மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 3/3) | Tamil Bayan - 384
மாறிவரும் சூழ்நிலைகளும் மாறாத இறை நியதிகளும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : மாறிவரும் சூழ்நிலைகளும் மாறாத இறை நியதிகளும் (அமர்வு 3-3)
வரிசை : 384
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 06-11-2015 | 24-01-1437
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை அடிப்படையாக வைத்து, தனிமை, பொதுவாழ்க்கை, வணக்க வழிபாடுகள், தொழில்துறைஎன்று அனைத்துத் துறைகளிலும்எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் பயத்தின் அடிப்படையில் வாழுமாறுஉங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாகஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்மையும்நமது சமுதாயத்தையும் பாதுகாப்பானாக, அல்லாஹ்வை தவிரநமக்கு வேறு யாரும் பாதுகாவலரோநம்மை இரட்சிப்பவரோ அறவே கிடையாது.
மாறி வருகின்ற இந்த கால சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் சந்திக்கின்ற இன்னல்கள், துன்பங்கள், ஆபத்துக்கள், எதிர்ப்புகள்என்ன?
அல்லாஹ் சுப்ஹானாஹு வதஆலா இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு என்ன அறிவுரை வழங்கி இருக்கின்றான்? என்பதைப் பற்றி இரண்டு ஜும்ஆக்களில் நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகஇன் ஷா அல்லாஹ் இன்று சில விஷயங்களை நாம் குர்ஆன் சுன்னாவின் வாயிலாக பார்க்க இருக்கின்றோம்.
எதிரிகளால் அச்சுறுத்தப்படுவது, முஸ்லிம்கள் சந்திக்கின்ற சோதனைகளில் ஒரு பெரிய சோதனை.
ஒரு தனி மனித வாழ்க்கையில் பசி, பட்டினி, பஞ்சம், நோய்நொடி, வியாபாரத்தில் சிக்கல், தொழில்துறைகளில் சிக்கல்இப்படியாக ஏற்படுகின்ற பிரச்சினைகளை தனிமனிதன் எதிர்கொள்கிறான்; சந்திக்கிறான்.
இந்த எல்லா பிரச்சினைகளிலும்ஒரு பெரிய சவாலான பிரச்சனையாக இருப்பது, ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை. ஒட்டுமொத்த சமுதாய மக்களையும்எதிர்கொள்கின்ற அந்த சவால். அதுதான் எதிரிகள் மூலமாக ஏற்படுகின்ற ஒரு சோதனை.
இப்படிப்பட்ட ஒரு சோதனையிலும்கண்டிப்பாக நீங்கள் சிக்க வேண்டி வரும். அல்லாஹ் கூறுகிறான்:
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 2 : 155)
இறைத்தூதர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள், பயமுறுத்தப்பட்டார்கள். இந்த அச்சுறுத்தல், இந்த பயமுறுத்தப்படுதல்தொடர்ந்து இறைத்தூதர்கள் சந்தித்த ஒன்றுதானே தவிர, புதிய ஒன்று அல்ல.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«لَقَدْ أُخِفْتُ فِي اللَّهِ وَمَا يُخَافُ أَحَدٌ، وَلَقَدْ أُوذِيتُ فِي اللَّهِ وَمَا يُؤْذَى أَحَدٌ»
எனக்கு முன்னால் யாருக்கும் தொந்தரவு கொடுக்கப்படாத அளவிற்கு எனக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.எனக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது போன்றுயாருக்கும் இதற்கு முன்னால் அச்சுறுத்தல் கொடுக்கப்படவில்லை.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2472, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளால் பயமுறுத்தப்பட்டார்கள்.
ஒருமுறை அல்ல,மக்கா வாழ்க்கையில் 13ஆண்டு காலங்கள் தொடர்ந்து அவர்களுக்கு காஃபிர்களால் எச்சரிக்கைகள் விடப்பட்டன. அச்சுறுத்தல்கள் வந்தன.
தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
உங்களை நாம் இந்த ஊரிலிருந்து வெளியேற்றிய தீருவோம், அல்லது உங்களை கொலை செய்து விடுவோம், அல்லது உங்களை சிறை பிடித்து விடுவோம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சொந்த உறவினர்களே, இரத்த பந்தங்களே, அவர்களுடைய வம்சத்து மக்களே அவர்களுக்கு எதிரிகளாக இருந்து இந்த அச்சுறுத்தல்களையும், தொந்தரவுகளையும் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்வதற்காக இறுதியில் ஒரு நாளையும் முடிவு செய்துவிட்டார்கள்.
யார் கொல்வது என்று கொலையாளிகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். கொலை செய்வதற்கான நேரத்தையும் அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
அந்த சூழல்நிலையில் தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் நடுநிசியில் மறைந்தவர்களாகதங்களது வீட்டிலிருந்து வெளியேறி அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்துக்கொண்டு மதினா சொல்ல வேண்டி இருந்த அவர்கள், மதினாவிற்கு உண்டான வழியில் செல்லாமல் அதற்கு நேர் எதிர் திசையில் சென்று மூன்றுநாட்கள் ஸவுர் மலையில் பதுங்கி இருந்து பிறகு தனது பயணத்தை தொடர்ந்தார்கள்.
