காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 4-8) | Tamil Bayan - 387
காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 4-8)
வரிசை : 387
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-01-2016 | 19-04-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்தத் தூதரின் குடும்பத்தார், தோழர்கள்மீதும் ஸலவாத்தும்ஸலாமும்கூறியவானாக, எனக்கும்உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாகஇந்த ஜும்ஆ உரையைத் தொடங்குகிறேன்.
காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து நமது முஸ்லிம் சமுதாயத்தில் மாறி இருக்கின்ற கலாச்சார சீரழிவு பற்றி நாம் தெரிந்து வருகிறோம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்மை சீர்திருத்தம் செய்வானாக! அல்லாஹ் கூறுகிறான்:
إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன். (அல்குர்ஆன் 11 : 88)
கண்ணியத்திற்குரிய தூதர் மேலும், அவர்களுடைய உத்தம தோழர்கள் உடைய சிறந்த கலாச்சாரத்தில் வாழ்ந்து, அல்லாஹ்வை சந்திக்கின்றன பாக்கியத்தை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் தரவேண்டுமென்றுஅல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொள்கிறேன்.
அல்லாஹ் எதை விரும்புகிறானோ அதை நமக்கு சட்டமாக்குகின்றான். நாம் எதை விரும்புகிறோமோ அது மார்க்கச் சட்டமாக இருக்க வேண்டும்என்று நினைப்பது ஒரு இறை நிராகரிப்பு.
அல்லாஹ் எதை விரும்புகிறானோ, அவனுக்கு எது விருப்பமோ அது தான் மார்க்கம்; அது தான் குர்ஆன்; அதுதான் சுன்னா.
இன்று பலர், தொழுகையாளிகளாக இருக்கலாம், மார்க்கத்தை பேசக்கூடிய மார்க்கப் பிரச்சாளர்களாகவும், மார்க்க அழைப்பாளர்களாகவும் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் தங்களுடைய விருப்பத்தை போன்று மார்க்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது இறை நிராகரிப்பு.
காஃபிர்கள்,ரசூலுல்லாஹ்விடத்தில் வந்து சொன்னதை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்:
وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
(முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.(அல்குர்ஆன் 10 : 15)
இந்த குர்ஆனையோ, இந்த குர்ஆனின் சட்டங்களையோ எனது விருப்பத்திற்கேற்ப மாற்றுவதற்கு எனக்கு எந்த அதிகாரம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.
அல்லாஹ் சொல்வதை எடுத்துச் சொல்லக் கூடிய கடமையை தவிர, எனக்கு வேறு ஒன்றும் இல்லை. நானாக எதையும் மாற்ற முடியாது. மாற்றினால் நான் நபியாக இருக்க முடியாது.
மேலும், அல்லாஹ் தன் நபிக்கு கூறுகிறான்:
وَلَوْلَا أَنْ ثَبَّتْنَاكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلًا (74) إِذًا لَأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا
உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 17 : 74,75)
யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் கிப்லா ஏன் மாற்றப்பட்டது?இது மாற்றப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் நம்பிக்கை கொண்டிருப்போம் என்று சொன்னார்கள்.அதற்கு, அல்லாஹ் சொன்னான்; நாம் கிப்லாவை மாற்றியதே யார் முஃமின் என்று தெரிந்து கொள்வதற்கு தான். (அல்குர்ஆன் 2 : 142)
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ بَلْ أَتَيْنَاهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُعْرِضُونَ
சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.(அல்குர்ஆன் 23 : 71)
ஆம், நீங்களும்நானும்,முழு உலக மக்களும் அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கீழ் படிவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.
நாம், அவனுடைய படைப்புகள். அவனுக்குக் கீழ்ப்படிந்து கட்டுப்பட்டால் தான் சொர்க்கம் செல்ல முடியும்.
ஆகவே, காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் என்ற தொடரில் சென்ற ஜும்ஆவில் திருமணத்தைப் பற்றி கொஞ்சம் சொன்னோம். அதைத் தொடர்ந்து இந்த திருமண வாழ்க்கையில் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய இன்னும் இரண்டு சீர்கேடுகளை நாம் பார்ப்போம்.
ஒன்று, இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரத்தை பயந்து, நகர வாழ்க்கையின் நெருக்கடியை பயந்து, குழந்தையை அளவாகப் பெற்றுக் கொள்வோம். அதிகம் பெற்றால் அல்லல் என்றும், சிறு குடும்பம் சீரான வாழ்க்கை என்றும், காஃபிர்கள் உடைய பிரச்சாரத்தை இன்று முஸ்லிம்கள் பிரதிபலித்து, தங்களுடைய குடும்பங்களுக்கு கட்டுப்பாடு போட்டுக் கொள்கிறார்கள்.
சிலர், ஒன்று போதும், சிலர் இரண்டு போதும், அதுவும் யாருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளை என்று பிறந்து விட்டதோ, அதோடு அந்த பெண்ணுக்கு அவ்வளவுதான். அந்த பெண் அவருடைய கர்ப்பப்பை அறுக்கப்பட்டுவிடும். அடுத்து அவள் குழந்தை பெற முடியாது.
இந்த ஒரு கலாச்சாரத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! அதிகமாக பெற்றால் வசதியாக வாழ முடியாது, பணக்காரர்களாக வாழ முடியாது, படிக்க வைக்க முடியாது என்று சொல்கிறார்கள்.
இப்படி பேசிய ஒருவரிடத்தில் கேட்டேன்; நீங்கள் எத்தனை பேர்?என்று.நாங்கள் ஏழு பேர் என்று அவர் சொன்னார். சரி, உங்களுக்கு எத்தனை பேர்? இரண்டு பேர் என்றார்.
