HOME      Khutba      சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 3-4) | Tamil Bayan - 386   
 

சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 3-4) | Tamil Bayan - 386

           

சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 3-4) | Tamil Bayan - 386


சோதிக்கப்பட்ட இறைதூதர்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதிக்கப்பட்ட இறைதூதர்கள்  (அமர்வு 3-4)

வரிசை : 386

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 11-12-2015 | 29-02-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த வரலாறு 21 வது அத்தியாயத்தின் 83, 84 ஆவது வசனங்களுக்கு இமாம் தபரி பதிவுசெய்த விளக்க உரையில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறுஅல்லாஹ்வின் அச்சத்தைஉங்களுக்கும்எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை அஞ்சி வாழுமாறு எனக்கும்உங்களுக்கும் உபதேசித்தவனாகஇந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

தொடர்ந்து இரண்டு ஜும்ஆக்களில் அய்யூப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் பற்றி பார்த்து வந்தோம்.

அல்லாஹ்வுடைய இறைத்தூதர்களில் அதிகம் சோதிக்கப்பட்ட தூதர்களில் ஒரு தூதராகவும், அந்த சோதனையில் பொறுமையாக இருந்து வெற்றி கண்ட ஒரு தூதராகவும் அல்லாஹு தஆலா இவர்களைப் பற்றி நமக்கு பாடமாகபடிப்பினையாக சொல்கின்றான்.

அவர்களுடைய செல்வத்தை ஷைத்தான் அழித்தான். பிறகு, அவர்களுடைய குடும்பத்தார்களை அழித்தான். எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தார்கள்.

அல்லாஹ்விடத்தில் ஷைத்தான் கேட்கிறான்; அல்லாஹ்வே! இந்த செல்வத்தையும், குடும்பத்தையும்நீ அவர்களுக்கு திரும்ப கொடுப்பாய் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.

நீ என்னை அவருடைய உடல் உறுப்புகளின் மீது சாட்டினால் கண்டிப்பாக நான் அவரை சோதிக்கின்ற சோதனையில் அவன் உன்னை நிராகரித்து விடுவார். உனக்கு நன்றி கெட்டவராக ஆகிவிடுவார் என்றுஅல்லாஹ்விடத்தில் ஷைத்தான் கூறுகிறான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்; அப்படியே செய்து பார்! ஆனால், அவருடைய நாவின் மீதோ, அவருடைய உள்ளத்தின் மீதோ, அறிவின் மீதோஉனக்கு நான் எவ்விதமான அதிகாரத்தையும் தரமாட்டேன். என்று.

ஷைத்தான், அய்யூப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் ஸஜதாவில் இருந்தபோது அவர்களுடைய மூக்கின் வழியாக நுழைந்து அவர்களுடைய உடலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றான்.

முதலாவதாக, அவர்களுக்கு அரிப்பு நோயை ஏற்படுத்துகின்றான். கடுமையான சொறி போன்ற ஒரு அரிப்பு நோய்க்கு அவர்கள் ஆளாகின்றார்கள். உடலின் கடுமையான அந்த அரிப்பு ஏற்பட்ட காரணத்தால் சொரிந்து சொரிந்துஅவர்களுடைய நிறங்கள் எல்லாம் மாறி விடுகின்றன. அவர்களுடைய தோல்கள் எல்லாம் உரிந்து விடக்கூடிய அளவிற்கு அவர்களுடைய உடல் நிலை மாறிவிடுகிறது.

இப்படிப்பட்ட ஒரு நோய் ஏற்பட்ட போது அந்த ஊர் மக்கள் எல்லாம் அய்யூப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை ஊருக்கு வெளியில் ஒதுக்கி வைத்து விடுகின்றார்கள்.

அவர்களுடைய மனைவிமார்களில் எல்லோரும் இறந்து விடுகிறார்கள்.  ஒரு மனைவியைத் தவிர, பிள்ளைகளும் இறந்து விடுகிறார்கள். குடும்பத்தில் யாரும் இல்லை.

அய்யூப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு எஞ்சியிருந்த அந்த ஒரு மனைவி மட்டும்பணிவிடை செய்கிறார்கள்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் இப்படிப்பட்ட ஒரு சோதனையில் இருந்தபோது அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்த மூன்று மனிதர்கள் அவர்களை சந்திப்பதற்காக வருகின்றார்கள்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் இந்தச் சோதனையில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய மனைவியார், அல்லாஹ்விடத்தில்நீங்கள் துஆ செய்யலாமே? அல்லாஹ்விடத்தில், நீங்கள் நிவாரணத்தை தேடலாமே? என்று கூறிய போதெல்லாம் கூட,மனைவியே! நாம் எவ்வளவு காலம் அல்லாஹ்வுடைய நிஃமத்தை அனுபவித்து சுகபோகமாக வாழ்ந்திருக்கிறோம்? என்று கேட்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய நிஃமத்தை அனுபவித்தவர்களாக80ஆண்டுகள் நாம் சுகபோகமாக வாழ்ந்திருக்கிறோம்.அப்போது சொல்கிறார்கள்; ஏழு ஆண்டுகள் தானே ஆயிற்று, அதற்குள் நீ அவசரப்படுகிறாயா?

இந்த சோதனையிலும் கூட, அல்லாஹ் சுப்ஹானாஹு வதஆலா எனக்கு இதில் நன்மை வைத்திருப்பான். இந்த சோதனையிலிருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு மறுமையின் ஒரு நற்பாக்கியத்தை வைத்திருப்பான் என்று அமைதியாக அவர்கள் அல்லாஹ்வின் விதியை பொருந்திக் கொண்டவர்களாக இருந்தார்கள்.

பிறகு, இந்த மூன்று நபர்களுடைய சம்பவம் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு அய்யூப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறார்கள்.