அந்த நேரத்தில் யார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தலையைக் கொய்து வருகிறார்களோ அவர்களுக்கு 100ஒட்டகைகள் பரிசளிக்கப்படும் என்றுஅந்த காஃபிர்களால் பரிசு அறிவிக்கப்பட்டது.
பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம்.
ஆகவே,இந்த கொலைமிரட்டல், அல்லது ஊரைவிட்டு துரத்தி விடுவோம் என்பது,இப்படி இன்னும் பல வகை அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள்இவையெல்லாம் காலமெல்லாம் காஃபிர்கள் இடத்தில் தொடர்ந்து வாழையடிவாழையாகவந்து கொண்டிருக்கக்கூடிய குணங்கள்.
இந்த குணங்கள் எல்லாம் அவர்களிடத்தில் மாறவே மாறாது. யார் ஈமானை ஏற்றார்களோ, அந்த ஈமானை ஏற்றவன் தனது மகனாக இருந்தாலும் சரி, தனது சொந்த சகோதரனாக இருந்தாலும் சரி, அவனுக்கு தொந்தரவு தருவது என்பது குஃப்ருடைய குணம்.
இந்த குணம் இப்லீஸ் உடைய குணம். இறுதிநாள் வரை அந்தக் குணம் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.
அப்படி என்றால், அதை துணிச்சலாக எதிர்கொள்வதற்கு உண்டான மன திடகாத்திரம், மனவலிமைஒரு முஸ்லிமிடம் வரவேண்டும்.
எந்த ஒரு ஆபத்தும் ஒரு முஸ்லிமை நிலைகுலைய வைத்து விடக்கூடாது. காஃபிர்களுடைய அந்த தொந்தரவுகளும், அந்த அச்சுறுத்தல்களும், ஏன் அவர்கள் போர் தொடுத்து வந்தாலும்கூட, தங்களது சமுதாயத்தை வேரோடு அழிப்பதற்குண்டான அத்தனை திட்டங்களையும் தீட்டி அவர்களுடைய படைகள் நமக்கு முன்னால் வந்தாலும்கூட, ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கை அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று இருக்கவேண்டும்.
ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கை, அல்லாஹ் என் இரட்சகன், அல்லாஹ் என் காவலன்,அல்லாஹ் என்னை பாதுகாக்க போதுமானவன் என்று இருக்க வேண்டும்.
இரண்டாவது, நான் இந்த எதிரிகளால் கொல்லப்படுவதை கண்டு பயப்படவில்லை. நான் இவர்களால் கொல்லப்பட்டால் எனக்கு அல்லாஹ் சொர்க்கத்தை வைத்திருக்கிறான். அவர்களுடைய ஆயுதங்களை பார்த்தோ, படை பலத்தின் எண்ணிக்கையைப் பார்த்தோஒரு முஸ்லிம் தடுமாறி விடக்கூடாது.
ஒரு முஸ்லிம் நிலை குலைந்து விடக் கூடாது. பதட்டப்பட்டு விடக்கூடாது. பலவீனப்பட்டு விடக்கூடாது. என் இறைவன் என்னை கைவிட்டு விட்டானோ? என்று கோழையாகி விடக்கூடாது.
பொறுமையாக இருப்பான். அவனுடைய உள்ளம் சொல்லும்; நான் இந்தப் போரில் கொல்லப்பட்டால், அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை வைத்திருக்கிறான். அல்லாஹ் எனக்கு மறுமையின் வெற்றியை வைத்துள்ளான் என்ற உறுதி அவனுடைய உள்ளத்தில் பசுமையாக தெளிவாக ஆழமாக பதிந்திருக்க வேண்டும்.
அந்தச் சொர்க்கத்தை அவன் கண்கூடாக காணக்கூடிய நேரம் வந்துவிட்டது என்ற மனநிலைக்கு அவன் வரவேண்டும். இதுதான், முஸ்லிம்களுடைய வெற்றியின் ரகசியங்களில் ஒன்று.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில தோழர்களை தூதர்களாக அனுப்பி வைக்கிறார்கள். அழைத்து சென்றவனோ ஒரு மோசடிக்காரன். அழைத்துச் சென்று வஞ்சகம் செய்து விடுகிறான்.
அப்போது ரசூலுல்லாஹ் உடைய கடிதத்தை கொடுத்துவிட்டு அந்தக் கடிதத்திற்கு பதில் என்ன என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த நபித்தோழர் அவருடைய முதுகின் பின்புறத்திலிருந்து ஈட்டியால் குத்தப்படுகின்றான்.
குத்தப்பட்ட ஈட்டி நெஞ்சின் வழியாக வெளியே வருகிறது. அந்தத் தோழர் இந்த காட்சியை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. முற்றிலுமாக முதுகின் பின் புறத்தில் குத்தப்பட்ட அந்தக் கூர்மையான ஈட்டி நெஞ்சைப் பிளந்து கொண்டுமார்பின் வழியாக வெளியே வருகிறது.
அந்த நேரத்தில் அந்த தோழர் இப்படி கூறியவராக கீழே சாய்கிறார்;
اللَّهُ أَكْبَرُ، فُزْتُ وَرَبِّ الكَعْبَةِ
காஃபாவின் இறைவன் மீது சத்தியமாக சொல்கிறேன். நான் வெற்றி அடைந்து விட்டேன். நீங்கள் தோல்வி அடையப் போகிறீர்கள்.
