HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 6-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 6-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 6-8) | Tamil Bayan - 387


காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் - அமர்வு 6

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 11-03-2016| 02-06-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் என்ற தலைப்பின் கீழ், இன்றைய முஸ்லிம் சமுதாயம் காஃபிர்களின் கலாச்சாரத்தால், அவர்களுடைய பண்பாடுகளால் தாக்கப்பட்டிருக்கிறது, அவர்களின் மாற்று மத கலாச்சாரம் முஸ்லிம்களை எந்தளவு பாதிப்படையச் செய்திருக்கிறது, முஸ்லிம்களாகிய நாம் கொள்கையால், பழக்க வழக்க பண்பாடுகளால், நம்முடைய சிந்தனைகளால் எந்தளவு மாறியிருக்கிறோம் என்பதை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ளும் விதமாக, இதன் மூலமாக என்னையும் நான் சார்ந்து இருக்கின்ற சமுதாயத்தையும் சீர் செய்து கொள்கின்ற எண்ணத்தில் சில அடிப்படை விஷயங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை இந்த நல்ல விஷயங்களை பார்த்து பயன்பெறக்கூடிய நன்மக்களாக ஆக்கியருள்வானாக, சத்தியத்தை எடுத்து சொல்வதற்கும், சத்தியத்தின்படி செயல்படுவதற்கும் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக.!

அன்பிற்குரியவர்களே!தலைப்புக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நாம்புரிந்து சென்றாக வேன்டும்; மார்க்கமென்பது நமது விருப்பத்திற்கேற்ப அல்லது நமது பண்பாடு, கலாச்சாரத்திற்கேற்ப அமைய வேண்டும் என்று நினைப்பது காஃபிர்களின் குணமென்பதை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

முஃமின்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டுமென்றால், அல்லாஹுடைய மார்க்கத்திற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லாஹுடைய சட்டங்களுக்கேற்ப நாம் நம்முடைய மனநிலையை மாற்ற வேண்டும், நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, சமுக பண்பாடுகளை நாம் மாற்ற வேண்டும் என்பதாகும்.

அதுதான் நமது ஈமான், அதுதான் நாம் அல்லாஹுவை நேசிப்பதன் அடையாளம், என்ற நம்பிக்கை உள்ளவர்கள்தான் முஃமின்கள். காஃபிர்கள் அப்படியல்ல, அவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப குர்ஆனுடைய வசனங்கள் இறங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

அல்லாஹ் நபிக்குச் சொன்னான் : பார்க்க : (அல்குர்ஆன் 2:120, 23:71, 42:15)

وَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُمْ بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ

(நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 6:35)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ بَلْ أَتَيْنَاهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُعْرِضُونَ

சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர். (அல்குர்ஆன் 23:71)

ஆகவே,தான் விரும்பக்கூடிய வகையில் ஒரு சீர்திருத்தவாதி, சீர்திருத்த கருத்துகளை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், அவர்கள் மஸ்ஜிதுக்கு வரவேண்டிய அவசியமில்லை, அவர்கள் வேறு எங்கேயாவது சர்ச்சுகளுக்கோ, கோயில்களுக்கோ சென்று விடலாம்.

அங்கு இருக்கக்கூடிய போதகர்கள்,மக்களின் விருப்பங்களுக்கேற்ப, கோப தாபங்களுக்கேற்ப, வரவேற்புக்கு, எதிர்ப்புக்கேற்ப அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்வார்கள்.

ஆனால் சத்தியத்தை அறிந்த, அல்லாஹுடைய தீனை பின்பற்றுகின்ற, மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்திலுள்ள, ஆசையிலுள்ள, கொள்கை உறுதியிலுள்ள ஒரு மார்க்க அறிஞர், அல்லாஹுடைய வேதத்தில் எது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறதோ, ரஸூலுடைய  சுன்னாவில் எது தெளிவாக மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த விஷயங்களை மக்களுக்கு எடுத்து சொல்லியாக வேண்டும்.

அது தனக்கு பாதகமாக இருந்தாலும் சரி, தன் சார்ந்திருக்கின்ற சமுதாயத்திற்கு பாதகமாக இருந்தாலும் சரி, தான் சார்ந்திருக்கின்ற சமுதாயம் அதை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் சரி, அதை சொல்வதால், தான் சார்ந்திருக்கின்ற சமுதாயம் தன்னை எதிர்த்தாலும் சரி, தூக்கி எறிந்தாலும் சரி. மக்களுடைய அன்புக்கு, மக்களுடைய பகைமைக்கேற்ப ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்று ஒரு அறிஞர் முடிவு செய்தால் அவர் வழிகேட்டில் பயணம் செய்யத் தொடங்கிவிட்டார். (அல்லாஹ் பாதுகாப்பானாக.!)

அன்பிற்குரியவர்களே!இந்த விஷயத்தை மனதில் பதியவைத்துக் கொண்டு இன்றைய முக்கியமான விஷயத்தை நாம் பார்ப்போம். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்ற இந்த தீனை ஒரு எதார்த்தமான தீனாக கொடுத்திருக்கிறான்.

தீனுல் ஹக்-உண்மையான மார்க்கம், எதார்த்தமான மார்க்கம். மனிதனுடைய அன்றாட வாழ்க்கையோடு, அவனது எதார்த்தமான ஆசைகளோடும், அவனது உணர்வுகளோடும், பழக்க வழக்கங்களோடும் ஒத்துப்போகின்ற, அவனுடைய ஹலாலான விருப்பங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு அழகான வழிமுறைகளை சொல்லக்கூடிய மார்க்கம், நம்முடைய இஸ்லாமிய மார்க்கம்.

எதார்த்தங்களை மறுக்கக்கூடியதோ அல்லது மனிதனை அல்லாஹ் ரப்புல் ஆலமீன்எந்த இயற்கையின்படி அமைத்தானோ அந்த இயற்கையிலிருந்து மாற்றக்கூடிய மார்க்கமல்ல, அந்த இயற்கைக்குண்டான நேரிய வழியை போதிக்கக்கூடிய மார்க்கம் நம்முடைய மார்க்கம்.