நீங்கள் ஏழு பேரும் என்ன செய்கிறீர்கள்? பிச்சை எடுக்கிறீர்களா? உங்களுடைய தந்தை உங்கள் ஏழு பேர்களை, ஆண்பெண் என்று பெற்றெடுத்த போது அவர் வறிவராக இருந்தாரா? சிரமத்தோடு சம்பாதித்தாரா? ஏழு பிள்ளைகளை பெற்றாரே,அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு எப்படிப்பட்ட வசதியை கொடுத்தான். உங்கள் ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட சொத்தை செல்வத்தை அவர் சேர்த்துக் கொடுத்தார்.
இன்று, இப்பொழுது தந்தையின் அந்த செல்வத்தால் நீங்கள் எல்லாம் செல்வந்தர்களாக சமுதாயத்தில் இருக்கின்றீர்களா? அல்லது பிச்சை எடுக்கக்கூடிய பிச்சைக்காரர்களாக இருக்கிறீர்களா?
ஏழு குழந்தையை பெற்ற உங்களது தந்தை உங்களை செல்வந்தர்களாக ஆக்கினார். படிக்க வைத்தார். வசதியை கொடுத்தார். உங்கள் அனைவருக்கும் வீடு ஏற்படுத்திக் கொடுத்தார். திருமணம் முடித்து வைத்தார்.
ஆனால், நீங்கள் உங்கள் தந்தையை விட வசதியாக இருந்து கொண்டு, இரண்டை பெற்றால் போதும், அதற்கு மேல் பெற்றால் வறுமையி வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள் என்று சொன்னால், உங்களது தந்தை எந்த ரப்பை நம்பிக்கை கொண்டார்?நீங்கள் எந்த ரப்பை நம்பிக்கை கொள்கிறீர்கள்?
உங்களது தந்தை எந்த ரப்புக்கு ஸுஜூது செய்து துஆ கேட்டார்?நீங்கள் எந்த ரப்பிற்கு ஸுஜூது செய்து துஆ கேட்கிறீர்கள்? உங்களது ரப்பு பலவீனமாகி விட்டானா? யோசித்துப் பாருங்கள்!
இறை நிராகரிப்பின் வெளிப்பாடு இது. சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏதோ விரும்பினால் புள்ள பெத்துக்கலாம், விருப்பம் இல்லையென்றால் தடுத்துக்கலாம்என்று நினைப்பதற்கு உங்களது விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கப்பட்ட உரிமை அல்ல இது.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு உடலில் வலிமை உள்ளவரை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தை பெறுவது நிறுத்தக்கூடாது. இது அல்லாஹ்வுடைய படைப்பின் நோக்கம்.
சகோதரர்களே! இப்படி சொல்வது ரொம்ப பேருக்கு எரிச்சலாக இருக்கலாம். ஏனென்று சொன்னால் காஃபிர்களின் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நாம் ஒரு limit வைத்திருக்கிறோம்.
கல்யாணமா? அது 20வயதிற்கு மேல் தான் கட்டணும். படித்து நல்லா சம்பாதித்து, 1000பேர் 2000பேரை கூப்பிட்டு, தன்னுடைய பந்தாவை காட்டுவதற்குள்ள பணம் இருக்க வேண்டும். அப்போது தான் கல்யாணம்.
பிறகு குழந்தை. குழந்தை என்றால், அந்த 30வயதுலிருந்து 35வயது வரையில் குழந்தை பெற்று முடிச்சிடனும். அதுக்கு அப்புறம் குழந்தை பெற்றால் அசிங்கமாம்.
இன்று, நான் என் குழந்தையோடு வெளியில் சென்றால், இது யார் குழந்தை? உங்கள் பேத்தியா? என்று கேட்கிறார்கள். அட முட்டாளே! இது யார்? என்று கேள். என் பேத்தியா என்று கேட்பதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
உங்களுக்கு மகளா? உங்களுக்கு எத்தனை வயசு ஆச்சு? ஏன்இந்த வயசுல குழந்தை?
இது, காஃபிர்களின் வெளிப்பாடு. 40, 45வயதை கடந்துவிட்டால், அதற்கு பிறகு மனைவி இடத்தில் படுப்பதையே கேவலமாக பார்க்கக்கூடிய சமுதாயமாக இன்று இருக்கிறது.
அதுபோன்று, சில பெண்களுக்கு சின்ன வயதிலேயே கல்யாணமாகி இருக்கலாம். உதாரணத்திற்கு 18வயதிலேயே 16வயசிலேயே குழந்தை பெற்றிருப்பார்கள்.
அந்தக் குழந்தைக்கு 16,17 வயசு இருக்கும் போது இவர்களுக்கு 30, 35வயசு தான் இருக்கும். அதோடு முடிந்துவிட்டது. மகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு,இனிமே நம்ம ரெண்டு பேர் ஒரு ரூம்ல படுக்க கூடாது என்று தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறக்கக் கூடிய உடல் வலிமை இருந்தும் குழந்தை பெற மறுக்கிறாள். ஒன்று, கணவன் விரும்புகிறான். அல்லது மனைவி விரும்புகிறாள். ஆனால் சமுதாயம் என்ன சொல்லும்? என்று பயந்து அதை விட்டுவிடுகிறார்கள்.
மகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து, மகள் குழந்தை பெற்றிருக்கும் போது, தாய் குழந்தையை பெற்றெடுப்பதை அசிங்கமாக பார்க்கக் கூடியவர்கள்இன்று சமுதாயத்தில் இருக்கிறார்கள்.என்றால், அவர்கள் காஃபிர்களின் மறு உருவமாகத்தான் இருப்பார்கள்.
