவங்களை விட்டு விலகிக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் என்ற தலைப்பின் கீழ் இன்றைய முஸ்லிம் சமுதாயம் எந்த அளவு மாற்றுமத கலாச்சாரத்தில் சீரழிந்து வருகிறது, இந்த மாற்றுமத மக்களின் பண்பாடுகள் அவர்களின் மடத்தனமான, மூர்க்கத்தனமான, இழிவான கலாச்சாரங்கள். நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தை எந்தளவு பாதித்திருக்கிறது என்பதை பற்றி தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம்.

அல்லாஹு தஆலா நமது உள்ளங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவானாக! சீர்திருத்தத்தை வழங்குவானாக!

இன்று,சிலருக்கு இப்படி பேசுவது, இது தேவைதானா? இப்படிப்பட்ட தலைப்புகளெல்லாம் ஜும்ஆவில் தேவைதானா? என்றெல்லாம் சிந்திப்பதுண்டு.

அல்லது சிலர்,இத்தனை வாரமாக தொடர்ந்து இதை பேசிக் கொண்டு வரவேண்டிய அவசியம் இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி கேட்பதுண்டு.

சிலர் கேட்கலாம், சிலர் மனதிற்குள் வைத்திருக்கலாம்.

அல்லாஹ்வுடைய சட்டத்தின் மதிப்பை புரிந்தவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கேள்வி வராது. ரப்புல் ஆலமீனை பொறுத்தவரை அவன் கொடுத்திருக்கின்ற மார்க்கத்தை தவிர உள்ள மற்ற அனைத்தும் வழிகேடுகள்.

அல்லாஹ்வுடைய தீனை தவிர உள்ள அனைத்து சித்தாத்தங்களும், சிந்தனைகளும், கலாச்சாரங்களும், கோட்பாடுகளும், பழக்க வழக்கங்களும் மனிதனுக்கு தீமையை தரக்கூடியவை.

ஆகவேதான், அல்லாஹு தஆலா வணக்க வழிபாட்டுடைய சட்டங்களை மட்டும் குர்ஆனில் கூறவில்லை. திருமணத்தின் சட்டத்தை அல்லாஹ் கூறியிருக்கிறான். சொத்துரிமையின் சட்டத்தை அல்லாஹ் கூறியிருக்கிறான்.

குற்றவியல் சட்டத்தை அல்லாஹ் கூறியிருக்கிறான். குணங்களை பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான். தனிமனித ஒழுக்கத்தை பற்றி, சமூக ஒழுக்கத்தை பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்.

இப்படி வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியையும் விட்டு வைக்காமல் அத்தனை பகுதிகளுக்கும் தேவையான வழிகாட்டுதலை குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெளிவுபடுத்தி, அதற்கு மேலதிக விளக்கமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை செயல்வடிவ விளக்கமாக அமைத்துக் கொடுத்தும் இருக்கிறான்.

இதன் நோக்கம் என்ன?மஸ்ஜிதுகளில் அல்லாஹ்விற்கு நாம் இபாதத் செய்து விட்டு, பிறகு மஸ்ஜிதிற்கு வெளியுள்ள வாழ்க்கையை எப்படி வாழ்ந்தால் என்ன? அதைப் பற்றி அல்லாஹ்விற்கு எந்த விதமான பொருட்டும் இல்லை, அல்லாஹ் இபாதத்துகளை கொண்டு அனைத்தையும் மன்னித்து விடுவான் என்று இருக்குமேயானால், இபாதத்துடைய சட்டங்களையும், ஒழுக்கங்களையும் மட்டும் அல்லாஹு தஆலா கூறியிருப்பான்.

வேறு ஒழுக்கங்களை, சட்டங்களை அல்லாஹ் கூறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக, இன்னும் ஆழமாக அல்குர்ஆனை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா வணக்க வழிபாட்டின் சட்டங்களை ஒரு வசனத்தில், இரண்டு வசனத்தில் முடித்து விடுவான்.

அதற்குரிய விளக்கங்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயலில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் விட்டு விடுவான்.

ஆனால், பொருளாதாரம், குடும்பவியல், திருமண வாழ்க்கை, குற்றவியல் சட்டங்கள் என்று வரும்பொழுது விரிவாக வணக்க வழிபாடுகளை விவரித்த அளவை விட, வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறிய வசனங்களை விட, இவற்றுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விளக்கங்களை அதிகமாக அல்குர்ஆனில் கொடுத்திருக்கிறான்.

அல்குர்ஆனில் வணக்க வழிபாடுகளை விவரிக்கின்ற வசனங்களை விட, இப்படி சொத்துரிமை, குற்றவியல் சட்டங்கள், குடும்பவியல் சட்டங்கள், பொருளாதார சட்டங்களை விவரிப்பதற்குரிய வசனங்கள் அதிகம் என்பதை குர்ஆனை சிந்திப்பவர்கள், வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இதிலிருந்து நாம் புரிகிறோம்; அல்லாஹ்வுடைய தீன் என்பது துறவிகள் நம்பி வைத்திருப்பதை போன்று, வணக்க வழிபாட்டுக்குள்ள மார்க்கம் மட்டுமல்ல. முழு வாழ்க்கையை சீர்படுத்தி ஒரு அடியானை அல்லாஹ் விரும்பக்கூடிய அந்த நேரான பாதையில் நிறுத்தி, இந்த உலகத்திலும் அவன் நிம்மதியாக வாழ்ந்து, இந்த உலகத்திலும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்று, அவருடைய ஹலாலான தேவைகளை, ஹலாலான ஆசைகளை ஹலாலான வழியில் அடைந்து, அல்லாஹ்வின் திருப்தியோடு அவன் மறு உலகத்திற்கு பயணமாக வேண்டும். இதுதான் அல்லாஹ்வுடைய அழகிய மார்க்கம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இது விஷயத்தில் தனது நபியுடன் கூட அவன் சமரசம் செய்து கொள்ளவில்லை.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் மூத்த முதல் சமுதாயமாக வாழ்ந்த அந்த கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களின் சமுதாயத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சீர்படுத்தினான். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அல்லாஹ் சீர்படுத்தினான்.

எந்த வகையிலும் ஜாஹிலிய்யா கலாச்சாரத்தின் வாடை, நபியின் மீது வீசி விடக்கூடாது. அந்த நபியின் சமுதாயத்தின் மீது வீசி விடக்கூடாது. அதிலிருந்து வெகு தூரம் விலகியிருக்கக்கூடிய பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு சமுதாயமாக நபியும் நபியின் தோழர்களும் இருக்க வேண்டுமென்பதில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மிக அழுத்தம் திருத்தமான சீர்திருத்தங்களை முன் வைத்தான்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பெரிய புரட்சியை இந்த ஜும்ஆவின் தொடக்கத்தில் நாம் கூறினால் மிக பொருத்தமாக இருக்கும்.

ஜாஹிலிய்யாவின் வழக்கப்படி குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வது, ஒரு வழக்கமாக பண்பாடாக இருந்தது.

குழந்தை இருந்தாலும் இல்லையென்றாலும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வார்கள். தனது பிள்ளையாக ஆக்கிக் கொள்வார்கள்.