அந்த அடிப்படையில் நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், இன்றைய சமுதாயத்தில் வாழக்கூடிய நாம், இந்த திருமணம் என்ற விஷயத்தில் நாம் எந்த ஒரு கலாச்சாரத்தில் இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒன்று, திருமணத்திற்கான மணமக்களை தேர்ந்தெடுப்பதிலிருந்து, திருமணங்களை நடத்துவதிலிருந்து, அதை தொடர்ந்து நடக்கக்கூடிய அனாச்சாரங்களிலிருந்து எல்லா வகையிலும் அன்னியர்களின் கலாச்சாரத் தாக்கங்கள், அன்னியரின் மத கோட்பாடுகள், நமது முஸ்லிம் மக்களை பெரிய அளவில் தாக்கியிருக்கிறது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்வது எந்த மிகையுமாகாது.

அடுத்து இன்றைய மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருப்பது, சமுதாயத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருப்பது, நமது சமுதாயத்தில் இருக்கக்கூடிய விதவைகள்.

அது கணவன் இறந்ததினாலோ, அல்லதுவிவாகரத்து ஆனதினாலோ, அல்லது கணவனிடமிருந்து ஆகுமான 'குல்ஆ' வாங்கியதினாலோ கணவனை பிரிந்திருக்கின்ற பெண்கள் விஷயத்தில் நமது சமுதாயத்தின் நிலைபாடு என்ன? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? அவர்களுக்குண்டான மறுவாழ்க்கையைப் பற்றி நாம் என்ன சிந்திக்கின்றோம்?

இன்று சமுதாயத்தின் சீர்திருத்தம் என்று பார்க்கும்போது சிலர் கொள்கையை மட்டும் பேசிக்கொண்டு நிறுத்தி விடுவார்கள். கொள்கை சார்ந்த சீர்திருத்தம் ஏற்பட்டால் மட்டும் போதும் என்று நினைப்பார்கள்.

சிலர் கல்வி சார்ந்த சீர்திருத்தம் ஏற்பட்டால் போதும் என்று நினைப்பார்கள். சிலர் ஒழுக்கங்கள் பண்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் போதும் என்று நினைப்பார்கள்.

ஆனால் அல்லாஹுடைய தூதர் முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கொண்டு வந்த சீர்திருத்தம், புரட்சிஅத்தோடு நின்றுவிடவில்லை, அதோடு பாண்பாடு சார்ந்த புரட்சி, ஒழுக்கங்கள் சார்ந்த புரட்சி, குணங்கள் சார்ந்த புரட்சி, சமுதாயக் கலாச்சாரம் சார்ந்த புரட்சி என கொண்டு வந்தார்கள்.

கொள்கையில், பண்பாட்டில், கலாச்சாரத்தில், குணநலன்களில், ஒழுக்கங்களில் எல்லா வகையிலும் சீர்திருத்ததை பொதுவாக்கினார்கள்.

எப்படி ஏகத்துவத்திற்கு முக்கியம் கொடுத்தார்களோ, அல்லாஹ் ஒருவனை மட்டுமே சமுதாயம் வணங்கி வழிபட வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்களோ, அதற்காக ஜிஹாது செய்தார்களோ அது போன்றுதான் சமுதாயத்தில் ஊறிக்கிடந்த ஒழுக்க சீர்கேடுகளை, அனாச்சாரங்களை களைவதில் அந்த சமுதாயத்தை நேரிய பண்பாட்டில், ஒழுக்கங்களில் கொண்டு வந்து நிறுத்துவதற்கும் அல்லாஹுடைய தூதர் போராடினார்கள். அதற்காக தனது கண்ணியத்தை இழப்பதைக்கூட தயங்கவில்லை.

விவாகரத்தான, கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றைய சமுதாயத்தில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

இன்று சமுதாயம் கணவனை இழந்த ஒரு பெண் அவள் 'இத்தா' முடித்ததற்குப் பிறகு திருமணம் செய்து கொள்வதை எப்படி பார்க்கிறது? அவளை அவளது கணவனின் நண்பர்களோ அல்லது அவளுக்கு அறிமுகம் ஆனவர்களோ அவளை பெண் பேசி முடிப்பதை இந்த சமுதாயம் எந்த பார்வையால் பார்க்கிறது?

ஒரு பெண் எந்த ஒரு காரணத்திற்காகவோ விதவையானதற்குப் பிறகு திருமணம் செய்வதை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது?

ஒட்டு மொத்தமாக சொல்லப் போனால், (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)இதில் காஃபிர்கள், இனை வைப்பவர்கள், மற்ற ஏனைய மதத்தவர்களுடைய கொள்கைக்கு, அவர்களுடைய பண்பாட்டிற்கு, எந்த வகையிலும் குறையில்லாமல் இந்த சமுதாயம் செய்வதை பார்க்கிறோம்.

சில இடங்களில் சில மனிதர்களை தவிர. அப்படியே அந்த விவாகரத்தான அல்லது விதவையான பெண்ணுக்கு திருமணம் நடப்பது என்றால் அது போன்ற ஒரு ஆண் வர வேண்டும். மனைவியை இறப்பின் மூலமாக இழந்த அல்லது தனது மனைவியை தலாக் விட்ட ஒரு ஆண் வர வேண்டும். அப்போதுதான் அந்த ஆணுக்கு இந்த பெண்ணுக்கு மணமுடித்து வைக்கப்படுவார்.

ஏற்கனவே திருமணமாகி குடும்பத்தோடு வாழக்கூடிய ஒரு ஆணுக்கு அந்த பெண்ணை திருமணம் முடித்து கொடுப்பதை அந்த குடும்பத்தை சீர்குலைப்பதாக சமுதாயம் கருதுகிறது.

ஒன்று, திருமணமே செய்து வைக்க மாட்டார்கள். நீ உனது கணவனை நினைத்துக் கொண்டு அவனது அன்பில் இப்படியே உனது வாழ்நாளை கழித்துவிடு, உனது பிள்ளைகளுக்காக தியாகம் செய் என ஒரு போதனை.