குழந்தை பெறுவது அசிங்கமா? குழந்தை அல்லாஹ்வுடைய நிஃமத் என்று சொல்லுகிறார்கள். அல்லாஹ்வுடைய அன்பு என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு மன நிம்மதி என்று சொல்லுகிறார்கள்.
அப்போ ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்வது அழகு. இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வது அசிங்கமா? அல்லது இருபது வயசுல மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வதில் அழகு. 35வயது 40வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது அசிங்கமா?
யார் உங்களுக்கு இந்த வரையரையை கொடுத்தது?உங்களது புத்தியில் இதை யார் ஏற்படுத்தியது?
இரண்டு குழந்தை போதும். ஏன்? படிக்க வைக்க முடியாது. வீட்டில் இடம் இல்லை.
உங்களது தந்தை ஏழு பிள்ளைகளை பெற்றெடுத்த போது இருந்ததைவிட இப்போது விசாலமான வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்.
ஆனாலும், இட நெருக்கடி என்று சொல்கிறோம்.
இந்த பெட்ரூம் கலாச்சாரம், காஃபிர்களின் கலாச்சாரம். அதாவது,பிள்ளைகள் என்று இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பெட்ரூம் இருக்க வேண்டும்.
ஆம், இருக்கலாம். எப்படி என்றால்,ஆண்பிள்ளைகளுக்கு என்று ஒரு தனி ரூம். பெண் பிள்ளைகளுக்கு என்று ஒரு தனி ரூம். அவ்வளவுதான்.
அவர்கள் 50ஆக இருந்தால் என்ன. 100ஆக இருந்தால் என்ன. அந்த ஒரு அறையில் அவர்கள் இருக்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு ஒரு திரை போதுமானது, பெண் பிள்ளைகளுக்கு ஒரு அறை, அவ்வளவுதான்.
ஆனால், இங்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி கட்டில், கிங் சைஸ் கட்டில். அப்படி இருந்தால்தான் வாழ்க்கை என்றால், இந்த வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு அடிமையாக சொன்னது யார்? அல்லாஹ்வா? அல்லது யூத கிறிஸ்துவர்களா? யோசித்துப் பாருங்கள்.
இஸ்லாமிய மார்க்கம் இதையா சொல்கிறது?
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் மிகமிக கோபமாகவும் மிகமிக எச்சரிக்கையாகவும் கண்டிக்ககூடிய விஷயங்களில் ஒன்று, இந்த பேமிலி பிளானிங்.
மனைவிக்கு உடல் பலவீனம் ஏற்பட்டு, இனி அவள் கருத்தரித்தால் உயிர் போய்விடும், என்றுதிறமையான உறுதியான மருத்துவ வல்லுனர்கள், குறைந்தது மூன்று பேர் முடிவு செய்தாலே தவிர, குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி கிடையாது. வயது எதுவாக இருந்தாலும் சரி.
உங்களுக்கு வயது வரம்பை நிர்ணயித்தது யார்? அப்படி என்றால், பெண்கள் கருத்தடை செய்வது போன்று ஆண்களும் கருத்தடை செய்து கொள்ள வேண்டியது தான்.
எதற்காக அல்லாஹ் ஆசையை படைத்தான்? எதற்காக உடல் வலிமையை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தான்? வீணாக்குவதற்கா?
ரப்புல் ஆலமீன் எச்சரிக்கையோடு நமக்கு சொல்கிறான்:
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.(அல்குர்ஆன் 17 : 31)
எனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது என்று பயந்து, எனது பிள்ளைகளுக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத் தர முடியாது, சொத்துசுகத்தை சேர்க்க முடியாது என்று பயந்து, ஒரு மனிதன் பேமிலி பிளானிங் செய்வது, இது ஒரு இறை நிராகரிப்பு.
மேலும், அல்லாஹ் சொல்கின்றான்:
قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ
எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர். (அல்குர்ஆன் 6 : 140)
இந்த பேமிலி பிளானிங் செய்பவர்கள், அல்லாஹ்வின் மீது பொய் சொல்கிறார்கள். நான் எப்படி உணவளிப்பேன்? எப்படி இந்த குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும்? என்று. இது எவ்வளவு மடத்தனமான நம்பிக்கை!
அல்லாஹ் பரிபாலிகின்றான். அல்லாஹ் உணவளிக்கிறான். நம்முடைய மூதாதையர்கள் பல குழந்தைகளை பெற்றெடுத்த போது, அவர்களிடத்தில் இருந்த வாழ்வாதாரத்தை விட, அவர்களிடத்தில் இருந்த வாழ்க்கை வசதியை விட, இன்று நம்மில் ஒருவரிடம் இருக்கிறது.
ஆனால், ஒரு குழந்தை போதும், இரண்டு குழந்தை போதும் என்று சொல்கிறார்கள்.
அல்லாஹ் சொல்லுகிறான்; இவர்கள் வழி கெட்டவர்கள். இவர்களுக்கு நேர் வழியே கிடையாது என்று.
அல்லாஹ் கூறக்கூடிய வசனங்கள் இரண்டு கருத்துகளையும் எடுத்துக் கொள்ளும்.
அதாவது, பிறந்த குழந்தையை வறுமைக்கு பயந்து கொள்வதானாலும் சரி, அல்லது அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே வறுமையை பயந்து, பொருளாதாரத்தை பயந்து, குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது, அல்லது குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்வது, இவை அனைத்தையும் இது எடுத்துக் கொள்ளும்.