அந்த பிள்ளையின் தந்தையின் பெயரை போக்கி விட்டு, தனது பெயரை அந்த பிள்ளையின் தந்தையிடத்தில் வைத்து, எனது மகன் என்று கூறுகின்ற அளவிற்கு அவர்களுடைய கலாச்சாரம் இருந்தது. இது ஒன்று.

இரண்டாவது, அப்படி வளர்க்கக்கூடிய அந்த பிள்ளை, ஆண் பிள்ளையாக இருக்கும் பொழுது, அந்த பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்ததற்கு பிறகு, ஏதாவது காரணங்களால் தலாக் ஆகிவிட்டால், அந்த வளர்ப்பு மகன் தனது மனைவியை தலாக் செய்துவிட்டால், அந்த மகனை வளர்த்த தந்தைக்கு அந்த பெண்ணை நிரந்தர ஹராமான பெண்ணாக, திருமணம் முடிப்பதில் தடுக்கப்பட்ட பெண்ணாக அரபு குலத்தவர்கள் பாவித்துவந்தார்கள்.

எப்படி சொந்த மகனுடைய மனைவியை நிரந்தர ஹராமாக்கப்பட்ட பெண்ணாக பாவித்து வந்தார்களோ, அது போன்று.

சொந்த மகன் தனது மனைவியை தலாக் செய்துவிட்டால், அந்த மகனின் தந்தை அந்த பெண்ணை திருமணம் முடிக்க முடியாது. நிரந்தர ஹராமாக விடுகிறாள்.

இதே போன்று, வளர்ப்பு மகனுடைய மனைவியையும் பாவித்து வந்தார்கள். இது ஒரு கலாச்சாரமாக இருந்தது.

இந்த நிலையில் அல்லாஹ்வுடைய சட்டம் இறங்குகிறது. வளர்ப்பு மகன் உங்களது மகன் அல்ல, நீங்கள் வளர்த்தாலும், அந்த மகனுக்குரிய தேவைகளை வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் சரியே.

அல்லாஹ் கூறுகிறான்:

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள். -அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால், அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:5)

இப்படி ஒரு மிக அழுத்தமான கட்டளையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெரிவுபடுத்தினான்.

அதற்கு பிறகு அந்த வளர்ப்பு மகன், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டால், அந்த மகனை வளர்த்த தந்தை அந்த பெண்ணை திருமணம் முடிப்பதில் எந்த குற்றமும் இல்லை, எந்தவிதமான அறுவறுப்பும் இல்லை, இதில் எந்த விதமான கேவலமும் இல்லை என்ற சட்டம் வந்தது.

அந்த பெண், அந்த மகனுடைய நிக்காஹ்விலிருந்து விலகிவிட்டால் மற்ற ஆண்களுக்கு அந்த பெண் எப்படி ஹலாலாகி விடுகின்றாளோ, அப்படித்தான் அந்த வளர்ப்பு மகனின் தந்தைக்கும் ஹலாலாகி விடுகின்றாள் என்ற சட்டத்தை அந்த அரபுலகத்தில் குர்ஆன் கூறியது.

இப்படி ஒரு சட்டம் இறக்கப்பட்டு அந்த சட்டத்தை எழுதப்பட்ட ஏட்டிலேயே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விட்டு வைத்துவிட்டானா? என்றால், கிடையாது.

இதுதான் நாம் இங்கே சிந்திக்க வேண்டிய ஒன்று.

இந்த சமுதாயத்தின் சீர்திருத்தத்தை பற்றி பேசப்போனால், எல்லோருக்கும் என்ன ஒரு வார்த்தை முந்துகிறதென்றால், சரி இருக்கு, அதை ஏற்றுக் கொள்ளதானே செய்கிறோம். செய்ய வேண்டுமென்ற அவசியமா? அதை ஏற்றுக் கொண்டால் போதாதா? என்பதாக ஒரு கேள்வி.

அன்பானவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எழுதப்பட்ட சட்டமாகவோ, மஸ்ஜிதில் பிரச்சாரம் செய்யப்படும் சட்டமாகவோ மட்டும் இதை விடவில்லை.

இந்த சட்டத்தை அமல் படுத்துவதற்கு முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான்

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தனது குலத்தை சேர்ந்த ஜைனப் பின்த் ஜஹ்ஷ் என்ற குரைஷி பெண்மனியை, தான் வளர்த்து தனது அடிமையாக இருந்து, பிறகு உரிமைவிட்ட ஜைது இப்னு ஹாரிஸாவிற்கு மணமுடித்து தருகிறார்கள். பிறகு ஜைது அந்த பெண்ணை விவாகரத்து செய்து விடுகிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பெண்ணை மணமுடிக்கலாமா? வேண்டாமா? என்று அவர்களது உள்ளத்தில் தடுமாற்றம் இருந்தது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, ஜைனபை நீங்கள் மணமுடிக்க வேண்டுமென்று கட்டளையாக இறக்கி விடுவானோ என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயப்படவும் செய்தார்கள்.

எதற்காக பயந்தார்கள்? ஜைது தனது வளர்ப்பு மகனாயிற்றே, வளர்ப்பு மகனுடைய மனைவியை விவாகரத்து பெற்றுவிட்டால் ஹலாலாகி விடுகின்றாளே, அல்லாஹு தஆலா அந்த பெண்ணை வளர்த்த தந்தையை மணமுடித்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கியிருக்கிறானே, அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டளை எனக்கே வந்துவிடுமோ! என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயப்படுகிறார்கள்.

எதனால் இந்த பயம்,ஒட்டு மொத்த அரபுலக பண்பாட்டை கலாச்சாரத்தை எதிர்ப்பது, அந்த நம்பிக்கையை தகர்த்தெறிவது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, தனது நபிக்கு, நீங்கள் தயங்கக்கூடாது; நீங்கள் பயப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்று கூறி, ஜைது தலாக் விட்ட அந்த பெண்ணுடைய இத்தா காலம் முடிந்தவுடன், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் அந்த பெண்ணை மணமுடித்து வைத்தான்.

فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا

ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர்ஆன் 33:37)

அல்லாஹ்வுடைய சட்டம் பின்பற்றப்பட வேண்டும், அல்லாஹ்வுடைய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லாஹ்வுடைய சட்டம் கண்டிப்பாக மக்களால் எடுத்து நடக்கப்பட வேண்டும். இது தான் அல்லாஹ்வின் விதி என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தனது ரஸூலிடமிருந்து அந்த புரட்சியை தொடங்கி வைத்தான்.

வாழ்க்கையில் கலாச்சாரம் மாற்றம் என்பது,இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று. ஒரு முஸ்லிம் அந்நிய மதத்தின் கலாச்சாரத்தோடு எந்த வகையிலும் ஒத்துப் போகமுடியாது.

அவர்களுடைய கலாச்சாரம் அறியாமையினால் ஏற்பட்ட ஒன்று. அவர்களது கலாச்சாரம் மனித சிந்தனையில் உருவான ஒன்று. அவர்களது கலாச்சாரம் மூட பழக்க வழக்கங்களால் ஏற்பட்ட ஒன்று.