ஆர்வமூட்டி செய்யமாட்டார்கள். அப்படியே மறுமணம் செய்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், யாருக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள், யாருடைய மணைவி இறந்து விட்டாரோ, அல்லது யாருடைய தனது மனைவியிடமிருந்து தலாக் அல்லது குல்ஆ மூலமாக தனியாகி விட்டார்களோ அவர்களுக்குத்தான் நாங்கள் திருமணம் முடித்து வைப்போம். இப்படி ஒரு கலாச்சாரம்.

இன்னொரு கலாச்சாரமிருக்கிறது, சரி மணமுடித்து வைப்போம், ஆனால் நாங்கள் வெளியில் மணமுடித்துக் கொடுக்க மாட்டோம். அந்த பெண் விரும்புகின்ற, அந்த பெண்ணுடைய விருப்பத்தை கேட்டு அவள் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மணமுடித்து கொடுக்க மாட்டோம்.

மாறாக எங்களது குடும்பத்திலேயே ஒருவர் அவரை மணமுடித்துக் கொள்வார், அவரை இந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சரி, உதாரணமாக கணவனின் சகோதரன், அல்லது கணவனின் சொந்தக்காரர்கள், சாச்சா, மாமி, இவர்களின் பிள்ளைகளில் ஒருவர்.

இவர்களுக்கும் இந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, நிர்பந்திக்கப்பட்டு மணமுடித்து வைக்கப்படுவார். இதனுடைய பின்னனி காரணங்களில் ஒன்று, சொத்து வெளியே போய்விடக்கூடாது.

அன்பிற்குரியர்களே!இப்படி மூன்று விதமான கலாச்சார சீர்கேடுகளை பார்க்கிறோம். இன்னொரு பக்கம், பெண்களை பொருத்தவரை அவர்களுடைய மனநிலையை இன்றைய சமுதாய மக்களாகிய நாம், குறிப்பாக பெண்களின் காப்பாளர்களாகிய ஆண்கள், தந்தை, சிறிய தந்தை, சகோதரர்கள், தாய்மாமன், ஆகியோர்சமுதாயத்தை எப்படி மாற்றி வைத்திருக்கின்றோம் என்றால்,

நமது விருப்பத்திற்கு ஒன்றை மணமுடிப்போம், விரும்பினால் இரண்டாவது திருமணம் செய்வோம், தேவையென்றால் மூன்றாவதாகவும், நான்காவதாகவும் திருமணம் செய்வோம் என்று நமது விருப்பத்திற்கு, ஆசைக்கு, மார்க்கம் பேசுகின்ற நாம், தமது மகளோ, தமது சகோதரியோ, தமது தாயோ, தமது கணவனை இழந்துவிட்டால் அவள் மட்டும் தனது ஆசைகளை அடக்கிக் கொண்டு, தனது இளமையை பாழாக்கி தன்னுடைய விருப்பத்தையெல்லாம் மனதில் போட்டு புதைத்துக் கொண்டு, இழந்த தனது கணவனின் நினைவிலேயே வாழ்வதுதான் இழந்த கணவனுக்கு விஸ்வாசமாக இருக்கிறாள் என்பதற்குண்டான அடையாளமாக ஆண் வர்க்கம் மாற்றி வைத்திருக்கின்றது.

ஆசையை அடக்கச் சொல்லி, தேவையை மறைக்கச் சொல்லி, பிள்ளைகளுக்காக வாழ், தியாகம் செய் என்று சொல்கிறது இந்த சமுதாயம்.

எது தியாகம்?முட்டாள் தனமான சமுதாய சீரழிவுகளை, மானக்கேடான விஷயங்களை உண்டாக்கக்கூடிய, ஹராமான தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய, கணவனில்லாத ஒரு வாழ்க்கையை தியாகம் என்ற பெயரில் ஒரு சமுதாயம் வர்ணிக்கின்றது என்று சொன்னால், அந்த சமுதாயம் காஃபிர்களின் கலாச்சாரத்தால் எவ்வளவு பாதித்திருக்கிறது என்று பாருங்கள்.

இன்று நமது சமுதாயம் இப்படியாக நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளாக்கி சமுதாய பெண்களில் விதவையானவர்கள், கணவனை இழந்தவர்கள், இவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, வாலிபத்தின் தொடக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, தான் மணமுடிக்க விரும்புவதை, தனக்கு பொருத்தமான துணையை தேடச்சொல்லி தந்தை, சகோதரன், மகன், தாய்மாமன் போன்ற தனது பொருப்பாளரிடம், சொல்லக்கூடிய துணிவுள்ள பெண்களாக, ஈமானிய உணர்வுள்ள பெண்களாக நமது சமுதாயப் பெண்களை மாற்றியிருக்கிறோமா?யோசித்துப் பாருங்கள்.

தவ்ஹீத் என்று ஷிர்க்கிற்கு எதிராக பேசுவது மட்டும்தான் ஈமானா?

அல்லாஹுடைய தீனை முழுமையாக நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹுடைய கட்டளை இருக்கிறது. (ஆல்குர்ஆன் 42:13, 8:39)

அந்த தீனில் இது இல்லையா?

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள், அவர்களது சஹாபாக்களின் வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள், எத்தனை படிப்பினைகள், பாடங்களை நாம் பார்க்கிறோம்.

இன்னொரு பக்கம், ஆண்களைப் பொருத்தவரை இவர்களில் சிலர், முதல் திருமணம் முடிப்பதில் தடையில்லை. ஆனால் அடுத்ததாக திருமணம் செய்ய நாடினால், இன்றைய வாலிப ஆண்களுடைய பொதுவான மனநிலை எப்படி இருக்கிறது என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடிப்பது சுன்னா.

ஆனால், அது ஒரு கன்னிப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிலர், விதவையாக இருந்தாலும் குழந்தைகள் இருந்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். குறிப்பிட்ட வயதுக்குள் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று சிலர்.

இப்படியாக ஆண்களிடத்தில் இருக்கக்கூடிய மனப்போக்கும் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டிய ஒன்று, களையப்பட வேண்டிய ஒன்று.

