HOME      Khutba      மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 2/3) | Tamil Bayan - 384   
 

மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 2/3) | Tamil Bayan - 384

           

மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 2/3) | Tamil Bayan - 384


மாறிவரும் சூழ்நிலைகளும்மாறாத இறை நியதிகளும் -அமர்வு 2

ஜுமுஆ குத்பா தலைப்பு : மாறிவரும் சூழ்நிலைகளும்,மாறாத இறை நியதிகளும் -அமர்வு 2

வரிசை : 384

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 30-10-2015| 17-01-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, அந்த தூதருடைய தூய குடும்பத்தார்கள், உத்தம தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியனாக, அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னித்து, நமது இறை நம்பிக்கையை பலப்படுத்தி, நமது உள்ளச்சத்தை அதிகப்படுத்தி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களின் கூட்டத்தில் நம்மை ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

கண்ணியத்திற்குரியவர்களே! சோதனைகளைப் பற்றி, அவ்வப்போது மாறிவருகின்ற சூழ்நிலைகளில் இஸ்லாமிய சமுதாயம் சந்திக்கின்ற பல மாறுபட்ட நிலைகளைப் பற்றி, குழப்பங்களை பற்றி, சோதனைகளை பற்றி அதில் ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றிய சில விஷயங்களை சென்ற ஜும்ஆ உரையில் நாம் பார்த்தோம்.

அதை தொடர்ந்து மேலும் சில விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இன்று ஜும்ஆ உரையில் நாம் அறிந்துக் கொள்ள இருக்கிறோம். அல்லாஹ் உதவி செய்வானாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவன் நம்மை ஏன் படைத்தான்? என்பதை அவனே நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)

இந்த மனித ஜின் வர்க்கத்தை ஏன் படைத்தேன் என்பதை இவ்வளவு அழகாக தெளிவாக நமக்கு குறிப்பிடுகிறான்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்; அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனை நாம் வணங்குவதற்கு மட்டும் தான் படைத்தான் என்றால் பிறகு நமக்கு ஏன் அவன் பசியை தர வேண்டும்?நமக்கு இன்னும் பிற இச்சைகளை, ஆசைகளை, தேவைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏன் ஏற்படுத்த வேண்டும்?

படைக்கப் பட்டதுடைய நோக்கம் இபாதத் மட்டுமாக இருக்குமேயானால் மலக்குகளை போன்று எந்த தேவையும் இல்லாமல், எந்த இச்சையும் இல்லாமல், எந்த ஆசையும் இல்லாமல் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டிப்பாக ஆக்கியிருப்பான்.

மலக்குகள் அப்படிதான், அவர்களுக்கு பசி இல்லை, அவர்களுக்கு தூக்கம் இல்லை, அவர்களுக்கு இச்சை இல்லை.

وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

அவர்களில் பலர் படைத்த நாளிலிருந்து இறுதி நாள் வரை ருகூவில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர், நின்று அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர், சிரம் தாழ்த்தி ஸுஜூதில் இருக்கிறார்கள். பலர், அர்ஷை தவாஃப் செய்கிறார்கள். பலர், அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கிறார்கள்.

இப்படி பல வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி வானவர்கள் இருக்கிறார்கள். இறுதி நாள் வரை அல்லாஹ்வின் அடுத்த கட்டளை அவர்களுக்கு வருகின்ற வரை இது தான் அவர்களுடைய காரியம், அவர்களுடைய எல்லா விதமான செயல்பாடுகளும் இது தான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மனிதர்களை தன்னை வணங்குவதற்காக படைத்தேன் என்று கூறுகிறானே,அப்படியென்றால் மலக்குகளைப் போன்று இபாதத்தா? என்றால் இல்லை.

மலக்குகளைப் போன்ற இபாதத்தாக இருக்குமேயானால் மலக்குகளை அல்லாஹ் அமைத்தது போன்று நம்மையும் அமைத்திருப்பான். பசியில்லாமல், வேறு தேவையில்லாமல், இச்சையில்லாமல்.

ஆனால், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அப்படிப்பட்ட இபாதத்தை அவனுடைய படைப்பாகிய நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

அல்லாஹ் தஆலா நமக்கு பசியை கொடுத்தான், நமக்கு தேவையை கொடுத்தான், நமக்கு இச்சையை வைத்திருக்கிறான். அல்லாஹ் என்ன விரும்புகிறான்?

மனிதனுக்கு அவனுடைய தேவைகளை அவன் நிறைவேற்றுகின்ற அதே கனத்தில் இபாதத்திற்காக அவனுக்கு ஒரு நேரத்தை குறிப்பிட்டு அந்த தேவைகளுக்கு இடையில் அவன் எனது இபாதத்தை மறக்காமல் செய்கிறானா?என்பதை அவன் விரும்புகிறான்.

