சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 1-4) | Tamil Bayan - 386
சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதிக்கப்பட்ட இறைத்தூதர்கள் (அமர்வு 1-4)
வரிசை : 386
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 27-11-2015 | 12-04-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும்உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய சொர்க்கத்தை அடைவதற்குஅல்லாஹ்வின் பயத்தைத் தவிர,நல்ல அமல்களை தவிர வேறு வழியில்லை;
அல்லாஹ்வை பயந்து கொண்டவர்களை அல்லாஹ் கைவிடமாட்டான்; அவர்களை அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும்மேன்மக்களோடு சேர்ப்பான் என்ற செய்தியை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
உலக சோதனையில் இருந்து யாருமே தப்பமுடியாது. இந்த சோதனையிலிருந்து ஒருவர் தப்பிக்க முடியும் என்றால், இறைத்தூதர்கள் தப்பித்து இருப்பார்கள்.
சோதனை என்பது அல்லாஹ் சுபஹானஹு வதஆலா யாரை வெறுக்கிறானோ அவர்களுக்குத்தான் என்று இருக்குமேயானால், உலகத்தில் எல்லா காஃபிர்களும் சோதனைகளுக்கு ஆளாகி இருப்பார்கள். எல்லா பாவிகளும் உடனுக்குடனே சோதனைக்கு ஆளாகி இருப்பார்கள்.
உண்மையில் அப்படி அல்ல. நாம் குர்ஆன் விளக்கங்களை ஹதீஸ் உடைய விளக்கங்களை பார்ப்போமேயானால், அல்குர்ஆன் இந்த சோதனையை குறித்து நமக்கு மிகத் தெளிவாக வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சோதனையை குறித்து நமக்கு அழகிய அறிவுரைகள், உபதேசங்களை வழங்கி இருக்கிறார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சோதனையைப் பற்றி சொல்கிறான்:
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள்.(அல்குர்ஆன் 2 : 155-157)
வசனத்தின் விளக்கம் : அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை சோதிக்கின்ற அதே நேரத்தில், அந்த சோதனையில் நீங்கள் பொறுமையாக இருந்தால்உங்களுக்கு நற்செய்தி உண்டு என்று கூறுகிறான்.
அல்லாஹ்வுடைய மிகப்பெரிய ஆறுதலைப் பாருங்கள். சோதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த சோதனையில் பொறுமையாக இருந்தவர்களுக்குநபியே நற்செய்தி சொல்லுங்கள்.
அந்த பொறுமையாளர்கள் உடைய பண்பு என்ன?
எந்த ஒரு சோதனை அவர்களுக்கு ஏற்பட்டாலும் சரி, எப்படிப்பட்ட உருவத்தில்சோதனை வந்தாலும்சரி, அவர்கள் பொறுமை காப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வீட்டில் ஒரு நாள் விளக்கு அணைந்துவிட்டது. அப்போது அவர்கள் சொன்னார்கள்; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்பதாக.
மனைவியர்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! ஒரு விளக்கு அணைந்ததற்கா இதை கூறுகிறீர்கள்? என்று.
பார்க்க : அத்துர்ருல் மன்ஸூர் - இமாம் சுயூத்தி 1/380, குர்துபி 2 : 275
இப்படி நமக்கு ஒரு திடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, நம்முடைய மனதில் ஒரு திகிலை, சிரமத்தை, ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு நிலை ஏற்பட்டாலும்அதற்காகத்தான் அல்லாஹு தஆலா இந்த துஆவை கொடுத்திருக்கிறான்.
இன்னா லில்லாஹ் என்பது எவ்வளவு அழகிய துஆ பாருங்கள்!நாம் இந்த துஆவை, ஒருவர் இறந்த செய்தி கேட்டால் மட்டும்ஓதுவதற்காக உள்ள துஆ என்று விளங்கி வைத்திருக்கிறோம்.
இது வெறும் மரணம் சம்பவிக்கும் போது மட்டும், அந்த மரணித்தருடைய உறவினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவோ அல்லது நாம் ஆறுதல் பெறுவதற்காகவோ மட்டும் சொல்லப்பட்ட வாக்கியம் அல்ல.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயல்பாடு இதைத்தான் நமக்கு விளக்குகிறது.