அல்லாஹ்வுடைய இஸ்லாம் மார்க்கத்தின் கலாச்சாரம், அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஒன்று. அவனுடைய தூதர்கள் மூலமாக மக்களுக்கு போதிக்கப்பட்ட ஒன்று.

ஆகவே, இஸ்லாமிய கலாச்சாரமும், காஃபிர்களின் கலாச்சாரமும் எப்படி ஒத்துப் போகமுடியும்?

ஒரு முஸ்லிம், அவர்களின் கலாச்சாரத்தை எப்படி தனக்கோ தனது சமுதாயத்திற்கோ ஏற்றுக் கொள்ள முடியும்?

இதே வசனத்தில், ஸூரத்துல் அஹ்ஸாபுடைய 36, 37-வது வசனங்களில் இன்னும் ஒரு விஷயத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எழுதுகிறான்.

அதாவது,அந்த அரபுலக கலாச்சாரத்தில் உயர்ந்த குலத்தவர்கள் உயர்ந்த குலத்தவர்களை தான் மணமுடிப்பார்கள்.

அங்கே குலத்தின் அடிப்படையில், பரம்பரையின் அடிப்படையில், வமிச ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் தான் திருமணங்கள் நடைபெற்றன.

பணம், வசதி, அந்தஸ்து, தலைமைத்துவம் இதன் அடிப்படையில் தான் அங்கே பெண் கொடுக்கப்பட்டது, பெண் எடுக்கப்பட்டது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தான் வளர்த்து, தனது அடிமையாக இருந்து உருவாக்கி பிறகு உரிமைவிடப்பட்ட ஜைதை, தனது குலத்தை சேர்ந்த ஜைனபிற்க்கு (தனது மாமி மகளை) மணமுடித்து வைப்போமென்று ஆசைப்பட்டார்கள். அதற்கு ஜைது இஸ்லாமிய மார்க்கத்தின் தகுதியால் முற்றிலும் தகுதியானவராகவே இருந்தார்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜைனபிடத்தில் செல்கிறார்கள். ஜைனபே! நான் உன்னை ஜைதிற்கு மணமுடித்து தர விரும்புகிறேன் என்று கூற, ஜைனப் அவர்கள், யா ரஸூலுல்லாஹ்! நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

அவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள்?என்றால்,ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறார்கள், இவரை நீ மணமுடித்துக் கொள்ளலாமே, என்று அவர்கள் விரும்புவதை போல நினைத்துக் கொண்டு, ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா மறுக்கிறார்கள்.

ஆனால், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த நோக்கம், குரைஷிகள் இவர்கள் தான் மேன்பட்டவர்கள், உயர்ந்தவர்கள், மேலானவர்கள். அடிமைகளெல்லாம் தாழ்ந்தவர்கள் என்று இருந்த மனநிலையை தரைமட்டமாக்க வேண்டும்.

அப்படி ஒரு எண்ணம் இனி மேலோங்க கூடாது. வமிசத்தால், பரம்பரையால், குலத்தால் ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது என்பதை சமுதாயத்தில் பிரச்சாரத்தால் செய்தால் மட்டும் போதாது. சமுதாயத்தில் கருத்துகளால் மட்டும் பதிவு செய்தால் போதாது.

அதை தனது குடும்பத்தில் நடைமுறைப்படுத்தி காட்ட வேண்டுமென்று சீர்திருத்தவாதிகளின் உண்மையான தலைவராகிய முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள்.

இன்று கூட பார்க்கலாம், சில ஊர்களில் சில தெருக்களை வைத்திருப்பார்கள். அல்லது சில வமிசப் பெயர்களை வைத்திருப்பார்கள்.

அந்த பெயர் எங்கிருந்து வந்தது? என்று கேட்டால் வரலாறு தெரியாது. சில ஊர்களில் மரைக்காயர் என்று வைத்திருப்பார்கள். சில ஊர்களில் ராவுத்தர் என்று வைத்திருப்பார்கள்.

சில ஊர்களில் சில தெருக்களை ஒதுக்கிக் கொள்வார்கள். அந்த தெருக்களில் உள்ளவர்கள் அந்த தெருக்களில் உள்ளவர்களோடு தான் ஒப்பந்தம் செய்வார்கள், திருமணம் முடிப்பார்கள். மற்ற தெருக்களில் உள்ளவர்களையெல்லாம் மட்டமானவர்கள். அவர்களையெல்லாம் கீழ் ஜாதியை போன்று பார்ப்பார்கள்.

இப்படி பல விதமான கலாச்சார சீர்கேடுகள் இன்றைய சமுதாயத்திலும் இருப்பதை பார்க்கிறோம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த குரைஷி வமிசம் என்பது, இவர்களுடைய வமிசத்தை போன்று கிடையாது. உண்மையிலேயே பெருமையடிப்பதற்கு தகுதியான ஒரு குலம் இருக்கிறதென்றால் அது குரைஷி குலம்.

காரணம்,அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அதற்கு அவ்வளவு பெருமைகளை கொடுத்திருந்தான். குர்ஆனிலேயே ஒரு குலத்தின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறதென்றால் அது குரைஷி குலத்தின் பெயர் தான்.

لِإِيلَافِ قُرَيْشٍ (1) إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ

குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக.(அல்குர்ஆன் 106:1,2)

கஃபத்துல்லாஹ்விற்கு இருக்கக்கூடிய சிறப்பு, அல்லாஹ்வுடைய ஊர் மக்காவிற்கு இருக்கக்கூடிய சிறப்பு,அதை பெற்றவர்கள் குரைஷிகள்.

அந்த சிறப்புகளை பெற்றிருந்தும் கூட,அந்த சிறப்புகளை வைத்து மக்களை ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது என்பது அல்லாஹ்வின் சட்டம்.

அதை வைத்து நீங்கள் பெருமையடிக்கக்கூடாது. நீங்கள் மக்களை மட்டமாக்கக்கூடாது.இது அல்லாஹ்வுடைய சட்டம்.

பார்க்க – தஃப்சீர் தபரி : 20/271

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படியென்றால் அதை செயல்முறையில் நடத்திக்காட்ட வேண்டுமே!என்ன செய்வது?

எனவே, தனது வளர்ப்பு மகனாகிய அடிமையாக இருந்த ஜைதிற்கு, தனது மாமி மகளான ஜைனபை தேர்ந்தெடுத்தார்கள்

பேச்சு வார்த்தை நடக்கிறது. ஜைனப் முடியுமா? முடியாதா? என்று தயங்குகிறார். ஜைனபுடைய குடும்பத்தார்கள் தயங்குகிறார்கள்.

இந்த பேச்சு வார்த்தை இப்படியே நடந்து கொண்டிருக்கும் பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாகிறார்கள். அவர்களது முகம் வியர்க்கிறது. ரஸூலுல்லாஹ்விற்கு வஹி இறங்கினால் அப்படி தான் முகம் வியர்த்து விடும்.

அதற்கு பிறகு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜைனபை அழைத்து இந்த வசனத்தை ஓதுகிறார்கள்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.(அல்குர்ஆன் 33:36)

வசனத்தின் ஆழத்தை கவனியுங்கள்!அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் ஒன்றை தீர்ப்பு செய்துவிட்டால் முஃமினான ஆணுக்கும் பெண்ணிற்கும் அனுமதியே கிடையாது, அதற்கு மாற்றமான விருப்பத்தை மனதில் வைப்பதற்கு.

