சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 2-4) | Tamil Bayan - 386
சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் - அமர்வு 2
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் - அமர்வு 2
வரிசை : 386
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 04-12-2015| 02-11-1437
بسم الله الرحمن الرّحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
இதில் வரக்கூடிய கருத்துக்கள் சம்பவங்கள் அனைத்தும் இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் விரிவுரையில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய அடியார்களை பாதுகாப்பானாக! நமது நாடும் நமது நகரமும் சந்திக்கின்ற இந்த பேராபத்திலிருந்து அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மையும் நமது மக்களையும் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வே! உனது கோபத்தைக் கொண்டு எங்களை அழித்து விடாதே! உன்னுடைய தண்டனையைக் கொண்டு எங்களை தண்டித்து விடாதே! எங்களுக்கும் எங்களது மக்களுக்கும் ஆஃபியத்தை -நற்சுகத்தை தருவாயாக! என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
கண்ணியத்திற்குரியவர்களே! சோதனைகளில் அதிகமாக சிக்கியவர்கள் இறைத்தூதர்கள் என்பதாக ஹதீஸின் வாயிலாக நாம் பார்த்தோம்.
அதே ஹதீஸினுடைய தொடரில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் :
அந்த இறைத் தூதருக்கு அடுத்ததாக நல்லவர்கள் சோதிக்கப்படுவார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ள நல்லவர்கள், அவர்களுக்கு அடுத்துள்ள நல்லவர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்குறிப்பிட்டு வந்துவிட்டு பிறகு கூறினார்கள்,
யாரிடத்தில் எந்தளவு மார்க்கப் பற்று இருக்குமோ அந்தளவு அவன் சோதிக்கப்படுவான்.
ஒருவருடைய மார்க்கப் பற்று அது அல்லாஹ்விற்காக வேண்டி இருக்கிறதா? அல்லது உலக லாபங்களுக்காக அல்லது உலக ஆதாயங்களுக்காக இருக்கிறதா? என்பதாக அவன் சோதிக்கப்பட்டு அவனுடைய இறை நம்பிக்கை பரிசுத்தமாக்கப்படும் என்ற ஹதீஸின் கருத்தை நாம் பார்த்தோம்.
அறிவிப்பாளர் : ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1400, 1473, 27079.
அந்த அடிப்படையில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எப்படி இறைத்தூதர்களை எல்லாவற்றிற்கும் முன் உதாரணமாக நமக்கு ஆக்கியிருக்கிறானோ அந்த வகையில் சோதனைகளின் விஷயத்தில் எப்படி பொறுமையாக இருக்க வேண்டும்?அல்லாஹ்விற்கு முன்னால் எப்படி பணிய வேண்டும்?எத்தகைய சோதனைகளெல்லாம் ஒரு அடியானுக்கு வரும்?
அந்த சோதனையின் போது அடியான் அல்லாஹ்விற்கு முன்னால் எப்படி தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டும்?அல்லாஹ்விற்கு முன்னால் எப்படி மன்றாட வேண்டும்?என்ற விஷயங்களை இறைத் தூதர்களின் வாயிலாகவே நமக்கு பாடங்களாகபடித்துத் தந்திருக்கிறான்.
ஐயூப் அலைஹிஸ்ஸலாம் இதற்கு மிக சிறந்த ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்கள் என்பதை அல்குர்ஆன் நமக்கு சொல்லிக் காட்டுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (83) فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ
இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.(அல்குர்ஆன் 21 : 83, 84)
வசனத்தின் கருத்து : ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவின் முடிவை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். அல்லாஹ்விடத்தில் அவர்கள் முறையிட்ட அந்த விதத்தை சொல்லிக் காட்டுகின்றான்.
அல்லாஹ்வே! நீ என்னை தண்டித்துவிட்டாய், நீ என்னை சோதித்துவிட்டாய், நீ என்னை சிரமத்தில் தள்ளிவிட்டாய் என்று.
அல்லாஹ்வின் மீது பழிப்போட்டவர்களாக, அல்லாஹ்வை குறைக்கூறியவர்களாக, அல்லாஹ்வை பழித்தவர்களாக அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிடவில்லை.
ஆம், நன்மைகளை அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்பது, இது அடியான் அல்லாஹ்வுடன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கமாகும். பிரச்சனைகளை, தீமைகளை, குறைகளை அடியான் தன் பக்கம் சேர்க்க வேண்டும்.
தனக்கு கிடைத்த செல்வம், சுகம், தனக்கு கிடைத்த வாழ்க்கையின் அருட்கொடைகள். யா அல்லாஹ்! உன் அருளால் கிடைத்தது என்று அடியான் அல்லாஹ்வை புகழ வேண்டும். தன்னிடத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் , நோய்நொடிகள், குழப்பங்கள் இவற்றைப் பற்றி அல்லாஹ்விடத்தில் முறையிடும் பொழுது யா அல்லாஹ்! என் குற்றத்தினால், என் பாவத்தினால் அல்லது என்னுடைய அலட்சியத்தினால், மறதியால் எனக்கு இது ஏற்பட்டிருக்கலாம்.
ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆ இதை தான் நமக்கு கற்பிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்;நாம் அவருக்கு பதில் தந்தோம். நாம் அவருடைய துஆவை ஏற்றுக் கொண்டோம்.
ஐயூப் அலைஹிஸ்ஸலாம்அவர்களுடைய அந்த துஆ எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அல்லாஹ்விடத்தில் அவர்கள் தனது பிரச்சனையை முன் வைத்தவர்களாக கைத்தூக்கினார்கள்.