விதவைகளை, தலாக் விடப்பட்ட பெண்களை, கணவனிடமிருந்து குல்ஆ மூலமாக விடுதலை பெற்ற பெண்களை மணமுடிப்பதை இன்றைய இஸ்லாமிய ஆண் சமுதாயம் தரக்குறைவாக, அவமானமாக, மரியாதைக் குறைவாக பார்ப்பது ஒரு பக்கம்.

சமுதாயம் தவறாக பேசி விடுமோ என்ற பயம், அந்த பெண்ணோடு முன் தொடர்பு இருந்ததா, இப்படியெல்லாம் சமுதாயம் பேசி விடுமா என்ற பயம் சிலருக்கு.

வேறு சிலருக்கு, இன்னொருவனோடு வாழ்ந்த ஒரு பெண்ணை நான் எப்படி மணமுடிப்பது என்ற காஃபிர்களின் குணம்.

விதவைகளை மறுமணம் செய்வது எந்த வகையிலும் அவமானமோ, அருவருப்போ அல்லது கசப்பான செயலோ அல்ல.

அந்த எண்ணத்தை இஸ்லாம் அடியோடு தகர்க்கிறது. இப்படிப்பட்ட எண்ணம் ஒருவனுக்கு இருக்குமேயானால் அவன் கலிமா சொல்லி தன்னுடைய ஈமானை புதிப்பித்துக் கொள்ளட்டும். இந்த வார்த்தைகள் கடுமையாக இருக்கலாம்.

ஆம், ஈமான் என்பது உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்; அந்த வசனத்தை திரும்பத் திரும்ப படியுங்கள்.

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.(அல்குர்ஆன் 4:65)

இது அல்லாஹுடைய மிகத் தெளிவான உறுதிமிக்க வசனம்.

அன்பானவர்களே!அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய வாழ்க்கையில் சில பகுதிகளை முந்திய அமர்வுகளில் நாம் பார்த்தோம்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்விதவைகளை மணமுடித்தார்கள் என்றால், விதவைகளை மணமுடிப்பதில் என்ன கேவலம் இருக்கிறது. விதவைகளை மணமுடிப்பதில் உள்ள சிறப்புகளில் ஒன்று, விதவைகளை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மணமுடித்திருக்கிறார்கள். 

கதீஜா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களைப் பற்றி பார்த்தோம், அது போன்று ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களைப் பற்றி பார்த்தோம், ஸைனப் பின்த் குஸைமா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்கள் உபைதா இப்னு ஹாரிஸ் ரழியல்லாஹுஅன்ஹுஎன்ற நபித்தோழருடைய மனைவியாக இருந்தார்கள்.

நூல் : (அல்பிதாயா வன்னிஹாயா: 5/581)

இவர்கள் உஹது போரில் கொல்லப்பட்டார்கள். இத்தா முடிந்ததும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்திருமணம் பேசி மணமுடித்தார்கள்.

ஹஃப்ஸா பின்த் உமர் ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுடடைய வாழ்க்கையை முன்பு பார்த்தோம், ஸஐனப் பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய வளர்ப்பு மகன் ஸைது இப்னு ஹாரிசா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மூலமாக தலாக் விடப்பட்டார்கள், அவர்களை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்து வைத்தான்.

அதே போன்று உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுடைய கணவனார் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸத் ரழியல்லாஹு அன்ஹுஇந்த இருவரும் எப்படியென்றால், உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களும் அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களும் மகிழ்ச்சியான, மிகவும் அன்பான, மிக்க காதலும், நேசமும் நெருக்கமும் கொண்ட ஒரு தம்பதியினருக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு இந்த இருவரையும் சொல்லலாம்.

இவர்காளுடைய அன்பு அரபுலகில் பிரபல்யமாக பேசப்பட்ட ஒன்று. அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமரணித்து விடுகின்றார்கள்,அவருக்கு குழந்தைகள் இருக்கின்றார்கள். இத்தா முடிகிறது, அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்திருமணம் பேசி மணமுடித்துக் கொள்கிறார்கள்.

உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா, எனது கணவனை விட சிறந்த ஒருவர் எனக்கு அமைவாரா என யோசித்தார்கள்.

இன்று பல பெண்கள் சொல்வதைப் போல, என் கணவனை நினைத்துக் கொண்டே வாழ்ந்து விடுவேன், அவரைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என சொல்வார்கள்.

கண்டிப்பாக கணவனோடு வாழும் வரை வேறு யாரையும் நினைத்துப் பார்க்காதீர்கள், அவர் மரணித்து விட்டாலோ அல்லது குல்ஆ, தலாக் ஆகி விட்டால் அவரோடு உள்ள திருமண பந்தம் முடிந்து விட்டது. பிறகு வேறொருவரை திருமணம் செய்வது உங்களுக்கு ஹலாலாக ஆகி விடும்.

இந்த இடத்தில் ஒரு சீர்திருத்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும். விதவைகளாக இருந்து தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி தனது பழைய கணவன்மார்களை நினைத்துக் கொண்டே வாழ்வதுதான் விசுவாசம் என்று சொன்னால், தனது வளர்ப்பில் வாழக்கூடிய தனது பிள்ளைகளுக்கு நல்லது என்று சொன்னால் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அப்படி விதவைகளை திருமணம் செய்திருப்பார்களா?

நாம் மார்க்கத்தை எங்கிருந்து எடுக்கின்றோம், மற்ற மதத்தினரிடமிருந்து மார்க்கத்தை எடுக்கிறோம். அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தோழர்களிடமிருந்து மார்க்கத்தை படிக்கிறோமா?

அது போல் தான் ஜுவைரியா ரழியல்லாஹு அன்ஹா,இவர் யூத குலத்தை சேர்ந்த பெண், போரில் கைதியாகி விடுகிறார், கணவர் போரில் கொல்லப்பட்டு விடுகின்றார். அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அந்த பெண்ணை அழைத்துச் சொல்கிறார்கள் ;

நான் உன்னை உரிமையிட்டு விடுகிறேன், உன்னை நான் மணமுடித்துக் கொள்கிறேன், நீ இஸ்லாத்தை ஏற்கிறாயா என்று.