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:37)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)

அல்லாஹ் என்ன கூறுகிறான்? ஒரு முஃமினுக்கு கண்டிப்பாக வியாபாரம் இருக்க வேண்டும். கண்டிப்பாக கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். கண்டிப்பாக குடும்பங்கள் இருக்க வேண்டும். செல்வங்கள் இருக்க வேண்டும்.

அப்படி செல்வங்களுக்கு மத்தியில், குடும்பங்களுக்கு மத்தியில், பெரும் வியாபாரங்களுக்கு மத்தியில், சிறு தொழிலுக்கு மத்தியில் இருந்து கொண்டு அவன் அல்லாஹ்வை மறக்கக் கூடாது.

அவனுடைய குடும்பம், தொழில் துறை அவன் அல்லாஹ்வை மறப்பதற்கு காரணமாக ஆகி விடக்கூடாது. இது சோதனை.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67:2)

இந்த உலக வாழ்க்கை அல்லாஹ் படைத்ததே, இதில் தேவைகளோடு, ஆசைகளோடு, பசியோடு, இச்சைகளோடு இந்த மனிதனை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூழல வைத்து அந்த சூழற்சிக்கு மத்தியில் என்னுடைய இபாதத்தில் இவன் எப்படி கவனம் செலுத்துகிறான்? இது தான் பெரிய சோதனை.

எனவே தான், இவ்வளவு வணக்க வழிபாடுகளை படைத்த நாளிலிருந்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் ஸுஜூதில், ருகூவில், தஸ்பீஹில், கியாமில் இருக்கக்கூடிய மலக்குகளுக்கு சொர்க்க நிஃமத்துகள் இல்லை.

இந்த உலக வாழ்க்கையில் அறுபது ஆண்டு காலமோ, எழுபது ஆண்டு காலமோ சொற்ப வாழ்க்கை வாழ்ந்து அந்த சொற்ப வாழ்க்கையிலும் சொற்ப நேரத்தை அல்லாஹ்வின் இபாதத்தில் கழித்து வந்த மனிதனுக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா முடிவே இல்லாத, இன்பங்கள் நிறைந்த, சுகமே நிறைந்த சொர்க்க வாழ்க்கையை தருகிறான்.

எதற்காக? இவன் தேவைகளுக்கு மத்தியில், ஆசைகளுக்கு மத்தியில், இச்சைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு என்னை மறக்காமல் வாழ்ந்தான். எனது இபாதத்திற்காக வாழ்ந்தான். எனவே, இவர்களுக்கு சொர்க்கம்.

ஆனால், மலக்குகளை பொறுத்த வரை, அவர்கள் படைக்கப்பட்டதே அது அவர்களுக்கு வேறு வேலை இல்லை, வேறு தேவை இல்லை, அவர்களுக்கு இச்சை இல்லை, ஆசை இல்லை.

இந்த ஒரு சோதனையை நாம் புரிந்துக் கொள்ளும் பொழுது தான் நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வருவோம்.

இந்த உலகத்தில் நமக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இபாதத்தை இலட்சியமாக ஆக்கி, அந்த இபாதத்தை சோதனையாக ஆக்கினான்.

وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ

எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ

(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார். (அல்குர்ஆன் 2:46)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இன்னொரு பக்கம் மனிதனுக்கு கொடுத்திருக்கின்ற ஆசைகள், அவனுக்கு கொடுத்திருக்கின்ற தேவைகள், இச்சைகள் இவற்றில் இரண்டை அல்லாஹ் ஏற்படுத்தினான். மிருகங்களுக்கு அப்படி அல்ல. வானவர்களை பொறுத்தவரை இது அவர்களுக்கு இல்லவே இல்லை.

வழிபடுகின்ற, கீழ்படுகின்ற, கட்டுப்படுகின்ற, அல்லாஹ்வை பயப்படுகின்ற, அல்லாஹ்வை ஆசைபடுகின்ற உன்னதப் பண்புகளை தவிர, வேறு பண்புகள் அந்த வானவர்களுக்கு இல்லை.

மிருகங்களை பொறுத்தவரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இச்சைகளை நிறைவேற்றுவதற்காக அந்த படைப்பை படைத்திருக்கிறான்.

அந்த படைப்பு தனது தேவையை, இச்சையை,ஆசையை எப்படி நிறைவேற்ற வேண்டும்? என்பதையும் அதற்கு அவன் வழிகாட்டி, அந்த வழியிலிருந்து மாறாமல் அல்லாஹ் ஆக்கி விட்டான்.

