HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 7-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 7-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 7-8) | Tamil Bayan - 387


8காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் - அமர்வு 7

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் - அமர்வு 7

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 08-03-2016| 09-06-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரியஅல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, எனக்கும், உங்களுக்கும்அல்லாஹ்வின் பயத்தைஅல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆவின் உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய மார்க்கத்தில் நம் பிரச்சனைகளுக்குண்டான தீர்வை வைத்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகிறான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2 : 208)

வசனத்தின் கருத்து : நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்குள் முழுமையாக நுழையுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடித்ததை ஏற்பது, உங்களுக்கு பிடிக்காததை விட்டுவிடுவது, உங்களுடைய நஃப்ஸ் விரும்புவதை அங்கீகரிப்பது, நப்ஸுக்கு ஒத்து வராததை புறக்கணிப்பது, உங்களுடைய சமுதாயம் அங்கீகரிப்பதை ஏற்றுக்கொள்வது, உங்களுடைய சமுதாயத்திற்கு எது கசப்பாக இருக்குமோ அதை உமிழ்ந்து விடுவது, புறக்கணித்து விடுவது, இது இறை நிராகரிப்பாளர்களின், கிறிஸ்தவர்களின், யூதர்களின் அடையாளம்.

இஸ்லாமிய மார்க்கத்திற்கு முழுமையாக வந்துவிடுங்கள். உங்களுடைய உடலால், உள்ளதால், உயிரால், ஆன்மாவால், சிந்தனையால், கொள்கையால், ஒழுக்கத்தால், குணத்தால், சமூகப் பண்பாட்டால், முழுமையாக முஸ்லீம்களாக நீங்கள் மாறிவிடுங்கள்.

குப்ரின் அடையாளம், இணை வைத்தலின் அடையாளம், இறை நிராகரிப்பின் அடையாளம், யூதகிறிஸ்துவத்தின் அடையாளம் உங்கள் மீது அறவே இருக்கக்கூடாது.

அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா அப்படிப்பட்ட தூய மார்க்கத்தைதான் நமக்கு கொடுத்து இருக்கிறான். அந்தத் தூய மார்க்கத்தைதான் நமக்கு விரும்புகிறான். அந்தத் தூய மார்க்கத்தில் தான் நமது பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வுகளை வைத்திருக்கின்றான்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்கின்ற அந்த ஒவ்வொரு தீர்வும் நம்மைப் படைத்தவனாகிய, நம் தேவையை அறிந்த அல்லாஹுத்தஆலா கொடுத்து இருக்கிறான்.

இன்றைய சமுதாயம் இஸ்லாமிய மார்க்கத்தின் கலாச்சாரத்தை புறக்கணித்த காரணத்தால் காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாளுக்கு நாள் நுழைத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த கலாச்சாரத்தில் கரைந்து கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாம் எங்கே? என்று தேட கூடிய ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் தொழக் கூடிய தொழுகையைத் தவிர, வேறு எங்கும் அவர்களுடைய வாழ்க்கையில் இஸ்லாம் தென்படவே இல்லை.

அவர்களுடைய திருமணங்களை எடுத்துப் பாருங்கள்;அவர்கள் பேசுகின்ற அந்த ஒப்பந்தங்களை எடுத்துப் பாருங்கள், அவர்களுடைய மையத்,மௌத் நிகழ்ச்சிகளை எடுத்துப் பாருங்கள், அவர்களுடைய வியாபார, தொழில் துறை ஒப்பந்தங்களை எடுத்துப் பாருங்கள்.

இப்படி வாழ்க்கையின் பல கோணங்களில் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் நாம் நமது மக்களுடைய நிலைமையை பார்க்கும் போது, இஸ்லாம் என்பது இவர்களுக்கு இவர்களுடைய மதம் என்பது அவர்களுடைய மஸ்ஜிதோடு நின்றுவிடுகிறது.

மாற்றார்கள் போல அவர்களுக்கு மதம் என்பது அவர்களுடைய வழிபாட்டு தலங்களோடு நின்றுவிடும். அவர்களுடைய மதம் அதற்குப் பிறகு வெறும் சடங்குகளாக மாறி இருக்குமே தவிர வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்காது.

அந்த நிலையில் தான் இன்று பலர் இஸ்லாமிய மார்க்கத்தை பார்க்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிறார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த அடிப்படையில் நாம் சிலவற்றை சிந்தித்துப் பார்க்கும்போது அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுத்து இருக்கின்ற மிக அழகிய கலாச்சாரத்தில் ஒன்று திருமண கலாச்சாரம்.

அதில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மிக அழகிய வழிகாட்டுதலை வைத்திருக்கின்றான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு வழிகாட்டியாக அவர்களே இருந்து இருக்கிறார்கள்.

இந்த தொடரில் தான் நாம் பேசி வரும் போது விவாகரத்து ஆன பெண்களின் நிலையைப் பற்றி, விதவைகளான பெண்களின் நிலையைப் பற்றி, திருமணத்தில் இன்றைய முஸ்லிம் ஆண்களும், இஸ்லாமிய பெண்களும், அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கின்ற சிந்தனை சீர்கேட்டை பற்றி சென்ற ஜும்ஆவில் பார்த்தோம்.

இந்த விதவைகளுடைய மறுமணத்தை பொறுத்தவரை திருமண வாழ்க்கையில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது, திடீரென கணவனை இழந்த பெண்கள், அது மௌத்தின் மூலமாகவோ, அல்லது தலாக்கின் மூலமாகவோ, அல்லது குலாவின் மூலமாகவோ, இப்படி இழக்கின்ற இந்த பெண்களைத்தான் கணவனை இழந்த பெண்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த பெண்களை பொறுத்தவரை முஸ்லிம்கள் உடைய பார்வையில் இருக்கின்ற ஒரு மோசமான சீர்கேடு என்ன என்றால், இது இவர்களுக்கு அல்லாஹ் விதித்த விதி. இனி இவர்கள் இப்படித்தான் வாழவேண்டும்.

ஒரு பெண் தனது கணவனை மவ்த்தின் மூலமாக இழந்துவிட்டால் என்றால், அது எந்த வயதில் இழந்து இருக்கிறாள்?என்பது அங்கே பிரச்சனை இல்லை. கணவனை இழந்து விட்டால் அவ்வளவுதான். இனி அவள் அப்படியே வாழாவெட்டியாக, வாழ்க்கையை இழந்தவளாகவாழ வேண்டியதுதான். அவளுடைய மறுமனம் என்பது மக்களுக்கு மத்தியில் கைவிடப்பட்ட ஒன்றாக இன்று மாறி இருப்பதை பார்க்கிறோம்.