கொல்லப்பட்டு அனாதையாக அவருடைய ஜனாஸா இன்னும் சிறிது நேரத்தில் கிடைக்கப்போகிறது. அந்த நேரத்தில் அவர் சொல்கிறார். நான் வெற்றியோடு மறணிக்கிறேன். எனது இந்தக் கொலை எனக்கு வெற்றியைத் தேடித்தந்தது. (1)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2801, 4091.
இதுதான் ஒரு முஃமினுடைய நிலைப்பாடு.இதுதான் ஒரு இறைநம்பிக்கையாளன் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமினுடைய நிலைப்பாடு. இந்த ஒரு நிலையில் ஒவ்வொரு முஸ்லிமும் இருக்க வேண்டும்.
இந்த மனநிலையை தனக்கு ஏற்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட ஈமான் இருக்க வேண்டும். அவனுடைய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், அவருடைய குணம், அவனுடைய திக்ர் அவனுக்கு இப்படிப்பட்ட இறைநம்பிக்கையை கொடுக்க வேண்டும்.
இப்படி கொடுத்தால் அவன் காலமெல்லாம் அவனுடைய ரப்பை வணங்கிக் கொண்டு இருந்தான் என்பதில் உண்மை.
அப்படி அவனுக்கு கொடுக்கவில்லை என்றால், எதிரிகள் அவனை எதிர்த்து வரும் பொழுது, படைகள் அவனை சூழ்ந்து வரும் பொழுது, ரப்பு என்னை கைவிட்டு விட்டானோ! இனி எனக்கு தோல்வி தானோ!என்று எண்ணினால், அவன் வாழ்க்கையில் தொழுதது தொழுகை அல்ல. அது ஒரு வேஷம்.
அவன் வாழ்க்கையில் நோன்பு வைத்ததோ,இலாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியதோ, அல்லாஹுஅக்பர் என்று கூறியதோ, எல்லாம் ஒரு வேஷம் தானே தவிர, அவனுடைய உள்ளத்தில் இருந்து வந்தது அல்ல.
இவனுடைய உதாரணம், இஸ்ரவேலர்கள் உடைய உதாரணத்தை போல.
மூஸா அலைஹி வஸல்லம் அந்தக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். ஒரு நபியோடு தான் செல்கிறோம் என்ற உணர்வை கூட அவர்கள் இழந்திருந்தார்கள்.
காரணம், துன்யாவின் மீதுள்ள மோகம். உலக வாழ்க்கையின் மீதுள்ள மோகம். எனவே தான் அல்லாஹ் சொல்கிறான்:
ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமேஎன்று வாழ்க்கையின் மீது பேராசை உடையவர்கள் இந்த இஸ்ரவேலர்கள். (அல்குர்ஆன் 2 : 96)
அவர்களுக்கு இருக்கின்ற ஆசை வேறு யாருக்கும் இருக்காது. அப்படிப்பட்ட உலக ஆசை பிடித்தவர்கள். அந்த ஆசை ஒருவரிடத்தில் இருக்குமேயானால், அவன் ஈமானின் கடுகளவு கூட சுவையை அனுபவிக்க முடியாது.
யாருடைய உள்ளத்தில் இந்த உலக வாழ்க்கையின் மீது மோகம் இருக்குமோ, நான் வாழ வேண்டும். என்ற ஆசையோடு இருக்கிறானோ, அவன் ஈமானுடைய சுவையை அனுபவிக்க முடியாது.
காலித் இப்னு வலீத் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் பாரசீக மன்னர்களை பார்த்து சொல்கிறார்கள்;பாரசீகர்களே!
நீங்கள் எப்படி மரணத்தையும், வாழ்க்கையையும், மதுவையும்விரும்புகிறீர்களோஅதுபோன்று மரணத்தின் மீது பிரியம் இருக்கக்கூடியஒரு கூட்டத்தை நான் அழைத்து வந்திருக்கிறேன்.
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா : 6/378.
அந்த இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்? நபியுடன் இருக்கிறார்கள். ஆனால், பின்னால் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தை பார்த்தார்கள். முன்னால் கடலை போன்று பெருக்கெடுத்து ஓடக்கூடியஅந்த நயில் நதியை பார்த்தார்கள். சொன்னார்கள்;
فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது‘‘நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 26 : 61)
நாங்கள் மாட்டிக் கொண்டோமே, எங்களை சிக்க வைத்து விட்டீரே, எங்களைக் கைவிட்டு விட்டீரே, எங்களை காப்பதாக சொல்லி கடைசியில் எங்களை ஒன்று எதிரிகளின் வாள்களுக்கு இரையாக்க பார்க்கிறீர்களா? அல்லது இந்த ஆள் கடலில் தள்ளி எங்களை கொள்ள பார்க்கிறீர்களா? என்று கூறினார்கள்.
இது முனாஃபிக் உடைய குணம். இது யாருடைய உள்ளத்தில் ஈமான் இறங்க வில்லையோ அவருடைய குணம்.
இன்னொரு பக்கம், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாயத்தவர்கள். அவர்களுடைய கண்ணியத்திற்குரிய தோழர்கள்.
அல்லாஹ் அவர்களுடைய மனநிலையைஅவர்களுடைய பண்பாட்டை நமக்கு வர்ணிக்கிறான்.