மக்கள் கூறினார்கள், மனைவிகள் கூறினார்கள், பொறுமையாக இருந்தார்கள். என் ரப்பு என் நன்மைக்காக தான் என்னை சோதிக்கிறான். என்னை இத்தனை ஆண்டுகள் சுகமாக வைத்தானே, அந்த சுகமான ஆண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நான் நோய் நொடியில் இருக்கின்ற காலம் ஒரு அற்பமான காலம் தான்.
ஆனால், அதுவரைக்குமாவது பொறுக்க வேண்டாமா? நான் சுகமாக இருந்த காலம் வரைக்குமாவது என் ரப்பை புகழ்ந்துக் கொண்டு துதித்துக் கொண்டு நான் பொறுமையாக இருக்க வேண்டாமா? என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்கள் நல்ல எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அவசரப்படவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்;அவருடைய அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டோம். அவருடைய பிரச்சனையை நாம் தீர்த்து வைத்தோம்.
அவருக்கு அவருடைய மனைவிகளையும் அவருடைய குடும்பத்தார்களையும் அதுபோன்று மேலும் ஒரு தொகையினரையும் நாம் அவருக்கு கொடுத்தோம். இது நம் புறத்திலிருந்து கருணையாகவும், அல்லாஹ்வை வழிபட்டு வணங்கக்கூடிய மக்களுக்கு ஒரு அழகிய அறிவுரையாகவும் இருப்பதற்காக நாம் இப்படி செய்தோம். (அல்குர்ஆன் 21 : 83, 84)
இப்போது இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள் :
ஐயூப் அலைஹிஸ்ஸலாம் எப்படி சோதிக்கப்பட்டார்கள்? இந்த சோதனைக்கு பின்னால் நடந்த நிகழ்வு என்ன என்பதை வஹப் இப்னு முனப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் (முதலில் யூதபாதிரியராக, யூத பேரறிஞராக இருந்து அதற்கு பிறகு இஸ்லாமை ஏற்று, குர்ஆனை கற்று ஹதீஸை படித்து குர்ஆனின் விரிவுரையாளராக விளங்கிய இமாம் வஹப் இப்னு முனப்பிஹ் ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வாயிலாக இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மலக்குகளில் ஜிப்ரீலுக்கு கொடுத்திருக்க கூடிய அந்தஸ்தை வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு அந்தஸ்தை நெருக்கத்திலும் சிறப்பிலும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவர்கள் தான் அல்லாஹ்விடமிருந்து நேரடியாக செய்தியை பெறுவார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒரு அடியானை சிறப்பித்து சொல்வதென்றால் அந்த சிறப்பை முதலாவதாக ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடமிருந்து செவிமடுப்பார்கள். பிறகு மீக்காயில் செவிமடுப்பார்கள், பிறகு அர்ஷை சுற்றியுள்ள நெருக்கமான மலக்குகள் செவிமடுப்பார்கள்.
பிறகு அடுத்த நெருக்கமானர்கள். இப்படியாக வானத்தில் உள்ள மலக்குகளெல்லாம் அந்த அடியானின் சிறப்பை செவியேற்றதற்கு பிறகு அந்த அடியானுக்காக துஆ செய்வார்கள். பிறகு அந்த அடியானின் சிறப்பு பூமியில் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்படும். பூமியில் உள்ளவர்கள் அந்த அடியானுக்காக துஆ செய்வார்கள். வானத்தில் உள்ளவர்கள் அந்த அடியானுக்காக துஆ செய்வார்கள்.
இதை தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு ஸஹீஹான ஹதீஸ் நமக்கு அறிவிக்கிறது.
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் ஜிப்ரயீலை அழைப்பான். ஜிப்ரயீலே! நான் இவரை நேசித்து விட்டேன், நீ இவரை நேசிப்பாயாக! என்று. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறுவார்கள், அல்லாஹ்! நான் அவரை நேசிக்கிறேன் என்று.
பிறகு ஏழாவது வானத்திற்கு வந்து கூறுவார்கள்; ஏழாவது வானத்தின் வானவர்களே! அல்லாஹ் இந்த அடியாரை நேசிக்கிறான், நான் நேசிக்கும் படி கட்டளையிட்டிருக்கிறான். நான் அவரை நேசிக்கிறேன், நீங்களும் அவரை நேசியுங்கள் என்று. இப்படி ஒவ்வொரு வானத்திற்காக இறங்கி வந்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அறிவிப்பு செய்வார்கள்.
ஏழு வானங்களில் உள்ளவர்களும் அந்த அடியானை நேசிப்பார்கள். பிறகு அந்த அடியானுடைய நேசம் பூமியில் வைக்கப்படும். பூமியில் உள்ள நல்லவர்கள் அந்த அடியானை நேசிப்பார்கள். (1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6931.
இதை தொடர்ந்து இமாம் வஹப் இப்னு முனப்பிஹ் அறிவிக்கிறார்கள். இப்லீஸ் வானங்களில் ஏறி அல்லாஹ்விடத்தில் பேசிக் கொண்டிருந்தான்.எப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு அவன் சபிக்கப்பட்டானோ, ஆனால் வானத்திற்கு ஏறுவதை அவன் தடுக்கப்படவில்லை.
