HOME      Khutba      சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 4-4) | Tamil Bayan - 386   
 

சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 4-4) | Tamil Bayan - 386

           

சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 4-4) | Tamil Bayan - 386


சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் - அமர்வு 4

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் - அமர்வு 4

வரிசை : 386

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 01-01-2016| 20-03-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த வரலாறு 21 வது அத்தியாயத்தின் 83, 84 ஆவது வசனங்களுக்கு இமாம் தபரி பதிவுசெய்த விளக்க உரையில் இருந்து எடுக்கப்பட்டதாகும்

சோதிக்கப்பட்ட நபிமார்கள் என்ற தொடரில் அய்யூப் அலைஹிஸ்ஸலாம்அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொடர்ந்து நாம் சில ஜுமுஆக்களில் நாம் பார்த்து வந்தோம்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சோதனைகளை குறித்து வந்த அறிவுப்புகளில் பல விஷயங்களை படிப்பினையாக நாம் பெற்றோம்.

கடுமையாக சோதிக்கப்பட்டார்கள், அவர்களது உடலெல்லாம் அழுகியது, உருக்குலைந்தார்கள், எழுந்து நடக்க முடியவில்லை, சில கவளஉணவு கூட உண்ண முடியாத நிலை, அப்படியே சிரமப்பட்டு உண்டாலும் அது ஜீரணிக்காமல் அப்படியே வெளியேறிய நிலை, ஒரு மிடறு தண்ணீர் கூட மிகுந்த சிரமத்துடன்தான் குடிக்க முடியும் என்ற அளவுக்கு அவர்களுடைய நிலை இருந்தது.

இப்படியாக பல ஆண்டுகள் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த சோதனையில் இருந்தார்கள். ஆனால் எந்த ஒரு நிலையிலும் அல்லாஹுவை அவர்கள் கோபித்துக் கொள்ளவில்லை, அல்லாஹுவை பற்றி அவர்கள் வருத்தப்படவில்லை, அல்லாஹுவின் விதியை நினைத்து அவர்கள் சஞ்சலப்படவில்லை.

அல்லாஹுவையும் அவன் தன் விஷயத்தில் விதித்த விதியையும் பொருந்திக் கொண்டவர்களாக, அல்லாஹுடைய கோபத்தில் இருந்து பாதுகாப்பு தேடியவர்களாக சதா அல்லாஹுவை நினைவுகூர்ந்து கொன்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட தருணத்தில்தான் இறுதியாக அல்லாஹ் சுபுஹானஹுத்தஆலா அவர்களுக்கு எப்போது சுகமளிக்க வேண்டும் என்று நாடினானோ அந்த நேரத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த மூன்று தோழர்கள் அவர்களை பார்க்க வருகிறார்கள்.

அப்போது ஒருவர் மாற்றி ஒருவராக அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறை பேசுகிறார்கள், அதில் இரண்டாமவர், அய்யுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தவறாக பேசியதற்குப் பிறகு, இறுதியாக அவர் சொல்லி முடிக்கின்றார்;

அய்யூபே!விளங்கிக்கொள், இறுதியாக நான் சொல்லுவது என்னவென்றால், யார் அல்லாஹுவிற்கு முன்னால் தன்னை தானே உயர்வாக கருதுவானோ அவனை அல்லாஹ் தாழ்த்தி விடுவான், யார் அல்லாஹுக்காக பணிந்து செல்கிறாரோ அவரை கண்டிப்பாக அல்லாஹ் உயர்த்துவான்.இந்த விஷயத்தை சொல்லி இரண்டாமவர் முடிக்கிறார்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் இந்த வார்த்தை மிகவும் வேதனையாக இருந்தது, ஒரு காலும் பெருமை கொள்ளாத, பணிவையே மேற்கொள்கின்ற தனக்கு இப்படி ஒரு வார்த்தையை ஒரு மனிதர் சொன்னால் அந்த நபியினுடுடைய உள்ளம் எவ்வளவு பாதித்திருக்கும்! என்று நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அந்த மனிதருடைய பேச்சுக்கு பதில் சொல்கிறார்கள், அல்லாஹ் என்னை அழிக்க நாடினால் அவனுடைய அடியானாகிய என்னுடைய விஷயத்தில் யார் ஆட்சேபனை செய்ய முடியும்?அவன் ஏன் என்னை அழிக்கிறான்? என்று யார் கேள்வி கேட்க முடியும்.

இந்த பிரபஞ்சத்தில் அல்லாஹுடைய கோபத்தை தடுக்கக்கூடிய ஒன்று இருக்கிறதென்றால், அல்லாஹுவின் சினத்தை மாற்றக்கூடிய ஒன்று இருக்கிறதென்றால் அது அல்லாஹுடைய கருனையைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

அல்லாஹுவிற்கு முன்னால் அடியானுக்கு பலன் தரக்கூடியது, அந்த ரப்புக்கு முன்னால் பணிந்து இறைஞ்சுவதை தவிர, மன்றாடுவதைத் தவிர வேறொன்றும் இல்லை.

நாம் செய்கின்ற அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறானா?ஏற்றுக் கொள்கிற விதத்தில் நமது அமல்கள் இருக்கின்றனவா?மனத்தூய்மை எந்தளவு இருக்கிறது?மன ஓர்மை எந்தளவு இருக்கிறது?நம்முடைய அமல்களைக் கொன்டு அல்லாஹுவிடத்தில் நாம் எதை கேட்க முடியும்?