எந்த அளவு எதார்த்தத்தோடு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்வாழ்ந்தார்கள். அந்த பெண்மனி இதை விட தனக்கு என்ன சிறப்பிருக்க முடியும் என்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நபிகளாரை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நூல் : (அல்பிதாயா வன்னிஹாயா: 6/189, 190)

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் பதிவு செய்கிறேன், புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பெண்களை மணமுடிப்பதில் சிலருக்கு ஒரு விதமான தயக்கம். மௌலா இஸ்லாம் என யோசிக்கின்றார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை கவணிக்க வேண்டும். நம்மிடம், ஒரு இஸ்லாமிய சகோதரர் தனது மகளுக்கு வரன் பார்க்க கேட்டால், நாம் அவருக்கு ஒரு புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவர், தாடி வைத்திருப்பவர், நல்ல முறையில் இஸ்லாத்தை பின்பற்றுபவர், குர்ஆனை மனனம் செய்பவர் ஒருவரை பரிந்துரைத்தால், தனது மகளுக்கு இவர் வேண்டாம், பரம்பரை முஸ்லிமாக இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்கின்றனர்.

பரம்பரை முஸ்லிமாக இருந்தால் தொழுகை இல்லையென்றாலும் பரவாயில்லை, அவனிடம் பல கெட்ட பழக்க வழக்கங்கள், தொடர்புகள் போன்று என்ன சீர்கேடுகள் இருந்தாலும் பரவாயில்லை, தனது மகளுக்கு பரம்பரை முஸ்லிம்தான் வேண்டும், இவர்கள் நவ் முஸ்லிம்கள், மௌலா முஸ்லிம்கள், இவர்கள் வேண்டாம் என்றிருக்கின்றனர்.

அவர்கள் நாளை உங்களை விட சொர்க்கத்தில் முன்னர் சென்று கொண்டிருப்பார்கள். ஒருவன் ஒருவரை நவ் முஸ்லிம், புதிய முஸ்லிம் என்று குறை சொல்லி அவரை மட்டமாக பார்ப்பானேயானால் அவன் சஹாபாக்களை மட்டமாக பார்க்கிறான்.

அந்த சஹாபாக்களெல்லாம் புதிய முஸ்லிம்கள், ஆனால் இஸ்லாமை பேணினார்கள், அல்லாஹ் அவர்களை "அவர்களும் அல்லாஹுவை பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹுவும் அவர்களை பொருந்திக் கொன்டான்" என்று ஏற்றுக் கொண்டான்.

நீங்கள் முஸ்லிமுக்கு பிறந்ததால் அல்லாஹ் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டான், நீங்கள் முஸ்லிம்களாக வாழ்கிறீர்களா?உங்களது முடிவு இஸ்லாத்தில் இருக்கிறதா? என்றுதான் அல்லாஹ் பார்ப்பான். இதில் பெருமை பேசுவதற்கு வேலை இல்லை. பெருமை இருக்கிறதென்றால் அது இஸ்லாமை பின்பற்றுவதில்தான் இருக்கிறது. தங்களது மகனுக்கு வரன் தேடும்போது, புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பெண் இருக்கிறார், ஹிஜாபை பேனுகிறார், மார்க்கத்தை படிக்கிறார், குர்ஆனை அழகாக ஓதுகிறார் என்றாலும் அது எங்களுக்கு சரிப்படாது.

ஆடம்பரமாக, அனாச்சாரத்தோடு, மார்க்கத்தை பேணாமல், சீற்கெட்டு அலைகின்ற பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. இஸ்லாத்தை பேணுகின்ற, ஒழுக்கமான இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட ஒரு பெண் வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்கள் சஹாபியப் பெண்மணிகளை புறக்கணிப்பவர்களைப் போலானவர்கள்.

இன்று இஸ்லாமை ஏற்றுக் கொண்டு, தீனை பின்பற்றுகின்ற, ஹலால் ஹராமை சரியாக பார்க்கின்ற, ஒழுங்கான வாழ்க்கை வாழுகின்ற ஒரு முஸ்லிமை பொருத்தவரை, அவர்கள் சஹாபாக்களின் தரத்தில் உள்ளவர்கள், அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம், சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை பார்த்தார்கள், அவர்களோடு அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள், இவர்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.

ஆனால், அல்லாஹுவிடத்தில் தரஜாவில் இவர்கள் உண்மையில் உள்ளத்தால் ஈமானை பின்பற்றி, வாழ்க்கையில் இஸ்லாத்தை பின்பற்றுவாரேயானால் இன் ஷா அல்லாஹ் நாளை அந்த மறுமையில் நபித்தோர்களின் சமுதாயத்தோடு இருப்பார்கள்.

காரணமென்ன? நபித்தோழர்கள் எப்படி அல்லாஹுக்காக தங்களது குடும்பத்தை விட்டார்களோ, தனது தாயை பிரிந்தார்களோ, தமது உறவுகளை, தமது சமுதாயத்தை துறந்து முஸ்லிம்களோடு சேர்ந்தார்களோ, அது போன்றுதான் இன்று இஸ்லாத்தை ஏற்றவர்கள் தாங்கள் வாழ்ந்த கலாச்சாரம், தங்களது சமுதாயம், அனைத்தையும் விட்டு விட்டு நம்மோடு வந்து சேருகிறார்கள்.

நாமோ இன்றும் அவர்களை அந்நியர்களாக பார்க்கின்றோம் என்று சொன்னால் சஹாபாக்களை அந்நியர்களாக பார்க்ககூடிய சமுதாயமாக இருக்கும், (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்).

அது போன்று சஃபிய்யா ரழியல்லாஹு அன்ஹாஇவர்களும் அப்படித்தான், ஒரு யூத குடும்பத்தைச் சேர்ந்த பெண், போரில் கணவன் கொல்லப்பட்டு விடுகிறார், அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடத்தில் வரும்போது, இவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்கிறார்கள், இஸ்லாமை ஏற்றுக் கொள்கின்றார்கள், அவர்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மணமுடித்துக் கொள்கின்றார்கள்.