எப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் நான்காவது வானத்திற்கு உயர்த்தப்பட்டார்களோ, மூன்றாவது வானத்திற்கு மேல் ஏறுவதிலிருந்து ஜிப்ரயீல் தடுக்கப்படுகிறார்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் அனுப்பப்பட்டதற்கு பிறகு எந்த வானத்திற்கும் அவன் ஏறுவதிலிருந்து அவன் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விடுகிறான்,அவனும் அவனை சார்ந்தவர்களும்.
இதை தான் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சூரத்துல் ஜின்னில் குறிப்பிடுகிறான்:
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا
நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.(அல்குர்ஆன் 72 : 8)
என்று அந்த ஜின்கள் கூறியதை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொல்லிக்காட்டுகிறான்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி தூதராக அனுப்பப்பட்டதற்கு பிறகு வானத்தின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு விடுகின்றன.
இப்லீஸும் அவனுடைய ஷைத்தானிய கூட்டாளிகளும் எந்த வானத்திற்கும் ஏற முடியாது. எந்த வாசல்களிலும் அவர்கள் எதிர்பார்த்து அமர முடியாது.
இந்த இப்லீஸ்,ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருந்த அந்த நற்புகழ்ச்சியை,கண்ணியத்தை,ஜயூபை பற்றி அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மலக்குகளிடத்தில் பெருமையாக பேசிக் கொண்டிருந்ததை, அவர்களுக்காக ஸலவாத்து கூறி துஆ செய்து கொண்டிருந்ததை இப்லீஸ் செவியேற்ற பொழுது இப்லீஸிற்கு மிகப் பெரிய பொறாமை ஏற்பட்டது.
பொறாமை என்பதும் குரோதம் என்பதும் இப்லீஸுடைய இழி குணங்களில் ஒன்று. அப்போது அவன் அல்லாஹ்விற்கு முன்னால் வானத்தில் ஏறி அவன் கூறினான்.
என் இறைவா! நீ உன்னுடைய அடியான் ஐயூபை பார்த்தாய். நீ அவருக்கு அருட்கொடைகளை புரிந்திருக்கிறாய். எனவே, அவர் உனக்கு நன்றி செலுத்துகிறார். அவருக்கு நற்சுகத்தை நீ கொடுத்திருக்கிறாய். எனவே, அவர் உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், அவருக்கு அருட்கொடைகளையும், நற்சுகங்களையும் கொடுத்த நீ,அவருக்கு சோதனையை கொடுத்து பிரச்சனையை கொடுத்து சோதித்துப் பார்த்திருக்கிறாயா? அப்படி நீ சோதித்துப் பார்த்தால் அவர் உன்னை மறந்துவிடுவார், உன்னை நிராகரித்து விடுவார். உன்னை அல்லாத வேறு ஒருவரை வணங்கி விடுவார் என்று அல்லாஹ்விடத்தில் அவன் சவால் விடுகிறான்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா,நீ செல் நான் உன்னை அவருடைய செல்வத்தில் சாட்டிவிடுகிறேன். இந்த செல்வத்திற்காக வேண்டி தான் அவர் எனக்கு நன்றி செலுத்துகிறார் என்று சொல்கிறாய் அல்லவா, அந்த செல்வத்தில் நீ விரும்பியதை செய்து கொள்.
ஆனால், அவருடைய உடலை அல்லது அவருடைய அறிவை எந்த ஒன்றும் செய்வதற்கு உனக்கு ஒரு ஆற்றலும் கொடுக்கப்படாது.
அவருடைய செல்வத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இப்லீஸிற்கு கூறுகிறான்.
பூமிக்கு இறங்கிய அந்த இப்லீஸ் தன்னுடைய ஷைத்தானிய கூட்டாளிகளை ஒன்று சேர்க்கிறான். அப்பொழுது அவன் கூறுகிறான், என்னுடைய ஷைத்தானிய கூட்டாளிகளே! உங்களிடத்தில் என்ன ஆற்றல் இருக்கிறது? உங்களுடைய ஆற்றலைப் பற்றி எனக்கு விவரியுங்கள்.
நான் ஜயூபுடைய செல்வத்தில் சாட்டப்பட்டிருக்கிறேன். (செல்வத்தில் ஏற்படக்கூடிய ஒரு சோதனை,அதை ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அது ஒரு மிகப் பெரிய சோதனையாக இருக்கும்.)ஐயூபுடைய செல்வத்தை இப்போது நாம் அழிக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது? என்பதாக. ஷைத்தானுடைய வகைகளில் இஃப்ரீஜ் என்ற ஒரு வகை இருக்கிறது. மிகப் பெரிய அலிச்சாட்டிய ஒரு ஷைத்தானுடைய வகை.
அந்த இஃப்ரீஜ் கூறுகிறது, எனக்கு இருக்கக்கூடிய ஆற்றல், எறித்து விடக்கூடிய புயலாக மாறக்கூடிய ஆற்றல் என்னிடத்தில் இருக்கிறது. நீ கூறினால் ஐயூபுடைய செல்வத்தை எல்லாம் அழித்துவிட முடியும் என்று கூறினான். அதற்கு இப்லீஸ் கூறினான், அப்படியென்றால் நீ அதை செய் என்பதாக.
அந்த ஷைத்தான் எறிக்கக் கூடிய ஒரு புயலாக மாறி ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த கால்நடைகள் அவர்களுக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஏராளமான கால்நடைகளை கொடுத்திருந்தான். ஷாம் தேசத்தில் அவர்களை விட செல்வந்தர் வேறு யாரும் இருக்கவில்லை. ஒட்டகங்கள், ஆடுகள், மாடுகள், விவசாய நிலங்கள், தங்கம், வெள்ளி என்ற எல்லா செல்வங்களும் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த அடியாராக அவர்கள் இருந்தார்கள்.