அந்த மூன்று நபர்களுடைய சம்பவம் என்னவென்றால், அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்ப்பதற்காக அந்த 3நண்பர்களும் வருகிறார்கள்.

இவர்களைப் பார்த்து அந்த 3நண்பர்களும் ஆச்சரியப்படுகிறார்கள். அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறை பேசுகிறார்கள்.

இந்த சோதனையில் ஒரு நண்பன் எப்படி ஒரு நண்பனுக்கு இருக்க வேண்டுமோ அந்த முறையில் இல்லாமல் அவர்களை குறை பேசி குத்தலாக, பல இழிவான வார்த்தைகளால் பேசுகிறார்கள்.

அப்போதுதான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் பேச ஆரம்பிக்கிறார்கள். அல்லாஹ்வே! நீ என்னை எந்த நோக்கத்திற்காக படைத்திருக்கின்றாய். நீ என்னை நன்மையில்லை என்று வெறுத்திருந்தால்நீ என்னை படைத்திறாமல் இருந்திருக்கலாம்.

எனது தாய் வயிற்றில் நான் ஒரு கருவாக உதித்திராமல் இருந்திருக்கலாம் அல்லவா? நான் யாரென்று அறியப்பட்டிருக்கமாட்டேன்.

நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன காரியத்தை செய்து விட்டேன்? உனது கண்ணியத்திற்குரிய முகத்தை என்னை விட்டும் நீ திருப்பி கொண்டாயே!

அப்படிப்பட்ட ஒரு தவறை நான் செய்து அதற்காக இப்படி தண்டிக்கப் படுவதற்கு முன்பே நான் இறந்திருக்க வேண்டுமே!

ஏன் இந்த வார்த்தையை சொல்கிறார்கள் என்றால், சோதனையில் ஒரு பெரிய சோதனை என்னவென்றால், நண்பர்கள் இகழ்வது.

சோதனை ஒரு பெரிய விஷயம் அல்ல. சோதனையில் இருக்கின்ற ஒரு நண்பனை பார்த்து இன்னொரு நண்பன் இகழ்ச்சியாக பேசுவது பெரிய சோதனையாகும்.

இதுதான் உள்ளத்திற்கு மிகப்பெரிய ஒரு வேதனையை கொடுக்கக்கூடியது. அந்தக் காரியத்தை அந்த மூன்று பேர்களும் செய்கிறார்கள்.

அதற்கு பிறகு தான் அல்லாஹ்விடத்தில் இவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். முறையிட ஆரம்பிக்கிறார்கள்.

யா அல்லாஹ்! இந்த ஒரு நிகழ்விற்க்கு முன்னால் எனக்கு நீ மரணத்தை கொடுத்திருக்கலாம் அல்லவா? என் முன் சென்ற எனது சமுதாயத்தோடு நான் சென்று சேர்ந்திருப்பேனே!எனக்கு மரணம் மிக அழகான ஒன்றாக அமைந்திருக்குமே! நான் அரசனாக வேண்டும் என்று ஆசை எனக்கு இல்லை.

ஏன்? எத்தனையோ அரசர்கள் அவர்களை பாதுகாப்பதற்காக படை பட்டாங்கள், வாள்களை ஏந்திய எத்தனையோ ராணுவங்கள் எல்லாம் முயற்சி செய்து கூட கடைசியில் அந்த அரசர்கள் சாகவில்லையா? அவர்களும் செத்து மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறார்கள்.

பெரும்பெரும் செல்வந்தர்கள் செல்வங்களை சேர்த்தார்கள். ஆனால், அவர்களுடைய செல்வங்கள் எல்லாம் அவர்களை பாதுகாத்தனவா? அவர்களும் மண்ணுக்குள் சென்று விட்டார்களே!

ஆட்சி அதிகாரங்களை கொண்டு கோட்டைகொத்தளங்களை கட்டிய எத்தனையோ செல்வந்தர்கள் அவர்களுக்கு இந்த உலகம் நிரந்தரமாக இருந்ததா? அவர்களும் இறந்து விட்டார்களே!

யா அல்லாஹ்! எனக்கெல்லாம் இந்த ஆசை இல்லை. நான் என்ன தவறு செய்தேன். எனது தவறை எனக்கு சொல்வாயாக! என்று கேட்கிறார்கள்.

அப்போது அந்த மூன்று நபர்களில் ஒருவர் சொல்கிறார்; அய்யூபே! உனது காரியத்தை நாங்கள் சிந்தித்துப் பார்த்தபோது நாங்கள் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. உன்னிடத்தில் நாங்கள் ஏதாவது பேசினாலும், அந்தப் பேச்சினால் உனக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்றும்நாங்கள் ஆதரவு வைக்கவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சோதனையில் நீ இருக்கிறது ஏதோ ஒரு தவறின் காரணமாக தான் இருக்கும் என்பதாக சொல்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறார்கள்; நீ பல நல்ல அமல்களை செய்து கொண்டிருந்தாய், அதற்கு நாங்கள் அல்லாஹ்விடத்தில் உனக்கு நன்மை கிடைக்கும் என்று ஆதரவு வைத்தோம்.

ஆனால், எங்களுக்கு தெரியாமல் நீ பல காரியங்களை செய்திருப்பாய். அதனுடைய பலனைத் தான் நீ அனுபவிக்கிறாய் என்று சொல்லிவிட்டு சொல்கிறார்கள்;

மனிதன் எதை விதைத்தானோ அதைத்தான் அறுவடை செய்வான். எதை செய்தானோ அதற்குத்தான் அவன் கூலி கொடுக்கப்படுவான் என்று கூறிவிட்டு அவர் சொல்கிறார்.

