HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 5-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 5-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 5-8) | Tamil Bayan - 387


காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 5)

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 04-03-2016| 24-05-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார்தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,

அல்லாஹ்வின் மார்க்கத்தை பேணி வாழும்படி, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணும்படி, அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகிக் கொள்ளும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வின் அடியார்களே! தொடர்ந்து நான்கு ஜும்ஆக்களில் காஃபிர்களுடைய கலாச்சாரத்தில் நாம் என்ற தலைப்பின் கீழே முஸ்லிம் சமுதாயம், எந்த அளவு பிற மத கலாச்சாரத்தால் கொள்கையில், கொடுக்கல் வாங்கலில், தங்களது குடும்ப வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில், தனி மனித வாழ்க்கையில் பாதித்திருக்கிறது என்பதை பற்றி பல விஷயங்களை பார்த்து வருகிறோம்.

முஸ்லிம்களுடைய நடை,உடை, அவர்களது பாவனை, அவர்களுடைய திருமண வாழ்க்கை, அவர்களுடைய குடும்ப சடங்குகள், அவர்களுடைய சமுதாய அமைப்பு இப்படி முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் பல துறைகளில் அந்நிய கலாச்சாரம், அது மேற்கத்தியவர்களுடைய கலாச்சாரமோ அல்லது சிலை வணங்கிகளின் கலாச்சாரமோ புகுந்து, முஸ்லிம்களுடைய தனித்தன்மையை அழித்திருக்கிறது.

முஸ்லிம்களுடைய சிறப்பை குழிதோண்டி அந்த கலாச்சாரங்கள் புதைத்திருக்கின்றன.

இன்று நாம் யாரென்று நமக்கு நாமே கேட்டுக் கொள்கின்ற அளவிற்கு அடையாளம் தெரியாத ஒரு சமுதாயமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை நேர்வழியின் பக்கம் திருப்புவானாக!

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த உரைகளை தொடர்ந்து தான் இன்றைய ஜும்ஆவிலும் நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கின்ற நம்முடைய குடும்ப திருமண வாழ்வில் இருக்கின்ற சில சீர்கேடுகளை நாம் பார்க்க இருக்கிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நல்ல விஷயங்களை சொல்வதற்கும் சிந்திப்பதற்கும், நல்ல விஷயங்களை எடுத்து செயல்படுவதற்கும் எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக!

எல்லா விதமான தீமைகளிலிருந்தும், கலாச்சார சீரழிவிலிருந்தும் என்னையும் உங்களையும் அல்லாஹு தஆலா பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.

அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் ஒரு நீதமான, நேர்மையான, மனித இயற்கையோடு ஒத்துப் போகக்கூடிய சட்டங்களை உடைய மார்க்கம்.

அல்லாஹ்வுடைய இந்த தீன் நீதமான மார்க்கம், நேர்மையான மார்க்கம், மனிதனுடைய ஹலாலான ஆசைகளோடு, மனிதனுடைய இயற்கையான தேவைகளோடு ஒத்துப் போகக்கூடிய மார்க்கம்.

அந்த ஆசைகளிலும் தேவைகளிலும் சரியான பாதைக்கு வழிகாட்டக்கூடிய சட்டங்களை உடையது தான் அல்லாஹ்வுடைய மார்க்கம்.

பிற மதத்தின் சட்டங்கள் அப்படியல்ல. பிற மதங்களை பொறுத்தவரை அவர்களுக்கென்று தனி சட்டங்கள் இருக்காது. மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட சட்டங்கள் தான் அவர்களுடைய மத சட்டங்களாக இருக்கும்.

பாதிரியார்கள், போப்புகள், துறவிகள், சாமியார்கள் சொல்வது தான் அவர்களுடைய சட்டங்களாக, அதனுடைய மதத்தின் அடையாளங்களாக, மதத்தில் பின்பற்றப்படுகிற கலாச்சாரங்களாக இருக்கும்.

அல்லாஹ்வின் அடியார்களே! முஸ்லிம்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. முஸ்லிம்களுடைய சட்டத்தை வகுத்துக் கொடுப்பவன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

முஸ்லிம்களுடைய சட்டத்தை தெரிவுப்படுத்தி, நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹ்வால் வழிகாட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டவர்கள்.

மன இச்சைகளிலிருந்தும், சுய விருப்பங்களை மார்க்கத்திற்குள் நுழைத்து விடுவதிலிருந்தும் அல்லாஹ் விரும்பாததை அல்லாஹ்வுடைய தீனில் சொல்லி விடுவதிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள்.

وَالنَّجْمِ إِذَا هَوَى (1) مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى (2) وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53 : 1,4)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அல்லாஹ்வுடைய வீட்டை பாதுகாத்தான், அல்லாஹ்வுடைய நபியை பாதுகாத்தான்.

இதன் மூலமாக மாற்றார்களின் கலாச்சார சீரழிவில் சிக்கி சமுதாயம் சீரழிவதிலிருந்து, சமுதாயம் வழிகாட்டல்கள் இல்லாமல் திகைத்து விடுவதிலிருந்து,தங்களுடைய ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது?தேவைகளை எப்படி நிறைவேற்றுவது?என்று திகைத்து தவறான வழிகளில் செல்வதிலிருந்து பாதுகாக்கப்பட்ட சமுதாயம் நாம்.

நம்முடைய பாதுகாப்பு எதில் இருக்கிறது?அல்லாஹ்வுடைய வேதம் பாதுகாக்கப்பட்டது, தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்பாதுகாக்கப்பட்டார்கள், அல்லாஹ்வுடைய மார்க்கம் பாதுகாக்கப்பட்டது. அந்த நபியின் உம்மத்தாகிய நாமும் பாதுகாக்கப்பட்டவர்கள். குர்ஆனின் உம்மத்தாகிய, அல்லாஹ்வுடைய இறுதி சமுதாயமாகிய நாம் பாதுகாக்கப்பட்டவர்கள்.

அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். அவனுடைய வேதத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். அவனுடைய நபியின் வழிகாட்டுதலால் நாம் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய பாதுகாப்பு அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணுவதில், அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுறை படுத்துவதில் இருக்கிறது.

நம்முடைய பாதுகாப்பு குர்ஆனை வெறும் வேதமாக ஏற்றுக் கொள்வதில் இல்லை. வேதமாக ஏற்றுக் கொண்ட குர்ஆனை படித்து உணர்ந்து அதன் சட்டங்களை ஹலால் ஹராமை பேணுவதில் நமது பாதுகாப்பு இருக்கிறது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை நபியாக ஏற்றுக் கொள்வதில் மட்டுமல்ல.அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய வாழ்வியலை அவர்கள் காண்பித்துக் கொடுத்த வழிகாட்டுதலை பின்பற்றுவதில், ஏற்று நடைமுறைப் படுத்துவதில், அவர்களுடைய சட்டங்களை செயல்படுத்துவதில், அவர்களுடைய வழியில் வாழ்வதில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு பாதுகாப்பை வைத்திருக்கிறான். நம்முடைய பாதுகாப்பு அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருக்கிறது.

மார்க்கத்தை உடைக்கும் பொழுது, மார்க்கத்தை விட்டு வெளியேறும் பொழுது, மார்க்க சட்ட வரம்புகளை மீறும் பொழுது, யார் மீறுகிறார்களோ அவர்கள் அழிந்தே தீருவார்கள்.

ஒரு தனி மனிதன் மீறினால் அவனுக்கு அழிவு நிச்சயம். ஒரு குடும்பம் மீறினால் அந்த குடும்பத்திற்கு அழிவு நிச்சயம். ஒரு சமுதாயம் மீறினால் அந்த சமுதாயத்திற்கு அழிவு நிச்சயம். ஒரு நாடே ஒரு சமூகமே அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறினால் அந்த நாட்டிற்கு அழிவு நிச்சியம்.

سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا

அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 33:62)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا

எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65:8)

அல்லாஹ்வுடைய இந்த வசனம் ஆயிரத்தி நாணூறு ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்ட இந்த அல்லாஹ்வின் வாக்கு இன்றளவிலும் உயிரோடு இருந்து இனி மறுமை வரையிலும் இருந்து நம்மை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறன.

அல்லாஹ்வை நம்பக்கூடிய ஒரு முஃமினின் உள்ளத்திற்கு மிகப் பெரிய அச்சத்தை அல்லாஹ்வின் எச்சரிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த வசனம்.

கண்ணியத்திற்குரியவர்களே! இன்றைய முஸ்லிம் சமுதாயம் தங்களது குடும்ப வாழ்க்கையில் அவர்கள் காஃபிர்களோடு சேர்ந்து சேர்ந்து, காஃபிர்கள் எதை அழகாக பார்க்கிறார்களோ அது அவர்களுக்கு அழகாக தெரிகிறது. காஃபிர்கள் எதை அசிங்கமாக பார்க்கிறார்களோ அது அவர்களுக்கு அசிங்கமாக தெரிகிறது. காஃபிர்களுக்கு எது பிடிக்குமோ அதற்கு ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வுடைய சட்டங்களை விடலாம், அல்லாஹ்வுடைய சட்டங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்ற அளவிற்கு பொதுவாக மனநிலை மாறியிருக்கிறது.

இது இன்னும் கொஞ்சம் அதிகமாக நம்மில் பல அழைப்பாளர்களுடைய சிந்தனை, மார்க்கத்தை பேசக்கூடிய பல அழைப்பாளர்கள் தங்களை கல்வியில் தொடர்புடையவர்கள், இந்த மார்க்கத்தை பரப்பக்கூடியவர்கள் என்று சொல்பவர்களே காஃபிர்களுக்கு ஏற்ப தங்களுடைய மார்க்கத்தை சிலவற்றை எடுக்கக்கூடிய அளவிற்கு சிலவற்றை சேர்க்கக்கூடிய அளவிற்கு அவர்களுடைய மனநிலை மாறியிருக்கிறதென்றால், பொதுமக்களைப் பற்றி என்ன சொல்வது? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அந்த கலாச்சார சீரழிவுகளில் ஒன்று தான், நம்முடைய சமுதாயத்தில் விதைவைகளாக இருப்பவர்கள், தலாக் விடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள்.

அதுபோன்று பெண்களில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததற்குப் பிறகு அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தால், விவாகரத்தானால் அல்லது கணவனை இழந்தாலோ அவர்களை அப்படியே அடக்கி ஒடுக்கி அவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து அவர்களை சமுதாயத்தில் ஒரு இழிவான நிலையில் அடக்கப்பட்டவர்களாக, முடக்கப்பட்டவர்களாக, கைவிடப்பட்டவர்களாக அடைத்து வைப்பது.

ஒன்று விவாகரத்தான பெண்களை மணம் முடிப்பதற்கு வாலிபர்கள் தயங்குவது. அதை ஒரு தவறான செயலாகவும் அறுவறுப்பான செயலாகவும் புதிதாக திருமணம் முடிப்பவர்கள் விவாகரத்தான பெண்ணை அல்லது ஒரு விதவையான பெண்ணை தேர்ந்தெடுப்பதை ஒரு இழிவான செயலாக, ஒரு கேவலமான செயலாக அல்லது தேவையற்ற ஒரு செயலாக பார்க்கக்கூடிய மனநிலை.

விதவைகளை அதுபோன்று தலாக் ஆன பெண்களை அல்லது குலஆ பெற்ற பெண்களை திருமணம் முடிப்பதில் முஸ்லிம்களுக்கு இருக்கக்கூடிய ஒரு அறுவறுப்பு.

இது திருமணம் முடிக்கக்கூடிய வாலிபர்களாக இருக்கட்டும் அல்லது அந்த வாலிபர்களுக்கு பெண் பார்க்கின்ற பெற்றோர்களாக இருக்கட்டும். இந்த மனநிலை முஸ்லிம்களுக்கு எங்கிருந்து வந்தது?!