எனவே, அவர்கள் கட்டுப்பட்டு விட்டார்கள்.ஆனால், மனதில் அந்த சட்டத்தை விரும்பவில்லை என்றால், அதற்கும் அனுமதி இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

உடலால், உறுப்புகளால், செயல்களால் கட்டுப்படுவது மட்டுமல்ல. உங்களுடைய மனம் நீங்கள் விரும்பியதை விட்டு விட்டு அல்லாஹ்வின் சட்டத்தை விரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் முஃமின்களே அல்ல.

எவ்வளவு பயங்கரமான அழுத்தமான சட்டம்!இங்கே எத்தனையோ விஷயங்களை நம்முடைய சமுதாயத்தில் பலர் ஏற்றுக் கொள்வதே இல்லை.

மனதில் ஏற்றுக் கொள்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் பாருங்கள்.

இன்று சிலர்,ஏதாவது ஒரு நிர்பந்தத்தில் ஷரிஅத்தின் சட்டங்களை ஏற்றுக் கொண்டாலும் கூட,உள்ளம் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறது. உள்ளத்தில் அதன் மீது நாட்டம் இல்லாமல் இருக்கிறது. வேறு வழியில்லை, என்ன செய்வது? செய்துதான் ஆக வேண்டும் என்பதாக செயலில் ஏற்றுக் கொள்கிறார்கள்,மனமோ அதை வெறுத்துக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான், ஒரு முஃமினான ஆணுக்கும், ஒரு முஃமினான பெண்ணுக்கும் அனுமதியில்லை. அவர்கள் தங்களது காரியத்தில் வேறு ஒரு விருப்பம் இருப்பதற்கு, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் ஒன்றை தீர்ப்பு செய்துவிட்டால்.

யார் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரஸூலுக்கும் மாறு செய்கிறார்களோ அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். வசனத்தின் கருத்து - (அல்குர்ஆன் 33:36)

மேலும்,அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தனது நபிக்கு கூறுகிறான்:

ثُمَّ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ

பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.(அல்குர்ஆன் 45 : 18)

அறியாத ஜாஹில்கள், இணைவைப்பாளர்கள், மாற்றுமத மக்கள், அவர்களுக்கு மறுமை தெரியாது, மார்க்கம் தெரியாது, சத்தியம் தெரியாது, நீதம் தெரியாது, ஒழுக்கம் தெரியாது, எதில் நன்மை இருக்கிறது என்பது தெரியாது.

அவர்களுடைய கலாச்சாரத்தை நபியே! நீங்கள் எப்படி பின்பற்ற முடியும்? நாம் கொடுத்த ஷரீஅத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் தனது நபிக்கு கூறுவதின் மூலமாக நமக்கு அந்த கட்டளையை கூறுகிறான்.

இந்த அடிப்படையில் திருமணத்தைக் குறித்து நாம் பேசியிருந்த பல விஷயங்களில், இன்றைய சமுதாய மக்கள் அல்லாஹ்வுடைய தீனை எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் எனபதை கவனியுங்கள்!

மாற்றி வைத்தது மட்டுமல்ல, அல்லாஹ்வுடைய தீனை மறுக்கக்கூடிய அளவிற்கு இன்றைய சமுதாயத்தின் கலாச்சாரம் மாறியிருக்கிறது. குறிப்பாக, சமுதாயத்தில் விதவைகளைப் பற்றி பேசினோம். தலாக் விடப்பட்ட பெண்களைப் பற்றி பேசினோம்.

சமுதாயத்தில் வசதி குறைவான பெண்கள்,திருமணமாகாமல் தேங்கியிருப்பதைப் பற்றி பேசினோம்.

பல காரணங்களுக்காக, சமுதாய பெண்கள் திருமணம் சிரமமாகி விட்ட காரணத்தினாலும், திருமணத்திற்கான சடங்குகள் சிரமமாகி விட்ட காரணத்தினாலும், திருமண முடிக்காத கன்னிகள் தேங்கியிருப்பதை நாம் பார்த்தோம். அதற்கு என்ன மார்க்கம் தீர்வு சொல்லுகிறது என்பதை அங்கங்கே நாம் கூறி வந்தோம்.

அந்த அடிப்படையில்,இஸ்லாமிய கலாச்சாரத்தின் தூய்மையான பழக்கவழக்கங்களில் ஒன்று, ஒரு ஆண் அவனுக்கு தேவைப்படும்பொழுது, அவன் அவனுடைய தேர்வின் படி, பல மனைவிகளை (நான்கு) மணமுடித்து, அவர்களோடு அழகிய முறையில் குடும்பம் நடத்துவது.

இது, ரஸூலுல்லாஹ்வுடைய கலாச்சாரமாக இருந்தது. இது, கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களின் கலாச்சாரமாக இருந்தது.

இப்படி, பல மனைவிகளோடு வாழ்வது,தவறான ஒன்றாகவோ அல்லது அது ஒரு அத்துமீறிய அசிங்கமான இச்சையின் வெளிப்பாடாகவோ இருந்திருக்குமேயானால், அந்த செயலை அல்லாஹு தஆலா ரஸூலுல்லாஹ்விற்கு திருப்திக் கொண்டிருக்க மாட்டான்.

தங்களது நபியின் தூய சமுதாயத்திற்கு இறைவழிபாட்டில் அவர்களை போன்று ஒரு சமுதாயம் வர முடியாது. தனது காலில் அம்பு குத்தினால் என்ன? அதனால் தனது உயிர் பிரிந்தால் என்ன? நான் தொழுகையை விடமாட்டேன் என்ற அளவிற்கு இறைவழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த அந்த பரிசுத்தமான சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்புவானா?

ஆனால் இன்று, யாராவது எங்கேயாவது ஒன்றுக்கும் மேற்பட்டு இரண்டோ, மூன்றோ திருமணம் செய்திருந்தால் அதோ அவரை பாருங்கள். அவர் இரண்டு கல்யாணம் பன்னியிருக்கிறார் என்று ஒரு வித்தியாசமாக பார்க்கப்படுவதை அல்லது சொல்லப்படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றின் அந்த கண்ணியமிக்க முதல் காலத்தில், யாராவது ஒருவர் ஒரு திருமணம் செய்திருந்தால் அவரை சமுதாயத்தில் தேடிப்பிடிக்க வேண்டும்.

அப்படியென்றால், சமுதாயத்தில் எல்லோரும், நபியிலிருந்து, மூத்த ஸஹாபாக்களிலிருந்து, இளைய ஸஹாபாக்கள் எனஎல்லோரிடத்திலும் இது பரவலாக பின்பற்றப்பட்ட ஒரு கலாச்சாரமாக இருந்தது.

இதில் எந்த விதமான அசிங்கத்தையோ, அறுவறுப்பையோ, ஆபாசத்தையோ அவர்கள் பார்க்கவில்லை.