நான் அல்லாஹ்விற்கு முன்னால் சாட்சி சொல்கிறேன்; அந்த அல்லாஹ்வின் மகத்துவத்தை, கண்ணியத்தையாராலும் அறிய முடியாது. அவனுடைய நிஃமத்துகளின் எண்ணிக்கையை யாராலும் எண்ண முடியாது. அவன்தான் மழையை இறக்கி இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறான். அவன்தான் பலவீனமானவர்களை உறுதிப்படுத்துகின்றான்.

அவனுடைய ஞானத்திற்கு முன்னால் ஞானவான்களின் ஞானமெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். அறிவாளிகளின் அறிவு எல்லாம் ஒன்று இல்லாமல் ஆகிவிடும். அவனுடைய அறிவுக்கு முன்னால் எல்லோரும் ஒன்றுமே கிடையாது.

யார் அல்லாஹ்வுடைய உதவியை ஆதரவு வைப்பாரோ அவர்தான் பலமானவர். யார் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பாரோ அவர்தான் பாதுகாக்கப்படுவார். அல்லாஹ்தான் காயத்தையும் கொடுக்கின்றான், காயத்திற்கான நிவாரணத்தையும் கொடுக்கின்றான். நோயையும் கொடுக்கின்றான், நோய்க்கான மருந்தையும் கொடுக்கின்றான்.

ஆகவே, அய்யூபே! நீ ஏதோ திறை மறைவுக்கு பின்னால் சில காரியங்களை செய்திருக்கலாம், அதற்கு தான் நீ இப்படி சோதிக்கப் படுகிறாய் என்பதாக அந்த மனிதர் சொல்கிறார்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அதற்கு பதில் அளிக்கிறார்கள்; இப்படி எல்லாம் மக்கள் என்னை பேசுவார்கள் என்பதற்காக தான் நான் அமைதியாக, என் நாவிற்கு நானே பூட்டுக் கொண்டிருந்தேன். இந்த ஒரு இக்கட்டான நிலைக்கு நான் வாய்மூடி அமைதியாக இருந்தேன்.

பிறகு சொல்கிறார்கள்; அல்லாஹ்வின் தண்டனை என் முகத்தின் ஒளியை போக்கி விட்டது. அவனது ஆற்றல் என் உடல் ஆற்றலை பிடுங்கிவிட்டது.

எப்படி இருந்தால் என்ன? நான்அல்லாஹ்வுடைய அடிமை. அவன் எனக்கு எதை விதித்தானோ அதுதான் எனக்கு ஏற்பட்டது. அவன் விதிக்காத ஒன்று எனக்கு ஏற்படவில்லை.

என்னால் எந்த ஒரு ஆற்றலையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. எந்த ஆற்றலை அவன் எனக்கு கொடுத்தானோஅதைத் தவிர.

என்ன அழகான வார்த்தையை சொல்கின்றார்கள்! சோதனையில் சோதிக்கப்படுகின்ற, சோதனையில் சிக்குண்ட ஒவ்வொரு அடியானும் சொல்ல வேண்டிய வார்த்தை.

இதுதான், அடியார்கள் அல்லாஹ்வை சார்ந்திருப்பது, அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து விடவேண்டும். அதனுடைய அடையாளம் நன்மை செய்ய வேண்டும். நன்மை செய்கிறோம், நன்மை செய்வோம், நன்மை செய்ததற்கு பிறகுசொல்வோம்.

யா அல்லாஹ்! நீ நாடி தான் இந்த நன்மையை செய்தேன். உன்னுடைய அருளால் இந்த நன்மையை செய்ததற்கு நான் நற்பாக்கியம் பெற்றேன். சோதனையில் பொறுமையாக இருந்தாலும், யா அல்லாஹ்! சோதனையை கொடுத்தவனும் நீ, இந்த சோதனையில் பொறுமையாக இருப்பதற்குரிய அருளை கொடுத்தவனும் நீ, இபாதத்துக்களை எனக்கு லேசாக்கி கொடுத்தவன் நீ என்று அல்லாஹ்வின் பக்கமே நன்மைகளை சேர்க்கக் கூடிய ஒரு நிலை, அடியானை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கக் கூடிய நிலை.

பிறகு அந்த மனிதர்களுக்கு சொல்லிக் காட்டினார்கள்:

எனது உடல் எல்லாம் இரும்பாகவும், என்னுடைய எலும்புகள் எல்லாம் இரும்பாகவும், என்னுடைய உடல் பித்தளையாகவும்இருந்து என்னுடைய இதயம் ஒரு கல்லாக இருந்திருக்குமேயானாலும் இப்போது நான் இருக்கின்ற இந்த வேதனையை என்னால் தாங்கியிருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு உடல் வேதனையிலே நான் இருக்கிறேன்.

எனினும், அல்லாஹ் தான் என்னை சோதித்தான். அவன் இந்த சோதனையிலிருந்து எனக்கு வெற்றியைத் தருவான். எனக்கு இந்த சோதனையை தாங்கிக் கொள்வதற்கு உண்டான ஆற்றலை அவன் கொடுப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்.

என்னை வெறுப்பூட்டுவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் என் புறத்திலிருந்து என் சார்பாக சில தர்மங்களை செய்து எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டாமா?

ஒரு நண்பன் இதைத்தானே செய்ய வேண்டும். அந்த தர்மத்தின் மூலமாக அல்லாஹ் எனக்கு பாதுகாப்பை கொடுக்கலாம், அல்லாஹ் என்னுடைய துன்பத்தை நீக்கலாம், ஆனால், நீங்களோ என்னை பற்றி குறை கூறுகிறீர்களே!

