HOME      Khutba      துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும் (அமர்வு 1/2) | Tamil Bayan - 385   
 

துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும் (அமர்வு 1/2) | Tamil Bayan - 385

           

துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும் (அமர்வு 1/2) | Tamil Bayan - 385


துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும்- அமர்வு 1

ஜுமுஆ குத்பா தலைப்பு : துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும்- அமர்வு 1

வரிசை : 385

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 13-11-2015| 01-02-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார், நேசத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

அல்லாஹ்வின் பயத்தை முன்னிறுத்தி வாழுமாறு அல்லாஹ்வின் பயத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

கண்ணியத்திற்குரியவர்களே! தொடர்ந்து சில ஜும்ஆக்களில் எதிரிகளின் மூலமாக முஸ்லிம்கள் சோதிக்கப்படும் பொழுது முஸ்லிம்களுடைய பண்பாடுகள், முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நாம் பார்த்து வந்தோம்.

அந்த தொடரில் தான் இன்றைய ஜும்ஆவிலும் அது குறித்த சில விஷயங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் நமக்கு அழகிய படிப்பினைகளை, பாடங்களை வைத்திருக்கிறான்.

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டதை போன்று, எதிரிகளின் மூலமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலை போன்று எந்த ஒரு இறைத் தூதருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதை அவர்களே கூற ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

சோதனைகளின் போது தான் நம்முடைய ஈமான் உறுதிப்படுத்தப்படுகிறது.நம்முடைய ஈமான் அதனுடைய உண்மை தரம் வெளிப்படுகிறது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இது குறித்து தெளிவான விளக்கத்தை நமக்கு கூறுகிறான் :

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?(அல்குர்ஆன் 3:142)

இந்த வசனம் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அச்சுறுத்தக் கூடிய வசனம் இது. அவனுடைய பொறுமையை அல்லாஹ் சோதிக்கின்றான் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக தன்னை அவன் இழப்பதற்காக தயாராக இருக்கின்றானா? அவனுடைய உயிரை, உடலை, பொருளை அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக கொடுப்பதற்காக அவனிடத்தில் தயார் நிலை இருக்கிறதா? என்பதை சோதிப்பதற்காக அல்லாஹ் சோதனைகளை கொடுக்கின்றான்.

ரப்புல் ஆலமீன் கண்டிப்பாக சோதித்தே தீருவான் :

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். (அல்குர்ஆன் 9:111)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல போர்களை சந்திக்காமல், அவர்களுடைய தோழர்கள் பல போர்களில் கொல்லப்படாமல் இந்த இஸ்லாமிய மார்க்கம் நிறுவப்படவில்லை.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா காஃபிர்களுடைய அந்த கொட்டத்தை, காஃபிர்களின் அலிச்சாட்டியத்தை, அநியாயங்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னும் அவர்களின் தோழர்களுடைய வாள்கலால் அல்லாஹ் அடக்கினான். அதை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தான்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த சோதனையை ஒரு காலத்திற்கு கொடுத்து இன்னொரு காலத்தில் அப்படியே நம்மை விட்டுவிடமாட்டான்.

சோதனை என்பது தொடர்ந்து வரக்கூடிய ஒன்று. ஒவ்வொரு காலத்திலும் முஃமின்களுக்கு சோதனை கண்டிப்பாக இருக்கிறது. ஏதோ அல்லாஹ்வுடைய தூதரும் அந்த தூதர்களுடைய தோழர்களும் சோதிக்கப்பட்டார்கள். சோதனையின் காலம் முடிந்துவிட்டது, இனி நமக்கு சோதனை இல்லை என்று எண்ணிவிடாதீர்கள். அவர்கள் எப்படி சோதிக்கப்பட்டார்களோ அது போன்று நாமும் சோதிக்கப்படுவோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மிகத் தெளிவாக கேட்கிறான் :

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ

 “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2, 3)

சோதனை என்பது முன்னோர்களுக்கு இருந்தது போன்று அதிலிருந்து சில சோதனைகளையாவது பின்னோர்கள் சந்திக்காத வரை அந்த முன்னோர்களோடு மறுமையில் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த சோதனையின் காலங்களில் ஒரு முஃமின் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையின் மூலமாக நமக்கு வழிகாட்டியிருக்கிறான்.

முஃமின்களை பொறுத்தவரை அவர்களுக்கு வழி நடத்தக்கூடிய வேதம் இருக்கிறது. அவர்களை வழி நடத்தக்கூடிய வழிகாட்டி தலைவர், தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருக்கிறார்கள்.

எனவே, முஃமின்கள் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை, பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தாங்கள் என்ன செய்வது? சோதனையின் காலங்களில், குழப்பங்களின் காலங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்று அவர்கள் பதட்டப்பட வேண்டியது கிடையாது.