இந்த மனநிலையை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்றால் முழுக்க முழுக்க காஃபிர்களிடமிருந்து பெற்றார்கள். இஸ்லாமிய கலாச்சாரத்தில் நபியிடமிருந்து பெறப்பட்ட அந்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளில் என்ன அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியிருக்கிறார்கள்?

நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பெண் மார்க்கப்பற்றுள்ளவளாக இருக்கிறாளா? என்று தான் பார்க்க சொன்னார்களே தவிர, (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4700, 5090.

இப்படி ஒரு வழிகாட்டுதல் இன்றைய சமுதாயத்தில் பின்பற்றப்படுகிறதே, திருமணம் என்றால் ஒரு ஆணிற்கு திருமணம் ஆகாத ஒரு கன்னிப் பெண்ணை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாக ஒரு கலாச்சாரம் இருக்கிறதே இது எங்கிருந்து வந்ததென்றால் முழுக்க முழுக்க காஃபிர்களிடமிருந்து வந்த ஒன்று.

இஸ்லாமிய வரலாற்றில் எங்கேயாவது இதற்கு ஆதாரம் கிடைக்கிறதா? இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேடியிருக்கிறார்களா? ஸஹாபாக்கள் தேடியிருக்கிறார்களா? ஸஹாபாக்களில் எத்தனை வாலிபர்கள் முதல் திருமணமாக விதவையான பெண்களை தேர்ந்தெடுத்தார்களே, தலாக் விடப்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்தார்களே, தங்களை விட வயது மூத்த பெண்களை தேர்ந்தெடுத்தார்களே.

இப்படியெல்லாம் நமக்கு வரலாற்று சான்றிதழ்கள் இருக்க, வரலாற்று ஆதாரங்கள் இருக்க, இன்று நம்முடைய கலாச்சாரம் எப்படி மாறியிருக்கிறது?

ஒரு ஆணிற்கு திருமணம் ஆனதென்றால் அவனுக்கு கன்னிப் பெண் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களிடத்தில் திருமணம் என்பது ஆணிற்காக இருந்தாலும் சரி, பெண்ணிற்காக இருந்தாலும் சரி, ஒரே ஒரு முறை நடக்கக்கூடிய ஒரு சடங்காக மாற்றப்பட்டு விட்டது.

உனக்கு கட்டி வைக்கப்பட்டவளோடு நீ வாழ்ந்தே ஆக வேண்டும். காஃபிர்களின் கலாச்சாரம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று சொல்வதை போன்று கணவன் எப்படியோ, ஒழுக்கம் இருக்கிறதா? மார்க்கம் இருக்கிறதா? அவர்களிடத்தில் என்ன பண்பாடு இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் அங்கே பேச்சு கிடையாது.

திருமணம் ஆகிவிட்டது, வாழ்ந்தே ஆக வேண்டும். பெண் அவளிடத்தில் ஒழுக்கம் இல்லை, மார்க்கம் இல்லை, அவளிடத்தில் இஸ்லாமிய பண்பாடு இல்லை,

உனக்கு கட்டிவிட்டது அவ்வளவு தான், அவளோடு தான் நீ வாழ்ந்தாக வேண்டும், உன்னுடைய விதி அப்படி தான் என்ற அளவிற்கு இன்றைய சமுதாயத்தில் காஃபிர்களின் கலாச்சாரத்தில் அடிமையாக அந்த தாக்கத்திற்கு ஆளாகி இப்படிப்பட்ட ஒரு சூழலில் மாறியிருப்பதும் இன்று தலாக் விடப்பட்ட பெண்களுக்கு மறுமணம் நடக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம். விதவையான பெண்களுக்கு மறுமணம் நடக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்,

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து வழிகாட்டுதல் இருக்கிறது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய வாழ்க்கையை முதலாவதாக எடுத்துக் கொண்டால், ஒரே ஒரு திருமணத்தை தவிர அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் செய்த திருமணங்களெல்லாம் ஓன்று விதவையான பெண்ணை மணமகளாக எடுத்தார்கள்.

அல்லது தலாக் விடப்பட்ட பெண்ணை மணமகளாக தேர்ந்தெடுத்தார்கள். பொதுவாக மார்க்கத்தை, மறுமையை அறியாத மக்களிடத்தில் இருந்த அந்த ஒரு மனபக்குவத்தை அல்லது மன எண்ணத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அடியோடு ஒழித்தார்கள்.

புதிதாக திருமணம் செய்யப்படக்கூடிய அந்த பெண் தான் தனக்கு இனக்கமாக இருப்பாள். இன்னொரு ஆணோடு வாழ்ந்தவளை நான் எப்படி வாழ வைக்க முடியும்?

இன்னொரு ஆணோடு குடும்பம் நடத்தியவள் என்னோடு எப்படி விசுவாசமாக குடும்பம் நடத்துவாள்? இன்னொரு ஆணோடு வாழ்க்கைப்பட்டவள் அவளிடத்தில் நான் எப்படி முழுமையான சுகத்தை அனுபவிக்க முடியும்? என்றெல்லாம் மார்க்கத்தை அறியாத, மறுமையை அறியாத வீணானவர்கள் பேசுகின்ற பேச்சுக்கெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

இரண்டாவதாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்தார்களே, யார் யாருக்கெல்லாம் வாழ்க்கை கொடுத்தார்கள்? எப்படிப்பட்ட பெண்களுக்கெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்க்கை கொடுத்தார்கள்? தங்களது மணமகள்களாக யாரையெல்லாம் தேர்ந்தெடுத்தார்கள்?

இன்றைய கலாச்சாரத்தில் பாருங்கள்;ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பேசுவதற்கே பலருக்கு மனம் வருவதில்லை. பலர் பேசினாலும் அதை கேட்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் கூட கேட்கின்ற மக்களுக்கு மனம் வருவதில்லை. முகம் சுழிக்கின்ற அளவிற்கு அவர்களது நிலை மாறுவதை பார்க்கிறோம்.

ரஸூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய முதல் திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; நபித்துவத்திற்கு முன்பு அவர்கள் இருபத்தி ஐந்து வயதாக இருந்த பொழுது அவர்கள் தங்களுக்கு மணமகளாக தங்களை விட பதினைந்து வயது மூத்த கதீஜா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

கதீஜா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுடைய நிலை, இதற்து முன்பு இரண்டு முறை திருமணம் ஆகி கணவனை இழந்த விதவையாக இருக்கிறார்கள்.

அந்த இரண்டு கணவரின் மூலமாக அவர்களுக்கு பிள்ளைகளும் பிறந்தன. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்தங்களுடைய வாலிப வயதில் தேர்ந்தெடுக்கிறார்கள்.

(அரபு குலத்தில் இருபது வயதிலிருந்தே அல்லது பதினெட்டு, பதினைந்து வயதிலிருந்தே ஆண்கள் திருமணம் முடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் பதினைந்து வயதில் திருமணம் முடித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்க அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய சூழ்நிலையோ இருபத்தி ஐந்து வயதை எட்டி விடுகிறது.)

அப்போது அவர்கள் தனக்கு மணமகளாக தேர்ந்தெடுப்பது கதீஜா என்ற அந்த பெண்மனியை, இரண்டு முறை கணவனை இழந்த ஒரு விதவையான பெண்ணை, பிள்ளைகளோடு வாழக்கூடிய ஒரு பெண்ணை மனைவியாக தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்போது கதீஜா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கு வயது நாற்பது.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா : 5/314.

ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இன்றைய காஃபிர்களின் கலாச்சாரத்தில் வாழ்கின்ற நம்முடைய மனநிலை எப்படியென்றால், வயதில் மூத்த பெண்களாக இருந்தால், அவர்களை அம்மாவாக மதிக்க வேண்டும், அக்காவாக மதிக்க வேண்டும் என்று.

இப்படி ஒரு மனநிலையை போதித்து திருமண வாழ்க்கை என்ற பந்தத்திலிருந்து சமுதாயத்தை முற்றிலுமாக சீரழித்திருக்கிறார்கள்.

அடுத்து பாருங்கள்;அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை மணம் முடிக்கிறார்கள், கதீஜா மரணித்து விட்டார்கள். ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹாமுந்தி இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள். அவருடைய கணவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், நபியுடைய தோழராக இருந்தவர். ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

திரும்ப வருகிறார்கள், ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுடைய கணவர் இறந்து விடுகிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய நண்பர்,ஸக்ரான் முந்தி இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மூத்த தோழர்களில் ஒருவர்.

பயணங்களில் சோதனை, அந்நிய நாட்டில் வாழ்ந்த சோதனை, காஃபிர்களின் கொடுமை, ஒரு பக்கம் மனைவி, அந்த நேரத்தில் ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கு அறுபத்தி ஆறு வயது.

ஸக்ரான் அவர்களால் தாங்க முடியவில்லை, அந்த கொடுமையில் அவர்கள் இறந்து விடுகிறார்கள்.

இந்த நேரத்தில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை மணமகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வாழ்க்கை தருகிறார்கள்.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா : 8/207.

அப்போதும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை விட ஏறக்குறைய பதிமூன்று அல்லது பதிநான்கு வயது குறைவாக இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நேரத்தில் விரும்பியிருந்தால் கூட அவர்கள் கன்னிப் பெண்ணை மணம் முடித்திருக்கலாம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்போது யாரை தோர்ந்தெடுத்தார்கள்?

ஒரு விதவை மட்டுமல்ல, அறுபதையும் தாண்டி அறுபத்தி ஆறாவது வயதில் நுழைந்த ஒரு பெண்ணை தனது மணமகளாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேர்ந்தெடுத்து இந்த சமுதாயத்திற்கு என்ன வழிகாட்டினார்கள்? இந்த சமுதாயத்தில் உள்ள விதவைகளுக்கு வாழ்க்கை அளியுங்கள். விதவைகளை காப்பாற்றுங்கள்.

ஒரு விதவையின் சாபம், மனக்குமுரல் அது எவ்வளவு பயங்கரமான அல்லாஹ்வுடைய தண்டனை இந்த சமுதாயத்திற்கு வரக்கூடியது தெரியுமா?

ஒரு பெண், இன்று நான் விதவையாக இருக்கிறேன், எனக்கு திருமணம் வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில் இன்றைய சமுதாயம் பெண்களை வைத்திருக்கிறதா? பெண்களுக்குண்டான உரிமையை கொடுத்திருக்கிறதா?

இன்று மாற்றார்கள்காஃபிர்கள், முஸ்லிம்களை பார்த்து, இவர்கள் பெண்களை அடிமையாக்கக் கூடியவர்கள்; இவர்களுடைய மார்க்கத்தில் பெண்களுக்கு சுதந்திரமே இல்லை; இவர்கள் பெண்கள் மீது அநியாயம் செய்யக்கூடியவர்கள், பெண்களின் மீது அராஜகம் செய்யக் கூடியவர்கள் என்று நம்மைப் பற்றி விமர்சனம் செய்கிறார்களே, இது நமது மார்க்கத்தில் இருக்கின்ற குறையா? அல்லது மார்க்கத்தை பின்பற்றுபவர்களில் இருக்கின்ற குறையா?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த தீனில் ஒரு ஆண் ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கு முழு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறதோ, முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதே அடிப்படையில் அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் ஒரு பெண் தான் விரும்புகின்ற ஒரு ஆணை ஹலாலான முறையில் மணப்பதற்கு உண்டான உரிமையை இந்த மார்க்கம் கொடுத்திருக்கிறது.

