HOME      Khutba      கைகளை கட்டிக்கொள்ளாதீர் | Tamil Bayan - 370   
 

கைகளை கட்டிக்கொள்ளாதீர் | Tamil Bayan - 370

           

கைகளை கட்டிக்கொள்ளாதீர் | Tamil Bayan - 370


கைகளை கட்டிக்கொள்ளாதீர்கள்!

ஜுமுஆ குத்பா தலைப்பு : கைகளை கட்டிக்கொள்ளாதீர்கள்!

வரிசை : 370

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 14-05-2010 | 30-05-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும்அல்லாஹ்வை பயந்து வாழுமாறுஎனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு தஆலா அவனுடைய அடியாரிடத்தில் விரும்புகிற அடிப்படைப் பண்புகளில் ஒன்று தான், ஒரு முஸ்லிம்அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு, வறியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, சிரமப்படுகிறவர்களுக்கு, கடனாளிகளுக்கு, அனாதைகளுக்கு, கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு, தன் உறவினர்களுக்கு, தன் பெற்றோருக்குதன் செல்வத்தை வாரி வழங்கக்கூடிய ஒரு முக்கியப் பண்பு.

வள்ளல் தன்மை, கொடுக்கும் தன்மை, ஈகை. இது, ஒரு முஸ்லிமிடத்தில் அல்லாஹ் விரும்புகிற உயர்ந்த பண்பு. ஒரு முஸ்லிமை அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்தவனாகஉயர்ந்தவனாகஆக்குகிற ஒரு உன்னதமான பண்பு.

தர்மம் செய்வது, ஈகை குணத்தோடு இருப்பது, அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவது.

இதுபோன்று அல்லாஹு தஆலா விரும்பாத அல்லாஹ் வெறுக்கிற சபிக்கிர ஒரு குணம், அந்த குணத்தால் நல்லவர்கள் கூட அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு ஆகிவிடுவார்கள். அதுதான் கஞ்சத்தனம்.

இந்த பண்பு, அல்லாஹ்வுடைய பார்வையில் அவனை தூரமாக்கிவிடுகிறது. அல்லாஹ்வுடைய அருளை விட்டும் அவனை தூரமாக்கி விடுகிறது. நாளை மறுமையில் மிகப்பெரிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும்.

இன்று, நம் முஸ்லிம்களில் இந்த தர்மம் செய்யும் மனப்பக்குவம்நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கருமித்தனம், கஞ்சத்தனம், உலோபித்தனம்இந்த மோசமான குணம்நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

வறுமையில், செல்வம் இல்லாத காலத்தில், கஷ்டத்தில், பஞ்சத்தில் இருந்தபோது செய்த தானதர்மங்கள் கூட, இன்று முஸ்லிம்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாக மாறியதற்கு பிறகு, பெரும் வியாபாரங்களை செய்பவர்களாக மாறியதற்கு பிறகு, படித்த பட்டதாரிகளாக மாறியதறுக்குப் பிறகும் கூட, அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்கிற மனப்பக்குவம்நாளுக்கு நாள் குறைந்து வருவதை பார்க்கிறோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு இந்த கஞ்சத்தனத்தை பற்றி நமக்கு எச்சரிக்கிறான்

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا

(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர். (அல்குர்ஆன் 17:29)

வசனத்தின் கருத்து : யார் ஏழை எளியவர்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, தேவை உள்ளவர்களுக்கு, தன்னுடைய செல்வத்தை செலவு செய்யவில்லையோ, அவர்களைப் பார்த்து அல்லாஹ்இப்படி எச்சரிக்கை செய்கிறான்;

உன் கரத்தை உன் கழுத்தோடு கட்டப்பட்டதாக ஆக்கிவிடாதே என்று.

ஒரு மனிதனுடைய இரண்டு கரங்களும்அவனுடைய கழுத்தோடு சேர்த்து கட்டப்பட்ட நிலையில், விலங்கிடப்பட்ட நிலையில் இருக்கும்போது,அவனால் எப்படி பிறருக்கு கொடுக்க முடியாதோ, தன் செல்வத்தைக் கொண்டு அவனாலும் பயன் பெற முடியாதோ அந்த நிலைமையைத் தான் அல்லாஹ், தர்மம் செய்யாத நபருக்கு ஒப்பிட்டு கூறுகிறான்.

கருமித்தனம் கொள்ளாதீர்கள்! என்று எச்சரிக்கின்ற இடத்தில் அல்லாஹ்வுடைய இந்த வார்த்தை மிக பயங்கரமான ஒரு கண்டிப்பாக இருப்பதை பார்க்கிறோம்.

அதுபோன்று, தர்மம் செய்யும்போது, நீங்கள் உங்களுக்கும் சில செல்வங்களை வைத்துக் கொள்வதில் தப்பு கிடையாது. அதுவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது.

பலவீனமான நம்பிக்கை உள்ளவர்கள், அனைத்து செல்வங்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் வாரி வழங்கி விட்டால், அவர்கள் பிறகு தங்களுக்கு சோதனை வரும்போது கவலைப்படலாம்.