ஏனென்றால், எந்த ஒரு சோதனை ஏற்பட்டாலும் அது போன்ற ஒரு சோதனை ரஸூலுல்லாஹ்வுடைய காலத்தில் ஏற்படாமல் இருந்திருக்காது.

இந்த உலகத்தில் இப்பொழுது மட்டுமல்ல, ரஸூலுல்லாஹ்விற்கு பிறகு நாம் வாழ்கின்ற இந்த காலத்திலும், இனி மறுமை நாள் வரக்கூடிய எல்லா காலங்களிலும் முஃமின்களுக்கு அவ்வப்போது ஏற்படக்கூடிய சோதனைகளோ, துன்பங்களோ, துயரங்களோ, எந்த விதமான பிரச்சனைகளோ அது போன்ற ஒரு பிரச்சனை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ அவர்களுடைய தோழர்களுக்கோ ஏற்படாமல் இல்லை.

ஆகவே, முஃமின்களை பொறுத்தவரை எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற தெளிவான வழிகாட்டுதலை பெற்றவர்கள்.

நமக்கு நம்முடைய உணர்ச்சிகள் வழிகாட்டக்கூடியவை அல்ல. முஃமின்களுக்கு அவர்களுடைய உணர்ச்சிகளோ, அவர்களுடைய மன இச்சைகளோ, விருப்பங்களோ வழிகாட்டக்கூடியவை அல்ல.

எவ்வளவு தெளிவாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான் :

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا

மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம். (அல்குர்ஆன் 5:2)

வசனத்தின் கருத்து : எந்த கஃபாவை தவ்ஹீது வாதிகளுக்காக, ஏகத்துவ வாதிகளுக்காக, அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற முஃமின்களுக்காக, முஃமின்களுடைய வழிகாட்டி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் கட்டியெழுப்பினார்களோ அந்த முஃமின்களுடைய வழிபாட்டுத் தளமாகிய அல்லாஹ்வின் வீடாகிய அந்த கஃபாவில் உங்களை வணங்க விடாமல், அந்த கஃபாவிற்கு உங்களை வரவிடாமல் அந்த இறைமறுப்பாளர்கள் உங்களை தடுத்தார்களே, அதனால் உங்களுக்கு ஏற்பட்ட கோபம், அதனால் அவர்கள் மீது உங்களுக்கு ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வு உங்களை வரம்பு மீற தூண்டிவிட வேண்டாம்.

உங்களுடைய கோபத்தை, உங்களுடைய பழிவாங்கும் உணர்வை தவறான வழியில் வழி நடத்திவிட வேண்டாம். வரம்பு மீறி விட வேண்டாம், நீதமாகவே நடந்துக் கொள்ளுங்கள்.

போர் முனையில் பழிவாங்கப்படுவதற்கு தகுதியான மக்கள் அவர்கள். குற்றமிழைத்தவர்கள், இறைத்தூதர்களை காயப்படுத்தியவர்கள், இறைத்தூதர்கள் அந்த பள்ளியில் தொழ விடாமல் தடுத்து விரட்டியவர்கள்.

அப்படிப்பட்டவர்களோடு நீங்கள் போரை சந்தித்தாலும் கூட கோபத்தின் அடிப்படையில், ஆவேசத்தின் அடிப்படையில் நீங்கள் இறங்கிவிடாதீர்கள். நீதமாக போரை நடத்துங்கள், நீதமான முறையில் நீங்கள் எதிரிகளை நேர் கொள்ளுங்கள். அல்லாஹ் தஆலா நீதவான்களை தான் விரும்புகிறான்.

எவ்வளவு வழிகாட்டுதல் பாருங்கள்.!

நம்முடைய உணர்வுகளுக்கும் அல்லாஹ் வழிகாட்டுகிறான். நம்முடைய செயல்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுவதை போன்று நம்முடைய உணர்வுகளுக்கும் அவன் வழி காட்டுகிறான்.

அவனுடைய கோபம், அவனுடைய ஆவேசம் அவனை தவறான பாதையில் வழி நடத்திவிடக் கூடாது.

ஒரு நேரத்தில் சில தோழர்கள் ஒரு போரில் கொஞ்சம் ஆவேசத்தோடு நடந்துக் கொண்டு அவர்கள் திரும்ப வந்தார்கள். அந்த தோழர்களை பார்த்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

உங்களுடைய செயலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை,அல்லாஹ்விடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன். நீங்கள் செய்ததை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.உங்களுடைய செயலிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று கூறுகிறார்கள். (1)

போருக்காக செல்கிறார்கள், அங்கே எதிரிகளெல்லாம் ஓடி விட ஒரு சிலர் மட்டும் தங்களுடைய பொருள்களோடு அங்கே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். தாங்கள் முஸ்லிம்கள் என்று எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் அந்த தோழர்கள் அவர்களை பிடித்த பொழுது அவர்கள் ஸலாம் கூறினார்கள். நாங்கள் மார்க்கம் மாறியிருந்தோம், நாங்கள் எங்கள் மதத்தை மாற்றியிருந்தோம் என்று கூறினார்கள். முஸ்லிம்கள் என்று சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை.