அஹ்ஸாப் உடைய யுத்தத்தை அல்லாஹ் நினைவு கூறுகின்றான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 4000தோழர்கள் மதீனாவிற்குள் முற்றுகையிடப்பட்டு இருக்கிறார்கள்.
மேற்புறத்தில் பனூகுரைழா யூதர்கள்சத்தியத்தை முறித்துவிட்டுஅவர்களும் இந்த முஃமின்கள் மீதுதாக்குதல் நடத்த தயாராகி விட்டார்கள்.
இன்னொரு பக்கம், கத்ஃபான், முழர், குரைஷ்மற்றும் அவர்களை நண்பர்களாககொண்டிருந்த அத்தனை கூட்டத்தார்களும்ஒன்று சேர்ந்து 12000உறுதிமிக்க, திடகாத்திரமான, வலிமையுள்ள போர்வீரர்கள் ஒன்று கூடி நிற்கிறார்கள்.
12,000போர் வீரர்கள் முழு ஆயுதங்களோடு, போர் செய்வதற்குண்டான முழு தயாரிப்போடு, மதினாவில் உள்ள அத்தனை முஸ்லிம்களையும்இன்று அவர்களுக்கு கடைசி நாளாகவரலாற்றில் ஆகிவிடுவோம் என்றுகங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கு உண்டான தயாரிப்போடு, எத்தனை மாதங்கள் போர் நீடித்தாலும், அத்தனை மாதங்களும் தாக்குப் பிடிக்கின்ற அளவுக்குஉணவு ஏற்பாடு, மற்ற அனைத்து விதமான ஏற்பாடுகாளோடுவந்து அவர்கள் மதினாவிற்கு வெளியில் கூடாரங்களை அமைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு,ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுத்த அந்த அகல் உடைய அந்த தந்திரம் அங்கே எதிரிகளுக்கு இடையூறாக இருந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் முனாஃபிக்குகள்-நயவஞ்சகர்கள் சொல்கிறார்கள் :
وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا
‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.(அல்குர்ஆன் 33 : 12)
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் எங்களை ஏமாற்றி விட்டார்கள். மூஸா நபி இடத்தில் எப்படி இஸ்ரவேலர்கள் சொன்னார்களோ, அதுபோன்று மஸ்ஜிதுன் நபவியில் நபியோடு தொழுது கொண்டிருந்த அந்த முனாஃபிக்குகள் சொன்னார்கள்.
அல்லாஹ் ஏமாற்றி விட்டான். பொய்யான வாக்கை கொடுத்துவிட்டான். நபி எங்களை ஏமாற்றி விட்டார் என்று.
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:
وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை. (அல்குர்ஆன் 33 : 22)
இன்று, எத்தனை பேர் சொல்கிறார்கள்;இந்த காலம் தாடி வைக்கிற காலம் இல்லை. வைத்தால் தீவிரவாதி என்று பிடிக்கப்பட்டு விடுவான். முஸ்லீமாக காட்டிக் கொண்டால் நமக்கு ஆபத்து என்றுதங்களுடைய அடையாளத்தையே மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
இவர்களுக்கா அல்லாஹ்வுடைய உதவி வரும்? இவர்களுக்கா அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரீலையும்இஸ்ராஃபீலையும் வானத்திலிருந்து இறக்குவான்? யோசித்துப்பாருங்கள்.
பொதுவாக,ஈமான் அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். குறிப்பாக சோதனைக் காலங்களில் ஈமான் அதிகரிக்க வேண்டும்.
சோதனை, எதிரிகள் உங்களை தாக்க வரும்போது, எதிரிகளால் உங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, இறைநம்பிக்கை அதிகரிக்க வேண்டும். மார்க்கப்பற்று அதிகரிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்ப வேண்டுமே தவிர, அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறு பக்கம் சென்று, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு விட்டு வேறு பக்கம் சென்று, அல்லாஹ்வுடைய வழிபாட்டை விட்டு விட்டு வேறு பக்கம் சென்று, உங்களுடைய இஸ்லாமிய அடையாளங்களை மாற்றி வேறு பக்கம் சென்றால் உங்களுக்கு வெற்றி அளிப்பவன் யார்? உங்களை பாதுகாப்பவன் யார்? சிந்தித்துப் பாருங்கள்.
நமது சமுதாய மக்கள் உடைய நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது. நபித்தோழர்கள் என்ன செய்தார்கள்? முந்திய சமுதாயத்தின் அந்த இறைத்தூதர்களின் உற்ற தோழர்கள் என்ன செய்தார்கள்?
குர்ஆன் நமக்கு சொல்லிக் காட்டுகிறது. அதுபோன்று எதிரிகள் சூழ்ந்து வரக்கூடிய சூழ்நிலைகளில், அச்சுறுத்தல் வரக்கூடிய சூழ்நிலைகளில், அல்குர்ஆன் உடைய வழிகாட்டுதலில் மிக முக்கியமான ஒன்று.
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடத்தில் அதிகம் துஆ கேட்பவனாக இருக்க வேண்டும். அந்த துஆ எப்படி இருக்க வேண்டும். அந்த துஆக்களின் வாசகங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி காட்டுகின்றார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உண்மையாக நம்பிக்கை கொண்ட இஸ்ரவேலர்களில் முஃமின்களாக இருந்தவர்கள் கேட்ட துஆவை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகின்றான்.