அவை அப்படிதான். அதற்கென்று ஒரு நியதி இருக்கிறது அந்த நியதியில் அது சென்று கொண்டே இருக்கும். அதற்கு வேலை என்ன? சாப்பிடுவது, தூங்குவது, சுற்றுவது, இனப் பெருக்கம் செய்வது.

அதை தவிர அவற்றிற்கு வேறு வேலை இல்லை. அதனுடைய வழியில் அது சென்று கொண்டே இருக்கும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மனிதனுக்கு இன்னொரு பக்கம் இப்படி ஒரு சோதனையை வைத்தான். அந்த சோதனையின் தோற்றம் என்ன? உனக்கு ஆசை இருக்கிறது, நான் அந்த ஆசையை வைத்தேன். உனக்கு தேவை இருக்கிறது, நான் அந்த தேவையை உனக்கு அமைத்தேன். உனக்கு இச்சை இருக்கிறது, அந்த இச்சையை நான் உனக்கு அமைத்தேன்.

ஆனால், அந்த தேவையை நீ நிறைவேற்றிக் கொள்வதில், அடைவதில், உனது ஆசைகளை நீ தேடிப் பெறுவதில், உனது இச்சையை நீ நிறைவேற்றிக் கொள்வதில் இரண்டு வழிகளை வைத்திருக்கிறேன்.

1.             ஹலால் (அனுமதிக்கப்பட்டவை)

2.             ஹராம் (அனுமதிக்கப்படாதவை)

மிருகங்களை பொறுத்தவரை அப்படி அல்ல. எங்குவேண்டுமானாலும் மேயும். அதற்கு எது பிடித்ததோ அதை சாப்பிடும்.

அதற்கு தடை, அதற்கு வேறு விதமான சட்டங்கள் என்பது கிடையாது. எங்கே வைத்தாலும் வாழும், எப்படி வேண்டுமானாலும் வாழும், அந்த மிருகங்களை பொறுத்தவரை அப்படி தான். அவற்றிற்கு எதார்த்தமான ஒரு வாழ்க்கை அந்த வாழ்க்கையில் அது சென்று கொண்டே இருக்கும். ஹலால் ஹராம் என்ற நியதி அதற்கு கிடையாது.

ஆனால், அல்லாஹ்வுடைய படைப்பாகிய இந்த மனிதனைப் பொறுத்த வரை அவனுக்கு தேவை இருக்கிறது. ஆனால், அந்த தேவையை எப்படி வேண்டுமானாலும் அவன் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவனுக்கு ஆசை இருக்கிறது. அல்லாஹ் படைத்த ஆசை தான். அவன் விரும்புகின்ற முறையில் அந்த ஆசையை அவன் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

இச்சை இருக்கிறது அந்த இச்சையை அவன் விரும்புகின்ற முறையில் அவன் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ரப்பு எப்படி கூறினானோ அப்படி தான் அவன் அதை செய்ய முடியும்.

இது பெரிய சோதனை. இபாதத்துடைய சோதனையை விட இந்த சோதனை மிகப் பெரிய சோதனை. அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணுவது.

வணக்க வழிபாடுகளை செய்வது மிக இலகுவான ஒன்று, ஹலால், ஹராமுடைய சட்ட வரம்புகளில் நிற்பதுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது.

ஆகவே தான், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவன் தடுத்த சட்ட வரம்புகளை பற்றி கூறும் பொழுது,

تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا

இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;(அல்குர்ஆன் 2:187)

குற்றங்களை பொறுத்தவரை, தடுக்கப்பட்ட பாவங்களை பொறுத்தவரை, அந்த பாவங்களை அல்லாஹ் கூறுகிறான்;அதற்கு அருகிலும் செல்லாதீர்கள்.

அதனுடைய அத்தனை வழிகளை விட்டும், அந்த பாவத்தின் பக்கம் உங்களை இழுக்கக் கூடிய, அந்த பாவத்தின் பக்கம் உங்களை தூண்டக் கூடிய, அந்த பாவத்தின் மீது உங்களுக்கு ஆசையை ஏற்படுத்தக் கூடிய, அந்த பாவத்தின் மீது உங்களுடைய உள்ளத்தில் நாட்டத்தை ஏற்படுத்தக் கூடிய அத்தனை வழிகளிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். அதற்கு அருகிலும் நீங்கள் நிற்க கூடாது.

உங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை மட்டும் செய்யுங்கள். அதை மீறி உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப, உங்களுடைய ஆசைக்கு ஏற்ப இந்த மார்க்கத்தில் இன்னொரு வழியை, இன்னொரு பாதையை நீங்கள் ஏற்படுத்தாதீர்கள்.