நான் அனைத்தையும் வாரி வழங்கிவிட்டேன! எனக்கு இல்லாமல் போய்விட்டதே! என்று வருத்தப்படுகின்ற அளவுக்கு, பலவீனமான ஈமான் யாருக்காவது இருந்தால், அவர்களுக்கு அல்லாஹ் சொல்கிறான்:

சரி, உங்களுக்கு தேவையானதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்களுடைய குடும்பத்தாருக்கு தேவையானதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால்,ஈமான் இறையச்சத்தின் உயர்ந்த நிலை,அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நிலை, அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நிலை, அவர்களுடைய மகள் ஆயிஷா, அஸ்மா ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுடைய நிலை, இவர்களில் எவரும் தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொண்டது கிடையாது.

இன்றைய காலையில் செல்வம் வந்தால், அன்றைய மாலைப்பொழுது வருவதற்கு முன்னால் வாரி வழங்கி விடுவார்கள். தாங்கள் எவ்வளவு தான் பெரிய ஒரு வறுமையில் இருந்தாலும் சரி.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குஒரு பெண்மணி, அன்பளிப்பாக ஒரு ஆடையைக் கொண்டு வருகிறாள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அப்போது  அணிந்து கொள்வதற்கு சட்டை இல்லை. ஒரு துணியை தங்கள் மேல் போர்த்தி இருந்தார்கள். கீழே ஒரு ஆடையை அணிந்திருந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வறுமையின் நிலையில் பார்த்த அந்த பெண்மணி, தன் கையால் அவர்களுக்கு மிக அன்போடும், பாசத்தோடும்ஒரு சட்டையை செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை மிகவும் கண்ணியப்படுத்தி வாங்கினார்கள். உள்ளே செல்கிறார்கள், அந்த சட்டையை அணிந்து வருகிறார்கள்.

அதை பார்த்த ஒரு சஹாபி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையில், யா ரசூலல்லாஹ்! எனக்கு இந்த சட்டை வேண்டும் என்று சொல்கிறார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கீழே அணிவதற்கு ஒரு லுங்கி, அதுவும் லுங்கி என்ற அமைப்பில் இருக்காது. மேல் அணிவதற்கு ஒரு துண்டு தான் இருந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சற்று தாமதியுங்கள் என்று கூறி உள்ளே செல்கிறார்கள். அப்போது அருகில் இருந்த சஹாபாக்கள் கேட்கிறார்கள்;

இன்னவரே, நீ இப்படி கேட்டு விட்டாயே! உனக்கு தெரியாதா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஏதாவது ஒன்று கேட்கப்பட்டால், மறுக்க மாட்டார்கள், இல்லை என்று சொல்ல மாட்டார்கள் என்று.

இந்த சட்டையை அவர்கள் தேவையோடு வாங்கினார்கள். இதை நீ கேட்டு விட்டாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இதைவிட வேறு சட்டை ஒன்றும் இல்லை என்றுகடிந்து கொள்கிறார்கள்.

(சஹாபாக்களுடைய ஈமானின் நிலையைப் பார்க்கிறோம். அவர்களுடைய ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும், ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், ஒவ்வொரு பதிலுக்கு பின்னாலும்பல கோடி அர்த்தங்கள் இருப்பதை பார்க்கிறோம்.)

அப்போது அந்த நபித்தோழர் சொல்கிறார்; என் தோழர்களே! என்னை நீங்கள் கடிந்து கொள்கிறீர்கள். நான் வாங்கியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இந்த சட்டையை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அல்லது இந்த சட்டையை அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அல்ல.

நான் எதற்காக வாங்கினேன் தெரியுமா? நான் இந்த சட்டையை அணிவேன். எனக்கு மரணம் வரவேண்டும். என்னுடைய கஃபன்இந்த சட்டையாக ஆகவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த அந்த சட்டையில், நான் கஃபனிடப்பட வேண்டும். அல்லாஹ்விடத்தில் நான் பாவமன்னிப்பை ஆதரவு வைக்கிறேன். கப்ருடைய வேதனையை விட்டும் நான் பாதுகாப்பை ஆதரவு வைக்கிறேன் என்று கூறுகிறார்.

உள்ளே சென்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த சட்டையை கழட்டிவிட்டு, தான் முன்பு அணிந்திருந்தஒரு சின்ன துண்டை மேலே போர்த்திக்கொண்டு, அதை மடித்துஅவரிடத்தில் கொண்டு வருகிறார்கள். அந்த ஸஹாபி அதை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஹதீஸ் நூல்களில் எழுதப்படுகிறது; அந்த சஹாபி சில தினங்களில் மரணிக்கிறார், அதே சட்டையில் அவர் கஃபனிடப்படுகிறார் என்பதாக.(1)

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1277.

பலநூறு படிப்பினைகளை இந்த சம்பவத்தில் பார்க்கலாம். நாம் இங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கொடைத் தன்மையை பார்க்கிறோம்.

அவர்கள் தனக்கென்று எதையும் அவர்கள் மிச்சப்படுத்தியது கிடையாது. அவர்களுடைய தோழர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்படித்தான்.

ஒரே நேரத்தில் நாற்ப்பதாயிரம் திர்ஹங்களைஅல்லாஹ், அவர்களுடைய வியாபாரத்தில் அவர்களுக்கு இலாபமாக கொடுத்தான்.