அதுவும் குறிப்பாக அந்தப் பெண்ணிடத்தில் வசதி இல்லை என்றால், அந்தப் பெண்ணிடத்தில் பிள்ளைகள் இருப்பார்களேயானால், அவ்வளவுதான் இனி அந்த பெண் வேறு வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கு, மறுமணத்திற்கு உண்டான எந்தவித ஏற்பாடுகளும் இல்லாமல் தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து அழியக்கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைய சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, உருவாக்கி வைத்திருக்கிறது.

இதை யாரும் மறுக்க முடியாது. யாரிடத்தில் வசதி இருக்குமோ அவர்கள் தங்களது வசதிகளைக் கொண்டு மாப்பிள்ளைகளை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். அப்படி யாராவது விலைக்கு போகின்ற மாப்பிள்ளைகள் இருந்தார்களேயானால் அவர்களுக்கு அந்த பெண் பிள்ளையோடு முடித்து வைத்து தங்களது குடும்பத்தோடு வைத்துக்கொள்வார்கள்.

இது சில இடங்களில் நடக்கிறது. அதுவும் சில இடங்களில் அந்த பெண் தான் திருமணம் முடித்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தினால் தனது பொறுப்பாளர்களை அந்தப் பெண் இதை தொடர்ந்து வலியுறுத்த வில்லை என்றால் அந்தப் பெண்ணுடைய நிலையும் அப்படித்தான். திருமணம் இல்லாமல் கடைசியாக வாழ வேண்டியது தான்.

அன்பிற்குரியவர்களே! அன்றைய காலத்தில் சிலை வணங்குகின்ற இடத்தில் ஒரு மூட பழக்க வழக்கம் இருந்தது. கணவன் இறந்துவிட்டால் கணவனோடு சேர்ந்து அந்த மனைவியை சதி என்ற பெயரில் அந்தப் பெண்ணை அப்படியே கொளுத்தி விடுவார்கள். அந்தப் பெண் எந்த வயது உடையவராக இருந்தாலும் சரி.

இவளைத்தான் உத்தம பத்தினி ஆக நினைப்பார்கள். அதுபோன்ற ஒரு மனப் பக்குவத்தை அது போன்ற ஒரு சூழ்நிலையை அவர்கள் உருவாக்கி வைத்து இருந்தார்கள்.

இன்று அப்படித்தான் கணவனை இழந்த ஒரு பெண் தனக்கு அடுத்து மணம் முடிக்க வேண்டும் என்று விரும்பினால், அது மிகப்பெரிய ஒரு குற்றமாம், கணவனுக்கு செய்யக்கூடிய துரோகமாக, அந்தப் பெண்ணை ஒரு வெட்கம் கெட்ட பெண்ணாக, மானங்கெட்ட பெண்ணாக, சமூகத்தின், குடும்பத்தின், கண்ணியத்தை பாழாக்கக்கூடிய ஒரு பெண்ணாகஇன்றைய சமுதாயம் பார்க்கிறது.

இது ஒருபக்கம்.இன்னொரு பக்கம், பெண்களுடைய மன நிலை எப்படி உருவாக்கப்பட்டு விட்டது. என்றால், தன்னுடைய கணவனுக்கு அவள் விசுவாசமாக வாழ்ந்தாள் என்பதற்கு அடையாளமே, கணவன் இறந்ததற்கு பிறகு திருமணப் பேச்சையே பேசிவிடக் கூடாது. அந்த நினைப்பே வந்துவிடக்கூடாது. கணவனை கப்ரில் புதைத்த போது பெண்ணின் ஆசைகளையும் சேர்த்து புதைக்கப்பட்டு விடவேண்டும் என்று இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் மனநிலையாக மாறி இருக்கிறது.

அப்படி என்றால் இனி இவளுக்கு வாழ்க்கையில் கணவன் இறந்ததற்கு பிறகு நான்கு மாதம் பத்து நாட்கள் அல்ல, இனி இவள் மரணிக்கும் வரை இவள் இத்தாவில் இருப்பது போன்று தான்.

இத்தா உடைய காலத்திற்குப் பிறகு அந்தப் பெண் மணம் முடிக்க வேண்டும். தன்னை மணம் முடித்து கொள்ளக்கூடிய மணமகனை அந்தப் பெண் தேட வேண்டும், அந்த பெண்ணுடைய பொறுப்பாளர் தேடவேண்டும்.சமுதாயத்தின் தலைவர்கள் அதற்குறிய பொறுப்பை எடுத்து அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

இதுதான் அல்லாஹ் சொல்லக்கூடிய கட்டளை. ஏதோ மஸ்ஜித் இமாம் செல்லக்கூடிய கருத்தோ, அல்லது சாதாரணமாக பின்பற்றினால் நல்லது இல்லையென்றால் குற்றமில்லை என்ற அடிப்படையில் ஏதோ ஒரு ஞானி சொன்ன உபதேசமோ இல்லை.

அன்பானவர்களே! எந்த ரப்புக்காக நீங்கள் சுஜுது செய்கிறீர்களோ, எந்த ரப்பை ஏற்று நீங்கள் லா இலாஹா இல்லல்லாஹ் என்பதில் ஏற்றுக் கொண்டீர்களோ அந்த ரப்பு உங்களுக்கு கொடுக்கக்கூடிய கட்டளை.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலாசூரா அந்நூர் உடைய 32வது வசனத்தில் சொல்கிறான் :

وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன் அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவன், (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 24 : 32)

அல்லாஹுத்தஆலா பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இத்தா என்ற ஒரு காலத்தை கொடுத்து இருக்கின்றான். அந்தக் காலத்தில் அவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது. கணவனை இழந்து இருந்தால் நான்கு மாதம் பத்து நாள் அந்தக் கணவனை இழந்த துக்கத்தை அந்தப்பெண் தாங்கிக் கொள்வாள்.‌ அந்த துக்கத்தில் இருந்து அவள் மீள்வதற்காக உச்சகட்ட ஒரு காலத்தை அல்லாஹ் கூறுகின்றான்.

அதற்கு பிறகு அவள் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேட வேண்டும். இதைத்தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கையில் இருந்து நாம் பார்க்கின்றோம். ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கையிலிருந்து நாம் பார்க்கின்றோம். முஸ்லிம் சமுதாயத்துடைய வாழ்க்கையிலிருந்து பார்க்கின்றோம்.

ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை நபி அவர்கள் மணம் முடித்தபோது, அவர்களின் வயது சில அறிவிப்பின்படி 55. சில அறிவிப்பின்படி 65.