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் இவ்வாறு சொல்லிவிட்டு தனது ரப்பிடத்தில் சொல்கிறார்கள், என் இறைவா! உன் அருளைக் கொண்டு என்னை முன்னோக்குவாயாக, நான் செய்த பாவத்தை எனக்கு காண்பித்து கொடு, எதனால் உனது கண்ணியமிக்க முகத்தை என்னை விட்டு நீ திருப்பிக் கொண்டாய், நீ என்னை கண்ணியப்படுத்தி இருந்தாய், உனக்கு எதுவும் மறைந்ததல்ல, மழைகளின் துளிகளையும் நீ கணக்கிட்டு அறிந்திருக்கிறாய், உலகத்தில் உள்ள மரங்களின் இலைகளை நீ கணக்கிட்டு அறிந்திருக்கிறாய், பூமியில் உள்ள மண்ணின் எண்ணிக்கையை நீ அறிந்திருக்கிறாய்,

இன்று என்னுடைய தோள் பழைய கந்தலான ஆடையை போன்று மாறிவிட்டது, நான் எனது உடலில் எந்த பகுதியை தொட்டாலும் அது விழுந்து விடும் அளவுக்கு எனது உடல்நிலை மோசமாக இருக்கிறது.

இறைவா! உன் புறத்திலிருந்து ஒரு நன்மையை கொடு, என் சோதனையிலிருந்து எனக்கு விடுதலையை கொடு. இறந்தவர்களை நீ உயிர்ப்பின்றாயே, இறந்த பூமியை செழிப்பாக ஆக்குகிறாயே, அந்த ஆற்றலைக் கொண்டு நான் இதை உன்னிடத்தில் கேட்கிறேன். எனக்கு சுகத்தை கொடு, இந்த நோயில் என்னை அழித்தால் நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு உணர்த்தாமல் அழித்து விடாதே.

அல்லாஹுவே! நீ என்னை விட்டு தேவையற்றவன், ஆனால் உன்னுடைய ஆட்சியில் அநீதம் அழகல்ல, நீ தண்டித்தாலும் அவசரப்பட்டு தண்டிக்கக்கூடியவனல்ல, ஏன் தெரியுமா? பலவீனமாவர்கள்தான் அநியாயம் செய்வார்கள், குற்றவாளி தப்பிவிடுவான் என்று பயப்படக்கூடியவன்தான் அவசரமாக தண்டிப்பான்.

ஆனால் இந்த இரண்டும் உனக்கு இல்லை ரப்பே. இறைவா! எனது குற்றத்தை எனக்கு சொல்லிக்காண்பி, நீ என்னை மண்னிலிருந்து படைத்தாய், பின்னர் ஒரு சதைத்துண்டாக ஆக்கினாய், பிறகு எழும்பாக, பின்னர் எழும்புக்கு ஆடையையும் தோலையும் போர்த்தினாய், அதற்குள் நரம்புகளை நீ ஏற்படுத்தினாய், நீ எனக்கு பலத்தை கொடுத்து குழந்தையாக வெளியேற்றினாய். சிறுபிராயத்தில் என்னை வளர்த்தாய், நான் பெரியவனாக ஆனபோது எனக்கு வாழ்வாதாரங்களை வழங்கினாய்.

ரப்பே!நீ என்னிடத்தில் என்ன ஒப்பந்தம் கொடுத்தாயோ அந்த ஒப்பந்தத்தை நான் பாதுகாத்தேன், உன்னுடைய கட்டளைகளை நான் நிறைவேற்றினேன், நான் அதில் தவறு செய்திருந்தால் அந்த தவறை எனக்கு சொல்லிகாண்பி.

என்னை கவலையால் கொன்றுவிடாதே, எனது குற்றத்தை எனக்கு சொல்லிக் காண்பி. நான் உன்னை திருப்தி படுத்திய அடியானாக இல்லையென்றால் நீ என்னை தண்டிப்பதற்கு தகுதியுள்ளவனாவேன்.

அல்லாஹுவே! நான் இப்படி கேடுகெட்ட ஒருவனாக ஆகிவிட்டேனா?எனது அமல்களையெல்லாம் நீ கணக்கிட்டு கொண்டிருக்கிறாய், நான் மன்னிப்பு கேட்டாலும் நீ என்னை மன்னிக்காத அளவுக்கு என்ன பாவத்தை செய்தேன்?நான் நன்மை செய்தால் ஒருகாலும் பெருமையால் நான் தலையை உயர்த்தி சொன்னதில்லை, நான் குற்றம் செய்திருந்தால் எனது எச்சிலைக் கூட என்னால் முழுங்க முடியாத அளவிற்குள்ள நிலையை நீ எனக்கு ஏற்படுத்தி இருப்பாய்.

இப்போது உனக்கு முன்னால் என்னுடைய பலவீனத்தை பார்க்கிறாய், உனக்கு முன்னால் நான் கெஞ்சுவதை நீ கேட்கிறாய், ரப்பே என்னை ஏன் படைத்தாய்?எனது தயின் வயிற்றுலிருந்து ஏன் வெளியாக்கினாய்?நான் பிறக்காமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு நான் ஆகியிருக்கமாட்டேன்.

உலகமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் உன்னுடைய கோபத்திற்கு முன்னால் அவற்றால் நிலைத்திருக்க முடியாதே,என்னுடைய உடல் உனது தண்டனையை எப்படி தாங்க முடியும். எனக்கு கருணை காட்டு, நற்சுகத்தைக் கொடு, நான் கப்ருக்குள் செல்வதற்கு முன்னால், மரணத்தின் துக்கத்திற்குள் செல்வதற்கு முன்னால், எனக்கு ஆஃபியத்தைக் கொடுஎன்று அல்லாஹுவிடத்தில் மன்றாடுகிறார்கள்.

இறுதியாக மூன்றாமவர் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்த துஆவை பார்த்துவிட்டு அவர் சொன்னார்;

அய்யூபே, நீ அதிகம் பேசுகிறாய், உன்னையே நீ நல்லவனாக கருதுகிறாய், ஆனால் உன்னுடைய காரியங்களையும் அமல்களையும் அல்லாஹ் ஒருவன் கண்காணிக்கிறான் என்பதை நீ மறந்து விடாதே.