அந்த திர்ஹங்களில் பத்தாயிரத்தை எடுத்தார்கள். யாருக்கும் தெரியாமல் ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று கொடுத்து வந்தார்கள். பத்தாயிரம் திர்ஹங்களை வெளியில் வைத்துவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று.

பத்தாயிரம் திர்ஹங்களை பகலில் செலவு செய்தார்கள். பத்தாயிரம் திர்ஹங்களை இரவில் கொடுத்துவிட்டார்கள். நாற்ப்பதாயிரம் திர்ஹங்களையும் இப்படியே செலவு செய்து விட்டார்கள்.

இவர்களைக் குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வசனத்தை இறக்குகிறான்:

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 274)

இப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இன்னும்சஹாபாக்கள் உடையவரலாறுகளை நாம் பார்க்கிறோம்.

இந்தக் கஞ்சத்தனம் என்பது, சபிக்கப்பட்ட ஒரு குணம். இந்த கருமித்தனம் முஸ்லிமிடத்தில் இருக்கக் கூடாத ஒரு குணம். இந்த உலோபித்தனம் யஹூதிகளுடைய குணம்.

அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு கொடுங்கள் என்று அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான். அப்போது அந்த யூதர்கள், அல்லாஹ்வைப் பற்றி இப்படி பரிகாசமாக பேசினார்கள்.

وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ

‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். (அல்குர்ஆன் 5:64)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தர்மம் செய்யுங்கள் என்று கட்டளையிட்ட போது, யூதர்கள் அல்லாஹ்வை பரிகாசம் செய்தனர்.

இன்று சிலர், தொழுகைக்கு வாருங்கள் என்றால், அல்லாஹ் நாடினால் நாங்கள் வந்து விடுவோம்;நீங்கள் செல்லுங்கள் என்பதாக. நல்ல காரியங்களைச் செய்யுங்கள், பாவத்தை விட்டு விலகுங்கள் என்றால், எல்லாரும் சொர்க்கத்திற்கு சென்று விட்டால், நரகத்திற்கு யார் செல்வது? உங்களைப் போன்று நாங்களும் நல்லவர்களாக ஆகவேண்டும் என்றால், அல்லாஹ் நாடினால் நாங்களும் ஆகிவிடுவோம் என்று பரிகாசமாக பேசுகிறார்கள்.

இவர்கள், அல்லாஹ்வை பரிகாசம் செய்பவர்கள். ஏழை எளியவர்களுக்கு கொடுங்கள் என்றாலும், அல்லாஹ் எங்கே சென்று விட்டான்? அல்லாஹ் அவர்களை பார்த்துக் கொள்ள மாட்டானா? அல்லாஹ் தானே எல்லாருக்கும் பொறுப்பாளி. அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று அல்லாஹ்வை, அல்லாஹ்வின் மார்க்கத்தை, அல்லாஹ்வின் கட்டளைகளைபரிகாசம் செய்கிறார்கள்.

இது, யூதர்களுடைய குணம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லப்பட்ட போது, இந்த யூதர்கள், அல்லாஹ்வுடைய கைகள் கட்டப்பட்டு விட்டன.

எனவேதான், அவனால் இப்போது செலவு செய்ய முடியவில்லை. ஏழை எளியவர்களுக்கு கொடுக்க முடியவில்லை. எனவே, நம்மிடத்திலிருந்து அவன் கொடுக்கச் சொல்கிறான் என்று சொன்னார்கள்.

இன்னும் சொன்னார்கள்:

إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ

நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் செல்வந்தர்கள் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 3 : 181)

அல்லாஹ் இப்போது ஏழையாகிவிட்டான். அவனுடைய கஜானா காலியாகிவிட்டது. எனவே, நாங்கள் இப்போது செல்வந்தர்களாக இருக்கிறோம் என்று அல்லாஹ்வை பரிகாசம் செய்தார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களுடைய கரங்கள் விலங்கிடப்படட்டும். அவர்கள் கூறிய இந்த வார்த்தையால் அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக,அவனுடைய இரண்டு கரங்களும் விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் எப்படி விரும்புகிறானோஅவ்வாறு அவன் தர்மம் செய்கிறான். (அல்குர்ஆன் 5:64)

முஸ்லிம்களே! நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? நமக்கு அல்லாஹ் கொடுத்த செல்வம்,நமக்கு அல்லாஹ் கொடுத்த வசதிகள்,இந்த வசதிகள் எல்லாம்நாம் தின்று அளிப்பதற்காகவா? நாம் உடுத்தி அளிப்பதற்காகவா? நாம் மட்டும் கட்டிடங்களை எழுப்பி, அழகு பார்த்து, மனைவி மக்களை திருப்திப்படுத்துவதற்காகவா? நிச்சயமாக இல்லை.

இதிலிருந்து நமக்கு எது தேவையோ, அதை எடுத்துக் கொண்டு, மற்றவை அனைத்தையும் அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு, அனாதைகளுக்கு, முஸ்லிம்களுக்கு, தேவையுடையோருக்கு, வறியவர்களுக்குகொடுப்பதற்கு அமானிதமாக தான்அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்றான்.