பிறகு சொன்னார்கள்; நான் விழித்தால் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த விழித்திருக்கின்ற நிலையில் எனக்கு ஏற்படக்கூடிய சோதனையிலிருந்து விடுதலை கிடைப்பதற்காக. ஆனால், நான் தூங்க ஆரம்பித்தாலோ எனது உயிரே பிரிந்து விடுகின்ற அளவிற்கு என்னுடைய உடல் வேதனையை நான் உணர்கிறேன்.

ஒரு வாய் உணவை கூட என்னால் எடுத்து சாப்பிட முடியவில்லை. என்னுடைய இரண்டு கால்களால் நான் நடந்து செல்ல முடியவில்லை. என்னுடைய உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும், உடல்களும், நரம்புகளும், பலவீனப்பட்டு விட்டன.

நான் சாப்பிடக் கூடிய ஒரு கவல உணவை கூட என்னுடைய உடலால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த உணவு அப்படியே வெளியே வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு வேதனையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தார்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். அழிந்து விட்டார்கள். என்னுடைய பெண் பிள்ளைகளில்இன்று ஒருவர் உயிரோடு இருந்தாலும் கூட எனக்கு அவர்கள் உதவி செய்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட வேதனைகளை எல்லாம் பல அழகிய வார்த்தைகளில் அவர்கள் சொல்லிவிட்டு, கடைசியில் இந்த விஷயங்களை முடிக்கும்போது அவர்கள் சொல்கிறார்கள்;

ஒரு மனிதன் அனுபவிக்கின்ற துன்பங்களில், சிரமங்களில், நோய் நொடிகளில், ஒரு இறுதி எல்லை ஒன்று இருக்குமேயானால்அவற்றைத்தான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய வார்த்தையிலிருந்து சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு அவர்கள் கூறுகிறார்கள்; இந்த துன்யாவின் வேதனை எல்லாம்ஒரு வேதனையே அல்ல.

கண்டிப்பாக இந்த தண்டனை, இந்த வேதனை நீங்கியே தீரும். இதற்கு ஒரு முடிவு இருக்கிறது. இந்த சோதனை யாருக்கு ஏற்பட்டதோ அவரிலிருந்து இந்த தண்டனை ஒரு நேரம் நீங்கியே தீரும்.

அவர்கள் இந்த தண்டனையிலிருந்து விடுதலை பெற்று, இந்த நோய்நொடியிலிருந்து விடுதலை பெற்று, அவர்களுக்கு மரணம் ஒன்று உண்டு. மரணத்தோடு எல்லா வலியும் முடிந்துவிடும். மரணத்தோடு எல்லா நோயும் முடிந்துவிடும். மரணத்திற்கு பிறகு எந்த நோயும், எந்த வலியும் தொடராது.

சொல்கிறார்கள்; சந்தோஷம், மகிழ்ச்சி, நற்பாக்கியம் உண்டாகட்டும்! யாருக்கு மறுமையில் ராஹத் கிடைத்ததோ, எந்த மறுமையில் யாரும் இறக்க மாட்டார்களோ, தங்களது இல்லங்களை விட்டு யாரும் திரும்ப மாட்டார்களோ, யாரும் நீங்க மாட்டார்களோ, அந்த மறுமை நாளில் யாருக்கு ஆரோக்கியம் ஈடேற்றம் கிடைத்ததோ அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும்.

கெட்டவன், துர்பாக்கியசாலி, தரித்திரம் பிடித்தவன்யார் தெரியுமா? யார் மறுமையில் கெட்டு விட்டானோ,யாருக்கு மறுமையில் தரித்திரம் பிடித்து விட்டதோ, யார் மறுமையில் துன்பத்திற்கு ஆளாகி விட்டார்களோஅவர்கள்தான்.

இதுதான் ஒரு முஃமினுடைய நிலை. அவன் சோதனையில் சோதிக்கப்படும் பொழுது, இந்த சோதனையை மறுமையோடு எப்போதும் அவன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நம்மால் சோதனையை ஏன் தாங்க முடியவில்லை? ஏழு ஆண்டுகள் அவர்கள் சொல்லால் வர்ணிக்க முடியாத சோதனையை அவர்கள் சிக்குண்டு இருந்தபோது கூட, அவர்கள் அமைதியாக இருந்தார்கள் என்றால், இந்த உலக வாழ்க்கை அழியக்கூடியது.

எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பம் எனது மரணத்தோடு முடிவடைந்துவிடும். ஆகிரத்தில் நான் வெற்றி உள்ளவனாக இருக்க வேண்டும். ஆகிரத்தில் எனக்கு உண்மையான மகிழ்ச்சி, அல்லாஹ்வின் பொருத்தம் ஏற்பட வேண்டும். அந்த ஆகிரத் மிக சமீபமாக இருக்கிறது.

இந்த உலக வாழ்க்கை மிக அற்பமான வாழ்க்கை என்ற உறுதி, நம்பிக்கை, அந்தக் கொள்கையின்,அந்த அசைக்க முடியாத எண்ணம்அவர்களிடத்தில் இருந்த காரணத்தால் இந்தத் துன்பத்தை எல்லாம் தாங்கக்கூடிய வலிமையை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருந்தான்.

இன்று, நாமோ இந்த துன்யாவைத்தான் பெரிதாக பார்க்கிறோம். துன்யாவின் நாட்களை பெரிதாக பார்க்கிறோம். இங்குள்ள வாழ்க்கையை நாம் பெரிதாக பார்க்கிறோம்.

எனவே, ஒரு சிறு நொடி கூட சோதனைகளை தாங்க முடியவில்லை. ஓரிரு நாட்கள் கூட சோதனைகளை தாங்கமுடியவில்லை. சாதாரண சில சோதனைகளை கூட பெரிய சோதனைகளாக எடுத்துக்கொண்டு பதறிப் போய் விடுகிறோம். பதட்டப்படுகிறோம், தடுமாறுகிறோம்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

இதைத்தான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த வாழ்க்கை நமக்கு பாடமாக தருகிறது.