அந்த ஷைத்தான் அவர்களுடைய ஒட்டகங்கள் அனைத்தையும் எறி புயலால் அழித்து வீசி எறிகின்றான். எல்லா ஒட்டகங்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன.
அடுத்து, இப்லீஸ் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வருகிறான். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அந்த நேரத்தில் அல்லாஹ்வை தொழுது கொண்டிருக்கிறார்கள். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் அவன் கேட்கிறான்;ஐயூப் உன்னுடைய இறைவன் என்ன செய்தான் என்று உனக்கு தெரியுமா ?
எந்த இறைவனை நீ போற்றி தொழுதுக் கொண்டிருக்கிறாயோ, அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறாயோ, அந்த இறைவன் உன்னுடைய ஒட்டகங்களையும், உன்னுடைய ஒட்டகத்தின் மேய்ப்பாளர்களையும் என்ன செய்தான் என்று தெரியுமா? அவருடைய ஒட்டகமும் அந்த ஒட்டகத்தின் மேய்ப்பாளர்களை எல்லாம் எறிக்கப்பட்டு விடுகிறான்.
ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அந்த மனிதனுடைய உருவத்தில் வந்து தன்னிடத்தில் கேட்டவரிடத்தில் கூறுகிறார்கள்; நீ எந்த செல்வத்தைப் பற்றி அவையெல்லாம் எறி புயலால் எறிக்கப்பட்டுவிட்டது என்று கூறுகிறாயோ அவையெல்லாம் அல்லாஹ்வுடைய செல்வங்கள்.
அவன் என்னிடத்தில் இரவலாக கொடுத்திருந்தான். அவன் தான் அந்த செல்வத்திற்கு உரிமையாளன். அவன் எப்பொழுது விரும்புகிறானோ அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வான்.
மிக நீண்ட காலமாகவே நானும் என்னுடைய செல்வமும் அழிந்துப் போவோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன் என்று கூறுகிறார்கள்.
அப்போது மனித தோற்றத்தில் வந்த இப்லீஸ் மேலும் கூறுகிறான்: உன்னுடைய இறைவன் என்ன செய்தான் தெரியுமா? வானத்திலிருந்து நெருப்பை இறக்கி உன்னுடைய ஒட்டகங்களையும் அந்த ஒட்டகத்தின் மேய்ப்பாளர்களையும் எறித்துவிட்டான். அதில் எதையும் விடவில்லை மக்களெல்லாம் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டு திகைத்தவர்களாக இருக்கிறார்கள்.
பலர் பேசிக் கொண்டார்கள்;ஐயூப் ஒரு ஏமாற்றத்தில் இருக்கக்கூடியவர். அவர் உண்மையில் அல்லாஹ்வை வணங்கவில்லை. மேலும் சிலர் கூறினார்கள்;ஐயூப் வணங்கக் கூடிய அந்த இறைவன் உண்மையானவனாக இருந்தால் அவனுடைய நேசருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையிலிருந்து அவரை பாதுகாத்திருப்பான்.
பிறகு கூறுனார்கள்;ஐயூபிற்கு இப்படிப்பட்ட சோதனையை ஏன் அவன் கொடுத்தான் என்றால், ஐயூபின் எதிரிகளை சந்தோஷப்படுத்துவதற்காக, அவனுடைய நண்பருக்கு திடுக்கத்தை கொடுப்பதற்காக.
இப்படியெல்லாம் மனித தோற்றத்தில் வந்த இப்லீஸ் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உள்ளங்களை தடுமாற வைப்பதற்காக பேசுகிறான்.
இப்படி தானே நம்மிலும் பலர் இருப்பார்கள். சோதனையின் போது மனிதனுக்கு ஆறுதல் கூறி அல்லாஹ்வின் பக்கம் திருப்பவதற்கு பதிலாக சிலர் கூறுவார்கள்; நீ தொழுத தொழுகை என்ன பிரயோஜனம்? நீ அல்லாஹ்விடத்தில் மன்றாடி என்ன பிரயோஜனம்? உன்னுடைய ஜகாத் என்ன செய்தது? உன்னுடைய ஸதகா என்ன செய்தது?
உன்னுடைய இறைவன் உன்னை கைவிட்டு விட்டானே என்று கூறுபவர்களையும் நம்மில் பார்க்கிறோம். இப்படி சோதனையின் போது அல்லாஹ்வை நினைவூட்டி அல்லாஹ்வின் பக்கம் திருப்பக்கூடியவர்கள் உண்மையான நண்பர்கள்.
அல்லாஹ்விடமிருந்து திசைத் திருப்பி உலக விஷயங்களை கொண்டு நமக்கு ஆசை அல்லது பயத்தை ஊட்டக்கூடியவர்கள் இப்லீஸுடைய தோழர்கள்.
அந்த நேரத்தில் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் கூறிய பதிலை பாருங்கள்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எனக்கு கொடுத்த பொழுதும் அவனை தான் நான் புகழ்ந்தேன்.
இப்போது அந்த செல்வத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டானா? இப்பொழுதும் நான் அவனை தானே புகழப் போகிறான் அல்ஹம்து லில்லாஹ்.
ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வார்த்தையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் மீது ஒரு அடியானுக்கு இருக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை 'யகீன்'.