ஹன்ஸா பின்த் ஹினாப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ரஸூலுல்லாஹ்விடத்தில் வருகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை என்னை மணமுடித்து வைக்கிறார். அவருடைய சகோதரருடைய மகனுக்கு. ஆனால், எனக்கு இந்த திருமணத்தில் எந்த விதமான விருப்பமும் இல்லை. நான் என்ன செய்வது அல்லாஹ்வுடைய தூதரே!?

(இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண்ணிற்கு கொடுக்கக்கூடிய உரிமையை பாருங்கள். இன்று நாம் நம்முடைய பெண்களுக்கு இந்த ஹலாலான உரிமையை கொடுக்காத காரணத்தினால் தான் இன்றைய நமது பெண்கள் படிதாண்டுகிறார்களே, குடும்பம் வேண்டாம், சமுதாயம் வேண்டாம் என்று வெறுத்து விலகுகிறார்களே, அதற்கு என்ன காரணம்?

ஆண்களாகிய நாம் இந்த சமுதாய பெண்களின் மீது திணித்திருக்கக் கூடிய அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக, அவர்களுடைய வெறுப்பு இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்ன நிலைமையாக இருந்தாலும் சரி ஏற்றே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தை அவர்கள் மீது சுமத்துகின்றோமே இது தான் காரணம்.)

அல்லாஹ்வுடைய தூதரே, பெண்ணே! உனக்கு என்ன விருப்பமா என்று கேட்கிறார்கள். எனக்கு விருப்பம் இல்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், இப்போது நடைபெற்ற திருமணம் திருமணமே அல்ல.

நீ தலாக் வாங்க வேண்டிய அவசியம் இல்லை, நீ குலஆ கேட்க வேண்டிய அவசியம் இல்லை, இத்தா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திருமணமே செல்லுபடியாகாது. நீ விரும்பியவரை தேர்ந்தெடுத்து மணமுடித்துக் கொள் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி, எண் : 5138, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா.

ஒரு பெண்ணுடைய வலீ, பெண் மீது தனக்கு இருக்கின்ற பாதுகாக்கின்ற உரிமையை எப்போது மீறுகிறாரோ அப்போது அவருக்கு அல்லாஹ் கொடுத்த அந்த உரிமையை அவர் பாழாக்கி கொள்கிறார். அந்த உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும். அதற்கு பிறகு அந்த பெண் தான் விரும்பக்கூடிய ஒழுக்கமுள்ள தனது மனதிற்கு விருப்பமான ஒரு ஆண் மகனை தேர்ந்தெடுத்து அவரை முஸ்லிம்களின் தலைவரின் முன்னிலையில் திருமணம் முடித்துக் கொள்வதற்குண்டான அனுமதியை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்குகிறார்கள்.

ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. அவர்களுடைய வயது 66. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு வாழவில்லையா? அறுபத்தி ஆறு வயதை அடைந்த ஒரு பெண்ணோடு எப்படி வாழ முடியும் என்று யோசித்தார்களா?

வாழ முடியும், வாழ்வதற்கு தேவை வாலிபம் அல்ல, வாழ்க்கையிலிருந்து தடுக்கக்கூடியது வயோதிகம் அல்ல, வாழ்க்கையிலிருந்து தடுக்கக்கூடியது மனம்.

அந்த மனதை அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு ஏற்ப மாற்றினால், ஒரு வயோதிகத்தை அடைந்த ஒரு ஆணும் வயோதிகத்தை அடைந்த ஒரு பெண்ணும் கூட ஒரு வாலிபத் தம்பதிகளை விட மிக அழகான முறையில் வாழலாம்.

எத்தனையோ வாலிபர்கள், வாலிபப் பெண்களை மணமுடிக்கிறார்கள். வாலிபப் பெண்கள் வாலிப ஆண்களை மண முடிக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்து விட்டார்களா? மனம் இல்லை அங்கே.

அங்கே அவர்களுக்கு அல்லாஹ்வுடைய மார்க்கம் தெரிவதில்லை. குடும்பம் எப்படி? சமூகம் எப்படி? மனம் எப்படி? அல்லாஹ்வை எப்படி திருப்தி படுத்துவது? கணவனை, மனைவியை எப்படி திருப்தி படுத்துவது? என்ற ஒழுக்க மாண்புகள், கடமைகள் தெரிவதில்லை. அவர்கள் வாழ்கிறார்களா? காலையிலிருந்து மாலை வரை சண்டை, மாலையிலிருந்து காலை வரை சண்டை.

திருமண வாழ்க்கை என்பது அன்புகளை பரிமாரிக் கொள்வதற்கா? அல்லது சண்டைகளை பரிமாரிக் கொள்வதற்கா? இது தான் இன்று நடக்கிறது.

திருமணத்தை தடுக்கக்கூடியது, திருமண வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தக்கூடியது வயது அல்ல, மனிதனுடைய மனம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜம்பத்தி மூன்று வயதில் மணமகனாக மாறுகிறார்கள் என்றால், அது எதன் மூலமாக? அவர்களுடைய மனம்.

அறுபத்தி ஆறு வயதில் கணவனை இழந்தவர்களும் கூட மணமகளாக மாறுகிறார்கள் என்றால் அவர்களுடைய மனம். மனதை தேற்றுகிறார்கள்.

இன்று சமுதாயத்தில் ஒரு பெண் விதவையாகி விட்டால் அதுவும் நாற்பது வயதிற்கு பிறகு விதவையானால் கூட அந்த பெண்ணிற்கு இந்த சமுதாயத்தில் திருமணம் நடக்குமா? ஜம்பது, அறுபது வயதில் ஒரு பெண் விதவையானால் அவர்களை யாராவது இந்த சமுதாயத்தில் மணமுடிப்பார்களா? யோசித்துப் பாருங்கள். என்னங்க கிழவிய திருமணம் செய்ய சொல்றிங்களா?