யார் இப்படி செலவு செய்யவில்லையோ,யார் அல்லாஹ்வின் பாதையில் கடமையாக்கப்பட்ட தர்மத்தை செய்யவில்லையோ அவர்களை பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்:

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ (25) وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ (26) يَالَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ (27) مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ (29) خُذُوهُ فَغُلُّوهُ (30) ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ (31) ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ (32) إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ (33) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (34) فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ (35) وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ (36) لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ

எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான். மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே! நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே! என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்). (பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்; அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்). நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை. ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை. ‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை. (புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்). அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள். (அல்குர்ஆன் 69 : 25-37)

இறை நம்பிக்கையோடு அல்லாஹ்தர்மத்தை சேர்த்து சொல்கின்றான். ஒரு முஃமின்தர்மம் செய்யாதவனாக இருக்கமுடியாது.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்தால், எழைகளை அரவணைத்திருப்பான். ஏழைகளுக்கு கொடுத்திருப்பான். அனாதைகளுக்கு கொடுத்திருப்பான்.

இவனுடைய நம்பிக்கை, காரூனுடைய நம்பிக்கையை போன்று. அவனுடைய கையில் உள்ள செல்வத்தை தான் சம்பாதித்தது என்ற பெருமையில் இருந்தான்.

அல்லாஹ் கொடுத்த நிஃமத், அல்லாஹ் கொடுத்த அருள் என்றுஅவன் நம்பிக்கை கொள்ளவில்லை. எனவேதான் இந்த செல்வத்தைஅல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு கொடுக்காமல்கருமித்தனம் காட்டினான்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த எச்சரிக்கையை அல்லாஹ் குர்ஆனில் ஒரு இடத்தில் சொல்லவில்லை. பல இடங்களில் சொல்கின்றான்.

நரகத்தில்ஜஹீம் என்ற நரகத்தை போன்று, சகர் என்ற நரகமும் இருக்கிறது. அது, பயங்கரமான நரகங்கள், பயங்கரமான வேதனைகள் உடையது. பல வர்ணங்களில் வேதனைகள் இருக்கின்றது என்றுஅல்லாஹ் கூறுகின்றான்.

அந்த வேதனை நிறைந்த கொடூரமான நரகங்களில் ஒன்று தான், சகர் என்ற நரகம். அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:

سَأُصْلِيهِ سَقَرَ (26) وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ (27) لَا تُبْقِي وَلَا تَذَرُ (28) لَوَّاحَةٌ لِلْبَشَرِ

ஆகவே, நாம் அவனை ‘சகர்' நரகத்தில் எறிவோம். (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா? அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது. அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும். (அல்குர்ஆன் 74 : 26-29)

இந்த சகர் நரகத்தில் இவர்கள் ஏன் வந்தார்கள்? எனசொர்க்கவாசிகள் பேசிக் கொண்டிருப்பார்கள். நம்மோடு வாழ்ந்தார்களே பல மக்கள், பல செல்வந்தர்கள், நம்முடைய சகோதரர்கள், உறவினர்கள், நமக்கு நெருக்கமானவர்கள், தெரிந்தவர்கள், இவர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இல்லையே! இவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எனசொர்க்கவாசிகள் பேசுவார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன், இவர்களை நீங்கள் தேடுகிறீர்களா? இதோ நரகத்தில் பாருங்கள்! என்று அந்த நரகத்தில் உள்ள பாவிகளைஅல்லாஹ் அவர்களுக்கு காட்டுவான்.

சொர்க்கத்தில் உள்ளவர்கள் அந்த நரகவாசிகளை பார்ப்பது மட்டுமல்ல, இருவருக்குமிடையே பேசும் ஒரு தொடர்பையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன், ஸூரத்துல் முத்தஸ்ஸிரில்இதை நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்:

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ (44) وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ (45) وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ (46) حَتَّى أَتَانَا الْيَقِينُ

‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.) (அல்குர்ஆன் 74 : 42-47)

வசனத்தின் கருத்து : அந்த நரகத்தில் நுழைந்த பாவிகள் சொல்லும் முதலாவது காரணம், நாங்கள் தொழுகையாளிகள் இல்லை. தொழும் பழக்கம் எங்களுக்கு இல்லை. அல்லாஹ்வுக்கு முன்னால் நாங்கள் சுஜூது செய்யவில்லை.

எனவேதான் மார்க்க அறிஞர்கள்சொல்கிறார்கள்: யார், அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூது செய்யவில்லையோ, ஐந்து நேரத் தொழுகைகளை தொழவில்லையோ,அவன் அல்லாஹ்வை மறுத்த காஃபிராக ஆகிவிடுவான்.

அவன் لاالهالّااللّه-வை மறுத்த காஃபிராகி விடுவான். தொழுகை ஈமானுடைய அடிப்படை அம்சம்.

لاالهالّااللّه-என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருக்கிறது என்றால், அதனுடைய வெளிப்படையான அடையாளம்தொழுகையாக இருக்கிறது.

சகர் என்ற நரகத்தில் அவர்கள் நுழைந்ததன் முதல் காரணம், அவர்கள் தொழுகையாளிகள் இல்லை. தொழவில்லை என்பதுதான்.

இரண்டாவது காரணம், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.நாங்கள் தர்மம் செய்யவில்லை.

மூன்றாவது காரணம், நாங்கள் பொழுதுகளை போக்கிக் கொண்டிருந்தோம்.