அல்லாஹ் உன்னுடைய பாவங்களை மன்னிக்கிறான் என்று சொல்கிறாய் அல்லவா? அந்த ரப்புடைய ஆற்றலை நீ புரிந்தாயா?வானத்தின் தூரத்தை நீ அறிந்திருக்கின்றாயா?காற்றின் ஆழத்தை, அதனுடைய தூரத்தை அறிந்திருக்கிறாயா, பூமியின் அகலத்தை நீ அறிந்திருகிறாயா?இந்த பூமியை அளப்பதற்கோ, வானத்தின் நீளத்தை அளப்பதற்கோ உன்னிடத்தில் என்ன இருக்கிறது?கடலின் ஆழத்தை அளந்திருக்கிறாயா?அந்த கடலை அல்லாஹ் எதைக் கொன்டு தடுத்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறாயா?

அறிந்து கொள், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவற்றையெல்லாம் படைத்திருக்கிறான், அவன் இவற்றையெல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான், இப்படிப்பட்ட பேரரசனுக்கு முன்னால் நீ அதிகம் பேசாதே, அய்யூபே! நீ வாய் மூடி இரு, அல்லாஹுவின் கருணையை ஆதரவு வைத்துக் கொண்டிரு. அல்லாஹுவின் கருணை, ரஹ்மத், அவனிடத்தில் வாய் முடி அமைதியாக தேடுவதைக் கொண்டுதான் கிடைக்குமே தவிர, அவனை எதிர்த்து பேசுவதன் மூலமாய் அல்ல.

ரப்புல் ஆலமீனிடத்தில் தேவைகளை கேட்கும்போது தீயவர்களுடைய முகங்கள் கருத்துவிடும், அவர்களுடைய கண்கள் இருளடைந்துவிடும்.

அல்லாஹுவிடத்தில் தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்கள் யார் தெரியுமா?யார் மன இச்சைகளை அல்லாஹுவிற்காக துறந்து வாழ்ந்தார்களோ, அல்லாஹுவிற்கு முன்னால் பணிந்தார்களோ, பயந்தார்களோ, மேலும் இரவெல்லாம் விழித்திருந்து வணங்கினார்களோ, படுக்கையை விட்டு தூரமாக இருந்தார்களோ, சஹர் நேரங்களை எதிர்பார்த்திருந்து அல்லாஹுவிடத்தில் மன்னிப்பை தேடினார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹுவின் அருள் கிடைக்குமே தவிர, அல்லாஹுவிடத்தில் துணிவு கொண்டு பேசுபவர்களுக்கு அல்லஎன்று சொல்லி முடித்தார்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் வாய் மூடி இருந்தாலும் அங்கே குற்றவாளியாக எண்ணிவிடுவார்கள், வாய் திறந்து பேசினாலும் இப்படி நம்மை ஏளனம் பேசுகிறார்கள், இருந்தாலும் அல்லாஹுவின் அருளையும் ஆற்றலையும் ஒரு நபியால் வெளிப்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அந்த மூன்று நபர்களுக்கும் சேர்த்து இறுதியாக சொன்னார்கள், சகோதரர்களே, இன்று உங்களுக்கு உங்களை பற்றிய ஒரு நல்லெண்னம் அதிகமா ஆகி விட்டது, நீங்கள் நன்கு அறிவீர்கள், முந்திய காலத்தில் மக்கள் எனக்கு எப்படி கண்னியம் கொடுத்தார்கள் என்று, நான் எப்படி நீதமாக நடந்தேன், எனது நீதத்தை நான் பெற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இன்று நீங்கள் கேட்கக்கூடிய இந்த விஷயங்களோ அல்லாஹுடைய 'இல்முல் கைப்' -மறைவான விஷயம் சம்பந்தப்பட்டது, நான் அவற்றை அறிய மாட்டேன். அவன் என்னை விசாரித்தால், நான் என்ன பதில் சொல்ல முடியும்.

ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு துன்பம் நிகழ்வதைப் பார்த்தால் அவனுக்கு அழகிய முறையில் அறிவுரை கூறுவான், அவனை இகழ்ந்து பேசமாட்டான், அவனோடு சேர்ந்து அழுது அவனுக்காக பிரார்திப்பான், அவனுக்காக அல்லாஹுவிடத்தில் மன்றாடுவானே தவிர, அவனை இகழ்ந்து பேசமாட்டான்.

அல்லாஹுடைய அருளைப் பற்றியோ, வல்லமையைப் பற்றியோ நான் என்ன கூற முடியும்? வானத்தில் பறக்கின்ற பறவைகளைக் கேட்டுப் பாருங்கள், அவை உங்களுக்கு பதிலளிக்குமா?பூமியில் உள்ள மிருகங்களை கேட்டுப் பாருங்கள், அவை உங்களுக்கு பதிலளிக்குமா?கடலிலுள்ள மீன்களை கேட்டுப் பாருங்கள், அவை உங்களுக்கு பதிலளிக்குமா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவற்றையெல்லாம் தன்னுடைய ஞானத்தால் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். ஆதமுடைய மகன் அறிந்து கொள்ள வேண்டாமா, காதில் எதைக் கேட்டானோ, வாயால் எதை சுவைத்தானோ, மூக்கால் எதை நுகர்ந்தானோ இவையெல்லாம் அல்லாஹுவின் அருளால் ஏற்பட்டது.

அல்லாஹுடைய இல்மை அவனைத்தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். அவனுக்குத்தான் ஆட்சி அதிகாரம், அவனுக்குத்தான் ஞானம், அவனுக்குத்தான் மகத்துவம், அவனுக்குத்தான் கம்பீரம். அல்லாஹ் சீர்கெடுத்தால் யாரால் சீர் செய்ய முடியும்?அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இழிவுபடுத்தி விட்டால் யாரால் கண்ணியப்படுத்த முடியும்?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடலைப் பார்த்தால் அல்லாஹுவின் பயத்தால் கடலே காய்ந்து விடும், அல்லாஹ் கடலுக்கு கட்டளையிட்டால் பூமியை முழுங்கிவிடும். அல்லாஹ் தன்னுடைய ஆற்றலால் இவற்றை சுமந்து கொண்டிருக்கிறான்.