அல்லாஹ் சொல்கிறான்:
وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக.(அல்குர்ஆன் 6 : 137)
பெரிய கோபத்தை அல்லாஹ் இங்கு சொல்கிறான். நீ மறுத்தாலும், நீ ஏற்றாலும், பிறக்கக்கூடிய குழந்தை பிறந்தே ஆகும். உன்னை வலுக்கட்டாயமாக்கி குழந்தை பெற வேண்டுமென்று அல்லாஹ் விதித்திருந்தால் அதை கண்டிப்பாக அல்லாஹ் செய்திருப்பான். உங்களால் அதை தடுத்திருக்க முடியாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி தங்களது நபிமொழிகளில் ஆழமாக, அழுத்தமாக நமக்கு சொல்லித் தருகின்றார்கள்.
ஒரு நபித்தோழர், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து கேட்கின்றார்: அல்லாஹ்வுடைய தூதரே! நான் ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதற்கு மனம் பேசியிருக்கிறேன். அவளிடத்தில் செல்வம் இருக்கிறது. அழகு இருக்கிறது. ஆனால், அவள் குழந்தை பெற்று எடுக்க மாட்டாள். நான் அவளை திருமணம் செய்து கொள்ளட்டுமா?
நபியவர்கள், வேண்டாம் சொன்னார்கள். மீண்டும் வருகிறார். நபி அவர்களே! நான் அந்த பெண்ணை திருமணம் முடிக்கட்டுமா? நபியவர்கள் மீண்டும் மறுக்கிறார்கள். வேண்டாம் என்று.
மூன்றாவது முறையும் வருகிறார்கள். நபி அவர்களே! நான் அந்தப் பெண்ணை மணமுடித்துக் கொள்ளட்டுமா? என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேண்டாம் சொன்னார்கள் என்று சொன்னார்கள்.
பிறகு சொன்னார்கள்:
«تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ»
உன்னை நேசிக்க கூடிய, உனக்கு அதிகமான குழந்தைகளைப் பெற்றுத் தரக்கூடிய பெண்ணை மணம் முடிப்பாயாக. நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் வரும்போது எனது உம்மத்தை கொண்டு நான் அல்லாஹ்விற்கு முன்னால் மகிழ்ச்சி அடைவேன். பெருமை பேசுவேன் என்று சொன்னார்கள். (1)
அறிவிப்பாளர் : மஅகல் இப்னு யஸார் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2050, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், குழந்தை பெற்றெடுக்க முடியாத பெண்ணை மணம் முடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள் என்றால், பிறகு அந்தப் பெண்களுக்கு யார் வாழ்க்கை கொடுப்பது? அந்தப் பெண்ணை மணம் முடிக்கலாமா? மணமுடிக்க கூடாதா?என்று ஒரு கேள்வி வரலாம்.
அந்தப் பெண்களை மணம் முடிக்க கூடாது என்பதற்காக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுக்கவில்லை.
அவர் கூறுகின்ற அந்த வார்த்தையை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதரே! நான் ஒரு பெண்ணை மணம் முடிப்பதற்கு பேசினேன்.அவளிடத்தில் வசதி இருக்கிறது. பெரிய பரம்பரையை சேர்ந்தவள். அழகு இருக்கிறது. ஆனால், குழந்தை பெற்றெடுக்க மாட்டாள். இப்படிப்பட்ட பெண்ணை நான் மணமுடித்துக் கொள்ளட்டுமா? நபியவர்கள் சொன்னார்கள் வேண்டாம்.
ஏன் இப்படி சொன்னார்கள்? இந்த மனிதரால் அந்தப் பெண்ணை திருமணம் முடித்ததற்கு பிறகு, தனக்கு சந்ததி இருக்க வேண்டும் என்பதற்காக, அடுத்தடுத்த திருமணங்களை இவர் மணம் முடித்து கொள்வதற்குண்டான வாய்ப்பு இருக்குமேயானால், கண்டிப்பாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ அவளையே மணம் முடித்துக் கொள், குழந்தை பெறக்கூடிய இன்னொரு பெண்ணையும் மணம் முடித்துக் கொள் என்று அவரிடம் சொல்லி இருப்பார்கள்.
ஆனால், நீ ஒரு பெரிய இடத்தில், வசதியான ஒரு குடும்பத்தில்,ஒரு திருமணத்தை முடித்து விட்டால், நீ அவளை மணமுடித்தற்கு பிறகு, அவளிடத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் குழந்தைகளுக்காக அடுத்து ஒருத்தியை நீ திருமணம் செய்ய நாடும் பொழுது,அவள் உன்னை தடுத்தாள், உன்னால் மீற முடியுமா?
காரணம், அவளிடத்தில் வசதி இருக்கிறது. உன்னிடத்தில் வசதி இல்லை. அவளிடத்தில் செல்வம் இருக்கிறது. உன்னிடத்தில் செல்வம் இல்லை. அவள் வம்சத்தால் பெரியவள். நீயோ சாதாரண ஒரு மனிதன்.
எனவே, நீ அவளுக்கு அடிமையாகி, உனக்கு அல்லாஹ் கொடுக்க இருக்கின்ற சந்ததி பாக்கியத்தை தடுத்துக் கொள்ளக் கூடிய பாவத்திற்கு நீ ஆளாகி விடுவாய். எனவே அவளை முடிக்காதே! என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
இன்று,அதுதானே ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. திருமணம் முடிக்கும் போதேபணக்கார பெண்ணாக,திருமணம் முடிக்கும் போதேபெரிய இடத்துப் பெண்ணாக முடித்துவிட்டதற்கு பிறகு,இனி அடுத்து முஸ்லிம்களுக்கு பலதார மணம் என்பதெல்லாம் எட்டாத ஒரு கனியாக, கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.