இப்படி யார் அந்த முதல் கட்டத்திலேயேதனது மனதை திடப்படுத்திக் கொள்கிறார்களோ, தனது உள்ளத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்களோ, தனது இதயம் படபடப்பு அடைவதிலிருந்து, தனது இதயத்தில் குழப்பங்கள், சந்தேக நோய்கள்அடைவதிலிருந்து அந்த இதயத்தை ஆட்கொள்வதற்கு முன்பே யார் பாதுகாத்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து விசேஷமான அருள் இறங்கும்.
ஸலவாத் -ஒரு ஸலவாத் அல்ல, அல்லாஹ்வின் மீது விசேஷமான வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள், அல்லாஹ்வுடைய மிகப்பெரிய ஒரு விசேஷமான கருணை அவர் மீது இறங்கும்.
வரஹ்மதுன் -அல்லாஹ்வுடைய அருளும் அதற்கு அடுத்து அவனுக்கு கிடைக்கும். அவன் இழந்ததை விட சிறந்ததை கண்டிப்பாக பெற்றே தீருவான், அவன் பொறுமையாளர்களில் இருந்தால்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இதைத்தான் இங்கே சொல்லிக் காட்டுகின்றான். ஒருவன் சோதனையில் சிக்குண்டு தவிக்கும் போது, அல்லாஹ்விற்காக அவன் பொறுமையாக இருந்தால், ரப்புடைய பொருத்ததிற்காக அவன் பொறுமையாக இருந்தால், தன்னுடைய ரப்பின் புறத்தில் இருந்து வந்த சோதனை நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; அல்லாஹ் விரும்பாததை நான் சொல்ல மாட்டேன் என்று அவன் உறுதியாக இருக்கும் போது, கண்டிப்பாக ரப்புல் ஆலமீன் அவனிடத்திலிருந்து எதை சோதனைக்காக எடுத்தானோ, அதை விட சிறந்த ஒன்றை அவன் கொடுத்தே தீருவான்.
அது அவனுக்கு இம்மையில் சிறந்ததாக இருக்குமேயானால், இந்த துன்யாவில் அல்லாஹ் கொடுப்பான். இல்லையென்றால் கண்டிப்பாக ஆகிரத்தில் கொடுத்தே தீருவான். கூலியிலிருந்து ஒருக்காலும் அவன் நிராசை அடையவே மாட்டான்.
இவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள். இன்பத்தில் இருந்தாலும் என்ன செய்யவேண்டும், துன்பம் வந்தாலும் என்ன செய்ய வேண்டும், சுகம் ஏற்பட்டாலும் எப்படி நடக்க வேண்டும், துக்கத்திலும் எப்படி நடக்க வேண்டும், செல்வத்திலும் எப்படி வாழ வேண்டும், வறுமையிலும் எப்படி இருக்க வேண்டும்என்ற அல்லாஹ்வின் வழிகாட்டல் படி நடக்கக் கூடியவர்கள் இவர்கள் தான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த வழிகாட்டலை பாருங்கள்.
சோதனைகளால் ஏற்படக்கூடிய சிறப்புகளையும், அதனால் அல்லாஹ்விடம் தனக்கு கிடைக்கக்கூடிய நெருக்கத்தையும்ஒருவர் புரிவாரேயானால் அவர் அல்லாஹ்விடத்தில் நிஃமத்தை வேண்டி துஆவை செய்யமாட்டார்.
அல்லாஹ்விடத்தில் இந்த துன்யாவில் செல்வம் வேண்டும், வசதி வேண்டும், வாழ்க்கை வேண்டும் என்று அவர் துஆவே கேட்க மாட்டார்.
அதுபோன்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த துஆவாக இருக்கட்டும், அல்லது குர்ஆன் நமக்கு கற்ப்பித்து கொடுத்த துஆவாக இருக்கட்டும், அந்த துஆக்களில் அல்லாஹ்விடத்தில் செல்வத்தை கேளுங்கள், ஆட்சியை கேளுங்கள், வசதியான வாழ்க்கையை கேளுங்கள்என்று எங்கேயாவது இருக்கிறதா? இல்லாததை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பொதுவாக நம்முடைய துஆக்கள், யா அல்லாஹ்! செல்வத்தை கொடு, யா அல்லாஹ் காசை கொடு, யா அல்லாஹ் பரகத்தான வாழ்க்கையை கொடு என்று தான் இருக்கிறது.