அவனுடைய ஆற்றல் அதிகாரத்திற்கு முன்னால், ஆட்சிக்கு முன்னால் அரசர்களெல்லாம் திடுக்கிட்டு திகைத்து பயந்து விடுவார்கள், அறிஞர்களின் அறிவு எல்லாம் அல்லாஹுவின் அறிவுக்கு முன்னால் ஒன்றும் இல்லாமல் போய்விடும். ஞானவான்களின் ஞானமெல்லாம் அல்லாஹுவின் ஞானத்திற்கு முன்னால் ஊமையாகிவிடும்.

பொய்யர்கள் அல்லாஹுவிற்கு முன்னால் வாய்மூடி விடுவார்கள். அவன்தான் மறந்தவருக்கு நினைவூட்டுகின்றான், நியாபகமுள்ளவரை மறக்கடிக்கச் செய்கின்றான், இருளையும் வெளிச்சத்தையும் அவனே ஓட்டுகின்றான், உண்டாக்குகின்றான்.

இதுதான் என்னுடைய குறைவான இல்ம், அல்லாஹுடைய படைப்போ என்னுடைய அறிவு சூழ்ந்து அறிவதை விட மகத்தானது, அல்லாஹுடைய மகத்துவமோ என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்வதை விட மிக மகத்தானது. இவ்வாறாக அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹுடைய வல்லமையை கூறிகின்றார்கள்.

மேலும் சொல்லுகின்றார்கள், 'நான் வழிகேடனாக இருந்தால் அதனுடைய தண்டனை எனக்கு உண்டு, நான் நல்லவனாக இருந்தால் என்னுடைய நன்மையை அல்லாஹ் எனக்கு கொடுப்பான்.

அல்லாஹ் என்னை தண்டிக்க நாடினால் யார் என்னை அவனுடைய தண்டனையிலிருந்து பாதுகாக்க முடியும்? என்னுடைய அடிமையை நான் அழைத்தேன், அவர்களும் என் பக்கம் வரவில்லை, சோதனையிம் போது எல்லாம் என்னை விட்டு சென்றுவிட்டார்கள், நீங்களோ எனக்கு ஏற்பட்ட எல்லா சோதனைகளையும் விட எனக்கு மிகப் பெரிய சோதனையாக இருக்கின்றீர்கள்.

இவ்வாறு அய்யூப் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய சகோதரர்களைப் பற்றி முறையிட்டு விட்டு அல்லாஹுவின் பக்கம் கையேந்துகிறார்கள்.

وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

'யா அல்லாஹ் எனக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்பட்டுவிட்டது, நீதான் கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'.(அல்குர்ஆன் 21 : 83)

அல்லாஹ் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது கருணை கொள்கிறான். அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரிக்கின்றான். இவ்வளவு ஆண்டுகாலம் அல்லாஹுவுக்காக பொறுமையாக இருந்து சோதனைகளை சகித்துக் கொன்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்கள் மிது கருணை காட்டினான்.

அல்லாஹுத்தஆலா கட்டளையிடுகின்றான், 'அய்யூபே உங்களுடைய காலை பூமியில் அடிப்பீராக'. அங்கிருந்து மதுரமான ஊற்றை அல்லாஹ் உற்பத்தி செய்கின்றான். அதன் மூலமாக நிங்கள் குளித்துக் கொள்ளுங்கள்என்று கட்டளையிடுகின்றான்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அதில் குளித்தவுடன் அவர்களின் உடல் சுகமடைகிறது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தார், அவர்களுடைய பிள்ளைகள் இறந்துவிட்டவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர்ப்பித்துக் கொடுக்கின்றான்.

இந்த பூமியிலேயே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து உயிரோடு வாழ்ந்திருந்த அதே நிலையில் கொடுத்தது அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத்தான். அவர்களின் குழந்தைகள், மனைவிகள் எல்லாரும் இறந்துவிட்டார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான், 'இறந்த குழந்தைகளை மட்டுமல்ல, மனைவியரை மட்டுமல்ல, அடுத்து அவர்களைப் போன்று அவருக்கு நாம் கொடுப்போம்' என்று வாக்களித்தான்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மனைவி ஒரு வார்த்தையை சொல்லி விடுகிறார், இந்த சோதனயான நேரத்தில் இப்லீசின் தூண்டுதலால்.

அதற்காக அந்த நேரத்தில்கூட தவ்ஹீதிலும், ஈமானிலும் உறுதியாக இருந்த அய்யூப் அலைஹிஸ்ஸலாம் புரிந்துகொள்கிறார்கள். இந்த வார்த்தையை யார் உனக்கு சொல்லிக் கொடுத்தார்கள், இந்த வார்த்தையை என்னிடத்தில் சொல்லும்படி யார் ஏவினார்கள்?என்று கேட்டபோது அவர் இன்னன்ன தோற்றத்தில் வந்த ஒருவர் என்பதாக கூறுகிறார்கள்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள்; 'அறிந்துகொள் அவன் இப்லீஸ், அவன்தான் ஷைத்தான். உன்னை இணை வைக்கும்படி தூண்டியிருக்கிறான், இணை வைத்தலைக் கொண்டு எனக்கு கட்டளையிட்டுருக்கிறான்.

நான் சுகமாகிவிட்டால் எனது கையில் அடிப்பதற்கு உண்டன ஆற்றல் வந்தால் உன்னை நூறு அடி அடிப்பேன்என்று சொல்கிறாற்கள்.