யாராவது, நோயின் காரணமாகவோ அல்லது வேறு சில நிர்பந்தத்தில் தான் அவர்கள் ஒரு மனைவியோடு வாழ்ந்தார்களே தவிர, அந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரமும் இப்படி தான் இருந்தது.

ஆண்களும் ஏற்றார்கள், பெண்களும் அதை ஏற்றிருந்தார்கள், பெண்களின் பொறுப்பாளர்களும் அதை ஏற்றிருந்தார்கள், ஆண்களின் பொறுப்பாளர்களும் ஏற்றிருந்தார்கள்.

இப்படியாக, காலம் மாறி வந்து, இந்த சுன்னா விடப்பட்ட போது, இன்றைய சமுதாய மக்களின் சூழல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பொறுத்தவரை, இப்படிதான் மக்களுக்கு மத்தியில் மாற்றங்கள் ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக! இந்த மாற்றம் நல்ல மாற்றமல்ல.

முதலில் ஒரு சுன்னத்தை இது தேவை தானா? நாம் செய்ய வேண்டுமா? என்பதாக விடுவார்கள்.

சுன்னத்துதானே! செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? தப்பில்லையே, குற்றமில்லையே, என்பதாக முதலில் அந்த சுன்னத்தை விடுவார்கள். இந்த நிலை முதலில் ஏற்படும்.

இரண்டாவதாக, யாராவது அதை செய்தால் இவருக்கு இது தேவையா? இந்த காலத்திற்கு இது தேவையா? என்பதாக பேசுவார்கள்.

மூன்றாவதாக, அந்த சுன்னத்தை விமர்சனம் செய்வார்கள். அதற்கு வேறு ஒரு தவறான அர்த்தம் போதிப்பார்கள்.

நான்காவதாக, அந்த சுன்னத்தை செய்வதை தடை செய்வார்கள், அந்த சுன்னத்தை எதிர்ப்பார்கள். அதை செய்யக்கூடாது என்று சமுதாயத்தில் தடைகளை ஏற்படுத்துவார்கள். அதை செய்பவர்களை சமுதாயத்தில் அந்நியர்களாக பார்ப்பார்கள்.

இது, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெரும்பான்மையான முக்கியமான சுன்னத்துகளில் ஏற்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

அப்படி ஏற்பட்ட சுன்னத்துகளில் ஒன்று தான், இந்த பலதார மணம் என்பது, இது தேவை தானா? சுன்னத்து தானே! செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லையே! என்று சமுதாயத்தின் பெரும்பான்மையானவர்கள் அதன் தேவை இருந்தும், அதற்கு தனக்கு தகுதி இருந்தும், அது சமுதாயத்தில் அவசியமான ஒன்றாக இருந்தும், அதற்குரிய தகுதியுள்ளவர்கள் விட்டார்கள்.

அதற்கு பிறகு, யாராவது முன் வந்து செய்தால், அவரை வித்தியாசமாக பார்த்தார்கள். வேண்டப்படாத ஒரு பூச்சியை பார்ப்பதை போல, அருவருப்பான ஒரு புழு பூச்சியை பார்ப்பதை போல அவர்களை பார்த்தார்கள்.

அதற்கு பிறகு, அவர்களை விமர்சனம் செய்தார்கள். அவருடைய மனைவியால் அவருக்கும் திருப்தியில்லை போலும். அதனால்தான் அவர் வேறு ஒரு பெண்ணை நாடுகின்றார் அல்லது அவரது மனைவி தன்னுடைய கணவனை திருப்திபடுத்துவதற்கு அவளுக்கு தெரியவில்லை. தனது கணவனை கைக்குள் வைத்திருப்பதற்கு அவளுக்கு தெரியவில்லை. அவளெல்லாம் ஒரு பெண்ணா?

தனது கணவன் திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கின்றால், எப்படி அவள் ஏற்றுக் கொண்டால்? என்று அந்த பெண்ணையே விரோதியாக பார்த்து, அந்த பெண்ணோடு நட்பை முறிக்கக்கூடிய பெண்களையும் பார்க்கிறோம்.

அதுபோன்று, அந்த திருமணம் முடித்த அந்த ஆண், தன்னுடைய கணவருக்கு நண்பராக இருந்தால், அவரோடு தயவு செய்து நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றிலிருந்து அவருடன் பேசுவதோ, அவருடன் செல்வதோ, அவரை பார்ப்பதோ, ஸலாம் சொல்வதோ வைத்துக் கொள்ளாதீர்கள்.

அவரை முன்பு வீட்டிற்கு அழைத்து வரக்கூடிய பழக்கம் இருந்தால், இதோடு அதை நிறுத்திவிடுங்கள் என்று கட்டளையிடுவார்கள்.

சில நேரங்களில் போனில் பேசினால் கூட, இங்கே எண்ணை சட்டியில் கடுகு பொறிப்பதை போல அந்த பெண்களுடைய முகம் மாறிவிடுவதை நாம் கேள்விப் படுகிறோம்.

இதற்கு என்ன காரணம்? வெறுப்பு, ஒரு விதமான காழ்ப்புணர்ச்சி. இப்லீஸ் அதை போதிக்க போதிக்க அந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

திருமணங்களில் செல்லும்பொழுது, பொது இடங்களில் செல்லும் பொழுது, இவர் தான் அவர். அதான் இரண்டு கல்யாணம் பண்ணியிருக்கிறார் என்று குத்திப் பேசுவார்கள்.

ஜினா –விபச்சாரம் செய்வதை அங்கீகரித்துக் கொள்கிறார்கள். கல்லத் தொடர்புகளை, அசிங்கமான ஆபாசங்களை எல்லாம் அங்கீகரித்துக் கொள்வார்கள்.

ஆனால், இரண்டு மனைவியோடு ஹலாலாக நிக்காஹ் செய்து அல்லாஹ்வின் சட்டத்தின்படி வாழக்கூடியவர்களை, கேவலமாக பேசுகிறார்கள். அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

அதுபோன்று, அவருடைய மனைவி எங்கேயாவது சமுதாயத்தில் பொது இடங்களுக்கு வந்தால்,இவள் தான் அவள். இவள் தான் அவருக்கு இரண்டாவது பொண்டாட்டி என்று அப்படியே ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

காஃபிர்களில் மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதி மக்களை பார்ப்பதை போன்று பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

இங்கே இன்னொரு வேதனை என்ன என்றால்,இஸ்லாமிய மார்க்கத்தில் முதல் மனைவி, இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி, நான்காவது மனைவி என்று கிடையாது.

இஸ்லாமில் நான்கு மனைவிகள். இவள் ஒரு மனைவி, இவள் ஒரு மனைவி, இவள் ஒரு மனைவி. நீங்கள் ஒரு மனைவியோடு முப்பது ஆண்டுகள் இருந்து மௌத்திற்கு முன்னால் திருமணம் செய்தாலும் அவளும் ஒரு மனைவி தான்.

முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மனைவிக்கு என்ன உரிமையோ, அதே உரிமை இவளுக்கும் உண்டு.

இஸ்லாமில் முதல் தாரம், இரண்டாவது தாரம், மூன்றாவது தாரம் என்பதில்லை. எல்லோரும் மனைவிகள். எல்லோருக்குமே சம உரிமை.எல்லோருக்குமே கண்ணியம் உண்டு.