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ

அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா?(அல்குர்ஆன் 42:21)

எவ்வளவு அழுத்தமாக அல்லாஹ் கேட்கிறான் பாருங்கள். இது மிகப் பெரிய ஒரு சோதனை. வியாபாரம் செய் என்று அல்லாஹ் கூறுகிறான். உனது ஆசையை நிறைவேற்று என்று அல்லாஹ் கூறுகிறான். இனப்பெருக்கத்தை நீ செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். சாப்பிட வேண்டுமென்று அல்லாஹ் கூறுகிறான். குடிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவற்றையெல்லாம் கண்டிப்பாக நீ செய்ய வேண்டும். ஆனால், ஹலாலான வழியில் செய்ய வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் துறவறத்திருக்கு அனுமதி இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் பசி பட்டினியாக இருப்பதற்கு அனுமதி இல்லை. உலகம் வேண்டாம் என்று ஊதாரித்தனமாக, பிச்சைக்காரத்தனமாக வாழ்வதற்கு அனுமதி இல்லை.

நீ கண்டிப்பாக குடும்பத்தில் வாழ வேண்டும். கண்டிப்பாக நீ ஒரு பொருளாதாரத்தில் வாழ வேண்டும். கண்டிப்பாக நீ சமுதாயத்தில் ஒரு அங்கத்திரனாக வாழ வேண்டும்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட முறையில் ஹலாலான முறையில் வாழ வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சோதனை மனிதர்களுக்கு மட்டுமான விஷேஷமான சோதனை.

அல்லாஹ்வை இபாதத் செய்ய வேண்டும் தேவைகளுக்கு மத்தியில், இச்சைகளுக்கு மத்தியில், இரவை அல்லாஹ் தூங்குவதற்கு படைத்தான். உனக்கு ஓய்விற்காக படைத்தான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا (9) وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا (10) وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம். (அல்குர்ஆன் 78:9-11)

இரவில் தூங்கு, ஆனால், தொழுகைக்கு அழைக்கப்படும் பொழுது எழுந்து விடு. ரப்பை மறந்து தூங்கி விடாதே! இரவு உனக்கு ஓய்விற்காக, ஆனால், உனது ரப்பிற்காக ஒரு பங்கை நீ ஏற்படுத்தியாக வேண்டும்.

பகல் உன்னுடைய தொழில் துறைக்காக. ஆனால், அதிலும் உனது ரப்பிற்கு பங்கு இருக்கிறது. லுஹருக்காக நீ வர வேண்டும், அஸருக்காக நீ வர வேண்டும், மஃரிபிற்காக நீ வர வேண்டும். உனது ரப்பை நீ மறந்து விடக் கூடாது. பிறகு உன்னுடைய வியாபாரத்திற்காக நீ சென்றாலும் உனக்கு ஹலால், ஹராம் இருக்கிறது.

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். (அல்குர்ஆன் 2:168)

இன்று நாம் சுய பரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். இப்படி தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா? அல்லாஹ்வுடைய இந்த கட்டளையில் என்னுடைய நிலை என்ன? உங்களுடைய நிலை என்ன? இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் மிகப் பெரிய சோதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்களே! இந்த சோதனையின் பின்னனி என்ன?

முஸ்லிம்களின் மீது ஏன் சோதனை கொட்டப்படுகின்றது? எப்பொழுது அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறுகிறார்களோ, அல்லாஹ் தடுத்த சட்ட வரம்புகளை, ஹராமை, ஹலாலாக்கி கொள்கிறார்களோ, ஹலாலை ஹராமாக்கி கொள்கிறார்களோ எதிரிகள் அவர்கள் மீது சாட்டப்படுவார்கள்.

அல்லாஹ்வுடைய வேதம் எப்பொழுது புறக்கணிக்கப்படுகிறதோ, முஸ்லிம்களின் தலைவர்கள் எப்பொழுது அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்க மாட்டார்களோ அல்லாஹ் எதிரிகளை சாட்டிவிடுவான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறுகிறார்கள்.

முஸ்லிம்களுடைய தலைவர்கள், இமாம்கள், அரசர்கள், மன்னர்கள், பொறுப்பாளர்கள் எப்பொழுது அல்லாஹ்வின் வேதத்தின் படி தீர்ப்பளிக்க மாட்டார்களோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள் மீது எதிரிகளை சாட்டிவிடுவான். அந்த எதிரிகள் அவர்கள் மீது கொடுமைகளை செய்வார்கள். அவர்களது நாடுகளை பிடுங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய சொத்துக்களை பிடுங்குவார்கள். இன்னும் பல சோதனைகளுக்கு அவர்களை ஆளாக்குவார்கள்.