அந்த நேரத்தில் போரின் தளபதியாக இருந்தவர் தங்களை பாதுகாப்பதற்காக தான் இப்படி இவர்கள் கூறினார்கள். இவர்கள் உண்மையில் முஸ்லிம்களாக இல்லை என்று கணித்து அவரை கொன்று விடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதருக்கு இந்த செய்தி தெறிந்த பொழுது கூறினார்கள், உங்களுடைய இந்த செயலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை, அல்லாஹ்விடத்தில் நான் பாதுகாவல் கேடுகிறேன். உங்களுடைய செயலிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

அப்பொழுது கேட்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! அவர் தன்னை பாதுகாப்பதற்காக கடைசி நேரத்தில் இந்த வார்த்தையை கூறியிருக்கலாம் அல்லவா?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழரிடத்தில் கேட்கிறார்கள் :

அவர் எந்த நோக்கத்தில் கூறினார் என்று அவருடைய உள்ளத்தில் நெஞ்சை பிளந்து பார்த்திருக்கலாம் அல்லவா!

அவருடைய சொல்லை நீ பார்க்க வேண்டும். அவருடைய நோக்கத்தை பற்றி அவருடைய எண்ணத்தை பற்றி உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடிந்து கொண்டார்கள். (1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 3994, 4339, 7189

ஆகவே, முஸ்லிம்கள் என்றால் அப்படி தான்.அவர்கள் கட்டுப்படக் கூடியவர்கள். முஸ்லிம் என்பதற்குரிய அர்த்தமே அவர்கள் தான்தோன்றித் தனமான மிருகத் தனமான மக்கள் அல்ல.

போரில் இருந்தாலும் கூட,தங்களுடைய கோபத்தையும் தங்களுடைய பழி வாங்கும் உணர்வையும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு ஈமானிய ஆற்றல் வலிமைமிக்கவர்கள் அவர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

அவர்கள் இந்த பூமியில் பழிவாங்கியிருக்க வேண்டுமென்றால், தங்களது பாசத்திற்குரிய,  நேசத்திற்குரிய தோழர் மட்டுமல்ல, தங்களுடைய சிறிய தந்தை, தன்னோடு பால் குடித்த பால்குடி சகோதரர் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு, எந்த ஒரு ஜனாஸாவையும் பார்த்து ஷஹீதையும் பார்த்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வளவு தேம்பி தேம்பி அவர்கள் அழுததில்லை, ஹம்ஸாவிற்கு அழுதது போன்று.

எல்லா தோழர்களுக்கும் நான்கு தக்பீர்களை கொண்டு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் என்றால்,ஹம்ஸாவிற்கு ஐந்து கூறுகிறார்கள், ஆறு கூறுகிறார்கள், ஏழு தக்பீர்கள் கூறுகிறார்கள்.

அவ்வளவு நேரம் துஆ கேட்கிறார்கள். அந்த அளவு ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் பாதையில் உஹது மைதானத்தில் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தி அல்லாஹ்வுடைய தூதரையும் முஸ்லிம்களையும் பாதுகாத்தார்கள்.

அதற்கு அந்த நேரத்தில் அவர்கள் வஹ்ஷினால் வஞ்சமாக கொல்லப்பட்டு,சாதாரண கொலை அல்ல,படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய கண், காது, மூக்கு சிதைக்கப்படுகிறது. வெளி உறுப்புகள் மட்டுமல்ல நெஞ்சு பிளக்கப்பட்டு இருதயம் வெளியே எடுத்து கடித்து துப்பப்படுகிறது. இப்படிப்பட்ட கோரமான ஒரு கொலை ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஏற்பட்டது.

அல்லாஹ்வுடைய தூதர் பழிவாங்கி இருக்க வேண்டுமென்றால், பழிவாங்கும் உணர்வு தான் முஸ்லிம்களுடைய உணர்வு என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹம்ஸாவை கொன்றவர்களை பழி தீர்த்திருப்பார்கள். ஹம்ஸாவை கொன்ற வஹ்ஷியை அல்லாஹ்வுடைய தூதர் மன்னித்தார்கள்.