நான்காவது காரணம், நாங்கள் மறுமையை பொய்ப்படுத்திக் கொண்டிருந்தோம்.

மறுமையின் நம்பிக்கை எங்களுக்கு இல்லை.இதே நிலையிலேயே எங்களுக்கு மரணமும் வந்துவிட்டது.

நாளை மறுமையில், சகர் நரகத்தில் ஒரு மனிதன் தூக்கி எறிவதற்குண்டான நான்கு காரணங்களைஅல்லாஹ் கூறுகின்றான்.

சிலர் நினைக்கிறார்கள்; நாம் தொழுகிறோம், குர்ஆன் ஓதுகிறோம்.ஆனால், அவர்கள் தர்மத்தைப் பற்றி நினைப்பதே கிடையாது. ஏழைகளுக்கு கொடுப்பது கிடையாது. செல்வத்தை அல்லாஹ்கொடுத்திருக்கிறான். இல்லை என்றால் வேறு விஷயம்.. இல்லாதவர்களுக்குக் கூடஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி சொல்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தர்மம் பற்றிசஹாபாக்கள் கேட்கிறார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ»

முஸ்லிம்கள் தர்மம் செய்தே ஆக வேண்டும்.

அப்போது சஹாபாக்கள் கேட்கின்றனர்;அல்லாஹ்வின் தூதரே! ஒருவரிடத்தில் செல்வம் இல்லை என்றால் என்ன செய்வது? என்று.

«يَعْمَلُ بِيَدِهِ، فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ»

எங்கேயாவது சென்று கூலி வேலை செய்யட்டும். எங்கேயாவது சென்று, தன் கரத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி உழைக்கட்டும். உழைத்ததிலிருந்து தானும் பயன் பெறட்டும். அதில் ஒரு பகுதியைஅல்லாஹ்வுடைய பாதையில் ஏழைகளுக்கும் கொடுக்கட்டும்.

அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு வேலையே கிடைக்கவில்லை என்றால், வேலை தேடி செல்கிறார், வேலை கிடைக்கவில்லை. வியாபாரத்திற்கு செல்கிறார், வியாபாரம் அமையவில்லை. என்ன செய்வது?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

«يُعِينُ ذَا الحَاجَةِ المَلْهُوفَ»

யாருக்கு தேவை இருக்கிறதோ, அதாவது உதவி தேவைப்படுகிறதோஅவரிடம் சென்று, தன் உடலால் உழைத்து, அவருக்கு உதவிசெய்யட்டும்.

அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் வழியில்லை என்றால், சம்பாதிக்க முடியவில்லை, அவர் செல்கிறார், உதவி தேவையானவர் யாரும் இல்லை. அடுத்து என்ன செய்வது?

«فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ، وَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ، فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ»

அவர் நன்மை செய்யட்டும்.பிறருக்கு தீமை செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்.

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1445.

எந்த வகையிலும் ஒரு முஸ்லிம், தர்மம் செய்யாமல் இருக்கமுடியாது. ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கை, தர்மம் இல்லாமல் இருக்க முடியாது.

அவரிடத்தில் இல்லை என்றால், உழைத்து கொடுப்பார். அதற்கும் வழியில்லை என்றால், தேவை உள்ளவருக்கு உதவி செய்வார். அதுவும் முடியவில்லை என்றால், நன்மையான காரியம் செய்து, பிறருக்கு தீமை செய்யாமல் இருப்பார். இது ஒரு முஸ்லிமுடைய பண்பு.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை வலியுறுத்தினார்கள். இதைத்தான் அல்லாஹ்நமக்கு மிகவும் கண்டிப்பாக கூறுகின்றான்.

ஒரு முஸ்லிம் ஏழைக்கு கொடுக்கவில்லையா?அவன் இவ்வளவு தொழுகையாளியாக  இருந்து, அல்லது மறுமையை நம்பியவனாக இருந்து, அல்லது வேறு பிற நல்ல காரியங்களை செய்துஎன்ன பலன்? செல்வம் அவனை அழித்து விடுகிறது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இந்த பணத்தின் மீது மோகம் கொண்டு, இந்த பணத்தையே குறிக்கோளாக கொண்டு, அவனுடைய பாதையில் தர்மம் செய்யாமல் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களைபல வகையில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். எப்படி எல்லாம் அவர்களை அச்சுறுத்த முடியுமோஅப்படியெல்லாம் அவர்களை அச்சுறுத்துகிறான்.

ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்; இன்று, பலருடைய நினைப்பு என்னவென்றால், நான் படித்தேன். அல்லது நான் சம்பாதித்தேன். எனக்கு எல்லாம் அமைந்து விட்டது. இனி பிறரை பற்றி எனக்கு கவலை இல்லை.

நான் என் வாழ்க்கையில், என் செல்வத்தைக் கொண்டு, என் குடும்பத்தோடுநான் நிம்மதி தேடுவேன் என்ற குறிக்கோளில் இருக்கின்றவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன்எப்படி சோதிப்பான் தெரியுமா?

நோயைக் கொண்டு இவர்களை சோதிப்பான். இவர்களுடைய ஆன்மக்களைஅவர்களுக்கு சோதனையாக கொடுப்பான். இவர்களுடைய மனைவியை அல்லாஹ் இவர்களுக்கு சோதனையாக ஆக்குவான். இவர்களுடைய பிள்ளைகளை அவர்களுக்கு சோதனையாக ஆக்குவான். இவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுக்கு நெருக்கடியாக ஆக்குவான்.