பிறகு, இரண்டாமவர் சொல்கிறார்; இப்படி பேசுவதற்கு உனக்கு எவ்வளவு துணிவு இருக்கிறது?

(அவர்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? மக்கள் பார்ப்பதற்கு நன்மைகளை செய்தவர்களாகவும், மக்களை விட்டு மறைந்தால் பல கெட்ட காரியங்களை செய்தவராகவும்அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எண்ணிக் கொண்டார்கள்.)

எனவே, அய்யூப் நபி இடத்தில் கேட்கிறார்கள்; அய்யூப் அவர்களே! நீங்கள் என்ன வார்த்தையை பேசுகிறீர்கள்? இப்படி பேசுவதற்கு உங்களுக்கு என்ன துணிவு ஏற்பட்டுவிட்டது?

நீதவனாகிய அந்த அல்லாஹ் அநீதி செய்வான் என்று நீங்கள் சொல்கிறீர்களா? உன்னுடைய தவறுக்காக நீங்கள் அழுவீராக, உனது ரப்பிடத்தில் மன்னிப்புக் கேட்பீராக, அவன் உன் மீது இரக்கம் காட்டலாம். உமது பாவத்தை மன்னிக்கலாம்.

நீ உண்மையில் நல்லவனாக இருந்தால், இந்த சோதனைகளைமறுமையில் உனக்கு நன்மையாக அவன் ஆக்கலாம். உன்னுடைய உள்ளம் இறுகி இருக்குமேயானால்எங்களுடைய பேச்சு உனக்கு எந்த விதமான நற்பலனையும் கொடுக்காது.

பாலைவன காடுகளில் மழை பொழிந்தால்எப்படி மரங்களை முளைப்பிக்க முடியும்?

யார் ஒருவன் பலவீனமானவனை சார்ந்திருக்கிறானோ, அந்த பலவீனமானவன் எப்படி அவனைப் பாதுகாக்க முடியும்? யார் அந்த உண்மையான அரசனை அல்லாஹ்வை மறுத்தாரோ அந்த உண்மையான அரசன் அவனுடைய ஹக்கை எப்படி அவனுக்கு பூரணமாக கொடுப்பான்?

அல்லாஹ்விற்கு நன்றி கெட்ட தனமாக நீ பேசுகிறாயா? என்று குத்தலாக அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சொல்லி காட்டுகிறார்கள்.

அப்போது அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அதற்கு பதில் சொல்கிறார்கள்; கண்டிப்பாக எனக்கு தெரியும். அல்லாஹ் தான் உண்மையானவன். அடியான் அல்லாஹ்விடத்தில் எதிர்த்துப் பேசி அவன் வெற்றி கண்டு விட முடியாது. அல்லாஹ்விடத்தில் வாதிடுவதற்கு யாரால் முடியும்?

அவன்தான் வானங்களை தன்னுடைய பலத்தால், ஆற்றலால்உறுதிப்படுத்தி வைத்திருக்கிறான். வானத்தை விரித்தவனும் அவனே, நாடிய போது சுருட்டக் கூடியவனும் அவனே, பூமியை விரித்தவனும் அவனே, நாடும் பொழுது சுருட்டக் கூடியவனும் அவனே.

அவன்தான் மலைகளை நிறுத்தினான். அவன் நாடும் பொழுது அந்த மலைகளை அசைத்து சின்னாபின்னமாக்கக்கூடியவனும் அவன்.

நான் அவனிடத்தில் என்ன பேச முடியும்? அவன் மகத்தான அர்ஷ் உடைய இறைவன் ஆயிற்றே! அந்த மகத்தான அர்ஷ் உடைய இறைவனுக்கு முன்னால் நான் என்ன வார்த்தை சொல்ல முடியும்? அவன்தான் அந்த அர்ஷை சுற்றி ஏழு வானங்களையும், ஏழு பூமிகளையும்அவற்றில் உள்ள எல்லா படைப்புகளையும் படைத்தான்.

அவற்றைவிட அவன் மிகப்பெரியவன். கடல் இடத்தில் பேசினான், கடல் அவனுடைய பேச்சை புரிந்துகொண்டது. கடலுக்கு கட்டளையிட்டான், கடல் அவனுடைய கட்டளையை மீறவில்லை.

கடலில் உள்ள மீன்கள், ஆகாயத்தில் உள்ள பறவைகள்எல்லாம் அவனுடைய பேச்சைக் கேட்டு புரிந்து கொள்கின்றன.

அவன் இறந்தவர்களிடத்தில் பேசினால், அவனுடைய பேச்சு அந்த இறந்தவர்களை உயிர்பித்து விடும். கல்லிடத்தில் பேசினால் கல்லும் அவனுடைய பேச்சை புரிந்து கொண்டு அவனுக்கு கட்டுப்படும்.

இப்படிப்பட்ட ஒரு ரப்புக்கு முன்னால் துணிந்து நான் என்ன பேச்சை பேச முடியும்? அவனுக்கு முன்னால் பணிவதை தவிர எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?

அதற்கு மற்றொருவர் சொல்கிறார்; அய்யூப்! இவ்வளவு ஒரு மகத்தான பேச்சை பேசுகிறாயா? நீ பேசக்கூடிய இந்த பேச்சினால் உள்ளங்கள் எல்லாம் நடுங்குகின்றன. தோல்கள் எல்லாம், ரோமங்கள் எல்லாம்சிலிர்த்து விடுகின்றன.