பார்க்க : தாரீக் தபரி 2/532

ஹம்ஸாமை கொல்வதற்கு தூண்டினாரே ஹிந்த் என்ற பெண்மனி, (பின்னால் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபித் தோழர்களில் ஒருவராக ஆகிரார்கள்.) அந்த ஹிந்து பெண்மனியை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொல்வதற்கு கட்டளையிட்டிருப்பார்கள்.

மக்காவை வெற்றிக் கொண்ட பொழுது ஹிந்து பெண்மனி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் நாடியிருந்தால் கண்டிப்பாக அவர்களை கொலை செய்திருக்கலாம். ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய நேசத்திற்குரிய தோழர், பால் குடி சகோதரர், தனது தந்தையின் சகோதரர், அவரை கொன்ற ஹிந்து பெண்மனி, இருதயத்தை எடுத்து கடித்து துப்புகிறார்கள். வஹ்ஷியை கொல்வதற்கு அந்த பெண்மனி தான் தூண்டுகிறார்கள்.

வஹ்ஷி கூறுகிறார்;எனக்கு முஸ்லிம்களில் யாரையும் கொல்ல வேண்டுமென்ற ஆசை இல்லை, தேவையும் இல்லை. நான் ஒரு அடிமையாக குரைஷிகளிடத்தில் மாட்டிக் கொண்டேன். எனக்கு விடுதலை வேண்டும் அதற்கு இதை நிபந்தனையாக ஆக்கினார்கள். நான் அதற்காக தான் கொன்றேன். போரில் ஹம்ஸாவை தவிர வேறு யாரையும் நான் கொல்லவில்லை. அதற்கு பிறகு அந்த போரில் நான் கலந்து கொள்ளவுமில்லை என்று கூறுகிறான்.

இப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய காழ்ப்புணர்ச்சிக்கு, தங்களுடைய வெறுப்பிற்கு அவர்கள் பழிவாங்கும் அளவிற்கு ஆள்பட்டிருப்பார்கள் என்றால், ஹம்ஸாவை கொன்றவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பழிவாங்கி இருப்பார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! ஹம்ஸாவை மட்டுமா? பத்ருப் போரில், உஹதுப் போரில் இன்னும் அதை தொடர்ந்து எத்தனை போரில் கொன்றவர்கள் தானே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றிக் கொண்ட பொழுது மக்காவில் இருந்தார்கள்.

மக்காவிலிருந்து அல்லாஹ்வுடைய தூதரையும் தோழரையும் வெளியேற்றியவர்கள் மட்டுமல்ல, பல போர்களில் அல்லாஹ்வுடைய தூதரையும், தூதரின் தோழர்களையும் கொன்றவர்கள் மக்காவில் இருந்தார்கள்.

ஆனால், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டபோது அவர்களெல்லாம் ஆயுதங்களை போட்டுவிட்டார்கள்.

தூதர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் சிறை பிடிக்கலாம், எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற ஒரு நிலையில் இருந்த பொழுது தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

لا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ

இன்றைய தினம் பழிதீர்க்கப்படாது அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!

நூல் : பைஹகீ.

இது தான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிய வழிகாட்டுதல்.

ஜிஹாது என்ற பெயரில் பழிவாங்கும் உணர்வுக்கு அடிமையாகி, காஃபிர்களை கொன்று குவிப்பதோ, எதிரிகளை கொன்று குவிப்பதோ இஸ்லாமிய மார்க்கம் அல்ல. அதை இஸ்லாமிய மார்க்கத்தின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டிய வழிகாட்டுதலும் அல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு போருக்கு சென்று திரும்ப வரும்பொழுது ஒரு மரத்தடியில் படுத்திருக்கிறார்கள். பின் தொடர்ந்து வந்த எதிரி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே தூங்கி கொண்டிருந்த பொழுது ரஸூலுல்லாஹ்வின் வாளை கையில் எடுத்துக் கொள்கிறான். உருவிய வாளோடு ரஸூலுல்லாஹ்வுடைய கழுத்திற்கு அருகில் அந்த வாளை நீட்டிக் கொண்டு எதிர்பார்த்திருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண் விழிக்கிறார்கள். பார்த்தால் உருவிய வாளோடு எதிரி ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த எதிரியை பார்த்து சிரிக்கிறார்கள்.

பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம்.

இது தான் முஃமின்களுடைய கல்பிற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுக்கக்கூடிய அந்த நிம்மதி. பயம் எப்பொழுது உச்சக்கட்டம் ஆகுமோ அப்பொழுது தான் ஒரு முஃமினுக்கு ஆதரவும் உச்சகட்டமாக ஆக வேண்டும். எப்பொழுது சோதனைகளும், துன்பங்களும், எதிரிகள் புறத்திலிருந்து தாக்குதல்களும், பல விதமான அச்சுறுத்தல்களும் நாலா பக்கங்களிலிருந்தும் சோதனைகள், குழப்பங்கள், தாக்குதல்கள் அதிகம் அதிகமாக கடல் அலைகள் எகிரி வருவதை போன்று அந்த சோதனைகள் வரும்பொழுது தான் ஒரு முஸ்லிமுடைய ஈமான் வெளிப்படும்.