நாம் பார்க்கிறோம்; செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். நாம் வெளியிலிருந்து பார்ப்பதற்குஏதோ அவர்கள் இன்பத்தில், சுகமான வாழ்க்கையில்இருப்பதை போன்று தெரியும்.

ஆனால்., அல்லாஹ்வுடைய பாதையில் வாரி வழங்காத செல்வந்தன், எப்போதும் மனநெருக்கடியிலேயே இருப்பான். மன உளைச்சலிலேயே இருப்பான். உள்ளம் எப்போதும் அவனுக்கு கருமையாகஇருட்டறையாக இருக்கும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அந்த ஒரு நிலைக்கு முஸ்லிம்களைஆக்கிவிடக்கூடாது.

அவன் செல்வந்தனாக இருக்கும்போதுயதீமை பார்க்க வேண்டும். ஒரு ஏழையை பார்க்கவேண்டும். அவன் பணக்காரனாக மாறும் போதுதனக்கு கீழே இருக்கிற தேவை உள்ளவரைஅவன் பார்க்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்: காபிர்கள் தான் யதீம்களை ஆதரிக்க மாட்டார்கள். ஏழைகளுக்கு கொடுக்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு இந்த துன்யா வேண்டும்.

அல்லாஹ் கேட்கின்றான்:

كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ

உங்களுக்கு என்ன நேர்ந்தது? அனாதைகளை நீங்கள் கண்ணியப்படுத்துவது இல்லையே! (அல்குர்ஆன் 89 : 17)

சமுதாயம் எப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலைக்கு ஆளாகி விட்டது!இன்று, அனாதைகள்சமூகத்தில் ஆதரவற்று விடப்பட்ட காரணத்தால், அனாதை இல்லம் என்று திறப்பதற்குஒரு நிர்பந்தத்திற்குஇந்த சமுதாயம் ஆளாகிவிட்டது.

காஃபிர்களுக்கு வேண்டுமானால், அனாதை இல்லம் என்பது ஒரு தேவையாக இருக்கலாம். காரணம், அவர்களிடத்தில் இப்படி ஒரு பண்புசமூக ரீதியாக, மத ரீதியாக, மார்க்க ரீதியாககாணப்படாமல் இருக்கலாம்.

ஆனால்,முஸ்லிம்கள்அப்படி அல்ல. அவர்கள் மார்க்கத்தைப் படித்தவர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

«وَأَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا»

நானும் யதீமை ஆதரித்தவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்றுசொன்னார்கள்.

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5304.

இன்று, முஸ்லிம்களுடைய நிலையைப் பாருங்கள்! தம் பிள்ளையை படிக்க வைப்பார்கள். என்ன வேண்டுமானாலும் அதற்கு செலவு செய்வார்கள்.

ஆனால், தங்களுடைய குடும்பத்தில், எந்த குழந்தையின் தந்தை தவறிவிட்டார்களோ, அவர்களை பார்க்கும்போது, இரண்டு கண்களுடன் பார்ப்பார்கள். வித்தியாசமான பார்வை. தன் பிள்ளையை பார்க்கும் போது ஒரு பார்வை, சொந்தக்காரர்களின் பிள்ளைகளை பார்க்கும் போது ஒரு பார்வை, இவர்களைப் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான்.

كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ (17) وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (18) وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا (19) وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا

(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள். மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள். நீங்கள் அனாதைகளை கண்ணியப்படுத்துவது இல்லை. (அல்குர்ஆன் 89 : 17-20)

காசு வேண்டும்,பணம் வேண்டும் என்று இப்படி பேராசை கொள்கிறீர்களே! இந்த செல்வங்கள் உங்களுக்கு என்ன பலன் தரப் போகிறது? நாளை மறுமையில் இந்த செல்வங்கள் வரும் என்று நினைக்கிறீர்களா?

அல்லாஹ் கேட்கின்றான்:

كَلَّا إِنَّهَا لَظَى (15) نَزَّاعَةً لِلشَّوَى (16) تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى (17) وَجَمَعَ فَأَوْعَى (18) إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا

அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும். புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும். (பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்). மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன் 70 : 16-19)

நல்லவர்களுடைய பண்பை நமக்கு அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். நல்லவர்கள் எப்படி இருந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முதலாவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கொடையில் நிகர் இல்லாமல் இருந்தது மட்டுமல்ல, அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடினார்கள்.

ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபிமொழிகள் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கஞ்சத்தனத்திலிருந்து, உலோபித்தனத்திலிருந்து, கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள் என்பதாக.

இன்று நினைத்துப் பாருங்கள்! நம்மில் எத்தனைபேர்,யா அல்லாஹ்! எனக்கு செல்வத்தை கொடு என்று கேட்கின்றோம். யா அல்லாஹ்! எனக்கு வறுமை வேண்டாமென்று கேட்கின்றோம். யா அல்லாஹ்! எனக்கு நிறைவாக கொடு! குறைத்து விடாதே! என்று கேட்கின்றோம்.