ஆனாலும் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்று சொன்னால், உனக்கு ஏற்பட்ட இந்த சோதனை, நீ செய்யாத ஒரு பாவத்திற்காக ஏற்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. நீ ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறாய். அதற்கு தான் உனக்கு இப்படிப்பட்ட ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது. அந்த தவறின் காரணமாக தான் இந்த சோதனைக்கு நீ ஆளாக இருக்கிறாய்.

ஒருவேளை நீ இப்படி துணிவு கொண்டு பேசக்கூடிய பேச்சாகவும் அது இருந்திருக்கலாம்.

அய்யூபே! உன்னுடைய தவறு பெரியதாக இருக்கிறது. உன்னை தேடி வரக்கூடியவர்கள் அதிகமாக இருந்தார்கள். ஆனால், செல்வங்களை எல்லாம் நீ தடுத்துக் கொண்டாய், மக்களெல்லாம் ஆடை இல்லாமல் இருந்த பொழுது, நீ மட்டும் ஆடை அணிந்து கொண்டிருந்தாய்

மக்களெல்லாம் பசியாக இருந்த போது நீ சாப்பிட்டு வயிறாற வாழ்ந்து கொண்டிருந்தாய். பலவீனமானவர்கள் உனது வாசலுக்கு வரும் பொழுது உனது வாசல் கதவை அடைத்துக் கொண்டாய். பசித்தவர்களுக்கு நீ உணவளிக்கவில்லை. தேவை உள்ளவர்களுக்கு நீ உதவவில்லை.

நீ சில காரியங்களை வெளிப்படையாக செய்தாய். ஆனால், நீ மறைத்த பல காரியங்களின் காரணமாகத்தான் இந்த சோதனை உனக்கு ஏற்பட்டிருக்கிறது.

மறைவாக செய்கின்ற காரியங்களை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்றுஎண்ணி விட்டாயா?பூமிகள் மறைப்பதையும், இருள்கள் மறைப்பதையும் அவன் அறியக் கூடியவன் ஆயிற்றே‌! என்பதாக மீண்டும் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குத்தலாகவே அவர்கள் பேசுகிறார்கள்.

அப்போது அய்யூப் அலைஹிஸ்ஸலாம் பதில் சொல்கிறார்கள்: நான் பேசினால் அந்தப் பேச்சு உங்களுக்கு எந்தப் பலனையும் தருவதாக இல்லை‌. எவ்வளவு அழகிய அறிவுரைகளைஉபதேசங்களை சொல்கிறேன். எவ்வளவு பொறுமையாக நான் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்.

ஆனால், நீங்கள் புரிவதற்கு தயாராக இல்லை‌. மீண்டும்மீண்டும் என்னை பழித்துக் கொண்டே இருக்கிறீர்கள். நான் வாய் மூடி உங்களுக்கு பதில் தராமல் இருந்தாலும் என்னை நீங்கள் விடுவதாக இல்லை‌.

உண்மையில் நான் என்னுடைய தவறினால் எனது இறைவனை ரப்பை கோபப்படுத்தி இருக்கலாம். அந்த ரப்புதான் என்னை இப்போது இந்த சோதனைக்கு ஆளாக்கி இருக்கிறான்.

ஆனால், நீங்கள் சொன்னதைப் போன்று எந்த தவறையும் நான் செய்யவில்லை.

ஒரு பரதேசி, ஒரு அந்நியன் எனது ஊருக்கு வந்து விட்டால் அவனுக்கு நான் வீடாக இல்லையா?தேவை உள்ளவனுக்கு ஆறுதல் தரக்கூடியவனாக நான் இல்லையா?

ஒரு எத்தீமுக்கு நான் பொறுப்பாளனாக, அந்த எத்தீமை பாதுகாக்க கூடியவனாக நான் இருந்தது இல்லையா?

கைம்பெண்களுக்கு, கணவனை இழந்த அந்தப் பெண்களுக்குபாதுகாக்கக்கூடிய பராமரிக்க கூடியவனாக நான் இல்லையா?

ஒரு அந்நியனை எனது ஊரில் பார்த்து விட்டால்எனது வீட்டை அவனுடைய வீடாக நான் ஆக்கினேன்.

அவனுக்கு நான் ஆறுதலை கொடுத்தேன். எந்த ஒரு ஏழையை பார்த்து விட்டாலும், எனது செல்வத்தை நான் அவனுக்கு கொடுத்தேன்.

அவனுக்கு குடும்பம் இல்லை என்றால் எனது குடும்பத்தில் ஒருவராக நான் அவரை சேர்த்துக் கொண்டேன்.

ஒரு அனாதையை நான் ஊரில் பார்த்தால், அவருடைய தந்தையை இழந்ததற்கு பதிலாக நான் அவனை என்னுடைய மகனாக ஆக்கிக் கொண்டேன், அவனுக்கு தந்தையாக என்னை ஆக்கிக் கொண்டேன்.

உண்மையில் நான் ஒரு கேவலமான அடிமை தான். நான் எவ்வளவுதான் உபகாரம் நன்மைகள் செய்திருந்தாலும், அந்த உபகாரத்தை சொல்லிக் காட்டக் கூடிய அந்த அருகதை எனக்கு இல்லை.

உபகாரத்திற்கு எனக்கு தவ்பீக் கொடுத்தவன் அல்லாஹ். அந்த உபகாரத்தை செய்வதற்குண்டான ஆற்றல் என்னால் நான் ஏற்படுத்திக் கொண்டது அல்ல.

பிறகு சொல்கிறார்கள்; நான் தவறு செய்தால் எனது இறைவனின் கையில் என்னுடைய தண்டனை இருக்கிறது‌.

அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த சோதனை ஒரு மலையின் மீது இறங்கி இருக்குமேயானால், அந்த மலையினால் அந்த சோதனையை தாங்கி இருக்க முடியாது. என்னுடைய பலவீனம், இந்த சோதனை எப்படித் தாங்கும்?‌ என் இறைவா!