காரணம் என்ன? பணக்கார பெண்ணை செல்வத்திற்காக மணமுடிக்கும் போது ஆண்களின் நிலை அங்கே ஒரு வேலைக்காரர்களாக, பெண்கள் ஆண்களை பார்த்து பயப்பட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு பதிலாக, ஆண்கள் பெண்களைப் பார்த்து பயப்படக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு, கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள். அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்வதில் எவ்வளவு பெரிய அருள் இருக்கிறது என்றால், அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அதை விரும்புகின்றான்.
காரணம், கியாம நாள்வரை சந்ததிகள் பெருக வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய நோக்கம்.
அதிகமான ஆண்களையும்பெண்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த இருவரின் மூலமாக இந்த உலகத்தில் பரப்பினான். (அல்குர்ஆன் 4 : 1)
எனவே, அல்லாஹ்வுடைய இந்த நிஃமத்தை பாழாக்காமல் குழந்தைகளை அதிகமாகப் பெற்றுக் கொள்வது அல்லாஹ்வுடைய நிஃமத்துகளில் ஒன்று. இது நபிமார்கள் உடைய சுன்னா. இது அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கிய இஸ்லாமிய மார்க்கத்தின் கலாச்சாரம்.
இதற்கு மாற்றமாக, தரமான வாழ்க்கை வேண்டும் என்பதற்காக குழந்தைச் செல்வங்களை தடுத்துக் கொள்வது, இது காஃபிர்கள் உடைய கலாச்சாரம்.
மேலும்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குழந்தைகளை நேசித்தார்கள். அதிகமாக குழந்தை உள்ளவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்தார்கள்.
அதுபற்றி, அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:
أَلَا وَإِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، وَأُكَاثِرُ بِكُمُ الْأُمَمَ، فَلَا تُسَوِّدُوا وَجْهِي
என் உம்மத்தே!நாளை மறுமையில் எல்லா நபிமார்களும் அந்த கவுஸர் தடாகத்தில் தங்களது உம்மத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நானும் என்னுடைய உம்மத்தை எதிர்பார்ப்பேன். நீங்கள் குறைவாக வந்து என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள். (2)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3057, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
நீங்கள் அல்லாஹ்வுடைய தூதரை சந்தோஷப்படுத்த நினைக்கிறீர்களா? சிலர் நினைக்கிறார்கள். மவ்லிது ஓதி சந்தோஷப்படுத்தி விடலாம்,மீலாது விழா செய்து நபியின் சந்தோஷத்தை பெறலாம் என்று.மாறாக அதன் மூலம் அல்லாஹ்வுடைய சாபம்தான் இறங்கும்.
நபியை நீங்கள் சந்தோஷப்படுத்த வேண்டுமா? ஹலாலான திருமணங்களை செய்யுங்கள். அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துங்கள். அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். அல்லாஹ்வுடைய தூதரும் உங்களை நேசிப்பார்கள்.
அடுத்து, இந்த உலகத்தில் இன்று நாம் அனுபவிக்கின்ற அத்தனை செல்வங்களும், அத்தனை வகையான கண்டுபிடிப்புகளும், அத்தனை வகையான கல்விகளும், இவையெல்லாம் அதிகமான குழந்தைகள், அதிகமான மக்கள்தொகை எண்ணிக்கை பெருகியதின் விளைவாக நாம் இந்த முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறோமா? அல்லது மக்கள் தொகை குறைவான காரணத்தால், நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்ததை விட நாம் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றோமா?
நெருக்கடி நம்முடையகல்பில் இருக்கிறது. அல்லாஹ்வுடைய நிஃமத்தில் இல்லை. அந்த நிஃமத்தை அனுபவிக்கக் கூடிய மனிதனின் உள்ளத்தில் நெருக்கடி இருக்கிறது. அல்லாஹ் தனது அருளிலோ, தனது மார்க்கத்திலோ நெருக்கடி ஆக்கவில்லை.
அழகாக ஒரு வார்த்தையை ஓரிடத்தில் படித்து பார்த்தேன். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
அந்த ஒரு வாக்கியத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு தாய், தந்தைஒரே வீட்டில்10பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்த்தார்கள். இதற்கு முன்பெல்லாம் நாம் எங்கே வாழ்ந்தோம். அடுக்கு மாடிகளிலா? பங்களாவிலா? பல அறைகள் கொண்டுள்ள வீடுகளிலா? இல்லை. ஒரே ஒரு அறை இருக்கும். ஒரு கிச்சன் இருக்கும்.
அதில்தான், 10, 15பிள்ளைகளை நம்முடைய முன்னோர்கள் பெற்றெடுத்திருப்பார்கள்.
இன்று, மூன்று அறை இருக்கிறது. பத்தவில்லை, 4அறை இருக்கிறது, பத்தவில்லை. கீழே வீடு இருக்கிறது, மேல் வீடு இருக்கிறது, பத்தவில்லை. சுத்தி வீடுகள், பத்தவில்லை.
நெருக்கடி கல்பில் இருக்கிறது. அதிருப்தி கல்பில் இருக்கிறது. பலவீனம் கல்பில் இருக்கிறது.
பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து ஒரே வீட்டில் அந்த பெற்றோர் வளர்த்தார்கள். வீடு விசாலமாக இருந்தது.
ஆனால்,இந்தப் பிள்ளைகளோ, 10பேரும் பெரிதாகி விடுகிறார்கள். இந்தப் பத்துப் பேரால் ஒரு தாய் தந்தையை பராமரிக்க முடியவில்லை. ஒரு தாய் தந்தை அந்தப் பத்து பிள்ளைகளுக்கு நெருக்கடியாக மாறிவிடுகின்றனர்.