அதை தான் முன்பு நாம் கூறினோம். ஒரு அடியான் நிஃமத்துகளில் இருக்கும் பொழுது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதை விட, ஒரு அடியான் சோதனையில் இருக்கும் பொழுது அல்லாஹ்வின் உண்மையான அடியானாக தன்னை காட்டிக் கொள்கிறானா? அல்லாஹ்விற்கு முன்னால் தான் உண்மையாளன் என்று உறுதி செய்கிறானா? இது மிகப் பெரிய சோதனை.
இந்த சோதனையில் தான் ஈமான் உறுதிப் பெறுகிறது, வலுப் பெறுகிறது. அல்லாஹ்விடத்தில் உண்மையான நெருக்கத்தை அவன் அடைகிறான். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அந்த இப்லீஸிற்கு இதை தான் பதிலாக சொல்கிறார்கள்.
பிறகு கூறினார்கள்: ஓ மனிதனே! நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்து வெளியேறும் பொழுது ஆடையில்லாமல் வெளியேறினேன். எனக்கு என்ன உரிமை இருந்தது ? நான் அணியக்கூடிய ஒரு ஆடைக்கு கூட நான் சொந்தக்காரனாக இல்லை. ஒரு நாள் வரும், இதுபோன்று ஆடையில்லாதவனாக தான் ஒரு துணியில் சுருட்டப்பட்டு பூமிக்குள் நான் திரும்ப அனுப்பப்படுவேன்.
இது ஒரு முஃமின் நினைக்க வேண்டிய ஒரு உண்மையான இறை நம்பிக்கை.
அல்லாஹ் கூறுகிறான்:
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى
இந்த மண்ணிலிருந்தே உங்களை நாம் படைத்தோம். இந்த மண்ணிற்கே நாம் உங்களை திரும்ப கொண்டு வருவோம். மீண்டும் ஒருமுறை இந்த மண்ணிலிருந்தே உங்களை எழுப்புவோம். (அல்குர்ஆன் 20 : 55)
அப்படி எழுப்பப்படக்கூடிய அந்த நாளில்,
وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ
கருத்து : உங்களை தாயின் வயிற்றிலிருந்து எப்படி படைத்தோமோ, அது போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆடையில்லாதவர்களாக, கத்னா செய்யப்படாதவர்களாக, காலணி இல்லாதவர்களாக நீங்கள் தன்னந்தனியாக உங்களது ரப்பிற்கு முன்னால் வந்து நிற்பீர்கள். (அல்குர்ஆன் 6 : 94)
நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் செல்வங்கள் வந்ததற்குப் பிறகு தங்களுடைய முந்திய நிலையை மறப்பவர்கள் தான் அதிகம். தனக்கு அருட்கொடைகளும், செல்வமும் குமிந்ததற்குப் பிறகு இவற்றை அல்லாஹ் கொடுத்தான் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இங்கே ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக நமக்கு பாடத்தை கூறுகிறான்.
இப்லீஸ் பல விஷயங்களை கூறி அவர்களை கோபப்படுத்தப் பார்க்கிறான், அவர்களை ஆத்திரப்படுத்தப் பார்க்கிறான். அவர்களுடைய வாயிலிருந்து அல்லாஹ்வை அதிருப்தி படுத்துவதற்கான சில விஷயங்கள் வந்துவிடுமா? என்பதற்காக பல சூழ்ச்சிகளை, தந்திரங்களை பொய்யாக பேசிப் பார்க்கிறான். அவர்கள் ஒவ்வொரு முறை அவன் கூறும்பொழுதும் அதற்கு தகுந்த அறிவுரையை தனக்கு தானே அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஒரு முஃமின் அப்படிதான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் தனக்கு தானே அவன் உபதேசித்துக் கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் தனது நல்ல நண்பர்களின் அறிவுரைகளை கேட்பவனாக இருக்க வேண்டும்.
இமாம் கூறினார்கள் : என் தாயின் வயிற்றிலிருந்து நான் ஆடையில்லாமல் வெளியேறினேன். ஆடையில்லாமல் தான் இந்த பூமிக்குள் நான் செல்லப் போகிறேன்.
நான் என்ன கொண்டு வந்தேன்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது? நாளை மறுமையில் நான் எழுப்பப்படும் பொழுது ஒரு ஆடைக்கே சொந்தமில்லாதவனாக தான் எழுப்பப்படுவேன்.
ஓ அடியானே! அல்லாஹ் தனது அமானிதத்தை தனது செல்வத்தை உனக்கு அமானிதமாக கொடுத்த பொழுதும் நீ பெருமையடிக்கக் கூடாது. நீ மமதை கொள்ளக் கூடாது. அந்த அமானிதத்தை அவன் கொடுத்த செல்வத்தை உன்னிடமிருந்து அவன் எடுத்துக் கொண்டாலும் நீ அதற்காக பதட்டப்பட்டு விடக்கூடாது.