நூல் : இப்னு மாஜா, எண் : 4019.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், இன்று நம்முடைய நிலைமை என்ன? அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இதை தான் அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதத்தில் பல இடங்களில் நமக்கு கேட்கிறான் .

இந்த சோதனை நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக, மார்க்கத்தை விட்டு விலகிய, மார்க்கத்தை மறந்தவர்கள், மார்க்கத்தை புறக்கணித்து வாழ்ந்தவர்கள், மார்க்கம் என்பதை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கக்கூடிய முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக இப்படி சோதிப்பதுண்டு. இந்த சோதனை நம்முடைய அமலின் காரணமாக என்று நாம் புரிய வேண்டும்.

அல்லாஹ் நம் மீது அநியாயம் செய்யமாட்டான். அல்லாஹ் அவனை நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு ஒரு காலும் காஃபிர்களின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்த மாட்டான்.

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا

மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.(அல்குர்ஆன் 4 : 141)

திட்டவட்டமாக உறுதியாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.

இன்னொரு பக்கம் கொஞ்சம் நிதானித்துப் பாருங்கள். இந்த சோதனையின் போது நம்முடைய நிலைபாடு எப்படி இருக்கிறது? சோதனையின் காரணம் என்ன? நாம் தான் தெளிவாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏன் மீறினாய்? அல்லாஹ்வுடைய சட்டங்களை ஏன் மீறினாய்?

ஹராமை ஏன் ஹலாலாக்கினாய்? உனக்கு அனுமதிக்கப்பட்ட வாழ்க்கையை விட்டு, உனக்கு தடுக்கப்பட்ட வாழ்க்கையின் பக்கம் நீ ஏன் சென்றாய்? சோதனை வந்து விடுகிறது. அந்த சோதனையிலிருந்து ஈடேற்றம் பெறுவதற்கு, பாதுகாப்பு பெறுவதற்கு, வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்கு முன்னால் உள்ள தூதர்கள் என்ன செய்தார்கள்? அந்த தூதர்களோடு வாழ்ந்த மக்கள் என்ன செய்தார்கள்?

அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான் பாருங்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒரு தெளிவை நமக்கு தருகிறான்.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)(அல்குர்ஆன் 2 : 214)

வசனத்தின் கருத்து : இந்த வசனம் யாரை முன்னோக்கியது? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை, அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ அந்த முந்திய முஹாஜிர்கள், அன்ஸாரிகளை முன்னோக்கி அல்லாஹ் கேட்கிறான்.

நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? அப்படியென்றால் நாம் கொஞ்சம் நம்மை சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா?

இந்த வசனம் நம்மை பேசுகின்றது என்ற உணர்வு நமக்கு வேண்டாமா? சொர்க்கத்திற்கு நீங்கள் சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? யார் சொர்க்கத்தின் வாசலை முதலாவதாக தட்டுவாரோ, எந்த உம்மத்தில் முதல் கூட்டம் சொர்க்கத்திற்கு செல்லுமோ, முதலாவதாக எல்லா கூட்டங்களை விட அந்த நபித் தோழர்களின் கூட்டங்கள் அவர்களை பார்த்து அல்லாஹ் கேட்கிறான்.

முந்திய மக்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கின்ற வரை, அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் சந்தித்து அந்த சூழ்நிலைகளில் நீங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள்? என்பதை அல்லாஹ் உலகிற்கு காட்டாதவரை, அந்த சூழ்நிலைகளில் அப்படிப்பட்ட கால கட்டங்களில், அப்படிப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை உங்களுக்கே அல்லாஹ் தெளிவு படுத்தாத வரை, நீங்கள் சொர்க்கத்திற்கு எளிதாக சென்றுவிடலாம் என்று எண்ணுகிறீர்களா?

அல்லாஹ் கேட்கிறான். அந்த உம்மத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது? அவர்களுக்கு வறுமை, பஞ்சம், நோய் ஏற்பட்டது, எதிரிகளால் அச்சுறுத்தப்பட்டார்கள். சாதாரண அச்சுறுதல் அல்ல,

அல்லாஹ் கூறுகிறான்;நபிமார்கள் கூறியதாக,

وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا وَلَنَصْبِرَنَّ عَلَى مَا آذَيْتُمُونَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ

“அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.) (அல்குர்ஆன் 14:12)

வசனத்தின் கருத்து : நாங்கள் யார்? முஃமின்கள். அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்போம். மெஜாரிட்டியை சார்ந்திருக்கமாட்டோம், உங்களது பலத்தை பயந்து வாழமாட்டோம், எந்த கட்சிகளோ, எந்த அரசாங்கங்களோ எங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எங்களது நம்பிக்கை, எங்களை படைத்த ரப்பு பாதுகாப்பான் என்று. அவனே எங்கள் எஜமானன் அவனையே நாங்கள் சார்ந்திருப்போம்.