ஆனால், இன்று அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்துவிட்டால், அந்த பிள்ளைகளுக்கு சமூக அந்தஸ்தே இருக்காது. தனது அடுத்த மனைவியின் மூலமாக பிறந்த பிள்ளைகள் பகைக்கப்படுகிறார்கள்.

சமுதாயத்தின் ஏனைய மக்கள் மூலமாக பகைக்கப்பட்டாலும் பறவாயில்லை. ஏற்கனவே இவர் திருமணம் முடித்திருந்த மனைவியின் மூலமாகவே பகைக்கப்படுகிறார்.

எப்படி ஒரு எதிரி நாட்டுக்காரர் எதிரி நாட்டின் ராஜாவின் பிள்ளையை பார்ப்பானோ அது போன்று தனது கணவனுக்கு பிறந்த பிள்ளையை பார்க்கிறார்கள்.

அதுமட்டுமா, இன்னொரு மனைவிக்கு பிறந்த பிள்ளைகளை எதிரிகளாக கருதி, எங்கேயாவது பார்த்தால், அடிப்பேன்உதைப்பேன் என்ற அளவிற்கு காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கிறார்கள். இவர்களெல்லாம் மறுமையில் சொர்க்கத்திற்கு சென்று விடுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

இப்படிப்பட்ட கலாச்சாரத்தையா அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்? என்ன அநியாயம் இது?

இன்று பாருங்கள், உங்களுடைய நண்பர் உங்கள் வீட்டிற்கு அவருடைய மனைவியோடு வருகிறார். அந்த மனைவியை உங்களுடைய வீட்டில் உள்ள மனைவி சந்தோஷமாக வரவேற்பார்கள். பிள்ளையோடு வந்தால் அந்த பிள்ளையை கண்ணியப்படுத்துவார்கள்.

ஆனால், நீங்கள் ஒரு திருமணம் செய்து விட்டு, அந்த மனைவியை உங்களுடைய வீட்டிற்கு அழைத்து வரமுடியுமா? உங்களுடைய நண்பரோடு அவருடைய மனைவி வந்தால் அங்கே தடபுடலாக விருந்து நடக்கிறது.

அவர்களுடைய பிள்ளைகளை அழைத்து வந்தால் அந்த பிள்ளைகளுக்கு அன்பளிப்பு கொடுக்கப்படுகிறது, கண்ணியம் கொடுக்கப்படுகிறது, அந்த பிள்ளைகள் கொஞ்சப்படுகிறார்கள்.

உங்களது மனைவியை அழைத்து வருவதை விடுங்கள். அந்த மனைவிக்கு பிறந்த குழந்தையை உங்களது வீட்டிற்கு அழைத்து வந்து,அவருடைய சகோதர சகோதரிகளோடு சந்திக்க வைக்க முடியாத நிலைதான் இன்று இருக்கிறது.

இவர்களெல்லாம் ஹிஜாப் போட்ட முஸ்லிமான பெண்களா? இவர்களெல்லாம் தொழுகையாளிகளாம், தஹஜ்ஜத் தொழுவார்களாம், குர்ஆன் ஓதுவார்களாம், இவர்களெல்லாம் பெரிய மார்க்கத்தை அறிந்தவர்களாம்.

எப்படிப்பட்ட கேவலம் பாருங்கள்!குஃப்ருடைய கலாச்சாரம் உள்ளத்தில் வேரூன்றி இருப்பதை பாருங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அன்பானவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த பலதார மணத்தை நமக்கு கொடுத்திருக்கிறான்.

இன்றைய சமுதாயம் இதை எப்படி பார்க்கிறது?தனது தேவையின் அடிப்படையில் செய்யக்கூடியவர்களை,அசிங்கமாக பேசி,அவர்களை காயப்படுத்துகிறார்கள்.

ஒரு பெண், தனக்கு திருமணம் முடித்து வருபவர் யாருமில்லை என்ற ஒரு சூழ்நிலையில், ஒரு நல்ல மனிதர், அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தால் என்ன?அவரை ஏற்றுக் கொள்வோம் என்று அவரை அந்த பெண் ஏற்றுக் கொள்ளும்பொழுது,

அந்த பெண்ணிற்கு சமுதாயம் கொடுக்கக்கூடிய பெயர், ஒரு குடும்பத்தை நாசமாக்கியவள். எனது வீட்டிற்குள் வந்த எனது எதிரி.

என்ன ஒரு வார்த்தை பாருங்கள், அப்படியென்றால் இந்த பழிச்சொல்லை, இந்த ஒரு கேவலமான குற்றச்சாட்டை நீ யார் மீது சுமத்தியாக வேண்டும்?

நபியுடைய மனைவிமார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக! நீங்கள், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது இந்த குற்றச்சாட்டை சொல்ல வேண்டும், ஹஃப்ஸாவின் மீது சொல்ல வேண்டும், உம்மு ஸலமாவின் மீது சொல்ல வேண்டும்.

இப்படி தானே, இதே நிலை தானே அங்கே இருந்தது. இப்படி ஒரு வார்த்தை எங்கிருந்து வந்தது? முஸ்லிமுடைய சமுதாயத்தில் இப்படிப்பட்ட கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? எப்படி இப்படிப்பட்ட பேச்சிற்கு சமுதாயம் துணிந்தது?

இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

விதவையான பெண்கள், விவாகரத்தான பெண்கள், இன்னும் சமுதாயத்தில் தேங்கி இருக்கின்ற பெண்களுக்கு இஸ்லாம் சொல்லக்கூடிய அந்த பலதார மணத்தை தவிர, வேறு விதமான வழியே கிடையாது.

இல்லையென்றால், அவர்களை ஜினாவில் தள்ள வைக்கும். இல்லையென்றால் அவர்கள் தங்களுடைய ஆசைகளை மனதில் அடக்கிக் கொண்டு மன அழுத்தங்களுக்கு ஆழாகி பிறகு மன நோயாளியாக வேண்டும்.

சிலர் யோசிக்கலாம், இதெல்லாம் இன்று பேசப்படுகிறதே?இப்படி ஒரு சூழல் இருக்கிறதா? என்று. அவரது குடும்பத்தில் அப்படி ஒன்று நடந்தால் தெரியும். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் எல்லோருக்கும் நீண்ட வாழ்கையை நஸீபாக்குவானாக! தனது சகோதரிக்கோ, தனது மகளுக்கோ இப்படி ஒரு சம்பவம் நடந்தால் தெரியும்.

நான் இதைப் பற்றி ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருந்த பொழுது,ஒரு சகோதரர் எழுந்து கூறினார்: நானும் இப்படிதான் இதை எதிர்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சகோதரிக்கு பதினெட்டு வயதில் திருமணம் ஆனது. ஆனால், எனது சகோதரியின் கணவன் அடுத்த ஒரு ஆண்டில் விபத்தில் இறந்து விட்டார்.

நான் இதை பேசும்பொழுது இருபத்தி ஜந்து வயதாகிவிட்டது. என் சகோதரிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று கூறுகிறார்.