ஆனால், நம்மில் எத்தனை பேர், என்னை கஞ்சனாக ஆக்கிவிடாதே!என்னை உலோபியாக ஆக்கி விடாதே!யா அல்லாஹ்! என் கையை இறுக்கமானதாக ஆக்கிவிடாதே,யா அல்லாஹ்! ஏழைகளுக்குக் கொடுப்பவனாக, அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்பவனாகஎன்னை ஆக்கு என்று எத்தனை பேர் கேட்கிறோம்?

ஹஜ்ஜுக்கு செல்லும் போதுநீங்கள் பார்த்திருக்கலாம்; சிலர் அங்கே கூட்டமாக உட்கார்ந்து துஆ செய்து கொண்டிருப்பார்கள். அங்கே இமாமவர்கள் துஆ செய்வார்கள்.

யா அல்லாஹ்!ஈமானை கொடு, அங்கே எந்த சத்தமும் இருக்காது. உணர்வற்ற நிலையில் இருப்பார்கள். யா அல்லாஹ்! இஸ்லாமை கொடு,உணர்வற்ற நிலையில் இருப்பார்கள். யா அல்லாஹ்! எனக்கு உன்னுடைய பாதையில் செலவழிக்கக் கூடிய தௌஃபீக்கை கொடு, அமைதியாக இருப்பார்கள். எந்தவிதமான சலசலப்பும் இருக்காது.

அதே நேரத்தில், அந்த இமாம் சிறிது நேரம் கழித்து, யா அல்லாஹ்! எனக்கு வியாபாரத்தில் பரக்கத்தை கொடு! என்று சொல்வார். ஆமீன் என்றுமிகப் பெரிய சத்தமாக இருக்கும். யா அல்லாஹ்! எங்களுக்கு வாரி வழங்கு! வியாபாரத்தின் பரகத்துடைய கதவுகளைத் திற! எப்பொழுதெல்லாம் வருமானத்தினுடைய துஆக்களை செய்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் ஆமீன் பலமாக, சத்தமாகவருவதைப் பார்க்கிறோம்.

எப்படி ஒரு கேவலமான நிலை! ஒரு முஸ்லிமின் மனப்பக்குவம் இப்படியா இருப்பது? செல்வத்தை கேட்கிறோம். எதற்காக இந்த செல்வம்? அல்லாஹ்வுடைய பாதையில்செலவழிக்கப் படுவதற்காக.

அப்படி கேட்கப்படவில்லை என்றால்இந்த செல்வம் இவனுக்கு நரகமாக மாறிவிடும். அல்லாஹ்வினுடைய சாபமாக, அல்லாஹ்வினுடைய கோபமாக மாறி விடும்.

நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்விடத்தில் மன்றாடுகிறார்கள்.

தொழுகையில் அமரும்போது, தக்பீர் கட்டியதற்கு பிறகு, சுஜூதில், தொழுகைக்குப்பின், தங்களுடைய வாழ்க்கையின் பல பகுதிகளில், இந்த துஆவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துகொண்டே இருந்தார்கள்.

இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.

«أَعُوذُ بِكَ مِنَ البُخْلِ وَالكَسَلِ، وَأَرْذَلِ العُمُرِ، وَعَذَابِ القَبْرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَفِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன். கஞ்சத்தனத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்! சோம்பேறித்தனத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்! மோசமான வாழ்க்கையில், பலவீனமான பகுதியிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்!

கப்ருடைய வேதனையிலிருந்து, தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து, மரணத்தின் குழப்பத்திலிருந்துஎன்னை பாதுகாத்து கொள்!

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4707.

இந்த துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை கேட்கவில்லை. வாழ்க்கை முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

"مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا"

காலை ஒவ்வொரு நாள் விடியும் போதும்இரண்டு மலக்குகள் துஆ செய்கிறார்கள் உன்னுடைய பாதையில் தர்மம் செய்யக்கூடியவர்களுக்குநல்ல பரக்கத்தை கொடு! வாரி வழங்கு! அவர்களுக்கு நல்ல பிரதி உபகாரத்தை நீ அவர்களுக்கு செய் என்று ஒரு மலக்கு கேட்பார்.

இன்னொரு மலக்கு துஆ கேட்கிறார்; அல்லாஹ்வே! யார் உன்னுடைய பாதையில் தர்மம் செய்யவில்லையோஅவர்களுடைய செல்வத்தை நீ அழித்துவிடு! என்று.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1442.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலும், சஹாபாக்களிடமிருந்தும்இந்தப் பாடத்தைநாம் பார்க்கிறோம்.

அவர்கள் இந்த செல்வத்தின் மீது பற்றற்றவர்களாக இருந்தார்கள். எவ்வளவுதான் செல்வம் குவிந்தாலும் இந்த செல்வத்தின் மீது மோகம் கொள்ளாதவர்களாக நபித்தோழர்கள் இருந்தார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஒருமுறை முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் இருந்து70,000திர்ஹங்கள் அன்பளிப்பு செய்யப்படுகிறது. அந்த 70,000திர்ஹத்தையும் சில மணிநேரங்களில் தர்மம் செய்து விடுகிறார்கள்.