யாரை யார் கிழவி என்று முடிவு செய்வது. என்ன வார்த்தையை பேசுகிறார்கள்? எங்கிருந்து வந்த வார்த்தை இது? காஃபிர்களின் கலாச்சாரத்தில் இருந்து வந்தது.

அங்கே பார்க்கப்பட வேண்டிய ஒன்று ஈமான். அங்கே பார்க்கப்பட்ட ஒன்று தக்வா, அங்கே பார்க்கப்பட்ட ஒன்று ஒழுக்கங்கள்,குடும்பத்தை நர்வகிக்கக்கூடியவள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து நான்கு பெண் பிள்ளைகள், இரண்டு அல்லது மூன்று ஆண் பிள்ளைகள்.

அவர்கள் இறந்து விடுகிறார்கள், இந்த நான்கு பெண் பிள்ளைகளோடு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்கிறார்கள்.

இந்த நான்கு பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்கு உண்டான, பக்குவப்படுத்துவதற்கு உண்டான ஒரு அறுபத்தி ஆறு வயதுடைய ஒரு மணமளை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிற்கு அழைத்து வந்து அந்த மனைவியோடு சந்தோஷமாக இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் இறந்து விட்ட தாய்க்குப் பகரமாக ஒரு சிறந்த தாயை கொடுக்கிறார்கள்.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா : 8/220.

இன்று பலர் பேசுவார்கள்; மனைவி இறந்துவிட்டால் சில கணவன் கூறுவார்கள். என்னுடைய மனைவி மாதிரி யாரும் வரமாட்டார்கள். என் மனைவியுடைய ஸ்தானத்தில் நான் யாரையும் வைத்து பார்க்க மாட்டேன். என்னுடைய மனைவி பனிவிடை செய்தது போன்று வேறு யாரும் செய்யமாட்டார்கள். எனவே, நான் திருமணமே செய்யமாட்டேன் என்று.

அது போன்று சில முட்டாள் பெண்களும் பேசுவார்கள்;கணவன் இறந்து விட்டால் என் கணவன் மாதிரி எனக்கு வருமா?

நான் வேறொரு திருமணம் முடிப்பதா? என் கணவன் கொடுத்த பிரியத்தை அன்பை வேறு யாரு கொடுக்க முடியும்?ஒரு அந்நிய ஆணோடு நான் எப்படி வாழ முடியும்?என்ற வார்த்தையை பாருங்கள்.

அந்நிய ஆணுடனா உன்னை வாழச் சொன்னது? திருமணம் முடித்து கணவனோடு உன்னை வாழச் சொன்னது. எப்படி நீ முதல் திருமணத்தில் ஒரு அந்நிய ஆணைதானே மணமகனாக தேர்ந்தெடுத்தாய்.உன்னுடைய கணவனோடு வாழு என்று தான் சொல்கிறோமே தவிர, அந்நிய ஆணோடு வாழு என்று சொல்லவில்லை.

ஆனால், திருமணம் செய்யமாட்டார்கள். எல்லா அந்நிய ஆண்களோடு பேசுவார்கள். திருமணம் அவர்களுக்கு வெறுப்பாக இருக்கும்.

எத்தனை குடும்பங்களில் பார்க்கிறோம்; விதவையான பெண்கள் தன்னுடைய குடும்பத்தில் உள்ள தன்னுடைய சாச்சாக்கள் குடும்பத்திலோ, அவர்களுடைய சாச்சிகள் குடும்பத்திலோ தன்னுடைய உறவுகளில் உள்ள எல்லா ஆண்களோடும் பழகுவார்கள். இன்னும் இந்த கலாச்சார சீரழிவில் அவர்களில் சிலரோடு தனிமையின் பழக்கமும் ஏற்பட்டு விடுகிறது.

அதெல்லாம் சகித்துக் கொள்வார்கள், ஜீரணித்துக் கொள்வார்கள். ஆனால், திருமணம் என்ற பேச்சு வந்துவிட்டால் ஒரு கேவலமான பேச்சாக அதை ஒரு அவமானமாக பார்ப்பார்கள்.

என்ன பேசிவிட்டாய் கல்யாணமா? இன்னும் சில இடங்களில் பிள்ளைகள் தங்களது தாய் மணமுடிப்பதற்கு எதிரியாக இருக்கிறார்கள். எங்களுடைய அத்தாவின் ஸ்தானத்தில் யாரையாவது கொண்டு வந்தால் உன்னை கொலையே பன்னிவிடுவேன்.

இவர்களெல்லாம் முஸ்லிம்கள், இவர்களெல்லாம் ஹஜ், உம்ரா செய்தவர்கள், இவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பாதுகாக்கக் கூடியவர்கள்!

இன்னும் சிலர், எங்களுடைய தாயின் ஸ்தானத்தில் யாரையாவது கொண்டு வந்தால் சும்மா விடமாட்டேன். ஒரு ஊரில் நடந்த செய்தி, முதிய வயதில் தாய் இறந்து விடுகிறாள். தந்தை நல்ல திடகாத்திரமாக திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.

போராட்டம் நடக்கிறது, சண்டை, சச்சரவு எல்லாம் நடக்கிறது. கடைசியாக பஞ்சாயத்து செய்து இவருக்கு திருமணம் முடித்து வைக்கலாம் என்பதற்கு பல பேர் பேசி பிள்ளைகளை சமாதானம் செய்கிறார்கள். பிள்ளைகள் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு நிபந்தனையின் அடிப்படையில்.

(இஸ்லாம் சொல்கிறது; நான்கு திருமணங்களை முடித்து சந்தோஷமாக வாழு என்று. உனக்கு தேவை என்றால் ஹலாலான முறையில் மணமுடித்து வாழ் என்று.

அதையும் நீங்கள் அனுமதிக்கவில்லை. அந்த பெண் வயோதிகத்திலிருந்து அல்லது நோயிலிருந்தோ பல ஆண்டுகள் கழிந்து இறந்துவிடுகிறாள். அதற்கு பிறகாவது அந்த ஆண்மகனுக்கு அவனுடைய ஹலாலான ஆசையை நிறைவேற்றுவதற்கு வழி இருக்கிறதா?)