ஏன் திருமணம் மறுக்கப்படுகிறது? ஒன்று,இவள் தனது கணவனை விபத்தில் பறிகொடுத்தவள்.எனவே, அபசகுனம் உள்ளவள் என்று சமுதாயத்தில் சகுனத்தின் மீது இருக்கக்கூடிய பயம், ஷிர்க்குடைய பயம்.

இரண்டாவது, இவள் ஒரு விதவையாயிற்றே?இவளை எப்படி முதல் திருமணமாக நான் திருமணம் முடிக்க முடியும்?என்று வாலிபர்கள் பின்வாங்குவது.

எனவே, அந்தப் பெண்ணுக்கு வேறு வழி என்ன இருக்கிறது? ஒன்று இவரை போன்று மனைவியை இழந்த ஒருவரை தேடிக் கொண்டு வர வேண்டும்.

அப்படி தேடி கொண்டு வந்தால், அப்போதாவது மணமுடிப்பார்களா? என்றால் அப்போதும் இல்லை. இவர் எங்க ஊர் இல்லை, இவர் எங்க தெரு இல்லை, இவர் எங்க ஜாதி இல்லை.

அது என்ன ஜாதி? மறைக்காயர் ஜாதி, ராவுத்தர் ஜாதி, கான் ஜாதி, பட்டான் ஜாதி, செய்யது, குரைஷ் என்று பங்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். சரி,அப்படியே ஜாதியில் கொண்டு வந்தாலும் வசதி இல்லை.

அப்படியே,வசதியில் கொண்டு வந்தாலும்,படிப்பு இல்லை. இப்படியாக,அந்த பெண்களுடைய வாழ்க்கை மறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இதுவரை அந்த பெண்ணுடைய வாழ்க்கை இப்படிதான் இருக்கிறது. சமுதாயத்தில் எந்த அளவு கொடுமைகள் நடக்கின்றன, அநியாயங்கள் நடக்கின்றன என்பதை கவனியுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்:

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

எவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார். (அல்குர்ஆன் 5 : 32)

ஒரு சமுதாயத்தில் ஒரு பெண்ணின் மீது இந்த அநியாயம் நடக்குமேயானால் ஒட்டு மொத்த பெண்களின் மீது நடக்கக்கூடிய அநியாயம் இது.

ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பது ஒட்டு மொத்த சமுதாய பெண்களையும் வாழ வைப்பது.

இந்த இடத்தில், மேலும் ஒரு விஷயத்தை நாம் புரிந்தாக வேண்டும். பல நேரங்களில் இந்த பலதார மணம் என்பது இரகசியத் திருமணமாக நடைபெறுகின்றன.

அப்படி இரசிய திருமணங்களாக நடை பெறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அது அறிவுப்பு செய்யப்பட வேண்டும். அதற்குரிய உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை பாருங்கள்.ஒருவர் திருமணம் செய்கிறார், ஹலாலாக முடிக்கிறார், வாழ்க்கை கொடுக்கிறார், கண்ணியமாக வாழ்கிறார். ஆனால், சமுதாயத்தில் வெளிப்படுத்த முடியவில்லை.

திடீரென்று அவருக்கு மாரடைப்பில் மரணம் வருகிறது. இந்த மனைவி அந்த வீட்டிற்கு தனக்கு பிறந்த குழந்தையோடு செல்கிறாள். அந்த மனைவி அந்த வீட்டிலிருந்து துரத்தப்படுகிறாள்.

யார் யாரோ, தனது கணவருடைய ஜனாஸாவை பார்த்துவிட்டு செல்கிறார்கள். ஆனால், அவருடைய மனைவியால் அந்த மனைவிக்கு பிறந்த குழந்தையால் அந்த ஜனாஸாவை பார்க்க முடியவில்லை.

அவர்கள் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார்கள். அர்ஷுடைய இறைவனிற்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்?யோசித்துப் பாருங்கள்.

இதை சமுதாயத்தில் கேட்டு அந்த உரிமையை வாங்கிக் கொடுப்பதற்கு, அந்த சமுதாயத்தில் சத்தியத்தை சொல்வதற்கு அங்கே யாருமில்லை.

யாருக்கும் அந்த துணிவு இல்லை, யாருக்கும் அந்த தைரியம் இல்லை. மாறாக, பேச்சுகள் எப்படி? இவளுக்கு தேவையா? அதான் இவனை கட்டி அழுகிறாள்.

இன்னொருத்தியுடைய வாழ்க்கையில் புகுந்தால் அல்லவா? அதான் இப்படி. எப்படிப்பட்ட வார்த்தைகள் பாருங்கள்.

நீங்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்வது மட்டும் உங்களை சொர்க்கத்திற்குள் நுழைத்து விடும் என்று எண்ணி விடாதீர்கள். அந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வுடைய சட்டங்களை மறுத்தவர்களாக வாழ்ந்தால், வெறுத்தவர்களாக வாழ்ந்தால், மதிக்காமல் வாழ்ந்தால் அல்லாஹ் சொர்க்கத்தை கொடுத்து விடுவானா?

இன்று,இப்படி இரகசிய திருமணங்களாக நடைபெறுவதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவது, அப்படி திருமணம் செய்பவர்கள் தங்களது முதல் மனைவியை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். இதனாலும் இரண்டாவது திருமணத்தின் மீது மிகப் பெரிய பழிச் சொல் சமுதாயத்தில் பரவுகிறது.

தான் கட்டிய அந்த மனைவியோடு அப்படியே சாய்ந்து விடுகிறார்கள். இது அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மிகப் பெரிய குற்றம், ஒரு தவறாகும்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

«مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ»

யாருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களோ, அந்த இரண்டு மனைவிகளில் ஒரு மனைவியின் பக்கம் அவர் சாய்ந்து விட்டால், நாளை மறுமையில் அவர் வரும்பொழுது ஒரு பக்கம் சாய்ந்தவராக வருவார்.

அவரால் நிமிர்ந்து நடக்க முடியாத நிலையில் அவர் சாய்ந்து வருவார் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 2133, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அது முதல் மனைவியின் பக்கமும் சாயக்கூடாது. இரண்டாவது மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டால் அல்லது இரண்டாவது மனைவியுடைய அன்பில் மயங்கி முதல் மனைவியை விட்டுவிடக் கூடாது. அவர்களையோ, அவர்களது பிள்ளைகளையோ.

இதில் குறிப்பாக இரவுகளை பங்கிடுவதில் நீதமாக நடக்க வேண்டும்.இந்த கண்டிப்பான நிலையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மரணத்தருவாயில் பின்பற்றினார்கள்.

கடுமையான நோய்வாய்ப்பட்டு, சிரமப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் எந்த மனைவிக்குண்டான இரவோ அங்கே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள். அடுத்த நாள் நான் எங்கே இருப்பேன் என்று கேட்கிறார்கள்.

மனைவிமார்கள் புரிந்துக் கொள்கிறார்கள், ரஸூலுல்லாஹ் ஆயிஷாவை விரும்புகிறார் போல என்று. எல்லா மனைவிகளும் ஒத்துக் கொள்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் விரும்பக்கூடிய இல்லத்தில் நீங்கள் இருங்கள் என்று. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயிஷாவுடைய வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். (1)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 1389, 3774.