இன்றைய காலங்களில் ஃபிர்அவ்னைப் போன்ற ஒரு கொடுங்கோல் அரசன், ஒரு கொடுங்கோல் அதிகாரிஇந்த உலகத்தில் தோன்ற முடியாது.
அவர்களை அந்த மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், இஸ்ரவேலர்களில் இருந்த முஃமின்களும்துஆவைக் கொண்டு மிகைத்தார்கள். அல்லாஹ்வுடைய உதவியைப் பெற்றார்கள்.
அல்லாஹ் கற்றுத் தரக்கூடிய துஆவைப் பாருங்கள்:
فَقَالُوا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ (85) وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
அதற்கவர்கள், ‘‘(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!'' என்று பிரார்த்தித்தார்கள்.(எங்கள் இறைவனே!) ‘‘நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!'' (என்றும் பிரார்த்தித்தார்கள்.)(அல்குர்ஆன் 10 : 85,56)
இன்று, இந்த துஆவில் இருந்து சில விஷயங்களை நீங்கள் உணர்ந்து பாருங்கள். இந்த துஆவில் சொல்லப்படுகின்ற ஒழுக்கங்கள், இந்த துஆவில் கேட்கப்படுகின்ற ஈமானிய உணர்வுகள், நமது சமுதாயத்தில் எத்தனை சதவிகிதம் வந்திருக்கிறது?
நமக்கு நம்முடைய திறமையின் மீதுஅல்லது ஆட்சியாளர்கள்அரசியல் கட்சிகளின் மீதுஇருக்கின்ற அளவுக்குண்டான அந்த நம்பிக்கை, இன்றைய முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மீது எந்த அளவு இருக்கிறது?
அல்லாஹ்விடத்தில் மன்றாடுவது, அல்லாஹ்வே! நாங்கள் உன் மீதே நம்பிக்கை வைத்தோம். உன்னையே சார்ந்திருக்கிறோம். யா அல்லாஹ் எங்களை நீ சோதனையாக ஆக்கிவிடாதே, இந்த அநியாயக்கார மக்களுக்கு உனது அருளால் எங்களைக் காத்துக் கொள். உனது அருளால், உனது ரஹ்மத்தால், எங்களைப் பாதுகாத்துக் கொள்.
ஆம். அல்லாஹ் அவனது ரஹ்மத்தால் நம்மை காத்துக் கொண்டால் தான் நாம் காப்பாற்றப்படுவோம். அவனுடைய ரஹ்மத்தைக் கொண்டு அவன் நம்மை காக்கவில்லை என்றால், அவனுடைய ரஹ்மத்தை அவன் நமக்கு மொழியவில்லை என்றால் மாட்டிக்கொள்வோம்.
யாரை நமக்கு நண்பர்களாக நினைத்தோமோ அவர்களே நமக்கு எதிரிகளாக ஆகிவிடுவார்கள். யாரை நம்மை காக்கக் கூடியவர்களாக நினைத்தோமோ அவர்களே நம்மை கால்வாரக்கூடிய மக்களாக மாறிவிடுவார்கள். அல்லாஹ் மாற்றிவிடுவான்.
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களோடு ஈமான் கொண்ட மக்களும்இப்படி துஆ செய்தார்கள்.
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ (4) رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்), ‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் 60 : 4,5)
அல்லாஹ்வை சார வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் ஓடி வர வேண்டும். அல்லாஹ்விற்கு முன்னால் பணிய வேண்டும்.
யா அல்லாஹ்! எங்களுடைய அறிவால், எங்களுடைய திறமையால், என்னுடைய சமுதாய பாதுகாப்பால்நாங்கள் எதையும் பாதுகாக்க முடியாது. நீ தான் பாதுகாக்க வேண்டும் என்றுஅல்லாஹ்விடத்தில் மன்றாட வேண்டும். இப்படி தானே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பத்ருப் போருக்கு முன்னால் மன்றாடினார்கள்.
இது ஒரு பெரிய இறைத்தூதர்,அல்லாஹ்வுடைய நண்பர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உடைய துஆவை அல்லாஹ் நமக்கு கற்றுக் கொடுக்கின்றான்.
அது போன்றுதான்,தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்தை எதிர்த்த அந்த அநியாயக்கார அரசனுக்கு எதிராக இறைநம்பிக்கையாளர்கள் ஒன்று கூடிய போது அவர்கள் செய்த துஆவை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள். (அல்குர்ஆன் 2 : 250)
எவ்வளவு பெரிய அழகிய துஆ பாருங்கள். முதலாவதாக கேட்கிறார்கள்; யா அல்லாஹ்! இப்படிப்பட்ட ஒரு கொடுங்கோல் அரசன்,மாபெரும் ஒரு எண்ணிக்கையோடு வந்து இருக்கிறான். இங்கே, நாங்கள் என்ன செய்ய முடியும்?
நம்மிடத்தில் ஆயுதங்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் சரி, நம்மிடத்தில் தயாரிப்புகள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நாம் அதற்குண்டான ஏற்பாடுகளோடு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நம்முடைய நம்பிக்கை அல்லாஹ்வின் மீது இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் மீது நமது நம்பிக்கை, அல்லாஹ்வின் பக்கம் நம்முடைய சார்ந்திருத்தல் இருக்குமேயானால், எப்போதுமே நாம் பயப்படத் தேவையில்லை.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாடினால் ஆயுதங்களைக் கொண்டும் வெற்றி தருவான். அல்லாஹ் நாடினால் ஆயுதங்கள் இல்லாமலும் வெற்றி தருவான். அல்லாஹ்விடத்தில் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட ராணுவங்கள் இருக்கின்றன.