ஆனால், அவர்களுடைய அடிமைப்பெண் செல்கிறார்கள்; நான் அவர்களுடைய வாழ்க்கையை பார்த்தேன். நான் அவர்கள் அணிந்திருந்த சட்டையைப் பார்த்தேன். அது ஒட்டுப்போடப்பட்டதாக இருந்தது.

நாம் என்ன செய்வோம்? நமக்கு கையில் செல்வம் வந்துவிட்டால், உடனே நமக்கு ஒரு கார், நமக்கு ஒரு பங்களா, உடனே நமக்கென்று ஒரு வசதியான வாழ்க்கை, உயர்ந்த ஆடை, மிகப்பெரிய வாழ்க்கை என்று தேடுவோம்.

ஆனால், சஹாபாக்கள் கிழிந்த ஆடைதான் அணிந்திருந்தார்கள். 70,000திர்ஹங்களையும்தர்மத்திற்காக சில மணி நேரங்களிலேயே செலவு செய்தார்கள்.

இது தெரிந்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சில தினங்களிலேயே, ஒரு லட்சம் திர்ஹங்களை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். ஒரு இலட்ச திர்ஹங்கள் காலையில் வந்தது. மாலை வருவதற்கு முன்னால்அத்தனையையும் தர்மம் செய்து விட்டார்கள்.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய கணவன், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மரணத்திற்குப் பிறக, தொடர்ந்து நோன்பு வைத்துக் கொண்டே இருந்தார்கள்.

தடுக்கப்பட்ட நாட்களை தவிர, மற்ற வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்துக் கொண்டே இருந்தார்கள். அன்றைய மாலைப்பொழுதில் இஃப்தாருக்கு கூட சாப்பிடுவதற்கு உணவு எதுவும் அவர்களிடத்தில் இல்லை.

அவர்களுடைய அடிமைப்பெண் கூறுகிறாள்; அன்னை அவர்களே! காலையில் ஒரு திர்ஹத்தை எனக்கு கொடுத்திருந்தால், கொஞ்சம் கறி வாங்கி உங்களுக்கு வந்திருப்பேனே! இப்போது நீங்கள் நோன்பு திறக்கலாமே என்று.

என்னை நீ குறை சொல்லாதே! நீ என்னை பழிக்காதே! நீ எனக்கு அதை நினைவுபடுத்தி இருந்தால், நான் அதை உனக்கு செய்திருப்பேன்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி சொல்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களில், ஆயிஷாவும் ஒருவர். ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் ஒருவர்.

அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்வதில் ஜைனபுக்கு நிகராக யாருமில்லை என்று புகழ்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு மனைவி இன்னொரு மனைவியைஎப்படி புகழ்கிறார்கள் பாருங்கள்! ஜைனபை யாரும் மிகைக்க முடியாது.

ஏன் தெரியுமா? ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய பழக்கம், வருவதை எல்லாம் கொடுத்துவிடுவார்கள். சேமித்து வைக்க மாட்டார்கள். தடுத்து வைக்கவும் மாட்டார்கள்.

ஆனால், ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய பழக்கம் எப்படி இருந்தது என்றால், வந்ததையும் கொடுத்துவிடுவார்கள். இல்லை என்றால், அன்சாரிகள் உடைய வீட்டுக்கு சென்று வேலை செய்வார்கள்.

அதிலிருந்து வரக்கூடிய ஊதியத்தை வாங்கி, முஹாஜிர்களுடைய வீட்டிற்கு செல்வார்கள். அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்ட முஹாஜிர்களிடத்தில் செல்வார்கள். காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வந்த அந்த ஊதியத்தை எடுத்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதானவர்களுக்கும் யதீம்களுக்கும் கொடுப்பார்கள்.

ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

நான் இறந்து விட்டால், உங்களில் யாருடைய கை நீளமாக இருக்கிறதோ, அவர் என்னை சீக்கிரம் வந்து சேருவார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்கள், தங்களுடைய கைகளை அளந்து பார்த்தார்கள். யாருடைய கை நீளமாக இருக்கிறது என்று.

சவ்தா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய கை நீளமாக இருந்தது. எனவே சவ்தா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சீக்கிரமாக மரணிப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், மரணித்தது ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் மரணித்தார்கள்.

அப்பொழுதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களுக்கு புரிய வந்தது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை நீளம் என்று சொன்னது தர்மத்தை குறித்து என்று.

இறுதியாக, அல்லாஹ்வின் ஒரு வசனத்தைக் கூறி முடிக்கிறேன்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ

நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள். (அல்குர்ஆன் 2 : 254)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லா கெட்ட பண்புகளை விட்டும் நம்மை பாதுகாப்பானாக! ஈமானை நமக்கு தருவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ امْرَأَةً جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ، فِيهَا حَاشِيَتُهَا»، أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ قَالُوا: الشَّمْلَةُ، قَالَ: نَعَمْ، قَالَتْ: نَسَجْتُهَا بِيَدِي فَجِئْتُ لِأَكْسُوَكَهَا، «فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ»، فَحَسَّنَهَا فُلاَنٌ، فَقَالَ: اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا، قَالَ القَوْمُ: مَا أَحْسَنْتَ، لَبِسَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ، وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ، قَالَ: إِنِّي وَاللَّهِ، مَا سَأَلْتُهُ لِأَلْبَسَهُ، إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي، قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ (صحيح البخاري- 1277)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/