இன்னும் இங்கே ஒரு கேவலத்தை நான் சொல்லிக் கொள்கிறேன். அல்லாஹ் மன்னிப்பானாக! அல்லாஹ் சமுதாயத்தை பாதுகாப்பானாக!
பிள்ளைகள் வளர்கிறார்கள், தந்தை படிக்கவைக்கிறார். அவர்களுக்கு வசதியை தருகிறார். வாழ்க்கையைத் தருகிறார். வியாபாரத்தை தருகிறார். அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்கிறார். எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. பிறகு, இங்கே இரண்டில் ஒன்று நடக்கிறது.
ஒன்று, தந்தை மரணித்து விடுகிறார்.தாய்க்கு வயது 45, 50. இன்று, நம்முடைய பிள்ளைகளில், எத்தனை பேர் என்னுடைய தாய்க்கு மறுமணம் செய்து வைத்து என்னோடு வாழ வைப்பேன் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள்?
என்னுடைய தாய்க்கு இனிமேல் ஏன் கல்யாணம்? என்று ஒருவன் சிந்தித்தால், அவன் காஃபிர் உடைய குணத்தில் வாழக்கூடிய ஒரு முஸ்லிம்.
அதுபோன்று, இன்னொரு பக்கம், தாய் இறந்து விடுகிறார். தந்தைக்கு வயது 50, 55, 60, 65.இப்போது இந்த தந்தை மறுமணம் செய்தால் சமுதாயத்திலுள்ள வாலிபர்களுக்கு இந்த தந்தையை விட பெரிய எதிரி உலகத்தில் இருக்கமாட்டார். இந்த தந்தையை விட பெரிய வெறுப்புக்குரியவர் உலகத்தில் இருக்க மாட்டார்.
இங்கே என்ன பயம் என்றால், காசுபயம். இப்போது சொல்லுங்கள். நாம் அல்லாஹ்விற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? மறுமைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அல்லது பணப்பேய் பிடித்த பிசாசுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அல்லாஹ் பாதுகாப்பானாக! காஃபிர்களின் வாழ்க்கையை வாழ்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
திருமணம் என்றால் அதற்கு நாமாகவே ஒரு வயது வரம்பை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களை நீங்கள் எடுத்து படித்துப் பாருங்கள். நமக்கு வழிகாட்டி அவர்கள் தான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,முதலில் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடிக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறது.
மிகப்பெரிய சோதனையில் இருக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்துவம் கொடுக்கப்பட்டு விடுகின்றது. மிகப்பெரிய போராட்டத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு வயது 25.ஆனால்,மன முடிக்கக்கூடிய மணப்பெண்ணுக்கு வயது நாற்பது. அதுவும் முந்திய இரண்டு கணவன் மூலமாக குழந்தையும் இருக்கிறது.
ஆனால் இன்று, ஒரு 19, 18வயசு ஒரு பெண்,அவளுடைய கணவனை விபத்திலோ, அல்லது நோயில் இறந்து விட்டாலும் கூட,அவளை ஒரு அபசகுணமாக பார்த்து, முதல் திருமணம் செய்யக்கூடிய தனது மகனுக்கு,அந்தப் பெண் பரிந்துரைக்கப்பட்டாள்,முகம் சுளிக்கக்கூடிய தகப்பனோபிள்ளைகளோ,இவர்கள் காஃபிர்கள் என்பதில் என்ன சந்தேகம் கொள்ள முடியும்.
காஃபிர்கள் என்றால்,இலாஇலாஹ் இல்லல்லாஹ்வை மறுத்ததில் அல்ல.காஃபிர்களின் கலாச்சாரத்தில்.
குஃப்ரில் படித்தரம் இருக்கிறது. كفر دون كفر-குஃப்ருன் தூன குஃப்ரின் என்று குஃப்ரில் படிதரம் இருக்கிறது. இமாம் புகாரி உடைய கிதாபுல் ஈமானை படித்துப் பாருங்கள்.
முகம் சுளிக்கிறார்கள். அது சரியா வராதுங்க. திருமணமான ஒரே வருடத்தில் கணவனை இழந்து விட்டால், நம்ம பையனும் இப்படி இறந்து போய் விடுவானோ என்று பயம்.
ஒருவேளை அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணமும் நடந்து அந்த கணவனும் இறந்து விட்டால், அந்த பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தான்.
அவளை அபசகுணமாக கருதுகிறார்கள். இப்படி காஃபிர்களின் குணத்தில் வாழக்கூடிய முஸ்லிம் சமுதாயம் இன்று இருக்கிறது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னை கதீஜாவை கரம் பிடிக்கின்றார்கள். கதீஜா இறந்து விடுகின்றார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்துவம் 40வயதில் கிடைக்கிறது. 53வயது வரை அவர்கள் மக்காவில் இருக்கிறார்கள். 50வயதை நெருங்கி விட்டார்கள்.
ஏழு குழந்தைகளை கதீஜாவின் மூலமாக பெற்றெடுத்துவிட்டார்கள். நபியாக இருக்கிறார்கள். கதீஜா இறந்து விட்டார்கள். சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்களை பாருங்கள்.
இந்த அக்கறை ஆண்களைவிட ஒரு பெண்ணுக்கு வருகிறது. ஹவ்லா ரழியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ்விடத்தில் வருகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் அன்னை கதீஜாவை இழந்து விட்டீர்கள். நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள். நீங்கள் அப்படி இருக்க கூடாது. நீங்கள் மணம் முடிக்க வேண்டும். நான் உங்களுக்கு பெண் பார்த்து தருகிறேன். உங்களுக்கு கன்னிப்பெண் வேண்டுமா? அல்லது உங்களுக்கு விதவையான பெண் வேண்டுமா? என்று கேட்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். உனக்கு என்ன விருப்பமோ நீ அப்படி பார்த்து செய் என்பதாக.
50வயதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாண்டி விட்டார்கள். ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டார்கள். நபித்துவத்தின் பணிகளுக்கு இடையில் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரே!விதவை என்று சொன்னால் நான் ஸவ்தாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்.
ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டு, ஈமானிய பிரச்சாரம் செய்து, பிறகு காஃபிர்களால் துன்புறுத்தப்பட்டு, பிறகு ஹபஷா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்து திரும்ப வந்தபோது, தன்னுடைய கணவனை இழந்த ஒரு விதவையாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வயது 66.
ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மணம் முடிக்கும்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய வயது ஐம்பதை தாண்டி இருக்கிறது. அன்னை ஸவ்தா உடைய வயது 66.
அறிவிப்பாளர் : ஹவ்லா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 25769.
நீங்கள் இந்த திருமணத்தை ஏற்று கொள்வீர்களா? ஏற்றுக் கொள்வோம் என்று சொல்வீர்கள். ஒரு எழுதப்பட்ட வரலாறாக நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வாழ்க்கையில் நாங்கள் கடைபிடிக்க தயாரில்லை.
என்னுடைய 66வயது உடைய தாய்க்கு, என் தந்தையை என்னுடைய தாய் இழந்து விட்டால், நான் என்னுடைய தாயை சந்தோசப்படுத்துவேன். அந்தத் தாயின் பொறுப்புகளை, தேவைகளை கவனிக்க கூடிய ஒரு நல்ல கணவரை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்து வைப்பேன் என்ற எண்ணம் இருந்தால் முஃமின்கள். ஈமானின் உயர்ந்த தரத்தில், ஸஹாபாக்களின் கலாச்சாரத்தில் இருப்பவர்கள்.
பெண்ணை விட்டு விடுங்கள். பெண்களுக்கு கூட பலவிதமான பலவீனங்கள் இருக்கின்றன.அவர்களுக்கு பலவிதமான நோய்களும் ஏற்படலாம், அவற்றையெல்லாம் காரணமாக சொல்லக்கூடாதுஎன்பது இரண்டாவது விஷயம்.
ஆம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய மார்க்கமும் இதைத்தான் சொல்கிறது. ஒரு ஆண் ஒரு மனைவி இல்லாமல் தனியாக வாழக்கூடாது. அல்லாஹ்வுடைய மார்க்கம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதுபோன்று, ஒரு பெண் கணவன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை கழிக்க கூடாது. அல்லாஹ்வுடைய மார்க்கம் இதைத்தான் சொல்கிறது.
இன்று எத்தனை தந்தைகள் தன்னுடைய மனைவியை இறந்ததற்குப் பிறகு பிள்ளைகளால் கைவிடப்படுகிறார்கள். பணத்தை கொடுப்பதோ, பொருளாதாரத்தை கொடுப்பதோ, ஏசி அறையில் தங்க வைப்பதோ, அல்லது செல்வத்தை கொட்டி கொடுப்பதோ, இதோடு பொறுப்பு முடிந்துவிடாது.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஒரு நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காஃபிர்களின் கலாச்சாரத் தாக்கங்கள் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை நம்மை நாளுக்கு நாள் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறது.
இன்னும் எத்தனை நேரங்களில் மார்க்கத்தை நாமே குறை பேசுகின்றோம்.
அடுத்து, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் முடிக்கிறார்கள். அவருடைய வயது அப்போது ஆறு.
பிறகு, ஒன்பது வயதில் உடல் வலிமை அடைந்து விட்டார்கள் என்று பெண்களால் முடிவு செய்ததற்கு பிறகு அவர்கள் திருமண வாழ்க்கையை தொடர்வதற்கு அனுமதிக்கப் படுகின்றார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்போது மதினா உடைய வாழ்க்கையும் ஆரம்பமாகி விடுகிறது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 55,56வந்து விடுகிறார்கள்.
இங்கே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஏற்கனவே திருமணமாகி ஏழு குழந்தைகள் கதீஜாவின் மூலமாக வந்த பிறகு, ஸவ்தாவை மணமுடித்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் ஒரு கன்னிப் பெண்ணை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சிறிய வயதில் மணம் முடிக்கிறார்கள்.
இதை இன்று நாம் ஏற்றுக் கொள்வோமா? என்றால்,ஏற்றுக் கொள்வோம் என்று சொல்வோம். எழுதப்பட்ட சரித்திரமாக, எழுதப்பட்ட வரலாறாகஏற்றுக் கொள்வோம்.
ஆனால்,வாழ்க்கையில் பின்பற்றுவோமா? வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய ஒரு இஸ்லாமிய கலாச்சாரமாக இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று சொன்னால் நம்மில் பலருக்கு இதை ஜீரணிக்கவே முடியாது.
என்ன சொல்வார்கள். இவனுக்கு ரொம்ப பொம்பளை ஆசை என்று சொல்வார்கள். கூச்சமில்லாமல் வெளிப்படையாகச் சொல்வதென்றால், பெண்ணாசை தவறு என்றால் அதற்கு ஒரு ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எனக்கு பெண்களின் விருப்பம் அதிகமாக இருக்கிறது சொன்னார்கள்.
«حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ»
துன்யாவில் எனக்கு விருப்பமானது பெண்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 8836.
ஹலாலான பெண்களை திருமணம் முடித்த ஹலாலான ஆசையோடு வாழ்வது.