சூரத்துல் அஃராஃபில் அந்த சூனியக்காரர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டபோது, ஃபிர்அவ்ன் அவர்களை அச்சுறுத்துகின்றான். மாறுகை, மாறுகால் வெட்டி உங்களை கழுமரத்தில் ஏற்றி விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்த போது, ஈமானை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் செய்கின்ற துஆவை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)(அல்குர்ஆன் 7 : 126)
குறிப்பாக ஆபத்துகள் சூழ்ந்து கொண்டு மரணம் நமது கண் முன்னால் தெரிகின்ற போது ஓத வேண்டிய துஆ.
பயப்பட வேண்டியது அல்ல. நாம் இந்த உலக வாழ்க்கையை விட்டு பிரிந்தால் நமக்கு இருப்பதோ இதைவிட பெரிய சொர்க்கத்தின் வாழ்க்கை இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»
சொர்க்கம் வாள்களின் நிழலுக்கு கீழே இருக்கிறது.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2818, 2966.
பயப்பட வேண்டிய அவசியமில்லை. தடுமாற வேண்டிய அவசியமில்லை. எனவேதான் இஸ்லாமிய மார்க்கத்தில் சொர்க்கம் உண்டு என்று நம்பிக்கை கொண்டவன், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் சொர்க்கம், ஸஹாதத் என்று நம்பிக்கை கொண்டவன்,போர் முனையில் புறமுதுகு காட்டி ஓடினால் அது மாபெரும் இறை நிராகரிப்புக்கு சமமான பெரும்பாவமாக கருதப்படுகிறது .
மேலும், அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ»
ஏழு மாபெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்!அல்லாஹ்விற்கு இணை வைப்பது, தாய் தந்தையர்களுக்கு மாறு செய்வது, கொலை செய்வது, சூனியம் செய்வது, போர் மைதானத்தை விட்டு புறமுதுகு காட்டி ஓடுவது. (2)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2766, 6857.
ஒரு முஸ்லிம் புறமுதுகு காட்டி ஓடக்கூடியவனாக இருக்க மாட்டான். காரணம்,அவன் சொர்க்கத்தை நம்பிக்கை கொண்டவன், மறுமையைநம்பிக்கை கொண்டவன்.
போர் மைதானத்தில் நின்று இருக்கின்ற சமயத்தில் எதிரிகளின் தாக்குதல் அதிகரிக்கும் போது தனது பலவீனத்தால் மைதானத்தில் இருந்து ஓடக்கூடிய ஒருவன் செய்வது மாபெரும் பாவம்.
அவனைப் பெரும் அழிவில் தள்ளக்கூடியகொடூர பாவம் என்றுஅல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லும் பொழுது, சில சந்தேகங்களால்அல்லது சில ஆபத்தான சூழ்நிலைகள் போன்று இருக்கக்கூடிய ஒரு கால கட்டங்களில், இந்த ஆபத்துக்களில் நான் சிக்கி விடுவேனோ? என்னை காஃபிர்கள் தனிமையாக சந்திக்கும் போது கொன்று விடுவார்களோ?
அல்லது எனக்கு அவர்கள் மூலமாக கடுமையான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என்ற ஒரு பயத்தால் ஒட்டுமொத்த மார்க்கமே எனக்கு வேண்டாம், என்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள மாட்டேன் என்ற நிலையில் ஒருவன் வாழ்வானேயானால், அது எவ்வளவு பெரிய பாவம் என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவேதான், முஸ்லிம்கள் இதுபோன்ற சோதனைகளின் நேரங்களில் கேட்கக்கூடிய முக்கியமான துஆ.
யா அல்லாஹ்! எங்களுடைய உள்ளங்களை பலவீனப்படுத்தி விடாதே.
ஒரு முஸ்லிம் ஆயுதத்தால் பலவீனமாக இருப்பான். உடல் வலிமையால் பலவீனமாக இருப்பான். போர் தயாரிப்புகளில் பலவீனமாக இருப்பான். ஆனால், அவனுடைய உள்ளம் பலவீனமாக இருக்காது. அவனுடைய கல்பு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட கல்பு.
அல்லாஹ்வோ மகா வலிமை மிக்கவன். அவருடைய ஆற்றல், அவனுடைய வலிமை, அவருடைய சக்தி, அதற்கு முன்னால் ஒன்றுமே கிடையாது.
எனவே, அல்லாஹ்வின் மீதுள்ள ஈமான் அவனுடைய கல்பில் இருக்கின்ற காரணத்தால், அவனுடைய உள்ளம் பலமாக இருக்கும். உடல் பலவீனமாக இருந்தாலும், அவனுடைய ஆயுதங்கள் பலவீனமாக இருந்தாலும், அவனுடைய ஈமான் பலமுள்ளதாக இருக்கும்.