பரக்கத்தான வாழ்க்கை என்றால் எது? ஈமானுடைய வாழ்க்கை பரக்கதான வாழ்க்கை. அமல் உடைய வாழ்க்கை பரக்கத்தான வாழ்க்கை. தக்வா உடைய வாழ்க்கை பரக்கத் உடைய வாழ்க்கை. பிறருக்கு கொடுக்கும்படி உள்ள மனதோடு சேர்ந்த வாழ்க்கை பரக்கத்தான வாழ்க்கை.
பரக்கத் என்பதற்குநாம் என்ன அர்த்தம் விளங்கி வைத்துள்ளோம்? பெட்டி நிறைய காசு இருக்கவேண்டும். கல்லா நிறைய நிரம்பி இருக்க வேண்டும். வீடு எல்லாம் செல்வமாக நிரம்பியிருக்க வேண்டும். இதைத்தான் பரகத்தாகவே விளங்கி வைத்திருக்கிறோம்.
இது பரக்கத் உடைய ஒரு அற்பமான அளவு.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒவ்வொரு தொழுகையிலும் நாம் துஆ செய்கிறோம்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
இறந்துவிட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, யா அல்லாஹ்! அவர்களை உன் பக்கம் மேலும் மேலும் நெருக்கமாக்கு, உன்னுடைய ரஹ்மத்துக்களை அவர்களுக்கு இறக்கு.
வாழும் போதும் இந்த துஆவை ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹ்விற்காக ஓதினார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழும் பொழுது இந்த துஆவை ஓதினார்கள்.
என்ன பரக்கத்? யா அல்லாஹ்! அவர்களுக்கு விசேஷமான ஈமானையும், இல்மையும், உன்னுடைய நெருக்கத்தையும்கொடுத்துக் கொண்டே இரு! எப்படி நபி இப்ராஹீமிற்க்கு கொடுத்துக் கொண்டே இருந்தாயோ, எப்படி நபி இப்ராஹிம் உடைய குடும்பத்தாருக்கு கொடுத்துக் கொண்டே இருந்தாயோ அதுபோன்று. (1)
அறிவிப்பாளர் : கஅப் இப்னு உஜ்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3370.
இதுதான் பரக்கத்தின் உண்மையான அர்த்தம். பரக்கத்தின் உண்மையான வெளிப்பாடு இது. அது நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்க வேண்டும்.
செல்வம் பரக்கத்தாக எப்போது ஆகும்? அது அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கினால், அந்த செல்வத்தால் ஏழைகளை நாம் நேசித்தால், அந்த செல்வத்தால் உறவுகளை நாம் சேர்த்தால், அந்த செல்வத்தால் அனாதைகளை நாம் ஆதரித்தால், அந்த செல்வத்தால் இல்லாதவர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், நாம் கொடுத்து உதவினால் அந்த செல்வம் பரக்கத்.
அப்படி இல்லை என்றால் அந்த செல்வம், ஹாருனுக்கு எப்படி தண்டனையாக மாறியதோ அது போன்று பெரிய தண்டனையாக மாறிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த வாழ்க்கையின் அறிவுரைகள் இதைத்தான் நமக்கு சொல்லிக் காட்டுகிறது.
அவர்கள் சோதனைகளில் பொறுமையாக இருப்பதற்குரிய வழிகாட்டுதலை சொன்னார்கள்.
" إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ، فَيَقُولُ اللَّهُ: ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ "
ஒரு அடியான் உடைய குழந்தை இறந்து விட்டால், அல்லாஹ் தன்னுடைய மலக்குகளை பார்த்து.சொல்கிறான்;
நீங்கள் என் அடியான் உடைய குழந்தையை அல்லவா கைப்பற்றி வந்துவிட்டீர்கள்.
(சொன்னவன் அவன் தான், கட்டளையிட்டவன் அவன்தான்,விதித்தவன் அவன் தான். ஆனால்,ரப்புல் ஆலமீன் உடைய செயல் இப்படித்தான். அவன் நமக்கு புரிய வைக்கிறான்.)
அந்த வானவர்கள் சொல்கிறார்கள்;இறைவா!ஆம்.