காதமுன் நபிய்யீன் : 3/1097

அந்த வயதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸவ்தாவை மணம் முடிக்கிறார்கள்.

ஆறு குழந்தைகள் ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு. ஆறு குழந்தைகளோடு ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வஃபாத் உடைய இத்தா,நான்கு மாதம் பத்து நாள் முடிந்ததற்கு பிறகு, நபியவர்கள் அந்தப் பெண்ணை பேசி எடுத்துக் கொள்கிறார்கள். மனைவியாக ஆக்கி கொள்கிறார்கள்.

ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதரே!  எனக்கு பயமாக இருக்கிறது. யோசனையாக இருக்கிறது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்துருவித்துருவி கேட்கிறார்கள்;நான் உன்னை பெண் கேட்கும் போது நீ மறுப்பதற்கு என்ன காரணம்சவுதா?

என்ன குறையை காண்கிறாய்? என்ன தடுக்கிறது? என்று.

(ஒரு பெண் கணவனை இழந்ததற்குப் பிறகு விசுவாசம் திருமணம் முடிக்காமல் இருப்பது என்றால், 5,6குழந்தைகளோடு இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அல்லாஹ்வுடைய தூதர் மணம் பேசுவார்களா?)

கேட்கிறார்கள்;நீ திருமணம் முடிக்க வேண்டும் என்ன தடுக்கிறது. என்று, அல்லாஹ்வுடைய தூதரே! நான் இதை மறுப்பதற்கு என்ன காரணத்தை சொல்ல முடியும்? என்னுடைய இந்த ஆறு பிள்ளைகள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து விடுவார்களோ, உங்களுக்கு சிரமம் ஆக்கிவிடுவார்களோ, உங்களுடைய மனம் நோகும்படி அவர்கள் ஏதாவது செய்துவிட்டால், அது எனக்கு பெரிய ஆபத்தாகி விடும் என்று பயப்படுகிறேன். என்று சொன்னார்கள்.

ஸவ்தா இதை தவிர வேறு காரணம் இல்லை என்றால் இதை விட்டு விடு. அவர்கள் எனது பிள்ளைகள். அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 2923.

இதே நிலையைதான் உம்மு சல்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய திருமணத்தில் நாம் பார்க்கின்றோம்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 16344.

அன்பிற்குரியவர்களே! இந்த நபித்தோழர்கள் உடைய அந்த வாழ்க்கையில் ஒரு பெண் விதவையாகி விட்டால், இங்கே பாருங்கள்; சமுதாயத்தின் அந்த பரிசுத்தத்தை பாருங்கள், அவருடைய அந்த பத்தினி தனத்தைப் பாருங்கள், அவர்களுடைய வாழ்க்கையின் கலாச்சாரத்தில் இருந்த அந்த உண்மை நிலையை பாருங்கள், இன்று நமது சமுதாயத்தில் இருக்கின்ற நமது நிலையை பாருங்கள்.

குறிப்பாக பெண்களின் நிலையைப் பற்றி,பெண்களின் மனநிலையைப் பற்றி நாம் மிக ஆழமாக சொல்ல வேண்டி இருக்கிறது.

ஒரு பெண்மணி நபித்தோழர்கள் உடைய காலத்தில், ரஸூலுல்லாஹ்வுடைய காலத்தில், தாஃபியீன்கள் உடைய காலத்தில்விதவை ஆகி விட்டால், அந்த பெண்மணியின் தோழிகளோ, அல்லது அந்தப் பெண்மணிக்கு நெருக்கமான, தூரமான சமூகத்துப் பெண்கள் கணவனுக்கு சொல்வார்கள் :

அந்த பெண்ணை மணமுடித்து நமது வீட்டிற்கு அழைத்து வந்து விடுங்கள் என்று.

பெண்கள் தங்களுடைய கணவன்மார்களுக்கு இப்படி சொல்வார்கள். இன்ன குடும்பத்தில் இப்படி ஒரு பெண்மணி விதவையாகி விட்டாள். அந்தப் பெண்ணை நம்மோடு சேர்த்துக் கொள்வோம். ஆதரித்து கொள்வோம். அவரை நமது வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று சொல்வார்கள். எப்படிப்பட்ட தூய கலாச்சாரம் பாருங்கள்.

இன்று என்ன?மார்க்கத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. இஹ்திகார் என்று. பதுக்குவது. வியாபாரத்தில் உள்ள குற்றங்களிலேயே மிகப்பெரிய குற்றம் பதுக்குவது. (1)

நூல் : முஸ்லிம், எண் : 3012, 1065.

அதுதான் இன்றைய நமது பெண்கள் தனது கணவன்மார்கள் விஷயங்களில் செய்துவிடுகிறார்கள். நான் ஒரு ஆணை மணம் முடித்து விட்டால், இனி நான் சாகுகின்ற வரை அந்த ஆணுக்கு நான் சொந்தக்காரன். என்னைத் தவிர வேறு யாரும் அந்த ஆணுக்கு சொந்தம் கொண்டாடக்கூடாது. எனது வாழ்க்கையில் வேறு ஒரு பெண்ணை நான் சேர்க்க முடியாது. அந்த ஆணுக்கு நான் உரிமையானவர். அந்த ஆண் என்னுடைய உரிமைக்கு உட்பட்டவன்.வேறு யாரையும் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.

யார் எக்கேடு கெட்டால் என்ன? சீர் அழிந்தால் என்ன?சின்னாபின்னம் ஆனால் என்ன?அவர்களது குடும்பம் என்ன ஆனால் என்ன? எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. என் கணவன் எனக்கு சொந்தமானவர்.

இது இன்றைய முஸ்லிம் பெண்களுடைய நிலை. அன்றைய ஸஹாபி பெண்களின் நிலை எப்படி இருந்தது? அவர்களது சமூகத்துப் பெண்கள் எப்படிப் பார்த்தார்கள்?ஒரு வீட்டில் ஒரு ஆண் இறந்து விட்டால் தனது குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு சொல்வார்கள். நீங்கள் முந்தி சென்று நன்மையை சம்பாதித்து கொள்ளுங்கள்.

அவளை நமது வீட்டிற்கு அழைத்து வந்துவிடுங்கள். அதாவது இத்தா முடிந்து விட்டதற்கு பிறகு நீங்கள் பெண் பேசி அவளை திருமணம் முடித்து அழைத்து வாருங்கள்.

எந்த அளவிற்கு நபி தோழர்களுடைய வாழ்க்கையில் இந்த சுன்னா பின்பற்றப்பட்டது என்றால், இமாம் தபரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். ஒரு ஸலஃப்களுடைய மூத்த அந்த நபித் தோழர்களோ, தாஃபீயீன்களுடைய காலத்தில் நடந்த சம்பவம்.