நூல் : (அல்பிதாயா வன்னிஹாயா" 6/145)

அது போன்று ரமலா பின்த் அபூஸுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹா, ஹிஜ்ரத் செய்து ஹபஷாவுக்கு செல்கின்றார்கள். அங்கு கணவர் இஸ்லாத்தை விட்டு கிருஸ்துவ மதத்திற்கு சென்று விடுகிறார். ஆனால் ரமலா ரழியல்லாஹு அன்ஹாதான் இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று அல்லாஹுடைய மார்க்கத்தில் உறுதியாக, அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை அந்தப் பெண்மணியின் தியாகத்திற்கு அல்லாஹ் அன்பளிப்பாக கொடுக்கின்றான்.

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ஹபஷாவுக்கு தூது அனுப்புகின்றார்கள். அங்கேயுள்ள மன்னர் அஸ்மஹாவுக்கு உங்களது பொருப்பிலிருக்கக்கூடிய ரமலா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தூது அனுப்புகிறார்கள். எப்படிப்பட்ட தியாகங்களுக்கு எத்தகைய அன்பளிப்புகளை அல்லாஹ் கொடுக்கின்றான் பாருங்கள்.

நூல் : (அல்பிதாயா வன்னிஹாயா: 6/388)

அது போன்று மைமூனா பின்த் அல்ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹா, மஸ்ஊத் இப்னு உமர் அஸ்ஸகஃபி ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியாக இவர்கள் இருந்தார்கள்.

அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டதற்குப் பிறகு, அபூருஹ்ம் என்பவரை மைமூனா ரழியல்லாஹு அன்ஹாமணமுடித்தார்கள். அபூருஹ்ம் இறந்து விடுகின்றார்.

அதற்குப் பிறகு அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் சாச்சா, மைமூனா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை மணமுடித்து வைத்தார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே!இப்படி விதவையான பெண்களையும், தலாக் விடப்பட்ட பெண்களையும் அல்லாஹுடைய தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மணமுடித்திருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மட்டுமல்ல, நபியினுடைய கலாச்சாரத்தை, நபியின் வழிகாட்டுதலை ஏற்ற அவர்களுடைய தோழர்களும் இவ்வாறே செய்தார்கள் என்பதை பல வரலாறுகளின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். அவற்றையெல்லம் இங்கு குறிப்பிட நேரமில்லை.

அந்த பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்குண்டான சில உதாரணங்களை பார்ப்போம்.

இன்றைய நமது பெண்களது மனநிலையை நாம் முன்னர் பார்த்தோம். ஆனால் இந்த மனநிலை இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு, இஸ்லாம் சொல்லக்கூடிய ஒழுக்கத்திற்கு எப்படி மாறுபட்டது என்பதை சஹாபிய பெண்களின் வாழ்க்கையிலிருந்து பார்க்கிறோம்.

ஆதிகா பின்த் ஸைத் பின்த் அம்ர், இவ்வர்கள் யார் என்றால், உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய சாச்சாவின் மகள், முதலில் அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை மணமுடித்தார்கள்.

இருவருக்குமிடையில் அவ்வளவு அன்பு, பாசம், ஆதிகா அவர்களின் அன்பினால், அப்துல்லாஹ் அவர்கள் ஜிஹாதிற்கு செல்வதில் தயக்கம் காட்டுகிறார்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மகனை அழைத்து, மகனே நீ உனது மனைவியை நேசிப்பது தவறில்லை, ஆனால் உனது மனைவியின் மீது உள்ள விருப்பத்தால், நீ ஜிஹாதிற்கு செல்ல தயங்குகிறாய் அல்லவா, அது தவறு. நீ இந்த பெண்ணை தலாக் விட்டு விடுஎன அறிவுரை கூறுகிறார்கள்.

இந்த தந்தையின் கவலை இப்போதுல்ல தந்தைக்கு இருக்குமா? இந்தப் பெண்ணின் மீதுள்ள விருப்பம் அல்லாஹுவின் பாதையில் நீ செல்வதை தடுக்கிறது என்றால், ஷஹாதத் என்ற பாக்கியத்தை நீ பெறுவதில் இருந்து உன்னை தடுக்கிறது என்றால், அப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்பதே அவர்களின் கவலையாக இருந்தது.

நூல் : (அல்பிதாயா வன்னிஹாயா: 11/152)

இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு அறிவுரை ஒரு தந்தை கூறியிருந்தால், அவருக்கு மகன் தலாக் விட்டுருப்பான். உங்களக்கு வயதாகி விட்டது, மூளை கலங்கிவிட்டது என்று அவரை ஒதுக்கி இருப்பார்கள்.

ஆனால் தன்து தந்தையின் அறிவுரையைக் கேட்ட அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஉடனே தனது மனைவியை தலாக் செய்துவிட்டார்.

இன்றைய காலமாக இருந்தால், பெண் வீட்டினர் வருவார்கள், உனது தகப்பனுக்கு மூளை குழம்பினால், உனக்கும் புத்தி கலங்கி விட்டதா? என்ன மார்க்கம் பேசி விட்டாய், கட்டிய பெண்ணை கைவிடுவதா மார்க்கம்? என்றெல்லாம் தத்துவம் பேசியிருப்பார்கள்.

ஆத்திகா ரழியல்லாஹு அன்ஹாபொறுமையாக இருந்தார்கள், ஏன்? அமீருல் முஃமினீன் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் எனது கணவன் என்னை தலாக் விடும்படி சொன்னது சொந்த விருப்பு வெறுப்புக்காக அல்ல, சொர்க்கத்திற்காக.

நான் அவரது சொர்க்கப் பாதையில் தடையாக ஆகிவிடுவேன் என்பதை பயந்து அல்லாஹுடைய தீனுக்கு உயிரை கொடுப்பதில் இருந்து நான் தடையாக இருக்கிறேன் என்பதற்காக பொறுமையாக இருந்தார்கள்.

நூல் : (உசுதுல் காபா: 7087 7/181)

ஆதிகா ரழியல்லாஹு அன்ஹாதனது கணவனை நினைத்து நினைத்து அவர்கள் இரவெல்லாம் அழுது கொண்டிருக்கிறார்கள்.