பிறகு கூறுகிறார்கள், எங்களுக்குரிய பாதைகளை அவன் எங்களுக்கு வழிகாட்டியிருக்கிறான். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் அந்த தொந்தரவுகளை தாங்கிக் கொள்வதற்குண்டான உறுதி நிலைபாடு எங்களிடத்தில் இருக்கிறது. நீங்கள் கொடுக்கக்கூடிய அத்தனை வகையான தொந்தரவுகளையும் நாங்கள் சகித்துக் கொள்வோம். எங்கள் மார்க்கத்தில் உறுதியாக இருப்போம்.

எத்தனை இறைத்தூதர்களை இஸ்ரவேலர்கள் கொன்று குவித்திருக்கிறார்கள். ஒரே நாளில் நாற்பது இறைத் தூதர்களை படுகொலை செய்தார்கள். ஒரே நாளில் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்ந்த முஃமின்களை அந்த யூதப் பாவிகள் கொன்றிருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட சோதனை? ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் படுகொலை செய்யப்பட்டார்கள். பல இறைத்தூதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ

அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்). (அல்குர்ஆன் 3:112)

அந்த இஸ்ரவேலர்கள் நபிமார்களை அநியாயமாக கொலை செய்தார்கள். நன்மையை ஏவி தீமையை தடுத்த நல்லவர்களை கொலை செய்தார்கள். எப்படி கொலை செய்தார்கள்? இரும்பு பற்களை உடைய சீப்புகளை கொண்டு அவர்களுடைய தோல்களையும், சதைகளையும் வாரி எடுத்தார்கள்.

அவர்களை புதை குழிகளில் உடலின் பாதி அளவு புதைத்து அவர்களது தலையிலிருந்து அப்படியே ரம்பங்களை கொண்டு அறுத்து இரண்டு கூறுகளாக பிரித்தெடுத்தார்கள். ஆனால் ஈமானை விடவில்லை.

அறிவிப்பாளர் : கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3343, 6943.

قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 85:4)

நெருப்புக் குண்டங்களை ஏற்படுத்தி உயிரோடு அந்த நெருப்புக் குண்டங்களில் பச்சிளம் குழந்தைகளோடு போட்டு பொசிக்கினார்கள். மீண்டும் கூறுகிறார்கள், நம்பிக்கையுடையவர்கள், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்திருக்கட்டும்.

இப்படியெல்லாம் அந்த காஃபிர்களிடத்தில் கூறிய பொழுது அடுத்து அந்த காஃபிர்கள் கூறுகிறார்கள் பாருங்கள்.

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான். (அல்குர்ஆன் 14:13)

வசனத்தின் கருத்து :  நிராகரித்தவர்கள் தங்களுடைய தூதர்களை பார்த்து கூறினார்கள். தெளிவாக அல்லாஹ் கூறுகிறான். சொல்லப்பட்டது யாருக்கு? பின்னால் வந்த மக்களுக்கு அல்ல, நேரடியாக தூதர்களை பார்த்து, நபிமார்களை பார்த்து, யார் அல்லாஹ்வுடைய வஹியை கொண்டு அந்த வஹியின் தொடர்பில் இருக்கின்றார்களோ அந்த ரஸூல்மார்களை பார்த்து அந்த காஃபிர்கள் கூறினார்கள்.

ரஸூல்மார்களை விடவா நாம் ஈமானில் உயர்ந்துவிட்டோம்?! அவர்களுக்கு சோதனை வரும் பொழுது நமக்கு வராதா?

சிந்தித்துப் பாருங்கள். அந்த தூதர்களுக்கு கூறினார்கள்; எங்களது பூமியிலிருந்து உங்களை நாங்கள் வெளியேற்றுவோம். எங்களது ஊரில் நீ இருக்கக் கூடாது என்று சொந்தம் கொண்டாடினார்கள் ?

எப்பொழுது அந்த இறைத் தூதர்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்களோ, அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று அழைத்தார்களோ, அப்பொழுது அந்த இறைத் தூதர்கள் தங்களது குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அந்த இறைத்தூதர்கள் தங்களது ஊரிலும் வசித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை அந்நியர்கள் என்று கூறினார்கள்.