இந்த இடத்தில் இரண்டு விஷயங்களை பார்க்கிறோம். ஒன்று, அந்த நண்பர்கள் மீண்டும் மீண்டும் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்கள் செய்யாத ஒரு குற்றத்தை கொண்டு அவர்களிடத்தில் இல்லாத ஒரு தன்மையை கொண்டு குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

நீ திரைக்குப் பின்னால் ஒரு மாதிரியும், மக்களுக்கு முன்னால் ஒரு மாதிரியும் இருந்தாய் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் சொல்கிறார்கள்; நான் அப்படி இருந்தது இல்லை.‌ அல்லாஹ் அறிவான்.

பிறகு அவர்கள் சொல்கிறார்கள், நீ என்ன மாதிரியாக நடந்து கொண்டாய்? அல்லாஹ் செல்வத்தை கொடுத்தான், வசதியை கொடுத்தான், நல்ல ஒரு பெரிய வாழ்க்கை உனக்கு கொடுத்தான்.

ஆனால், நீ தேவை உள்ளவர்களுக்கு உதவவில்லை என்று சொன்னார்கள். அதை மறுத்த அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொல்லிக் காட்டி விட்டு பிறகு சொல்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லிக் காட்டுவதற்கு தகுதியானவராக இல்லை. நீங்கள் குறை சொல்கிறீர்கள் என்பதை மறுப்பதற்காக நான் சொல்கிறேன்.‌

உண்மையில் இந்த உபகாரத்தை நான் செய்திருந்தாலும் இந்த உபகாரமும் அல்லாஹ் எனக்கு கொடுத்ததால்தான் நான் செய்தேனே தவிர, என்னுடைய ஆற்றலால் என்னுடைய திறமையால் நான் செய்ததில்லை.

இன்று, இந்த ஒரு விஷயத்தை நாம் புரிய வேண்டும். இன்று பொதுவாக சோதனையில் சிக்கி தவிக்கும் போது நாம் என்ன செய்கிறோம்?‌

அல்லாஹ்விற்கு முன்னால் நாம் செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுகின்றோம். நம்முடைய திறமையால் அதை செய்ததை போன்று சொல்லி காட்டுகின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்விற்கு முன்னால் நன்மைகளை சொல்லி உதவி தேடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அல்லாஹ்விடத்தில் நன்மைகளை சொல்லி உதவி தேட வேண்டும்‌.

அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து உதவி தேட வேண்டும். தன்னுடைய நன்மையை அல்லாஹ்விற்கு முன்னால் நாம் பிரஸ்தாபித்து, அல்லாஹ்விற்கு முன்னால் சிலாகித்துச்சொல்லக் கூடிய அதிகாரமோ, அருகதையோ நமக்கு கிடையாது.

அல்லாஹ் சொல்கிறான்;

يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

(நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உம்மீது உபகாரம் செய்து விட்டதாக கருதுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் என்மீது உபகாரம் செய்து விட்டதாக எண்ணாதீர்கள். மாறாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதை நன்கறிந்து கொள்வீர்கள்).'' (அல்குர்ஆன் 49 : 17)

நாம் அடிமைகள்.அல்லாஹ்விற்கு முன்னால் நாம் எதைச் சொல்லிக் காட்ட முடியும்?அவன் தான் நம்மை படைத்தான். நன்மைகளுக்கு அவன் தான் நமக்கு வாய்ப்புளிக்க கூடியவன்‌. அல்லாஹ்விடத்தில் கெஞ்சுவதை தவிர,அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து மன்றாடுவதை தவிர,அவனுக்கு வேறு வழி இல்லை‌.

அதைத்தான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் இங்கே இவ்வளவு நன்மைகளை எல்லாம் சொல்லிக் காட்டியதற்கு பிறகு சொல்கிறார்கள்.

அல்லாஹ்வே!நான் செய்த இந்த நன்மைகளை எல்லாம் உனக்கு முன்னால் பிரஸ்தாபித்து சொல்லிக் காட்ட வேண்டுமென்று இல்லை.

நான் ஒரு இழிவான அடிமை.ஒரு நபி சொல்லக்கூடிய வார்த்தையை பாருங்கள்.

இங்குதான், சாதாரண மனிதர்களாகிய நாம் வித்தியாசப்படுகின்றோம். இல்ம் இல்லாத மக்கள் இங்கேதான் வித்தியாசப் படுகிறார்கள்.

இன்று மிகக் குறைவான அளவு நன்மைகளை செய்து கொண்டு, ஈமானில் மிக பலவீனமான ஒரு அளவை வைத்துக் கொண்டுநம்மில் பலர் பேசக்கூடிய பெருமையை பாருங்கள்.

எ கடந்த காலங்களின் ஏடுகள் எல்லாம் பாவங்களால் நிரம்பி இருக்க, எந்த பாவத்தையும் செய்யாதவரை போன்று அல்லாஹ்விடத்தில் துணிவு கொண்டுபேசக்கூடிய மக்கள் இன்று பலர் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

இறைத்தூதர்கள் ஒருக்காலும் அப்படி செய்தது கிடையாது. யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாருங்கள். அல்லாஹ்விடத்தில் எப்படி அவர்கள் பாதுகாப்பை தேடுகிறார்கள். எப்படி இரட்சிப்பை தேடுகின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 87)

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம், இப்படி இறைத்தூதர்கள் உடைய பிரார்த்தனைகளை எடுத்து பாருங்கள்.

அல்லாஹ்விற்கு முன்னால் தன்னை அவர்கள் எப்படி புரிந்தார்கள். தங்களுடைய வாழ்க்கையை எப்படி புரிந்தார்கள். தன்னுடைய நிலையை புரிந்தார்கள்.