எனவே, முஃமின்கள் துஆ கேட்பார்கள்;
யா அல்லாஹ்! எங்களுக்கு பொறுமையை கொடு. இன்னும் ஒரு சூழ்நிலையில் இந்தப் போரிலேயே நாங்கள் கொல்லப்பட்டு விட்டால் எங்களை முஸ்லிம்களாக நீ கைப்பற்றிக் கொள். (அல்குர்ஆன் 7 : 126)
இதுதான் ஒரு முஸ்லிமுடைய லட்சியம். ஒரு நாட்டில் வாழும் போது, அந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வதற்காக போராடுவது, ஒரு முஸ்லிமுடைய குணம் அல்ல.
ஒரு முஸ்லிமுடைய குணம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் முஸ்லிமாக வாழ வேண்டும்.
இன்று, எதற்காக போராடப்படுகிறது? ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வதற்கு, செல்வங்களில், உரிமைகளில்பங்கு கொள்வதற்கு.
அது கேட்கலாமா, வேண்டாமா?என்பது இரண்டாவது விஷயம்.
ஆனால், நான் முஸ்லிமாக வாழ்வதற்குண்டான சுதந்திரம் எனக்கு வேண்டும். என்னுடைய மார்க்கத்தை பின்பற்றுவதற்குண்டான அடிப்படை உரிமை எனக்கு தேவை. அதை மீறும் போது நான் இந்த உலகத்தில் வாழ முடியாது. அதற்காக நான் எதையும் செய்ய தயார். எதையும் இழக்க தயார்.
என்னுடைய இஸ்லாமை நான் விட்டுக் கொடுக்க தயாரில்லை. ஆனால், இன்று இஸ்லாமிய கடமைகளில் எதை வேண்டுமானாலும்விட தயார்.
எங்களுக்கு தேவை, உங்களோடு உங்களுக்கு நிகராக ஆட்சி அதிகாரம், உங்களோடு உங்களுக்கு நிகராக செல்வங்கள், இதற்குத்தானே இந்த போராட்டம். இதற்குத்தானே இன்றைய முஸ்லிம்கள் பலருடைய கோஷங்கள் எல்லாம். அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?
ஆனால், மூசாவை நம்பிக்கை கொண்ட அந்த மக்கள், ஃபிர்அவ்னிடத்தில்உயிர்ப்பிச்சை கேட்பார்களா? இல்லை.
அவர்கள் கூறினார்கள்:
قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا
அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான். (அல்குர்ஆன் 20 : 72)
அந்த சூனியக்காரர்களை கொல்லப்படுவதற்காகவரிசையாக நிறுத்தப்படுகிறார்கள். பல அறிவிப்புகளின் படி ஏறக் குறைய 70,000-க்கும் நெருக்கமான சூனியக்காரர்கள் அங்கே வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட மீதம் இல்லாமல் அத்தனை நபர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.
மூசா நபியை ஈமான் கொண்டார்கள். முசா நபியுடைய ரப்பை ஈமான் கொண்டார்கள். அத்தனை மக்களும், எழுபதாயிரம் மக்களும் ஒரே நாளில் வரிசையாக நிற்கப்பட்டு அவர்களுடைய ஒரு கை வெட்டப்பட்டு, இன்னொரு கால் வெட்டப்படுகிறது. ஒருவருக்கு வலது கை என்றால், இன்னொருவருக்கு இடது கை. இப்படி மாறுகை மாறுகால் வெட்டப்படுகிறது.
ஈட்டியில் குத்தப்பட்டு கழு மரத்தின் உயரத்தில் அவர் ஏற்றப்படுக்கிறார். உயிரோடு அவருடைய ஒரு கை, ஒரு கால் வெட்டப்படுகிறது. உயிரோடு ஈட்டியில் குத்தப்பட்டு கழு மரத்தில் ஏற்றப்படுகிறார். அந்த நேரத்தில் அந்த மக்கள் செய்த துஆவை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
இந்த சோதனையில், யா அல்லாஹ்! ஃபிர்அவ்னின் பக்கம் திரும்பி விடுபவார்களாக எங்களை ஆக்கிவிடாதே. எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தா. நாங்கள் உன் பக்கம் வந்து விட்டோம்.
மீண்டும் எங்களை முர்த்ததுகளாக ஆக்கிவிடாதே. யா அல்லாஹ்! இந்த உயிர் பிரியக்கூடிய நேரத்தில் நாங்கள் முஸ்லிம்களாக மரணிக்க வேண்டும். எங்களை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள். எத்தகைய மன உறுதியைப் பாருங்கள்!
இன்று, நமது சமுதாயத்தின் வாழ்க்கை, நம்முடைய ஈமானுடைய நிலை, அப்படி இருக்கிறதா? இஸ்லாம் எங்கே என்று தேடிப்பார்க்கக் கூடிய அளவில் தானே முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் இருக்கிறது.
மஸ்ஜிதுகளில் பார்த்தால், முஸ்லிம்களாக இருப்பார்கள். கடை வீதிகளில் பார்த்தால் காஃபிர்களாக இருப்பார்கள்.
அவர்களது அடையாளம் எங்கே சென்றது? பண்பாடுகள் எங்கே சென்றது? ஒழுக்கங்கள் எங்கே சென்றது?
தன்னை ஒரு முஸ்லிம் என்று துணிவாக சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடிய துணிச்சல் உள்ள முஸ்லிம் எங்கே?