சரி மணமுடிக்கலாம். ஆனால், அதற்கு முன்பு நாங்கள் இவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோம். எதற்கு தெரியுமா? உங்களுடைய ஆண்மையை நீக்கி விடுவதற்கு. வழுக்கட்டாயமாக அந்த தந்தை ஆஸ்பத்திரிக்கு இழுத்துச் செல்லப்படுகிறார். அவருக்கு அங்கே ஆண்மை போக்கப்படுகிறது. ஏன்? அவர் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காக.

வரக்கூடிய பெண்ணிற்கு அவர் குழந்தை கொடுத்து விடக்கூடாது. அந்த குழந்தை எங்களுடைய சொத்தில் பங்கு கேட்கக்கூடியவர்களாக ஆகி விடக்கூடாது. அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக தந்தைக்கு ஆண்மை நீக்கப்படுகிறது. அதற்கு பிறகு திருமணம் முடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதை சமுதாயமெல்லாம் ஏற்றுக் கொள்கிறது. அந்த பிள்ளைகளை தடுப்பதற்கோ, அந்த வயோதிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கோ யாரும் இங்கே தயாராக இல்லை.

இன்றைய நம்முடைய சமுதாயத்தில் யாருக்கு என்ன நடந்தால் என்ன? நம்ம வீட்டு பிரச்சனையா? நாம் ஏன் தலையீட வேண்டும் என்று. சமுதாயத்தில் அண்டை வீட்டில் என்ன நடந்தால் என்ன? என்ன கொடுமை நடந்தால் என்ன? தெருவில் என்ன கொடுமை நடந்தால் என்ன?

யாரும் எதையும் கேட்பதற்கு தயாராக இல்லை. எனது பசி போனதா? என்னுடைய குடும்பத்தில் நடந்ததா?

தனக்கு நடந்தால் தான் வலிக்குமே தவிர தனது சமுதாயத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை தனது பிரச்சனையாக உணரக் கூடிய அளவிற்கு ஈமானிய உணர்வு நமக்கு இருக்கிறதா?

கண்ணியத்திற்குரியவர்களே! அண்டை வீட்டில் உள்ளவன் பசியாக தூங்கும்பொழுது நாம் வயிராற சாப்பிட்டு தூங்கினால் முஃமினில்லை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்களே!

நூல் : தப்ரானி கபீர், எண் : 751.

நமது அண்டை வீடுகளில், நமது தெருக்களில் இப்படி அநியாயம் நடக்கின்றன, அராஜகங்கள் நடக்கின்றன.

வயோதிகர்களின் மீது, பெண்களின் மீது, குழந்தைகளின் மீது, சமுதாய மக்களின் மீது ஆனால் நாமோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,அல்லாஹ்வுடைய கட்டளைகளை யார் மீறினால் என்ன? எனக்கென்ன அதைப்பற்றி, நான் நன்றாக இருக்கிறேன் என்று எப்படி ஈமான் உள்ளவர்கள் கூற முடியும்?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறகு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்கிறார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய தேர்வு, இது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தேர்வு அல்ல. அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய தேர்வு.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீல் மூலமாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை காட்டுகிறான். நீங்கள் இந்த பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்று. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை ஆறு வயதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மணமுடிக்கிறார்கள்.

ஒன்பது வயதில் அவர்கள் பாலிகாகி உடல் திடகாத்திரம் அடைந்துவிட்ட பொழுது, பெண்கள் அதற்கு சாட்சி சொன்ன பொழுது, அவர்களுடைய குடும்ப வாழ்க்கையை மதினாவில் முதலாவதாக தொடங்கி விட்டார்கள்.

அதற்கு பிறகு ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா, இவர்கள் உமருடைய மகள். இவர்களுடைய கணவன் ஹுனைஸ் பின்த் ஹுதாபா ரழியல்லாஹு அன்ஹா. இவர் உஹதுப் போரில் ஷஹீதாகி விடுகிறார்.

(இவர்கள் முஃமின்கள். இவர்கள் குர்ஆனுடைய சமுதாயம், அல்லாஹ்வுடைய விருப்பத்திற்குரியவர்கள் என்று குர்ஆன் போற்றுகிறது என்றால் இவர்கள் செய்த அந்த தியாகத்தை, இவர்களுக்கு இருந்த அந்த மனபக்குவத்தை ஒரு துளியாவது இன்றைய சமுதாயத்தில் நம்மால் கொண்டு வர முடியுமா?)

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நேரடியாக முதலில் உஸ்மானிடத்தில் செல்கிறார்கள்; உஸ்மான் என்னுடைய மகள் விதவையாகி விட்டாள். கணவன் உஹது போரில் இறந்து விட்டா,ர் நான் ஹப்ஸாவை உனக்கு மணமுடித்து தரட்டுமா? என்று கேட்கிறார். இப்படி ஒரு தந்தை செய்வாரா?

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா : 11/172.

(இன்று நாம் என்ன செய்வோம்? ஒரு திருமணமான வாலிபனுக்கு ஒருவர் சொல்கிறார்;என்னுடைய மகளுக்கு உங்களை இரண்டாவது மனைவியாக நான் மணமுடித்து வைக்கிறேன் என்று சொல்கிறார். இப்போது அந்த முதல் மனைவியுடைய தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும்? ஏன்டா என் குடும்பம் நல்லா வாழ்றது உனக்கு பிடிக்கலையா? ஏன்டா உனக்கு எங்க வீட்டு அடுப்புல இப்படி தண்ணீர் அள்ளி ஊத்துற என்று. குடும்பத்த அழிக்கப் பாத்துட்டியா, நாசமாக்க பாத்துட்டியா? கலவரமாக மாறி விடும்.)