சாதாரண நேரத்தில் பதற்றத்தோடு இருக்கக்கூடிய ஒரு முஸ்லிம், அந்த சோதனைகளின் நேரத்தில் அமைதியாக இருப்பான், திடுக்கம் இல்லாமல் இருப்பான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவனாக இருப்பான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உதாரணத்தை பாருங்கள். ஹிஜ்ரத்திற்கு முன்பு வரை எதிரிகள் கொல்ல தயாராகி விட்டார்கள் என்று தெரிந்த பொழுது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு பதற்றத்தோடு அதற்கான திட்டங்களை தீட்டுகிறார்கள்.

அபூபக்ரை அழைத்துக் கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறப்பட்டு சென்றார்கள். இரவின் நடு நிசியில் புறப்பட்டார்கள். குகையில் சென்று பதுங்கிக் கொண்டார்கள். மூன்று நாட்கள் அந்த குகையில் பதுங்கி இருக்கிறார்கள்.

எதிரிகள் நாலா பக்கங்களிலும் தேடி அலைகிறார்கள். கடைசியாக அந்த குகைக்கு அவர்கள் வருவதற்கு சம்மந்தமே இல்லை. அங்கேயும் ஸவ்ர் மலை உச்சிக்கும் வந்துவிடுகிறார்கள்.

அபூபக்கர் கூறுகிறார்; அந்த மலை உச்சியில் நடந்துக் கொண்டிருக்கின்ற காஃபிர்கள் அவர்களில் யாராவது ஒருவர் இப்படி நடந்துக் கொண்டிருக்கக் கூடியவர் குனிந்து தன்னுடைய பாதத்தை பார்த்தால் போதும், எங்களை அவர்கள் பார்த்து கொள்வதற்கு.

இவர்களோ ஆயுதம் அற்றவர்கள், குகைக்குள் பதுங்கி இருக்கிறார்கள்.

ஒருவர் மட்டுமல்ல, பத்து, முப்பது என்று எண்ணிக்கை இல்லாத காஃபிர்கள் வாளோடு முழு ஆயுத பலத்தோடு அங்கே இருக்கிறார்கள்.

பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம்

ஆபூபக்ர் கூறுகிறார்;அல்லாஹ்வுடைய தூதரே! அவர்களில் ஒருவர் தன்னுடைய பாதத்தை பார்த்தால் போதுமே நமது நிலை என்னவாகும்? இதற்கு முன்பெல்லாம் பதற்றத்தில், கவலையில் இருந்த அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனை நேருக்கு நேராக வந்துவிட்டது.

எதிரிகளின் வாளிற்கு இறையாகக் கூடிய நேரம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளிப்படுத்திய அந்த வார்த்தையை பாருங்கள்.

مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا

அபூபக்ரே! இருவரில் மூன்றாமவராக அல்லாஹ் இருக்க உனக்கு என்ன கவலை? கவலைப்படாதே! அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

அறிவிப்பாளர் : அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3380, 3653, 4663, முசன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 31929, 36613

இதுதான் கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு முஃமினுடைய நிலைப்பாடு.

அவனிடத்தில் பதற்றம் இருக்கும், அவனிடத்தில் பயம் கவலை இருக்கும். ஆனால் சோதனைகள் கண்ணிற்கு நேராக வந்து நின்று விட்ட பொழுது அந்த சோதனைகளுக்கு எதிராக அவன் இருக்கும் பொழுது அப்போது அவன் பயப்படமாட்டான்.

அப்பொழுது அவனுடைய முழு தவக்குலும் அல்லாஹ்வின் மீது வந்துவிடும். அல்லாஹ் பாதுகாப்பான் என்று மிக திடகாத்திரமாக  உறுதியாக  இருப்பான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை போன்று.

ஹதீஸின் தொடர்ச்சி :

இந்த சம்பவத்தில் பாருங்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு தர்காப்புகளை மேற்கொள்பவர்கள். எந்த விதமான இரும்பு உறுக்கு சட்டைகளோ எதுவுமே ரஸூலுல்லாஹ்விடம் இஸ்லை. தூங்கும் பொழுது ஒரு சாதாரண மனிதன் எப்படி தூங்குவானோ அந்த நிலையில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

ரஸூலுல்லாஹ்வுடைய கூர்மையான வாளை உறுவிக் கொண்டு அந்த எதிரி கழுத்திற்கு நேராக நீட்டிக் கொண்டிருக்கிறான். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனை பார்த்து சிரிக்கிறார்கள்.