காஃபிர்களை அழைக்காதீர்கள், முஷ்ரிக்குகளுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுக்காதீர்கள், மாற்றுமத மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லாதீர்கள், அவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று இருக்கக் கூடிய இந்த முஸ்லிம்களின் மீது அல்லாஹ் தனது எதிரிகளை சாட்டாமல் எப்படி இருப்பான்?
நன்மையை ஏவாமல், தீமையைத் தடுக்காமல், மார்க்கத்தில் அலட்சியம் செய்யக் கூடிய இந்த முஸ்லிம்களின் மீது அல்லாஹ்வுடைய வேதனை கண்டிப்பாக இறங்கும், காஃபிர்களின் மீது இறங்குவதற்கு முன்னால்.
ஒரு முஸ்லிம் எப்போது அழைப்புப்பணி செய்யவில்லையோ, அல்லாஹ்வின் பக்கம் அழைக்கவில்லையோ, நன்மையை ஏவ வில்லையோ, தீமையை தடுக்க வில்லையோ, சிலை வணங்கக்கூடிய காஃபிர்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை இறங்குவதற்கு முன்னால், இவர்கள் மீது வேதனை இறங்கும். அநியாயக்காரர்களை அல்லாஹ் சாட்டுவான். இவர்கள் துஆ கேட்பார்கள். அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படாது.
நமது வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது? நமக்கு எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய தீனை பரப்புவதற்காக வாழ்க்கையில் நேரம் இல்லை.
அது போன்று இன்னொரு துஆவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரா ஆலுஇம்ரானில் சொல்லிக் காட்டுகின்றான்.
எதிரிகளுடைய படை சூழ்ந்து வந்த போது, முந்திய காலத்தில் வாழ்ந்த அந்த இறை நம்பிக்கையாளர்கள் செய்த துஆ,
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ (146) وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்.
(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை. (அல்குர்ஆன் 3 : 146,147)
எதிரிகளின் ஆபத்துக்கள் ஒரு முஸ்லிமை, ஒரு முஸ்லிம் சமுதாயத்தை சூழ்ந்து கொள்ளும்போது, அந்த முஸ்லிம்கள் பாவத்தை விட்டு விலக வேண்டும். தங்களது பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
இரவெல்லாம் பாவத்தில், பகலெல்லாம் ஹராமான வியாபாரத்தில் இருந்தால்அல்லாஹ்வுடைய உதவி எப்படி வரும்?
தொழுகையை பாழாக்குவதில் இருந்து, ஜக்காத்தை புறக்கணிப்பதில் இருந்து, நோன்பை அலட்சியம் செய்வதில் இருந்து, ஹஜ்ஜை தள்ளிப் போடுவதில் இருந்து, கூத்துக்கள், கும்மாளங்கள், அநியாயங்கள், அக்கிரமங்கள், பகல் காலங்களில் ஹராமான வியாபாரங்கள்.
இந்த உம்மத்தின் மீது இவர்கள் முஸ்லிம் என்று தங்களை சொல்லிக்கொள்ளுகின்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ் உதவி செய்வானா? கண்டிப்பாக செய்ய மாட்டான், இவர்களுடைய அமல்கள் மாறாத வரை
நல்ல மாற்றங்களைக் கொண்டு தான் நம்முடைய முன்னோர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம்முடைய முன்னோர்கள் எதிரிகளை மிகைத்து இருக்கிறார்கள்.
வெறும் கோசங்களை கொண்டோ அல்லது உலகப் பொருட்களின் மீது, உலக வஸ்துக்களின் மீது, உலக ஆட்சி அதிகாரங்களின் மீது நம்பிக்கை வைத்தோ அல்ல.
அது போன்று நாமும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமேயானால் நம்முடைய பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு, அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமேயானால், அல்லாஹ் நம்மையும் பாதுகாத்துக்கொள்வான்.
எதிரிகளுக்கு எதிராக அல்லாஹ் நமக்கும் உதவி செய்வான். அல்லாஹ் நமக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பான். நமது பாதங்களை உறுதிப்படுத்துவான்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து நல்லோரில் நம்மை சேர்ப்பானாக! நாம் பயப்படக்கூடிய அந்த எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து, தந்திரங்களில் இருந்து, அவனுடைய சதித்திட்டங்களில் இருந்து, நம்மையும்நமது சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرُ الحَوْضِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، فَلَمَّا قَدِمُوا قَالَ لَهُمْ خَالِي: أَتَقَدَّمُكُمْ فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِلَّا كُنْتُمْ مِنِّي قَرِيبًا، فَتَقَدَّمَ فَأَمَّنُوهُ، فَبَيْنَمَا يُحَدِّثُهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَوْمَئُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ فَطَعَنَهُ، فَأَنْفَذَهُ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ، فُزْتُ وَرَبِّ الكَعْبَةِ، ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ، فَقَتَلُوهُمْ إِلَّا رَجُلًا أَعْرَجَ صَعِدَ الجَبَلَ، قَالَ هَمَّامٌ: فَأُرَاهُ آخَرَ مَعَهُ، «فَأَخْبَرَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ، فَرَضِيَ عَنْهُمْ، وَأَرْضَاهُمْ»، فَكُنَّا نَقْرَأُ: أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا، وَأَرْضَانَا ثُمَّ نُسِخَ بَعْدُ، فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري- 2801)
குறிப்பு 2)
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ المَدَنِيِّ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ» (صحيح البخاري- 2766)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/