இதைத்தான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு படிப்பினையாக எடுத்துக் காட்டுகிறது.

இவ்வளவு எல்லாம் நன்மைகளை செய்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்கள் சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால், இந்த சோதனையில் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? கண்டிப்பாக நான் ஒரு தவறு செய்திருக்கலாம். ஆனால், நீங்கள் சொல்லக்கூடிய தவறு அல்ல. ஏதோ ஒரு தவறை நான் செய்திருக்கலாம். அந்தத் தவறினால் அல்லாஹ் என்னை தண்டித்து இருக்கலாம்.

யா அல்லாஹ்! நான் ஒரு அடிமை. இந்த நன்மைகளை நான் செய்திருந்தாலும், இந்த நன்மைகளை எல்லாம் உன்னுடைய அருளால்தான் நான் செய்தேன் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அல்லாஹ் நாடினால் அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.

நாம் படிக்க வேண்டிய படிப்பினை பாடங்கள் இதுதான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அடியார்களை சோதிப்பான். சோதிக்காமல் அவன் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. சோதித்து தான் அவன் ஏற்றுக் கொள்வான். நம்முடைய இறை நம்பிக்கையை சோதிப்பான்.

செல்வத்தால் சோதிக்கலாம். தடுமாறுகிறானா என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏழ்மையில் சோதிப்பான். நோய் நொடிகளை கொண்டு சோதிக்கலாம். எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவராகவும், மறுமையின் வெற்றியை எதிர்பார்த்தவனாகவும்இருக்க வேண்டும்.

இதுதான் ஒரு அடியான் அல்லாஹ்விடத்தில் வெற்றியாளனாக ஆக்கக்கூடிய ஒன்று. ஒரு அடியானுடைய வெற்றி அவனுடைய சோதனையில் எதைக்கொண்டு என்றால், இவன் எந்த அளவிற்கு அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவனாக இருக்கின்றான், இவனுடைய உள்ளம் எந்த அளவு அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கிறது, அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டு இருக்கிறது, இதில் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வெற்றியை வைத்திருக்கிறான்.

சோதனையின் போது தடுமாறி விடக்கூடாது. அல்லாஹ்வை குறை சொல்லிவிடக் கூடாது. குற்றம் சொல்லி விடக்கூடாது.

இன்று, பொதுவாக என்ன நடக்கிறது? யா அல்லாஹ்! உனக்கு நான் என்ன அநியாயம் செய்தேன். எனக்கு நீ இப்படி அநியாயம் செய்கிறாயே.

அல்லாஹ் அநியாயம் செய்யக் கூடியவனா? அநியாயம் என்ற அந்த வார்த்தையை அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கலாமா?

சொல்வார்கள்; யா அல்லாஹ்! நான் உனக்கு என்ன குறை செய்தேன். எனக்கு நீ இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்து விட்டாயே!

அல்லாஹ்விற்கு யார் நன்மை செய்ய முடியும்? அவன் தான் நமக்கு நன்மைகளை செய்யக்கூடியவன். அவனுக்கு நாம் என்ன நன்மை செய்ய முடியும்? நாம் ஒரு நன்மையை செய்திருந்தால், அந்த நன்மை நமக்காக வேண்டி தான் நாம் செய்திருக்கிறோம்.

அல்லாஹ் சொல்கிறான்:

إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ

நீங்கள் நன்மை செய்தால் அந்த நன்மை உங்களுக்காக தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 17 : 7)

உங்களது தொழுகை, உங்களது நோன்பு, உங்களது ஜக்காத்து, இதனால் அல்லாஹ்வுடைய கண்ணியம் கூட போவதில்லை. அல்லாஹ்வுடைய அந்தஸ்து, அல்லாஹ்வுடைய மதிப்பு, கம்பீரம்கூட போவதில்லை. அல்லாஹ்வுடைய புகழ் கூட போவதில்லை. இந்த நன்மையினால் பயன் பெறக் கூடியவர்கள் நீங்கள்தான்.

நீங்கள் தவறு செய்தால், நீங்கள் குற்றம் இழைத்தால், நீங்கள் பாவம் செய்தால், அது உங்களுக்கு எதிராகத் தான் நீங்கள் செய்து கொள்கிறீர்கள்.

ஆகவே,கண்ணியத்திற்குரியவர்களே! எப்போதும் நம்முடைய நாவிற்கு, நம்முடைய கல்பிற்குதர்பியத்து கொடுத்தவர்களாக இருக்க வேண்டும். மனதில் தோன்ற கூடியதை எல்லாம் பேசி விடக்கூடாது. உள்ளத்தில் வரக்கூடியது நாம் எண்ணிவிடக் கூடாது. அதை நாம் செயல்படுத்தி விடக்கூடாது. அதை வார்த்தைகளால் சொல்லி விடக்கூடாது.

நான் சொல்லக்கூடிய வார்த்தை அல்லாஹ்வை திருப்திப் படுத்தக் கூடிய வார்த்தையா? என்று யோசித்து சொல்லவேண்டும். அல்லாஹ் பொருந்தி கொள்ளக்கூடிய வார்த்தையா? என்று யோசித்து பேச வேண்டும்.

எந்த ஒரு வார்த்தை அல்லாஹ்வை அதிருப்தி ஆக்கிவிடுமோ,அதற்குப் பின் செய்யக்கூடிய அமல்கள் பாழாகிவிடும். தவ்பா இல்லாமல் மரணித்துவிட்டால் முடிவு மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக ஆகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய சோதனைகளை லேசாக்குவானாக, நல்ல பொறுமையைஅல்லாஹ் நமக்கு கொடுப்பானாக!அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/