பிறகு கேட்கிறான்; அவனுடைய நெஞ்சத்தின் ஆசையை அல்லவா நீங்கள் பறித்து வந்து விட்டீர்கள். அப்பொழுது வானவர்கள் சொல்லுகிறார்கள்;இறைவா! ஆம் என்று.
அல்லாஹ் சொல்கிறான்; என்னுடைய அடியானின் அந்த குழந்தையை நீங்கள் உயிர் கைப்பற்றியபோது, என்னுடைய அந்த அடியான் என்ன கூறினான்.?
அந்த வானவர்கள் சொல்கிறார்கள்;
உன்னை புகழ்ந்தான். இன்னும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறினான்.
(சோதனையில் புகழக்கூடிய ஒரு கூட்டம் இருக்குமேயானால், அது முஃமின்களுடைய கூட்டம்தான். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, மறுமையை நம்பிக்கை கொண்டவர்களால் தான் சோதனையில் அல்லாஹ்வைப் புகழ முடியும்.
ஏன்? இந்த சோதனைக்குப் பிறகு எனக்கு கிடைக்கக் கூடிய நன்மை என்ன என்பதை குர்ஆனை நம்பிக்கை கொண்ட முஃமினுக்குத் தான் தெரியும்.முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பிக்கை கொண்ட முஃமினுக்குத் தான் தெரியும்.)
அல்லாஹ் சொல்வான்; எனது அடியானுக்காகசொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள். அந்த வீட்டுக்கு ‘பைத்துல் ஹம்து’ என்று பெயரிடுங்கள்.
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1021, தரம் : ஹசன் (அல்பானி)
அவன் தன்னுடைய ஒரு குழந்தையை இழந்தான். அவன் இந்த உலகத்தில் பொறுமையாக இருந்த காரணத்தால் அல்லாஹ் சொர்க்கத்தை தருகிறான்.
அது மட்டுமா? அந்த குழந்தையை அவனுக்கு சிபாரிசுக்கு ஆளாக ஆக்கி விடுகின்றான்.
யா அல்லாஹ்! என்னுடைய பெற்றோரை விட்டு உலகத்தில் என்னை பிரித்தாய், இந்த ஆகிரத்தில் நீ அவர்களை விட்டு என்னை பிரித்து விடாதே, என்று அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் கேட்கக்கூடிய குழந்தையாக அது இருக்கும். அல்லாஹ்விடத்தில் அந்த அடியானுக்கு சேப்பிப்பாக இருக்கும்.
பார்க்க : புகாரி, அல்முக்னி – இப்னு குதாமா 3/416.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
«مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ»
ஒரு முஸ்லிமுக்கு ஏற்படக்கூடிய சோர்வு, மனநெருக்கடி, கவலை,துக்கம்,இப்படி எந்த ஒரு மன உளைச்சலாகஇருந்தாலும் சரி, ஒரு முள் குத்துவதால் ஏற்பட்ட வலியினால் உள்ள தொந்தரவாக இருந்தாலும் சரியே, அல்லாஹ் சுபஹானஹு வதஆலா அவனுடைய பாவங்களை அதன் மூலமாக அகற்றி விடுகின்றான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5641.
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பி விட்டால், அவனுக்கு சொர்க்கத்தில் ஒரு தரஜாவை அல்லாஹ் முடிவு செய்துவிட்டால், அந்த தரஜாவுக்கு உண்டான அமல் அந்த அடியான் இடத்தில் இல்லை என்றால், அல்லாஹ் சுபஹானஹு வஆலா நாளை மறுமையில் இந்த அடியான் வரும்பொழுது அந்த தரஜாவிற்கு தகுதியான அடியானாக வரவேண்டும் என்பதற்காக,சோதனைகளை கொடுத்து இந்த துன்யாவில் இவனுடைய பாவங்களை கழுவிக் கொண்டே இருக்கிறான்.
கடைசியாக இவன் மரணிக்கும் போது முற்றிலும் பாவங்களிலிருந்து கழுவப்பட்டவனாகநாளை மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொர்க்கத்தில் இவனுக்கு என்று என்ன தரஜாவை முடிவு செய்தானோ, அந்த தரஜாவிற்கு தகுதி உள்ளவனாக இவன் அல்லாஹ்வை சந்திப்பான்.