ஒரு வீட்டில் ஜனாஸா ஆகிவிட்டது. அந்த ஜனாஸாவிற்கான ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. அப்பொழுது அந்த வீட்டிற்கு வந்த ஒருமனிதர் பார்க்கிறார். சூழ்நிலையை பார்த்துவிட்டு அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்கிறார்; பயப்படாதே உனக்கு வாழ்க்கை உண்டு,என்னை விட வேறு யாரும் முந்தாமல் பார்த்துக்கொள் என்று.

அந்தப் பெண் சொல்கிறார்; உன்னை விட வேறு ஒருவர் முந்திவிட்டார்.

நூல் : தஃப்சீர் தபரி 5/96

ஜனாசா அடக்கம் செய்யப்படவில்லை, எப்படி பட்ட ஒரு வாழ்க்கையை எதார்த்தத்தோடு வாழ்ந்து இருக்கிறார்கள் பாருங்கள்.

இன்று இப்படி ஒரு நிலை இருந்தால், சூழ்நிலை என்ன ஆகியிருக்கும்?

அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா இதை மிகத்தெளிவாக சொல்கிறான் ;

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2 : 234)

இந்த வசனத்தில் கணவனை இழந்த பெண்கள் இத்தா எவ்வளவு காலம்  இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இன்றைய தமிழ் நாட்டில் கணவனை இழந்த பெண்ணுடைய இத்தா என்பது 40நாட்கள் அவ்வளவுதான். யாராக இருந்தாலும் சரி, 40முடிந்துவிட்டது என்று அதை முடித்துக் கொள்வார்கள். இது அல்லாஹ்வுடைய விதியை சட்டத்தை மீறுவதாகும்‌. கணவனை இழந்த பெண்கள் குழந்தை உண்டாகாமல் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக அரபிய இஸ்லாமிய மாத கணக்குப்படி நான்கு மாதங்கள் பத்து நாளில் தான் முழுமையாக இருந்தாக வேண்டும்.

அதோடு சேர்த்து ஹிதார் -அலங்காரம் இல்லாமல் அவர்களது வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

அதற்கு பிறகு அல்லாஹ் சொல்கிறான் ;

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَكِنْ لَا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَنْ تَقُولُوا قَوْلًا مَعْرُوفًا وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ

(இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். மேலும், இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 235)

எங்கெல்லாம் அல்லாஹு தஆலா குர்ஆனில் ولا جناح(வலா ஜுனாஹ) -குற்றம் இல்லை என்று பயன்படுத்துகின்றானோ இங்கே அல்லாஹுத்தஆலா ஆர்வம் ஊட்டுகிறான், ஆசை ஊட்டுகிறான்அதை செய்யுங்கள் என்று.

உதாரணமாக, அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

நிச்சயமாக ‘ஸஃபா' (மலையும்) ‘மர்வா' (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் (‘கஅபா' என்னும்) அவ்வீட்டை ‘ஹஜ்ஜூ' அல்லது ‘உம்ரா' செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமில்லை. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுவான், அவருடைய (எண்ணங்களை) நன்கறிவான். (அல்குர்ஆன் 2 : 158)

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த 235ஆவது வசனத்தில் கணவன் இறந்து இத்தாவில் இருக்கக்கூடிய அந்த பெண்களின் விஷயத்தில் அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா சொல்கிறான்;உங்கள் மீது குற்றம் இல்லை.என்ன கருத்து?பின்வரும் விஷயத்தில் நீங்கள் செய்யுங்கள். அது நல்லது.

கணவனை இழந்து இத்தாவில் இருக்கக்கூடிய பெண்கள் அல்லது தலாக் பாயின்- கணவரிடமிருந்து இனி சேர முடியாத முற்றிலுமான விவகாரத்து பெற்று விட்ட பெண்கள் மூன்று தலாக் அடைந்துவிட்டால், அவர்கள் இத்தாவில் இருக்கும்போது நீங்கள் சூசகமாக, ஜாடையாக அவர்களை பெண் பேசுவது உங்கள் மீது குற்றமில்லை. பெண் பேசுங்கள் என்று அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,

அல்லது அவர்களை மனம் முடிக்க வேண்டும் என்று நீங்கள் மனதில் ஆசை வைத்திருப்பது உங்கள் மீது குற்றமில்லை. அதாவது அவர்களை மணம் முடிப்பதற்கு நீங்கள் ஆசைப்படுங்கள். யாரை? கணவனை இழந்துவிட்ட பெண்களை மணம் முடிப்பதற்கு நீங்கள் சூசகமாக பெண் பேசுவது உங்கள் மீது குற்றமில்லை.

சூசகம் என்றால் என்ன கருத்து?

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடத்தில் கேட்கப்படுகிறது. ஒரு பெண் இத்தாவில் இருக்கும்போது அவளிடத்தில் ஜாடையாக பெண் பேசுவது என்றால் என்ன? அதற்கு அவர்கள் சொன்னார்கள்;

இத்தாவில் இருக்கக்கூடிய பெண்ணிடத்தில் அவளுக்கு ஆறுதல் சொல்லும் பொழுது கவலைப்படாதீர்கள்; கண்ணியமாக பாதுகாப்பாக இருங்கள்; எனக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது. நான் இப்படி இப்படி ஒரு பெண்ணை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்று தாரளமாக நீங்கள் சொல்லலாம்.

அதைத் தான் அல்லாஹ் சொல்கிறான்; அதாவது, எந்தப் பெண்ணிடத்தில் என்ன பண்பு இருக்குமோ அந்தப் பண்பை எடுத்துக் கூறி நான் இப்படி இப்படிப்பட்ட ஒரு பெண்ணை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு திருமணம் முடிப்பதற்கு நாட்டம் இருக்கிறது. என்பதை நீங்கள் சொல்லிவிட்டு வாருங்கள் என்று.

தஃப்சீர் தபரி : 5/95

இது யாருடைய கட்டளை? ஏதோ ஃபிக் கித்தாபுகளில் யாரும் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எழுதி வைத்துக் கொண்டது என்பதாக நினைக்காதீர்கள். ரப்புல் ஆலமீன் உடைய வார்த்தைக்கு ஸஹாபி இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் முன்பு கூறிய சம்பவத்திற்கு விளக்கம் சொல்கின்றார்கள்.