ஏன் ஆயிஷாவிற்கு அப்படிப்பட்ட சிறப்பு?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், நான் எந்த மனைவியிடத்தில் இருக்கும் பொழுதும் என்னிடத்தில் ஜிப்ரயீல் வந்ததில்லை ஆயிஷாவுடன் இருக்கும் பொழுதே தவிர. (2)

அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 3775.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா,எப்படி கதிஜாவிற்கு ஸலாம் கூறி அனுப்பியிருந்தானோ அது போன்று நமது அன்னை,ரஸூலுல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய மனைவியார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறி அனுப்பினான். (3)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 3768.

மேலும் அவர்களுடைய தந்தையார் அபூபக்ர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ்வுடைய இணை பிரியாத,எந்த நேரத்திலும் ரஸூலுல்லாஹ்விற்கு எல்லாவற்றையும் தியாகம் செய்யக்கூடிய ஒரு தோழர்.

ஆகவே, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விருப்பம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அதிகமாக இருந்தது. பிறகு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கே அவர்களது உயிர் பிரிகிறது. இந்த ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.

இந்த பலதார மணம் என்பது,அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று மட்டுமல்ல, ஆர்வமூட்டப்பட்ட ஒன்று. அது மாற்றுமத கலாச்சாரத்தில் இருந்து அப்புறப்படுத்தி சமுதாயப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கக்கூடியது.

சமுதாய ஆண்களை பத்தினித்தனமுள்ளவர்களாக, அவர்கள் தங்களது கற்பை பாதுகாத்துக் கொள்ளக்கூடியவராக, அதுபோன்று தங்களுடைய வசதிக்கு ஏற்ப தங்களுடைய பொருளாதாரங்களை பகிர்ந்து சமுதாயத்தில் உள்ள கைவிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு அல்லாஹ் கொடுத்த ஒரு மிகப் பெரிய வழி.

நாம் இன்று என்ன பார்க்கிறோம். நம்மைவிட கண்ணியத்தில் குறைவானவர்களையோ அதாவது சமுதாயத்தின் அடிப்படையில் கூறுகிறேன். அல்லாஹ்வுடைய அடிப்படையில் அல்லாஹ்வுடைய கண்ணியம் ஈமானை வைத்து.

இங்கே பாருங்கள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு அடிமைப் பெண்ணை ஏற்றுக் கொண்டு அந்த அடிமை பெண்ணோடு படுக்கையை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

அந்த அடிமைப் பெண்ணோடு வாழ்கிறார்கள். யார் அவர்கள்? மாரியா அல் கிப்தியா ரழியல்லாஹு அன்ஹா. மிஸ்ரு நாட்டிலிருந்து அடிமையாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அனுப்பப்படுகின்ற ஒரு பெண்மனி.

ரஸூலுல்லாஹ் யார்? எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர்.அல்லாஹ்வுடைய ரஸூல்.ஆனால்,தனக்கு அளிக்கப்பட்ட அந்த அன்பளிப்பு அந்த பெண்ணோடு அவர்களை தனது அடிமையாக ஆக்கிக் கொண்டு அந்த பெண்ணோடு வாழ்வதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த விதமான இலக்காரத்தையும் அறுவறுப்பையும் பார்க்கவில்லை.

பார்க்க - சியரு அஃலாமின் நுபலா : 2/65, இப்னு ஹிஷாம் : 1/191

அதுமட்டுமா, அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த பொழுது,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்கு விருப்பமான இப்ராஹிம் என்ற பெயரை சூட்டினார்கள்.

ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையை பார்க்கச் செல்வார்கள், கொஞ்சுவார்கள், மகிழ்வார்கள். அந்த குழந்தை இறந்துவிடுகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓடோடி வருகிறார்கள்.

அந்த குழந்தையை வைத்துக் கொண்டு தேம்பி தேம்பி ரஸூலுல்லாஹ் அழுகிறார்கள். ஸஹாபாக்கள் கேட்டார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் இப்படி அழுகிறீர்களா? என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

«إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا»

கண்கள் அழுகின்றன ஆனால், நாவுகள் அல்லாஹ் விரும்புவதை தவிர எதையும் கூறாது.(4)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 3768.

இப்படி சமுதாயத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழகிய முன்மாதிரி இன்னும் ஏராளம் இருக்கின்றன.

ஆகவே, நம்முடைய கலாச்சாரம், நம்முடைய பண்பாடு, நம்முடைய ஒழுக்கம் தூய மார்க்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

ஹலாலில் எந்த விதமான கேவலமோ, ஹலாலான விஷயங்களில் எந்த விதமான சங்கடங்களோ, சிரமங்களோ சமுதாயத்தில் இல்லை.

ஹராம் தான் கேவலமானது, ஹராம் தான் இழிவானது, ஹராமில் தான் சமுதாயத்திற்குரிய கேவலம் இருக்கிறது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்தருள்வானாக! அல்லாஹ்வுடைய தூய மார்க்கத்தை தூய வடிவில், அல்லாஹ் விரும்பக்கூடிய அழகிய விதத்தில் பின்பற்றி அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவதற்குண்டான நற்பாக்கியத்தை தருவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ هِشَامٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مَرْوَانَ يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَتَعَذَّرُ فِي مَرَضِهِ: «أَيْنَ أَنَا اليَوْمَ، أَيْنَ أَنَا غَدًا» اسْتِبْطَاءً لِيَوْمِ عَائِشَةَ، فَلَمَّا كَانَ يَوْمِي، قَبَضَهُ اللَّهُ بَيْنَ سَحْرِي وَنَحْرِي وَدُفِنَ فِي بَيْتِي (صحيح البخاري- 1389)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، قَالَتْ عَائِشَةُ: فَاجْتَمَعَ صَوَاحِبِي إِلَى أُمِّ سَلَمَةَ، فَقُلْنَ: يَا أُمَّ سَلَمَةَ، وَاللَّهِ إِنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، وَإِنَّا نُرِيدُ الخَيْرَ كَمَا تُرِيدُهُ عَائِشَةُ، فَمُرِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْمُرَ النَّاسَ أَنْ يُهْدُوا إِلَيْهِ حَيْثُ مَا كَانَ، أَوْ حَيْثُ مَا دَارَ، قَالَتْ: فَذَكَرَتْ ذَلِكَ أُمُّ سَلَمَةَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: فَأَعْرَضَ عَنِّي، فَلَمَّا عَادَ إِلَيَّ ذَكَرْتُ لَهُ ذَاكَ فَأَعْرَضَ عَنِّي، فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ ذَكَرْتُ لَهُ فَقَالَ: «يَا أُمَّ سَلَمَةَ لاَ تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّهُ وَاللَّهِ مَا نَزَلَ عَلَيَّ الوَحْيُ وَأَنَا فِي لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ غَيْرِهَا» (صحيح البخاري- 3775)

குறிப்பு 3)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَبُو سَلَمَةَ: إِنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا: «يَا عَائِشَ، هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ» فَقُلْتُ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى «تُرِيدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» (صحيح البخاري- 3768)

குறிப்பு 4)

حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ هُوَ ابْنُ حَيَّانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ» رَوَاهُ مُوسَى، عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ [ص:84] عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري- 1303)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/