இங்கே பேசுகிறார்கள்;தந்தை தனது நண்பர் உஸ்மானிடம், உஸ்மான் யார்? உமரை விட மூத்தவர்கள். உஸ்மானிற்கும் ஹப்ஸாவிற்கும் இடையே வயது வித்தியாசம் ஏறக்குறைய முப்பது வயதிற்கு மேல். உஸ்மானிடத்தில் சென்று கேட்கிறார்கள்.

உஸ்மான் கூறுகிறார்கள்;எனக்கு இப்போது அதைப் பற்றி சொல்ல முடியாது என்று. அதற்கு பிறகு தங்களது நண்பர் அபூபக்ரிடத்தில் செல்கிறார்கள். அபூபக்ரே! எனது மகளை உங்களுக்கு மணமுடித்து வைக்க விரும்புகிறேன், ஏற்றுக் கொள்கிறீர்களா?

இன்று நடக்குமா? ஒரு நண்பன் தன்னுடைய மகளை தன்னுடைய நண்பருக்கு திருமணம் வைக்கிறேன், என்று எங்கேயாவது வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறதா?

எங்கேயாவது அப்படி நம்முடைய வரலாற்றில் பார்க்கிறோமா? ஏற்கனவே அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூன்று மனைவிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளை பெற்றவர்கள். ரஸுலுல்லாஹ்விற்கும் அபூபக்ருக்கும் இடையே இரண்டு வயது தான் வித்தியாசம். உமரை விட மூத்தவர்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு.

இங்கே ஒரு தந்தை தனது இருபத்தி ஒரு வயது மகளுக்கு மணமகனை தேர்ந்தெடுக்கிறார்.

தந்தையை விட மூத்த வயது உடைய அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு. அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அமைதியாகவே இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் உமர் கொண்டு வருகிறார்.

அல்லாஹ்வுடைய தூதரே! உஸ்மானிடத்தில் கேட்டேன், அவர் பதில் சொல்லவில்லை. அபூபக்கரிடத்தில் கேட்டேன், அவர் பதில் சொல்லவில்லை என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள்; உமரே! உஸ்மானிற்கு உங்களுடைய மகளை விட சிறந்த ஒருவரை அல்லாஹ் கொடுப்பான். உங்களுடைய மகளுக்கு உஸ்மானை விட சிறந்த மணமகனை கொடுப்பான். உமருக்கு புரியவில்லை என்ன நடக்கப் போகிறது  தெரியவில்லையே!

அடுத்த நாள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண் பேசி அனுப்புகிறார்கள். எப்படி சந்தோஷமாக இருக்கும் உமருக்கு, பிறகு திருமணம் நடக்கிறது.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா : 11/172.

தன்னுடைய தோழர்களில் ஒருவர் போரில் கொல்லப்பட்டு விடுகிறார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழரின் மீது கொண்டுள்ள உண்மையான நேசம், அந்த தோழரின் மனைவிக்கு வாழ்க்கை தருகிறார்கள்.

இங்கே பல கோணங்களில் இந்த சம்பவத்தை நாம் பார்க்க வேண்டும். இன்று ஒரு சமுதாய தலைவர் இப்படி செய்தால் என்ன சொல்வார்கள்? ஒரு சமுதாயத் தலைவர், சமுதாயத்தில் முன்னோடியாக இருப்பவர், வழிகாட்டியாக இருப்பவர் தன்னுடைய நண்பர் ஒருவருடைய மருமகனை இழந்து விட்டதற்கு பிறகோ, அல்லது தலாக் விட்டதற்கு பிறகோ அவர் அந்த பெண்ணை மணமுடித்தால் இன்றைய சமுதாயம் என்ன சொல்லும்?

சரி அப்படி முடித்துக் கொள்வதற்கு தான் தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா? பணத்தை கொடுத்து என்ன? வாழ்க்கையை யார் கொடுப்பது அந்த பெண்ணிற்கு? அது தான் இங்கே கேள்வி சகோதரர்களே!

ஒரு பணம் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை திருப்திப்படுத்துமா? கணவனாக இருந்து கணவன் கொடுக்கக் கூடிய மனநிம்மதியை பணத்தில் கொடுக்க முடியுமா ?

இன்றைய மக்களுக்கு எல்லாம் காசாக, பணமாக ஆகி விட்டது. உனக்கென்ன கேடு? அதான் உனக்கு வீடு இருக்கிறதே, வருமானம் வருதே, பிள்ளைகள் இருக்கிறார்களே வளர்த்துக் கொள்வது தானே? உனக்கு எதற்கு திருமணம் என்று சொல்கிறார்கள்.

உனது கணவனோடு நீ வாழவில்லையா? நீ உனது கணவரின் மூலம் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவில்லையா?இதற்கு மேல் உனக்கு என்ன தேவை? என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த சமுதாயம் காஃபிர்களின் கலாச்சாரத்தில் சீரழிருந்திருப்பதை பார்க்கிறோம்.

நான் பேசக்கூடிய இந்த பேச்சுக்களை உங்களில் சிலர் பலவிதமாக எடுத்துக் கொள்ளலாம். இது தேவையில்லாத பேச்சாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இவை சமுதாயத்தில் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டிய, சீர்திருத்தப்பட வேண்டிய சீரழிவுகள்.

இந்த சமுதாயம் இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய சீரழிவுகள், மானக்கேடுகள், இதனால் ஏற்படக்கூடிய ஆபாசங்கள், அசிங்கங்கள், அதன் பின்னால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்த சமுதாயத்தின் மீது இறங்கக்கூடிய சாபங்கள், அல்லாஹ்வின் கோபப் பார்வைகள் மிக பயங்கரமானது.

அதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நமது மூத்த சமுதாயத்தின் கலாச்சாரத்தின் பக்கம், அழகிய வழிகாட்டுதலின் பக்கம் செல்லும் பல வழிகளை இன்னும் தொடர்ந்து வருகின்ற ஜும்ஆக்களில் பார்ப்போம். அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! நேரான வழியை காட்டுவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ (صحيح البخاري 4700 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/