ஒரு பெண் தன்னுடைய கணவனுடைய ஜனாஸாவை தயார் செய்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு மனிதர் சொன்னார்;

வேறு யாருக்கும் நீ முன்னுரிமை கொடுத்து விடாதே என்று. அப்போது அந்தப் பெண் சொன்னாள்; இன்னொருவர் முன்னுரிமை பெற்று விட்டார் என்று.

தஃப்சீர் தபரி : 5/96

பெண்ணிடத்தில் ரகசியமாக அதாவது சூசகமாக, ஜாடையாக அவர் இத்தாவில் இருக்கும்போது பெண் பேசுவது என்றால், எனக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. ஆனால் அல்லாஹ் நாடினால் உன்னை தவிர வேறு யாரையும் நான் மணமுடிக்க மாட்டேன்.

ஒரு ஸாலிஹான பெண் எனக்கு அமைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என்பதாக சொல்லலாம்.

அது போன்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மேலும் சொல்கிறார்கள்.

நான் மனம் முடிக்க வேண்டுமென எண்ணத்தில் இருக்கிறேன். எனக்கு அல்லாஹுத்தஆலா ஒரு நல்ல பெண்ணை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறேன். இவ்வாறு இத்தாவில் இருக்கக்கூடிய பெண்ணிடத்தில் நீங்கள் சொல்வது தவறு கிடையாது.

மேலும் இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த சூசகமாக பேசுவது என்பதற்குரிய விளக்கம் சொல்கின்றார்கள்;

அல்லாஹ் உங்களுக்கு என்ன குறையை வைத்திருக்கிறான். நீங்கள் எவ்வளவு சிறப்பானவர்கள். கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அடுத்த வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று, தன்னுடைய விருப்பத்தை இத்தாவில் இருக்கக்கூடிய அந்த பெண்ணுக்கு (இரண்டு விதமான இத்தா,ஒன்று கணவனை இழந்துவிட்ட இத்தாவாக இருக்கட்டும், அல்லது குலாவின் மூலமாக, அல்லது தலாக் பாயினின் மூலமாக இத்தா இருக்கக்கூடிய பெண்களாக இருக்கட்டும்)இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எந்தவிதமான தவறுமே கிடையாது.

கண்ணியத்திற்குரியவர்களே! இதுதான் கண்ணியத்திற்குரிய, ஸஹாபாக்கள் உடைய சமுதாயத்தின் வாழ்க்கையாக இருந்தது. அவர்கள் இந்தத் திருமணத்தைப் பொருத்தவரை அவர்களின் வாழ்க்கையை ஒரு எதார்த்தமாக எடுத்துக்கொண்டார்கள்.

இப்படி கணவனை இழந்து இருக்கக்கூடியஅந்த பெண்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஒரு பெண்ணுக்கு அவளுடைய ஆசை என்பது, அதற்கு நீங்கள் ஒரு வயதை நிர்ணயிக்க முடியுமா?

நீங்கள் ஆண்களுக்கு வயதை நிர்ணயிப்பதில்லை. எந்த வயதில் மனைவியை இழந்தாலும், அந்த ஆண் இன்னொரு திருமணம் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஊட்டுகிறீர்கள். அதற்குரிய ஏற்பாட்டைச் செய்கிறீர்கள். ஆண்கள் மணம் முடித்துக் கொண்டால் அவர்களுக்கு நீங்கள் வாழ்த்துச்சொல்கிறீர்கள்.

ஆனால் பெண்கள் என்று வந்துவிட்டால்,அவள் தன்னுடைய கணவனை இழந்து அடுத்த திருமணத்திற்கு ஆசைப்படுவது, அது எந்த வயதாக ஆக இருக்கட்டும், சிறுவயதுப் பெண்களை கூட அவர்கள் ஆசைப்பட்டால் அதை ஒரு கேவலமாக பார்க்கக்கூடிய, அதை ஒரு இழிவாக பார்க்கக்கூடிய, ஒரு சூழ்நிலை இந்த சமுதாயத்தில் எங்கிருந்து வந்தது? காஃபிர்களின் கலாச்சாரத்தில் இருந்து வந்தது.

இன்னொரு விஷயத்தை இதற்குள் நீங்கள் கவனிக்க வேண்டும். இன்று நம்மை பொருத்தவரை நாம் என்ன நினைக்கிறோம்? இன்று அதை நாம் கொஞ்சம் தெளிவாக பார்க்க வேண்டும்.

பலர், கணவனை இழந்த அந்தப் பெண்களை ஒரு அபசமாக பார்க்கிறார்கள். ஒரு கெட்ட சகுனமாக பார்க்கிறார்கள். கணவனை இழந்த பெண்ணை ஒரு துர் சகுனமாக பார்ப்பது, இது காஃபீர்கள் உடைய குணம். இது வாழாவெட்டி என்று அவளை சொல்வது, இது முழுக்க முழுக்க முஷ்ரிக்களுடைய கலாச்சாரம்.

நமது கண்ணியத்திற்குரிய, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் முதலாவதாக தேர்ந்து எடுத்தது, இரண்டு முறை கணவனை இழந்த ஒரு பெண்ணை என்பதை நாம் மறந்துவிட்டோம்.

அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் முடித்த திருமணங்களில் ஒரே ஒரு பெண்ணைத் தவிர, அத்தனை பெண்களும் அதில் அதிகமானவர்கள், கணவனை இறப்பின் மூலமாக இழந்தவர்கள்.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா : 8/205

கண்ணியத்திற்குரியவர்களே! விதவைகைகளை திருமணம் முடிப்பது, விதவைகளுக்கு வாழ்க்கை கொடுப்பதுமுஸ்லிம்களுடைய சிறப்பு அம்சங்களில் ஒன்று. அதுவும் குறிப்பாக அந்த விதவைகளுக்கு குழந்தைகள் இருந்தால் அப்படிப்பட்டவர்களை தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொள்வது ஒரு முஸ்லிமுடைய உயர்ந்த குணம்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நேசிக்கிறான், மறுமையை நேசிக்கிறான், அல்லாஹ்விடத்தில் உயர்ந்த பதவிகளை விரும்புகிறான், என்பதற்கு அவனுடைய ஈமானுடைய அடையாளம் அவன் ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுப்பது.

இன்று நமது சமுதாயத்தில் ஹதீஸ்களில் ஒவ்வொன்றுக்கும் தவறான அகராதிகள் சொல்லப்பட்டு இருப்பதை போன்று, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரண்டு ஹதீஸ்களுக்கும் மிகத் தவறான முறையில் அகராதி சொல்லப்பட்டு இருக்கிறது.

ஒன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى

நானும் யதீம்களை ஆதரிப்பவர்களும்சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று தனது இரண்டு விரலையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இணைத்து சொல்லிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5304, 5546.