அவன் கேட்கிறான்;யார் உன்னை பாதுகாக்க முடியும்?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அமைதியாக கூறுகிறார்கள் : அல்லாஹ்.

அவன் கேட்கிறான்;உன்னை என்னிடமிருந்து யார் பாதுகாக்க முடியும் ?

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், அல்லாஹ் என்னை பாதுகாப்பான்.

எப்படிப்பட்ட வார்த்தையாக இருக்கும்? நபியின் அல்லாஹ் என்ற வார்த்தையில், நபித்தோழர்களில் அல்லாஹ் என்ற வார்த்தையில் அர்த்தம் இருந்தது. உணர்வோடு கூறினார்கள், அதை நம்பி இருந்தவர்கள் நம்பிக்கையோடு கூறினார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரியின் கையில் பலவீனத்தை போட்டு விட்டான். அவனுடைய கை நடுங்குகிறது, வாளை கீழே போடுகிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அமைதியாக அந்த வாளை எடுக்கிறார்கள். கேட்கிறார்கள்; இப்போது சொல் உன்னை யார் பாதுகாப்பது? அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத அந்த காஃபிர் கூறுகிறான்;வேண்டுமென்றால் என்னை கொன்று கொள்.

நீ கொல்வதற்கு நான் தகுதியானவன். ஏன்? உன்னை கொல்ல வேண்டுமென்று நான் முடிவெடுத்தேன். அதனால் நீ என்னை கொன்றால் அதில் எந்த தவறும் இல்லை. நீ என்னை மன்னிப்பதாக இருந்தால் மன்னித்துக் கொள் என்று கூறுகிறான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2694, 2910, 4134.

பேச்சிலும் எவ்வளவு பெரிய பேச்சு பார்த்தீர்களா ? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாருங்கள்.

பழி வாங்கும் உணர்வு தான் இஸ்லாம் போதிக்கிறது என்று சொன்னால்,பழி வாங்குவது தான் முஸ்லிம்களுடைய கொள்கை என்று சொன்னால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவனை இங்கே கொன்றிருப்பார்கள்.

உன்னை மன்னித்து விட்டேன். என்று கூறியது மட்டுமல்ல,தோழர்களை அழைத்து அவருக்கு வெகுமதி கொடுத்து அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள்.அவருக்கு ஸதகா, தர்மம் கொடுத்து அனுப்புங்கள் என்று கூறினார்கள்.

இந்த மனிதன் ரஸூலுல்லாஹ்வின் புறத்திலிருந்து சில ஆடுகளையும் சில கனிமத்துகளையும் வாங்கிக் கொ‌ண்டு சென்றவன் அவன் தனது குடும்பத்தாரிடத்தில், தனது கோத்திரத்தாரிடத்தில் சென்று கூறுகிறான். நீங்களெல்லாம் முஸ்லிமாகி விடுங்கள் நானும் முஸ்லிமாகி விடுகிறேன்.

முஹம்மதை பற்றி நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்களோ அப்படி அல்ல முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வாருங்கள் நாமெல்லாம் முஸ்லிமாகி விடுவோம் என்று கூறுகிறான்.

இது தான் கண்ணியத்திற்குரியவர்களே! இஸ்லாம் சொல்லக்கூடிய அறிவுரை. எந்த இடத்தில் எப்பொழுது பழிவாங்க வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழி காட்டுதல் இருக்கிறது.

எந்த நேரத்தில் எப்பொழுது மன்னிக்க வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல் இருக்கிறது.

குறிப்பாக இந்த சோதனைகளின் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகளில் அவர்கள் கடைபிடித்த ஒழுக்கங்கள், பண்பாடுகளில் ஒன்று அல்லாஹ்விடத்தில் அவர்கள் துஆ செய்தது.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்: துஆ முஃமின்களின் ஆயுதம் என்று.

முஃமின் எதை வேண்டுமானாலும் விட்டுவிடலாம்,ஆனால் துஆ செய்வதை அவன் விடமாட்டான்.

ஒரு போருக்கு செல்லக்கூடிய முஃமின் எதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்?அவனுக்கு தேவையான எல்லா போர் சாமான்களை எடுத்து செல்ல வேண்டும்.