இந்த துன்யாவில் அவனை பார்த்தவர்கள் என்ன எண்ணிக் கொண்டார்கள்? இவனுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? இவனுக்கு அல்லாஹ்விடத்தில் நெருக்கம் இல்லையா? இவன் அல்லாஹ்வை இப்படி வணங்குகிறானே? அல்லாஹ் இவனை கை விட்டுவிட்டானா?
இவனுடைய வணக்க வழிபாடுகள் இவனுக்கு பலன் தரவில்லையா? என்றெல்லாம் பார்ப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, இவனோ அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த தரஜாவை அடைகிறான்.
இதுதான் இந்த சோதனைகளில் பொறுமையாக இருக்கும் போதுஏற்படக்கூடிய ஒரு பெரிய நன்மை.
இமாம் இப்னுல் கைய்யூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள்:
ஒரு அடியானுக்கு இந்த துன்யாவில் மூன்று நிலைகள் இருக்கும். இந்த மூன்று நிலைகளில் இருந்து நான்காவது ஒரு நிலை இருக்காது. ஒவ்வொரு அடியானும் இந்த மூன்று நிலைகளில் ஒரு நிலையை சந்தித்தே ஆகவேண்டும்.
ஒன்று, அல்லாஹ் அவனுக்கு நிஃமத்தை கொடுத்திருப்பான். அவன் விரும்பியதை கொடுத்து இருப்பான். சொத்தில், சுகத்தில், மனைவி, மக்கள், பிள்ளைகள், குடும்பம், வாழ்க்கை என்று அவன் எதை விரும்புகிறானோ அவனுக்கு அல்லாஹ் அதை கொடுத்துக் கொண்டே இருப்பான்.
இரண்டாவது, இவன் விரும்பியதையெல்லாம் அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு, இவன் விரும்பாத நிலையில் அவனை வைத்து அல்லாஹ் சோதித்துக் கொண்டே இருப்பான்.
மூன்றாவது நிலை, அடியானை ஏதாவது பாவத்தில் சிக்க வைத்து விடுவான். அடியான் ஏதாவது பாவத்தில் விழுந்து விடுவான். இப்படி மூன்று நிலைகளில் ஒரு நிலையில் அடியான் கண்டிப்பாக இருப்பான்.
இந்த மூன்று நிலமைகளில் ஒரு அடியான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அடுத்துச் சொல்கின்றார்கள்:
முதலாவது நிலை, ஒரு அடியானுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நிஃமத்துக்களை கொடுக்கும்போது, அந்த அடியான் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவனாக அவன் ஆகிவிட்டான் என்றால், அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு கிடைக்கப்பட்ட நிஃமத்துக்கள் எல்லாம் அவனுக்கு நன்மைகளாக மாறிக்கொண்டே இருக்கும்.
இரண்டாவது சோதனை, இந்த அடியான் விரும்பியதையெல்லாம் அவனிடமிருந்து எடுத்துக்கொள்கிறான். அவனுடைய ஆரோக்கியத்தை எடுத்து விடுகிறான். சில நேரங்களில் குடும்பத்தில் இருந்து யாருக்காவது அல்லாஹ் மரணத்தை கொடுத்து விடுகின்றான்.
இப்படி அடியான் விரும்பாததை அவனுடைய குடும்பத்தில், அவனுடைய உயிரில், சொத்தில், சுகத்தில் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்ற சோதனையில் இதில் ஒரு அடியான் பொறுமையாக இருக்க வேண்டும்.
மூன்றாவது, அடியான் எப்போதாவது, ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறான். அப்படி தவறு நிகழ்ந்து விட்டால், அவன் அதற்காக பாவமன்னிப்பு தேடி விட வேண்டும். அதற்காக அவன் அல்லாஹ்வின் பக்கம் அழுது மன்னிப்பு கேட்டுஇஸ்திக்பார் செய்து விடவேண்டும்.
இந்த மூன்று நிலைகளில் அடியான் இந்த மூன்று தன்மைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த சோதனைகளில் அதிகமாக சிக்கியவர்கள் நபிமார்கள் தான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாழ்க்கையின் அந்த இறுதி கட்டத்தில் கடுமையான உடல் சூட்டுக்கு, அந்த காய்ச்சலுக்கு ஆளாகி அவர்கள் வேதனைப்பட்டு கொண்டிருந்தார்கள்.
குளிர்ந்த நீர் அவர்கள் மீது ஊற்றப்படுகிறது. அந்த நீரில் துணி நனைக்கப்பட்டு அவர்கள் மீது தடவப்படுகிறது.