ஒரு முறை ஆதிகா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களின் வீட்டின் வழியாக அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுசெல்கிறார்கள், தனது மகனை நினைத்து இந்த பெண் அழுது கொண்டிருப்பதை அபூபக்ர் பார்த்து தனது மகனை அழைக்கிறார்கள்;மகனே நீ அவளை மீண்டும் சேர்த்துக்கொள் என்று சொன்னார்கள்.

இப்போது அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நிலமையை புரிந்து கொண்டு, எதுவாக இருந்தாலும் அல்லாஹுடைய பாதையில் இருந்து என்னை தடுக்கக் கூடாது, அதற்குப் பிறகு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஜிஹாதுக்கு அழைக்கப் படுகிறார்கள், ஜிஹாதிற்கு செல்கிறார்கள், அங்கு ஷஹீதாகி விடுகிறார்கள்.

அடுத்து என்ன நடக்கிறது?ஒரு ஷஹீதுடைய மனைவி, தன் கணவனோடு எப்படி அந்நியோன்யமாக, பாசமாக, அன்பாக இருந்தார் என்பதை அறிந்திருந்தார்கள்.

இங்கு நடந்த சம்பவத்தை பாருங்கள்;இவர்களுக்கு மத்தியில் அன்பு, நேசம் எப்படி இருந்தது என்று சொன்னால், சஹாபாக்களை பொருத்தவரை ஜிஹாதிலிருந்து அவர்களை தடுப்பது எதுவுமே இல்லை.

ஆனால் இந்த மனைவியின் பிரியம் ஜிஹாதை தடுக்கக்கூடியதாக இருந்திருக்குமேயானால் எந்த அளவு இந்த மனைவியை நேசித்திருப்பார்கள் என்பதை நீங்கள் கொஞ்சம் உணர முடியும்.

எனவே அந்த இருவரும் பேசிக் கொன்டார்கள்;நான் இறந்து விட்டால் நீ வேறு யாரையும் மணமுடித்து விடாதே!நீ வாழ்வதற்குண்டான அத்தனை வாழ்வாதாரத்தையும் நான் உனக்கு சேர்த்து வைத்து விடுகிறேன், நீ வைத்துக் கொள், ஆனால் நான் உன்னோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்கிறார்.

அதற்குப் பிறகு இவர் ஷஹீதாகிறார். ஆதிகா ரழியல்லாஹு அன்ஹா என்ன செய்வது, இது கணவனின் விருப்பம், வேறு யாரையும் மணமுடிக்க விருப்பம் இல்லை, அந்த அளவுக்கு கணவன் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆனால் அல்லாஹுடைய சட்டம் வேறாக இருக்கிறதே.

அடுத்த கலீஃபாவாக உமர் ரழியல்லாஹு அன்ஹுபொறுப்பேற்றார்கள், ஆதிகாவிற்கு  அவர்கள் தூதனுப்புகிறார்கள், ஆதிகா, உனது கணவனார் உன்னிடத்தில் இப்படி ஒப்பந்தம் செய்ததை நான் அறிவேன், அவருக்கு நீ கொடுத்த வாக்கை நான் அறிவேன், ஆனால் அல்லாஹுடைய தீனில் அல்லாஹுக்கு நீ கொடுத்த வாக்கு பெரியது.

எனவே அந்த வாக்கை முறித்தாக வேண்டும்.அந்த வாக்கு நிறைவேற்றும் படியான வாக்கல்ல, ஏனென்றால், அல்லாஹுடைய தீனுக்கு மாற்றமாக கொடுக்கப்பட்ட வாக்கு, அல்லாஹுடைய சட்டத்திற்கு மாற்றமான வாக்கு.

எனவே மறுமணம் முடித்தாக வேண்டும் என்று சொன்னார்கள். தான் என்ன செய்ய வேன்டும் கலீஃபா அவர்களிடம் கேட்க, உமர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நான் உன்னை மணமுடித்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஆதிகா அவர்களை மணமுடித்துக் கொள்கிறார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹுஷஹீதாகி விடுகிறார்கள். அடுத்து அலி ரழியல்லாஹு அன்ஹுவருகிறார்கள். தான் ஆதிகா அவர்களை மணமுடிப்பதாக சொல்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எப்படிப்பட்ட வாழ்க்கை அங்கு இருந்தது. முந்திய கணவரும் ஷஹீத், பின்னர் அமீருல் முஃமினீன் உமர் அவர்களோடு மனைவியாக வாழ்க்கை, உமர் ஷஹீதாகி விட்டார்கள்.

அலி அவர்களிடம் ஆதிகா, தன்னுடய இரண்டு கணவர்களும் கொல்லப்பட்டார்கள், நீங்களும் கொல்லப்படுவீர்களோ என்று பயம் வருகிறதே, நீங்கள் கொல்லப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்கள்.

பின்னர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, அதிகா அவர்களை மணமுடிக்கிறார்கள், இவர்களும் அஷரத்துல் முபஷ்ஷராவில் உள்ளவர், இவர்களும் கொல்லப்படுகிறார்கள்.

பின்னர் அபூபக்ர் அவர்களின் மகனார், தாய் வேறு, முஹம்மது இப்னு அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை மணமுடிக்கிறார்கள், அதற்குப் பிறகு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை மணமுடிக்கிறார்கள்.

நூல் : (தாரீக் அவ்சத் - புகாரி 1/36, தபகாத் குப்ரா - இப்னு ஸஅது 8/265)

இப்படியாக ஐந்து கணவர்களுக்கு ஆதிகா ரழியல்லாஹு அன்ஹாவாக்கப்படுகிறார்கள். இதில் எந்த விதமான தவறும் இல்லை, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இதுதான் யதார்த்தம்.

அது போன்று அஸ்மா பின்த் உவைஸ் ரழியல்லாஹு அன்ஹாஅவர்களின் வாழ்வை போர்ப்போம். இவர்களின் முதல் கணவர் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு.

இவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் சிறிய தந்தை, நபியின் பால்குடி சகோதரர். ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் உஹது போரில் ஷஹீதாகிறார்கள்.