ஒரு நபியினுடைய ஈமானிய உறுதியைப் பாருங்கள், இதுதான் வாழ்க்கையில் நாம் படித்துக்கொள்ள வேண்டிய பாடங்களில் மிக முக்கியமான ஒன்று.

எந்த ஒரு சோதனையிலும் தவ்ஹீதில் கலங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வான் ஒரு முஃமின். எந்த ஒரு நிலையிலும் ஈமானில் கலங்க ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்,

இணைவைப்பின் வாடைகூட தன் மீது விழாமல் பார்த்துக் கொள்வார். ஒரு முஃமினுக்கு இந்த உலகத்தில் எல்லா துன்பங்களையும், எல்லா இன்பங்களையும் சகித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இணைவைத்தல் என்ற செயலை அறவே சகித்துக் கொள்ள முடியாது. அது அவ்வளவு அருவருப்பான, கேவலமான, மோசமான ஒன்று. துன்பமும், சிரமமுமான ஒன்று.

இதைத்தான் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,

மூன்று காரியங்கள் இருந்தால் ஈமானுடைய சுவை கிடைக்கும். அல்லாஹுவும், அல்லாஹுடைய தூதரும் அவர்கள் அல்லாத எல்லாரையும் விட பிரியமானவர்களாக இருக்க வேண்டும். யாரை நேசித்தாலும் அல்லாஹுக்காக நேசிக்க வேண்டும்.குஃப்ரில்-இறை நிராகரிப்பில் திரும்புவதை எப்படி வெறுக்க வேன்டும் என்றால் நெருப்பில் போடப்படுவதை வெறுப்பது போன்று.(1)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15, 20, 5581.

மனிதனுக்கு இயற்கையாக நெருப்பின் மீது ஒரு வெறுப்பிருக்கும், அந்த நெருப்பில் எரிவதை பார்க்கும்போது, அந்த வேதனையைக் காணும் போது எப்படி அவன் வெறுப்பானோ, இந்த வேதனையில் இருந்து தான் தப்பிக்க வேண்டும் என்று விரும்புவானோ, அது போன்றுதான் இறைநிராகரிப்பை அவன் வெறுக்க வேண்டும், அது இருந்தால் அவன் ஈமானின் சுவையை நுகருவான்.

இந்த ஹதீஸிலிருந்து இன்னும் ஒரு விஷயத்தை அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், 'நெருப்பில் போட்டு பொசுக்கப்படுவதை விட ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு இணை வைத்தல் மிக பயங்கரமானது.

பல ஹதீஸுகளில் பார்க்கிறோம், இதற்கு முன்னர் வாழ்ந்த மக்கள் நெருப்பிலிட்டு பொசுக்கப்பட்டார்கள், அவர்களுடைய பெண்கள், குழந்தைகள் உட்பட, ஆனால் அவர்கள் ஈமானை விடவில்லை.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்த சோதனையில் பெண்ணுடைய மனம் பலவீனமடைகிறது, இப்படி செய்தால் தனது கணவர் சுகமடைந்து விடுவாரா? என்று எதிர்பார்க்கிறார்கள்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் வஹீ கொடுக்கப்பட் நபி, இல்ம் கொடுக்கப்பட நபி, அல்லாஹுவின் புறத்திலிருந்து வழிகாட்டுதல் பெற்ற நபி, நபிமார்கள் இனைவைத்தலில் இருந்து எப்போதும் பாதுகாக்கப்பட்டவர்கள், அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இந்த வார்த்தையை கண்டிப்பாக இப்லீஸ்தான் சொல்லியிருப்பான் என்று.

அந்த நேரத்தில் இவ்வளவு தனக்கு உதவியாக இருந்த மனைவியை அல்லாஹுடைய கட்டளையில் மீறியதற்காக கோபப்படுகிறார்கள். இதையும் இங்கே பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த தனிப்பட்ட விஷயத்திலும் கோபப்படுவதைவிட அல்லாஹுடைய கட்டளை பாழாக்கப்படும் போது, அது மீறப்படும்போது அங்கே படக்கூடிய கோபமிருக்கிறதே அதுதான் அல்லாஹுக்காக உள்ள கோபம்.

இன்று மனைவிமார்கள் விஷயத்தில், குடும்ப விஷயத்தில் தன்னுடைய சுயநலனுக்காக, சுயவிருப்பதிற்காக கோபப்படுவர்களை பார்த்திருக்கிறோம், ஆனால் ஹக்குகள் பாழாகிக் கொண்டிருக்கின்றன, அல்லாஹுடைய கடமைகள் பாழாக்கப்படுகின்றன.

இனைவைத்தல், பெரும்பாவங்கள், கடமைகளில் அலட்சியம் என்ற அல்லாஹுவின் மார்க்க விஷயங்களில் பெரும் அலட்சியத்தை, புறக்கணிப்பை தங்கள் குடும்பங்களில் பார்த்தும்கூட முகம் சுளிக்காத ஆண்களை நம்முடைய வாழ்க்கையில் நாம் இன்று பார்க்கிறோம்.

நம்முடைய வீரம், துணிவு, ஆற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்குண்டான முதல் இடம் எதுவென்றால், அல்லாஹுடைய கட்டளைகளுக்கு மாற்றமாக மக்கள் நடக்கும்போது அதை எதிர்த்து நாம் கொடுக்கும் குரல், அதுதான் நம்முடைய ஆற்றலை, துணிவை வெளிப்படுத்துவதற்குண்டான இடம்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் இதை அங்கே செய்து காட்டினார்கள். இதுவும் அல்லாஹுக்கு பிடித்தமான செயலாக ஆகிவிட்டது.

ஆனால் அதே நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய அடியார்களின் விஷயத்தில் அவன் கொண்டிருக்கக்கூடிய கருணை, இப்படிப்பட்ட ஒரு பெண் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய நபி நூறு அடி அடிப்பார்களே என்று,அல்லாஹ் அதற்கும் அவன் ஒரு சூழ்ச்சி செய்தான், சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவன், எப்படி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் பின்யாமீனை யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் வைத்துக் கொள்வதற்கு சூழ்ச்சி செய்தான்.