இவற்றையெல்லாம் மறக்க வாய்ப்பிருக்கிறதா? மறக்கலாம். ஆனால், ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடத்தில் அவன் செய்யக்கூடிய துஆ,அல்லாஹ்வின் மீது உண்டான நம்பிக்கையை மறக்க மாட்டான், அவன் அதை விடமாட்டான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போரில் வெற்றிக் கொண்டார்களே, அல்லாஹ் கூறுகிறான்,

ذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.(அல்குர்ஆன் 8 : 9)

وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.     (அல்குர்ஆன் : 8:10)

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.(அல்குர்ஆன் 9 : 25)

கண்ணியத்திற்குரியவர்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய வாழ்நாளில் மதினாவின் வாழ்க்கையில் பத்தொன்பது பெரிய போர்களையும், அறுபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட சிறிய யுத்தங்களையும் சந்தித்தார்கள் என்றால் ஆயுத பலத்தைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையை கொண்டா? வேறு திட்டங்களை கொண்டா ? கண்டிப்பாக கிடையாது.

ஈமான், தவக்குல், துஆ என்ற ஆயுதங்களை கொண்டு தான் அந்த எதிரிகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போர்க்களங்களில் சந்தித்தார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முக்கிய துஆக்களில் ஒன்றை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். போர் நடப்பதற்கு முன்பாக, எதிரிகளை சந்திப்பதற்கு முன்பாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ கேட்பார்கள்.

குறிப்பாக அஹ்ஸாப் யுத்தத்தில் கேட்ட துஆவை அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா ரழியல்லாஹு அன்ஹு பதிவு செய்கிறார்கள்.

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹ்வே! வேதத்தை இறக்கியவனே! (அல்லாஹ்விடத்தில் ஒன்றை கேட்பதாக இருந்தால் அல்லாஹ்வை புகழ்ந்து, அல்லாஹ்வுடைய மகிமையை, உயர்வை கூறி அவனிடத்தில் மன்றாடி கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் எப்படி கேட்கிறார்கள் ?)

வேதங்களை இறக்கியவனே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் மூஸாவிற்கு தவ்ராத்தை இறக்கினான், ஈஸாவிற்கு இன்ஜிலை இறக்கினான், தாவூதிற்கு ஜபூரை இறக்கினான், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கானை அல்லாஹ் இறக்கினான்.

இப்படிப்பட்ட ரப்பிடத்தில் துஆ கேளுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகிறார்கள். வேதங்களை இறக்கியவனிடத்தில் கேளுங்கள், வேதங்கள் உண்மையானவை.

அந்த வேதங்களை நம்பியவருக்கு கண்டிப்பாக வெற்றி இருக்கிறது. எனவே, வேதத்தின் பெயரை கூறி அல்லாஹ்வே! வேதங்களை இறக்கியவனே! என்று அவனிடத்தில் கேளுங்கள்.

மிக விரைவாக விசாரணை செய்பவனே! எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் மறுமையில் சில நொடித் துளிகளில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விசாரணையை முடித்து விடுவான்.

அவனுக்கு ஒருவனுடைய நிலையை முடிக்க வேண்டுமென்றால், ஒரு கூட்டத்தை அழிக்க வேண்டுமென்றால் அவனுக்கு நேரம் தேவை கிடையாது. அல்லாஹ்வே! இந்த ராணுவங்களை நீ தோற்கடிப்பாயாக! இந்த கூட்டங்களை நீ தோற்கடிப்பாயாக! அல்லாஹ்வே! இவர்களை நீ தோற்கடிப்பாயாக! இவர்களுக்கு நீ பயத்தை ஏற்படுத்துவாயாக! (3)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபாரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2716, 2933, 2965.

இந்த துஆவுடைய வாசகங்களை சிந்தித்துப் பாருங்கள். முஃமின்கள் இந்த துஆக்களை மனப்பாடம் செய்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

யா அல்லாஹ்! வேதங்களை இறக்கியவனே! விரைவாக விசாரணை செய்யக்கூடியவனே! அல்லாஹ்வே! எங்களை எதிர்க்கக்கூடிய உனது மார்க்கத்தை, உனது அடியார்களை எதிர்க்ககூடிய எதிரிகளை, இவர்களுடைய ராணுவங்களை நீ தோற்கடிப்பாயாக!

அல்லாஹ்வே! இவர்களை நீ தோற்கடிப்பாயாக! இவர்களுக்கு மத்தியில் நீ பயத்தை ஏற்படுத்துவாயாக!

எப்படிப்பட்ட ஒரு அழகிய துஆவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

இதே துஆ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து இன்னொரு வகையிலும் அறிவிக்கப்படுகிறது.

அதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்.