அந்த நேரத்தில் நபியின் மனைவிமார்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். (2)
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5660.
அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா வருகிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கிறார்கள்.
இந்த உலகத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாக நேசித்தது,தனது மகள் பாத்திமாவை தான்.
பயணத்தில் சென்றாலும் அவர்களை சந்தித்து விட்டுத்தான் செல்வார்கள். மனைவிமார்கள் எல்லோரையும்சந்தித்து விட்டு,கடைசியாக சந்தித்து பேசிவிட்டு செல்பவர்கள் அன்னை பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.
அதுபோன்று பயணத்தை விட்டுத் திரும்பினால் மஸ்ஜிதில் தொழுது விட்டு, தனது மகள் பாத்திமாவை பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்தான் அவர்கள் மற்ற மனைவிகள் இடத்தில் செல்வார்கள்.
நூல் : ஹாகிம், எண் : 4737.
(இங்கே ஒன்றை கவனியுங்கள்! இப்படி உலகத்தில் எந்தத் தந்தையும் தனது மகள் யாரையும் நேசிக்க முடியாத அளவிற்கு நேசித்த அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகளை திருமணம் முடித்து கொடுத்து மருமகனின் வீட்டிற்கு அனுப்பினார்கள். தவிர, அவர்களை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு மருமகனை விலைக்கு வாங்கவில்லை.
இன்று பல முஸ்லிம் குடும்பத்தார்கள், பல முஸ்லிம் ஊரார்கள் செய்வது போன்று, என் பிள்ளைக்கு என்ன ஆயிடுமோ? என் பிள்ளை எப்படி வாழுமோ? என்ற பயத்தினால் வீட்டோடு வைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களே!
அது ஒரு காரணமாகவே இருக்குமேயானால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேறு யாருக்கும் அப்படி செய்து இருக்கவில்லை என்றாலும் கூட, கண்டிப்பாக பாத்திமாவுக்கு செய்து இருப்பார்கள்.
ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படிச் செய்யவில்லை.)
பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவ்வளவு விருப்பமானவர்கள்.
தன்னுடைய மரண நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவை கூப்பிட்டு ஒரு செய்தியைச் சொன்னார்கள்:
அந்த நேரத்தில் அழுதார்கள். பெரிய அழுகை அழுதார்கள்.
பிறகு, பாத்திமாவை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூப்பிட்டார்கள். காதில் ஒன்றை சொன்னார்கள். அழுதுகொண்டிருந்த பாத்திமா சிரித்து விடுகிறார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்றோ, அடுத்த நாளோ மரணித்து விடுகிறார்கள்.
ஒரு சில மாதங்கள் கழித்து,அன்னை ஆயிஷா பாத்திமாவை அழைக்கின்றார்கள். மகளே! உங்களது தந்தை நமது ரசூல் தனது மரண நேரத்தில் இருக்கும்பொழுது உங்களிடத்தில் ஒன்றைச் சொன்னார்கள், நீங்கள் தேம்பித் தேம்பி அழுதீர்கள். பிறகு ஒன்றை சொன்னார்கள், நீங்கள் சிரித்தீர்களே?
சொன்னார்கள்;முதலில், நான் இந்த நோயிலேயே இறந்துவிடுவேன் என்று சொன்னார்கள்.அதற்காக நான் அழுதேன். பிறகுநான் சிரித்தேன்.
காரணம்,எனது குடும்பத்தாரில்எனது உறவினரில் என்னை விரைவாக வந்து சந்திப்பவர் மகளே! நீங்கள் தான் என்று. (3)
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 4433.
பிலால் ரழியல்லாஹு அன்ஹு மரணப்படுக்கையில் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். விசித்திரமாக இருக்கிறது. மரணிக்கப் போகிறார். குடும்பம், பிள்ளை, கோத்திரம்எனஅனைத்தையும் விட்டும் பிரியப் போகிறீர். ஆனால் சிரிக்கின்றீர்களே? என்று கேட்டதற்கு பிலால் சொன்னார்கள்.
நாளை நான் என் நேசர்களை சந்திக்கப் போகிறேன். முஹம்மதையும்முஹம்மது உடைய தோழர்களையும் நான் சந்திக்கப் போகிறேன்.