அந்த கால மன்னரின் சட்டத்தின் படி சகோதரரை வைத்துக்கொள்ள உரிமை அவருக்கு கிடையாது, அவரிடத்தில் பொருள் திருடப்பட்டிருந்தால் தவிர.

அப்படித்தான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுமை, அவர்களின் மனைவி கணவனை கைவிடாமல் அவர்களுக்கு பணிந்து, அவர்களுக்கு செய்த பணிவிடை இவையனைத்தையும் பொருந்திக் கொண்ட அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்,

நூறு புல்கள் உடைய ஒரு கட்டைக் கொண்டு நீங்கள் அடித்து விடுங்கள், உங்கள் சத்தியத்தை முறித்தவராக நீங்கள் ஆகமாட்டிர்கள், அவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்த தண்டனை நிறைவேற்றியவராக ஆகிவிடுவிர்கள் என்று அல்லாஹ் அறிவுறுத்தினான்.

இப்படித்தான் அல்லாஹுவிற்கு விருப்பமானவர்களாக, நேசமுள்ளவர்களாக, கட்டுப்பட்டவர்களாக நாம் மாறிவிட்டால் நம்மிடத்தில் ஏற்படக்கூடிய சில தவறுகள், குற்றங்களுக்கு கூட அல்லாஹ் ரப்புல் ஆலமீன்அவனே பரிகாரங்களை ஏற்படுத்துவான், அவனே அந்த குற்றங்களை மன்னைப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துவான்.

உஹது போரின்போது கூட அல்லாஹ் இதைத்தான் நினைவு கூறுகிறான். அங்கே நடந்த ஷஹீதுகள், அதனால் சஹாபாக்களுக்கு ஏற்பட்ட துக்கங்கள் ஏன் தெரியுமா?அங்கே நபியின் கட்டளைக்கு மாறு செய்யப்பட்டதல்லவா, அந்த மாறு செய்தலை அல்லாஹ் மன்னிக்க நாடினான், இப்படிப்பட்ட சோதனையை அவர்களுக்கு கொடுத்து அதனால் ஏற்பட்ட மனவருத்தங்களால் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான்.

கண்ணியத்திற்குரியோர்களே, அய்யூப் அலைஹிஸ்ஸலாம் குணமாகிறார்கள், அல்லாஹ் அவர்களுக்கு ஆட்சியை கொடுத்தான், அவர்களின் குடும்பத்தாரை அவர்களுக்கு திரும்ப கொடுத்தான்.

அதுமட்டுமல்ல, அல்லாஹ் சொல்லுகிறான்; அய்யூபே! உங்களை இகழ்ந்து பேசிய மூன்று தோழர்களுக்கும், நீங்கள் அவர்களுக்காக குர்பானி கொடுத்து பாவமன்னிப்பு தேடுங்கள்என்று. இப்படி ஏராளமான படிப்பினைகள், அறிவுரைகள் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் நாம் காணலாம்.

சோதனையிலிருந்து யாரும் தப்ப முடியாது, நம்முடைய அறிவாலோ, அனுபவத்தாலோ, திறமையாலோ, செல்வத்தாலோ தப்ப முடியாது.

எந்த அனுபவம் சோதனையிலிருந்து பாதுகாக்கும் என்று நினைக்கிறோமோ, அந்த அனுபவமே சோதனையாக மாறிவிடலாம். எந்த செல்வம் சோதனையிலிருந்து பாதுகாக்கும் என்று நினைக்கிறோமோ அந்த செல்வமே சோதனையாக மாறிவிடலாம், எந்த குடும்பம், சொந்தம் நம்மை சோதனையிலிருந்து பாதுகாக்கும் என்று நினைக்கிறோமோ இவற்றையே அல்லாஹ் சோதனையாக மாற்றிவிடலாம்.

பாதுகாப்பு என நாம் நினைக்கும் இவற்றையே அல்லாஹ் ஆபத்தாக்கி விட்டால் நம்மை பாதுகாக்கக்கூடியவர் யார்?

அல்லாஹ் ஒருவன், அவன் எப்படி அடியார்களை நாடுகிறானோ அப்படி அவன் சோதிக்கின்றான், அல்லாஹுவிற்கு முன்னால் பணிந்து, பயந்து அவனுக்கு முன்னால் மன்றாடி அவனது ரஹ்மத்தை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுதான் ஒரு அடியான் அல்லாஹுக்கு முன்னால் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கம், அல்லாஹுக்கு முன்னால் பேண வேண்டிய கட்டுப்பாடு. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறு இதைத்தான் நமக்கு பாடமாக கற்பிக்கிறது.

அல்லாஹ் சொல்கிறான்;

إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ

"அடியார்களில் சிறந்த அடிமையாக அய்யூப் அலைஹிஸ்ஸலாம் இருந்தார், அவர் எப்போதும் என் பக்கம் திரும்பியவராகவே இருந்தார்". (அல்குர்ஆன் 38:44)

இன்று நம்முடைய பலவீனமான நிலை என்னவென்றால், செல்வத்தால் அல்லாஹ் சோதிக்கிறான். ஆனால் அல்லாஹ் நம்மீது அன்பு வைத்திருக்கிறதால் செல்வத்தை வாரி வழங்குகிறான் என்று எண்ணிக் கொண்டு அல்லாஹுவை மறந்து விடுகிறோம்.

இன்று செல்வத்தை தேடுகிறார்கள், அல்லாஹுவிடம் வசதியான வாழ்வை கேட்கிறார்கள், ஆனால் செல்வம் கிடைத்து விட்டால் அல்லாஹுவை மறந்து விடுகிறார்.