இன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய செயலைக் குறைகாணக் கூடியவர்கள், இஸ்லாமிய கலாச்சாரத்தை குறைகாணக் கூடியவர்கள், அவர்களுடைய வாழ்க்கையின் மறு பக்கத்தை எடுத்து பாருங்கள்.
யாராக இருந்தாலும் சரி, மனதால் ஜினா -விபச்சாரம்செய்து கொண்டிருப்பார்கள். உள்ளத்தால் ஜினாசெய்துகொண்டிருப்பார்கள். பார்க்கக்கூடிய அசிங்கங்களை, பார்த்துக்கொண்டு ஜினாசெய்து கொண்டிருப்பார்கள்.
தவறான ஆசை ஹராமாக்கப்பட்டது. ஹலாலான ஆசை அல்லாஹ்விற்கு விருப்பமானது. ஹலாலான ஆசை அல்லாஹ் உடைய திருப்தியை தேடித்தரக் கூடியது.
அல்லாஹ்வுடைய தூதருடைய மார்க்கத்தின் வழிகாட்டுதலை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ»
நீங்கள் உங்களுடைய மனைவியோடு சேர்வதற்கு அல்லாஹ் உங்களுக்கு நன்மை தருகிறான் என்று. அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள்.
யா ரசூலுல்லாஹ்! தன்னுடைய இச்சைக்காக மனைவியிடம் சேர்கிறோம். இதற்கு நன்மையா? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், ஆம்.
நீங்கள் அதை ஹராமில் வைத்தால் அது தண்டனையாகும். எனவே, ஹலாலில் நிறைவேற்றினால் அது ஏன் நன்மை ஆகாது. (3)
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1006.
நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருப்பதை நான் இங்கு குறிப்பிடுகிறேன். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரக்அத்துகளை தொழுவதை விட, பல குர்ஆன்களை ஓதுவதை விட, பலநேரங்களில் உங்களது மனைவியோடு ஹலாலான முறையில் சேருவது மிக சிறந்த ஒன்றாக இருக்கும்.
(சிலர் நினைக்கலாம், நமக்கு வயசு ஆயிடுச்சு. இனிமே நமக்கு எதுக்கு கல்யாணம். இனி நமக்கு இதெல்லாம் எதற்கு என்று.
இவங்க எல்லாம் காஃபிருடைய கூட்டத்தில் அயோத்தியில் சன்னியாசியாக இருக்கவேண்டிய மக்கள். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் தொப்பி தாடியோடு வலம் வருவதற்கு அருகதையற்ற மக்கள்.)
நம்முடைய மனைவியோடு ஆசையோடு சேர்வது, வணக்க வழிபாடுகளை விட சிறந்தது. காரணம்,அப்படி நீங்கள் சேரும்போது அல்லாஹ் உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை நாடி விட்டால், அந்த குழந்தை ஒரு இமாம் அஹ்மதாக உருவானால், ஒரு இமாம் ஷாஃபியாக உருவானால், இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு அறிஞராக உருவானால் எது சிறந்தது?
நீங்கள் தொழுத ஆயிரம் ரக்அத்துகளா? அல்லது அந்த மனைவியின் சேர்க்கையின் மூலமாக உங்களுக்கு கிடைத்த அந்த ஆலிமான, முஹாஜிதான, இஸ்லாமிய மார்க்க அறிஞரான குழந்தையா? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது முன்னோர்கள் எப்படி சிந்தித்து உள்ளார்கள் என்பதை கவனியுங்கள். அல்லாஹ்வின் அருளை இன்று நாம் எப்படி மட்டகரமாக சிந்தித்து கொண்டிருக்கிறோம்?
காஃபிர்களின் கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டு கேவலமாக, கீழ்த்தரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! இன்னும் பல விஷயங்களை அடுத்து அடுத்து ஜும்ஆவில் தொடர்வோம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய சமுதாயத்தை சீரமைப்பானாக! சீர்கெட்டு இருக்கக்கூடிய, சீர்குலைந்து இருக்கக்கூடிய, கலாச்சாரத்தின் இந்த சீரழிவுகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சீர்திருத்தம் செய்து, தக்வா உடைய வாழ்க்கையை நமக்கு நஸீபாக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ ابْنَ أُخْتِ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ مَنْصُورٍ يَعْنِي ابْنَ زَاذَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ، وَإِنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا، قَالَ: «لَا» ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ» (سنن أبي داود- 2050) [حكم الألباني] : حسن صحيح
குறிப்பு 2)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ قَالَ: حَدَّثَنَا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْمُخَضْرَمَةِ بِعَرَفَاتٍ فَقَالَ: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا، وَأَيُّ شَهْرٍ هَذَا، وَأَيُّ بَلَدٍ هَذَا؟» قَالُوا: هَذَا بَلَدٌ حَرَامٌ، وَشَهْرٌ حَرَامٌ، وَيَوْمٌ حَرَامٌ قَالَ: " أَلَا وَإِنَّ أَمْوَالَكُمْ، وَدِمَاءَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي يَوْمِكُمْ هَذَا، أَلَا وَإِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، وَأُكَاثِرُ بِكُمُ الْأُمَمَ، فَلَا تُسَوِّدُوا وَجْهِي، أَلَا وَإِنِّي مُسْتَنْقِذٌ أُنَاسًا، وَمُسْتَنْقَذٌ مِنِّي أُنَاسٌ، فَأَقُولُ: يَا رَبِّ أُصَيْحَابِي؟ فَيَقُولُ: إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ " (سنن ابن ماجه- 3057) [حكم الألباني] صحيح
குறிப்பு 3)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ: " أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ» (صحيح مسلم -1006)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/