நூல் : அஷ்ஷிஃபா – காழி இயாழ்
எந்த நேரத்தில் எதை நினைக்க வேண்டுமோஅதை நினைப்பது.
பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ்வை பார்த்து சொன்னார்கள்.
நபியே! நீங்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யலாம்அல்லவா? அல்லாஹ் உங்களுக்கு சுகம் கொடுப்பானே.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;பாத்திமா! மனிதர்களில் அதிகமாக கடுமையாக சோதிக்கப்படக் கூடியவர்கள் நபிமார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்கள்.அதற்குப் பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 27072.
நபிமார்கள் சோதிக்கப்பட்டதிலிருந்து ஒரு சிறு அளவு கூட நாம் சோதிக்கப் படவில்லை. நமது சோதனை நபிமார்களின் சோதனையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது ஒரு தூசுக்கு கூட சமமாகாது.
ஆனால்,நாமோ, நாம் பெரிய சோதனைக்கு ஆளாகி விட்டதைப் போன்று, பெரிய அளவில் நாம் பொறுமையாக இருப்பதைப் போன்று, அல்லாஹ் நம்மைக் கவனிக்காததை போன்று, அல்லாஹ் நம்மை கை விட்டதைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாஇப்படி பொறுமைக்கு என்றே ஒரு தூதரை உதாரணம் காட்டுகின்றான்.
அந்த நபியை இறுதித்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய உம்மத்துகளுக்கும்அல்லாஹ் உதாரணமாக காட்டுகின்றான்.
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ
ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர். (அல்குர்ஆன் 16 : 127)
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ
(நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. (அல்குர்ஆன் 46 : 35)
இந்த மருத்துவர், இந்த மருத்துவமனை, அல்லது இந்த செல்வந்தர், அல்லது இந்த மனிதர்எனக்குத் துணை செய்வார் என்று அதை எதிர்பார்த்து அல்ல.
இன்று, நாம் நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கும் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருப்பதை விட மருத்துவமனை மருத்துவர்கள் மீது அதிகம் நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஒரு ஏழைக்கு சிரமம் வந்துவிட்டால், செல்வந்தனாக இருக்கக்கூடிய எனது இந்த நண்பன் எனக்கு உதவி செய்வான் என்று பொறுமையாக இருப்பது அல்ல.
அல்லாஹ் சொல்கிறான் : நபியே பொறுமையாக இரு. அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக இரு. (அல்குர்ஆன் 16 : 127)
இறைத்தூதர்களுக்கு எல்லாம் உதாரணமாக அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொறுமைக்கு என்றே தேர்ந்தெடுத்து, பொறுமைக்கென்றே உதாரணமாக அவர்களை ஆக்கி வைத்திருக்கிறான்.
அல்லாஹ் அவர்களைப் பற்றி கூறுகிறான்:
وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ (41) ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ (42) وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ (43) وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ
(நபியே!) நம் அடியார் ஐயூபை நினைத்துப் பார்ப்பீராக. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது ‘‘நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறினார்.) (அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) ‘‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உமது) பானமுமாகும்'' (என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.) பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் போன்றவர்களையும் அவர்களுடன் கொடுத்து அருள் புரிந்தோம். ‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 38 : 41-44)
மேலும், அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (83) فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ
ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார். ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது.(அல்குர்ஆன் 21 : 83,84)
அல்லாஹ் ஒரு அடியானை சோதிக்கும் போது, அந்த சோதனையில் அவன் பொறுமையாக இருந்தால்,அவனிடமிருந்து எது பிடுங்கப்பட்டதோ, எது எடுக்கப்பட்டதோ, எது பறிக்கப்பட்டதோ, எதை அவன் இழந்தானோஅதை விட சிறந்ததை அவன் கண்டிப்பாக அடைந்தே தீருவான்.
அதை அந்த துன்யாவில் விரைவாக அவன் அடைவான். இல்லையென்றால் மறுமையில் கண்டிப்பாக அடைந்தே தீருவான்.
அல்லாஹ் அய்யூபை பற்றி சொல்கிறான்;அவருடைய பிரச்சினையை நீக்கினோம், அவருடைய துன்பத்தை நீக்கினோம், நோயை நீக்கினோம், அவருக்கு அவருடைய மனைவிமார்களை திரும்பக் கொடுத்தோம்.