அடுத்து ஷத்தாத் இப்னு ஹாத் என்ற நபித்தோழரோடு திருமணம் நடக்கிறது, இவர்களும் ஷஹீதாகிறார்கள். அடுத்து அலீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மூத்த சகோதரர்,ஜாஃபர் இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களோடு திருமணம் நடக்கிறது.இவர்கள் முஃதா போரில் கொல்லப்படுகிறார்கள்.

அதற்குப் பிறகு அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை மணமுடிக்கிறார்கள், அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இறந்த பிறகு அலி அவர்களை மணமுடிக்கிறார்கள்.

(உசுதுல் காபா: 6/15)

இப்படி இன்னும் நூற்றுக்கணக்கான சஹாபியப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கலாம். கணவன் இறந்ததற்க்குப் பிறகு அவர்கள் மணமுடித்தார்கள், அவர்களை மணமுடிக்கும் படி அல்லாஹுடைய தூதர் அவர்கள் வழி காட்டினார்கள், அவர்களுடைய தோழர்கள் அதை செய்து வைத்தார்கள்.

ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்றை பார்க்கலாம்.

நூல் : முஸ்லிம், எண்: 1484.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவிற்கு வருகிறார்கள், அந்தப் பயனத்தில் அவர்களுடைய தோழர்களில் ஒரு தோழர், அரஃபா மைதானத்தில் இருக்கும் போது, அவர்களின் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறார்கள்.

அவர்களுடைய மனைவி சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் அப்போது கர்ப்பமாக இருக்கின்றார்கள், ஒன்பது மாதம் கழிந்திருக்கிறது, எந்த நேரத்திலும் குழந்தை பிறந்து விடலாம் என்ற நிலை இருந்தது. அவர்கள் மினாவில் தங்கியிருக்கக்கூடிய ஒரு சில தினங்களிலேயே குழந்தை பிறந்து விட்டது.

நூல் : புகாரி, எண் : 1265

கணவன் இறந்தது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜு பயணத்தில், அவர்களுடைய இஹ்ராமையே கஃபனாக ஆக்கி அவரை அடக்கம் செய்து விடுங்கள், அவருக்கு நறுமணம் பூசாதீர்கள், அவரது முகத்தை மூடாதீர்கள், அவர் தல்பியா கூறிய நிலையிலேயே மறுமையில் எழுப்பப்படுவார் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி, எண் : 1284

இந்த நிலையில் சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹாகுழந்தை பெற்றெடுத்து விடுகிறார், பிறகு தன்னை அலங்கரித்துக் கொண்டு, தன்னை திருமணம் முடிப்பவர் யாரும் இருக்கின்றார்களா என்று தூதனுப்புகிறார்கள். இது ஹஜ்ஜு முடிந்த பிறகு நடக்கிறது.

அப்போது அபூசனாபில் ரழியல்லாஹு அன்ஹுஎன்ற வயது மூத்த நபித்தோழர் வந்து, சுபைஆவே! நீ மணமுடிப்பது சரிதான், ஆனால் கணவனை இழந்த நீ இத்தா நான்கு மாதம் பத்து நாட்கள் இருக்க வேண்டுமே?என்று சொன்னார்.

இங்கு பதிலளித்த சுபைஆ ரழியல்லாஹு அன்ஹாஅவர்களின் அறிவை பாருங்கள், அபூசனாபில்!அல்லாஹுடைய சட்டத்தை நான் அறிவேன், கணவனை இழந்த பெண் கர்ப்பத்தோடு இருப்பாளேயானால், குழந்தை பெற்றெடுத்து விட்டால் இத்தா முடிந்து விடுகின்றது, வாருங்கள் நபி அவர்களிடத்தில் கேட்போம்என்று சொன்னார்கள்.

நூல் : (சியரு அஃலாமின் நுபலா: 8/248)

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடத்தில் சட்டம் கேட்கப்படுகிறது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், உன்னுடைய இத்தா முடிந்து விட்டதுஎன்று சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய தோழர்களில் ஒருவர் அதே இடத்தில் அந்தப் பெண்ணை மணமுடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை எப்படி எதாற்த்தமாக இருக்கிறது என்று பாருங்கள், இன்று கணவனை இழந்து பல இத்தாக்கள் முடிந்தாலும் திருமணம் என்ற வார்த்தையை எடுத்து விட்டால் மோசமாக பார்க்கக்கூடிய மக்களாக இருப்பதை பார்க்கிறோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக.)

இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன, அடுத்தடுத்த ஜுமுஆக்களில் அவற்றை பார்க்கலாம் இன் ஷா அல்லாஹ்.

அல்லாஹுடைய அடியார்களே! நமது சமுதாயம் திருத்தப்பட வேன்டும், இல்லையென்றால் கண்டிப்பாக சீரழிந்தே ஆகும், சீதிருத்தம் என்பது கொள்கையில் மட்டும் ஏற்பட்டால் போதாது, முகம் நிரம்ப தாடி வைத்துகொன்டால் போதாது, நீள ஆடைகளை அனிந்து கொண்டால் மட்டும் போதாது, தவ்ஹீது என்று பேசி விட்டால் மட்டும் போதாது.

நமது சமூகத்தில் காலாச்சார அடிப்படையில் எப்படி மாறியிருக்கிறோம் என்று பார்க்கவேண்டும். இஸ்லாம் என்பது ஒட்டு மொத்த சமுதாயத்திற்குள்ள பெயர், ஒட்டு மொத்த ஒழுக்க பண்பாடுகளுக்குண்டான பெயர், எங்கே கொள்கைக்குண்டான சீர்திருத்தத்தை இஸ்லாம் முன்வைத்ததோ, அது போன்று கலாச்சார சீர்திருத்தத்தை இஸ்லாம் முன்வைக்கிறது.

இவையணைத்தையும் சேர்த்து யார் மார்க்கமாக்கிக் கொண்டார்களோ அவர்கள் முஸ்லிம்கள். யார் இதில் சிலவற்றை ஏற்று சிலவற்றை நிராகரித்தார்களோ அவர்கள் காஃபிர்கள். அல்லாஹ் அந்த கூட்டத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/