அது தானே இன்று நடந்துக் கொண்டிருக்கிறது. தங்களது குடும்பத்தில், வமிசத்தில், பரம்பரையில் பிறந்து தங்களோடு உண்டு, வாழ்ந்து மணமுடித்த அந்த இறைத்தூதர்கள் எப்பொழுது அல்லாஹ்வின் பக்கம் அழைக்க ஆரம்பித்தார்களோ அவர்களை அந்நியர்கள் என்று கூறுகிறார்கள்.

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

1.             ஊரை விட்டு வெளியே ஓடி விடுங்கள்.

2.             குஃப்ருக்கு, இணை வைத்தலுக்கு திரும்ப வந்து விடுங்கள்.

இதே வார்த்தை தானே இன்று சொல்லப்படுகிறது. இன்று சொல்லப்படக் கூடிய வார்த்தைக்கும் இந்த வார்த்தைக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?!

இப்பொழுது அல்லாஹ் இறைத் தூதர்களுக்கு சொல்லித் தருகிறான்.

தூதர்களே! நீங்கள் பதில் கூறுங்கள் நான் கூறுவதாக, அவர்களுடைய ரப்பு அவர்களுக்கு வஹியில் சொல்லிக் கொடுத்தான். தூதர்களே! நீங்கள் கூறுங்கள், அநியாயக்காரர்களை நாம் அழித்தே தீருவோம்.

وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ

“நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்). (அல்குர்ஆன் 14:14)

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூர்வோம். உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடத்தில் ஹவ்ஸான் என்ற பாரசீகத்திற்கும் ரோமர்களுக்கும் மத்தியில் இருந்த ஒரு பெரிய பேரரசின் உடைய மன்னன் ஹுருமுஸான் கைதியாக அழைத்து வரப்படுகிறான். கைதியாக அழைத்து வரப்பட்டவன் உமரிடத்தில் பேசுகிறான். அப்பொழுது அந்த மன்னன் கூறுகிறான்;

உமரே! ஒரு காலம் இருந்தது, நீங்களும் அல்லாஹ்விற்கு மாறு செய்துக் கொண்டிருந்தீர்கள். நாங்களும் அல்லாஹ்விற்கு மாறு செய்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் உங்களை அடக்கிக் கொண்டிருந்தோம், உங்களை மிகைத்துக் கொண்டிருந்தோம்.

இன்னும் ஒரு காலம் வந்தது, நீங்கள் அல்லாஹ்வை அறிந்து அல்லாஹ்வின் பக்கம் சென்று வீட்டீர்கள். நாங்கள் இறை நிராகரிப்பில் இருந்துவிட்டோம். இன்று நீங்கள் எங்களை மிகைத்து விட்டீர்கள்.

ஒரு காஃபிரான மன்னன் அந்த நபித் தோழர்களுடைய ஈமானிலிருந்து படிப்பினை பாடம் பெற்று அது வரை அவன் இஸ்லாமை ஏற்க வில்லை, அதற்கு பிறகு அவன் இஸ்லாமை ஏற்கிறான்.

உமர் அவர்கள் பதில் கூறுகிறார்கள்;ஆம். இந்த பதிலில் இன்னொரு பதிலையும் உமர் அவர்கள் சேர்த்து கூறுகிறார்கள். நாங்கள் அய்யாமுல் ஜாஹிலியாவில் பிரிந்து இருந்தோம், அல்லாஹ்வை அறியாமல் இருந்தோம். இப்பொழுது நாங்கள் அல்லாஹ்வை அறிந்துக் கொண்டோம். ஒன்று சேர்ந்துக் கொண்டோம், உங்களை மிகைத்து விட்டோம் என்பதாக.

இதில் இன்னொரு விஷயத்தை உமர் அல்ஃபாரூக் உணர்த்துகிறார்கள். ஈமான் -இறை நம்பிக்கை வேண்டும், முஸ்லிம்கள் அவர்களுடைய இமாம் -தலைமைக்கு கீழே அவர்கள் ஒன்று சேர வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறான்.

பார்க்க –அல்பிதாயா வன்னிஹாயா 7/100.

அந்த தூதர்கள் எப்படி சோதிக்கப்பட்டார்கள்?அச்சுறுத்தப்பட்டார்கள், இந்த அச்சுறுத்தலை தான் இப்போது நான் உங்களுக்கு சூரா இப்ராஹீமிலிருந்து எடுத்துக் கூறினோம். அந்த சோதனையின் உச்சம் எப்படி இருந்தது? தூதரும் அந்த தூதரோடு நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்விடத்தில் மன்றாட ஆரம்பித்தார்கள். அல்லாஹ்வுடைய உதவி எங்கே? யா அல்லாஹ் ! எங்களுக்கு உதவி செய் என்று.