وَانْصُرْنَا عَلَيْهِمْ

இவர்களுக்கு எதிராக யா அல்லாஹ்! நீ எங்களுக்கு உதவி செய்வாயாக!(3)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபாரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2744

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த துஆக்கள் தான் நாமும் அதிகமாக செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். எந்த இடத்தில் நமக்கென்று ஒரு தலைவர் இல்லையோ, நமக்கென்று ஆயுத பலம் இல்லையோ, நமக்கென்று நம்மை பாதுகாப்பதற்குண்டான ராணுவம் இல்லையோ அந்த இடங்களில், அது போன்ற நாடுகளில் இந்த துஆக்கள், இது போன்ற இன்னும் பல துஆக்களை கற்று முஃமின்கள் அல்லாஹ்விடத்தில் உதவி தேடுவதற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் நம்மை பாதுகாக்கக்கூடியவன். இந்த நாட்டில் நமக்கு என்று முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றும் ராணுவத்தை ஏற்படுத்த முடியாது. ஆயுதங்களை நாம் இங்கே சேகரிக்க முடியாது.

ஆயுதங்களை எடுத்து நாம் இங்கே போராட முடியாது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் முஸ்லிம்கள் இவர்களுடைய மார்க்கத்திற்காக வேண்டி என்ன செய்ய வேண்டும் ? இந்த மார்க்கத்தின் அழைப்புப் பணி செய்தாக வேண்டும்.

இந்த மார்க்கத்தின் நல்ல விஷயங்களை ரஸூலுல்லாஹ்வை பற்றி, இந்த மார்க்கத்தை பற்றி, குர்ஆனை பற்றிய உண்மையான விஷயங்களை மாற்றார்களுக்கு, எதிரிகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

தங்களுடைய குணத்தால், பண்பாடுகளால், அழகிய பழக்க வழக்கங்களால் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் அவர்களுக்கு எடுத்து வைக்க வேண்டும்.

இதெல்லாம் இருந்தும் அவர்களுக்கு அந்த எதிரிகளால் துன்பங்கள், துயரங்கள்,  சோதனைகள் நிகழ்த்தப்படுகிறதென்றால் அந்த நேரத்தில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையாக இருந்து அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும்.

அத்தகைய அழகிய முன்மாதிரியை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நாம் படித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த இன்னொரு துஆவை பாருங்கள்.

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

யா அல்லாஹ்! அவர்களுடைய கழுத்துகளுக்கு எதிராக நாங்கள் உன்னை ஆக்குகின்றோம். எங்களிடத்தில் ஆயுதங்கள் இல்லை, எங்களிடத்தில் பலம் இல்லை. எங்களை பாதுகாத்துக் கொள்வதற்குண்டான ஆற்றல் எங்களிடத்தில் இல்லை. யா அல்லாஹ்! நாங்கள் உன்னை ஆக்குகின்றோம். அவர்களுடைய கழுத்துகளுக்கு எதிராக, அவர்களுடைய தீங்குகளிலிருந்து உன்னை கொண்டு நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம்.

அல்லாஹ்வே! அவர்களுடைய தீங்கிலிருந்து, ஆபத்துகளிலிருந்து உன் மூலமாக நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம்.

நூல் : அபூ தாவூத், எண் : 1314, 1537.

கண்ணியத்திற்குரியவர்களே! நிச்சியமாக நம்முடைய துஆக்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் செவியேற்பான். அந்த நம்பிக்கையோடு நாம் கேட்க வேண்டும். நிச்சயமாக சூழ்நிலைகளை மாற்றி,நமக்கு யார் எதிரிகளாக இருக்கிறார்களோ அவர்களிலிருந்தே பலரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கும்படி செய்து அவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அறனாக ஆக்குவான்.

இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பாதுகாக்கக் கூடியவர்களாகவும், பரப்பக்கூடியவர்களாகவும் அல்லாஹ் ஆக்குவான. எப்படி ஹாலிதை, ஆபூ சுஃப்யானை, அம்ரு இப்னு ஆஸை, அல்லாஹ் ஆக்கினானோ, அந்த நல்ல துஆக்களை அல்லாஹ்விடம் கேட்போமாக! நல்லாதரவு வைப்போமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ ح و حَدَّثَنِي نُعَيْمٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا صَبَأْنَا فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَاهُ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ (صحيح البخاري 3994 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ الدُّؤَلِيُّ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَأَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ فَأَدْرَكَتْهُمْ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ وَنِمْنَا نَوْمَةً فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ فَقَالَ إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا فَقَالَ مَنْ يَمْنَعُكَ مِنِّي فَقُلْتُ اللَّهُ ثَلَاثًا وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ)صحيح البخاري (2694 –

குறிப்பு 3)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَكَانَ كَاتِبًا لَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَرَأْتُهُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا انْتَظَرَ حَتَّى مَالَتْ الشَّمْسُ ثُمَّ قَامَ فِي النَّاسِ خَطِيبًا قَالَ أَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ ثُمَّ قَالَ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ (صحيح البخاري 2744 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/