நீ அதற்காக நிதானம் தவறிவிடக் கூடாது. அல்லாஹ் தான் உனக்கும் சொந்தக்காரன், உனக்கு கொடுத்ததற்கும் அவன் தான் சொந்தக்காரன், உரிமையாளன் நீ அல்ல. பிறகு கூறினார்கள்;
ஓ அடியானே! எனக்கு இந்த துக்க செய்தியை இப்படி சொல்லி வருகிறாயே, ஓ அடியானே! அல்லாஹ் நாடியிருந்தால் உனக்கும் இந்த சோதனையை அல்லாஹ் கொடுத்திருக்கலாம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உனக்கு அந்த சோதனையை கொடுக்கவில்லை. எனக்கு அந்த சோதனையை அல்லாஹ் கொடுத்தான். அந்த சோதனையின் மூலமாக எனக்கு அல்லாஹ் நற்கூலியை தருவான் என்று ஆதரவு வைக்கிறேன். என் உயிரே இந்த சோதனையில் சென்றிருந்தாலும் கூட நான் ஒரு ஷஹீதாக அல்லாஹ்விடத்தில் செல்வேன். பிறகு கூறினார்கள்;
நீ எனக்கு இந்த செய்தியை இப்படி எனக்கு சொல்ல வருகிறாய் அல்லவா. உன்னில் அல்லாஹ் தஆலா ஒரு தீமையை பார்த்திருக்கிறான். எனவே தான் உனக்கு அந்த சோதனையை அல்லாஹ் கொடுக்கவில்லை. ஒரு பெரிய திருகையில் தாணியங்கள் அறைக்கப்படும் பொழுது அந்த தாணியத்திலிருந்து ஒரு சில தாணியங்கள் அரைப்படாமல் அந்த திருகைக்கு நடுவில் உள்ள அச்சானியிலிருந்து தெரித்து வெளியே வந்துவிடும்.
எந்த தாணியங்கள் அறைக்கப்படுமோ அதனுடைய தொழி தனியாகவும் அதனுடைய விதை தனியாகவும் வந்து சமைப்பதற்காக அடியானிற்கு பயன்படுவதற்கு தகுதியானதாக வந்துவிடும். எந்த தாணியம் அரைபடாமல் அடிபட்டு வெளியே முழுமையாக தெரித்துவிடுகிறதோ அந்த தாணியம் பயன்பெறாமல் குப்பைகளில் ஒன்றாக ஆகிவிடும். ஆனால், பார்ப்பதற்கு பாதுகாப்பாக அது வெளியே வந்ததை போன்று இருக்கும்.
உள்ளே உள்ளவை அரைபட்டு அதனுடைய தொழி தனியாகவும், விதை தனியாகவும் வந்ததை போன்று, பிரச்சனையில் சிக்கியவரை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
யார் அல்லாஹ்வின் சோதனைகளில் சிக்குண்டு விட்டார்களோ அவர்கள் அல்லாஹ்வால் சுத்தப்படுத்தப்படுகிறார்கள்.
யார் ஆபத்துகளில் சிக்காமல் தான் தப்பித்துவிட்டோம் என்று நினைக்கிறார்களோ அவர்கள், மாவு அரைக்கக் கூடிய கருவி அரைக்கும் பொழுது அரைபடாமல் வெளியே வரக்கூடிய தாணியத்தைப் போன்று அது யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் சென்று விடுகிறது. எவ்வளவு அழகான ஹிக்மத்தை சொல்லிக்காட்டுகிறார்கள்.
சம்பவத்தின் தொடர்ச்சி : பிறகு இப்லீஸ் தன்னுடைய பட்டாளங்களை மீண்டும் ஒன்று சேர்க்கிறான். இப்பொழுது கூறுகிறான் ;உங்களிடத்தில் வேறு என்ன பலம் இருக்கிறது? என்று கூறுங்கள்.
அப்பொழுது அவனுடைய இஃப்ரீஜ், அல்லாஹ் மிகப் பெரிய ஒரு சப்தத்தை கொடுத்திருக்கிறான். என்னுடைய அந்த சப்தத்தை நான் வெளிப்படுத்தினால் மனிதனுடைய உடல் உயிரென்ன! அவனுடைய தலையில் இருக்கக் கூடிய மூளை கூட உறுகிவிடும். அப்படிப்பட்ட ஆற்றலை எனக்கு கொடுத்திருக்கிறான்.
இப்லீஸ் கூறுகிறான்;அப்படியா? ஐயூபுடைய ஆட்டு மந்தைகளையும், ஆட்டு மந்தைகளுடைய அந்த இடையர்களையும் நீ அழித்துக் காட்டு என்பதாக.
அந்த இஃப்ரீஜ் வருகிறான், அவன் போடக்கூடிய அந்த சப்தத்தில் ஆட்டு மந்தைகள் அனைத்தும் அந்த சப்தத்தால் அழிந்து விடுகின்றன. அந்த ஆட்டுடைய இடையர்களும் அழிந்து விடுகிறார்கள்.
பிறகு இப்லீஸ் வருகிறான், எல்லா இடையர்களுக்கும் ஒரு பொருப்பாளன் இருப்பான் அல்லவா, அந்த இடையனுடைய உருவத்தில் ஐயூபிடத்தில் வருகிறான்.
ஜயூப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவன் முந்தி கூறியதைப் போன்று எல்லா வார்த்தைகளையும் அப்படியே திரும்ப கூறுகிறான். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் மீண்டும் அதே பதிலை திரும்பக் கூறுகிறார்கள். பிறகு இப்லீஸ் தன்னுடைய நண்பர்களை ஒன்று சேர்க்கிறான். அப்போது கூறுகிறான்,நான் இவ்வளவெல்லாம் கூறியும் அந்த ஐயூபுடைய உள்ளத்தில் எந்த விதமான காயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
அடுத்து என்ன செய்யலாம்? என்பதாக திட்டம் போடுகிறார்கள். நான் மிகப் பெரிய ஒரு ஆற்றல் கொடுக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய இந்த ஆற்றலால் நான் ஒரு காற்றாக மாறி நான் அவருடைய எல்லா விளைச்சல்களையும் அழிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கிறது என்பதாகஇப்லீஸ் கூறுகிறான். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய எல்லா விவசாய நிலங்களையும் அவன் அழித்துவிடுகிறான்.
ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் ஷைத்தான் மீண்டும் மனித உருவத்தில் வருகிறான். அவன் கூறுகிறான்;ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் அவன் என்னென்ன வார்த்தைகளை முன்பு கூறி ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிகெடுக்க முயற்சித்தானோ அந்த எல்லா வார்த்தைகளையும் அவன் கூறுகிறான். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் மீண்டும் அவனுக்கு அதே பதிலை கூறுகிறார்கள்.
இப்படி அவர்களுடைய செல்வத்தில் எந்த விதமான ஒரு நாசத்தை, அழிவை கொடுத்தும் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உள்ளத்தை திருப்ப முடியவில்லை. அவர்களை அல்லாஹ்வை ஏசக்கூடியவர்களாகவோ, விதியை குறைக்கூறக் கூடியவர்களாகவோ ஆக்க முடியவில்லை. தான் தோற்றுவிட்டோம் என்று பார்த்த பொழுது அல்லாஹ்விடத்தில் மீண்டும் வருகிறான்.
அல்லாஹ்வே! நீ அவரை அவருடைய செல்வத்தில் என்னை சாட்டினாய். ஆனால், இந்த செல்வமெல்லாம் நீ கொடுத்தது, நீ நாடினால் திரும்ப கொடுப்பாய். கொடுத்ததை நீ நாடியபொழுது எடுப்பாய் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். நீ விரும்பினால் என்னை அவருடைய குழந்தைகளில் சாட்டு. எனக்கு நீ அவர்களுடைய குழந்தைகளில் அதிகாரத்தை கொடு.
குழந்தைகளில் வரக்கூடிய சோதனையை யாரும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதாக கூறிய பொழுது, அல்லாஹ் கூறுகிறான்; பரவாயில்லை செல். உன்னை அவருடைய குழந்தைகளின் மீது சாட்டிவிடுகிறேன். ஆனால், அவருடைய உள்ளத்தையோ, உடலையோ, அவருடைய அறிவையோ எதுவும் செய்யமுடியாது என்பதாக.
ஷைத்தான் வருகிறான், ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிள்ளைகள் இருக்கக்கூடிய வீடுகளில் வந்து அந்த வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்குகின்றான். அவர்களுடைய வீடுகள் இடிந்து விழுகின்றன. குழந்தைகள் அந்த வீடுகளின் இடிபாடுகளில் விழுந்து அவர்கள் இறக்கிறார்கள். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகப் பெரிய ஒரு சோதனைக்கு ஆழாகிறார்கள்.
அப்பொழுது ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் ஷைத்தான் மீண்டும் வருகிறான். அவன் எந்த உருவத்தில் வருகிறான் என்றால், அந்த குழந்தைகளுக்கு கல்வி போதித்துக் கொண்டிருந்த ஆசிரியருடைய உருவத்தில் தானும் அடிப்பட்டவனை போன்று வருகிறான்.
வந்து கூறிகிறான்;ஐயூபே! நான் எப்படி தப்பித்து வந்தேன் என்பதை நீ அறிந்திருந்தால், அது ஒரு பெரிய சோதனை தெரியுமா?
வானத்திலிருந்து எங்களுக்கு வந்த சோதனை. உனது குழந்தைகள் எப்படி வேதனைப்பட்டார்கள். வீடுகள் இடிந்து விழுந்து எப்படி நாசமாக்கப்பட்டார்கள் என்பதை பார். அவர்கள் தலைகுப்புற விழுந்து நாசமாக்கப்பட்டதை பார். அவர்களுடைய தலை உடைந்து கிடப்பதை பார். அவர்களுடைய உடல்கள் சிதறிக் கிடப்பதை பார் என்று அந்த கோரமான காட்சியை விவரித்துக் கொண்டேயிருக்கிறான்.
அப்பொழுது இதையெல்லாம் கேட்ட ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொஞ்ச நேரம் அவர்களுடைய உள்ளம் இளகிவிடுகிறது. அழுதார்கள், ஒரு பிடி மண்ணை எடுத்து தலையில் வைத்து விடுகிறார்கள். அப்பொழுது இப்லீஸ் இதை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். உடனே, ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நிலை மாறியதை நினைத்து உடனே அல்லாஹ்விடத்தில் வருகிறான்.
பார்த்தாயா? நான் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எப்படி மாற்றிவிட்டேன் என்று. உடனடியாக அந்த ஒரு சில நொடிகளில் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுதாரித்துக் கொள்கிறார்கள். ஆகா, நாம் மிகப் பெரிய ஒரு தவறு செய்துவிட்டோமே என்று. அல்லாஹ்விடம் தவ்பா செய்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் இஸ்திஃபார் செய்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய வானவர்கள் அல்லாஹ்விடத்திலிருந்து மனிதன் மீது விதிக்கப்பட்டிருந்த நன்மைகளை பதிவு செய்வதற்காக உள்ள வானவர்கள் ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் சென்று ஐயூபைப் பற்றிய குறையை சொல்வதற்கு முன்னால் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வானவர்கள் அவர்களுடைய தவ்பாவை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
இவற்றிற்கு மேலெல்லாம் அல்லாஹ் தஆலா அறிந்தவனாக இருக்கிறான். பதிவு செய்யக்கூடிய வானவர்கள் மறந்தாலும் கூட அல்லாஹ் மறக்காதவனாக இருக்கிறான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தவ்பா இஸ்திஃபாரை அங்கீகரித்துக் கொண்டான். அங்கே வந்து பார்த்தால் அதற்குள் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தவ்பா செய்துவிட்டார்கள்.
அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்ற செய்தியை அறிந்தவுடனே இப்லீஸ் மீண்டும் கேவலப்படுகிறான். அப்பொழுது இப்லீஸ் கூறுகிறான்;அல்லாஹ்வே! நீ அவருக்கு கொடுத்த அந்த ஈமான் அவருடைய குழந்தைகளில் ஏற்பட்ட ஆபத்தையும் அவர்களுடைய செல்வத்தில் ஏற்பட்ட ஆபத்தையும் அவருக்கு சாதாரணமானதாக, குறைவானதாக ஆக்கி விட்டது.
நீ அவருடைய செல்வத்தையும், குழந்தைகளையும் நீ திரும்ப கொடுப்பாய் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. நீ என்னை அவருடைய உடலில் சாட்டு. அந்த உடலில் அவர் சோதிக்கப்பட்டால் உன்னை அவர் மறந்துவிடலாம்,உன்னை அவர் மறுத்துவிடலாம் என்று கூறுகிறான்.
அப்பொழுது அல்லாஹ் கூறுகிறான்;அவருடைய உடலில் நான் உன்னை சாட்டுகின்றேன். ஆனால், அவருடைய நாவின் மீதோ, அவருடைய உள்ளத்தின் மீதோ, அவருடைய அறிவின் மீதோ நீ சாட்டப்படமாட்டாய். உனக்கு அவர்களை இந்த விஷயங்களில் வழிகெடுப்பதற்கு அதிகாரம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இன்னும் சம்பவத்துடைய தொடர்ச்சி இருக்கிறது. அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.
இப்படி ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சோதனை நமக்கு மிகப் பெரிய பாடமான ஒரு படிப்பினையான சோதனையாக இருக்கிறது. எல்லா காலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் மிகப் பெரிய ஒரு படிப்பினை, பாடம் நிறைந்த ஒரு சம்பவம் தான் ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சம்பவம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒரு நபியைப் பற்றி சோதனைக்கெல்லாம் முன் உதாரணமாக சொல்லிக்காட்டுகிறான் என்றால் எப்படிப்பட்ட ஒரு சோதனைக்கு அவர்கள் ஆளாகியிருப்பார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுவதாக ஹதீஸில் நாம் பார்க்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், நாளை மறுமையில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மூன்று நபிமார்களை கொண்டு வருவான். ஒரு நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இன்னொருவர் ஐயூப் அலைஹிஸ்ஸலாம். இந்த நபிமார்களை அல்லாஹ் எதற்கு கொண்டு வருவான் என்றால், செல்வத்தினால் தன்னை மறந்தவர்கள், ஆட்சியினால் தன்னை மறந்தவர்கள். அவர்களுக்கு முன் அல்லாஹ் கொண்டு வருவான்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இவர்களை விடவா உனக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது. சோதனையினால் அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொண்டு வருவான். இவரை விடவா உனக்கு பெரிய சோதனை ஏற்பட்டுவிட்டது? என்று கேட்பதற்காக.
கண்ணியத்திற்குரியவர்களே! அடியானுக்கு வழி, அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறொன்றும் இல்லை. அல்லாஹ்வை புகழ்ந்து, அல்லாஹ்விற்கு முன்னால் குணிந்து, பணிந்து அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்விடம் உதவி தேடுவதை தவிர, அல்லாஹ்விடம் இரட்சிப்பை தேடுவதை தவிர அடியார்களுக்கு வேறு வழியில்லை.
எனவே தான், ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவத்தை அல்லாஹ் கூறி முடிக்கும் பொழுது, என்னை வணங்க கூட மக்களுக்கு ஒரு அறிவுரையாக இருக்க வேண்டும். அவர்களது நோக்கம் தூய்மையான கலப்பற்ற முறையில் என்னை வணங்க வேண்டும் என்பதற்காக தானே தவிர, உலக மாற்றங்களுக்கு ஏற்ப என்னை வணங்குவதோ அல்லது கொடுக்கக்கூடுய வசதிகள், செல்வங்களுக்கு ஏற்ப வணங்குவதற்கோ கிடையாது. என்னை அவர்கள் வணங்க வேண்டும் எனக்காகவே.
எனது சோதனைகள் எல்லாவற்றிலும் தடுமாறாமல், நிதானம் குறையாமல் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எனவே, ஐயூபுடைய இந்த சம்பவத்தை அடியார்களுக்கு என்னை வணங்கக்கூடியவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக, ஒரு படிப்பினையாக ஆக்கியிருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அழகிய பொறுமையை நமக்கு தருவானாக! நமது ஈமானை கெடுக்கக்கூடிய, நம்முடைய ஈமானில் குழப்பங்களை ஏற்படத்தக்கூடிய சோதனைகளிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய தீனை நமக்கு எளிதாக்கி வைப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَحَبَّ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلَانًا فَأَحِبَّهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ ثُمَّ يُنَادِي جِبْرِيلُ فِي السَّمَاءِ إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلَانًا فَأَحِبُّوهُ فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ وَيُوضَعُ لَهُ الْقَبُولُ فِي أَهْلِ الْأَرْضِ (صحيح البخاري 6931 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/