இன்று நமது முஸ்லிம்கள் இதற்கு கொடுத்து இருக்கக்கூடிய விளக்கம் என்ன தெரியுமா? எனவே நாம் ஆரம்பிக்கவேண்டும்.அப்படி இல்லை என்றால் எங்கேயாவது எத்தீம்கானாவில் சென்று ஒரு பிள்ளையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிள்ளைக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளவேண்டும்.

நான் கேட்கிறேன்; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸை நமக்கு நமது காலத்தில் சொன்னார்களா? அல்லது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களின் காலத்தில் ஸஹாபாக்களுக்கு முன்னால் இந்த ஹதீஸை சொன்னார்களா?

ஸஹாபாக்களின் காலத்தில் ஸஹாபாக்களுக்கு முன்னால் இந்த ஹதீஸை சொன்னார்கள். ஸஹாபாக்கள் என்ன செய்தார்கள்? எத்தீம்கானாக்களை உண்டாக்கினார்களா? அனாதை இல்லங்களை கட்டினார்களா?

என்ன கருத்து இந்த ஹதீஸில் சொல்லப்பட்டு இருக்கிறது? எத்திமோடு உள்ள அந்த பெண்களை நீங்கள் மணமுடித்து அந்தப் பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்து அந்த எத்தீமான பிள்ளைகளை உங்களது பிள்ளைகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

நாம் என்ன செய்கிறோம். எத்திமுடைய பிள்ளைக்கு நாம் கொடுக்கக்கூடிய அந்தஸ்து என்ன? அந்த சமுதாயத்தில் அந்தப் பிள்ளையை நாம் பார்க்கக்கூடிய பார்வை என்ன? அவன் ஏதோ தனது தந்தையை கொலை செய்தவனை போல, அவனுடைய தந்தை இழப்பதற்கு இவர்களுடைய விதி காரணம் என்பதை போல.

அதுபோன்றுதான் பெண்ணையும் அந்த ஆண் இறந்து விட்டதற்கு யார் காரணம்? உன்னை மணம் முடித்து தான் என் பிள்ளை இறந்து விட்டான். நல்லாதான் இருந்தான், இந்த நோய் என் மகனுக்கு ஏற்படவே இல்லை. நீதான் கெட்டவன், உன் குணம் தான் சரி இல்லை. உன்னை கட்டின நேரம் தான், உன் சகுனம் தான் சரியில்லை.

அன்பிற்குரியவர்களே! சென்ற அமர்வில் பார்த்தோம். ஒரு பெண்ணுடைய கணவன்மார்கள் ஒன்றன்பின் ஒன்றாக கொலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அடுத்து நான் உன்னை மணம் முடித்துக் கொள்கிறேன்என்று போட்டி போட்ட முறையை கலாச்சாரத்தை நாம் பார்த்தோம்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். எத்தீம்களை ஆதரிப்பவர்கள் என்னோடு மறுமையில் சொர்க்கத்தில் இப்படி இருப்பார் என்று.

அதற்கு என்ன அர்த்தம்? எத்தீம்கானா கட்டுவது என்று அர்த்தமல்ல,எங்கேயோ இருக்கக்கூடிய ஒரு எத்தீம்க்கு நீங்கள் மாசம் 1,000ரூபாய் கொடுப்பது என்பதுஅதனுடைய அர்த்தம் அல்ல.

அதை நீங்கள் நன்மையை நாடி செய்தீர்களானால் நன்மை கிடைக்கும். ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எத்தீம்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்பவர் என்று யாரை சொன்னார்கள்?

ஸஹாபாக்கள் உடைய கலாச்சாரத்திலிருந்து இதற்கு நீங்கள் விளக்கத்தை தேடுங்கள். அந்த எத்தீம் உடைய தாயை உங்களது மனைவியாக ஆக்கிக் கொண்டு, அந்தப் பிள்ளைகளை உங்களது பிள்ளைகளில் ஒரு பிள்ளையாக, உங்களது குடும்பத்தின் ஒரு அங்கமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.

இங்கே பிரச்சனை, ஆண்கள் நாடினாலும், ஆண்கள் அதை விரும்பினாலும் மனைவிமார்கள் இடத்தில் அனுமதி கிடையாது.

சுருக்கமாக இன்றைய காலத்தில் தலாக் விடப்பட்ட அல்லது விவாகரத்து, அல்லது கணவனை இழந்த பெண்களின் அந்த பிற்போக்கான ஒரு சூழ்நிலைக்கு, அவர்கள் கைவிடப்பட்ட சூழ்நிலைக்கு அவர்களைப் போன்ற பெண்கள்தான் காரணம்.

சமுதாயத்தின் பெண்களின் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைக்கு காரணம் பெண்கள் தான்.

இன்று நமது சமுதாயத்தில் பெண்களின் மன நிலையை பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதற்கு ஒரு ஆண் முன் வந்தால் ஏற்கனவே இருக்கக்கூடிய அவருடைய மனைவி, சொல்லக்கூடிய வசனம் என்ன?

உங்க மேல தான் அல்லாஹ் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று விதிச்சானோ? உலகத்தில் வேறு யாருமே வாழ்க்கை கொடுக்கறதுக்கு, இல்லையோ?

இரண்டாவது, அந்தப் பெண்ணைப் போன்று அந்தப் பெண்ணுடைய நிலைமையை போன்று மனைவியை இழந்த யாராவது ஒருத்தர் இருப்பான். அவன் வாழ்க்கை கொடுப்பான். உங்களது வேலையை பார்த்துட்டு போங்க.

மூன்றாவது dialogue;உங்களுக்கு வேணும்னா அந்தப் பொண்ணுக்கு மாசம் 1,000, 2000கொடுத்து விட்டு போங்களேன். என் வாழ்க்கைதான் கொடுக்கணுமா நீங்க?

நான்காவது dialogue;எனது வாழ்க்கையில் யாரையும் நான் கூட்டாக்கி கொள்ள விரும்பவில்லை. நான் அதற்குத் தயாரில்லை. அவள் வாழாவெட்டியாக வாழாவெட்டியாக ஆகிவிட்டால்என்றால் அது அவருடைய தலைவிதி. என் விதியை கெடுக்க அவள் ஏன் தயாராக வேண்டும்?

இதே வார்த்தையை அந்தப் பெண்கள் சொல்வதை பாருங்கள். வேறு யாரும் சொல்லக்கூடிய வார்த்தை அல்ல. காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் என்ற தலைப்பிற்கு காரணம் என்ன?இன்றைய முஸ்லிம்களின் வாயிலிருந்து வெளிப்படக்கூடிய வார்த்தை இது.