அல்லாஹ்விடத்தில் மன்றாட ஆரம்பித்தார்கள். இங்கே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் கை தூக்குகிறோமா? அல்லாஹ்வின் பக்கம் சிரம் தாழ்த்துகிறோமா? அல்லாஹ்விடத்தில் ஓடோடி வருகிறோமா? சோதனைகளை செவி மடுக்கும் பொழுது, சோதனைகளை கண்கூடாக பார்க்கும் பொழுது, சோதனைகளில் சிக்கும் பொழுது நம்முடைய உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறதா ?

திரும்பவில்லையே, உள்ளம் இறுகி இருக்கிறதே, ஹராமை விடுவதற்கு மனமில்லை. ஹராமானதை பார்ப்பதற்கு, ஹராமானதை கேட்பதற்கு, ஹராமானதை செய்வதற்கு தான் மனம் நாட்டம் கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வை தொழுவதின் பக்கம், உங்கள் மீது கடமையாக்கப்பட்ட ஜகாத்தை கொடுப்பதின் பக்கம், வணக்க வழிபாடுகளை மார்க்கத்தை சட்ட வரம்புகளை உங்களுக்குள் நிலை நிறுத்துவதின் பக்கம் நீங்கள் வாருங்கள்.

அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது என்று அல்லாஹ்விடத்தில் மன்றாடினார்கள். யாருடைய உதவியை கேட்டார்கள்? அரசாங்கிகளின் உதவிகளை அல்ல, ஏனைய நாடுகளின் உதவிகளை அல்ல, மக்களுடைய உதவிகளை அல்ல,

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன் 2:214)

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு முஃமின் சோதிக்கப்படும் பொழுது, அவன் சோதனைகளை பார்க்கும் பொழுது, அவன் சோதனைகளை கேள்விப்படும் பொழுது,இந்த சோதனை என்னுடைய செயலின் காரணமாக, என்னுடைய சமுதாயத்தின் செயலின் காரணமாக, எங்கள் பாவங்களின் காரணமாக எங்களுக்கு ஏற்பட்டது.

யா அல்லாஹ் எங்களை மன்னித்து விடு, நாங்கள் திருந்துகிறோம். உன் பக்கம் நாங்கள் திரும்புகிறோம், எங்களை நீ ஏற்றுக் கொள், மன்னித்து விடு. எங்கள் மீது எதிரிகளை சாட்டிவிடாதே! என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும்.

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

“எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்). (அல்குர்ஆன் 60:5)

فَقَالُوا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ

(அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். (அல்குர்ஆன் 10:85)

என்று நபிமார்கள் துஆ செய்தார்களே அந்த துஆக்களை நாம் செய்கிறோமா? பல முறை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறோம்.

மக்கள் இந்த வதந்திகளை நம்புவது அல்லது சோதனைகளைப் பற்றி பிரஸ்தாபித்து இன்றைய தொலை தொடர்புகளின் சாதணங்கள் மூலமாக, இன்றைய செய்திப் பரிமாறுதலின் வழிகளின் மூலமாக பேசுவதில் இன்பம் காண்கிறார்கள். அதில் நேரங்களை கழிக்கிறார்கள்.

அதை பற்றி சர்ச்சை செய்வதில் நேரங்களை கழிக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் மன்றாடுவதில், அல்லாஹ்வின் பக்கம் துஆ கேட்பதில், தங்களை திருத்திக் கொள்வதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்.

அல்லாஹ்வுடைய தீனின் பக்கம் திரும்பி நம்முடைய வாழ்க்கையை சரி செய்யக் கூடிய வாய்ப்பை எனக்கும் உங்களுக்கும் முஸ்லிம் சமுதாயம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى عَنْ إِسْمَاعِيلَ حَدَّثَنَا قَيْسٌ عَنْ خَبَّابِ بْنِ الْأَرَتِّ قَالَشَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الْكَعْبَةِ قُلْنَا لَهُ أَلَا تَسْتَنْصِرُ لَنَا أَلَا تَدْعُو اللَّهَ لَنَا قَالَ كَانَ الرَّجُلُ فِيمَنْ قَبْلَكُمْ يُحْفَرُ لَهُ فِي الْأَرْضِ فَيُجْعَلُ فِيهِ فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَتَيْنِ وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ مَا دُونَ لَحْمِهِ مِنْ عَظْمٍ أَوْ عَصَبٍ وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَاللَّهِ لَيُتِمَّنَّ هَذَا الْأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ لَا يَخَافُ إِلَّا اللَّهَ أَوْ الذِّئْبَ عَلَى غَنَمِهِ وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَصحيح البخاري 3343 -

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/