இன்று நம்மில் பலர், துன்யாவிற்கு இபாதத் செய்து கொண்டிருக்கிறார்கள். தொழுபவர்கள் வாழ்க்கை நல்ல விதமாக நடந்து கொண்டிருக்கும் வரை தொழுகையில் பேணுதலாக இருப்பார்கள். வாழ்க்கையில் ஏதாவது சிரமம் ஏற்பட்டு விட்டால், எங்கேயாவது ஏதாவது அவருக்கு தொந்தரவு, பிரச்சினை, ஏதாவது இழப்புவந்து விட்டால்பள்ளியின் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்.
கேட்டால், எங்கங்க ஒரே பிரச்சனையா இருக்கு. தொழுது தொழுது ஒண்ணுமே ஆகல, இப்போ ரொம்ப பிரச்சினையா இருக்கு. அது எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா பள்ளிக்கு வந்துட்ரேன்.
உங்களது பிரச்சனை அல்லாஹ்வின் பக்கம் நெருங்காமல் எப்படி நீங்கள் அவற்றைத் தீர்க்க முடியும்? யார் தீர்ப்பார்கள் உங்களுக்கு?
அல்லாஹ் கேட்கிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 6 : 17)
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 10 : 107)
மனிதன்,தன்னுடைய திறமையின் மீது, தன்னுடைய அறிவின் மீதுநம்பிக்கை வைத்து அல்லாஹ்வை விட்டு ஓடி விடுகிறான். அல்லாஹ் சொல்கிறான்;ஓடு எங்கே வேண்டுமானாலும் ஓடு. கடைசியில் நீ என்னிடம் தான் வந்தாக வேண்டும்.
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்தப் பொறுமையைநமக்கு அல்லாஹ் உதாரணமாக சொல்லிக் காட்டுகின்றான் என்றால்,அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு என்ன ஏற்பட்டது?எப்படிப்பட்ட சோதனை அவர்களுக்கு ஏற்பட்டது?அந்த சோதனையில் எப்படி எல்லாம் அல்லாஹ்விடத்தில் அவர்கள் மன்றாடினார்கள்?
எப்படிப்பட்ட பிரார்த்தனைகளை எல்லாம் அல்லாஹ்விடத்தில் சொன்னார்கள்? அந்த சோதனையின் வகைகள் என்ன? எவ்வளவு காலம் அந்த சோதனை? அந்த சோதனையில் எப்படி அல்லாஹ்வின் பக்கம் அவர்கள் திரும்பியவர்களாக இருந்தார்கள்? என்பதை இன்ஷா அல்லாஹ் -அல்லாஹ் நாடினால் அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.
அல்லாஹ் நாடாமல் இந்த துன்யாவில் எதுவும் நடக்காது. இப்படிப்பட்ட ஒரு உறுதி, ஈமான் நமக்கு வந்தாக வேண்டும்.
அதற்கு, அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் நமக்கு பாடங்கள், படிப்பினைகள் இருக்கின்றன.
நபிமார்களை கொண்டும், நல்லவர்களைக் கொண்டும்பாடங்கள்படிப்பினைகள் பெற்று நல்ல மக்களாக அல்லாஹ் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا أَبُو فَرْوَةَ مُسْلِمُ بْنُ سَالِمٍ الهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى، سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ: لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، فَقَالَ: أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: بَلَى، فَأَهْدِهَا لِي، فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ [ص:147] عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (صحيح البخاري- 3370)
குறிப்பு 2)
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا، فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَلْ، إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ» فَقُلْتُ: ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَلْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى، مَرَضٌ فَمَا سِوَاهُ، إِلَّا حَطَّ اللَّهُ لَهُ سَيِّئَاتِهِ، كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا» (صحيح البخاري- 5660)
குறிப்பு 3)
حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ بْنِ جَمِيلٍ اللَّخْمِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، فَسَارَّهَا بِشَيْءٍ فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا فَسَارَّهَا بِشَيْءٍ فَضَحِكَتْ، فَسَأَلْنَا عَنْ ذَلِكَ فَقَالَتْ: «سَارَّنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُقْبَضُ فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ أَهْلِهِ يَتْبَعُهُ فَضَحِكْتُ» (صحيح البخاري- 4433)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/