அடுத்த dialogue;நீங்கள் திருமணம் முடித்து விடுவீர்களா? பார்த்துவிடுவோம் என்ன  நடக்கிறது என்று, உங்களை உயிரோடு விட்டு விடுவேனா? அந்தப் பெண்ணை உயிரோடு விட்டு விடுவேனா? நடந்து விடுமா? என்ன நடக்கிறது.

உடனடியாக, திருமணத்தை விரும்பக்கூடிய அந்த ஆணை விட்டுவிடுவார்கள். அடுத்து நேரா அந்தப் பெண்ணுடைய வீட்டு வாசலில் போய் நிற்பார்கள்.அதற்குப்பிறகு ஆறாவது கலிமாவிலிருந்து ஏழாவது கலிமாவிலிருந்து 10-வது கலிமாவிலிருந்து 100ஆவது கலிமா வரை ஓதி, அதாவது அந்த பெண்ணுக்கு என்னென்ன வார்த்தைகளை கொட்ட முடியுமோ, காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி, சந்தி சிரிக்க வைத்து, அந்தப் பெண்ணை அந்தத் தெருவே விட்டு ஓடும்படி செய்து விடுவாள்.

அடுத்து அந்தப் பெண் தலைகாட்ட முடியாத அளவுக்குஅவளை மானபங்கம் படுத்தக்கூடிய நிலையை அந்தப் பெண்கள் உருவாக்கி விடுகின்றனர்.

நீ நினைத்துப் பார். நாளை உனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், உனது மகனுக்கு, உனது தந்தை சகோதரிக்கு ஏற்பட்டால்எப்படி இருக்கும் என்பதாக.

அல்லாஹுத்தஆலா அப்படி படைக்கவில்லை. அப்படி படைத்திருந்தால் அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லும் பொழுது ஒரு திருமணத்தை செய்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்லி முடித்து இருப்பானே!ஒரு ஆணை அல்லாஹு தஆலா பல பெண்களுக்கு எழுதி இருக்கின்ற காரணத்தால் தான் திருமணம் என்ற பேச்சை எடுக்கும்போது இரண்டை மணம் முடியுங்கள், மூன்றை மணம் முடியுங்கள், நான்கை மணம் முடியுங்கள். பொருளாதார வசதி இல்லை என்றால் ஒன்றை மணம் முடியுங்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். (அல்குர்ஆன் 4 : 3)

ஒரு சுதந்திரமான பெண்ணை முடிப்பதற்கு உண்டான பொருளாதார வசதி இல்லையா?அடிமைப் பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

கண்ணியத்திற்குரிவர்களே! இந்த நிலை எப்போது இருந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஸஹாபாக்களின் காலத்தில் தான் பெண்கள் அதிகமாக இருந்தார்கள், விதவைகள் அதிகமாக இருந்தார்கள், போர் நடந்து கொண்டிருந்தது, என்பதாக நீங்கள் கற்பனை செய்து விடாதீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு முஹல்லாவிலும் அவரவர் ஒரு கணக்கெடுத்துப் பாருங்கள். உங்களது குடும்பங்களுக்குள் நீங்கள் எடுத்துப் பாருங்கள். இந்த நிலை கண்டிப்பாக இருக்கும்.

அடுத்து அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ

யார் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்காக உழைக்கின்றாரோ அவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்பவரை போல, அவர் காலமெல்லாம் நின்று வணங்கக்கூடியஒரு தொழுகையாளியை போல, காலமெல்லாம் இடைவிடாமல் நோன்பு நோற்க்கக் கூடிய ஒரு நோன்பாளியை போல என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4934, 5353.

எவ்வளவு பெரிய சிறப்பை சொன்னார்கள்.

இன்று நம்முடைய கலாச்சாரம் என்ன?நாமெல்லாம் அல்லாஹ்வை வணங்குகிறோமா? வணங்கவில்லையா? ஆனால் பணத்தை, காசை வணங்கிக் கொண்டு இருக்கிறோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

பணத்தை வைத்து அதற்கு நெற்றியால் ஸுஜூது தான் செய்யவில்லை. இன்றைய சமுதாயம் ஆனால், உள்ளத்தால் அதற்கு ஸுஜூது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்று நமது சமுதாயத்தின் பல சகோதரிகள் தடுப்பதற்கு உரிய தலையாய காரணம், இவ்வளவு நாள் என் கணவனோடு கஷ்டப்பட்டு எங்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த சொத்து, சுகத்தில் நான் விட்டுக்கொடுத்து விடுவேனா? இந்த காசு பணம் யாருக்கு? நீ அப்படி கட்டுவதாக இருந்தால், சொத்தை எல்லாம் எனக்கும், என் பிள்ளைக்கும்எழுதி வச்சுட்டு அடுத்து நீங்க போய் கட்டிகிட்டு அங்கே வாழ்ந்து கொள்ளுங்கள்.

ஹிஜாபு அணிந்து கொண்டு,கண்களை மறைத்துக் கொண்டு, தலையை மறைத்துக் கொண்டு இவர்கள் ரப்புக்கா ஸுஜூது செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் காசுக்கும், பணத்திற்கும் ஸுஜூது செய்துகொண்டிருந்தார்கள்.

ஆகவேதான் அடுத்த அடுத்த திருமணம் என்று வரும்போது, முடிந்தவரை தடுத்து நிறுத்தி பார்ப்பார்கள். என்னென்ன முறையில் ஆட்டம் ஆட முடியுமோ ஆடி பார்ப்பார்கள். கடைசியில் முடியவில்லைஎன்றால் சொத்துக்கு வந்துவிடுவார்கள். சொத்து எல்லாம் எழுதி வெச்சுடுங்க‌. இதுவரைக்கு உள்ள சொத்து இது எனக்கும், என் பிள்ளைகளுக்கும், அடுத்து இனிமேல் சம்பாதிப்பது நீங்கள் கொடுத்து விடுங்கள்.

எத்தனை இடங்களில் மிக வேதனையான ஒரு நிலவரத்தை நாம் பார்த்திருக்கின்றோம். தனது மனைவியை இழந்த கணவன், அவர் சம்பாதித்து இருப்பார். பிள்ளைகளை உருவாக்கியிருப்பார். படிக்க வைத்து இருப்பார். வியாபாரங்களை அமைத்துக் கொடுத்து இருப்பார். எல்லாவற்றையும் செய்து இருப்பார். அவருடைய மனைவி இதற்குப் பிறகு அடுத்து ஒரு கல்யாணம் முடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், இதுவரைக்கும் உள்ள சொத்தை இப்போவே பங்குபோட்டு எங்களுக்கு கொடுத்து விடுங்கள். உங்களுக்கு ஆறில் ஒன்று கிடைக்கும்.