பிறகு அவருக்கு வறுமை, துண்பம், பிரச்சினை, நோய் போன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார், அப்போதும் அல்லாஹுவை மறந்து விடுகிறார்.

இதுதான் ஈமானை படிக்காத, ஈமானை உணராத, ஈமானுடைய சுவையை அறியாத, ஈமானில் பலவீனமாக உள்ள அற்பமான நம்பிக்கை உள்ள மக்களின் நிலை.

செல்வத்திலும் வசதியான வாழ்க்கையிலும் அல்லாஹுவை மறந்து விடுகிறார்கள், சோதனைகளிலும் அல்லாஹுவை மறந்து விடுகிறார்கள். பிறகு இந்த உலகத்திலும் நஷ்டவாளிகளாக மறுமையிலும் அவர்கள் நஷ்டவாளிகளாக ஆகி விடுகிறார்கள்.

அல்லாஹ் அவர்களை எவ்வாறு வர்ணிக்கின்றான் என்று கவனியுங்கள்.

وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடு நன்மையை தருமா? உண்மையில் மறுமை என்று ஒன்று இருக்கிறதா? அந்த நன்மையெல்லாம் நமக்கு வருமா? அல்லாஹுவிடத்தில் கேட்கிறோமே, அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இப்படியே பல சந்தேகங்களில் அவர்கள் வழிபாடுகளை செய்கிறார்கள்.

வசனத்தின் கருத்து : இவர்களுடைய நிலையை அல்லாஹ் சொல்லுகிறான்; இவர்களுக்கு செல்வம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவார்கள், நிம்மதியடைவார்கள் ஆனால் அல்லாஹுவை மறந்து விடுவார்கள்.

எத்தனைபேர்களுடைய வறுமை அவர்களை வணக்கசாலிகளாக நிறுத்தி வைத்திருந்தது, அவர்களை அல்லாஹுடைய கட்டளையில் தடுத்து வைத்திருந்தத்து, அவர்களை நல்லவர்களாக வைத்திருந்தது.

அவர்களுக்கு செல்வம் வந்தபோது, வசதியான வாழ்க்கை வந்தபோது அவர்கள் அல்லாஹுடைய கட்டளையை மீறக்கூடியவர்களாக, அல்லாஹுவை மறந்தவர்களாக, மார்க்கத்தை மீறக்கூடியவர்களாக மாறிவிட்டார்களே, அவர்களுக்கு வறுமையே சிறந்ததாக இருந்திருக்கும், அவர்கள் செல்வத்தை கேட்டார்கள், அந்த செல்வம் கொடுக்கப்பட்டது, அது அவர்களுக்கு சோதனையாக ஆகிவிட்டது.

அடுத்ததாக அல்லாஹ் சிலருடைய நிலையைப் பற்றி சொல்லும்பொது,

இவர்களுக்கு சோதனை ஏற்பட்டால், ஆபத்து, பிரச்சினைகள் ஏற்பட்டால், அல்லாஹுவை விட்டு திரும்பிக் கொள்வான்.(அல்குர்ஆன் 22:11)

அல்லாஹுவை தொழுது எனக்கு என்ன பலன்?அல்லாஹுவை வணங்கி எனக்கு என்ன பலன்? என்பதாக அவன் முகம் திரும்பி சென்றுவிடுவான்.

அல்லாஹ் சொல்கிறான்; இவன் உலகத்திலும் நஷ்டவாளி, மறுமையிலும் நஷ்டவாளி, இந்த நஷ்டம்தான் பெரிய நஷ்டம். (அல்குர்ஆன் 22:11)

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவை இந்த இடத்தில்  நினைவு கூறுவோம்.

நபியவர்கள் அல்லாஹுவிடத்தில் கேட்கிறார்கள்;

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غِنًى يُطْغِينِي، وَمِنْ فَقْرٍ يُنْسِيَنِي

யா அல்லாஹ் உன்னுடைய கட்டளைகளை, உன்னுடைய மார்க்கத்தை நான் மீறும்படி செய்கின்ற செல்வத்திலிருந்து என்னை பாதுகாப்பாயாக!

நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 657, 8884.

செல்வத்தை மட்டும் கேட்கக்கூடாது, 'யா அல்லாஹ் உன்னுடைய அருளுக்கு உரித்தான, உன்னுடைய எந்த செல்வத்தைக் கொண்டு உன்னை வணங்குவேனோ, உன்னுடைய கடைமைகளை நிறைவேற்றுவேனோ, ஏழைகளை ஆதரிப்பேனோ அப்படிப்பட்ட செல்வத்தை எனக்கு கொடு.

இன்று பெரும்பாலும் செல்வதைக் கொடு, செல்வத்தைக் கொடு என கேட்கிறார்களே தவிர, யா ல்லாஹ் அந்த செல்வத்தை உன்னை நெருங்குவதற்குண்டான வழியாக எனக்கு ஆக்கிக்கொடு என்று கேட்பதில்லை. உன்னை வணங்குவதற்குண்டான செல்வத்தை எனக்கு தருவாயாக என்று கேட்பதில்லை.

அவர்கள் கேட்ட செல்வத்தை அல்லாஹ் கொடுத்துவிடுகிறான்.பிறகு அல்லாஹ் சோதிக்கின்றான், உன்னுடைய திறமையால் இந்த செல்வத்தைக் கொண்டு என்ன செய்கிறார் என்று பார்.மனிதன் தோற்றுவிடுகிறான்.

பிறகு அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்;

"யா அல்லாஹ் என்னை நீ ஏழ்மையில் வைத்திருந்தாலும் உன்னை மறக்கச் செய்யும் ஏழ்மையில் இருந்து நீ காப்பாயாக".

யா அல்லாஹ் உன்னுடைய கட்டளைகளை மீறச் செய்கின்ற செல்வத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன், உன்னுடைய மார்க்கத்தை, உன்னை மறக்கச் செய்யும் வறுமையிலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்".

நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 657, 8884.

இதுதான் ஒரு அடியானுடைய நிலையாக இருக்க வேண்டும். செல்வத்தை கேட்பது தவறில்லை.ஆனால் அந்த செல்வம் அல்லாஹுடைய சட்டங்களை மீறும்படியாக தன்னை மாற்றி விடக்கூடாது என அஞ்ச வேண்டும். வறுமையில் இருக்கும்போது பொறுமையாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில்அல்லாஹுவிடத்தில் உதவி தேட வேண்டும். அல்லாஹுடைய தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறரிடத்தில் தேவையாகும் படியான ஏழ்மையிலிருந்தும், அல்லாஹுவை மறக்கச் செய்யும்படியான ஏழ்மையில் இருந்தும் பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

இதுவும் ஒரு மோசமான நிலை. எத்தனையோ மக்கள் குஃப்ரில் செல்கிறார்கள், மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள், அல்லாஹுவின் ஷரிஅத்திலிருந்து தூரமாகிறார்கள்.

அவர்களில் பலர் காரணமாக சொல்வது,வறுமையை. இந்த உலக வாழ்க்கையின் நெருக்கடியை காரணமாக சொல்லி இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேருவதை நாம் பார்க்கின்றோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக.)

ஒரு முஃமினுடைய உள்ளம் எப்போதும் அல்லாஹுவுடன் தொடர்புடையதாக, அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்ததாக இருக்க வேண்டும். தலை நிமிர்ந்திருக்கக்கூடாது.

அல்லாஹுவிற்கு முன்னால் தலை குனிந்திருக்க வேண்டும், தான் அல்லாஹுவிற்கு செய்ததை சொல்லிக் காண்பிக்கக்கூடாது, அல்லாஹ் தனக்கு செய்ததை அவர் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டு்ம், அல்லாஹுவிற்கு முன்னால் பெருமை பேசக்கூடாது, அல்லாஹுவிற்கு முன்னால் பணிந்து, பயந்து அவனிடத்தில் அவனுடைய அருளை வேண்ட வேண்டும்.

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய  பிரார்த்தனையில் நமக்கு அழகிய வழிகாட்டுதல் இருக்கிறது.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ

யா அல்லாஹ்! உன்னைக் கொண்டு உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன், யா அல்லாஹ் உன்னுடைய பாதுகாப்பை கொண்டு உன்னுடைய தண்டையிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன், யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியைக் கொண்டு உன்னுடைய கோபத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகின்றேன். அல்லாஹுவே உன்னிடத்தில் எப்போதும் நற்சுகத்தை, நல்ல பதுகாப்பை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். (2)

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 751, 712.

அல்லாஹுவிடத்தில் பாதுகாப்பு தேடுவது என்றால், அல்லாஹுடைய தண்டனையிலிருந்து பாதுகாப்பு தேடுவதென்றால், அல்லாஹுடைய அருளைக் கொண்டுதான் முடியும். அல்லாஹுடைய ரஹ்மத்தைக் கொண்டுதான் முடியும்.

இதுதான் ஒரு அடியாருடைய நிலையாக இருக்க வேண்டும். சோதனை நபிமார்களுக்கு வந்ததைவிட மற்றவர்களுக்கு சோதனை ஏற்பட்டது கிடையாது.

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; 'மக்களில் கடுமையாக சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்கள்' என்று.

ஒவ்வொரு நபிக்கும் ஒருவிதமான சோதனை, அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த சோதனை நபிமார்களுக்கு ஏற்பட்ட சோதனைகளிலேயே வித்தியாசமான சோதனை.

கடுமையான நோய், அவர்களின் குடும்பத்தார் அனைவரும் இறந்து விட்டார்கள், அவர்களின் ஆட்சி, அதிகாரம், செல்வம் அனைத்தையும் இழந்து ஒரு தனி மனிதனாக நின்றார்கள்.

அதுவும் மக்களால் வெறுக்கப்பட்ட, ஒதிக்கி வைக்கப்பட்ட நிலையில், மாளிகையில் வாழ்ந்தவர்கள் தெருவில் வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

தனது செல்வத்தை வாரி வழங்கிய ஒரு நபி, தன்னுடைய மனைவி வேலை செய்தால்தான் ஒரு வேளை உணவு உண்ண முடியும் என்றளவிற்கு வறுமையில் தள்ளப்பட்டார்கள்.

இவ்வளவெல்லாம் இருந்தும்கூட அவர்கள் அல்லாஹுவை கோபித்துக் கொள்ளவில்லை, அல்லாஹுடைய சோதனைகளில் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை, அவர்கள் அல்லாஹுவிடத்தில் வேண்டிக் கொன்டிருந்தார்கள், அல்லாஹுவுக்கு நன்றி செலுத்தி கொண்டே இருந்தார்கள்.

எனவே தான் அல்லாஹ் சொல்கிறான்;

அடியார்களில் சிறந்த அடியார் அய்யூப் அலைஹிஸ்ஸலாம், அவர் எப்போதும் என்னை நினைவு கூர்ந்து கொண்டே இருந்தார், என் பக்கமே திரும்பிக் கொண்டிருந்தார். (அல்குர்ஆன் 38:44)

ஆகவே, நபிமார்களுடைய வரலாறுகளை குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் படித்து நாம் பயன்பெற வேண்டும், அதனுடைய நல்ல அறிவுரைகளை வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டும், நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும், சமுதாயத்தினருக்கும் நபிமார்களுடைய படிப்பினைகள் நிறைந்த, நமக்கு நல்ல அறிவுரைகள் நிறைந்த சம்பவங்களாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ (صحيح البخاري 15 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا يَزِيدُ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي آخِرِ وِتْرِهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ (مسند أحمد 712 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/