இனி நீங்க மணமுடித்து என்ன செய்தாலும் சரி, எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

இது ஆண்களின் மீது இன்றைய சமுதாயம் நடத்துகின்ற கொடுமை என்றால், பெண்களின் மீது நடக்கின்ற கொடுமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இது சாதாரண ஒரு விஷயம் அல்ல. ஏதோ கேட்டோம், விருப்பப்பட்டால் செயல்படுத்துவோம். இல்லை என்றால், நமக்கென்ன என்று விட்டு போகக் கூடிய விஷயமல்ல இது.

இதன் காரணமாகத்தான் இன்றைய சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்கேடுகள், மானக்கேடுகள், ஒழுக்க கேடுகள்,சமுதாயத்தின் சீரழிவுகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹுமணமுடித்து வருகிறார்கள். (இன்றைய சமுதாயத்தில் உள்ள வாலிபர்களின் மனநிலையை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். கண்டிப்பாக திருமணம் என்றால் கன்னிப்பெண்ணை தேடக் கூடிய நிலை. அது முதல் திருமணமாக இருக்கட்டும், அடுத்தடுத்து திருமணம் ஆக இருக்கட்டும், இதுவும் அந்த நபித் தோழர்கள் உடைய கலாச்சாரத்திற்கு மாற்றமான ஒன்று.)

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹுஒரு விதவையான பெண்ணை மணமுடித்து வருகிறார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் திருமணமாக இருக்கிறது.

நூல் : புகாரி, எண் : 4052

கண்ணியத்திற்குரியநபித்தோழர்கள் ஹலாலான ஒரு துணை வேண்டும். என்று கேட்கிறார்களே தவிர அந்தப் பெண்ணுக்கு அவர்கள் வயதோ, படிப்பையோ,திறமையோ இப்படி ஒரு பட்டியல் வைத்துக் கொண்டு அவர்கள் மணப்பெண்ணை தேடியதாகவோ, அல்லது அவர்களுடைய காலத்தில் உள்ள அந்த பெண்கள் இப்படி ஒரு பட்டியலை வைத்து கொண்டு மணமகனை தேடியதாகவும் நம்மால் அறிய முடியவில்லை.

யார் முந்தி வருகிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை. இந்த முகம் எனக்கு பிடிக்கிறதா?என்று தான் அவர்களுடைய கலாச்சாரமாக இருந்ததே தவிர, இன்று காஃபிர் உடைய சூழ்நிலையிலேயே வாழ்ந்து, வளர்ந்து அவர்களில் ஒருவனாக நாம் மாறிவிட்ட காரணத்தால் தான் பலவிதமான பட்டியல்களை வைத்து இருக்கிறோம்.

மாப்பிள்ளைகளை தேடக்கூடிய மிகப்பெரிய ஒரு சீர்கேடான காஃபிர்களின் கலாச்சாரத்தில் அறிந்தோ, அறியாமலோ நமது சமுதாயம் மாற்றிக் கொண்டு மிகப்பெரிய ஒரு சீரழிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

திருமணத்தை லேசாக்குங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இன்று திருமணத்தை விட சிரமமான ஒன்று கிடையாது.

தமிழ்நாட்டில் பழமொழியை ஒன்று எழுதி வைத்து கொண்டார்கள். அந்த பழமொழிக்கு மாற்றம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்து கொண்டார்கள். வீட்டை கட்டிப்பார், அப்புறம் கல்யாணத்தை கட்டிப்பார்.

கல்யாணத்தை எங்கே கட்றது? கட்டுவதற்கு முன்பே இடிஞ்சு போயிட்டு இருக்குதே.

அன்பிற்குரியவர்களே! சிந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு என்ன வாழ்க்கையை கொடுத்தார்கள்.

சமுதாயத்தின் பிரச்சனைகளை நீங்கள் கவனியுங்கள். யார் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை கவனிக்கவில்லையோ, அவருக்கும்முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு மத்தியில் உள்ள அன்பிற்கு, பரஸ்பர உணர்வுகளுக்கு, பிரியத்திற்குரியஉள்ள உதாரணம் என்ன?

ஓர் உடலைப் போல. அந்த உடலில் எந்த பகுதிக்கு காயம் ஏற்பட்டாலும் சரி, அடுத்து மற்ற பகுதிகள் எல்லாம் விழித்து இருந்து அந்த துக்கத்தை பங்கு கொள்ளும். (2)

அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2586, 4685.

யார் வீட்டில் என்ன நடந்தால் என்ன? யார் விதவை ஆனால் என்ன? யாருக்கு தலாக் ஆனால் என்ன?எப்படி எந்த பெண்கள் சீர் அழிந்தால் என்ன? நான் உண்டு, என் வாழ்க்கை உண்டு, நான் சம்பாதித்த செல்வம் நான் சுகபோகமாக வாழ்வதற்கு. நான் சம்பாதித்த செல்வம் எனது மனைவி மக்கள் சுகபோகமாக வாழ்வதற்கு.

ஏழைகள் எப்படி ஆனால் என்ன? அவர்கள் சீர் அழிந்தால் என்ன? சமுதாயத்தில் பெண்கள் சீரழிந்தால் என்ன? பிள்ளைகள் சீர் அழிந்தால் என்ன? என்ற எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்ற, மிகப் பெரிய ஒரு இழிவான நிலையில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அடுத்த வீட்டில் உள்ளவர்கள் உணவு இல்லாமல் பசியோடு வாழ்ந்தால், நாம் மூஃமின்கள் இல்லை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

நூல் : ஹாகிம், எண் : 2166.

அடுத்த வீட்டில் ஒரு விதவை இருக்கிறாள். அவருடைய பிள்ளைகள் சீரழிகிறார்கள். நமது தெருவில் நமது முஹல்லாவில். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லாமல் இருந்தால் இது அதை விட எவ்வளவு பாவம் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்னும் பல விஷயங்களை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அல்லாஹ் உதவி செய்வானாக.!

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை வாயால் நேசிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அதன் மூலமாகத்தான் அல்லாஹ் நமக்கு வெற்றியை வைத்து இருக்கிறான். அந்த வெற்றியை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ يُحَدِّثُ أَنَّ مَعْمَرًا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ (صحيح مسلم 3012 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ الشَّعْبِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى حَدَّثَنَا إِسْحَقُ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ مُطَرِّفٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ (صحيح مسلم 4685 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/